களம்
அப்பாவி இளைஞரை சுட்டுக் கொன்ற காவல் ஆய்வாளரை
கொலை வழக்கில் கைது செய்: இகக(மாலெ) கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள கிராமம் மறுகால்குறிச்சி. நாங்குநேரி குளம் 1500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த குளத்தை நம்பி இருக்கின்றன. இந்தக் குளத்தில் களி மண் வண்டல் மண் மற்றும் மணல் பெருளவில் உள்ளது. கடந்த காலங்களில் வீடுகளுக்கும் வயல்களுக்கும் களிமண் தேவைப்படுவர்கள் எடுத்துச் செல்வார்கள். அதேபோல், வண்டல் மண் (செம்மண்) செங்கல் சூளை நடத்துபவர்கள் எடுத்துச் செல்வார்கள். கடந்த திமுக ஆட்சியில் செங்கல் சூளை நடத்துபவர்களுக்கு மண் குளத்தில் மண் எடுக்க கடவுச்சீட்டு (பாஸ்) வழங்கப்பட்டு மண் எடுத்து வந்துள்ளார்கள். ஒரு யூனிட் மண் எடுக்க ரூ.65 செலுத்த வேண்டும். திமுக ஆட்சியில் ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருந்த தால் மணல் கொள்ளையர்களும் ஆட்சியாளர்களும் குளத்து மண் மீது அதிக அக்கறை காட்டவில்லை. இப்போது ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. (தடையை மீறி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது என்பது வேறு விசயம்). அ(ம்மா)திமுக ஆட்சியில் அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மாணிக்க ராஜா, ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், காங்கிரûஸச் சேர்ந்த களக்காடு ரமேஷ் போன்றவர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு குளத்தில் மண் எடுக்க தாங்கள் கையைக் காட்டும் நபருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்று கூறி அவர்களின் ஆட்கள் பெயரில் மண் எடுக்க பாஸ் வைத்துள்ளார்கள் என்றும் யார் வேண்டுமானாலும் மண் எடுக்கலாம். அவர்களுக்கு ரூ.300 ஒரு யூனிட்டுக்கு கொடுத்துவிட வேண்டும் என்றும் நாங்குநேரி காவல்துறை துணைக் கண்காணிப் பாளருக்கு மாதம் ரூ.35,000 மாமூல், நாங்குநேரி ஆய்வாளருக்கு மாதம் ரூ.15,000, வண்டி வாடகைக்கு அடிப்பவர்கள் காவல்துறைக்கு ரூ.100 கொடுக்க வேண்டும் என்றும் தராதவர்கள் வண்டியை காவல்துறை பறித்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன் காவல் துறைக்கு மாமூல் கொடுக்க மறுத்ததால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வைத்துக் கொண்டு அவரிடம் இருந்த 7,000 ரூபாயையும் செல்போனையும் வண்டியை பிடுங்கி வைத்துக் கொண்டதாகவும் இது தொடர்பாக விசாரிக்க 24.07.2012 அன்று காவல்நிலையம் சென்ற முருகனின் அண்ணன் வானமாமலையை ஆய்வாளர் விஜயகுமார் சுட்டு விடுவேன் என்று மிரட்டிய தாகவும் அதன்பின் வானமாமலை மாலை 3 மணியவில் அய்யனார்கோவில் பக்கம் நண்பர்களுடன் நிற்கும் போது ஆய்வாளர் தன் காரில் வந்து வானமாமலையைப் பார்த்ததும் ஓடிவிடு இல்லை என்றால் சுட்டுவிடுவேன் என்றபோது, வானமாமலை சுடுங்கள் என்று சொன்னதும் ஆய்வாளர் வானமாமலையின் நெஞ்சில் சுட்டு அவரைக் கொன்றதாகவும் அப்போது ஆய்வாளர் சீருடை இல்லாமலும் முழுபோதையிலும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில்தான் வைத்துள்ளனர்.. இதுவரை அரசு வேறு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளும் கட்சியின் மணல் மாஃபியாக்களுக்காக முதல்வரும் வாய் திறக்கவில்லை.
இச்சம்பவம் பற்றி விசாரிக்க இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் டி.சங்கரபாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, சிவராமன் நேரில் சென்றனர். நாங்குநேரி காவல் ஆய்வாளர் விஜயகுமார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். நாங்குநேரி காவல்துறைக் கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மண் மாஃபியாக்கள் மாணிக்கராஜ், ஜெயராமன், ரமேஷ் கும்பல்களை கைது செய்ய வேண்டும். கனிம வளங்கள், நீர் ஆதாரங்கள் மணல் போன்றவை மாஃபியாக்கள், ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கத்தின் பிடியிலிருந்து காப்பதற்கும் அவை ஏழை விவசாய மக்களின் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இகக(மாலெ) கோருகிறது.
கிருஷ்ணகிரியில் பெரியார் திராவிடக் கழக மாவட்டப் பொறுப்பாளர் பழனிச்சாமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.கோவிந்தராஜ், தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கே.கோவிந்தராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் சின்னசாமி ஆகியோர் கொண்ட மாலெ கட்சியின் உண்மையறியும் குழு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றது. கொலை செய்யப்பட்ட பழனிச்சாமியின் குடும்பம் இன்னும் ஊர் திரும்பவில்லை. சம்பவம் தொடர்பாக தளி இகக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும் என்றும், பழனிச்சாமியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தளி இகக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் குடும்பத்தினர் ஏழை விவசாயிகளை மிரட்டி வாங்கி பினாமிகள் பெயரில் உள்ளதாக சொல்லப்படும் 2000 ஏக்கர் நிலம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாலெ கட்சி கோருகிறது.
தலையங்கம்
ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம்!
எதுவுமே செய்யாத ஜனாதிபதி மாளிகை குதிரைகளைப் பார்த்து ஏக்கமடைந்த ஒருவர், அடுத்த பிறவியில் அந்தக் குதிரைகளுள் ஒன்றாகப் பிறக்க வேண்டும் என்று விரும்பினார். அவர் இந்தப் பிறவியிலேயே ஜனாதிபதியாகிவிட்டார்! அவர் தான் பிரணாப் முகர்ஜி! அமெரிக்காவின் வலுவான கூட்டாளி என்றே ஹிலாரி கிளின்டனால் பாராட்டப்படும் இவரை எதுவுமே செய்ய முடியாதவர் என்று கூற முடியாது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பேரழிவுமிக்க அமெரிக்க சார்பு நவதாராளவாதக் கொள்கைகளை உருவாக்குவதில் உரமாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். எனவே ஆளும் கூட்டணிக்கும் பெரு முதலாளிகளுக்கும் பிரணாப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். தேசத்தையே அதிர்ச்சியடையச் செய்யும் அசாம் சோக நிகழ்ச்சிக்கு மத்தியில் - 1,70,000 பேர் அகதிகள் முகாமில், 40க்கு மேற்பட்ட உயிர்ப் பலி, பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவிப்பு, 4 மாவட்டங்கள் தீப்பற்றி எரியும் அவலம்-ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட பிரணாப், அரசியல் சட்டத்தின் காவலனாக இருப்பேன் என்று உறுதியளித்துள்ளார். ஆனால் அரசியல் சட்டம் மக்களுக்கு பாதுகாவலாக இல்லை என்பதை அசாம் காங்கிரஸ் அரசாங்கம் நிரூபித்து விட்டது. லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளையும் உயிர்களையும் உடமைகளையும் கோகோய் அரசாங்கம் காக்கத் தவறி விட்டது.
திமுகவின் வெற்றிபோல் வெடி வெடித்துக் கொண்டாடுகிறார்கள்! தமிழ்நாட்டிலிருந்து பிரணாப் முகர்ஜிக்கு கிடைத்த வாக்குகள் மிகவும் குறைவு. சங்மா பெற்றுள்ள வாக்குகளே அதிகம். ஜெயலலிதா ஆட்சியில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள திமுக தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொள்வதற்கான கொண்டாட்டமாகும். சிறை நிரப்பும் போராட்டத்தில் கிடைக்காத வெற்றி, ஜனாதிபதி தேர்தலில் கிடைத்துவிட்டதாக எண்ணி கொண்டாடுகிறார்கள் போலும்! தேசிய அரசியல் செல்வாக்கு பெற பல வகையிலும் முயற்சித்து வரும் ஜெயலலிதாவுக்கு தேசிய அரசியலில் நாங்கள்தான் என்று காட்ட ஒரு வாய்ப்பாக, திமுக, ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டது.
ஜெயலலிதா-நவீன்பட்நாயக் அறிவித்த வேட்பாளர் சங்மாவை வேறு வழியின்றி பாஜக ஆதரித்தது, ஜெயலலிதா வுக்கு – வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் – உள்ளூர மகிழ்ச்சிதான். சங்மா தோல்வி அடைந்ததைப் பற்றி ஜெயலலிதாவுக்கு பெரிதாக கவலை ஒன்றும் இல்லை. அவரை முன்னிறுத்தி தேசிய அரசியலில் கவனிக்கப்படத்தக்க சக்தியாக உருவெடுத்துவிட்டதாக ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவார். 2014 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவை விட அதிமுகவும் தானுமே பெரிய சக்தி என்று காட்டும் முயற்சியாகவே ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா தீவிர அக்கறை காட்டியிருக்கிறார். மிகுந்த சிரமப்பட்டு கொடநாட்டிலிருந்து சென்னைக்கு பயணம் செய்து தனது கட்சிக்காரர்கள் வாக்களிப்பதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறார். திமுகவை மத்திய அரசிலிருந்து ஓரங்கட்டி, தான் அந்த இடத்தைப் பிடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற எதையும் செய்வார் ஜெயலலிதா. இந்த அச்சமும் திமுகவின் அறிவாலய கொண்டாட்டத்துக்கு ஒரு காரணம். சரத்பவாருடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவசர அவசரமாக கருணாநிதி சொல்லியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள இரண்டு கட்சிகளுக்கும் மத்திய அதிகாரத்தில் இருப்பது மிகவும் அவசியப்படுகிறது.
நிதி அமைச்சராக இருந்தபோது, ‘ஏழைகளுக்கான மானியத்தை நினைத்தால் எனக்கு தூக்கமே வரவில்லை’ என்று கூறிய பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியானதும் ‘ஏழ்மை என்பது இழிவானது’, ‘வறுமையை அகராதியிலிருந்தே அகற்ற வேண்டும்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்! ‘மேல் மட்டத்தில் ஏற்படும் வளர்ச்சி கசிந்து கீழே உள்ளவர்களுக்கு பலனளிக்கும் என்று கூறுவதெல்லாம் பொய்’ என்று கூட பேசியிருக்கிறார். வெகு சில பெருமுதலாளிளுக்கு ரூ.25 லட்சம் கோடி வரை மானியம் அளிக்கப்பட்டது பற்றி வாய் திறக்காதவர்தான் இந்த பிரணாப் முகர்ஜி! வறுமைக் கோட்டை உயர்த்தி வறியவர்களைக் குறைத்த மன்மோகன்சிங்-மான்டேக் கூட்டணி, பிரணாப் அறிவுரையை ஏற்று அகராதிகளிலிருந்து வறுமை என்ற வார்த்தையை நீக்கிவிடுமாறு உத்தரவிடலாம். வறுமையே இல்லை என்று கூத்தாடலாம்! ஊழல் மண்டை ஓடுகள் வரிசையாக வந்து விழுந்த காலத்தில் அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ‘நாட்டின் மனோநிலையையும் வளர்ச்சியையும் வீழ்த்திவிடும் கேடு ஊழல்’ என்று சாடியிருக்கிறார்! வேடிக்கை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி ஊழல் செய்துள்ளதற்கு ஆதாரம் இருப்பதாக அன்னா அசாரே குழு கூறி வருகிறது!
மக்கள் வாக்களிக்கும் தேர்தல்களில் தொடர்ந்து தோற்று வரும் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் முற்றுகைக்கு ஆளாகிவரும் காங்கிரஸ், நாட்டை நெருக்கடியில் தள்ளி விட்டுவிட்ட காங்கிரஸ், ஜனாதிபதி தேர்தல் வெற்றியை ஆதாயமாக்கிக் கொள்ள முற்படும். சரிந்து வரும் தோற்றத்தை மீட்டுக் கொள்ளவும் 2014 தேர்தலை எதிர்கொள்ளவும் அதே சமயம் நாட்டு மக்கள் மீது மேலும் தாக்குதல் தொடுக்கவும் முற்படும். ஏற்கனவே கட்சியிலும், ஆட்சியிலும் செயலூக்கமாக செயல்படப் போவதாக ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். காங்கிரசின் இந்த முயற்சிகளை முறியடிக்கும் வேலைகளை புரட்சிகர இடதுகள் பல மடங்கு தீவிரப்படுத்தியாக வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்தியதன் மூலம் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் நவதா ராளவாத கொள்கைகளுக்கு எந்த எதிர்ப்பையும் ஜெயலலிதா காட்டவில்லை. அவர் அறிவித் திருக்கும் தொலைநோக்கு திட்டம் 2023, நவதாராளவாத பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கான திட்டம். விவசாயத் தொழிலாளர் களை ஏழை விவசாயிகளை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தும் அவரது ‘இரண்டாம் பசுமைப் புரட்சி’, 60 லட்சம் நகர்ப்புறக் குடும்பங்களை வெளியேற்றும் திட்டத்தையும் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி நெல்லை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இந்தப் பருவ விவசாயம் பொய்த்து விட்டது. மாப்படுகை(மயிலாடுதுறை அருகில்) விவசாயி முருகேசன் கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை எவ்வித பதிலுமில்லை. ஜெயலலிதாவின் கடிதங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாதது போல இவரும் விவசாயி முருகேசனது கடிதத்தைக் கண்டுகொள்ளவில்லை. பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயிகள் மூன்று மடங்கு வருமானத்தைப் பெறுவார்கள் என்று ஜெயலலிதா கூறுகிறார். பல மடங்கு வருமானம் சரிந்துள்ள விவசாயிகள் அதுவரை உயிர் வாழ்வது எப்படி என்று தவிக்கிறார்கள்.
முதல்வரின் கனவுத் திட்டம், 2000 கி.மீ. 8 வழிச் சாலை, துறைமுகம், விமான நிலையம், உலகத் தரம் வாய்ந்த 10 நகரங்கள் எனப் பேசுகிறது. இத் திட்டங்கள் நிலங்களைப் பறிக்கும் சாகுபடிப் பரப்பைக் குறைக்கும். விவசாய நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும். 93.5% நிதி உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் என்று கூறும் கனவுத்திட்டம், விவசாயத்துக்கு 2.6% முதலீடு செய்வதன் மூலம் எப்படி இரண்டாம் பசுமைப் புரட்சியைக் கொண்டுவர முடியும்? விவசாயத்தை தொலைத்துக் கட்டுவதுதான் முதலமைச்சரின் கனவுத் திட்டம் போலும்!
உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகம் அழகிரியிடம் சிக்கிக் கொண்டதால் தான் உர விலை உயர்ந்து, விவசாயிகள் நிலைமை சீரழிய காரணம் என்று கூறுகிறது நமது எம்ஜிஆர் ஏடு. உண்மைதான். மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சகம், கடலூர், நாகை மாவட்ட கடலோரப் பகுதிகளில் ரூ.92000 கோடியில் 257 சதுர கி.மீ. (ஏறத்தாழ 64000 ஏக்கர்) சுற்றளவில் பெட்ரோலிய, ரசாயன உரத் தொழிற்சாலை கொண்டு வரவிருக்கிறது. அக்டோபரில் வேலை தொடங்கும் என்று அழகிரி கூறுகிறார். இந்த திட்டத்துக்கு முதலமைச்சரின் கனவுத் திட்டம் (தொலை நோக்கு 2023) ரூ.8000 கோடி ஒதுக்கியிருக்கிறது. இதுதான் இவரது மத்திய அரசு எதிர்ப்பு!
