மாணவர் தற்கொலைகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்!
அன்று ஹேமலதா... காயத்ரி... கோகிலவாணி....
இன்று சரண்யா... பிரியங்கா.... மோனிஷா....
இரண்டு சம்பவங்களுமே நினைத்தாலே குலைநடுங்க வைக்கின்றன. ஒன்று படுகொலை. அடுத்தது தற்கொலையா கொலையா என்ற சர்ச்சையில் உள்ளது. தற்கொலைதான் என்று மெய்ப்பிக்கப்பட்டாலும் அது படுகொலைதான். இரண்டும், நீதிமன்றத்தால் குற்றவாளி என்று சொல்லப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து, அடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர் நோக்கிக் காத்திருக்கிற ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்தன. முன்னது ஜெயலலிதாவின் பெயரால் நடத்தப்பட்டது; பின்னது அவரது ஆசியுடன்தான் அல்லது ஆணைக்கிணங்கத்தான் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
எவ்வளவு கொடூரமான அரசாங்கம் இது? ஆட்சியின் துவக்க காலத்தில் பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது; ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது, கல்லூரி மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்கின்றனர். எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் தற்கொலைச் செய்தி வந்த போது, கூடவே, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக, அண்ணா பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவி பல்கலைக் கழக விடுதியில் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக, பட்டுக்கோட்டையில் ஒரு மாணவி ஆசிரியர் திட்டியதால், ஆசிரியர்கள் ஓய்வறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக.... எல்லாம் ஜனவரி 23 முதல் ஜனவரி 26க்குள் நான்கே நாட்களில். இந்தப் பட்டியல் இந்த அளவிலாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ரோஹித் வேமுலா தற்கொலை நாட்டு மக்கள் மத்தியில் பெருங்கொந்தளிப்பை, வேதனையை உருவாக்கி இருக்கிற நேரத்தில், எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியாக தமிழக மக்கள் மீது இறங்கியுள்ளது. நாங்கள் இனி யாரை நம்புவது? கனவுகளுடன் கல்லூரிக்குச் சென்ற நமது குழந்தைகளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்? இயற்கை மருத்துவத்தில் பட்டம் பெற்று, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மீட்டெடுத்து, சம்பாதிக்கவும் செய்து, எளிய முறையில் மருத்துவமும் பார்க்க வேண்டும் என்றெண்ணிச் சென்றவர்கள், வேறெந்த படிப்புக்கும் இடம் கிடைக்காததால் வேறு வழியின்றிச் சென்றவர்கள், சிறுமைபடுத்தப்பட்டு, அலைகழிக்கப்பட்டு, மிரட்டப்பட்டு பலர் நடை பிணங்களாக்கப்பட்டும், சிலர் நிஜப்பிணங்களாக்கப்பட்டும் திரும்பியிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 24, செப்டம்பர் 7 தேதிகளில் ஆர்ப்பாட்டங்கள், செப்டம்பர் 14 அன்று தீக்குளிப்பு போராட்டம், செப்டம்பர் 21 அன்று விஷம் குடித்துப் போராட்டம்..... அந்த மாணவர்கள் இன்னும் என்ன செய்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்? தற்கொலையா? உங்களுக்காகவே நான், உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று, மோடி யுடன் போட்டிபோட்டு வெற்று வசனங்கள் பேசி தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே, எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி தாளாளர் வாசுகியின் பேயாட்டத்தை ஏன் அனுமதித்தீர்கள்? அந்த மாணவர்கள் போராட்டக் குரல்கள் எப்படி உங்களை எட்டாமல் போயின? தமிழ்நாடு பற்றி எரிகிறது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களுக்காகவே நான், உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன் என்று நீங்கள் சொல்வதெல்லாம் வாசுகி போன்ற பிணந்தின்னி களுக்காகவா? மத்திய அரசு முதல் மாநில அரசு ஊடாக, மாவட்ட நிர்வாகத்தின் சிலபல படிகள், காவல்துறை வரை அனைத்து மட்டங்களிலும், தங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிய அந்த குரல்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. கடைசியில் நமக்குக் கிடைத்தது கைகள் பின்னால் கட்டப்பட்ட மூன்று பிணங்கள்!
அந்த மாவட்ட ஆட்சியர், போராடும் மாணவர்களைப் பார்த்து சீரியல் நாடகம் போடுகிறீர்களா என்று கேட்டாராம். அது, சாமான்ய மக்களின் ரத்தம் குடிப்பது பற்றி அறவுணர்வு என்பதே அறவே இல்லாத முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் உங்களைப் போன்ற அதிகாரிகளுக்கும் மட்டும் கைவந்த கலை. சாமான்ய மக்களுக்கு அது தெரியாது ஆட்சியர் அவர்களே. அவர்கள் அநியாயத்துக்கு நியாயம் பார்த்து நடப்பவர்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டிடி மருத்துவ கல்லூரி, அங்கீகாரம் இல்லாமல் மாணவர்களைச் சேர்த்து லட்சம் லட்சமாக கட்டணம் வாங்கி, கடைசியில் மாணவர்களை வீதிகளில் நிறுத்தியது. அந்த மாணவர்கள் போராட்டங்களில் வீதிகளில் நிரம்பியிருந்த காலத்தில்தான் எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சித்தாள் வேலை பார்த்து கல்லூரிக் கட்டிடத்தை கட்டி முடித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் பல்கலை கழகத்தின் பதிவேடுகளில் அந்த நாட்களிலும், எஸ்விஎஸ் மருத்துவ கல்லூரி அங்கீகாரம் பெற்ற கல்லூரியாக இருந்திருக்கிறது.
கல்லூரியா நடத்தியிருக்கிறார்கள்? கொத்த டிமைக் கூடம் அது. கட்டிடத் தொழிலாளர்களாக, இல்லப் பணியாளர்களாக, துப்புரவுத் தொழிலாளர்களாக, ஆய்வுகள் நடக்கும்போது, மருத்துவர்களாக, செவிலியர்களாக, நோயாளிகளாக அந்த மாணவர்களே ராஜபார்ட், ஸ்த்ரீ பார்ட், சைட்பார்ட் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அவ்வளவு துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு எப்படியாவது படித்து மருத்துவப் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று, உயிரை வதைத்துக் கொண்ட, சுயமரியாதையை விட்டுக் கொடுத்த மாணவர்களுக்கு தமிழக அரசாங்கம், தமிழக மக்களுக்காகவே வாழ்வதாகச் சொல்லும் முதலமைச்சர், இன்னும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லவில்லை.
டிசம்பர் 30, 2015 அன்று கூட டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து டிசம்பர் 31 அன்றே கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆசிரியர்கள் பற்றிய ஆவணங்கள் முறையாக இல்லை என்றும் அறிக்கை தந்துள்ளது. ஜ÷லை 8, 2015 அன்று நடந்த வழக்கமான ஆய்வில் சில சிறிய குறைபாடுகள் இருந்ததாகவும் அவற்றை சரி செய்யச் சொல்லி வாய்மொழி உத்தரவு தந்ததாகவும் பதிவாளர் பி.ஆறுமுகம் சொல்கிறார்.
கல்லூரி நிர்வாகம் முறைகேடுகளை மட்டுமே செய்து பணம் சம்பாதித்திருக்கிறது. எங்காவது நிலத்தை வளைத்துப் போட்டு, பிறகு அரசு அதிகாரிகளை, பல்கலை கழக அதிகாரிகளை வளைத்துப் போட்டு, அனுமதி என ஒன்று வாங்கி, பிறகு வசூல் வேட்டை நடத்தி, மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு என எதுவும் வந்தால் மிரட்டுவதற்கு உள்மதிப்பீட்டு மதிப்பெண்களை பயன்படுத்தி, அதிலும் சரிப்படாத மாணவர்களை மிரட்ட ரவுடிகளை கூட வைத்துக்கொண்டு..... எவ்வளவு சொகுசாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள்? மதிப்பு, மரியாதை, சமூகத்தில் பெரிய மனிதர்கள் என்ற அந்தஸ்து எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற அந்தத் தாளாளரை, காசும் கொடுத்து, ஆட்கூலியில்லாமல் கட்டிடமும் கட்டிக் கொடுத்த அந்த மாணவர்கள், இன்னும் கூட ‘மேம்’ என்று மரியாதையுடன்தான் குறிப்பிடுகிறார்கள். வறிய மக்கள் ஒரு கட்டத்தில் தங்கள் வறிய நிலைமைகளில் வாழப் பழகிக் கொள்கிறார்கள் என்று எங்கல்ஸ் சொல்வதுபோல், எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்கள், அச்சப்பட்டு வாழப் பழகிவிட்டது போல் தெரிகிறது.
2011 ஏப்ரலில் ஓமியோபதி படிப்புக்கு அங்கீகாரம் பெற மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு சமர்ப்பித்த தாள்களில் முறைகேடு. ஆய்வுக் குழுவும் அனைத்து விதமான முறைகேடுகளையும் உறுதி செய்தது. போதுமான ஆசிரியர்கள் இல்லை. மருத்துவமனை ஊழியர்கள் இல்லை. உபகரணங்கள் இல்லை. ஆசிரியர்கள் பணிநியமன ஆணைகளுக்கும் வருகைப் பதிவேடுகளுக்கும் சம்பந்தம் இல்லை. 13 ஊழியர்கள் பணியில் சேர்ந்ததாக தந்துள்ள கடிதத்தில் அவர்கள் கையொப்பங்கள் இல்லை. வளைத்து வளைத்து நடத்தப்பட்ட வழக்குகள், மேல்முறையீடுகள் ஆகியவற்றில் இறுதியாக, ஆயுஷ் மீண்டும் ஆய்வு நடத்தவேண்டும் என்றும் கல்லூரி, மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் கல்லூரி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வாசுகிதான் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர, அவரது கணவர் சுப்பிரமணியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாசுகியின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தப் பிரச்சனையிலும் அவரது கணவர் பெயர் மட்டும் அடிபடவேயில்லை. ஏன்? அவர் தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ மன்றத்தின் அரசு நியமன உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. அரசின் பாதுகாப்பும் செல்வாக்கும் பெற்ற அந்தப் ‘பெரிய மனிதருக்கும்’ தற்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கியிருக்கும் நிலைமைக்கும் தொடர்பே இல்லை என்றா சொல்ல முடியும்?
63 கட்டுமானத் தொழிலாளர்களை பலி கொண்ட மவுலிவாக்கம் விபத்தில், கட்டிடம் கட்டிய பொறியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மக்கள் போராட்டங்களின் நிர்ப்பந்தத்துக்குப் பின் நிறுவனத்தின் முதலாளிகள் கைது செய்யப்பட்டனர். இன்று வரை கட்டிடம் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று அரசாங்கம் அமைத்த குழுவின் அறிக்கை சொன்னது. இந்த அறிக்கையும் நிர்ப்பந்தத்துக்குப் பிறகே சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இடிபாடுகளில் இறந்தவர்களுடன் சேர்த்து உண்மையும் நீதியும் புதைக்கப்பட்டுவிட்டன. தங்கள் கனவு இல்லங்களுக்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கொடுத்துவிட்டவர்கள், வீடுகள் இல்லாமல் வங்கிகளுக்கு மாதத் தவணை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும்படி அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் தற்கொலை பிரச்சனையிலும் குற்றவாளிகள், கல்லூரி நிர்வாகிகள் மட்டுமல்ல. முறைகேடுகளும் சீர்கேடுகளும் நிறைந்த கல்லூரி நிர்வாகம் பற்றி புகார் மனு தந்தும் வருவாய் கோட்ட அதிகாரி கண்டுகொள்ளவில்லை. ஆட்சியர், கல்லூரி நிர்வாகம் பக்கம் நிற்பது அப்பட்டமாகத் தெரிகிறது. டாக்டர் எம்ஜிஆர் பல்கலை கழக நிர்வாகிகள், அதிகாரிகள் எந்தப் புகார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிகழ்வுகள் தொடர்பாக, அப்படி எதுவும் நடக்காததுபோல் அரசு தோற்றம் தந்தது. இவை எல்லாமாகச் சேர்ந்துதான் இன்றைய உயிரிழப்புகளுக்குக் காரணம். இவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா அரசு இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். ஜேப்பியார் கல்லூரியில் கட்டிடம் இடிந்து விழுந்த பிரச்சனையில் ஜேப்பியார் பிணையில் வெளியில் வந்து விட்டார். மாணவர்கள் உயிரிழப்புக்குக் காரணமான ஒருவரும் பிணையில் விடுவிக்கப்படக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள். டிடி கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர் அனைவருக்கும் வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. பலரின் நிலை என்னவாயிற்று என்று தெரியவில்லை. இந்த நிலை எஸ்விஎஸ் கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்படாமல், அவர்கள் அனைவருக்கும் வேறு கல்லூரிகளில் இடம் தரப்பட வேண்டும்.
