வழக்குரைஞர்களின் உரிமைப் பறிப்புக்கு எதிராக
இகக (மாலெ) ஆர்ப்பாட்டம்
வழக்குரைஞர்கள் உரிமைக்காகவும் நீதித்துறையில் ஜனநாயகம் கோரியும் கோவையில் இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அக்டோபர் 6 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும், அதற்காக போராடிய வழக்குரைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், நீதித்துறை ஜனநாயகத்துக்காகப் போராடிய வழக்குரைஞர்கள் மீது அறிவிப்பு கூட கொடுக்காமல் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும், நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை வழக்குரைஞர்களுக்கும் மக்களுக்கும் உண்டு, ஊழல் நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான தோழர் குமாரசாமி, மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளரும் வழக்குரைஞருமான தோழர் ச.பாலமுருகன், வழக்குரைஞர் பன்னீர்செல்வம், இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தாமோதரன் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் குமாரசாமி தனது உரையில் அகில இந்திய பார் கவுன்சில் விசாரணையே இல்லாமல் வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை கண்டித்தார். ஏற்கனவே சட்ட அமைச்சராக இருந்த சாந்தி பூஷன் ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் என்றும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு இப்போது உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது என்றார். இந்தி பேசும் 4 மாநிலங்களில் உயர்நீதிமன்ற மொழியாக இந்தி இருக்கும்போது தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது, ஜனநாயகபூர்வமானது என்றும் உயர்நீதிமன்ற அலுவல்கள் தமிழில் நடக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நடப்புகளை புரிந்து கொள்ள முடியும் என்றும் சொன்னார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர் ச.பாலமுருகன் வழக்குரைஞர்கள் பிரச்சனைகளுக்காக பாட்டாளிகள் குரல் கொடுப்பதற்கு இகக(மாலெ)வுக்கு தனது நன்றியினை தெரிவித்தார். ஆர்ப்பாட்ட முடிவில் தோழர் வேல்முருகன் நன்றி கூறினார்.
சாய்ராம் பொறியியல் கல்லூரியை
அரசு ஏற்று நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
பெண் மாணவர்கள் விரும்பிய ஆடை அணிவதை கட்டுப்படுத்தும் சாய்ராம் பொறியியல் கல்லூரியின் மாணவர் விரோத, சமூக விரோத போக்குக்கு எதிராகவும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை, அதற்கு அனுமதி அளித்த கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்தும் தனியார் கல்லூரி வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குண்டர் பாலுவை கைது செய்ய வலியுறுத்தியும் 10.10.2015 அன்று சென்னையில் அகில இந்திய மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் சீதா, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் பாரதி உரையாற்றினர்.
சாதியாதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம்
பகத்சிங் பிறந்த தினத்தன்று மாணவர் இளைஞர் கருத்தரங்கம்
பகத்சிங் பிறந்த தினத்தை ஒட்டி, செப்டம்பர் 27 அன்று செங்குன்றத்தில்
சாதியாதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் கருத்தரங்கம் நடத்தின. அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா தலைமையில் நடந்த கருத்தரங்கில், புரட்சிகர இளைஞர் கழகத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் தோழர் கண்ணன், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் அதியமான், புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, தேசியச் செயலாளர் தோழர் பாரதி, இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் ஆகியோர் உரையாற்றினர்.
சாதியாதிக்க சக்திகள் மீது
தடுப்புக் காவல் சட்டம் பாயாதா?
தமிழக காவல்துறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என்று ஜெயலலிதா அவ்வப்போது சொல்வது மிகச் சரி. தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்கு முதலிடம். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட காவல்துறை தவிர வேறெந்தத் துறையும் இயங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் ஏதாவது ஓர் அடிப்படைப் பிரச்சனையில், வாழ்வாதாரப் பிரச்சனையில், ஏதாவது ஒரு பிரிவு மக்கள் அன்றாடம் போராட்டத்தில் வீதிக்கு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் வேலையை காவல்துறையினர் செய்கிறார்கள். மற்ற துறைகள் இயங்கினாலும் மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க அஇஅதிமுக அரசிடம் திட்டங்கள் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், குறைந்தபட்ச மக்கள் நல நடவடிக்கைகள் என்று அறிவிக்கப்பட்டவை கூட நிறைவேறாமல், மக்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு சம்பிரதாய பதில் கூட சொல்லாமல் வெறும் அறிவிப்புகள் என்பதாக தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
காவல்துறை செயல்பாடு மக்கள் கண்ணோட்டத்தில் எப்படி இருக்கிறது என்பதற்கு யுவராஜ் சரணடைந்திருப்பது சான்றாக இருக்கிறது. மூன்று மாதங்களாக தமிழ்நாட்டில்தான் இருக்கிறார். சிறப்பான செயல்பாடு, அதிநவீன உள்கட்டுமான வசதிகள் கொண்டது என்று ஜெயலலிதா சொல்லும் காவல் துறையினரால் அவரை கைது செய்ய முடியவில்லை. யுவராஜை கைது செய்யும் பொறுப்பில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர் சரணடைகிறார் என்றால், தமிழ்நாட்டின் காவல்துறையினருக்கும் யுவராஜ் வகை குற்றவாளிகளுக்கும் திரைமறைவு தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. யுவராஜ÷க்கு சிபிசிஅய்டி காவல் பிரிவினர் மீது நம்பிக்கை இருப்பதும் புரிகிறது. சுட்டுப் பிடிக்க உத்தரவு என்பதெல்லாம் கண்துடைப்பு அறிவிப்பு என்பதும் தமிழக மக்களுக்கு புரிந்துகொள்ள முடியாததல்ல.
ஒரு திட்டமிட்ட கொலைக்குக் காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள யுவராஜ், சில தினங்களுக்கு முன்பு முடிந்தால் என்னைப் பிடித்துப் பாருங்கள் என்று சவால் விடுவது போல் பேசிய யுவராஜ், சாதாரணமாக சரண் அடையவில்லை. 48 மணி நேரங்களுக்கு முன்பே, தான் எங்கு, எப்போது சரண் என்பது பற்றி விரிவான தகவல் தருகிறார். அவர் சரணடையும் போது தனியாக சரணடையவில்லை. நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் திரண்டிருக்க அவர்கள் முன்பு சரணடைகிறார். அவர் சரணடைவதே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கக் கூடிய நிலை இருந்தது.
கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்படுவது, அந்தக் கொலையை விசாரிக்கச் சென்ற தலித் அதிகாரி, பெண் அதிகாரி தற்கொலை செய்துகொள்வது என்ற அடுத்தடுத்த கொடூரமான நிகழ்வுகளை விட தனது சாதி வாக்கு வங்கி குலைந்துவிடாமல் பாதுகாப்பதுதான் ஜெயலலிதாவுக்கு பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, சாதி வாக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களை தடுப்புக் காவல் சட்டம் கண்டு கொள்ளாது என்பதை இந்த நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
நாடு முழுவதும் தடுப்புக் காவல் சட்டத்தில் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் 3,237 பேர், அவர்களில் தமிழகச் சிறைகளில் இருப்பவர்கள் 1,892 பேர், 2013ல் இருந்ததை விட இந்த எண்ணிக்கை கூடுதல், 1,892 பேரிலும் தலித்துகள் எண்ணிக்கை 53%, 886 பேர் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்று விவரங்கள் சொல்கின்றன. அஇஅதிமுக அரசு முழுக்க முழுக்க தலித் விரோத அரசு என்பதற்கு இந்த விவரங்கள் கூடுதல் சான்று தருகின்றன. இவர்களில் பலருக்கு பிணையில் வெளியே வரத் தேவையான சட்ட உதவிகள் பெற வசதியின்றி கூட சிறைகளில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலை இருக்க வாய்ப்புள்ளது.
நாட்டில் உள்ள சிறைகளில் தடுப்புக் காவல் சட்டத்தில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 58% பேரை கைது செய்துள்ள காவல்துறை, அக்டோபர் 11 அன்று நாமக்கல் சிபிசிஅய்டி அலுவலகம் முன் அவ்வளவு பேர் திரள எப்படி அனுமதித்தது? அப்படி திரளுவார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் காவல்துறை இருக்கிறதென்றால், ஜெயலலிதா இவ்வளவு நாட்களாக காவல்துறையின் சிறப்புப் பற்றி சொல்லி வந்தது அனைத்தும் ஏமாற்றுதான்.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் தலித்துகள் கொல்லப்பட்டதை நாம் மறக்க முடியாது. தங்கள் தலைவனுக்கு அஞ்சலி செலுத்தக் கூடியவர்கள் அவர்கள். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, காவலர்கள் மீதான தாக்குதலுக்கு பதில் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்று பொய் காரணங்கள் சொல்லப்பட்டன. அன்று அங்கு 1,000 பேர் எல்லாம் இல்லை. இன்று நாமக்கல்லில் 1000 பேர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லையா? அவர்களைக் கட்டுப்படுத்த ஓர் அறிவிப்பு கூட இருந்ததாகத் தெரியவில்லை. மிகச்சமீபத்தில், டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்க, அங்கு கூடிய சில பத்து மாணவர்களை விரட்டிவிரட்டி வேட்டையாடிய காவல்துறையின் குண்டாந்தடிகளை அக்டோபர் 11 அன்று பராமரிப்புக்காக அனுப்பிவிட்டார்களா? கூடங்குளத்தில் போராட்டம் நடத்திய ஆண்கள், பெண்களை தாக்கிய காவல்துறை இன்று எங்கு போனது? அக்டோபர் 11 அன்று கூடியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும் என்பதல்ல வாதம். அன்று அங்கு கூடியவர்களிடம் காட்டப்பட்ட நீக்குப்போக்கும் பொறுமையும், அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்கியவர்களிடம், தலித் மக்களிடம் காட்டப்படவில்லை என்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். இங்கு ஏன் தடுப்புக் காவல் சட்டம் பிரயோகிக்கப்படவில்லை என்பதே கேள்வி. இந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் போராட்டங்கள் மீது பலப்பல ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பார்த்திருக்கிற நமக்கு, யுவராஜ் விசயத்தில் காட்டப்படும் காவல்துறையின் அணுகுமுறை, சாதியாதிக்க சக்திகள் அஇஅதிமுக அரசின் மீது கொண்டுள்ள செல்வாக்கைக் காட்டுகிறது.
ஜெயலலிதாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறையைச் சேர்ந்த சிலர் சிவகங்கையில் பாலியல் வன்முறை புகார் தர வந்த ஒரு சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அந்தப் பெண்ணை இரண்டு முறை கருத்தடை செய்ய நிர்ப்பந்தித்த அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று இப்போது வெளி வந்துள்ளது. இவர்களா சிறந்தவர்கள், திறமையானவர்கள் என்று ஜெயலலிதா சொல்லி வந்தார்? ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன் என அஇஅதிமுகவினர் போற்றுவது இதைத்தானா?
அந்தச் சிறுமிக்காக வழக்கு தொடுத்த வழக்கறிஞர் மீது, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நீதிமன்ற வளாகத்தின் அருகில் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு வலது கை எலும்பு முறிந்து மருத்துவமனையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் குறிவைக்கப்பட்ட ‘தற்கொலைகளும்’ ‘விபத்துகளும்’ நடக்கும் நிலையைத்தான் ஜெயலலிதா கட்டுப்பாட்டில் இருக்கிற காவல்துறை உருவாக்கியுள்ளது. யுவராஜைப் பிடிக்கத் தயாராக இல்லாத காவல் துறை அல்லது அதற்குத் திறமையில்லாத காவல் துறை, இதுபோன்ற விபத்துக்களை ஏற்பாடு செய்வதில் திறமை பெற்றுள்ளதா?. உத்தரபிரதேசத்தில், ராஜஸ்தானில், மகாராஷ்டிராவில், சட்டிஸ்கரில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது, சமூக ஆர்வலர்கள் விபத்துக்களில் சிக்குவது போன்ற நடைமுறை, தமிழ்நாட்டில் காவல்துறையினராலேயே அறிமுகப்படுத்தப்படுகிறதா? ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஜெயலலிதா தனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றும் இறுதிப் பங்களிப்பா?