எல்லாரும் எல்லாமும் பெறும் கனவுத் திட்டத்தைக் கொண்டிருக்கும் முதல்வர், ஓராண்டில் நூறாண்டு பேசும் சாதனை செய்து விட்டதாகக் கூறுகிறார். பின் ஏன் 11 ஆண்டுகால கனவுத் திட்டம்? குடிசை இல்லா கிராமங்கள், சேரிகள் இல்லாத நகரங்கள், திறந்த வெளியை கழிப்பிடமாக கொள்ளாத, வறுமை இல்லாத தமிழகம் 11 ஆண்டுகளில் வரும் என்றும் கூறுகி றார். இதற்கு பெருமுதலாளித்துவ வளர்ச்சிதான் ஒரே தீர்வு என்றும் கூறுகிறார். பெரும் ஊழல் செய்து வழக்கையே வாழ்க்கையாகக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, சுரண்டலே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெருமுதலாளிகள் வளர்ச்சிப் பாதையை கனவுத் திட்டமாக அறிவித்துள்ள ஜெயலலிதா, ‘பணமே வாழ்க்கையாகிவிடக் கூடாது’ என்று மக்களிடம் குட்டிக் கதை சொல்கிறார்!
2023ல் வறுமை இல்லாத தமிழகத்தை, தமிழ்நாட்டில் யாரும் விடுபட்டுப் போகாத பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரப் போவதாக கூறும் ஜெயலலிதா, ஏன் பல எளிய விசயங்களை செய்யக் கூடாது? நிலமற்றவர்க ளுக்கு 2 ஏக்கர் நிலத்தை, வீட்டு மனை இல்லாதவர்களுக்கு 5 சென்ட் வீட்டுமனையை, 300 நாட்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300 சம்பளத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தை, தொழிற்சங்க அங்கீகார சட்டத்தை ஏன் தரக் கூடாது? பயிற்சியாளர் சட்டத் திருத்தம் எல்ஏ பில் 2008க்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏன் பெற்றுத் தரக் கூடாது? தலித்துகளையும் பெண்களையும் ஒடுக்கும் ஆதிக்க சக்திகளையும் போலீஸ்காரர்களையும் சிறைக்குள் தள்ளி, தலித்துகள் பெண்களின் கவுரவத்தையும், பாதுகாப்பபையும் ஏன் உறுதி செய்யக் கூடாது? பட்டப்பகலில் சுட்டுத் தள்ளும் போலீஸ்காரர்களின் கைகளை ஏன் கட்டிப் போடக் கூடாது? மின்வாரியம் உள்ளிட்ட அரசு மற்றும் கூட்டுறவுத் துறையிலுள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏன் வழங்கக் கூடாது? வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கு தடையில்லா விலையில்லா மின்சாரத்தை ரத்து செய்து, மக்களின் மின்கட்டண சுமையை ஏன் குறைக்கக் கூடாது? பால் கட்டண, பஸ் கட்டண உயர்வை ரத்து செய்து விலைவாசி உயர்வால் துயரப்படும் சாமான்யர்களின் சுமையை ஏன் குறைக்கக் கூடாது? அணுசக்தி ஆபத்தில்லாத தமிழகம் என்ற நம்பிக்கையை உருவாக்க கூடங்குளம் அணு உலைகளை வேண்டாமென ஏன் முடிவெடுக்கக் கூடாது? கோட்டை தொடங்கி குக்கிராமம் வரை ஊழலை ஒழித்து கட்டும் சட்டத்தை ஏன் கொண்டு வரக் கூடாது? பீடி, கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களின் வேலை, கூலி பாதுகாப்பை ஏன் உறுதி செய்யக் கூடாது? விசைத்தறி தொழிலை தொழிற்சாலை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக் கூடாது? ஏழை எளிய சாமான்ய மக்களுக்கு கல்வி, மருத்துவம் ஏன் இலவசமாக தரக் கூடாது?
ஜூலை 28 தோழர் சாருமஜூம்தார் நினைவு நாளில் மக்களை திரட்டும் பிரச்சார நிகழ்ச்சிகளில் இந்தக் கேள்விகளைத்தான் எழுப்புகிறோம். இவற்றைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அணி திரள்கிறார்கள்.
மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் உள்ள (காங்கிரஸ்-திமுக, அதிமுக) ஆட்சியாளர்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தயாராகிறார்கள். இவர்களின் மக்கள் விரோத கொள்கைகளை, அரசியலை முறியடிக்க மக்கள் அமைப்புகள் முழுமூச்சுடன் களத்தில் இறங்க வேண்டும். ஜூலை 28ன் தொடர்ச்சியாக, மாலெ கட்சி அழைப்பு விடுத்துள்ள ஆகஸ்ட் 31 அகில இந்திய சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயாராக வேண்டும். ஏஅய்சிசிடியு, அவிதொச, பெண்கள், மாணவர் இளைஞர் கழகங்கள் தயாராக வேண்டும். ஆட்சியாளர்கள் பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை மக்கள் முதுகில் சுமத்தும் முயற்சிகளை உழைக்கும் மக்கள் நிமிர்ந்து நின்று முறியடித்தாக வேண்டும். உழைக்கும் மக்களின் அணிதிரட்டலை, அரசியலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் மக்கள் அமைப்புகளும் களத்தில் இறங்க வேண்டும். பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை (ஊழல், கார்ப்பரேட் கொள்ளை, ஜனநாயக உரிமைகள் பறிப்பு) முறியடிக்க மக்கள் சார்பு வளர்ச்சிக்கான போராட்டத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
கட்டுரை
மாருதி வெடிப்பு சொல்லும் செய்தி என்ன?
“ஆயிரம் தொழிலாளர்கள் தலைமறைவு, “3000 பேர் மேல் கொலை முயற்சி வழக்கு” “1000 பேருக்கு மேல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்”, “ஒரு வருடத்திற்கு மேல் (பெயில்) பிணை கிடைக்காது” “தீவிரவாத ஊடுருவலால் கட்டுக்கடங்காத வன்முறை வெறியாட்டம்” “முதலீட்டாளர்கள் கவலையால் நாட்டிற்குப் பெரும் பாதிப்பு” “கொலையல்ல விலை”, இப்படியாக, 18.07.2012 அன்று மாருதியில் நடந்த வெடிப்பு பற்றி, பல செய்திகள் தலையங்கங்கள் ஏதேதோ சொல்கின்றன.
மாருதி வெடிப்பு பற்றி யாராவது ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமென்றால், அவர் முதலில், நடந்த கொலையை, நிகழ்ந்த வன்முறையைத் திட்டவட்டமாக நிபந்தனை இன்றிக் கண்டனம் செய்துவிட்டுத்தான், அடுத்து ஏதும் பேசலாம் என நினைக்க வைக்கிறார்கள்.
நாம் தி இந்து மற்றும் தினமணி நாளேடுகளின் தலையங்கங்களில் இருந்து சில பகுதிகளைக் காண்போம்.
“குர்கான் மனேசர் போக திருப்பெரும்புதூர் தொழில் தாழ்வாரம், பெங்களூரு, புனே போன்ற இடங்களிலும் சங்கம் அமைப்பதை நிர்வாகங்கள் விரும்புவது இல்லை. அது போக, தொழிலாளர்கள் மீது தமது பிடியை வலுப்படுத்திக் கொள்ள ஒப்பந்தத் தொழிலாளர் களையே பணிக்கு அமர்த்துகிறார்கள். இந்தப் பகுதி முழுவதும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அரியானா அரசாங்கம் அக்கறையுடன் நடந்து கொண்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது”. - தி இந்து.
“உலகச் சந்தையில் நிலவும் தொழில் போட்டிகள் காரணமாகவும், அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து விடுவதாலும், இன்றைய இந்தியத் தொழில் சூழல், முதலீட்டாளர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது என்பதும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இல்லை என்பதும் வெளிப்படை. இந்தச் சூழலை எதிர்கொள்ள, அகிம்சை வழிப் போராட்டங்கள் மட்டுமே பலன் தரும். வன்முறை, தொழிலாளர் குடும்பங்களைத்தான் பாதிக்கும்”. - தினமணி.
தமிழகத்தில் இருந்து வரும் இந்த இருபெரும் பத்திரிகைகளும், தாங்கள் ஏதோ ஒருபக்கச் சாய்வு இல்லாமல், பாரபட்சமின்றி எழுதுவதாக ஒரு தோற்றம் தரப் பார்க்கிறார்கள். தி இந்து நாளிதழ் அரியானா அரசாங்கம் அக்கறையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அப்படி நடந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்றும் சொல்கிறது. அக்கறையுடன் என்ன செய்திருக்க வேண்டும் என இந்து நாளேடு எதுவும் சொல்லவில்லை.
தினமணி, இந்தியத் தொழில் சூழல், முதலீட்டாளர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது, தொழிலாளர்களுக்குச் சாதகமாக இல்லை என்ற, அனைவர்க்கும் தெரிந்த உண்மையைச் சொல்லி, பேச்சுவார்த்தைகளை, அகிம்சை வழியில் நடத்திக் கொண்டே இருங்கள் எனத் தொழிலாளர்களுக்குப் போதனை சொல்கிறது.
ஜூலை 18 அன்று மனேசர் மாருதி வெடித்தது. ஓர் உயர் அதிகாரி மரணம் அடைந்தார். பல அதிகாரிகள் காயம் அடைந்தனர். தொழிற் சாலையின் ஒரு பகுதி தீயில் எரிந்தது. தொழிலாளர் தரப்பில், குண்டர்கள் காவல் படை தாக்குதல் நடந்ததாகவும், தாங்கள் வேட்டையாடப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
காவல்துறை, மூவாயிரம் பேரைத் தேடுவதாகவும், பெயர் தெரியாத பலர் என்ற முதல் தகவல் அறிக்கைப்படி மூவாயிரம் தொழிலாளர்களுக்கு மேல் வருவார்கள் என்றும், ஒரு வருடத்திற்கு எவருக்கும் பிணை கிடைக்காது என்றும், முதலாளிகளின் தனியார் படை போல் உருமுகிறது. நீதிபதிகள் பிணை மனுக்களை ஒரு வருடம் வரை அனுமதிக்கக் கூடாது என சமிக்ஞை செய்கிறது.
மாருதி நிர்வாக இயக்குநர், பார்கவா எங்கள் ஊழியர்களுக்கு (எம்ப்ளாயீஸ்) பாதுகாப்பு வேண்டும் என்பதால், 1000 பேருக்கு மேல் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என முழங்குகிறார். உள்ளூர் நில உடைமையாளர்களை குலாக்குகளை மேல்நிலைப் பிரிவினரை, மாருதியின் பக்கம் திரட்டிக் கொள்ள, அரியானாவில் இருந்து வெளியேறி குஜராத் போவோம் எனப் பயம் காட்டுகிறார். பார்கவா தமது ஊழியர்களைப் பாதுகாப்பது பற்றிப் பேசும்போது, மாருதி தொழிலாளர்களைப் பற்றிப் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அரியானா முதல்வர் ஹ÷டாவும் அரசாங்கமும் மாருதி நிர்வாகம் கேட்டதை எல்லாம், கேட்காதவற்றையும் தரும்போது, அப்பட்டமாக மாருதி நிர்வாகம் சொல்வதை எல்லாம் செய்யும் போது, குர்கானில் தாய் பிளாண்ட் இருக்கும்போது, மனேசரிலிருந்து மாருதி, குஜராத் செல்ல, வாய்ப்புக்கள் குறைவே. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது, தலைநகர் தொழில் மண்டலத்தில் இருக்கும் பெருமைக்குரிய ஆபரணமான மாருதியை, அவ்வளவு சுலபத்தில், மனேசரில் இருந்து இடம் பெயர விட்டுவிட மாட்டார்கள்.
மனேசர் மாருதி ஜூலை வெடிப்பு துவக்கமும் அல்ல, முடிவும் அல்ல
தலைநகர் மூலதன மண்டலத்திலும், குர்கான் மனேசர் பகுதிகள் வருகின்றன. 2005ல் ஹோண்டா மோட்டார்ஸ் அண்ட் ஸ்கூட்டர்ஸ் தொழிலாளர் போராட்டம், குரூரமான காவல்துறை ஒடுக்குமுறையைச் சந்தித்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மண்டியிட வைத்து அடித்துத் துவைத்த காட்சியைத் தேசிய ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. அரசுகளின் முதலாளித்துவ விசுவாசத்தை நாடே கண்டு கொதித்தது. மக்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேச வக்கற்ற நாடாளுமன்றமும் கூட, சில நாட்கள் சம்பவம் பற்றிப் பேசும் கட்டாயம் ஏற்பட்டது. நாடெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஒருமைப்பாட்டுக் கரங்கள் திருவொற்றியூர் வரை நீண்டன.
2008ல் கிரேட்டர் நோய்டாவின் கிராசியானோ டிரான்ஸ்மிஷன்ஸ் சம்பவத்தில் நிர்வாக இயக்குநர் உயிரிழந்தார். வழக்கம் போல், வன்முறை, வன்முறை என ஊளையிட்டனர். பைக்குள்ளிருந்து பூனையை மத்தியத் தொழிலாளர் அமைச்சரான ஆஸ்கர் ஃபெர்னான்டஸ் திறந்து விட்டார். கிராசியானோ டிரான்ஸ்மிஷன்சின் 136 தொழிலாளர்கள் வேலை நீக்கத்தையொட்டியே கிளர்ச்சி வெடித்தது. ஆஸ்கர் பெர்னான்டஸ், ஆச்சரியப்படத்தக்க வகையில், பேசாப் பொருளைப் பேசத் துணிந்தார். கிராசியானோ போன்ற நிறுவனங்கள், வழமையாகத் தொழிலாளர் சட்டங்களை மீறுபவர்கள், குறைந்தபட்ச சம்பளம், வேலை நேரம், சங்க உரிமை, ஒப்பந்தத் தொழிலாளர் குறித்த சட்ட வரையறைகள், பணியிடங்களில் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரங்கள் போன்ற அனைத்தையும் மீறுபவர்கள் என்று சொல்லி, தலைமை நிர்வாக அலுவலர் அடித்துக் கொல்லப்பட்டது, தொழிலதிபர்கள் திருந்துவதற்கான ஓர் எச்சரிக்கை எனத் தெரிவித்தார். உண்மையை ஜீரணிக்க முடியாத அரசாங்கமும், பெருமுதலாளித்துவக் கூட்டமும் தந்த நிர்பந்தத்தால், பின்னர், ஆஸ்கர் மன்னிப்பு கேட்க நேர்ந்தது.
செப்டம்பர் - அக்டோபர் 2009. ரிக்கோ ஆட்டோ இண்டஸ்ட்ரீசில் 17 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால், வேலை நிறுத்தம் வெடித்தது. ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். நேஷனல் கேப்பிட்டல் ஜோன் நெடுக வேலை நிறுத்தங்கள் வெடித்தன. ஒரு லட்சம் பேர் வேலை நிறுத்தம் செய்தனர்.
