உள்ளே
கல்வி
அரசும் புரட்சியும்
தலையங்கம்: உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்நாட்டுக்கு
சிறப்புக் கட்டுரை
மார்க்சிஸ்ட் கட்சியின் இரண்டாவது ஜுலை நெருக்கடி:
மறுப்பு, பொய்மை மற்றும் கையாலாகாத நிலை
கல்வி
என்ன செய்ய வேண்டும் நூலை
இறுகப் பற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? (பகுதி 3)
மண்ணில் பாதி
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்...
கட்டுரைரிலையன்ஸ் ஏரியா. . . . . உள்ள வராதே. . . .
இலங்கை அகதிகள் முகாம்: கூரை மீது கோழி
களச்செய்திகள்மக்கள் நலனே கட்சியின் நலன்
கல்வி
அரசும் புரட்சியும்
லெனின்
‘சம உரிமை’ இங்கு இருக்கிறதுதான், ஆனால் இன்னமும் இது ‘முதலாளித்துவ உரிமையேதான்’, ஒவ்வொரு உரிமையும் போல சமத்துவமின்மையைக் கொண்டேதான் என்று மார்க்ஸ் கூறுகிறார். ஒவ்வொரு உரிமையும் உண்மையில் ஒரே மாதிரி இல்லாத, ஒவ்வொருவருக்குச் சமமாய் இல்லாத வெவ்வேறானோருக்கும் சம அளவீட்டைப் பயன்படுத்துகிறது. ஆகவே, ‘சம உரிமை’ என்பது உண்மையில் சமத்துவத்துக்குப் பங்கம் செய்கிறது; அநீதியாகிவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏனையவர் எவரையும் போல அதே அளவு சமூக உழைப்பு புரிந்து, சமூக உற்பத்திப் பொருளில் (மேற்கூறியபடி கழித்த பின் எஞ்சுவதில்) சமப் பங்கு பெறுகிறார்.
ஆனால் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கவில்லை; ஒருவர் வலுவானவர், மற்றவர் ஆகாதவர்; ஒருவருக்கு அதிக குழந்தைகள், மற்றவருக்கு அவ்வளவு இல்லை... மார்க்ஸ் இதிலிருந்து எடுத்துரைக்கும் முடிவு வருமாறு:
‘...சமமான உழைப்பை அளித்து, ஆகவே சமுதாய நுகர்வு நிதியிலிருந்து சமமான பங்கு பெறுவதன் மூலம், உண்மையில் ஒருவர் பிரிதொருவரை விடச் செல்வந்தராய் இருக்கவும், இன்ன பலவாறாகவும் நேருகிறது. இந்தக் குறைபாடுகளைத் தவிர்க்க, உரிமை சமமாய் இருப்பதற்குப் பதில் சமமின்றி இருத்தல் வேண்டும்...’
ஆகவே கம்யூனிசத்தின் முதற் கட்டம் இன்னமும் நீதியும் சமத்துவமும் அழித்திட முடியாத நிலையிலேதான் இருக்கும்; செல்வத்தின் வேறுபாடுகள், நியாயமில்லா வேறுபாடுகள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மனிதனை மனிதன் சுரண்டுதல் முடியாததாகிவிடும், ஏனென்றால் உற்பத்திச் சாதனங்களை - ஆலைகளையும், இயந்திரங்களையும், நிலத்தையும், பிறவற்றையும் - கைப்பற்றி அவற்றை தனி உடமை ஆக்கிக் கொள்வது முடியாததாகிவிடும். பொதுவில் ‘சமத்துவம்’ குறித்தும் ‘நீதி’ குறித்தும் லஸ்ஸல் கூறும் தெளிவற்ற குட்டி முதலாளித்துவத் தொடர்களை தகர்த்திட்டு, மார்க்ஸ் கம்யூனிச சமுதாயத்தின் வளர்ச்சிப் பாதையைத் தெளிவுபடுத்துகிறார். கம்யூனிச சமுதாயம் தனி நபர்களால் உற்பத்திச் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டதில் உள்ள ‘அநீதியை’ மட்டும்தான் முதலில் ஒழிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகிறது என்பதையும், மற்றோர் அநீதியை, அதாவது நுகர்வுப் பண்டங்களை (தேவைகளுக்கு ஏற்ப அல்லாமல்) ‘ஆக்கிய உழைப்பின் அளவுக்கேற்ப’ விநியோகிப்பதில் உள்ள அநீதியை அதனால் உடனடியாக அகற்ற முடியவில்லை என்பதையும் மார்க்ஸ் காட்டுகிறார்.
முதலாளித்துவ பேராசிரியர்களும் ‘நமது’ துகானும் அடங்கலான கொச்சைவாதப் பொருளிய லாளர்கள் ஓயாமல் சோசலிஸ்டுகள் மீது குற்றம் சாட்டுகிறார்கள்; சோசலிஸ்டுகள் மக்களிடையிலான சமத்துவமின்மையை மறந்துவிடுவதாகவும் இந்த சமத்துவமின்மையை அகற்றி விடலாமென ‘கனவு காண்பதாகவும்’ கூறுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு முதலாளித்துவ சித்தாந்தவாதிகளுடைய அளவு கடந்த அறியாமையைத்தான் காட்டுகிறது என்பது விளங்குகிறது.
சிறிதும் தவறாது உன்னிப்புடன் மார்க்ஸ் மனிதர்களிடையிலான சமத்துவமின்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதுடன் நிற்காது, உற்பத்திச் சாதனங்களை சமுதாயம் அனைத்திற்கும் உரிய பொது உடமையாய் மாற்றுவதால் மட்டும் (சகஜமாய் இது ‘சோசலிசம்’ என்றழைக்கப்படுகிறது) விநியோகத்தில் உள்ள குறைபாடுகளும் ‘முதலாளித்துவ உரிமையின்’ சமத்துவமின்மையும் அகற்றப்பட்டு விடுவதில்லை என்பதையும், ‘ஆற்றப்படும் உழைப்புக்கு ஏற்ப’ உற்பத்திப் பொருட்கள் பகிர்ந்து கொள்ளப்படும் வரை இவை தொடர்ந்து நிலவும் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறார். மேலும் தொடர்ந்து மார்க்ஸ் கூறுவதாவது:
‘...இந்தக் குறைபாடுகள் கம்யூனிச சமுதாயத்தின் முதற் கட்டத்தில் தவிர்க்க முடியாதவை, ஏன் எனில் இச்சமுதாயம் நீடித்த பிரசவ வேதனைக்குப் பிறகு முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுதுதான் பிறந்து வெளிவந்திருக்கிறது. உரிமையானது ஒருபோதும் சமுதாயத்தில் பொருளாதாரக் கட்டமைப்பையும் இதனால் நெறிப்படுத்தப்பட்ட அதன் கலாச்சார வளர்ச்சி நிலையையும் காட்டிலும் உயர்வானதாகிவிட முடியாது...’
தலையங்கம்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்நாட்டுக்கு
உடல் மண்ணுக்கு. உயிர் தமிழுக்கு. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழ் மண்ணில் மின்சாரமாய் பாய்ந்து உணர்வூட்டிய முழக்கம் இது. இந்தித் திணிப்பு இல்லை என்றாகும் வரை யாரும் பின்வாங்கவில்லை. போராட்டம் வென்றது.
மொழித் திணிப்புதான் வேண்டாம் என்றோம். மொழி பேசுபவர்களை விரோதித்துக் கொள்ளவில்லை. கூட்டாட்சியை எதிர்க்கவில்லை. வேற்று மொழி பேசுபவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உயிர் தருவார்கள் என்று உள்ளுணர்வு சொல்லியிருக்கலாம். இன்று வேற்று மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடையாளங்களைக் கட்டியெழுப்பி விட்டு தமிழ் மண்ணில் உயிரை விட்டு, கை கால் இழந்து வெற்றுடல்களாய், குறையுடல்களாய் வீடு திரும்புகிறார்கள்.
ஆகஸ்ட் 6, 7, 8 மூன்றே நாட்களில், இரண்டு முறை மிகக்கொடூரமான விபத்துக்கள் ஏற்பட்டு 11 வேற்று மாநிலத் தொழிலாளர்கள் மடிந்திருக்கிறார்கள். ஒரு விபத்து தனியார் கல்லூரி கட்டுமானப் பணியிலும் மற்றொன்று சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியிலும் நடந்தன. எட்டாவது அதிசயமாக இந்த விபத்துக்களுக்கு காரணமானவர்கள் என்று சகல செல்வாக்குள்ள கனவான்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல் விபத்து ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் விளையாட்டரங்க கட்டுமானப் பணியில் நடந்தது. இங்கு வேலை செய்த பிற மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு தலைக்கவசங்கள் கேட்டும் தரப்படவில்லை என்கிறார்கள். அரைகுறையாகக் காய்ந்திருந்த சிமென்ட் தூண் மீதே நடந்த கட்டுமானப் பணி என்றும், தூணைத் தாங்கும் இணைப்புச் சுவர் கட்டப்படாததும் தூண் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்கிறார்கள். மழை பெய்ததால் தூண் ஓரம் ஒதுங்கிய 50 பிற மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்கள். 6 பேர் இடிபாட்டுக்குள்ளேயே உயிர்விட்டார்கள். 4 பேர் மருத்துவமனை செல்லும் வரை உயிருடன் இருந்தனர். அடிபட்டவர்களுக்கு சிகிச்சைத் தரப்படுகிறது. எஞ்சியிருந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பி விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேப்பியார், கல்லூரி இயக்குநரான அவரது மருமகன், ஒப்பந்தக்காரர், கட்டிட மேஸ்திரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாவது விபத்தில் கிரேன் அறுந்து விழுந்ததால் 10 பேர் படுகாயத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் அனுமதித்த பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொடுஞ்சம்பவத்திலும் எல்அண்டி மேலாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் கிரேன் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்திகளின் சூடு ஆறும் முன்பு பூந்தமல்லி பனிமலர் பொறியியல் கல்லூரியின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வேற்று மாநிலத் தொழிலாளியின் 7 வயது மகன் கழிவு நீர் தொட்டியில் விழுந்து சாவு என்று செய்தி வாசித்தார்கள். இதுவும் ‘கல்விமான்’ ஜேப்பியார் கல்லூரிதான். இந்தத் தொழிலாளர்கள் கல்லூரி வளாகத்துக்குள் தங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், பிணை, அற்ப நட்டஈடு என்று வெளியே வந்து மீண்டும் சுதந்திரமாக தொழில் தொடர்வார்கள். அடிபட்டவர்கள் வாழ்க்கைக்கும், உயிரிழந்தவர்கள் குடும்பங்கள் நிலைக்கும் இந்த விபத்துக்கள் இறுதிச் செய்தி, இரங்கல் செய்தி எழுதியுள்ளன. ஜேப்பியார் அறிவித்த ரூ.2 லட்சமும் தமிழக அறிவித்துள்ள ரூ.1 லட்சமும் அவர்களுக்குச் சென்று சேர்வதற்கே அவர்கள் பெரும்பாடுபட வேண்டி இருக்கும். காயமுற்றவர்கள், கை, கால் இழப்பார்கள் என்றால், மீண்டும் உழைக்கும் வலிமையை இழந்துவிடுவார்கள் என்றால் ரூ.50,000மும் ரூ.25,000மும் பொருளற்றவையாகப் போகும். உபரி மக்கள் தொகையின் ஒரு பகுதியாகிவிடும் இந்தத் தொழிலாளர்களின் நாளைய வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம்?
ஸ்ருதி மீது பள்ளி வாகனம் ஏறி இறங்கிய பிறகு வாகனப் பரிசோதனை மும்முரமாய் நடக்கிறது. வாகன விதிகள் தயாராகின்றன. பிற மாநிலத் தொழிலாளர் உயிரிழந்த இரண்டு சம்பவங்களில் நட்டஈடு அறிவிப்புக்களுக்கு மேல் ஏதும் நடக்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு திருபெரும்புதூரில் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 9 பிற மாநில தொழிலாளர்கள் வாகன விபத்தில் மடிந்தார்கள். அந்த விபத்து அப்படியே மூடிமறைக்கப்பட்டது. இன்னும் பலப்பல விபத்துக்கள் பற்றிய செய்திகள் மடிந்தவர்களுடனேயே புதைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தமிழக மற்றும் பிறமாநில தொழிலாளர்கள் அடுத்தடுத்து விபத்துக்களில் சிக்கிச் சாவது பற்றி ஜெயலலிதா ஏன் மவுனம் காக்கிறார்? கிரேன் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு காயமுற்றவர்களுக்கு இழப்பீடு அறிவித்த ஜெயலலிதா, ஜேப்பியார் கல்லூரி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி ஏதும் பேசவில்லை. ஜேப்பியாரைக் கைது செய்துவிட்டால் மட்டும் பிற மாநிலத் தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வந்துவிடாது. அவர்கள் வேலை நிலைமைகளில் உத்தரவாதப்படுத்தப்படுகிற பாரதூரமான அடிப்படை மாற்றங்கள்தான் ஓரளவு பாதுகாப்பை, கவுரவத்தை உறுதி செய்யும்.
தேசிய அரசியலில் பங்கு வகிப்பது பற்றி கனவுகாணும், காய்நகர்த்தும் ஜெயலலிதாவுக்கு, தமிழகத் தொழிலாளர் விசயத்தில் நிலவுவதைப் போலவே பிற மாநிலத் தொழிலாளர் பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. முதலீட்டு வருகை என்ற பெயரில் கூடவே வருகிற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் முதலீடு போலவே சுதந்திரமும் சலுகையும் பெற்று தமிழக தொழிலாளர் மற்றும் பிற மாநிலத் தொழிலாளர் நலன்களை காலில் போட்டு மிதிக்கின்றன. ஜேப்பியாரை கைது செய்ததுபோல், நாளை டேய்ம்லர் முதலாளியையோ அல்லது அதுபோன்றதொரு பன்னாட்டு நிறுவன முதலாளியையோ கைது செய்யத்தான் முடியுமா?
தொழிலாளியின் மரணம் பெரிதாகப்படுவதில்லை. நோக்கியாவில் எந்திரத்தில் சிக்கி சக தொழிலாளர்கள் கண்கள் முன் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்விட்ட அம்பிகாவின் மரணம் தமிழ்ச் சமூகத்தின் கூட்டுமறதிக்குள் தள்ளப்பட்டுவிட்டது. தொழிலாளர்களின் உயிர் அத்தனை மலிவானதா? அவர்கள் மட்டும் சாவதற்குப் பிறந்து வளர்ந்தார்களா? அவர்கள் வாழ உரிமை இல்லாதவர்களா? வாழும் தகுதி அற்றவர்களா?