முதலாளிகளுக்கு, கல்வி முதலைகளுக்கு, இயற்கை வளத்தை சுரண்டிக் கொழுப்பவர்களுக்கு அப்பட்டமான ஆதரவு தரும் இந்த அரசு, மக்கள் பிரச்சனைகள் பற்றி எந்த அக்கறையும் இல்லாத இந்த அரசு, மக்களை வெறும் வாக்குகளாகப் பார்க்கும் இந்த அரசு, அவர்கள் உயிர் களை, உரிமைகளை, உணர்வுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்த அரசு இவற்றைச் செய்ய வேண்டுமானால், இனியொரு உயிர் மடியவிட மாட்டோம் என்ற உறுதியுடன், மாணவர் தற்கொலைகளுக்கு நியாயம் கிடைக்கும் வரை, தமிழக மக்கள் போராட்டங்களால் வீதிகள் நிரம்ப வேண்டும். மாணவர் தற்கொலைகளுக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.
திருநாள் கொண்ட சேரி செல்லமுத்து
அய்தராபாத் ரோஹித் வேமுலா
சென்னை கண்ணகி நகர் சரவணன் குமார் வேல்முருகன்...
இந்த அநீதிகள் இனியும் தொடரலாமா?
எஸ்.குமாரசாமி
திருநாளைப் போவாரான நந்தனால், தில்லை நடராஜரை, தாம் உயிரோடு இருந்த வரை சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்து காண முடியவில்லை. நந்தன் தீயில் எரிந்து ஜோதியில் கலக்கும் போது மட்டுமே ஆண்டவனைத் தரிசிக்க முடிந்தது.
நாகை மாவட்டம் திருநாள்கொண்டசேரியின் தலித் முதியவர் செல்லமுத்துவுக்கு, இறந்த பிறகும், பொதுப் பாதை மறுக்கப்பட்டது. செத்த பின்பும் எந்த தில்லை நடராஜனும் அவரை எந்த ஜோதியிலும் ஆரத் தழுவ வில்லை. நவம்பர் 26, 2015 அன்று, தம் பாட்டி இறந்தபோது அவர் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய சாதி இந்துக்கள் பொதுப் பாதை மறுத்ததால், கார்த்திக் என்ற இளைஞர் அரசிடம் முறையிட்டார். பயன் கிடைக்கவில்லை. ஜனவரி 3 அன்று இறந்த தமது தாத்தா செல்லமுத்துவின் சடலத்தைப் பொதுப் பாதை வழி யாக எடுத்துச் செல்ல அரசும் காவல்துறையும் ஒத்துழைப்பு தர வேண்டும் என, உயர்நீதிமன்ற உத்தரவைப் பெற்று வருகிறார். சாதி ஆதிக்கமா, உயர்நீதிமன்ற உத்தரவா என்ற கேள்வி எழுந்தவுடன், அரசும் காவல்துறையும் சாதி ஆதிக்கம் முன்பு மண்டியிட்டுப் பணிந்தன. பொதுப்பாதை வழியைச் சட்டப்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி கோரிய தலித் மக்கள் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு போடப்பட்டது. இறந்தவர் உடலை தலித் மக்களிடமிருந்து பறித்து எடுத்துக் கொண்டு, சாதி இந்துக்கள் அனுமதித்த பாதையில் சென்று காவல்துறையே இறுதிச் சடங்கை நடத்திக் காட்டியது.
தமிழ்நாட்டின் முக்கிய பெரிய முதலாளித்துவக் கட்சிகளுக்கு இது ஒரு விஷயமாகவே தெரியவில்லை. ‘ஜல்லிக்கட்டு’ அரசியலோடு, சாதி இந்து வாக்குகளை வாரி எடுத்துக் கொள்ள விரும்பும் அரசியலோடு, அவர்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இகக, இகக(மா), தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நண்பர்களும் கூட அந்த நேரத்தில், வை.கோபால்சாமியுடன் ஜல்லிக்கட்டிற்காக மக்கள் நலக் கூட்டியக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் மும்முரமாக இருந்தனர். ஜல்லிக்கட்டு நடத்துவது உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின்படி சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருந்தும், பாஜக, இல்லாத காளையை அடக்கியதாக நடத்திய நாடகத்தில், மே மாதத் தேர்தல் கண்களில் நிறைந்திருந்ததால் மற்றவர்களும் வேறு வேறு பாத்திரம் வகித்தனர். சாதிய ஒடுக்குமுறை 2016ன் துவக்கத்திலேயே நான் பலமாக இருக் கிறேன் என, திருநாள் கொண்டசேரியிலும், தமிழகத்தின் வடக்கு தெற்கு மாவட்டங்களில், பொங்கலை ஒட்டி தலித்துகள் மீது நடத்திய தாக்குதல்களிலும், பகிரங்கமாய்ப் பிரகடனம் செய்தது.
ஜனவரி 17 அன்று அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமுலா தற்கொலை செய்து கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். ரோஹித் வேமுலா, யாகூப் மேமன் தூக்கு தண்டனையை எதிர்த்தார். தண்டனை அநியாயமானது. அதனால் அவர் எதிர்ப்பு நியாயமானது. இசுலாமியராகப் பிறந்ததால்தான் இந்தியாவில் யாகூப் மேமன் தூக்கிலிடப் பட்டார் என்பதும், இசுலாமியர்களாக இருந்ததால்தான் அவர்கள் முசாபர்நகரில் வேட்டை யாடப்பட்டனர் என்பதும் ரோஹித் வேமுலாவுக்கு நன்றாகவே புரிந்திருந்தது. தாம் தலித்தாகப் பிறந்ததுதான், மரணத்திற்கு நிகரான விபத்து என்றும், தலித்துகள் வெறும் எண்ணிக்கைகள் என்றும், அவர்களின் சிந்திக்கும் மனது அங்கீகரிக்கப்படவில்லை என்றும், ரோஹித் உணர்ந்திருந்தார்.
பாஜக மாணவர் அமைப்பின் ஆணவத்தை ரோஹித்தும் அவரது அம்பேத்கர் மாணவர் அமைப்பு கூட்டாளிகளும் தட்டிக் கேட்டதால், மத்திய கல்வி அமைச்சர் ஸ்மிருதி இரானியும் தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும், அவரை தேசவிரோத, தீவிரவாத, சாதிய சக்திகள் பட்டியலில் சேர்த்து, துணை வேந்தர் அப்பா ராவ் மூலம் தண்டித்தனர்.
விடுதி, நிர்வாக அலுவலகங்கள், மற்றும் பொது வெளிகளில் நுழையாதே என ‘நவீன தீண்டாமை’ உத்தரவு போடப்பட்டது. 7 மாதங்களுக்கு, மாதம் ரூ.25,000 ஆய்வு உதவித் தொகை மறுக்கப்பட்டது.
ரோஹித்தின் மரணம், சாதி ஆதிக்கத்தால் நேர்ந்தது. ரோஹித் இறந்த பிறகு, அவருக் கென இருந்த அவரது அடிப்படை தலித் அடையாளத்தையும் பறிக்கப் பார்க்கிறார்கள். பல நாட்கள் மவுனமாக இருந்த மோடி, வாயைத் திறந்தபோது, அந்த மரணத்திலும், அரசியல் செய்தார். லக்னோவில் பேசிய மோடி, “இந்தியத் தாய் ஒரு மகனை இழந்து விட்டாள். அதற்கு வேறுவேறு காரணங்கள், அரசியல் இருக்கலாம். ஆனாலும் ஒரு தாய் தன் மகனை இழந்துவிட்ட உண்மை மிஞ்சுகிறது. அந்த வலியை என்னால் உணர முடிகிறது” என்று சொல்லி, ரோஹித்தின் மரணத்திற்கு சாதிய ஆதிக்கமோ, தமது அமைச்சர்களோ, சங்பரிவார் கூட்டமோ காரணம் அல்ல எனச் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார். தலித்துகள் மீது அம்பேத்கர் மீது தமக்கு மிகுந்த பற்றும் பாசமும் இருக்கிறது எனப் பசப்பிய பாஜக, ரோஹித் வேமுலா மரணத்தால், தனது தலித் விரோத இந்துத்துவா முகத்துடன் அம்பலப்பட்டு நிற்கிறது.
ரோஹித் வேமுலாவின் மரணம் நிகழ்ந்த இரு தினங்களுக்குப் பிறகு, சென்னை ராஜீவ் காந்தி சாலையின் ஒக்கியம்துரைப்பாக்கம் பகுதியில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி உணவக செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த கண்ணகி நகர் 29ஆவது குறுக்குத் தெருவின் சரவணன் (வயது 26), வேல்முருகன் (வயது 28), குமார் (வயது 48) ஆகிய மூவரும் அழைக் கப்பட்டனர். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற கழகங்கள் மாறிமாறி எடுக்கும் முயற்சிகளில், சென்னையின் குடிசைப் பகுதி மக்கள் (அவர்களில் 80% தலித்துகள்) செம்மஞ்சேரி, கண்ணகி நகர் என விரட்டப்பட்டனர். அங்கே வாழ்ந்த ஒரே தலித் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூவரும், கழிவு நீரை அகற்றிய பிறகு இருந்த அடைப்பை அகற்ற செப்டிக் டேங்கிற்குள் இறங்கியபோதுதான் விஷ வாயு தாக்கி இறந்தனர். (இவர்களைக் காப்பாற்றச் சென்ற உணவகத் தொழிலாளி ராஜேசும் இறந்து போனார்.) மனித மலம் அள்ளும் பணியில் மனிதரை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் சட்டம் வந்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், சமீப காலங்களில் இந்தப் பணியில் ஈடுபட்டு இறந்த 16 பேருக்கு, தலா ரூ.10 லட்சம் நிவாரணம் இது வரை வழங்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வம் முன்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்கள் முன்பு மதுரையில் கழிவு அகற்றும்போது இறந்த முனியாண்டி, விஸ்வநாதன், இப்போது பிரியாணி உணவகத்தில் இறந்த சரவணன், வேல்முருகன், குமார் ஆகியவர்களில் எவரும் அரசால், சட்டப்படி மறுவாழ்வு தரப்பட வேண்டிய, கையால் கழிவு அகற்றுபவராக (மேனுவல் ஸ்கேவெஞ்சர்) அடையாளம் காணப்படவில்லை. தமிழ்நாட்டின் 12 மாநகராட்சிகளில் 829 வார்டுகளில் 373 பேரும், 124 நகராட்சிகளில் 3,613 வார்டுகளில் 87 பேரும் கையால் கழிவு அகற்றுபவோராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கும் மறுவாழ்வு அமைத்துத் தரப்படவில்லை எனவும், அரசு, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தலித் உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல! இருபத்தியோராம் நூற்றாண்டின் சந்தைப் பொருளாதார நாகரிகம் மிதமிஞ்சிப் போனதால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் அநாகரிகங்கள் தலைவிரித்தாடுகின்றன.
அய்க்கிய அமெரிக்காவில் எட்டு ஆண்டுகளாக, கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிப ராக உள்ளார். ஆயினும் வெள்ளை நிறவெறி இன வெறி போலீசார், கருப்பின இளைஞர்களை அநியாயமாகக் கொல்வது நீடிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் வழங்கும்போது கருப்பின கலைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ஒபாமாவும் வழிமொழிகிறார்.
