உள்ளே...
இடிந்தகரை மக்கள் விடுத்துள்ள
அறிவார்ந்த, உகந்த நேரத்திலான
அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்!
மறக்க முடியாது
மன்னிக்கவும் முடியாது
நந்தனுக்குத் தடை வேண்டாம்!
நந்திகளே விலகுங்கள்!
தொழிலாளர் வர்க்கம் மீது
தீவிரப்படுத்தப்படும் தாக்குதலும்
ஜனநாயகத்தின் முன்னுள்ள சவால்களும்
சிவகாசி லாபவெறிப் படுகொலை:
விதிமீறல்களின் வெறித்தாண்டவம்
தாய்மை வர்த்தகம்
நகர்ப்புற வளர்ச்சித் திட்டமும்
உலக வங்கியும்
கல்வி
இடிந்தகரை மக்கள் விடுத்துள்ள
அறிவார்ந்த, உகந்த நேரத்திலான
அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்!
மறக்க முடியாது
மன்னிக்கவும் முடியாது
நந்தனுக்குத் தடை வேண்டாம்!
நந்திகளே விலகுங்கள்!
தொழிலாளர் வர்க்கம் மீது
தீவிரப்படுத்தப்படும் தாக்குதலும்
ஜனநாயகத்தின் முன்னுள்ள சவால்களும்
சிவகாசி லாபவெறிப் படுகொலை:
விதிமீறல்களின் வெறித்தாண்டவம்
தாய்மை வர்த்தகம்
நகர்ப்புற வளர்ச்சித் திட்டமும்
உலக வங்கியும்
கல்வி
அரசும் புரட்சியும்
லெனின்
...கம்யூனிச சமுதாயத்தின் முதற்கட்டத்தில் (சாதாரணமாய் இது சோசலிசம் என்றழைக்கப்படுகிறது) ‘முதலாளித்துவ உரிமை’ அதன் முழு அளவிலும் ஒழிக்கப்பட்டுவிடுவது இல்லை; பகுதி அளவுக்கே, இதுகாறும் சித்தி பெற்றுள்ள பொருளாதாரப் புரட்சிக்கு ஏற்ற அளவுக்கே, அதாவது உற்பத்தி சாதனங்களைப் பொறுத்த மட்டிலுமே ஒழிக்கப்படுகிறது. ‘முதலாளித்துவ உரிமை’ இவற்றை தனி நபர்களுடைய தனி உடைமையாய் அங்கீகரிக்கிறது. சோசலிசம் இவற்றை பொது உடைமையாய் மாற்றுகிறது. அந்த அளவுக்கு - அந்த அளவுக்கு மட்டுமே - ‘முதலாளித்துவ உரிமை’ மறைகிறது.
ஆனால் அதன் மற்றொரு பகுதியைப் பொறுத்தவரை அது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமுதாய உறுப்பினர்களிடையே உற்பத்திப் பொருட்களின் விநியோகத்திலும் உழைப்பைப் பிரித்தளிப்பதிலும் ஒழுங்கியக்கியாய் (நிர்ணயிக்கும் காரணியாய்) தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ‘வேலை செய்யாதவன் உண்ணவும் வேண்டாம்’ என்னும் சோசலிச கோட்பாடு ஏற்கனவே சித்தி பெற்று விட்டது. ‘சம அளவிலான உழைப்பிற்கு சம அளவிலான உற்பத்திப் பொருட்கள்’ என்னும் மற்றொரு சோசலிச கோட்பாடும் ஏற்கனவே சித்தி பெற்று விட்டது. ஆயினும் இது இன்னமும் கம்யூனிசம் ஆகிவிடவில்லை. சமமல்லாதவர்களுக்கு சமமில்லா (மெய்யாகவே சமமில்லா) உழைப்பு அளவுகளுக்கு ஊதியமாய் சம அளவிலான உற்பத்தி பொருட்களை அளிக்கும் ‘முதலாளித்துவ உரிமை’ இன்னமும் ஒழிக்கப்பட்டாக வில்லை.
இது ஒரு ‘குறைபாடே’, ஆனால் கம்யூனிசத்தின் முதற்கட்டத்தில் இது தவிர்க்க முடியாதது என்று மார்க்ஸ் கூறுகிறார். ஏனெனில் கற்பனாவாதத்தில் ஈடுபடாதிருக்க வேண்டுமாயின், முதலாளித்துவத்தை வீழ்த்தியதும் மக்கள் உரிமை தராதரம் எதுவும் பாராது சமுதாயத்துக்காக வேலை செய்ய உடனடியாய் கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று நாம் நினைக்கக் கூடாது. தவிரவும் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதும் இத்தகைய ஒரு மாறுதல் ஏற்படுவதற்கு வேண்டிய பொருளாதார முன் நிபந்தனைகள் உடனடியாய் படைக்கப்பட்டு விடுவதில்லை.
‘முதலாளித்துவ உரிமையின்’ தராதரத்தைத் தவிர இப்பொழுது வேறு தராதரம் இருக்கவில்லை. ஆகவே இந்த அளவுக்கு அரசுக்குரிய தேவை இன்னும் இருந்து வருகிறது. உற்பத்திச் சாதனங்களின் பொது உடைமையை பாதுகாப்பதுடன் உழைப்பிலும் உற்பத்தி பொருட்களின் விநியோகத்திலும் சமத்துவத்தை பாதுகாக்கக் கூடிய அரசு தேவைப்படுகிறது.
முதலாளிகளும் வர்க்கங்களும் இனி இல்லையாதலால் அந்தளவுக்கு அரசு உலர்ந்து உதிர்கிறது. ஆகவே எந்த வர்க்கமும் இனி அடக்கப்பட முடியாது.
ஆனால் அரசு இன்னும் அறவே உலர்ந்து உதிர்ந்து விடவில்லை, ஏனெனில் உண்மையில் சமத்துவமின்மையை புனிதமாக்கிடும் ‘முதலாளித்துவ உரிமையைப்’ பாதுகாக்க வேண்டியிருக்கிறது. அரசு அறவே உலர்ந்து உதிர முழு நிறைவான கம்யூனிசம் அவசியமாகும்.
கம்யூனிச சமுதாயத்தின் உயர்கட்டம்
மார்க்ஸ் தொடர்ந்து கூறுகிறார்:
‘.....கம்யூனிச சமுதாயத்தின் உயர்கட்டத்தில், தனிநபரை உழைப்புப் பிரிவினைக்குக் கீழ்ப்படுத்தி அடிமைத் தளையிடுவதும் அதனுடன் கூட மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையிலான எதிர்நிலையும் மறைந்த பின், உழைப்பானது பிழைப்புக்கான சாதனமாய் மட்டுமின்றி வாழ்வின் முதற்பெரும் தேவையும் ஆகியபின், தனி நபருடைய சர்வாம்ச வளர்ச்சியோடு கூட உற்பத்தி சக்திகளும் அதிகரித்துவிட்டபின் பொது சமுதாயச் செல்வத்தின் அருவிகள் எல்லாம் மேலும் அபரிமிதமாய் பெருக்கெடுத்து ஓடுகையில் - அப்பொழுதுதான் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு முழுமையாகக் கடக்கப்பட்டு, சமுதாயம் தன் பதாகையில் ‘ஒவ்வொருவரிடமிருந்தும் அவருடைய ஆற்றலுக்கேற்ப, ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைகளுக்கு ஏற்ப’ என்பதாய் பொறித்துக்கொள்ளும்!’
தலையங்கம்
கூடன்குளம்: சொந்த நாட்டு மக்கள் மீது அரசு தொடுத்துள்ள போர்
சென்ற ஆண்டு செப்டம்பர் 11 அன்று ஜெயலலிதா அரசாங்கத்தின் காவல்துறை திட்டமிட்டு தலித் மக்கள் பல பேரைச் சுட்டுத் தள்ளி பரமக்குடியை சுடுகாடாக்கியது. இந்த ஆண்டு செப்டம்பர் 10 அன்று இடிந்தகரையை மயான பூமியாக்கியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றம் கூடங்குளம் அணுஉலையை திறக்க அணுஉலைக்குள் ஆபத்தான யுரேனியத்தை நிரப்ப 31.08.2012 அன்று அனுமதி அளித்தும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடுத்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தும் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், அரசு மக்களின் அச்சத்தைக் கணக்கில் கொண்டுள்ளது என்றும் ஜப்பான் புகுசிமா அணுஉலை விபத்தையும் கணக்கில் கொண்டுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா முன்னேற்பாடு களுடன் கட்டப்பட்டுள்ளது என்றும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அப்துல்கலாம் சொல் லிவிட்டார் அணு உலை நன்றாக உள்ளது என்று, அதனால் அவர் கூறியதுபோல் அப்பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துங்கள் என்றும் தீர்ப்பு கூறியது.
மக்களின் அச்சத்தைப் போக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்பது உலகமே அறிந்தது. செப்டம்பர் 11 அன்று அணுஉலையில் எரிபொருள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. ஓர் ஆண்டிற்கும் மேலாக அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த மக்கள், இனி பொறுக்க முடியாது என்று அணு உலையை முற்றுகையிடுவோம் என அறிவித்தனர். மத்திய ரிசர்வ் படை, தொழிற்சாலைகள் அதிவிரைவுப் படை, அதிரடிப்படை என பல்லாயிரக்கணக்கான போலீஸ் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் கடற்கரை கிராமங்களைச் சுற்றி வளைத்தனர். போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர், முற்றுகையின்போது பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயக்குமாரே பொறுப்பு என்றார். மாவட்ட ஆட்சியரும் அரசும், தன் மக்கள் மீது தாம் நடத்தப் போகும் யுத்தத்தில் ஏற்படும் இழப்பிற்கு உதயகுமார் பொறுப்பு என்றனர். காவல்துறை உயர்அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கேடயமாக வைத்துள்ளார்கள் என்று சொல்லி போராட்டக்காரர்கள் வேறு பொதுமக்கள் வேறு எனப் பிரித்துப் பேசினர். எதற்கும் மசிய மறுத்த கிட்டத்தட்ட 10000க்கும் மேற்பட்ட மக்கள் செப்டம்பர் 9 அன்று நிராயுதபாணியாக கூடங்குளம் அணு உலைக்கு அருகே 500 மீட்டர் தூரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்தார்கள். காவல்துறை மக்களிடம் பேசிப் பார்த்தது. மிரட்டிப் பார்த்தது. நீங்கள் எங்கள் எதிரியல்ல. உங்களை போராட்டத்திற்குப் பயன்படுத்தும் உதயகுமார், புஷ்பராயன், மைபா.ஜேசுதாஸன் போன்றவர்களே எங்கள் எதிரி என்றார்கள். நாங்கள்தான் போராடுகிறோம் என்று மக்கள் பதிலடி கொடுத்தார்கள்.
கூடன்குளம் அணுஉலையை இயக்க எரிபொருள் நிரப்பும் பணியை உடனடியாக நிறுத்தக் கோரி இடிந்தகரையில் இரண்டாவது நாளாகக் கூடியிருந்த மக்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டு வீசிக் கலைத்துள்ளனர்.
அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. கடலோரம் கூடியிருந்த மக்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தபோது, மக்கள் கடலுக்குள் ஓடிய காட்சி தாமிரபரணி படுகொலைக் காட்சியை மீண்டும் கண்முன் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் காவல்துறை அராஜகம் நாளும் அதிகரித்து வருவதன் மற்றுமொரு நிகழ்வாக இடிந்தகரை மக்கள் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. மூன்று வயது குழந்தை கொல்லப்பட்டுவிட்டதாக புதிய தலைமுறை தொலைக் காட்சி செய்தி தருகிறது. பலரைக் காணவில்லை. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓராண்டு காலமாக இல்லாமல் செப்டம்பர் 10 அன்று தமிழக காவல்துறையினர் 3000 பேர் இடிந்தகரை பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இடிந்தகரை ஓராண்டு காலமாக ஏற்கனவே சுற்றி வளைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் இயல்பு வாழ்க்கையே வாழ முடியாத நிலையில் இன்று பகுதிக்குள்ளும் காவல்துறையினர் நுழைந்து பகுதியையே சூறையாடிருப்பது மக்களை மேலும் அச்சுறுத்தும் நடவடிக்கையே. தமிழ்நாட்டில் நந்திகிராம், சட்டிஸ்கர் போன்ற ஒரு நிலையை உருவாக்க ஜெயலலிதா முயற்சி செய்வதன் வெளிப்பாடே இந்த காவல்துறை நடவடிக்கை. உதயகுமார் மற்றும் போராட்டக் குழு தலைவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது. காவல் துறையின் அனைத்து ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு இடிந்த கரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள காவல்துறையினர் உடனடியாக பகுதியை விட்டு வெளியேற வேண்டும். அணுஉலை இயக்கப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் வாழ்வை நாசமாக்கும், அடுத்தடுத்த சந்ததியினரை பாதிக்கும் கூடன்குளம் அணுஉலை வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகைக்குண்டு வீசித் தாக்கியதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஜெயலலிதா, கூடங்குளம் மக்கள் அணு உலை எதிர்ப்பாளர்களின் மாயவலையில் சிக்கி விடக் கூடாது என்றும் போராட்டத்தைக் கை விட்டு அணுஉலை இயங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மணப்பாட்டில் காவல் துறை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அந் தோணி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த கையோடு அது காவல்துறை தன்னை பாதுகாத்துக்கொள்ள நடத்திய துப்பாக்கிச் சூடு என்றும் அணுஉலை பாதுகாப்பாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் மற்றும் அறிவிப்பு விடுத்தார். தலையை மணலில் புதைத்துக் கொள்வதால் போராட்டங்கள் மங்கிவிடப் போவதில்லை.