கிரேன் விபத்து வெளியில் அனைவரும் பார்க்கும்படி நிகழ்ந்ததால் பிரச்சனை பெரிதாகி இருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு அந்த இருண்ட குகைகளுக்குள் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக வேற்று மாநிலத் தொழிலாளரை வேலைக்கு வைப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த வேற்றார் யாரையும் இது போன்ற பணிகள் நடக்கும் இடங்களில் அனுமதிப்பதில்லை. சுமங்கலித் திட்டச் சிறுமிகளை யாராலும் சந்திக்க முடியாமல் இருப்பதுபோல் இந்த மெகா திட்டப் பணிகளில் இருக்கும் பிற மாநிலச் சிறுவர்களையும் யாரும் சந்திக்க முடிவதில்லை. அவர்களை அழைத்து வரும் ஒப்பந்தக்காரர்களே யாருடனும் பேசாதீர்கள் என்று எச்சரித்துத்தான் அழைத்து வருகிறார்கள்.
அங்கு அந்தத் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் சட்டங்களுக்குட்பட்டவை, விதி மீறல்கள் இல்லாதவை என்றால் மற்றவர்கள் அங்கு செல்ல ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? பிற மாநிலத் தொழிலாளர்கள் சுதந்திரமாக உலாவ ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? பிற மாநிலத் தொழிலாளர் விசயத்தில் நடப்பவை விதிமீறல்கள்; மனிதஉரிமை மீறல்கள். அது அந்த ஒப்பந்தக்காரர்களுக்கு, முதன்மை வேலை அளிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரிவதால்தான் மூடு வித்தை காட்டுகிறார்கள்.
பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தொழிலாளர்கள் நிரந்தரமாக தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்துவிடும் திட்டத்துடன் வருவதில்லை. அப்படிச் சொல்லியும் அவர்கள் அழைத்து வரப்படுவதில்லை. பணிநிரந்தரம் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கும் பணிகளில் அமர்த்தப்படும் பிற மாநிலத் தொழிலாளர் கூட அப்படி ஓர் எண்ணத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. பெரும்பாலானோர், சில மாதங்கள், ஓரிரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் அழைத்து வரப்படுகிறார்கள். இருக்கிற காலத்தில் ஒரு நிறுவன வேலை மட்டுமின்றி பல நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். ஒரு நாள் இங்கு, மறு நாள் இங்கில்லை என்ற நிலைமையில் கூட சில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.
பிற மாநிலத் தொழிலாளர்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதில் இது போன்ற நிலைமைகள் குறுக்கே நிற்கின்றன. பிற மாநிலத் தொழிலாளர்கள் குறுகிய காலத்துக்கு தமிழ்நாட்டில் வேலை செய்வார்கள் என்ற இந்த நிலைமைகள்கூட தொடரலாம். ஆனால், அந்தக் குறுகிய காலத்தில் அடிமைகள் போல் நடத்தப்படுவார்கள் என்ற நிலைமை தொடரக் கூடாது. மனித உடல் எவ்வளவு சூடு தாங்கும், எவ்வளவு குளிர் தாங்கும், எவ்வளவு வலி தாங்கும் என்றெல்லாம் யூதர்களுக்குச் சூடு வைத்து, அவர்களை பனிக்கட்டியில் இருத்தி, அவர்களைப் படுகாயங்களுக்குள்ளாக்கி ஹிட்லர் சோதித்துப் பார்த்தான். தொழிலாளர்கள் எவ்வளவு உழைப்பைச் சுமையைத் தாங்குவார்கள், எவ்வளவு மோசமான பணிநிலைமைகளைத் தாங்குவார்கள் என்று சோதித்துப் பார்க்க, தமிழகத்தில் உள்ள பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பிற மாநிலத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை இனியும் அனுமதிக்கக் கூடாது.
இந்தப் பணியிடங்களில் பார்வையிட, சோதனையிட ஜனநாயகத்தில் இடம் இருக்க வேண்டும். மனித உரிமை அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் அந்தத் தொழிலாளர்களை சந்திப்பதில் உள்ள பொருளற்ற தடைகளுக்கு முடிவு வேண்டும். அந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, அவர்கள் பற்றிய பிற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு பொதுவில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் குறைகளைச் சொல்ல ஒரு பொறியமைவு வேண்டும். அவர்களுக்கான சட்ட விதிகள் அமலாக்கப்பட வேண்டும். உடனடியாக அவர்கள் நிலைமைகள் பற்றிய அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும்.
பன்னாட்டு, உள்நாட்டு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் லாப வேட்டைக்கு தமிழ் நாட்டை தாரை வார்த்திருக்கிற ஜெயலலிதா அவர்கள் லாபத்தில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை நினைத்தும் பார்க்கப் போவதில்லை. பிற மாநிலத் தொழிலாளர்க்கு தமிழ்நாட்டில் வாக்குகள் இல்லை என்பதால் அவர்கள் பற்றி எந்தவிதமான அக்கறையும் காட்டப் போவதில்லை. அவர், கட்டிடங்கள் உயர்வதும், பாலங்கள் விரிவதும், சாலைகள் பரவுவதும் அவற்றுக்குப் பின்னால் உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் கொழுப்பதும் மட்டுமே செழிப்பு என்று சொல்லும் நவதாராளவாதக் கொள்கைக்குச் சொந்தக்காரர். அந்தக் கொள்கைத் தொகுப்பில் தொழிலாளர்களுக்கு என்றும் இடமில்லை.
ஆயினும், மாருதி அதிகாரி உயிரிழந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கண்டித்த, குரல் எழுப்பிய முதலாளித்துவக் கருத்துக்கள், பத்திரிகைகள் கூட, நடந்த சம்பவத்துக்குக் காரணம் தொழில் நடத்துபவர்களின் படுமோசமாகச் சுரண்டுகிற, ஒடுக்குகிற, தவறான தொழிலாளர் உறவுகள், கொள்கைகள் என்றுதான் சொல்ல நேர்ந்தது. பிற மாநிலத் தொழிலாளர்கள் குற்றச்செயல் புரிபவர்கள் என்று சொல்லப் பார்த்த தமிழக அரசின் முயற்சி தோல்வியடைந்து இப்போது, முதலாளித்துவப் பத்திரிகைகள், கருத்துக்கள் அவர்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை என்று சொல்ல நேர்ந்துள்ளது. இவை முதலாளிகளை விழித்துக் கொள்ளச் சொல்லும் எச்சரிக்கை அறிவிப்புக்கள் என்றாலும், அதைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதே யதார்த்தம்.
தமிழ்நாட்டுச் செழிப்பைக் கட்டியெழுப்ப சில ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்து வரும் பிற மாநிலத் தொழிலாளர்கள் உயிருடன் முழுஉடலுடன் திரும்பிச் செல்லும் உத்தரவாதம் உருவாக்கப்படும் வரை மடிந்த தொழிலாளர்கள் விரட்டுவார்கள்.

திபங்கர் பட்டாச்சார்யா
மார்க்சிஸ்ட் கட்சி வரலாற்றில் 20ஆவது காங்கிரஸ், மறுப்பு மற்றும் பொய்மையின் காங்கிரஸ் என்று அறியப்படும். மத்தியில் அய்முகூ 1 அரசாங்கத்துடனான கூட்டணி என்கிற பேரழிவுமிக்க அனுபவம், 2011 சட்டமன்ற தேர்தல்களில் அதன் அவமானகரமான வெளியேற்றத்துக்கு இட்டுச்சென்ற, சிங்கூருக்குப் பிந்தைய கட்சியின் வழித்தடம் ஆகியவற்றைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எழுந்த உண்மையான விவாதத்துக்கு, தீர்வு காண முயற்சிப்பது இருக்கட்டும், அந்த விவாதத்தை அங்கீகரிக்கக் கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது. மொத்த பிரச்சனையையும் விளிம்புக்குத் தள்ளுகிற மார்க்சிஸ்ட் கட்சி தலைமை, 1978 ஜலந்தர் காங்கிரசின் ‘இடதுசாரி மற்றும் ஜனநாயக’ வாய்வீச்சை மீட்டெடுத்து, இப்போதிருந்து, மூன்றாவது அணி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட குறுகிய பார்வை கொண்ட வசதியாய் இருந்த அரசியலை கைவிட்டு, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுடன் போராட்டத் திசைவழி கொண்ட ஒற்றுமை என்ற கோட்பாட்டுரீதியான பாதையை பின்பற்றும் என்ற தோற்றம் தந்தது. இது, ஓர் இடதுசாரி போர்த்தந்திர அழுத்தம் அடிப்படையிலான ஒரு புதிய செயல்தந்திர திசையைக் குறிக்கிறது என்று கருதிய கட்சியினர் இப்போது கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்ற மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழுவின் முடிவு இந்த போலியான ‘இடதுசாரி மற்றும் ஜனநாயக’ வாய்வீச்சு அடித்தளத்தைத் தகர்த்தது; மறுக்க முடியாத விதத்தில் இந்த செயல்தந்திர வழியின் சந்தர்ப்பவாதக் கருவை அம்பலப்படுத்தியது. எடுக்கப்பட்ட முடிவை விட, முடிவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழுவும் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் முன்வைத்த வாதங்கள் இடதுசாரி அணிகளை ஆகக்கூடுதலாக அதிர்ச்சியுறச் செய்திருக்க வேண்டும். அரசியல் தலைமைக் குழுவின் முதல் அறிவிப்பு ஒரே ஒரு வாதம் மட்டும் முன்வைத்தது – அதாவது, பிரணாப் முகர்ஜி ஏற்கனவே, மிகப்பரந்த ஏற்புடைமை பெற்ற வேட்பாளராகிவிட்டார். மிகப்பரந்த அளவில் பிரபலமான பிரசன்ஜித் போஸ் பதவி விலகல்/நீக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து காரத் கடினப்பட்டு உருவாக்கப்பட்ட சாக்குகளை பல்வேறு பின்னணிகளுடன் முன்வைத்தார். ஒவ்வொன்றும் மற்றதை விட கூடுதலாக அம்பலப்படுத்துவதாக அமைந்தது.
குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் என்பது ஓர் அரசியல் நடவடிக்கை என்று காரத் ஒப்புக்கொண்டாலும், இந்த விசயத்தில் அரசியல் என்பது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதச்சார்பின்மை என்ற நிகழ்ச்சிநிரலுடன், இந்த அதிஉயர்ந்த அரசியலமைப்புச்சட்ட பதவிக்கு பாஜக செல்வாக்கு கொண்ட ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது டன் எப்போதும் சுருங்கி நிற்கிறது என்று சொல்கிறார். பாஜக வேட்பாளர் இந்த அதிஉயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவ தற்கான யதார்த்தமான எந்த வாய்ப்பும் இல்லாதபோதும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஏன் முடிவு செய்தது என்ற கேள்விக்கு, வாக்களிக்காமல் இருப்பது மார்க்சிஸ்ட் கட்சியை திரிணாமூலுடன் சேர்த்துக் காட்டி, கட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிற மேற்குவங்கத்தில் கட்சியை பலவீனப்படுத்திவிடும் என்கிறார். மேலும், வாக்களிக்காமல் இருப்பது கட்சியின் முன்முயற்சியின் தலையீட்டின் முனையை மழுங்கடித்து விடும் என்றும் அவர் சொல்கிறார்.
இந்த வாதங்களின் தவறான இயல்புகள் பட்டப்பகல் வெளிச்சம் போல் தெளிவானவை. மதச்சார்பின்மை என்ற கரிசனத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பது மார்க்சிஸ்ட் கட்சியின் விடாப்பிடியான கொள்கை அல்லது கோட்பாடு என்றால், வேறு எந்த விதத்திலும் கட்சி தலையிடுவது என்ற கேள்வி எங்கே எழுகிறது? மம்தா பானர்ஜி, பிரணாப் முகர்ஜிக்கு தனது ஆதரவை அறிவித்த பிறகு திரிணாமூலுடன் சேர்த்துக் காட்டப்படும் கேள்வி பழிவாங்குகிற விதம் மீண்டும் எழுகிறது. உண்மையில், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்று மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்திருந்தால், இந்தப் பிரச்சனையை மம்தா வெற்றிகரமாகக் கையாள மம்தாவின் சக்தியைக் குறைத்திருக்கும். ஆயினும், காங்கிரசுக்கும் திரிணாமூலுக்கும் இடையில் அது ஒரு பிளவு ஏற்படுத்தும் என்ற, வருங்காலத்தில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மீட்சிக்கானப் பாதை காங்கிரசிடம் இருந்து பெறும் பெருந்தன்மை கவளங்களால்தான் போடப்படும் என்ற மாயையிலேயே மார்க்சிஸ்ட் கட்சி வாழ விரும்புகிறது!
அய்முகூ 1 காலங்களில் பிரணாப் முகர்ஜிதான் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்பான பேரங்கள் நடத்திய காங்கிரசின் தலைமை பேரம் பேசுபவர் என்பதால், மேலும் அவர் ஒரு வங்க கனவான் என்பதால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடியாது என மறுக்க மார்க்சிஸ்ட் கட்சியால் முடியாது என்பதுதான் அறிவிக்கப்படாத வாதம்! இது வெளிப்படையான ரகசியமும் கூட. வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்பதவிக்குச் செல்வதை எதிர்ப்பதாக பார்க்கப்படுவது கட்சிக்கு நல்லதல்ல என்று மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் மத்தியில் ஒரு பார்வை உள்ளது. இந்த மதிப்பீட்டைப் பொறுத்தவரை, பிரணாப் முகர்ஜிக்கு அளிக்கப்பட்ட ஆதரவு, 1996ல் ஜோதி பாசு அய்க்கிய முன்னணி அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவதை அனுமதிக்காதது, அணு ஒப்பந்தம் பிரச்சனையில் சோம்நாத் சேர்ட்டர்ஜீயை கட்சியில் இருந்து நீக்கியது ஆகிய முந்தைய ‘தவறுகளுக்கு’ தரப்படும் ஓர் அவசியமான விலை!
மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தபோது, துவக்கத்தில், மாநிலத்தில் அதன் நிலையை வலுப்படுத்திக் கொள்ள வங்க துருப்புச்சீட்டு உதவுவதுபோல் இருந்தது. மத்திய - மாநில உறவுகளை மறுசீரமைப்பு செய்வது என்ற தளத்துடன் இது துவங்கியது. ஆனால், கோர்க்காக்கள் கோர்க்காலாந்து கோரியபோது, கூட்டமைப்பு தளம் இனவெறி வழிக்கு வழிவிட்டது. ‘வங்கப் பிரிவினை’ என்ற பூதத்தை மார்க்சிஸ்ட் கட்சி எழுப்பியது. கோர்க்காலாந்து இயக்கத்தை பிரிவுவாத இயக்கம் என்று கருதி வங்கத்தின் ‘ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை’ அனைத்து விதங்களிலும் பாதுகாக்க உறுதியேற்றது. 1987 சட்டமன்ற தேர்தல்களில் இதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் மய்ய தேர்தல் தளமாக மாறியது. ஆண்டுகள் செல்லச்செல்ல, வங்க இனவெறிச் சாயம் மேற்கு வங்கத்தின் கிட்டத்தட்ட மொத்த சிறுபான்மை சமூகத்தினரிடம் இருந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை அந்நியப்படுத்தியது.
