COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, July 2, 2012

மாலெ தீப்பொறி 2012, ஜுலை 01 - 15 தொகுதி 10 இதழ் 18

கல்வி

அரசும் புரட்சியும்

லெனின்

அரசின் உயர்அதிகாரிகளுடைய சம்பளம் குறைக்கப்பட வேண்டுமென்பது சூதறியாப் பேதைமை கொண்ட புராதன ஜனநாயகத்தின் கோரிக்கையாக ‘மட்டுமே’ தோன்றுகிறதாம். நவீன சந்தர்ப்பவாதத்தின் ‘மூலவர்களில்’ ஒருவரான முன்னாள் சமூக-ஜனநாயகவாதி எட்வர்டு பெர்ன்ஸ்டைன் ‘புராதன’ ஜனநாயகம் குறித்துக் கூறப்படும் கொச்சையான முதலாளித்துவ கேலியையும் கிண்டலையும் பன்முறை தாமும் திருப்பிக் கூறியிருக்கிறார். எல்லா சந்தர்ப்பவாதிகளையும் இன்றைய காவுத்ஸ்கிவாதிகளையும் போலவே அவரும் நிலைமையைப் புரிந்துகொள்ளவே இல்லை. முதலாவதாக, ‘புராதன’ ஜனநாயகத்துக்கு ஓரளவு ‘பின்னடைந்து செல்லாமல்’ (வேறு எப்படித்தான் பெரும்பான்மையோரும், பிறகு விதிவிலக்கின்றி மக்கள் அனைவரும் அரசுப் பணிகளை ஏற்று நிறைவேற்ற முற்படுவதாம்?) முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு மாறிச் செல்வது சாத்தியமன்று என்பதையும் இரண்டாவதாக, முதலாளித்துவம், முதலாளித்துவ கலாச்சாரம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ‘புராதன ஜனநாயகமானது’ வரலாற்றுக்கு முற்பட்ட, அல்லது முதலாளித்துவக்கு முற்பட்ட காலங்களைச் சேர்ந்த புராதன ஜனநாயகத்தைப் போன்றதல்ல என்பதையும் புரிந்துகொள்ளவே இல்லை. முதலாளித்துவ கலாச்சாரம் பெருவீத பொருளுற்பத்தியையும், ஆலைகளையும், ரயில் பாதைகளையும், அஞ்சல் துறையையும், தொலை பேசிகளையும், இன்ன பிறவற்றையும் தோற்றுவித்திருக்கிறது. இவற்றின் அடிப்படையில் பழைய ‘அரசு அதிகாரத்தின்’ பணிகளில் மிகப் பெருவாரியானவை மிகவும் சுலபமாகிவிட்டதால், எழுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் எளிதில் செய்துவிடக்கூடிய மிகமிகச் சுலபமான பதிவு செய்தல், தொகுத்து வைத்தல், சரி பார்த்தல் ஆகிய வேலைகளாகிய இவற்றை குறுக்கிக் கொண்டுவிட முடியும். சாதாரண  ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களை’ பெற்று இந்த வேலைகளை எளிதில் செய்துவிடலாம். தனிச் சலுகைகள், ‘அதிகார ஆடம்பரங்கள்’ இவற்றை இம்மியும் விட்டு வைக்காமல் இந்தப் பணிகளில் இருந்து அறவே களைந்து விட முடியும். (களைந்து விடவும் வேண்டும்).
விதிவிலக்கின்றி எல்லா அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படுதல், எந்நேரத்திலும் பதவியிலிருந்து திருப்பி அழைக்கப்படக் கூடியவர்களாய் இருத்தல், அவர்களுடைய சம்பளங்களை சாதாரணத் ‘தொழிலாளர்களுக்குரிய சம்பளங்களின்’ நிலைக்கு சமமாக்குதல் - ‘கூறாமலே விளங்கும்’ இந்த சர்வசாதாரண ஜனநாயக நடவடிக்கைகள், தொழிலாளர்களுடைய நலன்களையும் விவசாயிகளின் மிகப்பெருவாரியானோரின் நலன்களையும் முழு அளவுக்கு ஒன்றுபடச் செய்வதோடு, அதேபோது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கு இட்டுச் செல்லும் பாலமாகவும் அமைகின்றன. அரசின் புனரமைப்பு சம்பந்தமான, முற்றிலும் அரசியல் வழியிலான சமுதாயப் புனரமைப்பு சம்பந்தமான நடவடிக்கைகளே இவை. ‘உடைமை பறிப்போர் உடைமை பறிக்கப்படுதல்’ நடைபெறுவதுடனோ, அதற்கான தயாரிப்புகளுடனோ இணைக்கப்படும்போது மட்டும்தான், அதாவது உற்பத்திச் சாதனங்களில் முதலாளித்துவ தனி உடைமை சமுதாய உடைமையாய் மாற்றப்படுவதுடன் இணைக்கப்படுவதோடு மட்டுமே, இந்த நடவடிக்கைகள் அவற்றின் முழுப்பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகின்றன என்பதை கூறத் தேவையில்லை.
‘எல்லா முதலாளித்துவ புரட்சிகளையும் எழுப்பிய அந்தக் கவர்ச்சிக் கோஷமாகிய ‘மலிவான’ அரசாங்கம், என்பதைக் கம்யூனானது செலவினங்களுக்கு இரு பெரும் வழிகளாய் அமைந்த சேனையையும் அதிகார வர்க்கத்தையும் ஒழித்ததன் மூலம் நடைமுறை உண்மையாக்கிற்று’  என்று மார்க்ஸ் எழுதினார்.
ஏனைய குட்டி முதலாளித்துவப் பகுதியினரில் எப்படியோ அதுபோலவே, விவசாயிகளிடமிருந்தும் மிக சொற்பமானோர் மட்டுமே முதலாளித்துவ அர்த்தத்தில் ‘மேல் நிலைக்கு உயர்கிறார்கள்’ ‘வாழ்க்கையில் முன்னேறிச் சுகமாய் வாழ்கிறார்கள்’, அதாவது செல்வமுடையோராகவோ முதலாளிகளாகவோ அல்லது வசதிபடைத்த தனிச் சலுகையுள்ள அதிகாரிகளாகவோ ஆகின்றனர். விவசாயிகள் இருந்துவரும் முதலாளித்துவ நாடு ஒவ்வொன்றிலும் (மிகப்பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகள் இருக்கிறார்கள்), மிகப்பெரும்பகுதி விவசாயிகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுகிறார்கள்; அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என, ‘மலிவான’ அரசாங்கம் வேண்டும் என ஏங்குகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமே இதனைச் சித்திபெறச் செய்ய முடியும். இதைச் சித்தி பெறச் செய்வதன் மூலம் பாட்டாளி வர்க்கம் அதே போதில் அரசை சோசலிச வழியில் புனரமைத்திடுவதை நோக்கி முன்னேறிச் செல்கிறது.

தலையங்கம்


புல்டோசர் யாகம்

போயஸ் கார்டன் வீட்டில் யாகம் நடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியிட்ட ஜுனியர் விகடனுக்கு, நக்கீரனுக்கு நேர்ந்த கதி நேரவில்லை. ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்துப் போக வில்லை. கல்லெறியவில்லை. தண்ணீர், மின்சாரம் இணைப்புக் களை துண்டிக்கவில்லை. அம்மா சார்பாக அரசு வழக்கறிஞர் வழக்கு மட்டும் போட்டிருக்கிறார்.
அதில் போயஸ் கார்டனிலோ, பையனூரிலோ யாகம் எதுவும் நடத்தப்படவில்லை என்று அவர் சொல்கிறார். அம்மா சட்டமன்றத்தில் ஏகப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருப்பதாகவும் மக்கள் அவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் அதனால் யாகம் நடத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும் சொல்லியுள்ளார். (அரசு வழக்கறிஞர் அய்தராபாத் வீட்டை சேர்த்துச் சொல்லவில்லை). இந்த செய்தியையொட்டி பகுத்தறிவாளர்களுக்கு கேள்விகள் பல எழுகின்றன. அவை ஒரு புறம் இருக்கட்டும். அதை விட முக்கியமான கேள்விகள் சில கேட்கப்பட வேண்டியுள்ளது.
ராஜீவ்காந்தி சாலையையும் இந்திரா நகரையும் இணைக்கும் பாலம் ஒன்றை அம்மா சமீபத்தில் திறந்து வைத்தார். அந்தப் பாலத்துக்குச் செல்லும் வழியில் சிலபல வீடுகளும் ஒரு கோயிலும் இருந்தன. இன்று அவை இல்லை. குப்பைகள் அகற்ற முடியாத சென்னை மாநகராட்சி அந்த வீடுகளையும் கோயிலையும், அங்கு வாழ்ந்த மக்களை, வீடுகளை விட்டு வெளியே வரச் சொல்லிவிட்டு அவர்கள் கண் முன்னாலேயே புல்டோசர் கொண்டு இடிக்கிறது. ஒரே நாளில் அகற்றுகிறது.
வேலைக்குச் சென்றிருக்கும் என் கணவரும் பள்ளிக்குச் சென்றிருக்கும் என் குழந்தைகளும் வந்து வீடு எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் என்று கத்திக்கொண்டே சரஸ்வதி என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அறுபது வருடங்களாக அங்கு குடியிருக்கும் 89 வயதான கமலம்மா நான் இங்கிருந்து செல்லவே மாட்டேன், அவர்கள் என்னையும் இடித்துத் தள்ளட்டும் என்று சொல்கிறார். நடக்க முடியாத 72 வயது கோவிந்தனை, அவர் வீட்டில் இருந்த பொருட்களுடன் அப்படியே வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து வெளியே விட்டுவிட்டு அந்த வீட்டை இடிக்கிறார்கள்.
சரஸ்வதியின் எதிர்ப்பால் அங்கிருந்த குடும்பங்களுக்கு இடைக்கால நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி டோக்கன்கள் கொடுத்துள்ளது. அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் தருவதாகவும், அங்கு கட்டுமான வேலைகள் முடியாததால் இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று சொல்லியுள்ளார்கள். அந்தக் குடும்பங்கள் இன்று தெருவில் நிற்கின்றன. அந்தப் பாலத்தில் கார்கள் விர்ரென்று பறக்க வீடிழந்த அந்த மக்கள் கீழே நின்று அவற்றை ஆவென்று பார்க்க வேண்டும்.
அந்தக் குடும்பங்களுக்கு தங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்த பிறகு அந்தப் பாலங்களில் கார்கள் பறந்தால் போதாதா? அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியாவது கார்களைப் பறக்க வைக்க என்ன அவசரம்? கொடநாடு சென்றுவிட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் ஆகப்பெரும்பான்மை பெற்றுள்ள ஜெயலலிதா, மக்கள் மத்தியில் மரியாதை பெற்றுள்ள ஜெயலலிதா இந்த மக்களின் அவல நிலைக்கு என்ன தீர்வு சொல்வார்? குடிசை மாற்று வாரிய வீடுகள் தயாராகும் வரை போயஸ் கார்டனின் கார்டனிலோ, பையனூரிலோ, சிறுதாவூரிலோ அவர்களைத் தங்க வைக்க முடியுமா? 2023க்குள் தமிழ்நாடு சொர்க்கநாடு ஆகிவிடும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எனவே வீடிழந்த அந்த மக்கள் அங்கு தங்குவதில் ஜெயலலிதாவுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்க வாய்ப்பில்லை. மட்டுமின்றி அவர் இந்த மக்களுக்கு வீடு கிடைக்கும் அந்த இரண்டு மாதங்கள் வரை கொடநாட்டிலேயே தங்கி அரசுப் பணிகளை கவனிக்கலாம்.
கூனூரில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் 6100 தொழிலாளர்களுக்கு சில மாதங்களாகச் சம்பளம் தரப்படவில்லை. இவர்களில் 5000 பேர் இலங்கை அகதிகள். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு தர வேண்டிய ஓய்வூதியப் பயன்கள் ரூ.2.33 கோடி வரை இன்னும் தரப்படவில்லை. கொடநாட்டில் உள்ள ஜெயலலிதா கூப்பிடும் தொலைவில்தான் இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
மத்திய அரசு எதிர்ப்புப் போராளி ஜெயலலிதா, சில நாட்கள் முன்பு, மத்தியில் அரசு என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை என்றார். இந்திரா நகர் மக்கள் வீடுகள் இடிக்கப் பட்டபோது தமிழக அரசு என்ன செய்தது? மாதக்கணக்கில் சம்பளம் கிடைக்காமல் வாடும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு எந்த விதத்தில் உதவியது? இந்த இரண்டு விசயங்களிலுமே வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் தமிழக அரசின் நடவடிக்கையாக இருந்தது. வாழும் இடம், உண்ண உணவு போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதுதான் அஇஅதிமுக அரசின் ஓராண்டு சாதனை. அனைவருக்கும் வீடுகள், ஆறிலக்க ஆண்டுச் சம்பளம் போன்ற ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டங்களுக்கும் தமிழ்நாட்டின் வறிய மக்கள் வாழ் நிலைமைகளுக்கும் உள்ள இடைவெளியை இட்டு நிரப்ப தமிழக மக்களின் வாழ்நாள் போதாது.
சாமான்ய மக்கள் பிரச்சனைகள் பற்றி எந்த அக்கறையும் படாமல் அரசியல் நடத்துவதில் கருணாநிதி கைதேர்ந்தவர். இதுவரை  அது போன்ற மக்கள் பிரச்சனைகள் பற்றி அக்கறை காட்டாதவர் இன்று புதிதாகக் காட்டப் போவதில்லை. மட்டுமின்றி இன்று, அவை பற்றி அறிக்கைவிடக் கூட கண்டுகொள்ளும் நிலையிலும் அவர் இல்லை. அடுத்து யார் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற கவலையே அவரை ஆட்கொண்டுள்ளது. ஜ÷லை 4 நிகழ்ச்சி தயாரிப்பில் உட்பூசலுக்கு தீர்வு வரும் என்று கூடவே ஒரு நப்பாசையும் வைத்திருக்கிறார். இதற்கு மேல் இயங்க அவருக்கு இன்றைய நிலைமைகளில் வாய்ப்பில்லை. அவர் திருப்திக்கு கனிமொழியின் கவிதையுடன் பிறந்த நாளை ஒட்டி ஒரு மினி பாராட்டு விழா நடத்திக் கொண்டதுதான் அவருக்கு சமீப காலங்களில் ஆறுதல் தரும் ஒரே விசயம்.
எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்த் தனது கல்லூரி விவகாரங்களில் மும்முரமாக இருக்கும் காலம் இது. அத்தனை சவால்களையும் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசி முடித்துவிட்டதால் அவருக்கும் பேச ஏதும் இல்லை. கொள்கையே இல்லாமல் கட்சி நடத்தும் ஒருவர் மக்கள் பிரச்சனைகள் பற்றி என்ன அக்கறை காட்ட முடியும்? அதிகாரபூர்வ இடதுசாரிகளைத் தேட வேண்டியிருக்கிறது.
சாமான்ய மக்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி அவர்களை நடுத்தெருவில் நிறுத்துவதும் மாதக்கணக்கில் சம்பளம் தராமல் தொழிலாளர்களைப் பட்டினி போடுவதும் அடுத்த ஆண்டு சாதனைப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள். புல்டோசர் யாகம் என்ற தலைப்பும் வயிறெரிந்து கதறும் சரஸ்வதியின் படமும் அந்த விளம்பரத்துக்கு பொருத்தமாக இருக்கும்.
தமது ஆட்சிக்கு எதிர்ப்புக் குரல் எழுப்ப யாரும் இல்லை என்று ஜெயலலிதா மகிழ்ச்சி அடைய முடியாது.
மாணவர்க்கு விடுதிகள், மருத்துவமனைக்கு நாற்காலிகள் என்று அறிவிப்புக்கள் செய்த வண்ணம் இருக்கிற ஜெயலலிதா காதுகளில் சரஸ்வதியின் போர்க்குரல் எட்டியிருக்கும். சொத்துக் குவிப்பு வழக்கு ஒருபுறம் மிரட்ட, சரஸ்வதியின் சாபங்கள் அவருக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கும். ஜெயலலிதா எந்த யாகம் செய்தாலும் புல்டோசர் யாகம் உருவாக்கிய மக்கள் சீற்றத்தைப் போக்க முடியாது.