அரசின் சாதனைகளை விளக்க விளம்பர வாகனங்கள் தயாராகிவிட்டன. கோகுல்ராஜ், சிவகங்கை சிறுமி, விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு நேர்ந்த அவலங்கள், பார்வையற்றோரைக் கூட விட்டுவைக்காத காவல்துறையின் அத்துமீறல், ஒடுக்குமுறை நடவடிக்கைகள் என மக்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை இந்த சாதனை விளம்பர வாகனங்கள் போக்கிவிட முடியாது.
தமிழ்நாட்டின் கட்சிகள் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகிறார்கள். பாமக, முதல் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மக்கள் கருத்துக்காகக் காத்திருப்பதாகக் கூடச் சொல்கிறது. மாற்றம், முன் னேற்றம் என்று வானத்தைப் பார்க்கிற அன்புமணியோ, ராமதாசோ, கோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி வேண்டும் என்றோ, யுவராஜ் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றோ சொல்லவில்லை.
மரக்காணத்தில் தலித் மக்கள் மீது பாமகவினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாமகவினர் சிலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அந்தக் கைதுகளைத் தொடர்ந்து தடுப்புக் காவல் சட்டம் பற்றிப் பேசினார் ராமதாஸ். தடுப்புக் காவல் சட்டம் தேவையில்லை என்று பாமகவின் 2014 மக்களவை தேர்தல் அறிக்கையில் ராமதாஸ் சொன்னார். 2015 - 2016 நிழல் நிதிநிலை அறிக்கையில் தடுப்புக் காவல் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றார். சில மாதங்களிலேயே அவரது நிலைப்பாட்டில் மாற்றம் வந்துவிட்டது. இப்போது தேசியக் குற்றப் பதிவு அமைப்பு வெளியிட்டுள்ள விவரங்கள், தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் இருப்பவர்களில் 53% பேர் தலித்துகள் என்று சொல்லும்போது, ராமதாசின் குரலைக் கேட்க முடியவில்லை.
இன்னொரு முதல்வர் வேட்பாளர் நடையாய் நடக்கிறார். சாலையோரக் கடைகளில் தோசை சாப்பிடுகிறார். (அங்கு தண்ணீர் குடித்தாரா என்று நமக்குச் சொல்லப்படவில்லை). சகதியில் நடக்கிறார். தரையில் உட்கார்ந்து மக்களுடன் பேசுகிறார். அவர்களிடம் தொலைக்காட்சி இருக்கிறது. நம்மால் பார்க்க முடிகிறது. நமக்குச் சில கேள்விகளும் எழுகின்றன. திருநெல்வேலி இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட்டவர், அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற இடிந்தகரைக்கோ, கூடன்குளத்துக்கோ ஏன் செல்லவில்லை? விதவிதமான மக்களைச் சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசியவர் கோகுல்ராஜ் பற்றியோ, யுவராஜ் கைது செய்யப்பட வேண்டும் என்றோ ஏன் சொல்லவில்லை? விஷ்ணுப்ரியா தற்கொலையில் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும் என்று அறிக்கை விடுக்கப்பட்டபோது கூட கருணாநிதியோ, நடைபயண நாயகன் ஸ்டாலினோ யுவராஜ் பற்றி பேசவில்லை. விஷ்ணுப்ரியா வீட்டுக்குச் சென்று வந்த கனிமொழியும் யுவராஜ் கைது செய்யப்பட வேண்டும் என்று சொல்லவில்லை.
விஷ்ணுப்ரியாவுக்காக நேரில் சென்று வருத்தம் தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனும் இதே வழியில்தான் சென்று திரும்பினார்.
ஜெயலலிதா ஆட்சி பற்றி கடுமையாக விமர்சிக்கும் இவர்கள் மத்தியில், இந்த விசயத்தில் காணப்படும் தனித்ததொரு கருத்தொற்றுமையை மக்கள் கவனிக்காமல் இல்லை. சங் பரிவார் கும்பல்கள் நாட்டின் பிற பகுதிகளில் இசுலாமியரை வேட்டையாடுவதற்கும் தமிழ்நாட்டில் சாதியாதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது நடத்தும் கொலைவெறி தாக்குதல்களுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை.
தலித் மக்களின் வாக்கு வங்கி சாதி இந்துக்களின் வாக்கு வங்கியை விட மிகவும் சிறியது என்பதற்காக அவர்கள் மீதான தாக்குதல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் மீது ஒடுக்குமுறை ஏவுவது, அவர்கள் நலன்களைப் புறக்கணிப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களிடம் நீக்குப்போக்கு காட்டுவது என, தமிழ்நாட்டில் கடுமையான ஜனநாயக விரோத சூழல்தான் நிலவுகிறது.
மணல் திருட்டு, கனிமவளத் திருட்டு, வன வளத் திருட்டு, மக்கள் மத்தியில் சமூகரீதியாக, சாதிரீதியாக பிளவுகள் உருவாக்கி வன்முறை வளர்த்து குளிர் காயும் சக்திகள், பெண்களை வன்முறைக்கு உள்ளாக்குபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்போம் என்று ஆளும் கட்சி உள்ளிட்ட முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் சொல்வார்கள் என்று தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களுக்கு பாடம் புகட்டவே தயாராகி வருகிறார்கள்.
பாஜக மற்றும் அய்க்கிய ஜனதா தள கட்சிகளின் உள்ளீடற்ற நிகழ்ச்சி நிரல்கள்
திபங்கர் பட்டாச்சார்யா
பீகாரில் இது தேர்தல் காலம். மத்தியில் உள்ள ஆட்சி, மாநிலத்தை வென்றெடுக்க அனைத்தும் தழுவிய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 2015 ஜனவரி டில்லி போல், பீகாரும் பாஜக ஊர்திக்கு உரத்த அழுத்தமான மறுப்பு சொல்லுமா என்பதுதான் இப்போது நம் முன் இருக்கிற கேள்வி.
பாஜகவின் பயணத்தை, அல்லது பாஜக தலைவர் ஒருவர் விவரிப்பது போல, அது பிரதிநிதித்துவப்படுத்துகிற புல்டோசரை, பீகார் தடுத்து நிறுத்தும் என்று நாட்டில் உள்ள ஜனநாயக விருப்பம் எதிர்நோக்கியிருக்கிறது. பீகாரில் ஆட்சியைப் பிடித்தவுடன் மேற்கு வங்கத்தை புல்டோசரால் தரைமட்டமாக்கப் போவதாக அந்தத் தலைவர் மிரட்டல் விடுத்திருந்தார். உண்மையில் புல்டோசர் என்ற கற்பனை வடிவம், பாஜகவின் மூர்க்கமான கார்ப்பரேட் உந்துதல் பெற்ற ஆர்எஸ்எஸ்ஸôல் செலுத்தப்படுகிற நிகழ்ச்சிநிரல் கட்டவிழ்த்துவிடப்படுவதை விவரிக்க மிகவும் பொருத்தமானதே. சந்தை அடிப்படைவாதிகள், ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர்கள், பிற தீவிர மோடி ரசிகர்கள் புல்டோசருக்கு ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால், 2014ல் நரேந்திர மோடிக்கு வாக்களித்த பலரும் உள்ளிட்ட பெரும்பான்மையான இந்திய மக்கள் பிரதமரால் கவர்ந்து இழுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பீகாருக்கான போர் இந்தப் பரந்த தேச அளவிலான பின்னணியில்தான் நடக்கிறது.
மக்கள் மத்தியில் ஏமாற்றப்பட்ட உணர்வு அதிகரித்து வருவது பாஜகவுக்குத் தெரிகிறது; அதனால்தான், மோடி, அவரது பீகார் கூட்டம் ஒன்றில், அவரது அரசாங்கத்தின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான காலம் இன்னும் வரவில்லை என்று பகிரங்கமாகச் சொன்னார். 2019 வரை காத்திருக்க வேண்டும் என்று பீகார் மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால், டில்லிக்கு திரும்பிய உடனேயே, தனது அரசாங்கத்தின் மதிப்பெண் அட்டையை ஆர்எஸ்எஸ்ஸ÷க்குக் காட்ட, அவரது சக அமைச்சர்களை வரிசையில் நிற்க வைத்தார்.
பீகார் மக்களுக்கு தமது கட்சிதான் புதிய தேர்வு என்று காட்ட மோடி முயற்சி செய்கிறார். மாநிலத்தில் ஆளும் வாய்ப்பு கிடைக்காத ஒரே கட்சி அவருடைய கட்சிதான் என்று அவர் வாக்காளர்களுக்குச் சொல்லப் பார்க்கிறார். ஆனால், பாஜக, நிதிஷ் குமாருடன் கூட்டணி ஆட்சியில் கடந்த பத்து வருடங்களில் எட்டு வருடங்கள் மாநில அரசை நடத்தியது என்று பீகார் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
மாற்றம் தருவதாகச் சொல்லி மோடி வாக்கு கேட்கிறார் என்றால், நிதிஷ் குமார், லாலுவுடனும் காங்கிசுடனும் சேர்ந்து தனது அரசாங்கத்தை தக்க வைக்கப் பார்க்கிறார். நரேந்திர மோடியும் நிதிஷ் குமாரும் வளர்ச்சி உருவாக்குவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்; மகா முடிப்புகள், ஒளிமயமான எதிர்காலம் ஆகியவற்றை அறிவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவருமே, மக்கள் ஏதுமற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பது, கடுமையான வறுமை என்ற பீகாரின் தற்போதைய யதார்த்தத்துக்கு பொறுப்பேற்கத் தயாராக இல்லை. பீகாரின் பின்தங்கிய நிலையை தொடர்ந்து பரிகசிக்கும் மோடி, பீகாரை குஜராத் போல வளர்த்தெடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். ஆனால், கார்ப்பரேட் உந்துதல் பெற்ற அவரது குஜராத் மாதிரியின் உண்மை நிலையை ஹர்திக் படேல் நிகழ்வுப்போக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
மறுபுறம், நிதிஷ் குமார், தனது பீகார் மாதிரியை மிகச்சரியாக நிறைவேற்றியுள்ளதாகச் சொல்கிறார். 2010ல் மேம்படுத்தப்பட்ட சாலைகளைச் சுட்டிக்காட்டி, அவர் பெரும்பாலும் உள்கட்டுமானம் பற்றி பேசினார்; மின்சாரம் பற்றி வாக்குறுதியளித்தார். ஆனால், சாலைகள் மீண்டும் குண்டும் குழியமாக மாறிவிட்டன; கிராமப்புற பீகாருக்கு இன்னும் மின்சாரம் சென்று சேரவில்லை; எனவே இப்போது உள்கட்டுமானம் பற்றி குறைவாகவும் சமூகத் துறைகள் பற்றி கூடுதலாகவும் பேசுகிறார். பீகாரில் அரசு கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவை சந்திக்கிற நெருக்கடி, அவற்றை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கட்டமைப்பு செயலற்று இருப்பது ஆகியவற்றால் அவரது வளர்ச்சி வாய்வீச்சு களைப்பு தருவதாக, உள்ளீடற்றதாக இருக்கிறது. ஊழலற்ற ஆட்சி தருவதாகச் சொன்ன அவரது மகாவாக்குறுதியும் இப்போது காணவில்லை.