வான் இயற்பியல் விஞ்ஞானியும் கருப்பினப் பெண்ணுமான ஜெடிடா. சி.இஸ்லர், த நியு யார்க் டைம்சில் அய்க்கிய அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் வேரூன்றியுள்ள இன நிறவெறியைத் தோலுரித்துக் காட்டி உள்ளார். டெக்சாஸ் மாநிலத்தில், நிற அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான கருத்தரங்கத்தில், அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ‘சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் எத்தகைய புதுமையான கருத்தை இயற்பியல் வகுப்பில் கேட்டுவிடப் போகிறார்’ என ஏளனம் செய்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி அன்டனின் ஸ்காலியா, ‘இந்த பரபரப்பான நிறுவனத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, படித்து முடித்து வெற்றி பெறும் தகுதி கருப்பின மாணவர்களுக்கு இருக்கிறதா?’ எனக் கேலியும் கிண்டலுமாகக் கேட்டுள்ளார். இது போன்ற ஒரு பின்னணியில்தான் Black Lives Matter இயக்கம் அய்க்கிய அமெரிக்காவில் தோன்றியது. கருப்பின மக்களின் உயிர்களுக்கு பொருள் உண்டு என்ற முழக்கம், இன்றைக்கும் அங்கு அவசர அவசியமாகி உள்ளது.
குடியரசுக் கட்சியின் அய்க்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், இசுலாமியரை தனித்துப் பிரித்து நிறுத்தி அடையாளம் காண்பேன் என்கிறார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்து சார்லி ஹெப்டோ, இசுலாமியர்களுக்கு, இடம் பெயர்பவர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியுள்ளது. சில மாதங்கள் முன்பு, அய்ரோப்பியாவில் நுழைய முயன்று கடலில் உயிரிழந்து கரை ஒதுங்கிய சிரியக் குழந்தை அயலான் குர்தி, சாகாமல் பெரியவனாகி இருந்தால் அய்ரோப்பியப் பெண்களைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருப்பான் என ஒரு கேலிச் சித்திரம் வெளியிட்டு, அதனுடைய வெறுப்பு அரசியல் ‘கருத்து சுதந்திரத்தை’ உலகத்திற்கே படம் போட்டுக் காட்டியது.
மதுரையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைச் சந்தித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமாரும் டி.அரிபரந்தாமனும் தமது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தி உள்ளனர். நீதிமன்றம் வழக்கறிஞர்களை தலையாட்டும் பொம்மைகளாக மாற்ற முயல்கிறதோ என்ற எண்ணம் வலுவடைந்துள்ள நேரத்தில், இந்த இரு நீதிபதிகள் தமது பேச்சில் வெளிப்படுத்திய சமூக அக்கறை, ஆறுதலும் நம்பிக்கையும் தருவதாக அமைந்துள்ளது.
நீதிபதி பி.ஆர்.சிவகுமார், நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 1,200 நீதிபதிகள் இருந்தால், அதில் 18 பேர்தான் தலித்துகள் என்றும் இது மேட்டுக்குடி தீண்டாமை (Elite Untouchability) என்றும் குறிப்பிட்டார். ஒரு குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் இந்தியாவைப் பீடித்துள்ள இரு தீராத வியாதிகள் ஊழல் மற்றும் இட ஒதுக்கீடு எனவும், இடஒதுக்கீடு என்பது ஊழலுக்குச் சமமானது எனவும் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது, நீதிமன்றங்களின் மன நிலையைக் காட்டுகிறது என்றார். நீதிபதி டி.அரி பரந்தாமன், ‘இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் (ஸ்கவுன்ட்ரல்ஸ்). எவ்வளவு காலம் இடஒதுக்கீடு தொடரலாம் என என்னிடம் கேட்பவர்களுக்கு, இந்துயிசத்தின் கோட்பாடுகள் மாறாத வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் எனப் பதில் சொல்வேன். நீதிமன்ற உத்தரவு இருந்தும், மயிலாடுதுறை வழுவூர் அருகில் இறந்த தலித் ஒருவர் உடலை பொதுப்பாதை வழியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?’ எனக் கேட்டுள்ளார்.
நாடு குடியரசாகி 66 ஆண்டுகள் ஆன பிறகும், இது வரை உச்சநீதிமன்றத்தில் 10 தலித் நீதிபதிகள் கூட பதவி வகிக்கவில்லை, இன்றும் ஊடகங்களிலும் கார்ப்பரேட் போர்டுகளிலும் தலித்துகள் இடம் பெறவில்லை என்பவை எவ்வளவு ஆபத்தான செய்திகள்.
அம்பேத்கர், இந்தியாவிலுள்ள அரசியல் சுதந்திரம் என்பதற்கும், நிலவுகிற சமூக பொருளாதார கட்டமைப்புகளுக்கும் எந்தப் பொருத்தமும் இல்லை என்று அன்று சொன்னது, இன்று வரை நீடிக்கிறது. தலித் உயிர்கள், தலித் கவுரவம், தலித் சமத்துவம் பொருளுள்ளவை என்ற முழக்கங்கள் கொண்ட ஜனநாயக இயக்கத்தில், தேர்தல் நலன்களில் இருந்து எந்த சமரசமும் வந்துவிடக் கூடாது. தலித் அல்லாதோரை, தலித் உயிர்கள், தலித் கவுரவம் மற்றும் தலித் சமத்துவத்திற்காகக் குரல் கொடுக்க வைப்பதுதான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் வெற்றியாகும்.
‘நான் எப்போதுமே வாழ்க்கையை தொடங்குவதற்காக அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன்...’
(அய்தராபாத் முனைவர் பட்ட தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வேமுலா எழுதிய கடிதம்)
காலை வணக்கம். இந்தக் கடிதத்தை நீங்கள் படிக்கும் தருணத்தில் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். என் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தீர்கள். என்னை நேசித்தீர்கள். என்னை உரிய மரியாதையுடன் நடத்தினீர்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதும் என்னால் மட்டும்தான் எனக்குப் பிரச்சனை. எனது ஆன்மா வுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக, நான் ஒரு இராட்சசனாக மாறிவிட்டதாகவும் உணர்கிறேன். நான் ஓர் எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல ஓர் அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன்.
இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது. அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை இவையெல்லாம் எனது விருப்பத்துக்குரியவை. என் விருப்பப் பட்டியலில் மனிதர்களும் இருக்கின்றனர். அவர்கள் இயற்கையுடனான உறவை எப்போதோ துண்டித்துக் கொண்டனர் என்பதை அறியாமலேயே அவர்களை நான் நேசித்து வந்தேன். நமது உணர்வுகள் இரண்டாம்பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமே மதிக்கப்படுகிறது. எள்ளளவும் காயப்படாமல் அன்பைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.
ஒரு மனிதனின் மதிப்பு வெறும் உடனடியான ஓர் அடையாளத்திற்குள் சுருக்கப்பட்டுவிட்டது. ஓர் ஓட்டாக, ஓர் எண்ணிக்கையாக, ஒரு பொருளாக மனிதன் அடையாளம் காணப்படுகிறான். கல்வி பயிலும் இடத்தில், தெருக்களில் அரசியலில் எங்கும், யாரும் மனிதனை அவனது மனதுக்காக மதிப்பதில்லை. வாழ்விலும் சாவிலும் கூட. ஒரு போதும் நட்சத்திர துகள்களிலிருந்து உருவாக்கப்பட்ட ஒளிபடைத்த மனிதனாக அவனை நடத்துவதில்லை.
இது போன்ற கடிதத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக எழுதுகிறேன். இதுவே எனது கடைசி கடிதமாகவும் அமைந்துவிட்டது. எனது கருத்துக்கள் அர்த்தமற்றதாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எனது பிறப்பு என்பது உயிர் பறிக்கும் ஒரு விபத்து. எனது குழந்தைப் பருவ தனிமையிலிருந்து என்னால் ஒருபோதும் மீளமுடியவில்லை. கடந்த காலங்களில் நான் யாராலும் பாராட்டப்படாத குழந்தையாகவே இருந்திருக்கிறேன். ஒரு வேளை இந்த உலகத்தை நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அன்பு, வலி, வாழ்க்கை, மரணம் இவற்றின் மீதான என் புரிதல் கூட தவறானதாக இருக்கலாம். எனக்கு எந்த அவசரமும் இல்லை. ஆனால் நான் எப்போதுமே வாழ்க்கையை தொடங்குவதற்காக அவசரப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன்.
இந்தத் தருணத்தில் நான் காயமடைந்தவனில்லை. நான் சோகமாக இல்லை. வெறுமையாக இருக்கிறேன். என்னைப் பற்றிய அக்கறை சிறிதும் அற்றவனாக இருக்கும் இந்த நிலை பரிதாபகரமானது. அதனால்தான் இதைச் செய்கிறேன். மக்கள் என்னை கோழை என்று அழைக்கலாம். சுயநலவாதி, முட்டாள் என்றும் நான் சாடப்படலாம். நான் போன பிறகு, நீங்கள் என்னைப் பற்றி சொல்வது குறித்து எனக்கு என்ன அக்கறை? இறப்பிற்குப் பிறகான கதைகள், பேய்கள் ஆவிகள் குறித்தெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அவற்றின் மூலம் நட்சத்திரங்களுக்கு பயணித்து வேறு உலகங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் என்பது மட்டுமே.
இந்தக் கடிதத்தைப் படிக்கும் உங்களில் யாராவது, எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால், ஒரு சிறிய வேண்டுகோள். எனக்கு பல்கலைக் கழகங்களிலிருந்து வர வேண்டிய கல்வி உதவித் தொகை, ரூ.1,75,000 நிலுவையில் உள்ளது. அந்தத் தொகை எனது குடும்பத்தினருக்குக் கிடைக்க வழி செய்யுங்கள். என் நண்பன் ராம்ஜிக்கு நான் ரூ.40,000 தர வேண்டும். ராம்ஜி அந்தப் பணத்தைத் திருப்பித் தா என்று எப்போதுமே கேட்டதில்லை. இருந்தாலும் அவனுக்கு உதவித் தொகை பணத்திலிருந்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள். நான் தென்றலைப் போல வந்து தென்றலைப் போல போய்விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் இருக்கட்டும். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். உயிரோடு இருப்பûதை விட சாவதே எனக்கு மகிழ்ச்சி தருவது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். “நிழல் உலகிலிருந்து நட்சத்திரங்களை நோக்கி செல்கிறேன்.”
உமா அண்ணா, உங்களுடைய அறையை இதற்காகப் பயன்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். அம்பேத்கார் மாணவர் பேரவை குடும்பத்தினருக்கு, உங்களையெல்லாம் ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர்கள். உங்கள் வளமான எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசியாக ஒரு முறை ‘ஜெய்பீம்’ என்று முழங்கிக் கொள்கிறேன்.
வழக்கமாக எழுதும் ஒன்றை நான் மறந்துவிட்டேன். எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல. தங்களுடைய செயலாலோ அல்லது வார்த்தைகளாலோ என்னை யாரும் தற்கொலைக்குத் தூண்டவில்லை. இது என்னுடைய முடிவு. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு. நான் போன பிறகு எனது நண்பர்களை, எதிரிகளையும் கூட இதனால் தொந்தரவு செய்யாதீர்கள்.
ரோஹித் வேமுலாவுக்கு நியாயம் கேட்டு
இகக (மாலெ), புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம்,
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கண்டன இயக்கம்
ரோஹித் வேமுலாவை தற்கொலைக்குத் தள்ளிய மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி, அய்தராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்!
ஜனவரி 20 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு, இறுக்கமான சூழ்நிலையிலும் தோழர் ரோஹித் வேமுலா விசயத்தில் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு வழக்குரைஞர் அமைப்புகளும் ஒன்றாக அணி திரண்டனர். ரோஹித் இறப்புக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டுமென கோரினர். ரோஹித்தின் உருவப் படங்களைத் தாங்கி, பல்கலைக்கழக வளாக கொலைக்கு எதிராக அணிதிரண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க அமைப்பாளர் தோழர் பாரதி, இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் குமாரசாமி, மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், போராடும் அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், சுதா, சீனிவாசராவ், தமிழினியன், விஜயகுமார், ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஜனவரி 24 அன்று புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், ஏஅய்சிசிடியு, இகக (மாலெ) இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை கட்டமைத்தனர்.
