COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, September 5, 2012

மாலெ தீப்பொறி செப்டம்பர் 1 – 15 2012

களம்

மாருதி தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு

500 நிரந்தர தொழிலாளர்களை 500 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்துவிட்டு ஆலையில் வெறும் 300 தொழிலாளர்கள் கொண்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் உற்பத்தியை துவக்கிய மாருதி நிர்வாகத்துக்கு எதிராக, பணிநீக்கம் செய்யப்பட்ட மாருதி தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்து, மாருதி தொழிலாளர்கள் மீது அரியானா அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள காவல்துறை வேட்டையை உடனே நிறுத்து, மாருதி ஆலையில் நடக்கிற தொழிலாளர் சட்ட மீறல் பற்றி உயர்மட்ட நீதி விசாரணை நடத்து என்ற முழக்கங்களுடன் ஆகஸ்ட் 22 அன்று மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஏஅய்சிசிடியு எதிர்ப்பு நிகழ்ச்சிகள் கட்டமைத்தது. தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் மாருதி தொழிலாளர் மீதான காவல்துறை வேட்டையை கண்டித்து சுவரொட்டி இயக்கம் நடத்தப்பட்டது.
கோவையில் ஆகஸ்ட் 22 அன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன் உரையாற்றினார்.
சென்னையில் திருவொற்றியூர், திருபெரும்புதூர் ஒருமைப்பாடு மன்றங்கள் சார்பில் திருவொற்றியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் எம்ஆர்எஃப், என்ஃபீல்டு, கார்பரண்டம், டிஅய் டைமண்ட் செயின், ஆன்லோடு கியர்ஸ் ஆலைகளின் தொழிலாளர் தோழர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒருமைப்பாடு மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான தோழர் மா.சேகர் தலைமை தாங்கினார். ஏஅய்சிசிடியு மாநில, மாவட்டத் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். அகில இந்திய மாணவர் கழக தேசிய கவுன்சில் உறுப்பினர் தோழர் ராஜசங்கர் கலந்துகொண்டார்.
சீர்காழியில் 25 பெண் தொழிலாளர்கள் உட்பட நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாருதி தொழிலாளர்க்கு ஒருமைப்பாடு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாலெ கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் மற்றும் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் கண்டன உரையாற்றினர்.
ஆகஸ்ட் 24 அன்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கே.ஜி.தேசிகன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்தத் தொழிலாளர்களும் சோமாக்ஸ் ஆலைத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 24 அன்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் கட்டமைக்கப்பட்டது. ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத்தலைவர்கள் தோழர்கள் ஜி.ரமேஷ், தேன்மொழி கண்டன உரையாற்றினார்கள்.

தலையங்கம்

பரமக்குடி  பதானி தோலாவுக்கு நீதி வேண்டும்!

பரமக்குடி - பதானிதோலாவுக்கு நீதி கோரும் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி சார்பில் 18.08.2012 அன்று மதுரையில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 2011 செப்டம்பர் 11 அன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறி பிடித்த போலீஸ்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு பேரை கொன்று ஓராண்டு ஆகப் போகிறது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குற்றச்சாட்டு கூட பதிவு செய்யப்படவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சம்பத் கமிஷன் விசாரணை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
தியாகி இமானுவேல் சேகரன் பேரவை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ), இடதுசாரி அமைப்புகள், முற்போக்கு வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள்  முயற்சியால் மத்திய புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் விசாரணை துரிதமாக நடைபெறவில்லை. எனவே விசாரணையை துரிதப்படுத்தி,  குற்றவாளிகளை தண்டிக்க உயர்நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. போராடும் ஒடுக்கப்பட்ட அமைப்புகள், இடதுசாரிகள், சாதி ஆதிக்கம் மற்றும் அநீதியை எதிர்க்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது. பரமக்குடியில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்களை கலவரக்காரர்கள், வன்முறையாளர்கள் என்று சித்தரித்து துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி பேசிய முதல்வரின் ஆபத்தான பேச்சை  திரும்பப் பெற வேண்டும் என்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
2. 06.08.2012 அன்று மதுரை, சின்னஉடைப்பு பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு, கவுரவத்தை சிதைக்கும் நோக்கத்துடன், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திரளும் தலித் மக்களை தடுத்து அவர்களது கோரிக்கையை எழவிடாமல் செய்யும் திட்டத்துடன் டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சிதைத்த சாதி வெறி விஷமிகளைக் கருத்தரங்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில்  எதிர்ப்புக் குரல் எழுப்பிய பிறகும் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாத காவல் துறையையும் அதிமுக அரசையும் கருத்தரங்கம் வன்மையாக கண்டிப்பதுடன். குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.
3. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு நிகழ்வாக அறிவிக்க வேண்டும் என்ற, மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்ற ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
4. 1996 ஜுலை 11 அன்று பீகார் பதானி தோலாவில் 23 பேரை படுகொலை செய்த ரன்வீர் சேனா குற்றவாளிகளை பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்ததை கருத்தரங்கம் நிராகரிக்கிறது. உச்சநீதிமன்றம் வழக்கை விரைந்து மறுவிசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிப்பதோடு பீகார், தமிழ்நாட்டில் கொடியங்குளம், தாமிரபரணி உள்ளிட்ட நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடி மக்கள் படு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை மறு விசாரணை செய்து குற்றவாளிகளை கடுமை யாக தண்டிக்க வேண்டுமென்று கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
5. காரைக்குடி பர.அழகனுக்கு மன்னர் சேதுபதி காலத்தில் வழங்கப்பட்ட நில உரிமையை உயர்நீதிமன்றமும் அரசாங்கமும் உறுதி செய்த பிறகும் மேல்சாதி ஆதிக்க சக்திகள் ஆக்கிரமிப்பை அகற்ற மறுத்து வருகின்றனர். சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை உரியவர்களுக்கு ஒப்படைக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. ஆக்கிரமிப்பாளர்  மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
6. மதுரை கச்சைகட்டியில் நரபலி தரப்பட்ட ராஜலட்சுமி கொலை வழக்கில் சம்பந் தப்பட்ட குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை கைது செய்து வழக்கை விரைவாக நேர்மையாக விசாரித்து தண்டிப்பதோடு அயூப் கான், கூட்டாளிகளுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
7. தமிழ்நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் முறையாக பதிவு செய்யப் படுவதில்லை. விசாரிக்கப்படுவதில்லை. தண்டிக்கப்படுவதில்லை. அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையீட்டில் வழக்குகள் கைவிடப் படுகின்றன. விரைவு தனி நீதிமன்றம் அமைத்து அனைத்து வழக்குகளையும் ஓராண்டுக்குள் விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
8. தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் தொட்டில் முதல் சுடுகாடுவரை பல்வேறுவிதமான பாரபட்சங்களுக்கும் அநீதிக ளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். தீண்டாமைச் சுவர்கள், கோவில் நுழைவு மறுப்பு, பொதுச் சொத்துக்களிலிருந்து விரட்டப்படுவது, பஞ்சமர் நிலங்கள் அபகரிக்கபடுவது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பணி செய்யப்படவிடாமல் அச்சுறுத்தப்படுவது, பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது, கவுரவக் கொலைகள் செய்யப்படுவது போன்ற கடுங்குற்றங்களை தடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, சமத்துவம், கவுரவம் காக்கப்பட உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
9. ஆதிக்க சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பஞ்சமர் நிலங்களை மீட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க பஞ்சமர் நில மீட்பு ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் கோவில், மடம், அறக்கட்டளை நிலங்களை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
இந்தக் கோரிக்கைகளுக்காக தொடர் இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துவதென கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட்டது. இந்த இயக்கங்களுக்கு, போராட்டங்களுக்கு இடது, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள், சக்திகள் ஆதரவு தர வேண்டுமென கருத்தரங்கம் அழைப்பு விடுத்தது.
கருத்தரங்கில் ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் அ.சிம்சன் தலைமை தாங்கினார். தியாகி இமானுவேல் சேகரன் பேரவை பொதுச் செயலாளர் பூ.சந்திரபோஸ், மாலெ கட்சி மத்திய கமிட்டி உறுப்பினர் கவிதா கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பாலசுந்தரம், ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளரும் மற்றும் டாக்டர் அம்பேத்கர் மின்வாரிய பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளருமான சுப்பிரமணியன், எழுத்தாளர் இளம்பரிதி ஆகியோர் உரையாற்றினர். மதுரை மாவட்ட பொறுப்பாளர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் நன்றி கூறினார்.
மதுரை, நெல்லை, திண்டுக்கல், தூத்துக்குடி - விருதுநகர், கரூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏறத்தாழ 250 பேர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்பு

நிலக்கரிச் சுரங்க ஊழல்:
பாராளுமன்றம் பற்றிக்கொண்டது


எஸ்.குமாரசாமி

கடந்த சில தினங்களாக மக்களவையும் மாநிலங்களவையும் முடங்கி உள்ளன. நிலக்கரிச் சுரங்க ஊழலில் நாட்டுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய தணிக்கையாளர் குற்றம் சுமத்தியுள்ளதால், நிலக்கரித் துறைக்குப் பொறுப்பாய் இருந்த பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஜக கோருகிறது. அவர்கள் கூட்டாளி அய்க்கிய ஜனதா தளம் பிரதமர் பதவி விலகக் கோரவில்லை. அவர்களும் இகக, இகக(மா), கட்சிகளும், விவாதத்திற்குப் பின் பிரதமர் முழுவிளக்கம் தரக் கோருகிறார்கள். பாஜக அஇஅதிமுகவையும் தெலுங்கு தேசத்தையும் தன் பக்கம் கொண்டுவரப் பார்க்கிறது. மாயாவதி, முலாயம், மமதா, பிரதமருக்கோ மத்திய அரசுக்கோ சங்கடம் தர விரும்பவில்லை.
என்னதான் நடந்தது?
விவகாரம், 17 மில்லியன் டன் வைப்பு (டெபாசிட்) இருக்கிற ரூ..51 லட்சம் கோடி மதிப்புடைய நிலக்கரியை, ஏலமுறை இல்லாமல் வழங்கியது தொடர்பானது. 1973ல் நிலக்கரி சுரங்க சட்டம் இயற்றப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே இத்துறை என ஒதுக்கப்பட்டது. பிறகு சிமெண்ட், இரும்பு, எஃகு தொழில்களுக்கும் ஒதுக்கலாம் எனத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
நரசிம்மராவ் ஆட்சியில் வேகம் பெற்ற உலகமய, தாராளமய தனியார்மயக் கொள்கைகள் வாஜ்பாய் ஆட்சியிலும் தொடர்ந்தன. முதல் அய்முகூ அரசு 2004ல் பதவிக்கு வரும் முன் இந்த ஆட்சிகள் 34 நிலக்கரி வயல்களை, எந்த ஏல முறையும் இல்லாமல் பெருந்தொழில் குழும முதலாளிகளுக்குத் தந்தனர். பின் அய்முகூ 1 அரசாங்கம் அமைந்தது.
• 11.07.2004: நிலக்கரிச் சுரங்கங்களை வழங்குவதில் ஏலமுறை பின்பற்றப்படாவிட்டால் தனியார் பெருமுதலாளிகள் காட்டில் மழை (ரஐசஈஊஅகக எஅஐசந) என மத்திய நிலக்கரித் துறை செயலர் திரு.பி.பிரகாஷ் கொள்கை குறிப்பு எழுதுகிறார்.
• 2004 முதல் 2009 வரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் சிபு சோரன் 3 முறை நிலக்கரி அமைச்சர். துணை அமைச்சர் காங்கிரசின் தாசரி நாராயண ராவ். சிபு சோரன் அமைச்சராக வருவதும் போவதுமாக இருந்த நேரம் போக, மற்ற நேரங்களில் மன்மோகனே துறை அமைச்சர் ஆக இருந்தார்.
• எதிர்க் கட்சி ஆளும் மாநில அரசுகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டியும், சட்டத் திருத்தம் இல்லாமல் ஏல முறைக்குச் செல்ல முடியாது என்று கூறியும், சிபு சோரனும் தாசரி நாராயணராவும் இழுத்தடிக்கிறார்கள்.
• ஆகஸ்ட் 2006. மத்திய சட்ட அமைச்சகம், ஏலமின்றி ஸ்க்ரீனீங் கமிட்டி மூலம்  அரசே  தேர்வு செய்து நிலக்கரிச் சுரங்கம் வழங்கும் முறை, சட்டத் திருத்தம் ஏதுமில்லாமல் நிர்வாக முறை மூலம் வந்தது என்பதால், அதே போல், சட்டத் திருத்தம் இல்லாமலே நிர்வாக உத்தரவு மூலம் கூடுதல் தொகை தருபவரை ஏலமுறை மூலம் கண்டறிந்து சுரங்கம் வழங்குவதிலும் எந்தச் சட்டச் சிக்கலும் இல்லை எனத் தெளிவு படுத்துகிறது.
• அரசியலமைப்புச் சட்டத்தில், மத்திய அரசு மட்டுமே, மாநில அரசு மட்டுமே, இரண்டுமே முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவை என்றுள்ள 3 பட்டியல்களில், நிலக்கரி, மத்திய அரசு பட்டியலில் உள்ளது. (ஆகவே மாநில அரசு எதிர்ப்பு என்பது மோசடி வாதம்)
• இந்தப் பின்னணியில்தான், 155 நிலக்கரி வயல்களை ஏலமுறை இல்லாமல், டாடா ஸ்டீல், எஸ்ஸôர் பவர், ஹிண்டால்கோ, டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் பவர் போன்ற 25 தனியார் பெரும்தொழில்குழும முதலாளி களுக்கு வழங்கியதால் அரசுக்கு ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய தணிக்கையாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
• இங்கு ஜ÷ன் 2012ல் நிலக்கரித் துறைச் செயலர் பி.சி.பிரகாஷ் சிஎன்என் அய்பிஎன் தொலைக்காட்சிப் பேட்டியில், பிரதமர் ஏலமுறைதான் என்பதில் உறுதியாக நின்றிருக்க வேண்டும் எனச் சொன்னது கவனிக்கத்தக்கது.
பாஜக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு?
2ஜி அலைக்கற்றை ஊழலில் வீரவசனங்கள் பேசிய பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி, 2.12.2007ல் 2ஜி அலைக்கற்றையை ஏலமுறையில் வழங்கக் கூடாது எனக் கடிதம் எழுதியவரே. ஒரு டன் நிலக்கரி தோண்ட ஒதுக்கியதில் ரூ.50 முதல் ரூ.100 ஊழல் என வசனம் பேசிய பாஜகவின் ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேச முதல்வர்கள் எல்லோருமே, நிலக்கரி ஊழலுக்கு வரிந்து கட்டிக் கொண்டு துணை போனவர்களே.
சட்டிஸ்கர் முதல்வர் ராமன்சிங் DO எண். 873, 28.03.2005 கடிதம் மூலம், ஏல முறையில் நிலக்கரி வயல் வழங்குவதை எதிர்த்தார்.
ராஜஸ்தானில் பெரிய அளவில் நிலக்கரிச் சுரங்கங்கள் இல்லாத போதும், முதல்வர் வசுந்தரா ராஜே, சர்க்காரியா ஆணையம் சொல்லி உள்ள பரிந்துரைகள்படி, மாநிலங்களின் உரிமை காக்க ஏலமுறை கூடாது என 11.04.2005 கடிதம் எழுதினார். மத்தியபிரதேச முதல்வர், அனில் அம்பானியின் சசான் மெகா பவர் பிராஜெக்ட் தனக்கு வழங்கப்பட்ட நிலக்கரி ஒதுக் கீட்டிற்கும் உபரியாக இருப்பதை, தான் விரும்பியபடி விற்று லாபம் பார்க்க உதவினார். இதனால் நாட்டிற்கு இழப்பு ரூ.29033 கோடி என்றும், அது மொத்தமும் அம்பானிக்குச் சென்றது என்றும் மத்தியத் தணிக்கையாளர் அறிக்கை சொன்னது.
சிங்கூர் நந்திகிராம் புகழ் புத்ததேவ் முதல்வராய் இருந்தபோது மேற்குவங்க இடது முன்னணி அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் DO  எண்.2 நாள் 31.03.2005 கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதினார். “தற்போதைய முறையில் மாநில அரசின் கருத்து கேட்கப்படுகிறது. இம்முறையை மாற்றினால், மாநிலத்தைத் தொழில்மயமாக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும். ஆகவே ஏலமுறை கூடாது என மேற்கு வங்க அரசு கருதுகிறது”. ஆக, இவர்கள் மன்மோகனுடன் சண்டை போடுவது போல் நடிக்கிறார்கள். மோசடி நாடாளுமன்றம் மீது, போலியான அதன் முதலாளித்துவ ஜனநாயகம் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வைக்க உதவும் வகையில், ‘சண்டைக் காட்சிகளை’ படத்தில் சேர்த்துள்ளனர்.