இப்போது தவறாக முன்வைக்கப்படுகிற ‘வங்க தளம்’, ஓர் அனைத்திந்திய பார்வையுடனான ஒரு கட்சி என்ற பொருளில் மார்க்சிஸ்ட் கட்சியின் அடிப்படையையே சவாலுக்குள்ளாக்கத் துவங்கிவிட்டது. கட்சியின் வங்க அமைப்பின் நலன்களில் இருந்து பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் முடிவு அவசியம் என, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எது நல்லதோ அது மொத்த கட்சிக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி நம்ப வேண்டும் என பிரகாஷ் காரத் விரும்புகிறார். ஆயினும், குறிப்பாக, பிரணாப் முகர்ஜிக்கு தனது கட்சியின் ஆதரவை மம்தா அறிவித்த பிறகு, மம்தாவுடன் சேர்த்து காட்டப்படக் கூடாது என்ற நிலைப்பாடு பொருளற்றுப் போன பிறகு, மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி இழந்த தளத்தை மீட்பதில் இந்த முடிவு எப்படி உதவும் என விளக்கும் நிலையில் காரத் இல்லை.
காங்கிரஸ் மிகவும் நம்பகத்தன்மை இழந்த அதன் கட்டத்தில் இருக்கும்போது, காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மேலும் மேலும் கூடுதலான மக்கள் வீதிகளில் திரளும்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து துண்டிக்கப்பட வேண்டும் என்ற மிகவும் அம்பலமாகிற வாதத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு நவதாராளவாதமும் ஏகாதிபத்தியமும் விருப்பத்திற்கேற்ப எழுப்பப்படுகிற, அல்லது புறந்தள்ளப்படுகிற அலங்கார சொற்கள். இந்தச் சொற்கள் சுட்டும் பொருள் பற்றியும் மார்க்சிஸ்ட் கட்சி நீக்குப்போக்காகவே இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அவுட்லுக் ஆங்கில வாரப் பத்திரிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட நேர்காணல் ஒன்றில் பிரகாஷ் காரத் பிராந்திய கட்சிகள் நவதாராளவாதக் கொள்கையை பின்பற்றுவதில்லை, ஏனென்றால் மக்கள் வாக்குகளைப் பெறும் கவலை அவற்றுக்கு உள்ளது என்றார். அதனால்தான் மக்களுக்கு மானிய விலையில் அரிசி தருவது போன்ற ஜனரஞ்சகவாத நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள் கிறார்கள் என்றார். ஆக, மக்களுக்கு மானிய விலையில் அரிசி தருவது மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரைப் பொறுத்தவரை நவதாராளவாதத்துக்கு நேரெதிரான நடவடிக்கை!
மானிய விலை அரிசித் திட்டமோ அல்லது அது போன்றதொரு ஜனரஞ்சகவாத திட்டமோ நவதாராளவாதத்துக்கு நேரெதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டால், இந்தியா வில் உள்ள எந்த அரசாங்கமும் நவதாராளவாத நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றுவதாகச் சொல்ல முடியாது. ‘சாமான்ய மனிதன்’ அல்லது ‘மனித முகம்’ வாய்வீச்சு நவதாராளவாதக் கொள்கை தொகுப்பின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக உருவானது; இதில் வறியவர்கள் வெறுமனே ஜீவிக்கும் மட்டத்திலான இருத்தலுக்கு உட்பட்டிருக்க அவர்களுக்கு ‘மான்யமளிக்கப்படும்’; ‘அதிகாரமளிக்கப்படும்’. அதேநேரம், சர்வதேச மூலதனம் அனைத்து செல்வாதாரங்களையும் கபளீகரம் செய்து பொருளாதாரத்தின் அனைத்து லாபம் கொழிக்கும் வாய்ப்புக்களையும் எடுத்துக் கொண்டு போகும். பிராந்திய கட்சிகள் வாக்குகளைப் பற்றிக் கவலைப் பட வேண்டும் என்றால், ஆளும் வர்க்கத்தின் அகில இந்திய கட்சிகள் அதேபோல் கவலைப்படுவது இல்லையா? ராகுல் காந்தி அவரது பாட்டி மற்றும் முப்பாட்டனாரின் தொலைந்துபோன ‘சோசலிச ஸ்பரிசத்தை’ மறுகண்டுபிடிப்பு செய்தால் காங்கிரசுடன் சொகுசாக இணையும் வாய்ப்பு பற்றியும் அதே நேர்காணலில் பிரகாஷ் காரத் குறிப்பால் சொல்கிறார்!
நையாண்டி போல் தெரியும் இந்தக் கூற்றுக்குப் பின்னால் இன்னும் பெரிய அரசியல் உண்மை உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி காங்கிரசின் நவதாராளவாத நிகழ்ச்சிநிரலுக்குள் ஒரு சோசலிச கூறு இருக்குமா என்று தேடுகிறது. தாய், மகன் இரட்டையரின் ‘சாமானிய மனிதன்’ வாய்வீச்சு மார்க்சிஸ்ட் கட்சிக்கு கையாள வசதியாக இருக்கிறது.
கேரளாவில் தோழர் டி.பி.சந்திரசேகரன் கொல்லப்பட்டதும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் முடிவும் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. கேரளாவில் தோழர் டி.பி.சந்திரசேகரன் பற்றிய கட்சியின் அதிகாரபூர்வ நிலையில் இருந்து பகிரங்கமாக மாறுபட்டு, வி.எஸ்.அச்சுதானந்தம், கொல்லப்பட்ட தலைவரை வீரமிக்க கம்யூனிஸ்ட் என்று அழைத்ததுடன் அவருக்கு அனுதாபமும் மரியாதையும் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, வி.எஸ்.அச்சுதானந்தம் இப்படிச் சொன்னது ‘எதிரிக்கு’ ஆயுதம் வழங்குவதாகும் என்று குற்றம் சாட்டி, அவரை பகிரங்கமாக கண்டிப்பதன் மூலம் பதிலளித்தது. இந்த விவாதம் மிகவும் சக்திவாய்ந்த விதத்தில் டில்லியிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. கட்சியின் இரண்டு முக்கியமான அறிவுஜீவி முகங்களான பிரபாத் பட்நாயக்கும் பிரசன்ஜித் போசும், இணையதள உலகில் எதிர்ப்பின் பகிரங்கமான வெளிப்பாடுகளை முன்வைத்தனர்.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் அரசியல் தலைமைக் குழுவின் முடிவை அடுத்து பிரசன்ஜித் போஸ் பதவி விலகினார்; கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மேலோங்கிய கலாச்சாரம் மீதான தனது கண்டனம் பற்றியோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டியால் பகிரங்கமான கண்டனத்துக்கு ஆளாகியுள்ள அச்சுதானந்தம்பால் அவர் கொண்டுள்ள அபிமானம் மற்றும் மரியாதை பற்றியோ, பிரபாத் பட்நாயக் ரகசியம் பாராட்டவில்லை. பிரபாத் பட்நாயக், பிரசன்ஜித் போஸ் இருவருமே நியாயப்படுத்த முடியாத மொத்த சிங்கூர் - நந்திகிராம் நிகழ்விலும் சற்றும் தளராமல் மார்க்சிஸ்ட் கட்சியை பகிரங்கமாக நியாயப்படுத்தினர். இப்போது தங்கள் எதிர்ப்பையும் அவர்கள் பகிரங்கமாக அறிவித்திருப்பது மார்க்சிஸ்ட் கட்சிக்குள் நிலவுகிற மாயை விலகலின் ஒரு புதிய உயர்ந்த மட்டத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்குள் எதிர்ப்புக்கு, அதுவும், அது இடதுசாரி நோக்கு நிலையில் இருந்து எழுமானால், இடமில்லை. அதுபோன்ற எந்த எதிர்ப்பும் எப்போதும் அதிதீவிர இடது என்று அழைக்கப்படும்; நீக்கம் முதல் அழித்தொழிப்பு வரை அனைத்து விதங்களிலும் நசுக்கப்படும். ‘அதிதீவிர இடதுசாரி’ என்று அவர் கருதியவற்றை ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் இருந்த ஆண்டுகளில் புறந்தள்ளிய, நந்திகிராமுக்குப் பிந்தைய மார்க்சிஸ்ட் கட்சியை தொலைக்காட்சி சேனல்களில் நியாயப்படுத்திய, மார்க்சிஸ்ட் கட்சி எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனைக்கும் ‘மாவோயிஸ்டுகள்/நக்சலைட்டுகள்’ மீது பழி சொன்ன பிரசன்ஜித் போஸ் கூட, இப்போது, ‘அதிதீவிர இடதுசாரி’ என்று முத்திரைக் குத்தப்படுகிறார் என்பது நகைமுரணே.
‘அதிதீவிர இடதுசாரி மனபயம்’ வெகு மக்கள் அமைப்புக்குள்ளும் வியாபித்துவிட்டது. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினரும் விவசாயிகள் தலைவருமான அப்துல் ரசாக் மொல்லா, நிலமிழந்த விவசாயிகளுக்கு நிலம் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற பிரச்சனையில் நடந்த சிங்கூர் நோக்கிய நடைபயணத்தில் கலந்து கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டார். மரபுரீதியாக மார்க்சிஸ்ட் கட்சி/எஸ்எஃப்அய் கோட்டையான (மேற்குவங்கம், கேரளா, திரிபுராவுக்கு அடுத்து நான்காவது கோட்டை என்று அழைக்கப்படுகிற) ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மொத்த எஸ்எஃப்அய் அமைப்பும் கலைக்கப்பட்டு அதிதீவிர இடதுசாரி அய்சாவின் ‘இரண்டாவது குழு’ என்று அழைக்கப்பட்டது! கட்சிக்குள் அல்லது வெகுமக்கள் அமைப்புக்களுக்குள் எந்த தீவிரமான அரசியல் எதிர்ப்பும் அதிதீவிர இடதுசாரி என்று முத்திரை குத்தப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படும். மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ந்து வருகிற, வலதுசாரி வழிவிலகலுக்கு அல்லது தடம்புரள்தலுக்கு இதைவிடப் பெரிய நிரூபணம் இருக்க முடியுமா?
எதிர்ப்பின் ஒவ்வோர் அறிகுறியையும் நீக்கிவிட துவங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கையாலாகாத நிலை இன்னும் பெரிய எதிர்ப்பை உருவாக்கக் கூடும். அரசியல் செயல் தந்திரம் தவிர, உட்கட்சி ஜனநாயகத்தின் உணர்வு மற்றும் கோட்பாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ந்து வருகிற சீர்குலைவு, கட்சிக்குள் மாயை விலகல் அதிர்வலைகளை உருவாக்குகிறது. அனைத்தும் சுட்டிக்காட்டுவது போல், மார்க்சிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு காங்கிரசுக்குப் பிந்தைய நிகழ்வுகள் மார்க்சிஸ்ட் கட்சி வட்டங்களுக்குள் கடைசலின் ஒரு புதிய கட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. 1979 ஜுலையில் சரண்சிங்கின் பிரதமர் பதவி பேரவாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவையும் தந்து, காங்கிரஸ் தனது முன்முயற்சியை மீண்டும் பெற்று, 1977 தோல்வியில் இருந்து அரசியல்ரீதியாக மீண்டெழுந்ததில் கருவியாக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்து, நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கட்சியை கவனித்து வருபவர்கள் கட்சிக்கு இன்னொரு ஜுலை நெருக்கடி’ என்று இதை அழைக்க முனைவார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்முக வளர்ச்சி அப்போதுதான் துவங்கியிருந்தபோது முதல் ஜுலை நெருக்கடி ஏற்பட்டது; கட்சி, முன்னாள் ஆகப்பெரிய கோட்டையில் சர்ச்சைக்கிடமின்றி சரிவு நிலையில் இருக்கும்போது இரண்டாவது ஜுலை நெருக்கடி நிகழ்கிறது.

காம்ரேட்
ரஷ்யாவின் 1905 முதல் புரட்சி
என்ன செய்ய வேண்டும் நூல் வலியுறுத்திய சோசலிசம் மற்றும் பாட்டாளி வர்க்க இயக்க இணைப்பு, ஓரடி முன்னால் ஈரடி பின்னால் கற்றுத் தந்த அமைப்பு பற்றிய பாடங்கள், 1905 முதல் 1907 வரை நடந்த முதல் ரஷ்யப் புரட்சிக்குப் பெருமளவில் உதவின. இந்தப் புரட்சியில்தான், தொழிலாளர் பிரதிநிதிகள் சோவியத்துகள், விவசாய பிரதிநிதிகள் சோவியத்துகள், போர்வீரர் பிரதிநிதிகள் சோவியத்துகள், கப்பல்படை வீரர்கள் சோவியத்துகள், உழைக்கும் மக்கள் அதிகாரக் கரு வடிவங்களாக, ரஷ்யாவெங்கும் உருவாயின. அந்த வகையில் 1917 புரட்சிக்கு ஒத்திகையாக அமைந்தன.
சில விவரங்கள் சில தகவல்கள்
• 1905ல் 13,995 வேலை நிறுத்தங்களில் 28,63,000 பேர் கலந்து கொண்டனர். அக்டோபரில் நடந்த பொது அரசியல் வேலை நிறுத்தத் தில் மட்டும் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 1906ல் 6,114 வேலை நிறுத்தங்களில் 11,08,000 பேரும், 1907ல் 3,573 வேலை நிறுத்தங்களில் 7,40,000 பேரும் கலந்து கொண்டனர். 3 வருடங்களில் தொழிலாளர் வர்க்கம் தான் ஓர் அரசியல் சக்தி என அறுதியிட்டு எழுந்து நின்றது.
• டிசம்பரில் 9 நாட்கள் தடுப்பரண்கள் ஏற்படுத்தி ஆயுத மோதல்கள் நடத்தியது.
• ரஷ்யாவின் மூன்றில் ஒரு பகுதியில் விவசாயக் கலகங்களும், போர்வீரர் கப்பல் படை வீரர் கலகங்களும் நடந்தன. மக்கள் கொந்தளித்தனர். ஜார் ஆட்சியும் பழைய முறையில் ஆள முடியாமல் தடுமாறியது.
• 17.10.1905ல் ஜார் அரசியல் சுதந்திரங்களும் ஒரு டூமாவும் (நாடாளுமன்றம்) தருவதாக ஒரு பிரகடனம் வெளியிட்டார். அக்டோபர் 21 அன்று அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு என ஒரு போலி அறிவிப்பு வெளியிட்டார்.
• மக்கள் கோபத்தோடு ஒரு பாடல் மூலம் கேலி செய்தார்கள்:
“ஜார் பயந்தார். பிரகடனம் வெளியிட் டார். செத்தவர்க்குச் சுதந்திரம், உயிருள்ள வர்க்குச் சிறை”.
• 1905ல்தான் லெனினும் ஸ்டாலினும் முதல் முதலாகச் சந்திக்கிறார்கள்.
• 1905ல் ஸ்டாலின் சொல்கிறார்: “உண்மையில் வெற்றி பெற நமக்கு என்ன வேண்டும்? நமக்கு மூன்று விஷயங்கள் வேண்டும். முதலாவதாக ஆயுதங்கள் வேண்டும். இரண்டாவதாக ஆயுதங்கள் வேண்டும். மூன்றாவதாக ஆயுதங்கள் வேண்டும்”.