அம்பலம்

மதிப்பிற்குரிய கழிப்பறை

குடியரசுத் தலைவரை, ஆளுநரை, பிரதமரை, முதலமைச்சர்களை, மத்திய, மாநில அமைச்சர்களை, நீதிபதிகளை வெறும் பெயர் சொல்லி அழைக்க முடியாது. அவர்கள் வகிக்கும் பதவிகள் பெயரைச் சொல்லி, அவற்றுக்கு முன் ஒரு மாண்புமிகு, மேதகு போன்றவற்றைச் சொல்ல வேண்டும். மான்டெக்கின் கழிப்பறையையும் இனி மதிப்பிற்குரிய கழிப்பறை என்றுதான் அழைக்க வேண்டும். ஏனென்றால் இந்திய மக்களாகிய நாம் அந்த கழிப்பறையை செப்பனிட ரூ.35 லட்சம் செலவிட்டுள்ளோம்.
அப்படி என்ன இருக்கும் அந்த கழிப்பறையில்? சலவைக் கற்கள் போடப்பட்டிருக்கலாம். குழாய்களில் தண்ணீருக்கு பதில் பன்னீர் வருமோ? மான்டெக் சிங் பயன்படுத்துவதால் கோகா கோலா வர ஏற்பாடு இருக்கலாம். அவர் ஒவ்வொரு முறை அங்கு செல்லும் போதும் அமெரிக்காவுக்கு தான் எத்தனை விசுவாசி என்பதை எண்ணி தனக்குத் தானே வியந்து போகலாம்.
நாடு முழுவதும் கழிப்பறைகள் இல்லாமல் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்று சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களில் இருந்து தெரிய வந்தது. ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கழிப்பறைகளின் அவசியத்தை நாடு முழுக்க இருக்கும் மக்களுக்கு எடுத்துச்சொல்லும் அவசரக் கடமையில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு வேளை, அவருக்கு உதவும் உயரிய நோக்கத்துடன், கழிப்பறை எவ்வளவு மேன்மையானது என்பதை கழிப்பறைகள் இல்லாத கோடானுகோடி இந்தியர்களுக்கு எடுத்துச் சொல்ல திட்டக் கமிசன் இப்படி ஓர் அதிநவீன திட்டம் தீட்டியிருக்கலாம். 
அந்த 35 லட்சம் ரூபாய் மக்கள் வரிப் பணம், அதில் என்னவெல்லாம் செய்திருக்க முடியும் தெரியுமா என்று சிலர் வரிந்துக் கட்டிக் கொண்டு பட்டியல் போடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு விசயம் புரியவில்லை. திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் எந்த நேரமும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்து எப்போது எந்த எடுபிடி வேலை வரும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை அவர் கழிப்பறையில் இருக்கும் போது அப்படி ஏதாவது வந்தால் என்ன செய்வது? இந்திய நாட்டின் தலையெழுத்தை பொன்னெழுத்தில் எழுதும் வாய்ப்பு ஒன்று தவறிவிடும். அதனால் அதுபோன்ற அழைப்புக்களை, அது எந்த வடிவத்தில் இருந்தாலும், இவர் எந்த நிலையில் இருந்தாலும், உடனுக்குடன் ஏற்று பதில்வினை ஆற்ற அந்தக் கழிப்பறையில் வசதி இருக்கலாம்.
கோயில்களில் கர்ப்பக்கிரகத்துக்குள் சாமான்யர் செல்ல முடியாது. அதற்கென எழுதப்படாத தகுதிகள், விதிகள் உண்டு. மான்டெக்கின் கழிப்பறையும் அப்படித்தான். தெய்வ சந்நிதானம் போன்றது. சாமான்யர்கள் அதற்குள் செல்ல முடியாது. ஸ்மார்ட் டானவர்கள்தான் செல்ல முடியும். உள்ளே செல்ல ஸ்மார்ட் கார்டு வேண்டும். மான்டெக், இன்னும் அவரைப் போன்ற சில அதிகாரிகள் மட்டும் அந்த ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கிறார்கள். திட்டக் கமிஷன் அலுவலத்துக்குள்ளேயே யாரும் அத்தனை எளிதாக உள்ளே செல்ல முடியாது. அந்தக் கழிப்பறைகள்.... இன்னும் உயர்வானவை.
இந்தியாவை வல்லரசு நாடாக்கும் அதிமுக்கிய பணியில் ஈடுபட்டிருக்கும் மன்மோகன் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் இந்தியாவின் மேன்மைகளை சொல்லியாக வேண்டும். என்னதான் சொல்வார்? கோடானுகோடி இந்திய மக்களின் திறந்தவெளி கழிப்பறைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா? விலை உயர்வால் நசுங்கிச் சாகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அணுஉலை விபத்து என்ற ஆபத்தை எதிர்ப்பார்த்து எப்போதும் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? விவசாய நெருக்கடியில், வேலையின்மையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று சொல்ல முடியுமா? 35 லட்சம் ரூபாய் செலவில் நாங்கள் கழிப்பறை செப்பனிட்டோம் என்று சொன்னால் இந்தியப் பெருமை எகிறி குதிக்காதா?
ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மலச்சிக்கல் இல்லாமல் துவங்கி மனச்சிக்கல் இல்லாமல் முடிய வேண்டும் என்று வைரமுத்து சொன்னாராம். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க காய்கறி உணவு அவசியம். இப்போது நாட்டில் காய்கறி விற்கிற விலையில் யார் வாங்க முடியும்? யார் சாப்பிட முடியும்? பிறகு கழிப்பறைதான் ஏன் தேவைப்படும்? திட்டக் கமிசன் நன்றாகத்தான் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறது. காய்கறி சாப்பிட முடியாத நிலையை இந்திய மக்களுக்கு ஏற்படுத்தி கழிப்பறையின் பயன்பாட்டைக் குறைத்திருக்கிறது. காய்கறி சாப்பிடுவது இருக்கட்டும், நாளொன்றுக்கு மூன்று வேளை சாப்பிடவே வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் கழிப்பறைகளுக்கு என்னதான் அவசியம்?
ஆனால் இந்திய வறுமையை ரூ.32லும், ரூ26லும் எப்படி நிறுத்துவது என்று கணக்கு போட்டு நாட்டை நாற்றமடிக்கச் செய்துவிட்ட மான்டெக் தஞ்சம் புக மதிப்பிற்குரிய கழிப்பறைகள் அவசியம்.

அறிக்கை

2012 குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி
மாலெ கட்சியின் கருத்துக்கள்


புதுடில்லி, 23 ஜுன் 2012

குடியரசுத் தலைவர் தேர்தல் 2012:
கூட்டணி அரசியலில் சந்தர்ப்பவாத மறுஅணிச் சேர்க்கை


2012 குடியரசுத் தலைவர் தேர்தல், தேர்தல் போட்டி என்ற பொருளில், காங்கிரஸ் எளிதாகக் கடந்து செல்வதை பாஜகவும் சில பிராந்திய கட்சிகளும் அனுமதிக்காவிடினும், அவ்வளவு பரபரப்பானது அல்ல. சமீபத்திய அரசியல் அணிசேர்க்கையைப் பார்க்கும்போது, பிரதிபா பட்டீலுக்கு அடுத்து குடியரசுத் தலை வராக பிரணாப் முகர்ஜி ராஷ்டிரபதி பவனுக்குள் நுழைவது உறுதியாகிவிட்டதுபோல் தெரிகிறது. உண்மையில் சுவாரசியமானது, 2014ல் எதிர்வரவுள்ள பெரிய சண்டைக்கு முன் எழுந்திருக்கிற அரசியல் அணி சேர்க்கையின் ஆர்வமூட்டும் வடிவமைப்புதான். இரண்டு பெரிய கூட்டணிகளான அய்முகூவும் தேஜமுவும் பிளவுபட்டுள்ளன. அத்துடன் இடது முன்னணியும் பிராந்திய கட்சிகளின் உள்ளாற்றல் கொண்ட கூட்டணியும் பிளவுண்டுள்ளன.
அய்முகூவில் இருந்து விலகப் போவதாக திரிணாமூல் கட்சியின் மம்தா பானர்ஜி மிரட்டி வருகிறார் என்றால், அய்க்கிய ஜனதா தளமும் சிவசேனாவும் ஏற்கனவே காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துவிட்டன. காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்கும் வரை காத்திருந்துவிட்டு, பாஜக, இப்போது காங்கிரஸ் தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று புகார் சொல்லி, அஇஅதிமுக மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளால் முன்வைக்கப்பட்ட, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனது சொந்தக் கட்சியான தேசியவாத காங்கிரசில் இருந்தே விலகிய பி.ஏ.சங்மாவை ஆதரிப்பதாகச் சொல்கிறது. உத்தரபிரதேசத்தின் இரண்டு பெரிய கட்சிகளான சமாஜ்வாடிக் கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசுடனும் மத்திய அரசாங்கத்துடனும் போட்டி போட்டுக் கொண்டு பேரம் பேசி வருகின்றன. இடது முகாமும் இப்போது பிளவுண்டு விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும் ஃபார்வர்டு பிளாக்கும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. இககவும் ஆர்எஸ்பியும் வாக்களிப்பதில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளன.
கூட்டணிக் கட்சிகளை இன்னும் கூடுதலாக ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பாக குடியரசுத் தலைவர் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்பியிருக்கும். ஆனால், நகைமுரணாக, இந்த நேரத்தில், அதன் பழைய இரண்டு கூட்டணி கட்சிகள் அதைக் கைவிட்டுவிட்டன. நிதிஷ்குமார், குடியரசுத் தேர்தல்களில் காங்கிரசுடனும், அய்முகூவுடனும் கைகோர்க்க, தேஜ முவின் பிரதமர் வேட்பாளராக மோடி நிறுத்தப்படக்கூடிய வாய்ப்பை எதிர்க்க, ஏன் இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தார்? மோடியின் எதிர்ப்பாளர் என்று சொல்லிக் கொள்ள இது நிதிஷ் குமாரின் பாணியாக, பீகாருக்கு கூடுதல் நிதிக்காக மத்திய அரசாங்கத்துடன் பேரம் பேச ஒரு கருவியாக  இருக்கலாம். ஆனால் உண்மையிலேயே நிர்ப்பந்திக்கும் காரணம் பீகாருக்குள் இருக்கிறது. அதிகரித்து வருகிற செயல்பாடின்மை, துரோகம் ஆகியவற்றால் அவரது அரசாங்கம், அனைத்துப் பிரிவினர் மத்தியிலும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனவே, மக்கள் கவனத்தை திசைத்திருப்ப வேண்டிய அவசியம் நிதிஷ்குமாருக்கு உள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு மிகவும் திவாலாத்தன்மைகொண்ட காரணங்களுடன் முன்வந்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல், நவதாராளவாத, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இருந்து பிரித்து நிறுத்தப்பட வேண்டும் என்ற புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வாதத்துடன் இப்போது பிரகாஷ் காரத்தும் சேர்ந்துகொண்டுள்ளார். ‘நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜியை எதிர்ப்போம்; குடியரசுத் தலைவராக அவரை ஆதரிப்போம்’ என்பதுதான் ஏகேஜி பவனின் தற்போதைய இரட்டைப் பேச்சு. பிரணாப் முகர்ஜி ‘பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளவர்’ என்பதால் மார்க்சிஸ்ட் கட்சி பந்தை ஆட வேண்டும், ஆட்டத்தைக் கெடுக்கக் கூடாது என்றும் அதனால் அவரை ஆதரிக்க வேண்டும் என்றும் காரத் சொல்கிறார்! பாஜக வேட்பாளராக அப்துல் கலாம் கருதப்பட்டதால் அவரை எதிர்த்த 2002 குடியரசுத் தலைவர் தேர்தல்கள் தவிர, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பது அவரது கட்சியின் வழக்கமான நடைமுறையாகத்தான் இருந்துள்ளது என்று அவர் வெளிப்படையாக அனைவருக்கும் நினைவூட்டுகிறார்.
பதினாறு ஆண்டுகளுக்கு முன், அய்க்கிய முன்னணி அரசாங்கத்தில் பங்கேற்பதை மார்க்சிஸ்ட் கட்சி தவிர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அமைச்சரவையில் இணைந்தது. அப்போது, ஜோதி பாசுவை அய்க்கிய முன்னணியின் பிரதமராக்கும் சுர்ஜீத்தின் முன்வைப்பை பிரகாஷ் காரத் வீழ்த்தியது பிரபலமான விசயம். இப்போது அந்தச் சுற்று முழுமையடைந்துவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தரும் முடிவு எடுப்பதில் சமமாகப் பிளவுண்ட அரசியல் தலைமைக் குழுவின் மீது தாக்கம் செலுத்த பிரகாஷ் காரத் தனது ‘முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற வாக்கை’ அளித்ததாகச் சொல்லப்படுகிறது. நகைமுரணாக, இந்த முறை இகக ஆதரவு தர மறுத்துவிட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவு கட்சிக்குள் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் ஆய்வுக்குழு அமைப்பாளர் இதை எதிர்த்து கட்சியில் இருந்து விலகியுள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் ‘நிலப்பிரபுத்துவ  - ஸ்டாலினிய’ கலாச்சாரம் இருப்பதாக பிரபாத் பட்நாயக் சாடியது ஆகியவற்றுடன் சேர்ந்துகொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய விவாதமும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மற்றுமொரு ‘ஜுலை நெருக்கடியை’ கொண்டு வரும். ‘இடதுசாரி மற்றும் ஜனநாயக மாற்று’ என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு காங்கிரஸ் அறைகூவலை, கட்சிக்குள் ‘இடது நோக்கி புதுப்பித்தல் மற்றும் சீர்செய்தல்’ என்று கருதியவர்களுக்கு, சமீபத்திய கேரள நிகழ்வுகளும், இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கும் முடிவும் ‘யதார்த்தத்தை பரிசோதிக்க’ உதவ வேண்டும்.
அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது சந்தர்ப்பவாத திவாலாத்தனத்தின் உச்சமாகும். பாஜக அதிகாரத்துக்கு வருவதைத் தடுக்க காங்கிரசுக்கு ஆதரவளிப்பது என்று மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் இருப்பில் வைத்திருக்கும் வாதமும் இந்த விசயத்தில் பொருத்தமற்றது. ஆளும் வர்க்கங்களின் கொள்கை வழித்தடத்துக்கு, கட்டுக்கடங்காத ஊழல் மற்றும் பெருநிறுவனக் கொள்ளை, மிகப்பெரிய வறுமைமயமாக்கம், அதிகரித்துவரும் ஏகாதிபத்தியத் தலையீடு, ஜனநாயகத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல் ஆகியவற்றால் குறிக்கப்படுகிற அனைத்தையும் ஊடுருவியுள்ள நெருக்கடியில் நாட்டை ஆழமாகத் தள்ளியுள்ள அதன் விளைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அறிவிப்பாக மிகச்சரியாக வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதுதான், இந்தக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இடது சாரிகளுக்கு இருக்கும் ஒரே கோட்பாட்டுரீதியான பாதை. அதன் மூலம் மட்டும்தான், அது தனது அரசியல் சுதந்திரத்தை சக்திவாய்ந்த விதத்தில் பதிவு செய்ய முடியும்; எதிர்வருகிற அரசியல் போராட்டங்களில் தனது அடிப்படை நிலைப்பாட்டை அறுதியிட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உத்தரபிரதேச உள்ளாட்சித் தேர்தல்களில் நான்கு இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டி

