மாலெ தீப்பொறி
2012, மே 16 - 31, தொகுதி 10 இதழ் 15
தலையங்கம்
32 பற்களும் ஒரு நாக்கும்
பற்களுக்கிடையில் சிக்கிக்கொண்டிருந்தாலும் அவற்றால் கடிபட்டுவிடாமல் அனைத்தையும் சமாளித்து இறுதி வரை வாழும் நாக்கு போல் தாம் செயல்படுவதாக ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொன்னார். தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு, குறைகளை மட்டுமே பார்க்கிற எதிர்க்கட்சிகள் என பகைமைச் சூழல் நிலவினாலும், தமிழக மக்களுக்கு நன்மை செய்ய எப்படிஎப்படியோ தாம் பாடுபடுவதாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.
மாநில அரசுகளின் உரிமைகள் காக்கப் புறப்பட்ட காவல் தெய்வம் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவிப்புகளை அள்ளித் தெளிக்கிறார். சட்டமன்ற மேசைகளை தட்ட சிறப்பு பயிற்சி கூட ஜெயலலிதா அறிவிக்கலாம். அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அது மிக முக்கியமான பணியாகியுள்ளது. 30 நாட்களுக்கும் மேல் 100 சத ஊதிய உயர்வு கேட்டு போராடிய சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு, 25 சத ஊதிய உயர்வு, விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்கட்டணக் குறைப்பு, ஆறாவது படிக்கும் போதே சாதிச் சான்றிதழ் போன்ற அறிவிப்புகள் அம்மாவின் அருளை காட்டுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் அகமகிழ்கின்றன.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அகமகிழ வைக்கும் இந்த அறிவிப்புகள் தமிழக மக்களுக்கு ஆறுதல் தருவதாகவோ மகிழ்ச்சியளிப்பதாகவோ கிஞ்சித்தும் இல்லை. சட்டமன்றத்துக்குள் அறிவிப்புகளுக்குள் ஒளிந்துகொள்ளப் பார்க்கிறார் ஜெயலலிதா. மாணவர், பெற்றோர் தலையில் இடியாய் இறங்கியுள்ள 15 சதம் கூடுதல் கட்டணம், ஜெயலலிதாவின் அறிவிப்புகளுக்குப் பின்னால் உள்ள முதலாளிகள் சாய்வை, ஜெயலலிதாவின் விடாப்பிடியான மக்கள் விரோதப் போக்கை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளது.
கூடன்குளம் மீண்டும் பற்றியெரிகிறது. மக்கள் மீண்டும் பட்டினிப் போராட்டம் நடத்துகிறார்கள். கூடன்குளம் அணு உலையே வேண்டாம் என்று விடாப்பிடியாக போராடிய மக்களை, பாதுகாப்பு ஒத்திகையாவது நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பும் நிலைக்கு ஒடுக்கி அடக்கிவிட்டது ஜெயலலிதாவின் இரும்புக் கரம். சங்கரன்கோவில் இடைத் தேர்தல் உங்களில் ஒருத்தி என்று சொல்ல வைத்தது. இப்போது அதுபோன்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாததால் போராட்டத்தில் இருக்கிற மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூட மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை.
கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க மின்தட்டுப்பாட்டை, மின்வெட்டை பயன்படுத்தியதுபோல், என்எல்சி தொழிலாளர் போராட்டத்தின்போதும் மீண்டும் மின் வெட்டு என்ற காரணம் பயன்படுத்தப்படுகிறது. குற்றம் இழைத்தவர்கள் தாம் இழைத்த குற்றத்தை தமக்குச் சாதகமாக பயன்படுத்துகிறார்கள். கூடன்குளம் போராட்டமும் என்எல்சி தொழிலாளர் போராட்டமும் ஜெயலலிதா எதிர்ப்பதாகச் சொல்லும் மத்திய அரசுக்கு எதிரானவைதான். இரண்டு போராட்டங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே மாநில அரசின் காவல்துறை செயல்பட்டது. இந்த விசயத்தில் பற்களும் நாக்கும் இசைவாகவே இயங்கின.
ஜெயலலிதா சொல்லும் பற்களில் மிகவும் மூர்க்கமாக தாக்குவதாக அவர் சொல்லும் மத்திய அரசு பற்கள் ஜெயலலிதாவை நம்பியே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் என்னும் பற்கள் எங்கிருக்கின்றன என தேட வேண்டிய நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது. அந்த வகையில் அந்தப் பற்களும் ஜெயலலிதாவுக்கு பெரும் அச்சுறுத்தலாகவோ ஆபத்தாகவோ மாறிவிடவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லாமலே அஇஅதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என்பது போன்ற சூழல் கூட இருந்தது. அதனால்தான், என்எல்சி தொழிலாளர்களை கைது செய்ய காவல்துறையை அனுப்பிய சுவடு மாறாமல், என்சிடிசிக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, நரவேட்டைக் காரர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் முன்னோட்டங்களை நடத்த முடிந்தது.
ஆக, ஜெயலலிதா சட்டமன்றத்தில் வெளிப்படையாக குறிப்பிட்ட பற்கள் அவரைப் பொறுத்தவரை பலவீனமானவை. அவர் வெளிப்படையாக குறிப்பிடாதது தமிழகமெங்கும் நடந்துகொண்டிருக்கிற மக்கள் போராட்டங்கள்.
அந்தப் பற்களுக்கிடையில் சிக்கிய நாக்குகள் தப்பியதாக வரலாறில்லை. தற்காலிக வெற்றிகளையும் தலைகீழாக மாற்றும் வல்லமை அந்தப் பற்களுக்கு உண்டு.
மானுடப் படுகொலைகள்
2012 மே 11 உருது எழுத்தாளர் சாதத் அசன் மாண்டோ வின் நூற்றாண்டு. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது அவர் எழுதிய சிறு கதைகள், சீக்கியப் படுகொலைகள், குஜராத் படுகொலைகள் மற்றும் எல்லா வகை மானுடப் படுகொலைகளுக்கும் பொருந்தும். தி இந்து நாளேடு வெளியிட்ட அவரது 3 சிறுகதைகள் இங்கு பிரசுரிக்கப்படுகின்றன.
முன்னேற்பாடு
முதல் சம்பவம் தடுப்பரண் அருகே நடந்தது. உடனே அங்கு ஒரு காவலர் போடப்பட்டார்.
மறு நாளே, மற்றுமொரு சம்பவம் கடை முன்பு நடந்தது. காவலர் இரண்டாவது சம்பவம் நடந்த இடத்திற்கு மாற்றப்பட்டார்.
மூன்றாவது சம்பவம் நள்ளிரவில் சலவையகம் முன்பு நடந்தது. ஆய்வாளர் புதிய இடத்திற்கு காவலரை மாறிச் செல்லுமாறு கூறியபோது, காவலர் சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, ஒரு வேண்டுகோளை வைத்தார். ‘தயவு செய்து, அடுத்த சம்பவம் நடக்க இருக்கும் இடத்திற்கு, என்னை மாற்றுங்கள்’.
சலுகை
‘தயவுசெய்து என் இளம் பெண்ணை என் எதிரில் கொல்லாதீர்கள்’.
‘சரி சரி, அவன் கோரிக்கையை ஏற்போம். அவள் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு அவளை அந்தப் பக்கம் தள்ளுங்கள்’.
சாரிகத்தி, தொப்புள் தாண்டியும் வயிற்றைக் கிழித்துப் பாய்ந்தது. பெல்ட் அறுந்துவிட்டது.
திடீரென தாக்கியவன் முழு வருத்தத்தோடு சொன்னான். ‘ஓ, நான் ஒரு தவறு செய்து விட்டேன்’.
ஒடுக்கப்பட்டவர்களின் நெடுமூச்சு சுடும்
அறவியலும் பொருளாதாரமும் மோதிக் கொள்ளும்போது, பொருளாதாரமே எப்போதும் வெற்றி பெறுகிறது என்பது வரலாறு. அவர்களை கட்டாயப்படுத்தும் அளவுக்கான சக்தி இல்லை என்றால், ஆதிக்க சக்திகள் எப்போதுமே தாமாக முன்வந்து தங்களை மாற்றிக் கொண்டதில்லை. - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
அம்பேத்கார் ஒரு நத்தை மீது அமர்ந்திருக்கிறார். அந்த நத்தையின் மேல் அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதியிருக்கிறது. நேரு கையில் ஒரு சாட்டையை வைத்துக் கொண்டு நத்தை மீது அமர்ந்திருக்கும் அம்பேத்காரை விரட்டுகிறார். 1949ல் பிரபல கேலிச்சித்திர வல்லுநர் சங்கர் வரைந்த இந்த கேலிச்சித்திரம் அன்றைய அரசியல் விமர்சனம்.
அன்றில் இருந்து கங்கையிலும் காவிரியிலும் ஏராளமான தண்ணீர் போன பிறகு, அந்த கேலிச் சித்திரம், 2006ல் தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி கவுன்சிலால் மத்திய பாடத் திட்டத்தின் 11ஆம் வகுப்பு சமூக விஞ்ஞானம் பாடப் புத்தகத்தில் பிரசுரிக்கப்படுகிறது.
6 வருடங்கள் கழித்து 2012ல், பாடப் புத்தகத்தில் அந்தக் கேலிச் சித்திரம் இடம் பெற்றதற்கு மாநிலங்களவையிலும் மக்களவையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த கேலிச்சித்திரம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்றும் இருக்கிற புத்தகங்கள் விநியோகிப்பது நிறுத்தப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் அறிவித்தார். அந்த கேலிச்சித்திரம் பாடப் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டதற்காக மன்னிப்பும் கோரினார்.
விசயம் இங்கே முடிந்துவிடவில்லை. அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திரம் பிரசுரிக்கப்படுவது தவறென்றால், மம்தா பற்றிய கேலிச் சித்திரம் பிரசுரிக்கப்படுவதும் தவறுதானே என திரிணாமூல் அறிவாளிகள் கேள்வி எழுப்புகின்றனர். சம்பிதராய தர்க்கம் பார்க்க, கேட்க சரி, நியாயம் என்று படுகிறது. ஆனால் அது பெரும்பாலும், காப்பாற்ற முடியாததை காப்பாற்ற முயற்சிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சாப் முதல் பரமக்குடி வரை தலித் மக்கள் மீதான அரசு மற்றும் சமூக ஒடுக்குமுறை தொடர்கிறது. கூலி உயர்வு போராட்டமானாலும் தலித் மக்கள், நரபலியானாலும் தலித் குழந்தை, பாலியல் வன்முறை என்றாலும் தலித் பெண்கள், தற்கொலை என்றாலும் தலித் மாணவர்கள், மாங்கல்யத் திட்டம் என்றாலும் தலித் சிறுமிகள், கவுரவக் கொலை பெயரில் நடக்கும் ஆதிக்கக் கொலையானாலும் தலித் பெண் அல்லது ஆண்... அவர்கள் எங்கும், எப்போதும், யாராலும் தாக்கப்படலாம்....
அந்த தலித் மக்களின் சமூக சமத்துவத்துக்காக, அவர்கள் கவுரவத்துக்காக போராடுகிற, நாளை விடுதலை நிச்சயம் என்று நம்பிக்கை கொண்டுள்ள பல தலித் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு அம்பேத்கார் ஆதர்ச திருஉரு. இந்திய அரசியலில் தலித் மக்கள் விடுதலையின், சமத்துவத்தின், அதிகாரத்தின் அடையாளம். இந்த அடையாளம் நிறுவப்பட்டதும் சாமான்றயத்தில் நடக்கவில்லை.
1949ல் அந்த கேலிச்சித்திரத்தை யாரும் எதிர்க்கவில்லை. அதற்கு அரசியல் நியாயமும் இல்லை. அது வெளிப்பாட்டுச் சுதந்திரம். அரசியல் விமர்சனம். ஆனால், இன்று சமூக விஞ்ஞானம் பற்றிய பாடப்புத்தகத்தில் அது வெளியிடப்படுவது அம்பேத்காரை, அவர் சார்ந்த சாதியை இழிவுபடுத்துவது அல்லாமல், ஆதிக்க சாதி மனோநிலையின் வக்கிரமான வெளிப்பாடல்லாமல், சாதிய துவேஷ நஞ்சை விதைப்பது அல்லாமல் வேறல்ல.