காங்கிரஸ் என்ன பதில் சொல்கிறது?
பூஜ்யம் நஷ்டம் என்று அலைக்கற்றை ஊழலில் முதலில் சொன்னது போல்தான் நிலக்கரி ஊழலிலும் பதில் சொல்கிறார்கள். ராசா பதவி இழந்தார். சிறை சென்றார். கனிமொழி சிறை சென்றார். தயாநிதி மாறன் பதவி இழந்தார். ஆனால் இம்முறை சிக்கி இருப்பது மன்மோகன் அல்லவா?
காங்கிரஸ் தரப்பில் அமைச்சர் ஜெய்ஸ்வால் பதில் சொல்கிறார்:
நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கு சிமெண்ட், இரும்பு, எஃகு, எரிசக்தி வேண்டும். இத்தொழில்களுக்கு நிலக்கரி வேண்டும். அதைச் சீக்கிரம் எடுப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதே செய்யும் என்ற அடிப்படையில் செய்தோம். இதில் என்ன தவறு? இவை, அவரது வாதங்கள்.
பெரும்பாலான சுரங்கங்கள் இயங்காதபோது, நஷ்டம், இழப்பு என்றெல்லாம் எப்படிப் பேச முடியும் என சிதம்பரம் கேட்கிறார். நிலக்கரி நிறைய கிடைப்பது, சிமெண்ட், இரும்பு, எஃகு, எரிசக்தி விலை, கட்டணம் உயராமல் தடுக்கும் எனவும் ஜெய்ஸ்வால் வாதாடுகிறார்.

இந்த வாதங்கள் சரியா?
ஒதுக்கப்பட்ட சுரங்கங்களில் பெரும்பான்மை இயங்கவில்லையே என டெஹல்கா பத்திரிகை ஜெய்ஸ்வாலிடம் கேட்டபோது, 50% அல்ல 80% இயங்கவில்லை எனத் திருத்துகிறார். சிதம்பரம், இதையே காரணம் காட்டி, இயங்கவில்லை எனும்போது இழப்புமில்லை என்கிறார். அலைக்கற்றை உரிமத்தை மோசடி செய்து முதலில் வந்தவர்க்கு முதலில் உரிமம் என வழங்கியபோது, தொலை தொடர்பு துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாத பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகள், தம் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்ததை நாடு மறக்கவில்லை என்பதை, இவர்கள் மறந்துவிட்டதாக நாடகமாடுகிறார்கள். நிலக்கரி தோண்டி எடுக்கும் உரிமை பெற்ற நிறுவனங்களின் பங்குமதிப்பு, ஒரு டன் கூட தோண்டாமல், கோடி கோடியாய் உயர்ந்துவிட்டதை மறைக்கிறார்கள்.
நிறைய நிலக்கரி, நிறைய இரும்பு, எஃகு சிமெண்ட், எரிசக்தி, குறைந்த விலையில், கட்டணத்தில் கிடைக்கும் என்ற இவர்களது வாதம் நொறுங்கி விடுவதை மறைக்க முடியாமல் திணறுகிறார்கள். குறைந்த விலை, கட்டணத்தால் நுகர்வோர்க்கு ஆதாயம் என்பதை நிரூபிக்க இதுவரை எந்த விவரங்களும் தரப்படவில்லை. மாறாக, வேறு இரண்டு செய்திகள் உள்ளன.
அம்புஜாஸ், அல்ட்ராடெக், ஜெய்பீ போன்ற சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் திட்டமிட்டு (கார்ட்டல் அமைத்து) சிமெண்ட் விலையை உயர்த்தியதற்காக ரூ.6307 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள், மாநில அரசாங்கங்களிடம் மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் போடாமல், ஓர் யூனிட் ரூ.10, ரூ.12 என விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள்.

நிலக்கரி முதல் விமான நிலையம் வரை
பூமிக்குக் கீழே இருக்கிற நிலக்கரி ஊழலோடு தணிக்கை அறிக்கை நிற்கவில்லை. ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் தரை இறங்கும், விண்ணில் பறக்க இடம் தரும், டெல்லி விமான நிலைய ஊழல் பற்றியும் பேசுகிறது. அய்தரபாத் ஜிஎம்ஆர் குரூப் என்ற பெரும்தொழில் குழுமத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ள டெல்லி ஏர்போர்ட் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு 4800 ஏக்கர் நிலம், ஏக்கருக்கு ஆண்டு குத்தகை ரூ.100 என வழங்கப்பட்டுள்ளதாம். இந்த நிறுவனம், 240 ஏக்கர் நிலத்தில், அடுத்த 58 ஆண்டுகளில் ரூ.88,337 கோடி வருவாய் ஈட்டுமாம்.

அமெரிக்கா முதல் டாடா வரை
அமெரிக்காவும் இந்தியப் பெருமுதலாளிகளும் கொள்கை பக்கவாத நோய் மத்திய அரசைப் பீடித்துள்ளது எனக் குற்றம் சுமத்துகின்றனர். விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி அமெரிக்கப் பத்திரிகைகள் எழுதுவதற்கு ஒத்து ஊதுகிறார். நிலம், எரிசக்தி ஆகியவற்றில், தொழில் வளர்க்கும் கொள்கைகள் விரைவாக முடிவானால்தான், நாடு முன்னேறும் என்கிறார் டாடா.
முதலாளித்துவ அரசியல், ஊழல் ஆகியவற்றை ஆட்டுவிப்பது முதலாளித்துவப் பொருளாதாரமே. காங்கிரஸ் பாஜக இரண்டுமே, பெரும்தொழில்குழும (கார்ப்பரேட்) சூறையாடலுக்குத் துணை போகிறார்கள். இந்த வளர்ச்சிப் பாதை, முதலாளித்துவத்தை கொழுக்க வைக்கிற அதே நேரம், இந்த வளர்ச்சிக்காக, மக்களுடைய நிலம், வாழ்வாதாரங்கள், நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்படுவதற்கு இட்டுச் செல்கிறது. எதிர்த்து எழுகிற மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதனால்தான் மார்க்ஸ், வளர்ச்சியின் அமிர்தம் கொன்றொழிக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகளிலிருந்து பருகப்படுகிறது என எழுதினார்.   