• மென்ஷ்விக்காக மாறிவிட்ட பிளக்கனவ், “அவர்கள் ஆயுதம் ஏந்தி இருக்கக் கூடாது” என்றார்.
• தோழர் லெனின் பதில் சொன்னார்:
“மாறாக, நாம் இன்னமும் உறுதியாக, இன்னமும் ஆற்றலோடு, இன்னமும் தாக்குதல் தன்மையோடு, ஆயுதம் எடுத்திருக்க வேண்டும், நாம் மக்களிடம், ஓர் அமைதியான வேலை நிறுத்தத்தோடு சுருங்கி இருப்பது முடியவே முடியாது எனவும், ஓர் அச்சமற்ற விடாப்படியான ஆயுதமேந்திய சண்டை தவிர்க்க முடியாதது எனவும் விளக்கி இருக்க வேண்டும்”.
• யூதப்படுகொலை, கருப்பு நூற்றுவர்கள் மூலம் புரட்சியாளர்களை வேட்டையாடுவது ஆகியவற்றில் ஜாராட்சி ஈடுபட்டது. மறுபக்கம், சரிபாதி மக்களுக்கு மேல் வாக்குரிமை இல்லாத, சில நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் மட்டுமே இடம் பெறும் டூமாவுக்கு வழி செய்தது.
• ஜார் ஆட்சியின் கொள்கை, ஒருவர் கூட சிறைபிடிக்கப்படக் கூடாது, ஒரு தோட்டா கூட மிச்சமிருக்கக் கூடாது என அமைந்தது.
அடிப்படை வேறுபாடுகள்
முதலாளித்துவம் மற்றும் விவசாய சமூகம் தொடர்பான அணுகுமுறையில், போல்ஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் வேறுபட்டனர்.
மென்ஷ்விக்குகள்:
“நாம் வெற்றி பெறுவது அனுமதிக்கத் தக்கதா? நாம் வெற்றி பெறுவது அபாயகரமானதாய் இருக்காதா? நாம் வெற்றி பெற வேண்டுமா? முதல் பார்வைக்கு இந்தக் கேள்வி விந்தையாகத் தெரியும். என்றாலும் அதை எழுப்பினார்கள். எழுப்பியே ஆக வேண்டியிருந்தது. காரணம் சந்தர்ப்பவாதிகள், வெற்றியைக் கண்டு அஞ்சினார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு அச்சமூட்டி, வெற்றியில் இருந்து விரட்டப் பார்த்தார்கள். வெற்றியினால் சங்கடம் ஏற்படக் கூடும் என ஆரூடம் சொல்லி, வெற்றிக்குப் பாடுபடும் நேரடியான முழக்கங்களைக் கேலி செய்தார்கள்”.
போல்ஷ்விக்குகள்:
“முதலாளித்துவ வர்க்கம் முரண் தன்மை கொண்டது. நம்மிடம் இருந்து புரட்சியின் ஆதாயங்களைப் பறிப்பதற்கு, அது தவறாமல் முயற்சிக்கும். எனவே, தொழிலாளத் தோழர்களே, போராட்டத்திற்கு மேலும் வலுவாகத் தயார் செய்யுங்கள். ஆயுதமெடுத்துக் கொள்ளுங்கள், விவசாய மக்களை உங்கள் பக்கம் கொண்டு வந்து விடுங்கள். நம் புரட்சிகரமான ஆதாயங்களைத் தன்னலம் பேணும் முதலாளித்துவ வர்க்கத்தாரிடம் தாரை வார்க்க மாட்டோம். போராடுவோம்”.
தோல்விக்கு முக்கியக் காரணங்கள்
• ஏகாதிபத்தியச் சங்கிலி 1905 - 1907ல் ரஷ்யாவில் வலுவானதாக இருந்தது.
• பாட்டாளி வர்க்கத்தோடு இணைந்து போராட, அதன் அளவு செல்ல விவசாய சமூகம் தயாராகவில்லை.
• முதலாளிகள், ஜார் மற்றும் நில உடைமையாளர்கள் பக்கம் ஓடி விட்டனர்.
• மென்ஷ்விக்குகளின் ஊசலாட்டம்.
போல்ஷ்விக்குகள் முன்வைத்த தீர்மானகரமான செயல் தந்திரம்.
எதேச்சதிகார முறையின் எதிர்ப்பைப் பலத்தின் மூலமாக நசுக்கவும், முதலாளித்துவ வர்க்கத்தின் தடுமாற்ற நிலையை முடக்கம் செய்துவிடவும், திரளான விவசாய மக்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டும்.
முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பைப் பலத்தின் மூலமாக நசுக்கவும், விவசாய மக்களின் சிறு முதலாளித்துவ வர்க்கத்தினரின் தடுமாற்ற நிலையை முடக்கம் செய்து விடவும், மக்களிடையே உள்ள அரைப்பாட்டாளி வர்க்கத் தன்மையுள்ள பகுதிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டு பாட்டாளி வர்க்கம் சோசலிசப் புரட்சியைச் சாதிக்க வேண்டும். (அரைப்பாட்டாளிப் பகுதியினர் என்பது முதன்மையாக ஏழை விவசாயிகளே - கட்டுரையாளர்)
என்ன செய்ய வேண்டும் நூல் ருஷ்யப் புரட்சிக்குப் பாட்டாளி வர்க்கத்தைத் தயார் செய்யவே எழுதப்பட்டது. இயக்கங்கள் ஓரடி முன்னால் சென்று பின் ஈரடி பின்னால் சென்றாலும், ரஷ்யப் புரட்சி அத்தியாயம் 1, 1905ல் அரங்கேறியது. 1917 மார்ச்சில் ஜார் ஆட்சி வீழ்ந்தது. 1917 நவம்பர் 7 இரட்டை அதிகாரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சோசலிசப் புரட்சி வென்றது. இது நடந்த வரலாறு.
என்ன செய்ய வேண்டும் நூல் முன்வைத்த முக்கியக் கோட்பாடுகள்
• தொழிலாளர் வர்க்க இயக்கத்தை, ஜாராட்சிக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இருந்து திசை திருப்பி, முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கெதிரான பொருளாதாரப் போராட்டங்களோடு மட்டும் சுருக்கி நிறுத்துவது, முதலாளிகளையும் அவர்கள் அரசாங்கத்தையும் அப்படியே விட்டு வைக்கும். தொழிலாளர்கள் நிரந்தர அடிமைத்தனத்திற்கு ஆட்படுவார்கள். தொழிலாளர் வர்க்கம், சோசலிசம் நோக்கிச் செல்லத் தடையாய் உள்ள, ஜார் ஆட்சியை வீழ்த்த வேண்டும்.
• தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அது போகிற போக்கில் விட்டுவிட்டு, கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுத்து வால் பிடிப்பது, தொழிலாளர் வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி, முதலாளித்துவச் செல்வாக்கிற்கு ஆட்படுத்தும்.
• புரட்சிகரத் தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் கிடையாது. மிகவும் முன்னேறிய தத்துவத்தின் வழிகாட்டுதல் கொண்டுதான், ஒரு கட்சி, முன்னணிப் பாத்திரம் வகிக்க முடியும்.
• சோசலிசக் கருத்து, தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு, தொழிற்சங்கங்களுக்கு வெளியில் இருந்துதான் வர முடியும். ஆகவே பாட்டாளி வர்க்க இயக்கமும் சோசலிசமும் இணைக்கப்பட வேண்டும். தேர்வு, முதலாளி வர்க்கக் கருத்தியலா அல்லது பாட்டாளி வர்க்கக் கருத்தியலா என்பதுதான். நடுப்பாதை எதுவும் கிடையாது. சோசலிசக் கருத்தைச் சிறுமைப்படுத்துவது, அதிலிருந்து சிறு அளவில் கூட நகர்ந்து செல்வது, முதலாளித்துவக் கருத்தியலையே பலப்படுத்தும்.
• பொருளாதாரவாதிகள் சமூக சீர்திருத் தங்களையே கோருகிறார்கள். அவர்கள் சமூகப் புரட்சிபால் நாட்டம் கொண்டவர்கள் இல்லை.
• பொருளாதாரவாதம், ரஷ்யாவில் மட்டுமின்றி சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்திலும், முதலாளித்துவச் செல்வாக்கின் சந்தர்ப்பவாத வெளிப்பாடே, பொருளாதாரவாதிகள், புரட்சிகரப் போராட்டம், சோசலிசம், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் ஆகியவற்றை மறுதலிப்பவர்கள்.
என்ன செய்ய வேண்டும் நூலை வாசிப்பவர்கள், ரஷ்ய போல்ஷ்விக் கட்சி தனது 15 ஆண்டு கால வரலாற்றில், ரஷ்யாவின் குறிப்பான நிலைமைகளில், சோசலிசப் புரட்சியில் வென்றது என்பதையும், 1917 மார்ச் முதல் நவம்பர் வரை 9 மாதங்களில் பிரும்மாண்டமான பாய்ச்சலை நிகழ்த்தியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
போல்ஷ்விக் கட்சி வெற்றி பெற, போல்ஷ்விக் கட்சி வரலாறு நூல் சொல்லும் முக்கியக் காரணங்களையும் என்ன செய்ய வேண்டும் நூலின் படிப்பினைகளை நமது நாட்டின் குறிப்பான நிலைமைகளில் எப்படிப் பொருத்துவது என்பதையும் அடுத்த பகுதியில் காண்போம்.
மண்ணில் பாதி
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்...
பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் பெரும்பீழை இருக்குதடி தங்கமே தங்கம். பாரதிதான் சொன்னான். புதுமைப் பெண் பற்றி கனவு கண்டவன் பெண்கள் படும் துன்பம் பற்றி கவலை கொண்டபோது இப்படிச் சொல்லியிருப்பான். ஜுலை 9 அன்று அந்தச் சிறுபெண் காப்பாற்றுங்கள் என்றக் கதறலுடன் குவஹாத்தியின் முக்கிய சாலையில் நின்றும் சென்றும் வந்தும் நடந்தும் கொண்டிருந்தவர்களிடம் எல்லாம் கெஞ்சியபோது அந்தப் பெண்ணின் மனம்தான் எத்தனை துன்பத்துக்குள்ளாகி இருக்கும்? யாரும் அந்தப் பெண்ணுக்கு கடைசி வரை உதவவேயில்லை என்பது இன்னும் எவ்வளவு பெரிய கொடுமை? திரைப்படத்தில் இறுதிக் காட்சியில் வந்து பழக்கப்பட்ட காவல்துறை நிஜத்திலும் இறுதியில்தான் வந்தது.
ஒரு வெறிகொண்ட கும்பலால் அந்தப் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை, உதவி கேட்டு கதறுவதை, எல்லோரும் வேடிக்கை பார்ப்பதை படம் பிடித்த, இணைய தளத்தில், தொலைக்காட்சியில், ஒரு பரபரப்புக் காட்சியை காட்டுவது போல் ‘நகரத்தில் ஒரு பெண்’ என்ற தலைப்புடன் போட்டுக் காட்டிய அந்த ஊடகவியலாளர்தான் எத்தனை ‘விசாலமான’ சிந்தனை கொண்டவர்? பொது வெளியில் இப்படி நடந்துகொண்டவர் தனி வாழ்க்கையில் அவரிடம் சிக்கியுள்ள பெண்களை எப்படித்தான் நடத்துவார்?
இன்னும், இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட கலாச்சாரக் காவலர்கள் இருக்கிறார்கள். எந்தக் குற்ற உணர்வும் இன்றி, எந்த உண்மையான கண்டனமும் இன்றி, தண்டனை பற்றிய எந்த பயம் ஏதுமின்றி, சவுகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மங்களூரில் இப்படிப்பட்ட ஆண்கள் ஒன்று சேர்ந்து அமைப்பே நடத்துகிறார்கள். தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண், பெண் மீது ஆண்டுக்கொரு முறை பரபரப்பு தாக்குதல் நடத்தி கலாச்சாரத்தைக் காப்பதாகச் சொல்கிறார்கள்.
ராஞ்சியில் ஜார்க்கண்ட் முக்தி சங் என்ற அமைப்பு ‘ஆகஸ்ட் 20 முதல் பெண்கள் ஜீன்ஸ் அணிவது தடை செய்யப்படுகிறது. ஜீன்ஸ் அணியும் பெண்கள் மீது ஆசிட் ஊற்றப்படும்’ என்று ஆகஸ்ட் 7 அன்று சுவரொட்டி வெளியிட்டிருக்கிறது. தலிபானா? ஜார்க்கண்டா? காவல்துறையினர் சுவரொட்டி ஒட்டியவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ராஞ்சி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.விபுல் சுக்லா சொல்லியிருக்கிறார்: ‘பெண்கள் பயப்படத் தேவையில்லை. அவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். அவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று யாரும் கட்டளை போட முடியாது. ஆனால், நிச்சயம் அவர்கள் கண்ணியமாக உடை அணிய வேண்டும்’. சுவரொட்டி ஒட்டியவர்களுக்கும் காவல்துறை கண்காணிப்பாளருக்கும் இந்த விசயத்தில் பெரிய கருத்து வேறுபாடு இருப் பதாகத் தெரியவில்லை. ஆகஸ்ட் 20க்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை விட காவல்துறை கண்காணிப்பாளர் சொல்லியிருப்பது தாக்குதலுக்கு தயாராக இருப்பவர்களுக்கு துணிச்சல் தரும் என்பது ஆபத்தானது. இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருப்பது கவலைக்குரியது. கண்டனத்துக்குரியது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி முகர்ஜி என்ற பெண் மீது, 2003ல், அழகாக இருப்பதால்தானே அலட்டிக் கொள்கிறாய், அந்த முகத்தையே சிதைத்து விடுகிறேன் பார் என்று சொல்லி ஆசிட் ஊற்றியவர்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுத லையாகிவிட்டார்கள். அந்தப் பெண் பார்க்க முடியாமல், கேட்க முடியாமல், உணவருந்த முடியாமல், 9 ஆண்டுகள் போராடியும் பார்த்து, இப்போது, என்னைக் கொன்று விடுங்கள் என்று மனு போட்டிருக்கிறார்.
ஆண்கள்தான் இப்படி என்று சொல்லி முடித்துக்கொள்ள முடியவில்லை. குவஹாத்தி சம்பவத்தில் தேசிய பெண்கள் ஆணையம் சார்பாக விசாரணைக்குச் சென்ற அல்கா லம்பா சற்றும் கூருணர்வின்றி அந்தப் பெண்ணின் பெயரை வெளியிட்டார். மம்தா போன்றவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே பேசுகிறார்கள்.
மங்களூரிலும் குவஹாத்தியிலும் குற்றம் புரிந்தவர்களைக் கைது செய்தார்கள். அவர்கள் இன்னும் சில நாட்களில் வெளியே வந்து அதே நடவடிக்கைகளைத் தொடர்வார்கள். அல்லது தொடராமல் கூட இருக்கலாம். சாண் பிள்ளைகளானாலும் ஆண் பிள்ளைகள். அவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்காது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதன் பிறகு வாழ்க்கை தடம்புரண்டு விடுகிறது. நடந்த தாக்குதலை முடிந்த கதையாகக் கருதி அடுத்த கட்டம் செல்ல பெண்கள் இன்னும் முழுமையாகப் பழகவில்லை. சோனாலி முகர்ஜி போன்ற பெண்களுக்கு அது சாத்தியமும் இல்லை.