மம்தா பற்றிய கேலிச்சித்திரம் தொடர்பான மம்தா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கருத்துச் சுதந்திரத்தை வெட்டிச் சுருக்குவது அல்லாமல் வேறல்ல. அம்பேத்கார் பற்றிய கேலிச்சித்திரத்தை, பின்னணி முற்றிலும் மாறிய சூழலில் வெளியிடுவது ஆதிக்கவெறி என்றால், மம்தா பற்றிய கேலிச்சித்திரத்தை பொருத்தமான பின்னணியில் வெளியிடக் கூடாது என்பதும், அதையொட்டிய தணிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளும் ஆதிக்க வெறி நடவடிக்கைகளின் மறுபதிப்பு. ஒடுக்கப்பட்டவர்கள் நெடுமூச்சு சுடும் என்பதை கபில் சிபலும் மம்தாவும் அறிந்துகொள்வார்கள்.
மாணவர் - இளைஞர் உரிமைப் பிரகடனம்
மே 1 முதல் ஆகஸ்ட் 9 வரை அய்சா, ஆர்ஒய்ஏ இயக்கம்
ஆகஸ்ட் 9 நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி
வேலை செய்யும் உரிமைப் பிரகடனம்
1. மத்திய அரசு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வேண்டும். புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.
2. அனைத்து மாநில அரசாங்கங்களும் 25 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு கவுரவமான உதவித் தொகை வழங்க வேண்டும்.
3. அனைத்துத் துறைகளிலும் பயற்சியாளர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிபவர்களை எல்லோரையும் நிரந்தரப்படுத்த வேண்டும். வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புக்கள் உருவாக்க ஆணையங்களை உருவாக்க வேண்டும். அனைத்து காலி இடங்களும் நிரப்பப்பட வேண்டும்.
கல்வி உரிமைப் பிரகடனம்
1. முதன்மையான அடிப்படை உரிமையான கல்வி உரிமையைப் புறந்தள்ளி, கல்வியை தனியார்மயம் மற்றும் வணிகமயமாக்கும் தற்போதைய கல்வி உரிமையைப் புறக்கணிப்போம். பொதுப் பள்ளித் திட்டத்திலான புதிய கல்வி உரிமை மசோதாவை முன் வைக்க வேண்டும்.
2. பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் தனியார்மயத்தை ஊக்குவிக்கவும் வழி செய்யும் தனியார் பல்கலைக் கழக மசோதா, அந்நிய பல்கலைக் கழக மசோதா போன்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தேச மசோதாக்களை உடனடியாக வாபஸ் வாங்கு.
ஜனநாயக விரோத லிங்டோ கமிட்டி பரிந்துரையைப் புறக்கணிப்போம். முழுமையான ஜனநாயக வழிமுறையில் அனைத்து வளாகங்களிலும் மாணவர் பேரவை நடத்துவதை உத்தரவாதப் படுத்த வேண்டும்.
3. தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஓரே மாதிரியான கல்விக் கட்டணம், சேர்க்கை முறை, தனியார் மற்றும் அரசாங்க உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தியைக் கண்காணிக்க மத்திய மற்றும் மாநில அளவில் சட்டம் உருவாக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இட ஓதுக்கீடு அமல்படுத்தப்படுவதையும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் தடுத்து நிறுத்தவும் ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உத்தரவாதப்படுத்தவும் வேண்டும்.
ஊழல் மற்றும் பெருநிறுவனங்களின் கொள்ளைக்கெதிரான ஜனநாயக உரிமைப் பிரகடனம்
1. அரசின் லோக்பால் மசோதாவுக்கு பதிலாக ஒரு செயலூக்கமான மக்கள் லோக்பால் மசோதாவை நிறைவேற்று. பெருநிறுவனங்கள், ராணுவம், நீதித்துறை, அரசுசாரா நிறுவனங்கள், பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சக நடவடிக்கைகள் அனைத்தையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வா. சமூகத்தில் அனைத்தும் தழுவியதாகவும் ஜனநாயகமானதாகவும் லோக்பால் கட்டமைப்பு உருவாக்ககு. ஊழலுக்கு அடிப்படை காரணமான புதிய பொருளாதாரக் கொள்கையை தனியார்மயக் கொள்கைகளைத் திரும்பப் பெறு.
2. பெருநிறுவனங்களுக்கு வழங்கும் வரிச் சலுகைகளை உடனே நிறுத்து. நிலம், கனிம வளங்கள், நீர், நிலக்கரி, விதைகள், அலைக்ற்றை மற்றும் இதர இயற்கை வளங்களைக் பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்கும் கொள்கைகளை, தனியார்மயக் கொள்கைகளைத் திரும்பப் பெறு. அனைத்து இயற்கை வளங்களும் தேசத்தின் சொத்து என அறிவி.
3. ஜனநாயக இயக்கங்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், தேசத்துரோக சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்.
மேக முதலாளித்துவம்
- என்.கே.நடராஜன்
உலகெங்கிலும் இணைய தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடி. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 10 கோடி. நாடுகளுக்கிடையே வேறுபாடுகள் இருப்பது போல் நாடுகளுக்குள்ளும் வேறுபாடுகள் உண்டு. இந்தியாவில் இணையதள பயன்பாட்டில் நகர்ப்புற, கிராமப்புற வேறுபாடு உண்டு. நகர்ப்புறங்களில் 6% வீடுகளில் இணையதள வசதி உண்டென்றால், கிராமப்புறங்களில் வெறும் 0.4% வீடுகளில் மட்டுமே இணைய தள வசதி உள்ளது.
தற்போதைய முதலாளித்துவ உலகத்தை ஃபோர்டுக்கு பிந்தைய காலம் என்றும் சொல்வதுண்டு. ஃபோர்டு உலக பணக்காரர்களில் முதல் வரிசையில் இருந்தவர். பின்னர் கணினி, இணையதள முதலாளிகளான பில் கேட்ஸ் வகையறாக்கள் முந்திவிட்டார்கள்.
உற்பத்தித் துறை முதன்மை இடத்தை வகித்தது கடந்த காலம். உலகமய கால கட்டத்தில் உற்பத்தித் துறையை விட சேவைத் துறை பன்மடங்கு பெரிதாகிவிட்டது. புதிய பொருளாதாரத்தில் தகவல் தொடர்பு கேளிக்கை துறைகளில் பிரம்மிக்கதக்க வளர்ச்சி முதலாளித்துவத்தின் புதிய முகத்தை காட்டுகிறது.
இணையதளத்தைப் பற்றி காலச்சுவடு பத்திரிகையில் ‘இணையமும் நானும்’ என்றத் தலைப்பில் பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரை எழுதியுள்ளார். அவர் ‘எனது முதல் ஆங்கில நாவலை கணினி பயன்படுத்த தெரியாமல் எழுத முடிந்திருக்குமா? முடிந்திருக்காது.’ என்கிறார். வேறொரு இடத்தில் ‘அள்ள அள்ள குறையாமல், அதிகரித்துக்கொண்டே இருக்கும் அட்சய பாத்திரம் இணையம். அறிவின் கருவிகளை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்த்ததில் இணையத்தின் பங்கு அளவிட முடியாதது’ என்கிறார். மேலும் கூறும்போது ‘இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் பலருக்கும் இருக்கும் — ‘தங்களுக்கு தெரியாதது ஏதுமில்லை’ — என்ற ஆணவம் இந்த அபாயத்தை வலுப்படுத்துகிறது. அறிவைக் கூர்மையாக்கும் சாதனங்களைத் தேட அதிக முயற்சி எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாத தால், தேடாமலே காலத்தைத் தள்ளி விட லாம்... இந்த முடிவு அறிவு சோம்பேறித் தனத்தை வளர்க்கிறது... அறிவியல் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும்’ என்கிறார். ‘இணையத்தின் எதிர்காலம் என்ன’ என்ற கேள்வி எழுப்பி ‘முகநூல்களும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் அது உருவாக்கிய சாதனங்களும் ‘மேக முதலாளித்துவம்’ (கிளவுட் கேப்டலிசம்) என்னும் கோட்பாட்டிற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கின்றன... நமது முதலீடுகள், ஊடகங்கள், தகவல்கள், மென்பொருள்கள், திட்டங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதை தனியார் நிறுவனங்கள் நமக்காக முடிவு செய்யும் நிலை உண்டாகலாம். நமது படுக்கை அறைக்குள் அவர்களால் நமக்கே தெரியாமல் நுழைய முடியும்’ எனப் பதில் சொல்கிறார். கணினி முன் அமரும் மனிதர்கள் சுயமிழப்பது, வெறும் திரையாவது ஆகியவை பற்றிய விமர்சன விவாதங்களும் நடக்கின்றன.
தமிழக அரசாங்கத்தின் பட்ஜெட் உரையில் ஆளுகை என்றத் தலைப்பில் ‘அனைத்து அரசு சார்ந்த பொது சேவைகளும் மக்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் பொதுச் சேவை மய்யங்கள் வடிவமைக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும். பல்வேறு துறைகளிடையே வன்பொருள் திறன் அளவை பங்கிட்டு பயன்படுத்தும் வகையில் ‘கிளவ்ட் கம்ப்யூட் டிங்’ (ஸ்ரீப்ர்ன்க் ஸ்ரீர்ம்ல்ன்ற்ண்ய்ஞ்) முறையையும் இந்த அரசு ஊக்குவிக்கும்.’ துரிதம் மற்றும் துல்லியம் பேணப்படுவது ஜெயலலிதாவின் முயற்சி என்கிறார்கள். இந்தத் துறையில் அனுபவம் மிக்க தொழில் அதிபர்களை ஜெயலலிதா நாடியுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகின்றன. உண்மையில், பகாசுர மென்பொருள் நிறுவனங்களுக்கு ‘பிசினஸ்’ தருவது முதல் நோக்கம் என்பது நமக்குத் தெரியும். கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றிய சாதக பாதக அம்சங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன.
ஆகப்பெரிய அறிவாளி ஆக குறுக்குவழி ஒன்று உண்டு. கார்ல் மார்க்ஸ் பற்றி, கம்யூனிசம் பற்றி விமர்சனம் செய்ய வேண்டும். கணினி, கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி பேசுபவர்களும் சில அறிவார்ந்த கருத்துக்கள் முன்வைக்கிறார்கள். — அவர் 1800ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர். அது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப காலம். உற்பத்தித் துறை மேலோங்கி இருந்த காலம். உற்பத்தி கைவினைஞர்களின் கைகளில் இருந்து மாறிச்சென்ற காலகட்டம். கைவினை ஞர்கள் உற்பத்திக் கருவிகளை கையில் வைத்திருந்தார்கள். ஆலைகளில் தொழிலாளர்கள் கையில் உற்பத்திக் கருவிகள் ஏதுமில்லை. அப்போது உற்பத்திக் கருவிகளும் கச்சாப் பொருளும் முதலாளிக்குச் சொந்தமாயிருந்தன. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களும் முதலாளிகளுக்குச் சொந்தமாயிருந்தன. முதலாளி தொழிலாளியின் உபரி உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் லாபம் அடைந்தான். கால மாற்றத்தில் சந்தை பிழைத்திருக்க பெரிய அளவிலான உற்பத்தி, பொருளாதாரம் தேவையாயிருந்தது. ஆனால் கணினி புரட்சி, ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களை முன்கொண்டு வந்திருக்கிறது. இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது. உலகம் முழுவதும் பலருக்கு உற்பத்தி கருவியாகிய கணினிகளை வைத்துக் கொள்ள வாய்ப்பு உருவாகி உள்ளது. பழைய வகை உற்பத்தியில் நேரடியாக ஈடுபடும் தொழிலாளிக்கு முதலாளிகளின் கூட்டமைப்பில் இடமில்லை. ஆனால் புதிய வகை கைவினைஞர்களுக்கு அந்தக் கூட்டமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்பு உள்ளது. கணினி போன்ற உற்பத்திக் கருவிகளை பெற்றுக் கொள்ள பெரிய முதலீடு தேவையில்லை — போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. கணினிப் புரட்சி, தொலைவை இல்லாமல் செய்தது போல், எல்லோரையும் முதலாளிகளாக்கி, முதலாளி, தொழிலாளி என்ற பேதம் இல்லாமல் செய்துவிடுகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.
முதலாளித்துவத்தில் உற்பத்தி மக்கள் தேவைகளுக்காக நடத்தப்படுவதில்லை. லாபத்துக்காக நடத்தப்படுகின்றது. முதலாளித்துவத்தில், கணினி மற்றும் இணைய சேவைகள், மக்கள் அனைவரும் முதலாளிகளாகி நல்வாழ்வு பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தில் நடத்தப்படுபவை அல்ல. முதலாளிகளின் லாபத்தை மட்டுமே அடிப்படையாக, நோக்கமாகக் கொண்டவை. உலகை ஆட்டிப் படைக்கும் நிதி மூலதனத்தின் துரிதப் பாய்ச்சல், இடமாற்றம், இணையத்தால் சாத்தியமாகிறது.