தடியடி தாக்குதல் செய்தி கேட்டு திரண்டு வந்த மணப்பாடு மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி என்பவர் கொல்லப்பட்டுவிட்டார். தூத்துக்குடியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 3000க்கும் அதிகமான மக்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்கள் பற்றி எரிகின்றன. தமிழகம் முழுவதும் மாணவர்களும் மற்றவர்களும் காவல்துறையின் அராஜகத்துக்கு எதிராக, ஜெயலலிதாவின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் பட்டாச்சார்யா முதலமைச்சருக்கு அளித்துள்ள கடிதத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையிலான குழு தந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபோதே, கடற்கரையில் கூடியிருந்த மக்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்திய செய்தி கிடைத்து ஆட்சியரை சந்திக்க சென்றிருந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தோழர்கள் சங்கரபாண்டியன், ரமேஷ், தேன்மொழி, கணேசன் உள்ளிட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுவிக்கப்பட்டனர்.
இப்போது 10,000க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்தகரை கோயில் முன்பு 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.
கடிதம்
இடிந்தகரை மக்கள் விடுத்துள்ள
அறிவார்ந்த, உகந்த நேரத்திலான
அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்!
பெறுநர்
திருமிகு ஜெயலலிதா
மாண்புமிகு முதலமைச்சர்
தமிழ்நாடு
திருமிகு ஜெயலலிதா அவர்களுக்கு
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பதாகையில் அணுமின்நிலையத்துக்கு எதிராக, அணுஉலையில் வேலைகளை துவக்குவதற்கு எதிராக, அமைதியான மக்கள் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கும், இடிந்தகரை மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், செப்டம்பர் 9 அன்று ஆலையை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது பற்றி செய்திகளில் பார்க்கிறோம் (தி இந்து, செப்டம்பர் 7, 2012).
கூடன்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி ஒப்புதல் அளித்தது முதல், மத்திய மாநில அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மக்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நெருக்கடியான கட்டத்தில்தான் அவர்கள் இதுபோன்ற ஒரு கடினமான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் விளைவுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். தாங்கள் உடனடியாக தலையிட்டு ஆலை துவக்குவதை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். அந்தப் பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்; அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான மிகவும் உண்மையான கவலைகள் பற்றிய ஏற்புடைய எந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. எந்த அடிப்படையுமற்ற தேசத் துரோக குற்றச்சாட்டுகளையும் இன்னும் பல வழக்குகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். மக்கள் நலன் பற்றிய பிரச்சனையை, தற்போதைய தலைமுறை மட்டுமன்றி எதிர்கால சந்ததியினர் பற்றிய பிரச்சனையை அவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இப்போது பிரச்சனை ஒரு முக்கியமான கட்டத்துக்கு வந்துவிட்டது. போராடிக் கொண்டிருக்கிற கிராமப்புற, கடலோர வறிய மக்கள் அணுஉலையை முற்றுகையிட முடிவு செய்திருக்கிறார்கள். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான நீங்கள், தமிழக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற வகையில், இப்போதாவது மக்களின் கவலைகளுக்கும் நம்பிக்கையற்ற நிலைக்கும் கூருணர்வுடன் பதில்வினையாற்றுவீர்கள் என்று நம்புகிறோம். தங்கள் அடிப்படை உரிமையான பாதுகாப்பான வாழ்க்கைக்காக அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் மீது நீங்கள் காவல்துறையை ஏவக்கூடாது என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
ஒரு பேரழிவை எந்த நேரத்திலும் தடுக்கலாம். இந்திய மண்ணில் ஒரு ஃபுகுஷிமா நிகழ்வதைத் தடுக்க, கூடன்குளம் அணுஉலை இயங்கத் துவங்குவதைத் தடுக்க, இடிந்தகரை மக்கள் விடுத்துள்ள அறிவார்ந்த, உகந்த நேரத்திலான அழைப்புக்கு தாங்கள் செவிசாய்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
நன்றியுடன்
தங்கள் உண்மையுள்ள
திபங்கர் பட்டாச்சார்யா
பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)
செப்டம்பர் 9 2012
நாட்டு நடப்பு
மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது
எஸ்.குமாரசாமி
2002 பிப்ரவரி 28 அன்று கோத்ராவில் சபர்மதி விரைவு வண்டியின் ஒரு பெட்டி எரிந்தது. (அந்த வழக்கில் 11 இசுலாமியர் களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது). அதற்குப் பிறகு குஜராத் பற்றியெரிந்தது. அரசு துணையுடன், மாநிலம் முழுவதும் இசுலாமியர்கள் வேட்டையாடப்பட்டனர். மாநிலம் முழுவதும் 1200 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வினைக்கு பதில்வினை இருக்கும் என்று ராஜதந்திரம் பேசினார் நரேந்திர மோடி. 1984 சீக்கியப் படுகொலை நடந்தபோது, நேரு குடும்ப வாரிசு ராஜீவ் காந்தி, ஒரு பெரிய மரம் விழுந்தால், அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும் என்றார். மதச்சார்பற்ற இந்தியாவில் இன்னமும் சீக்கியப் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, நரோடா பாட்டியா படுகொலையில் 31 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் முன்னேற்ற துறையின் அமைச்சராக இருந்த, மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த, குழந்தைகள் நல மருத்துவரான மாயா கோத்னானி, நரோடா பாட்டியாவில், 35 குழந்தைகள், 32 பெண்கள், 30 ஆண்கள் 97 பேரை படுகொலை செய்ய, தகவல் தந்து, ஆயுதங்கள் ஏற்பாடு செய்து, வழிநடத்தினார், சதி செய்தார் என 302, 120 பி பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்ததாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் அமைப்பாளரான பாபு பஜ்ரங்கிக்கு மரணம் வரை சிறை என்ற தண்டனையும், 7 பேருக்கு 31 ஆண்டுகள், 22 பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு ஒரு தண்டனை. ஒரு குழந்தை தனது பள்ளிபடிப்பையே முடித்து விடும் காலம். உச்சநீதிமன்ற கண்காணிப்பு, சாட்சிகள் பாதுகாப்பு சிறப்புத் திட்டம், தடைகள் பல தாண்டி, விடாப்பிடியான முயற்சிகள் எடுத்த ஆர்வலர்களின் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்தத் தீர்ப்பு சாத்தியமாகி இருக்காது.
நீதிபதி ஜோத்னா யக்னிக் தம் தீர்ப்பில் குறிப்பிடுகிறார்: ‘மாற்று மதத்தினர் உயிரைக் கொல்லப் புறப்படுவது ஆபத்தானது. அது மதச்சார்பற்ற சமூகத்தின் வேர்களையே வெட்டிவிடும்’.
‘அது வன்முறை சூறாவளி வீசிய நாள். ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் இந்தச் சம்பவம் ஒரு கருப்பு அத்தியாயம். எல்லோர் கண்கள் முன்பும் தாக்குதல் நடத்தியவர்கள், பலியானவர்களின் அரசியலமைப்புச் சட்ட மனித உரிமைகளை நசுக்கினார்கள்’.
தீர்ப்பு தலையில் இடியாக விழுந்த பிறகும், அந்த நேரத்தில் முதலமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த நரேந்திர மோடி பதவி விலகவில்லை.
குற்றவாளிகள், இந்தியாவின் மீது இந்தியாவின் அடிப்படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போர் தொடுத்துள்ளனர். தேச பக்தி தளும்பி நிற்க, கசாப்பை, உடனே நடுவீதியில் தூக்கு போடுங்கள் என்று கூப்பாடு போடுகிற கனவான்கள், குஜராத்தில் இந்தியா என்ற கருத்தையே வெட்டிச் சிதைக்கப் போர் புரிந்தவர்கள் விசயத்தில் மவுனம் காக்கிறார்கள்.
டெஹல்கா ஒலி நாடாக்கள்
டெஹல்காவின் அஷிஷ் கேதன் எடுத்த காணொளி காட்சிகள் குற்றத்தை நிரூபிக்கப் பெரிதும் உதவின. சிறப்பு விசாரணைக் குழு ராகவன் அஷிஷ் கேதன் தந்த ஆதாரங்களைப் புறக்கணித்தார். உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் அவற்றை பொருட்படுத்தவில்லை. தேசிய மனித உரிமை ஆணையர் ராஜேந்திர பாபு, அந்த ஆதாரங்கள் பற்றி மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது திருப்பு முனையாக இருந்தது.
விடை தேடப்படாத கேள்விகள்
மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செடல்வாத் குழுவினர் குஜராத் பற்றியெரிந்த அந்த நாளில், மோடியின் வீட்டு தொலைபேசி, அலுவலக தொலைபேசி, முதலமைச்சர் அலுவலக தொலைபேசிகள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்பட்ட விவரங்களை எடுத்துள்ளனர். பெரும் கலவரம் நடந்த பகுதிகள் மாநில காவல்துறை தலைவர் பாண்டே அலுவலகத்தில் இருந்து அரை கி.மீ தூரத்தில்தான் இருந்தன. அன்று 12 மணியில் இருந்து 3 மணி வரை குஜராத் பற்றியெரிந்த நேரத்தில், பாண்டேவுக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து 15 தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன. அந்த 3 மணி நேரமும், பாண்டே வெளியே செல்லவில்லை. அப்படியானால் பாண்டே ஒன்றும் செய்ய வேண்டாம் என உத்தரவிடப்பட்டதாகத்தானே முடிவு செய்ய முடியும். இது பற்றி, இன்னமும் பாண்டே, நரேந்திர மோடி மற்றும் அவரது அலுவலகத்தினர் விசாரிக்கப்படவில்லை.
நரேந்திர மோடிக்கு பிரதமர் கனவு. நாட்டின் முற்போக்கு ஜனநாயக மதச்சார்பற்ற தேசபக்த சக்திகளுக்கு அவர் தண்டிக்கப்படும் நாள் பற்றிய எதிர்ப்பார்ப்புகள்!
நகைப்புள்ளாகும் நரேந்திர மோடி
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வளர்ச்சிக்கு முன்மாதிரியாக நிறுத்தப்படுகிற குஜராத்தில் ஏன் ஊட்டச்சத்தின்மை நிலவுகிறது எனக் கேள்வி கேட்கிறது.
மோடி பதில் சொல்கிறார்: ‘ஒரு தாய் தன் பெண்ணை பால் குடி என்று சொன்னால், அந்தப் பெண் சண்டை போடுவாள். பால் குடித்தால் நான் குண்டாகிவிடுகிறேன், எனக்கு பால் வேண்டாம் என்று சொல்வாள். குஜராத் ஒரு மத்தியதர வர்க்க மாநிலம். இங்குள்ளவர்கள், ஆரோக்கியத்தை விட தோற்ற அழகு பற்றி உணர்வு கூடுதலாக உள்ளவர்கள். குஜராத்திகள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள்’.
இந்த மோடிதான் பிரதமர் கனவு காண்கிறார். ஆப்பிரிக்காவை விட மோசமாக, குஜராத்தின் 47% குழந்தைகள் ஊட்டச்சத்து உணவுக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணில் குஜராத் பின்தங்கி உள்ளபோது, கூருணர்ச்சியின்மைக் குறியீட்டில் மோடி மேலிடத்தில் உள்ளார்.
சிறப்புக் கட்டுரை
நந்தனுக்குத் தடை வேண்டாம்!
நந்திகளே விலகுங்கள்!
