கல்வி
அரசும் புரட்சியும்
லெனின்
கம்யூனிச சமுதாயத்தின் முதல் கட்டம்
சோசலிசத்தில் தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் ‘குறைக்கப்படாத’ அல்லது ‘முழுமையான பயன்’ கிடைக்கும் என்று லஸ்ஸôல் கூறிய கருத்து தவறென்பதை நிரூபிக்க கோத்தா வேலைத் திட்டத்தின் விமர்சனத்தில் மார்க்ஸ் விவரமான பரிசீலனையில் இறங்குகிறார். சமுதாயத்தின் சமூக உழைப்பு அனைத்திடமிருந்து காப்பு நிதி ஒன்றைக் கழிக்க வேண்டும் என்பதை, பொருளுற்பத்தியை விரிவாக்குவதற்கும், எந்திரங்களின் ‘தேய்மானத்திற்கு’ மாற்றீடு செய்வதற்கும் இன்ன பிறவற்றுக்குமான நிதிகளைக் கழிக்க வேண்டுமென்று மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். பிறகு, நுகர்வுச் சாதனங்களில் இருந்து நிர்வாக செலவுகளுக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், முதிய வயதினர் இல்லங்கள் முதலான பலவற்றுக்கும் வேண்டிய நிதியைக் கழிக்க வேண்டும்.
லஸ்ஸôலின் தெளிவற்ற, குழப்படியான பொதுத் தொடருக்கு (‘தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் முழுமையான பயன்’) பதிலாய் மார்க்ஸ் சோசலிச சமுதாயம், அதன் விவகாரங்களை உண்மையில் எப்படி நிர்வகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது குறித்து நிதானித்து மதிப்பீடு செய்கிறார். முதலாளித்துவம் இல்லாது ஒழிந்துவிடும் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளை மார்க்ஸ் ஸ்தூலமான முறையில் பகுத்தாராய முற்படுகிறார். அவர் கூறுவதாவது:
‘இங்கு நாம் ஆராய வேண்டியிருப்பது (தொழிலாளர் கட்சியின் வேலைத் திட்டத்தைப் பகுத்தாராய்கையில்) தனது சொந்த அடித்தளங்களின் மீது வளர்ந்தெழுந்துள்ள ஒரு கம்யூனிச சமுதாயமல்ல; மாறாக, முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து வெளித்தோன்றுவதும், ஆகவே தான் உதித்த அந்தப் பழைய சமுதாயத்தினிடமிருந்து பெறப்பட்ட பிறவிக் குறிகள் ஒவ்வொரு வழியிலும் - பொருளாதார வழியிலும், தார்மீக வழியிலும், அறிவு வழியிலும் - இன்னமும் பதிந்திருப்பதுமான கம்யூனிச சமுதாயத்தையே இங்கு நாம் ஆராய்கிறோம்.’
இந்தக் கம்யூனிச சமுதாயத்தைத்தான், முதலாளித்துவத்தில் இருந்து பிறந்த இப்போதுதான் வெளியே வந்த அந்தப் பழைய சமுதாயத்தின் பிறவிக் குறிகள் எல்லா வழியிலும் பதிந்திருக்கும் இந்த சமுதாயத்தைத்தான் மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் ‘முதல்’ கட்டம் அல்லது கீழ்க்கட்டம் என்று குறிப்பிடுகிறார்.
உற்பத்தி சாதனங்கள் இப்போது தனியாட்களுடைய தனியுடைமையாய் இல்லை. உற்பத்தி சாதனங்கள் சமுதாயம் அனைத்தின் உடைமையாகிவிட்டன. சமூகத்துக்குத் தேவையான வேலையில் ஒரு பகுதியைச் செய்திடும் சமுதாய உறுப்பினர் ஒவ்வொருவரும் இவ்வளவு வேலையைச் செய்திருப்பதாய்க் கூறும் சான்றிதழ் ஒன்றை சமுதாயத்திடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். இந்தச் சான்றிதழைக் கொண்டு இதற்கு இணையான அளவுக்கு அவர் நுகர்வுப் பண்டங்களின் பொதுக் களஞ்சியத்தில் இருந்து பண்டங்கள் பெறுகிறார். பொது நிதிக்குச் செல்லும் உழைப்பின் அளவு கழித்தெடுக்கப்பட்டபின், ஒவ்வொரு தொழிலாளியும் சமுதாயத்திற்குத் தான் அளித்ததற்குச் சமமான அளவில் அதனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்.
‘சமத்துவம்’ அரசோச்சுவதாகவேத் தோன்றுகிறது.
ஆனால், இத்தகைய சமுதாய அமைப்பினை (வழக்கமாய் இது சோசலிசம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்ஸ் இதனைக் கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்று குறிப்பிடுகிறார்) கருத்தில் கொண்டு லஸ்ஸôல் இது ‘சமத்துவ விநியோகமாகும்’ என்றும், ‘உழைப்பின் உற்பத்திப் பொருளில் சமபங்கு பெற எல்லாருக்கும் சமஉரிமை அளிப்பதாகும்’ என்று கூறும்போது, லஸ்ஸôல் தவறிழைக்கிறார். இந்தத் தவற்றை மார்க்ஸ் அம்பலம் செய்கிறார்.
(மார்க்ஸ் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த இதழ் வரும்வரை காத்திருக்க முடியாதவர்கள் அரசும் புரட்சியும் நூலைப் பார்க்கவும்)
தலையங்கம்
வெகுமக்கள் கிளர்ச்சிகளைக் கட்டமைப்போம்!
மக்கள் நலன்களை உயர்த்திப் பிடிப்போம்!
ஜூலை 28, தோழர் சாருமஜூம்தாரின் 40வது நினைவு நாள். ‘மக்கள் நலனே கட்சியின் நலன்’ என்பது தோழர் சாரு மஜூம்தாரின் புகழ் பெற்ற புரட்சிகர கருத்து. இந்த நாளில் உள்ளூர் அளவில் வெகுமக்கள் கிளர்ச்சிகளைக் கட்டமைக்க கட்சியின் 9வது மாநில மாநாடு அழைப்பு விடுத்துள்ளது.
உழைக்கும், சாமான்ய மக்கள் பல முனை தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். கட்டுக்கடங்காத ஊழல், பெருமுதலாளித்துவக் கோரக் கொள்ளை, வறுமைத்தாண்டவம், வேலை இல்லா திண்டாட்டம், கடும் விலைவாசி உயர்வு, உரிமைப்பறிப்பு, அரசு ஒடுக்குமுறை, ஏகாதிபத்திய தலையீடு என நாட்டு மக்களின் வாழ்வும் ஜனநாயகமும் கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.
புதுக்கோட்டை வெற்றியைத் தொடர்ந்து கோட்டையை கொடநாட்டிற்கு மாற்றிக் கொண்டுவிட்ட முதலமைச்சர், தேர்தல் வெற்றி, ஆட்சிக்கும் ஆட்சியின் கொள்கைகளுக்கும் மக்கள் தந்த அங்கீகாரம் என்று முழங்குகிறார். பால் கட்டண, பஸ் கட்டண உயர்வு, மின்சாரம் இல்லாத நிலையிலும் கூட மின்சாரக் கட்டண உயர்வு, மக்கள் நலப்பணியாளர் வேலை நீக்கம், தலித்துகள், பழங்குடி பெண்கள், நலிந்த பிரிவினருக்கு அநீதி, கூடங்குளம் போராட்டத்துக்கு துரோகம் இவைதான் ஆட்சியின் கொள்கைகள். இவற்றுக்கு மக்கள் அங்கீகாரம் தந்து விட்டதாக அரசியல் பேசுகிறார். அதிமுக ஆட்சியின் ஏழைகள் ஆதரவு தோற்றம் அம்பலமாகிவிட்டது. மக்கள் விரோத சர்வாதிகாரப் போக்கு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
கொடநாட்டுக்கு புறப்படுவதற்கு முன் சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களை இனி ஊழலில் ஈடுபட்டால் மாநகராட்சியையே கலைத்துவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். ஊழல் செய்பவர்களை கடுமையாகத் தண்டிக்கும் லோக் அயுக்தா சட்டத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக மாநகராட்சியையே கலைத்துவிடுவேன் என்று கூறும் முதலமைச்சர் எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி? அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஊழல் செய்தால் அமைச்சரவை, சட்டமன்றம், நாடாளுமன்றத்தையே கலைத்துவிடுவாரோ? ஊழல் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான பிறகும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாத ஜெயலலிதா கவுன்சிலர்களைக் கண்டிப்பது வேடிக்கைதான் ஊழலுக்கெதிராக கண்டிப்பு காட்டும் ஜெயலலிதா, முதலமைச்சரையும் விசாரித்து தண்டிக்கும் லோக் அயுக்தா சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது?
2023ல் வறுமையை ஒழித்து விடுவோம் என முதலமைச்சரின் கனவுத் திட்டம் பேசுகிறது சென்ற ஆண்டு ஜøன் 12ல் மேட்டூர் அணையை திறந்துவிட்டுவிட்டதாக பாராட்டு மழையில் குளித்த முதலமைச்சர், இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி நின்று போனது பற்றி பேசவில்லை. நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் பொய்த்துப்போகும் அபாயத்தை தடுக்க முன் வரவில்லை. விவசாயிகளின் வருமானத்தை 3 - 4 மடங்கு உயர்த்தப் போவது எப்படி?
தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட கூலி உயர்வை மூன்று மாதம் கழித்து ஜøன் மாதத்தில் அறிவித்துள்ளார். 82 லட்சம் குடும்பங்கள் வேலை அட்டை வைத்துள்ள இடத்தில் 25 லட்சம் பேர்களுக்கு மட்டுமே கூலி உயர்வு கிடைக்கும் என்றால் மீதமுள்ள 57 லட்சம் பேர்களுக்கு வேலை கொடுக்கமாட்டார்கள் என்று பொருள். புதிய கூலி உயர்வுப்படி, 25 லட்சம் பேர்களது 3 மாத கூலி ரூ.292 கோடி அபகரிக்கப்படுகிறது. கிராமப்புற தொழிலாளர்களின் 3 மாதக் கூலியை அபகரித்த முதல்வர் 2023ல் தனிநபர் வருமானத்தை 6 மடங்கு உயர்த்தப் போகிறாராம். வேலை அட்டைகளை குறைக்கச் சொல்லி வாய்மொழி உத்தரவு. இதன் மூலம் பல லட்சக்கணக்கான (40%க்கு மேல்) கிராமப்புறத் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுகிறது.
பீடி, கட்டுமானம், விசைத்தறி, இடம் பெயரும் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளர்களின் வேலைப்பாதுகாப்பு, கூலிப் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஆடு, மாடு, மின்விசிறி, கிரைண்டர், மிக்சி என விலையில்லாப் பொருட்களை வழங்கி ‘மக்கள் நலனைப்’ பாதுகாப்பதாக கூறும் அதிமுக ஆட்சி, அப்பட்டமான வறியவர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. பால், பஸ் கட்டண, மின் கட்டண உயர்வு போதாது என்று கருதி அறிவிப்பு இல்லாமலே பொது விநியோகத்தில் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளன. விலைகளும் உயர்த்தப்பட்டுள் ளன. வறியவர்களின் அன்றாட வாழ்வின் மீது அடிக்கிறது அதிமுக ஆட்சி. ஏழை எளிய மக்கள் கொதித்துப்போயுள்ளனர்.
குடிதண்ணீர், தெரு விளக்கு, கிராமப்புறப் பெண்களுக்கு கழிப்பறை, சுடுகாடு, சாலை என அடிப்படை வசதிகளுக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 15 லட்சம் கோடி திரட்டப் போவதாகக் கூறும் ஜெயலலிதா, கிராமப்புற, நகர்ப்புற மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு கவலைப்படவில்லை. உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகளுக்காக அனைத்தையும் திட்டமிடும் ஜெயலலிதா, ‘இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும்’ என்று ஏழைகளுக்கு அறிவுரை கூறுகிறார்.
ஏழைகளுக்காக எல்லாம் செய்வோம் எனத் தோற்றம் காட்டி ஏற்றம் பெற்ற அதிமுக ஆட்சியின், ஏழைகள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஊராட்சிதோறும் நகர்ப்புற வார்டுகள் தோறும் உழைக்கும் மக்களை திரட்டியாக வேண்டும். ஜெயலலிதாவின் விலை இல்லா பொருட்கள் திட்டம், ஏழைகள் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும் திட்டம், ஒரு பக்கம் ஆடு, மாடு, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என்று பேசிக் கொண்டே மறுபக்கம் ஏழைகளின் வேலை, கூலி உள்ளிட்ட வாழ்வா தாரங்களைப் பறித்து வருகிறது அதிமுக ஆட்சி. இந்த ஆட்சியின் மோசடியை அம்பலப்படுத்தியாக வேண்டும். ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டியாக வேண்டும். ஜøலை 28, அன்று உள்ளூர் மட்ட அளவில் ஆட்சிக்கு எதிராக அடித்தட்டு மக்களை அணிதிரட்டுவது மக்களின் நலனே கட்சியின் நலன் என்பதை செயல்படுத்தும் நாளாகும்.
தங்கள் கட்சிக்காரர்கள் பழிவாங்கப்படு வதை எதிர்த்து சிறைநிரப்பும் போராட்டம் நடத்திய திமுக, மக்கள் பழிவாங்கப்படும் பிரச்சனைகள் பற்றி கண்டு கொள்ளத் தயாராக இல்லை. அவ்வப்போது கூச்சல்கள் எழுப்பும் ஏனைய கட்சிகளும் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை பேசத் துணியவில்லை.