முதலாளித்துவம் மார்க்ஸ் காலம் முதல் தற்போதைய உலகமய காலகட்டம் வரை விதவிதமான சுரண்டல் வடிவங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மார்க்úஸ தனது மூலதனத்தில் பல்வகையான சுரண்டல் வடிவங்களைப் பற்றி விரிவான விளக்கங்களை கூறியுள்ளார்.
பீடித் தொழிலாளர்கள் ஓர் ஆலை வளாகத்திற்குள் சென்று வேலை செய்யவில்லை. வீடுகளில் தமக்கு சொந்தமான கத்திரி போன்ற சிறிய உற்பத்திக் கருவிகளைக் கொண்டு பீடி சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் மிகவும் மலிவான கூலிக்கு வேலை செய்து வருகிறார்கள். சுற்றுப்புறம் வேறுவேறு தொழிலில் குறிப்பிட்ட அளவில் கூலி உயர்ந்த போதும் பீடித் தொழிலாளர் கூலி மிகவும் அற்பமானது. பழமையான தொழில் நுட்பத்தில் இயங்குகிற இந்தத் தொழிலில், பழமையான தொழில்நுட்பம் கொண்டே பீடி முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். பீடித் தொழிலாளர்களும் ஒரு வகையில் உற்பத்திக் கருவிகளுக்கு சொந்தக்காரர்கள்தான்.
கைத்தறி நெசவாளர்களுக்கும் உற்பத்திக் கருவியாகிய தறி சொந்தம்தான். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1600 கூட்டுறவு சங்கங்கள் மூலம் பல லட்சக்கணக்கான நெசவாளர்கள் கூலிக்குத்தான் வேலை செய்கிறார்கள்.
பீடித் தொழிலாளர்களுக்கு கத்தரிபோல, நெசவாளர்களுக்கு தறிகள் போல கணினிகளும் கீ போர்டு அடிமைகளுக்கு கருவியே.
பல வகையான சுரண்டல் வடிவங்களில் நவீன முதலாளித்துவம் தனது லாப வீத சரிவை சரி கட்டிக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க பெருமுதலாளிகள் மலிவான கூலிக்கு மூன்றாவது உலக நாடுகளில் வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். இந்திய உள்நாட்டு பெருமுதலாளிகள் உள்நாட்டுக்குள்ளேயே வேலைகளை அவுட்சோர்ஸ் செய்கிறார்கள். மாங்கல்யத் திட்டம் என்ற பெயரில் நூற்பாலைகளில் இளம்பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு ஒட்டச் சுரண்டப்படுவது போல், பயிற்சியாளர், ஒப்பந்தத் தொழிலாளர் என மலிவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுவதுபோல் கீ போர்டு அடிமைகளும் மலிவான கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
கணினி முன் அமர்ந்திருப்பவர்கள் இணையத்தை பயன்படுத்துகிற அதேநேரம், யாஹ÷, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்களின் தொடர் பெருலாபத்தை உறுதி செய்கிறார்கள். இணையத்தில் பல்வேறு சேவைகளை தரும் தளங்களுக்குள் அக்கப்போர்கள், அவற்றின் மீது முறைகேடுகள் செய்ததாக, புகார், வழக்கு என முதலாளித்துவப் போட்டியின் அங்க அடையாளங்கள் தெரியத் துவங்கிவிட்டன.
பன்னாட்டு, உள்நாட்டு பெருநிறுவனங்களில், அழைப்பு மய்ய சிறைக்கூடங்களில், தொழிலாளர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது, மின்னணு கயிறுகளில் கட்டிப் போடுவது, அதன் மூலம் கூடுதல் உழைப்பைப் பெறுவது, விசுவாசமான, கீழ்படிதலுள்ள கூலியடிமைகளாக வைப்பது முதலாளிகளுக்கு இணையத்தால் கணினியால் சாத்தியமாகியுள்ளது. ஆனால், இதே கணினி, இணையம் மூலம் உழைக்கிற, ஒடுக்கப்படுகிற மக்கள், முதலாளித்துவப் பாய்ச்சலுக்கு தற்காலிகத் தடைகளையும் எழுப்ப முடிகிறது. அரபு வசந்தம், வால் ஸ்ட்ரீட் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களில் இணையம் பெரும்பங்காற்றியுள்ளது.
முதலாளித்துவ நெருக்கடியை சமாளிக்க, முதலாளித்துவம் நெருக்கடியில் இருந்து மீள கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற முறைகள் கை கொடுக்கப் போவதில்லை. மூலதனத்திற்கும் கூலியுழைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை அவை மாற்றிவிடப் போவதில்லை. வர்க்கப் போராட்டம் வர்க்கங்கள் இருக்கும் வரைக்கும் நீடிக்கத்தான் செய்யும்.
ஏப்ரல் 22 - சூலை 28,
கட்சி வலுப்படுத்தும் இயக்கம்
கட்சி கட்டுதல், கட்சி அமைப்பு:
மேலும் சில விசயங்கள்
காம்ரேட்
கட்சி கட்டுதல் - நிறைவு பகுதி
தோழர் லெனினின் இரண்டு மேற்கோள்களைப் பார்ப்போம்.
“அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு, அமைப்பு தவிர வேறு ஆயுதம் இல்லை. பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ உலகின் அராஜகப் போட்டியின் ஆட்சியால் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறது. மூலதனத்திற்கான கட்டாய உழைப்பால் தரையில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது. முழு அழிவு, காட்டுமிராண்டித்தனம், சீரழிவு ஆகியவற்றின் அதல பாதாளத்திற்கு இடையறாமல் தள்ளப்படுகிறது.
பாட்டாளி வர்க்கம், மார்க்சியக் கோட் பாடுகளால் கருத்தியல்ரீதியாக ஒன்றுபடுத்தப்பட வேண்டும். இதனை அமைப்பின் பொருளாயத அய்க்கியத்தால், மறுஉறுதி செய்ய வேண்டும். இது கோடானுகோடி, உழைப்பாளர்களை ஒரு தொழிலாளர் வர்க்கப் படையாகப் பிணைத்து இழைக்கிறது. இதன் மூலம் மட்டுமே, பாட்டாளி வர்க்கம் வெல்லப்பட முடியாத சக்தியாக மாற்றப்பட முடியும், மாறியே தீரும். இந்தப் படையைக் கிழடு தட்டிப் போன ரஷ்ய சுயேச்சதிகாரத்தாலோ, வயது முதிர்ந்த சர்வதேச மூலதனத்தின் ஆட்சியாலோ எதிர்கொள்ள முடியாது. (ஓரடி முன்னால் ஈரடி பின்னால்)
சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம் பக்கமாய் உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை; ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் உதிக்கிறது. நவீன சோசலிச உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையில் மட்டுமே உதிக்க முடியும். எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால், தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும், சோசலிசப் பொருளாதார உற்பத்திக்கு முன் நிபந்தனையாகும்; எவ்வளவு விருப்பம் இருந்த போதும் சரி, தொழிலாளி வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப் போக்கிலிருந்து உதிக்கின்றன. விஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் வாகனம் பாட்டாளி வர்க்க மல்ல. முதலாளித்துவ அறிவாளிப் பிரிவினரே. இப்பிரிவினரின் தனித்தனி உறுப்பினரின் சிந்தனையிலேதான் சோசலிசம் தோன்றியது. இவர்களே, அதனை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டு போனார்கள்; அவர்கள், தம் பங்கிற்கு, பாட் டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தில், நிலைமைகள் அனுமதிக்கிற அளவிற்கு அதனைப் புகுத்தினார்கள். ஆக, சோசலிச உணர்வானது, பாட்டாளி வர்க்கப் போராட்டத்திற்கு வெளியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஒன்றாகுமே தவிர, அதற்குள்ளிருந்தே, தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல.
சமூக ஜனநாயகத்தின் கடமை, பாட்டாளி வர்க்கத்திற்குத் தன் நிலை பற்றிய, தன் கடமை பற்றிய உணர்வை ஊட்டுவது, சரியாகச் சொல்வதென்றால், நிரப்புவதாகும். வர்க்கப் போராட்டத்திலிருந்தே இந்த உணர்வு எழுமென்றால், இதற்கு அவசியமே இல்லை.”
(என்ன செய்ய வேண்டும்? நூலில் லெனின் கையாண்ட கார்ல் காவுட்ஸ்கி மேற்கோள்)
நமது கட்சி இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் அதிஉயர்ந்த அரசியல் அமைப்பாகும். அது ஒரு வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியை முதலாளித்துவத்தோடு மோதி, பெருமுதலாளி வர்க்கத்தை அரசு அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து நிறைவு செய்ய உறுதி பூண்டுள்ளது.
ஆக, தமிழ்நாட்டின், இந்தியாவின் கோடானுகோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாகப் பிணைத்து இழைப்பதே, நம் கடமையாகும்.
“நாம், நகர்ப்புற மற்றும் நாட்டுப்புறப் பாட்டாளிகளைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது மிகப் பெரிய வர்க்கமாக இருந்த போதிலும், தற்போதைய சமூக பொருளாதார அமைப்பில் விளிம்பு நிலையிலேயே உள்ளது. பிரச்சனை, அரசியல் அணிதிரட்டல் மூலம் இந்த வர்க்கத்தை அரசியலின் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதாகும். இந்த முயற்சியில், மேலோட்டமான முயற்சிகள் பயன் தராது. பிரச்சனை ஓர் அருவமான வழியில், மாலெ கட்சியை அல்லது பேரவா கொண்ட சில ஆளுமைகளை, அரசியல் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதல்ல.”
- வினோத் மிஸ்ரா
இதனைச் சாதிக்க, பாட்டாளி வர்க்கத்தை, மார்க்சியக் கோட்டுபாடுகளால் கருத்தியல்ரீதியாக ஒன்றுபடுத்த வேண்டும். இதனை, அமைப்பின் பொருளாயத அய்க்கியத்தால் மறு உறுதி செய்ய வேண்டும். அமைப்பில் இந்தப் பொருளாயத அய்க்கியம், கோடானுகோடி உழைப்பாளர்களை ஒரு தொழிலாளி வர்க்கப் படையாகப் பிணைத்து இழைக்கிறது.
மார்க்சியக் கருத்தியல் வலிமையின் தேவையும், அமைப்பின் அத்தியாவசியமும், புரட்சிகரக் கட்சியின் முன் நிற்கின்றன.
தோழர் லெனின், புரட்சிகர உணர்வு, வர்க்கப் போராட்டத்திலிருந்து தானாகவே பிறக்காது என்றும் அது வெளியிலிருந்து, புகுத்தப்பட வேண்டும், நிரப்பப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். அதாவது, பாட்டாளி வர்க்கத்துக்கு தன் நிலையையும் கடமையையும் உணர்த்த வேண்டும்; அதாவது, தனக்குள் ஒரு வர்க்கமாக இருப்பதை தனக்கான ஒரு வர்க்கமாக மாற்ற வேண்டும், உடனடிக் கடமைகளில் நீண்ட கால லட்சியங்கள் புகுத்தப்பட வேண்டும் என்றாகிறது.
இந்த உணர்வுபூர்வமான பாத்திரத்தைத் திறம்படச் செய்வதில்தான், கட்சி கட்டுதல் அடங்கி உள்ளது. அரசியல் கருத்தியல்ரீதியான அமைப்பின் தேவை குறித்து, அது தொடர்பான சில கடமைகள் பற்றி, ஏற்கனவே பார்த்தோம். (9ஆவது காங்கிரஸ் நகல் ஆவணம் இது பற்றி நிறையவே சொல்ல உள்ளது). இப்போது நாம் கட்சி உணர்வு, அரசியல் உணர்வு ஆகியவை பற்றிப் பார்ப்போம்.
சமூகத்தில் வர்க்கங்கள் இயங்குகின்றன. கட்சியும் சமூகத்தில்தான் இயங்குகிறது. இந்த சமூகத்தை தலைகீழாக மாற்றி அமைக்கும் புரட்சிக்கான தயாரிப்புப் பணிகளில் கட்சி ஈடுபட்டுள்ளது. கோடானுகோடி மக்களுக்கு அரசியல் உணர்வூட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கட்சி, தன் அரசியல் உணர்வை தக்க வைத்துக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவும் போராட வேண்டி உள்ளது.