இகக(மாலெ), இகக, ஃபார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி கட்சிகள் உத்தரபிரதேச உள்ளாட்சித் தேர்தல்களில் இணைந்து போட்டியிட உடன்பாடு கண்டுள்ளன. இந்தக் கட்சிகள் ஒன்று மற்றொன்றின் வேட்பாளர்களை ஆதரிக்கும். இதையொட்டி கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜ÷ன் 24 முதல் ஜ÷லை 4 வரை நடக்கவுள்ள இந்தத் தேர்தல்கள் முடிவு ஜ÷லை 7 அன்று வெளியாகும்.கோரக்பூர் மேயர் பதவிக்கும், ராபர்ட்ஸ்கஞ்ச் மற்றும் சுல்தான்பூரில் முனிசிபல் கவுன்சில் தலைவர் பதவிக்கும், பலியாவின் மனியார், பதோஹியின் சூரியவான், மகாராஜ்கஞ்சின் நிச்லால் மற்றும் சிஸ்வான் ஆகிய இடங்களில் நகர பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் மற்றும் மாநிலத்தின் 13 மாவட்டங்களில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இகக(மாலெ) போட்டியிட உள்ளது.

புத்தகம்

பயிற்சியாளர் சுரண்டல் முறைக்கு
முடிவு கட்ட வேண்டும்!


பயிற்சியாளர் தொடர்பாக ஏஅய்சிசிடியு வெளியிடவுள்ள வெளியீட்டில் இருந்து சில பகுதிகள்

நன்கு சுரண்டுவதற்குப் பயிற்சி பெற்ற முதலாளிகள், பயிற்சியாளர் என்ற பெயர் சூட்டி, இளம் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுகிறார்கள். உழைப்பின் மதிப்பில் ஒரு பகுதியை மட்டும் தொழிலாளிக்குக் கொடுத்து விட்டு, மறு பகுதியை, கூலி கொடுக்காத பகுதியை, முதலாளி சுரண்டிவிடுகிறார். இந்த உபரிமதிப்புச் சுரண்டலின் மீதுதான், முதலாளித்துவச் சமூகமே கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
உழைக்காமலே கொழுக்கும் முதலாளிகளுக்கு, தந்திர புத்தியும், படைப்பாற்றலும், கற்பனை வளமும், நிறையவே உண்டு, அவர்களுக்கு, ஒட்டச்சுரண்ட, புதுப்புது ஆலோசனை தருபவர்களுக்கும் குறைவே இல்லை. இத்தகைய ஒரு கண்டுபிடிப்புதான், பயிற்சியாளர் முறை.
தொழில் துறை நவீன பெரு முதலாளித்துவம் பிறப்பதற்கு முன்பு, இங்கிலாந்து நாட்டில், பட்டறைத் தொழில்களில், தொழில் பழகுநர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மூலதனத்தின் பிறப்பு நூலில், மார்க்ஸ் 1860ல் டன்னிங் என்பவர், தொழில்களின் சங்கங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள் என்ற தலைப்பில் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்.
“இயற்கை சூனியத்தை வெறுத்தது போன்று மூலதனம் லாபமே இல்லை அல்லது குறைந்த லாபம் என்பதைத் தவிர்க்கவே விரும்புகிறது. போதிய லாபம் பெறும்போது மூலதனம் மிகவும் துணிவுடன் இருக்கிறது. ஒரு 10 சதவீதம் லாபமே எங்கு வேண்டுமாயினும் மூலதனம் ஈடுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்யும், 20 சதவீதம் என்றால் அது நிச்சயமாயும் ஆர்வத்துடனும் முன்வரும், 50 சதவீதம் லாபம் அதற்கு நேரடியான துடுக்குத்தனத்தைத் தரும், 100 சதவீதம் லாபம் என்றவுடன் மனிதச் சட்டங்கள் அனைத்தையும் மிதித்துத் துவைக்க அது ஆயத்தமாகிவிடும், 300 சதவீதம் லாபம் என்றால் அது எந்தக் குற்றச் செயல் புரியவும் தயங்காது. அதன் உரிமையாளர் தூக்கிலிடப்பட நேரிடினும் அந்த அபாயத்தையும் சந்திக்கத் தயாராயிருக்கும். கொந்தளிப்பும் பூசலும் லாபத்தைக் கொண்டு வருமானால், அது, அவை இரண்டையுமே தாராளமாக ஊக்குவிக்கும்”.
பயிற்சியாளர்கள், தொழில் பழகுநர்கள் முதலில், உலக வரலாற்றில், இங்கிலாந்து நாட்டின் டெர்பிஷயர், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் லங்காஷயர் பட்டறைகளில், அரங்கேறினர். அவர்களின் துன்பக்கதை பற்றி மூலதனத்தின் பிறப்பு நூல் சொல்கிறது.
“சிறு குழந்தைகளின் சிறிய சுறுசுறுப்பான விரல்களே மிகவும் அதிகமாக வேண்டப்பட்ட தால் லண்டன், பர்மிங்ஹாம் ஆகியவற்றின் பல்வேறு வட்டார வேலைவிடுதிகளிலிருந்து பழகுனர்களைத் திரட்டிப் பெறும் வழக்கம் திடீரென உதித்தது. பல பல ஆயிரக்கணக்கான இந்தச் சின்னஞ்சிறு மகிழ்ச்சி காணாத ஜீவன்கள் 7 முதல் 13 அல்லது 14 வயது வரை எட்டியவர்கள், அவர்களை ஆலைக்கருகிலுள்ள பழகுனர் விடுதியில் தங்க வைத்துத் தமது பழகுனர்களுக்கு உணவும் உடையும் அளிப்பது வழக்கமாக இருந்தது. வேலைகளைக் கவனிக்க வேண்டி மேலாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பெறும் சம்பளம், அவர்கள் கிட்டி கட்டி வாங்கும் வேலையின் அளவின் விகிதாச்சாரத்தில் இருந்ததால், அவர்கள் இச்சிறுவர்களைக் கசக்கிப் பிழிந்து அதிகமான வேலை வாங்குவதில் அக்கறை கொண்டிருந்தார்கள். இதன் விளைவு துன்புறுத்தலே என்பது கண்கூடு. பல பட்டறைத் தொழில் மாவட்டங்களில் குறிப்பாக லங்காஷயரில் பட்டறைகளின் எஜமானர்களிடம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ள தீங்கு கருதா உற்றார் உறவோரற்ற இந்த ஜீவன்கள், நெஞ்சையுருக்கத்தக்க கொடுமைகளுக்கு இலக்காகக்கப்பட்டார்கள்; மிகுஉழைப்பால் அவர்கள் சாவின் விளிம்புக்குச் சரியுமளவுக்குத் தொல்லைப்படுத்தப்பட்டார்கள். கசையடி பெற்றார்கள். அப்பட்டமான கொடுமையினை கூவிச் சொல்லும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். பெரும்பாலும் பட்டினிபோடப்பட்டு எலும்பும் தோலுமாக இருந்த அவர்கள் கசையடி கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்குத் துன்புறுத்தப்பட்டனர். பொது மக்களின் கண்ணில் படாதவையாக இருந்த டெர்பிஷயர், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் லங்காஷயரின் எழில் கொஞ்சும், கற்பனைக் காவியப் பின்னணியுடைய பள்ளத்தாக்குகள், சித்திரவதையின் பல படுகொலைகளின் துயரார்ந்த தனியிடங்களாயின. பட்டறையதிபர்களின் லாபங்கள் அமோகமாக இருந்தன. இது அவர்களுக்குத் திருப்தியளிப்பதற்கு மாறாக மேலும் லாபப் பேராசையைத் தூண்டியது. எனவே அவர்கள் வரையறை என்ற சாத்தியக்கூறே இல்லாத அளவுக்கு லாபம் அடைவதற்கான ஒரு வழி துறையினைக் கையாளத் தொடங்கினார்கள். அதாவது “இரவு வேலை” எனப்படும் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கினார்கள். இதன்படி பகல் பூராவும் வேலை வாங்கி ஒரு பகுதியினரைச் சோர்வடையச் செய்து விட்டு இரவு முழுவதும் வேலை செய்வதற்கு இன்னொரு பகுதியைத் தயாராக வைத்திருந்தார்கள். இதன் மூலம் இரவு வேலைப் பகுதியினர் இப்போதுதான் விடுத்துச் சென்ற படுக்கைகளில் பகல் வேலைப் பகுதியினர் படுக்கச் செல்வர், அதேபோன்று காலையில் பகல் வேலைப் பகுதியினர் எழுந்தவுடன் அவர்கள் பயன்படுத்திய படுக்கைகளில் இரவு வேலைக்காரர்கள் மறுபடியும் வந்து படுப்பார்கள். லங்கா ஷயரில் படுக்கைகள் எப்போதுமே ஆளின்றி சூடு குறைந்து விடவில்லை என்பது பொது மரபாகிவிட்டது”.
ஜெயலலிதா தாலிக்குத் தங்கம் திட்டம் அறிமுகப்படுத்தும் முன்பாகவே, நூற்பாலை, ஜவுளி முதலாளிகள் திருமாங்கல்யத் திட்டத்தை அறிமுகப்படுத்தி விட்டார்கள். விவசாயம் வாழ வழி தராத, வேலை வாய்ப்பில்லாத கிராமப்புற மாவட்டங்களிலிருந்து, 18 வயதிற்குக் கீழான இளம் பெண்களை, திருமாங்கல்யத் திட்டம், சுமங்கலித் திட்டம் என்ற பெயரால் முகவர்கள் மூலம் முதலாளிகள் தமது ஜவுளி ஆலைகளுக்கு இழுத்து வந்தார்கள். 3 வருடம் வேலை பார், முடிவில் கிடைக்கும் ரூ.30,000, நீயே தாலி வாங்கலாம், சுமங்கலியாகலாம் என வலை விரித்தனர். வலையில், ஆயிரம் ஆயிரமாய் இளம் பெண்கள் சிக்கினர். இவர்களுக்குச் சட்டப்படி வழங்கப்பட்ட பெயர் “பயிற்சியாளர்கள்”. இவர்கள் 21ஆம் நூற்றாண்டின் நவீனக் கொத்தடிமைகள்.
எவருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத இளம் பெண்களை, எதிர்த்துக் கேட்க முடியாத நாதியற்றவர்கள் என்பதால், ஒட்டச் சுரண்டினார்கள். எப்படியோ விஷயம் வெளியே கசிந்தது. ஏஅய்சிசிடியு உள்ளிட்ட இடதுசாரி சங்கங்கள், சில தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் மத்தியில் இந்த அநியாயத்தை அம்பலப்படுத்தின. ஊடகங்களும் வேறு வழி இல்லாமல், இந்த முறை பற்றி கேள்விகள் எழுப்பத் துவங்கின.
மக்கள் தொகையில் (பாப்புலேஷன்) உற்பத்தியில் (புரொடக்ஷன்) பெரும் எண்ணிக்கையில் உள்ள உழைக்கும் மக்கள், சொத்து (பிராபர்ட்டி) அதிகாரம் (பவர்) ஆகியவற்றில் மட்டும் ஓரஞ்சாரத்தில் உள்ளனர். திருத்த மசோதா 47/2008, உட்பட பல்வேறு உழைக்கும் மக்கள் பிரச்சனைகள்  தமிழக அரசியலின் நடுநாயகத்திற்கு ஏன் வரவில்லை?
குடும்ப நலன் காக்க மத்திய அரசிற்கு நிர்ப்பந்தம் தரும் திமுக தலைவர், தாம் கொண்டு வந்த திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
மத்திய அரசிற்கு எதிரான போராளி எனத் தம்மைப் பற்றிய பிம்பம் உருவாக்குகிற முதல்வர் ஜெயலலிதா, ஏன், மத்திய அரசு திருத்தச் சட்டம் 47/2008க்கு ஒப்புதல் தர வேண்டும் எனச் சண்டை போட மறுக்கிறார்?
அவர்கள் அப்படித்தான், அவர்களது வர்க்க இயல்பு அப்படித்தான் எனச் சொல்லிக் கொண்டு, தமிழகத் தொழிலாளர் இயக்கம் தொழிற்சங்க இயக்கம் செயலூக்கமின்றி இருக்க முடியுமா?
திருத்த மசோதா 47/2008 நிறைவேற நாம் விடாப்பிடியான விட்டுக்கொடுக்காத நடவடிக்கைகள் எடுத்துள்ளோமா? நாமே போதுமான அளவிற்குக் கேள்வி எழுப்பாதபோது, திமுக, அஇஅதிமுக அரசுகள் தாமாகவே அக்கறை காட்டுமா?
திரும்பவும் அகில இந்திய தொழிலாளர் வர்க்கப் பொது வேலை நிறுத்தம் நடக்க உள்ளது. இரு தினங்கள் வேலை நிறுத்தம் என்றும் பேசப்படுகிறது. தமிழக இடதுசாரி சங்கங்கள் மொத்த தொழிற்சங்க இயக்கம் மீதும் செல்வாக்கு செலுத்தி, திருத்த மசோதா 47/2008க்கு ஒப்புதல், தொழிற்சங்க அங்கீகாரத் திற்கான திருத்தச் சட்டம், குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000, அமைப்புசாரா தொழிலாளர் நலன்கள் ஆகிய உண்மையான பற்றி எரியும் பிரச்னைகளைச் சேர்த்துக் கொண்டு, அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது ஆண்டவனைக் குறிக்காது, உழைக்கும் மக்களைத்தான் குறிக்கிறது என நிரூபித்துக் காட்டுவோம்.