ஜூலை 28ல் வேர்க்கால் மட்டத்தில் ஏழைகளைத் திரட்டுவது அதிமுக உள்ளிட்ட ஏழைவிரோதக் கட்சிகளின் வேர்களை வலுவிழக்கச் செய்வதாகும். கம்யூனிஸ்ட் கட்சி வேர்க்கால் மட்டத்தில் உழைக்கும் மக்களை அணிதிரட்டி, பலம் பெறும் நடவடிக்கை மக்கள் விரோதக் கட்சிகள், ஆதிக்க சக்திகளை பலமிழக்கச் செய்யும் நடவடிக்கையாகும். எந்த அளவு உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறோமோ அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் வேர்கள் வலுப்படும் விழுதுகள் விரிவடையும். அது ஆள்வோருக்கும் அவர்களது மக்கள் விரோதக் கொள்கைகளுக்கும் எதிரானது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதன் மூலமே மக்கள் நலனை உயர்த்திப் பிடிக்க முடியும். மக்கள் வாழ்வையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும். ஜூலை 28 தியாகிகள் நாளில் பல்லாயிரக்கணக்கில் வெகுமக்களை அணிதிரட்டுவோம். ஏழைகள் விரோத அதிமுக ஆட்சிக்கு எதிராக உழைக்கும் மக்கள் எதிர்ப்பை வலுப்படுத்துவோம்!
பிரசன்ஜித் போஸ், பிரபாத் பட்நாய்க் எதிர்
பிரகாஷ் காரத், பினரயி விஜயன்
காம்ரேட்
டென்னிஸ் ஆட்டத்தில், வரப்போகும் லண்டன் ஒலிம்பிக்கில் லியாண்டர் பயஸ் மகேஷ் பூபதி ஜோடியாக ஆட மறுத்துள்ளனர். விம்பிள்டன் பிரெஞ்ச் ஓப்பன் ஆஸ்திரேலியன் ஓப்பன் மற்றும் யுஎஸ் ஓப்பன் என்ற நான்கு போட்டிகளை கிராண்ட் ஸ்லாம் என அழைப்பார்கள். ஆடவர் இரட்டையர் அல்லது கலப்பு இரட்டையர் போட்டிகள் பலவற்றில் அதிகமாக வெற்றி பெற்ற லியாண்டர் மற்றும் மகேஷ் பூபதி, இம்முறை லண்டன் ஒலிம்பிக்கில், இந்தியாவிற்காக ஆடவர் இரட்டையர் போட்டியில் ஜோடி சேர மறுத்துவிட்டனர். (சானியா மிர்சா தாம் ஒரு பெண் என்பதால், ஆணாதிக்க அணுகுமுறையுடன் யாரோடு கலப்பு இரட்டையரில் ஜோடி சேர்ந்து அவர் ஆட விரும்புகிறார் எனக் கேட்கக் கூட இல்லை என்றும் தான் தூண்டில் புழுவாக பயன்படுத்தப்பட்டதாகவும் நியாயமான குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்).
டென்னிஸ் ஆட்டத்தில் தனியர் போட்டிகளும் இருவித இரட்டையர் போட்டிகளும் நடக்கும். அரசியல் ஆடுகளத்தில், சிங்கூர் நந்திகிராம் நிகழ்ந்த பிறகும், இடது முன்னணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் படுதோல்வி அடைந்த பிறகும், கருத்துலக குருவும் சிஷ்யருமான அல்லது பழைய, புதிய தலைமுறை சிந்தனையாளர்களான, நன்கறியப் பட்ட இடதுசாரி அறிவாளிகளான பிரபாத் பட்நாயக்கும் பிரசன்ஜித் போசும், மார்க்சிஸ்ட் கட்சிக்கெதிராக அடிக்கப்பட்ட எல்லா பந்துகளையும் திருப்பி அடிப்பதிலேயே மும்முரமாய் இருந்தனர்.
இந்த பிரகாஷ், பினரயி, பிரபாத், பிரசன்ஜித் என்ற நான்கு பி (ட)க்கள் விவகாரம், பிரணாப் என்ற அய்ந்தாவது பி (ட) நுழைந்த பிறகு சிக்க லாக மாறிவிட்டது. கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கேரள மாநிலச் செயலாளர் பினரயி விஜயன் ஆகியோருக்கு எதிராக, பிரசன்ஜித்தும் பிரபாத் பட்நாய்க்கும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளனர்.
கோழிக்கோடு மாநாட்டில் காங்கிரஸ் பாஜகவுக்கு எதிராக ஓர் இடதுசாரி ஜனநாயக மாற்றுக்கு அறைகூவல் விடுக்கப்பட்ட பிறகு, இடதுசாரி ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்ட பிறகு, கட்சியின் பல தோழர்களும் இடது திசையில் மீட்பும் சீர்செய்தலும் நடக் கும் என நம்பினர்.
இகக(மாலெ), மார்க்சிஸ்ட் கட்சியின் சந்தர்ப்பவாத சரணாகதி வழியை எப்போதுமே எதிர்த்து வந்துள்ளது. அதே நேரம், தோழர் வினோத் மிஸ்ரா பொதுச் செயலாளராக இருந்த காலத்திலேயே, ஓர் இடதுசாரி பெருங் கூட்டமைப்புக்கு அறைகூவல் விடுத்தது. பாட்டாளி வர்க்க அரசியல் சுதந்திரம் இடதுசாரி அறுதியிடல் ஆகியவற்றைக் கிஞ்சித்தும் சமரசம் செய்து கொள்ளாமல், நாடெங்கும், பல தளங்களில் பல அரங்குகளில் பல தடைகளுக்கு மத்தியில் முன்னேறி வருகிறது.
இப்போது மார்க்சிஸ்ட் கட்சி, உள்ளுக்குள்ளிருந்தே கண்டனக் கணைகளைச் சந்திக்கிறது. முதலில் கோழிக்கோடு விவகாரத்தைப் பார்ப்போம். இகக(மாலெ), லால் நிஷான் லெனினிஸ்ட் கட்சி மகாராஷ்டிரா, கேரளாவின் இடது சாரி ஒருங்கிணைப்புக் குழு, மேற்கு வங்கத்தின் சிபிஆர்எம் மற்றும் பஞ்சாப் சிபிஎம் அங்கம் வகிக்கும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பின் அங்கமான கேரளாவின் இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தோழர் சந்திரசேகரன் கோழிக்கோட்டில் கொடூரமாகச் சமீபத்தில் படுகொலை செய்யப் பட்டார். வெகுமக்கள் கருத்து, படுகொலையை மார்க்சிஸ்ட் கட்சி செய்தது என நம்பியது. பினரயி விஜயன், காங்கிரஸ் சதி. காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் படுகொலைகள் என்றெல்லாம் திசை திருப்பப் பார்த்தார். கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் மணி, அவர்களது அரசியல் எதிரிகளைப் பட்டியலிட்டு, வெட்டி குத்தி சுட்டுக் கொன்றுள்ளதாக, இரத்தத்தை உறைய வைக்கும்விதம், ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தார். நாட்டின் இடதுசாரி ஜனநாயக வட்டாரங்கள் பினரயி விஜயன் சொல்வதைக் காட்டிலும் மணியின் வாக்குமூலத்தையே நம்புகிறார்கள். பிரபாத் பட்நாயக்குக்கும், சிந்தா ரவி நினைவு கருத்த ரங்கத்தை ஏற்பாடு செய்த ராம்மோகனுக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்றம், விஷயத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
கருத்தரங்க உரை நிகழ்த்த பிரபாத் பட்நாயக்கை அழைக்க முடியாதது பற்றி ராம்மோகன் மின்னஞ்சல், பின்வருமாறு குறிப்பிட்டது:
“தற்போதைய படுகொலையை பிரபாத் நியாயப்படுத்தமாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது ஒஞ்சியத்திற்கு மிகவும் பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில், கொலைகாரக் கட்சியின் அறிவாளி, அக்கட்சி முன்னர் அதிகாரத்தில் இருந்தபோது அதன் அரசாங்க அதிகாரி என்ற அடையாளப்படுத்தப்படும், பிரபாத்தை அழைப்பது, கொலைகாரக் கட்சியை நியாயப்படுத்துவதாக அமையும். கோழிக்கோட்டில் இது 52ஆவது குத்தாக இருக்கும்.” (தோழர் சந்திரசேகர் 51 கத்திக்குத்துக்களுக்கு ஆளானார்).
பிரபாத் பட்நாய்க் தம் பதிலில், தாம் 37 வருடங்களாகக் கட்சியில் இருப்பதாகவும், கடந்த சில தினங்களில் கேரளாவில் நடக்கும் விஷயங்கள் தமக்கு வலியும் வேதனையும் அளிப்பதாகவும், தமக்கு அறம் சார்ந்த நெருக்கடி மட்டுமல்லாமல் இருத்தல் நெருக்கடியும் தோன்றி உள்ளதாகவும் சொல்கிறார்.
லெனின், ஏகாதிபத்தியம் நூல் எழுதியபோது ஜாரிசக் கொடுங்கோன்மையால் ஈசாப்பிய மொழியைப் பயன்படுத்தச் சபிக்கப்பட்டதாகச் சொன்னார். பிரபாத் பட்நாய்க், முதலாளித்துவ தாராளவாதம் அல்லது நிலப்பிரபுத்துவ ஸ்டாலினியம் என்ற நோய்கள் இந்தியாவில் கம்யூனிசத்தைப் பீடித்துள்ளதாகச் சொல்கிறார். நவதாராளவாத வளர்ச்சி நிகழ்ச்சிநிரலுக்கு அடிபணிவது, மக்கள் அதிகாரம் பெறும் வாய்ப்பை மறுதலிப்பது என்பவற்றிற்குப் பலியாவது, மக்கள் நலன்களுக்கு எதிரானது என்கிறார். ஸ்டாலின் பற்றி அவர் சொல்வதில் உள்ள தவறைத் தாண்டிப் பார்த்தால், அவர் வங்கத்தில் முதலாளித்துவ தாராளவாதத்திற்கும், கேரளத்தில் நிலப்பிரபுத்துவ முறைகளுக்கும் கட்சி ஆளாகிவிட்டது பற்றி அங்கலாய்ப்பதாகத் தெரிகிறது.
முந்தைய தலைமுறை அறிவாளியின் நிலை இது என்றால், அவரது சீடர் போன்ற இன்றைய தலைமுறை அறிவாளியான பிரசன்ஜித் போசின் நிலை என்ன? (பிரசன்ஜித் கட்சியின் ஆராய்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர்).
குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி ஒற்றுமை ஏற்படவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதில்லை என முடிவெடுத்தன. மார்க்சிஸ்ட் கட்சியும், ஃபார்வர்ட் பிளாக்கும், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க முடிவெடுத்தன. இடதுசாரி ஜனநாயக மாற்றுக்கு முன்பே, இடதுசாரி ஒற்றுமையில் விரிசல் விழுந்தது.
முதல் சுற்றில் தோழர் பிரகாஷ் காரத் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும், அதற்கு ஒரு விளக்கமும்தான், சொன்னார். பிரணாப் முகர்ஜி, மிகப்பரந்த அளவில் ஒப்புதல் பெற்று இருப்பதால் ஆதரிப்பதாகவும், இந்த ஆதரவு, அய்முகூ அரசாங்கத்தின் நவதாராளவாதக் கொள்கைகளை ஆதரிப்பதாக ஆகாது என்றும் அவற்றைத் தாம் தொடர்ந்து எதிர்ப்பதாகவும் சொன்னார்.
இந்த மிகப் பரந்த ஆதரவையேயே, மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்திருக்க வேண்டும் என்கிறார் பிரசன்ஜித் போஸ். ஊழலில் திளைத்துள்ள திமுக, மதவெறி - இனவெறி சிவ சேனா ஆதரவு போன்றவற்றைப் பரந்த ஆதரவு எனக் கொண்டாடலாமா எனக் கேட்டார்.
நாங்கள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கிறோம், ஆனால் அதன் நிதி அமைச்சரைக் குடியரசுத் தலைவராக ஆதரிப்பதில் எங்களுக்குப் பிரச்சனை எதுவும் இல்லை என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வாதம் போலியானது, இரட்டைப் பேச்சு பேசுவது என பிரசன்ஜித் சாடினார்.
தேஜமு முகாம் கலகலத்துப் போய் இருக்கும்போது, பாஜக வேறு வழி இல்லாமல், அஇஅதிமுக மற்றும் பிஜ÷ ஜனதா தள் வேட்பாளர் சங்மாவை ஆதரிக்கும்போது, அவர் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத போது, மதச்சார்பின்மை வாதம் எழாதபோது, பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதில் மார்ச்சிஸ்ட் கட்சிக்கு என்ன ஆதாயம் எனக் கேள்வி எழுப்பி, 2007ல் இருந்து கட்சி தொடர்ந்து தவறு செய்வதாகவும், தவறுகளிலிருந்து கற்கத் தயாராக இல்லை என்பதால், கட்சியிலிருந்தே விலகுவதாகவும் சொன்னார்.
கடந்த காலத்தில், மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு பெரும்பான்மை அடிப்படையில் ஜோதிபாசு பிரதமர் ஆக வேண்டாமென்று முடிவெடுத்தது நல்ல முடிவு என, இகக(மாலெ) வரவேற்றது. இந்த முறையும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில், பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்பதில் கடுமையான சர்ச்சை இருந்தது என்ற தகவல்கள், நல்ல அறிகுறிகளே. இப்போது இந்தியா முழுவதும் இடதுசாரி வட்டாரங்களில், மார்க்சிஸ்ட் கட்சி முடிவு சூடான விவாதங்களைக் கிளப்பிய பிறகு, சீமா பிஸ்வாஸ் போன்ற பத்திரிகையாளர்கள், மாற்றுக் கருத்து சொன்ன இளம்தலைமுறையினரை நீக்கம் செய்தது சரியா எனக் கேள்வி எழுப்பிய பிறகு, பிரகாஷ் காரத் நீண்ட நெடிய விளக்கம் தர நேர்ந்தது.