கட்சி உணர்வு அரித்துப் போதல் பற்றி நமது ஆவணங்கள் சுட்டிக்காட்டுவதோடு புதிதாகச் சேர்ந்துள்ள சில பிரச்சனைகளையும் பார்ப்போம்.
ஒட்டுமொத்த பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு சுதந்திரமாகச் செயல்படும் திறன் வாய்ந்த மற்றும் பொறுப்பான ஊழியர்கள் பற்றாக்குறையைச் சந்திக்கிறோம். சில தோழர்கள் கருத்தியல் பிரச்சனைகளைச் சுமக்கிறார்கள். கட்சி மற்றும் மக்கள் நலன்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு மாறாகத் தமது சொந்த மற்றும் குடும்பப் பிரச்சனைகள் பற்றியே கூடுதலாகக் கவலைப்படுவது, கட்சியிலிருந்து மேலும் மேலும் சலுகைகள் எதிர்ப்பார்ப்பது, சோர்ந்து போன ஓய்ந்துவிட்ட ஒரு போர்வீரர் போல் காலம் தள்ளுவது, ஒரு தொழில்முறைப் புரட்சியாளரின் பண்புகள் அரித்துப்போவது, கடுமையான விடாப்பிடியான பணிகள் கண்டு அஞ்சுவது, அணிகளிடமிருந்தும் மக்களிடமிருந்தும் தனிமைப்படுவது போன்ற, பாட்டாளி வர்க்க கருத்தியலுக்கு அந்நியமான அறிகுறிகள், தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் ஒரு பொதுவான சரிவு, தாராளவாத ஜனநாயக லட்சியங்களுக்கு இரையாவது, நாடாளுமன்ற முடக்குவாதம், பதவி கவர்ச்சி ஆகியவற்றை நாடி அலைவது, குழுவாதம் மற்றும் கட்சி முடிவுகளை அமல்படுத்துவதில் ஒரு காத்திர மற்ற அணுகுமுறை ஆகியவை, கட்சி அமைப்பைப் பீடித்துள்ள வியாதிகள்.
கட்சித் திட்டத்தின் முன்னுரை, நமது வேலை நடைபற்றி பின்வருமாறு சொல்கிறது: “கட்சி வேலை நடையில், தத்துவத்தை நடைமுறையோடு ஒன்றிணைப்பது, மக்களோடு நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது, விமர்சனத்தையும் சுயவிமர்சனத்தையும் நடைமுறைப்படுத்துவது ஆகியவை மூன்று பிரதான கோட்பாடுகளாகும். கட்சி தன் நடைமுறையை வளர்த்தெடுப்பதற்கு, எப்போதுமே விவரங்களிலிருந்து உண்மையைக் கண்டறிவது என்ற கொள்கையைப் பின்பற்றுவதுடன். ஆழமான ஆய்வுகளையும் தீவிரமான படிப்புகளையும் மேற்கொள்கிறது”.
தத்துவத்தை நடைமுறையுடன் அமல்படுத்துவது என்பது, நடைமுறைப் பொருளில் கட்சி முடிவுகளை அமல்படுத்துவதாகும். தலைமை ஊழியர்களிடமே இதில் சுணக்கம் இருக்கும்போது, அவர்கள் கீழணிகளிடமும் மக்களிடமும், கட்சி முடிவுகளை அமல்படுத்து மாறு எப்படி கோர முடியும்?
கட்சி கட்டுதல் என்பது அன்றாட நடவடிக்கைகளில் எதிர்கால கம்யூனிச லட்சியத்தை நுழைப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு கம்யூனிஸ்ட் கூட்டு வாழ்க்கை முறையை வளர்ப்பதோடும் தொடர்புடையதாகும். இது வெறும் அமைப்புப் பிரச்சனை அல்ல. இது கம்யூனிஸ்ட் கருத்தியலோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதுவே, முதலாளித்துவ கருத்தியல் மற்றும் தனிநபர்வாத அழுத்தங்களிலிருந்து கம்யூனிஸ்ட்களைக் காக்கும் முறிவு மருந்தாகும்.
மக்களிடம் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தமது சொந்த கமிட்டி உறுப்பினர்களிடமே இயல்பாகப் பழகுவது, ஓர் உரையாடலை நடத்துவது போன்றவற்றிற்கே சில தோழர்கள் சங்கடப்படுகிறார்கள். விஞ்ஞானபூர்வமான, அமைப்பு ஊடகப்பட்ட தோழமை உறவுகளுக்குப் பதிலாக, பரஸ்பர நம்பிக்கை உறவுகள் தலை தூக்குகின்றன.
விமர்சனம் சுயவிமர்சனம் என்பதைப் பொறுத்தவரையில், சில தோழர்கள் அது தமக்கானதல்ல எனக் கருதுகிறார்கள். மேல் கமிட்டிகள் கீழ் அணிகள் மத்தியிலிருந்து வருகின்ற விமர்சனங்கள் தமக்கும் பொருந்தும் எனப் பார்ப்பதில் மன விடுதலை அடைய சிரமப்படுகிறார்கள். ஆய்வு, படிப்பு விவரங்களிலிருந்து உண்மையைத் தேடுதல் என்ற சிரமமான வழியை நிராகரித்து, அகநிலைவாதம், அனுபவவாதம் ஆகிய சுலபமான வழிகைளத் தேர்வு செய்கிறார்கள். மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதில் தேக்கம், வேலைகளைத் துணிந்து முன்நோக்கி நகர்த்துவதில் இருக்கிற இயலாமைகள், இந்தப் பிரச்சனைகளுக்கு வலு சேர்க்கின்றன.
நிஜ வாழ்க்கையில், இயங்குகிற, முன் நோக்கி நகருகிற, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில், கருத்தியல் பிரச்சனைகள் பரிசுத்த வடிவத்தில் வெளி வருவதில்லை. அவை வேறு பிரச்சனைகளோடு கலந்து கட்டியே வருகின்றன. வேலைகளை முன் எடுத்துச் செல்கின்ற போக்கிலும், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளைக் கறாராக அமல்படுத்தும் போக்கிலும், கொள்கை முடிவுகள் எடுத்தும்தான், இவற்றை எதிர்கொள்ள முடியும்.
இறுதி ஆராய்ச்சியில், புறச்சூழலின் தேவைக்கு ஏற்ப எழுவதில் மொத்தக் கட்சியையும் அரசியல், கருத்தியல், அமைப்பு ரீதியாக அணிதிரட்டுவது என்பதே, நேர்மறையான நமது அணுகுமுறையாக இருக்கும்.
அகில இந்திய அளவில், காங்கிரசும், பாஜகவும் செல்வாக்கு இழக்கின்றன. தமிழ் நாட்டில், ஜெயலலிதா தமது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மும்முரமாகவும் மூர்க்கமாகவும் தொடர்கிறார். திமுக தேமுதிகவால் ஜெயலலிதாவிற்குச் சவால் விட முடியவில்லை. இடதுசாரி ஜனநாயக சக்திகள் களம் காண, வேரூன்ற, வளர, ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.
மாவோயிஸ்ட்கள், காடுகளைவிட்டு ஆயு தங்களைச் சார்ந்திருப்பதைவிட்டு வெளியே வராமல், சுற்றி வளைப்பில் சிக்கி உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி, ஆகக் கூடுதலாக சார்ந்திருந்த இடது முன்னணி அரசாங்கங்களை இழந் துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அவர்கள் விதைத்ததை அவர்கள் அறுவடை செய்கிறார்கள். அவர்களது சரிவும் நெருக்கடியும் இடதுசாரி இயக்கத்தின் சரிவும் நெருக்கடியும் அல்ல. இடதுசாரி இயக்கத்தின் ஓட்டுநர் இருக்கையில் இருந்து அவர்களை அகற்றுவது, மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் இடதுசாரிப் புத்தெழுச்சி மூலம் நாம் அந்த இடத்திற்குச் செல்வது என்ற நம் வரலாற்றுப்பணி தொடர்கிறது.
போராடுகிற, அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கைகளை நாம் தொடர்கிறோம். அதே நேரம் இடதுசாரி பெருங்கூட்டமைப்பு என்ற நமது நிலைப்பாட்டிலிருந்து, மார்க்சிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சிப் பாத்திரம் வகிக்கும் சூழலில், விவகாரங்களில் அவர்களோடு, உரிய தருணங்களில், மட்டங்களில் ஊடாடுவது என்பதும் தொடரும்.
கட்சியின், அதன் வெகுமக்கள் அமைப்புக்களின் வளர்ச்சி, முன்முயற்சிகள், செல் வாக்கு, அரசியல் வழி, நாடெங்கும் தனித்த மரியாதையைப் பெற்றுள்ளன. வெற்றிகரமான மே 10 பீகார் பந்த், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல் முடிவுகள், பிரிக்கால் போராட்டம், போன்றவை நமது எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகின்றன.
“தாராளவாத குறுக்கு வழிகளுக்கான தேடுதலும், மெதுவான முன்னேற்றம்தான் நம் கதி எனச் செயலூக்கமில்லாமல் சோர்வுறுவதும், ஒன்றுக்கொன்று ஊட்டி வலு சேர்க்கின்றன. அவை கட்சியின் புரட்சிகர உணர்வையும் இயங்காற்றலையும் அரித்து விடுகின்றன. நாம், இவ்விரு, அந்நிய சிந்தனைப் போக்குகளையும் மனோநிலைமைகளையும் நிராகரிக்க வேண்டும். கட்சிக்குள், ஒரு முன்நோக்கிய நம்பிக்கை நிறைந்த சூழலை, வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலம், இருக்கிற நிலைமைகளில், நம் உண்மையான வேலையை விரிவு செய்ய, பல்வேறு பகுதிகளில் துறைகளில் வளர்ச்சி வாய்ப்பைச் சாதிக்க, மகத்தான முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிட, நமது எல்லா கவனத்தையும் ஆற்றலையும் ஒன்று குவிக்க முடியும்”. (எட்டாவது காங்கிரஸ் அரசியல் அமைப்பு அறிக்கை - பத்தி 57)
இறுதியாக, பர்த்வான் ஊழியர் கருத்தரங்க அறிக்கையின் இறுதிப் பகுதியை நினைவுபடுத்தி, முடித்துக் கொள்வோம்.
“நாம் கட்சி கட்டுதலைப்பற்றி விவாதித்து வந்துள்ளோம். அதில், கட்சி மற்றும் கட்டுதல் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளன. கட்டுதல் என்பது ஒரு படைப்பு நடவடிக்கை, ஒரு கட்டி எழுப்பும் நடவடிக்கை. ஓர் ஆக்கபூர்வமான, அனைத்தும் தழுவிய, படைப்பாற்றல் மிக்க அணுகுமுறை இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த எதையும் நாம் கட்ட முடியாது. ஆகவே, கட்சி கட்டுதலின் இந்த சாரமான அம்சத்தின் தீர்மானகரமான முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுகிற சிறுமைப்படுத்துகிற எல்லா கருத்துக்களையும் நாம் கைவிட்டாக வேண்டும். கட்டுப்பாடு, உறுதி, பொறுமை, கடின உழைப்பு, விடாப்பிடித்தன்மை, துணிச்சல், தியாகம், நம்பிக்கை மற்றும் தொலை நோக்குப் பார்வை என்ற, எதையும் கட்டுவ தற்குத் தேவையான அனைத்துப் பண்புகளையும், நாம் பேணி வளர்க்க வேண்டும். நாம் புரட்சிகர நம்பிக்கைக்கும் உறுதிக்கும் அழுத்தம் வைக்கிறோம். ஏனெனில் அவநம்பிக்கை மற்றும் கையறுநிலை அடிப்படையில் எதையும் கட்ட முடியாது.