2011 - 2012. மனேசர் மாருதியில் திரும்பத் திரும்ப போராட்டங்கள் வெடித்தன. ஒப்பந்தத் தொழிலாளர் நிரந்தரத் தொழிலாளர் ஒற்றுமை, போராட்டத் தீயில் வலுப்பட்டது. மூலதனம் மருண்டது. பல வித முயற்சிகளில் ஒரு முயற்சியாக, முன்னணிகளுக்குக் கணிசமான தொகை கொடுத்து கணக்கு முடித்தார்கள். சிலர் பிரச்சனை தீர்ந்தது. பல ஆயிரம் பேர் பிரச்சனை தொடர்ந்தது.
இந்தப் பகுதியில் சங்கம் சேர முயற்சிக்கிறார்கள் எனத் தெரிந்த உடனேயே முன்னணிகள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். முதலாளிகளுக்கு விசுவாசமான தொழிலாளர் துறை ஏதேதோ காரணம் சொல்லி சங்கப் பதிவு கூட செய்யாமல் இழுத்தடிப்பார்கள். முதலாளிகளுக்குத் துப்பு கொடுப்பார்கள். ஒரு வேளை தப்பித்தவறி சங்கம் பதிவானால், முன்னணிகள் வேலை நீக்கம் என்ற கதை திரும்பவும் நடக்கும். ஆனால் ஒழுங்கீனங்கள் எனப் பட்டியல் போட்டு நியாயம் சொல்வார்கள்.
மாருதியில் இம்முறை சங்கம்பதிவு செய்யப்பட்டது. பேச்சு வார்த்தைகளும் நடந்தன. ஆனால் 25 முறை திரும்பத் திரும்ப பேசியும் எந்த முன்னேற்றமுமில்லை. இந்தப் பின்னணியில்தான் ஜூலை 18 நடைபெற்றது. ஜூலை 18 விரியும் நீளும் திரைப்படத்தில், ஓர் உறைய வைக்கப்பட்ட (Fr eeze Shot ) காட்சியே ஆகும்.
திரும்பவும் கைதுகள், வேட்டையாடல், வேலை நீக்கங்கள், பிணை மறுப்பு, ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொண்டு உற்பத்தி, காவல்துறை மற்றும் குண்டர்கள் துணை கொண்டு நிறுவனம் இயக்குதல் என்பதுதான் தொடரும் என்றால், மயான அமைதி உருவாகலாம். ஆனால் எப்போது வேண்டுமானாலும் போராட்ட ஆவிகள் திரும்பவும் வேறு வேறு வடிவங்களில் மூலதனத்தைத் விரட்டவே செய்யும்.
ஓடப்பர் உதையப்பராவது எப்போது?
பாரதிதாசன்,
“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டால், ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ “ எனப் பாடினார்.
1847ல் மார்க்ஸ் தன் உரையில் குறிப்பிட்டார்:
“உற்பத்தித் திறனுள்ள மூலதனத்தின் துரித வளர்ச்சி, அதே அளவுக்குத் துரிதமாகச் செல்வத்தையும் ஆடம்பரத்தையும் சமூகத் தேவைகளையும் சமூக நுகர்வின்பத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. இவ்விதம் தொழிலாளியின் நுகர்வின்பம் அதிகரித்திருக்கிறது என்றாலும் கூட, அதனால் உண்டாகும் சமூக மன நிறைவு, தொழிலாளிக்கு எட்டாதபடி மிகமிகச் கூடுதலாகிவிட்ட முதலாளியின் நுகர்வின்பத்துடன் ஒப்பிடுகையிலும், பொதுவில் சமுதாயத்தின் வளர்ச்சி நிலையுடன் ஒப்பிடுகையிலும் குறைந்துவிடுகிறது.
நமது விருப்பங்களும் இன்பங்களும் சமுதாயத்திலிருந்தே எழுகின்றன. ஆகவே சமுதாயத்தைக் கொண்டே நாம் அவற்றை அளவிடுகிறோமே அல்லாது, அவற்றைப் பூர்த்தி செய்ய உதவும் பொருட்களைக் கொண்டு அல்ல. இவை யாவும் சமூகத் தன்மை வாய்ந்தவையாய் இருப்பதால், இவை ஒப்பு இயல்பு உடையவையாகும்.
மார்க்ஸ் இதை ஒட்டியே ஓர் உவமை சொல்கிறார்:
“ஒரு வீடு பெரியதாகவோ சிறிதாகவோ இருக்கலாம். சுற்றிலுமுள்ள வீடுகளும் அதே போல் சிறிதாய் இருக்கும் வரை, குடியிருப்புக்குரிய சமூகக் கோரிக்கைகள் யாவையும் அந்த வீடு நிறைவு செய்கிறது. ஆனால் அந்தச் சிறிய வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மாளிகை எழுந்தால், உடனே அந்த சிறிய வீடு, ஒரு குடிசையாய்ச் குறுகிப் போய்விடுகிறது. அதன் சொந்தக்காரர் உரிமை கொண்டாடக் கூடியது சொற்பம்தான் அல்லது எதுவும் இல்லை என்பதை, இப்பொழுது, அந்தச் சிறிய வீடு புலப்படுத்தும். நாகரீக முன்னேற்றத்தைத் தொடர்ந்து, அது எவ்வளவுதான் உயரமாய் வளர்ந்திடினும், பக்கத்தில் இருக்கும் மாளிகையும் அதே அளவுக்கோ, இன்னும் கூட அதிக அளவுக்கோ வளர்ந்து செல்லுமாயின், ஒப்பளவில் சிறிதாயிருக்கும் அந்த வீட்டில் இருப்பவர், மேலும் மேலும் நலம் குன்றி, திருப்தி இல்லாதவராகவும் அதன் நான்கு சுவர்களுக்குள் கட்டுண்டு நெருக்கப்படுகிறவராகவும் குறைபட்டுக் கொள்வார்”.
இதுதான், இன்று இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைத் தொழிலாளர்களின் மன நிலை. ஹுண்டாயின் ஓராண்டு கார் விற்பனை மதிப்பு ரூ.30,000 கோடி, 10,500 தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.107 கோடி என்றால், அங்கேதான் சமூகப் பதட்டத்தின் ஊற்றுக்கண் உள்ளது. கிரேட்டர் நோய்டா, காசியாபாத், குர்கான், மனேசர் எல்லாமே, சமூகச் செல்வங்கள் தனியார் கைகளில் குவிந்து கண்ணைப் பறிக்கும் விதம் பளபளக்கும் தலைநகர் டெல்லிக்குப் பக்கத்தில்தான் உள்ளன. கிராசியானோ, ஹோண்டா, ரிக்கோ, மாருதி தொழிலாளர்கள், நலம் குன்றித் திருப்தி இல்லாதவர்களாக, கட்டுண்டு நெருக்கப்படுவர்களாக உணர்கின்றனர். அவர்களது சங்க உரிமையும் கூட்டுபேர உரிமையும் காலில் போட்டு மிதிக்கப்படும்போது, அந்தக் கடைசி வாய்ப்பும் இல்லாதபோது, வெடிப்புக்கள் நிகழ்கின்றன. முதலாளிகள் அத்துமீறல்களையே விதியாக மாற்றும்போது, தொழிலாளர்கள் தரப்பில் விதிவிலக்காக அத்துமீறல்கள் நடக்கின்றன.
எல்லாம் விவாதிக்கலாம், வன்முறை நியாயமா என முதலில் சொல்லுங்கள்?
ஏன் இந்தக் கேள்விக்கு, இடதுசாரி இயக்கங்களை மட்டும் போராடும் தொழிலாளர்களை மட்டும் பதில் சொல்லுமாறு கேட்கிறார்கள்?
மத்திய அரசு கொள்கைகளால் இது வரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது முதலாளித்துவச் சமூக அமைப்பு செய்த கொலைதானே! நாடெங்கும் கொடுமையான முதலாளித்துவ அமைப்பால், பல லட்சக்கணக்கானவர்கள் வேலையின்மையால், குறை வருமானத்தால், வருமானமின்மையால், பசியால் பட்டினியால் செத்து மடிகிறார்களே. இவை முதலாளித்துவப் படுகொலைகள்தானே? ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம், பசுமை வேட்டை, காவல் கொலைகள் என இன்று வரை பல லட்சக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவது வன்முறைதானே? உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ண அய்யர் வேலை நீக்கம் என்பது பொருளாதார மரண தண்டனை என்றார். ஒவ்வொரு நாளும் இந்தியாவெங்கும் முதலாளிகள் பொருளாதார மரண தண்டனை வழங்குவது வன்முறைதானே?
மார்க்ஸ், அரசு என்பதே வர்க்க ஆட்சியின் கருவி என்றும், இக்கருவி மூலம் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்கித்தான் ஆள்கிறது என்றும் சொல்கிறார். பலாத்காரம், வன்முறை ஆகியவற்றின் துணை கொண்டு நடைபெறும் முதலாளித்துவ ஆட்சி, ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு, தான் ஒடுக்குபவர்களிடமும், தனது ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்களிடமும், வன்முறை பற்றிக் கேள்வி கேட்பதை, எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? வேறு பதில்களுக்கு அவசியம் இல்லை என அறுதியிட்டுப் பதில் சொல்வோம்.
மாருதி வெடிப்பு, முதலாளிகளுக்கு, அரசாங்கங்களுக்கு, சமூகத்திற்கு, ஒரு செய்தி சொல்கிறது. முதலாளிகள், முதலாளித்துவ அமைப்பின், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டப்படியான முழுமையான உரிமைகளை சுதந்திரங்களை, தொழிலாளர்களுக்கு வழங்குவதுதான், வெடிப்புக்களைத் தவிர்ப்பதற்கான சரியான வழியாகும்.
சிறப்புக் கட்டுரை
ரன்வீர் சேனா பற்றிய மறுவாசிப்பு
நிலப்பிரபுத்துவ - குலக் அதிகாரமும் லாலு - நிதிஷ் தொடர்நிகழ்வும்
திபங்கர் பட்டாச்சார்யா
ஜூலை 28 2012, எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையில் வெளியான கட்டுரை
சமீபத்திய இரண்டு சம்பவங்கள், 1990களின் இறுதிப்பகுதி முதல் 21ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை பீகாரை விரட்டிக் கொண்டிருந்த ரன்வீர் சேனா பக்கம், புதுப்பிக்கப்பட்ட ஊடக, கல்வியாளர் மற்றும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளன. முதல் சம்பவம் 1996, ஜூலை 11 அன்று நடந்த மிருகத்தனமான பதானி தோலா படுகொலை வழக்கில், கீழ்நீதிமன்றத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட ரன்வீர் சேனாவைச் சேர்ந்த 23 பேர், பாட்னா உயர்நீதி மன்றத்தால் அதிர்ச்சிக்குரியவிதத்தில் விடுதலை செய்யப்பட்டது; மற்றொன்று, ரன்வீர் சேனாவை நிறுவி, கிட்டத்தட்ட 20 ஆண்டு காலமாக அதை வழிநடத்திய, 22 படுகொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியான, கடந்த ஓராண்டு காலமாக பிணையில் இருக்கிற, உயர்நீதிமன்றம் விடுதலை அளித்து சொன்ன தீர்ப்புக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது என பீகார் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த, பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டது.
சிங் கொல்லப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வெறிபிடித்தவர்கள் போல் ஆனார்கள்; கண்மூடித்தனமான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டார்கள்; தலித் குக்கிராமங்கள் மீது, தலித் மாணவர்கள் விடுதிகள் மீது புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை நடத்தினார்கள். பீகார் அரசாங்கம், ‘அரசு தர்மம்’ அல்லது ‘ஆளுகை’ பற்றிய மோடியின் கருத்துக்களில் இருந்து பாடங்கள் பெற்று, வெறியாட்டத்தில் ஈடுபட்ட சேனாவின் சுதந்திரமான தாக்குதல் நடவடிக்கையை அனுமதித்தது. அதே நேரம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பிளவுகளுக்கு அப்பால், பீகாரின் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிங்குக்கு இறுதி மரியாதை செலுத்தினர்; பீகார் பாஜகவின் ஒரு மூத்த அமைச்சர், சிங் ஓர் உண்மையான காந்தியவாதி என்று வருணிக்கும் அளவுக்குச் சென்றார்! ரன்வீர் சேனா தலைவரின் தகனமும் இறுதிச்சடங்குகளும் அரசு மரியாதையுடன் நடந்தன என்று சொல்லப்படக்கூடிய அளவுக்கு, நிதிஷ் அமைச்சரவையின் பல்வேறு அமைச்சர்களும், பாஜகவின் மூத்த தலைவர்களும், பாஜக, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட் ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
சுவாரசியமாக, லாலுவும் ராம் விலாஸ் பாஸ்வானும் சிங் கொலையில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என்று உடனே கோரினர். நிகழ்ச்சிநிரல் ஏதுமில்லாத எதிர்க்கட்சிகளுக்கு மத்திய புலனாய்வுத் துறை விசாரணை கோருவது ஒரு புதுமையான பிடித்தாட்டும் கோரிக்கை என்று மறுத்துவிடுவதில், கேலிபேசுவதில் அளவற்ற ஆனந்தமடையும் நிதிஷ்குமார் அரசாங்கம், இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. சமீபத்திய சில மாதங்களில் 5 சம்பவங்களில், பீகார் சமூகத்தின், பீகார் அரசியல் கருத்துக்களின் பெரும்பகுதியினர் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை கோரி, அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய கருவூல மோசடி, ஆதர்ஷ் நில மோசடி மற்றும் ஸ்பெக்ட்ரம் போன்ற, பீகார் தொழிற்மண்டல வளர்ச்சிக் கழகம் நிலம் ஒதுக்கீடு செய்ததில் வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டது ஆகிய மிகப்பெரிய நிதி மற்றும் வழிமுறை முறைகேடுகள் நடந்தன. 2011 ஜுன் 23 அன்று போர்ப்ஸ்கஞ்ச் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடந்தது. மாநிலத்தில் நடந்த இந்த மிகவும் கொடூரமான காவல்துறை ஒடுக்குமுறையில், பீகார் காவல்துறையினர், 4 அப்பாவி இசுலாமியர்களை மிக அருகில் இருந்து சுட்டனர். 2012 மார்ச் மாதத்தில், பரவலான கண்டனத்துக்கு உள்ளான இரண்டு அரசியல் படுகொலைகள் பீகாரில் நடந்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)யின் ரோதாஸ் மாவட்டச் செயலாளரும் மக்கள் போராட்டங்களின் பிரபலமான தலைவருமான பய்யாராம் யாதவ் மார்ச் 14 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவுரங்காபாத் மாவட்டத்தின் சோன்ஹட்டு ஊராட்சியின் தலைவர் ராஷ்ட்ரீய ஜனதாதள ஆதரவாளர் தேவேந்திர சிங் என்கிற சோட்டு குஷ்வாஹா மார்ச் 29 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை சக்திவாய்ந்த சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்களை உருவாக்கியது. இந்த எந்த சம்பவத்திலும் மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நிதிஷ்குமார் பிடிவாதமாக மறுத்ததை, பிரம்மேஷ்வர் சிங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்த அவசர கவனத்துடன் ஒப்பிட்டால், பீகாரின் அதிகாரத் தாழ்வாரங்களில் ரன்வீர் சேனாவுக்கு தொடர்ந்து இருக்கிற மிகப்பெரிய செல்வாக்கு மிகத்தெளிவாகத் தெரிகிறது.