நிகழ்ச்சிக்கு புரட்சிகர இளைஞர் கழக மாவட்டத் தலைவர் தோழர் கண்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் அதியமான் மற்றும் சங்கர், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா, இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் எ.எஸ்.குமார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இடம் பெயர்ந்த ஹிந்தி பேசுகிற தொழிலாளர்கள், காஞ்சி காமகோடி மருத்துவமனை தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், ஜிம்கானா கிளப் தொழிலாளர்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக நகரின் தலித் மக்கள் பெருவாரியாக வாழும் ஒரகடம், எஸ்விநகர், ஏகேநகர், காமராஜபுரம், அத்திப்பேடு, மங்களபுரம், உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு சாதியாதிக்க, மதவெறி சக்திகளுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன், முன்னணி தோழர்கள் சூர்யா, சுகுமார் உட்பட நூற்றுக்கணக்கானோர் இந்தப் பிரச்சாரத்தில் பங்கெடுத்தனர்.
ரோஹித் வேமுலா தற்கொலை, திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவரின் இறுதி ஊர்வலத்துக்கு பாதை மறுப்பு ஆகியவற்றுக்குக்கு நியாயம் கேட்டு ஜனவரி 21 அன்று திருவள்ளூர், காரனோடையில் இகக (மாலெ) கண்டனக் கூட்டம் நடத்தியது.
கூட்டத்திற்கு தோழர் அன்புராஜ் தலைமை வகித்தார். ரோஹித் வேமுலாவை தற்கொலைக்குத் தள்ளிய மத்திய தொழிலாளர் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, அய்தராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், நாகை மாவட்டம், திருநாள்கொண்டசேரியில் இறந்த முதியவர் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் அதை அமல்படுத்தாத நாகை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டம் வலியுறுத்தியது. கூட்டத்தில் இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மணி ஆகியோர் உரையாற்றினர். இந்த கோரிக்கைகளுடன் சுவரொட்டி வெளியிடப்பட்டது.
ஜனவரி 19 அன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய மாணவர் கழகத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கசி.பழனிக்குமார், இகக(மாலெ) மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மதிவாணன் கண்டன உரையாற்றினர்.
ஜனவரி 20 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தோழர் ஜோதிவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வளத்தான், மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி ஆகியோர் உரையாற்றினர்.
ஜனவரி 21 அன்று கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு புரட்சிகர இளைஞர் கழக தோழர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாநகரக் குழு உறுப்பினர் தோழர் வேல்முருகன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜெயபிரகாஷ்நாராயணன் ஆகியோருடன் வழக்குரைஞர்கள் வெண்மணி, ஜோதிமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 21 அன்று விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கஜேந்திரன், கலியமூர்த்தி, செண்பகவள்ளி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 26 அன்று சேலத்தில் அம்பேத்கர் படிப்பு வட்டம் ரோஹித் வேமுலா நினைவு கூட்டம் ஏற்பாடு செய்தது. அகில இந்திய மக்கள் மேடையின் தோழர் அறிவழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் உரையாற்றினார்.
திருச்சியில் ஜனவரி 24 அன்று உழைப்போர் உரிமை இயக்கம் துவக்கிய நிகழ்ச்சியில் ரோஹித் வேமுலாவை தற்கொலைக்கு தள்ளிய மத்திய அமைச்சர்களை கைது செய்ய வலியுறுத்தியும், 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் மூலம்
நாட்டின் வலதுசாரி திருப்பத்தை தடுத்து நிறுத்தி பின்னுக்குத் தள்ளுவோம்!
(ஜனவரி 23 - 24, 2016 தேதிகளில் புவனேஸ்வரில் நடைபெற்ற ஏஅய்சிசிடியுவின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி முன்வைத்த அறிக்கை. தமிழில்: தேசிகன்)
தோழர்களே,
இந்த செயற்குழு கூட்டம் முடிந்து நாம் திரும்புகிற சில நாட்களுக்குள் மத்திய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எப்போதும் போலவே, வள ஆதாரங்களை திரட்டிக் கொள்வது பற்றியும் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது பற்றியும் அது பேசும்.
எல்லாப் பிரச்சனைகளுக்கும் இன்னும் கூடுதல் அந்நிய நேரடி முதலீடு தீர்வாக சொல்லப்படும். நாட்டின் இயற்கை வளமும், மனிதவளமும் கொள்ளையடிக்கப்படவும் சூறையாடப்படவும் அனுமதிக்கப்படும். 2000 முதல் 2015 வரையான காலத்தில், 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட சிறிய மொரீசியஸ் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 34% அந்நிய நேரடி முதலீடு வந்திருக்கிறது. இந்திய நாட்டிலிருந்து கருப்புப் பணம் வெளியே சென்று மீண்டும் மொரீசியஸ் வழியாக திரும்ப வருகிறது. மொரீசியஸ் நாட்டில் முதலீட்டு ஆதாய வரி கிடையாது. இந்தியா மொரீசியஸ் நாட்டுடன் இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் (DTAA) போட்டிருக்கிறது. அடுத்து அந்நிய நேரடி முதலீடு என்பது இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் (Mergers and Aquisitions) ஆகிய வழிகளின் மூலம் வருகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களும் நாட்டுக்குள் வந்த அந்நிய நேரடி முதலீடும் நாட்டின் உற்பத்தி அளவை உயர்த்த பங்களிப்பு செலுத்தவில்லை.
நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள அரசு சொல்கிற இன்னொரு வழி பொதுத்துறை பங்குகளை விற்பதாகும். இந்த வழியில், வரும் ஆண்டில் ரூ.60,000 கோடி இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்திருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை உருவாக்குகின்றன என்ற நவதாராளவாத கருத்து மறுஉற்பத்தி செய்யப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் ரூ.1.71 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனப் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்துள்ளது.
மொத்தமுள்ள 290 பொதுத்துறை நிறுவனங்களில் 213 முதல் 234 நிறுவனங்களுக்கான விவரங்கள் இருக்கின்றன. 2004 - 2005ல் லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் 143. இவற்றின் ஒட்டுமொத்த லாபம் ரூ.74,432 கோடி. 2013 - 2014ல் லாபமீட்டும் பொதுத் துறை நிறுவனங்கள் எண்ணிக்கை 165. இவற்றின் ஒட்டுமொத்த லாபம் ரூ.1,49,164 கோடி. 2013 - 2014ல் ஏற்பட்ட ஒட்டுமொத்த நட்டம் ரூ.20,055 கோடியாகும். எனவே முதலீடு அகற்றுதல், தனியார் மூலதன நலனில் இருந்து நாட்டை சூறையாடுவதும், கொள்ளை அடிப்பதுமேயன்றி வேறல்ல.
நிதி ஆதாரங்களைத் திரட்டிக் கொள்ள அரசாங்கத்தால் சொல்லப்படும் இன்னொரு வழி அரசு - தனியார் கூட்டு (Public Private Partnership) என்பதாகும். கனடாவின் நவதாராளவாத எதிர்ப்பாளர்கள் PPP என்பதை மிகச் சரியாக, ப்ராப்ளம் ப்ராப்ளம் ப்ராப்ளம் (Problem Problem Problem) என்று அழைக்கிறார்கள். Viability Gap Funding (VGF) (திட்டச் செலவு திட்டமிட்டதைவிட அதிகமாகும்போது அதை சரிகட்ட ஒதுக்கப்படும் தொகை) பின்னுள்ள ரகசியத்தை PPPயில் ஒளித்து வைக்க முடியாது. VGF என்ற பெயரில் மக்கள் சொத்து தங்கத் தட்டில் வைத்து தனியார்துறைக்கு வழங்கப் பட்டதை டெல்லி, பெங்களூரு விமான நிலையங்கள் சுட்டிக் காட்டுகின்றன. மூலதனத்தின் சந்நிதானத்தில் லாபங்களைக் குவிப்பது, நட்டங்களை தேசியமயமாக்குவது என்ற, உலகம் முழுவதும் காணப்படுகிற பொதுவான கதையிலிருந்து 21ஆம் நூற்றாண்டு முதலாளித்துவம் எவ்வகையிலும் மாறுபடவில்லை.
நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது நவதாராளவாதத்தின் அடுத்த நிகழ்ச்சிநிரல். இது சிக்கன நடவடிக்கையை நாசூக்காக கூறும் வழி. இது சமூகத் துறைக்கான செலவினங்களை ஆழமாகவும், கடுமையாகவும் வெட்டிச் சுருக்குவதேயன்றி வேறல்ல.
‘21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவம்’ என்ற புத்தகத்தின் பிரான்ஸ் எழுத்தாளர் தாமஸ் பிக்கெட்டி, சமீபத்தில் ‘முதலாளித்துவமும் சமத்துவமின்மையும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த டெல்லி வந்திருந்தார். அவரது கூற்றுப்படி, சமூக முதலீடு மற்றும் பொதுச் சேவைக்கான நிதி ஆதாரங்களை திரட்டிக் கொள்வதில் சீனா, இந்தியாவைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் சொத்து வரி கிடையாது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி 11% ஆகும். இதுவே அய்க்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு அய்ரோப் பிய நாடுகளில் 30% முதல் 50% என உள்ளது. சீனா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுச் சுகாதாரத்திற்கு 3% ஒதுக்குகிறது. இந்தியாவில் அது 0.5% மட்டுமே. பங்கு வர்த்தகத்திலும், ரியல் எஸ்டேட்டிலும் போடப்பட்ட முதலீடும் பரம்பரை சொத்தும் வருமானத்தை விட வேகமாக வளரும். எனவேதான் இந்தியாவில் சர்வதேச மற்றும் வரலாற்றுரீதியான அளவீடுகளை விட வருமானமும் சொத்தும் இன்னும் கூடுதல் செறிவுள்ளதாகக் குவிந்துள்ளன.
பங்குச் சந்தை, சாதாரணமாக கண்ணயர்ந்தால் இந்திய அரசு மயங்கி விழுந்து விடுகிறது என்று தி இந்து பத்திரிகையில் ஜி.சம்பத் எழுதினார். இந்திய அரசு பொது வரி ஏய்ப்பு தடுப்பு விதிகளை (General Anti Avoidance Rules) 2017 வரை அமல்படுத்தப் போவதில்லை என முடிவெடுத்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 121 டாலரில் இருந்து 27 டாலராக குறைந்துவிட்ட நிலையிலும், அதன் பயன்கள் இந்திய மக்களுக்கு சென்று சேரவில்லை. பொருளாதார சாதுரியம் என்ற பெயரில் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், உற்பத்திக்காக எதையும் செய்யாமலேயே கிருஷ்ணா - கோதாவரி படுகை பங்குகளில் கொள்ளை லாபம் அடித்து வருகிறது.
இங்கு பிஎம்எஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் வீர்ஜேஷ் உபாத்யாயாவின் அறிக்கை பற்றி பார்ப்பது சுவையானதாக இருக்கும். ‘சாமான்ய மனிதன் மறைமுக வரி என்ற பெயரில் பல்வேறு வரிகளைக் கட்டிக் கொண்டிருக் கும்போது, வரி கட்டும் நிலையில் இருப்பவர்கள், உதாரணத்திற்கு பெருந்தொழில் குழுமங்கள், வரிவிலக்கும், சலுகைகளும் பெற்று வருகிறார்கள். கார்ப்பரேட் வரி வருவாய் சலுகை என்பது கார்ப்பரேட் வருமான வரி வருவாய், சுங்க வரி, கலால் வரி ஆகியவற்றை தள்ளுபடி செய்வதையும் உள்ளடக்கியதாகும். அரசாங்கத்தின் கார்ப்பரேட் துறை மீதான மாளாக்காதல் சமூகத் துறைகளில் நட்டத்தை ஏற்படுத்துகிறது. பெரிய வியாபார நிறுவனங்களும், பெருந்தொழில் குழுமங்களும் வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்வது, வரி நிலுவைகளுக்கு இட்டுச் செல்கிறது. இந்த அமைப்பு முறை மாற்றப்பட வேண்டும். ஊதியத்தின் மூலமான வளர்ச்சி என்பது இருக்க வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியம் என்பது மேலோங்கிய வாங்கும் சக்திக்கு இட்டுச் செல்லும். அது சந்தையையும், பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.’ திரு மோடி அவர்களே, திரு.அருண்ஜேட்லி அவர்களே, பிஎம்எஸ்சின் திரு.உபாத்யாயா சொல்வது உங்களுக்குக் கேட்கிறதா?