நாம் பற்றிக் கொள்ள வேண்டிய அடுத்த அம்சம், நாம் கட்டுகிற கட்சி தொடர்பானது. நாம் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுகிறோம்; அது நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது; அதனுடைய குறைந்தபட்ச திட்டம் ஒரு வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சி எனவும் அதனுடைய அதிகபட்சத் திட்டம் கம்யூனிசத்தின் வளர்ச்சி வரை எனவும் அமைந்துள்ளது. இதற்கு, ஒருவர் கட்சி உறுப்பினராவதென்பது, ஒரு வாழ்நாள் கடமை, ஒரு வாழ்நாள் லட்சியம் என்று பொருளாகும்; இந்த பயணத்தில் நடுவில் ஓய்வு பெறுவது அல்லது ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இதற்கு நாம் ஒரு புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்குவதை லட்சியமாக முன்னிறுத்தி வேலை செய்வது என்றும், தற்போதைய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் அமைப்பைத் தக்க வைக்கிற பிற்போக்கான மற்றும் அழுகிப் போன அனைத்து விசயங்களோடும் நாம் மோதுவோம் என்றும் பொருளாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் கட்சி என்பது போராட்டம் மற்றும் மாற்றி அமைத்தல் தொடர்பானது; ஆனால் இந்தப் போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுமையோடு இருக்க வேண்டும், நாம் ஓர் ஆக்கபூர்வமான கூட்டு அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். நாம், சோசலிசத்தைப் போல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு லட்சிய உலகில் கட்டப்பட முடியாது என்பதையும், அது ஸ்தூலமான நிலைமைகளில்தான் கட்டப்பட முடியும் என்பதையும், அது வரலாற்றால் வழங்கப்பட்ட மற்றும் தற்போதைய சமூகத்தால் வடிவமைக்கப்பட்டு தரப்படுகிற மூலப் பொருட்களின் அடிப்படையில்தான் கட்டப்பட முடியும் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும், நாம் இப்போதுதான் துவங்கி உள்ளோம்; நாம் தாண்ட வேண்டிய பல தடைகள் காத்திருக்கின்றன. கண்டு பிடிக்கவும் கண்டறியவும் இன்னும் பலப்பல ஆர்வத்தைத் தூண்டும் இலக்குகள் காத்திருக்கின்றன. அடி மேல் அடி வைத்து தோளோடு தோள் நின்று, முன்னோக்கி நடைபோடுவோம்”.
உயிர் காக்கும் மருந்துகள்?
ஜி.ரமேஷ்
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்குக்கான சோராபெனிப் என்கிற மாத்திரை நெக்ஸôவர் என்கிற பெயரில் ஜெர்மன் பேயர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த மாத்திரையை நோய் வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டாக வேண்டும். ஒரு மாதத்திற்கு 120 மாத்திரைகள். 120 மாத்திரைகளின் விலை ரூபாய் 2 லட்சத்து 80 ஆயிரம். காப்புரிமைச் சட்டத்தைக் காட்டி இந்திய நிறுவனங்களை இதே மாத்திரையைத் தயாரிக்க விடாமல் செய்து, அநியாய விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது பேயர் நிறுவனம். இந்திய மக்கள் இந்த விலை கொடுத்து வாங்க முடியாது, விலையைக் குறையுங்கள் என்றார் இந்திய காப்புரிமைக் கட்டுப்பாட்டுத் தலைவர் பி.எச்.குரியன். பேயர் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை. குரியன் தன் பதவிக்காலம் முடியும் கடைசி நாளான மார்ச் 12 அன்று இந்திய காப்புரிமைகள் சட்டம் பிரிவு 84ன் கீழ் இந்திய நிறுவனமான அய்தராபாத்தைச் சேர்ந்த நாட்கோ பார்மா என்ற நிறுவனத்திற்கு கட்டாய உரிமம் வழங்கி அதே சோராபெனிப் மாத்திரையை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி தந்தார். இதன் மூலம் முதன்முதலாக, இந்திய மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான மருந்துகள் மீது அந்நிய நிறுவனங்கள் வைத்திருந்த ஏகபோகத்திற்கு அடி விழுந்தது. இப்போது 120 மாத்திரைகளின் விலை ரூ.8,800 மட்டுமே. பேயர் நிறுவனத்திற்கு காப்புத் தொகையாக 6% தன் விற்பனையில் நாட்கோ நிறுவனம் வழங்கிவிடும்.
(Controller Genral of Patents)
அறிவுச் சொத்துரிமையும் அந்நிய நிறுவனங்களும்
அறிவுச் சொத்துரிமைகள் ( Intelectual Property Rights) சட்டத்தின் மூலம் அந்நிய நிறுவனங்கள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவின் பாரம்பரியப் பொருட்களான மஞ்சள், வேப்பிலை, பாஸ்மதி அரிசி போன்றவற்றை தன்னுடைய பொருள் என்றும் தான் கண்டுபிடித்தது என்றும் கூறி காப்புரிமை செய்து வைத்துக் கொண்டு அப் பொருட்களை மற்றவர்கள் தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது அப்படி அவர்கள் பயன்படுத்தினால், தயாரித்தால், விற்றால் தனக்கு காப்புத் தொகை வழங்க வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறார்கள். மஞ்சளுக்கு மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி மிசிசிபி மருத்துவ மய்யப் பல்கலைகழகம் அமெரிக்க வணிக மற்றும் காப்புரிமை அலுவலகத்தில் ( United States Trade and Patents Office) காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டது. அமெரிக்க வணிக மற்றும் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை செய்யப்பட்டுள்ள 40,000 பொருள்களில் 50க்கும் மேலான பொருள்கள் இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களும் தாவர வகைகளும் ஆகும். வேப்பிலைக்கு காப்புரிமையை டபிள்யு.ஆர். கிரேஸ் அன் கோ என்கிற நிறுவனமும் அமெரிக்க விவசாயத் துறையும் அய்ரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டன. இவற்றிற்கு எதிராக இந்தியாவின் வந்தனா சிவா போன்றவர்கள் போராடி வழக்கு தொடுத்து இவை இந்தியாவின் பாரம்பரியப் பொருள்கள் என்கிற உரிமை இப்போது நிலைநாட்டப்பட்டுள்ளது.
மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் காப்புரிமைச் சட்டம் மற்றும் அறிவுச் சொத்துரிமைகளைப் பயன்படுத்தி அந்நிய நிறுவனங்கள் ஏகபோகமாக கொடிகட்டிப் பறந்தார்கள். 1972 வரை பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்யாமலும் காப்புரிமையைக் காட்டி இந்தியக் கம்பெனிகள் அம் மருந்துகளை தயாரிக்கவிடாமலும் தடுத்து வந்தன. அநியாய விலைக்கு, மக்களுக்கு கட்டுபடியாகாத விலைக்கு விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். 1972ல் இந்திய காப்புரிமைச் சட்டத்தை மருந்துத் தயாரிப்புக்கு பயன்படுத்துவது ஒழித்துக் கட்டப்பட்டது. இதன் விளைவாக இந்தியாவில் மருந்துகள் தயாரிப்பு முன்னேற்றமடைந்தது. குறைந்த விலையில் கிடைத்தது. பிற வளரும் நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளுக்கும் இந்திய மருந்துகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
2001ல் எச்அய்வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு குறைந்தபட்ச செலவே ஆண்டிற்கு 10 ஆயிரம் டாலர்கள் அதாவது 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். சில ஆப்பிரிக்க நாடுகள் எய்ட்ஸ் மருந்துகளை வாங்குவதற்கு அவர்கள் உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்குமேல் செலவு செய்ய வேண்டியதிருந்தது. அதே மருந்தை 2003ல் இந்திய நிறுவனமான சிப்ளா வருடத்திற்கு 250 டாலருக்கு (ரூ.12,250) விற்பனை செய்தது. இப்போது அதன் விலை 100 டாலருக்கும் அதாவது ரூ.4900க்கும் குறைவு. 1972 முதல் 2005 வரையில் இந்திய காப்புரிமைச் சட்டங்கள் முற்போக்கானவையாக இருந்தன. இந்தியா மருந்துத் தயாரிப்பில் உலகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது. 1994ல் உருகுவேயில் உலக வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அது 1995ல் உலக வர்த்தக அமைப்பாக உருமாறியது. 1995 - 2005 கால கட்டத்தில் இந்திய மருந்துக் கம்பெனிகளுக்கு ஏறுமுகம்.
2005ஆம் ஆண்டிற்கு முன்பு வரை எந்த இந்திய நிறுவனமும் எந்தவொரு மருந்தையும் தயார் செய்து விற்கலாம். யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தான் தயாரிக்கும் மருந்தின் தொழில் நுட்பம் அந்நிய நிறுவனத்தின் தொழில் நுட்பத்தில் இருந்து வேறுபட்டது என்று நிரூபித்தால் மட்டும் போதும். ஆனால், 2005ஆம் ஆண்டு இந்திய காப்புரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காப்புரிமை செய்யப்பட்ட எந்தவொரு மருந்தையும் (தொழில் நுட்பம் வேறாக இருந்தாலும் கூட) இந்தியக் கம்பெனிகள் தயாரிக்கக் கூடாது என்று அந்நிய நிறுவனங்கள் அந்த மருந்தின் மீது ஏகபோக உரிமை கொண்டாட வழிவகுத்தார்கள். இதன் விளைவாக இந்தியாவில் குறைந்த விலையில் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வந்ததற்கு தடை ஏற்படுத்தினார்கள். இந்திய காப்புரிமைச் சட்டத்தில் 1999, 2002, 2005 ஆண்டுகளில் வணிகம் தொடர்பான அறிவுச் சொத்துரிமைகள் ஓப்பந்தம் 1995ன் அடிப்படையில் மூன்று முறை திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்தத் திருத்தங்கள்தான் மீண்டும் மருந்துத் தயாரிப்பில் அந்நிய நிறுவனங்கள் தலையெடுக்கக் காரணமாயின.
பன்னாட்டு நிறுவனங்கள் மூன்று வழிகளில் இந்திய மருந்துச் சந்தையை கைப்பற்றத் தொடங்கின. 1. தங்கள் நிறுவனம் மூலம் ஒரு குறிப்பிட்ட மருந்து வகையையே கைப்பற்றின. 2. ஏகபோக காப்பீடு மூலம் மருந்துச் சந்தையைக் கைப்பற்றின. 3. இந்திய நிறுவனங்களுக்கு நிதி அளித்து பின்னர் அவற்றை வாங்கிக் கொண்டன. சிப்ளா, சன், கெடிலா ஹெல்த் கேர், மேன்கைன்ட், அல்கம், லுப்பின் போன்ற இந்திய கம்பெனிகளில் பன்னாட்டு கம்பெனிகளின் பங்கு 50%த்தைத் தாண்டியது. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியக் கம்பெனிகளை எடுத்துக் கொண்டதுடன் மற்ற இந்திய கம்பெனிகளின் மீதான கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்திக் கொண்டன. புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக சீர்திருத்தம் என்ற பெயரில் 1990களில் அன்னியச் செலவானி ஒழுங்குமுறைச் சட்டம் ஒழிக்கப்பட்ட பின்னர் இந்திய மருந்து நிறுவனங்களில் 40%த்துக்கும் குறைவாக இருந்த பன்னாட்டு நிறுவனங்களின் பங்குகள் 50%க்கும் மேல் உயர்ந்தது.
காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(டி)யும் கட்டாய உரிமையும்
2005 ஆம் ஆண்டின் திருத்தத்திற்குப் பிறகு இந்திய கம்பெனிகள் நேரடியாக உயிர் காக்கும் மருந்துகளை தயாரித்து விற்க முடியவில்லை. இருப்பினும், காப்புரிமைச் சட்டத்திருத்தங்களுக்கு ஏற்பட்ட பலமான எதிர்ப்பின் காரணமாக இந்திய பாராளுமன்றம் காப்புரிமைச் சட்டத்தில் சில பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதில் முதன்மையானது இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 பிரிவு 3(க்)யில் கொண்டு வரப்பட்ட திருத்தம். மற்றொன்று கட்டாய உரிமம் வழங்குதல். இந்த இரண்டு அம்சங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(க்)யை எதிர்த்து சுவிட்சர்லாந்து மருந்துக் கம்பெனியான நோவர்டிஸ் வழக்கு தொடுத்துள்ளது. நோவர்டிஸ் நிறுவனம் லுகேமியா எனப்படும் இரத்தப் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தான இமாடினிப் மிஸிலேட் என்கிற மருந்தை க்ளிவெக் (எப்ண்ஸ்ங்ஸ்ரீ) என்ற பெயரில் 2001ல் அறிமுகப்படுத்தியது. இந்த க்ளிவெக்கை குறிப்பிட்ட காலத்திற்கு தயாரித்து விற்பதற்கு உலகில் உள்ள பல நாடுகளிலும் காப்புரிமை வாங்கி வைத்துக் கொண்டது நோவர்டிஸ் நிறுவனம்.