இன்னும் கூட இரவில் ஏன் வந்தார், கேளிக்கை விடுதிக்கு பெண் வரலாமா, ஏன் ஸ்கர்ட் அணிந்தார் என்று உளுத்துப்போன கேள்விகளைக் கேட்க பத்திரிகைகள் உள்ளன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளனர். இது வரை பாலியல் துன்புறுத்தலுக்கு, வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எல்லாம் ஸ்கர்ட் அணிந்திருந்தார்களா, இரவில் தனியாக வெளியே சென்றார்களா, கேளிக்கை விடுதிக்குச் சென்றார்களா என்று கேள்விகள் எழுப்பப்பட்ட பிறகும், எதிர்ப்புக் குரல் வலுத்து அவ்வப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டாலும், பெண்கள் மீதான தாக்குதல்கள் மேலும் தொடர்கின்றன என்றால், சமூகம் வேடிக்கை பார்க்கிறது, காவல்துறை அனுமதிக்கிறது, சட்டங்கள் ஏட்டில் இருந்து பூமிக்கு இறங்க மறுக்கின்றன, ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுகிறார்கள் என்றுதான் பொருள். அதனால், திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள், எப்படியும் தப்பிவிடலாம் எனத் துணிச்சல் பெறுகிறார்கள் என்றுதான் பொருள்.
என்னதான் செய்வது? எப்போதுதான் இந்தத் தாக்குதல்கள் பயமின்றி பெண்கள் பொது வெளியில் சுதந்திரமாக உலாவ முடியும்? பெண்கள் எப்படித்தான் துணிச்சல் பெறுவது? தற்காப்பு சண்டைப் பயிற்சி பெற்றுக்கொள்வதெல்லாம் தாக்குதல் நடத்தும் ராட்சசர்களுக்கு சுண்டைக்காய் விசயம். இப்போதெல்லாம் அவர்களும் தனியாய் வருவதில்லை. தாக்குதல் தொழில்நுட்பம் அதிநவீனமாய் வளர்ந்துவிட்ட கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாட்டில் உள்ள பெண்களுக்கு எல்லாம் இசட் பிரிவு பாதுகாப்பு தருவதற்கு வாய்ப்பில்லை. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு ஓடிச் சென்று உதவுவது எப்படி என்று கட்டுரைகள் எழுதப்பட்டாலும் தாக்குதல்களின் தன்மையும் வகையும் விரிகின்றனவே தவிர குறைவதில்லை.
பெண்களைத் தாக்குபவர்களுக்கு அச்சத்தை உருவாக்க வேண்டும். சீற்றமுற்ற பெண்கள் வெறும் மிளகாய் பொடி கொண்டு ஆயுதமும் படையும் கொண்ட ஒருவனை வீழ்த்துவது போல் மிர்ச் மசாலா படம் நிறைவுறும். பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் ஆயுதம் வேண்டுமடி தங்கமே தங்கம் என்று புதுப்பாட்டு எழுதலாமா?
கட்டுரை
ரிலையன்ஸ் ஏரியா... உள்ள வராதே...
சந்திரமோகன்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கோரக் கரங்கள், 1998ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், தங்க நாற்கர சாலைத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளின் கழுத்துக்களை நெறித்தது. நிலங்களை பறித்துக் கொண்டு அற்ப சொற்ப இழப்பீடு வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தைப் பறித்தது. நான்கு வழிச் சாலைகளை அமைக்கும் ஒப்பந்தங்களை, உலக வங்கியின் உதவியுடன் பெருநிறுவனங்களுக்கு தந்தது. ஒருபுறம் மானியம் மறுபுறம் சுங்கச் சாவடிகள் அமைத்து வாகனங்களிடம் தினமும் இலட்சக்கணக்கான ரூபாய் வரி வசூலிக்கும் வாய்ப்புக்கள் தந்தது. அமைத்தல் - இயக்குதல் - ஒப்படைத்தல் திட்ட அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெருங்குழுமங்களில் முக்கியமானவை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், லார்சன்-அன்ட் டூப்ரோ இன்டர் ஸ்டேட் ரோட் காரிடார், நாகார்ஜ÷னா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, மதுக்கோன் புராஜெக்ட்ஸ் போன்றவையாகும். அரசு - தனியார் பங்கேற்பு (பிபிபி) என்ற நாமகரணத்துடன் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடுகள் குவிந்தன. உலக வங்கி உதவிகள் என்ற பெயரில் கந்துவட்டிச் சுரண்டல் நாட்டின் பொருளாதாரத்தை நெறிக்கிறது.
என்எச் 68 தேசிய நெடுஞ்சாலை சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டைக்கு இடையிலான 136 கி.மீ. சாலையை கொண்டது. 2007ல், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் காலத்திய ஈவு இரக்கமற்ற நிலம் கையகப்படுத்தல் சட்டம் 1896ன் மாற்றியமைக்கப்பட்ட வடிவமான, அநீதியான 1956ம் வருடத்திய தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின் அடிப்படையில், சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 140 கிராமங்களின் 10,000 விவசாயிகளின், ஏழை மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஏற்கனவே இருந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் விரிவுபடுத்தப்பட்டன: புதிய பை பாஸ் சாலைகளும் அமைக்கப்பட்டன. 130 கி.மீ. நீளத்திற்கு 60 மீட்டர் சாலையும், 5.5கி.மீ. நீளத்திற்கு 75 மீட்டர் சாலையும் அமைக்கப்பட்டன. இரு வழிச் சாலைகளாக கட்டமைக்கப்பட்ட புறவழிச் சாலைகளான உடையாப்பட்டி, வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர் கோட்டை பை-பாஸ் சாலைகள் அனைத்தும் முழுமையாக புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள். இந்த 27 கி.மீ. சாலைகளை அமைப்பதற்கு மட்டும் விவசாய நிலங்கள் பெருமளவில் கையப்படுத்தப்பட்டன. தொகுப்பாக மதிப்பிட்டால், 2008 முதல், ஜ÷லை 2012 வரை கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களின் பரப்பளவு சுமார் 1500 ஏக்கர். இருவழி புறவழிச் சாலை கள் நகரங்களை ஒட்டியவை. அங்கு கையகப்படுத்திய நிலங்களும், சேலம் நகரின் புறவழிச் சாலையில் அமைந்துள்ள தாதகாப்பட்டி (சீலநாய்க்கன் பட்டி), எருமாபாளையம், அம்மாபேட்டை பகுதிகளில் கையகப்படுத்திய நிலங்களும் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.1 கோடி முதல் ரூ.5 கோடி வரை மதிப்புள்ளவை. கிராமப்புற நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு ஏக்கருக்கு சராசரியாக ரூ.50 லட்சங்கள். கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1500 கோடிகளுக்கும் அதிகமானது.
பொதுப்பணித்துறை கணக்கீட்டினடிப்படையில் கையகப்படுத்தப்பட்டபோது இடிக்கப்பட்டு அகற்றப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் 10,000க்கும் மேல். சேலம்-ஆத்தூர் சாலை நகர்ப்புறமயமான பகுதியானதால் இடிக்கப்பட்டவை பெரிதும் தார்சு வகை கட்டிடங்கள். ஒவ்வொரு வீடும் அல்லது கட்டிடமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புபுள்ளவை. இடிக்கப்பட்ட கட்டிடங்கள், வீடுகளின் மதிப்பு ரூ.250 கோடிக்கும் மேல். அழிக்கப்பட்ட (மதிப்பு வாய்ந்த) பாக்கு, தென்னை போன்ற மரங்களின் எண்ணிக்கை 5 லட்சங்களுக்கும் மேல். ரூ.5000 வரை மதிப்பிடப்படுகிற விளைச்சல்மிக்க மரங்களின் மதிப்பு மட்டும் ரூ.250 கோடிக்கும் மேல். விவசாயத்திற்கான 1500 கிணறுகள் மூடப்பட்டன. கிணறு ஒன்றிற்கு ரூ.40,000 வீதம் மதிப்பிட்டால், ரூ.6 கோடி இவற்றின் மதிப்பு. விவசாயிகளின், பொது மக்களின் சொத்துக்களின் இழப்பீட்டு மதிப்பு (கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத வேறு சில வகையினங்கள் உட்பட) ரூ.2000 கோடிக்கும் அதிகம்.
தரப்பட்டது எவ்வளவு?
விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு வெறும் ரூ.2 அல்லது ரூ.3 எனப் பரவலாக வழங்கியுள்ளனர். சதுர அடி ரூ.1000 முதல் 3000 வரை மதிப்புள்ள நகர்ப்புற வீட்டுமனைகளுக்கு, ரூ.100 முதல் ரூ.300 வரைதான் என்று வழங்கியுள்ளனர். அற்பத்திலும் அற்ப தொகைதான் பெரும்பான்மையான விவசாயிகளும், ஏழைகளும் பெற்றனர். ரூ.10 லட்சம் கட்டுமான செலவு செய்த வீடுகளுக்கு/கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சம் வரை மட்டுமே தந்தனர். பணப்பயிர் மரங்களுக்கு வெறும் ரூ.1000 வீதம் மட்டுமே வழங்கினர். அற்பசொற்ப இழப்பீடுகளை அள்ளி எறிந்து விட்டு, காலங்காலமாக காத்து வைத்திருந்த சொத்துக்களை சூறாவளியாக நாசம் செய்தது, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம். மாவட்ட நிர்வாகங்களைச் சேர்ந்த தனி மாவட்ட வருவாய் அலுவலர் தனி (நில எடுப்பு) தாசில்தார்கள், ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரிகளின் துணையோடு, போலீசை பயன்படுத்தி, அச்சுறுத்தி விவசாயிகளை நிலங்களில் இருந்தும், மக்களை வீடுகளில் இருந்தும் வெளியேற்றி சாலையை அமைக்கின்றனர். என்எச் 68 தேசிய நெடுஞ்சாலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இழப்பீடு, வெறும் ரூ.250 கோடி மட்டுமே. சேலம் நகரத்தை ஒட்டியுள்ள சீலநாயக்கன்பட்டி (இதற்கு மட்டும் ரூ.60 கோடி), எருமாபாளையம், அம்மாபேட்டை ஆகிய 3 ரெவின்யூ கிராமங்களுக்கு மட்டும் ரூ.100 கோடி வரை இழப்பீடு தரப்பட்டது. 135க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த வர்களுக்கு ரூ.125 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வாழ்வுரிமை பறிக்கப்பட்டதுடன் மதிப்பு வாய்ந்த நிலங்களுக்கு, சொத்துக்களுக்கு நியாயமான இழப்பீடு இல்லாமல் வஞ்சிக்கப்பட்டார்கள். ரூ.2000 கோடி இழப்பிற்கு, வெறும் ரூ.250 கோடிதான் இழப்பீடா?
என்எச் 68ல் ரிலையன்சின் நுழைவு
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், 2002ல், பம்பாய் புறநகர் மின் விநியோகம் என்ற கம்பெனியை எடுத்துக் கொண்ட பின், ரிலையன்ஸ் எனர்ஜி என்று பெயர் மாற்றிக் கொண்டது. சாலைக் கட்டுமான பணிகளிலும் இறங்கியது. மெட்ரோ ரெயில், விமான நிலையங்கள், பாலங்கள் அமைத்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டது. ஏப்ரல் 2008ல், ரிலையன்ஸ் எனர்ஜி தனது பெயரை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ச் சர் என மாற்றிக் கொண்டது. தற்சமயம் இது இந்தியாவில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள 1000 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை மற்றும் விரைவு வழிச்சாலைகளை கட்டமைத்து வருகிறது. 2006ல் தமிழ்நாட்டில், 2 திட்டங்கள் மேற்கொண்டது. 1. என்எச் 7ல், நாமக்கல் முதல் கரூர் வரையிலான 33.5 கி.மீ. சாலையை ரூ.205.60 கோடி மதிப்பில் அமைத்தது. சஓ டோல் பி.லிமிடெட் என்ற இந்த கம்பெனிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய மானியம் ரூ.24 கோடி. சுங்க வரி வசூலிக்க தரப்பட்ட காலம் 20 ஆண்டுகள். ஆகஸ்ட் 2009ல் செயல்படத் தொடங்கிய இச்சாலையில், ரிலையன்சின் ஒரு நாள் டோல் கேட் வருமானம் ரூ.4.45 லட்சமாக இருந்தது. தற்சமயம் இருமடங்காகியுள்ளது. 2. என்எச் 7ல், திண்டுக்கல் முதல் சமயநல்லூர் (மதுரை) வரையிலான 53 கி.மீ. சாலையை ரூ.283.50 கோடி செலவில் அமைத்தது. ஈந டோல் ரோடு பி.லிமிடெட் என்ற பெயரிடப்பட்ட இத்திட்டத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.31 கோடி ரூபாய் மானியம் வழங்கியது. 20 ஆண்டுகாலம் சுங்கவரி வசூலிக்க அனுமதி பெற்ற இந்த சாலை செப்டம்பர் 2009ல் திறக்கப்பட்டது. அப்போது ரிலையன்சின் ஒரு நாள் டோல்கேட் வசூல் ரூ.8.50 லட்சம். தற்போது கணிசமாக உயர்ந்துவிட்டது.
இந்தியாவிலேயே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் 11 திட்டங்களைப் பெற்றுள்ள மிகப் பெரும் நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர். தமிழ்நாட்டில் அதன் கைவசமுள்ள இரண்டு முக்கிய திட்டங்கள், திருச்சி-கரூர், 81கி.மீ. தூரத்தில் பஓ டோல் ரோடு பி.லிமிடெட் என்ற பெயரில், சஏ 67லும் சஏ 45ல், திருச்சி-திண்டுக்கல், 88 கி.மீ. தூரத்தில், பஈ டோல் ரோடு பி.லிமிடெட் என்ற பெயரிலும் செயல்படுகிறது.