இப்போது, அய்க்கிய அமெரிக்காவிலும் ஊதியம் மற்றும் ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சனை எழுந்து வந்திருக்கிறது. அய்க்கிய அமெரிக்காவில் 300 மில்லியன் மக்களுக்கு 300 மில்லியன் ஆயுதங்கள் என்றிருக்கும்போது, ஒருவர் 0.01 = 80% என்று சொல்வாரானால், அது மோசமான எண் கணிதமாக இருக்கும். ஆனால், அதுவே 16,000 பணக்கார அய்க்கிய அமெரிக்க குடிமக்களின் சொத்து 256,000,000 மக்களின் சொத்துக்குச் சமமானதாக இருக்கும்போது சரியான அரசியல் பொருளாதாரமாகிவிடுகிறது. எனவேதான் பெர்னி சாண்டர்ஸ் வால் ஸ்ட்ரீட்டின் கொழுத்த பூனைகள் பற்றி பேசும்போது அய்க்கிய அமெரிக்க மக்களோடு ஒருவித உறவைப் பேண முடிகிறது. ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் பெர்னி சாண்டர்ஸ், ஹிலாரி கிளிண்டனுக்கு சவால் விடுகிறார். ஒபாமா ஒரு மணி நேரத்திற்கு 10.5 டாலர் குறைந்தபட்ச ஊதியம் என்று சொல்லும்போது, பெர்னி சாண்டர்ஸ் 15 டாலர் குறைந்தபட்ச ஊதியத்தை நோக்கிச் செல்கிறார். இது, ஒரு வேளை, தேர்தல் வாய்ச் சவடாலாகவே இருந்தாலும், நல்லதுதான்.
ஊதியம் தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் கருவான விசயங்களை சற்றுப் பார்ப்போம். உலகின் 12ஆவது பெரிய பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். 2013ல் அதன் லாபம் 37 பில்லியன் டாலர்; 2014ல் 39.5 பில்லியன் டாலர்; 2015ல் 44.5 பில்லியன் டாலர். அதன் நிகர விற்பனை யில் 56% அய்போன்களாகும். ஒரு ஆப்பிள் அய்போன் விலையில் சீனத் தொழிலாளியின் பங்கு 1.8%. அய்போன் விற்பனையில் ஆப்பிள் லாபம் 58.5%. பாக்ஸ்கானின் லாபம் 14.3%. அய்போன் 6 ஒன்றின் விலை 299 டாலர். ஆப்பிளின் லாபம் 177 டாலர். உண்மையிலேயே இதை உற்பத்தி செய்யும் பாக்ஸ்கானுக்கு கிடைப்பது 43 டாலர். பாக்ஸ்கானில் வேலை செய்யும் சீனத் தொழிலாளி பெறுவது 5 டாலர். 2011ல் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்துகொண்ட அப்போதைய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ்ஸிடம் ஆப்பிள் நிறுவன உற்பத்தியை உள்நாட்டுக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று ஒபாமா கேட்டதாகவும் அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் அது திரும்ப வராது என்று தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
2011 கணக்கெடுப்புப்படி, வேலையில்லா தோர், மோசமான பணி நிலைமைகள் உள்ளோர், பொருளாதாரரீதியான செயல்பாடு அற்றவர்கள் ஆகியோர் அடங்கிய உலக அளவிலான சேமப் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 240 கோடி. அதே நேரம் வேலைகள் கிடைத்து செய்து கொண்டிருக்கிற உழைப்பாளர் எண்ணிக்கை உலக அளவில் 140 கோடி. இந்த சேமப்பட்டாளத்தைத்தான் மார்க்ஸ் முதலாளித்துவ செல்வக்குவிப்பின் நெம்புகோல், முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுவதற்கான நிபந்தனை என்றார்.
இந்தியாவில் நாம் வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி மாதிரியைக் கொண்டிருக்கிறோம். மோடி அரசாங்கம் பற்றிய மத்தியதர வர்க்கத்தின் அதீத நம்பிக்கை காற்றில் கரைந்து போய்விட்டது. நில அபகரிப்பு மசோதாவில் மோடி அரசாங்கம் நல்ல அடிவாங்கியுள்ளது. மாணவர்களும் இளைஞர்களும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்கிறார்கள். அறிவுஜீவிகள் தங்கள் விருதுகளை திருப்பிக் கொடுத்து ‘அவார்ட் வாப்ஸி’ எதிர்ப்பியக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மோடி அரசாங்கத்துக்கு இந்திய தொழிலாளர் வர்க்கம் விடுத்த எச்சரிக்கைச் செய்தி. டெல்லியிலும், பீகாரிலும் மோடி - ஷா இரட்டையர்கள் தேர்தல் பின்னடைவை சந்தித்துள்ளார்கள். இவை எல்லாமுமாகச் சேர்ந்து, தொழிலாளர் சீர்திருத்தங்களின் வேகத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தக் கூடும். ஆனால் அபாயம் நீங்கவில்லை என்பதால் நாம் சுயதிருப்தி அடைய ஏதுமில்லை. ஏற்கனவே தொழிலாளர் வர்க்கம் தன் விருப்பப்படி சங்கம் துவங்கவோ எதிர்ப்பு தெரிவிக்கவோ கூடாது என்பதற்கான எச்சரிக்கைச் செய்தியை முதலாளித்துவ அமைப்பு சொல்லியிருக்கிறது. அதுதான், 03.12.2015 அன்று 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை ஆகும்.
அக்லாக்கை கூட்டமாக சென்று கொலை செய்தது, ரோஹித் வேமுலா தற்கொலைக்குத் தள்ளப்பட்டது, விவசாயிகளின் தற்கொலைகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பட்டினிச் சாவுகள், வெறுப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது, இந்திய தண்டனைச் சட்டப்படி வயது வந்தோருக்கு நிகராக சிறார்களையும் பாவிக்கின்ற வகையில் சிறார்கள் வயதைக் குறைப்பது, 90% ஊனத்துடன் இருக்கும் பேராசிரியர் சாய்பாபாவின் பிணையை ரத்து செய்வது, அருந்ததி ராய்க்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிப்பு கொடுப்பது ஆகியவை, இந்திய அரசியல், பெருந்தொழில் குழும, மதவெறி, சாதிய சக்திகளின் தலைமையில் வலதுசாரி பிற்போக்குப் பாதையில் செல்கிற அபாயத்திற்கான சாட்சியங்களாக உள்ளன.
ஒப்பந்தத் தொழிலாளர்கள், நகராட்சித் தொழிலாளர்கள், அரசு மற்றும் பொதுத் துறையிலுள்ள நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மத்தியில் ஏஅய்சிசிடியு நிச்சயமான, சீரான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நீதி, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு ஆகிய விசயங்களில் ஏஅய்சிசிடியு கவனம் செலுத்தியாக வேண்டும். காத்திரமான தொடர்ச்சியான முயற்சிகள் எடுத்தாக வேண்டும். பஞ்சப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் ரூ.20,000 என்ற கோரிக்கையை நாம் பிரபலப்படுத்த வேண்டும்.
நாட்டின் வலதுசாரி திருப்பம், தொழிலாளர் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பெருந்திரள் போராட்டங்கள் மூலமாகத்தான் தடுத்து நிறுத்தப்படுவதோடு பின்னுக்குத் தள்ளப்படவும் முடியும். அந்தப் பாதையில் ஏஅய்சிசிடியு ஆனதெல்லாம் செய்ய வேண்டும்.
வறிய மக்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ள காலத்தில்
தீவிரப்படுத்தப்படும் மானிய வெட்டு
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத விதத்தில் ரூ.7,290 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பணமாகவும் பணத்துக்குச் சமமானவையாகவும் ரூ.91,736 கோடி அந்த நிறுவனத்திடம் உள்ளது. ஆனால், ரூ.1,78,077 கோடி கடனில் உள்ளது. இவ்வளவு கடன் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்திடம் பணமாக இருப்பதை பிடுங்காமல், வந்துள்ள லாபத்திலும் கை வைக்காமல் இருப்பவர்கள், சாமான்ய மக்களிடம் வாய்க்கும் வயிற்றுக்கும் இருப்பதை பறித்துவிடப் பார்க்கிறார்கள்.
எதற்கெடுத்தாலும் ரிலையன்ஸ்தானா, நாட்டில் வேறு நிறுவனமே இல்லையா என்று கேட்பவர்கள் சற்று பொறுமையாக அடுத்து கட்டுரையைப் படியுங்கள். படிக்க சற்று வசதியாக, ஒவ்வோர் அம்சமாகப் பார்க்கலாம்.
ஜன்தன், ஆதார், மொபைல் என்கிற ‘ஜம்’, மோடி ஆட்சியின் சிறப்பு என்று ஆட்சியாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவற்றின் மூலம் மானிய விரயத்தை கட்டுப்படுத்தி, மானியம் தருவதால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை சரிசெய்து நாட்டின் பொருளாதாரத்தை முன் செலுத்தலாம் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து முன்வைக்கும் இந்த வாதத்தை அய்முகூ அரசாங்கத்தை விட சிறப்பாகவும் விரைவாகவும் தேஜமு நடைமுறைப்படுத்தி வருகிறது. வறிய மக்களுக்குத் தரப்படும் எல்லா விதமான மான்யங்களையும் ஒழித்துக்கட்டி விடுவது என்பதையும் வறியவர்களுக்கு கணக்கின்றி மானியம் தருவதால்தான் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கி வளர்ச்சி தடைபடுகிறது என்ற அவர்கள் கருத்தையும் அவர்கள் மறைப்பதில்லை. ஆனால் நாட்டின் 80 கோடி வறியவர்களுக்கு தரப்படும் மானியம், நாட்டின் மிகச்சிறுபான்மை பெரும்பணக்காரர்களுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தரப்படும் சலுகைகளுடன், அவர்கள் கொள்ளையடித்துச் செல்லும் செல்வத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு பொருட்டே இல்லை என்பதை யதார்த்த நிலைமைகள் சொல்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் அரிசி, கோதுமை, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய், உரம், சர்க்கரை, பருப்பு, மின்சாரம், டீசல், இரும்புத் தாது ஆகியவற்றுக்கு தரப்படும் மானியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.24% என்று 2014 - 2015 பொருளாதார ஆய்வறிக்கை சொன்னது. இது ரூ.3,78,000 கோடி மட்டுமே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுக்கப்படும் வரிச் சலுகைகளுடன் ஒப்பிட்டால் 80 கோடி பேருக்கும் மேல் தரப்படும் மானியம் பெரிய தொகையே அல்ல என்று நமக்குத் தெரிகிறது. 80 கோடி பேருக்கு இதைக் கூட தராமல் வேறு எதற்கு அந்த வரிப்பணம்? வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை விட ஓர் அரசாங்கத்துக்கு வேறு என்ன தலை போகிற செலவு? அதை மிச்சப்படுத்தி நாட்டு மக்களை வயிற்றில் அடித்து யார் பொருளாதாரத்தை முன்னேற்றப் போகிறார்கள்? 2014 - 2015ல், பொது விநியோகத் திட்ட முறைகேடுகளால் மண்ணெண்ணெய்யில் ரூ.10,044 கோடி, அரிசியில் ரூ.5,800 கோடி, கோதுமையில் ரூ.12,600 கோடி இழப்பு என்று 2015 - 2016 பொருளாதார ஆய்வறிக்கை சொன்னது. 2014 - 2015 பொருளாதார ஆய்வறிக்கை சொன்ன ரூ.3,78,000 கோடியைக் கூட மோடி அரசாங்கம் மக்களுக்கு முழுமையாக எடுத்துச் சென்று சேர்க்கவில்லை. இடையில் ரூ.29,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது.
சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் ஒரு பேரல் எண்ணெய் விலை 29 டாலர் என சரிந்துவிட்டது. 2012ல் இருந்ததில் இருந்து இந்தச் சரிவு 76%. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 18.9%தான் குறைந்துள்ளது. மோடி அரசு, எண்ணெய் விலைச் சரிவின் இந்தப் பயன்கள், மக்களுக்குச் சேர்ந்துவிடாமல் கலால் வரியை உயர்த்திவிடுகிறது.