உண்மையில், நோவர்டிஸ் 1993ஆம் ஆண்டு க்ளிவெக் மாத்திரையில் உள்ள இமாடினிப் மிஸிலேட்டி மருந்தின் வேதியியல் பொருளான அமோபௌஸ் உப்பு மூலக்கூறுக்குதான் காப்புரிமை வாங்கியது. பின்னர், அதே அமோபௌஸ் உப்பை சிறிய மாறுபாடுடன் புதிய கண்டுபிடிப்பு என்று கூறி 1990களின் கடைசியில் மீண்டும் காப்புரிமை பெற விண்ணப்பித்தது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் மருந்துகளுக்கு காப்புரிமை வழங்கப்படாததால் நோவர்டிஸ்ஸின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், 2005ல் உலக வர்த்தக அமைப்பால் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து மீண்டும் நோவர்டிஸ், இந்திய நிறுவனங்கள் இமாடினிப் மிஸிலேட் என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்கக் கூடாது தான் மட்டுமே தயாரிக்க முடியும் என்று காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. இந்திய காப்புரிமை அலுவலகம் நோவர்டிஸ்ஸின் விண்ணப்பத்தை க்ளிவெக் ஒரு புதிய கண்டுபிடிப்பு இல்லை என்று கூறி மீண்டும் தள்ளுபடி செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து நோவர்டிஸ் அறிவுச் சொத்திற்கான மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து நோவர்டிஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்திய காப்புரிமைச் சட்டம் பிரிவு 3(டி), உலக வர்த்தக அமைப்பில் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என இன்னொரு வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்றம், காப்புரிமைச் சட்டப் பிரிவு 3(டி) சர்வதேச விதிமுறைகளுக்கு எதிராக இல்லை என்று கூறி நோவர்டிஸ்ஸின் இரண்டு வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
நோவர்டிஸ் இந்திய உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. சுவிட்சர்லாந்து நிறுவனமான நோவர்டிஸ்ஸிற்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர்கள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்திய அரசின் சொலிஸிடர் ஜெனரலாக இருந்த கோபால் சுப்ரமணியம், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நாரிமன். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரிக்கு மருந்து நிறுவனங்களுடன் உறவு உள்ளது என்ற குற்றச்சாட்டின் காரணமாக அவர் இவ்வழக்கில் இருந்து விலகினார். இவ்வழக்கில் சூலை 10, 2012ல் இறுதியாக வாதப்பிரதிவாதங்கள் தொடங்க உள்ளது. இந்திய அரசின் காப்புரிமைச் சட்டத்திற்கு எதிராக அந்நிய நிறுவனமான நோவர்டிஸ்க்கு வக்காலத்து வாங்கிய சிதம்பரம்தான் இப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சர். இந்திய அரசின் சொலிஸிடர் ஜெனரலாக இருந்தவர் நோவர்டிஸ் பக்கம். தீர்ப்பு என்னவாகும் என்று சொல்லவேண்டியதில்லை. ஏற்கனவே சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்திதான் இதே உச்சநீதிமன்றம் இந்திய அரசிற்கு ஏற்படும் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் அந்நிய நிறுவனமான வோடாபோனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.
இரத்தப்புற்று நோய்க்குரிய க்ளிவெக் மாத்திரையை ஆயுள் முழுவதும் எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கான க்ளிவெக் மாத்திரையின் விலை 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இந்திய நிறுவனங்கள் இதே மாத்திரையை ஒரு மாதத்திற்கு ரூ.8000க்கு விற்கிறார்கள். நோவர்டிஸ் நிறுவனத்திற்கு க்ளிவெக் மாத்திரையால் வரும் வருமானம் மட்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய். இது இந்திய அரசின் 2010 - 11 ஆண்டிற்கான சுகாதார பட்ஜெட்டிற்கு சமமானது. ஆனால், நோவர்டிஸ், விலையைப்பற்றி இந்திய இரத்தப்புற்று நோயாளிகள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் க்ளிவெக் சர்வதேச நோயாளிகள் உதவித் திட்டத்தின் கீழ் 11,000 பேருக்கு இலவசமாக மாத்திரை வழங்குகிறோம் என்கிறது. ஆனால், இந்தியாவில் 1 லட்சம் இரத்தப் புற்று நோயாளிகள் உள்ளனர் என்றும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 20,000 பேர் இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அய்ரோப்பாவையும் வட அமெரிக்காவையும் விட இந்தியாவில்தான் இளம் வயதில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் புற்று நோயாளிகள் உதவிச் சங்கம் கூறுகிறது. உண்மையில், இந்த நோவர்டிஸ் நிறுவனம் இலவசச் சேவை என்ற பெயரில் க்ளிவெக் மாத்திரையை நோயாளிகளை பயன்படுத்தச் செய்து பின்னர், அதற்குரிய பணத்தை கட்டாயப்படுத்தி அரசாங்கங்களிடமிருந்தும் சுகாதார அமைப்புகளிடமிருந்தும் கறந்துவிடுகிறது என்று தி நியூயார்க் டைம்ஸின் ஆய்வறிக்கை கூறுகிறது.
நோவர்டிஸ் நிறுவனம் இந்திய மக்களின் இரத்தத்தையே உறிஞ்சக் காத்துக் கொண்டிருக்கிற இந்த வேளையில்தான், பேயர் நிறுவனம் இந்தியாவில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சோராபெனிப் மாத்திரையை தயாரித்து விற்கவில்லை. இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. தேவைக்கேற்ப இந்தியாவில் உற்பத்தி செய்யத் தயாராக இல்லை இது எல்லாவற்றையும்விட, இந்திய மக்கள் வாங்கக் கூடிய விலையில் மாத்திரையின் விலை இல்லை என்று கூறி கட்டாய காப்புரிமையின் அடிப்படையில் பேயர் நிறுவனத்திற்கு காப்புரிமை வழங்க மறுத்து தேசத்தின், தேச மக்களின் நலன் என்கிற அடிப்படையில் நாட்கோ நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளார் இந்திய காப்புரிமை கட்டுப்பாட்டுத் தலைவர் குரியன். பேயர் நிறுவனமும் நோவர்டிஸ் போல நீதிமன்றத்தை நாடலாம்.
ஆட்சியாளர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களைக் கொழுக்கச் செய்வது மட்டுமல்லாமல் அவர்களுக்காக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளத் துடிக்கிறார்கள்.
நஞ்சாகும் மருந்துகள்
உயிர் காக்கும் மருந்துகளை அநியாய விலையில் விற்றுக் கொள்ளையடிப்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மருந்துகளே விஷமாவது மற்றொரு புறம் நடக்கிறது. இந்திய மருந்துக் கம்பெனிகளை அந்நிய நிறுவனங்கள் வாங்கிக் கொண்டு அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்றுக் காசாக்குவதோடு நில்லாமல் இந்திய மண்ணையும் தண்ணீரையும் மனிதனையும் விலங்குகளையும் நாசமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன.
1990களில் கழுகுகள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்தன. அந்தக் கழுகுகள் கொத்திக் தின்ன செத்த மாட்டின் உடலில் டைக்ளோபினக் (ஈண்ஸ்ரீப்ர்ச்ங்ய்ஹஸ்ரீ) என்ற மருந்து கலந்து இருந்ததால், கழுகுகள் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு இறந்தன என்பதை 10 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தனர். அந்த மருந்து தடை செய்யப்பட்ட பின்னரும் இன்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் கால்நடைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. நாம் அடிக்கடி விளம்பரங்களில் பார்க்கும் ஆக்சன் 500, டி கோல்ட், நோவால்ஜின் ஆகியவையும் மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள்.
அய்தராபாத்திற்கு அருகில் உள்ள பட்டஞ்செரு கிராமம்தான் உலக மருந்துக் கம்பெனிகளின் மய்யம். இங்கு தயாராகும் மருந்துகளில் தேவையான அளவுக்கும் அதிகமாக மருந்துக் கலவைகள் இருப்பது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள கழிவு நீரில் அமெரிக்காவில் உள்ள அளவைக் காட்டிலும் 150 மடங்கு அதிகமாக மருந்துகள் கலந்து இருந்தது. சிப்ரோபிளாக்சஸின் என்ற பாக்டீரியா எதிர்ப்பு மருந்து மேலை நாடுகளில் உள்ள மருந்துக் கம்பெனி கழிவு நீரில் 1 லிட்டருக்கு சில மைக்ரோ கிராம் அளவுதான் இருக்கும். ஆனால், பட்டஞ்செருவில் 1 லிட்டரி கழிவு நீரில் 31 மில்லி கிராம் இருந்தது. இது சிகிச்சைக்காக அளிக்கப்படும் மருந்தின் உச்சபட்ச அளவைவிட அதிகமானதாகும். கழிவில் மட்டும் ஒரு நாளைக்கு 45 கிலோவிற்கும் அதிகமான சிப்ரோபிளாக்சஸின் வெளியேற்றப்படுகிறது. அவற்றை மாத்திரையாக மாற்றினால் ஒரு நாளைக்கு 65 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குமாம். அந்த அளவிற்குக் கழிவுகளில் மருந்து வெளியேறுகிறது. இக்கழிவுகளால் மண், நீர் அனைத்தும் மாசுபடுகிறது. இக் கழிவை வெறும் தண்ணீரைக் கொண்டோ அல்லது மழை நீராலோ சுத்திகரிப்பு செய்ய முடியாது. இதற்கென தனியாக வேதியல் முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். அதற்கு அதிக செலவாகும் என்று மருந்து நிறுவனங்கள் அவற்றைச் செய்வதில்லை.
அவுட் சோர்சிங் மூலம் குறைந்த கூலியில் இந்தியாவில் மருந்தைத் தயாரித்து ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கும் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் மருந்து நிறுவனங்கள், இந்தியாவின் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் வேலையை அவர்கள் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தியாவில் உள்ள தண்ணீரில் 70 சதவீதம் ஏற்கனவே மாசு பட்டுப்போய் உள்ளது. தண்ணீரால் வரும் நோயால் மட்டும் வருடத்திற்கு 7.3 கோடி வேலை நாட்கள் வீணாகின்றன. இந்நிலையில் மேலும் மாசுபடுத்தும் வேலையை மருந்துக் கம்பெனிகள், மருத்துவமனைகள் செய்கின்றன. உலகத் தேவையில் 40%மும் உள்நாட்டுத் தேவையில் 90%மும் மருந்துகள் இந்தியாவில்தான் தயாரிக்கப்படுகின்றன. சுவிட்சர்லாந்து சந்தைக்கான 31% மருந்துகள் இந்தியாவில்தான் தயார் ஆகின்றன. ஆக, பன்னாட்டு நிறுவனங்கள் இரண்டு வழிகளில் இந்தியாவை மாசுபடுத்துகின்றன. ஒன்று, அந்நிறுவனங்களின் மருந்துகளை உட்கொள்ளச் செய்வதன் மூலம். மற்றொன்று, மருந்துக் கழிவுகளால் குளங்களையும் ஆறுகளையும் கடலையும் விஷமாக்குவதன் மூலம்.
அந்த எதிரி, நிதி மூலதன உலகம்
மஞ்சுளா
பெருநிறுவனங்களுக்கு, பணக்காரர்களுக்கு 75% வருமான வரி விதிக்கப்படும்.
பணவீக்கத்துக்கு ஏற்றாற் போல் அல்லாமல் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப்படும்.
அதிபருக்கும் பிற அமைச்சர்களுக்கும் 30% ஊதியம் குறைக்கப்படும்.
மூன்று மாத காலத்துக்கு பெட்ரோல் விலை உயராது.
தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கு மானியம் வழங்கப்படும்.
சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்படும்.
60,000 ஆசிரியர்கள் பணிக்கமர்த்தப்படுவார்கள்.
ஓய்வு பெறும் வயது 62ல் இருந்து 60 எனக் குறைக்கப்படும்
மாற்று எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டு, அணுமின்சாரத்தின் மீதான சார்பு குறைக்கப்படும்.
உலகமய காலங்களில் இவை கற்பனையா? ஆனால், இவைதான் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிற பிரான்கோயிஸ் ஹாலண்டே முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள்.
2011 முழுவதும் உலகெங்கும் குறிப்பாக பிரான்ஸ், கிரீஸ் போன்ற அய்ரோப்பிய நாடுகளில் தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினார்கள். சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் நல்வாழ்வு நடவடிக்கைகள், தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டார்கள்.