பிரகாஷ் காரத் தருகிற விளக்கங்கள் என்ன?
• பரந்த ஆதரவு பெற்ற வேட்பாளர் என்ற வாதத்தைத் தொடர்கிறார்.
• எப்போதும், குடியரசுத் தலைவர் தேர்தலில், மதச்சார்பின்மை கோணத்தில் பாஜக எதிர்ப்பு நிலையில், காங்கிரஸ் வேட்பாளரையே ஆதரித்துள்ளோம். (காங்கிரசே பாஜக வேட்பாளரான கலாமை ஆதரித்தபோது சொந்த வேட்பாளரை நிறுத்தியதுதான் விதி விலக்கு). அதைத்தானே இப்போதும் செய்கிறோம்.
• வாக்களிக்காமல் இருப்பது, வளரும் சூழலில் தலையீட்டின் கூர்மையை மழுங்கடிக்கும்.
• மேற்கு வங்க நிலைமைகளில், மார்க்சிஸ்ட் கட்சி மமதாவின் நிலையை எடுக்க முடியாது. மமதா - காங்கிரஸ் விரிசலைக் கையாள்வதில், கட்சி காங்கிரசோடு நிற்பது, வங்கத்தில் கட்சியைக் காக்கவும், அந்த வகையில் அகில இந்திய அளவில் கட்சிக்கு உதவுவதாகவும் அமையும்.
• மேல் தோற்றம் தாண்டி, மார்க்சிஸ்ட் கட்சி முடிவு, புதிய அரசியல் அணிசேர்க்கை நோக்கிய கடைசல்களுக்கு உதவும்.
என்ன கொடுமை, தோழர் பிரகாஷ் காரத்? திரிணாமூலும் மமதாவும் இதுவரை யாரை ஆதரிப்பது என்பதில் எந்த முடிவையும் எடுக்கவில்லையே. மமதா தன் சீட்டுகளைத் திறமையாக ஆடுகிறார். தேர்தலுக்கு 3 நாட்கள் முன்புதான் முடிவு எடுக்கப் போகிறார். மமதா ஒரு வேளை பிரணாப்பை ஆதரிக்க முடிவெடுத்தால், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபலமான புத்திசாலித்தனமான செயல்தந்திரம் நகைப்புக்குரியதாக மாறாதா? சரி, ஒரு வேளை மமதா வேறு முடிவெடுத்தாலும், காங்கிரஸ் எதிர்ப்பு மமதா, காங்கிரஸ் ஆதரவு மார்க்சிஸ்ட் கட்சி என்ற அரசியல் நிலைப்பாடு, வங்கத்தில் மமதா கைகளைத்தானே பலப்படுத்தும்.
வாக்களிக்காமல் இருப்பது, தலையீட்டின் கூர்மையை மழுங்கடிக்கும் என்றால், பிரணாப்பை ஆதரிக்கும் முடிவு எந்த வகையில் தலையீட்டின் கூர்மையை உறுதி செய்துள்ளது? பொதுவாக, மறைமுகத் தேர்தல்களில், இடதுசாரிகளுக்குக் கணிசமான பலம் இல்லாதபோது, வாக்களிக்காமல் இருப்பது என்பதுதானே கோட்பாட்டுரீதியான சரியான முடிவாக இருக்கும்?
மதச்சார்பின்மை, பாஜக எதிர்ப்பு என்பது இம்முறை நடைமுறை எண்ணிக்கைக் கணக்குகள்படி கூட பொருத்தமானதல்ல. திரிணாமூல் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு இல்லாமலேயே, பிரணாப்பிற்கு சுலபமாக வெற்றி வாய்ப்பு உள்ளது. செயல் தந்திர கோணத்தில், நிரந்தர காங்கிரஸ் ஆதரவு நிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி தள்ளப்பட்டு விடுவதாக ஆகாதா?
பிரசன்ஜித் ராஜினாமாவை ஏற்காமல் அவரைக் கட்சியிலிருந்து நீக்கலாம். பிரபாத் பட்நாய்க் மவுனம் காக்கலாம். காத்திருக்கலாம். ஆனால் எழுந்துள்ள கேள்விகள் காத்திருக்காது. அந்தக் கேள்விகளை நீக்கிவிடவும் முடியாது. இடதுசாரி இயக்கத்தின் இரு செயல்தந்திரங்களுக்கிடையிலான போராட்டம் தொடர்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் சந்தர்ப்பவாத சரணாகதி நிலையை, பிரகாஷ் காரத்தோ பினரயி விஜயனோ, எப்போதும், எல்லா நேரங்களிலும், மூடி மறைக்க முடியாது. உண்மையான ஆட்டம், பிரகாஷ் பினரயி இரட்டையர் எதிர் பிரசன்ஜித் பிரபாத் இடையிலானது அல்ல; புரட்சிகர வழிக்கும் வால் பிடிக்கும் வழிக்கும் இடையிலானதுதான்.
நினைவேந்தல்
திரிபுவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் விவசாயிகளின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும்
சாரு மஜூம்தார்
தேர்தலுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் நாம் எதிர்ப்பார்த்ததை நிரூபிக்கும் வகையில் கட்சித் தலைமை செயல்பட ஆயத்தமானது. பிற்போக்கின் கரங்களிலிருந்து காங்கிரசல்லாத அமைச்சகங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு நமது கடமையை எடுத்துக் காட்டியது. அதாவது, வர்க்கப்போராட்டத்தை கூர்மைப் படுத்துவதல்ல, மாறாக மார்க்சிஸ்டுகளின் பிரதான கடமை அமைச்சங்களுக்காக கெஞ்சுவதுதான் என்றே இது குறிப்பிடுகின்றது. எனவே, கட்சி உறுப்பினர்களின் மாநாடு ஒன்று தொழிலாளி வர்க்கத்திற்குள் பொருளாதாரவாதத்தை உறுதியாக நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டது.
இதன் பிறகு தொழிற்சாலையில் அமைதிக்கான ஒப்பந்தம் ஒன்று அமைச்சகத்தின் தலைமையில் உடனடியாக கையெழுத்திடப்பட்டது. தொழிலாளர்கள் கேரோக்களை மேற்கொள்ளக் கூடாதென்று தடைசெய்யப்பட்டனர். இதைவிட எது மிகவும் அம்மணமான வர்க்க ஒத்துழைப்பின் வெளிப்பாடாக இருக்க முடியும்? சுரண்டுவதற்கான முழுஉரிமை முதலாளிகளுக்கு வழங்கிய பிறகு தொழிலாளர்கள் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தக்கூடாதென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் திரள் போராட்டத்தின் விளைவாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்துடன் இணைந்து வர்க்க சமரசப் பாதையை தேர்வு செய்தது. சர்வதேச தத்துவார்த்தப் போராட்டத்தில் நடுநிலை வகிப்பவர்கள் உடனடியாக சந்தர்ப்பவாதப் பாதையை மேற்கொள்வார்கள் என்று சீனத் தலைவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அனுமானித்துக் கூறியிருந்தனர். இப்பொழுது, இந்த நடுநிலைவாதிகள் உண்மையில் திரிபுவாதிகள், அவர்கள் உடனே எதிர்ப்புரட்சி முகாமை நோக்கிச் சென்றடைவார்கள் என்று சீனத் தலைவர்கள் கூறுகின்றார்கள். இந்த உண்மையை நமது நாட்டில், நேரடியாகக் காண்கிறோம். தொழிலாளி வர்க்கத்துக்கு எவ்வாறு துரோகமிழைக்கப் பட்டுள்ளது என்பதை நம் கண் முன்னால் காண்கிறோம்.
இதனுடன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹரி கிருஷ்ண கோனாரின் அறிக்கையை யும் இணைத்துக் காண்போம். தொடக்கத்தில், உடைமை உரிமை அளிக்கப்பட்ட நிலமனைத்தும் நிலமற்ற விவசாயிகளிடையே பிரித்துக் கொடுப்போம் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு, பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிலத்தின் அளவு வெட்டிச் சுருக்கப்பட்டது. இறுதியில், இந்த ஆண்டு, பழைய நிலைமையே நீடிக்கும் என அவர் அறிவித்தார். நிலவரிக் குறைப்பு இளநிலை நிலச்சீர்திருத்த அதிகாரிகளின் கருணைக்கே விடப்பட்டது. விவசாயிகள் மனு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். கட்டாய நிலப்பறிப்பு செய்யக் கூடாதென அவர்களுக்கு மேலும் கூறப்பட்டது.
ஹரிகிருஷ்ண பாபு கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் மட்டுமல்ல, மேற்கு வங்காளத்திலுள்ள விவசாய சங்கத்தின் செயலாளருமாவார். அவரால் வழி நடத்தப்பட்ட விவசாய சங்கத்தின் அறைகூவலுக்கு வினையாற்றிய விவசாயிகள் 1959ல் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலங்களை பறிமுதல் செய்யும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். அரசாங்கம் நிலப்பிரபுக்களின் நலன்களை காக்க ஒடுக்கு முறையை கட்டவிழ்த்துவிட்ட போதிலும், நிலவெளியேற்றத்திற்கு ஆதரவான முடிவு களை வழங்கி இருந்தபோதிலும் கிராம ஒற்றுமை என்ற வலிமையால் கையகப்படுத்திய நிலத்தை பல நிகழ்வுகளில் இதுநாள் வரையில் விவசாயிகள் கைவிடவில்லை.
விவசாய சங்கத் தலைவர் அமைச்சரான பிறகு, அவர்களுடைய இயக்கத்தை ஆதரித்தாரா? இல்லை. அவர் என்ன கூறினாரென்றால் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மறு பகிர்வு செய்யப்பட வேண்டும் என்பதாகும். யார் அதைப் பெறுவார்கள்? இந்த விசயத்தில் இளநிலை நிலச்சீர்திருத்த அதிகாரிகள் விவசாய சங்கத்திடம் ஆலோசனை நடத்துவர். ஆனால், தெரிவிக்கப்படும் கருத்துக்கள் செயல்படுத்தப்படுமா? ஹரிகிருஷ்ண பாபுவால் இது தொடர்பாக வாக்குறுதி எதுவும் தரமுடியவில்லை. ஆனால் இளநிலை நிலச்சீர்திருத்த அதிகாரிகள் விவசாய சங்கத்தின் கருத்துகளை நிராகரித்தார்களென்றால், விவசாயிகள் எவ்வழிகளின் மூலமும் நிலத்தை கையகப்படுத்த இயலாது.
இது தொடர்பாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள ஹரிகிருஷ்ண பாபுவிற்கு அதிக நேரம் ஆகவில்லை. இது குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? இது அரசாங்கம் மற்றும் நிலப்பிரபுக்களின் அடிவருடியாக செயல்படுவதைத் தவிர வேறு என்ன? நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சார்பில் காங்கிரஸ்காரர்கள் கூட இவ்வளவு வெட்கக்கேடான முறையில் வாதாடி இருக்கமாட்டார்கள். ஆகவே இக்கட்சித் தலைவர்களின் உத்தரவுகளுக்குக் கீழ்படிவது என்பது நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சுரண்டலையும், ஆட்சியையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்வதை பொருள்படுத்துகிறது. எனவே அணிவகுத்து முன்னேறுவதற்கும், வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்கும் ஆன கொள்கையை உயர்த்திப் பிடிப்பதற்கு இத்தலைமையின் பிற்போக்குத்தனமான வர்க்க எதிர்ப்பு பாத்திரத்தை மக்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தோலுரித்துக் காட்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.
நிலமற்ற, ஏழைவிவசாயிகள் ஹரிகிருஷ்ண பாபுவின் ஆலோசனையை ஏற்று மனு கொடுப்பார்களேயாயின், அதன் பிறகு நேரிடுவது என்ன? உடைமையாளர்களுக்குச் சொந்தமான கொஞ்ச நிலம் விளைச்சலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பது உண்மையே. ஆனால், பெரும் பகுதி விளைச்சலுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலமாகும். அப்படிப்பட்ட நிலத்தில் பணிபுரியும் விவசாயிகளும் இருக்கிறார்கள். இன்று அவர்கள் உரிமங்களை பெற்று நிலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லது அவர்கள் நிலப்பிரபுக்களுக்கு குத்தகைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலம் மறுபகிர்வு செய்யப்படுகிறபோது, அது ஏழை, நிலமற்ற விவசாயிகளிடையே தவிர்க்கவியலாமல், மோதல்களை விளைவித்து, இதன் விளைவாக ஒட்டுமொத்த விவசாய இயக்கத்தின்மீது பணக்கார விசாயிகளுடைய தலைமை நிறுவப்படும். ஏனெனில், பணக்கார விவசாயி அதிகாரத்திலுள்ளவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தும் வாய்ப்பிருப்பதனால், அவரும் நிலப்பிரபுத்துவ செல்வாக்கின் பங்காளியாவார்.
ஆகவே, ஹரிகிருஷ்ண பாபு இன்று போராட்டங்களை நடத்துவதை மறுத்து வருவதோடு, மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கூடப் போர்குணம் வாய்ந்த போராட்டப் பாதையில் விவசாய இயக்கம் முன்னேறாத வகையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்.