சிறப்புக் கட்டுரை

வறுமைக்கோட்டின் வறுமை

மஞ்சுளா

பஞ்சமோ பஞ்சம் என்றே பரிதவித்தே உயிர் துடிதுடித்தே துஞ்சி மடிகின்றாரே அவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியில்லையோ என்று அடிமை இந்தியா பற்றி பாடினான் பாரதி. நாடு விடுதலை பெறும்முன் இறந்து போனான். சுதந்திர இந்தியாவைப் பார்க்காமல் போகிறோமே என்று சாகும் தருவாயில் ஒரு நொடியாவது நினைத்திருப்பான். நல்ல வேளை அவனுக்கு அந்த கதி நேரவில்லை. தனியொரு மனிதனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழிப்பது முதல் சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்பது வரை பாடி வைத்தவன் துடித்துப் போவான். அவன் அடிமை இந்தியாவில் அன்று பார்த்த நிலை இன்று சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்கிறது.
4500 மைல் தாண்டிச் சென்று இலக்கை குறிபார்த்துத் தாக்கும் ஏவுகணை, அணு ஆயுதம், வல்லரசுக் கனவு எல்லாம் வைத்துள்ள நாட்டில், யார் வறியவர் என்று இன்னும் நிர்ணயிக்க முடியவில்லை. கடைசியாக ரூ.32, ரூ.26 என்று சொல்லி பிறகு ஆறே மாதங்களில் அதுவும் இல்லை, ரூ.29, ரூ.22 வறுமைக்கோடு என்கிறார்கள். இது மோசடி என்று நாட்டு மக்கள் சீற்றமுற்றபோது விவரம் தெரியாதவர்கள், புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்றார்கள். இது மோசடி விவரம் என்பதைத் தவிர புரிந்துகொள்ள என்ன இருக்கிறது என்று வறிய மக்களின் பட்டறிவு கேட்கிறது.
வறுமைக் கோட்டை நிர்ணயிக்க, அதை கண்டுபிடிக்க ஆய்வு செய்ய, கோடிகோடியாக மக்கள் வரிப்பணம் செலவாகிறது. நாட்டில் வறுமை உள்ள வரை நாட்டின் முதலாளித்துவ ஆய்வாளர்களுக்கு வளமை இருக்கும். முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு அரசியல் செய்ய விசயம் இருக்கும். நாடு விடுதலை பெற்றது முதல், வெவ்வேறு முதலாளித்துவ வறுமைக் கோட்டு ஆய்வாளர்கள் சொல்கிற வறுமைக் கோடு வெறும் பட்டினிக் கோடுதான்.

சில வறுமைக் கோடுகள்
1962ல் வறுமைக்கோட்டை வரையறுக்க 5 பேர் கொண்ட குடும்பத்தின் (பெரியவர்கள் நான்கு பேர் நுகரும் அளவு) நுகர்வு 1960 -1961 விலையில் மாதம் ஒன்றுக்கு ரூ.100க்கு குறையக் கூடாது. நகர்ப்புறத்துக்கு ரூ.125. இந்த 125 ரூ.10 வீட்டு வசதிக்கும் சேர்த்து. இந்தக் கணக்கெடுப்பில் கல்விக்கும், மருத்துவத்துக்கும் ஆகும் செலவு கணக்கில் கொள்ளப்படவில்லை. ஏனென்றால் அவற்றை அரசாங்கம் தந்தது.
இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் வறுமையை ஒழிக்கப் புறப்பட்டபோதுதான், வறுமைக்கோடு வரையறையின் அடிப்படையில் வறியவர் ஒழிப்பு நடக்கத் துவங்கியது. 1972ல் உணவு உட்கொள்ளும் கலோரி அளவின் அடிப்படையில் வறுமைக் கோடு  நிர்ணயிக்கப்பட்டது.
ஒரு சராசரி ஆண் நாளொன்றுக்கு 2100 முதல் 2400 கலோரி அளவு வரை உணவு உண்ண வேண்டும். அதை வாங்க அவருக்கு என்ன செலவாகுமோ அதை விடக் குறைந்த வருமானம் பெறுகிறார் என்றால் அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார். இதுதான் வறுமைக் கோட்டை நிர்ணயிக்க அரசாங்கம் கடைபிடிக்கிற வழிமுறை. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் சொல்வதுபடி  நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு நாளொன்றுக்கு 2100 கலோரி உணவும் கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நாளொன்றுக்கு 2400 கலோரி உணவும் தேவை. 1973 - 74 தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்யம் சொல்கிற இந்த அளவு உணவுக்கான ரூபாய் மதிப்பு அடிப்படையில் வறுமைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புறத்தில் 49% பேரும், கிராமப்புறத்தில் 57% பேரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் என்று சொல்லப்பட்டது.
1993ல் லக்டாவாலா கமிட்டி 1973 - 74 தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்யத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநில மட்டத்திலான அளவுகளையும் கணக்கில் கொண்டது. அதன்படி, கிராமப்புறத்தில் 28.3%, நகர்ப்புறத்தில் 25.7%, அகில இந்திய அளவில் 27.5% பேரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. அதாவது 20 வருடங்களுக்கு முன்பு இருந்த விலை நிலவரங்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோடு இது.
1999 - 2000ல் தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்யம் நுகர்வு விவரங்கள் கணக்கிடும் வழி முறையை மாற்றியது. ஒரே காலகட்டத்தில் உணவுக்கு, முந்தைய வார நுகர்வு அளவையும், உடை, கல்வி, காலணி, மருத்துவம் போன்றவற்றுக்கு, முந்தைய ஆண்டு நுகர்வு அளவையும் அடிப்படையாகக் கொண்டது. இந்த முறையில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டது. உதாரணமாக, ஒரே காலகட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட விவரங்கள்படி அகில இந்திய அளவிலான வறியவர் 26.1%, கிராமப்புறத்தில் 27.9%, நகர்ப்புறத்தில் 23.62%. வெவ்வேறு கால அடிப்படையில் எடுக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் அகில இந்திய அளவிலான வறியவர் 23.33%, கிராமப்புறத்தில் 24.02%, நகர்ப்புறத்தில் 21.59. 2004 - 2005 விவரங்கள்படி ஒரே காலகட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட விவரங்கள்படி அகில இந்திய அளவிலான வறியவர் 27.5%, கிராமப்புறத்தில் 28.3%, நகர்ப்புறத்தில் 25.7%. வெவ்வேறு கால அடிப்படையில் எடுக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் அகில இந்திய அளவிலான வறியவர் 21.8%, கிராமப்புறத்தில் 21.8%, நகர்ப்புறத்தில் 21.7%.
2005ல் அமைக்கப்பட்ட டென்டுல்கர் கமிட்டி 2009ல் அறிக்கை சமர்ப்பித்தது. வறுமைக்கோட்டுக்கான வரையறை அடிப்படைகளில் மாற்றம் ஏதும் சொல்லவில்லை. வேறு குறைந்தபட்ச அடிப்படை தேவைகள் எவற்றையும் வரையறை அடிப்படைகளில் சேர்க்கவில்லை. ஆனால், 2004 - 2005 தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்யத்தின் நுகர்வோர் செலவினக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு 1776 கலோரிக்கும், கிராமப்புறத்தில் வாழ்பவர்களுக்கு 1999 கலோரிக்கும் கணக்கிட்டது. இதன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகத்தை குறைத்து வறுமையில் இருப்பவர் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்ட முடிந்தது. இதுவும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை நிலவரங்கள் அடிப்படையிலானது.
கிராமப்புற வறுமைக்கோடு ரூ.446.68 என்றும் நகர்ப்புறத்துக்கு ரூ.578.80 என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 2004 - 2005 விலைகளில் நிர்ணயிக்கப்பட்டதால் வறியவர் எண்ணிக்கை லக்டாவாலா கமிட்டி சொன்ன 27.5% என்பதில் இருந்து 37.2% என உயர்ந்தது. இந்த கணக்கிலும் நகர்ப்புற வறியவர் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. அது லக்டாவாலா கமிட்டி சொன்னது போல்தான் தொடர்ந்தது. கிராமப்புற வறியவர் எண்ணிக்கையில்தான் 13.5% உயர்வு காட்டப்பட்டது. திட்டக்கமிசன் இந்த அடிப்படையில்தான் நகர்ப்புறத்துக்கு நாளொன்றுக்கு ரூ.32, கிராமப்புறத்துக்கு நாளொன்றுக்கு ரூ.26 வறுமைக்கோடு என்றது.
டென்டுல்கர் கமிட்டியின் வழிமுறையை பயன்படுத்தி 2009 - 2010 விவரங்கள்படி  புதிய வறுமைக் கோடு நகர்ப்புறத்துக்கு நாளொன்றுக்கு ரூ.29, கிராமப்புறத்துக்கு நாளொன்றுக்கு ரூ.22 என்று மார்ச் 19 அன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2004 - 2005ல் 37.2% இருந்த வறியவர் எண்ணிக்கை 2009 - 2010ல் 29.8% ஆனது. கிராமப்புற வறுமை 8%மும் நகர்ப்புற வறுமை 4.8%மும் குறைத்துக் காட்டப்பட்டன. இதற்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் திட்டக் கமிசன் மீண்டும் கணக்கெடுப்புக்குத் தயாராகிறது.
நாட்டில் இதுவரை வறுமைக் கோட்டை வரையறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இவைதான். 2004 - 2005 விலை நிலவரங்கள் அடிப்படையில் கடைசி வறுமைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. 2012ல் விலைவாசி விண்ணைத் தாண்டிச் செல்லும்போது, இந்த வரையறை சீற்றத்தை உருவாக்கக் கூடாது என்று ஆட்சியாளர்களும் முதலாளித்துவ ஆய்வாளர்கள் சிலரும் வலியுறுத்துகிறார்கள். இந்த முறைகள் எல்லாமே பயனாளிகளை அடையாளம் காண்பது என்பதற்கு மாறாக பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதை, வெளிப்படையாக இல்லாவிடினும், நோக்கமாக கொண்டிருந்தன. கணக்கு போடும் முறையை மாற்றி விட்டால் வறுமைக்கோட்டை மாற்றி விடலாம். இதுதான் நமது பொருளாதார அறிஞர்கள் கையாள்கிற வழி.
இதற்கிடையில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் என்.சி.சக்சேனா கமிட்டி அமைத்து கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் எண்ணிக்கையை கணக்கிட வழி முறையை உருவாக்கச் சொன்னது. இது வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதல்ல. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போர் எண்ணிக்கையை கணக்கிடுவது. சக்சேனா கமிட்டி நாடு முழுவதும் உள்ள வறியவர் எண்ணிக்கையை 50% என உயர்த்த வேண்டும் என்றது.
இது தவிர 2006ல் சமர்ப்பிக்கப்பட்ட அர்ஜ÷ன்சென் குப்தா கமிட்டியின் அமைப்புசாராதுறை தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் மற்றும் வாழ்வுரிமை மேம்பாடு பற்றிய அறிக்கை 83.6 கோடி இந்தியர்கள் நாளொன்றுக்கு ரூ.20க்கும் குறைவான செலவில் வாழ்கிறார்கள் என்றது. இதுவும் 2004 - 2005 தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்யத்தின் நுகர்வோர் செலவினக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது.
உலக வங்கியின் கணக்குப்படி சர்வதேச வறுமைக் கோடு ரூ.71. அதன்படி இந்தியாவில் 41.6% பேர் வறியவர்கள். ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் அலுவாலியா தலைமையிலான திட்டக்கமிசன் இந்தக் கணக்கையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. வறியவர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வறுமைக் கோட்டு வரையறை குறைந்து கொண்டே செல்கிறது.
வறுமை ஒழிப்பு, ஒளிரும் இந்தியா, குறைந்தபட்ச பொதுத் திட்டம், சாமான்யனை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கவர்ச்சிகரமான முழக்கங்களுடன் வருகிற, போகிற ஆட்சிகள் வறுமைக்கோடு கணக்கிடும் வழிமுறைகளில் அடிப்படை மாற்றம் எதையும் சொல்லவில்லை.