கோக்ரஜாரும் அதற்குப் பின்பும்: ஜனநாயகத்துக்கு சவால்கள்

அஸ்ஸôம் மாநிலம், கோக்ரஜார் மாவட்டத்தில் ஜ÷லை மாதத்தின் பிற்பகுதியில் வெடித்த வன்முறை, ஒவ்வொரு நாளைக் கடக்கும் போதும், படுமோசமான அரசியலின் உரத்த குரலாகி கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசாங்கங்கள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறை வெகுமுன்னரே தணிக்கப் பட்டிருக்கும். இராணுவ தலையீட்டிற்கான விதிமுறைகளைக் காரணம் காட்டி முக்கிய தருணத்தில் கால தாமதம் ஏற்பட்டதன் மூலம் வன்முறை வளர்வதற்கு இடமளிக்கப்பட்டது. அரசு, நிர்வாக முன்முயற்சிக்காகவும், அரசியல் உறுதிக்காகவும் காத்துக் கொண்டிருந்த போது அஸ்ஸôமில் கீழ்ப் பகுதிகளான, கோக்ராஜார், துப்ரி மற்றும் சிரங் மாவட்டங்களில் பயமும், பாதுகாப்பின்மையும் பற்றிக் கொண்டது. இதுவரை இல்லாத அளவு பெரும் மக்கள் கூட்டம் வாழ்விடங்களிலிருந்து வெளியேறி கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்தப் பகுதிகளில் இன்னும் தாழ்ந்த மட்டத்திலான வன்முறைகள் தொடர்வதாக சொல்லப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80அய் தாண்டி விட்ட நிலையில், நிவாரண முகாம்களில் உள்ள மோசமான சுகாதார நிலைமைகளினாலும், மருத்துவ வசதி போதுமானதாக இல்லாததாலும் மேலும் அதிகமானோர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அஸ்ஸôமில் இதற்கு முன்னர் நடைபெற்ற வன்முறைகளைப் போலல்லாமல், கோக்ராஜார் சம்பவங்களின் தாக்கம் அஸ்ஸôமைத் தாண்டியும் இருந்தது. பாஜக, அஸ்ஸôம் வன்முறையிலுள்ள அரசியல் சந்தர்ப்பத்தை விரைவாக நுகர்ந்து, வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக முஸ்லீம்கள் இடம் பெயர்வதும், காங்கிரஸ் மரபு வழியாக நடத்தும் ‘வாக்கு வங்கி அரசியலும்’, ‘சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும்’ போக்குமே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டியது. நாடாளுமன்றத்தில் இக்குற்றச்சாட்டை அத்வானியே முன்னின்று சுமத்தியபோது பாஜகவும், ஆர்எஸ் எஸ்ஸ÷ம், தங்களுக்கு மிகவும் உடந்தையான கோட்பாடான, ‘வங்கத்தின் முஸ்லீம்கள் ஊடுருவல்’ என்பதை நாடு முழுவதும் தாக்குதல்மிக்க பிரச்சாரமாக எடுத்துச் சென்றன. மும்பையில் சில முஸ்லீம் அமைப்புகள் நடத்திய எதிர்ப்புப் போராட்டம் போலீசுடன் மோதலுக்கு இட்டுச் சென்று இருவர் உயிரிழந்தனர். குறைந்தபட்சம் 50 பேராவது காயமடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகைக்குப் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் வசிக்கும் வடகிழக்கு மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறலாம் என்ற வதந்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. பீதியடைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், மாணவர்களும் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே நகரங்களிலிருந்து அஸ்ஸôம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு திரும்பினர். கோபமடைந்த பிரயாணிகளுடன் கூட்டம் நிரம்பி வழிந்த இரயில்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டு பதற்றத்துடன் இருக்கும் கோக்ராஜார் மற்றும் அதன் அன்மை மாவட்டங்களை கடந்த போது மீண்டும் புதிய மோதல்களில் சிலர் ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டார்கள் என்ற செய்தி, பற்றி எரிந்து கொண்டிருக்கும் மதரீதியான பிளவுக்கு மீண்டும் எண்ணெய் ஊற்றியது. நவீன தொலை தொடர்பு சாதனங்களான இணையதள சமூக வலைகளும், அலைபேசி குறுஞ்செய்திகளும் எப்படி அச்சத்தையும், எல்லா இடங்களிலும் பாகுபாட்டையும் விதைத்தன என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்தோம்.
பல உண்மையான நிகழ்வுகளையும், நியாயமான கரிசனங்களையும் ஒன்றாக கலந்து மிகப்பெரிய புனைவு உருவாக்கப்பட்டு மன ரீதியான பீதியை பரப்புவதன் மூலம் மத வெறுப்பு அரசியலுக்கும், மதவெறி பிரிவினைக்கும் சேவகம் செய்யப்பட்டது. அஸ்ஸôமின் பூர்வ குடிமக்கள், வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஓரங்கட்டப்படுவார்கள், அதனால் மக்கள் தொகை சம நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு, அகண்ட வங்கம் என்ற புனைவுத் திட்டத்திற்கு அஸ்ஸôம் ஆளாகும் அபாயம் இருப்பதாக சொல்லப்பட்டது.
வங்கதேச ஊடுருவல் என்ற பீதி, பயங்கரவாதத்துடன் முடிச்சுப் போடப்பட்டது. பிறகு அது அடிக்கடி இஸ்லாமிய பயங்கரவாதம் என்னும் பூதமாக சித்தரிக்கப்பட்டது. இப்போது அஸ்ஸôம் மற்றும் மொத்த வடகிழக்கு மாநில மாணவர்களும், தொழிலாளர்களும் தேசிய தலைநகர் மாத்திரமல்ல, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அவமானப்படுத்தப்படுதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி கொண்டிருப்பதற்கு காரணமாக வதந்திப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாநில சாமான்ய மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது கல்வி, வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து சென்றிருக்கும் மாநிலங்க ளிலோ, பாரபட்சம் மற்றும் துன்புறுத்தலை உணர்கிறார்கள் என்றால், அடிப்படையாக அதன் வேர், இந்தப் பிராந்தியம் ‘இந்திய மய்ய நீரோட்டம்’ என்ற குறுகிய பார்வையின் அடிப்படையில் இணைக்கப்பட்ட மேலோங்கிய அதிகாரத்துவ இயல்பினால்தான். சமச் சீரற்ற வளர்ச்சி, பரந்த வேலையின்மையையும், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் போன்ற கொடுமையான சட்டங்கள் ஜனநாயக குரலை ஒடுக்குவதாகவும் இருந்து வருகிறது. இந்த அதிருப்தியில் வங்கதேச ஊடுருவல்தான் பிரச்சினைக்கு காரணம் என்பது பொருந்திப் போய், வங்க மொழி பேசும் முஸ்லீம்கள்தான் வடகிழக்கின் மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று மதவாத திசையில் செல்ல உதவியது. உள்துறை அமைச்சகம் தவறான தகவல் தந்து வெறுப்பை உண்டுபண்ணக் கூடிய பிரச்சாரத்தின் துவக்கப் புள்ளி நாட்டுக்கு வெளியிலுள்ள (பாகிஸ்தான்) சக்திதான் என்று சொன்னாலும், உள்நாட்டிலேயே அதற்கான சக்திகள் இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. நிர்வாகத் தரப்பிலேயே சிலர், குறுஞ்செய்தி வலைதளம் மூலம் அச்சுறுத்தல் பிரச்சாரம் நடந்ததன் பெரும்பகுதி இந்துத்துவ அமைப்புகளிடமிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
பெருநகரங்களில் வளர்ந்து வரும் பெரும் முதலாளித்துவ மய்யங்களில் தாக்குதலும் அதைத் தொடர்ந்து தொழிலாளர்கள், மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் வெளியேறுவதும் பேரிடியாக அமைந்திருக்கிறது. மிகச் சமீபத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகாராஷ்டிராவில் எம்என்எஸ்/சிவசேனா குண்டர்களால் உண்மையிலேயே தாக்கப்பட்ட சம்பவங்கள் இருந்தன. இருந்தபோதிலும் குறுஞ் செய்தி பிரச்சாரம் மற்றும் வதந்தியை பரப்புவதன் மூலம் இப்போது நடந்து கொண்டிருக்கும் இது போன்றதொரு மொத்தமான வெளியேற்றம் அப்போது நடக்கவில்லை. இந்த வெளியேற்றம், சாதாரண நேரங்களில் கூட ‘மய்ய நீரோட்டத்திற்குள்’ இனவாதச் சித்தரிப்பும், பாரபட்சமும் உட்புகுந்திருப்பதால் ஆழமாக உள்ளிருக்கும் பாதுகாப்பற்றத் தன்மையின் வெளிப்பாடே ஆகும். இந்தப் போக்கை வடகிழக்கு மாநில பெண்கள், நாட்டில் பல்வேறு பெருநகரங்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களில் பார்க்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் அதிகாரிகள் கூருணர்வற்ற விதத்தில் நடந்து கொண்டதையும், அதேபோல் பெருநகர மாணவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது பற்றி எடுத்துக்காட்டப்பட்ட சம்பவங்களிலும் நடந்து கொண்டதையும் பார்க்கலாம். ‘குறுஞ்செய்தி’ பீதியால் வடமாநிலங்களுக்கு திரும்பிச் செல்பவர்களோடு, வீட்டு உரிமையாளர் வீடு தர மறுப்பதால் திரும்பிச் செல்பவர்களும் உண்டு.
வடகிழக்கை குறிவைத்து நடத்தப்படும் வெறுப்புப் பிரச்சாரம், பரவலாக வியாபித்திருக்கும் இனவாதச் சித்தரிப்பையும் வடகிழக்கின் குறிப்பான அடையாளங்கள் மற்றும் சமூக முரண்கள் பற்றிய அறியாமையையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. பெருநகரங்களில் சிறுபான்மை முஸ்லீம்களைப் போலவே வடகிழக்கு மாநிலத்தவரும் இனப்பாகுபாட்டையும், பாரபட்சத்தையும் சந்திக்கிறார்கள். இருவருக்குமே குடியிருப்புகள் மறுக்கப்படுகின்றன. வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட தாக்குதலுக்கு இலக்காகக் கூடிய மக்களை ஒருவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்துவதை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு அடுத்து, முஸ்லீம்கள் அதிக எண்ணிக்கையில், அதாவது தோராயமாக மூன்றில் ஒருவர் என்ற அளவில் இருப்பது, அதுவும் வங்க தேச எல்லையை ஒட்டிய பகுதியில் குவிந்து இருப்பதும் அஸ்ஸôம் மாநிலத்தில்தான். ஆனால் இப்படி குவிந்து இருப்பது என்பது வரலாற்றுரீதியாக, இரண்டு கட்டங்களில் நடந்த வெகுமக்கள் இடம் பெயர்வில்தான். முதலில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது. மற்றொன்று வங்கதேசம் உருவாகியபோது. அஸ்ஸôம் ஒப்பந்தம், 1971அய் இடம் பெயர்ந்தவர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கான அடிப்படை ஆண்டாக ஏற்படுத்தியது. கடந்த 20 ஆண்டுகளில் சில ஆயிரம் பேர் வங்க தேசத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பலர் தங்கள் ஆவணங்கள் பலவற்றையும் சமீபத்திய வன்முறையில் இழந்துவிட்டனர். ஆனால் அரசாங்கம் மதிப்புமிக்க ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே புனர்வாழ்வு என்று சொல்லி வருகிறது. கலவரங்கள் நம் மக்களை அந்நிய தேசத்தவர்களாக மாற்றும் என்றால் அதை நாம் அனுமதிக்க முடியாது. அனுமதிக்கவும் கூடாது. அஸ்ஸôமின் மக்கள் தொகை பெருக்கம், இந்திய சராசரி அளவை விடக் குறைவு என்று 1971ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு சொல்கிறது. இது தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக வங்க தேசத்தவர்கள் தொடர்ந்து ஊடுருவுகிறார்கள் என்பதை மறுப்பதாய் உள்ளது. இருந்தபோதும், ஆர்எஸ்எஸ் - பாஜக மிகைநேரப் பணி பார்த்து தன் பிரச்சாரக் கருவியை, தேசங்கடந்த ஊடுருவல் மற்றும் பயங்கரவாதம் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரவச் செய்து அச்சுறுத்தப் பயன்படுத்தி வருகிறது. இதை பாஜக வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் உணர்ச்சிமிகு பிரச்சாரமாக பயன்படுத்தும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறது.
அஸ்ஸôம் மாநிலத்திற்குள் பாஜக இதுவரை தீர்மானகரமான நுழைவு எதையும் ஏற்படுத்த முடியவில்லை. அதற்கு அங்குள்ள பிராந்திய சிந்தனை மற்றும் அடையாளப் பிரச்சினைகளின் வலுவான தாக்கமே காரணம்.
அசாம் கன பரிசத் போன்ற பிராந்திய கட்சிகள் வலுவிழந்து வரும் நிலையில், பாஜக, இப்போதுள்ள அஸ்ஸôமின் கொந்தளிப்பான நிலையில் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அரசியல்ரீதியாக பிரிந்து கிடக்கும், இதுவரை காங்கிரசின் ஆதிக்கத்திலிருக்கும் வடகிழக்கில் முக்கிய அரசியல் சக்தியாக பரிணமிக்கப் பார்க்கிறது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்திய, பூர்வ குடிகள் மற்றும் மலைவாழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான சிறு அசைவைக் கூட அரசியல் - ராணுவ துணை கொண்டு ஒடுக்குவது என்ற நிலை எடுப்பதன் மூலம், வடகிழக்கு பிராந்திய மக்களின் ஜனநாயக அபிலாசைகளுக்கு எதிராக நிற்பது, பாஜக சொல்லும் ‘கலாச்சார தேசியவாதம்’ என்ற கருத்தியல், வடகிழக்கு மற்றும் சிறுபான்மை மக்களின் அடையாள உரிமைக்கு எதிரானதாகும். இப்படிப்பட்ட பாஜக, இந்தப் பிராந்தியத்தின் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் கட்சி என்று சொல்லி, இப்போதுள்ள சிக்கலான சூழ்நிலையில் மதவாத அறுவடை செய்யப் பார்க்கிறது. இந்த அபாயகரமான மதவாத திட்டம் முறியடிக்கப்பட வேண்டும். மதவெறி சக்திகள் சூழலை குலைத்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் மக்கள் ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும் அபாயத்திற்கு உள்ளாக்க நாம் அனுமதித்து விடக்கூடாது.
இடம் பெயர்ந்த தொழிலாளர் மற்றும் மாணவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது ஜனநாயக தேசிய ஒற்றுமை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மய்யமாகும். எந்த ஒரு அமைப்பும், அரசாங்கமும் அவர்களின் வாழ்க்கை மற்றும் உரிமையோடு விளையாட அனுமதிக்க முடியாது. பலதரப்பட்ட மொழி மற்றும் மத சமூகங்கள், மற்றும் பூர்வகுடிகள் ஆகியோரின் ஒன்றுகலத்தல் நடந்த இடமாக வரலாற்றுபூர்வமாக அசாம் இருந்து வருகிறது. அஸ்ஸôம் மக்கள் மனம் ஒன்றுபட்டு இருப்பது என்பது இன்னும் பல்வேறு பரந்த சமூக சக்திகள் கொண்ட இந்தியாவின் வலிமைக்கும், அனைவரும் இணைந்து வாழ முடியும் என்பதற்குமான மய்யமாக அமையும்.

கட்டுரை

வளர்ச்சி வருகிறது...
வறிய மக்களே! உயிர்விடுங்கள்!