நரேந்திர மோடியும் நிதிஷ் குமாரும் பதில் சொல்லாத முக்கியமான பிரச்சனை, விவசாய சீர்திருத்தம் மற்றும் கவுரவமான வேலை வாய்ப்பு. பீகார் இன்னும் ஒரு மேலோங்கிய கிராமப்புற, விவசாய மாநிலம். ஆனால், நிலச் சீர்திருத்தமும் அரசு முதலீடும் இல்லாமல், விவசாயம் தேங்கிப்போய் இருக்கிறது. நிலத்தை பெரும் தொகைக்கு குத்தகைக்கு எடுத்த, நிலமற்ற வறியவர்கள், சிறுகுத்தகைதாரர்கள் உள்ளிட்ட சாகுபடியாளர்களுக்கு எந்த உரிமையும் இருப்பதில்லை; அவர்களுக்கு எந்த அரசு உதவியும் கிடைப்பதில்லை. சரிந்துவரும் விவசாய வேலைகளால் ஏற்பட்ட இடைவெளியை நூறு நாள் வேலைத் திட்டத்தால் இட்டு நிரப்ப முடியவில்லை. தொழில் என்பது வேலை வாய்ப்பு உருவாக்காத நிலப்பறி என்றே இருக்கிறது. தனியார் மற்றும் பொதுத்துறை சேவைகளில் இருக்கும் பெருமளவிலான பெண்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைப் பாதுகாப்போ, குறைந்தபட்ச ஊதியமோ இல்லை.
நிலம் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள், கவுரவமான வேலை ஆகிய இரண்டும் பீகாரில் இடது முகாம் நிகழ்ச்சிநிரலில் மய்யமானவை. பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்ற தங்களது முந்தைய நன்கறியப்பட்ட வழியில் இருந்து ஒரு பெரிய செயல்தந்திர மாற்றம் செய்துள்ள இககவும் இககமாவும் இந்த முறை ஓர் ஒன்றுபட்ட சுதந்திரமான இடது முகாம் உருவாக்க இகக மாலெவுடன் இணைந்துள்ளன. இந்த நம்பிக்கையூட்டும் அரசியல் மாற்றம், உறுதியான நம்பகத்தன்மைமிக்க மாற்று அரசியல் மய்யமாக இடதுசாரிகள் எழ வேண்டும் என்று கருதிய, இடதுசாரிகளின், களத்தில் இருக்கிற போராடுகிற சக்திகளின் உறுதியை பிரதிபலிக்கிறது. பீகார் அரசியலின் ஒவ்வொரு திருப்பத்திலும் இகக மாலெ உயர்த்திப் பிடித்த, சுதந்திரமான இடதுசாரி அறுதியிடலின் பதாகை, பீகாரின் போராடுகிற இடதுசாரி அடித்தளத்துக்கு ஒரு புதிய உற்சாக உணர்வு தந்து துடிப்பானதாக்கியுள்ளது.
பீகாரில் இடதுசாரிகளின் ஒற்றுமையும் சுதந்திரமும் பாஜகவுக்கு தேர்தல் ஆதாயம் தந்து விடும் என்று கவலைப்படுபவர்களுக்கு நாம் ஒரு விசயத்தை நினைவூட்ட வேண்டும். பீகார் தேர்தல்கள் 16 மாத கால மோடி அரசாங்கம் தந்துள்ள ஏமாற்றம் பற்றியது மட்டும் அல்ல; நல்லாளுகையின் வேத மொழிகள் என்று பெரிதும் பேசப்பட்ட இரண்டு மய்ய தளங்களான வளர்ச்சி, நீதி ஆகியவற்றை கொண்டு வருவதாகச் சொன்ன நிதிஷ் குமார் பீகாரின் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைத்துள்ள துரோகம் பற்றியதும் ஆகும். அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியுடன் இடதுசாரிகள் இணைவது, ஆட்சி மீதுள்ள அதிருப்தி என்று ஆய்வாளர்களும் தேர்தல் குருக்களும் பொதுவாக விவரிக்கிற அரசியல் யதார்த்தத்தில் இருந்து, பாஜக/தேஜகூ தனிப்பட்ட ஆதாயம் பெறுவதற்கே இட்டுச் செல்லும்.
மிகவும் அடிப்படையாக, ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்பும் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய கேள்வி, பீகாரில் பாஜக எவ்வாறு இவ்வளவு பெரிய அடித்தளம் பெற முடிந்தது என்பதுதான். லாலு பிரசாத் அத்வானியின் ரதத்தை தடுத்து நிறுத்தியது, நிதிஷ் குமார் மிகவும் தாமதமாக தமது சுயமரியாதை இயக்கத்தை நரேந்திர மோடியின் ஆணவத்துக்கு எதிராக நிறுத்தியது போன்ற அடையாளவாதம் போதுமானதல்ல. மிகவும் முக்கியமானதொன்று, அடிப்படை ஆதாரமானதொன்று ஏதோ குறைகிறது. இந்த இடத்தில்தான் கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்துதல்கள் நமக்கு ரன்வீர் சேனா பற்றிய முக்கியமான செய்திகளைத் தருகின்றன.
அத்வானிக்கும் பாஜகவுக்கும் எதிரான வீராவேசமிக்க வாய்வீச்சுகள், வறியவர்களை அதிகாரமுடையவர்கள் ஆக்குவது என்ற பெரும்பேச்சுக்கள் ஆகியவற்றுக்குப் பின்னால், பீகாரின் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொடூரமாக தொடர் படுகொலைகளுக்கு ஆளானதற்கு லாலு பிரசாத்தான் தலைமை தாங்கினார்.
நிலப்பிரபுத்துவ சக்திகளை, குறிப்பாக, பாஜக ஆதரவு கொண்ட ரன்வீர் சேனாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பது, நிதிஷ் குமார் ஆட்சியில் இன்னும் அதிர்ச்சியூட்டும் பரிமாணங்கள் பெற்றது. அமீர் தாஸ் ஆணையம் கலைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து, படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்பட்டது ஆகியவற்றில் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. 1997 டிசம்பரில் ஜகனாபாதில் உள்ள லக்ஷ்மண்பூர் பாதேயில் சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ரன்வீர் சேனாவால் படுகொலை செய்யப்பட்டதை ஒட்டியே அமீர் தாஸ் ஆணையம் அமைக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த காலகட்டத்தில், இடதுசாரிகளின் சமூக அடித்தளத்தின் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல்களுடன் சேர்ந்து, இடதுசாரி தலைவர்களும் செயல்வீரர்களும் இலக்காக்கப்பட்டுக் கொல்லபட்டனர்; தண்டிக்கப்பட்டனர். இந்தப் பின்னணியில், பீகாரில் இடதுசாரிகளின் புத்தெழுச்சியே, ஜனநாயகத்துக்கு, நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட, அதிகாரம் பறிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட மக்கள் பிரிவினரின் போராட்டங்களுக்கு மிகவும் திறன்மிக்க அரணாக இருக்கும்.
தாத்ரியில் இசுலாமியர் படுகொலை: மோடி அரசாங்கமும் பாஜகவும்
கொலைபாதக வெறுப்பு அரசியலை வளர்த்து வருகின்றன
மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று புரளி கிளப்பிவிடப்பட்டு, இசுலாமியர் ஒருவர் மதவெறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், மத்திய அரசாங்கமும் ஆளும் கட்சியும் திட்டமிட்ட விதத்தில் வளர்த்துவரும் அபாயகரமான பிரித்தாளும் அரசியலை புரிந்து கொண்டு, அதை புறக்கணிக்க, நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை அழைப்பு ஆகும்.
டில்லிக்கு அருகிலுள்ள மேற்கு உத்தரபிரதேசம், தாத்ரி மாவட்டத்திலுள்ள பிசாடா கிராமத்தில், ஒரு கும்பல் அக்லாக் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவியை, மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, அவரது தாயாரை அடித்து, அக்லாக்கையும் அவரது மகன் தனிஷையும் இழுத்துக் கொண்டு போய் கல், செங்கல், தையல் மிஷின் ஆகியவற்றால் அடித்திருக்கிறது. அந்தத் தாக்குதலில் அக்லாக் கொல்லப்பட்டுவிட்டார். தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனிஷ், மூளையில் இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அக்லாக் ‘பசு மாட்டை திருடி கொன்று விட்டார்’ அல்லது ‘மாட்டுக் கறி சாப்பிட்டார்’ என்று கோவிலில் அறிவிக்கப் பட்டதை நம்பிய கும்பலின் இந்து உணர்வு தூண்டப்பட்டதுதான் இந்தக் கொடூரமான கொலைக்குக் காரணம் என்று பாஜக, சங் பரிவார் தலைவர்கள் சொல்கிறார்கள்.
இசுலாமியர்களைக் கொல்ல, மதவெறியை தூண்டிவிட ‘மாட்டிறைச்சி’ ‘பசு’ ஆகியவை வெறும் காரணங்களாக மட்டுமே பயன்படுத் தப்படுகின்றன. உண்மை, மிகப் பெரிய சதியை, திட்டமிட்ட மதவெறி அணிதிரட்டலை சுட்டிக்காட்டுகிறது. பல தலைகள் கொண்ட சங்பரிவார் நாகத்தின் காவிப்படையில் ஒன்றான ‘சமாதன் சேனா’ நீணட காலமாகவே இந்தப் பகுதியில் மதவெறி நஞ்சைப் பரப்பி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், அக்லாக் கொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் மோடி அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அடுத்தடுத்த அறிக்கைகளும், இந்தப் படுகொலை, பாஜகவின் வெறுப்பு அரசியலின் அங்கமே என்பதை தெளிவுபடுத்துகின்றன.
விஹெச்பி தலைவர் சாத்வி ப்ராசி அக்லாக்குக்கு நேர்ந்ததுதான் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்கு நேரிடும் என எச்சரிக்கிறார். கொல்லப்பட்டவர் குடும்பத்தில் உயிர் பிழைத்திருப்பவர்கள் மீது பசுவதை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றும் உள்ளூர் பாஜக தலைவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். மோடியின் கலாச்சார மந்திரி, அக்லாக் அடித்துக் கொல்லப்பட்டது ஒரு விபத்து என்றும் இதற்கு யாரையும் தண்டிக்க முடியாது என்றும் சொல்கிறார். ஆர்எஸ் எஸ்சின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான தருண் விஜய், தாத்ரி படுகொலை பற்றி மேம்போக்காக குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அக்லாக்கின் 17 வயது மகளுக்கு எதிராக வெறியாட்ட கும்பல் விரலைக் கூட நீட்டவில்லை என்று சொல்லி அந்த கும்பலின் கட்டுக்கோப்பான தன்மையை மகேஷ் சர்மா மட்டுமீறிப் பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் கலாச்சாரம் மாசுபட்டு இருப்பதை சுத்தம் செய்ய புறப்பட்டிருக்கும் கலாச்சார அமைச்சர், அவர் புத்தியிலுள்ள கேடுகெட்ட பாலியல் வன்புணர்ச்சி கலாச்சாரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
பசுவதையை சுற்றி வரும் ஆத்திரமூட்டும் வெறுப்புப் பேச்சின் ஆணி வேரே மோடிதான். நாடாளுமன்றத் தேர்தலின்போது அவரது தேர்தல் உரைகளில், பிராணிகளைக் கொல்வது கொலை என்றும் இறைச்சி தொழிற்சாலையை இளஞ்சிவப்பு புரட்சி என்றும் குறிப்பிட்டு, மாட்டிறைச்சி மற்றும் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு எதிரான உணர்வுகளுக்குத் திரும்பத் திரும்ப தூபமிட்டார்.
இந்தியா போன்றதொரு பரந்து, விரிந்த நாட்டில் பல்வேறு வகையான உணவும் உணவுக் கலாச்சாரமும் உள்ள மக்கள் இருப்பார்கள்.
இறைச்சியையும் மாட்டிறைச்சியையும் ஒதுக்கி வைக்கும் பார்ப்பனிய இந்து முறையை எஞ்சியுள்ள மக்கள் தொகையின் மீது, பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் உணவுத்தடை மூலம் திணிப்பது சர்வாதிபத்தியமே ஆகும். சிறுபான்மையினருக்கு எதிரான கொலை வெறி மதவெறி வன்முறைக்கும், தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்முறைக்கும் இருக்கிற பல்வேறு காரணங்களில் ‘மாட்டிறைச்சி’ என்பதும் ஒன்று என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.
தாத்ரி சம்பவமும் அதற்கு பிந்தைய நிகழ்வுகளும் உத்தரபிரதேச அரசாங்கத்தின், சமாஜ்வாதி கட்சியின் மதச்சார்பின்மையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளன.