அரசின் ஆதரவு பெற்ற தனியார்படை
உண்மையில், ரன்வீர் சேனா ஒரு வகை மாதிரி தனியார் படையாக இருந்ததில்லை. மாறாக, அது துவங்கப்பட்டது முதல், அரசின் ஆதரவு பெற்ற தனியார்படைக்கு எடுத்துக்காட்டாக, அரசு - தனியார் கூட்டு பாணியில்தான் அது இயங்கி வந்தது. ரன்வீர் சேனாவை, நவீனகால பீகாரில் அரசை, மேலோங்கிய அரசியல் பொருளாதாரத்தை புரிந்துகொள்வதில் இது மய்யமான முக்கியத்துவம் வாய்ந்தது.
1970களில், 1980களில் காங்கிரஸ் ஆட்சியிலான பீகார் பல சேனைகளைக் கண்டுள்ளது. இந்த சேனாக்கள் பலவும் - பாட்னா மற்றும் ஜெகனாபாதின் பூமி சேனா, பலாமு மாவட்டத்தின் சன்லைட் சேனா, நாலந்தாவின் லோரிக் சேனா மற்றும் பல - ஓரிரு மாவட்டங்களை மட்டுமே பாதிக்கும் உள்ளூர்மட்ட நிகழ்வுப்போக்குகளே. இவை அந்தந்த பகுதிகளின் கிராமப்புற வறியவர்களுடனான தீவிரமான மோதல் மற்றும் அவர்களுடைய வளர்ந்து வந்த அறுதியிடல் ஆகியவற்றால் சில வருடங்களில் மறைந்து போயின. ரன்வீர் சேனா, காங்கிரசுக்குப் பிந்தைய பீகாரில், சமூக நீதி மற்றும் வறிய மக்கள் கவுரவம் என்ற கவர்ச்சிகரமான வாய்வீச்சுடன் லாலு அரசியல் ரீதியாக மேலெழுந்து வந்தபோது உருவானது.
பின்தங்கிய சாதிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் சமூகக் கூட்டணியின் அரசியல் அறுதியிடலுடன் அடையாளப்படுத் தப்படுகிற அரசாங்கம், ஒரு மேல்சாதியின் ஆதரவு கொண்ட ஒரு தனியார் படையை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடும் என்று ஒருவர் எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால் ரன்வீர் சேனா வலுப்பெறவும் தண்டனை பற்றிய அச்சமின்றி படுகொலைகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டது. நன்கறியப்பட்ட ரன்வீர் சேனாவினருடன் லாலு வெளிப்படையாக மேடையை பகிர்ந்துகொண்டார். அவர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அப்போதைய அய்க்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்த சந்திர தியோ வர்மா, இககமாலெயை எதிர்கொள்ள பிசாசுடனும் கரம் கோர்க்கத் தயார் என்று அறிவித்ததுடன், சேனா மீதான தடை விலக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
பாஜக - அய்க்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, ரன்வீர் சேனாவின் பின்புலம் மேலும் வெளிப்படையானது. நிதிஷ்குமார் தனது முதல் ஆட்சிக் காலத்தின் துவக்கத்திலேயே, தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக்கினார்; ரன்வீர் சேனாவின் அரசியல் தொடர்புகள் பற்றிய விசாரணையை மண்ணோடு புதைத்துவிட, டிசம்பர் 1997ல் அவப்பெயர் பெற்ற லக்ஷ்மண்பூர் பாதே படுகொலையைத் தொடர்ந்து அமர்த்தப்பட்ட நீதிபதி அமீர்தாஸ் ஆணையத்தை, நிதிஷ்குமார் அரசாங்கம் கலைத்தது. 2010 சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு, பிரம்மேஷ்வர் சிங் அர்ரா சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தபோது, அவர் தலைமறைவாக இருப்பதாக சொல்லப்பட்டு, அர்ரா நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த பதானி தோலா மற்றும் லக்ஷ்மண்பூர் பாதே படுகொலைகள் மீதான விசாரணைகளில் இருந்து பிரம்மேஷ்வர் சிங் பெயர் நீக்கப்பட்டது! தேர்தல்கள் நிதிஷ் குமாருக்கு புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை தந்தன. பிரம்மேஷ்வர் சிங் பிணையில் விடுதலையாவதை அவரது அரசாங்கம் பார்த்துக் கொண்டது. இப்போது படுகொலை குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தால் முறைசார்ந்த விதத்தில் விடுதலை செய்யப்படுகிற அதிர்ச்சி தருகிற காட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ரன்வீர் சேனாவின் வளர்ச்சி
ஆக, காங்கிரசுக்குப் பிந்தைய பீகாரில், நிலப்பிரபுத்துவ முகாமுக்கும், மண்டல் அலையால் துரிதம் பெற்ற சமூகக் கடைசலில் இருந்து உருவான அரசியல் மேட்டுக் குடியினர்க்கும் இடையில் உருவான ஒரு விசித்திரமான கூட்டணியின் கதையே ரன்வீர் சேனா நிகழ்வுப்போக்கின் வளர்ச்சி. 1994ல் போஜ்பூரில் மாலெ கட்சியின் தலைமையிலான கம்யூனிச இயக்கத்தை அழித்தொழிப்பது என்ற அது ஒப்புக்கொண்ட நோக்கத்துடன் சேனா உருவானது. சேனாவின் துவக்ககால துண்டறிக்கை ஒன்று இறுமாப்புடன் சொல்கிறது: ரஷ்யாவாகவோ, சீனாவாகவோ போஜ்பூர் மாறுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்; எங்கள் துப்பாக்கிகள் கொண்டு, போஜ்பூரில் இருந்து மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டில் இருந்தே செங்கொடியின் அனைத்து அடையாளங்களையும் அகற்றுவோம்; நமது மூதாதையர்களின் சமூக முறையை நாங்கள் மீண்டும் உருவாக்குவோம்; பழைய மரபுகளை, சட்டங்களை மீட்டெடுப்போம்.
ரன்வீர் சவுத்ரி அல்லது பாபா ரன்வீர், ராஜ்புத் மேட்டுக்குடியினரின் சமூக மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பூமிஹார் சாதியின் உள்ளூர் கதாநாயக திருவுரு. ஆனால், தலித் மக்கள், மிகவும் பின்தங்கிய சாதிகள், இசுலாமிய சமூகத்தினர் கொண்ட கிராமப்புற வறியவர்களின் அதிகரித்து வருகிற சமூக மற்றும் அரசியல் அறுதியிடலை நசுக்குகிற வெளிப்படையான நோக்கத்துடன் ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது.
நிலச்சொந்தக்காரர்களான மேல்சாதியினர் மாநில அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக, முன்னேறி வருகிற மாலெ கட்சியால் உள்ளூர் அளவில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக உணர்ந்த ஓர் அரசியல் சூழலில், ரன்வீர் சேனா, தனது சொந்த உள்ளூர் அடிப்படையிலான குறுகிய அடித்தளத்துக்கும் அப்பால் இன்னும் பெரிய பிரிவினரின் ஆதரவையும் பெற்றது. வெகு விரைவிலேயே அதன் நடவடிக்கை அடித்தளம், கிட்டத்தட்ட சோனே ஆற்றின் இரண்டு கரைகளிலும் ஷாஹாபாத் மற்றும் மகத் பிராந்தியங்களை கொண்ட முன்னாள் மத்திய பீகார் முழுவதும் பரவியது. மண்டலுக்குப் பிந்தைய பீகார் அரசியல் ஒழுங்கின் மீது உயர்சாதியினர் கொண்ட விரக்தியில் இருந்து சேனா ஆற்றல் பெற்றது என்றாலும், கிராமப்புற வறியவர்களின் அதிகரித்து வருகிற அரசியல் அறுதியிடல் மற்றும் மாலெ கட்சியின் அரசியல் எழுச்சி ஆகியவற்றை கட்டுப்படுத்த சேனாவுடன் இணைவதில் புதிய ஆட்சியாளர்களும் மகிழ்ச்சியே அடைந்தனர். பாஜக ஆதரவு கொண்ட ரன்வீர் சேனாவை, ராஷ்ட்ரீய ஜனதா தளமும் அய்க்கிய ஜனதா தளமும் போட்டி போட்டுக் கொண்டு மகிழ்ச்சியடையச் செய்ததால், இந்த கொலைகார தனியார் படைக்கு சட்டரீதியான தடை இருந்தும், அதற்கு இதுவரை காணாத சுதந்திரமும் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த அரசியல் ஒன்றுகுவிப்பு, அழுகி வருகிற நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கும் மேல்சாதி தலைமையிலான முகாம்கள் மற்றும் மேலோங்கிய பிற்படுத்தப்பட்ட சாதிகள் மத்தியில் இருந்து எழுந்து வருகிற குலக் பிரிவினருக்கும் இடையிலான வர்க்க நலன்கள் களத்தில் சந்தேகத்துக்கிடமின்றி ஒன்றுகலத்தலையும் குறிக்கிறது.
சமூக ஒடுக்குமுறை மற்றும் அரசியல் வெளியேற்றம்
எதிர்பார்த்தபடி, ரன்வீர் சேனாவின் ஆதரவாளர்கள் சேனாவின் சாரமான நிலப்பிரபுத்துவ இயல்பை அங்கீகரிக்க மறுக்கின்றனர். இந்த விசயத்தில் பீகாரைச் சேர்ந்த நியாயமான கருத்துக்கள் கொண்ட பலரும் கூடுதலான அளவில் குழப்பத்தையே வெளிப்படுத்துகின்றனர். நிலப்பிரபுத்துவமும் பெரிய அளவில் நிலஉடைமையும் சமமானவை என்று புரிந்துகொள்வதில் இந்தக் குழப்பத்தின் வேர் உள்ளது. பீகாரில் சம்பரன் அல்லது புர்னியா மாவட்டங்களிலோ, இந்தியாவின் பல்வேறு பிற பகுதிகளிலோ இன்னும் காணப்படுவது போன்ற நிலஉடைமைக் குவிப்பை இன்றைய போஜ்பூரில் காண முடியாது என்பது உண்மைதான். பல பத்தாண்டுகால சக்தி வாய்ந்த நிலப்போராட்டங்களும், பிராந்தியத்தில் வரலாற்றுரீதியாகக் காணப்படுகிற சமூக பொருளாதார வளர்ச்சி இயங்காற்றலும், அதுபோன்ற நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை கணிசமான அளவு தகர்த்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த சித்திரத்தைக் காண நாம் தவறக்கூடாது. ஏனென்றால் நிலப்பிரபுத்துவ அதிகாரம், நிலத்தின் மீதான கட்டுப்பாட்டின் மூலம் மட்டும் செலுத்தப்படுவதில்லை. மாறாக, முதன்மையாக பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்ட நிர்ப்பந்தங்கள் மூலம் அது செலுத்தப்படுகிறது; மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய அம்சங்கள் கிட்டத்தட்ட எப்போதும் ஒன்றிணைந்த சமூக ஒடுக்குமுறை, வெவ்வேறு வகையிலான, அளவிலான அடிமைத்தனம் மற்றும் அரசியல்ரீதியான வெளியேற்றம் ஆகியவை உலகம் முழுவதும் வரலாற்றுரீதியாக நிலப் பிரபுத்துவ மேலாதிக்கத்தின் அடையாளங்களாக இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உண்மையில், பீகாரில் மாலெ கட்சி வளர்ச்சியின் வரலாற்றில், நிலம், கூலி, சமூக கவுரவம் ஆகிய பிரச்சனைகளுக்கு அக்கம்பக்கமாக வாக்களிக்கும் உரிமையும் தீவிரமான போராட்டங்களுக்கான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. உண்மையில், போஜ்பூரில் இககமாலெ எழுச்சிக்குப் பின்னால், தோழர் ராம்நரேஷ் ராம் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட 1967 சட்டமன்ற தேர்தல்களும், ஒடுக்கப்பட்ட மக்களின், பின் தங்கிய மக்களின் ‘அரசியல் துணிச்சலை’ சீரணித்துக் கொள்ள முடியாத நிலப்பிரபுத்துவ ஆதரவு சக்திகளால் அவரும் அவரது நெருங்கிய தோழர்களும் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் துன்புறுத்தப்பட்டதற்கும் காரணங்களாக இருந்தன.
சில வருடங்களுக்குப் பிறகு, 1989 மக்களவை தேர்தல்களில் பெரும் எண்ணிக்கையிலான தலித் மக்கள் முதல்முறையாக வெற்றிகரமாக தங்கள் வாக்குரிமையை பிரயோகித்து, தோழர் ராமேஷ்வர் பிரசாத், அர்ராவில் இருந்து முதல் நக்சலைட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தேர்தல் நடந்துமுடிந்த உடனேயே, தன்வர் - பிடா கிராமத்தில் ஒரு ரத்தக் குளியல் நடந்தது. வாக்குரிமைக்கு விலையாக 22 பேர் தங்கள் உயிரைத் தந்தார்கள்.
1996 ஜூலையில் நடந்த பதானி தோலா படுகொலைக்கும் இதே போன்றதொரு பின்னணிதான் இருந்தது. 1978 உள்ளாட்சித் தேர்தல்களில், சாஹர் ஒன்றியத்தின் கரோன் ஊராட்சியில் முகமது யூனஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பகுதியின் நிலப்பிரபுத்துவ மதவெறி சக்திகள் பெரும் விரக்திக்கு உள்ளானார்கள். இந்தப் பிரபலமான ஊராட்சித் தலைவரின் தலைமையில், கரோன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வறிய இசுலாமிய மக்கள் இககமாலெ யில் பெரும் எண்ணிக்கையில் இணைந்தார்கள். 1995ல் சாஹர் (தனி) சட்ட மன்ற தொகுதியிலும், அருகில் உள்ள சந்தேஷ் தொகுதியிலும் முதல் முறையாக இககமாலெ வெற்றி பெற்றது. 1967ல் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளரும் இப்போது இககமாலெயின் முக்கிய தலைவருமான தோழர் ராம்நரேஷ் ராம் மற்றும் அர்ராவின் முன்னாள் இந்திய மக்கள் முன்னணியின் மக்களவை உறுப்பினர் தோழர் ராமேஷ்வர் பிரசாதும்தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்.
மரணத்தின் கொடூரமான நடனம்
நிலப்பிரபுத்துவ சக்திகள் பதைத்துப் போனார்கள். மூர்க்கத்தனமான நிலைக்குப் போனார்கள். பீகார் மண்ணில் இருந்து இகக மாலெயை ஒழித்துக்கட்டுவது என்ற அறிவிக்கப்பட்ட நோக்கத்துடன் ரன்வீர் சேனா உருவாக்கப்பட்டது. கரோனில் மதவெறி அணிதிரட்டல் துவங்கியது. இமாம்பாடா மற்றும் கர்பாலா நிலங்கள் மீது இசுலாமியர்களுக்கு இருந்த பாரம்பரிய, அனுபவ உரிமை மறுக்கப்பட்டது. தங்கள் நிலத்தை, உரிமையைப் பாதுகாக்க நடத்திய போராட்டத்தின் ஊடே பல இசுலாமிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கரோன் ஊராட்சியின் பதானி தோலாவில் தலித் குடியிருப்பில் அவர்கள் குடியேறினார்கள். இந்த தலித் மற்றும் இசுலாமிய கிராமப்புற வறிய மக்கள் குடும்பங்களின் இந்த ஒன்றுபட்ட குடியிருப்புதான், 1996 ஜ÷லை 11 அன்று மரணத்தின் கொடூரமான நடனத்தை காண நேர்ந்தது.