விவாதம்
பிரணாப், டி.பி.சந்திரசேகர், சிங்கூர் - நந்திகிராம் விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டை எதிர்ப்பது என்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக எஸ்எஃப்அய் முடிவை அய்சா வரவேற்கிறது
இந்திய மாணவர் சங்கத்தின் ஜேஎன்யு கிளை ஜூலை 5 அன்று இரவு நடைபெற்ற அதன் பொதுக்குழுக் கூட்டத்தில் வரவிருக்கிற குடியரசுத் தலைவர் தேர்தலில் அய்முகூவின் நிதி அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிப்பதை எதிர்ப்பது என்று முடிவு செய்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ‘ஏற்புடையதல்ல’ என்றும், அது ‘இடது, ஜனநாயக இயக்கத்தின் நலனுக்கு உகந்ததல்ல’ என்றும் எஸ்எஃப்அய் - ஜேஎன்யு கிளை தீர்மானம் நிறைவேற்றியது. தைத் தொடர்ந்து வெளியிட்டத் துண்டறிக்கையில், எஸ்எஃப்அய் - ஜேஎன்யு, தோழர் டி.பி.சந்திரசேகரன் படுகொலை விசயத்திலும், கட்டாய நிலப்பறி, சிங்கூர் - நந்திகிராம் ஒடுக்குமுறை ஆகிய விசயங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்தும் தன்னை விலக்கி நிறுத்திக் கொண்டது.
எஸ்எஃப்அய் - ஜேஎன்யுவின் இந்த நிலைப்பாட்டை அய்சா வரவேற்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து முன்னாள் எஸ்எஃப்அய் தலைவர் பிரசென்ஜித் போஸ் விலகியிருப்பதையும் அய்சா வரவேற்கிறது. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் கட்டாய நிலப்பறி மற்றும் அரசு ஒடுக்குமுறை, அய்முகூவின் மக்கள் விரோத சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்திற்கான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊசலாட்டம், கொடூரமான ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு ஆகிய, மார்க்சிஸ்ட் கட்சியின் தற்காத்துக் கொள்ள முடியாத முடிவுகளுக்கு எஸ்எஃப்அய்யின் ஆதரவை பல சந்தர்ப்பங்களில் விவாதித்த இடது ஜனநாயக மாணவர் கருத்துக்கள் அவற்றை பெருவாரியாக நிராகரித்துவிட்டன. எஸ்எஃப்அய்யின் ஜேஎன்யு கிளை, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்ற மார்க்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டை தற்காத்துக்கொள்ள மறுத்து வழமைக்கு மாறாக எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க நிலைப்பாட்டை இந்த வெளிச்சத்தில் காண வேண்டும்.
‘டி.பி.சந்திரசேகரனை படுகொலை செய்தது, பிரசென்ஜித் போûஸ வெளிவேற்றியது, சமீபத்தில் சிங்கூர் நோக்கிய பேரணிக்குச் செல்லவிருந்த அப்துல் ரெஸ்ஸôக் மொல்லாவை தடுத்து நிறுத்தியது, டி.பி.சந்திரசேகரனின் கட்சிக்கும், குடும்பத்திற்கும் ஒருமைப்பாடு தெரிவித்த வி.எஸ்.அச்சுதானந்தனை இகழ்ந்து பேசி ஓரம்கட்டி, பிரபாத் பட்நாயக், அசோக் மித்ரா போன்ற அறிவுஜீவிகளின் ஆக்கப்பூர்வ விமர்சனங்களை புறக்கணித்தது ஆகிய மார்க்சிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது, வலது வழிவிலகலுக்கெதிரான உட்கட்சி போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதுமே வெறுக்கத்தக்க வகையில் பதில் வினையாற்றியிருக்கிறது என்பது தெளிவாகிறது. எஸ்எஃப்அய்யின் அகில இந்திய அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி, இந்த உணர்தல்களுக்கும், நாட்டின் முக்கிய இடதுசாரி பல்கலைக் கழக வளாகத்தில் தனது கிளையில் நடைபெற்று வரும் கிளர்ச்சிகளுக்கும் செவி சாய்க்குமா என்பதை பார்க்க வேண்டியுள்ளது’ என்று அய்சா கருதுகிறது.
இதைத் தொடர்ந்து எஸ்எஃப்அய்யின் அகில இந்திய தலைமை அதன் ஜேஎன்யு கிளையைக் கலைத்து, ஜேஎன்யுவின் எஸ்எஃப்அய் தலைவர்களை எஸ்எஃப்அய்யின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலக்கிவிட்டது.
எஸ்எஃப்அய் - ஜேஎன்யு கிளை தொடர்ந்து எஸ்எஃப்அய் - ஜேஎன்யு என்ற பெயரிலேயே செயல்படும் என்று அறிவித்திருக்கிறது. ‘எஸ்எஃப்அய் -ஜேஎன்யு கிளை அரசியல் பிரச்சினையில் கூட்டாக முடிவெடுத்திருப்பதுதான் 4 டெல்லி மாநிலக் குழு உறுப்பினர்களை எஸ்எஃப்அய்யிலிருந்து வெளியேற்றுவதற்கான காரணம் என்று சொல்வது அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயக விரோதமானது; பழிவாங்கும் எண்ணம் கொண்டது. சில தனி நபர்களை குறி வைப்பதால், மொத்த கிளையையும் அச்சுறுத்தி, சம்பந்தப்பட்ட அரசியல் பிரச்சனையிலிருந்து கவனத்தை திசை திருப்பிவிடலாம் என்ற தவறான கணிப்பில் அகில இந்திய தலைமை இருப்பதாகத் தெரிகிறது... எஸ்எஃப்அய் - ஜேஎன்யு, படிப்பு மற்றும் போராட்டம் என்ற பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் அதே வேளை, எஸ்எஃப்அய் - ஜேஎன்யு என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படும். எஸ்எஃப்அய்யின் திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தையும் பின்பற்றும். எஸ்எஃப்அய்யின் திட்டத்திற்கும், அமைப்புச் சட்டத்திற்கும் விரோதமாக அகில இந்திய தலைமைதான் செயல்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள எஸ்எஃப்அய்யின் கிளைகளும், மாநில கமிட்டிகளும், மத்திய செயற்குழு உறுப்பினர்களும் தலைமையின் விதிமீறல்களுக்கு எதிராகவும், ஜனநாயக விரோத முடிவுகளைத் திரும்பப் பெறவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்று எஸ்எஃப்அய் - ஜேஎன்யு அறிவித்துள்ளது.
பிரணாப்புக்கு ஆதரவு என்ற நிலைபாட்டில் எஸ்எஃப்அய் - ஜேஎன்யு ஏன் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பதற்கு, எஸ்எஃப்அய் - ஜேஎன்யுவின் துண்டறிக்கை ‘கடந்த சில வாரங்களாக இந்தப் பிரச்சினையில் அய்சா போன்ற தீவிர இடதுசாரி இயக்கங்களின் தீவிர தாக்குதலுக்கு எஸ்எஃப்அய் இலக்கானது. மாணவர்கள் எஸ்எஃப்அய்யின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி கேட்கும் போது நாங்கள் மவுனம் காக்க முடியாமல் போய்விட்டது’ என்று குறிப்பிடுகிறது.
அதே துண்டறிக்கை, 2007 மற்றும் 2012 மாணவர் பேரவை தேர்தல்களில் ஜேஎன்யுவில் ஒரு நிர்வாகி இடம் கூட எஸ்எஃப்அய்யால் வெற்றி பெற முடியாமல் போனதற்கான அரசியல் காரணங்களாக, ‘அடிப்படையாக சிங்கூர் - நந்திகிராம் பிரச்சினையும், மற்றும் நாட்டில் இடதுசாரி இயக்கத்தின் பொதுவான நிலையுமே காரணம்’ என்று குறிப்பிடுகிறது. ‘இடதுசாரி சாய்வுள்ள ஜேஎன்யு போன்ற அரசியல் வளாகத்தில், இம் மாற்றங்கள் முற்போக்கு, ஜனநாயக எண்ணம் கொண்ட மாணவர்கள் மத்தியில் எஸ்எஃஅய்யின் அடித்தளத்தை அரித்து விடுகிறது’ என்றும் எஸ்எஃப் அய் - ஜேஎன்யு குறிப்பிடுகிறது. 2007ல் இருந்து நடைபெற்றுவரும் இம்மாற்றங்கள் எஸ்எஃப் அய்யை அதன் ‘இரட்டைப் பேச்சு’ என்று சொல்லி கடுமையான தாக்குதலுக்கு ‘எஸ்எஃப் அய்யால் ஆதாயம் அடைந்த அய்சா’வால் இலக்காக்கப்படுகிறது.
‘எஸ்எஃப்அய் - ஜேஎன்யுவின் நலன் குறிப்பிட்ட அரசியல் பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்ற ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் முடிவை எஸ்எஃப் அய் - ஜேஎன்யு தற்காத்துக் கொள்ளாது என்பதோடு சமீபத்தில் கேரளாவில் ஆர்எம்பி தலைவர் டி.பி.சந்திரசேரன் படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களில் அமைதி காக்கவும் செய்யாது என்று எஸ்எஃப்அய் - ஜேஎன்யு துண்டறிக்கை குறிப்பிடுகிறது. நிறைய மார்க்சிஸ்ட் கட்சி செயல்வீரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணை இன்னும் தொடர்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் எம்.எம்.மணி வெளியிட்டிருக்கும் பொறுத்துக் கொள்ள முடியாத அறிக்கை, நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இது கேரளாவிலும், ஜேஎன்யுவிலும் மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாகி விட்டது. எஸ்எஃப்அய் - ஜேஎன்யு இதில் கொள்கை வழிப்பட்ட நிலை எடுத்து, குற்றவாளிகள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றுக் கோருகிறது. எஸ்எஃஅய்யின் அகில இந்திய தலைமை இந்தப் பிரச்சினைகளில் எல்லாம் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை’ என்று எஸ்எஃப்அய் - ஜேஎன்யு துண்டறிக்கை குறிப்பிடுகிறது.
அய்சாவின் தலையீட்டால், இடதுசாரி சாய்வுள்ள ஜேஎன்யு வளாகத்தின் அரசியல் விவாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதப் போக்குகளுக்கான வாதங்களை கூர்மையாக நிராகரித்துவிட்டது. இது பல்வேறு பிரச்சினைகளில் சிபிஎம்மின் நிலைப்பாடு, சமூகத்தின் முற்போக்கு, எண்ணங்கொண்டவர்கள் மத்தியில் தற்காத்துக் கொள்ள முடியாதது என்ற புரிதலை எஸ்எஃப்அய் -ஜேஎன்யு தோழர்களுக்கு உருவாக்குவதில் முடிந்திருக்கிறது.
தமிழில்: தேசிகன்
கல்வி
என்ன செய்ய வேண்டும் நூலை இறுகப் பற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? (பகுதி 1)
காம்ரேட்
மார்க்ஸ் லெனின் மாசேதுங், தத்துவத்தை நடை முறையுடன் பொருத்தினார்கள். அதனை அவர்கள் ஒரு போதும் வறட்டுச் சூத்திரங்களாகச் சுருக்கவில்லை. சமகால நிலைமைகளை ஆழமாகக் கற்று, உயிர்த்துடிப்பான போராட்ட இயக்கங்களுடன் தத்துவத்தை இணைப்பதன் மூலம், அதனைச் செழுமைப்படுத்தினார்கள்.
தோழர் லெனின், பாட்டாளி வர்க்கத்தின் பேராசான். அவர் ரஷ்ய பூமியில் மண்ணில் ஆழக் காலூன்றி நின்றார். ரஷ்ய ஆன்மா, ரஷ்யாவின் கடந்த காலம், நிகழ்காலம் அது எத்தகைய எதிர்காலம் நோக்கி மாறிச் செல்கிறது, ரஷ்யாவின் சமூகப் பொருளாதார அரசியல் நிலைமைகள், ரஷ்யாவின் வர்க்கங்கள் கட்சிகள் தலைவர்கள் ரஷ்யப் புரட்சியின் உள்ளடக்கம், வடிவங்கள், திசை பற்றிய ஆழமான புரிதலைப் பெற்றிருந்தார்.
அரசும் புரட்சியும் நூலுக்கு தோழர் லெனின் ஒரு பின்னுரை (போஸ்ட் ஸ்க்ரிப்ட்) எழுதுகிறார். “இந்த வெளியீடு 1917 ஆகஸ்ட் செப்டம்பரில் எழுதப்பட்டது. ஏற்கனவே அடுத்ததான ஏழாவது அத்தியாயத்திற்கு, ‘1905-1907 ரஷ்யப் புரட்சியின் அனுபவங்கள்’ எனத் தலைப்பிட்டு எழுதத் திட்டமிட்டிருந்தேன். தலைப்பு தவிர அந்த அத்தியாயத்தின் ஒரு வரியைக் கூட என்னால் எழுத முடியவில்லை. எனக்கு, அக்டோபர் புரட்சிக்கு முந்தைய காலம் என்ற அரசியல் நெருக்கடி, குறுக்கே வந்தது. இத்தகைய குறுக்கீடு வரவேற்கத்தக்கதே. வெளியீட்டின் இரண்டாவது பாகம், 1908 - 1917 ரஷயப் புரட்சியின் அனுபவம் பற்றி எழுதுவது, நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்படும் போல் தெரிகிறது. புரட்சியின் அனுபவத்தின் ஊடே செல்வது, அது பற்றி எழுதுவதைக் காட்டிலும், மனதிற்கு உகந்ததும் பயனளிப்பதுமாகும்”. தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பதில் அதன் விளைவைக் காண்பதில் அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்.