உத்தரபிரதேச காவல்துறை, அக்லாக் கும்பலால் அடித்துக் கொல்லப்படுவதை தடுக்காதது மட்டுமல்லாமல் அக்லாக் வீட்டு குளிர்பதனப் பெட்டியிலிருந்து இறைச்சியை எடுத்து அது மாட்டிறைச்சியா இல்ûயா என்பதை அறிய பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையை துவக்கியிருப்பதன் மூலம், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாகவும் மாற்றியுள்ளது. இசுலாமிய இளைஞர்களின் காதல் ஜிகாத் பற்றி கனல் பறக்கப் பேசி முசாபர்நகர் கலவரத்தைப் பற்ற வைத்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், அக்லாக்கை அடித்துக் கொன்ற கும்பல் விடுதலை செய்யப்படவில்லை என்றால் வன்முறை வெடிக்கும் என்று பிசடா கிராமத்தில் வன்முறையைத் தூண்டிவிடும்படி பேசினார். வன்முறையை, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசும் வரலாறு கொண்ட சங்கீத் சோமை, மதவெறி கும்பலால் கொலை நடந்திருக்கக் கூடிய சூழலில், 144 தடை உத்தரவை மீறி, வன்முறையை, கலவரத்தைத் தூண்டும் விதம் பேச, உத்தரபிரதேச அரசாங்க மும் காவல்துறையும் எப்படி அனுமதி அளித்தன? முசாபர்நகர் கலவரங்களிலிருந்து அரசாங்கம் எந்தப் பாடமும் படிக்கவில்லை; எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மதவெறி சக்திகளை கட்டுப்படுத்தவும் எதுவும் செய்யவில்லை.
தாத்ரி படுகொலை தனிப்பட்ட சம்பவம் அல்ல. கவலையளிக்கும் அபாயகரமான வகை மாதிரி நிகழ்வுகளின் ஓர் அங்கம் அது என்பது எல்லாவற்றிலும் தீமைமிக்க அறிகுறியாகும். தாத்ரி கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு கான்பூரில் பாகிஸ்தானிய பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதே தாத்ரி மாவட்டத்தில் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பசு மாட்டைத் திருடினார்கள் என்று காரணம் காட்டி 3 இசுலாமிய இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு உத்தரபிரதேச எல்லையில் உள்ள டில்லியின் நஜாப்காரில் தலித் ஒருவர் பசு மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி அடித்துக் கொல்லப்பட்டார்.
அந்த நேரத்தில் உள்ளூர் பாஜக கவுன்சிலர், அந்த தலித்தை பசுமாட்டைத்
திருடிய இசுலாமியர் என்று தவறாக கும்பல் நினைத்துவிட்டதாக தன்னிலை விளக்கம் அளித்தார். இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை நட்பு பாராட்டுகிறார்கள்/காதலிக்கிறார்கள்/திருமணம் செய்கிறார்கள்/பாலியல் வன்புணர்வு செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டி அவர்களை அடித்துக் கொல்லும் பல சமீபத்திய சம்பவங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் சங் பரிவாரை சேர்ந்தவர்கள் ராஞ்சி மற்றும் பனாரசில் மதவெறிப் பதட்டத்தை உருவாக்கி வருகிறார்கள்.
சமீபத்திய கோப்ராபோஸ்டின் இரகசிய நடவடிக்கையில் சங் பிரிவுகள், ‘காதல் ஜிகாத்’ என்ற போலியான சம்பவத்தை பயன்படுத்தி மதவெறி பதட்டத்தை உருவாக்கி யதை, இந்துத்துவா பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதை, இசுலாமியர் ஒருவரைக் கொல்லத் தவறியபோது சோகமாக இருந்ததை, வெற்றியடைந்த போது அதை கொண்டாடியதை கேமரா பதிவில் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
2002ல் ஹரியானாவின் ஜாஜ்ஜரில் பசு மாட்டைக் கொன்று விட்டார்கள் என காரணம் சொல்லி 5 தலித்துகளைக் கொன்றதை மறக்க முடியுமா? அப்போது ‘தலித்துகளின் உயிர் பசுமாட்டைவிட மலிவானதா?’ என்று விஹெச்பி தலைவர் ஹரிராஜ் கிஷோரிடம் கேட்டபோது ‘பசுமாட்டின் உயிர் விலை மதிப்பற்றது என்று வேதங்கள் சொல்கின்றன’ என்று பதில் அளித்தார்.
இதுபோன்ற கொலைக்கும்பல்கள் வதந்திகளுக்கான தன்னெழுச்சியான பதில்வினை அல்ல - இந்திய சமூக இழையில் திட்டமிட்ட, கட்டமைக்கப்பட்ட வகையில் மதவெறி நஞ்சு உட்செலுத்தப்படுவதை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்பதிலிருந்து இந்து தேசமாக மாற்றுவதை ஒளிவு மறைவின்றி தனது நோக்கமாக அறிவிக்கும் பாஜக மற்றும் சங்பரிவாரின் அரசியலை வளர்ப்பதுதான் இந்த நஞ்சின் நோக்கமாகும். பிரதமர், தனது வெளிநாட்டு பயணங்களில் வெளிப்படையாகவே இந்தியாவின் மதச்சார்பின்மையையும், மதச்சார்பற்ற விழுமியங்களையும் ஏளனம் செய்து வருகிறார்.
மாட்டிறைச்சி சாப்பிடுவதை, அசைவ உணவு சாப்பிடுவதை ‘கொலை’ என்று சொல்லும் பிரதமர், மனிதனை அடித்துக் கொல்வதை ‘கொலை’ என்று கருதுகிறாரா என்பதை நமக்குச் சொல்ல வேண்டும். தாத்ரி கொலை சம்பந்தமாக அவரின் திட்டமிட்ட அமைதியும் கொலை பற்றி சிறு கண்டனம் கூட தெரிவிக்க இயலாமல் போனதும், பிளவுவாத அரசியலை, வெறுப்பு வாய்வீச்சை, மதவெறி வன்முறையை வளர்ப்பதற்கான தனது ஒப்புதலை மோடி அளித்திருக்கிறார் என்று உலகம் முழுவதற்கும் சத்தமாக தெரிவிக்கின்றன.
பாசிசத்தின் பதினைந்து இயல்புகள்
ஜெர்மனி (ஹிட்லர்), இத்தாலி (முசோலினி), ஸ்பெயின் (பிரான்கோ), இந்தோனேசியா (சுகர்தோ), சிலி (பினோசெ) நாடுகளில் இருந்த பாசிச ஆட்சிகள் பற்றி ஆய்வு மேற்கொண்ட லாரன்ஸ் பிரிட் என்ற அரசியல் அறிவியலாளர், பாசிசத்தின் இயல்புகள் என்று பதினான்கு அம்சங்களை வறையறுக்கிறார்.
1. தேசியவாதம் பற்றிய சக்திவாய்ந்த, தொடர்ச்சியான வெளிப்பாடுகள்.
2. மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை புறந்தள்ளுவது.
3. ஒற்றுமைப்படுத்தும் நோக்கத்தின் பெயரால் எதிரிகளை அடையாளம் காண்பது; வீண்பழி சுமத்துவது.
4. ராணுவத்தின், பேரார்வத்துடனான ராணுவவாதத்தின் சர்வவல்லமை.
5. பெண்களை இழிவுபடுத்துவது.
6. ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது.
7. தேசப் பாதுகாப்பு பற்றி அதீத அழுத்தம்.
8. மதமும் ஆளும் மேட்டுக்குடியினரும் பிணைக்கப்பட்டிருப்பது.
9. கார்ப்பரேட்டுகளின் அதிகாரம் பாதுகாக்கப்படுவது.
10. தொழிலாளர்களின் அதிகாரம் ஒடுக்கப்படுவது.
11. அறிவாளிப் பிரிவினர், கலைஞர்கள் புறந்தள்ளப்படுவது; அவர்கள் ஒடுக்கப்படுவது.
12. குற்றம், தண்டனை ஆகியவை பற்றிய அதீத அழுத்தம்.
13. கட்டுக்கடங்காத கூடாநட்பு, ஊழல்.
14. தேர்தல் முறைகேடுகள்.
கிட்டத்தட்ட இந்த பாசிச இயல்புகள் அனைத்தும் நரேந்திர மோடியின் ஆட்சி நடக்கிற இன்றைய இந்தியாவுக்குப் பொருந்திப் போகின்றன. முகமது அக்லாக் படுகொலை மட்டுமே இந்த பதினான்கில் பலவற்றை விளக்கிவிடும்.
இந்தியாவின் குறிப்பியல்பான சாதிய ஒடுக்குமுறையையும் சேர்த்தால் பாசிசத்திற்கு 15 இயல்புகள் இருப்பதாகச் சொல்லலாம்.
இகக மாலெ 10ஆவது மாநில மாநாட்டை
மகத்தான வெற்றி பெறச் செய்வோம்!
திருவள்ளூர் மாவட்ட கட்சி ஊழியர் கூட்டம் உறுதியேற்பு
இகக மாலெயின் 10ஆவது மாநில மாநாட்டுக்கான தயாரிப்பு வேலைகளைத் திட்டமிட திருவள்ளூர் மாவட்ட இகக மாலெ ஊழியர் கூட்டம் அக்டோபர் 4 அன்று நடத்தப்பட்டது. சென்னை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட 10 தோழர்கள் உட்பட 90 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
டிசம்பர் 26 - 28 தேதிகளில் இகக மாலெ 10ஆவது மாநில மாநாட்டை திருவள்ளூர் மாவட்டத்தின் செங்குன்றத்தில் நடத்த கட்சி மாநிலக் குழு முடிவு செய்துள்ள நிலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட ஊழியர்கள் உற்சாகத்து டன் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் அன்புராஜ் கூட்டத்தில் துவக்கவுரை ஆற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் இன்றைய அரசியல் சூழல் பற்றி விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், செப்டம்பர் 20 அன்று நடந்த மாவட்டக் குழு கூட்டத்தில் மாநாட்டு தயாரிப்பு வேலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை முன்வைத்துப் பேசினார்.
மாநாட்டு தயாரிப்பு நோக்கி பின்வரும் அம்சங்கள் முன்வைக்கப்பட்டன:
கட்சியின் 10ஆவது மாநில மாநாட்டுச் செய்தி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
மாநாட்டுக்கான தயாரிப்பு வேலைகளை ஒட்டி ஒட்டுமொத்த மாவட்ட கட்சி அமைப்பையும் அடுத்த கட்ட உறுதிப்படுத்துதலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
கட்சி உறுப்பினர் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் மாநாட்டு தயாரிப்பு வேலையில் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூர் கமிட்டிகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
கிளைகள் அனைத்தும் மாநில மாநாட்டு தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
உள்ளூர் கமிட்டிக் கூட்டங்கள் நடத்துவது, கிளைகள் செயலூக்கப்படுத்தப்படுவது ஆகிய கடமைகளை குறிப்பாக பொறுப்பேற்றுள்ள தோழர்கள் நிறைவேற்ற வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கட்சி மற்றும் வெகு மக்கள் உறுப்பினர் என 1000 பேர் மாநாட்டு வேலைகளில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாநில மாநாடு நடத்த தேவைப்படும் நிதி ரூ.5 லட்சம். கட்சி உறுப்பினர்களிடம், உள்ளூர் கமிட்டிகள் மூலம் பகுதி மக்களிடம், வெகுமக்கள் அமைப்புகள் மூலம் அவற்றின் உறுப்பினர்களிடம், கடை வீதிகளில், ஆதரவாளர்களிடம் என நிதி திரட்ட வேண்டும்.
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ரூ.100 நிதியளிக்க வேண்டும். நிதியளித்த உறுப்பினர் விவரங்கள் கிளைவாரியாக தயாரிக் கப்பட வேண்டும்.