ஆள்பவர்கள் பழைய முறைகளில் ஆள முடியவில்லை. ஆளப்படுபவர்கள் பழைய முறைகளில் ஆளப்படுவதை அனுமதிக்கவில்லை. சமீபத்தில் பிரான்சில் நடந்த தேர்தல்களில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சோசலிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரான்ஸ் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி, அதை சமாளிப்பது என்ற பெயரில் அமலாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், சம்பள வெட்டு, ஓய்வூதியக் குறைப்பு, ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படுவது என அவற்றின் பெயரால் மக்கள் உரிமைகள் பறிப்பு, சுருக்கமாகச் சொல்வதானால் நவதாராளவாதக் கொள்கைகளின் படுதோல்வி பிரான்சில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே, பிரான்சின் பெருமுதலாளி ஒருவரின் சொகுசுப் படகுக்கு ஓய்வெடுக்கச் சென்று, ஓய்வு முடித்து வந்து அடுத்தத் தேர்தல் வரை சிக்கன நடவடிக்கைகள் பெயரால் பிரான்ஸ் மக்களை வாட்டி வதைத்து, அவர்கள் உரிமைகளை வெட்டிக் கொண்டிருந்த சர்கோசி, 1958ல் பிரான்சின் அய்ந்தாவது குடியரசு அமைந்ததில் இருந்து, இரண்டாவது முறையாக, இரண்டாவது பதவிக் காலத்தைப் பிடிக்க முடியாத அதிபர். பிரான்ஸ் மக்கள் மாற்றத்தை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தனர்.
வெற்றி பெற்றவுடன் மக்கள் மத்தியில் பேசிய புதிய அதிபர் ஹாலண்டே, ‘எல்லா தலைநகரங்களிலும், அங்குள்ள மக்கள் நமக்கு நன்றி சொல்கிறார்கள். நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவுகட்ட விரும்பும் நம்மிடம் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்’ என்றார்.
ஆனால், சமீப காலங்களில் அய்ரோப்பாவின் அடையாளமாகிவிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என போராடுகிற அய்ரோப்பிய மக்களின் எதிர்ப்பார்ப்பை, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஹாலண்டேவுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. அவரது முக்கியமான வாக்குறுதியான நிதிக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை என்பதைப் பொறுத்தவரை, அந்த ஒப்பந்தங்களில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது என, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிக்கன நடவடிக்கைகளே சிறந்த தீர்வு என்று உறுதியாக அமலாக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். ஹாலண்டே முன்வைக்கும் வளர்ச்சி ஒப்பந்தம் என்பதைப் பொறுத்தவரை, கூடுதல் செலவில்லாமல் கூடுதல் வளர்ச்சி என்கிறார் ஜெர்மனியின் அயலுறவு அமைச்சர்.
அய்ரோப்பிய யூனியன், சர்வதேச நிதியம், அய்ரோப்பிய மத்திய வங்கி என்ற முக்கூட்டை ஹாலண்டே எதிர்கொள்ள வேண்டும். பிரான்சின் பல நிதி நிறுவனங்களுக்கு நிதி கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அடிப்படையில்தான் அய்ரோப்பிய மத்திய வங்கி கடன் தந்துள்ளது.
முதல் 24 மணி நேரங்களிலேயே ஹாலண்டேயின் முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிந்துவிட்டது என்றும், தான் இத்தனை ஆண்டுகளாக எதிர்த்து வந்த அதே ஒப்பந்தத்தை இப்போது ஹாலண்டே அமல்படுத்த வேண்டும் என்றும், 10 நாட்களில் மாமன்னர் நிர்வாணமாகி விடுவார் என்றும் இப்போதே சர்கோசிக்கு ஆதரவானவர்கள் பேசத் துவங்கிவிட்டனர்.
பிரான்சில் அமைந்திருப்பது சோசலிஸ்ட் ஆட்சி அல்ல. சோசலிஸ்ட் கட்சி தலைமையிலான முதலாளித்துவ ஆட்சி. பிரான்சில் நடந்திருப்பது இடதுசாரி திருப்பம் அல்ல, வலதுசாரி திசையிலான மூர்க்கமான முன்னேற்றம் ஒப்பீட்டுரீதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சின் அரசியல் பொருளாதார நிலைமைகள் குறுக்குச் சாலையில் உள்ளன.
தமது வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்றால், சிக்கன நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவது அவசியம் என்பதால் அவற்றுக்கு எதிராக எழுந்த மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வழி செய்துள்ளார்கள். சிக்கன நடவடிக்கைகளின் பிடியில் சிக்கியிருக்கிற கிரீசிலும் வாக்குச் சீட்டுகள் மூலம் மக்கள் இதேபோன்றதொரு மாற்றத்தை நிகழ்த்தி உள்ளனர்.
பழமைவாதக் கட்சியான புதிய ஜனநாயகம் மற்றும் இடதுசாரி கட்சியான பசோக் என்கிற இரண்டு பெரிய கட்சிகளுக்கு இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை. இந்த இரண்டு பெரிய கட்சிகளும்தான் கிரீசில் இன்று ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைகளுக்குக் காரணம். நான் சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்கப் போகிறேன் என்றார் ஒரு மாணவர். பொதுத் தேர்தலில், கிரீசில் இரண்டாண்டு கால சிக்கன நடவடிக்கைகள், 314 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு மீட்பு முடிப்புகள் ஆகியவற்றுக்கு எதிரான தங்கள் சீற்றத்தை மக்கள் பதிவு செய்தார்கள்.
தீவிர இடதுசாரி கட்சியான சிரிசா கட்சியின் தலைவர் அலெக்சிஸ் சிப்ராஸ், இரண்டாண்டு கால காட்டாட்சிக்குப் பிறகு ஜனநாயகம் திரும்பப் போகிறது என்றார். மே 17க்குள் புதிய ஆட்சி அமையவில்லை என்றால் மீண்டும் தேர்தல் என்ற நிலையில், பெரிய கட்சிகள் இரண்டும் ஆட்சி அமைக்க, கூட்டணி உருவாக்கி பெரும்பான்மை பெறாததால், சிரிசா கட்சியை ஆட்சி அமைக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சிலும் கிரிசிலும் தேர்தல் மூலம் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றங்கள், நவதாராளவாதக் கொள்கைகளால் 99% மக்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக வால் ஸ்ட்ரீட் முதல் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிற மக்கள் எழுச்சிகளின் தொடர் நிகழ்வுகளே.
தான் எதிர்கொள்ளவிருக்கும் கடுமையான சவால்களைப் பற்றி பேசிய ஹாலண்டே, ‘எனது உண்மையான எதிரிக்கு பெயரில்லை. முகமில்லை. கட்சியில்லை. அது ஒருபோதும் ஆட்சி அதிகாரத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆயினும் அது ஆட்சியில் இருக்கும். அந்த எதிரி நிதி (மூலதனம்) உலகம்’ என்றார்.
நிதி மூலதனம் என்ற சட்டகத்துக்குள் அடைந்து நின்று, பிரான்சிலும் கிரீசிலும் மக்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் பொருளுள்ள விளைவுகளை உருவாக்குவது உடனடி சாத்தியப்பாடு இல்லை. இடதுசாரி அரசியலும் கருத்தியலும் பலவீனமாக இருக்கும்போது அரசியல் வலதுசாரி பாதை நோக்கி திரும்பும். பிரான் சில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரான்சிலும் கிரீசிலும் இடதுசாரி கருத்துக்கள், போக்குகள் வலுப்பெறுவது மட்டுமே, இந்தத் தற்காலிக மாற்றத்தை தொடர வைக்கும். நிதி மூலதன ஆதிக்கம் என்ற முகம் தெரியாத அந்த எதிரியை வீழ்த்தும் வல்லமை இடதுசாரி அரசியலுக்கு மட்டுமே உண்டு.
தமிழா... தமிழா... தமிழ்நாடு உனதில்லையே....
05.05.2012 அன்று ஏப்ரல் மாத தொழிலாளர் ஒருமைப்பாடு பத்திரிகையை ஃபோர்டு இந்தியா மற்றும் பிற தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு விநியோகிக்க தோழர்கள் இரணியப்பன், ஸ்ரீதர், இராஜகுரு அடங்கிய குழுவினர் மறைமலை நகர் ஃபோர்டு தொழிற்சாலை அருகில் பத்திரிகை விநியோகம் செய்தனர்.
தொழிலாளர்கள் மத்தியில் பத்திரிகை விநியோகம் செய்து கொண்டிருக்கும்போது மூன்று செக்யூரிட்டி கார்டுகள் வந்து குழுவினரிடம் இங்கு நின்று விளம்பர பிரசுரம் கொடுக்கக் கூடாது என்றனர். இது விளம்பர பிரசுரமல்ல தொழிலாளர் பத்திரிகை என்று குழுவினர் கூறினர். தொழிலாளர் பத்திரிகையும் இங்கு நின்று கொடுக்கக் கூடாது என்று செக்யூரிட்டி கூறினார். தொழிலாளர்கள் வந்து செல்லும் வழியில்தானே பத்திரிகை விநியோகிக்க முடியும் என்று குழுவினர் கூறினர். சாலையில் நிற்கக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார் என்று குழுவினர் கேட்டனர். நான் இங்கு செக்யூரிட்டி என்றபோது, நீங்கள் ஆலைக்குத்தான் செக்யூரிட்டி, சாலைக்கு அல்ல என்றும் ஆலைக்குள் வந்தால் நீங்கள் கேட்கலாம், சாலையில் நிற்பது பற்றி பேசக் கூடாது என்றும் குழுவினர் சொன்னபோது, இந்த ரோடு எங்களுக்கு சொந்தமானது என்று செக்யூரிட்டி கூறினார்கள். உங்களுக்கு என்றால் யாருக்கு? ஃபோர்டு முதலாளிக்கா? அங்கு வேலை செய்யும் உங்களுக்கா? சாலைகள் எப்படி உங்களுக்கு சொந்தம் ஆகும்? குழுவினர் கேள்விகளுக்கு அவர்களால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் தமது மேலதிகாரிக்கு போன் செய்து பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்தனர்.
வந்த மூன்று பாதுகாப்பு அதிகாரிகளும் இங்கு நின்று பத்திரிகை விநியோகிக்க கூடாது என்று குழுவினரிடம் கூறினர். நாங்கள் இங்குதான் நின்று விநியோகிப்போம் என்று குழுவினர் கூறினர். இது ஃபோர்டு நிர்வாகத்திற்கு சொந்தமான சாலை என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார். சாலை எப்படி ஃபோர்டு நிர்வாகத்திற்கு சொந்தமாகும் என குழுவினர் கேட்டனர். இது ஹென்றி ஃபோர்டு சாலை என போர்டு வைக்கப்பட்டுள்ளது, ஆகையால் ஃபோர்டுக்கு சொந்தமானது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். அப்படியானால் அண்ணாசாலை ‘அண்ணாதுரைக்கு’ சொந்தமானதா என குழுவினர் கேட்டனர். நாங்கள் சொல்கிறோம் இது ஃபோர்டுக்கு சொந்தமானது, இங்கு நின்று பத்திரிகை விநியோகிக்க கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர். நீங்களோ ஃபோர்டு நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மேலும் நீங்கள் வேண்டுமானால் காவல்துறையிடம் புகார் செய்யுங்கள். மேலும் இந்த சாலை உங்களுக்கு சொந்தமானதென்றால் நீங்கள் கேட் அமைத்து பாதுகாப்புக்கு ஆள் போட்டிருக்கலாமே என்று குழுவினர் கூறினர். பாதுகாப்பு அதிகாரி ஃபோர்டு மனிதவள அதிகாரியை வரவழைத்தார்.
குழுவினருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடலை அங்கு வந்து சென்ற தொழிலாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்ன செய்ய வேண்டும் என குழுவினரை கேட்டார். நாங்கள் பத்திரிகை விநியோகிக்க வேண்டும் என்று குழுவினர் கூறினர். இது எங்களுக்கு சொந்தமான சாலை, இங்கு விநியோகிக்க கூடாது என்று கூற, வாக்கு வாதம் தொடர்ந்தது. இறுதியில் பத்திரிகை விநியோகிக்கும் வேலை இருந்ததால் குழுவினர் ஒரு பத்தடி தள்ளி நின்று பத்திரிகையை விநியோகம் செய்தனர்.
ஃபோர்டு நிறுவனம் அமைந்துள்ள இடம் தமிழக மக்களின் விவசாய நீர்ப்பாசன ஏரியும், விவசாய நிலமும் ஆகும். நிலத்தையும் ஏரியையும் பறிகொடுத்த தமிழக மக்கள், எப்படி தமிழன் என்று சொல்வது? தலை நிமிர்ந்து நிற்பது?