சேனா நடத்திய படுகொலைகளை ஆதரிக்கும் அளவு எந்த பிரதான நீரோட்ட வர்ணனையாளரும் செல்லவில்லை என்றாலும், சேனாவுக்கு ஏதோ ஒரு நியாயம் கற்பிக்கும், இககமாலெயின் அதீத, அதிதீவிர நடவடிக்கைகளால் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்ட பாதிப்புற்ற விவசாய சமூகத்தின் கடைசி முயற்சியாக ஒருவிதமான பதில்வினைதான் அது என்று நியாயப்படுத்தும் முயற்சிகளுக்குப் பஞ்சமில்லை. சாதாரண பூமிஹார் விவசாயிகளை நிலப்பிரபுக்கள் என்று கருதுவது என்றுமே இகக மாலெயின் கொள்கையாக இருந்ததில்லை. ரன்வீர் சேனாவின் பதாகையின் கீழ் வறியவர் எதிர்ப்பு, எதிர்ப்புரட்சி நிலப்பிரபுத்துவ - குலக் அணிதிரட்டலின் முதல் அறிகுறிகள் தெரியத் துவங்கியபோது, இகக மாலெ, விவசாய சமூகத்தின் பரந்த மக்கள் மத்தியில் சென்றது; அமைதியை நிலைநாட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தது. பதானி தோலா படுகொலைக்கு முந்தைய நாட்களில், கட்சி அமைதிக்காக எடுத்த முயற்சிகள் பற்றி 1996ல் இககமாலெயின் மத்திய கமிட்டி வெளியிட்ட பிரசுரம் குறிப்பான விவரங்கள் தருகிறது. 1996 செப்டம்பர் லிபரேஷன் இதழில் வெளியிடப்பட்ட அந்த விவரங்களை மீண்டும் சொல்வது பயிற்றுவிப்பதாக இருக்கும்.
பிடாவில் (பாட்னா) விவசாய மகாசபை நடத்திய சுவாமி சஹாஜானந்த் சரஸ்வதி நினைவுதின நிகழ்ச்சியில், நாங்கள் எங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினோம். திருமதி தாரகேஸ்வரி சின்ஹா மற்றும் திரு லலிதேஷ்வர் ஷாஹி ஆகியோர் பூமிஹார் சாதியைச் சேர்ந்த சில மதிப்பிற்குரிய நபர்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். எங்கள் சார்பாக மத்திய கமிட்டி உறுப்பினரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான பவன் சர்மா கலந்துகொண்டார். பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாகவே அமைந்தன. இந்தப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சரியாக இரண்டு நாட்கள் கழித்து கட்சிப் பொதுச் செயலாளர் அர்ராவில் பத்திரிகையாளர் சந்திப்பில் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள் பத்திரிகைகளில் நன்கு முன்னிறுத்தப்பட்டது. அமைதி விரும்பும் மக்கள் அனைவரும் அதை வரவேற்றனர். ரன்வீர் சேனாவிடம் இருந்தும் சாதகமான பதில் வரும் என நாங்கள் எதிர்ப்பார்த்தோம். அடுத்து, சமரச தூதுவராக இருந்த ஒரு நண்பர் மூலம், ரன்வீர் சேனா ஏதாவது அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதன் பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம் என்றும் நாங்கள் ஒரு செய்தியை அனுப்பினோம். அந்த நண்பர் எங்கள் செய்தியை சேர்த்துவிட்டார். ஆனால் பதில் ஏமாற்றம் தருவதாய் இருந்தது. அமைதிக்கான எங்கள் முயற்சி தோல்வியுற்றது.
பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்கு அமைதி நிலைநாட்டப்படுவது அவசர அவசியமாக இருந்தது. இந்த முறை நாங்கள் மீண்டும் வேறு வழியில் முயற்சி செய்தோம். பொது மக்களை திரட்டுவதன் மூலம் பொது மக்கள் நிர்ப்பந்தத்தை உருவாக்க நினைத்தோம். அரசு நிர்வாகம் எங்களுக்கு உதவும் என்றும் நாங்கள் நம்பினோம். ஜ÷ன் 1996ல், நாங்கள் அமைதிக்கான இயக்கத்தை துவங்கினோம்; முக்கிய சந்தையில், கிராம சாவடிகளில் பல பொதுக் கூட்டங்கள் நடத்தினோம்; அமைதிக்கான முயற்சியில் மக்கள் முன்வர வேண்டும் என்று சொன்னோம். அதே சமயத்தில், அய்ந்து கிராமங்களில் ரன்வீர் சேனா விவசாயிகளுக்கும் எங்கள் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த இயக்கத்தின் ஊடே வளர்ச்சி என்ற பிரச்சனை காத்திரத் தன்மை பெற்றது. தராரி ஒன்றியத்தில் போர்க்குணமிக்க உள்ளிருப்பு இயக்கத்தை துவக்கினோம். அந்த இயக்கம் பெருவெற்றி பெற்றது.
அர்ராவில் அமைதிப் பிரச்சனையை மய்யப்படுத்தி ஒரு கருத்தரங்கம் நடத்தினோம். அதில் மதிப்பிற்குரிய அறிவுஜீவிகள், அமைதி விரும்பும் பிரபலங்களுடன் பொது மக்களும் கலந்துகொண்டனர். ரன்வீர் சேனா அமைதி விரும்பும் மக்களின் விருப்பங்களை மதிக்காமல் எங்கள் அமைதி இயக்கம் நெடுக வன்முறை மூலம் பதில்வினையாற்றியது துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறாக, எங்கள் இரண்டாவது முயற்சியும் தோல்வியுற்றது. ரன்வீர் சேனா தனது துண்டறிக்கையில் இந்த அமைதி இயக்கத்தில் இருந்து விலகி நடந்து கொண்டிருக்கிற போரில் இணைய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. பதானி தோலா மூலம் அமைதி இயக்கத்துக்கு பரிசளிக்கப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம்.
கிராமப்புற வறிய மக்கள் மீது ரன்வீர் சேனா கொண்டுள்ள வெறுப்பும், அதன் விளைவாக, இககமாலெயை அதன் ஆதரவாளர்களை அழித்துவிடும் இயக்கமும் சந்தேகத்துக்கு இடமற்ற விதத்தில் வெளிப்படுத்தும் அதன் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு இயல்புதான், அதுதான் மிகவும் முக்கியமான அம்சம். ஆயினும், ரன்வீர் சேனாவை விவசாயமயப்படுத்தும் முயற்சிகள் விசித்திரமான வாதங்களுடன் தொடர்ந்தன. பிரபல பொருளாதார அறிஞரும் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி என்ற நிதிஷ்குமார் வரையறையின் தீவிர ரசிகருமான ஷய்பல் குப்தா, அது ஒரு லும்பன் சமூக உருவாக்கம் என்று பழித்தாலும் நவீன அமெரிக்க வரலாற்றில் அதிதீவிர வெள்ளையின மேலாதிக்க அமைப்பான படுமோசமான கு, கிளக்ஸ், கிளான் (கேகேகே) போன்றது என்று ஒப்பிட்டாலும், சாரத்தில், சஹாஜானந்த் சரஸ்வதியின் இயக்கத்தின் அவசியமற்ற நீட்டிப்பு என்று ரன்வீர் சேனாவை விவரிக்கிறார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 4 ஜுன் 2012).
சரஸ்வதியும் சிங்கும்
வரலாற்று மாணவர்களைப் பொறுத்தவரை சஹாஜானந்த் சரஸ்வதியும் பிரம்மேஷ்வர் சிங்கும் மிகத் தெளிவாக இரு வேறு உலகத்தினர். அவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரே மெல்லிய இழை அவர்களின் சாதிக் குறியீடுதான். தீவிரமான விவசாய இயக்கம் என்ற சஹாஜானந்த் நீரோட்டம் துணிச்சலான இடதுசாரி திசைவழிக்கு, விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களுடன் ஒன்றுபட வேண்டும் என சக்திவாய்ந்த விதத்தில் முன்வைத்ததற்கு பெயர் பெற்றது. ஒரு தனி விவசாயத் தொழிலாளர் அமைப்பு உருவாக்குவது என்ற போலித்தனமான காங்கிரஸ் பின்புலம் கொண்ட முயற்சியை சஹாஜானந்த் எதிர்த்தார். விவசாயத் தொழிலாளர்கள் ஒரு தனி வர்க்கமாக இல்லை என்பதற்காகவோ, அவர்கள் அமைப்பாக்கப்பட வேண்டியதில்லை என்பதற்காகவோ அவர் எதிர்க்கவில்லை; விவசாய அமைப்பு விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்கு, கோரிக்கைகளுக்கு அதன் சொந்த உள்ளார்ந்த நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காகவும், நிலப்பிரபுத்துவ நலன்கள் மற்றும் அவர்களின் காலனிய எசமானர்களிடம் இருந்து முழுமையாக பிரித்து நிறுத்தும்விதமும் அவர்களுக்கு கூர்மையான எதிர்ப்பாகவும் ஒரு நெருக்கமான உயிரார்ந்த விவசாயி - விவசாயத் தொழிலாளர் ஒற்றுமைக்காகவும் எதிர்த்தார்.
சஹாஜானந்த் வழிமரபின் எதிர்துருவம் என்றே பிரம்மேஷ்வர் சிங் வழியை விவரிக்க முடியும். சேனாவால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை, மோசமான இன வழிப்பு மற்றும் மனிதப் படுகொலை சம்பவங்களை ஒத்தது; பெண்களை கொன்றுவிட வேண்டும், ஏனென்றால் அவர்களை நக்சலைட்டுகளைப் பெற்றெடுப்பார்கள், குழந்தைகளை அழித்துவிட வேண்டும், அப்போதுதான் அவர்கள் நக்சலைட்டுகளாக வளர மாட்டார்கள் என பெண்களை, குழந்தைகளை படுகொலை செய்வதை நியாயப்படுத்த அது முன்வைத்த வாதங்கள் அதன் கொடூரமான மனநிலையை உலகுக்கு அம்பலப்படுத்தின. சேனாவின் பல அறிவிப்புகள் பளிச்செனத் தெரியும்விதம் இந்துத்துவா ஆதரவானவை. கடுமையான கம்யூனிச எதிர்ப்பு தவிர, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவது, பசுவதைத் தடை போன்ற அதன் தீவிரமான கூக்குரல்கள் அனைத்தும் வகைமாதிரி ஆர்எஸ்எஸ் இலக்கியத்தைப் போன்றவையே. பிரம்மேஷ்வர் சிங் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு, ஒரு சமீபத்திய நேர்காணலில், குழந்தைப் பருவம் முதல் தான் ஓர் ஆர்எஸ்எஸ் ஊழியராக இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்; நரேந்திர மோடியை பிரதமராகப் பார்க்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் அறிவித்தார்.
உண்மையில், மத்திய பீகாரில், இககமாலெயின் எழுச்சி, இககமாலெ/இந்திய மக்கள் முன்னணி/விவசாயிகள் சங்கப் பதாகையில் கிராமப்புற வறிய மக்களின் போர்க்குணமிக்க அறுதியிடல், நிலம், கூலி, கவுரவம், அரசியல் பிரதிநிதித்துவம் என்ற பொருளில் அவர்கள் பெற்ற வெற்றி ஆகியவற்றால், வால்டர் ஹாசர், அர்விந்த் என்.தாஸ் போன்ற கல்வியியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள், தீவிரமான விவசாயப் போராட்டங்களின் சஹாஜானந்த் வழிமரபின் வழித்தோன்றலாக இககமாலெயை பார்த்தனர். 1970கள் மற்றும் 1980களில் புரட்சிகர விவசாயப் போராட்டங்கள் பற்றிய இககமாலெயின் சொந்தப் புரிதலும் இந்த வரலாற்றுத் தொடர் நிகழ்வையே முன்னிறுத்தியது. விவசாயிகளின் நோக்குநிலையில் இருந்து கிராமப்புற வறியவர் களை சென்றடைவது என சஹாஜானந்த் அழைப்பு விடுத்ததும் கிராமப்புற வறிய மக்களின் நிலைப்பாட்டில் இருந்து விவசாயிகளை சென்றடைவது என இககமாலெ அழைப்பு விடுப்பதும்தான் ஒரே ஒரு வேறுபாடு. சஹாஜானந்த் முதல் இககமாலெ வரை, சாதி - வர்க்கம் என்ற பொருளில் இயல்பாக ஒரு தீர்மானகரமான மாறிச்செல்லல் இருந்தது. வரலாற்றின் வளர்ச்சியை சாதி என்ற பல்பிம்பக் கண்ணாடி மூலம் அல்லாமல், வர்க்கப் போராட்ட விழிஆடி மூலம் பார்த்தால், பிந்தைய ஒரு கட்டத்தில், வேறொரு பின்னணியில் சமூக விழிப்புணர்வின் ஒரு மகத்தான கட்டத்தின் சாதி அடிப்படையிலான உயிர்ப்பித்தலுக்காக வீணாகக் காத்திராமல், இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலத்து பீகாரில், ராம் நரேஷ் ராமில் சஹாஜானந்த் உணர்வை நிச்சயம் அங்கீகரிக்க முடியும்.
அவசியமற்ற நீட்டிப்பு
கருத்தியல், அரசியல் பொருளில் ரன்வீர் சேனாவை சஹாஜானந்த் இயக்கத்துடன் சேர்த்துக் காண முடியாது என்று ஷய்பல் குப்தா நன்கறிவார். எனவே அவர் தனது கட்டுரையில், ரன்வீர் சேனா சஹாஜானந்த் இயக்கத்தின் அவசியமற்ற நீட்டிப்பு என்ற தனது ஆய்வுக்கு ஆதாரமாக ஓர் அருவமான பொருளாதாரப் பின்னணியை முன்வைக்கிறார். அவர் சொல்கிறார்:
நிலப்பிரபுக்கள் அரசியல்ரீதியாக ஓரங்கட்டப்பட்டது மற்றும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் சரிவு ஆகியவற்றின் விளைபொருளே ரன்வீர் சேனா. அதிகரித்து வருகிற இடுபொருட்கள் விலை மீது நிலப்பிரபுக்களுக்குக் கட்டுப்பாடு இல்லாதபோது விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் சரிவை, கிடைக்கிற வருவாயில் விவசாயத் தொழிலாளர்களின் நியாயமான பங்கைக் குறைப்பதன் மூலம்தான் சமாளிக்க முடியும். முன்னாள் பூமிஹார் குத்தகைதாரர்கள் மத்தியில் இருந்து படைகளை உருவாக்குவதன் மூலமும் அதிதீவிர வலதுசாரி மற்றும் இனவெறி வாய்வீச்சை பயன்படுத்துவதன் மூலமும்தான் இதைச் செயல்படுத்த முடிந்தது.