எஸ்.குமாரசாமி
ஊழல்களில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ், மன்மோகனைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுகிறது. இந்த நேரத்தில் தலித்துகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்குத் தடையாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புக்களை எதிர்கொள்ள, அரசிலமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறது.
காங்கிரசின் கரிசனம் நம்பத் தகுந்ததா?
இந்தியக் குடியரசும் அதற்கு அமைப்பும் சாரமும் வழங்கிய அரசியலமைப்புச் சட்டமும் ஜனவரி 26 1950ல் இருந்து அமலில் உள்ளன. 60 ஆண்டுகள் கழிந்த பிறகு, தலித்துகளுக்கு உயர்பதவிகளில் என்ன இடம் இருக்கிறது? கூடன்குளம் பற்றி எப்போதும் உளறிக் கொண்டிருக்கும் நாராயணசாமி தந்த பதில்களைப் பார்த்தால் உண்மை நிலை புலப்படும்.
மார்ச் 2011 விவரங்கள் (மத்திய அமைச்சர் நாராயணசாமி தந்தவை)
டிசம்பர் 2011ல் நாராயணசாமி, அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எஃப்எஸ் பதவிகளுக்கு நேரடியாக 3251 பேர் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார். தலித்துகள் 13.9%, பழங்குடியினர் 7.3%, இதரப் பிற்படுத்தப்பட்டோர் 12.9% மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்கிறார்.
விவரங்கள் சுட்டெரிக்கும் உண்மையை புலப்படுத்துகின்றன. ஆளும் வர்க்கக் கட்சிகளின் சமூகநீதி அக்கறையின் பாசாங்கை பறைசாற்றுகின்றன. தலித்துகளுக்கு 60 ஆண்டுகளுக்குப் பிறகும் உயர்பதவிகள் எட்டாக்கனிகளாக உள்ளன. இருக்கவே இருக்கின்றன, கூடுதல் தூய்மைப் பணியாளர்கள் பணிகள்!
நீதிமன்றங்கள் நியாயம் வழங்கினவா?
பிரண்ட்லைன் பத்திரிகையில் திரு.பி.எஸ். கிருஷ்ணன், நீதியை முன்னெடுத்துச் செல்வது என்ற கட்டுரையில் இது பற்றிய வாதங்களை தெளிவாக எழுதியுள்ளார். மண்டல் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகளும் அதற்கடுத்த அமர்வங்களும் தலித் பதவி உயர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட திருத்தச் சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்ற எழுவினாவை பரிசீலித்தனர்.
தீர்ப்பின் சாரம்
1. சரத்து 16(1)படியான சமத்துவ உரிமை, குடிமக்கள் ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகும்; ஆனால், சரத்து 16ன் துணைப் பிரிவுகள் 4 மற்றும் 4எ இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்படவுள்ள வகுப்பினருக்கு ஓர் அடிப்படை உரிமையை வழங்கவில்லை.
2. சரத்து 16ன் துணைப்பிரிவு 4அய்ச் செயல்படுத்துவதா இல்லையா என அரசு முடிவு செய்யலாம். தலித்துகள் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாகக் கோர முடியாது. இடஒதுக்கீடு வழங்கலாமா, வேண்டாமா என அரசே முடிவு செய்ய வேண்டும். 16 (4எ)யும் இதைப் போன்றதே. அரசின் முடிவுக்குட்பட்டது என்பதால், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை தலித் மற்றும் பழங்குடியினர் அடிப்படை உரிமையாகக் கோர முடியாது.
3. அரசு, பதவி உயர்வு உள்ளிட்ட விசயங்களில் இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் எனக் கருதினால், விவரங்கள் அடிப்படையில் தான் எடுத்த முடிவுக்கு பின்வரும் நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டனவா எனக் காண வேண்டும்.
அ) நிர்ப்பந்திக்கும் காரணங்கள் ஆ) பின்தங்கிய நிலை இ) சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இன்மை. கூடுதலாக பின்வரும் நிபந்தனைகளும் வகுக்கப்பட்டன. ஈ) கிரீமி லேயரை ஒதுக்குதல் உ) அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 335 அவசியப்படுத்துகிற நிர்வாகத்தில் திறமை என்பதில் சமரசம் செய்யலாகாது.
போதுமான பிரதிநிதித்துவம் என்ற வாதம்
சரத்து 16 (4) மற்றும் 16 (4எ) இடையே நுட்பமான வேறுபாடு உள்ளது.
16 (4) அரசின் கருத்துப்படி அரசு சேவையில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறாத எந்த ஒரு பின்தங்கிய பிரிவுக் குடிமக்கள் சார்பாகவும் இடஒதுக்கீடு வழங்கலாம்.
16 (4எ) அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் அரசின் கருத்துப்படி அரசு சேவையில் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை எனும்போது, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கலாம்.
பிற்படுத்தப்பட்டோர் விசயத்தில் ‘ஹய்ஹ் ஜ்ட்ண்ஸ்ரீட்’ ‘எந்த ஒரு’ என்று சொல்லப்பட்டுள்ள விசயம், அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் விசயத்தில் ‘ஜ்ட்ண்ஸ்ரீட்’ ‘அந்த’ என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. 16 (4)ல் அரசுக் கருத்துப்படி போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதுதான் உள்ளது. அட்ட வணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் விசயத்தில், பார்த்த மாத்திரத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரியும்போது, போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை, அரசு நிரூபிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என வாதாடுபவர்களே, அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
பின்தங்கிய நிலை என்ற வாதம்
அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினரை, பொருளாதார, சமூக பின்தங்கிய நிலையில் இருந்து அடையாளம் காண்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அட்டவணை சாதியினர் அந்த பின்தங்கிய நிலையிலும் மோசமான தீண்டாமைக்கு உட்பட்டவர்கள். பழங்குடியினர் அவர்களது தனித்த அடையாளம், கலாச்சாரம், பாதிப்புக்குள்ளாகும் தனிமைப்படுதலுக்கு ஆளானவர்கள்.
ஆகவே, அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் விசயத்தில், பின்தங்கிய நிலை என்ற கருதுகோளை நுழைப்பது தேவையற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.
திறமை என்கிற வாதம்
பார்ப்பனிய மெரிட் பார்வை கண்டிப்பாக, அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் விசயத்தில் எந்தத் திறமையையும் காணாது. இந்த வாதத்திற்கு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 335அய் துணைக்கு அழைப்பது அயோக்கியத்தனமானது. சரத்து 335அய் இரண்டாக உடைத்துப் பார்க்க வேண்டும்.
1. அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும்.
2. சேவைகளுக்கும் பதவிகளுக்கும் நியமனம் செய்யும்போது, இடைவிடாமல் (கன்ஸ்சிஸ்டன்ட்லி) நிர்வாகம் செய்வதில் திறமை இருப்பதைக் காண வேண்டும்.
முதல் பகுதியே ஆதாரமான, அடிப்படை யான சரத்தாகும். இரண்டாவது பகுதி, ஒரு துணையான சொற்றொடர் தன்மை வாய்ந்ததே ஆகும்.
கோரிக்கைகள் (கிளைம்ஸ்) என்பது நிபந்தனை இல்லாதது. அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கும், மற்றவர்களுக்கும் தேவைப்படும்போது, பயிற்சி, திசைவழி, செயல்திட்டங்களை முன்னெடுக்கலாம். அதைவிட முக்கியம், திறமையைத் தக்க வைப்பதற்கு ஒத்துவராத இதர பிரிவினரின் மனநிலைகளை மாற்றியமைக்க இந்தப் பயிற்சித் திட்டங்கள் உதவ வேண்டும் என்பதாகும்.
சமீபத்திய நாடாளுமன்ற வாதங்களில்,இட ஒதுக்கீடு போராளியான(?) சமாஜ்வாதிக் கட்சியின் நிலைப்பாடு கவனிக்கத்தக்கதாகும். இந்து நாளேடும் திமுகவும், சமாஜ்வாதிக் கட்சி, அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை, அதனை இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள் என நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள்.
சமாஜ்வாதிக் கட்சியின் ராம் கோபால் வர்மா கேட்கிறார்: முன்வைக்கப்படும் நடவடிக்கை, அரசியலமைப்புச் சட்டத்திற்கே, விரோதமானது எனும்போது, இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் இதை நீட்டிக்குமாறு நாங்கள் எப்படி கேட்க முடியும்?
காங்கிரஸ், இந்தத் திருத்தம், மாயாவதிக்கு உத்தரபிரதேசத்தில் மட்டுமே ஆதாயம் தரும் என்றும் மற்ற மாநிலங்களில் தனக்குத்தான் தலித்துகள் மத்தியில் ஆதரவைத் தேடித் தரும் என்றும் நம்புகிறது. முலாயம், தலித் வாக்குகள் தனக்கு உத்தரபிரதேசத்தில் எப்படியும் கிடைக்காது, மற்ற மாநிலங்களில் தமக்கு அது ஒரு பொருட்டல்ல எனக் கருதுகிறார். உத்தரபிரதேசத்தில் இதரப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உயர்சாதியினர் வாக்குகளைப் பெற, பதவி உயர்வில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதில்தான் தமக்கு ஆதாயம் எனக் கருதுகிறார். அவசியமான, நியாயமான இடஒதுக்கீட்டிற்கும், இந்தச் சமூகநீதிக் காவலர்களுக்கும் என்ன சம்பந்தம்?
நிர்ப்பந்திக்கும் காரணங்கள்
இது ஓர் அமெரிக்கச் சட்டக் கோட்பாடு. இதனை இந்திய உச்சநீதிமன்றம் நீதி வழங்குதல் முறையில் புகுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும் இந்திய நீதிமன்றங்கள் இதனை இடஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு வகுக்கவே பாலாஜி வழக்கில் பயன்படுத்தின. தற்சமயம் மத்திய அரசு அளவில் பதவி உயர்வில் அட்டவணை சாதியினர் இடஒதுக்கீடு 15%, பழங்குடியினர் 7.5% என்றே உள்ளது. ஆக, இது எப்படிப் பார்த்தாலும் 50% என்ற உச்சவரம்பை எட்டாது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி அட்டவணை சாதியினர் 16.4%, பழங்குடியினர் 8.2%தான். மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி இட ஒதுக்கீடு வழங்கினாலும் பாதிப்பு இல்லை.
சமத்துவக் கோட்பாடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று சொல்லும்போது, அதனை சமூக சமத்துவம் அடிப்படையிலான சமூகநீதி என நீதிமன்றங்கள் காணத் தவறுகின்றன.
நந்தனுக்குத் தடை வேண்டாம்!
நந்திகளே விலகுங்கள்!
பரமக்குடி, பதானி தோலா, வெண்மணி, ஊஞ்சனை, பெல்ச்சி, கயிர்லாஞ்சி என நாளும் கொலையாவோருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக்கு தடை போடுவது சமூகநீதிக்கு உகந்ததல்ல. அதற்கு வழிவிடுவோம். பின்னர் இதர பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுப்போம்.
தொழிலாளர் வர்க்கம் மீது தீவிரப்படுத்தப்படும் தாக்குதலும் ஜனநாயகத்தின் முன்னுள்ள சவால்களும்
செப்டம்பர் 7 அன்று, டில்லியில் ஏஅய்சிசிடியுவும், அகில இந்திய மாணவர் கழகமும் இணைந்து மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கருத்தரங்கம் நடத்தின. கருத்தரங்கில் மாருதி தொழிலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகள் பங்கேற்றனர்.