சில வாதங்கள்
வறுமைக்கோடு என்ற ஒன்று ஏன்தான் தேவை என்ற கேள்விக்கு மக்கள் நல அரசுகள் நலத்திட்டங்கள் அமலாக்க வறுமைக்கோட்டை அலகாக பயன்படுத்துகின்றன என்கிறார்கள். அய்முகூ அரசு நிச்சயம் மக்கள் நல அரசு அல்ல, அது மூலதன நல அரசு என்பது நமக்குத் தெரியும். இதை மறுக்கப் பார்ப்பவர்கள் திட்டக்கமிஷன் சொல்கிற வறுமைக்கோட்டின் நியாயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஓர் ஆய்வாளர் இப்படி கேட்கிறார். இருக்கிற 100 ரூபாயை 5 பேருக்கு பிரித்துக் கொடுப்பதற்கும் 2 பேருக்கு பிரித்துக் கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா என்று கேட்கிறார். இருக்கிறது என்றுதான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், கேள்வி 5 பேரா, 2 பேரா என்பதல்ல. பிரிப்பது 100 ரூபாயையா, 250 ரூபாயையா என்பதுதான்.
வருமானத்தின் மட்டம் அதிகரிக்கும்போது, வறுமைக் கோட்டின் அளவும் அதிகரிக்கும், இன்றைய நிலைமைகளில் இந்த வறுமைக் கோடுதான் உதவும் என்கிறார்கள். மூன்று வேளை சாப்பிடக் கூடியவர்களை இரண்டு வேளை உணவு கூட கிடைக்காதவர்களுடன் சேர்த்தால் இரண்டாவது பிரிவினருக்கு அதுவும் கிடைக்காது என்பது வாதம். இன்றைய நிலைமைகள் என்பதும் வருமானத்தின் மட்டம் பற்றியது அல்ல. ஒதுக்கப்படும் நிதி பற்றியது.
ஆக, வறுமைக் கோடு பற்றி பிரச்சனை அதற்குக் கீழ் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதைவிட வறுமையை ஒழிக்க எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது தொடர்பானது.
இப்போது பேசப்படுகிற வறுமைக்கோடு வெறும் உணவு தேவையை நிறைவு செய்வது தொடர்பானது. அது கூட முடியாத நிலையில் 50% அல்லது 77% இந்தியர்கள் இருப்பதுதான் யதார்த்தம். பசித்தவனுக்கு உணவுதான் தர முடியும் என்கிறார்கள். மன்மோகன், பிரணாப், மான்டெக் மூவரையும் குடும்பத்துடன் ஒரு தீவில் வைத்து மூன்று வேளையும் நல்ல உணவு தந்தால் போதும் என்று இருந்துவிடுவார்களா?

சில சாத்தியப்பாடுகள்
இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், அதற்குப் பொறுப்பேற்று பதில் சொல்ல வேண்டிய நிலையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் ஆகிறார். அவரை அந்த நிறைவேற்ற முடியாத பொறுப்பில் இருந்து விடுவித்த காங்கிரஸ் தலைமைக்கு மாய்ந்து மாய்ந்து நன்றி சொல்கிறார்.
ஆனால் நிதியமைச்சராக இருந்தவரை தனது மூலதன விசுவாசத்தில் இருந்து சற்றும் அவர் பின்வாங்கவில்லை. கிரேக்கப் பொருளா தாரம் சீரடையாவிட்டால் இந்திய பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கும் என்று கடந்த சில நாட்களாக அவர் சொல்லிக் கொண்டிருந்தார். மன்மோகன் ரியோ மாநாட்டிற்குச் சென்றிருந்த போது பூனை பையை விட்டு வெளியே வந்தது. யூரோ மீட்புநிதிக்காக சர்வதேச நிதியத்துக்கு ரூ.57,000 கோடி இந்தியா தரும் என்று மன்மோகன் அறிவித்தார். மான்யத்தை நினைத் தால் தூக்கம் வருவதில்லை என்று சொன்ன பிரணாப்புக்கு இந்த அறிவிப்பு இழந்த நிம்மதியை எல்லாம் மீட்டுத் தந்திருக்கும்.
ஆக, மன்மோகன் மனது வைத்தால் ரூ.57,000 கோடி உடனடியாக வரும் என்று இப்போது நமக்குத் தெரிகிறது. ஸ்பெக்ட்ரம், கோல்கேட் என சட்டவிரோதமாக நாட்டின் கருவூலத்துக்கு ரூ.12 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு என்றால், சட்டபூர்வமாக பெருநிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு. கேளிக்கை வரி ரத்து போன்ற வடிவங்களில் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு மானியம் உண்டு. தங்கத்துக்கும் வைரத்துக்கும் சுங்க வரி விலக்கு அளிப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000 கோடி நாட்டுக்கு இழப்பு என்கிறார்கள். ஆக, இழப்புக்கும் தயாராகவே இருக்கிறது அய்முகூ அரசாங்கம். வறுமைக் கோட்டை இட்டுநிரப்ப இழப்பு ஏற்பட்டால் மான்யம் தந்தால் பிரச்சனை இல்லை என்றும் இப்போது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
நாட்டில் உணவு தானியங்களுக்கும் பஞ்சமில்லை. 6.6 மில்லியன் டன் கோதுமை திறந்த வெளியில் கிடக்கிறது என்கிறார் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஏற்றுமதி செய்ய அனுமதி கோருகிறார். விளைச்சலும் அதிகம் என்று சொல்கிறார்.
கவுஹாத்தியில் சில்சகோ பீல் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பகுதி மக்களுக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் சிக்கின. அவை கள்ள நோட்டுக்கள் அல்ல. பணத்துக்கும் பஞ்சமில்லை.
ஆக வறுமைக் கோடு என்ற ஒன்றுதான் எதற்கு? அதை நிர்ணயிப்பது என்ற பெயரால் ஏன் இத்தனை குழப்பங்கள்? அரசாங்கத்திடம் பணம் இருக்கிறதே செலவழிக்க. அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் என்று சொல்லிவிட்டால் இருப்பவர் தாமாக விலகி இருக்க, இல்லாதவர் தாமாக பெற்றுக் கொள்வர். 2005ல் வெள்ள நிவாரண நிதி என்று ரேசன் அட்டை உள்ளவர்க்கெல்லாம் ரூ.2000 அறிவித்தார் ஜெயலலிதா. சில விதிவிலக்குகள் தவிர, வசதி படைத்தவர்கள் அந்த நிதியை வாங்க வரிசையில் நிற்கவில்லை. பொதுவிநியோகம் அனைவருக்குமானது என்பதால் ரேசன் பொருட்களை நம்பித்தான் வாழ்க்கை ஓட்ட முடியும் என்று இருப்பவர்களைத் தவிர அட்டை வைத்திருப்பவர் அனைவரும் ரேசன் கடைகளுக்குச் செல்வதில்லை. (தமிழ்நாட்டின் பொதுவிநியோகத்தில் நடக்கும் முறைகேடுகள், குளறுபடிகள் வேறு கதை).
ஊரக வேலை உறுதித்திட்டத்தில்  குறைந்த பட்ச சம்பளமே ரூ.132 என்றாகிவிட்ட பிறகு வேறென்ன புதிதாகக் கணக்கெடுக்க வேண்டும்? வேலை உறுதித் திட்டத்தில் பதிவு செய்திருக்கும் அனைவரும் வறியவர்தானே?
வேறுவேறு அமைப்புசாரா தொழில்களில் இருப்பவர்கள் வேறென்ன வசதிகள் வைத்துள்ளார்கள்? அவர்களும் வறியவர்கள்தான்.
வெளிநாட்டுப் பயணமென நாளொன்றில் ரூ.2 லட்சம் செலவு செய்கிற அதிகாரிகள் உள்ள ஒரு நாட்டில் ரூ.15,000க்கும் குறைவாக கூலி பெறுபவர்கள் அனைவரும் வறியவர்கள்தான்.
ஊராட்சி வரை வலைப்பின்னல் இருக்கிற நாட்டில் வறியவரைக் கணக்கிடுவது அவ்வளவு கடினமானதல்ல என்பது சாதாரண மக்களின் பொது அறிவுக்குத் தெரிகிறது. மெத்தப் படித்த பொருளாதார வல்லுநர்கள்தான் குழம்பித் தவிக்கிறார்கள்.

சில பிரச்சனைகள்
இப்படி எளிதான வழிகள் இருக்கும்போது அவை ஏன் அமலாவதில்லை? உலகின் உள்ள 140 கோடி வறிய மக்களின் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள். இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் 60 வயதுக்கு மேல் உள்ள வறுமைக் கோட்டு மக்களுக்கு மாதம் ரூ.200 ஓய்வூதியம் அறிவித்துள்ளது. இது ரூ.300ஆக உயர்த்தப்படும் என்று இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. நாட்டில் 10 கோடி பேர் 60 வயதுக்கு மேல். இதில் 3 கோடி பேருக்குத்தான் திட்டம் அமலாகிறது. மற்றவர்களுக்கு தாங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதை மெய்ப்பிக்க முடியவில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு மய்ய தகவல்படி 65% கிராமப்புற முதியவர்களும் 35% நகர்ப்புற முதியவர்களும் தாங்கள் பிழைத்திருக்க வேலை செய்ய வேண்டியுள்ளது.
இந்திய வறிய மக்களின் அவல நிலைகள் பற்றி எழுதிவரும் பி.சாய்நாத், இந்து நாளேட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், நாளொன்றுக்கு தனிநபருக்கு கிடைக்கும் உணவு தானியங்கள் அளவு உலகமயக் காலங்களில் குறைந்துள்ளது என்கிறார். அது, 1972 - 76ல் 433.7 கிராம், 1977 - 81ல் 447.9 கிராம், 1982 - 86ல் 460.8 கிராம், 1987 - 91ல் 480.3 கிராம், என்று இருந்து, உலகமயம் சூடுபிடித்த காலகட்டத்தில், 1992 - 96ல் 474.9 கிராம், 1997 - 2001ல் 457 கிராம், 2002 - 2006ல் 452.4 கிராம், 2007 - 2010ல் 440.4 கிராம் எனக் குறைந்துவிட்டது.
முதலாளித்துவம் தனது அடிமைக்கு உணவு அளிக்கும் தகுதியை இழந்துவிட்டது என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொல்கிறது. இந்தியாவில் அதுதான் நிலை. உணவே தர முடியாத சமூகம் வேறென்ன தேவைகளை நிறைவு செய்ய முடியும்?
வறுமைக்கோடு அழிந்துபோவது சமூகத்தின் உன்னத நிலைகளில் ஒன்றாக இருக்கும். சமூகத்தின் உன்னத நிலைகள் பொதுவாக முதலாளித்துவ சமூகத்தில் சாத்தியமில்லை.