ஒவ்வொரு உள்ளூர் கமிட்டியும் பகுதி மக்கள் மத்தியில் ரூ.50,000 நிதி திரட்ட வேண்டும். அக்டோபர் 5 முதல் மாநாடு நடப்ப தற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை 25 நாட்களில், 5 முதல் 10 பேர் வரை கொண்ட குழுக்கள், நாளொன்றுக்கு 2 மணி நேரம் நிதி திரட்டுவது என்ற அடிப்படையில் இந்த இலக்கை எட்ட வேண்டும். செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத் தயாரிப்பு வேலைகளில் மாவட்டக் குழு கடைபிடித்த இந்த நடைமுறை விளைவு தந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உள்ளூர் கமிட்டிகளில் ஆதரவாளர்கள், அனுதாபிகள், கட்சிக்கு நிதியளிக்கக் கூடிய பிற தனிநபர்களைச் சந்தித்து நிதி திரட்டப்பட வேண்டும். இந்தப் பணிக்கு உள்ளூர் கமிட்டி தோழர்களுக்கு தோழர்கள் எஸ்.ஜானகிராமன், தோழர் எ.எஸ்.குமார் உதவுவார்கள்.
வெகுமக்கள் அமைப்புக்கள் மூலம் திரட்டப்படக் கூடிய நிதி பற்றி கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு உள்ளூர் கமிட்டியும் குறைந்தபட்சம் ஒரு சுவரெழுத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஒரு டிஜிட்டல் தட்டி வைக்க வேண்டும்.
மாநாட்டுக்கான டிஜிட்டல் தட்டிகள் வைக்கும் பொறுப்பை வெகுமக்கள் அமைப்புகள் ஏற்க வேண்டும்.
ரூ.500க்கும் மேல் நிதி தரும் கட்சி ஆதரவாளர்களுக்குத் தர மாநாட்டு முழக்கங்களும் செய்தியும் தாங்கிய 300 வண்ண அட்டைகள் பிரசுரிக்கப்படும்.
இந்த முன்வைப்புக்கள் மீது கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் க.ராமன், உள்ளூர் கமிட்டிச் செயலாளர்கள் தோழர்கள் சீனிவாசன், வெங்கடேசன், மலைராஜ், சாந்தி ஆகியோரும் பிற ஊழியர்களும் கருத்துக்கள் முன்வைத்தனர்.
அனைத்து முன்வைப்புக்களையும் தோழர்கள் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் பேசிய தோழர்களின் கருத்துக்களில் சில இங்கு தரப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் நடக்கும் மாநாட்டை வெற்றிகரமாக்க நாம் அனைவரும் அனைத்தும் தழுவிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ரூ.100 தர வேண்டும் என்று முன்வைப்பு வந்துள்ளது. ஆனால், கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.1,000 நிதியளித்தாலே ரூ.4 லட்சத்துக்கும் மேல் திரட்டி விட முடியும். எனவே கட்சி உறுப்பினரும் ஒவ்வொரும் ரூ.1,000 நிதியளிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
அழிஞ்சிவாக்கம், நெற்குன்றம் உள்ளூர் கமிட்டிகளில் 10 உறுப்பினர்கள் ரூ.1,000, மற்றவர்கள் ரூ.500 நிதியளிப்பது உறுதி செய்யப்படும். நல்லூர், செங்குன்றம் உள்ளூர் கமிட்டிகளிலும் 10 உறுப்பினர்களாவது ரூ,1000 தர வாய்ப்புள்ளது.
வெங்காய கூடை முடையும் தொழிலாளர்கள் 200 பேர் வரை மாநாட்டு வேலைகளில் ஏதாவது ஒரு விதத்தில் பங்கேற்பார்கள். வெங்காய கூடை முடையும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ரூ.20,000 நிதி தரப்படும்.
கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பாக ரூ.10,000 நிதியளிக்கப்படும்.
சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பாக அரிசி திரட்டித் தரப்படும்.
சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ரூ.5,000 நிதியளிக்கப்படும்.
சாலையோர சிறுகடை வியாபாரிகள் சங்கம் மற்றும் அமைப்பாக்கப்பட்ட தொழிலா ளர் சங்கங்களும் நிதியளிக்க திட்டமிடப்படும்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் கூட்டத்திலேயே ரூ.500 முதல் ரூ.2,000 வரை நிதியளிக்க ஊழியர் கூட்டத்திலேயே ரூ.10,000 நிதி திரட்டப்பட்டது.
கட்சி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் பாரதி கூட்டத்தில் வாழ்த்துரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.சேகர் நிறைவுரையாற்றினார்.
தற்போது 20,000 துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு, நிதிதிரட்டல் வேலைகள் அக்டோபர் 5 அன்று துவங்கப்பட்டன. முதல் இரண்டு நாட்களில் ரூ.4,000 வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து அன்றாட அடிப்படையில் மாநாட்டு வேலைகளை எடுத்துச் செல்லும் திருவள்ளூர் மாவட்ட தோழர்கள், நெல்லையில் அக்டோபர் 11 அன்று நடக்கவுள்ள அகில இந்திய மக்கள் மேடையின் மாநாட்டுக்குச் செல்லவும் தயாராகி வருகின்றனர்.
அக்டோபர் 9 அன்று செங்குன்றம் பகுதி உறுப்பினர் பேரவை நடத்தப்பட்டு மாநில மாநாட்டு வேலைகள் திட்டமிடப்பட்டன. மாவட்ட ஊழியர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத தோழர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுமங்கலித் திட்டச் சிறுமிகளின் விடுதலைக்காக
தமிழக தொழிலாளர் வர்க்கம் எழ வேண்டும்!
திருப்பூரின் நூற்பாலையில் இருந்து 23 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமையான சுரண்டல் பற்றிச் சொல்லியுள்ளனர். தமிழ்நாட்டில் சுமங்கலித் திட்டம் என ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லி வரும் முதலாளிகள் இனியாவது வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
காங்கேயத்துக்கு அருகில் உள்ள ஒரு நூற்பாலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சென்ற குழு நடத்திய ஆய்வில், அந்த ஆலையில் வேலை செய்கிற 540 இளம்பெண்களில் 10 பேர் 11 முதல் 14 வயதுள்ள சிறுமிகள். அங்கு அவர்கள் சித்தரவதை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பகுதி நேரம் வேலை, மிகுதி நேரம் படிப்பு என்று சொல்லி விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்கள், ஆலை நிர்வாகத்தினரால் அடிக்கப்படுவதாகவும், தங்கள் அலைபேசியை அவர்கள் பறித்துக்கொண்டதாகவும், பெற்றோருடன் பேசக் கூட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.
காலை 5 மணிக்கு வேலை செய்யத் துவங்கினால் மதியம் 3 மணி வரை அது தொடரும் என்கிறார் 15 வயதுள்ள ஒரு தலித் சிறுமி. தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்ன போது, மாற்று யாராவது வந்தால்தான் செல்ல முடியும் என்று சொன்ன இரக்கமற்ற நிர்வாகத்திடம் அடம் பிடித்து தனது வீட்டில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தனது நிலையைச் சொன்னபோது, அந்தச் சிறுமியின் பாட்டி அனுப்பி வைக்கப்பட்டார். அப்போதும் அந்தச் சிறுமி திருப்பி அனுப்பப்படாததால் தப்ப முயற்சி செய்த அந்தச் சிறுமி பாதுகாப்பு ஊழியரிடம் சிக்கிக் கொள்ள அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அந்தச் சிறுமியை மீட்டி ருக்கின்றனர். ஆலைக்குள் நடந்த கொடூரச் சுரண்டல் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.
மேற்கு மாவட்டங்களில் தமிழகச் சிறுமிகளின் ரத்தத்தை உறிஞ்சும் முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே, உங்களுக்கு அந்தச் சிறுமிகளின் ஓலம் கேட்கிறதா? படிக்க வேண்டிய வயதல்லவா அவர்களுக்கு? தமிழ்நாட்டில் மட்டும் 1983 நூற்பாலைகள் உள்ளன. ஒரே ஒரு ஆலையில் 540 சிறுமிகள் என்றால், மேற்கு மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளிலும் பஞ்சாலைகளிலும் இன்னும் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இது போன்ற சித்திரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? உங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் சொல்வதுபோல், தமிழக மக்கள் நலனுக்காக உழைத்து உழைத்துக் களைத்துப் போனதால், இந்தச் சிறுமிகள் குரல் உங்களுக்கு கேட்காமல் போனதா? தொலை நோக்குத் திட்டம் பற்றி பேசுகிற நீங்கள், மிக அருகில் இருக்கும் இந்தச் சிறுமிகளின் விடுதலைக்கு ஏதாவது திட்டம் முன்வைத்திருக்கிறீர்களா? தமிழகத்தின் சிறுமிகள் கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் யதார்த்தம் பற்றி அறிந்து, உலகம் முழுவதும் இருந்து வந்து திருப்பூரிலும் பிற மேற்கு மாவட்டங்களிலும் சுமங்கலித் திட்டம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தமிழ்நாட்டை கேலி செய்வது உங்களுக்குத் தெரியவில்லையா? தாலிக்குத் தங்கம் தருவதால் இந்த சுமங்கலித் திட்டச் சிறுமிகளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற யதார்த்தம், உங்கள் விலையில்லாத் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று என்று காட்டுவதை நீங்கள் மறுக்க முடியுமா? இந்தச் சிறுமிகளின் இந்த நிலைமைகளை பல வருடங்களாக இது போலவே தொடர விட்டுள்ள, மக்கள் வரிப் பணத்தில் இயங்குகிற தொழிலாளர் துறை, தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகங்கள், மாவட்ட நிர்வாகம் என உங்கள் ஆட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பும் தொழிலாளர் நலன் காக்க, மக்கள் நலன் காக்க, செயல்படவில்லை என்பதை இது போதுமான அளவுக்குக் காட்டுகிறதல்லவா?
நாட்டின் ஜவுளி தொழிலின் தற்போதைய மதிப்பு 108 பில்லியன் டாலர் (ரூ.6,69,600 கோடி). 2021ல் இது 141 பில்லியன் டாலராக (ரூ.8,74,200 கோடி) உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10 கோடி பேர் இந்தத் தொழிலில் வேலை செய்கின்றனர். (தமிழ்நாட்டில் 50 லட்சம் பேர் ஜவுளித் துறையில் வேலை செய்கிறார்கள்). இவர்கள் உழைப்பால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 5% உருவாகிறது. இதில் நாட்டிலேயே தமிழ்நாட்டின் திருப்பூர் மிகப்பெரிய மய்யம். ஜ÷ன் 2014 முதல் ஜவுளித் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியாக ரூ.1,800 கோடி மானியம் தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணி நியமனம் பெற்றுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கை 16,02,447. இது தவிர மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கை 19,65,020 என்று அரசு சொல்கிறது. வேலை நியமனம் நிரந்தரமா, ஒப்பந்தமா என்று சொல்லப்படவில்லை. கிட்டத்தட்ட 3,62,573 தொழிலாளர்கள் என்ன வகை என்றே சொல்லப்படவில்லை. ஒரு வேளை இந்த எண்ணிக்கைக்குள் சுமங்கலித் திட்டச் சிறுமிகள் வரக்கூடும். இவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கும் உற்பத்திப் பொருட்களின் மதிப்பு ரூ.6,19,525.33 கோடி. இதில் இந்தச் சிறுமிகளின் உழைப்பால் உற்பத்தியானப் பொருட்களும் அடக்கம்.
இவ்வளவு பணம் புழங்குகிற தொழில் சூழலில் கவுரவமான வேலை வாய்ப்பு உருவாக்குவது பற்றி மட்டும் மேக் இன் இந்தியா பிரதமரோ, தாயுள்ளம் கொண்டதாகச் சொல்லப்படும் தமிழக முதலமைச்சரோ பேசுவதில்லை. தொழில் அமைச்சர் தங்கமணியும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் தமிழ்நாடு ஈர்த்த முதலீடு பற்றி புள்ளிவிவரங்கள் தருகிறார்கள். பல பத்தாயிரம் கோடிகள் முதலீடு வந்தது, இன்னும் வரவிருக்கிறது என்று ஊரைக் கூட்டி அறிவித்தார்கள். இந்தக் கோடிகள் வரவால் இந்தச் சிறுமிகள் வாழ்வில் மாற்றம் ஏதும் வரவில்லை. 19ஆம் நூற்றாண்டின் மனிதத் தன்மை அற்ற நிலைமைகளில்தான் அவர்கள் வாழ்வு கழிகிறது. பல பத்தாயிரக்கணக்கான சிறுமிகள் கொடூரமான நிலைமைகளில் சுரண்டப்படும் போது நாம் நாகரிகம் அடைந்து விட்டோம் என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை.