ஜுலை 18 அன்று மாருதியில் நடைபெற்ற சம்பவம் நிர்வாகத்தால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என்றும், இப்படி ஓர் ஏற்பாடு இருப்பது பற்றி தங்களுக்கு அன்று எதுவும் தெரியவில்லை என்றும், அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகளை அச்சுறுத்த வெளியிலிருந்து தொழிலாளர் போல் சீருடை அணிந்த குண்டர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டிருந்தார்கள் என்றும், வேலை நீக்கம் செய்யபட்டிருக்கும் பிரதிப் குமார் என்ற தொழிலாளி கருத்தரங்கில் பேசினார். வெளியிலிருந்து வந்திருந்த குண்டர்களே தீவைப்புச் சம்பவத்திற்கு காரணம் என்றும் அதனால்தான் மேலாளர் ஒருவர் உயிரிழக்க நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மீறப்படுகின்றன என்று குறிப்பிட்ட அவர், நிரந்தரத் தொழிலாளியின் சம்பளத்தை விட மிகக் குறைந்த சம்பளம் கொடுத்து அதே வேலைக்கு பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
நிர்வாகம் தனது பண பலத்தை வைத்து, ஊடகங்களில் உண்மை நிலைக்குப் புறம்பாக தொழிலாளர்களை கொலையாளிகள், குற்றக் கும்பல் என்று சித்தரித்து வருகிறார்கள். ஆனால், ஆலைக்குள் வெளியிலிருந்து குண்டர்கள் கொண்டுவரப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியை எந்த ஊடகமும் பெரிதுபடுத்திக் காட்டவில்லை. இப்போது நாங்கள் வேலையிழந்து போலீசாராலும், நிர்வாகத்தின் குண்டர்களாலும் கொடுமைக்கு ஆளாகி நிற்கின்றோம் என்று மாருதியின் இன்னொரு தொழிலாளி கருத்தரங்கில் பேசினார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அடுல் சூட், 2010 - 11 காலகட்டத்தில் குஜராத்தில்தான் அதிகமான கதவடைப்பும், வேலை நிறுத்தங்களும் நடந்ததாக புள்ளி விவரங்கள் இருந்தாலும், அந்த மாநில அரசு எதேச்சதிகார அரசாக இருப்பதாலும், கொடுமையாக உழைப்பைச் சுரண்டும் நிர்வாகங்களுக்கு பக்கபலமாக இருப்பதாலும், பெருநிறுவனங்கள் அம்மாநிலத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றன என்று குறிப்பிட்டார்.
ஜுலை 18 சம்பவம் மாருதி ஆலையில் தொழிற்சங்கத்தை ஒழித்து கட்டும் சதியே என்று குறிப்பிட்ட புதிய தொழிற்சங்க முன் முயற்சி (என்டியுஅய்) அமைப்பின் ராகி செகால், இப்போதும் கூட அந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்கிடமான போலீஸ் அதிகாரிகளே விசாரணை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
தொழிற்சாலை ஜனநாயகம் ஒடுக்கப்பட்டால் மாருதி ஆலையில் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்ட ஏஅய்சிசிடியுவின் அகில இந்திய தலைவர் எஸ்.குமாரசாமி, தொழிலாளர் வர்க்கத்தின் மீது, பெருநிறுவன நிர்வாகம், காவல்துறை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோரின் கூட்டால் தொழிற்சாலை பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றார். நிலக்கரி, 2ஜி அலைக்கற்றை, சுரங்கம் ஆகிய தொழில்களில் பெருநிறுவனக் கொள்ளையை அரசு ஊக்குவிப்பது போலவே, அதிக பட்ச லாபம் சம்பாதிக்க, தொழிலாளர்களை அதிகபட்சம் சுரண்டுவது என்பதற்கும் கவனம் குவிக்கிறது. இது 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பம், 19ம் நூற்றாண்டு தொழிலாளர் நிலைமைகள் என்பதில் முடிந்திருக்கிறது என்றார்.
தொழிற்சாலை மட்ட போராட்டங்கள், பழங்குடியினர் போராட்டத்தோடும், நாடு முழுவதும் நடக்கும் தொழிலாளர் போராட்டங்களோடும் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட தொழிலாளர் வரலாற்று ஆய்வாளர் பிரபு மஹாபட்ரா, மானேசர் மாருதி ஆலைப் போராட்டம், நிரந்தர மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களின் தலைவிதி ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதை பிரதிநிதித்துவப்படுத்துவதின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது, எனவே போராட்டம் ஒன்றுபடுத்தப்பட வேண்டும் என்றார். 2000க்குப் பிறகு உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பங்கள் காரணமாக நிரந்தரத் தொழிலாளர்கள் தனது வருவாயில் சரிவை சந்திப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜுலை 18 வன்முறை சம்பவம் பற்றி சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும், அனைத்து தொழிலாளர்களையும் விடுதலை செய்து மீண்டும் பணிக்கமர்த்த வேண்டும், குர்கான் - மனேசர் பகுதியிலிருந்து காவல் துறையினர், துணை ராணுவப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டன.
தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தவும், தொழிற்சாலை ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கவும் அரியானா மாநில அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும், பெரும்பான்மை தொழிலாளர் அங்கம் வகிக்கும் சங்கத்துக்கு கட்டாய அங்கீகாரம் அளிக்கிற வகையில் தொழிற்சங்கச் சட்டம் 1926 திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது கருத்தரங்கு தீர்மானங்கள் நிறைவேற்றியது.
கட்டுரை
சிவகாசி லாபவெறிப் படுகொலை:
விதிமீறல்களின் வெறித் தாண்டவம்
சிவகாசியில் மீண்டும் ஒரு முறை தீப்பிடித்தது. இதுவரை நடந்தது போலவே விதிகள் மீறப்பட்டிருந்தன. இதுவரை நடந்தது போலவே இப்போதும் தீப்பிடிக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தது. இதுவரை நடந்தது போலவே உயிரிழப்பு ஏற்படும் என்று முன்னரே தெரிந்திருந்தது. இதுவரை நடந்தது போலவே தீப்பிடித்தால் பிடிக்கட்டும் என்று அலட்சியம் காட்டப்பட்டது.
இந்த முறை பிடித்த தீ இதுவரை இல்லாத அளவு பிடித்தது. ஆலை முதலாளியின் லாப வெறி அதிகமாக இருந்ததால் தீயும் அதிகமாகப் பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்களின் உடல்கள் வெடித்துச் சிதறி விண்ணில் தூக்கி வீசப்படுவதை சக தொழிலாளர்கள் பார்க்க நேர்ந்தது. இது வரை இல்லாத அளவு அதிகமானோர் உயிரிழந்தார்கள். அதிகமானோர் காயமுற்றார்கள். அதிகமானோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவு குற்றங்கள், முறைகேடுகள் மூடி மறைக்கப்படுகின்றன. அமைச்சர்களும் அதிகாரிகளும் சம்பவ இடம் நோக்கி விரைகிறார்கள். நிவாரணம் அறிவிப்பு, மருத்துவமனை விஜயம், நாடாளுமன்றம் முதல் நகர்மன்றம் வரை இரங்கல் தீர்மானம் என சடங்குகள் நிறைவேறுகின்றன. இந்த மன்னிக்க முடியாத கொலைக் குற்றத்தை ஒரு கோரமான, சோகமான விபத்து போல் சித்தரிக்க முயற்சிகள் நடக்கின்றன.
விதிமீறல்களின் கோரத் தாண்டவத்தால் மனித உயிர்களுக்கு நேர்ந்த சேதத்தை முன் கூட்டியே கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகள், அதனால் அரசுக்கும் நிர்வாகத்துக்கும் ஏற்படக் கூடிய சேதத்தைக் கட்டுப்படுத்த தயாராக இருந்தார்கள். தீப்பிடித்தால் பார்ப்பது மட்டுமே எங்கள் வேலை என்று தீயணைப்பு அதிகாரி, உரிம ரத்து பற்றிய செய்தி தெரிந்திருந்தால் நாங்கள் முன்னரே நடவடிக்கை எடுத்து ஆலையை மூடியிருப்போம் என ஆட்சியர், மருந்து கலவையில் பிழை என்று ஆய்வாளர், தொழிலாளர்களின் கவனக்குறைவு என இன்னொரு அதிகாரி....
நடந்த படுகொலைக்கு தங்கள் பங்களிப்பு ஏதுமில்லை என்று சொல்லி தப்பிக்கும் முயற்சி அதிகாரிகள் தரப்பில் இன்று வரை நடக்கிறது. கிரானைட் கொள்ளைக்கு துணைபோனார்கள் என்று அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டது போல் சிவகாசியில் இதுவரை ஏதும் நடவடிக்கை இல்லை.
விபத்து நடப்பதற்கான ஏற்பாடுகள் அங்கு இருந்துள்ளன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் அரசின், அரசு நிர்வாகத்தின் குற்றமய அலட்சியத்தால், நடக்கும் என்று தெரிந்தே நடந்த படுகொலை இது.
முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் 35 அறைகளுக்கு அனுமதி வாங்கி 45 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அறைக்கு 4 பேருக்கு மேல் வேலை பார்க்கக் கூடாது என்ற விதிக்கு எதிராக 8 முதல் 12 தொழிலாளர் வரை வேலை செய்துள்ளனர். 480 பேர் வரை வேலை செய்துள்ளார்கள். 50 தொழிலாளர்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆடம்பர ரக வெடிமருந்துகளை அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வைத்திருந்ததோடு பாறைகளைப் பிளக்கும் வெடிமருந்துகளும் உள்ளே வைத்திருந்தாகச் சொல்லப்படுகிறது.
கல்குவாரி உரிமமும் வைத்துள்ள முதலாளி முருகேசன் ஆலை உரிமத்தை குத்தகைக்கு விட்டு காசு பார்த்திருக்கிறார். பட்டாசு தயாரிக்கும் இடங்களில் உட்காரும் பலகைகளில்கூட இரும்பு ஆணி இருக்கக் கூடாது. ஆனால், எல்லா பலகைகளிலும் இரும்பு ஆணி. தரைகளில் சட்டப்படி போடப்பட வேண்டிய ரப்பர் விரிப்புகளே கிடையாது. குழந்தைகளைப் போடும் தொட்டில்களை வெடி தயாரிப்புக் கூடத்திற்கு அருகிலேயே வைத்திருந்துள்ளார்கள். இப்படியாக தொழிற்சாலைகள் சட்டம், தொழிலாளர் நலச் சட்டம், தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம், வெடிமருந்துகள் கட்டுப்பாட்டுச் சட்டம் என எதையும் கண்டுகொள்ளாமல் எல்லா விதிகளையும் மீறித்தான் இந்த ஆலை செயல்பட்டு வந்துள்ளது.
முதலிப்பட்டி முருகேசன் ஆலையில் மட்டுமல்ல, சிவகாசியில் இயங்கி வரும் 700 பட்டாசு ஆலைகளில் 95% ஆலைகளில் விதிமீறல்களே விதி. இந்த ஆலைகளில் வேலை செய்கிற 1.5 லட்சம் தொழிலாளர்கள் சட்டம் வரையறுத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இல்லாமல் நாளும் ஆபத்தான நிலைமைகளில்தான் வேலை செய்கிறார்கள். உரிமம் இல்லாமல் இயங்கும் ஆலைகள் சிவகாசியில் ஏராளம்.
40 விதிமீறல்கள் இருந்ததால் ஓம்சக்தி ஆலையின் உரிமத்தை ரத்து செய்து ஆன்லைனில் செப்டம்பர் 4 அன்று கடிதம் அனுப்பியதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். 40 விதிமீறல்கள் இருந்த ஆலையை அதிகாரிகள் உடனடியாக இழுத்து மூடி முத்திரை வைக்காமல் ஏன் ஆன்லைனில் ஆலை உரிமத்தை ரத்து செய்து கடிதம் அனுப்பினார்கள்? முருகேசன் ஆளும் கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர். அவர் தன்னுடைய பட்டாசு ஆலையைப் பால் பாண்டி என்பவரிடம் குத்தகைக்கு விட்டுள்ளார். இதுவும் விதிமீறல். பால்பாண்டி அதிமுகவின் தற்போதைய அமைச்சர் ஒருவருக்கு பினாமி என்கிறார்கள்.
விபத்து நடந்தவுடன் வந்த செய்திகள் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 100அய்த் தாண்டிவிட்டதாகக் கூறின. சிவகாசி மருத்துவ மனையில் மட்டும் 50 சடலங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சிவகாசிக்கு ஜெயலலிதா வருகிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால், மறுநாள் அனைத்தும் அடியோடு மாற்றப்பட்டு விட்டது. முதல்வர் வரவில்லை. இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆகிவிட்டது.
ஆலைக்குள் வேலை செய்தவர்களில் 4 பேரைத் தவிர மற்றவர்கள் காணவில்லை என்று திடீரென வந்த செய்தி அதற்குப் பிறகு வரவே இல்லை. இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம், மண்ணில் புதைந்திருக்கலாம் என்று சொல்லப்பட்ட செய்திகளும் அடுத்தடுத்து காணவில்லை. செய்திகளே தொலைந்து போயின.
மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கொத்தடிமைகளாக்கப்பட்ட 35 தொழிலாளர்களில் அனில் என்ற 18 வயது சிறுவன் மடிந்தான். பலருக்கும் காயம். மருத்துவமனையில் அழுகிப் போய்விட்ட அனில் உடலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி மருத்துவமனையைச் சுற்றிச்சுற்றி வந்தவர்களுக்கு உள்ளூர்வாசிகள் சிலர் உணவும் நீரும் வாங்கித் தந்துள்ளனர். அனிலும் அவர்களும் என்ன ஆனார்கள் என்று அதற்குப் பிறகு செய்திகள் இல்லை.
படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் 100க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் என்று இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்களை காயமுற்றவர்கள் கணக்கில் காட்டி தன் கடமையை முடித்துக் கொண்டார்கள். இறந்து போனவர்களில் பெரும்பாலானோர் ஆலைக்கு வெளியே வேடிக்கைப் பார்ப்பதற்காகவும் காவல்துறை அதிகாரியின் உத்தரவையும் மீறி காப்பாற்றுவதற்காகப் போனவர்களும்தான் என்று சொல் லப்படுகிறது. ஆனால், அன்று காலை வழக்கம் போல் திருத்தங்கல், செம்மநாயக்கன்பட்டி, விருதுநகர் போன்ற இடங்களில் இருந்து 3 பேருந்துகள் மற்றும் வேன்களில் கூட்டி வரப் பட்டு ஆலைக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 400க்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனார்கள், ஆலைக்குள் தொட்டில்களில் போடப்பட்டிருந்த குழந்தைகள் என்னவாயின என்பது பற்றியெல்லாம் எந்தத் தகவல்களும் இல்லை. பட்டாசு ஆலைகளில் வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலும் பெண்களும் சிறுவர் சிறுமியர்களும்தான். செப்டம்பர் 6 அன்று யாரும் உள்ளே செல்ல முடியாதபடி ஆலையைச் சுற்றி அரண் அமைத்துவிட்டார்கள் அதிகாரிகள். உண்மை மறைக்கப்பட்டு விட்டது.
பணியிடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் தொழிலாளர்கள் மடிவது, அந்த மரணங்கள் மறைக்கப்படுவது, சாதாரண விசயமாக கடக்கப்படுவது நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சிவகாசி நடந்ததும் ஜேப்பியார் கல்லூரி விபத்தில் இறந்த தொழிலாளர்கள் பின்னுக்குப் போகிறார்கள். செப்டம்பர் 5 அன்று சிவகாசியில் தொழிலாளர் கள் எரிந்தபோது செய்தித் தாள்களில் வந்த செய்தி ஒன்று பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் கட்டுமானப் பணிகளில் இருந்த பிற மாநிலத் தொழிலாளர்கள் 600 பேர், அவர்களை வேலைக்கு அமர்த்தியவர்கள் ஏற்பாடு செய்த குடிதண்ணீர் குடித்து வாந்தி, பேதிக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் மடிந்தும் போனார்கள். இந்த சம்பவத்திலும் அந்தத் தொழிலாளர்கள் அருகில் இருந்த குளத்தில் இருந்து மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டதால் நடந்த சம்பவம் என்று பூசி மெழுகினார்கள். பெரிய ஒரு சம்பவம் நடந்தவுடன் அதிகாரிகளை முடுக்கி விடுவதும் சில நாட்களுக்கு கெடுபிடி காட்டுவதும் பின்னர் எல்லாவற்றையும் கிடப்பில் போட்டு விடுவதும்தான் வாடிக்கையாக உள்ளது. மடிவது தொழிலாளர்கள்தானே. அலட்சியம். குற்றமய அலட்சியம்.
இந்தியாவின் 100வது விண்வெளி ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் அனுப்புவதைப் பார்க்க பிரதமர் மன்மோகன் சிங் வந்தார். அவரை வரவேற்கவும் வழியனுப்பவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்றார். ஆனால், மக்கள் மகிழ்ச்சிக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து கண்ணைப் பறிக்கும் ராக்கெட்டுகளை தயாரித்த 150க்கும் மேலானவர்கள் (அரசாங்கக் கணக்குப்படியே) உயிரிழந்தும், உயிருக்கு போராடிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க, ஆறுதல் சொல்ல சிவகாசிக்கு வர இவர்களுக்கு நேரமில்லை. இவர்களுக்கு உழைக்கும் மக்கள் உயிர்கள் ஒரு பொருட்டல்ல
ஓம்சக்தி பட்டாசு ஆலையின் முதலாளி முருகேசனை பிடித்துவிட்டார்களாம். அவர் மீதும் அவரின் குத்தகைக்காரர் பால்பாண்டி மற்றும் 12 பேர்கள் மீது 304ஏ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது விபத்து வழக்கு. கொலைக் குற்ற வழக்கு அல்ல. முருகேசனும் ஜேப்பியார் போல் பத்து நாட்களில் பிணையில் வெளியே வந்து மீண்டும் பட்டாசு ஆலையை நடத்துவார்.
தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசு பழியை மருந்து கலவையை சரியான அளவில் கலக்காததால் ஏற்பட்ட விபத்து என்று தொழிலாளர்கள் மீதும், வேடிக்கைப் பார்க்கக் குவிந்ததால் ஏற்பட்ட விபத்து என்று பொது மக்கள் மீதும் போட்டு தப்பிக்கப் பார்க்கிறது. தமிழக தொழிலாளர் ஆணையாளர், தமிழக தலைமைத் தொழிற்சாலைகள் ஆணையாளர் போன்றவர்கள் எல்லாரும் முதல்வரையும் அமைச்சர்களையும் வரவேற்பதில்தான் அதிக அக்கறை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பட்டாசு ஆலைகளை தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால், இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட பார்ப்பது கிடையாது. தொழிலாளர் துறையில் தேவையான அளவு ஆய்வாளர்கள், பணியாளர்கள் கிடையாது. பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட் டால் அதை அணைக்க மணல் கொண்டு பீய்ச்சி அடிக்க வேண்டும். அந்தத் தொழில்நுட்பம் இன்னும் நம் தீயணைப்புத் துறைக்கு கற்றுக் கொடுக்கப்படவில்லை. அப்படியே இருந்தாலும் நாட்டில் இருக்கும் மணலை எல்லாம் அம்மாவின் ஆட்கள் அள்ளி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். தீயணைப்புத் துறையினர் மணலுக்கு எங்கே போவார்கள்?
எந்த அரசு மருத்துவமனையிலும் போதிய மருந்துகள் கிடையாது. மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழச் சொல்லும் ஜெயலலிதா இருப்பதைக் கொண்டு எல்லாருக்கும் சிகிச்சை அளிக்கச் சொல்கிறார். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாயும் அதிக காயம்பட்டவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் சிறு காயம்பட்டவர்களுக்கு 10,000 ரூபாயும் அறிவித்துள்ளார். தீக்காயம் வெளியே தெரியாமலே கொல்லும். அப்படியே பிழைத்தாலும் நடைப் பிணமாகத்தான் வாழ முடியும். அவர்களுக்கு இந்த பணமெல்லாம் எந்த வகையிலும் பயன் தரப் போவதில்லை. வெடி விபத்துக்களில் காயம்பட்ட பலர் உடல் வேதனை, மன வேதனையோடு உருக்குலைந்த உடலோடு உழைக்கவும் முடியாமல் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை கூட செய்துள்ளார்கள். தங்கள் பகுதியில் விவசாயம் இல்லாததால், இருந்த தீப்பெட்டித் தொழிலிலும் எந்திரங்கள் வந்துவிட்டதால் பிழைக்க வழியின்றி எப்போதும் வெடிக்கலாம் என்று தெரிந்தே பட்டாசு தயாரிக்கப் போகிறார்கள் அப்பகுதி மக்கள். நித்தியம் கண்டம் பூரண ஆயுசுதான். சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் நடக்கிற விபத்துக்கள் பதிவு செய்யப்படுவது, அவற்றில் விசாரணை நடப்பது, தண்டனை வழங்கப்படுவது எல்லாம் மிகவும் அரிதாகவே நடக்கின்றன.
ஆலை உரிமையாளரை, அதிகாரிகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை தருவதற்கு மாறாக, இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் ஜெயலலிதா.
சம்பவத்துக்கு பொறுப்பேற்று தொழிலாளர் அமைச்சர் பதவி விலக வேண்டும்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் பணியிட விபத்துக்களை தடுப்பதில் மெத்தனம் காட்டும் தொழிலாளர் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் பற்றிய, காயமுற்றவர்கள் பற்றிய, பிற வகையிலான சேதம் பற்றி முழுமையான, உண்மையான விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
ஓம் சக்தி ஆலை உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
விதிமீறல்களை அனுமதித்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
காயமுற்றவர்களுக்கு முழுமையான, தரமான மருத்துவமும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
சம்பவத்தை விசாரிக்க உயர்மட்ட நீதி விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும்
விதிமுறைகளை மீறுகிற பட்டாசு ஆலைகள் உடனடியாக இழுத்து மூடப்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பணியிட விபத்துக்கள் பற்றிய பொதுத் தணிக்கை நடத்தப்பட வேண்டும்.
செப்டம்பர் 5 அன்று சென்னையில் நடந்த அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர் 6 அன்று விதிமீறல்களுக்கு துணைபோன ஆட்சியாளர்களை, அதிகாரிகளைக் கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது.
செப்டம்பர் 7 அன்று கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையில் தோழர்கள் பொன்ராஜ், ஆவுடையப்பன், சண்முகப் பெருமாள், எஸ்.பி. முருகன், செல்லச்சாமி, ஜி.ஜி.தெய்வம், மதிகண்ணன், சாமுவேல் ராஜையா, கணேசன், அய்யனார் ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கும் மருத்துவமனைக்கும் சென்றது.
செப்டம்பர் 8 அன்று ஏஅய்சிசிடியு மாநிலம் முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கட்டமைத்தது. சென்னையில் அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஆன்லோடு கியர்ஸ் ஆலைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.பழனிவேல் கண்டன உரையாற்றினார். உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் மோகன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் முனுசாமி மற்றும் அம்பத்தூரில் உள்ள ஏஅய்சிசிடியு சங்கங்களின் கிளை நிர்வாகிகள் 200 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் ஆவத்திபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் தோழர் புகழேந்தி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில செயலாளர் தோழர் கோவிந்தராஜ், அகில இந்திய மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் ஆசைத்தம்பி கண்டன உரையாற்றினார்.
மண்ணில் பாதி
தாய்மை வர்த்தகம்
மஞ்சுளா
பாரெங்கும் உள்ள
பாட்டாளி பெற்ற
மகளெல்லாம் மகளே - நமக்கு
உறவெல்லாம் உறவே
அந்தக் கால அறிவுமதியின் பாடல். போராட்டத்தில் கைதாகி சிறையில் இருக்கும் தந்தை தனது மகளுக்காக பாடியது. சொத்துறவால் பின்னப்பட்ட சமூகத்தில் சொத்தில்லாத வர்களுக்கு மட்டுமே இந்த உணர்வு ஏற்படக் கூடும். முதலாளித்துவம் மூளைக்கு விலங்கிட்டு இருக்கிறபோது அதுவும் சாத்தியமில்லை.
இறப்புக்குப் பிறகு தன் சொத்து தன் வாரிசுக்கேச் செல்ல வேண்டும். தனக்கே தனக்கென வாரிசு வேண்டும். இந்தப் புள்ளியில்தான் பெண்ணடிமைத்தனம் உருவானது. பெண்ணை அடிமைப்படுத்த குடும்பம், கவுரவம், தாய்மை, கருவறை, தியாகம், தெய்வம் என பல்வேறு பொய்கள் பின்னப்பட்டு பெண்ணடிமைத்தனம் வலுப்படுத்தப்பட்டது. இன்றைய உலகமயச் சூழலில் முதலாளித்துவத்துக்கு லாபம் சேர்க்க அதே காரணங்களுக்காக பெண்கள் பிறருக்கு குழந்தைகளை சுமந்து கொடுக்கிறார்கள். தாய்மை, தியாகம் எல்லாம் காசுபணமாய் சுருங்கி, இந்த விசயத்தில் அந்தப் புனைவுகள் புதியதொரு சந்தைக்குக் குறுக்கே நிற்கும் என்பதால் அவை புனைவுகளே என்றாகின்றன.
முதலாளித்துவம் அனைத்து உறவுகளையும் பணத்தாலான உறவுகளாக சுருக்கிவிடுகிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது. உலகமய துரித ஓட்டத்தில் இன்று தாய்மை விற்பனை சரக்காகியுள்ளது.