என்ன செய்ய வேண்டும் நூலில், நமக்கு எத்தகைய அமைப்பு தேவை என்ற துணைத் தலைப்பின் கீழ் துவக்க வரிகளில் லெனின் எழுதுகிறார். நமது ‘திட்டவகைப்பட்ட செயல் தந்திரங்கள்’ என்பது, தாக்குதலுக்கு உடனடி அழைப்பு விடுவதை நிராகரிப்பது, ‘எதிரியின் கோட்டை மீது ஒரு முறையான முற்றுகையை கோருவது’ அல்லது வேறு வார்த்தைகளில் சொன்னால், நமது எல்லா முயற்சிகளும் நிரந்தரப் படைவீரர்களைத் திரட்டுவது அமைப்பாக்குவது மற்றும் அணிதிரட்டுவதை நோக்கித் திசைவழிப்படுத்தப்படுவது ஆகியவற்றில் அமைய வேண்டும் என்கிறார்.
தோழர் மாவோவும் தோழர் லெனினும், சீனாவில் ரஷ்யாவில் நடந்த புரட்சிகள் பற்றிக் கற்றுக்கொள்வது சரிதான்; ஆனால் அதனை நகலெடுத்துப் பொருத்த முயற்சிக்காமல், தத்தமது நாடுகளின் நிலைமைகளுக்கேற்பப் பொருத்தமான படிப்பினைகளை எடுத்துப் பொருத்தச் சொல்கிறார்கள்.
நவம்பர் 1917 புரட்சி முடிந்த பிறகு சோவியத் குடியரசு, அய்ரோப்பியப் புரட்சியை ஆவலுடன் எதிர்பார்த்தது. அது நடக்கவில்லை. புதிதாகப் பிறந்த சோசலிசக் குடியரசை அதன் குழந்தைப் பருவத்திலேயே கொன்று விட ஏகாதிபத்திய முகாம் முயன்றது. அவ்வளவு நெருக்கடியான கட்டத்திலும், ஏப்ரல் 27 1920ல் ‘இடதுசாரி’ கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு நூலில் லெனின் புரட்சி வெடித்து வெள்ளமாய் பாயும்போது புரட்சிக்காரனாய் இருப்பது சுலபம் என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு எழுதுகிறார்:
“நேரடியான பகிரங்கமான உண்மையான பெரும்திரள் கொண்ட உண்மையான புரட்சிகரமான போராட்டம் நடத்துவதற்கான நிலைமைகள் இல்லாத போதும், புரட்சிகரமான செயல்முறைகளுக்கான அவசியத்தை உணர முடியாத மக்கள் மத்தியில், ஒரு புரட்சிகரமற்ற சூழலில், புரட்சிகரமல்லாத அமைப்புக்களில், ஏன் பிற்போக்கு அமைப்புக்களிலும் கூட (பிரச்சாரம் கிளர்ச்சி மற்றும் அமைப்பாக்குதல் மூலம்), புரட்சியின் நலன்களை முன்நிறுத்துவதுதான், புரட்சியாளர்களாய் இருப்பதுதான், மிக மிகக் கடினமானது. மிகமிக மதிப்பிற்குரியதாகும்.” இன்றைய இந்திய நிலைமைகளுக்கு, லெனினின் மேற்கூறிய மேற்கோள் மிகவும் பொருத்தமானது.
லெனின் 20ஆம் நூற்றாண்டு துவங்கிய பிறகு, 1902லிருந்து 1905 வரை, நவம்பர் புரட்சிக்குப் பின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? ஓரடி முன்னால் ஈரடி பின்னால், ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல் தந்திரங்கள் போன்ற நூல்கள், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில், குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்ய எழுதப்பட்டவை.
காலப் பின்னணி
1860களுக்கு முன்பு ஜார் ஆண்ட ரஷ்யாவில், முதலாளித்துவ வளர்ச்சி மிகவும் சிறிய அளவிலானது. 1861ல் ஜார் அரசு பண்ணை அடிமை முறையை ஒழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. பெரிய மில்களில், தொழிற்சாலைகளில், ரயில்வேக்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கை 1865ல் 7,60,000 என இருந்தது 1890ல் இரு மடங்காக 14,33,000 என உயர்ந்தது. அந்தப் பத்தாண்டு முடியும் போது எண்ணிக்கை 27,92,000 ஆனது.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் மூலதன வருகையோடு, ரஷ்யா எங்கும் ரயில் பாதைகள் போடப்பட்டன. சுரங்கத் தொழில்கள் தொழிற்சாலைகள் பெருகின. கனிமங்கள் எரிபொருட்கள் தேவை அதிகரித்தது. என்னதான் வேகமாக, முதலாளித்துவம் வளர்ந்தாலும், 1897 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ரஷ்ய மக்களில் 83% விவசாயத்தைச் சார்ந்தும் 17% தொழில் மற்றும் சேவைத் துறைகள் சார்ந்தும் இருந்ததாக, லெனின், ரஷ்யாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி நூலில் குறிப்பிட்டார்.
1903ல் கிராமப்புற வறியவர்களுக்கு என்ற நூலை லெனின் எழுதும் போது 1 கோடி விவசாயக் குடும்பங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். உழுகருவிகளாகக் குதிரைகள் இருந்தன. லெனினுடைய வர்க்கப் பகுப்பாய்வுப்படி, 30 லட்சம் விவசாயிகளிடம் குதிரைகள் ஏதும் இல்லை. முப்பத்தைந்து லட்சம் விவசாயிகள் ஆளுக்கொரு குதிரை வீதம் 35 லட்சம் குதிரைகள் வைத்திருந்தனர். இந்த 65 லட்சம் குடும்பங்கள் நாட்டுப்புற ஏழைகளாக இருந்தனர். விவசாய சமூகத்தில் இவர்கள் மூன்றில் இரு பகுதியினர். ஏறத்தாழ இருபது லட்சம் நடுத்தர விவசாயக் குடும்பங்கள் கைவசம் ஏறத்தாழ 40 லட்சம் குதிரைகள் இருந்தன. ஆனால் ஏறத்தாழ 15 லட்சம் பணக்கார விவசாயக் குடும்பங்கள் கைவசம் 75 லட்சம் குதிரைகள் இருந்தன.
நிலம் என்று காணும்போது, அய்ரோப்பிய ரஷ்யாவில் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட துண்டு நிலமும் தனியாருக்குச் சொந்தமான நிலமும் 24 கோடி தெசியத்தினாக்கள் அளவு இருந்தன. (ஒரு தெசியத்தினா என்பது 2.7 ஏக்கர் ஆகும்). ஒரு கோடி விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது 13.1 கோடி தெசியத்தினா நிலம். 5 லட்சம் நிலப்பிரபுக்களின் குடும்பங்கள் வசம் 10.9 கோடி தெசியத்தினா நிலம் இருந்தது.
ஜார் குடும்பத்தினர் கைகளில் எழுபது லட்சம் தெசியத்தினாக்கள் ராஜபூமி இருந்தது. மாதா கோவில்கள் மடங்கள் கைவசம் அறுபது லட்சம் தெசியத்தினாக்கள் நிலம் இருந்தது. நகரங்கள் பட்டணங்கள் தொழில் வர்த்தக நிறுவனங்கள் கைவசம் 40 லட்சம் தெசியத்தினாக்கள் நிலம் இருந்தது.
20 லட்சம் விவசாயிகளிடம் இருந்ததற்கு ஈடான நிலம் 924 நிலப்பிரபுக் குடும்பங்களிடம் இருந்தது. அரசாங்கத்தின் கைவசம் இருந்த 15 கோடி தெசியத்தினாக்கள் நிலத்தில் 40 லட்சம் தெசியத்தினாக்கள் போக மீதமுள்ளவை பயிரிட லாயக்கற்றவை. பயிரிட லாயக்கான நிலங்களும், பணக்கார விவசாயிகளுக்கு அற்பத் தொகைக்குக் குத்தகைக்கு விடப்பட்டன. அவர்கள் இந்நிலங்களை, நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகளுக்கு அளவு கடந்த வாரத்திற்கு உள்குத்தகைக்கு விட்டனர்.
இரத்தம் சொட்டச் சொட்டச் நிலப்பிரபுக்கள் சுரண்டினர். ஒடுக்கினர். பணக்கார விவசாயிகள் உறிஞ்சிக் கொழுத்தனர். நடுத்தர விவசாயிகள் நிலை தடுமாறினர். ஏழை விவசாயிகள் ஓட்டாண்டியாயினர். கிராமப்புறத் தொழிலாளர்கள் அழிவுற்று நாசமாயினர்.
மில்களில் தொழிற்சாலைகளில் 12 1/2 மணி நேர வேலை இருந்தது. ஜவுளித் தொழிலில் 14/15 மணி நேர வேலை இருந்தது. போரில் பலியாவதைவிட அதிகமானோர் விபத்துக்களில் உயிரையும் உறுப்புக்களையும் இழந்தனர். காப்பீடோ நஷ்ட ஈடோ கிடையாது. 10 முதல் 12 பேர் ஒரு சிறிய அறையில் வாழ்ந்தனர். சம்பளத்தின் பெரும் பகுதி அபராதங்களாகப் பிடிக்கப்பட்டது. மோரசோவ் மில்லில் சம்பளம் ரூ.100ல் ரூ.30 முதல் ரூ.50 வரை அபராதங்களாகப் பிடிக்கப்பட்டன. முதலாளிகளின் உணவு, மளிகை கடைகளில், தொழிலாளர்கள், கூடுதல் விலை கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டும். விரிந்து பரந்திருந்த ரஷ்யாவில், சிறுபான்மைத் தேசீய இனங்கள் மீது, ரஷ்யப் பேரினவாதமும் மொழியும் கலாச்சாரமும் ஒடுக்குமுறையும் நுகத்தடிகளாகப் பூட்டப்பட்டன.
எல்லா எதிர்ப்புக்களும் வாள்முனையில் துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டன. இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் சைபீரியா வனவாசம். இந்த ஜாராட்சி அய்ரோப்பிய மூலதனத்தின் உற்ற துணைவனாக நின்றது. பிற்போக்கின் கோட்டையானது.
நில ஆதினங்களுக்கெதிரான விவசாய ஜனநாயக இயக்கம், தேசீய இனங்களின் தேச விடுதலை மற்றும் தேசீய சமத்துவத்திற்கான இயக்கம், முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் படைப்பதற்கான இயக்கம் ஆகிய அனைத்து நீரோட்டங்களையும் இணைத்து வழி நடத்தக் கூடிய பாட்டாளி வர்க்கப் புரட்சிகரக் கட்சி, வரலாற்றின் அறைகூவலுக்கு ஏற்ப காலத்தின் கட்டளையை நிறைவேற்ற, தேவைப்பட்டது.
தொழிலாளர் இயக்கமும் சோசலிச தத்துவமும்
ரஷ்யாவிலும் கூட துவக்க காலத்தில் இவை தனித்தனியாகவே உருவாயின, இருந்தன. 1860க்குப் பிறகு எண்ணிக்கையில் வளரத் துவங்கிய பாட்டாளி வர்க்கம் 1890 முதல் 1900 வரை ஒரு பிரும்மாண்ட நிலையை அடைந்தது. ஒரு விதத்தில் நாடு தழுவிய வர்க்கமானது. கிராமப்புற வேர்களிலிருந்து அந்நியமாகாமல் இருந்த தலைமுறையினரையே கணிசமாகக் கொண்டிருந்தது. 1860களில் 1870களில் கரு நிலை வர்க்கப் போராட்டங்களாக வேலை நிறுத்தங்கள் வெடித்தன. 1880 முதல் 1886 வரை 48 வேலை நிறுத்தங்கள் நடந்தன. 80,000 பேர் கலந்து கொண்டனர்.
1875ல் ஓடெஸ்னாவில் சோவியத் ரஷ்ய தொழிலாளர் சங்கமும், 1878ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ரஷ்ய தொழிலாளர்களின் வடக்கு சங்கமும் உருவாயின. 1885ல் மோரசோவ் மில்லின் 8000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அபராதங்களை ஒழிக்கக் கோரிய வேலை நிறுத்தம் இராணுவத்தால் நசுக்கப்பட்டது. ஆனால் 1886லேயே அரசாங்கம், அபராதங்கள் முதலாளிகள் பைகளுக்குப் போகாமல் தொழிலாளர்களுக்கும் பயன்படும் விதம் ஒரு சட்டம் கொண்டு வர நேர்ந்தது.
1889ல் ரஷ்யாவின் முதல் மார்க்சியக் குழு ஜெனிவாவில் உருவானது. பிளக்கனவ் மார்க்சியத்தைப் பரப்புகிற முயற்சிகளில் ஈடுபட்டார். நரோத்னியத்திற்கு எதிரான கருத்துப்போரில் பிளக்கனவ் வழிநடத்திய ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ பெரும் பங்காற்றியது. 1884 மற்றும் 1887ல் ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சிக்கான இரு நகல் திட்டங்களை வெளியிட்டது. மார்க்சியத்தை, சோஷலிசக் கருத்துக்களைப் பரப்பியது.
1884 முதல் 1894 வரை சமூக ஜனநாயக இயக்கம் சிறிய தனித்தனி குழுக்களாக இருந்தது. பெரும்திரள் தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு மிகவும் குறைந்த தொடர்புகள் அல்லது தொடர்புகளே இல்லை என்ற நிலைதான் இருந்தது. ‘கருநிலை வளர்ச்சிப் போக்கில்’ சமூக ஜனநாயக இயக்கம் இருந்ததாக லெனின் எழுதினார். தாயின் வயிற்றில் குழந்தை உருவாகி விட்டது. ஆனால் இன்னமும் பிறக்கவில்லை.