கே.ஜி.தேசிகன்

முதலாளித்துவ சமூகம். ஒரு தொழிலாளியின் குடும்பம். அந்த குடும்பத்தில் ஊதியத்துக்கு உழைப்பவர் இறந்துவிட்டார். அந்த குடும்பத்தால் வீட்டு வாடகை தர முடியவில்லை. அந்த வீட்டில் இருந்து அந்தக் குடும்பத்தை அகற்ற வீட்டு உரிமையாளர் காவல்துறை அல்லது படையாட்களுடன் வருகிறார். வாழும் இடங்களில் இருந்து மக்களை அகற்ற ஒரு படைப்பிரிவே தேவைப்படுகிறது. அப்படி ஒன்று இல்லாமல் உரிமையாளரோ, அதிகாரியோ செல்ல மறுப்பார்கள். வாழும் இடங்களில் இருந்து மக்களை அகற்றுகிற அந்தப் பணி அக்கம்பக்கத்தார் மத்தியில் சீற்றத்தை உருவாக்கும் என்று, வாழ்க்கையின் ஓரத்துக்குத் தள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், முதலாளிகளின் மீதும் முதலாளித்துவ அரசின் மீதும் வெறுப்பை உருவாக்கும் என்று, உரிமையாளரும் படையாட்களும் பிய்த்தெறியப்படுவார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே மிகப்பெரிய படை தேவை. வேறு படைப்பிரிவுகளில் இருந்து பெரிய அளவில் நகரத்துக்குள் படையை கொண்டு வர வேண்டும். இந்தத் துருப்புக்கள் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட வேண்டும். அந்தப் படை வீரர்களுக்குத்தான் நகர்ப்புற வறியவர் வாழ்க்கை பற்றி தெரியாது; எனவே அவர்களுக்கு சோசலிசத் தொற்று நேராது.
பாட்டாளிகளின் அரசு. வறியவர் சிலர் குடும்பங்களை ஒரு பணக்காரரின் வீட்டில் குடியமர்த்த வேண்டும். நமது தொழிலாளர் குழுவில் 15 பேர் இருப்பதாகக் கொள்வோம். இரண்டு கப்பலோட்டிகள், இரண்டு படை வீரர்கள், வர்க்க உணர்வு கொண்ட இரண்டு தொழிலாளர்கள் (அவர்கள் ஒருவர் மட்டும் நமது கட்சி உறுப்பினர் அல்லது அனுதாபி), ஓர் அறிவாளி, வறிய மக்கள் பிரிவினர் 8 பேர் (இவர்களில் 5 பேர் பெண்கள், இல்லப் பணியாளர்கள், திறன்குறை தொழிலாளர்கள் இப்படி....). இந்தக் குழு அந்த வசதி படைத்தவர் வீட்டுக்குச் செல்கிறது. அந்த வீட்டை பார்வையிடுகிறது. அந்த வீட்டில் அய்ந்து அறைகள் உள்ளன. அய்ந்து அறைகள் கொண்ட வீட்டில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மட்டும் வசிக்கின்றனர். குடிமக்களே, இந்த குளிர்காலத்துக்கு உங்களுக்கு இரண்டு அறைகள் என்று குறைத்துக் கொள்ள வேண்டும். இப்போது செல்லர்களில் குடியிருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு நீங்கள் இடம் தர வேண்டும். அதுவரை, பொறியாளர்கள் உதவியோடு (நீங்கள் ஒரு பொறியாளர்தானே?) அனைவருக்கும் நல்ல வீடுகள் கட்டியுள்ளோம். நீங்கள் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தொலைபேசி பத்து குடும்பங்களுக்கு பயன்படும். இதனால் கடைகளுக்குச் செல்வது போன்ற வேலைகளில் வீணாகும் 100 மணி நேரம் கிடைக்கும். இப்போது உங்கள் குடும்பத்தில் 55 வயதில் ஒருவரும் 14 வயதில் ஒருவரும் என ஓரளவு வேலை செய்யக் கூடிய இரண்டு பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு 3 மணி நேரம், 10 குடும்பங்களுக்கு முறையான உணவுப் பொருட்கள் விநியோகம் நடப்பதை கண்காணித்து அதற்கான கணக்குகளை பராமரிக்க வேண்டும். எங்கள் குழுவில் உள்ள மாணவர் இந்த அரசாணையை இரண்டு பிரதிகள் எழுதுவார். நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று கையொப்பமிட்ட அறிக்கையை தயவுசெய்து தர வேண்டும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும், ஜனநாயகதியான நடைமுறை எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லும்போது லெனின் இப்படி ஓர் உதாரணம் சொல்கிறார்.
2012 தமிழ்நாட்டில், லெனின் விவரித்தது போலவே வறியவர்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்ற அதிகாரிகள், வேலையாட்களுடன் செல்கிறார்கள். சென்னையில் பல்வேறு இடங்களில் புல்டோசர்கள் வறிய மக்கள் வாழ்ந்த வீடுகளை தரைமட்டமாக்கிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. அம்பத்தூரில் ஏரியில் உள்ள வீடுகளை அகற்றுவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்த வீடுகள் இடிக்கப்பட்டு அந்த மக்கள் அகதிகள்போல் அவசர முகாம்களில் குடியேற்றப்பட்ட காட்சிகள் அரங்கேறியுள்ளன. சமீபத்தில் சிவகாசியில் அதே போன்றதொரு ஆக்கிரமிப்பை அகற்றுவது என்ற பெயரில் சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
நாடு முழுவதும் நகர்மயமாவது அதிகரித்து வருகிறது. அதுவும் தமிழகத்தில் அதிவேகத்தில் நகர்மயம் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயம் பொய்த்துப் போவதால் அல்லது கட்டுபடியாக இல்லாததால் கிராமங்களால் வெளியே தள்ளப்படுபவர்கள் நகரங்களை நோக்கி வருகிறார்கள். நகரத்து சொற்ப கூலியால் இவர்களுக்கு நடைபாதைகளும், கழிவு நீர் ஓடை ஓரங்களுமே தங்குவதற்கான இடங்களாக கிடைக்கின்றன. அன்றாடங் காய்ச்சிகளுக்கும், தெருவோர சிறு வியாபாரிகளுக்கும் இந்த இடங்களே புகலிடங்கள்.
தமிழகத்தின் வேறுவேறு சிறு நகரங்களில் இதுபோன்ற மக்களுக்கு ஏரி குளக்கரைகளே கிடைக்கின்றன. பெரும்புள்ளிகள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் ஆக்கிரமித்து வைத்திருக்கும் இடங்களை நகர்ப்புற வறியவர்கள் நம்பி வாங்கி வாழ்நாள் சம்பாத்தியத்தைப் போட்டும், கடன் வாங்கியும் வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். வாழ்நாள் சேமிப்பு, உழைப்பு போட்டு கட்டிய வீட்டில் பல ஆண்டு காலம் வாழ்ந்த பிறகு அது விதிமீறல் என்றும் இன்று அவற்றை ஆக்கிரமிப்புகள் என்றும் அகற்ற வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
ஆகஸ்ட் 18 அன்று சிவகாசி, சிறுகுளம் கரையில் இதுபோன்று கட்டிப்பட்டிருக்கும் 138 வீடுகளை உச்சநீதிமன்ற ஆணைப்படி அரசு அதிகாரிகள் அகற்ற முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கணேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து உயிரிழந்தார். அவர் இறந்தது தெரிந்த பிறகு வீடுகளை அகற்றும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
2012 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த இந்தக் கொடுஞ்சம்பவத்துக்கு 17 ஆண்டு கால பின்னணி உள்ளது. 1995ல் இந்த வீடுகள் இருந்த நிலத்தை குளம் கண்மாய் புறம்போக்கு என்பதற்கு பதிலாக நத்தம் என்று அறிவித்து அரசாணை வெளியானது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க  நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் உச்சநீதிமன்ற ஆணையை கையில் தூக்கிக் கொண்டு உடனே புறப்பட்டு விட்டார்கள்.
சட்டிஸ்கரிலும், ஒடிஷாவிலும் பெருநிறுவனக் கொள்ளைக்காக காடுகளில் இருந்து, மலைகளில் இருந்து பழங்குடி மக்கள் கிராமம் கிராமமாக அகற்றப்படுகிறார்கள். இந்த வெளியேற்றத்துக்கு எதிராகப் போராடும் மக்களை மாவோயிஸ்ட் முத்திரை குத்தி பல விதமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறார்கள் உலகமய ஆட்சியாளர்கள். தமிழ்நாட்டில் நகரின் மய்யப் பகுதிகளில் வறிய மக்களின் சுவடே இருக்கக் கூடாது என்று அறிவிக்கப்படாத திட்டம் ஒன்று உள்ளது.
வறிய மக்களுக்கு வீடு கட்ட நிலம், விலையில்லா வீடுகள், குடிசையில்லா தமிழகம் உருவாக்குவதாக ஜெயலலிதா ஒருபக்கம் அறிவித்துக் கொண்டிருக்க மறுபக்கம் வாழ்கிற வீடுகளில் இருந்தும் மக்கள் அகற்றப்பட்டு நடுத் தெருவில் நிற்க வைக்கப்படுகிறார்கள். காங்கிரஸ்காரர்கள் மொழியில் வறுமை ஒழிப்பு வறியவர் ஒழிப்பு என்று அமலாவதுபோல் ஜெயலலிதா மொழியில் குடிசை ஒழிப்பு, அங்கு வாழும் மக்களை ஒழிப்பது என்று அமலாகிறது. வருகிற வளர்ச்சிக்கு வழிவிட்டு வறிய மக்களை ஒதுங்கி இருக்கச் சொல்கிறார் ஜெயலலிதா. அவர்கள் வழிவிட மறுத்து உயிர் விடுவதை வேடிக்கை பார்க்கிறார்.
வறியவர் விசயத்தில் கடுமை காட்டும் நீதிமன்றங்கள், சென்னை போன்ற இடங்களில் சிஎம்டிஏ அனுமதி பெறாமல், பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் பல பகாசுர நிறுவனங்கள் மீது மென்மையாகவே நடந்து கொண்டிருக்கின்றன. சட்டத்தை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை என்பது கிட்டத்தட்ட இல்லை. அப்படியே நடவடிக்கை வந்தாலும் அவர்கள் நீதிமன்றத் தடை பெற்று விடுகிறார்கள்.
பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளின் பின்னணியில்தான், தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007 இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி ஆக்கிரமிப்பு என்று கருதப்படுவதை அகற்ற 21 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும் என்றும், ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்தால் 3 மாத கடுங்காவல் அல்லது ரூ.5000 அபராதம் என்றும் சொல்லும் சட்டம் புனர்வாழ்வு பற்றி அமைதி காக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கையை அரசாங்க முடிவுக்கு விட்டுவிட்டது.
பெருநகரங்களில் சேரிகளும், குடிசை வீடுகளும் இருப்பது நகரத்தின் அழகுக்கு இழுக்கு என ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். டெல்லியின் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற போது குடிசைப் பகுதிகளை மூங்கில்  திரை போட்டு மறைத்தார்கள். சிங்கார சென்னையை அழகுபடுத்த சேரிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். டெல்லி, கொல்கத்தா, ராஞ்சி என்று பெருநகரங்களின் மேம்பாட்டுக்கு உழைத்தவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த பெருநகரங்களின் பிரமிப்பு உருவாகியிருக்க முடியாது. இன்றும் பெருநகரங்களின் இயக்கத்துக்கு அவர்கள் இன்றியமையாத் தேவை. அதனால்தான் டெல்லி குடியிருப்போர் நலச்சங்கம் அவர்களை அகற்றக்கூடாது எனக் குரல் கொடுக்கிறது.
வீட்டு வேலை செய்ய, வீட்டு வாசலில் துணி தேய்த்துக் கொடுக்க, காய்கறி வாங்கிக் கொள்ள, சாக்கடை அடைப்பை நீக்க, வீட்டு உபயோகப் பொருட்களின் பழுதை சரிசெய்ய, நகர்ப்புற உழைக்கும் மக்கள் தேவை. ஆனால் இந்த பெருநகரங்களை கட்டியெழுப்பும் இவர்கள் நலன்கள் பற்றி அரசும், ஆட்சியாளர்களும் குற்றமய அலட்சியமே காட்டுகிறார்கள்.
சிங்கப்பூர் நிறுவனத்தை வைத்து கூவத்தை சுத்தம் செய்வதாக அறிவித்த கடந்த திமுக ஆட்சி கூவத்துக் கரை மக்களை பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் அருகிலுள்ள கண்ணகி நகருக்கும் செம்மஞ்சேரிக்கும் துரத்தியது. அங்கு சுகாதாரமான வாழ்விடம் அமைத்துத் தருவதாகச் சொன்னது. குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 150 சதுர அடி தரமற்ற வீட்டைத் தவிர வேறு எந்த வசதியும் அங்கு செய்து தராமல் முள்வேலி இல்லாத அகதிகள் முகாம்களாக அவை இருப்பதாக பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின. வேலைக்கு செல்ல 30 கி.மீ. பயணிக்க வேண்டும். சாதாரண பேருந்து களைவிட ஏழைகள் வாழும் இப்பகுதிக்கு டீலக்ஸ் பேருந்துகளை இயக்கி வருமானத்தின் பெரும் பகுதியை அரசு பறித்துக் கொள்கிறது. இம்மக்களை நகரத்திலிருந்து தூக்கி எறிந்து இவர்களின் கல்வி, சுகாதாரம், வேலை, வாழ்வாதாரம் என அனைத்தயும் பறித்துவிட்டது.
அரசு புள்ளி விவரப்படியே கூவம், அடையார், பக்கிங்ஹாம் ஆற்றுக் கரைகளிலிருந்து 26,895 குடும்பங்கள் அகற்றப்படுவார்களாம். அப்படியானால் நிச்சயம் சில லட்சம் பேர் பாதிக்கப்படுவர். மாற்றிடம் அளிக்கப்பட்ட சிறு பிரிவு மக்களும் தாங்கள் சேரிகளில் நிம்மதியாக வாழ்ந்ததாகவும், இது நரக வேதனை என்றும் சொல்கிறார்கள்.
வளர்ச்சிக்கு பின்னாலுள்ள அரசியல் அரசு கடைபிடித்துவரும் பெருமுதலாளித்துவ அரசியல் பாதை. பொதுத்துறை நிறுவனங்களான நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் திருச்சி பெல் ஆலைகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்குக் கூட அங்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாக சிலருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது தாதுக்கள் நிறைந்த பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டிருக்கின்றன. மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுகிறார்கள். அபகரிப்புக்கு எதிராக போராடுபவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்கின்றன. ஆனால் இதே அரசு போட்ட நிலச்சீர்த் திருத்த சட்டத்தை அமல்படுத்த ஒருவர் மீது கூட குண்டு பாய்ந்ததில்லை. கொல்கத்தாவின் நோனாடுங்கா மக்கள் தாங்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கு எதிராக சமீபத்தில் நடத்திய விடாப்பிடியான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. வீடுகள் இடிக்கப்பட்டபோதும் தற்காலிக கூரைகள் அமைத்து இடம் பெயர்ந்து செல்ல மறுத்தார்கள். சமூக சமையல் அறை ஏற்படுத்தி அனைவரும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு எதிர்ப்பைத் தொடர்ந்து கட்டமைத்தார்கள். முன்னணிகள் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் நிலையிலும் வளர்ச்சி பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டங்களை தொடர்கிறார்கள். 
நிலத்தை மட்டும் யாராலும் புதிதாக உற்பத்தி செய்துவிட முடியாது என்பதால் அதை அபகரிக்க அதிகாரத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து முயற்சி செய்வார்கள். அதனால் எதிர்ப்புப் போராட்டங்கள் எப்போதும் உக்கிரமானதாகவே இருக்கும்.
ஆட்டோ ஓட்டுனர் கணேசன் தீக்குளிப்புக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அனைத்துக்கும் பிறகு, லெனின் தனது உதாரணத்தில் எடுத்துக்காட்டும் இரண்டாவது நிலைக்கும் வாய்ப்புள்ளது. வறிய மக்களுக்கு புதிதாக அரசு வீடுகள் கட்ட வேண்டியதில்லை. ஏற்கனவே போதுமான அளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டே இரண்டு பேர் வசிக்க அத்தனை பெரிய போயஸ் கார்டன் வீடு எதற்கு? கோடானுகோடி மக்கள் பசித்திருக்க அரசு கிட்டங்கிகளில் எலிகள் அரிசி தின்பதைப் போல், வறிய குடும்பங்கள் பல வீடின்றி தவிக்கும் போது புதிய சட்டமன்ற கட்டிடம் பாம்புகளின் இருப்பிடமாகிவிட்டது. அது ஏன் காலியாக இருக்க வேண்டும்?