ஜுலை 15, 16 தேதிகளில் இந்து நாளிதழில் வெளியான இரண்டு செய்திகள் தாய்மை வர்த்தகம் பற்றி சில விவரங்கள் சொல்கின்றன. குஜராத் மாநிலத்தின் ஆனந்த் பகுதியில் உள்ள அகங்க்ஷா தாய்மை மருத்துவமனை மற்றும் விடுதியில் எப்போதும் 30 பெண்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் கருவறைகளை வாடகைக்கு தருபவர்கள். பெரும்பாலும் இந்தப் பெண்கள் வெளிநாட்டவர்களுக்கு பிள்ளைகள் பெற்றுத் தருகிறார்கள். கருவைச் சுமக்கும் காலத்தில் 9 மாதங்களுக்கு ரூ.1000 மற்றும் குழந்தை பெற்ற பின் ரூ.3.25 லட்சம் இந்தப் பெண்களுக்குக் கிடைக்கும். அது இரட்டைக் குழந்தையாக இருந்தால் இன்னும் ஓர் இருபது சதம் கூடுதல் தொகைக் கிடைக்கும்.
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவரீதியாக முடிவுக்கு வந்த பிறகு தத்து போன்ற வடிவத்தில் அல்லாது குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு உதவவே மகப்பேறு உதவி தொழில்நுட்பம் (அசிஸ்ட்டட் ரீபுரடக்டிவ் டெக்னாலஜி) வளர்ந்தது. இப்போதும் அப்படித்தான் நடக்கிறது என்றாலும் அது ஒரு பணம் கொழிக்கும் வர்த்தகமாக மாறி, பெண்கள் நலன் பற்றி அக்கறையின்றி பெண் உடலை வர்த்தகப் பொருளாக்கியுள்ளது.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அவசியம் என்று கருதப்பட்டால் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தில் பிள்ளைகள் பெற பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்தப் பெண்கள் கேட்பதில் பாதி விலையில் இந்தியப் பெண்கள் குழந்தைப் பெற்றுத் தருகிறார்கள்.
முதலாளிகள் சங்கமான இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆய்வொன்று 2012ல் மருத்துவ சுற்றுலா ரூ.12,650 கோடி அளவுக்கு வருமானம் உருவாக்கும் என்று சொல்கிறது. மருத்துவ சுற்றுலாவின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக தாய்மை மருத்துவம் 2012ல் ரூ.5,500 கோடி முதல் ரூ.11,000 கோடி அளவுக்கு வருமானம் உருவாக்கும் என்றும் இந்த விசயத்தில் உலகின் அவுட்சோர்சிங் மய்யமாக இந்தியா மாறும் என்றும் சமா ஆய்வறிக்கை சொல்கிறது.
நாடு முழுவதும் இதுபோன்ற 886 மருத்துவ மனைகள் உள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் சொல்கிறது. இந்த வர்த்தகத்தில் மருத்துவர்களே முகவர்கள். பிள்ளை பெறும் பெண் என்ன வருமானம் பெறுகிறாரோ அதே அளவு, சில சமயங்களில் அதைவிடக் கூடுதல் பணம் அந்த மருத்துவமனைக்குக் கிடைக்கிறது.
இந்த வர்த்தகம் தொடர்பான சட்டம் இல் லாததால் இது சட்டபூர்வமானதும் இல்லை, சட்டவிரோதமானதும் இல்லை என்கிறார் மத்திய குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர். இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் 2005ல் உருவாக்கிய சில வழிகாட்டுதல்கள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
இந்த அடிப்படை விவரங்கள் தவிர, சமா ஆய்வறிக்கை இந்த வர்த்தகம் பற்றி நிறைய விவரங்கள் தருகின்றது. இனி விவரங்கள் வந்த வண்ணம் இருக்க வாய்ப்புள்ளது.
இந்தத் தொழில்நுட்பத்தில் குழந்தைகள் பெற்றுத்தரும் பெண்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு என்று கிட்டத்தட்ட ஏதும் இல்லை. இந்தத் தொழில்நுட்பத்தில் குழந்தைப் பெற்றுத் தர வரும் பெண்கள் வறிய பின்னணி கொண்டவர்கள். குடும்பப் பிரச்சனையை தீர்க்க கருவறையை வாடகைக்குத் தருகிறார்கள். மகப்பேறு பெண்களுக்கு இரண்டாவது பிறவி என்று சொல்லப்படுகிறது. மகப்பேறு முந்தைய கருத்தரிப்பு காலமும் பெண்களுக்கு பிரச்சனை ஏதுமின்றி சாதாரணமாக கழிந்துவிடுவதில்லை. பெண்களுக்கு குடும்ப நலனே முன்னுரிமை என்பதால் பொதுவாக தங்கள் ஆரோக்கியம் பற்றி பெண்களே அக்கறை காட்டுவதில்லை. இதில் குடும்ப வறுமையும் சேர்ந்துகொள்ள அதை சரிக்கட்டுவதுதான் இந்தப் பெண்களின் முதல் கடமையாக மாறுகிறதே தவிர, அதனால் அவர்களே சந்திக்கும் துன்பங்களும் உடல் உபாதைகளும் அவர்களாலும் மற்றவர்களாலும் புறந்தள்ளப்படுகின்றன. வறுமையை சமாளிக்க கிட்னியை, குழந்தையை விற்க நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்கள் இப்போது கருவறையை வாடகைக்கு விடுகிறார்கள். இந்தப் பெண்களுக்கு முட்டைகள் அதிகமாக உருவாக ஹார்மோன்கள் தரப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்துக்கு உட்படுத்தப்படுவதால் ஏற்படும் நாட்பட்ட பின்விளைவுகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. பெண்கள் ஆரோக்கியம் பற்றி நிலவுகிற அலட்சியத்பதுடன் இப்போது சந்தை சேர்ந்து கொள்கிறது.
பெண்ணுடல், விற்பனை போன்றவற்றுடன் பிரச்சனை முடிந்துவிடவில்லை. ஜ÷ன் மாதம் வரை அகங்க்ஷா மகப்பேறு மருத்துவமனை 500 குழந்தைகளை இந்த முறையில் உருவாக்கியிருக்கிறது. இங்கு வருபவர்களில் 5 சதம் பேர் ஆண் குழந்தைகள் வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரு தம்பதியர் தங்கள் சாதி குழந்தை வேண்டும் என்றார்களாம். இதற்காக இரண்டு ஆண்டுகளாக காத்பதிருக்கிறார்களாம். இன்னும் கூட காத்திருக்கத் தயாராம்.
கருவறை முதல் கல்லறை வரை பாகுபாட்டுக்கு, பலவிதமான வன்முறைக்கு, அலட்சியத்துக்கு பெண்கள் உள்ளாக்கப்படும் நிலையில் இன்னும் பெருமளவில் மாற்றம் வர வேண்டியுள்ளது. பெண் சிசுக் கொலை, பெண்கரு கலைப்பு என்று பெண் குழந்தைகள் உலகுக்கு வருமுன் தடுக்கும் ஆணாதிக்க நடவடிக்கைகள் சட்டங்களை மீறி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதனின் அரிய கண்டுபிடிப்பான கணிணிக்கு குங்குமம் வைத்து கும்பிட்டு விட்டு அதில் வேலை செய்வது போல், மகப்பேறு தொழில்நுட்பம் பெண்ணுடலை கொண்டே பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வலுப்படுத்த பயன்படுகிறது.
பெண்ணை நான்கு சுவர்களுக்குள் வைக்க கட்டியெழுப்பப்பட்ட தாய்மை என்ற கருத்துரு பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, காசு தருகிறேன் வாங்கிக் கொள் என்கிறது நவீன தொழில்நுட்பம். நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்பதவி வகிப்பவர் களில் 95% பேர் மேல்சாதியினரே என்று சமீபத்திய ஆய்வொன்று சொல்கிறது. உலகமய வளர்ச்சி சாதிய கட்டமைப்பில் மாற்றம் எதையும் உண்டாக்கவில்லை என்பதை, உலகமயம் பார்ப்பனியத் தேரேறி வருகிறது என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அதேபோல், நவீன தொழில்நுட்பம் பெண்கள் சந்திக்கும் பாகுபாடுகளை களையாமல் அவற்றை உறுதிப்படுத்தவே செய்கிறது. பெண்ணுடல் மீது பெண்ணுக்குக் கட்டுப்பாடு வேண்டும் என்று பெண்கள் போராடும்போது, அதை சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் தள்ளுகிறது.
சமூகத்தில் நடக்கும் பல்வேறு அத்தியாவசியமான இயக்கங்களில் பிள்ளை பெறுவதும் ஒன்று. குழந்தை பெறுவது பெண்களின் சமூகப் பங்களிப்பே தவிர, அதில் கொண்டாட அதற்கு மேல் அதிகமாகவோ, அதைவிடக் குறைவாகவோ ஏதுமில்லை. பாலியல் தொழில்போல், பிள்ளை பெறுவதை ஒரு தொழிலாகக் கொள்ள பெண்கள் கருதுவார்கள் என்றால் அது அவர்கள் விருப்பம். அவர்கள் உடலை என்ன செய்வது என்று அவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்தும் கருத்துக்களை உடைக்க தெரிந்தோ தெரியாமலோ ஒரு தொழில்நுட்பம் உதவும் என்றால் அது வரவேற்கத்தக்கதே. ஆனால் பெண்கள் நலன் பற்றி எந்த அக்கறையும் இன்றி, ஆணாதிக்கக் கருத் துக்களை மறுஉறுதி செய்து, பெண்களைப் பரிசோதனைப் பன்றிகளாக பயன்படுத்துவது, பெண்ணுடலை வர்த்தகமயமாக்குவது, சந்தைப்படுத்துவது எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்க்கப்பட வேண்டியதே.
நகர்ப்புற வளர்ச்சித் திட்டமும் உலக வங்கியும்
சந்திரமோகன்
உலக வங்கி நிதியுதவி பெறப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினால், நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில், ஏற்கனவே தங்களது குடிசைகளை ஓடை, ஏரி போன்ற நீர் நிலை புறம்போக்குகளிலோ, கரட்டு புறம்போக்குகளிலோ அமைத்து வாழ்ந்து வந்த குடியிருப்புகள் திட்டங்களாக வரன்முறைப்படுத்தப்பட்டன.
இவை அடுக்குமாடி குடியிருப்புகள் அல்ல. 1 சென்ட் முதல் 3 சென்ட் வரையிலான வேறுபட்ட சிறிய வீட்டு மனைகள்; பல ஆண்டுக ளாக வறிய மக்கள் அனுபோகத்தில், பயன்பாட்டில் வைத்திருந்த சிறிய புறம்போக்கு குடிசை மற்றும் ஓட்டு வீடுகள்.
1970ல், சென்னையில், த.நா குடிசை மாற்றுவாரியம் கருணாநிதி ஆட்சியில் துவக்கப்பட்டது. சுமார் 7.5 லட்சம் குடிசைவாசிகள் சென்னையில் இருந்தனர். 750க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள் சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் (எம்யுடிபி) கீழ் கொண்டு வரப்பட்டன. நொச்சிக்குப்பம் முதல் சுமார் 60000 குடும்பங்களின் நிலங்கள் தநா. குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தநாகுமாவா அந்த மனைகளை குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் பிரித்து வழங்குவதாக ஆவணங்களைக் கொடுத்தது. பின்னர், இது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாட்டின் பிற நகர்ப்புறங்களில் இருந்த குடிசைப் பகுதிகள் தமிழ்நாடு புறநகர் வளர்ச்சித் திட்டம் 1 என்பதன் கீழ் கொண்டு வரப்பட்டு, தநா.குடிசை மாற்று வாரியத்தில் இணைக்கப்பட்டன. அதிமுக ஆட்சி காலத்தில் 90களின் துவக்கத்தில், மாநிலம் முழுவதும், 70,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இதன் கீழ் கொண்டுவரப்பட்டன.
சேலம் புறநகர் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கரியபெருமாள்கரடு 1,2,3. புதுப்பேட்டை 1,2,3., நாமமலைநகர், வடக்கு அம்மாபேட்டை எம்ஜி ஆர்நகர், மூணாங்கரடு தெற்கு, பி.நாட்டாமங்களம், உத்தமசோழபுரம், நெய்க்காரப்பட்டி, பெருமாள்கோயில் கரடு, சேலத்தாம்பட்டி, சிவதாபுரம் ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம் பட்டி, கொத்தனூர் 1,2, கன்னங்குரிச்சி, பொன்னம்மாபேட்டை எனப் பல பகுதிகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 5000 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றனர்.