எண்ணெய் இறக்குமதி செலவு 2015 ஏப்ரல் முதல் நவம்பர் வரை, 2014ல் இதே கால கட்டத்தில் 106.59 பில்லியன் டாலர் என இருந்ததை விட, 61.41 பில்லியன் டாலராக 42.39% குறைந்துள்ளது. சர்வதேச எண்ணெய்ச் சந்தையில் எண்ணெய் விலை 1 டாலர் குறைந்தால் இறக்குமதி செலவு ரூ.6,500 கோடியும், அது தொடர்பான பொருட்களுக்கு தர வேண்டிய மானியம் ரூ.600 கோடியும் குறையும். இந்த வகைகளில் குறையும் செலவுகளும் மக்களுக்கு மாற்றிவிடப்பட்டதாகத் தெரியவில்லை.
மோடி அரசு நாட்டு மக்கள் மீது போர் தொடுத்துள்ள காலம் இது. இந்தப் போரில் ஜனவரி 1, 2015 முதல் சமையல் எரிவாயு மானியம் வங்கிக் கணக்கில் தரப்படும் எனச் சொல்லப்பட்டு சாமான்ய மக்கள் அலைகழிக்கப் பட்டனர். ரூ.450 இருந்தால் எரிவாயு வாங்கி விடலாம் என்ற நிலை போய் ரூ.650 கையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன் பிறகு வங்கியில் வருமா என காத்திருக்க நேர்கிறது. வரவில்லை என்றால் அதற்கு அலைய நேர்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் சிலருக்கு அது கிடைப்பதும் இல்லை.
எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தியதில் அரசுக்கு மிச்சமான தொகை ரூ.14,672 கோடி என்று மத்திய எண்ணெய் அமைச்சகம் சொல்கிறது. நேரடி மானியம் தருவதற்கு முன்பு 18.19 கோடி வாடிக்கையாளர் இருந்ததாகவும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அது 14.78 கோடி என குறைந்த தால் இந்த நிதி மிச்சம் என்றும் கணக்கு சொல்லப்படுகிறது. இந்தக் கணக்கை எப்படி ஏற்றுக் கொள்வது? அத்தனை பேரும் எரிவாயு வாங்கினார்களா, எத்தனை வாங்கினார்கள் என்ற கணக்குகளை எப்படி சரிபார்ப்பது? ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் என்று இந்தக் கணக்கு எட்டப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள நீடித்த வளர்ச்சிக்கான சர்வதேச அமைப்பு இந்தக் கணக்கு ஊதிப்பெருக்கப்பட்டது என்று சொல்கிறது. தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியம் ரூ.12,700 கோடி மிச்சம் என்று சொன்னார். அது வெறும் ரூ.143 கோடிதான் என்றும் அந்த அமைப்பு சொல்கிறது. 2014 ஏப்ரல் 1 முதல் 2014 நவம்பர் 15 வரை இந்தத் திட்டத்தால் மானியம் வழங்குவதில் எந்த நேரடி மாற்றமும் ஏற்படவில்லை என்றும் திட்டத்தில் சேராதவர்களுக்கு மானியம் தரப்படுவதை மட்டுமே இந்த நடவடிக்கை நிறுத்தியுள்ளது என்றும் அந்த அமைப்பு சொல்கிறது.
நாடெங்கும் விளம்பரத் தட்டிகளில், விட்டுக் கொடுங்கள் என்று மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். 57.50 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இதனால் ஆண்டுக்கு ரூ.940 கோடி மீதமாகிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது மோடி அரசு ஒரே போடு போடுகிறது. வரி செலுத்தும் வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருந்தால் எரிவாயு மானியம் வெட்டு. ஜனவரி 1 முதல் அமல். நுகர்வோரின் துணைவருக்கு இந்தச் சம்பளம் இருந்தாலும் மானியம் இல்லை. எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் போது என்ன வருமானம் என்று நுகர்வோர் சொல்ல வேண்டும். இந்த வகையில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. 2011 - 2012ல் 20 லட்சம் பேர் இந்த வருமானப் பிரிவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மானியத்தில்தான் எரிவாயு இணைப்பு வைத்திருக்கிறார்களா, ஏற்கனவே விட்டுக்கொடுத்த 57 லட்சம் பேரில் இந்த 20 லட்சம் பேரில், பெரும்பாலானவர்கள் இருக்க வாய்ப்பில்லையா என்ற கேள்விகளை கூட எழுப்பாமல், எவ்வளவு பேர் இன்னும் இந்த வருவாய் பிரிவில் இருக்கிறார்கள் என்ற விவரங்களே தெரியாமல், அந்த விவரம் எப்படி பெறப்படும் என்பது பற்றிய தெளிவான திட்டம் கூட இல்லாமல் ரூ.500 கோடி மிச்சம் என்று சொல்வது கோயபல்ஸ் உத்தியே.
பெரும்பாலான வறிய மக்கள் நலத்திட்டங்களில் இருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிற மோடி அரசு, நாட்டின் இயற்கை வளங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கிறது.
கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப்படுகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட இயற்கை எரிவாயு பிளாக்குகளில் இருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.30,000 கோடி மதிப்புள்ள இயற்கை எரிவாயு திருடியுள்ளதாக மத்திய பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் புகார் எழுப்பி, அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இரண்டு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டு அமர்த்திய டிகோல்யர் அன்ட் மெக்நாட்டன் என்ற அய்க்கிய அமெரிக்க நிறுவனம், 2015 அக்டோபர் 9 அன்று, சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இயற்கை எரிவாயுவை ஓஎன்ஜிசியின் கட்டுப்பாட்டில் உள்ள பிளாக்குகளில் இருந்து எடுத்துள்ளதாகச் சொல்கிறது. டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கையும் இடைக்கால அறிக்கையில் சொல்லப்பட்டவற்றை உறுதி செய்துள்ளதாகச் செய்திகள் உள்ளன.
57 லட்சம் பேருக்கு மானியத்தை நிறுத்தி சேமிக்கப்படும் ரூ.940 கோடி, 20 லட்சம் பேருக்கு வெட்டினால் சேமிக்கப்படக் கூடிய ரூ.500 கோடி பற்றி பெரிதாக பேசும் மத்திய அமைச்சர்கள் முகேஷ் அம்பானி என்கிற ஒரே ஒரு மனிதர் எடுத்துச் சென்றுள்ளதாகச் சொல்லப்படும் ரூ.30,000 கோடி அல்லது ரூ.11,000 கோடி பற்றி இது வரை எதுவும் பேசவில்லை.
2015 மார்ச் 31 வரை 11.122 பில்லியன் குயுபிக் மீட்டர் எரிவாயு ஓஎன்ஜிசியில் இருந்து ரிலையன்சுக்குச் சென்றுவிட்டது என்றும் இந்த நிலைமைகள் தொடர்ந்தால் மே 1, 2019க்குள் 12.71 பில்லியன் குயுபிக் மீட்டர் எரிவாயு ஓஎன் ஜிசியில் இருந்து ரிலையன்சுக்குச் சென்றுவிடும் என்றும் அதன் பிறகு ஓஎன்ஜிசி இந்தப் பணி களை தொடர்வதே சிரமமாகி விடும் என்றும் அறிக்கை சொல்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஓஎன்ஜிசிக்கு ஒதுக்கப்பட்ட பிளாக்குகளுக்கு மிக அருகில் இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டதே தவறு என்றும் ஓஎன்ஜிசி சொல்கிறது. அனுமதி தந்தது அய்முகூ அரசாங்கம். இந்த நிலைமைகளை தொடரவிட்டுள்ளது மோடி அரசாங்கம். இது வரையிலும் இனிமேலும் அரசுக்கு நட்டம், தனி ஒருவருக்கு பல பத்தாயிரம் கோடி லாபம் என மக்கள் பணம் கொள்ளை போவது, மானியம் தருவது வீண் எனக் கருதும் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களுக்கு, முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு விரயமாகப்படவில்லை.
எரிவாயு திருட்டு பற்றிய குற்றச்சாட்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 70% பங்குகள் உள்ளன. அதாவது நாட்டு மக்களுக்கு 70% பங்குகள் உள்ளன. இந்தச் செல்வத்தை முகேஷ் அம்பானியின் நிறுவனம் கொள்ளையடித்துச் செல்ல முறைகேடாக அனுமதி வழங்கியது மட்டுமின்றி பிரச்சனை அம்பலத்துக்கு வந்த பிறகும் நாட்டு மக்களுக்குச் சொந்தமான செல்வத்தைப் பாதுகாப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. இந்தப் பிரச்சனையில் ஓஎன்ஜிசி நிறுவனம் நீதிமன்றம் சென்றபோது, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அப்படிச் செய்ததை விசாரிக்கும்படி முன்னாள் அமைசர் வீரப்ப மொய்லி ஒரு குறிப்பு அனுப்பினார். குறிப்பு அனுப்பப்பட்ட தேதி 22 மே 2014. அதாவது, 16 மே 2014 அன்று மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியிழந்ததற்கும், மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற 26 மே 2014க்கும் இடைப்பட்ட நாள்! நடந்த முறைகேட்டை விசாரிப்பதற்கு பதிலாக, அதற்கெதிராக நீதிமன்றம் சென்றதை விசாரிக்கச் சொன்னதே தவறு. அதையும் அதிகாரம் இல்லாத காலத்தில் ஓர் அமைச்சர் செய்கிறார். ஆட்சியை இழந்த பிறகு இப்படி ஒரு குறிப்பு எப்படி அனுப்பலாம் என இன்று வரை மோடி அரசாங்கம் பிரச்சனை எழுப்பவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை கொண்டு போகும் செல்வத்தை மீட்க, மேலும் கொள்ளை போய்க்கொண்டிருப்பதைத் தடுக்க வழக்குகள் போட்டு, பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற மோடி அரசு ஏன் முயற்சி செய்யக் கூடாது?
உற்பத்திச் செலவை கூடுதலாகக் காட்டி கணக்கிடவே முடியாத அளவுக்கு அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் இழப்பு ஏற்படுத்தியது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை விட அது கூடுதல் என்று மத்திய தணிக்கையாளர் சொல்லி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் பறந்து பறந்து வேலை பார்க்கிற மோடி அரசு அது பற்றி மூச்சு காட்டாமல் இருக்கிறது.
அம்பானிகளும் அதானிகளும் கோடிகோடியாய் கொள்ளையடிப்பதை மறைத்து மக்களை திசை திருப்பவும் இந்த மான்ய வெட்டு நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் தீவிரப்படுத்து கிறது என்று சொல்ல முடியும். சமையல் எரிவாயு மான்யத்தை முறைப்படுத்திவிட்டதாகச் சொல்லி, உணவு, இன்ன பிற மான்யத்தையும் முறைப்படுத்தப் போவதாகச் சொல்லி, நாட்டின் பொதுவிநியோக முறைக்கு முடிவுகட்டும் அடுத்தடுத்த தாக்குதல்களுக்கும் மோடி அரசு தயாராகிவிட்டது.
மண்ணெண்ணெயின் சந்தை விலை ரூ.43. மானியம் ரூ.31. ஏப்ரல் 1 முதல் இந்த மானியம் வங்கிக் கணக்கில் போடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்யை நம்பி இருக்கும் வறிய மக்கள் மூன்று மடங்கு பணம் கையில் வைத்திருக்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. பெரும்எண்ணிக்கையிலான வறிய மக்கள் பொது விநியோகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால்தான் இந்தத் தொகை மிச்சமாகும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களில் 26 மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உணவுப் பொருட்களுக்கான மானியத்தையும் நேரடியாக வங்கியில் செலுத்துவது பற்றி அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட சம்பளம் வாங்குகிறார்கள். அவர்களுக்கு ஏன் வீடு, அலுவலகம், வாகனம், வேறுவேறு சலுகைகள் அனுபவிக்கிறார்கள். நடப்பு மக்களவையில் 442 பேர் கோடீஸ்வரர்கள். அவர்கள் தங்கள் சலுகைகளை விட்டுத் தருவார்களா? ஓய்வூதியம் வேண்டாம் என்று சொல்வார்களா? தங்கள் ஊதியத்தை இன்னும் உயர்த்திக் கொள்வது பற்றித்தான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வருகிற அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், எங்கள் வாக்குகளை வாக்குப்பதிவு எந்திரத்தில் அல்லாமல் வங்கிக் கணக்கில் போட்டுவிடுகிறோம் என்று மக்கள் சொன்னால் மோடியும் அவரது கூட்டாளிகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட மாட்டார்களா?