நம டோல்ரோடு பி.லிமிடெட் என்ற பெயரில் சஏ 68ல் சேலம்-உளுந்தூர்பேட்டைக்கு இடையில் 136 கி.மீ. சாலையை அமைக்க, 2007ல் அனுமதியளிக்கப் பட்ட, ரூ.941 கோடி மதிப்பிடப்பட்ட திட்டம். 25 ஆண்டு காலம் சலுகை காலம் அளிக்கப்பட்டு, 2032ல் முடித்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 36 மாதங்களில் கட்டுமான வேலையை முடித்துக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. 100 கி.மீ.க்கு மேல் பில்ட் ஆப்பரேட் ட்ரான்ஸ்ஃபர் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால், வழங்கப்பட்ட முதல் திட்டம் இதுவே ஆகும். இதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள மானியம் மட்டும் ரூ.366 கோடிகளாகும். இது ரிலையன்சின் திட்ட மதிப்பீட்டில் 40% ஆகும். ரிலையன்சிற்கு வழங்கப்பட்ட மானியத்தின் அளவு கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இழப்பீட்டு நிதி வழங்கவில்லை. வெறும் ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளது. காரிப்பட்டி, தலைவாசல், கள்ளக்குறிச்சி அருகே மூன்று டோல்கேட்களை அமைத்து வருகிறது. துவக்கத்தில் ஒரு டோல் கேட் வசூல் நாளொன்றுக்கு ரூ.10 லட்சத்தை கடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் திட்டப்படி 2010லேயே சாலையை முடித்து, டோல்கேட் வசூலை துவக்கி இருக்க வேண்டும். சலுகை காலகட்டம் என்று குறிப்பிடப்படுகிற கால கட்டத்திற்குள், நான்கு வழிச் சாலையை விரைந்து முடித்து, சுங்க வரி வசூலை துவக்கிவிட்டால்தான் கொள்ளை கொள்ளையாக லாபம் பெறமுடியும். விவசாயிகளின் எதிர்ப்புகள், வழக்குகள் போன்றவற்றால், ரிலையன்ஸ் கம்பெனியினால் வேலைகளை முடிக்க முடியவில்லை. எனவே, வன்முறையை, குறுக்கு வழிகளை கையில் எடுத்துக் கொண்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,
மாவட்ட நிர்வாகம், ரிலையன்ஸ் கூட்டுக் கொள்ளை மற்றும் தாக்குதல்
1956ம் வருடத்திய தேசிய நெடுஞ்சாலை சட்டத்தின்படி, ஆணையத்தின் மாவட்ட தலைவர் கலெக்டர் ஆவார். நேரடியாக, நிலம் கையகப்படுத்துவதை உறுதி செய்யும் அதிகாரம் படைத்தவர் மாவட்ட வருவாய் அலுவலர் (தனி-நிலம் எடுப்பு) ஆவார். அவரோடு தனித் தாசில்தார்கள், அவர்களால் நியமிக்கப்படும் பதிவு பெற்ற தனியார் தொகை மதிப்பீட்டாளர்கள் ஈடுபடுகிறார்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டஅதிகாரி (திரு.பொன்னையா ராஜ்) கையப்படுத்துதல் மற்றும் சாலை அமைத்தல் இரண்டு பணிகளிலுமே முக்கியத்துவம் மிக்கவர் ஆவார். ரிலையன்ஸ் சாலை அமைக்கும் பணிக்கு தனியொரு வேலைப்பட்டாளம் வைத்திருக்கும் அதே வேளையில், நிலம் கையகப்படுத்துதல் வேகமாக நடைபெறுவதற்கு ஓய்வு பெற்ற தாசில்தார்களை வேலைக்கு வைத்துள்ளது. அனைத்து தகிடுதத்தங்களையும் பிரயோகித்து, தேவையெனில் போலீசையும் துணைக்கு அழைத்து மிரட்டி விவசாயிகளை, மக்களை வெளியேற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். இழப்பீட்டுத் தொகையை (மதிப்பீட்டை) அதிகரிக்க ஒருபுறம் விவசாயிகளிடம் இருந்து, மக்களிடமிருந்து லஞ்சம் பெறுகின்றனர். மறுபுறம், ரிலையன்ஸ் கம்பெனியிடமிருந்து பணத்தை பெறுகின்றனர். கழிவுகளை, இடிபாடு களை பாதிக்கப்பட்டவர்களையே அகற்றச் சொல்லிவிட்டு, அவர்களிடமே சால்வேஜ் தொகையை பிடித்துக் கொள்கின்றனர்; தாங்கள் தனியாக இப்பணியை செய்ததாக கணக்கு காட்டி மக்கள் பணத்தை அதிகாரிகள் கொள்ளையடிக்கின்றனர்.
திட்ட அதிகாரி பொன்னையா நிலத்தின் மதிப்பை சதுர அடிக்கு ரூ.770 வரை உயர்த்திக் கொடுத்ததில், (சீலநாய்க்கன்பட்டி பகுதிக்கு மட்டும் ரூ.60 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது) கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டார். சஏ 7ல் தேசிய நெடுஞ்சாலை அமைத்தபோதும் திட்ட அதிகாரி இவரே. இவருடன் பணியாற்றிய தனியார் தொகை மதிப்பீட்டாளர் நாகராஜ÷ம் தாறுமாறாக மதிப்பிட்டு கொள்ளைய டித்தனர். ஏழைகளை வஞ்சித்தனர். 2009ல் பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி வெற்றிவேல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மதிப்பீட்டை உயர்த்தி போட்டார். 2010ல் பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி நாராயணமூர்த்தி வளர்ச்சிக் கட்டணம் என்ற பெயரால் மதிப்பிட்ட தொகைகளில் பிடித்தம் செய்தார். சாலை அமைத்து முடிக்கும் அவசரத்தில் ரிலையன்ஸ் இருந்த போது, 2011ல் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெயராமன், வலுக்கட்டாயமாக நிலத்தில்/கட்டிடத்தில் இருப்பவர்களை வெளியேற்ற, ஓர் இடத்திற்கு ரூ.25,000 என ரிலையன்சிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு, போலீஸ் உதவியுடன் வன்முறை செய்து வெளியேற்றினார். 2011-12ல் பணியாற்றிய மாவட்ட வருவாய் அதிகாரி கலையரசியும், தனித்தாசில்தார் புகழேந்தியும் பாதிக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பணமே/இழப்பீடே வழங்கப்படாமல், 3ஜி அறிவிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரே, சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சீலநாய்க்கன்பட்டி முதல் உடையாப்பட்டி வரை சாலை அமைத்து முடித்துவிட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை ரிலையன்சிடம் லஞ்சம் வாங்கி ஏற்காட்டில் எஸ்டேட்டுகளாக, நிலங்களாக, வீடுகளாக அமைத்துக் கொண்டனர்.
1956ம் வருடத்திய தேசிய நெடுஞ்சாலை சட்டப் பிரிவுகள் 3(ஏ), 3(ஜி) அடிப்படையில், கையகப்படுத்த அறிவிக்கை தரப்பட்டது. ஆனால், அவற்றில் இருந்த விதிகள் பின்பற்றப்படவே இல்லை. பொது மக்கள் கருத்து கேட்கப்படவே இல்லை. தொகையை மதிப்பிட கமிட்டி அமைக்கவில்லை. குறை தீர்க்கும் அமைப்பை உருவாக்கவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் விரிவான, தொகுப்பான அவார்டு காப்பி என்ற புத்தகம் தர வேண்டும். அது தரப்படவில்லை. இரண்டு பக்க நோட்டீசை மட்டுமே கொடுத்து அவார்டு காப்பி என்று மோசடி செய்தனர். கூடுதலான நிலங்களை கையகப்படுத்திவிட்டு (வழித்தடம், புறம்போக்கு என ஏதோ ஒரு சாக்கு போக்கு கூறிவிட்டு) குறைத்து மதிப்பீட்டை வழங்கினர். தமிழக அரசால் வழங்கப்பட்ட புறம்போக்கு நிலங்களில் குடியிருந்தவர்கள் ஆவணங்களை வழங்கியபோதும், அடாவடியாக அவர்களுக்கு நிலத்திற்கான தொகையையே வழங்கவில்லை. ஆயிரக் கணக்கான ஏழைகளுக்கு, அவர்களது நிலங்கள் கனவு போல மறைந்து போயின. போலீசின் மிரட்டலுக்கும், ரிலையன்ஸ் மிரட்டலுக்கும் பணிந்து போயினர் ஏழை மக்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டனர். சிலர் மனநோயாளிகளாக மாறினர். சிலர் ஏற்கனவே இருந்த வாழ்க்கைத் தரத்தை இழந்து பரம ஏழைகளாயினர்.
மறுமதிப்பீடு கோரி தரப்பட்ட ஆர்பிட்ரேசன் மனுக்கள் குப்பைத் தொட்டிக்கு போயின. ஒன்றரை ஆண்டு காலமாக இந்த வேலைகளை பார்க்க பணியா ளர் அமர்த்தப்படவில்லை என, பொறுப்பில்லாமல் (தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவிற்கு) சேலம் மாவட்ட ஆட்சியர் பதில் அளித்துள்ளார். ஆர்பிட்ரேசன் கமிட்டி இதுவரை கூட்டப்படவில்லை.
உலக வங்கியும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும்
கடந்த 2003ல் த.நா.விலுள்ள சஏ 7 திட்டத்திற்காக, ரூ.1392 கோடியை இந்திய அரசாங்கம் உலக வங்கியிடமிருந்து கையெழுத்திட்டு பெற்றது. செப்டம்பர் 2008ல் முடிக்கப்படும் போது, மொத்த தொகையானது ரூ.1800 கோடியாகும். மீதித் தொகை ரூ.408 கோடியை மாநில அரசாங்கம் வழங்கியது என்பதை கவனிக்க வேண்டும். இதே பாணிதான் அனைத்து திட்டங்களிலும் கடைபிடிக்கப்பட்டது. த.நா.விலும், இந்தியாவிலும் பல்வேறு சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு கடும் வட்டி விகிதத்தில் உலக வங்கி கடன் வழங்கியுள்ளது.
நிலம் கையகப்படுத்துவது, நிவாரணம் மற்றும் புனர்நிர்மாணம் போன்ற விசயங்களில் கடுமையாக நடந்து கொள்ளும்படி, இந்திய அரசாங்கத்திற்கு உலக வங்கி வலியுறுத்தியுள்ளது. ஆனால், வாங்குகிற கடனில் 40% தொகையை எடுத்த உடனே முதல் தவணையாக கட்டுமானக் கம்பெனிகளுக்கு வழங்கிவிட வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. எனவேதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மத்திய, மாநில அரசாங்கங்கள், மாவட்ட நிர்வாகங்கள் விவசாயிகளுக்கான இழப்பீட்டை சந்தை மதிப்பில் தராமல் ஏமாற்றுகின்றன.
நாடு முழுவதும், நிலப்பறிக்கு எதிராக அல்லது நியாயமான இழப்பீட்டிற்காக விவசாயிகள் போராடி வருகின்றனர். என்எச் 68 நான்குவழிச் சாலையிலும் விவசாயிகள், ஏழை மக்கள் அகில இந்திய விவசாயிகள் மகாசபை தலைமையின் கீழ் தொடர் போராட்டங்களை கட்டமைத்து வருகின்றனர். 2007ல் துவங்கிய ரிலையன்சின் சாலையமைக்கும் திட்டம், 5 ஆண்டுகளாகியும் விவசாயிகளின் எதிர்ப்பால் முடிக்கப்படவில்லை. நியாயமான இழப்பீடு கோரி சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஏழை மக்கள் போராட்டம் வலுப்பெறுகிறது.
பொது விசாரணை
சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை என்எச் 68 நான்கு வழிச்சாலை அமைப்பு பணிக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால், வீடுகள் இடிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளின், ஏழை மக்களின் கோரிக்கைகள் மீதான பொது விசாரணை நிகழ்ச்சி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 5 அன்று சேலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பொது விசாரணையை நடத்தும் நடுவர்களாக ஓய்வு பெற்ற இ.ஆ.ப. அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், காந்தி கிராம முன்னாள் துணை வேந்தர் ந,மார்கண்டன், தென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மய்ய உதவி பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இரத்தினம், தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி, அய்க்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சி.வையாபுரி, தொழிற்சங்கத் தலைவர் எம்.பி.சதாசிவம் ஆகியோர் செயல்பட்டனர்.
750க்கும் மேற்பட்டோர் வாக்குமூலங்களை தாக்கல் செய்தனர். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் நேரடியாக தங்களுடைய கோரிக்கைகளை நடுவர் குழுவிடம் முன்வைத்தனர். கையகப்படுத்தப்பட்ட தங்கள் நிலத்திற்கு, சொத்துக்களுக்கு நியாயமான இழப்பீடு கோருதல், கையகப்படுத்திய போது ஊழலில் ஈடுபட்ட, வன்முறையில் ஈடுபட்ட அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர், ரிலையன்ஸ் கம்பெனி அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோருதல், தங்களுடைய இழப்பீடு மீதான கோரிக்கைகள் நிறைவேற்றி வைக்கப்படாத போது, கையகப்படுத்துதல் தற்போதும் நடந்து கொண்டிருக்கும்போது, சர்வீஸ் ரோடுகள் அமைக்கப்படாத நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு டோல் கேட்டுகளை திறந்து சுங்க வரி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர். உரிய இழப்பீடு தேவையான தருணத்தில் கிடைக்காததால் மருத்துவமனையிலிருந்த தன்னுடைய மகனுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்து போன துன்பத்தை அம்மாபேட்டையைச் சேர்ந்த கோவிந்தம்மாள் கண்ணீர் மல்க விவரித்தார். தன்னுடைய விவசாய நிலத்திற்கு சதுர அடிக்கு ரூ.2 என மட்டுமே வழங்கினர். ஒரு டீ இன்று ரூ.7க்கு விற்கிறது. டீக்கு இருக்கும் மதிப்பு கூட எனது விவசாய நிலத்திற்குக் கிடையாதா? என்று கள்ளக்குறிச்சியைச் சார்ந்த விவசாயி பரமகுரு கேள்வி எழுப்பினார். அயோத்தியாபட்டினம் ராம் நகரைச் சேர்ந்த திருமதி.கஸ்தூரி கூட்டுறவு வங்கியில் ரூ.4 லட்சம் கடன் வாங்கி கட்டிய வீட்டை முழுமையாக இடித்துவிட்டு வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கியதால் இருந்த சொத்துக்களையும் நகைகளையும் விற்று ரூ.2 லட்சம் கடனை அடைத்து கடனாளியாக நிற்கிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய அவிதொச அகில இந்திய துணைத் தலைவர் தோழர் பாலசுந்தரம், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான, பெருங்குழும கொள்ளைக்கு எதிரான, விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான, ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட அமைப்பாளர் வி.அய்யந்துரை தலைமை தாங்கினார். பொது விசாரணையைக் கட்டமைப்பதிலும், அதற்கான பிரச்சார வேலையிலும் அகில இந்திய விவசாய மகாசபை நிர்வாகிகள் சி.செல்வராஜ், சண்முகம், கனகராஜ், சின்னதுரை, சுப்பிரமணி, தங்கவேல், பெரிய கிருஷ்ணாபுரம் கந்தசாமி, ராம்நகர் மகேஸ்வரன், லோகநாதன், மின்னாம்பள்ளி செந்தில், சேசன்சாவடி செல்லப்பன், கொத்தாம்பாடி பழனிச்சாமி, பழனிவேல், ஆத்தூர் தியாகராஜன், முல்லைவாடி கிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சோலை, கோபாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட மாலெ கட்சி செயலாளர் தோழர் மோகனசுந்தரம் ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றினர். இயக்கத்தை ஒருங்கிணைக்கும் வேலையில் கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் சந்திரமோகன் மற்றும் வெங்கடேசன் ஈடுபட்டனர்.