ஏற்கனவே குடிசைவாசிகளிடம் 30 அல்லது 40 ஆண்டுகள் சொந்த உபயோகத்தில் இருந்த வீடுகளுக்கு/வீட்டுமனைகளுக்கு விற்பனை மற்றும் குத்தகை முறை என்ற அடிப்படையில் ஆவணங்கள் வழங்கி கடன் பொறியில் சிக்க வைக்கப்பட்டனர். தங்கள் புறம்போக்கு வீட்டு மனைகளுக்கு, ஏன் இந்த ஏற்பாடு என கேள்வி எழுப்பப்பட்டபோது, குடிசைப் பகுதிகளுக்கு உள்கட்டுமான வசதிகளை செய்து தர எனப் பதில் தரப்பட்டது. மனையின் அளவுகளைப் பொறுத்து ரூ.1000 முதல் ரூ.5000 வரை நிலக் கிரயத்தொகை தீர்மானிக்கப்பட்டு ஆவணங்கள் வழங்கப்பட்டன. கூடுதலாக, குடிசைகளை மாற்றுவதற்காக என்று சொல்லப்பட்டு, ரூ.4000 அல்லது ரூ.8000 போன்று ஒரு தொகை கட னாக வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் திட்ட காலம் என அறிவிக்கப்பட்டு, நிலக் கிரயத்திற்கு, கடன் தொகைக்கு செலுத்த வேண்டிய மாதத் தவணைத் தொகைகள் ஒதுக்கீட்டு ஆணையில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டன. கடன் தவணைகள் கெடுபிடியாக வசூல் செய்யப்பட்டன.
தவணைப் பணத்தை கட்டாவிட்டால், வீட்டை பூட்டுப் போட்டு விடுவோம் என்கிற பில் கலெக்டரின் மிரட்டலுக்கு, இன்றைக்கும் கூட பயந்து வாழ்கிறார்கள், எழுத்தறிவில்லாத மூத்த குடிமக்களாக இருக்கிற ஏழைகள். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வரி வசூலிப்பவர்கள் கந்துவட்டிப் பேர்வழிகளைப் போன்று கையில் பூட்டை எடுத்து வந்து, வீட்டிலிருப்பவரை வெளியேற்றிவிட்டு பூட்டிய பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தங்கள் சொந்த வீட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டு விடுவோம் என்ற அச்சம் இன்றும் உள்ளது.
திட்ட காலம் முழுவதுமே, கெடுபடி வசூல்தான் நடைபெற்றது. அமைப்பாக்கப்படாத தொழிலாளர்களாக, பரம ஏழைகளாக, அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படும் குடிசைவாசிகள்; அரைகுறையாக தவணைத் தொகைகளை செலுத்தினர். கடன் மற்றும் கிரயத் தொகைகளை கட்டி முடித்து விட்டோம் எனக் கருதிய பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இன்னமும் நிறைய கட்ட வேண்டுமென குடிசை மாற்று வாரியம் தெரிவித்தது. தாமதமான தவணைத் தொகைகளுக்கு கூட்டு வட்டி மூலம் வட்டிகள் குட்டிபோட்டு மிகப் பெரிய தொகையாக மாறி நிற்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தருகின்றன. சுமார் ரூ.3000 என நிலக் கிரயத் தொகை தீர்மானிக்கப்பட்ட மனைக்கான கிரயத் தொகையே சுமார் ரூ.35,000 என அறிவிக்கப்பட்டது. அதற்கு வட்டி ரூ.39,000 எனப்பட்டது. மொத்தக் கடன் ரூ.74,000 என்றானது. கடனே வாங்காத குடிசை வாசிக்கு இத்தொகை என்றால், கடன் பெற்ற ஒருவருக்கு ரூ.1,75,000 என்று அறிவிக்கப்பட்டது.
திட்டகாலம் முடிந்து கிரயப் பத்திரம் பெறுவதற்கு விண்ணப்பித்த மக்கள் இத்தகைய தொகைகளைக் கண்டு மிரண்டு போயினர். மாபெரும் கடன் சதிக்குள் சிக்கிக் கொண்டதை உணர்ந்தனர். எனவே தமிழக முதலமைச்சரிடம், சேலம் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தனர். இவ்வளவு அபரிமிதமான கடன் வட்டிகளை செலுத்த முடியாது எனவும், கடன் வட்டிகளை தள்ளுபடி செய்து கிரயப் பத்திரங்களை வழங்க வேண்டும் எனவும் கோரினர். இது உலக வங்கித் திட்டம். எதையும் தள்ளுபடி செய்ய முடியாது. கடன் செலுத்த முடியவில்லை எனில், வெளியேறுங்கள் என ஆணவமாக பதிலளித்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷணம். நிர்வாகப் பொறியாளரும் இது உலக வங்கித் திட்டம், எதுவும் செய்ய முடியாது என்றார்.
உலக வங்கியும், அதன் உடன் பிறப்பான சர்வதேச நிதியமும் உலகை சுரண்டுவதற்கான, நவகாலனிய கருவிகளாகும். 60 ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் தோன்றியது. 184 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டிருந்தாலும், மிக அதிகமான பங்குகளை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகியவை கொண்டுள்ளன. உலக வங்கி நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் அமெரிக்கா 19.63 சதமும், ஜப்பான் 7.9 சதமும் பெற்றுள்ளன. இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. உறுப்பினர் நாடுகளின் செயல்திட்டத்திற்காக உலக வங்கி கடன்களை வழங்குகிறது. 1987ல் உலக வங்கியின் ஒட்டுமொத்த கடனில் இது 21% ஆகும். இத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவில் நர்மதா சுவர்ணரேகா போன்ற நிலக்கரி சுரங்கத் திட்டங்கள், சாலைகள், தொலைத் தொடர்புத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றிற்கும் வழங்கப்பட்டது. துறை சார்ந்த கடன்கள் என்ற பெயரிலும் வழங்கப்பட்டன.
80களின் இறுதியில் உலக வங்கி, கட்டமைப்புத் தகவமைத்தல் (ஸ்ட்ரக்ச்சுரல் அட்ஜஸ்ட்மென்ட்) கடன்களை ஏராளமாக வழங்கியது. இவ்வகை கடன்கள், 1988ல் உலக வங்கி வழங்கும் மொத்தக் கடனில் 27 சதம் ஆக இருந்தது. இவ்வகைக் கடன்கள், விலைவாசியை தீர்மானிப்பது, மான்யங்களை வெட்டுவது, தனியார்துறையை பெருமளவு சார்ந்திருப்பது போன்றவற்றினடிப்படையில், தாராளமய வர்த்தக கொள்கையின் அடிப்படையில் வழங்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனால், கடன் வாங்கும் நாடுகள் கொள்கை சீர்திருத்தங்கள், அடிப்படை நிறுவன மாற்றங்களை மேற்கொள்வது அவசியமாகிப்போனது. 1991 டிசம்பரில் இந்தியா இவ்வகை கடனாக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றது. மாநில அரசாங்கங்களுக்கு, அவைகளின் பல் வேறு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டன. ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களும் உலக வங்கியின் சுருக்கு கயிற்றில் சிக்கின. மின்சாரம், போக்குவரத்து, தண்ணீர், விவசாயம் என அனைத்து திட்டங்களிலும் உலக வங் கியின் கடன்கள், கட்டுப்பாடுகள் நுழைந்தன. மாநில மின் வாரியங்களை உடைத்து தனியார்மயத்திற்கு வித்திடும் நடவடிக்கைகள் உலக வங்கியால் வழிகாட்டப்பட்டவை ஆகும். தமிழகமும், உலக வங்கியின் கீழ் உதவிப் பெறப்பட்ட திட்டங்களும் இந்த விதியிலிருந்து தப்பிக்க முடியாதவை.
1988ல் துவங்கிய தநா புறநகர் வளர்ச்சித் திட்டம் 1, முதலில் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதியில் முனிசிபல் நகர்ப்புற வளர்ச்சி நிதி(எம்யுடிஎஃப்) என்ற பெயரில், உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட ரூ.167 கோடி கடனிலிருந்து துவங்கியது. (தமிழகத்தின் பிற நகர்ப்புறங்களுக்கும் தநா புறநகர் வளர்ச்சித் திட்டம் 1 என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு 1997 செப்டம்பர் வரை ரூ.988.50 கோடி பெறப்பட்டுள்ளது). முனிசிபல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்கட்டமைப்பு பணிகளுக்கு தனியார் முதலீடு வரவேற்கப்பட்டது. உலக வங்கியின் கடன் உதவியுடன், கம்பெனி சட்டத்தின் அடிப்படையில், 1996ல் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் (டிஎன்யுடிஎஃப்) உருவாக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தில், தநா நகர்ப்புற உள் கட்டமைப்பு சேவைகள் லிமிடெட் (டிஎன்யு அய்எஃப்எஸ்எல்) என்ற அரசு நிறுவனமும், அய்சிஅய்சிஅய், ஹெச்டிஎஃப்சி மற்றும் அய்எல் அண்டு எஃப்எஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள்/வங்கிகள் முறையே 49%, 21%, 15%, மற்றும் 15% எனப் பங்குகள் வைத்திருக்கின்றன.
பெயரளவில், தநா நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், தநா குடிசைப் பகுதி மாற்று வாரியம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. நிதி வழங்கும் கம்பெனி (டிஎன்யுடிஎஃப்) தனியார் வங்கிகளின் பிடியில் உள்ளது. மொத்தமாக அனைத்தும் உலக வங்கியின் பிடியில் உள்ளன. 1999 - 2004 கால கட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் - 2 என்பதற்காக ரூ.500 கோடியை உலக வங்கி வழங்கியுள்ளது. 2005லிருந்து, இத்திட்டம் டிஎன்யுடிஎஃப் 3 ஆக ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் பணிக்கான திட்டம் (ஜேஎன்என்யுஆர்எம்) என்ற புதிய பெயருடன் வந்துள்ளது.
தங்களுடைய மனை கிரயப் பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் ஒதுக்கீடுதாரர்களுக்கு தநா. குடிசைப் பகுதி மாற்று வாரியம் கோரும் தொகைகள் மிகவும் அநியாயமாக உள்ளன. தமிழ்நாடு கடன் வழங்கும் சட்டம் 1957, கந்து வட்டி சட்டம் 2003 போன்றவை எல்லாம், தனியார் கந்து வட்டிக் கடைகளை முறைப்படுத்தவே உள்ளன. உலக வங்கி, தநா நகர்ப்புற வளர்ச்சி நிதியம் போன்றவை எல்லாம் வங்கிகளாக இருப்பதால், இவற்றை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. இவை போடும் கூட்டு வட்டி கணக்குகள் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு ஒத்ததாகவும் இல்லை. விற்பனை மற்றும் குத்தகை முறை ஒதுக்கீட்டு ஆணையில் அறிவிக்கப்பட்ட கிரயத் தொகையை, தன்னிச்சையாக பத்து மடங்கு உயர்த்தி, அவற்றிற்கும் வட்டி, கூட்டுவட்டி, அபராத வட்டி எனக் கணக்கிட்டு அதிர்ச்சிகரமானத் தொகைகளை கோருகின்றன. கடனே வாங்காதவர்கள் பல்லாயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்பதும், தவணைத் தொகைகளை கட்டி முடித்தவர்கள் பலருக்கும் கிரயப் பத்திரம் வழங்கப்படவே இல்லை என்பது உச்சக்கட்ட அநியாயமாக இருக்கிறது.
தநா புறநகர் வளர்ச்சித் திட்டத்திற்கு பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் தொகை இந்த குடிசைப் பகுதிகளுக்கு முழுமையாக செலவிடப்படவில்லை. சாலை, சாக்கடை போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு சில கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டன. ரூ.31850 முதல் ரூ.80000 வரையிலான சொற்ப கடன் தொகை களுக்கு என சில கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டன. தநா புறநகர் வளர்ச்சித் திட்டம் 1க்கு உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட தொகை ரூ.988.50 கோடி எப்படி செலவிடப்பட்டது என கணக்குகளைத் தணிக்கை செய்தால், பெரும் முறைகேடுகள் அம்பலப்படும். தாங்கள் பெறாத, தங்களுக்கு செலவிடப்படாத தொகைகளுக்கும் சேர்த்து பணத்தை கட்ட முடியாது என குடிசைவாழ் மக்கள் போராட்டத்தில் அணி திரண்டு வருகிறார்கள். வசூலித்த பணத்தை உலக வங்கிக்கு செலுத்தி, அடமானம் வைக்கப்பட்ட திட்டப் பகுதியின் ஆவ ணங்களை மீட்டு, தங்களுக்கு கிரயப் பத்திரத்தை வழங்கிட வேண்டும் என கோரிக்கை எழுப்புகின்றனர். உலக வங்கியும், தநா.குடிசை மாற்று வாரியமும் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு, ஆதரவளித்து ஆட்சி நடத்தும் ஜெயா ஆட்சிக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதுமுள்ள குடிசைவாழ் மக்கள் அணி திரள்வார்கள்.