கிரானைட் கொள்ளை

ஜி.ரமேஷ்

மதுரை மேலூர் அருகிலுள்ள மேலவளவு கிராமம் தலித் மக்களை தலையெடுக்கவிடாத ஜாதி ஆதிக்க அராஜகத்திற்குப் பெயர் பெற்றது என்றால், கீழவளவோ கிரானைட் கொள்ளையால் தமிழகத்தை கிடுகிடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ‘என் கிணத்தைக் காணவில்லை’ என்று போலீஸில் புகார் கொடுப்பார் வடிவேலு ஒரு திரைப்படத்தில். மதுரையில் அது நிஜமாகியுள்ளது. மேலூரைச் சுற்றியிருந்த 5 மலைக் குன்றுகள், 14 ஏரிகள், 13 கண்மாய்கள் காண வில்லை. மதுரை மாவட்டம் மேலூர் பக்கம் உள்ள கீழ வளவு, கீழையூர், இ.மலம்பட்டி, திருவாதவூர், இடையப்பட்டி, செம்மினிப்பட்டி, தெற்குத் தெரு போன்ற பகுதிகளில் 175 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கணக்கில் உள்ள இவை தவிர கணக்கில் வராத பல குவாரிகளும் உண்டு. இப்பகுதியில் மட்டும் 39,30,431 கன மீட்டர் அளவிற்கு அரசாங்க புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சட்டத்திற்குப் புறம்பாக குவாரி அமைத்துள்ளார்கள். இதில் பிஆர்பி எக்ஸ் போர்ட்ஸ், ஒலிம்பஸ் கிரானைட், சிந்து கிரானைட்ஸ் ஆகிய மூன்று குவாரிகளும் மிகப் பிரபலமானவை. குவாரி அதிபர்கள் கனிம வளங்களை, தொல்பொருள் ஆராய்ச்சித் தளங்களை, தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை, நீர் நிலைகளை  ஆக்கிரமித்து அழித்துள்ளது மட்டுமின்றி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தி பல கோடிகள் கொள்ளையடித்துள்ளார்கள். விவசாயத்தை வாழ்வாதாரங்களை அழித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசின் கனிமவள நிறுவனம் 1979ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள கனிம வளங்கள் அனைத்தும் அரசிற்குச் சொந்தமானது. அது தனியார் நிலங்களில் இருந்தால் கூட. அவற்றை பூமிக்கடியில் இருந்து வெட்டி எடுத்து விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கும் வேலையை டாமின் நிறுவனம் செய்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதை தனியாரிடம் குத்தகைக்கு விட ஆரம்பித்தது. அது மட்டுமில்லாமல் தனி நபர்கள் தங்களுடைய பெயரில் பட்டா போட்டு வைத்துள்ள நிலத்தில் கிரா னைட் கற்கள் இருக்குமானால் அவற்றை தாங்களே வெட்டி எடுத்து விற்பனை செய்து கொள்ள அனுமதியும் அளித்தது. அதை கனிமவள நிறுவன அதிகாரி கண்காணிக்க வேண்டும் அவ்வளவுதான். அப்போதிலிருந்து விறுவிறுவென துவங்கியது கிரானைட் கொள்ளை.
அரசு குத்தகைக்கு விட்ட நிலத்தை ஏலத்திற்கு எடுத்துக் கொண்டு கிரானைட் கற்களை தங்கள் எல்லைகளைத் தாண்டியும் குத்தகைக் காலத்தைத் கடந்தும் சட்ட விரோதமாக வெட்டி எடுத்து விற்பது, அரசு குவாரிகளுக்குப் பக்கத்தில் தங்கள் பெயரில் பட்டா நிலத்தை (அதில் கிரானைட் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) வாங்கி வைத்துக் கொண்டு அரசு குவாரிகளை முழுவதுமாகச் சுரண்டி அரசு நிலத்தில் எடுத்த கற்களை எல்லாம் தங்கள் நிலத்தில் எடுத்ததாகக் காட்டி அரசிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் அபேஸ் செய்து விடுவது, 45 கன மீட்டர் கற்களை வெறும் 3 கன மீட்டர் என்று பொய்க் கணக்கு காட்டுவது, (ஒரு கன மீட்டர் கறுப்பு கிரானைட் கல்லின் விலை ரூ.70,000) என பல வழிகளில் பணம் பார்த்து, மலைகள், ஏரிகள், கண்மாய்களை சட்டத்திற்குப் புறம்பாக வெடி வைத்து பல நூறடிகள் தோண்டி ஆழமான பள்ளத்தாக்குகளாக, பாழ்நிலங்களாக மாற்றிவிட்டார்கள் கிரானைட் மாஃபியாக்கள்.
தங்கள் குவாரிக்குப் பக்கத்தில் உள்ள நிலமோ, குடியிருப்புப் பகுதியோ தங்களுக்கு வேண்டுமென்றால், அந்த நிலத்தைச் சுற்றி குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெரிய பெரிய பாறாங்கற்களை அடுக்கி வைத்து அந்த நிலத்திற்கு அல்லது குடியிருப்புப் பகுதிக்குச் சொந்தக்காரர் தன் இடத்திற்குள்ளேயே நடமாடமுடியாமல் தடையை ஏற்படுத்தி விடுவார்கள். பாறைகளை அகற்றக் கோரி யாரிடம் புகார் கொடுத்தாலும் ஒன்றும் நடக்காது. வேறுவழியில்லாமல் தன் இடத்தைத் தவிட்டு விலைக்கு குவாரிக் கும்பல்களிடம் விற்றுவிட்டுச் சென்று விடுகிறார்கள். இப்படி பல இடங்களை அபகரித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் களை வளைத்துப் போட்டுள்ளார்கள் குவாரி மாஃபியாக்கள். இவர்களுக்கு ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் முழு ஆதரவு. தமிழ்நாடு சிறு கனிமப் பொருள் சலுகை சட்ட விதிகள் 1959 குடியிருப்புப் பகுதியைச் சுற்றி 300 மீட்டர் தொலைவிற்குள் எந்த வொரு குவாரியும் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.  வெடி வைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் கீறல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளன. பாறைகளை வெட்டி எடுக்கும் போது ஏற்படும் மண் துகள்கள் தூசிகள் வீடுகளிலும் விளை நிலங்களிலும்  படிந்து பாழ்பட்டுவிட்டது மட்டுமின்றி பல்வேறு வியாதிகளை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உண்டாக்கியுள்ளன. குவாரிக் கழிவுகளை பாசனக் குளங்களிலும் கண்மாய்களிலும் கொட்டி வைத்து நீர்பாசானப் பாதையையே அடைத்துவிட்டுள்ளார்கள். புலிகள் காப்பகம் என்று கூறி மேற்குத் தொடர்ச்சி மலையில் உச்சநீதி மன்றம் ஆணையைக் காட்டி மக்கள் நடமாட்டத்திற்கு   தடை விதித்துவிட்டு அந்த மலையடிவாராங்களிலேயே பல குவாரிகள் வெடி வைத்து சுரண்டுகிறார்கள்.
புறாக்கூடு மலைக்கு அருகில் உள்ள 7 ஏக்கர் பஞ்சமி நிலங்களை சட்டவிரோதமாக குவாரி கும்பல் ஆக்கிரமித்து வைத்துள்ளது. இப்போதும் மேலூர் பக்கமுள்ள தலித் மக்கள் குடியிருப்பான ரங்கசாமிபுரம் பெரியபெரிய பாறாங்கற்களால் அரண்போல அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அம்மன்கோவில்பட்டியில் தர்காவையும் கோவிலையும் தன்னகத்தே கொண்டு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்  சர்க்கரை பீர் மலையையும் விட்டுவைக்கவில்லை இவர்கள் என குமுறுகிறார்கள் அவ்வூர் மக்கள். மதுரை பக்கம்தான் பல வண்ண பளிங்குக் கற்கள் கிடைக்கின்றன. இந்தக் கற்களுக்கு உலகச் சந்தையில் மவுசு அதிகம். 
கர்நாடகாவின் எஃகுச் சுரங்கக் கொள்ளையர்களான பிபியை (பெல்லாரி பிரதர்ஸ்) ஊழலில் மிஞ்சி விட்டார் தமிழகத்தின் கிரானைட் குவாரி மன்னன் பிபி (பி.பழனிச்சாமி). மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான குவாரிகள் இந்த பிள்ளைத் தேவர் மகன் பழனிச்சாமிக்குச் சொந்தமானதுதான் என தொடர்ந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கரூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி என பிஆர்பி சாம்ராஜ்யம் விரிந்து கொண்டே போகிறது. தமிழக அரசு பொதுப்பணித் துறையில் சாதாரண கட்டுமான ஒப்பந்தக்காரராக இருந்த பழனிச்சாமி பத்தே ஆண்டுகளில் இந்தியாவிலேயே மிகப் பெரிய கிரானைட் நிறுவனத்தின் அதிபர் ஆகிவிட்டார். பெல்லாரி பிரதர்ஸ் தங்கள் வீட்டுத் திருமணத்திற்கு 20 கோடி ரூபாய் செலவழித்து 10 ஆயிரம் விருந்தினர்களை ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வந்தார்களாம். 42 கோடி ரூபாயில் வைர கிரீடத்தை ஏழுமலையானுக்கு கொடுத்தனராம். அவர்களைப்போலவே பழனிச்சாமியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய இரண்டு மகன்களுக்கும் பல கோடி ரூபாய் செலவில் திருமணம் முடித்துள்ளார். திருமணத்தன்று மதுரையில் இருந்து மேலூர் வழியாகச் சென்ற எந்தப் பேருந்திலும் எவரும் டிக்கட் எடுக்கத் தேவையில்லை என்று சொல்லி மொத்த கட்டணத்தை யும் பழனிச்சாமியே கட்டிவிட்டாராம். போவோர் வருவோருக்கெல்லாம் விருந்து சாப்பாடாம். அவர் குடும்பத்தினர் அணிந்திருந்த நகைகள், வளர்ப்பு மகன் திருமணத்தின்போது உடன்பிறவாச் சகோதரிகள் அணிந்திருந்த நகைகளையே அமுக்கி விட்டது  என்கிறார்கள்.
 பழனிச்சாமி முதலில் வளர்ந்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான். 91-96 காலத்திலும் 2001-2006 காலத்திலும் உறவுக்கார மந்திரி, உடன்பிறவாச் சகோதரியின் உதவியுடன் பிஆர்பி நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது. அடுத்து வந்த திமுக ஆட்சி காலத்தில் மதுரையின் இளவரசருக்கு அது கண்ணை உறுத்த, பேரப்பிள்ளை கிரானைட் தொழிலில் (கொள்ளையில்) பழனிச்சாமியால் பார்ட்னர் ஆக்கப்பட்டார். ஒலிம்பஸ் கிரானைட்ஸ் உருவானது. சட்டத்திற்குப் புறம்பாக கலர் கலரான கிரானைட் கற்களை வெட்டி விற்று கிளவுட் நயன் மூவீஸ் மூலம் கலர் கலராக திரைப்படம் எடுத்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று சொல்லப்படுகிறது. கட்சி பேதமின்றி பழனிச்சாமியின் பணம் பல மட்டங்களுக்கும் பாய்ந்துள்ளது. பிஆர்பி நிறுவனம் தலைசிறந்த நிறுவனம் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் முன்னாள் மக்களவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி வரை பாராட்டுப் பத்திரம் வழங்கியுள்ளனர் பழனிச்சாமிக்கு.  
மதுரை மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் இந்த கிரானைட் ஊழலால் அரசுக்கு ரூ.16,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மாநில தொழில் துறை முதன்மைச் செயலருக்கு கடந்த மே மாதம் 19ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அக் கடிதம் ஆகஸ்டு மாதத்தில் வெளியே கசிந்தது. அவர் மதுரையில் இருந்து மாற்றப்பட்டார். தற்போது வந்துள்ள ஆட்சித்தலைவர் அன்சுல் மிஸ்ரா நேரடி நடவடிக்கைகளில் இறங்கினார். சுமார் ரூ.35,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் தற்போது அதிகாரிகள். ஆனால், 2010ம் ஆண்டிலேயே ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் பிஆர்பி. கிராணைட்ஸ் மற்றும் பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ்ஸில் நடந்துள்ளது என தினபூமி ஆசிரியர் கூறினார். அவரும் அவரைப் போன்று கிரானைட் கொள்ளையை வெளியே சொன்னவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
மலையைத் தோண்டி கற்களை வெட்டி எடுத்து விட்டு பின்னர் அந்தப் பள்ளத்திலேயே மண்ணைப் போட்டு கிரானைட் கற்களை மறைத்து வைத்துள்ளது இம்மாஃபியா கும்பல்கள். சில இடங்களில்  தோண்டிய பள்ளங்களில் மண்ணைப் போட்டு மூடி மரங்களை நட்டு தோப்புக்களாக்கி அத்தோப்புகளுக்குப் பின்புறம் வெளியே தெரியாதபடி பெரும் குவாரிகளை அமைத்து மலைகளைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பகுதிகளுக்குள் அதிகாரிகள் உட்பட யாரும் நுழைய முடியாது. மதுரை கீழவளவு பகுதியில் இரண்டு இடங்களில் மட்டுமே மறைத்து வைக்கப்பட்ட 20 ஆயிரம் கிரானைட் கற்களை கண்டுபிடித்துள்ளனர் அதிகாரிகள். இப்போது தோண்டத் தோண்ட பூதம் கிளம்புகிறது.
பத்தாயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு சோறு போட்டவர், அத்தொழிலாளர்கள் இப்போது நடுவீதியில் நிற்கிறார்கள் எனத் தொழிலாளர்களை முன்னிறுத்தி பழனிச்சாமிக்கு வக்காலத்து வாங்கினார்கள். ஆனால், அவர் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரை வேலைக்கு அமர்த்தித்தான் பளபளக்கும் பளிங்குக் கற்களை வெட்டி எடுத்து கோடி கோடியாய் கொள்யையடித்துள்ளார். பல தொழிலாளர்கள் இந்தக் குபேரனின் குவாரியில் இயற் கைக்கு மாறான விதத்தில் மரணமுற்றுள்ளார்கள். மேலூர் காவல் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் பிஆர்பி நிறுவனத் தொழிலாளர்கள் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஆர்பி நிறுவனத்திற்காக ஓடிய 100க்கும் மேற்பட்ட லாரிகள் பலவற்றில் பதிவு எண் கூட இல்லாததைக் கண்டும் ஓரே பதிவு எண்ணில் பல லாரிகள் இருப்பதைக் கண்டும் அதிர்ந்து போய் உள்ளார்கள் ஆய்வு நடத்தும் அதிகாரிகள்.
மணலும் கிராணைட் கற்களும் ஒரே வகையினம். இவைகள் உருவாகுவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். மணலும் மலைப் பாறைகளும்தான் நீராதாரத்தை பூமியில் தேக்கி வைத்து இருக்கும். மழையைக் கொண்டுவரும். பூகம்பங்களைத் தாங்கும் என்கிறார்கள் சுற்றுபுறச் சூழல் வல்லுனர்கள். ஆனால், அவற்றைத் தோண்டித் தோண்டி தமிழகத்தையே பாலைவனமாக, (பாலைவனத்தில் கூட உயிர்கள் வாழ முடியும்). அதை விட மோசமான இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் மணல் மாஃபியாக்களும் குவாரிக் கொள்ளையர்களும்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற பாடலுக்கு வாயசைத்த எம்ஜிஆர் கனிமவளங்களை வெட்டி எடுக்க வழிசொன்னார். இன்று அவர் வாரிசுகள் தமிழகத்தின் கனிம வளங்களை வெட்டி எடுத்து வெளிநாட் டிற்கு விற்று தங்கள் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் மதுரை குவாரி கொள்ளையர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அழகரியை மனதில் கொண்டு சூளுரைத்தார் ஜெயலலிதா. ஆனால், அம்மையாரின் அமைச்சர் பெருமக்கள் பலரும் கூட இப்போது அகப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் குவாரிகளில் நடக்கும் ஊழல்கள் இப்போது அம்பலத்திற்கு வருகிறது. தளி தொகுதி எம்எல்ஏ குடும்பம்கூட குவாரியில் 100 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லிக் கொண்டு நில அபகரிப்பு வழக்குகளை திமுகவினர் மீது போட்ட ஜெயலலிதா, கிரானைட் ஊழல் தொடர்பாக அமைச்சர்களையும் வருவாய்த் துறை, கனிம வளத்துறை, காவல் துறை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தியதோடு சரி. அடுத்து வாயே திறக்கவில்லை. ஆனால், தன்னுடைய சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கெதிராக ஆஜரான ஆச்சார்யாவை மட்டும் வழக்கில் இருந்து விலக வைத்து அசத்தியிருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊழலுக்கும் காவல் துறையினரின் காட்டு தர்பாருக்கும் பஞ்சமிருக்காது. அவரின் முந்தைய ஆட்சிகளின் போது டான்சி ஊழல், சுடுகாட்டு ஊழல், இன்பசாகரன் மருந்து மாத்திரை ஊழல், கொடியங்குளம் கொடுமை என்றால், இப்போது கிரானைட் ஊழல், டிஎன்பிஎஸ்சி ஊழல், பரமகுடி துப்பாக்கிச் சூடு, இருளர் பெண்கள் மீது பாலியல் வன்முறை, கூடங்குளம் ஒடுக்குமுறை என பட்டியல் நீள்கிறது.
தன்னை மத்திய அரசிற்கு எதிரானவர் என்று காட்டிக் கொள்ள அப்பப்ப மன்மோகனுக்கு கடிதம் மட்டுமே (கருணாநிதியை கடிதம் எழுதினால் போதுமா என்று தான் கேட்டதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நினைப்பில்) எழுதும் ஜெயலலிதா, இப்போது மன்மோகன் கையில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்துறையில் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ள நிலையில், பெல்லாரி பிரதர்ஸ் எஃகுச் சுரங்க ஊழல், சவப்பெட்டி ஊழல் புகழ் பிஜேபியேகூட பிரதமரை பதவி விலகச் சொல்லி குரலெழுப்பும்போது தான் தனியாக ஏதும் சொல்லாமல் மவுனம் காக்கிறார். தமது கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பதைக் கண்டித்து சிறை நிரப்பும் போர் என அறிவித்த கருணாநிதி இப்போது கம்மென்று இருக்கிறார்.
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என மன்மோகன் முதல் ஜெயலலிதா வரை சுதந்திர தின உரையில் சூளுரைக்கிறார்கள். ஆனால், நாட்டின் நலன் காக்க, வளர்ச்சி விகிதத்தை 9 சதமாக்க எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிறார்கள். அந்த ஊழலுக்கு ஊற்றுக்கண்ணே தனியார்மயக் கொள்கைகள்தான் என்பதை வசதியாக மறைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். வரிச்சலுகைகளைப் பெற்றுக் கொண்டே வரிஏய்ப்பு செய்வது, நாட்டின் கனிம வளங்களை, இயற்கை ஆதாரங்களை கண்மூடித்தனமாக ஈவிரக்கமின்றி சூறையாடுவது, பயிற்சியாளர் முறை, ஒப்பந்த முறை, தற்காலிகப் பணியாளர் என எல்லா வழிகளிலும் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டி கொள்ளை லாபம் பார்ப்பது இவை மூன்றும்தான் இன்றைய முதலாளித்துவத்தின் மூலக் கோட்பாடுகள். தனியார்மயத்தை ஒழிக்காமல், கனிமவளங்கள், இயற்கை ஆதாரங்களில் இருந்து பெருங்குழும நிறுவனங்களை வெளியேற்றாமல், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் அரசின் பங்களிப்பை அதிகப்படுத்தாமல் ஊழலை ஒழிப்போம் என்ற சூளுரையெல்லாம் அட்டக்கத்தியை சுழற்றுவது போல்தான்.
தமிழகத்தில் பெரிய அளவில் நடந்துள்ள இந்த கிரானைட் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் மீதும் உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அனைவருக்கும் அக்குவாரிகளில் அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை குவாரித் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை மாதாமாதம் அரசு வழங்கிட வேண்டும்.