இலங்கைத் தமிழர்களுக்காக இங்கு குரல் எழுப்புகிறோம். அவர்களை அணிதிரட்ட வேண்டும் என்று காத்திருக்கவில்லை. மேற்கு மாவட்டங்களில் இருக்கும் சுமங்கலித் திட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகளை அரசியல் நிகழ்ச்சிநிரலில் முன்னிறுத்துவதிலும் நாம் அதே அணுகுமுறையை கையாள முடியும். அவர்களை அணிதிரட்டித்தான் அவர்கள் பிரச்சனைகளை முன்னிறுத்த வேண்டுமென்ற அவசியமில்லை என இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட் டங்கள் காட்டுகின்றன. அந்தத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பயிற்சியாளர்கள் என தெளிவாக வரையறைக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக் கிறது. மாற்றியமைக்கிறது.
இந்த முன்னேற்றம், இங்குள்ள தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அவர்கள் பிரச்சனைகளில், ஏதோ ஒரு விதத்தில் அவர்களை அணிதிரட்ட வேண்டும் என காத்திருக்காமல் தலையிட்டதன் விளைவுதான். தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களில் பல லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முடிவு செய்தால், இந்தச் சிறுமிகளுக்கு விடுதலை கிடைக்கும். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரமான மக்கள் போராட்டங்கள் விளைவாக தமிழக அரசு அமைத்த குழு தந்த பரிந்துரைகள் அடிப்படையில் அக்டோபர் 8 தேதியிட்ட அரசாணை 186 வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் போராட்டங்கள் பொதுவாக வலிமை மிக்கவை. தேர்தல் நேரத்தில் அவற்றுக்கு மேலும் வலிமை கூடுகிறது.
மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் இந்தச் சிறுமிகள் மீது அக்கறை எடுத்து தாமாக முன்வந்து நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள். நிர்ப்பந்தம் தவிர வேறெந்த மொழியும் அவர்களுக்குப் புரிந்ததில்லை. இப்போது இந்தச் சிறுமிகளின் விடுதலை தமிழ் நாட்டின் தொழிலாளர் வர்க்க இயக்கம் அவர்கள் பிரச்சனையை அரசியல் நிகழ்ச்சிநிரலின் மய்யத்துக்குக் கொண்டு வருவதில்தான் இருக்கிறது. பக்கத்து மாநிலத்தில் பெண்கள் தொழிற் சங்கங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்று முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் அந்த முயற்சிகளை முறியடிக்கும், அந்தக் கூற்றுக்களைப் பொய்யாக்கும் நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம், சட்டத் திருத்த மசோதா 47/2008 என்னவாயிற்று என்ற கேள்வியாவது எழுப்பி அரசின் கவனத்தை சுமங்கலித் திட்டச் சிறுமிகளின் படுமோசமான வேலை நிலைமை கள்பால் ஈர்க்க வேண்டும்.
ஓட்டை உடைசல் பேருந்துகளும்
அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களும்
மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தருவதாகச் சொன்ன ஜெயலலிதா, ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடனேயே பேருந்து, மின்சார கட்டணம், பால் விலையை உயர்த்தி ஏமாற்றம் தந்தார். கட்டண உயர்வை, விலை உயர்வை சத்தமாக நியாயப்படுத்தினார். மக்கள் நன்மைக்காகவே இவற்றைச் செய்ததாகச் சொன்னார். பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டால்தான் நட்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகத்தை மீட்க முடியும், உங்கள் சகோதரிக்கு உதவ மாட்டீர்களா என்று தமிழக மக்களிடம் உருக்கமாகக் கேட்டார். அவருடைய சத்தம், உருக்கம் அனைத்துக்கும் மக்கள் போராட்டங்கள் பதில் தந்தன. ஆட்சிக் காலம் முடிகிற நேரத்தில் பேருந்துகளில் பலகைகள் உடைந்து பயணிகள் ஆபத்தில் சிக்கும் நிலைதான் மிஞ்சி இருக்கிறது. அந்த உடைந்துபோன ஓட்டைப் பேருந்துகள் போலத்தான் நான்கரை ஆண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் தமிழகமும் மக்கள் வாழ்க்கையும் மாறிப் போயிருக்கிறது.
மழை காலத்தில் ஒழுகும் பேருந்துக்குள் குடை பிடித்துச் செல்வது தமிழக மக்களுக்கு பழகிவிட்ட விசயம்தான். ஆனால், பேருந்தில் நிற்கும் இடத்தில் கீழே இருக்கும் பலகை விலகி கீழே விழுவோம் என்று, இறங்கும்போது பிடித்துக்கொள்ளும் கதவு கையோடு வரும் என்று நாம் எதிர்ப்பார்க்கவில்லை. தானியங்கி கதவுகள் கொண்ட பேருந்துகள் ஒப்பீட்டுரீதியில் புதியவை. அந்தக் கதவுகள் பயணிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதை விட அவை ஆபத்தாக மாறி விடுகிற நிலைமை வந்துவிட்டது.
டீசல் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட நிதிச் சுமையை மக்கள் மீது சுமத்தாமல் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது என்று போக்குவரத்து அமைச்சர் சொல்கிறார். அமைச்சர் தங்கமணியோ முதலமைச்சர் ஜெயலலிதாவோ தமது சொத்தில் இருந்து எடுத்துக் கொடுக்கவில்லை. மக்கள் வரிப் பணம் அதற்குச் செலவிடப்படுகிறது.
இந்த நான்கரை ஆண்டு காலத்தில் 7,153 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வெறும் 1,267 புதிய பேருந்துகள் மட்டுமே வந்துள்ளன. ஆனால், 1,476 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தபட்டதால் இருக்கிற பேருந்துகளும் புதிய வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் நிலையே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தலை மீது ஏற்றப்பட்ட கட்டண உயர்வு, பேருந்து சேவையில் மாற்றம் கொண்டு வரவில்லை. இந்த காலகட்டத்தில் படியில் தொங்கிக் கொண்டு போனதால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களை நாம் பார்க்க நேர்ந்தது. கூடுதல் பேருந்துகள் விடுவது, சாலைகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கை கள் எடுப்பதற்கு பதில் பாதிக்கப்படும் பயணிகள் மீதே குற்றம் சுமத்தி, படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் தண்டனை என்று சொல்லப்பட்டது.
அரசு போக்குவரத்து கழகங்கள் அனைத்திலுமாகச் சேர்த்து 2011 முதல் 2015 வரை ஆண்டு வருவாய் ரூ.34,266.20 கோடி. இந்த காலகட்டத்தில், அரசு வழங்கிய நிதியுதவி ரூ.4,818.54 கோடி. கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி போக்குவரத்துக் கழகங்கள் கையில் இருந்தது. டீசல், புதிய பேருந்துகள், பராமரிப்பு, ஊழியர்கள் ஊதியம், ஓய்வூதியம் இன்ன பிற சலுகைகள் போன்ற செலவுகள் இந்த கால கட்டத்தில் இந்த ரூ.40,000 கோடியில் நடந்து முடிந்துள்ளன. ஏழரை கோடி பேர் இருக்கிற ஒரு மாநிலத்தில் ஆண்டுக்கு ரூ.10,000 கோடி பொது போக்குவரத்துக்கு செலவு என்பது பெரிய விசயம் இல்லை. இதிலும் ஆண்டுக்கு ரூ.1,200 கோடிதான் மானியம். மீதமுள்ளது போக்குவரத்து கழகங்களின் வருமானமே.
கடந்த அய்ந்து ஆண்டுகளில், அதாவது நிர்வாகத் திறன்மிக்கவர் என்று சொல்லப்படும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மட்டும், வசூல் செய்யப்படாமல் விடப்பட்ட வரி ரூ.8,733 கோடி. 2014 மார்ச் மட்டும் தமிழ்நாட்டின் மொத்த வரி பாக்கி ரூ.24,000 கோடி வர வேண்டிய வரியை வசூலிக்காமல், பற்றாக்குறை, கடன் என்று சொல்லி மக்களுக்கான சேவைகளில் கை வைக்கிறார்கள்.
தனியார் பேருந்துகளுக்கும் அரசு பேருந்து களுக்கும் மாவட்டத்துக்குள் இயங்கும் வாகனங்களில் கட்டண வேறுபாடு மிக அதிகம் என்று சொல்ல முடியாது. தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும்போது, அரசு பேருந்துகள் நட்டத்தில் இயங்குவதாகச் சொல்வதை ஏற்க முடியாது. நட்டத்தில் இயங்கும் நிலைக்கு கொண்டு சென்ற மேல்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இது வரை நாம் எங்கும் கேட்கவில்லை. புனலூரில் பலகை விலகி பெண் விழுந்த நிகழ்விலும் ஊழியர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் பேருந்துகள் பராமரிப்பில் பெரும் சிக்கனம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. சாமான்ய மக்கள் பயன்படுத்துவதுதானே, எப்படியிருந்தால் என்ன என்று அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். பேருந்துகள் பராமரிப்புக்கு உதிரி பாகங்கள், புதிய பேருந்துகள் வாங்குவது ஆகியவற்றை சற்று அருகில் சென்று பார்த்தால், இன்னொரு ஊழல் வெளியில் வரக் கூடும். கூடன் குளம் அணுஉலையில் தரமற்ற உதிரிபாகங்கள் பொருத்தப்படும் போது, சாதாரண பேருந்து, அதில் செய்ய மாட்டார்களா? உதிரி பாகங்கள் தரமற்றவையாக இருப்பதால் வாகனங்கள் விரைவில் பழுதடைந்து விடுகின்றன என்றும் பராமரிக்கப்படாத, குண்டும் குழியுமான சாலைகளால் நிலைமை மேலும் மோசமாகிறது என்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள்.
பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் நீண்டதொரு சோகக் கதை இருக்கிறது. தினக் கூலி பெற்றுக்கொண்டு வேலை செய்யும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வேலைப் பளு, ஓட்டை பேருந்துகளை சமாளித்தாக வேண்டிய நிர்ப்பந்தம், மிகக்குறைவான ஊதியம் என மிகப்பெரிய சோகம் அது. இவ்வளவு துன்பத்திலும், இருக்கிற தரக்குறைவான பேருந்துகளில், படுமோசமான சாலைகளில் தமிழக மக்களை ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு அழைத்துச் செல்லும் அவர்கள் நிச்சயம் மகான்கள்.
தமிழ்நாட்டில்தான் கட்டணம் குறைவு, தமிழ்நாட்டில்தான் சிறந்த பேருந்து வசதி என்று ஜெயலலிதாவும் கருணாநிதியும் தத்தம் ஆட்சி காலத்தில் சொல்லிக் கொள்வதுண்டு. உண்மைதான். ஒப்பீட்டுரீதியில் தமிழ்நாட்டில் பேருந்து வசதி மேம்பட்டதுதான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்கள் சொந்தப் பணத்தில் உருவாக்கியவை அல்ல மாநிலத்தின் போக்குவரத்து கழகங்கள். தமிழ்நாடு, பேருந்து வசதி மட்டுமல்ல, வேறு பல உள்கட்டுமான வசதிகளிலும் மேம்பட்டதுதான். ஏனென்றால் தமிழ்நாடுதான் வேகமாக நகர்மயமாகி வரும் மாநிலம். தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதலிடம். இந்த அம்சங்களுக்கு ஏற்பவே பிற உள்கட்டுமான வசதிகள் உருவாகின்றன. அதையும் பறித்து மக்கள் வாழ்வை அன்றாட ஆபத்தில் தள்ளியிருப்பதுதான் அஇஅதிமுக ஆட்சியின் அய்ந்தாண்டு கால சாதனை.