தமிழ்நாட்டின் சாலைகளில் நிற்க தமிழர்களுக்கு உரிமை இல்லை. தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமல்ல. தமிழ்நாட்டை நேற்றைய, இன்றைய ஆட்சியாளர்கள் ஃபோர்டு, ஹ÷ண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இன்னும் பல உள்நாட்டு முதலாளிகளுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டு செல்ல துடிப்பவர்களும் தமிழ்நாட்டில் தமிழ் ஈழம் பற்றி நாடகம் நடத்துபவர்களும் சாமான்ய தமிழனுக்கு தமிழ்நாட்டில், தமிழகத்தின் தெருக்களில் இடமில்லை என்னும் நிலைக்கு பதில் ஏதும் வைத்திருக்கிறார்களா?
முற்போக்கு பெண்கள் கழக ஆர்ப்பாட்டம்
ஜெ அரசு அறிவித்துள்ள திருமண உதவித் திட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் சுசீலாவின் மகள் திருமணத்திற்கு வழங்கப்பட்டது. திருமண உதவித் தொகையாக ரூ.25,000 உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு மாவட்ட நிர்வாகத்தால் பாரத ஸ்டேட் வங்கியின் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மே 10 அன்று காசோலையை பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் பணமாக மாற்றச் செல்லும்போது சம்மந்தப்பட்ட காசோலைக்கு கணக்கில் பணம் இல்லை என வங்கி மேலாளர் சொன்னார். திரும்ப திரும்ப வலியுறுத்தியும் முறையான பதில் கிடைக்காததால் பெண்கள் கழக தோழர்கள் வங்கி மேலாளரை முற்றுகையிட்டனர். அதன் பின் புகார் காவல் நிலையத்திற்கு சென்றது. வங்கியை முற்றுகையிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்து மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் பேசியதுடன் கைது செய்து சிறையிலடைப்போம் என மிரட்டினார்கள். தோழர்கள், ஜெ ஆட்சியில் பணம் வந்தாலும், ஜெயில் வந்தாலும், எது வந்தாலும் கவலையில்லையென அறிவித்துவிட்டனர். அதன்பின் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினரின் மரியாதைக் குறைவான அணுகுமுறைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அனைவரையும் விடுதலை செய்து காசோலை சம்மந்தமாக முறையான புகாரை பதிவு செய்யுமாறு தோழரிடம் கேட்டுக் கொண்ட பிறகு போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
திருநாவலூரில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் 2000ம் ஆண்டு 100க்கும் மேற்பட்ட வறிய மக்களுக்கு மனை பட்டா வழங்கப்பட்டது. பல வருடங்களாக வழங்கப்பட்ட பட்டாவுக்கான நிலம் எங்கிருக்கிறது என குறிப்பிட்டு அளந்து பிரித்துக் கொடுக்க தாசில்தார் அலுவலகமும் ஊராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் மக்களை திசைதிருப்பி வந்தனர்.
மே 3 அன்று உளுந்தூர் பேட்டை வட்டாட்சியர் அலு வலகத்தில் வருடாந்திர ஜமாபந்தி நடைபெற்றது. அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் பின் மாவட்ட உதவி ஆட்சியர் நேரில் வந்து பட்டா விவரங்களை கேட்டுப் பெற்று உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கி உள்ளவர்களுக்கு நிலம் அளக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்ததால் முற்றுகை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. கட்சி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் கலியமூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நரிக்குறவர் முற்றுகைப் போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், செங்குன்றம் உட்பட சில நகர்ப்புற பகுதிகளில் நரிக்குறவர் சமூக மக்கள் பெருந்திரளாய் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக ஆண்டுக்கொருமுறை ரூ.6,000 சிறுகடன் மானியத்துடன் வழங்கப்படுகிறது. இந்த கடனின் 75 சதம் வரை திரும்ப செலுத்தினால் அடுத்த ஆண்டுக்கு திரும்ப கடன் கிடைக்கும் என்ற அறிவிக்கப்படாத ஒரு விதிமுறை உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளும் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த ஆண்டு நரிக்குறவர் மக்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை சிலருக்கு மட்டும் வழங்கி விட்டார்கள். பெரும்பாலானோர்க்கு இந்த கடன் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டது தெரிந்து ஏப்ரல் 20 அன்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் செய்தியை பெரிதாக்கிவிட்டனர். வேறுவழியின்றி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்டோர் பட்டியல் தயார் செய்யவு உறுதியளிக்கப்பட்டது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை கேவலமாக நடத்தி பேசுவதால் கட்சி அலுவலகத்திற்கு வந்து உழைப்போர் உரிமை இயக்க தலைவர் தோழர் மோகன் அவர்களை அழைத்துக் கொண்டு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டோர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். மே 10 அன்று புனல்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராத மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் தோழர் வளத்தான், தோழர் ராஜாங்கம், கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் மூக்கையன், முருகையன், ஜோதிவேல் பங்கேற்று உரையாற்றினர்.
மே நாள் நிகழ்ச்சிகள்
மே 6 2012 அன்று செங்குன்றத்தில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும், அகில தொழிற்சங்க மய்ய கவுன்சில் சங்கமும் இணைந்து மே நாள் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன், கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், ஏஅய்சிசிடியு மாநில சிறப்பு தலைவர் தோழர் ஜவகர், ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, புரட்சிகர இளைஞர் கழக மாநில பொறுப்பாளர் தோழர் பாரதி, மாலெ கட்சி சென்னை மாவட்ட செயலாளர் தோழர் சேகர், காஞ்சிபுரம் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் இரணியப்பன், ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அன்புராஜ், அவிதொச திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் வண்ணை சந்திரசேகர், கட்சி திருவள்ளூர் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கலைபாபு உரையாற்றினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலால் மே தின பேரணி பொதுக் கூட் டத்திற்கு மே 1 அன்று அனுமதி மறுக்கப்பட்டதால், புதுக்கோட்டை, கீரனூரில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மே தின பொதுக் கூட்டம் மே 9 அன்று நடத்தியது. கூட்டத்திற்கு தோழர் சத்தியமூர்த்தி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் ஆசைத்தம்பி அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் தோழர் வளத்தான், தோழர் ராஜாங்கம், கட்சி மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தோழர் மூக்கையன், தோழர் முருகையன், ஜோதிவேல் ஆகியோர் உரையாற்றினர்.
ரயில் நிலையம் செல்லும்
பொதுவழியை மூடுவதை எதிர்த்து
முற்றுகைப் போராட்டம்
அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு ஸ்டேஷன் ரோடு வழியாக செல்லும் முக்கிய வழியை முள்வேலி போட்டு அடைத்ததை எதிர்த்து சி.பி.அய்.(எம்.எல்) வரதராஜபுரம் கிளை சார்பாக மே 11 அன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில், அம்பத்தூர் ரயில் நிலைய மேலாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
ரயில் நிலையத்துக்கு செல்லும் முக்கிய வழியை அடைத்துவிட்டு அதனருகில் உள்ள சிறிய பாதையைப் பயன்படுத்துமாறு கூறும் ரயில் நிர்வாகத்தை எதிர்த்து ரயில்வே நடைமேடையில் நிலைய மேலாளர் அலுவலகம் முன்பு அரை மணி நேரம் முழக்கமிட்டு போராட்டத்தை நோக்கி பயணிகளின் கவனத்தைத் தோழர்கள் ஈர்த்தனர்.
தோழர்கள் மோகன், முனுசாமி, புலவேந்திரன் (கடலூர்), கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பாரதி, லஷ்மி, கோபாலன், ரத்தினசபாபதி, மீனாட்சி, ஞானம்மாள், புகழ் பொற்செல்வன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னிலை வகித்தனர்.
பயணச்சீட்டு வாங்குவதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துக் கவுண்ட்டர்களையும் இயக்க வேண்டும், சில்லறை இல்லை என்று பயணிகளிடம் டிக்கெட் கவுண்டர் ஊழியர்கள் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது, நடைமேடையில் உள்ள மேம்பாலத்தை சீரமைத்து மேற்கூரை போடவேண்டும், அம்பத்தூர் ரயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு தரப்பட்டது.
அதிமுகவினரின் மண் அரசியல்
குமரி மாவட்டத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட பாசனத்திற்கு பயன்படும் குளங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக அதிமுக, திமுக மாறிமாறி ஆட்சி செய்த போதும் குளங்களை ஆழப்படுத்துவது, கரைகள் கட்டுவது, கால்வாய்கள் பராமரிப்பது, மடைகள் சரி செய்வது என்ற அடிப்படையான விவசாயப் பணிகளை கவனிப்பதில்லை. மாதந்தோறும் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பாசன விவசாயிகள் இது பற்றி புகார் தெரிவிப்பதும் அதிகாரிகள் காலம் கடத்துவதும் நடந்து வந்தது.
குமரியில் உள்ள பாசன விவசாயிகள் குளங்கள் அமைந்துள்ள கிராமங்களின் விவசாய பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் குளங்களை ஆழப்படுத்துவது என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. பின்னர் கனிம வளத்துறையும், பொதுப் பணித்துறையும் ஒப்பந்த முறையில்தான் குளம் ஆழப்படுத்த முடியும் என்று நிபந்தனை விதித்தன. அதிமுக பிரமுகரின் பினாமிகள், அதிமுக ஒப்பந்தகாரர்கள், குளத்தில் உள்ள மணல் மண் ஒரு டெம்போவிற்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து கூட்டுக் கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக 20.04.2012 அன்று நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் பகுதியை சார்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் பிரதிநிதிகளுக்குத்தான் குளம் ஆழப்படுத்தல் தொடர்பான பணிகளை தர வேண்டும் எனவும் கண்காணிப்பு குழு அமைக்கவும் மணல் மண் கொள்ளையை தடுப்பதோடு செங்கல் சூளை, ஓடு தயாரிப்பு சூளை மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்டவைகளுக்கு குறிப்பிட்ட விலைக்கு அரசு நிர்ணயம் செய்து விற்பனை செய்யவும் வலியுறுத்தியது.
பாசன விவசாயிகள் சங்க தலைவர் இது சம்பந்தமாக தீவிரமாக குரல் கொடுத்தார். மண் மணல் திருட்டு அதிமுக கும்பல்கள் வின்ஸ் அன்றோவை (பா.வி.ச.தலைவர்) கடுமையாக தாக்கியதோடு குமரி மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க அனுமதிக்காமலும் பொய் வழக்கு தொடுத்தும் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கமும், மாலெ கட்சியும் விவசாயிகள் தொழிலாளர்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.
நரபலி குற்றவாளிகள் கைது
மதுரை, வாடிப்பட்டி அருகில் உள்ள கச்சகட்டி கிராமத்தில் 2011 ஜனவரி 1 அன்று ராஜலட்சுமி என்ற சிறுமி நரபலி தரப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி நரபலி தரப்பட்டதை மூடி மறைக்க அன்றைய திமுகவினர் முயற்சி செய்தபோது மாலெ கட்சியின் தலையீட்டால் பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது கைது செய்யப் பட்டவர்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துபோனார்கள். நரபலி தொடர்பாக சிபிசிஅய்டிக்கு வழக்கு மாற்றப்பட்டு, அந்த இரண்டு பேர் சாவு பற்றிய கோப்பு மூடப்பட்டது.
விசாரணையில் சிறுமி நரபலி தரப்பட்டது உறுதி செய்யப்பட்டது. உள்ளூர் திமுக பிரமுகர் அயூப்கான் கட்டி வந்த கல்லூரி பாதியில் நின்ற நிலையில், நரபலி கொடுத்தால் கல்லூரி வேலை முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மொத்த குற்றமும் நிகழ்த்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அயூப்கான் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவருமே குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இன்னும் ஒரு குற்றவாளி தேடப்பட்டு வருகிறார். முதலில் கைது செய்யப்பட்டு, பிறகு இறந்துவிட்ட இரண்டு பேர் வழக்கையும் மீண்டும் விசாரிக்கப் போவதாகவும் சிபிசிஅய்டியினர் தெரிவித்துள்ளனர். பகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்று பெருமை பேசும் திமுகவினரின் நடைமுறை உண்மையில் எப்படியிருக்கிறது என்பதற்கு நரபலி ஓர் உதாரணம்.
குற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும், பலிதரப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மாலெ கட்சி கோரிக்கை எழுப்பியுள்ளது.