கட்டுரை

இரும்புக் கரமும் மணல் கொள்ளையும்

ஜி.ரமேஷ்

“சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம்  கொண்டு அடக்குவோம்” என மே 17, 2012 அன்று ஜெயலலிதா முழங்கினார். அதனால்தானோ என்னவோ, சட்டப்படி செய்ய வேண்டும் என்பதற்காக, அய்ந்தாண்டுகள் மணல் அள்ளுவதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ள தாமிரபரணியாற்றில் அதுவும் திருவைகுண்டம் ஆற்றில் இருந்து முறைப்படி பொதுப்பணித்துறையினரால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் (போலி) அனுப்புகைச்  சீட்டினை வைத்துக் கொண்டு மணலை லாரி லாரியாய் அள்ளிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வற்றாத ஜீவநதி என்று பெயர் எடுத்த தாமிரபரணி வருங்காலத்தில் வற்றிப் போய் விடாமல் தடுக்க, தாமிரபரணி ஆற்றை மணல் கொள்ளையர்களிடம் இருந்து காக்க   சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் 02.12.2010 அன்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, என்.நாகமுத்து ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
அதில், தாமிரபரணி ஆற்றின் பகுதிகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகள் உள்பட எந்தப் பகுதியிலும் அரசு ஏஜண்டான பொதுப்பணித் துறையோ, தனியார்களோ அடுத்த அய்ந்தாண்டுகளுக்கு மணல் எடுக்கக் கூடாது என்றும் அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு மணல் தேவைப்படும் பட்சத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர்கள் பொது மக்கள் தேவைக்கு (கவனிக்க: பொதுமக்கள் தேவைக்கு) மணல் தேவை எனக் கருதினால்  மணல் எடுக்க வேண்டிய அளவினையும் இடத்தையும் தமிழ்நாடு கனிமவள சட்ட விதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அதை கண்காணிப்பு குழுவிற்குத் தாக்கல் செய்து, கண்காணிப்புக் குழு மணல் எடுக்க வேண்டிய இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு அதன் இயல்பான நிலை, நீரின் தன்மை, சுற்றுப்புறச் சூழல் ஆகிய மூன்று அடிப்படைக் காரணிகளுக்குப் பாதிப்பு ஏற்ப டாத இடத்தை ஆய்வு செய்து, அதன் பின் மணல் எடுக்க மாவட்ட ஆட்சியர் உரிமம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுநாள் வரை மணல் எடுத்ததால் ஏற்பட்ட ஏரி, குளம் போன்ற குழிகளையெல்லாம் மணல் இட்டு நிரப்ப வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் பொக்லைன் போன்ற எந்திரங்கள் கொண்டு மணல் அள்ளக் கூடாது என்றும் எல்லா மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வுக்குழுவின் அறிக்கையைப் பெற்று அதன் பின் மணல் எடுக்கும் உரிமம் வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உயர்நீதி மன்றத்தின் உத்தரவு எதுவும் நடைமுறைப்படுத் தப்படவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கூட ஆகவில்லை; அதற்குள் அரசின் அனுமதிச் சீட்டோடு மணற்கொள்ளை அமோகமாக நடக்கிறது.
மணற்கொள்ளை நடப்பது ஒருபுறம் என்றால் அதைத் தடுக்க முயற்சிப்பவர்களைத் தாக்குவதும் கொலை செய்வதும் மணல் மாஃபியாக்களால் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றன. காவல்துறையோ மாமூல் வாங்கிக் கொண்டு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மிட்டாதார்குளத்தில் மார்ச் மாதம் மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற 21 வயது அய்.டி மாணவன் சதீஷ்குமாரை தந்தையின் கண்முன்னே லாரி ஏற்றிக் கொன்றது மணல் மாஃபியா கும்பல். லாரி ஓட்டுநரையும் மற்றொருவரையும் கைது செய்துவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது காவல்துறை. சில தினங்களுக்கு முன் செங்கோட்டை அருகே லாலா குடியிருப்பு பகுதியில் மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற தாசில் தாரை லாரியை ஏற்றிக் கொல்ல முயற்சித் துள்ளார்கள். தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை என்ற காரணம் காட்டி காவிரியாறு, பாலாறுகளில் இருந்து திருச்சி, கரூர் போன்ற இடங்களில் இருந்து மணலைக் கொண்டு வந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மலைபோல் குவித்து வைத்து மணல் வியாபாரம் நடைபெறுகிறது.
ஒரு யூனிட் மணல் ரூ.300 அதன் மீதான லெவி ரூ.24 என அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த மணலை மாஃபியாக்கள் ஒரு யூனிட் ரூ.4,750ல் இருந்து ரூ.5500 வரை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் விற்கிறார்கள். இதுவே கன்யாகுமரி மாவட்டத்தில் ரூ.8000த்திற்கும் கேரளா என்றால் ரூ.11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருநெல்வேலி அல்வா இங்கே கிடைக்கும் என்பதுபோல், கேரள மாநிலம், பாலக்காட்டில், காவிரி ஆற்றுமணல் இங்கே கிடைக்கும், அமராவதி ஆற்று மணல் கிடைக்கும் என்று எழுதி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
கேரளாவில் ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசும் அதை முழுமையாக அமல்படுத்தி மணல் எடுப்பதை சட்டப்பூர்வமாகத் தடை செய்துள்ளது. அதன் காரணமாக தமிழகத்து ஆறுகளையெல்லாம் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மணல் மாஃபியாக்களும் கூட்டு சேர்ந்து சகதிக் குட்டைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சதுரஅடி மண் உருவாக ஒரு நூறு ஆண்டுகள் ஆகும். இப்படி பல நூறு ஆண்டு களாக உற்பத்தியான ஆற்று மணலையெல்லாம் பத்தே ஆண்டுகளில் பனை மரம் ஆழத்திற்கு ஜேசிபி, பொக்லைன் எந்திரங்கள் கொண்டு தோண்டி எடுத்து நீராதாரத்தையே அழித்துவிட்டனர்.
கர்நாடகாவில், வட இந்தியாவில் சுரங்க மாஃபியாக்கள் அராஜகம் என்றால் தமிழகத்தில் மணல் மாஃபியாக்கள் அட்டூழியம் தலைவிரித்தாடுகிறது. இந்த அட்டூழியத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி பாகுபாடு கிடையாது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை பெரும்போராட்டமாக வெடித்தபோது கேரளாவிற்கு எந்தப் பொருளும் கொண்டு செல்லக் கூடாது, பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என முழக்கமிட்ட அரசியல் கட்சிகள் கேரளாவிற்கு மணல் கொண்டு செல்வது தடை செய்யப்பட வேண்டும் என்று மட்டும் சொல்லவில்லை.
கேரளாவிற்கு மட்டும் அல்ல. மாலத்தீவிற்கும் சிங்கப்பூருக்கும் மணல் கப்பலில் செல்கிறது. கட்டடம் கட்டுவதற்காக மாலத்தீவு இறக்குமதி செய்யும் ஆற்றுமணலில் இந்தியாவின் பங்கு 11 முதல் 15% ஆகும். 2008 - 2009ல் மாலாத்தீவிற்கான ஆற்றுக்குறு மணல் ஏற்றுமதியின் அளவு 4.5 லட்சம் டன்னில் இருந்து 5.85 டன்னாக உயர்த்தப்பட்டது. அதுவே, 2009 - 2010ல் 10.26 லட்சம் டன்னாகவும் 2011 - 2012ம் ஆண்டில் 11 லட்சத்து 85 ஆயிரத்து 455 மெட்ரிக் டன்னாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குனரால் (ஈண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ் எங்ய்ங்ழ்ஹப் ர்ச் ஊர்ழ்ண்ங்ஞ்ய் பழ்ஹக்ங்) உயர்த்தப்பட்டது. இது இந்தியா மற்றும் மாலத்தீவுக்கு இடையேயான இரு தரப்பு வியாபார ஒப்பந்தத்தின் மூலம் அனுப்பப்படுகிறது. மணல் ஏற்றுமதி செய்வதற்கு வேதியியல் மற்றும் இரசாயனம் சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதி பெற வேண்டும். இது நம் மந்திரிகளுக்கும் மாஃபியாக்களுக்கும் பெரிய விசயமே அல்ல. இந்த மணல் ஏற்றுமதியால் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் கும்பல்கள் தமிழகத்தில் மட்டுமின்றி கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பெருகி விட்டார்கள். மார்ச் மாதம் மத்தியப் பிரதேசம், முரணா மாவட்டத்தில் நரேந்திர குமார் என்கிற 30 வயதுடைய இளம் காவல்துறை அதிகாரி மணல் திருட்டைத் தடுக்கச் சென்றபோது டிராக்டரை அவர் மீது ஏற்றி கொலை செய்து விட்டார்கள். கடந்த ஆண்டு கங்கை நதியில் மணல் அள்ளக் கூடாது என்றும் ஹரித்துவார் பகுதியில் கல்லுடைக்கக் கூடாது என்றும் கூறி உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார் சுவாமி நிகமானந்தா. அவரின் உண்ணாவிரதம் எந்த அரசாலும் மட்டுமல்ல, எந்த ஊடகத்தாலும் கண்டு கொள்ளப்படவேயில்லை. 
ஆளும் கட்சியின் வட்டச் செயலாளர் முதல் மந்திரிகள் வரை அதிகம் சம்பாதிப்பது ஆற்று மணல் மூலம்தான். திமுக ஆட்சி காலத்தில் மந்திரிகள், எம்எல்ஏக்கள் தமிழகத்து ஆறுகளைப் பங்கு பிரித்துக் கொண்டு பட்டா போட்டு மணலை அள்ளிக் கொள்ளையடித்தார்கள். ஆட்சி மாறிய பின் தற்போது அதிமுகவினர் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். நாகப்பட்டிணம் மாவட்டத்தில், பொலகம் பஞ்சாயத்தில் உள்ள திருமலைராஜனார் ஆற்றில் சட்டவிரோதமாக மணலை டிராக்டர்களில் அள்ளிச் செல்கிறார்கள். இந்த டிராக்டிர்களில் எல்லாம் ஒன்று அதிமுக கொடி பறக்கிறது அல்லது அதிமுக கொடி வண்ணத்தில் லோக்கல் வட்ட, ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்களின் பெயர் இருக்கிறது. மணல் திருட்டைத் தடுக்கப் போராட்டம் நடத்தினால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று கிராம மக்களை அம்மாவின் செல்லப் பிள்ளைகள் மிரட்டுகிறார்களாம். திருமலைரா ஜனார் ஆற்றோரம் இருந்த மூங்கில்களையும் தேக்கு மரங்களையும் மொட்டையடித்து தங்களுடைய தங்கப்புதையல் வியாபாரத்திற் காக பாதை அமைத்துக் கொண்டுள்ளார்கள் இந்த அதிமுக மணல் கொள்ளையர்கள். அது மட்டுமில்லாமல், விவசாய நிலங்களுக்கும் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களுக்கும் கிராம மக்கள் வழக்கமாகச் சென்று கொண்டிருந்த பாதையையே அடைத்துவிட்டார்கள் அம்மா விசுவாசிகள். இந்த மணல் திருட்டில் 15 வயது சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒரு டிராக்டர் மணல் ஏற்ற அவர்களுக்கு 350 ரூபாய் சம்பளம். ஒரு நாளைக்கு 4 டிராக்டர்கள் மணலை வேகமாக ஏற்றி கிராமத்திற்கு வெளியே கொண்டு வந்து விடுகிறார்களாம். வருவாய்த் துறை அதிகாரிகளிடம் சென்று புகார் கொடுத்தால் நீங்களே டிராக்டர்களை மடக்கிப் பிடித்து வாருங்கள் என்று சொல்கிறார்களாம். மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரியின் நிலை தங்களுக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், சமீபத்தில் வடக்கு பொய்கைநல்லூரில் ஆர்டிஓ சொன்னார் என்று மணல் திருட்டைச் சர்வே எடுக்கச் சென்ற கிராம நிர்வாக அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். இவை எல்லாம் நடந்து கொண்டிருப்பது 2012 ஜ÷ன் மாதத்தில்தான். எனது அரசு ஆற்றுப்படுகைகளை மோசம் செய்ய விடாது, மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று ஜெயலலிதா அறிவித்ததற்குப் பின்தான்.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 4173 சட்டவிரோத மணல் எடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 5033 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 5501 வாகனங்கள் பிடிக்கப்பட்டதாகவும், 12 பேர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டதாகவும், 14 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில், அதுவும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,  மணல் விற்பனையின் மூலம் ரூ.197 கோடி வந்துள்ளது. ஆனால், இதற்கு முந்தைய அய்ந்தாண்டுகளின் சராசரி மணல் விற்பனை வருமானமே ரூ.120 கோடிதான்.  இதிலிருந்தே மணல் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லையா என்றும் கேட்டுள்ளார்.
கணக்கில் வந்தததை மட்டுமே சொல்லும் ஜெயலலிதா. கணக்கில் வராமல் அவரின் விசுவாசிகள் காவிரி, தென்பென்னை, பாலாறு, வைகை, பொருணை, வைப்பாறு,  வேம்பார் போன்ற ஆறுகளில் அதிமுக கொடியுடன் தங்குதடையின்றி மணலை அள்ளிக் கொள்ளையடிக்கிறார்களே. அவையெல்லாம் யார் கஜானாவிற்குப் போகிறது, நீதிமன்றத்தின் தடை மணல் மாஃபியாக்களின் செயல்பாட்டிற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்திடவில்லை. 5000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை பிடித்துள்ளதாகச் சொல்லியுள்ளார். எந்த வாகனங்களை? எல்லாம் மாட்டு வண்டிகள். பெயருக்கு ஒரு சில டிராக்டர்கள், லாரிகள். அதனால்தான் எப்போதும் புள்ளிவிபரங்களை அள்ளி விடும் ஜெயலலிதா என்னென்ன வாகனங்கள் என்று விளக்கமாகச் சொல்லவில்லை. மாட்டையும் வண்டியையும் வாங்கிவிட்டதாலேயே விவசாயிகள், வயிற்றுப் பிழைப்பிற்காக தங்கள் தேவைக்கு மணல் அள்ளியோ அல்லது மணல் மாஃபியாக்களின் குவாரிகளுக்கு மணல் அள்ளிக் கொடுத்தோ மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், முக்கூடல், ஏர்வாடி பகுதிகளில் பிடித்த மாட்டு வண்டிகளை காவல் துறையினரே தீ வைத்து கொளுத்தியுள்ளார்கள். மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மீதுதான் குண்டர் சட்டம் எல்லாம் பாய்கிறது. மாட்டு வண்டித் தொழிலாளர்கள் தங்கள் தேவைக்காக கரம்மை மண்ணைக் கூட அள்ள விடாமல் அதிகாரிகள் கைது செய்து வழக்குப் போடுகிறார்கள். ஆனால், லாரிகளில் டிராக்டர்களில் மணலைக் கொள்ளையடிக்கும் அதிமுக நிர்வாகிகள் ஆடம்பரமாக வலம் வருகிறார்கள்.
தவறு செய்யும் சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்களைக் கண்டித்தாராம் ஜெயலலிதா. கவுன்சிலர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மாநகராட்சியைக் கலைத்துவிடுவேன் என்று கொந்தளித்தாராம். ஆனால், வருங்கால சந்ததியருக்கு குடிக்கத் தண்ணீர் இல்லாமல், தமிழகத்தின் எல்லா ஆறுகளிலும் மணலை அள்ளிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிற தன் கட்சியினரை அழைத்து கண்டிக்கவோ, குண்டர் சட்டத்தில் போடவோ மாட்டார். ஆறுகளில் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள உறைகிணறுகளைச் சுற்றி மணல் அள்ளப்பட்டுவிட்டதால் உறைகிணறுகளில் சேறும் சகதியும்தான் உள்ளது. அதனால் குடிநீர் தட்டுப்பாடு பெருகிக் கொண்டிருக்கிறது. ஆற்று மணல்கள் அள்ளப்பட்டுவிட்டதால் தண்ணீர் சேமிப்பு இல்லாமல் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது. மழை இன்மை, வெள்ளம், தட்பவெட்ப நிலை மாற்றம் இவற்றால் நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கையில், மணல் அள்ளப்படுவதால் ஆறுகள் வறண்டுபோவதும் அதன் போக்குகள் மாற்றப்படுவதும் நடக்கிறது.
இந்த நிலையில், ஆற்றுப்படுகைளில் இருந்து அரசிடம் மணலை வாங்கி  அதை சேமிப்புக் கிடங்குகளில் பதுக்கி வைத்து செயற்கையாக மணல் தட்டுப்பாட்டை உருவாக்கு வதைத் தடுக்க பல்வேறு போராட்டங்களால் தமிழ்நாடு சுரங்கம் மற்றும் கனிமவள சலுகை விதிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 38சி பிரிவை ரத்து செய்யச் சொல்லி, கட்டுமானத் தொழிலாளர்களின் அதுவும் புலம் பெயர்ந்து வந்துள்ள வட மாநிலத் தொழிலாளர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டும் கட்டட நிறுவன உரிமையாளர்கள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுபோன்ற பில்டர்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உண்மையில், தமிழகத்தில் நடக்கும் கட்டுமானங்களின் எண்ணிக்கைக்கும் அதன் தேவைக்கும் அதிகமான அளவில்தான் ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இது வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதை மறைக்க அரசின் சட்டங்களால் கட்டுப்பாடுகளால் மணல் தட்டுப்பாடு ஏற்படுவதுபோன்ற மாயையை உருவாக்க இது போன்ற வழக்குகள் போடப்படுகின்றன.
மொத்தத்தில், மண்ணையும் தண்ணீரையும் விற்பனைப் பொருளாக்கி வருங்காலத்தில் உயிர் வாழ்வதையே கேள்விக்குறியாக்கி, நாட்டைச் சுடுகாடாக, கொள்ளைக் கூட்டங்கள் மாற்றிக் கொண்டிருக்க, அதன் தலைவியோ கும்ப ஆட்டம், கரகாட்டம் வரவேற்புடன் கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார்.