பசுமை நெடுஞ்சாலை அல்ல
பரங்கியர் நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை எங்கும் பச்சை மரங்கள். காற்றில் இருக்கும் மாசு கரைந்து போகும். கோடை வெப்பத்தைத் தணிக்க சாலைகள் இருபுறமும் குளு குளு சோலைகள். அதிகரிக்கும் வாகனங்களால் உண்டாகும் ஒலி மாசு ஒழித்து கட்டப்படும். மண் சரிவுகள் இல்லாத மலைப் பாதைகள். கண்களை கூச வைக்காத வாகன விளக்குகள். காற்றையும் கதிர் வீச்சையும் கட்டுப்படுத்தல். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு. நெடுஞ்சாலைகளை வெறும் போக்குவரத்திற்கானதாகப் பார்க்கக் கூடாது. அவை இந்த நாட்டின் சுற்றுப்புறச் சூழல், சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது..... இப்படியெல்லாம் பேசுவது மோடி அரசின் புதிய பசுமை நெடுஞ்சாலை (மரம் வளர்த்தல், மாற்றி நடுதல், அழகுபடுத்துதல், பாதுகாத்தல்) திட்டம் 2015.
தங்க நாற்கரச் சாலை, அறுங்கரச் சாலை, எண்கரச் சாலை என்று ஏகத்திற்கும் சாலைகளில் ஆண்டாண்டு காலமாய் இருக்கும் மரங்க ளையெல்லாம் வெட்டிவிட்டு வெட்டவெளிகளாய் நெடுஞ்சாலைகளை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் பசுமை நெடுஞ்சாலை பற்றி பேசுகிறார்கள். சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நடப் போகிறார்களாம். முதற்கட்டமாக 6000 கிலோ மீட்டருக்கு மரங்களை நெடுஞ்சாலைகளில் நடப்போகிறார்களாம்.
‘இது வரை இந்தத் திட்டத்திற்கு பணம் இல்லாததால் அமல்படுத்த முடியவில்லை. இனிமேல் அந்தக் கவலை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நெடுஞ்சாலைகள் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் தொகையில் 1% மரம் வளர்ப்பிற்காக ஒதுக்கப்படும். ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கவனம் செலுத்தும்’ என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் செயலாளர் விஜய் சிப்பர் கூறுகிறார். 6,000 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தேûயான நிலத்தில் ஏற்கனவே 12,000 ஹெக்டேர் நிலம் கை வசம் உள்ளது. தேசிய காடுகள் கொள்கைத் திட்டம் நாட்டில் 33% காடுகள் காட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. இப்போது 22% காடுகள்தான் உள்ளன. அதைச் சரிகட்டுவதற்கு காடுகளுக்கு வெளியே மரங்களை நடுவதின் மூலம் அதை ஈடு செய்ய முடியும் என்றும் கூறுகிறார்.
இதைக் கேட்கும்போது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? காடுகளில் உள்ள மிருகங்கள் தண்ணீர் இன்றி, உணவின்றி நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. அவை நாட்டிற்குள் வருவதைத் தடுக்க திட்டங்கள் வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. மிருகங்கள் வாழும் இடங்களில் மனிதர்கள் சுற்றுலாத் தலங்களை அமைத்து, காடுகளை ஆக்கிரமித்து, வன விலங்குகளின் இடத்தை பிடுங்கிக் கொள்வதால் விலங்குகள் அங்கிருந்து வெளியேறுகின்றன. வனங்களை, காடுகளை காடுகளாக காப்பாற்றுவதற்குப் பதிலாக நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்த்து பசுமையாக்கப் போகிறார்களாம்.
காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. சந்தன மரங்களும் சவ்வாது மரங்களும் செம்மரங்களும் வெட்டப்பட்டு மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் ஹாங்காங்கிற்கும் கடத்தப்படுகின்றன. நாட்டில் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பயன்படுத்தி பழங்குடி மக்களை வேலைக்கு அழைத்துச் சென்று மரம் வெட்ட வைத்து, பின்னர் சிறையில் அடைப் பதும் கொன்று குவிப்பதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இவர்கள் இப்போது நெடுஞ் சாலைகளில் மரங்கள் வளர்க்கப் போகிறோம். நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒப்பந்தம் எடுப்பவர்கள் மரம் வளர்ப்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் வேகமாக அவசரச் சட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆலாய் பறந்தார். நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த பிறகு அந்தச் சட்டத்தை நாங்கள் இப்போது அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் மோடிக்கு ஏற்பட்டது. ஆனால், நாடு நாடாகச் சென்று இந்திய நாட்டின் நிலம், நீர், கனிம வளங்களையும் மனித வளங்களையும் கூவிக் கூவி விற்று வரும் மோடிக்கு நில அபகரிப்புச் சட்டத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பால் பன்னாட்டு முதலாளிகளுக்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்காக, முதலாளிகளுக்கு தேவைப்படும் நிலங்களை வேறு வழியில் மக்களிடம் இருந்து பிடுங்கி அவர்களுக்குக் கொடுப்பதற்கு புதிய திட்டங்கள் போடுகிறார்கள். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகச் செயலாளர் விஜய் சிப்பர், மரம் நடுவதற்கான நிலம் கையகப்படுத் தும் வேலையிலும் இந்த அமைச்சகம் கவனம் செலுத்தும் என்று சொல்வதில் இருந்தே, இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நாட்டை பசுமையாக்க வேண்டுமென்றால் முதலில் காடுகளுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் செல்வது நிறுத்தப்பட வேண்டும். கனிம வளங்களைக் கொள்ளையடிக்க காடுகளுக்குள் செல்லும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, காடுகளை மட்டுமே நம்பி காலங்கால மாய் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை மாவோயிஸ்டுகள் என்று சொல்லி அடித்துக் கொன்று விரட்டுகிறது ஆளும் அரசுகள். மலைகளில் உள்ள மரங்களை அழிக்கிறார்கள். மலைவாழ் மக்களை விரட்டுகிறார்கள். விலங்குகள் எல்லாம் வெளியேறி வருகின்றன. இயற்கையாக அமைந்துள்ள காடுகளை அழித்துக் கொண்டிருக்கும் இவர்கள் செயற்கையாகக் காடுகளை உருவாக்கப்போகிறார்களாம்.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளில் ஏன் மரங்கள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யவில்லை. காசு இல்லை என்று சொல்பவர்கள் நெடுஞ்சாலைகளை அமைத்த நிறுவனங்கள் டோல் கேட் அமைத்து கோடி கோடியாய் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களிடம் ஏன் கேட்கவில்லை. அவர்கள் அடிக்கும் கொள்ளையைக் கொண்டே பல ஆயிரம் கோடி மரங்கள் நெடுஞ்சாலைகள் எங்கும் நட முடியுமே. டோல் கேட் அநியாயங்கள், அடிக்கும் கொள்ளை, அட்டூழியங்கள் தாங்க முடியாமல்தானே நாடு முழுவதும் லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். நெடுஞ்சாலைகளை அமைத்தவர்கள் அவர்கள் செலவு செய்த தொகைக்கும் மேலே டோல் கேட் மூலமாக குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நெடுஞ்சாலைகள் அமைக்க செலவு செய்தது எவ்வளவு? அதை எவ்வளவு காலத்திற்குள் ஈடு செய்ய முடியும் என்ற கணக்கு வழக்கு இல்லாமலா ஒப்பந்தங்கள் அந்த நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன? கார்ப்பரேட் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காகவே நெடுஞ்சாலை வேலைகள் எல்லாம் நேரடியாக அரசே செய்யாமல் காண்ட்ராக்ட் முறையில் முதலாளிகளிடம் கொடுக்கப்படுகின்றன. இப்போது புதிதாக நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்களின் கையில் சாலைகளும் நிலங்களும் தாரை வார்க்கப்பட இருக்கின்றன.
இவர்கள் மக்களைத் திட்டமிட்டே ஏமாற்றுகிறார்கள்; இருப்பதைக் காப்பாற்ற தயாராக இல்லாதவர்கள் புதிதாக ஒன்றை மக்களுக்காக உருவாக்கப் போகிறேன் என்று சொல்வது மாபெரும் பித்தலாட்டம். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாஜகவின் தலைவராக இருந்தபோது, மகாராஷ்டிரா மாநிலத்தில் நீர்ப்பாசன ஊழலில் சிக்கியதால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய பூர்வி குழும நிறுவனங்கள் பல முறைகேடுகளில் ஈடுபட்டதால் பல்வேறு கேள்விகள் எழுந்தன. நான் யோக்கியன் என்னை அரசியல் காழ்ப்பு ணர்ச்சியால் சிக்க வைக்கப்பார்க்கிறார்கள் என்று கத்தினார் கட்கரி. ஆனாலும் பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். டெல்லியில் இ ரிக்ஷா கொண்டு வர வேண்டும் என்றார். அவரின் நிறுவனத்தின் லாபதிற்காக இப்படிச் சொல்கிறார் என்று குரல்கள் வெளிவந்தன. அப்படிப்பட்ட கட்கரிதான் இன்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர். அவர்தான் இந்த நாட்டை பசுமையாக ஆக்கப் போகிறேன் அதற்காக நெடுஞ்சாலைகள் எங்கும் மரங்களை வளர்க்கப் போகிறேன் என்கிறார். மத்திய, மாநில ஆட்சியாளர்கள் அடுத்த கொள்ளைக்கு தயாராகிவிட்டனர்.
கார்ப்பரேட் மதவெறி பாசிசத்திற்கு எதிராக
அகில இந்திய மக்கள் மேடையின் முதல் மாநில மாநாடு
திருநெல்வேலியில் அகில இந்திய மக்கள் மேடையின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 11 அன்று நடைபெற்றது. நெல்லை தோழர்கள் மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
மாநிலம் முழுவதிலும் இருந்து அகில இந்திய மக்கள் மேடையின் உறுப்பு அமைப்புகளின் முன்னணி ஊழியர்களும், ஜனநாயக சக்திகளும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட மாநாட்டிற்கு அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய குழு உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமை வகித்தார்.
மாநாட்டு அரங்கில் மதவெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட முற்போக்கு, பகுத்தறிவுவாதிகளான தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. மனித உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடி குரல் கொடுத்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், பாலகோபால், கண்ணபிரான் ஆகியோரின் படங்களுடன் பெரியார், அம்பேத்கர், ஆதிவாசி மக்களின் தலைவரான பிர்சா முண்டா, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அணுசக்திக்கெதிரான போராட்டத்தில் முன்நின்ற பரபுல் பித்வாய் மற்றும் பகத்சிங் படங்கள் இடம் பெற்றிருந்தன. இவர்களோடு நெல்லை மண்ணில் சாதி ஆதிக்க வெறிக்கு பலியான தோழர் சுப்பு, கூடன்குளம் போராட்டத் தியாகிகள் ஆகியோருக்கு மாநாடு அஞ்சலி செலுத்தியது.
மாநாட்டில் முனைவர் வசந்திதேவி, மேனாள் துணை வேந்தர்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் முனைவர் சுப.உதயகுமார், மக்கள் சிவில் உரிமைக் கழக மாநில பொதுச் செயலாளர் தோழர்.ச.பாலமுருகன், அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் அ.சந்திரமோகன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் தோழர் சிம்சன், மதுரை மதுரா கல்லூரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர்.முரளி, நாகர்கோவில் இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் மேனாள் முதன்மை விஞ்ஞானி முனைவர் லால்மோகன், என்டியுஅய் தொழிற்சங்க தலைவர் சுஜாதா மோடி, தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் கூட்டமைப்பின் செயல் தலைவர் தோழர்.டி.திருமலைச்சாமி, கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், மக்கள் ஜனநாயக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தோழர்.முகிலன், ஆதி தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் தோழர் மு.கதிரவன், புதுச்சேரியை சேர்ந்த அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் மங்கையர்ச் செல்வன், சேலம் தலித் ஆய்வு மய்யத்தின் தோழர் அறிவழகன், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தோழர் தீபக் நாதன், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தோழர் அப்துல் ரஹ்மான், நெல்லை காஞ்சனை திரைப்பட இயக்கத்தின் தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர். ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் தோழர் பாரதி, அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் பாண்டியராஜன் கலந்து கொண்டனர். இகக(மாலெ) மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம் மாநாட்டு நிறைவுரையாற்றினார். ஏஅய்சிசிடியு மாநில சிறப்பு தலைவர் தோழர் ஜவகர் தீர்மானங்களை முன் மொழிந்தார்.