அதிகரித்து வருகிற இடுபொருட்கள் விலை மற்றும் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தின் சரிவை சமாளிக்க ஒரு கொலைகாரப் படையை உருவாக்குவதா? அப்போதுதான் துவங்குகிற ஒரு விவசாய நெருக்கடியை சமாளிக்கத்தான் அது உண்மையிலேயே முயற்சி செய்து கொண்டிருந்தது என்றால், இகக மாலெயை குறிவைப்பது, கிராமப்புற வறியவர்களை வெட்டிக்குவிப்பது என்பதைத் தவிர ரன்வீர் சேனா ஏன் வேறேதும் செய்யவில்லை என்பது வியப்பூட்டுகிறது. அதிகரித்து வருகிற இடுபொருட்கள் விலைஉயர்வுக்கு எதிராக, விளைபொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலையைப் பெற, அல்லது ஆழமாக வேரூன்றியுள்ள புறக்கணிப்புக்கு விவசாயம் உள்ளாக்கப்படுவதற்கு எதிராக, விவசாயிகள் நாடு முழுவதும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடத்தினார்கள். அதே நேரத்தில்தான், பீகாரில் ரன்வீர் சேனா அதன் அருவருப்பான தலையை உயர்த்தியபோது, நாட்டில் விவசாயிகள்/சாகுபடியாளர் தற்கொலைகள் என்ற மிகவும் துரதிர்ஷ்டவசமான, ஆனால் அதிர்ச்சிதருகிற யதார்த்தமான நிகழ்வுப்போக்கை நாமும் பார்த்தோம். இதுவும் ஒரு தீவிரமான எதிர்ப்பின் வடிவம்தான். அதிகரித்துவருகிற இடு பொருட்கள் விலை மற்றும் வீழ்ந்து வந்த விவசாய வருமானம் ஆகியவற்றுக்கான விவசாய பதில்வினைதான் ரன்வீர் சேனா என்று ஷய்பல் குப்தா அதை நியாயப்படுத்துவதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
பீகாரில் விவசாயத்தில் அரசு முதலீடு நீண்டகாலமாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், விவசாய உபரியை விவசாயத்தில் இருந்து வேறு விதத்திலான செல்வக்குவிப்புக்கு, பீகாரில் விவசாயத்தை விட கூடுதல் வருமானத்தை உத்தரவாதம் செய்வதாக அறியப்படுகிற, குற்றம், ஊழல், அரசியல் உட்பட்ட வழிகளில் விடாப்பிடியாக திருப்பிவிடுவதும், இதே அளவுக்கு உண்மையானது, இதில் இருந்து பிரிக்க முடியாதது. 1990களின் துவக்கத்தில் அர்விந்த் என் தாஸ் எழுதிய பிரபலமான புத்தகத்தின் பெயரான பீகார் குடியரசு என்ற பெயரை பயன்படுத்துவோமா னால், அது பற்றி எழுதிய பல உள்ளுணர்வு மிக்க ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும், இந்த அம்சம் பற்றி நெருக்கமாக கண்காணித்து விவாதித்துள்ளனர். ரன்வீர் சேனாவே, இந்த வழியிலான விவசாயம் சாராத செல்வக்குவிப் பின் ஒரு மாதிரியை பிரதிநிதித்துவப்படுத்து கிறது. ஷய்பல் குப்தாவே அங்கீகரிப்பதுபோல், ரன்வீர் சேனாவுக்கு சர்வதேச நிதி ஆதரவு இருந்தது. சேனாவிடம் பல பத்து கோடி ரூபாய் அளவுக்கு மிகப்பெரிய நிதி இருப்பதாகவும் அதை யார் கட்டுப்படுத்துவது என்பது சேனா வட்டங்களுக்குள் போட்டிக்குரிய விசயமாக இருக்கிறது என்றும் இப்போது ஊடக செய்திகள் வருகின்றன.
ஒரு செயல்படுகிற அரசாங்கம் இல்லாத தன் விளைவால், ரன்வீர் சேனா மாதிரி சமூக சமனிலைப்படுத்துதல் செழித்தது என்றும் நிதிஷ்குமாரும் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி பற்றிய அவரது செயல்வடிவமும் தோன்றிய பிறகு அது மறைந்தது என்றும் ஷய்பல் குப்தா வாதிக்கிறார். எனவே, பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டதில், நிதிஷ் குமார் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும், அவரது வளர்ச்சி நிகழ்ச்சிநிரலை தடம்புரளச் செய்யும் ஓர் அரசியல் சதி இருப்பதாகப் பார்க்கிறார். நிதிஷ் குமாரின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சி மாதிரியை பெருமைப்படுத்தும் போக்கில், இந்த வாதம், சமூக சமநிலை பேணுவது என்ற முறையில் சேனா நடத்திய படுகொலைகளுக்கு ஒரு புறநிலைரீதியான, வரலாற்றுரீதியான நியாயத்துக்கான கூறு ஒன்றை சேர்க்கவும் முனைகிறது. படுகொலைகளை சமூக சமநிலை பேணும் முறைகளாகக் கருதுவதன் ஆபத்தான விளைவுகளுக்கு அப்பால், ரன்வீர் சேனா நிகழ்வுப்போக்கு பற்றிய மதிப்பீடு மற்றும் இன்றைய பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியின் இயல்பு மற்றும் பாத்திரம் பற்றிய மதிப்பீடு என்ற இரண்டு பொருளிலும் இந்த வாதம் முழுவதுமாக அடிப்படையற்றது.
நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், அரசு ஆதரவாகவும் உடந்தையாகவும் இருந்ததால்தான் ரன்வீர் சேனா செழித்து வளர்ந்ததே தவிர, அரசின் ஊகிக்கப்பட்ட இன்மையாலோ அல்லது பலவீனத்தாலோ அல்ல. பீகாரில் ரன்வீர் சேனா வெறியாட்டம் போட்டபோது, உள்ளூர் மற்றும் பிராந்திய அரசு நிர்வாகம் சேனாவுக்கு உடந்தை என்பது அம்பலப்படுத்தப்பட்டபோது, அகில இந்திய அரசு, சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், கரிசனம் கூட தெரிவிக்கவில்லை என்பதை குறிப்பிடுவது பயிற்றுவிப்பதாக இருக்கும். 1978ல் கண்கவர் விதத்தில், பெல்ச்சிக்கு இந்திரா காந்தி வந்தார்; அப்போது, கிராமப்புற பாட்னாவில் தலித் படுகொலை நடந்த ஓர் இடத்துக்கு யானை மீது சவாரி செய்து வந்தார். ராகுல் காந்தியின் மிகச்சமீபத்திய பட்டா பர்சால் விஜயம் மிகவும் பிரபலப் படுத்தப்பட்டது. இவற்றுக்கு நேரெதிராக, எந்த மூத்த காங்கிரஸ் தலைவரோ, சந்திரசேகர், வி.பி.சிங் போன்ற முன்னாள் பிரதமர்களோ, பதானி தோலாவுக்கோ, லக்ஷ்மண்பூர் பாதேவுக்கோ வர அக்கறை காட்டவில்லை. இந்தப் படுகொலைகள் உச்சநீதிமன்றத் தரப்பில் எந்த நீதித்துறை தலையீட்டையோ செயலூக்கத்தையோ உருவாக்கவில்லை. குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் பாதே படுகொலை தேசிய அவமானம் என்று விவரித்தார். ஆனால், அதையொட்டி நியமிக்கப்பட்ட நீதிபதி அமீர்தாஸ் ஆணையம் 2006ல் கலைக்கப்படும்வரை கிடப்பில் போடப்பட்டது.
அரசுக்குள் ஒரு மினி அரசு
ஆக, ரன்வீர் சேனா அரசுக்குள் ஒரு மினி அரசாக செயல்பட அனுமதிக்கப்பட்டது. சேனா மறைந்தது அரசால் அல்ல; அரசு இருந்தும் அது மறைந்தது. நிதிஷ் குமார் அதிகாரத்துக்கு வரும் முன்னரே சேனா காணாமல்போய்விட்டது. இதற்கும் வளர்ச்சி நிகழ்ச்சிநிரல் என்று அழைக்கப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சேனாவின் சீரான சரிவு மற்றும் தனிமைப்படுதலுக்குப் பின்னால், கிராமப்புற வறியவர்களின் நீடித்த போராட்டமும் இககமாலெ மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பும், அதனுடன் தொடர்புடைய, சேனாவின் அணிகள் மற்றும் முன்னாள் ஆதரவாளர்கள் மத்தியில் உருவான அதிகரித்த அளவிலான மாயை விலகலும் அதிருப்தியும் உள்ளன. இககமாலெ தலைமையில் கிராமப்புற வறியவர்கள் நடத்திய போராட்டங்கள், கண்மூடித்தனமான எதிர்-வன்முறையாக ஒருநாளும் சீரழியவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், மாவோயிஸ்டுகள், ஒரு குறுகிய காலத்தில், தலையிட முனைந்து, ரன்வீர் சேனா வழியிலேயே ரன்வீர் சேனாவுக்கு பதிலடி கொடுப்பது என்ற பெயரில் 1999 மார்ச் 18 அன்று ஜெகனாபாத் மாவட்டத்தின் பூமிஹார் கிராமமான சேனாரியில் 34 அப்பாவி மக்களை படுகொலை செய்தனர். இககமாலெ திட்டவட்டமாக மாவோயிஸ்டுகள் செய்த இந்தப் படுகொலையை கண்டித்தது. ரன்வீர் சேனா போன்ற தனியார் படைகள் போல் நடந்துகொள்வதல்ல, அவற்றை தனிமைப்படுத்துவதன், கிராமப்புற வறியவர்களையும் உழைக்கும் விவசாயிகளையும் சாதி அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு பதிலாக, அவர்களுடைய பொதுவான வர்க்க நலன்களின் அடிப்படையில் அவர்களை ஒன்றுபடுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியது.
தனது ஆட்சிக் காலத்தில் திட்டமிட்ட விதத்தில் எடுக்கப்பட்ட சேனா ஆதரவு நடவடிக்கைகள் மூலம் சேனாவை பாதுகாக்கவும் அதன் ஆயுளை நீட்டிக்கச் செய்யவும் முயற்சித்ததுதான் நிதிஷ்குமார் செய்தது. அவருடைய வளர்ச்சி நிகழ்ச்சிநிரல், பீகார் பொருளாதாரத்திலும் அரசியலிலும் நிலப்பிரபுத்துவ - குலக் செல்வாக்கை பலவீனப்படுத்துவ தற்கு மாறாக, பீகாரில் நிலப்பிரபுத்துவ - குலக் அதிகாரத்தை மறுஉறுதி செய்யவே முனைந்தது. விவசாயத்தில் கூடுதலாக அரசு முதலீடு செய்வது இந்த அரசாங்கத்தின் முன்னுரிமையாக இல்லை; பொருளுள்ள நிலச் சீர்திருத்தம் முழுமையாக தடை செய்யப்பட்டதாக இருந்தது. நிலச்சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் எந்த கவனமும் இன்றி கிடப்பில் போடப்பட்டன; பீகாரில் மிகப்பரந்து காணப்படுகிற, துரிதமாக வளர்கிற சாகுபடி முறை என்று சொல்லக்கூடிய குத்தகை முறையை முறைப்படுத்துவதற்கான சாதாரண பரிந்துரைகள் கூட நிலப்பிரபுத்துவ வெறி கொண்ட ஆட்சேபணைகளால் கைவிடப்பட்டன. நில நிர்வாகம் பற்றி பேசும் ஷய்பல் குப்தா நிலச்சீர்திருத்தம் பற்றி ஏதும் குறிப்பிடாததில் வியப்படைய ஏதுமில்லை.
பீகாருக்குள் பாயும் நிதியின் அளவு அதிகரிப்பது பற்றியும் அதன் விளைவான வளர்ச்சி அதிசயம் பற்றியும் நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் விரிவாகப் பேசுகிறார்கள். மத்தியில் இருந்தோ, உலகவங்கியிடம் இருந்தோ, அது போன்ற நிறுவனங்களிடம் இருந்தோ வருகிற கூடுதல் நிதி, கட்டுமானத் துறைக்கும் வேறுபல ஒப்பனை திட்டங்களுக்கும் செல்வதும், அதில் பெரும்பகுதி நேராக ஒப்பந்தக்காரர்களின், அரசு அதிகாரிகளின், ஆளுங்கட்சி அரசியல் வாதிகளின், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள், லும்பன்கள் மத்தியில் உள்ள அவர்களுடைய அடியாட்களின் ஊழல் பைகளுக்குச் செல்வதும் நன்கறியப்பட்ட விசயமே. பீகாரில் லாலு - ராப்ரி சகாப்தம் என்று ஜனரஞ்சகமாக அறியப்படுகிற, 15 ஆண்டுகால ஜனதா தள/ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில், ஒரு பொருளாதார ஸ்தம்பிப்பு நிலைக்கு வந்துவிட்டது. நிதிஷ் குமார் செய்வதெல்லாம், சந்தை அடிப்படைவாதத்தின் நவதாராளவாத பிரதான நீரோட் டத்தோடு பீகாரை மறுஒன்றிணைப்பு செய்வதுதான். இது பொருளாதார வளர்ச்சி பற்றிய துவக்கப் பெருங்கூச்சலை உருவாக்கியது; ஆனால் வாய்வீச்சை யதார்த்தம் மூடிமறைத்த போது, பெருங்கூச்சல் காற்றில் கரைந்துவிட்டது. திட்டக்கமிஷனின் கேலிக்குரிய தாழ்வான வறுமைக் கோட்டு வரையறையின்படியே, பீகாரின் வறிய மக்கள் தொகை கணக்கு கடந்த 5 வருடங்களில் 50 லட்சம் அதிகரித்துள்ளது என்பது கவனத்தில் வராமல் இல்லை.
நிலப்பிரபுத்துவ - குலக் அணிதிரட்டல்
ஷய்பல் குப்தா, சேனா ஒருவிதமான பண்டைய கால, நீண்டகாலத்துக்கு முந்தைய பீகாரில் வெறியாட்டம் போட்டது என்ற ஓர் உணர்வை முன்வைக்கிறார். நல்லது. அவரே குறிப்பிட்ட அமெரிக்க எடுத்துக்காட்டில், கேகேகே என்று அழைக்கப்படுகிற மோசமான வெள்ளை மேலாதிக்க, நிறவெறி கொண்ட, கம்யூனிச எதிர்ப்பு அமைப்பு, அமெரிக்காவில், நீண்ட காலத்துக்கு முந்தைய 19ஆம் நூற்றாண்டில் செழித்திருக்கவில்லை; சமீபத்திய காலம் வரை, இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை, தனியார் படைகள் என்ற நிகழ்வுப்போக்கும் அதன் பின் உள்ள நிலப்பிரபுத்துவ - குலக் அணிதிரட்டலும் நவீன கால பீகாரின் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கின்றன. உண்மையில், தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த தலித் கிராமப்புற வறிய மக்கள் நடத்திய போராட்டத்தை ரத்தத்தில் மூழ்கடிக்க நடந்த வெறித்தனமான நிலப்பிரபுத்துவ முயற்சிகளை பீகார் பார்த்தது போல, ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் குடியுரிமை இயக்கத்துக்கு மிகச்சரியான பதில்வினையாக கேகேகே 1960களில் மீட்டெடுக்கப்பட்டது.