1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்த இருபது மார்க்சிய வட்டங்களை, தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் குழு என்ற ஒரு தனி அமைப்பாக லெனின் மாற்றி அமைத்தார். இது ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் துவக்கமாக இருந்தது. கழகம், புரட்சிகர இயக்கத்தில் தொழிலாளி வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்க வேண்டும் என்றும், மேலான வேலை நிலைமைகள், வேலை நேரக் குறைப்பு, கூடுதல் ஊதியம் ஆகிய கோரிக்கைகளை ஜாராட்சிக்கு எதிரான அரசியல் போராட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வி தந்தது. அது சோசலிசத்தையும் தொழிலாளி வர்க்க இயக்கத்தையும் அய்க்கியப்படுத்தத் துவங்கியது.
1895 முதல் 1899 வரை நடந்த வேலை நிறுத்தங்களில் 2,21,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 1896ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் கழகம் வழிநடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் 30000 ஜவுளித் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வேலை நேரக் குறைப்பே முதன்மைக் கோரிக்கையாக இருந்தது. 2.6.1897ல் முதல் முறையாக ஜாராட்சி வேலை நேரம் 11 1/2 மணி நேரம் தாண்டக் கூடாது எனச் சட்டம் இயற்றியது.
1895ல் லெனின் கைது செய்யப்பட்டார். கழகத்தில் புதியவர்கள் தலைமைக்கு வந்தனர். தாம் “இளையவர்கள்” என்றும் லெனினும் அவரது கூட்டாளிகளும் “வயதானவர்கள்” என்றும் இவர்கள் அழைத்தனர். தொழிலாளர்கள் முதலாளிகளுக்கெதிரான பொருளாதாரப் போராட்டங்களோடு தம்மை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஜாராட்சிக்கு எதிரான அரசியல் போராட்டத்தை அதன் தலைமையை தாராளவாத முதலாளிகளிடம் விட்டு விட வேண்டும் என்றும் இவர்கள் சொன்னார்கள். இப்படித்தான் ரஷ்யாவின் மார்க்சிய இயக்கத்தில் சந்தர்ப்பவாதிகள் சமரசவாதிகள், பொருளாதாரவாதிகளாக உருவெடுத்தனர்.
லெனின் கைது, அதன் பிறகு “பொருளாதாரவாதிகள் உதயம்” என்பவற்றிற்கு முன்பாக, வேறு ஒரு முக்கிய நிகழ்வும் நடந்தது. நரோத்னிக்குகளுக்கு எதிராக, பிளக்கனவ் தொடுத்த கருத்தியல் போராட்டத்தை லெனின் தொடர்ந்தார். சட்டபூர்வ மார்க்சிஸ்ட்களுடன் நரோத்னிக்குகளுக்கு எதிராக அய்க்கியம் என்ற தந்திரத்தைக் கையாண்ட அதேநேரம், அவர்களுக்கு எதிரான போராட்டத்தையும் தொடுத்தார். இந்தத் தந்திரம், சட்டபூர்வமாக (ஜார் ஆட்சியின் அனுமதியுடன்), மார்க்சியத்தை ரஷ்யா எங்கும் பரப்ப உதவியது. நரோத்னிக்குகளுடன் கருத்துத் தளத்தில் கணக்குத் தீர்க்க உதவியது.
சட்டபூர்வ மார்க்சிஸ்ட்கள், மார்க்சியப் பதாகையின் கீழ், தொழிலாளி வர்க்க இயக்கத்தை முதலாளித்துவ சமூகத்தோடு அனுசரித்துப்போக வைக்கவும் பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற மார்க்சியத்தின் சாரமான கருத்துக்களை மறுதலிக்கவும், முயன்றனர். இதன் ஒரு பிரதிநிதியான பீட்டர் ஸ்ட்ரூவ் “நாங்கள், எங்களிடம் கலாச்சாரம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். கற்பதற்கு முதலாளித்துவத்திடம் செல்கிறோம்” என்றார். வீழ்த்த வேண்டிய முதலாளித்துவத்திடம் பாடம் கற்கச் சொன்ன சட்டபூர்வ மார்க்சிஸ்ட்களில் பலர், பின்னர் முதலாளித்துவத்தின் கட்சியான அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகக் கட்சியில் (கேடட்) இணைந்தனர்.
ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் முதல் மாநாடு
லெனின் சைபீரிய சிறைவாசத்தில் இருந்தபோது, மின்ஸ்க் நகரில் கட்சியின் முதல் மாநாடு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், கீவ், மாஸ்கோ எகாடெரிநோஸ்யாவ் போராட்டக் கழகங்களாலும் பண்ட் அமைப்பாலும் கூட்டப்பட்டன. 9 பேர் கலந்து கொண்ட 13.8.1898ல் நடைபெற்ற இம்மாநாட்டில், ராட்சென்கோ, எய்டல்மேன், கிரேமர் என்ற மூவர் கொண்ட மத்தியக் குழு தேர்வு செய்யப்பட்டது.
முதல் மாநாடு, கட்சிக்கு, பெயர் தந்தது.
போராட்டத்தின் உடனடி நோக்கங்களைத் தீர்மானித்தது.
தொழிலாளர் இயக்கத்தை சோசலிசத்துடன் இணைப்பதில் மகத்தான பங்காற்றியது.
ஆனபோதும், ஓர் அனைத்துந்தழுவிய கட்சித் திட்டத்தையோ, அமைப்புக் கோட்பாடுகளையோ உருவாக்குவதில் வெற்றி பெறவில்லை.
- தொடரும்
கட்டுரை
பங்களா கட்ட பாலம் கட்டு...
வீடு வாங்க ரோடு போடு...
ஜி.ரமேஷ்
தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சியில் இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளின் மந்திரிகள் முதல் கவுன்சிலர்கள் வரை அதிகம் சம்பாதிப்பது பாலங்கள், சாலைகள், கட்டுமானத் திட்டங்கள் மூலம்தான். பாலம் கட்டுவதையும் ரோடு போடுவதையும் முன்பு பொதுப்பணித் துறையின் மூலம் செய்து கொண்டிருந்தனர். தற்போது அதற்கென்றே தனியாக நெடுஞ்சாலைத் துறையை உருவாக்கியுள்ளார்கள்.
சென்னை மாநகராட்சியின் அஇஅதிமுக கவுன்சிலர்களின் கூட்டம் நடத்தி, கூட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபடும் கவுன்சிலர்கள் பெயர் சொல்லி அழைத்து எச்சரித்து, இப்படியே தொடர்ந்தால், மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் வந்தால், மாநகராட்சியை கலைத்துவிடுவ தாக ஜெயலலிதா மிரட்டினாலும் செலவழித்ததைத் திருப்பி எடுக்க, தமக்கும் மேலே இருப்பவர்களுக்கு கப்பம் கட்ட கவுன்சிலர்கள்தான் பாவம் என்ன செய்வார்கள்? நீங்கள் ஊழல் செய்யாதவரா என்று ஜெயலலிதாவைக் கேட்டுவிட முடியுமா? உடன்பிறப்புக்களுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் காட்ட வேண்டியுள்ளது.
உலகமய பொருளாதாரத்தில் போட்டி நிலையை உயர்த்தவும் உற்பத்தி மற்றும் செயல் திறனை அதிகரிக்கவும் சிறந்த சாலை கட்ட மைப்பு அவசியமாகிறது. நல்ல சாலை இணைப்புகள் நகர் மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன என்று மிகுந்த அக்கறையோடு ஆரம்பிக்கி றது நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் கொள்கை விளக்கக் குறிப்பு 2012-2013. மாநிலம் முழுவதும் சமநிலை சமூக - பொருளாதார வளர்ச்சி அடைய நல்ல சாலை இணைப்பு கள், அகலமான சாலைகள், சுற்றுச் சாலைகள், பாலங்கள், இரயில்வே கடவுகளில் மேம்பாலங்கள், கீழ்ப்பாலங்கள் மற்றும் சிறு துறைமுகங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றைச் செயல்படுத்துவதே இத்துறையின் இலக்காகும் என்றும் அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதும் பராமரிப்பதும் இந்தத் துறைதானாம்.
நடைமுறையில் நடப்பது எல்லாம் தலைகீழ். சாலைகள் 5 ஆண்டுகள்தான் தாக்குப்பிடிக்கும். அதனால் அவற்றை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும் என்று கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. ஆனால், நம்ம ஆட்சியாளர்கள் போடும் சாலைகள் 5 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தாலே பெரிய விசயம். பல கிராமங்களில் இன்றும் சாலை வசதியே கிடையாது. பல கிராமங்களில் சாலைவசதி கேட்டு மக்கள் போராடிக் கொண்டிருப்பதை தினசரிகளில் தினமும் நாம் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு 1,30,058 ச.கி.மீ. மக்கள் தொகை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 555 பேர். 2011ம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 1,36,60,717. அதாவது ஒரு சதுர கி.மீக்கு 105 வாகனங்கள். ஆனால், இவையெல்லாம் மாநிலம் முழுவதும் பரவிக்கிடக்கவில்லை. மாறாக நகர்புறங்களில் குவிந்து கிடக்கின்றன. 2011 புள்ளியியல் துறை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் 2,02,296 கிலோ மீட்டருக்கு சாலை கட்ட மைப்பு உள்ளதாகக் கூறுகிறது. இதில், 62,017 கி.மீ. நீள சாலைகள் மட்டுமே மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறைகளால் பராமரிக்கப்படுகின்றன. அதாவது தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை மற்றும் மாவட்ட இதர சாலைகளை மட்டும். மீதமுள்ள சாலைகளை உள்ளாட்சி அமைப்புகள் பராமரிக்கின்றன என்பது தெளிவாகிறது.
சட்டமன்றத்தில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கையின்போது அதன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சாலை கட்ட மைப்பின் தரம் மற்றும் திறன் மிக முக்கியமானது. பெருகி வரும் வாகனப் போக்குவரத்தை முன்னிட்டு சுகமான பயணம், பள்ளமில்லா சாலைகள், குறைந்த செலவில் பராமரிப்பு, ஆயுட்காலம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட சிறந்த சாலைகளை வழங்க தன் துறை உறுதி கொண்டுள்ளது என்றார். தளி, கேளமங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட் பட்ட 24 மலை கிராமங்களில் 18 கிராமங்களுக்கு சாலைகளே இல்லை என்றும் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றும் இந்தக் கிராமங்களில் பள்ளிக்கூடங்களும் கிடையாது என்றும் சமீபத்தில் பத்திரிகைகளில் வெளிவந்தது. இதுபோன்ற பல கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த கிராமங்களுக்கு சாலைகள் போடுவது தொடர்பாக மானியக் கோரிக்கையில் ஒன்றும் இல்லை.
அமைச்சரின் அக்கறை எல்லாம் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களின், முதலாளிகளின் கார்கள், பளபளக்கும் நான்கு, ஆறுவழி சாலைகளில் பறப்பதற்கே. முதற்கட்டமாக 2477 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை ரூ.1500 கோடி செலவில் தனியார் அரசு பங்களிப்புடன் தலீட்டு திருப்பு விகித அடிப்படையில் மேம்படுத்த மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் சில நெடுஞ்சாலைகள் ரூ.6500 கோடி செலவில் மேம்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளனவாம். அந்த செலவில் 20% தமிழக அரசு ஏற்றுக்கொண்டு 80% அந்நிய நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படுமாம். அந்நிய நிதி/கடன் பெற மத்திய அரசிற்கு முன்வைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்நிய நிறுவனங்கள் நெடுஞ்சாலைகளில் டோல் கேட் போட்டு வசூல் செய்வார்கள். மேலும் கொடுத்த கடனை வட்டிக்கு மேல் வட்டி போட்டு வசூல் செய்தும் விடுவார்கள். உலகமய, தனியார்மயக் கொள்கைகளை தெளிவாக அமல்படுத்துகிறது ஜெ.அரசு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
சாலை நிர்வாகத் திட்டம் என்ற பெயரில், தமிழ்நாட்டின் அனைத்து சாலை ஓடுதள நிலைமை குறித்த தகவல்களை கணினி மூலம் சேகரித்துப் பராமரிக்க நெடுஞ்சாலைத் துறையால் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாம். சாலைகளைப் பராமரித்துக் கொண்டிருந்த சாலைப் பணியாளர்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இப்போது கருவிகள் மூலம் சாலைகளைக் காக்கப் போகிறார்களாம். லேசர் கருவிகள் மூலம் சாலை தளம் பற்றிய தகவல்களைச் சேகரிப்பார்களாம். பாலங்களுக்காக ஏழைகளின் வீட்டினை இடித்து அப்புறப்படுத்தும் அரசு, தற்போது நிலம் கையகப்படுத்துவதற்கு நில சேகரிப்பு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்தப்போகிறது. இதன்படி நில உரிமை யாளர்களையும் பயனாளிகளாகச் சேர்த்துக் கொள்வார்களாம். பார்ட்னர் என்று சொல்லி பணம் கொடுக்காமல் ஏமாற்றும் திட்டம். இத்திட்டத்தின் மூலம் மீதமுள்ள நிலங்கள் நில உரிமையாளர்களிடம் பகிர்ந்தளிக்கப்படுமாம். அதை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளவோ, விற்கவோ செய்யலாமாம். இதற்காக நெடுஞ் ôலைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளது அரசு. கட்டாய நிலப்பறி, தனியார் பேச்சுவார்த்தை மூலம் நிலம் கையகப்படுத்துவது காலம் தாழ்த்துவதாக உள்ளதாம். வழக்கு போட்டுவிடுகிறார்களாம். அதனால், நிலத்திற்கு ஈடாக மேம்பாட்டு உரிமைகள் மாற்றம் (பழ்ஹய்ள்ச்ங்ழ் ர்ச் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற்ஹப் தண்ஞ்ட்ற்ள் - பஈத) என்று இந்தத் திட்டத்திற்கு பெயர் வைத்துள்ளார்கள்.