கல்வி

என்ன செய்ய வேண்டும் நூலை இறுகப் பற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? (நிறைவு பகுதி)

காம்ரேட்

போல்ஷ்விக் கட்சி வரலாறு நூல், ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கான காரணங்களைத் தொகுத்துச் சொல்கிறது:
• புரட்சியின் எதிரியான முதலாளித்துவ வர்க்கம், அரசியல்ரீதியான அனுபவமின்றியும், மோசமாக அமைப்பாக்கப்பட்டும் பலவீனமாய் இருந்தது. அரசாங்க ஒப்பந்தங்களைப் பெரிதும் சார்ந்து பொருளாதாரரீதியாய்ப் பலவீனமாய் இருந்தது. அரசியல்ரீதியாய், சுயசார்பு இல்லாமல் முன்முயற்சி இல்லாமல் இருந்தது. அரசியல் இணைப்புக்களில் நரித்தந்திரங்களில், அதற்கு, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அனுபவம் கிடையாது. பலவித, தந்திரமான சமரசங்களை ஏற்படுத்திக் கொள்ளும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் திறமை கிடையாது.
ஜார் மன்னனின் கொள்கைகளையே, மார்ச் புரட்சியில் வென்ற முதலாளித்துவமும், அவர்களது அரசும் பின்பற்றினார்கள். இறுதி வரை போர், நிலஉடைமை பாதுகாப்பு, முதலாளித்துவ கொடும் சுரண்டல் ஆகியவை, ஜார் மீதான வெறுப்பை, முதலாளித்துவத்தின் மீதும் தற்காலிக அரசின் மீதுமான வெறுப்பாக மாற்றின.
• புரட்சியின் தலைமை வர்க்கமான பாட்டாளி வர்க்கம், 1905 புரட்சி, 1917 மார்ச் புரட்சி எனப் பயிற்சியும் தேர்ச்சியும் அனுபவமும் பற்றுறுதியும் கொண்ட வர்க்கமாக வளர்ந்து நின்றது. அதனால், தொழிலாளி - விவசாயி கூட்டை உருவாக்கியது. சமாதானம், நிலம், சுதந்திரம், சோசலிசம் என்ற முழக்கங்களைத் தன் பதாகையில் பொறித்தது. அதனால் புரட்சியில் வென்றது.
• பாட்டாளி வர்க்கம் தன் திறன்வாய்ந்த கூட்டாளிகளாக வறிய விவசாயிகளை வென்றெடுத்துக் கொண்டது. 1917 மார்ச்சுக்குப் பிந்தைய முதலாளித்துவ அரசின் அனைத்து செயல் பாடுகளும், ஊசலாட்டத்தில் இருந்த நடுத்தர விவசாயிகளையும், நில உடைமைக்கு எதிரான, சமாதானத்திற்கான, விட்டுக் கொடுக்காத போராளிகள், பாட்டாளி வர்க்கமும் போல்ஷ்விக்குகள் மட்டுமே என, உணர வைத்தது. அவர்களும் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியான போல்ஷ்விக் கட்சியை நோக்கித் திரும்பினார்கள்.
• ரஷ்யாவில் இருந்த அரசியல் கட்சிகளில், தீர்மானகரமான தாக்குதலில் வழி நடத்தும் துணிச்சல், பாதையில் வரும் ஆபத்துக்களைத் தவிர்க்கும் எச்சரிக்கை, விதவிதமான இயக்கங்களைத் திறம்பட பொதுவில் இணைக்கும் திறமை போல்ஷ்விக் கட்சிக்கு மட்டுமே இருந்தது.
சமாதானத்திற்கான பொதுவான ஜனநாயக இயக்கம், நில ஆதினங்களுக்கு எதிரான விவசாய ஜனநாயக இயக்கம், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின், தேச விடுதலை மற்றும் தேசிய சமத்துவத்திற்கான இயக்கம், முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் படைக்கும் சோசலிச இயக்கம் போன்ற அனைத்து நீரோட்டங்களையும், நவம்பர் புரட்சியில் வெற்றிகரமாக இணைக்கும் திறமையை போல்ஷ்விக் கட்சி பெற்றிருந்தது.
• சர்வதேச சூழல் எனப் பார்க்கும்போது, ஏகாதிபத்திய முகாம் பிளவுண்டிருந்தது. ஏகாதிபத்தியப் போர், மோதலின் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. பரஸ்பரம் போர் புரிந்து வந்த, பரஸ்பரம் பலவீனப்படுத்திக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகள், ரஷ்ய விவகாரங்களில் திறம்படத் தலையிட முடியவில்லை.

இந்தியாவில்

இங்கே ஏகாதிபத்தியச் சங்கிலி பலமாய் உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியும் இறுகி உள்ளது. ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கிற, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் வலுவாக நீடிக்கிற வகையில் அவற்றோடு சமரசம் செய்து கொண்டுள்ள, ஒரு பெருநிறுவன வளர்ச்சிப் பாதை கோலோச்சுகிறது. இந்தியா, ஒரு பிராந்திய துணைமேலாதிக்கமாகி உள்ளது.
அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தம்மை யார் அடக்கி ஒடுக்கி ஆள்வது என வாக்களிக்கும் மாபெரும் ‘அரசியல் சுதந்திரம்’ ‘ஜனநாயக உரிமை’ மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சலுகைகள், நிவாரணங்கள், விலை/கட்டணம் இல்லா, பொருட்களுக்காக/சேவைகளுக்காக, காத்திருக்கும் நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த ஜனநாயகம் எப்பொழுதும் முதலாளித்துவச் சுரண்டலால் எழுப்பப்படும் குறுகலான வரம்புகளால் இறுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கானதாக, சொத்துடைய வர்க்கத்தினருக்கானதாக செல்வந்தர்களுக்கானதாக இந்த ஜனநாயகம் இருக்கிறது.
‘முதலாளித்துவச் சுரண்டலின் நிலைமைகள் காரணமாய்த் தற்காலக் கூலி அடிமைகள், பட்டினியாலும் வறுமையாலும், நசுக்கப்பட்டு, ‘ஜனநாயகம் குறித்து தொல்லைப்பட முடியாதபடி’ ‘அரசியல் குறித்து தொல்லைப்பட முடியாதபடி’ அவல நிலையில் இருத்தப்பட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சிகள் சாதாரணமாய், சமாதான வழியில் ஓடிக் கொண்டிருக்கும்போது, பெரும்பான்மையான மக்கள் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்படுகிறார்கள்.’ அரசும் புரட்சியும் நூலில் லெனின் எழுதிய, மேற்கூறிய அடிப்படை நிலைமை இந்தியாவிலும் உள்ளது.
ஆனால், இங்கு, இப்போது, உடனடி ஆயுதப் போராட்டத்திற்கான, ஓர் இரகசியக் கட்சிக்கான, நிலைமைகள் இல்லை. மாறாக, வேறு வேறு முதலாளித்துவக் கட்சிகள், நகர்ப்புற வார்டுகள் கிராமப்புற ஊராட்சிகள் வரை, தங்கள், அரசியல் செல்வாக்கு வேர்களைக் கொண்டுள்ளனர். அரசு நிறுவனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நாடெங்கும் நீக்கமறப் பரவி உள்ளன. அரசியல் சண்டையின் போட்டியின் போரின், மய்ய இடத்தில், பாட்டாளி வர்க்கமோ அதன் அரசியலோ இல்லை.
நாட்டின் ஏகப்பெரும்பான்மை நகர்ப்புற கிராமப்புற பாட்டாளிகள் மத்தியில் பாட்டாளி வர்க்க அரசியல் மற்றும் அமைப்பு எடுத்துச் செல்லப்பட வேண்டி உள்ளது. போராடும் இடதுசாரி அரசியல், வால்பிடிக்கும் சந்தர்ப்பவாத இடதுசாரி அரசியலை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. மக்கள் போராட்டங்களே முதன்மையானவை என்ற நாடாளுமன்றம் தவிர்த்த பாதை, நாடாளுமன்ற முடக்குவாதத்தை எதிர்கொள்கிறது. சீர்திருத்தவாதம், பொருளாதாரவாதம், தொழிற்சங்கவாத அரசியல், ஆகியவற்றின் உருட்டித் திரட்டப்பட்ட வடிவமாக, பொருளாதாரக் கோரிக்கைகளை, பகுதி கோரிக்கைகளை, சீர்திருத்தங்களை தொழிலாளர்கள் பார்த்துக் கொள்ளட்டும்; அரசியலை, அதிலும் தேர்தல் அரசியலை அறிவார்ந்த அனுபவம் பெற்ற தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிலை இடதுசாரி இயக்கத்தில் ஆழ வேரூன்றி உள்ளது. ஆயினும், புரட்சி நடைபெற்ற நேரத்தில் ரஷ்யாவில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருமளவுக்குக் கூடுதலான தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர். 21ஆம் நூற்றாண்டு தொழில் நுட்பம், வளர்ச்சி, சமூக செல்வக் குவிப்பு, 19ஆம் நூற்றாண்டு தொழில் உறவுகள், ஒரு வலுவான விரிந்து பரந்த, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கான நிலைமைகளையும், அரசியல் கோரிக்கைகளுடன் அரசியல் போராட்டங்கள் நடத்துவற்கான நிலைமைகளையும் தோற்றுவித்துள்ளன. உலகமயக் கொள்கைகளின் தீவிர அமலாக்கம், வெறும் பொருளாதாரப் போராட்டங்களின் தொழிற்சங்கப் போராட்டங்களின் வரம்புகளைத் திட்டவட்டமாக அம்பலப்படுத்தி உள்ளன.