சாதி என்ற பல்பிம்பக் கண்ணாடி மூலம் பீகாரைப் பார்க்கும் வர்ணனையாளர்கள், பீகாரை சாதி என்ற அளவுகோல் கொண்டே அளக்கப் பார்க்கிறார்கள். ஆனால் பீகாரின் ஒடுக்கப்பட்ட கிராமப்புற வறிய மக்கள், தீவிரமான நிலப்பிரபுத்துவ - குலக் வன்முறையும் அரசு ஒடுக்குமுறையும் இருந்தபோதும், கவுரவத்துக்கான, உரிமைகளுக்கான தங்கள் போராட்டங்களில் மகத்தான சாதனைகள் செய்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் பீகாரை முன்நகர்த்திச் செல்லும் முக்கியமான உந்துசக்தியாக இருந்துவருகிறது. பீகாரின் ஒட்டுமொத்த அதிகார சமனிலையிலும் மாநிலத்தின் வழித்தடத்திலும் காணப்படுகிற நிலப்பிரபுத்துவ - குலக் மேலாதிக்கத்தின் அளவின் அடிப்படையில் பார்த்தால், பிரம்மேஷ்வர் சிங்கின் வெளியேற்றமும், பீகாரில் அமைப்பாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ - குலக் வன்முறையின் நிகழ்வுப்போக்கும் ஒரு தீர்மானகரமான முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்வதற்கு இன்னும் காலம் வரவில்லை. ஒரு புதுப்பிக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ வெறியாட்டத்தை தூண்டி விடுகிற ஒன்றுபட்ட முயற்சிகளை பீகாரில் இப்போதே காண முடிகிறது. ஆனால், பீகாரின் ஒடுக்கப்பட்ட வறிய மக்கள், ஜனநாயகத்துக்கான, கவுரவத்துக்கான, நீதிக்கான தங்கள் நீண்ட போராட்டத்தில், வரலாற்றுரீதியாக வெளிப்படுத்துகிற விடாப்பிடி தன்மை, துணிச்சல், உறுதி ஆகியவற்றின் மீது நாம் நிச்சயம் நம்பிக்கை கொள்ள முடியும். பீகாரிலும், அதற்கு அப்பாலும், ரன்வீர் சேனா போன்ற ஒரு தனியார் படை புத்துயிர் பெறும் எந்த சாத்தியப்பாட்டையும் தடுக்கும் பரந்த ஜனநாயகப் பிரிவினரின் அறிவாற்றல் மற்றும் மனசாட்சி மீதும் நாம் நிச்சயம் நம்பிக்கை கொள்ள முடியும்.
களம்
சட்டக்கூலி ரூ.132 வழங்கு!
வேலை அட்டைகளைக் குறைக்காதே!
அளவு முறையை கைவிடு!
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள குடும்பங்கள் 15,000. இவற்றில் 2011ல் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 26,000 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் வேலை அட்டைகள் எண்ணிக்கை 14,000 எனக் குறைக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 50% குறைப்பு. வேலை உறுதித்திட்டத்தில் வேலை உறுதி செய்யப்படுவதை விட வேலைக் குறைக்கப்படுவதுதான் நடக்கிறது. எந்த அடிப்படையில் வேலை அட்டைகள் குறைக்கப்பட்டன என்ற மக்களின் கேள்விக்கு அதிகாரிகள் சொல்கிற காரணங்கள் விசித்திரமானவை. தகுதி படைத்தவர்கள், தொடர்ச்சியாக வேலை செய்யக் கூடியவர்கள், திறன்மிக்க வேலை செய்யக்கூடியவர்கள், திடகாத்திரமானவர்கள் என்று பார்த்து அட்டையை குறைத்தார்களாம். இவற்றுக்கு என்ன வரையறை என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அக்கச்சிப்பட்டி ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 348. இவற்றில் 2011ல் 300 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் அது 200 என குறைக்கப்பட்டுள்ளது. மட்டங்கால் ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 648. இவற்றில் 2011ல் 1120 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் அது 400 என குறைக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டி ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 654. இவற்றில் 2011ல் 950 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் அது 200 என குறைக்கப்பட்டுள்ளது. சங்கம்விடுதி ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 567. இவற்றில் 2011ல் 1200 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் அது 400 என குறைக்கப்பட்டுள்ளது. கல்லாகோட்டை ஊராட்சியில் மொத்த குடும்பங்கள் 856. இவற்றில் 2011ல் 1360 வேலை அட்டைகள் வழங்கப்பட்டன. 2012ல் அது 700 என குறைக்கப்பட்டுள்ளது.
வேலை உறுதித்திட்டத்தில் நடக்கிற தொடர் முறைகேடுகளைக் கண்டித்தும் வேலை அட்டைகளை குறைக்கக் கூடாது, சட்டக்கூலி ரூ.132 வழங்க வேண்டும், அளவு முறையை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜுலை 19 அன்று புனல்குளத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மட்டத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டடோர் கலந்துகொண்டனர். கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி தலைமை தாங்கிய கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி சிறப்புரையாற்றினார்.
கேப்டன் லட்சுமி செகால் மறைவுக்கு அஞ்சலி
முதுபெரும் சுதந்திரப் போரட்டத் தலைவரும், இந்திய தேசிய ராணுவத்தின்
பெண்கள் படைத் தலைவராக இருந்தவருமான கேப்டன் லட்சுமி செகால் ஜுலை 23 அன்று காலமானார். அவருக்கு வயது 97. டாக்டர் பயிற்சி பெற்ற அவர் சிங்கப்பூரில் டாக்டராக பணிபுரியும் போது சுபாஷ் சந்திரபோசுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் 1943ல் இந்திய தேசிய ராணுவத்தின் ராணி ஜான்சி பெண்கள் படைக்கு தலைமை ஏற்றார். 1946ல் பிரிட்டிசாரால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அய்என்ஏ படையிலிருந்த தோழர் பிரேம் செகாலை திருமணம் செய்து கொண்டார்.
கான்பூரில் மருத்துவராக பணியாற்றிய அவர் தனது ஓயாத உழைப்பால் அப்பகுதி வறிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறந்த மருத்துவ சேவையை அளித்தார். பெண்கள் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர் தனது வாழ்நாள் முழுவதும் இடதுசாரி இயக்கத்தோடு கடப்பாடு கொண்டிருந்தார். 2002ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளராக போட்டியிட்டார்.
கேப்டன் லெட்சுமி, அவருடைய எளிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பில் அவர் பாத்திரம் மற்றும் உத்வேகமூட்டும் பொதுச் சேவை ஆகிய பண்புகளுக்காக இந்திய மக்களால் என்றென்றைக்கும் நினைவு கொள்ளப்படுவார். சமூக மாற்றத்திற்கான, புரட்சிகர போராட்டங்களில் அவருடைய தடுமாற்றம் இல்லாத கடப்பாடு இடதுசாரி அணிகளுக்கு என்றென்றும் உத்வேகமூட்டும். இகக(மாலெ) செங்கொடி தாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகிறது. அவர் குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
கல்வி
என்ன செய்ய வேண்டும் நூலை இறுகப் பற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? (பகுதி 2)
காம்ரேட்
என்ன செய்ய வேண்டும் நூல் ஏன் எழுதப்பட்டது? இஸ்க்ரா என்ன செய்தது?
இங்கு ரஷ்ய சமூக ஜனநாயகவாதத்தின் கட்டங்களை லெனின் பிரித்ததைக் காண்பது அவசியம்.
கட்டம் 1
1884-1894: சமூக ஜனநாயகத்தின் தத்துவமும் திட்டமும் எழுந்து உறுதிப்பட்ட கட்டம். பின்பற்றியவர்கள் சிலரே. சமூக ஜனநாயகம் தொழிலாளி வர்க்க இயக்கம் இல்லாமல் இருந்தது. ஓர் அரசியல் கட்சி என்பதாக அது கருநிலை வளர்ச்சியினூடே சென்று கொண்டிருந்தது.
கட்டம் 2
1894-1898. ஒரு சமூக இயக்கமாக, மக்கள் திரள் எழுச்சியாக ஓர் அரசியல் கட்சியாக, அது, அரங்கிற்கு வந்தது. இக்கட்டம் அதன் குழந்தைப் பருவம். விடலைப் பருவம்.
அறிவாளிகள் நரோதியத்திற்கு எதிராகப் போராடவும் தொழிலாளர்கள் மத்தியில் செல்லவும் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கை நோக்கிச் சென்றனர். இயக்கம் பாய்ச்சலில் சென்றது. தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நடைமுறைப் பயிற்சி குறைவு. வெகுவேகமாக களத்தில் இருந்து வெளியேறினர். பலரது வேலைகளின் செயற்பரப்பு விரிவாய் இருந்தது. பெரும்பாலானவர்கள், தமது இளம்பருவத்தில், பயங்கரவாத நாயகர்களை வழிபட்டவர்கள். கவர்ந்திழுக்கும் வீர மரபுகளில் இருந்து விட்டு விலகுவதற்கு, தாம் ஆழமாக மதித்தவர்களிடமிருந்து பிரிய, கடுமையான போராட்டம் தேவைப்பட்டது. போராட்டத்தில் கற்றனர். பாதைக்கு ஒளியூட்டிய மார்க்சிய தத்துவத்தையோ, சுயேச்சதிகாரத்தை வீழ்த்தும் கடமையையோ, ஒரு கணமும் மறவாமல், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் சென்றனர். 1898ன் வசந்தத்தில் சமூக ஜனநாயகக் கட்சி உருவானது, இக்கட்டத்தின் மிகவும் கவனிக்கத்தக்க நடவடிக்கை. அதுவே இக்கட்டத்தின் கடைசி நடவடிக்கையும் கூட,
கட்டம் 3
1897ல் தயாரான இக்கட்டம், இரண்டாவது கட்டத்தை மாற்றீடு செய்தது. 1898ல் துவங்கியது எப்போது முடியும்? இது ஒற்றுமையின்மை கலைப்பு மற்றும் ஊசலாட்டத்தின் கட்டம். குரல் உடையும் விடலைப்பருவம். சமூக ஜனநாயகத்தின் குரல் உடைந்தது. பொய்க் குரல் ஒலித்தது. தலைவர்கள் தனித்துத் திசையின்றிப் பின்நோக்கிச் சென்றனர். இயக்கமோ வளர்ந்து வேகமாய் முன்னேறியது.
பாட்டாளி வர்க்கப் போராட்டம் தொழிலாளர்களின் புதிய பகுதிகளுக்குப் பரவி ருஷ்யாவெங்கும் விரிந்தது. அதே நேரம் அது மாணவரிடையேயும் மக்களின் பிற பகுதியினரிடையேயும் ஜனநாயக உணர்ச்சி மீண்டும் தலையெடுக்கத் தூண்டிவிட்டது.
இருந்த போதும், தன்னியல்பான எழுச்சியின் விரிவுக்கும் வலுவுக்கும் முன்னே தலைவர்களின், அரசியல் உணர்வு மண்டியிட்டது. சமூக ஜனநாயகவாதிகளிடையே, ‘சட்டபூர்வமான ’ மார்க்சியத்தை மட்டுமே படித்துப் பயிற்சி பெற்ற ஊழியர்கள், ஆதிக்க நிலைக்கு வந்துவிட்டனர்; எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் தன்னியல்பு தலைவர்களிடமிருந்து அதிகமாக அரசியல் உணர்வைக் கோரியதோ அவ்வளவுக்கவ்வளவு இந்த இலக்கியம் தனது போதாமையைக் காட்டிக் கொண்டது. தலைவர்கள் தத்துவ விஷயத்திலும் (‘விமர்சன சுதந்திரம்’) நடைமுறை விஷயத்திலும் (பக்குவமின்மை) பின்னடைந்தது மட்டுமின்றி எல்லாவிதமான படாடோபமான வாதங்களைக் கொண்டு தம் பிற்படுத்தப்பட்ட நிலையை நியாயப்படுத்தவும் முயன்றனர். சமூக ஜனநாயகவாதத்தைத் தொழிற்சங்கவாதத்தின் தரத்திற்குத் தாழ்த்திவிட்டனர். ‘முழு முற்றூடானதை’ (அப்சொல்யூட்) வணங்கும் ஒருவன் நடைமுறை வேலைபால் காட்டும் இறுமாந்த இளக்காரம் அல்ல, சின்னத்தனமான நடைமுறையும் தத்துவத்தின்பால் முற்றான உதாசீனமும் கலந்த கலவைதான், இந்தக் காலப் பகுதியை இனம் குறித்துக் காட்டுகிறது. இதற்கு ரபோச்சியோ தேலோ, ஒரு சரித்திரக் குறிப்பொருளாகும்.
‘வர்க்கப் போராட்டம்’ என்ற முழக்கம் மென்மேலும் விரிவான முனைப்பான நடவடிக்கைக்குத் தூண்டிவிடவில்லை. ‘பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது’ என்ற அவர்கள் கருத்து குடிக்கும் இதமான இனிப்பு மருந்தானது. கட்சி என்ற கருத்து புரட்சியாளர்களின் ஒரு போர்க்குணமிக்க அமைப்பைப் படைப்பதற்காக அல்லாமல், ஒரு விதமான ‘புரட்சிகரமான அதிகாரத்துவத்தை’ நியாயப்படுத்தவும் ‘ஜனநாயக’ வடிவங்களில் குழந்தைத்தனமாக விளையாடவுமே பயன்படுத்தப்பட்டது.
மூன்றாவது கட்டம் எப்போது முடியும் நான்காவது எப்போது துவங்கும் என நாம் அறியோம். நாம் வரலாறு என்ற கட்டத்திலிருந்து, நிகழ்காலம் என்ற கட்டத்திற்குள்ளும் ஒரு பகுதி எதிர்காலம் என்ற கட்டத்திற்குள்ளும் செல்கிறோம்.
ஆனால் நாம், நான்காவது கட்டம், போர்க்குணமிக்க மார்க்சியம் உறுதிப்படுவதற்கும், ரஷ்ய சமூக ஜனநாயகம் நெருக்கடியில் இருந்து பலப்பட்டு முழு ஆற்றலோடு எழுவதற்கும், மிகவும் புரட்சிகரமான வர்க்கத்தின் உண்மையான முன்னணிப் பிரிவு, சந்தர்ப்பவாதப் பிரிவின் ‘இடத்தைப் பிடிப்பதற்கு’ இட்டுச் செல்லும் எனவும், உறுதியாக நம்புகிறோம்.
என்ன செய்ய வேண்டும்? மூன்றாவது கட்டத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
அந்த மூன்றாவது கட்டத்திற்கு முடிவு கட்டத்தான், லெனின், இஸ்க்ரா பத்திரிகையை வெளியிட முடிவு செய்தார். லெனினும் அவரோடு வெளிநாடுகளில் இருந்தவர்களும் தொடர் முயற்சிகள் எடுத்து, டிசம்பர் 1900ல் இஸ்க்ரா வெளியிட்டனர். ஆசிரியர் குழுவில் லெனின், பிளக்கனவ், மார்டோ, ஆக்சல்ராட், போட்ரசேவ் மற்றும் சாசுலிச் இருந்தனர். சைபீரியாவில் சிறை வைக்கப்பட்டவர்கள் கவிஞர் புஷ்கினுக்கு எழுதிய பதிலில், “தனி ஒரு தீப்பொறி பெருந்தீயை உருவாக்கும்” என்ற வரிகள் இருந்தன. இஸ்க்ரா இந்த வாசகத்தோடு வெளியிடப்பட்டது. தீப்பொறி பெருந்தீயை உருவாக்கியது. அதில் நிலஉடைமை பிரபுக்களின் ஜாரிச முடியாட்சியும் முதலாளித்துவ அதிகாரமும் எரிந்து சாம்பலாயின.