சாலையோர மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க 1 லட்சம் மரங்களை ஓராண்டில் நட உள்ளார்களாம். எங்கு தெரியுமா? நெடுஞ்சாலைத் துறையின் அலுவலக வளாகத்திற்குள்ளே.
அடுத்ததாக, புறவழிச் சாலை, வட்டச் சாலை, மேம்பாலங்கள், சிறுபாலங்கள், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னை மாநகரப் பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை மூன்று காலக்கட்டங்களில் நெடுஞ்சாலைத் துறையால் செய்து முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2010 - 15 காலக்கட்டத்தில் ரூ.8739 கோடி மதிப்பில் 205 பணிகள், 2016 - 22 கட்டத்தில் ரூ.3138 கோடி மதிப்பில் 77 பணிகள், 2023 - 26 கட்டத்தில் ரூ.2193 கோடி மதிப்பில் 58 பணிகள் செய்யப்பட உள்ளனவாம். இத்திட்டங்களில்தான் தேவையற்ற பாலங்கள், உதவாத சாலைகள் எல்லாம் வரும். அப்போதுதான் சிலபல கோடிகள் செலவு செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள், மேயர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் எல்லாம் தங்கள் கல்லாவை நிரப்ப முடியும். கடந்த திமுக ஆட்சியின்போது திருநெல்வேலி மாநகரத்தில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் பெயரில் வண்ணாரப்பேட்டையில் மேம்பாலம் கட்டினார்கள். அந்த பாலத்தை வாகனங்கள் போக்குவரத்து அதிகமாக உள்ள கிழக்கு மேற்காகக் கட்டாமல், பெரிய வணிக நிறுவனங்களி டம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வடக்கு தெற்காகக் கட்டினார்கள். அதுபோக ஒப்பந்தக்காரர்களிடம் வாங்கிய கமிஷன் வேறு.
தற்போது அரியணை ஏறியிருக்கும் அதிமுக அரசு பாளையங்கோட்டை மார்க்கெட் ரோட்டில், ஒருவழிப்பாதையில், அதிக பஸ் போக்கு வரத்து இல்லாத சாலையில் தேவையேயில்லாமல் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.45 கோடி ஒதுக்கியுள்ளது. நெல்லை மாநகராட்சியும் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. ரூ.45 கோடியில் 10% ஆட்சியாளர்களுக்கு ஒப்பந்தக்காரர்களால் கொடுக்கப்பட்டுவிடுமாம். இப்போது கூடுதலாக 10% தரவேண்டும் என்று கேட்கிறார்களாம். 45 கோடியில் 10 கோடி கமிஷனுக்குக் கொடுக்கும் காண்ட்ராக் டர் நிச்சயமாக தான் 10 கோடி சம்பாதிக்கப் பார்ப்பார். மீதமுள்ள 25 கோடியில்தான் மேம்பாலம். அது என்ன லட்சணத்தில் இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. சமீபத்தில், திருநெல்வேலி மாநகராட்சியில் 2012 - 13 வரவு செலவு திட்ட மதிப்பீட்டைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் இந்த நிதியாண்டில் ரூ.227.68 கோடி செலவிடப்பட உள்ளது. போக்குவரத்து நெருக்கடியாக உள்ள சாலைகளின் நடுவில் பசுமையான புல் தடுப்பு தரைகள் அமைக்க, 8 பூங்காக்களை உருவாக்க, வணிக வளாகங்கள் அமைக்க, தண்ணீர் இல்லாத நயினார் குளத்தில் படகுவிட என காசடிக்கும் திட்டங்கள் நீண்டு கொண்டே போகின்றன.
குடிக்கத் தண்ணீர் இல்லாமல் ஆறுகளில் மணலை அள்ளிக் கொள்ளையடிப்பதை தடுக்க முடியாதவர்கள் ஆற்றங்கரைகளில் ஆண்டாண்டாய் வாழ்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அப்புறப்படுத்திவிட்டு அங்கே மனமகிழ் பூங்கா அமைக்கப் போகிறார்களாம். இருக்கிற சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. பாதாளச் சாக் கடைத் திட்டம் செயல்படாமல், சாக்கடை நீர் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. பாசனநீர் கால்வாய் கழிவுநீர் ஓடைகளாய் மாறி காலராவும் டெங்குவும் சிக்கன்குன்யாவும் பரவி மக்களைக் கொல்கின்றன. இந்தியாவிலேயே அதிகமான அளவு டெங்கு காய்ச்சலால் இறந்தவர்கள் எண்ணிக்கை திருநெல்வேலியில்தான். நெல்லை மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை. சென்னையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மெரினாவை அழகுபடுத்த, கூவத்தைச் சுத்தப்படுத்த என்று பட்ஜெட் போட்டு பணம் பார்த்துவிடுவார்கள். கூவம் மட்டும் அதே மணத்தோடு அப்படியே இருக்கும். திமுகவைப் போல் சென்னையில் ஏராளமான பாலங்களைக் கட்ட அதிமுக அரசும் திட்டமிட்டுள்ளது. இராஜீவ் காந்தி சாலை என்ற பெயரில் தகவல் தொழில் நுட்ப விரைவுச் சாலை. 50 கோடியில் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறுவழிச் சாலையாக அமைக்கப் போகிறார்கள். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று மோனோ ரயில் கொண்டுவருகிறார் ஜெயலலிதா.
ஆனால், எந்தத் திட்டமும் மக்களுக்கு அல்ல. மந்திரிகளுக்கும் மகாராணிகளுக்குமே. “பங்களா கட்ட பாலம் கட்டு. வீடு வாங்க ரோடு போடு” இதுதான் கழக ஆட்சியாளர்களின் தாரக மந்திரம்.
மண்ணில் பாதி
மஞ்சள் பிசாசு தவிர்க்க முடியாதது அல்ல
ரஷ்ய பொருளாதார அறிஞர் அனிகின் எழுதி, 1978ல் வெளியிடப்பட்ட ‘தங்கம்: மஞ்சள் பிசாசு’ என்ற நூலில் தங்கம் கண்டுபிடிக்கப்படுவது, தேச, சர்வதேசப் பொருளாதாரத்தில் அதன் இடம், சமூகத்தில் அது பெற்றுள்ள தகுதி ஆகியவை பற்றி சொல்லும்போது தங்கம் உயிர் வாழ அவசியமான ஆக்சிஜனுடன் வேதியியல்ரீதியாக சேர்வதில்லை என்றும் தங்கம் எப்போதும் படுகொலையுடன், சில நேரங்களில் மனிதப் படுகொலைகளுடன் சேர்ந்துதான் அறியப்படுகிறது என்றும் சொல்கிறார். அவர் தங்கத்தை பிசாசு என்றே அழைக்கிறார்.
1848ல் கலிஃபோர்னியா நீரோடைகளில், ஆற்றுப்படுகைகளில், சாதாரண நிலத்தில் தங்கம் முதன்முதலில் கண்டெடுக்கப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 3 லட்சம் பேருக்கும் மேல் தங்கத்தை நோக்கி அங்கு சென்றபோது, சென்று சேர்வதற்கு முன் வழியிலேயே பலர் மடிந்தார்கள். தங்கத்தை கண்டுபிடிக்கும் போக்கில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த, விவசாயம் செய்த நிலத்தில் இருந்து அகற்றப்பட்டார்கள். 1848 முதல் 1868 வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் மடிந்து போனார்கள். அவர்களில் 4,500 பேர் கொல்லப்பட்டவர்கள். மீதமிருந்தவர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டார்கள். தங்கம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்த கலிஃபோர்னியா தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பின் அமெரிக்காவின் ஒரு பகுதியானது. தங்கம் எடுக்க பாறைகளுக்கு வெடி வைத்தபோதும், தங்கச் சுரங்கங்களிலும் மடிந்தவர்கள் பலர். தங்கத்துக்காக வரலாற்று ரீதியாக மக்கள் உயிர்விடுகிறார்கள்.
பழங்குடி மக்களை மரணத்தின் வாயிலில் தள்ளி சமூகத்துக்கு வந்த தங்கம் முதலில் உணவு, உடை போன்றவற்றுக்கு பண்ட மாற்று எனத் துவங்கி பிறகு சர்வதேச பொருளாதார முக்கியத்துவம் பெற்றதாக காலப்போக்கில் வளர்ந்தது.
1980களின் இறுதிப்பகுதியில் இந்தியாவில் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டபோது நெருக்கடியைச் சமாளிக்க 1991ல் இந்திய அரசாங்கம் தனது தங்க இருப்பை சர்வதேச நிதியத்திடம் அடகு வைத்து நிதி பெற்றது. நாட்டு மானம் அடகு வைக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் அன்று கருத்துக்கள் உலாவின.
பண்டத்தின் மதிப்பு அதை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சமூக உழைப்பு நேரத்தால் கணக்கிடப்படுகிறது. தங்கம் எடுக்க தேவையான சமூக உழைப்பு நேரம் கூடுதல் என்பதால் அதன் மதிப்பும் கூடுதல். உலகமய காலத்தில் தங்கம் உயிர் பறிக்கும் காரணங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாதவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் சாதாரண குடிமக்கள் தங்கம் வைத்திருப்பதனாலேயே கொல்லப்படுகிறார்கள். வீடியோ விளையாட்டு வாங்க ரூ.5,000 வேண்டும் என்பதற்காக 5 சவரன் நகை அணிந்திருந்த பக்கத்து வீட்டு 61 வயது மூதாட்டியை 14 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் சமீபத்தில் தமிழ்நாட்டை உலுக்கியது. பார்ட்டிகள் வைக்க செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் சாதாரணமாக நடக்கின்றன.
சென்ற ஆட்சியில் தங்கத்துக்காக நடந்த கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் மக்களை பீதியுறச் செய்தபோது, அதிர்ச்சியுறச் செய்தபோது சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருந்தார். தேர்தலில் அஇஅதிமுக வெற்றிபெற்றது தெரிந்தபோது, கொள்ளைக்காரர்கள் எல்லாம் அன்றே ஆந்திரா பக்கம் ஓடிவிட்டார்கள் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சொன்னார்கள். காலை வேலைக்குச் செல்பவர்கள் மாலை வீட்டுக்குத் திரும்பும்போது, வயதான தாயார், மனைவி உயிருடன் இருப்பார்களா என்று கவலைப்படத் தேவையில்லை என்றும் தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது என்றும் ஜெயலலிதாவும் சொன்னார்.
முந்தைய ஆட்சியில் வாரத்துக்கு மூன்று என்று நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் இப்போது நாளொன்றுக்கு மூன்றுக்கும் மேல் என்றாகிவிட்டன. இந்தச் சம்பவங்கள் பற்றி அறிவிக்கப்படுகிற செய்திகள் தனித்தனியாக சொல்லாமல் இன்று இத்தனை இடங்களில் இத்தனை கிலோ தங்கம் கொள்ளை போனது, இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று மொத்தமாக சொல்ல வேண்டிய அளவு தங்கம் கொள்ளை போவதும் அதற்காக கொலைகள் நடப்பதும் அதிகரித்துவிட்டன.
வீதிகளிலும் வீடுகளிலும் தங்கத்துக்காக நடக்கிற கொலை, கொள்ளைச் சம்பவங்களில் உயிரிழப்பதும் தாக்குதலுக்கு ஆளாவதும் பெரும்பாலும் பெண்கள். கொள்ளை நடக்கும் போது அந்தப் பெண்களுடன் இருக்க நேர்ந்து கொல்லப்படுகிற சில ஆண்கள் விதிவிலக்கு.
காதுகளில் துளையிடுவது அவற்றில் சில உலோகங்களை அணிவது, கைகளில், கால்களில் அணிவது உடலுக்கு நல்லது என்பது முதல் சில நோய்களுக்கு மருந்து என்ற விதத்தில் (வலிப்பு வந்தால் இரும்பு தருவது போல்) துவக்கத்தில் ஆண்களும் தங்கம் அணிவது என்ற பழக்கம் படிப்படியாக மாறி பெண்கள் மட்டும் தங்கம் அணிவது என்றான பிறகு, பெண் என்றால் தங்கம் அணிய வேண்டும் என்பதும் எழுதப்படாத சமூக விதிகளில் ஒன்றானது. பிறகு, பெண் அணிகிற தங்கம் பெண்ணின் அழகைக் கூட்டிக் காட்டுவது என்பதைவிட அந்தப் பெண்ணின் தந்தை அல்லது கணவனின் சமூகத் தகுதியைக் குறிப்பதாக ஆனது. எவ்வளவு அதிகமாக ஒரு பெண் தங்கம் அணிகிறாரோ அந்தப் பெண்ணின் தந்தையும் கணவனும் அவ்வளவு பொருள் ஈட்டுகிறார்கள் என்பது பொருள். (தங்கம் அழகைக் கூட்டிக் காட்டுமா என்பது வேறு விவாதம்). பெண்ணை நான்கு சுவர்களுக்குள் அடைக்கும் விதவிதமான வழிகளில் தங்கமும் சேர்ந்துகொண்டது. சரம்சரமாய் தங்கம் சுமக்கும் பெண்களுக்கு ஆண்கள் கருத்தளவில் பாதுகாவலர்களாயினர். (யதார்த்தத்தில் அது நடப்பதில்லை). பெண்கள்தான் தங்கத்துக்காக அலைகிறார்கள் என்றும் ஆண்கள் யோகிகள் என்றும் பெண்ணை பின்னுக்குத் தள்ளும் கருத்துக்கள் பின்னப்பட்டன. புழங்க விடப்பட்டன.