கட்டைப் பைகளின் தையல்களில்
குத்துப்படும் பெண் தொழிலாளர்கள்
ஏ.கோவிந்தராஜ்
தமிழ்நாட்டில் உள்ள ஆர்எம்கேவீ, சரவணா டெக்ஸ்டைல்ஸ், போத்தீஸ் போன்ற பெரிய ஜவுளி கடைகளில், சில வருடங்களுக்கு முன்பு வரை ரூ.1,000க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு கட்டைப் பை ஒன்று அன்பளிப்பாகத் தரப்படும். இப்போது ரூ.2,000க்கும் மேல் வாங்கினால் தரப்படுகிறது. இதை வாங்க ஜவுளி வாங்கிய ரசீதை பத்திரமாக வைத்திருந்து காட்ட வேண்டும். இந்த கட்டைப் பை மிகவும் வசதியானது. காய்கறி வாங்குவது முதல் பல்வேறு உபயோகங்களுக்கு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பைகளை வைத்திருப்பவர்கள் ரூ.2,000க்கும் மேல் ஜவுளி வாங்கிய பெருமையையும் இந்தப் பைகள் உலகுக்குச் சொல்லிவிடுகின்றன.
வாடிக்கையாளர்களை பெருமைபடுத்தும் இந்தப் பைகளை உற்பத்தி செய்யும் பெண் தொழிலாளர்களின் வேலை நிலைமைகளிலும் வாழ்க்கை நிலைமைகளிலும் பெருமைப்பட்டுக் கொள்ள பெரிதாக ஏதும் இல்லை. உண்மையில் அவர்கள் வாழ்க்கை கட்டைப் பைகளின் தையல்களில் குத்துப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவில் கட்டைப் பைகள் தைக்கும் தொழிலில் சுமார் 5,000 பெண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். கட்டைப் பையில் அதிகமான பொருட்களை எடுத்துக்கொண்டு செல்ல முடியும் என்பதாலும் ஜவுளி கடைகளில் விளம்பரத்துக்காகவும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவும் இந்தப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பகுதி களில் கிடைக்கும் கட்டைப் பைகளை விட பவானியில் தைக்கப்படும் பைகள் தரமானவை.
இந்தத் தொழிலில் பைகள் தைக்கும் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமே தொழிலாளர்கள் வேலை பெறுகிறார்கள். ஒரு பைக்கு சைடு பட்டி தைக்க 175 பைசா, சுத்து பட்டி தைக்க ரூ.2, முதலாளிகள் முகவர்களிடம் கொடுக்கிறார்கள்.
முகவர்கள் ஒரு பைக்கு சைடு பட்டிக்கு 140 பைசாவும், சுத்து பட்டிக்கு 175 பைசாவும் தையல் கூலியாக கொடுக்கிறார்கள்.
தொழிலாளர்கள் முதலாளிகளிடம் நேரடியாக வேலை பெற்றால் முகவர்கள் பெறும் கூலியை இவர்கள் பெறலாம். ஆனால் இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. முதலாளிகள் தங்கள் கடைகளை வைத்துள்ள இடங்களில் இருந்து 3 கி.மீ, 5 கி.மீ, 7 கி.மீ, 10 கி.மீ தூரம் வரை கூட இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். முதலாளிகள் தங்கள் கடைகளுக்கு வந்து வேலை எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். முதலாளிகளின் கடை இருக்கும் தெருக்களிலேயே வசிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். பல மைல் தொலைவில் உள்ளவர்கள் கடைகளுக்குச் சென்று வேலை எடுத்து வர வேண்டுமென்றால், பேருந்து கட்டணம், சரக்குக் கட்டணம் செலவு ஆகியவற்றுடன் பெருமளவு நேரமும் போய்விடும். எனவே அவர்கள் வேலைகளை தங்கள் வீடுகளிலேயே கொண்டு வந்து தரும் முகவர்களையே நம்பியிருக்கிறார்கள்.
இந்தத் தொழிலாளர்கள் தையல் எந்திரம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்கள் பெறும் கூலியில் நரம்பு அவர்களே வாங்கிக் கொள்ள வேண்டும். மின்கட்டணம் அவர்களே செலுத்திக் கொள்ள வேண்டும். தையல் எந்திரம் பழுதடைந்தால் அவர்களே சரிசெய்து கொள்ள வேண்டும். 140, 175 பைசா கூலியில் இந்தச் செலவுகள் போக மிஞ்சியதுதான் அவர்கள் வாழ்க்கைக்கு.
ஒரு மணி நேரத்தில் 20 முதல் 25 பைகள் தைக்க முடியும். 8 மணி நேரத்தில் 160 முதல் 200 பைகள் வரை தைக்கிறார்கள். 160 பை தைப்பவர்களுக்கு ரூ.250, 200 பை தைப்பவர்கள் ரூ.375 கிடைக்கும். 12 மணி நேரம் தைத்தால் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும். பண்டிகை காலங்களில் இரவு நேரங்களிலும் தைக்கிறார்கள். இதனால் இன்னும் சில பத்து ரூபாய்கள் கூலி கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு மேல் எந்த தொழிலாளர் உரிமையும் அவர்களுக்குக் கிடையாது.
முகவர்கள் விரும்பினால் ஆண்டொன்றில் ஒரு புடவை அல்லது ரூ.500 அல்லது ஒரு சிறிய குண்டா தருவார்கள்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏஅய்டியுசி இந்தத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தில் முகவர்களை முதலாளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் முகவர்கள் ஏஅய்சிசிடியுவை நாடி, தொழிலாளர்களைத் திரட்ட அவர்கள் உதவுவதாகவும் சங்கம் கூலி உயர்வுக்கான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
பைகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கும் கூலியை விட 75 பைசா கூடுதலாக தர வேண்டும் எனக் கோரி 14.09.2015 அன்று ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200 பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பவானியில் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிகள், முகவர்கள், சங்கப் பிரதிநிதிகள் கூட்டம் கூட்டி கூலி உயர்வு பற்றி பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. வட்டாட்சியர் 29.09.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட 10 முதலாளிகளும், தீபாவளி ஆர்டர் எடுத்துவிட்டதால் இனி கூலி உயர்வு பற்றி பேச முடியாது என்றனர்; தை மாதம் வரும் ஆர்டரின்போதுதான் கூலி உயர்வு பற்றி பேச முடியும் என்றும், அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை நடத்தி கூலி உயர்வு பற்றி முடிவு செய்யலாம் என்றும், முத்தரப்பு பேச்சுவார்த்தைதான் நடத்த முடியும் என்றும் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் கூறியதால், ஜனவரி 2016 முதல் வாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், வர்னாபுரம், பழனிபுரம், திருவள்ளுவர் வீதி, ஊராட்சிகோட்டை, குருப்பநாயக்கன்பாளை யம் ஆகிய பகுதிகளில், ஜனவரி 2 முதல் 5 வரை மாலை நேரங்களில் தோழர்கள் தையல் தொழிலாளர்களை சந்தித்தனர். பேச்சுவார்த்தையில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
கரூர் தையல் தொழிலாளர்கள் நிலைமைகள் தொடர்பாக ஏஅய்சிசிடியு நடத்திய ஆய்வைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சிறு பிரசுரம் பவானி கட்டைப் பை தையல் தொழிலாளர் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. ஒருமைப்பாடு இதழும் விநியோகிக்கப்பட்டது.
06.01.2016 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 100 பெண்கள் கலந்து கொண்டனர். அன்று முதலாளிகள் முழுமையாக கலந்துகொள்ளாததால் 07.01.2016 அன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகளும் கலந்துகொண்டனர்.
சந்தையில் பைகள் விலை ரூ.20ல் இருந்து ரூ.17 எனக் குறைந்துவிட்டதால், கூலி உயர்வு தர முடியாது என்றனர். 29.09.2015 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் முதலாளிகள் கூலி உயர்வுக்கு ஒப்புக்கொண்டதையும், எவ்வளவு உயர்வு என்பதை ஜனவரியில் முடிவு செய்து கொள்ளலாம் என்று வட்டாட்சியர் முன்பு எழுதி கொடுத்த ஆவணமும் தொழிலாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.
இதன் பிறகு பை ஒன்றுக்கு 10 பைசா உயர்வு தருவதாக முதலாளிகள் கூறினார்கள். நான்கு ஆண்டுகள் முன்னர் போடப்பட்ட ஒப்பந்தத்திலேயே 25 பைசா உயர்வு கொடுத்துள்ள நிலையில், இப்போது 10 பைசா உயர்வை ஏற்க முடியாது என்று சங்கத்தின் தரப்பில் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து 25 பைசா உயர்வு தருவதாகவும் ஒப்பந்தத்தில் உள்ளபடி பையை தைத்துத் தர வேண்டும் என்றும் சொன்னார்கள். அந்த ஒப்பந்தத்தில் 1 இன்ச்க்கு 12 தையல் குத்தும், சைடு பட்டியும் பையில் பட்டியும் அடிக்க வேண்டும் என்று உள்ளது. தற்போது ஒரு இன்ச்க்கு 6 தையல் குத்தும், சைடு பட்டியும்தான் பெண்கள் தைக்கிறார்கள்.
பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த 50 பெண் தொழிலாளர்களிடம் 1 இன்ச்க்கு 12 தையல் குத்து பற்றி கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் முதலாளிகள் கேட்கும்படி ஒப்பந்தம் போட்டால் தொழிலாளர்களுக்கு இழப்பு என்றனர். தற்போது தைப்பதுபோல் ஒரு இன்ச்க்கு 6 குத்தும் சைடு பட்டியும்தான் தைக்க முடியும் என்றனர். அதாவது, முதலாளிகள், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தில் கொடுத்த அதே கூலி உயர்வுக்கு இரண்டு மடங்கு உற்பத்தியில் உயர்வு கேட்டார்கள். இது உற்பத்தி உயர்வு மட்டுமின்றி பைகள் தைக்க தொழிலாளர்கள் வாங்க வேண்டிய நரம்பின் அளவும் அதிகரிக்கும். ஆக, கூலி உயர்வு என சொல்லும்படி எதுவும் இருக்காது.
கூலி உயர்வுடன் வரும் உற்பத்தி உயர்வுக்கு தொழிலாளர்கள் ஒப்புக்கொள்ளாததால், 25 பைசா கூலி உயர்வு தர முன்வந்த முதலாளிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளபடிதான் புதிதாகவும் ஒப்பந்தம் போடுவோம் என்று உறுதியாகச் சொல்கின்றனர்.
இந்த நிலைமைகளில் 05.02.2016க்கு பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், தமிழ்நாட்டிலும் நடக்கும் ஊழல்களின் அளவுகள் சில ஆயிரம் கோடிகள், சில பத்தாயிரம் கோடிகள், ஒரு லட்சம் கோடிக்கும் மேல் என்ற பிரம்மாண்டமான அளவுகளை எட்டிவிட்டன. ஆனால் கட்டைப் பைகள் தைக்கும் பெண் தொழிலாளர்களின் கூலி உயர்வை, நாட்டில் புழக்கத்தில் இருந்தே ஒழிந்துவிட்ட 10 பைசா, 25 பைசா என்று அரசு நிர்வாகம் பேசிக் கொண்டிருக்கிறது. அதையும் முதலாளிகள் தரத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடு வரப்போகிறது என்று பெருமையாகச் சொல்கிற ஜெயலலிதாவும் இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.
ஏஅய்சிசிடியு சந்தித்த 300 பெண் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து பெற்ற விவரங்கள்படி, இவர்களது வீடுகள் 10க்கு 15 அடி என்ற அளவில் உள்ளன. இதற்குள்ளேயேதான் அவர்களது தையல் எந்திரங்களும் உள்ளன.