இரண்டாவது சுற்று தேர்தலுக்குப் பிறகு கிரீஸ்
கடுமையான போராட்டங்கள் காத்திருக்கின்றன

முடிவுக்கு வராத மே 6 தேர்தலைத் தொடர்ந்து நடந்த ஜுன் 18 தேர்தல்கள் அடிப்படையான மூன்று மேடைகளில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மக்களைத் தள்ளியிருந்தன. வழமையான ஆளும் கட்சிகளான புதிய ஜனநாயகம் (என்டி) மற்றும் பசோக் அமைப்புகள் முன்வைக்கிறவாறு அய்ரோப்பிய கோட்டத்திற்குள்ளும், அய்ரோப்பிய ஒன்றியத்திலும் இருந்து கொண்டு மீட்புத் திட்டங்களுக்கான  நிபந்தனைகள் மீது மறுபேச்சுவார்த்தை நடத்துவது, அல்லது வேகமாக வளர்ந்து வரும் போர்க்குணமிக்க இடதுசாரி அமைப்பான சிரிசா முன்வைப்பது போல் அய்ரோப்பிய கோட்டத்திற்குள்ளும், ஒன்றியத்திலும் இருந்துகொண்டு ஒருதலைபட்சமாக உரிய நேரத்தில் கடனை செலுத்தாமல் தள்ளிப்போடுவது மற்றும் கடனுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (நிபந்தனைகளை) நிராகரிப்பது அல்லது கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடான, கடன்முடிப்பை, அய்ரோப்பிய ஒன்றியம் என்ற மொத்தத் திட்டத்தை, அதனுடன் சேர்த்து நேட்டோவை மறுப்பது.
முதல் நிலைப்பாட்டை எடுப்பது என்பது, கடந்த அய்ந்தாண்டுகளில் சமூக – பொருளாதார நெருக்கடி ஏற்கனவே ஏற்படுத்தியிருக்கிற எதிர்மறை வளர்ச்சி, 23%க்கும் மேலான வேலை வாய்ப்பின்மை, பாரதூரமான வறுமையின் வளர்ச்சி (15%க்கும் குறைவாக இருந்ததில் இருந்து 40%க்கும் கூடுதலாக) மற்றும் தற்கொலைகள் ஆகியவற்றைக் குறிக்கும்.
மூன்றாவது நிலைப்பாடு போர்த்தந்திர அர்த்தத்தில் பார்த்தால் புரட்சிகரமானது. ஆனால், உடனடியாக அய்ரோப்பிய கோட்டத்தில் இருந்து பிரிவது என்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலையை உருவாக்கியிருக்கிறது. இரண்டாவது மேடை பொன்னான நடுநிலையை உருவாக்க முயற்சி செய்தது: கடுமையான அநீதி மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிரான கிளர்ச்சி, ஆனால், அய்ரோப்பிய கூட்டமைப்பில் இருந்தும் தனிமைப்பட்டுவிடாமல் இருப்பது.
சர்வதேச மற்றும் கிரேக்க ஊடகங்கள், சிரிசா தேர்தலில் வெற்றி பெற்று அதன் திட்டம் அமல்படுத்தப்படுமானால், பொருளாதார குளறுபடி ஏற்பட்டு சின்னாபின்னமாகும் என்ற சித்திரத்தைக் கொடுத்து வாக்காளர்களுக்கு பீதியூட்ட முயன்றார்கள். அது வேலை செய்தது. தொடரும் சிக்கன நடவடிக்கைகள் மீதான கோபத்தை விட, சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பொதுப்பணிகளை மேற்கொள்ள தேசிய கருவூலத்தில் எவ்வித கையிருப்பும் இல்லை என்ற சூழலில் அய்ரோப்பிய கோட்டத்தில் இருந்தும், மூலதன சந்தையில் இருந்தும் தூக்கி எறியப்படுவோம் என்ற அச்சம் வலிமையாக முன்வந்தது. இதுதான் புதிய ஜனநாயகத்தை முதலிடத்திற்கு கொண்டு சேர்த்தது. மே 6ல், 18.9% இருந்த தனது பங்கை 29.6% என பரவலாக உயர்த்தியது. பசோக் 13.2%லிருந்து 12.3% பெற்று மேலும் கடைசி சுற்றில் தண்டிக்கப்பட்டது. சிரிசா குறைந்த வித்தியாசத்தில் அதாவது 6 வாரங்களுக்கு முன் 16.8% என்ற நிலையில் இருந்து இம்முறை 26.9% பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்தது. நவ பாசிச சக்தியான ‘பொன்விடியல்’ (இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொட்டடிக்குள் இருக்க வேண்டும் என்பதைப் போதிப்பவர்கள்) மே 6 தேர்தலுக்குப் பிறகு அதனுடைய பாசிச தன்மைக்கு இன்னும் கூடுதல் சாட்சியங்கள் கிடைத்த பின்பும் (சமீபத்திய தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அதன் படுமோசமான தலைவர் ஒருவர் விவாதிக்கும் ஒருவரை நேரடியாக தாக்கிய சம்பவம்) அதன் வாக்கு வங்கியான 7%அய் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாத இடதுசாரி கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (கேகேஈ)யின் வாக்கு 8.5%லிருந்து 4.5% ஆக குறைந்து விட்டது.
அக்டோபர் 2009 தேர்தலில் வெறும் 4.6% வாக்குகள் பெற்ற சிரிசா நிதானமாக முன்னேற்றங்களை பதிய வைத்திருப்பதுதான் இந்தத் தேர்தல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. பசோக் மற்றும் ஜனநாயக இடது (6.26% வாக்கு) ஆகியவற்றின் பங்கேற்பு அல்லது ஆதரவுடன் புதிய ஜனநாயக கட்சி தலைமையில் உருவாக இருக்கும் கூட்டணி அரசாங்கத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் எதிர்ப்பது என்ற நிலைப்பாட்டை சிரிசா எடுத்துள்ளது.
எதிர்பார்த்தபடியே பாரக் ஒபாமாவும், ஏஞ்சலா மெர்க்கெல்லும் தேர்தல் முடிவுகளை உடனடியாகப் பாராட்டியிருக்கிறார்கள். யூரோ நாணய மதிப்பு துள்ளிக் குதித்து பங்குவர்த்தகத்தில் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கிறது.
பற்றாக்குறையைக் குறைப்பதற்கான காலக்கெடுவை சிறிது நீட்டிப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. ஆனால் புதிய ஜனநாயக கட்சி நிறைய உத்தரவாதங்களை, அதாவது ஓய்வூதிய வெட்டு, சம்பள வெட்டு நிறுத்தி வைக்கப்படுவதாகச் சொல்லியுள்ளது. குறைந்தபட்சம் சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் அரசாங்கம் மிகப் பெரும் அழுத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். ‘கிரீஸ் ஏற்றுக் கொண்ட கடப்பாடுகளை தேர்தல்களால் கேள்வி கேட்க முடியாது. ஒப்புக்கொண்ட சீர் திருத்த நடவடிக்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது’ என்று இவற்றையெல்லாம் மனதில் வைத்துத்தான் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியிருக்கிறார். அரசாங்கம் அமைந்தவுடன் இந்தப் பிரச்சனைகளில் அரசியல் சூறாவளி வளரும் என்பது வெளிப்படை.
கிரேக்கம் வெளியேறுவது (கிரீக் எக்சிட்) மற்றும் அய்ரோப்பா கோட்டத்தின் உள் வெடிப்பு என்ற அச்சுறுத்தல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதால் ஏகாதிபத்திய சக்திகள் தற்சமயம் இறுக்கம்  தளர்ந்ததாய் உணர்கிறார்கள். ஆனால் பொதுமக்களின் சக்திவாய்ந்த போராட்டங்கள் முன் அரசாங்கம் நடத்துவது மிகவும் கடினம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வரும் மாதங்களில் நேட்டோ மற்றும் அய்ரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான கிரீசில் அடிப்படை மாற்றங்கள் துரிதப்படுத்தப்படும். அது அய்ரோப்பா மற்றும் உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை உண்டு பண்ணும். சிரிசாவும், கேகேஈயும் எதிர்பார்க்கப்படுகிற எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கு மானால், வலதுசாரிகளின் ஜ÷ன் 18 வெற்றி, நிச்சயமாக தேர்தலிலும் நாடாளுமன்றப் போராட்டங்களிலும் இடதுசாரிகளின் புதிய வெற்றிக்கான பாதையைத் திறந்துவிடும்.

மாநிலம்

மதுபனியில்  நிலப்பிரபுக்களின் தாக்குதலுக்கு எதிராக கிராமப்புற வறியவர்களின் போராட்டம்

மாலெ கட்சி பதாகையில் மதுபனியில் புறப்பட்ட ஆயிரக்கணக்கான கிராமப்புற வறியவர்களின் பேரணி ஜுன் 15, 2012 அன்று மாவட்டத் தலைநகரில் நிறைவுற்றது. வீட்டுமனை கோரிய தலித் மற்றும் வறியவர் மீது நிலப்பிரபுத்துவ சக்திகள் தொடுத்த தாக்குதல் மீது நடவடிக்கை கோரி இந்தப் பேரணி கட்டமைக்கப்பட்டது. ‘வறியவர்களுக்கு புனர்வாழ்வு’ என்ற முழக்கத்தில் கட்சி ஜனவரி மாதம் முதல் இந்த மாவட்டத்தில் நடத்தி வரும் இயக்கம், பொது நிலங்கள் நிலப்பிரபுத்துவ சக்திகளால், மகந்துகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. கட்சியின் முன்முயற்சியால் மாவட்டத்தின் பல இடங்களில் அதுபோன்ற நிலங்கள் கண்டறியப்பட்டு வறியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரியில் மடாதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாசவுரா கிராமத்தில் 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு 50 வறிய குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 10 ஏக்கர் நிலம் இதே பகுதியில் மறுவிநியோகம் செய்யப்பட்டது. இதனால் நில மாஃபியா கும்பலும், மடாதிபதியும் மாலெ கட்சி ஊழியர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டனர்.
ராஜ்நகர் ஒன்றியம், காசியானா கிராமத்தில் நிலப்பிரபுக்கள் பிடியிலிருந்த 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு 100 மகா-தலித் குடும்பங்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டது. லாகேரியகஞ்ச் என்ற இடத்தில் 11 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு 300  குடும்பங்களுக்கு வீட்டுமனையாக விநியோகிக்கப்பட்டது. மங்கரௌனியில் ஒரு குளமும் கிராம மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
கிராம மக்கள் ஊர் தலைவர் முன்னிலை யில் பிரச்சினையை பேசித் தீர்க்க சென்றபோது, நிலப்பிரபுக்கள் முதலில் இம்முயற்சியை தடுக்க நீதிமன்றம் சென்றார்கள். அடுத்து  குண்டர்கள் கொண்டு ஜுன் 4, 2012 அன்று தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார்கள். வெகுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை கட்டமைத்ததால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு வந்தவர்கள் வந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடினர். பிறகு அது போலீசாரால் கைப்பற்றப்பட்டது. பிறகு மதுபனியில் கூடிய நூற்றுக்கணக்கான நிலப்பிரபுக்கள் கிராம மக்கள் மீது ஆயுத நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிப்படையாக மிரட்டினர்.
இந்தப் பின்புலத்தில்தான் ஜுன் 15 அன்று எதிர்ப்பு நடவடிக்கை கட்டமைக்கப்பட்டது. சிவப்புக் கொடி, கோரிக்கை அட்டைகளுடன் மக்கள் வில் அம்புகளையும் எடுத்துச் சென்றனர். மங்காரௌனியில் மாலெ கட்சி அலுவலகத்தைத் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், குற்றவியல் பின்புலம் உள்ள நிலப்பிரபுக்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நில மாஃபியாக்களின் தாக்குதல் மீது சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை, தற்போது நில மாஃபியாக்கள், நிலப்பிரபுக்கள் ஆக்கிரமிப்பிலுள்ள பொது நிலங்கள் மறுவிநியோகம் செய்யப்பட வேண்டும், மாநிலத்தில் நடந்துள்ள நில மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டங்கள் கிராமப்புற வறியவர் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பகுதியில் கம்யூனிச இயக்கத்தின் புத்தாக்கம் என்று மக்கள் இந்தப் போராட்டங்களைப் பார்க்கிறார்கள். ஆனால் நிலப்பிரபுத்துவ குற்றக்கும்பல்கள் இதுநாள் வரை கேள்வியின்றி இருந்த தங்கள் ஆளுமைக்கு சவாலாக இதைப் பார்க்கிறார்கள்.