நம் முன் உள்ள சவால்கள்
கோடிக்கணக்கான அமைப்பாக்கப்படாத நகர்ப்புற கிராமப்புற தொழிலாளர்களை அமைப்பாக்குவது, வர்க்கப் போராட்ட எல்லைகளை விரிவுபடுத்துவது, இக்கடமையின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களைப் பயனாளிகளாகச் சுருக்காமல் போராளிகளாக அணிதிரட்டுவது ஒரு முக்கிய சவாலாகும்.
தொழிலாளி வர்க்கம் மத்தியில் வேலை செய்பவர்கள், தொழிலாளி வர்க்கத்தை தோழர் லெனின் அரசியல்ரீதியாகப் பகுத்துப் பிரிப்பதைக் காண வேண்டும்:
“எல்லா நாடுகளின் தொழிலாளி வர்க்க இயக்கங்களின் வரலாறும், தொழிலாளி வர்க்கத்தின் சற்று மேலான நிலையில் உள்ள பிரிவு சோசலிச கருத்துக்களுக்கு கூடுதலாக விரைவாகவும் கூடுதலாக சுலபமாகவும் பதில் வினையாற்றுவதைக் காட்டும். பிரதானமாக இவர்கள் மத்தியிலிருந்தே, உழைக்கும் மக்கள் திரளினரின் நம்பிக்கையைப் பெறும், பாட்டாளி வர்க்கத்திற்குக் கல்வியூட்டுகிற, அவர்களை அமைப்பாக்குகிற, சோசலிசத்தை உணர்வுபூர்வமாய் ஏற்கிற, சுதந்திரமாக சோசலிச தத்துவங்களை விரித்துச் சொல்கிற, தொழிலாளி வர்க்க இயக்கம் முன்நிறுத்துகிற முன்னோடிகள் வருவார்கள். செயல் நிறைவுக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒவ்வொரு தொழிலாளர் வர்க்க இயக்கமும், தனது சொந்த புருதோன்களை வாலியன்ட்களை, வெயிட்லிங்குகளை, பெபல்களை, அவர்களைப் போன்ற தொழிலாளி வர்க்கத் தலைவர்களை முன் கொண்டு வந்து நிறுத்தும்; இவர்கள் தமது மோசமான வாழ்நிலைமைகள், தொழிற்சாலை உழைப்பின் முடக்கிக் குறுக்கும் தண்டனைத் தன்மை வாய்ந்த அடிமைத்தனம் தாண்டியும், மேலான குண இயல்பும் மன ஆற்றலும் கொண்டிருப்பார்கள், அதனால் அவர்கள், கற்கிறார்கள், கற்கிறார்கள், கற்கிறார்கள்; தம்மை உணர்வுபூர்வமான சமூக ஜனநாயகவாதிகளாக (சோசலிஸ்ட்களாக) ‘தொழிலாளி வர்க்க அறிவாளிகளாக’ மாற்றிக் கொள்கிறார்கள்.
இந்த எண்ணிக்கையில் குறைவான முன்னேறிய தொழிலாளர் பிரிவினரை அடுத்து, சராசரி தொழிலாளர்களின் பரந்த பிரிவினர் வருகின்றனர். இந்த தொழிலாளர்களும் கூட, பெருவிருப்பத்துடன் சோசலிசத்தை விழைகின்றனர். தொழிலாளர் படிப்பு வட்டங்களில் பங் கேற்கின்றனர், சோசலிச செய்தித்தாள்களை, புத்தகங்களைப் படிக்கின்றனர். கிளர்ச்சியில் பங்கேற்கின்றனர்; அவர்கள் முந்தைய பிரிவிலிருந்து சோசலிச தொழிலாளர் இயக்கத்தின் முழுநிறைவான சுதந்திரமான தலைவர்கள் ஆக இயலாது என்ற ஒரு விசயத்தில் மட்டும் வேறுபடுகிறார்கள். இத்தகைய தொழிலாளர்கள் உள்ளூர் மட்ட நடைமுறை வேலையில் ஈடுபடுகிறார்கள், இவர்கள் பிரதானமாக தொழிலாளி வர்க்க இயக்க நிகழ்வுகளிலும் கிளர்ச்சியின் உடனடி பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடைசியாக, சராசரி தொழிலாளர்கள் பிரிவினருக்கும் பின்னால் பாட்டாளி வர்க்கத்தின் கடைநிலை பிரிவினரான மக்கள் திரளினர் வருகிறார்கள். இவர்களுக்கு முழுமையாக ஒரு சோசலிச பத்திரிகையை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் சாத்தியமே”.
என்ன செய்ய வேண்டும் நூலில் தோழர் லெனின் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட, தொழிலாளி வர்க்கத்தின் முன்னேறிய பிரிவினருக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார். “நமது முதலாவதும் அவசரமானதும் ஆன கடமை கட்சி நடவடிக்கை தொடர்பாக, அறிவாளிகள் மத்தியில் இருந்து வருகின்ற புரட்சியாளர்களின் அதே மட்டத்திற்கு ஈடான அளவிற்கு தொழிலாளி வர்க்க புரட்சியாளர்கள் மாறுவதற்கு பயிற்சி தந்து உதவுவதாகும்; ஆகவே முதன்மையாக தொழிலாளர்களை புரட்சியாளர்கள் மட்டத்திற்கு உயர்த்துவதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்; பொருளாதாரவாதிகள் விரும்புவது போல் ‘உழைக்கும் வெகுமக்கள்’ மட்டத்திற்கோ, அல்லது சுவபோடா (அராஜகவாதிகள்) விரும்புவது போல் ‘சராசரி தொழிலாளர்கள்’ மட்டத்திற்கு இறங்குவதோ, ஒரு போதும் நம் கடமையல்ல”.
தோழர் லெனின், மாலை நேரங்களையோ விடுமுறை நாட்களையோ மட்டும் என்றில்லாமல், வாழ்க்கையையே புரட்சிக்காக, அர்ப்பணிக்கும் தொழில்முறைப் புரட்சியாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டுள்ள கட்சியைப் பற்றிப் பேசுகிறார். நமக்கு, ஒரு வெகுமக்கள் போல்ஷ்விக் கட்சி வேண்டும். அப்படியானால், வேலைக்குச் சென்று கொண்டு மாலை நேரங்களையும் விடுமுறை நாட்களையும் இயக்கத்திற்குச் செலவிடுகிற உடனடி இயக்கத்தையும் இறுதி லட்சியத்தையும் இணைக்க முயற்சிக்கின்ற, பல லட்சக்கணக்கானவர்கள் நாடு முழுவதிலிருந்தும், மாநிலங்களில் பல்லாயிரங்களிலும் தேவை. இவர்கள் மத்தியிலிருந்து, அரசியல் உணர்வு உயர்த்தப்பட்டு, தொழில்முறைப் புரட்சியாளர்கள், நிச்சயம் வருவார்கள்.

எந்த வழியில்
இன்றைய முதலாளித்துவ தாக்குதல், கம்யூனிஸ்ட்டுகளின் கிளர்ச்சி மற்றும் பிரச்சார வேலைக்கான ஏராளமான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது. நாம்தான் இதற்கு ஈடு கொடுப்பதில்லை. பின்தங்கியுள்ளோம். அரசியல் உணர்வை உயர்த்துவதென்பது செயற்கையாக செயலூக்கத்தை உயர்த்துவதோ, தொடர்ச்சியாக போர்க்குணத்துடன் போராட்டங்களை நடத்துவதோ அல்லது அருவமான விதத்தில் அரசியல் புகுத்துதலோ இல்லை. இது எல்லாவற்றிகும் மேலாக தொழிலாளர் வர்க்கம் மத்தியில் இருந்து பரந்த அளவிற்கு முன்னோடிகளை வளர்ப்பது, அவர்கள் தமது தொடர்ச் சியான நடவடிக்கையின் மூலம் படிப்படியாக எல்லா சவால்களுக்கும் மத்தியில், வர்க்கத்தின் சுய உணர்வை வளர்ப்பதைக் கோருகிறது. உடனடி போராட்டங்களில் சண்டை போடும் விசயத்தில் முன்னோடிகள் அவர்களால் இயன்ற வரை முயல்வார்கள். ஆனால், அதே நேரம் அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவத்தின் இறுதி வீழ்ச்சிக்காக தயார்ப்படுத்த வேண்டும்.
மேன்மேலும் அதிகமான தொழிலாளர்கள் மக்கள் திரளினர் இன்றைய ஆட்சி முறையைச் சகிக்க முடியாது எனத் தீவிரமாக உள்ளூர உணர்த்து வருகிறார்கள். மிக மிக அற்பமான சக்திகளையும் உள்ளிட்ட எல்லா சக்திகளையும் பயன்படுத்தும் வகையில் விரிவாகவும் அதே நேரத்தில் சமச்சீராகவும், இசைவாகவும் ஒழுங்குபடுத்தும் திறமையுள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள் நம்மிடம் இருந்து போதுமான அளவிற்கு எழுவது அவசர அவசிய கடமையாக இருக்கும்.
(இக்கட்டுரைத் தொடர் ஏஅய்சிசிடியு ஜøலை 21, 22 பயிற்சிப் பட்டறையை ஒட்டி எழுதப்பட்டது. கூடுதல் விவரங்களுக்கு, ‘ரஷ்யப் புரட்சி’ தொடர்பான, மாலெ தீப்பொறி செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 2006 இதழ்களில் வெளியான கட்டுரைத் தொடர் காணவும்).

ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்:
சில பிரச்சினைகள் சில கேள்விகள்


பழ.ஆசைத்தம்பி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நோக்கங்கள் என பின்வரும் விசயங்கள் சொல்லப்படுகின்றன.
ஊரகப் பகுதிகளில் உடல் உழைப்பு மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பு அளிப்பதை உறுதி செய்வது 
வேலைக்கான உரிமையை நிலைநாட்டுவது.
ஊரகப் பகுதிகளிலுள்ள வறியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது
உற்பத்தியைப் பெருக்கும் சொத்துக்களை உருவாக்குவது.
ஊரக பகுதிகளிலிருந்து, நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம் பெயர்வதை குறைப்பது.
ஊரகப் பகுதிகளிலுள்ள வறியவர்களுக்கு அதிகாரமளிப்பது. சமூக சமத்துவத்தை வளர்ப்பது.
இந்த நோக்கங்கள் நிறைவேறுகின்றனவா?

களப்பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
வறியவர்க்கும், உரியவர்க்கும் வேலை அட்டை வழங்குவதை விட, உழைப்பில் ஈடுபடாத, உற்பத்தியில் ஈடுபடாத பிறரிடம் வேலைக்கு செல்லாத நிலவுடமையாளர்கள் குடும்பங்களுக்கும் வேலை அட்டை வழங்கப்படுகிறது. அவர்கள் பிறரிடம் அட்டையை கொடுத்துவிட்டு, எங்கேயாவது சென்றுவிடுகிறார்கள். மற்றொரு புறம் வேலை செய்யாமல் அமர்ந்திருப்பதும் வேலைக்கு வராமலே அட்டையை கொடுத்து சம்பளம் பெறுவதும் நடக்கிறது. வேலை வாங்கும் ஊராட்சி பணியாளர்கள், எதிர்த்து கேட்க பயந்து விட்டுவிடுகிறார்கள்.
உழைத்து பிழைக்க வேண்டும், வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கை என வாழும் மக்கள் நாள் முழுக்க உழைப்பதும், ஒரு கூட்டம் உழைக்காமல் சம்பளம் பெறுவதும் தொடர்ந்தது. தொடர்கிறது. உழைத்து கொண்டிருக்கும் மக்களுக்கு சலிப்பு தட்டி, உற்சாகம் குறைந்து, போதுமான ஊதியம் இல்லாததால், வேலை செய்தாலும், செய்யாவிட்டாலும் கூலி ஒன்று தான், உழைக்காத கூட்டம் பயன்பெற, நாம் ஏன் சாக என்கிற நிலைக்கு வந்து விடுகின்றனர்; அரசு அவர்களை இந்த நிலைக்கு திட்டமிட்டு தள்ளுகிறது.
இந்த கோபத்திலும் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.
உழைக்க தகுதியான அனைவருக்கும் அட்டை வழங்குவதும், உழைக்க தகுதியற்ற வசதியானவர்களின் அட்டையை பறிப்பதும் நடந்தால் நோக்கம் ஓரளவு நிறைவேறும்.
ஒரு தொழிலாளி அல்லது 20 பேர் கொண்ட குழு நாளொன்றுக்கு 9 மீட்டர் அகலம் 30 செ.மீ ஆழம், 12.5 மீட்டர் நீளம் வெட்ட வேண்டும் என்பது அளவு. 
இந்த முறையில் வெட்டுபவர்களுக்கு முறையாக அளந்து கொடுப்பதும் இல்லை. வெட்டிய பிறகு அளந்து பார்ப்பதும் இல்லை. மாறாக வாரத்திற்கு ஒரு முறை அளவு எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதற்கும் அதிகாரிகள் வருவதில்லை. பிறகு அதிகாரிகளே தோராயமாக ரூ.70, ரூ.80, ரூ.90 என கூலி நிர்ணயம் செய்கின்றனர். மக்கள் கேள்வி கேட்டால் நீங்கள் வெட்டியதற்கு இது கூட கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறார்கள். எந்த அளவு வேலை நடந்துள்ளது, அதற்கு என்ன கூலி என்று விவரமான தொழிலாளர் சிலர் கேட்கும்போது, ஆள்பற்றாக்குறை பற்றி பேசுகிறார்கள். ஓர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளுக்கு, 2 ஓவர்சியர்கள் 2 பொறியாளர்கள் மட்டுமே என்றும் அவர்களால் அனைத்து ஊராட்சிகளுக்கும் சென்று அளந்து பார்ப்பது சிரமம் என்றும் சொல்கிறார்கள். வேலை இடத்தில் நிழற்குடை இல்லை, தண்ணீர் வைப்பதில்லை, முதலுதவி பெட்டி இல்லை என்ற புகார்களுக்கும் இதே பதில்தான் சொல்கிறார்கள். 

சட்டக் கூலி ரூ.132 தருவதில் பிரச்சினை
ஓர் ஊராட்சியில் ஒரு வாரத்தில் வழங்கப்படும் சம்பளம் ஓவர்சியர், இன்ஜினியர் அதிகாரத்துக்குள் ரூ.1 லட்சம் வரைதான்.  அதற்கு மேல் சென்றால், அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் பில் எழுதி, அதற்கும் மேல் உள்ள அதிகாரி மேற்பார்வை செய்ய வேண்டும். அவர்கள் வந்தால் இவர்களுக்கு பிரச்சினை என்பதால் இவர்களே தொழிலாளியின் வேலையில், கூலியில் கைவைத்து விடுகிறார்கள்.
ஊராட்சியில் 1000 பேர் வரை வேலைக்கு செல்கிறார்கள் என்றால், ஒரு நாளைக்கு 500 பேர் என்றால், 7 நாட்களுக்கு 3500 பேருக்கு சம்பளம் தலா ரூ.100 என்றாலே ரூ.3.5 லட்சம் வேண்டும். இதனால் அதிகாரிகள் வேலை நாள் குறைப்பும் ஆட்குறைப்பும் கூலியை குறைப்பும் செய்துவிடுகிறார்கள். உண்மையில் வேலை உறுதித் திட்டம் வேலையை உறுதி செய்யாமல் இருப்பதை அரசும் அதிகாரிகளும் பார்த்துக் கொள்கிறார்கள்.
சில ஊராட்சிகளில், அதிகாரிகளை சரி செய்து கொண்டு 3 என்எம்ஆர், 3 வேலை என ஊராட்சியில் வேலை கொடுத்து ரூ.132 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகள் தங்கள் சுமையை வெளியில் சொல்லாமல் அளவு எடுக்காமல் அலையாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு உழைக்கும் மக்கள் ஊதியத்தை வெட்டுகிறார்கள்.
இது மாற வேண்டும். ஊதியத்திற்கு உழைக்கும் மக்கள் போராடுவது போல், தனது நெருக்கடியை குறைக்க அதிகாரிகளும் போராட வேண்டும்.
உழைப்புக்கேற்ற ஊதியம், தேவைக்கான ஊதியம் வராதபோது குடும்பம் சீரழியும். கிராமப்புற பொருளாதாரம்  வீழ்ச்சியடையும். தேசம் பின்நோக்கிச் செல்லும். அதேபோல், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படாத மறுஉற்பத்திக்கு உதவாத செலவினம் வீணானது. பொருளற்றது. இதுவும் சமூகத்தை சீரழிக்கும். தேசத்தை பின்னே கொண்டு செல்லும்.

அரசும் ஊராட்சியும்
ஊராட்சிக்கு ஆண்டுக்கு குறைந்தது ரூ.20 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது.
இங்கு வெளிப்படையான நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். செய்கின்ற வேலை பயனுள்ளது என்ற விதத்தில் அதன் மீது பற்றுதல் உருவாக்குதல், ஏரி, குளங்களை, வரத்துவாரியை மேம்படுத்துவது, நீர்நிலைகளை பாதுகாத்தல், பராமரித்தல், சாலையை மேம்படுத்துதல் அவசியம் என்பதற்கு ஏற்ப பணி செய்ய வேண்டும். உழைக்கும் மக்கள்தான் தேசத்தின் சொத்து, இவற்றை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்பதை அரசும் ஊராட்சி நிர்வாகமும் மனதில் நிறுத்தி வேலை செய்ய வேண்டும்.
வேலை நேரத்தையும் அளவு முறையையும் கவனிக்கும் நிர்வாகம், இத்திட்டத்தில் சொல்லப்பட்ட தனி ஊரக விலைப் பட்டியல்  மற்றும் பொதுப்பணி துறை தர விலைப்பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில், குறிப்பிட்ட பணி அளவை விட குறைவான பணி செய்தாலும், ஒரு நபருக்கு தினசரி ரூ.132 வரை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.