இந்தப் பெண் தொழிலாளர்களில் 8ஆவது வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படித்தவர்கள் உள்ளனர். 20 முதல் 45 வயது வரையிலான பெண்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களது கணவன்மார்கள் சாயப் பட்டறை, கட்டுமானம், ஜவுளிக் கடைகள் போன்ற அரங்கங்களில் வேலை செய்கின்றனர்.
தொழிலாளர்களும் முகவர்களும் பெரும்பாலும் வன்னியர் பிரிவைச் சேர்ந்தவர்கள். பல்வேறு விசயங்களில் புள்ளிவிவரங்கள் தரும் மருத்துவர் ராமதாசு இந்தத் தொழிலாளர்கள் வாழ்நிலைமைகள் பற்றி புள்ளிவிவரங்கள் ஏதும் வைத்துள்ளாரா?
கரூரின் பல பத்தாயிரக்கணக்கான தையல் தொழிலாளர்கள்போல், பவானியிலும் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என்ற அந்தஸ்தும் அதிகாரபூர்வமாக எந்தவித அடையாளமும் இல்லாமல், சிறிய அளவிலான மூலதனம் என்றாலும் அதைப் பெருக்கிக் கொழுக்கச் செய்யும் போக்கில் குத்துப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அஇஅதிமுகவின் நாராயணன். தமது அரசின் சாதனைகளை விளக்கிச் சொல்ல 36 நாட்களாவது தேவைப்படும் என ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொல்கிறார். இந்த நான்கரை ஆண்டு காலத்தில் 110ல் கூட இந்தத் தொழிலாளர்கள் பற்றி அவர் பேசவில்லை. நாட்கணக்கில் வேண்டாம். பத்து நிமிடங்கள் ஒதுக்கி, இந்தத் தொழிலாளர்களுக்காக இந்த அரசு புரிந்த சாதனைகளை ஜெயலலிதா சொல்ல முடியுமா?
(ஒன்றியம் முழுவதும் இந்தத் தொழிலில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான ஆய்வு மேற்கொள்ள நாமக்கல் - ஈரோடு மாவட்ட ஏஅய்சிசிடியு தோழர்கள் திட்டமிட்டுள்ளனர்).
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட
எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்!
நாடு தழுவிய ஒருமைப்பாட்டு இயக்கம்
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி இகக மாலெ - ஏஅய்சிசிடியு நடத்தும் நாடு தழுவிய ஒருமைப்பாட்டு இயக்கத்தில் நாடு முழுவதும் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குர்முகி (பஞ்சாபி), இந்தி, கன்னடம், ஒடியா மொழிகளில் ஏஅய்சிசிடியு துண்டு பிரசுரங்கள் வெளியிட்டுள்ளது. தெலுங்கு, வங்காளம் மற்றும் அசாமிய மொழிகளில் பிரசுரங்கள் வெளியிடப்படும். ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கன்னடத்தில் வெளியீடு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
தெஹல்கா, ஸ்க்ரோல் டாட் இன் மற்றும் தி வயர் என்ற இ-பத்திரிகைகள் இணக்கமான கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. இகக மாலெயின் எம்எல் அப்டேட், லிபரேசன், லோக்யுத், தேஷ்பிரதி, ஏஅய்சிசிடியுவின் ஷ்ரமிக் சாலிடாரிடி பத்திரிகைகள் செய்தி கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. பிப்ரவரி முதல் வாரத்தில் ஆவணப்படம் எடுப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. சண்டிகர் தோழர்கள் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். ரயில்வே ஊழியர் சங்க இதழில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் பற்றியும் எட்டு பிரிக்கால் தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு விதமான தொழிலாளர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டு நிதி திரட்டப்படுகிறது.
சர்வதேச மற்றும் மய்ய தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாட்டு செய்திகள்
தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு (டபிள்யுஎஃப்டியு), ஜப்பான் ரயில்வே ஊழியர் சங்கக் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் பிரிக்கால் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து கடிதங் கள் அனுப்பியுள்ளன.
சிஅய்டியு மய்யத் தலைமையும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டுச் செய்தி அனுப்பியுள்ளது.
அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களின் தீர்மானம்
ஜனவரி 27 அன்று டில்லியில் நடந்த அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு டிசம்பர் 3 அன்று இரட்டை ஆயுள் என்ற கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவும், தங்கள் தண்டனைக்கெதிராக நீதி கோரும் எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு மய்யத் தொழிற்சங்கங்கள் ஒருமைப்பாடு தெரிவிப்பதாகவும், பிணை கோரும், வழக்கில் இருந்து விடுதலை கோரும் அந்தத் தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு தொழிலாளர்களும் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில் ஏஅய்சிசிடியு, ஏஅய்டியுசி, சிஅய்டியு, எச்எம்எஸ், யுடியுசி, சேவா, டியுசிசி, அய்என்டியுசி மற்றும் பிஎம்எஸ் சங்கங்கள் கையொப்பமிட்டன.
புவனேஸ்வரில் கருத்தரங்கம்
ஜனவரி 25 அன்று புவனேஸ்வரில் ஏஅய்சிசிடியு நடத்திய கருத்தரங்கில் ஏஅய்டியுசி, சிஅய்டியு, அய்என்டியுசி, ஏஅய்யுடியுசி ஆகிய சங்கங்களின் தலைவர்களுடன் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி, தேசியத் துணைத் தலைவர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
உத்தரகண்ட், சிட்குல்லில் ஆர்ப்பாட்டம்
ஏஅய்சிசிடியு சங்கம் அமைத்ததற்காக, பிரிக்கால் முன்னணி தோழர்கள் ஆறு பேர் 2007ல் உத்தரகண்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுதான் போராட்டம் நடக்க மிக முக்கியமான காரணமாக இருந்தது. பிரிக்கால் ஆலை இருக்கிற உத்தரகண்ட் மாநில சிட்குல் பகுதியில் ஏஅய்சிசிடியு தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் கலந்துகொண்டு எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
பீகாரில் ஒருமைப்பாட்டு இயக்கம்
பாட்னாவில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், எட்டு பிரிக்கால் தொழிலாளர் களுக்கு விடுதலை வேண்டும் என்ற இந்தி சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. ஆஷா ஊழியர்கள் சங்கம், ஆஷா ஊழியர்கள் மத்தியிலும் செவிலியர்கள் மத்தியிலும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் மேற்கொண்டது.
பீகாரில் கட்டுமானத் தொழிலாளர் மத்தியில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளியிடமும் பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு நிதியாக ரூ.5 திரட்டப்படும்.
ஜார்க்கண்டில் பேரணி
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாதில் ஜனவரி 18 அன்று நடந்த பேரணியில், ஒரு பக்கம் தொழிலாளர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதல் மற்றும் சல்மான் கான் போன்றவர்கள் விடுதலையாவது ஆகியவற்றையும் மறுபக்கம் எட்டு பிரிக்கால் தோழர்களையும் குறிக்கும் விதம் தோழர்கள் வேடமணிந்து சென்றனர்.
புதுச்சேரியில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் ஜனவரி 12 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பொது வேலை நிறுத்தம் நடத்துவது பற்றியும் பேசியுள்ளனர்.
கர்நாடகாவில் ஆர்ப்பாட்டங்கள்
கர்நாடகாவில் ஜனவரி 8 அன்று பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏஅய்சிசிடியு வேலைகள் நடக்கிற பிற மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சண்டிகரில் ஒருமைப்பாட்டு கூட்டங்கள்
சண்டிகரில் ஒப்பந்த மற்றும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் சிறுசிறு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம்
ஏழாவது ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு எதிராக ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பல்வேறு வாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில் பிரிக்கால் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
குஜராத், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஏஅய்சிசிடியு ஒருமைப்பாட்டு இயக்கங்கள் நடத்தி வருகிறது.
பீகாரிலும் ஜார்க்கண்டிலும் தலா அய்ந்து மய்யங்களில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ளும் கருத்தரங்கங்கள் நடத்தும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
திருநாள்கொண்டசேரி பிரச்சனையில் காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் தலித் முதியவரின் உடலை அடக்கம் செய்ய பொதுப் பாதை மறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் தலைமையிலான குழு ஜனவரி 21 அன்று அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டது. தலித் முதியவர் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவைப் பொருட்படுத்தாமல் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளான தஞ்சை சரக டிஅய்ஜி, நாகை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதி ஆதிக்கத்தோடு செயல்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இகக மாலெ வலியுறுத்துகிறது. திருநாள் கொண்டசேரி தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியைக் கண்டிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் மரணத்துக்குக் காரணமான
கல்வித்துறை அதிகாரிகளை, அமைச்சரை பதவி நீக்கம் செய்!
கல்லூரியை அரசே ஏற்று நடத்து!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஏற்கனவே இந்தக் கல்லூரி மீது புகார்கள் உள்ள நிலையில் அரசும், அதிகாரிகளும் காட்டிய அலட்சியமே 3 மாணவிகளின் மரணத்துக்குக் காரணம். எனவே மாவட்ட, மாநில கல்வித்துறை அதிகாரிகள், மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும், கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் இறந்த மாணவிகள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் தமிழகத்தின் தனியார் கல்லூரிகள் பற்றி நடுநிலையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வெள்ளையறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாணவர் ரோஹித் விவகாரத்தில் சுப்பிரமணியசுவாமி பார்ப்பனீய ஆதிக்கத்துடன், கம்யூனிஸ்ட்டுகளும் நாய்களும்தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டரில் கருத்து வெளியிட்டதற்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 24.01.2016 அன்று சென்னையில் சுப்பிரமணியசுவாமிக்கு எதிராக புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் துவக்கிய போராட்டம் தமிழகமெங்கும் பரவத் தொடங்கியிருக்கிறது.
புரட்சிகர இளைஞர் கழகமும், அகில இந்திய மாணவர் கழகமும் ஜனவரி 26 அன்று கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தின. புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் தனவேல், விழுப்புரம் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக தோழர் கஜேந்திரன், அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் வெற்றிவேல் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தது.
கடலூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் கழகம் சுவரொட்டி இயக்கம் நடத்தியது.
அழிஞ்சிவாக்கம் உள்ளூர் கமிட்டி மாநாடு
ஜனவரி 24 அன்று திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் இகக (மாலெ) உள்ளூர் கமிட்டி மாநாடு நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் கலந்து கொண்டார். 15 பேர் கொண்ட உள்ளூர் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. தோழர் வெங்கடேசன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியில் அகில இந்திய மாணவர் கழக பயிற்சி முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இகக(மாலெ)யும் வெகுசன அமைப்புகளும் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தொடர்புக்கு வந்த மாணவர்களின் முன்முயற்சியில் நாகர்கோவிலில் ஜனவரி 23 அன்று மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரும்பாலும் கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர் கழகத்தை அறிமுகப்படுத்தி அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் உரையாற்றினார். இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து இன்றைய அரசியல் சூழல் பற்றி உரையாற்றினார். கூட்டத்தில் வரும் கல்வியாண்டில் மாணவர்களின் பல்வேறு பிரச்சனைகள் மீது போராட்ட இயக்கங்கள் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கென ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது. கமிட்டியின் தலைவராக தோழர் ஜோசுவாவும் செயலாளராக தோழர் ஆனந்த் கார்ல் மார்க்சும் தேர்வு செய்யப்பட்டனர்.
சேலம் கட்சி ஊழியர் பயிற்சி முகாம்
ஜனவரி 19 அன்று சேலத்தில் கட்சி ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 22 ஊழியர்கள் பங்கேற்றனர். தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கம்யூனிசம்: அடிப்படையான சில தத்துவ, கருத்தியல், அமைப்புப் பிரச்சனைகள் என்ற தலைப்பில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், இன்றைய அரசியல் சூழலும் நமது கடமைகளும் என்ற தலைப்பில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் உரை நிகழ்த்தினர்.
ஆந்திர சிறைகளில் வாடும் பழங்குடி மக்களை விடுதலை செய் கருப்புக் கொடியேற்றி பொங்கல் புறக்கணிப்புப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமலை, சேலம் மாவட்டம் கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதிகளிலுள்ள பழங்குடியினர் ஆந்திர சிறையில் வாடும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி 15.01.2016 முதல் 3 நாட்கள் பொங்கல் பண்டிகையை புறக்கணித்தனர். அகில இந்திய மக்கள் மேடை இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.