அகில இந்திய மக்கள் மேடையின் மாநில ஆலோசனைக் குழு, மாநில பிரச்சாரக் குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்களின் பட்டியலை மத்திய பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் முன்மொழிய அதை மாநாடு ஏற்றுக் கொண்டது.
மாநாட்டை அகில இந்திய மக்கள் மேடையின் மத்தியச் செயலக உறுப்பினர் தோழர் கவிதா கிருஷ்ணன் துவக்கி வைத்து உரையாற்றினார்.
தோழர் கவிதா கிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து:
ஆட்சியாளர்களின் மதவெறியையும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளையும் தனியாக பிரித்து பலரும் பார்ப்பது துரதிஷ்டவசமானது. இன்றைய ஆட்சி இரண்டும் கலந்த ஒரு முழுமையாக இருக்கிறது. நாட்டில் ஏற்கனவே சிதைந்து போயிருக்கிற ஜனநாயகம் மேலும் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறது.
நாட்டின் பிரதமர் மோடி எப்போதும் வெளிநாட்டுப் பயணங்களில் இருக்கிறார். அவர் இந்தியாவை விற்பதற்காகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார். அங்கே போய் இந்தியாவில் நிலம் மலிவானது, உழைப்பு மலிவானது, உயிர் மலிவானது என்று சொல்லி வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கிறார். இங்கு வந்து தொழில் செய்யலாம். மலிவான உழைப்பைப் பெறலாம், சுற்றுச் சுழலை மாசுபடுத்தலாம் மக்கள் உயிரைப் பறிக்கலாம் என்ற போபால் மாதிரியை நிறுவனமயமாக்க முயற்சிக்கிறார்.
இந்த மதவெறி சக்திகள் கலாச்சார காவலர்களாகவும் வலம் வருகிறார்கள். முற்போக்கு, பகுத்தறிவுவாதி கள் பலரை கொன்று போட்டார்கள். தமிழகத்தில் எழுத்தாளர் பெருமாள்முருகனின் பேனா கொல்லப்பட்டது. சாதி, மத வெறுப்புணர்வை ஊதி வளர்ப்பதன் மூலம் நாட்டில் பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன.
மதச்சார்பற்ற கட்சிகள் என்று சொல்லிக் கொள்கிற பல கட்சிகள் பல நேரங்களில் இந்துத்துவ கட்சிகளோடு சமரசம் செய்து கொள்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு எல்லாவற்றையும் விற்பது என்ற அரசியல் பொருளாதாரம் இவர்களை இணைக்கும் கண்ணியாக உள்ளது.
இன்றைய காலம் சவால்மிக்க காலம். ஆனாலும் நமக்கு நம்பிக்கை, உற்சாகம் அளிக்கும் பல சம்பவங்கள் நடப்பதை பார்க்கிறோம். நில அபகரிப்பு மசோதாவை அரசாங்கத்தால் சட்டமாக்க முடியவில்லை. புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் அரசாங்கத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. சென்னை பெரியார் - அம்பேத்கார் படிப்பு வட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை எழுச்சிமிக்க போராட்டத்தால் திரும்பப் பெறப்பட்டது என பல நம்பிக்கை தரும் போராட்டங்கள் நடக்கின்றன.
அகில இந்திய மக்கள் மேடை அரசியல் கட்சி சார்பற்ற அமைப்பு அல்ல. இதில் கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், காந்தியவாதிகள் என பலரும் இருக்கின்றனர். பல வேறுபாடுகளைக் கொண்டவர்கள், கருத்து விவாதங்களை தொடர்பவர்கள் என பலரும் இருப்பது இதன் பலமே அன்றி பலவீனம் அல்ல. இந்த சிறப்பான மாநாடு வருங்காலங்களில் வெற்றிகளை ஈட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்கள் போராட்டங்களை உள்ளூர்மட்ட அளவில் சுருக்குவதற்கு எதிராக அவற்றை ஒருங்கிணைக்க ஒரு புள்ளி தேவைப்படுகிறது. அந்தப் பணியை அகில இந்திய மக்கள் மேடை செய்யும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வசந்திதேவி பேசியதில் இருந்து:
இந்துத்துவா தன்னை ஒற்றை முகம் கொண்டதாக காட்டிக் கொள்ளப்பார்க்கிறது. இந்துத்துவவாதிகளுக்கு தலித்துகள் மீது கரிசனம் வந்திருக்கிறது. காரணம் இசுலாமியர்களை தாக்குவதற்கு அவர்களுக்கு இப்போது அடியாட்கள் தேவைப்படுகிறார்கள். இந்துத்துவா சக்திகளின் நடிப்பை, ராஜதந்திரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதம் என்ற ஒன்றே 19ம் நூற்றாண்டு வரை கிடையாது. இப்போது தாய் மதத்திற்கு திரும்ப சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள். ஒருவர் வேறு மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பினால் அவரை எந்த சாதியில் வைப்பீர்கள்? பிராமணராக ஏற்றுக் கொள்வீர்களா?
அந்தக் காலங்களில் இசக்கியம்மன், காளியம்மன், மாரியம்மன் என்று பெண் தெய்வங்கள்தான் வழிபாட்டுத் தெய்வங்களாக இருந்தன. இந்துமதம் என்று ஆனபின் ஆண் தெய்வங்களே முதன்மை இடங்களை பிடித்தன.
சமூகத்தில் சாதி பிரமிடு, பொருளாதார பிரமிடு இருப்பதைப் போலவே கல்வி பிரமிடும் உருவாகியிருக்கிறது. 1970 வரை கல்வியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் சம வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது கவுரவக் குறைவு என்று நினைக்கிறார்கள்.
கருத்தொற்றுமையை உருவாக்குவதே (மேனுபேக்சரிங் கன்சென்ட்) கல்வியின் நோக்கம் என்று நோம் சோம்ஸ்கி சொன்னார். அரசுப் பள்ளிகளில் படிப்பது கவுரவக் குறைச்சல் என்ற கருத்தை உருவாக்கி விட்டார்கள். இன்று உலகத்தின் மேலை நாடுகள் உட்பட பல நாடுகளிலும் பொதுப் பள்ளி மூலமே கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலக் கல்வி மீது நம் மக்களுக்கு நம்பிக்கை அளித்தது யார்? இதில் சூழ்ச்சி இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் உழைக்கும் மக்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை என்றார். ஆனால் இந்திய சமூகத்தில் மக்களுக்கு சாதிய கவுரவம் இருக்கிறது அதை மக்கள் இழக்கத் தயாராக இல்லை. சமூகத்திலுள்ள இவ்வாறான பல பிரச்சனைகள் மாற்றப்பட வேண்டும் என்ற கவலை எனக்கு இருக்கிறது.
காஞ்சனை சீனிவாசன் பேசியதில் இருந்து:
இந்த அரங்கத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படம் வைக்கப்பட்டிருப்பதை மாற்றத்தின் அறிகுறியாக நான் பார்க்கிறேன். இன்று விவசாயம் விஷமாகிவிட்டது. நாம் எல்லோருமாக சேர்ந்து பரந்து விரிந்த மக்களிடையே நம்மாழ்வாரின் இயக்கத்தை முன்னுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மனித குலத்தின் மீதான மிகப் பெரிய ஆபத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது.
அகில இந்திய மக்கள் மேடை என்ற வானவில் அமைப்பு சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை முன்னெடுத்துச் செல்ல நிச்சயம் உதவும் என்றார்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் முனைவர் சுப.உதயகுமார் பேசியதில் இருந்து:
நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளை போய்க் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தாது மணலும் ஆற்று மணலும் இங்கே கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ஒடுக்குமுறை நடந்து வருகிறது. ஒரு தலித் குடும்பத்தையே நிர்வாணப்படுத்தி அத்துமீறி நடந்து கொள்வது இந்த நாட்டில் நடக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்று காரணம் சொல்லி ஒருவரை அடித்துக் கொல்ல முடிகிறது. இதில் எதைப் பற்றியும் பிரதமர் வாய் திறக்க மறுக்கிறார். 2000 இசுலாமியர்களை கொலை செய்த பாசிசவாதிகளிடம் நாம் வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.
இப்படி நம் நாட்டில் உள்ள பல்வேறு நோய்கள் பற்றி பலருக்கும் தெரியும். இப்போதைய தேவை இது போன்ற நோய்கள் எப்படி பரவுகின்றன அதை தடுக்க வழி என்ன என்பது போன்ற ப்ரோக்னோசிஸ் என்ற முன்கணிப்பு நடவடிக்கைகளே. இங்கே அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் ஆற்றை தூர் வாரச் சொன்னால், தூர்வாருகிறோம் என்ற பெயரில் ஆற்றின் இன்னொரு பகுதியிலிருந்து மணலை கொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள்.
கூடங்குளத்தில் என்ன நடக்கிறது? அணு உலை இயங்கவே இல்லை. 40 கோடி ரூபாய்க்கு டீசல் வாங்கப்பட்டிருக்கிறது. 2 மாத காலம் வருடாந்திர பராமரிப்பு என்று சொல்கிறார்கள். அப்போது உற்பத்தி கிடையாது. ஒரு அலகுதான் உற்பத்தி துவக்கியது என்கிறார்கள். 2வது அலகு முடங்கிப் போய் கிடக்கிறது. இப்போது 3, 4 அலகுகள் நிறுவப்படும் என்கிறார்கள். பணி ஓய்வுக்குப் பின்னும் எம்.ஆர்.சீனிவாசன் வருகிறார். எதையெதையோ பேசுகிறார். நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட விவரங்கள் இதுவரை தரப்படவில்லை. மேல் முறையீடு, அதற்கு மேல் முறையீடு என்று டெல்லி வரை போய், அவர்களும் இதுபோன்ற விவரங்களை பல நாடுகள் கொடுத்திருக் கின்றன என்றும் கொடுக்கவும் சொல்லிவிட்டார்கள். அணு உலை செயல்பாடு பற்றி விசாரிக்க போடப்பட்ட இனியன் குழு அறிக்கை என்னவாயிற்று? ஆகவேதான் நாங்கள் கூடங்குளம் அணு உலை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கோருகிறோம்.
4 ஆண்டுகளாக அறவழியிலே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். 20 பெண்கள் தேசத்துக்கு எதிராக போர் தொடுத்ததாக சொல்லப்பட்டு அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவோயிஸ்ட் இயக்கத்தவர் மீது கூட இவ்வளவு வழக்குகள் கிடையாது, மொத்தம் போடப்பட்ட 380 வழக்குகளில் 240 வழக்குகள் உச்சநீதிமன்ற தலையீட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது 140 வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதே எங்கள் பகுதியில் குறை பிரசவம் நடக்க ஆரம்பித்துவிட்டது. பல நோய்கள் பரவி வருகின்றன. கூடங்குளம் எரி பொருளின் வெப்பம் தணிய 7 - 12 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். அது வரை எப்படி பாதுகாக்கப் போகிறார்கள்? பல கேள்விகள் பதில் அளிக்கப்படாமலேயே உள்ளன. எங்கள் பகுதி மக்களும் விடுவதாய் இல்லை. எந்த வழக்குகளையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம். எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருக்கிறோம். 2016 தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பதில் சொல்லியே ஆக வேண்டும் என நிர்ப்பந்திப்போம் என்றார்.