இலங்கை அகதிகள் முகாம்கள்:
கூரை மேல் கோழி
ஜி.ரமேஷ்
கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போனானாம் என்று தமிழில் ஓர் எள்ளல் மொழி உண்டு. ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இது இன்றைய சூழலில் கனகச்சிதமாகப் பொருந்தும்.
தமிழக முதல்வரின் முழுச்சுகாதார காப்பீட்டுத் திட்டம் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கும் உண்டு. அதற்காக ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளேன் என ஜெயலலிதா பெருமையாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். எல்லாம் அறிவிப்போடு நிற்கிறது. போர் என்று வந்துவிட்டால் பொதுமக்கள் சாவது தவிர்க்க முடியாதது என்று சொன்னவர் ஓட்டுக்காக நான் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய இலங்கைக்கு படையனுப்புவேன் என்றெல்லாம் பேசினார். இப்போது இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது கொடநாட்டில் உறங்கிக் கிடந்தார். மற்ற அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் குரல் வந்தவுடன் உறக்கத்தில் இருந்து எழுந்து, இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பச் சொல்லி பிரதமருக்கு கடிதம் அனுப்பிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டார்.
தான் ஆட்சியில் இல்லாதபோதுதான், தமிழர்கள் மீதும் தமிழ் இனத்தின் மீதும் தனிப்பற்று வரும் கருணாநிதிக்கு. தனி ஈழம் காணாமல் நான் கண் மூடப்போவதில்லை. தனி ஈழம்தான் என் லட்சியம். வாழ்வது ஒரு முறை. வீழ்வதும் ஒரு முறை. அது ஈழத்திற்காக இருக் கட்டும் என்று வாய் கூசாமல் வசனம் பேசினார். அதற்காகவே டெசோ மாநாடு என்றார். செட்டிநாட்டுச் சீமான் சிதம்பரம் சென்னைக்கு வந்து சென்ற வேகத்தில் தனி ஈழமா, யார் சொன்னது, என்று அந்தர் பல்டி அடித்தார்.
இலங்கையில் தனிஈழம் அமைப்பது இருக்கட்டும். தமிழக அகதிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்? இலங்கையில் இருந்து அகதிகள் 4 கட்டங்களாக தமிழகம் வந்துள்ளார்கள். 24.7.1983 முதல் 4.1.2010 வரை 3,03,076 பேர் வந்துள்ளதாகவும் அதற்குப் பின்னரும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தமிழக மறுவாழ்வுத்துறை சொல்கிறது.
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 414 அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில் பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் இருப்பவை சிறப்பு முகாம்களாம். இந்த சிறப்பு முகாம்கள் எங்கிருக்கின்றன தெரியுமா? ஒன்று பூந்தமல்லி சப் ஜெயிலுக்குள் மற்றொன்று செங்கல்பட்டு சப் ஜெயிலுக்குள். இந்த சிறப்பு முகாம்கள் காவல் துறையின் கியூ பிராஞ்ச் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. யாரெல்லாம் இலங்கையில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிக்கு வந்து இறங்குகிறார்களோ அவர்களைச் சோதனையிட்டு வந்த அகதிகளில் யாரேனும் புலிகள்(!) இருந்தால் அவர்களை இந்தச் சிறப்பு முகாம்களுக்கு கொண்டு சென்றுவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த அரசாங்கத்திற்கும் காவல் துறைக்கும் ஈழத் தழிழர்கள் எல்லோருமே புலிகளாகவே தெரிகிறார்கள். குண்டு தயாரிக்க சைக்கிள் பால்ரஸ்களை வைத்து இருந்தார் என சம்பந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு வழக்கு போட்டு மண்டபம் முகாமில் இருந்து செங்கல் பட்டு சிறப்பு சிறை முகாமிற்குக் கொண்டு வந்து அடைத்துவிடுகிறார்கள். சில பேரை எந்த வழக்கும் இல்லாமல் இந்த சிறை முகாம்களுக்குள் அடைத்துவிட்டு பின்னர் வழக்கு போடுவது அல்லது வழக்கே போடாமல் இழுத்தடித்து சிறை முகாம்களுக்குள்ளேயே வைத்துச் சீரழிப்பதும் நடக்கிறது.
கடந்த மே மாதம் முதல் செங்கல்பட்டு சிறை முகாமிற்குள் பதினைந்து பேர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எந்த வழக்கும் இல்லாத அல்லது பெயருக்கு ஏதோ வழக்கு போடப்பட்டுள்ள தங்களை இச்சிறை முகாமில் இருந்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே முதலில் 15 பேரை ஜøன் 5ம் தேதிக்குள் இங்கிருந்து அனுப்புவதாகவும் பின்னர் மற்றவர்களையும் திறந்த வெளி முகாமிற்கு அனுப்பி விடுவதாகவும் வாக்குறுதி அளித்ததை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், தமிழக அரசு 4 பேரை மட்டும் அனுப்பிவிட்டு மற்றவர்களை அனுப்ப மறுத்து வருகிறது. பட்டினிப் போராட்டத்தில் இருந்தவர்களில் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது. பல்வேறு அமைப்புகள் இந்த சிறை முகாமை மூட வேண்டும், எல்லோரும் திறந்த வெளி முகாமிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். இருப்பினும் அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆணவத்துடன் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள சிறைகளை விட மோசமான நிலையில்தான் இந்த சிறை முகாம்கள் இருக்கின்றன. குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது. போதுமான கழிவறைகள், குளியல் அறைகள் கிடையாது. உணவு, உடைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. மற்ற முகாம்களில் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு வெளியில் சென்றுவிட்டு மாலை 6 மணிக்குள் வந்து விடவேண்டும் என்ற நிலைகூட இந்த சிறை முகாம்வாசிகளுக்குக் கிடையாது. இதில் காவல்துறையினரின் சித்திரவதை வேறு.
எல்லோரையும் இங்கிருந்து அனுப்பி விட்டால் யாரை வைத்து நாங்கள் இந்த முகாமை நடத்துவது என்று அதிகாரிகள் கேட்கிறார்களாம். அரசின் நோக்கம் முகாமை மூடுவது அல்ல. இந்த சிறை முகாமைத் தொடர்ந்து நடத்துவதுதான். மூன்று மாதத்திற்கு ஒருமுறை 3 பேரை இங்கிருந்து விடுவிப்போம், அதுவரை அவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். இந்தக் கணக்கில் இப்போது செங்கல்பட்டு சிறை முகாமில் இருப்பவர்களை விடுவிக்க 6 ஆண்டுகள் ஆகும்.
சிறை முகாம்கள் வதை முகாம்களாக இருக்க, திறந்தவெளி முகாம்களில் இருப்பவர்களோ ஏன் இங்கு வந்தோம் என்று நொந்து கொண்டிருக்கிறார்கள். பத்துக்கு பத்தடி, இப்போது பத்துக்கு பனிரெண்டடி அறைதான் ஒரு வீடு. ஒரு புறம் 9 வரிகள் செங்கல்களை அடுக்கியும் மற்றொருபுறம் 14 வரி செங்கல்களை அடுக்கியும் சுவர் எழுப்பப்பட்டு ஓலைச் சாய்ப்பு அல்லது ஆஸ்பெட்டாஸ் சாய்ப்பு போடப்பட்டுள்ளது. யாராவது தனவான்கள் தயவு பண்ணினால் ஓட்டுச் சாய்ப்பு. பெயருக்கு ஒரு தகரக் கதவு. பெயருக்கு ஒரு தரை. ஆளும் கட்சி கவுன்சிலர் வீட்டு நாய்க்குக் கூட இதைவிடப் பெரிய அறை இருக்கிறது. திறந்த வெளி முகாம் என்பதாலேயே அவர்களுக்கு திறந்த வெளிக் கழிப்பிடங்கள்தான்.
திருநெல்வேலி கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமில் 235 வீடுகள். மொத்தம் 930 பேர் இருக்கிறார்கள். இந்த முகாம் 20 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. பத்து பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு எவ்விதப் பராமரிப்பும் இல்லாமல் பயனற்றுக் கிடக்கிறது. முகாமிற்குள் சாலை வசதி கிடையாது. கழிவு நீர் ஓடைகள் கிடையாது. காலை 6 மணிக்கு வெளியே போகும் ஆண்கள் கையெழுத்து போட்டுவிட்டுத்தான் வெளியே போக வேண்டும். மாலை 6 மணிக்குள் திரும்பி வந்து விட வேண்டும். வெளியில் தங்கக் கூடாது. முகாமிற்கு பொறுப்பாளரான தாசில்தாரோ காவல் அதிகாரியோ திடீர் என்று வந்து கணக்குப் பார்ப்பார்கள். யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று கியூ பிராஞ்ச் போலீசார் வேவு பார்ப்பது நித்திய நிகழ்ச்சி.
அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு பல வண்ணங்களில் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால், அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே மக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ரேசன் கார்டு கிடையாது. 40 பக்க கோடு போட்ட நோட்டுதான் அவர்களுக்கு ரேசன் வாங்க. அதில் வீட்டுக்குரிய எண்ணை எழுதியுள்ளார்கள். குடும்பத்திற்கு 12 கிலோ அரிசி இலவசம். இன்னொரு 24 கிலோ அரிசி கிலோ 55 பைசா கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். ரூ.150 கொடுத்துதான் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். சர்க்கரையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். குடும்பத் தலைவருக்கு மாதம் ரூ.1000மும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்கு ரூ.800ம், குழந்தைகளுக்கு ரூ.375ம் அரசு கொடுக்கிறதாம். இதை வைத்துக் கொண்டுதான் இவர்கள் வாழ வேண்டும் என்கிறது. கூலி வேலை செய்து அன்றாடப் பாட்டைக் கழிக்கிறார்கள். பெண்கள் கூடை முடைதல் ஓலை பின்னல் வேலை பார்க்கிறார்கள். பீடித் தொழில்கூட இங்கு இல்லை. பல்வேறு சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் இருந்தாலும் கந்துவட்டிக் காரர்களுக்கு மட்டும் தடையேதும் கிடையாது. முகாமிற்குள் மருத்துவரோ மருத்துவமனையோ கிடையாது. பல மைல் தூரம் போக வேண்டும். குழந்தைகள் பள்ளிகளும் அவ்வாறே.
என் தமிழ்நாடு என்று ஏக்கத்துடன் வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். இரண்டு தலைமுறைகளாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து எவ்வித உரிமையும் கிடையாது. வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
செத்துச் செத்து பிழைப்பதை விட கடலில் செத்தாலும் பரவாயில்லை எங்கள் பிள்ளை களாவது நாளை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி ஆஸ்திரேலியாவிற்கு ஒருவருக்கு 1 லட்ச ரூபாய் செலவு செய்து படகு ஏற்பாடு செய்து பயணப்பட்டவர்களையும் பிடித்துக் கொண்டு வந்து மீண்டும் முகாம்களில் அடைத்துவிட்டார்கள். ஆஸ்திரேலியாவிற்குச் சென்று விட்டால் 6 மாதத்தில் குடியுரிமை கொடுக்கிறார்கள். எங்களோடு இருந்தவர்கள் அங்கு போன பின் கார், பங்களா என்று வாழ்கிறார்கள். இந்தத் தமிழ்நாட்டில் தலைமுறையாய் வாழ்ந்தாலும் சீரழிந்த வாழ்க்கைதான் வாழ வேண்டியுள்ளது என்றனர் கடந்த ஜ÷ன் மாதம் கேரளா வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள். ஆஸ்திரேலியா போய்ச் சேர 29 நாட்கள் ஆகுமாம். இவர்கள் 151 பேர். பெண்களும் குழந்தைகளுமாக குடும்பத்துடன் இருந்தார்கள். கடலில் போய்க் கொண்டிருக்கும் போது கடற்படையால் பிடிக்கப்பட்டு பாளையங்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை மதுரை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர் முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சிறுகச் சிறுகச் சேமித்துக் கொடுத்த பணமும் போய்விட்டது. இரண்டு நாட்கள் மண்டபத்தில் இருந்தவர்களுக்கு மாற்று உடையோ மருந்தோ கொடுக்கக் கூட அனுமதிக்கவில்லை அதிகாரிகள்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என வாய்கிழியப் பேசும் தமிழகத்தின் முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்கள், தமிழகத்தில் வாழ வழியில்லை, செத்தாலும் மேல் என்று சென்றவர்களைப் பிடித்து வந்து சித்திரவதை செய்து சீரழிக்கிறார்கள். தங்கள் வானளாவிய அதிகாரத்துக்குள் வாழ்கிற இலங்கைத் தமிழர்களின் கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய முடியாதவர்கள், உறுதி செய்ய மனமில்லாதவர்கள் வேடம் கட்டி ஏமாற்றுகிறார்கள்.
களம்
மக்கள் நலனே கட்சியின் நலன்
ஜுலை 28 மாநிலம் தழுவிய இயக்கம்
மக்கள் நலனே கட்சியின் நலன் என்று சொன்ன தோழர் சாருவின் நினைவு நாள் அனுசரிக்க மாநிலம் முழுவதும் உள்ள கட்சி உள்ளூர் கமிட்டிகள் மக்கள் கோரிக்கைகள் மீது இயக்கம் நடத்தி ஜுலை 28 அன்று மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் நடத்தின.
நெல்லை: தயாரிப்பு கூட்டங்களில் நமது கட்சி, நமது புரட்சி படிக்கப்பட்டது. தேசிய ஊரக வேலைக்கு ரூ.132 அரசாணைப்படியான குறைந்தபட்சக் கூலி, கட்டுமான வாரியத்தில் 1% நலநிதி பிடித்தம், வீடு கட்ட மானியம், பட்டா ஆகிய கோரிக்கைகள் மீது 100 பேர் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டனர். 300 பேர் 6 மய்யங்களில் ஜுலை 28 அன்று பங்கேற்றனர். மனு தரும் நிகழ்ச்சியில் மேயர் எரிச்சலுற்றார். அதிமுக கவுன்சிலர்கள் போட்டி இயக்கம் நடத்தி பட்டாவுக்கு பணம் கட்டுவதாக கையெழுத்து கேட்டார்கள். தேர்தல் வாக்குறுதிப் படி இலவசப் பட்டா கேட்டு மனு தரும் போராட்டம் தொடர்கிறது.
சேலம்: 3 உள்ளூர் கமிட்டிகளில் மக்கள் கோரிக்கைகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஜுலை 28 ஆர்ப்பாட்டங்களில் 3 மய்யங்களில் 150 பேர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர்: 5 உள்ளூர் கமிட்டிகளில், 15 கிளைகளில், 13 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்களில், 250 உறுப்பினர்கள் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டனர். தேசிய ஊரக வேலைத் திட்டக் கூலி ரூ.132, வேலை இல்லா காலப் படி கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஒரே நாளில் 4 மய்யங்களில் 40 பேர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரச்சாரத்தின் ஊடே அதிமுக ஆட்சி மீது மக்களுக்குள்ள சீற்றம் வெளிப்பட்டது. ஜுலை 28 அன்று ஆர்ப்பாட்டங்களில் 4 மய்யங்களில் 800 பேர் கலந்துகொண்டனர். உள்ளூர் கமிட்டிகளின் சுதந்திரமான செயல்பாடு நம்பிக்கை தந்துள்ளது.