“பொருளாதாரவாதத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை எளிய நடையில் எண்ணற்ற ஸ்தூலமான வாதங்களோடு முறையாகக் கணக்குத் தீர்க்க வேண்டி இருந்தது. இயல்பான ‘அப்பாவித்தனமான’ ‘விமர்சன சுதந்திரம்’ போன்றதொரு முழக்கம் நமக்கு எப்படி ஒரு போராடும் சவாலாகிறது, தன்னெழுச்சியான மக்கள் இயக்கத்தோடு உள்ள உறவில் சமூக ஜனநாயகவாதிகளின் பாத்திரம் என்ன, போன்ற அடிப்படையான கேள்வியில் கூட, நாம் ஏன் ஓர் ஒத்த புரிதலுக்கு வர முடியவில்லை என விளக்க வேண்டி இருந்தது. மேலும், அரசியல் கிளர்ச்சியின் இயல்பு மற்றும் சாரம் பற்றிய நமது கருத்தை விளக்கும்போது, அது, தொழிற்சங்கவாதக் கொள்கைக்கும் சமூக ஜனநாயகக் கொள்கைக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குவதானது. அமைப்புக் கடமைகளை நாம் விவரிக்கப் போனது, பொருளாதாரவாதிகளைத் திருப்திப்படுத்தும் கற்றுக்குட்டி முறைகளுக்கும் நம் கருத்தில் தவிர்க்கவே முடியாதது என நாம் கருதும் ஒரு புரட்சியாளர்களின் அமைப்பிற்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குவதாக அமைந்தது. கடைசியாக அதில் ரஷ்ய அரசியல் செய்தித்தாள் பற்றிய திட்டத்தை விளக்க நேர்ந்தது.
என்ன செய்ய வேண்டும் நூலை ஏன் எழுத நேர்ந்தது என பிப்ரவரி 1902ல் லெனின் எழுதிய மேற்கூறிய விஷயங்கள் எல்லாம், இஸ்க்ரா நடத்திய கருத்துப் போராட்டங்களின் தொடர்ச்சியே ஆகும். இஸ்க்ரா ரஷ்யப் பாட்டாளி வர்க்க முன்னோடிகள் மேல் செலுத்திய தாக்கம் கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 1901, இஸ்க்ராவில் ஒரு ஜவுளி மில் தொழிலாளியின் கடிதம் வெளியானது. “நான் என் சக தோழர்களுக்கு இஸ்க்ராவைக் காட்டினேன். அது படிக்கப்பட்டு கிழிந்துவிட்டது. நாங்கள் அதனைப் பொக்கிஷமாய்க் கருதுகிறோம். .............. மக்கள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பைப் பற்ற வைக்க ஒரு தீப்பொறி போதும் .............. கடந்த காலத்தில் வேலை நிறுத்தங்கள் முக்கிய நிகழ்ச்சிகள். இப்போது அவை போதாது. இப்போது நாம் எல்லா சக்திகளையும் திரட்டி விடுதலைக்காகப் போராட வேண்டும்............... நாங்கள், எப்படித் துவங்குவது என்பது பற்றி மட்டுமல்லாமல், எப்படி வாழ வேண்டும் எப்படிச் சாக வேண்டும் எனக் கற்றுக் கொடுங்கள் எனக் கேட்க இஸ்க்ராவுக்குக் கடிதம் எழுதுகிறோம்”. டிசம்பர் 11, 1901லிருந்து நவம்பர் 1, 1903 வரை இஸ்க்ரா தன் புரட்சிகரப் பணிகளை ஆற்றியது. கட்சியின் இரண்டாவது காங்கிரசுக்குப் பிறகு போல்ஷ்விக் பத்திரிகையாக செயல்பட்டது.
இஸ்க்ரா - கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் - ஓரடி முன்னால் ஈரடி பின்னால்
தொழிலாளி வர்க்க எழுச்சி அலைகளும், பார்த்த மாத்திரத்தில் தெரிகிற மாதிரி புரட்சி நெருங்கி இருந்ததும், புரட்சிகர இயக்கத்திற்குத் தலைமை தாங்கும் ஆற்றலுடைய, ஓர் ஒன்றுபட்ட மத்தியத்துவப்படுத்தப்பட்ட தொழிலாளி வர்க்கக் கட்சியைக் கோரின. ஆனால், உள்ளூர் மட்ட கட்சி அமைப்புக்கள், கட்சி கமிட்டிகள், குழுக்கள், வட்டங்கள் பரிதாபகரமான நிலையில் இருந்ததாலும், அவர்களது அமைப்பு ஒற்றுமையின்மையும் கருத்தியல் வேற்றுமைகளும் மிகவும் ஆழமாக இருந்ததாலும், அப்படிப்பட்ட ஒரு கட்சியைக் கட்டுவது, மிகமிகக் கடினமான பணியாய் இருந்தது.
ஜார் அரசாங்கம், இந்த அமைப்புக்களின் ஆகச்சிறந்த தொழிலாளர்களை, தனது கொடூரமான ஒடுக்குமுறைத் தீயில், கைது செய்தது, நாடு கடத்தியது, கடுங்காவல் தண்டனையில் வைத்தது; பெரும்எண்ணிக்கையிலான உள்ளூர் கமிட்டிகளும் அவற்றின் உறுப்பினர்களும், அற்பத்தனமான உள்ளூர்மட்ட நடவடிக்கைகள் தாண்டி வேறு ஏதும் செய்வதில்லை; கட்சிக்குள் அமைப்புரீதியான கருத்தியல்ரீதியான ஒற்றுமை இல்லாமையின் தீங்கை அவர்கள் உணரவில்லை; உள்ளே நிலவிய ஒற்றுமையின்மை கருத்தியல் குழப்பம் அவர்களுக்குப் பழகிப் போய் இருந்தது; ஒன்றுபட்ட மத்தியத்துவப் பட்ட கட்சி இல்லாமலே அடுத்தடுத்து செல்ல முடியும் என அவர்கள் நம்பினர்; இவை கட்சி கட்டும் பணியை மேலும் கடினமாக்கின.
லெனின், இஸ்க்ரா மூலம் ஒரு நாடு தழுவிய மத்தியத்துவப்படுத்தப்பட்ட கருத்தியல் போராட்டத்தை, குறிப்பாக, பொருளாதாரவாதிகளுக்கு எதிராக நடத்துவது, அடுத்த கட்சி காங்கிரஸ் கூட்டுவதற்கு முன் நடக்க வேண்டும் எனக் கருதினார்.
கட்சியில் ஒற்றுமையை நாம் சாதிக்கும் முன், நாம் ஒன்றுபடுவதற்காக, நாம், முதலில் உறுதியான திட்டவட்டமான பிரித்து நிறுத்துகிற எல்லைக்கோடுகளை வரையறுக்க வேண்டும் என லெனின் கருதினார். புரட்சிகரக் கருத்துக்களும், வால்பிடிக்கும் சந்தர்ப்பவாதக் கருத்துக்களுக்கும் இடையிலான கருத்தியல் போராட்டம் எல்லா விசயங்களிலும் இஸ்க்ரா மூலம் நடத்தப்பட்டது.
இஸ்க்ரா என்ற எலும்புக் கூட்டிற்கு நிஜவாழ்வின் புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் ரத்தமும் சதையும் தர வேண்டும் எனவும், இஸ்க்ரா, பிரச்சாரகராக கிளர்ச்சியாளராக அமைப்பாளராகச் செயல்படும் என்ற கருத்தை நடைமுறைப்படுத்தவும் செய்தார். இஸ்க்ராவைச் சுற்றி தொழில் முறைப் புரட்சியாளர்கள் அணிதிரட்டப்பட்டனர். பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் இறுதி லட்சியம் மற்றும் இந்த இறுதி லட்சியத்தை அடையும் வழியில் கட்சி போராடுவதற்கான கோரிக்கைகள் ஆகியவை அடங்கிய நகல் திட்டத்தை இஸ்க்ரா பிரசுரித்தது.
கட்சியின் இரண்டாவது காங்கிரஸ்
17.07.1903 அன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் துவங்கிய காங்கிரஸ், காவல்துறை தொந்தரவால், லண்டன் நகரில் தொடர்ந்தது. 26 அமைப்புக்கள் 43 பிரதிநிதிகளை அனுப்பின. அவர்களிடம் 51 வாக்குகள் இருந்தன.
இஸ்க்ராயிஸ்ட்களிடம் 33 வாக்குகள் இருந்தன. லெனின் ஆதரவு வாக்குகள் 24, மார்டோவ் ஆதரவு வாக்குகள் 9 இருந்தன. நடுநிலையாளர்கள் வாக்குகள் 10 இருந்தன. இஸ்க்ரா எதிர்ப்பாளர்கள், 3 பொருளாதாரவாதிகள் 5 பண்டிஸ்ட்கள் என 8 வாக்குகள் இருந்தன. இந்த காங்கிரசில்தான், நடந்த வாதங்கள், பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துக்கள், அமைப்பு தொடர்பான அணுகுமுறை வாக்களித்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில், போல்ஷ்விக் மென்ஷ்விக் துருவச் சேர்க்கை ஏற்பட்டது. போல்ஷ்விக் பெரும்பான்மை மென்ஷ்விக் சிறுபான்மை என்றானது. இரண்டாவது காங்கிரசில் தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் முன்வைத்த கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அவர்கள் முன்வைத்தபடி மத்தியக் குழுவும் இஸ்க்ரா ஆசிரியர் குழுவும் தேர்வு செய்யப்பட்டன. இரண்டாவது காங்கிரசில் யார் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையான விதியைத் தீர்மானிப்பதில் கட்சி அமைப்பு ஒன்றின் கீழ் செயல்படுபவர்தான் கட்சி உறுப்பினர் என்ற லெனின் முன்வைப்பு தோற்கடிக்கப்பட்டது. இரண்டாவது காங்கிரஸ் முடிந்த பிறகு, மென்ஷ்விக்குகள் கட்சி அமைப்புக் கோட்பாடுகளுக்கு மாறாகச் செயல்பட்டனர். தோழர் லெனின் இஸ்க்ரா ஆசிரியர் குழுவில் இருந்து விலக நேர்ந்தது. காங்கிரஸிலும் காங்கிரசுக்குப் பிறகு நடந்த விசயங்கள் பற்றியும் லெனின் 1904 பிப்ரவரி - மே மாதங்கள் வாக்கில் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் நூலை எழுதினார்.
ஓரடி முன்னால் ஈரடி பின்னால் சொன்ன விசயங்கள்
• ஒரு ரகசியக் கட்சி, தலைமறைவு இருள் வாழ்க்கையில் இருந்து வெளியே வருவதில் வெற்றி பெற காங்கிரஸ் உதவியது.
• காங்கிரஸ், மொத்தக் கட்சியின் இயல்பையும், அதன் கவனிக்கத்தக்க ஒவ்வொரு பிரிவுக்கும் இடையிலான, திட்டம் செயல்தந்திரங்கள் மற்றும் அமைப்பு தொடர்பான, உட்கட்சிப் போராட்டத்தின் பயணப் பாதையையும் விளைவுகளையும், பட்டப்பகல் வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
• முதன்முறையாக, தமக்குள் போரிட்டுக் கொண்டிருந்த டசன் கணக்கான குழுக்களை, ஒரு கருத்தின் சக்தியால் மட்டுமே இணைக்கப்பட்டிருந்த குழுக்களை ஒன்றுபடுத்தி, அவர்கள் மத்தியிலான வட்டவாதத் தளர்வு, புரட்சிகர பாமரத்தனம் ஆகியவற்றைக் கைவிட வைப்ப தில் வெற்றி கிட்டியது. அவை எல்லாமே இப்போது, தங்களது குழுக்களின் தனித்திருத்தலை, குழு சுதந்திரத்தை, தாங்கள் முதன் முறையாக உருவாக்கிக் கொண்டிருந்த, ஒரு மகத்தான முழுமைக்காக, கட்சிக்காக, தியாகம் செய்ய (கோட்பாட்டளவில்) தயாரானார்கள்.
ஆனால், அரசியலில் எந்த வெற்றியும் இலவசமாகக் கிடைப்பதில்லை. போரிட்டுத்தான் வென்றாக வேண்டும். பலவாக இருந்த அமைப்புக்களை அழிக்கும் போராட்டம் மிகவும் உக்கிரமாக இருந்தது. சுதந்திரமான பகிரங்கமான போராட்டக் காற்று சூறாவளி யாய் மாறியது. அந்தச் சூறாவளி, எல்லா வட்ட நலன்களையும், உணர்வுகளையும், மரபுகளையும் பிடுங்கி எறிந்தது. முதன்முறையாக, உண்மையான கட்சி நிறுவனங்களை உருவாக்கியது. எவ்வளவு நல்ல விஷயம்!
ஆனால், ஒருவர் தம்மை ஒரு பெயர் சொல்லி அழைத்துக் கொள்வது ஒரு விஷயம், அந்தப் பெயருக்கேற்ப நடந்து கொள்வது வேறு விசயமல்லவா? கோட்பாட்டளவில் கட்சிக்காக வட்டமுறையைத் தியாகம் செய்வது ஒரு விசயமாகவும், தமது சொந்த வட்டத்தைத் தியாகம் செய்வது வேறு விசயமாகவும் இருந்தது.
• வீசிய சூறாவளி, கட்சி நீரோட்டத்தின் அடியில் இருந்த சேற்றையும் கசடையும் எல்லாம் மேலே கொண்டு வந்தது.
• சேறும் கசடும் பழிவாங்கின.
• பழைய கேடுகெட்ட வட்ட உணர்வு, புதிய இளைய கட்சி உணர்வை வீழ்த்தியது. சந்தர்ப்பவாதப் பிரிவு தற்காலிக வெற்றி பெற்றது
ஓரடி முன்னால், ஈரடி பின்னால். அவ்வாறு, தனி நபர்களின் வாழ்க்கையில், தேசங்களின் வரலாற்றில், கட்சிகளின் வளர்ச்சியில் நிகழ்ந்துதான் இருக்கிறது. புரட்சிகர சமூக ஜனநாயகத்தின், பாட்டாளி வர்க்க அமைப்பின், கட்சி கட்டுப்பாடு தொடர்பான கோட்பாடுகளின், தவிர்க்க முடியாத முழுமையான வெற்றியை, ஒரு கணமேனும் சந்தேகப்படுவது, குறை இயல்புடைய கோழைத்தனமாகும். அமைப்பு, திட்டம், செயல்தந்திரங்கள் விசயத்தில், பரிதாபமாக முதலாளித்துவ உளவியலிடம் சரணடையும், விமர்சனமேதுமின்றி முதலாளித்துவ ஜனநாயகத்தின் நோக்குநிலையை மேற்கொள்ளும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை முனைமழுங்கச் செய்யும் சந்தர்ப்பவாதத்திற்கான எல்லா காரணங்களையும், அதனுடன் நமது எல்லா வேறுபாட்டுக் கட்டங்களையும் அதன் பேரழிவுத் தன்மையையும் பற்றிய, ஒரு முழுமையான உணர்வுபூர்வமான புரிதலை, விடாப்பிடியான முறைசார்ந்த வேலைகள் மூலம், எல்லா கட்சி உறுப்பினர்க்கும், குறிப்பாகத் தொழிலாளர்களுக்கும் தர வேண்டும்.
நாம் ஏற்கனவே நிறைய வென்றுள்ளோம். தோல்வி கண்டு துவளாமல் போராட வேண்டும். வட்டக்குழு சச்சரவு என்ற பாமர முறைகளை வெறுத்து ஒதுக்கி, எல்லா சமூக ஜனநாயகவாதிகளையும், ஒரு கட்சி என்ற பிணைப்பில், நாம் போராடிக் கொண்டு வந்ததைப் பாதுகாக்க வேண்டும்.
இப்படித்தான் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், பற்றுறுதியுடனும், தொலை நோக்குப் பார்வையுடனும் ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கக் கட்சியும் புரட்சியாளர்களும், 1905 புரட்சி, 1917 மார்ச், நவம்பர் புரட்சிகள் நோக்கி முன்னேறினார்கள்.