அரசு என்ன செய்ய வேண்டும்?
குடும்பத்திற்கு 2 பேருக்கு வேலை 300 ரூபாய் கூலி, ஆண்டுக்கு 200 நாள் வேலை என்றால் அரசு பொறுப்பாக வேலை பெறும்; மக்கள் தங்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்துவது நன்கு புலப்படும். உழைப்பை  தவிர்க்கிற, ஏமாற்றுகிற கூட்டம் வேலையில் இருக்க முடியாமல் விலகிவிடும்.
இந்த அடிப்படையில் வேலை கொடுத்தால் ஒரு வறிய குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இது அந்த குடும்பம் பிழைத்திருக்க உதவும்.
இத்திட்டத்தை விவசாயத்திற்கும் விரிவுபடுத்துவது, தொழிலாளி பெறுகிற வேலை நாட்கள் அதிகரிக்கும்; விவசாயம் மேம்படும்; நீர்நிலைகளை பாதுகாக்கவும், கிராமப்புற மக்களின் இடம் பெயர்வதை தடுக்கவும் உதவும். விவசாய நெருக்கடி சற்று தணிய உதவும். இதற்கு கூடுதல் நிதி வேண்டும்.
இந்த ஆண்டு மத்திய அரசு இத் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி ரூ.33 ஆயிரம் கோடி. (ரூ.40 ஆயிரம் கோடியிலிருந்து, ரூ.7,000 கோடி  செலவாகவில்லை என குறைத்தது.)
குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலைக்கு ரூ.33,000 கோடி என்றால் குடும்பத்தில் இரண்டு பேருக்கு வேலை தர அரசுக் கணக்குபடியே ரூ.66,000 கோடி வேண்டும். 100 நாள் வேலைக்கு ரூ.33,000 கோடி என்றால், 200 நாள் வேலைக்கு ரூ.66,000 கோடி வேண்டும். ரூ.132 கூலிக்கு ரூ.33,000 கோடி என்றால், ரூ.300 கூலிக்கு ரூ.3.5 லட்சம் கோடி வேண்டும்.
நிலக்கரிச் சுரங்க ஊழலில் மட்டும் ரூ.1.86 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டில், கிரானைட் ஊழலில் போன பணம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் ஆகியவை கிடைத்தால் நாடு முழுவதும் உள்ள 80% வறிய மக்களுக்கு என்னென்னவோ செய்யலாம்.

ஒப்பந்தம் எடுப்பது அல்ல, மக்களைத் திரட்டிப் போராடுவதே எங்கள் பணி

நெல்லையில் ஏப்ரல் 22 -ஜுலை 28 கட்சி வலுப்படுத்தும் இயக்கத்தைத் தொடர்ந்து கட்சிக் கிளைகளில் சுதந்திரமான செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிளைச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் பகுதிப் பிரச்சனைகளில் சுதந்திரமான முன்முயற்சியை கட்டமைத்து வருகின்றனர். இந்தப் பின்னணியில், நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நடைபெறும் மனுநீதி நாளில் ஒவ்வொரு வார்டு பிரச்சினை தொடர்பாக இகக மாலெ கட்சியின் சார்பாக மக்களுடன் சென்று மனு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 43, 44, 45, 46, 48, 52, 53 ஆகிய வார்டு கிளை அமைப்புகளின் சார்பாக, பெண்களுக்கான பொதுக் கழிப்பிடங்கள், வாய்க்கால் பாலத்தை சரி செய்வது, பாதாளச் சாக்கடைத் தண்ணீர் தெருக்களில் ஓடுவதை சரிசெய்வது, வாய்க்கால் தூர் வாறுவது போன்ற பிரச்சினைகள் மீது கட்சிக் கிளைச் செயலாளர்கள் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
52 வார்டு உசைனியா பள்ளிக்கருகில் உள்ள வாய்க்கால் பாலத்தைச் சீர்செய்யக் கோரி மேயரை சந்தித்தபோது, ரூ.3 லட்சம் ஒதுக்கியும் ஒப்பந்தக்காரர்கள் வர மறுக்கிறார்கள் என்றும், நீங்கள் எடுத்து நடத்துங்கள் என்றும் மேயர் சொல்ல, நாங்கள் அதற்காக கட்சி நடத்தவில்லை என்று தோழர்கள் சொல்வதுமாக வாக்குவாதம் நடந்து பின்னர் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளில் கமிசன் பார்க்கும் பிரச்சனையையும் மக்கள் எழுப்பினார்கள். இப்போது ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத் திட்டமும் உருவாக்கப்பட்டுவிட்டது. 44வது வார்டில் தேவிபுரத்தில் தலித் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடத்திற்கு ரூ.3.60 லட்சமும் 45வது வார்டில் பெண்கள் பொதுக் கழிப்பிடத்திற்கு ரூ.4 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சியில் முன்வைப்பு செய்யப்பட்டுள்ளது. 53வது வார்டில் பெண்கள் பொதுக் கழிப்பிடத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.3.50 லட்சத்துடன் ரூ.2.50 லட்சம் கூடுதலாக ஒதுக்கப்பட்டு வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. 48ஆவது வார்டில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த செப்டிக் டேங்க் தற்போது சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்களுக்கு தரமற்ற இலையைப் போட்டு வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி தொழிலாளர் ஆய்வாளரிடம் தமிழ்நாடு பீடி மற்றும் சிகார் தொழிலாளர் வேலை நடைமுறை சட்ட விதி 32ன் கீழ் 500 பீடித் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு ஜனநாயக பீடித் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேன்மொழி, பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் மனுக்கள் கொடுத்தனர். அதன்பிறகு பேட்டை காஜா பீடிக் கம்பெனியிலும் ஆலங்குளம் தாமோதர் ஹோம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும் தொழிலாளர் ஆய்வாளர் நேரடியாக ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்ட பீடிக் கம்பெனி கிளைகளில் தரமான இலைகள் சரியான அளவில் தரப்பட்டது. எங்கள் பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கை இல்லையா என்று பிற பகுதிகளில் உள்ள பீடித் தொழிலாளர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். அனைத்து பீடிக் கடைகளிலும்  தொழிலாளர் ஆய்வாளர் ஆய்வு செய்வதை உறுதிப்படுத்தவும் தரமற்ற இலை தூள் கொடுத்து மறைமுகமாகக் கூலியை வெட்டும் பீடி முதலாளிகளுக்கு எதிராகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போர் நோக்கி

ஊழியர் கூட்டங்கள்
ஊழல், பெருநிறுவனங்களில் கொள்ளை ஆகியவற்றை எதிர்த்து, மக்கள் சார்பு வளர்ச்சி வேண்டுமென மாலெ கட்சியும் அனைத்து வெகுமக்கள் அமைப்புகளும் ஆகஸ்ட் 31 அன்று நடத்தவுள்ள சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய சென்னை, கோவை, நெல்லை, டெல்டா மண்டலங்களில் ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டு தயாரிப்பு வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த ஊழியர் கூட்டங்களில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்துகொண்டார். டெல்டா பகுதி கூட்டத்தில் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கலந்துகொண்டார். இந்தக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி ஊழியர் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட கமிட்டிகள் மக்களைத் திரட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. 

பொதுப்பேரவைகள்
சென்னையில் நடந்த ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுக்குழுவின் முடிவுக்கேற்ப சென்னை, கோவை, திருவள்ளூர், நெல்லை, குமரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 15 அன்று பொதுப் பேரவைகள் நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 31 சிறைநிரப்பும் போராட்டத்தை நோக்கிய மக்கள் சந்திப்பு நடைபயணங்கள், அணிதிரட்டல் மற்றும் நிதிதிரட்டல் பற்றி தொழிலாளர் முன்னோடிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.
கோவையில் நடந்த பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கப் பொதுப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உறுதியேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி கலந்துகொண்டார்.
சென்னையில் நடந்தப் பொதுப்பேரவைக் கூட்டத்தில் 200 பேர் வரை கலந்துகொண்டனர். ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் தோழர் ஜவகர், புவனேஸ்வரி, குமரேஷ், பழனிவேல், சேகர் கலந்து கொண்டனர். தோழர் பழனிவேல், சென்னையில் டிஅய்டிசி முதல் திருவொற்றியூர், திருபெரும்புதூர் ஒருமைப்பாடு மன்ற தோழர்களுடன் பங்கேற்க வேண்டிய பிரச்சார குழுக்கள் தலைமை தாங்குவோர் பிரச்சாரம் நடக்கும் நாட்கள் உள்ளிட்ட விவரங்களை முன்வைத்துப் பேசினார். ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்டத்தில், சில நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பங்கேற்பதாக உறுதி அளித்தனர்.
நெல்லையில் பீடித் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், சுமைதூக்கும் தொழிலாளர், ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் கலந்துகொண்ட பொதுப்பேரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. குமரி, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 12 அன்று பொதுப் பேரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

வகுப்பு
கோவையில் பிரச்சார இயக்கத்தினூடே ஆகஸ்ட் 19 அன்று அரசும் புரட்சியும் நூல் மீதான வகுப்பு நடைபெற்றது. 45 பேர் கலந்துகொண்ட வகுப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி நூலின் கருத்துக்களை முன்வைத்தார். வகுப்பு கலந்துகொண்டவர்கள் மத்தியில், பலரும் படிப்பது, அதன் பின்னர் விளக்குவது என்ற முறையில் அவர்கள் பங்களிப்பை உறுதி செய்யும் விதம் விவாதம் கட்டமைக்கப்பட்டது. இந்த வகுப்பை பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் உச்சத்தில் இருந்த கட்டத்தில் எடுத்திருக்க வேண்டும் என்றும் நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வகுப்பில் கலந்து கொண்ட முன்னணிகள் கருத்து தெரிவித்தனர்.

நடைபயணங்கள்
சென்னையில் ஆகஸ்ட் 31 அணிதிரட்டலை உறுதி செய்ய சிறைநிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12 அன்று காலை முதல் மாலை வரை அம்பத்தூரில் 75 இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கட்சி உறுப்பினர்களுடன் 4 நடைபயணங்கள் நடத்தினார்கள். அம்பத்தூர் பகுதியில் அன்றாட அடிப்படையில் நடைபயணங்களில் தொழிலாளர் முன்னணிகள் பகுதி மக்களை சந்தித்து ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்ட செய்தியை எடுத்துச் செல்கிறார்கள்.  ஆகஸ்ட் 26 வரை நடந்த நடைபயணங்களில் சாய்மீரா, ஸ்டாண்டர்டு கெமிக்கல்ஸ், ஆன்லோடு கியர்ஸ், ஜெய் எஞ்சினியரிங் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் என 250 பேர் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15 அன்று கட்சி உறுப்பினர்கள் தொழிலாளர் முன்னோடிகள் மாணவர் கழக தோழர்கள் கலந்து கொண்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளூர் கமிட்டிகள் திட்டமிட்டு பிரச்சார இயக்கம் நடத்தவும், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், திருவள்ளூர், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, நகரங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் முடிவுகள் எடுக்கப்பட்டன.  மின் வாரிய டாக்டர் அம்பேத்கார் பொறியாளர் மற்றும் பணியாளர் சங்கத்தின் கூட்டம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் தோழர் செல்வராஜ் கலந்துகொண்டார்.
கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் தலைமையில் தொழிலாளர் முன்னணிகள் ஆகஸ்ட் 19 அன்று கும்மிடிப்பூண்டியில் பிரச்சாரம் செய்தனர். கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் தோழர் பாரதி கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் பிரச்சாரத்தில் பங்கேற்றார். இதுவரை 100 தோழர்கள் மிகவும் உற்சாகமாக 10000க்கும் கூடுதலான மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளனர். ரூ.8,000 வரை நிதி திரட்டியுள்ளனர். 
மீஞ்சூர், பொன்னேரி, சோழவரம், நல்லூர், நெற்குன்றம் பகுதிகளில் உள்ளுர் கமிட்டிகள் நடைபயணங்கள் நடத்தியுள்ளன. ஆகஸ்ட் 31 அன்று சிறை நிரப்பும் போரில் காரனோடையில் ஆயிரம் பேரை திரட்ட அனைத்து சக்திகளையும் திரட்டி வேலைகள் நடக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 21, 23, 24, 25, 26 தேதிகளில் நடைபெற்ற 8 நடைபயணங்களில் 50 பேர் வரை ஈடுபட்டு 500 குடும்பங்களை சந்தித்து ஆகஸ்ட் 31 செய்தி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சிறைநிரப்பும் போரில் கலந்துகொள்பவர்கள் என 150 பெயர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் கைப்பேசி எண்களும் பெறப்பட்டுள்ளன.
கோவையில் நடத்தப்பட்ட 20 நடைபயணங்களில் 150 பேர் வரை பங்கேற்றனர். இந்த மக்கள் சந்திப்புப் பிரச்சாரத்தில் தொழிலாளர் நிறைந்த பகுதிகளில் ‘பயிற்சியாளர் முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்’ புத்தகம் 1000 விற்பனை செய்யப்பட்டுள்ளது. பிரிக்கால் தொழிலாளர்கள் மத்தியில் ஒருமைப்பாடு விநியோகம் செய்வதற்கு அப்பால் பொதுமக்கள் மத்தியிலும் விநியோகிக்கப்பட்டது. சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் ஆகஸ்ட் 19 மற்றும் 26 தேதிகளில் நடத்தப்பட்ட 12 நடைபயணங்களில் 110 பேர் வரை பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடத்தப்பட்டது.

அசாம் மக்கள் மோதலில் குளிர் காயாதே

அசாம் இனக்கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறிய, மக்கள் மத்தியிலான மோதலில் குளிர் காய்கிற மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், மதக் கலவரத்தை தூண்டும்விதம் செயல்படுகிற சங்பரிவார் அமைப்புக்களை கண்டித்தும், மதவெறியை தூண்டுகிற சமூக விரோத சக்திகளை கைது செய்யக் கோரியும், வடகிழக்கு மாநில மக்கள் மத்தியில் ஒற்றுமையை வலியுறுத்தியும் திருவள்ளூரில் 18.08.2012 அன்று தோழர் அன்பு, தோழர் சீதா தலைமையில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் ஆர்ப்பாட்டம் நடத்தின. புரட்சிகர இளைஞர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் பாரதி கண்டன உரையாற்றினார். மாலெ கட்சியின் ஆகஸ்ட் 31 சிறை நிரப்பும் போராட்டத்தில் மாணவர், இளைஞர் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.

Search