களம்
மன்மோகனே பதவி விலகு!
ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்டம்
லட்சக்கணக்கானோர் கைது
ஊழல், விலைஉயர்வு, சமூக ஒடுக்குமுறை மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக மாலெ கட்சி நடத்திய நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கைதாயினர்.
நிலக்கரி ஊழலில் கையும் களவுமாக பிடிபட்டிருக்கும் மன்மோகன் சிங், பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அய்முகூ அரசாங்கம் ஒட்டுமொத்தமாக பதவி விலக வலியுறுத்தி இகக(மாலெ) மற்றும் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பு அழைப்பு விடுத்திருந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மக்கள் உற்சாகமாக பங்கெடுத்தனர். பொதுச் சொத்துக்களை, கனிம வளங்களை பெரும் தொழில் குழுமங்கள் கொள்ளையடிக்க வகை செய்யும் தனியார்மயக் கொள்கைகளுக்கெதிராகவும், கட்டுக்கடங்காத விலை உயர்வுக்கு, போராடும், எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை ஒடுக்குவதற்கு எதிராகவும், தலித், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான வளர்ந்துவரும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இந்த போராட்டம் நடைபெற்றது. நாட்டில் 173 மய்யங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 1,35,000 பேர் கைதாகினர். இகக(மாலெ), சிபிஎம் பஞ்சாப், லால்நிஷான் கட்சி(லெனினிஸ்ட்), சிபிஆர்எம், இடது ஒருங்கிணைப்புக் குழு(கேரளா) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் தலைமையில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஸ்வதேஷ் பட்டாச்சார்யா, மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பிரபாத் குமார், கவிதா கிருஷ்ணன், மற்றும் டெல்லி மாநிலச் செயலாளர் சஞ்சய் சர்மா ஆகியோர் போலீஸ் தடுப்பை மீறி சென்று கைதானார்கள்.
பீகாரில், மொத்தம் 30 மய்யங்களில் நடந்த போராட்டத்தில் 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் தோழர்களை அடைத்து வைக்க காவல்துறை திணறியது. போராட்டத்தின் தயாரிப்பாக ஆர்வாலில் 200 கிராமங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. போஜ்பூர், ஜெகனாபாத், சிவான், பூர்ணியா, தர்பங்கா, மதுபானி, கயா, நாலந்தா, கோபால்கஞ்ச், பக்சார், சமஸ்டிபூர் ஆகிய முக்கிய மய்யங்கள் உட்பட மாநிலத்தின் பல மய்யங்களில் போராட்டம் நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், 18 மய்யங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிடி மாவட்டத்தில் புதிய வறுமைக் கோட்டுப் பட்டியலுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் வாயிலாக பழைய பட்டியல்படி அனைவருக்கும் பொது விநியோக முறையில் பொருட்கள் வழங்கப்பட் டன. போராட்டத்தில் உற்சாகம் பெற்ற இப்பகுதி மக்கள் 10,000 பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். திகைத்துப் போன மாவட்ட நிர்வாகம் கொடி யேற்றும் மைதானத்தையே சிறையாக அறிவிக்க வேண்டியதாயிற்று. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் வினோத்சிங் மற்றும் மாவட்ட செயலாளரும் மத்திய கமிட்டி உறுப்பினருமான தோழர் மனோஜ் பக்தா ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொகாரோ, தன்பாத், கொடர்மா, ராம்கர் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
ராஞ்சியில், நாக்ரி பகுதி பழங்குடியினரின் நில அபகரிப்புக்கு எதிராக அன்று கூடிய சட்டமன்றத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து கைதாகினர்.
உத்தரபிரதேசத்தில் 19 மய்யங்களில் மறியல் செய்து கைதாகினார்கள். வாரணாசியில் மறியல் செய்தவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர் அதன்பின்னரும் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
மாநில தலைநகர் லக்னோவில், கான்பூர், கோண்டா, அம்பேத்கர்நகர், மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் அணி திரண்டு கைதாகினர்.
பஞ்சாபில் இகக(மா.லெ) மற்றும் சிபிஎம் பஞ்சாப் இணைந்து 17 மய்யங்களில் மறியல் செய்து 15,000 பேர் கைதாகினர். ஆண்களுக்கு சமமாகவும் சில மய்யங்களில் ஆண்களைவிட அதிகமாகவும் பெண்கள் கைதாகினார்கள். ஜலந்தரில் நடைபெற்ற மறியலில் சிபிஎம் (பஞ்சாப்) செயலாளர் மங்கத்ராம் பஸ்லா தலைமை ஏற்று கைதாகினார். மாநிலத் தலைநகர் சண்டிகரில் 144 தடை உத்தரவை மீறி கூடிய தோழர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது. போலீஸ் தடையை மீறி 1 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மகாராஷ்ட்ரா முழுவதிலும் இருந்து மும்பையில் திரண்ட 8000 பேர் மறியல் செய்து கைதாகினர். பீம்ராவ் பன்சோல், லால் நிசான் கட்சி (லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர், இகக(மாலெ) மும்பை - தானே கமிட்டி செயலாளர் சியாம் ஹோகில், தோழர்கள் உதய்பட், திராஜ் ரதோட் ஆகிய முக்கியத் தலைவர்கள் சிறை சென்றனர். நாக்பூரில் இகக(மாலெ) பதாகையில் தோழர்கள் கைதாகினர்.
மேற்கு வங்கத்தில் அகில இந்திய இடதுசாரி ஒருங்கிணைப்பில் அங்கம் வகிக்கும் இகக(மாலெ) மற்றும் சிபிஆர்எம் தோழர்கள் மறியல் செய்து 18 மய்யங்களில் 10,000 பேர் கைதாகினர். வடக்கு 24 பர்கானாவில் 2000 சணல் ஆலைத் தொழிலாளர்கள் தடையை மீறி கைதாகினர். பல இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், விவசாயிகள் என பல பிரிவு மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா, டார்ஜிலிங், சிலிகுரி, மேற்கு மித்னாபூர் மால்டா, பிர்பூம் உள்ளிட்ட இடங்களில் மறியல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் ஆகிய கோரிக்கைகளும் இணைக்கப்பட்டிருந்தன.
அசாமில் மய்ய முழக்கங்களோடு இன வன்முறை மற்றும் மதவாத பிரச்சாரத்திற்கெதிராகவும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில தலைநகர் கவுஹாத்தி, தின்சுகியா, திபு ஆகிய முக்கிய பகுதிகள் உட்பட பல இடங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் தலைமைக் குழு உறுப்பனர் ரூபுள்சர்மா, கர்பி ஆங்லாங் செயலாளர் பங்க்சோ ஆகியோர் கைதான முக்கிய தலைவர்கள் கர்பியில் சுயாட்சி மாவட்டக் கவுன்சிலில் நடந்த ஊழலை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
ஆந்திராவில், வடக்கு கோதாவரியில் பேரணிக்கு பிறகு மறியல் போர் நடைபெற்றது. விசாகப்பட்டினம், கர்னூல் மாவட்டங்களிலும் தோழர்கள் சிறை சென்றனர்.
ஒடிசாவில், கோராபுட், பூரி, ராயஹடா, மற்றும் தலைநகர் புவனேஸ்வர் உட்பட பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்குடன், நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்கும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது.
கர்நாடகாவில் பெங்களூரு, தாவன்கரே, கங்காவதி, மைசூர் உட்பட பல இடங்களில் தடையை மீறி தோழர்கள் கைதாகினர். பெங்களூருவில் நடந்த போராட்டத்தில் வடகிழக்கு மாநிலத்தவர் மீதான மதவாத சக்திகளின் தாக்குதல் என்பது முக்கிய பிரச்சினையாக இருந்தது.
ராஜஸ்தானில் ஜ÷ன்ஜ÷னு, உதய்பூர், பிரதப்கார் மற்றும் சலும்பர் ஆகிய மய்யங்களில் தோழர்கள் கைதாகினர்.
சட்டிஸ்கரில், துர்க், ராய்பூர், பிலாஸ்பூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடந்தது.
உத்தரகாண்டில் 8 மய்யங்களில் தோழர்கள் சிறை சென்றனர். திரிபுராவில், கைலாஷ் காரில் பேரணியாக சென்றவர்கள், முதல் போலீஸ் தடையை மீறி சென்று இரண்டாவது தடையில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டு கைது செய்யப்பட்டார்கள். மாநில செயலாளர் மிருனாய் சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
புதுச்சேரியிலும், அந்தமானிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு முன்பாக தொழிலாளர்களின் பொதுப் பேரவைகள் மற்றும் ஊழியர் கூட்டங்கள் பல நடத்தப்பட்டன. சென்னை, கோவை, திருவள்ளூர், கன்னியாகுமரி, சேலம், திருநெல் வேலி, நாமக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 100க்கும் மேற்பட்ட நடைபயணங்கள் கட்டமைக்கப்பட்டன. 16 மாவட்டங்களில் மொத்தம் 19 மய்யங்களில் மறியல் நடைபெற்றது. 60 சதம் பெண்கள் கலந்து கொண்டனர். மாநில தலைநகர் சென்னையில் இடம்பெயரும் தொழிலாளர்கள் 100 பேர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் 3,500க்கும் மேற்பட்டோர் திரட்டப்பட்டனர். மய்ய முழக்கத்தோடு காவிரி நீர் சிக்கல், தேசிய நெடுஞ்சாலை 68ல் விரிவாக்கப் பணிகளுக்கு நிலப் பறிப்பு ஆகிய கோரிக்கைகளும் இடம் பெற்றன.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமியும், திருவிடைமருதூரில் மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரமும் கலந்துகொண்டு சிறை சென்றார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், புதுக்கோட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், தஞ்சை - நாகை, கடலூர், நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் கைது
இடிந்தகரை மக்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் தொடுத்துள்ள போரைக் கண்டித்து அந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் இடிந்தகரையில் இருந்து காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தி, புரட்சிகர இளைஞர் கழகம் செப்டம்பர் 11 கோவையில் சாலை மறியல் நடத்தியது. 15 நிமிடங்கள் நடந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மறியல் நடத்திய தோழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் வெங்கடாசலம் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் தாமோதரன், பாலசுப்ரமணியன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தண்ணீர் கொள்ளையை தடுத்து நிறுத்து!
செப்டம்பர் 3 அன்று அம்பத்தூர் மண்டலம் 86வது வார்டில் வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளியில் +1ம் படிக்கும் மாணவி எம்.பெரியநாயகி தண்ணீர் லாரி மோதி படுகொலை செய்யப்பட்டார். பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் சம்பவ இடத்திலேயே சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் பங்கேற்ற மாலெ கட்சி, உழைப் போர் உரிமை இயக்கம், கட்டுமான தொழிலாளர் சங்க கிளைகளின் தோழர்கள் மாணவி படுகொலைக்கு காரணமான தண்ணீர் கொள்ளையை உடனே நிறுத்த வேண்டும், சுற்றுச் சுழலை நாசப்படுத்தும் மக்களின் உயிருக்கு உலை வைக்கும் நிலத்தடி நீர் வியாபாரிகளை அதில் சம்மந்தப்பட்டுள்ள அரசியல் கட்சியின் தலைவர்களை உடனே கைது செய்ய வேண்டும், படுகொலையான மாணவி குடும்பத்திற்கு ரூ.20,00,000 தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
செப்டம்பர் 3 அன்று பகுதியில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட கண்டன ஊர்வலத்தின் இறுதியில் தண்ணீர் கொள்ளைக்கு தனியார் முதலாளிகளின் லாபவெறிக்கு பலியான மாணவிக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. அகில இந்திய மாணவர் கழக துணைத் தலைவர் தோழர் பாரதி, மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக உழைப்போர் உரிமை இயக்க, கட்டுமான தொழிலாளர் சங்க, புரட்சிகர இளைஞர் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
இடம்பெயரும் தொழிலாளர் கூட்டம்
செப்டம்பர் 5 அன்று சென்னையில் நடந்த அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பீகார் மாநில ஏஅய்சிசிடியு தேசிய தலைவர்கள் தோழர்கள் ஆர்.என்.தாகுர் மற்றும் ஷர்மா ஆகியோர் அன்று மாலை சென்னையில் உள்ள இடம் பெயரும் தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டனர். கூட்டம் முழுவதுமாக இந்தியில் நடத்தப்பட்டது. சிவகாசி படுகொலையைக் கண்டித்து செப்டம்பர் 8 அன்று ஏஅய்சிசிடியு நடத்தவுள்ள கண்டன நிகழ்ச்சியில் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்வதென கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.