ஆண் வரதட்சணை தரும் வழக்கம் பிறகு படிப்படியாக பெண் வரதட்சணை தரும் பழக்கமாக வளர்ந்தபோது தங்கத்துக்காக குடும்பங்களுக்குள் கொலைகள் நடக்கத் துவங்கின. மண்ணெண்ணெய் அடுப்பு எரிந்தும் எரிவாயு அடுப்பு வெடித்தும் பெண்ணின் உயிரைப் பறித்தன. ஆக, தங்கத்தின் வடிவில் குடும்பங்களுக்கு உள்ளும், வெளியிலும் பெண்களுக்கு ஆபத்து உடனுறைகிறது.
உலகமயம் வேகம் பிடித்து, பெண்கள் உழைப்புச் சந்தையில் நுழைந்து தங்கள் சொந்தக் காலில் நிற்கிறபோது, வரதட்சணை தவறு என்று ஆண்களும் பெண்களும் முடிவுக்கு வந்து, அதை அமலாக்கவும் முயற்சி செய்கிறபோது, காதலுக்கு மரியாதையுடன் திருமணங்கள் நடக்கிறபோது, வரதட்சணை கொடுப்பது அதிலும் தங்கமாகக் கொடுப்பது பெண் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றும் அம்சமாக உறுதிபெற்றுவிட்டது. நெல்லை, குமரி மாவட்டங்களில் 100 பவுன் தங்கம் தராத பெண்ணின் குடும்பத்துக்கு மரியாதை குறைவு. கீழ்நடுத்தர குடும்பங்களில் கூட 20 பவுன் தங்கம் தராவிட்டால், அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் அந்தஸ்து குறைவு. பணக்காரர்கள் தங்கள் படாடோபத்துக்காக தொடரும் பழக்கம் பணமற்றவர் வாழ்க்கையை சிதைத்துவிடுகிறது. கிராமப்புறங்களில் வேலை உறுதித் திட்டத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டும் வறியவர் கூட பெண்ணுக்குத் திருமணம் என்றால் தங்கம் வாங்கியே கடனாளி ஆகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். நகர்ப்புற படாடோபத்துக்கு விலை கூடுதல். அதனால் துயரத்தின் ஆழமும் அகலமும் கூடுதல்.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவு காரணமாக வசதி படைத்தவர்கள் சரிகிற பங்குச் சந்தையில் இருந்து தங்கள் முதலீட்டு கவனத்தை தங்கத்தின் பக்கம் திருப்பினார்கள். அமெரிக்கப் பணக்காரர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியதால் ஏற்பட்ட தங்க விலை உயர்வு இந்தியாவையும் பிடித்துக் கொண்டது. தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரிக்கிற நிலையில் இந்திய, தமிழக பண்பாட்டைக் காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிற கீழ் நடுத்தரக் குடும்பங்கள் அத்தியாவசியப் பொருட்கள் விலைஉயர்வால் அவதிப்படுவதைப் போல் தங்கம் விலைஉயர்வாலும் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார்கள். சொத்தை அடகு வைத்து கடன் வாங்கி பெண்ணுக்குத் தங்கம் வாங்கித் தந்து அனுப்பி வைக்கிறார்கள். அதை கத்தி காட்டி மிரட்டி எடுத்துச் சென்று விடுகிறார்கள். மறுக்கும், எதிர்த்துப் போராடும் பெண்களை கொலையும் செய்து விடுகிறார்கள்.
இத்தனை துன்பம் தருகிற அந்தத் தங்கம்தான் எதற்கு? வசதி படைத்தவர்கள் முதலீடு செய்து தங்கம் சேர்க்கிறார்கள். அவர்கள் தங்கம் அணிவது மிகக்குறைவு. நீதா அம்பானி தங்கம் அணிந்து காணப்படுவதை காண்பது அரிது. இப்போது சசிகலா கூட தங்கம் அணிவதில்லை. அதனால் அவரிடம் தங்கம் இல்லை என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா அந்த பிரபலமான திருமணத்தில் அணிந்ததுதான் ஊரறிய அணிந்த கடைசி தங்கம். இந்த முறை பதவியேற்றபோது தோடு அணியச் சொல்லி கட்சி அணிகள் வற்புறுத்தியதால் அவர்கள் மனம் துன்பப்படக் கூடாது என்பதால் தோடு அணிந்ததாக நீண்ட விளக்கம் ஒன்று தந்தார். தங்கம் அணிவதில் நீதா அம்பானி விசயமும் ஜெயலலிதா விசயமும் வேறு வேறென்றாலும் அவர்கள் தங்கம் அணிவதில்லை என்பது நிஜம்தான். மாயாவதியும் மீராகுமாரும் தங்கம் அணிவதில்லை என்பதால் தங்கம் இல்லாதவர்கள் அல்ல. அழகாக இருப்பதையே தொழிலாகக் கொண்ட, வசதியும் வாய்ப்புக்களும் உள்ள நடிகர்கள் கூட திரைப்படங்களில் கூட தங்கம் அணிந்து காட்சி தருவது குறைவுதான். இவர்கள் எல்லாம் தங்கம் அணிவதில்லையே தவிர தங்கத்தை சேமிப்பாக வைத்திருப்பவர்களே. தங்கத்தை கண்டுபிடித்த, முதன்முதலில் தங்கம் சேமிக்கத் துவங்கிய கலிஃபோர்னியா பெண்கள் கூட இன்று தங்கம் அணிவதில் நாட்டம் காட்டுவதில்லை. நடுத்தர மக்கள் நாளைய வாழ்வுக்கான உத்தரவாதத்துக்காக, தங்கம் வாங்க பணப்பையும் மனமும் ஒத்துழைப்பதால் தங்கம் சேர்ப்பதில் தவறில்லை. தங்கம் வாங்குவது வேறு. தங்கம் அணிவது வேறு.
ஆக, சாமான்யப் பெண்களுக்குச் சொல்லி ஏமாற்றி வைத்திருப்பதுபோல் தங்கம் அணிவதென்பது தவிர்க்க முடியாததல்ல. தங்கம் அணியாதது கவுரவக் குறைவோ அந்தஸ்து குறைவோ அல்ல. அதனால் பொட்டுத் தங்கம் வாங்க சுமங்கலித் திட்டம் முதல் வெவ்வேறு அடிமைச் சூழல்களில் வறுபடத் தேவையில்லை. வசதி இல்லாதவர்களுக்கு தங்கம் இருந்தால் அது அவசர காலத்தில் காற்றில் கரையும் கற்பூரம். அதற்கு மேல் தங்கத்துக்கு முக்கியத்துவம் தருவது உயிர் வரை பாதிக்கும், வாழ்க்கையின் அனைத்துத் துன்பங்களையும் ஒருங்கே கொண்டு வந்து சேர்க்கும் என்பதைத்தான் வரலாறு, பூகோளம், வடக்கு, தெற்கு எல்லாம் சொல்கிறது.
சங்கிலிப் பறிப்பை, தங்கம் பறிக்க நடக்கும் கொலைகளில் பெண்கள் உயிரிழப்பதைக் கட்டுப்படுத்த ஜெயலலிதாவுக்கு உண்மையில் அக்கறை இருக்காது என்பது தமிழக மக்களுக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் தங்கம் அணியாதிருப்பதால் அல்லது தங்கம் வாங்காமல் இருப்பதால் அல்லது தங்கம் சேமிக்காமல் இருப்பதால் யாருடைய சமூக அந்தஸ்தும் எந்த விதத்திலும் குறைந்து விடுவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. வாங்கி, அணிந்து, சேமித்து, அதனாலேயே, அதற்காகவே உயிரை விடுவதை விட அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. மஞ்சள் பிசாசு தவிர்க்க முடியாதது அல்ல.
களம்
முற்போக்கு பெண்கள் கழக ஆர்ப்பாட்டம்
30.06.2012 அன்று பெண்கள் மீதான நீதிமன்றங்கள், அரசு நிறுவனங்கள், காவல்துறை ஆகியவற்றின் ஒடுக்குமுறைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் நடத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக நெல்லையில் முற்போக்கு பெண்கள் காக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் அன்பு செல்வி தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, கட்சி மாவட்ட செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர் தோழர் ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் ராஜலட்சுமி, மீனா, மாரியம்மாள், வேலம்மாள், ரமணி, ஈஸ்வரி, இந்திரா, சண்முகவடிவு, புஷ்பம் ஆகியோர் உரையாற்றினார்கள்.
ஓய்வூதியதாரர்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக
05.07.2012 அன்று ஓய்வூதியதாரர்களை வஞ்சிக்கும் மத்திய அரசாங்கத்தை கண்டித்து சென்னையில் பிஎப் மண்டல அலுவலகத்தின் முன் அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3,000 என மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓய்வூதியம் பெறும் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் எ.எஸ்.குமார், பாரதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சென்னை மாவட்டக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர் வேணுகோபால், முனுசாமி, மோகன் உட்பட சங்கத்தின் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதியோர் உதவித் தொகை கோரி
அம்பத்தூர் வரதராஜபுரத்தில் குமாரசாமி தெருவில் வசிக்கும் தோழர் மீனாட்சியம்மாள் முதியோர் உதவித் தொகை பெற்று வந்தவர். முகவரி மாற்றம் என்ற ஒரு காரணத்தை சொல்லி ஓராண்டுக்கும் மேலாக உதவித் தொகை நிறுத்தப்பட்டது. ஜெ. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகை ரூ.1000த்தை அந்த வறிய மூதாட்டி பெற உழைப்போர் உரிமை இயக்க தோழர்கள் மோகன், புகழ்வேந்தன் பல்வேறு நடவடிக்கைகளை, போராட்டங்களை எடுத்த பிறகு சென்ற ஜøலை 7 அன்று முதியோர் உதவித் தொகை ரூ.1000 கிடைக்கப் பெற்றார். ஒரு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு ஓராண்டு போராட்டம். மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இதுபோல காத்திருக்கிறார்கள்.
அவிதொச கண்டன கூட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஜெ. அரசைக் கண்டித்து 09.07.2012 அன்று விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் கண்டன கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்திற்கு செயலாளர் தோழர் லோகநாதன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்தனன், பொதுச் செயலாளர் தோழர் ஜானகிராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். அவிதொச தலைவர்களில் ஒருவரான தோழர் செண்பகவள்ளி, கலியமூர்த்தி, உட்பட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆகஸ்ட் 9, நாடாளுமன்ற முற்றுகை நோக்கி
மாணவர், இளைஞர் முன்முயற்சிகள்
ஆகஸ்ட் 9 நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்துக்கான தயாரிப்பு வேலைகள் மற்றும் பிரச்சாரத்தில் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 530க்கு மேற்பட்ட மாணவர், இளைஞர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர், இளைஞர் உரிமைக்கான பிரச்சார இயக்கத்தில் இதுவரை 20,000க்கும் மேல் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஊக்கமான பிரச்சாரம் மாணவர் இளைஞர் மத்தியில் நடைபெற்று வருகிறது. மாணவர் கழக, இளைஞர் கழக மாநில அமைப்புக் குழு கூட்டங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றன.
29.06.2012 அன்று கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தனவேல், மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் ராஜசங்கர், புரட்சிகர இளைஞர் கழக மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் விமல் புகழேந்தி, மாலெ கட்சி மாநில செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாணவர், இளைஞர் உரிமை கருத்தரங்கங்கள்
01.07.2012 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர், இளைஞர் உரிமை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக அரசு அனைத்து தனியார் பள்ளியில் கல்வி உரிமை சட்டப்படி ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோரியும், வேலை கிடைக்காதோர் உதவி தொகை ரூ.5000 வழங்க வலியுறுத்தியும், கவுரவத்துடனான வேலையை அடிப்படை உரிமையாக்கக் கோரியும், மாணவர், இளைஞர்களின் வேறு பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடந்த கருத்தரங்கத்தில் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் அன்பு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், எ.எஸ்.குமார், திருவள்ளூர் மாவட்ட அய்சா அமைப்பாளர் தோழர் சீதா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் உரையாற்றினர். இக்கருத்தரங்கத்தில் ஊத்துக்கோட்டையை சுற்றி உள்ள மெய்யூர், கம்மர்பாளையம், தாமரை குப்பம், பால்ரெட்டி கண்டிகை, பாமரம்பேடு, ஊத்துக்கோட்டை, சிற்றபாக்கம், ஆலிங்காடு, மாத்தூர், நெற்குன்றம், எம்.ஜி.ஆர்.நகர், செங்குன்றம் பகுதியில் இருந்து 150 பேர் வரை மாணவர், இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 23 சட்டமன்ற முற்றுகை, ஆகஸ்ட் 9 அன்று நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள கருத்தரங்கில் அழைப்பு விடுக்கப்பட்டது.
08.07.2012 அன்று அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் கல்வி உரிமை சட்டத்தை தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அம்பத்தூரில் கருத்தரங்கம் நடத்தின. இக்கருத்தரங்கத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ராஜகுரு தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாரதி சிறப்புரையாற்றினார். அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, அகில இந்திய மாணவ கழக திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் சீதா, மற்றும் சேலத்தைச் சேர்ந்த தோழர் சத்தியகிருஷ்ணன் உரையாற்றினார்கள். கட்சி மாவட்ட செயலாளர் தோழர் சேகர், உழைப்போர் உரிமை இயக்க மாவட்டச் செயலாளர் தோழர் மோகன், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் முனுசாமி வாழ்த்துரையாற்றினார்கள்.