விழுப்புரம்: 17 கட்சிக் கிளைகள் கூட்டப்பட்டன. வீட்டுமனை, பொதுக் கழிப்பிடம், தானே புயல் நிவாரணம் ஆகிய பிரச்சனைகள் மீது பிரச்சாரம் நடத்தப்பட்டது. மேல்ஓலக்கூர் ஊராட்சியில் சத்துணவு அமைப்பாளர் நியமன முறைகேட்டுக்கு எதிராக தலையிட்டதால் ஜுலை 28 அன்று அனுமதி மறுக்கப்பட்டதை மீறி போராட்டம் நடந்தது. கோட்டக்குப்பத்தில் சுனாமி குடியிருப்பின் மோசமான நிலைகளுக்கு எதிராக மீனவர் மத்தியில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. பேரூராட்சி ஆணையரிடம் மனு கொடுத்ததும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.
திருநாவலூரில் இலவச எரிவாயு அடுப்பு தரப்படாததைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதன் விளைவாய் எரிவாயு அடுப்பு மக்களுக்கு தரப்பட்டது. சேந்தநாட்டில் வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
வானாம்பட்டு ஊராட்சியில் முறைகேடு ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடக்கும்போது. ஆளும் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் காவல் நிலையத்திற்கு 100 பேரை அழைத்து வந்து கையெழுத்து வாங்கக் கூடாது என தகராறு செய்தார். காவல்துறையினர் நிலைமையை புரிந்து கொண்டு சமாதான நடவடிக்கை மேற்கொண்டனர். திருநாவலூரில் தலித் அல்லாதவர்கள் கணிசமாக கலந்து கொண்டனர். ஜுலை 28 நிகழ்ச்சிகளில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1100 பேர் அணிதிரண்டனர்.
புதுக்கோட்டை: தேசிய ஊரக வேலையில் அட்டைக் குறைப்பு அளவீட்டு முறைக்கு எதிராகவும், சட்டக்கூலி ரூ.132 கோரியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 10 உள்ளூர் கமிட்டிகள் இயங்கின. கிளைகள் 2 முறை கூடின. ஊராட்சி மட்டத்தில் சொந்த போராட்டம், கையெழுத்து இயக்கம் உணர்வுபூர்வமாக நடந்தது. 2 ஊராட்சிகளில் ஊராட்சி மட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. புனல்குளத்தில் 150 பேர் பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர். வீரடிப்பட்டியிலும் பிரச்சாரம் நடந்தது. மட்டங்காலில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சாதி பிரித்து வேலை வழங்குவது கண்டித்து சுவரொட்டி வெளியிடப்பட்டது. பெரியகோட்டையில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சில விசயங்கள் முறைப்படுத்தப்பட் டுள்ளன. தண்ணீர் பந்தல், மருத்துவம், குழந்தை பராமரிப்பு போன்ற ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. கரம்பக்குடி புனல்குளம், நில ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் நிலம் அளந்து தருவதாக சொல்லப்பட்டுள்ளது. ஜுலை 28 அன்று 14 மய்யங்களில் அனைத்து சமூக மக்களும் கூடும் இடத்தில் கூட்டங்கள் போராட்டங்கள் நடந்தன. 1200க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டனர். பிரச்சாத்தின் ஊடே வேறு வேறு பிரச்சனைகளுடன் திரும்ப திரும்ப மக்கள் கட்சியை நாடி வருகிறார்கள். பிரச்சாரத்தில் 5000 குடும்பங்களை தோழர்கள் நெருக்கமாக சந்தித்துள்ளனர்.
குமரி: 23 கிளைகள் கூட்டப்பட்டன. 5 உள்ளூர் கமிட்டி கூடின. ஜீப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. வீட்டுமனை உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 7000 மனுக்கள் பெறப்பட்டன. 1 லட்சம் பேர் மத்தியில் செய்தி சென்றுள்ளது. செயல்படாத மாவட்ட கமிட்டி உறுப்பினர்களும் வேலைகளில் ஈடுபட்டனர். 60 ஊழியர்கள் செயல்பட்டனர். ஜுலை 31 அன்று முதலில் மனுக்கள் வாங்க மறுத்த அரசு நிர்வாகம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. ஜுலை 28 அன்று 7 மய்யங்களில் 1540 பேர் பங்கேற்றனர். இலக்குகளை எட்டாத உள்ளூர் கமிட்டிகள் ஆகஸ்ட் 31 போரட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாகை - தஞ்சை: மாநில கமிட்டி உறுப்பினர்கள் 6 ஊராட்சிகளில் கவனம் செலுத்தினர். உள்ளூர் கமிட்டி அடிப்படையில் தயாரிப்பு வேலைகள் நடந்துள்ளன. ஜ÷லை 28 அன்று 830பேர் அணிதிரண்டனர். தேசிய ஊரக வேலைத் திட்ட சட்டக் கூலி ரூ.132 கோரிக்கை மீது அழுத்தம் வைத்து இயக்கம் நடந்தது. வேப்பத்தூர் பேரூராட்சியில் 230 பேர் அணிதிரட்டலில் தலித் அல்லாதவர்கள் 100 பேர் பங்கேற்றனர். மணலூரில் கையெழுத்து இயக்கத்தில் 5 குடும்பம் தவிர வன்னியர்கள் கையெழுத்து போட்டனர். திருவலஞ்சுழியில் 100 பேர் பங்குபெற்றனர்.
கோவை: 5 உள்ளூர் கமிட்டிகள் பிரச்சார வேலைகளில் சுதந்திரமாக ஈடுபட்டன. குடிநீர், பிற அடிப்படை வசதிகள், பிளிச்சி (கிராமப்புற கமிட்டி)யில் தேசிய ஊரக வேலை திட்ட கூலி ரூ.132 கோரிக்கை மீது கையெழுத்து இயக்கம் என மக்கள் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. சில பகுதிகளில் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜுலை 28 அன்று பெரியநாயக்கன்பாளையத்தில் 200 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல்: 3 உள்ளூர் கமிட்டி இயங்கின. 23 கிளைகளில் 18 கிளைகள் கூட்டப்பட்டன. ஜுலை 28 அன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் 150 பேர் வரை கலந்துகொண்டனர்.
சென்னை: ஜுலை 28 அன்று 7 மய்யங்களில் 580 பேர் கலந்துகொண்டனர். சென்னை அயனாவரம், வில்லிவாக்கம் பகுதியில் கட்டுமானத் தொழிலாளர் மத்தியில் குடியிருப்புப் பிரச்சனை, அடிப்படை வசதிகள், மின்வெட்டு, கட்டுமான தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.1000 உடனடியாக வழங்கப்படுவது ஆகிய கோரிக்கைகள் மீது பிரச்சாரம் நடத்தப்பட்டது. ஜுலை 28 அன்று 75 பேர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருபெரும்புதூரில் பன்னாட்டு உள்நாட்டு நிறுவனங்கள் பயிற்சியாளர்களை, ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டுவதை கண்டித்தும், திருத்த மசோதா 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் விரைந்து பெற வேண்டும் என்ற கோரிக்கை மீதும், டிஅய்டிசி ஆலை கமிட்டி தோழர்கள் திருபெரும்புதூர் பகுதி ஏஅய்சிசிடியு தோழர்களுடன் இணைந்து பயிற்சியாளர் தங்கியுள்ள குடியிருப்புகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். ‘பயிற்சியாளர் முறைக்கு முடிவு கட்ட வேண்டும்’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியாக ஜுலை 28 28 அனுசரிக்கப்பட்டது. 100 பேர் வரை கலந்துகொண்டனர்.
திருமுல்லைவாயில் பகுதியில் சரஸ்வதி நகரில் அடிப்படை வசதிகள் கோரி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி பெறாமல் சிறுதொழிற் சாலைகள் பலவும் இயங்கி வருகின்றன. இவற்றால் தீ விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. நிலத்தடி நீர் கெடுகிறது. இந்தப் பிரச்சனை மீதும் பகுதியில் குடியிருக்கும் உழைக்கும் மக்களுக்கும், கட்டுமான தொழிலாளருக்கும் தேர்தல் வாக்குறுதிப்படி வீட்டுமனை வழங்க வேண்டும் என்றும் கோரி ஜ÷லை 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்தில் 86 வார்டில் பல வருடங்களாக குப்பை கொட்டி மலைபோல் குவிந்துள்ளது. இந்தப் பிரச்சனை மீது 15.07.2012 அன்று பிரச்சாரம் செய்த போது ரூ.2500 வரை சில நிமிடங்களில் நிதி வசூலானது. ஜுலை 28 அன்று ஏரியில் கழிவு நீரை கலப்பதை உடனே தடுப்பது, தேர்தல் வாக்குறுதிப்படி குப்பை மலையை அகற்றுவது, வீட்டு மனை, பாதாள சாக்கடை போன்ற கோரிக்கைகளுடன் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அம்பத்தூர் தொழிற் பேட்டையின் அருகிலுள்ள மங்களபுரம், மண்ணூர்பேட்டை பகுதிகளில் ஜுலை 28 அன்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் அணிதிரண்டனர்.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியுவிலும் மாலெ கட்சியிலும் இணைந்துள்ளனர். பீகாரில் இருந்து வந்த ஒரு குழாம் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளது. திட்டமிட்டு தினந்தோறும் இடம்பெயர்ந்த தொழிலாளர்ளை பணியிடங்களிலும் குடியிருப்புகளிலும் சந்தித்து பிரச்சாரம் செய்கிறது. இந்தியிலும் தமிழிலும் பிரசுரங்கள் வெளியிட்டது. அம்பத்தூரில் ஜுலை 28 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. இடம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம் 1979ம் அதன் விதிகளும் கறாராக அமல்படுத்தப்பட வேண்டும், தமிழக அரசு தங்களை கணக்கெடுப்பு நடத்தி தங்களுக்கு தனி தொழிலாளர் ஆணையர் மற்றும் அலுவலர்களை நியமிக்க வேண்டும், கவுரவம் மரியாதை வேண்டும் என்று கோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிற மாநில தொழிலாளர் மத்தியில் இந்தியிலேயே தோழர்கள் உரையாற்றினர்.
சென்னை அம்பத்தூர் மண்டலத்தில் மார்கெட் கடை வீதிகள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் இயங்கி வரும் மய்யமான மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள 81, 82வது வார்டுகளில் அடிப்படை வசதிகள், சாராயக் கடை ஒழிப்பு, ரேசன் கடை, விபத்துக்கள் குறைப்பு கோரி, தினமும் சில ஆயிரம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஜுலை 28 அன்று அம்பத்தூர் சந்தையில் பெரும்திரள் ஆர்ப்பாட் டம் நடத்தப்பட்டது. பிரதிநிதிகள் குழு மாநகராட்சி மண்டல அலுவலகம், மின் வாரிய அலுவலகம், ரேசன் மண்டல அலுவலகம் சென்று மனு கொடுத்தது
காஞ்சிபுரம்: வண்டலூரில் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள கிரசன்ட் கல்லூரி முன்பு நிலத்தை உரியவர்களுக்கு திருப்பித் தரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர்: காட்டுமன்னார்குடி, விருதாச்சலம் என 2 மய்யங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல்: குஜிலியம்பாறையில், பொதுக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்: பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.
மதுரை: வாடிப்பட்டியில் 3 இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
மாணவர் இளைஞர் நாடாளுமன்ற முற்றுகை
பெருநிறுவனக் கொள்ளைக்கு எதிராக அய்முகூ அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக பெருநிறுவனக் கொள்ளையர்களே நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 9 வெள்ளையனே தினத்தன்று அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக மாணவர்களும் இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். முற்றுகைக்கு முன்பு நடந்த பொதுக் கூட்டத்தில் அகில இந்திய மாணவர் கழக, புரட்சிகர இளைஞர் கழக தேசியத் தலைவர்கள் உரையாற்றினர். நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த மாணவர், இளைஞர் மத்தியில் உரையாற்றிய மாலெ கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா, மதவெறிக் கொலைகாரர்களுடன் கூடிக் குலாவுகிற, ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் உடன்பாடுகள் காண்கிற, காவல்துறை தாக்குதல் முன் பதுங்கி ஓடிய பாபா ராம்தேவ் போன்றவர்களால் ஊழலுக்கு எதிரானப் போராட்டம் நடத்த முடியாது என்றும் ஊழலின் வேரான பெருநிறுவனக் கொள்ளையை குறிவைக்கத் தவறிய அன்னா ஹசாரே ஊழலுக்கெதிரான இயக்கத்தை முடித்துக்கொண்டார் என்றும் மாணவர்களும் இளைஞர்களும்தான் சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் நாடாளுமன்ற வீதிகளில் தடைகளைத் தகர்த்து பெருநிறுவனக் கொள்ளையை நேருக்குநேர் எதிர்கொள்கின்றனர் என்றும் வலியுறுத்திச் சொன்னார்.
மாணவர் இளைஞர் சட்டமன்ற முற்றுகை
ஸ்ருதியின் மரணம் தமிழ்நாட்டு மனசாட்சிக்கு கேள்விகள் பல எழுப்பிக் கொண்டிருந்த பின்னணியில், கும்பகோணம் குழந்தைகள் மீண்டும் ஒரு முறை கண்முன் வந்து நியாயம் கேட்ட பின்னணியில், தமிழக மக்களின் சீற்றம் கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் திரும்பியிருந்த பின்னணியில், அகில இந்திய மாணவர் கழகமும் புரட்சிகர இளைஞர் கழகமும் இணைந்து ஸ்ருதியின் மரணத்துக்கு நீதி கேட்டு சட்டமன்றத்தை முற்றுகையிட்டனர். ஜுலை 30 அன்று திட்டமிடப்பட்டிருந்த முற்றுகை செய்தியை முன்னமே தெரிந்துகொண்டு போராட்டத்தை தடுத்து நிறுத்திவிட காவல்துறையினர் பெரிதும் முயற்சி செய்துப் பார்த்தனர். தோற்றுப் போயினர். சிவப்புச் சீருடையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்ட மாணவர்களும் இளைஞர்களும் கல்வி உரிமைச் சட்டத்தின் அமலாக்கம் கோரியும், தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். அரை மணி நேர முற்றுகைக்குப் பின் அனைவரும் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் மாணவர் கழக, இளைஞர் கழக மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஜேப்பியார் கல்லூரியிலும் மெட்ரோ ரயில் திட்டத்திலும் கட்டுமானப் பணிகளில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பிற மாநிலத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நட்ட ஈடு வழங்கக் கோரியும் பிற மாநில தொழிலாளர் நலன் காக்க அவர்களுக்கான சட்டங்களை கறாராக அமல்படுத்தக் கோரியும் விபத்துக்குக் காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆகஸ்ட் 10 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஅய்சிசிடியு மாநிலம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் நடத்தியது.
களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்