மண்ணில் பாதி

காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் பெண்கள் விரோத பாகுபாட்டிற்கு எதிராக

காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் பெண்கள் விரோத பாகுபாட்டிற்கு எதிராக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஜுன் 20 அன்று பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தியது. பேரணியை பெண்கள் கழக மாவட்டச் செயலாளர் தோழர் செண்பகவள்ளி துவக்கி வைத்தார். பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். ராணி, பேபி, லட்சுமி, சக்தி, சம்மனசு மேரி, சௌபாக்கியம், வசந்தா, ரெஜினா மேரி, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி நகராட்சி முன் துவங்கி பேருந்து நிலையம் வழியாக சுமார் 1 கி.மீ.க்கு மேல் வந்து தாலுகா அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பொதுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் சாலை மறியல் செய்யாமல் செல்லுங்கள், மேலதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு கேள்விகள் வந்து கொண்டு இருக்கின்றன என்றனர். பேரணியில் கலந்துகொண்ட பெண்கள் நாங்கள் இப்படித்தான் மெதுவாகச் செல்வோம். நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கும், மக்களுக்கும் தெரிவிப்பதற்காகத்தான் பேரணி, பொதுக் கூட்டம், மறியல் நடத்துகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள். இந்த வாக்குவாதத்தின்போது, சாலை மறியல் போன்ற நிலை ஏற்பட்டதால் மக்கள் கூட்டமும், பள்ளி மாணவர் கூட்டமும் நிறைந்துவிட்டது.
100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் ஊழல், ரேசன் அரிசி கடத்தல் ஆகியவற்றை அம்பலப்படுத்தியும், தாலுகா அலுவலகம் முதல் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் வரை. பெண்கள், அரசின் நலத்திட்டங்கள் பெறப் போகும்போது, கேட்கப் போகும்போது பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதைக் கண்டித்தும் இருளர் பெண்களை பாலியல் வன்முறை செய்த காவலர்களை கைது செய்யும் வரை போராட்டம் ஓயாது என்றும்தோழர்கள் பேசினார்கள்.
பொதுக் கூட்டத்தில் பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாலெ கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர்.
மாலெ கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பாக தரப்பட்ட ரூ.1000 நிதியை மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பெற்றுக்கொண்டார்.
 ஜுன் 22 அன்று அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சிலும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இணைந்து அம்பத்தூரில், பெண்கள் மீதான காவல்துறை, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் பெண்கள் விரோத பாகுபாட்டிற்கு எதிராக, கவுரவக் கொலைக்கு எதிராக பெண் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும், பன்னாட்டு தொழிற்சாலைகளின் கொள்ளைக்கெதிராக கண்டனக் கூட்டம் நடத்தின.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான தோழர் லில்லி தலைமை தாங்கினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், கட்டுமானத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் முனுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் பழனிவேல் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர்கள் தோழர்கள் தேவகி, குப்பாபாய் மற்றும் கட்சியின் அனைத்து ஊழியர்களும், குடியிருப்பு பகுதிகளில் இருந்தும் அனைத்து தொழிற்சங்க கிளைகளில் இருந்தும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

களம்

அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர் சங்கத்தின் வெள்ளி விழா

விராலிமலையில் உள்ள அமெரிக்க பன்னாட்டு என்ஜினியரிங் நிறுவனமான சோமாக்ஸ் நிறுவனத்தில் ஏஅய்சிசிடியு தலைமையில் துவங்கப்பட்ட சங்கம் கடந்த 25 ஆண்டு காலமாக தொழிலாளர்களின் நலனை உயர்த்திப் பிடித்து வந்துள்ளது. 17.06.2012 அன்று தோழர் இரவிக்குமார் நினைவரங்கத்தில் சங்கத்தின் வெள்ளி விழா கருத்தரங்கம் தோழர் செபாஸ்டின் தலைமையில் நடைபெற்றது.
ஏஅய்சிசிடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், சோமாக்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர் கே.ஜி.தேசிகன், ஏஅய்டியுசி திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் என்.பாலகிருஷ்ணன், சிஅய்டியு புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் தோழர் செல்வராஜ், துப்பாக்கித் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தோழர் அழகேஸ்வரன், சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் (டிவிஎஸ்) எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் இளங்கோ, எஸ்.ஆர்.எஃப் எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் பட்டுராஜா, ரானே எம்ப்ளாயீஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிச்செல்வன், டைகோ சன்மார் எம்ப்ளாயீஸ் வெல்ஃபேர் யூனியன் நிர்வாகி தோழர் சௌந்தர், சன்மார் பவுண்டரி தொழிலாளர் சங்க தோழர் விஜயகுமார், சன்மார் இன்வெஸ்ட்மென்ட் கேஸ்டிங் கம்பெனி சங்க நிர்வாகி தோழர் ஆரோக்கியம், ரானே யுஎல்எஃப் தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி, சென்னை சன்மார் குழும சங்கத்தின் தலைவர் தோழர் ஜெயமுருகன், சென்னை பிஷ்ஷர் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் தோழர் வடிவேலு, சுந்தரம் இண்டஸ்ட்ரீஸ் யுஎல்எஃப் மாநில துணைத் தலைவர் தோழர் இராமராஜ÷ கலந்து கொண்டனர். சென்னையிலிருந்து சன்மார் குழும நிர்வாகிகள் 10 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது. டிஃபன்ஸ் காண்ட்ராக்ட் லேபர் யூனியன் நிர்வாகிகள் தோழர் சண்முகம், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சியின் தொழிற்சங்க முன்னணிகள் 150 பேர் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.
ஊராட்சியில் நிர்வாக முறைகேட்டுக்கு எதிராக
 ஜுன் 27 அன்று புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள சுகாதாரச் சீர்கேடுகளை கண்டித்தும், மக்கள் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊராட்சி மட்டத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் ஆசைத்தம்பி மற்றும் வளத்தான் பங்கேற்றனர். தாய் கிராமத் திட்டத்தை அமலாக்காமல் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களுக்கு திட்டத்தை அமலாக்க நிதி ஒதுக்குவதெனவும் முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதெனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
தானே புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை  வட்டாட்சியர் அலுவலகத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்கக்கோரி 2000க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டு அவை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து 25.06.2012 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த மாலெ கட்சித் தோழர்கள் அனைத்து தயாரிப்புக்களும் மேற்கொண்டனர். மக்களும் போராட்டத்திற்கு வரத் துவங்கிய நேரத்தில் வட்டாட்சியர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரின் பார்வையில் மனுக்கள் உள்ளன என்றும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்த பின், கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்ற அறிவிப்புடன் போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்ளப்பட்டது. கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எம்.வெங்கடேசன் மற்றும் மாவட்ட கட்சியின் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

பேச்சிப்பாறை தண்ணீரை அணுஉலைக்கு எடுக்காதே!

 ஜுன் 23 அன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எல்.எ.பில் 47/2008 சட்டத் திருத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறவேண்டும் என்றும், பேச்சிப்பாறை அணை தண்ணீரை கூடங்குளம் அணுஉலையை குளிர்விக்க எடுத்துச் செல்லும் தமிழக அரசின் முயற்சியை கைவிடவேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி அதிமுக அரசு 3 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மாலெ கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் மேரி ஸ்டெல்லா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் நிம்மி உட்பட பலரும் உரையாற்றினார்கள். 


பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகை

15.06.2012 அன்று அகில இந்திய மாணவர் கழகமும், புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தின. தமிழகத்தில் கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் வழங்காததையும், அதை அமல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசை கண்டித்தும், தமிழகத்தில் கட்டாய நன்கொடை மற்றும் நிர்ணயித்ததைவிட அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி முதலாளிகளைக் கைது செய்யக் கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணிணி வழங்காததைக் கண்டித்தும், உடனே வழங்கக்கோரியும், சாராயக் கடைகளை ஏற்று நடத்தியது போல் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தி தரமான, விஞ்ஞானபூர்வமான இலவசக் கல்வி வழங்கக் கோரியும் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, பொதுச் செயலாளர் தோழர் ரமேஷ்வர்பிரசாத், இணை செயலாளர் தோழர் சீதா, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்புக்குழு உறுப்பினர்கள் தனவேல், தண்டபாணி, சுஜாதா, இளவரசன், அன்பு, மாலெ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லில்லி, முனுசாமி, மோகன், வேணுகோபால், ஜீவா, இளைஞர் கழக முன்னணி தோழர்கள் சுரேஷ், தமிழ்சிற்பி, சாக்ரடீஸ், பிரபு, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்று காலையே நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், 10க்கும் மேற்பட்ட காவல்துறை வண்டிகளும் மாணவர், இளைஞர் கழக தோழர்களை கைது செய்யத் தயாராக இருந்தன. துணிச்சலுடன் அலுவலகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். போராட்டத்தின் விளைவாக துணை இயக்குநர், மாணவர், இளைஞர் கழக முன்னோடிகளைச் சந்தித்து கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டு கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து முறையான பதிலை தாமதமில்லாமல் வழங்குவதாகத் தெரிவித்தார். முற்றுகையிட்ட மாணவர், இளைஞர் கழக தோழர்களை தமிழக அரசின் காவல்துறை கைது செய்தது. கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்திருந்த போது கோவை பிரிக்கால் ஆலை தலைவர்கள், ஏஅய்சிசிடியு மாநில முன்னணிகள் தோழர் குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை வாழ்த்தி உரையாற்றினர். தமிழக அரசின் காவல் துறை மாலையில் தோழர்களை விடுதலை செய்தது.

சீரான மின்சார விநியோகம் கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுநல வழக்கு

மின்வெட்டுக்கு முடிவு கட்டப் போவதாக ஜெயலலிதா அன்றாடம் அறிவிப்புக்கள் விடுத்துக் கொண்டிருக்கும்போது, மறுபுறம், தமிழ்நாடு முழுவதும் மின்விநியோகம் சீராக இல்லாத நிலையே தொடர்கிறது. குறிப்பாக சென்னையில், அறிவிக்கப்பட்ட மின்தடை இரண்டு மணி நேரங்களில் இருந்து ஒரு மணி நேரமாகக் குறைக்கப்பட்டாலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் குறைஅழுத்த மின்விநியோகம் போன்ற வெவ்வெறு வழிகளில் மின்தடை தொடர்கிறது.  பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம், மக்களுக்கு அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்தடை என்ற நிலையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையை சீர்செய்ய மின்வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் தோழர் விஜய் பொதுநல வழக்கு தொடுத்தார். புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி வழக்கறிஞராக வாதாடிய இந்த வழக்கில் நீதிபதி நிலைமையை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைத் தெரிவிக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அஞ்சலி

தோழர் சீனிவாசனுக்கு செவ்வஞ்சலி

அம்பத்தூரில் இயங்கி வரும் டால்புரோஸ் காம்போனென்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை யில் இரவுப் பணிக்கு சென்ற தோழர் சீனிவாசன் உணவு இடைவேளை முடிந்த சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு தொழிற் சாலைக்குள்ளேயே மரணமடைந்தார்.
மாலெ கட்சி ஊழியர், டால்புரோஸ் சங்க முன்னோடி, சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஈபிஎப் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் சங்கப் பொதுச் செயலாளர் என்ற பல்வேறு பொறுப்புக்களை ஏற்று வேலை செய்து வந்த தோழர் சீனிவாசன் 1990களின் துவக்கத்தில் சங்கத்தின் அம்பத்தூர் தொழிலாளர்களின் இயல்பான தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
 ஜுன் 23 அன்று தோழர் சீனிவாசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் தோழர் ஜவகர், தோழர் குமரேஷ், தோழர் பழனிவேல், புரட்சிகர இளைஞர் கழக பொறுப் பாளர் தோழர் பாரதி, பென்ஷனர்ஸ் அசோசி யேஷன் தலைவர்கள் தோழர் சுரேந்திரன், தோழர் வேணுகோபால், கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சேகர் உட்பட மாலெ கட்சி, ஏஅய்சிசிடியு தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர்கள் திரண்டனர்.
25.06.2012 அன்று தோழர் சீனிவாசன் வேலை செய்த டால்புரோஸ் தொழிற்சாலை வாயிலில் தோழரின் படத்திறப்பும், அஞ்சலி கூட்டமும் நடைபெற்றது. அனைத்து சங்க நிர்வாகிகள், முன்னோடிகள் உட்பட பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். டால்புரோஸ் தொழிற்சாலை முன்னோடிகளில் ஒருவரான தோழர் கண்ணதாசன் இரங்கல் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் பாரதி, பென்ஷ னர்ஸ் சங்கத்தின் தலைவர்கள் தோழர் சுரேந்திரன், தோழர் வேணுகோபால், சிஅய்டியு சங்கத்தின் ஆவடி பகுதி தலைவர்களில் ஒருவரான தோழர் ஜெயபாலன் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தோழர் குமாரசாமி, தோழர் சீனிவாசனின் பாட்டாளி வர்க்கப் பண்புகளை பட்டியலிட்டுப் பேசியதுடன் அவருடைய குடும்பம் இருக்கிற நிலைமைகளையும் குறிப்பிட்டு, இதுதான் அம்பத்தூர் உட்பட சென்னையின், தமிழ்நாட் டின், பத்தாண்டுகளுக்கு முன் தொழிலாளியாக இருந்து இன்று பென்ஷன் வாங்குகிற எல்லா தொழிலாளர்களுடைய நிலைமைகள் என்றும், இந்நிலையில் தொழிலாளி வர்க்கத்தின் பண்பு களை சீனிவாசன் எப்படி சுமந்து வந்தாரோ, அதை தொடர்வது அவருடைய கனவுகளை, லட்சியங்களை நிறை வேற்றுவது என்பதுதான் நமக்கு அவருடைய நினைவேந்தல் என்பதாக, அம்பத்தூர் தொழிலாளி வர்க்க முன்னோடிகளுக்கு முக்கிய கடமை என்றும் வலியுறுத்தினார்.
வெகுவிரைவில் எதிர்வரவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை பெருவாரியான தொழிலாளர் பங்கேற்புடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், இந்த வேலை நிறுத்தக் கோரிக்கைகளை தமிழ்நாட் டினுடைய தொழிலாளர்களால் கொண்டு வரப்பட்ட பயிற்சியாளர் சட்டத் திருத்தம் எல்.எ.பில்.47/2008க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவது,  நாடு முழுவதும் உள்ள பென்ஷன் வாங்கும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளை ஒழிப்பது, கவுரவமான பென்ஷன் கோருவது போன்ற கோரிக்கைகள் மீது அனைத்துச் சங்க ஒற்றுமையையும் திரட்டி பொது வேலை நிறுத்தம் நடத்த ஏஅய்சிசிடியு சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் உறுதியேற்றது.
கம்யூனிஸ்டான தோழர் சீனிவாசன் எதிர்கால லட்சியங்களை, நிகழ்கால இயக்கத் தில் பிரதிநிதித்துவப்படுத்தி அதற்கு முன்னு தாரணமாக வாழ்ந்து காட்டினார். தோழர் சீனிவாசன் போன்றோர்களுக்கு இன்னும் பெரிய பெரிய போராட்டங்கள் அலையாய் அலையாய் எழ வேண்டும் என்ற பேரவா இருந்தது. இந்த உணர்வை நாம் அனைவரும் பற்றிக் கொள்வோம்.
களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்

Search