நேபாள மக்களுக்கு வாழ்த்துக்கள்
ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் சாசனத்தை நிறைவேற்றியதற்காக இகக (மாலெ) நேபாள மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது. ஒரு நிலப்பிரபுத்துவ முடியாட்சிக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த பல வீரமிக்க நேபாள குடிமக்களுக்கு தனது மரியாதையை தெரிவித்துக் கொள்கிறது. நேபாளம் இன்று நிறைவேற்றியிருக்கிற அரசியல் சாசனம், பல பத்தாண்டுகளுக்கு நீடித்த அந்த மகத்தான குடியரசு இயக்கத்துக்கு செய்யப்படும் மரியாதையாகும்.
அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் நேபாளத்தின் இறையாளுமை தொடர்பான இயக்கப்போக்கில் தலையிட, நேபாளத்தில் மறைமுகமாக கலகத்தை தூண்ட மோடி அரசாங்கம் மேற்கொள்ளும் ஆணவம் மிக்க பெரியண்ணன் தன்மை கொண்ட முயற்சிகளை இகக (மாலெ) கண்டிக்கிறது. நேபாளம் தன்னை ஓர் இந்து அரசாக அறிவித்துக் கொள்ள வேண்டும், பசுவதையை, மதமாற்றத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேபாளத்தின் தலைவர்களுக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்யாநாத் கடிதம் எழுதுவது போன்ற, நேபாளம் ஒரு மதச்சார்பற்ற குடியரசாக இருப்பதற்கு மாறாக, இந்து நாடாக வேண்டும் என்ற இந்திய ஆளும் கட்சியின் வஞ்சக முயற்சிகளும் கண்டனத்துக்குரியவை.
இந்த புதிய மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு பயணத்தைத் துவக்கவிருக்கும் நேபாள மக்களுக்கு இகக (மாலெ) தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
மத்திய கமிட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை
வழக்கறிஞர்கள் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
நீதித்துறையின் ஊழலை எதிர்த்த வழக்கறிஞர்கள் உரிமத்தை தடை செய்தது ரத்து செய்யப்பட வேண்டும், மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அளித்துள்ள இடத்தைத் திரும்பப் பெறும் முடிவு ரத்து செய்யப்பட வேண்டும், உயர்நீதி மன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் என்று போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், வழக்கறிஞர்கள் இல்லையேல் நீதிமன்றங்கள் இல்லை, போராடும் வழக்கறிஞர்களோடு பேசி தீர்வு காண வேண்டும், மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை குற்றவாளிகள் போல் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும், நீதித்துறையில், ஊழல், சர்வாதிகாரம் மதவெறி, சாதிவெறிக்கு இடம் இருக்க முடியாது என்ற முழக்கங்களோடு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் செப்டம்பர் 26 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது. சங்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர் அதியமான தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி கண்டன உரையாற்றினார். இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் மோகன், முனுசாமி ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நரபலி செய்தவர்கள், தற்கொலைகளைத் தூண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
இககமா சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் மறியல் செய்தபோது அவரைக் காவலர்கள் தாக்கியது தொடர்பாக பேசிய ஜெயலலிதா, பாலகிருஷ்ணன் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை பலவந்தமாக அப்புறப்படுத்த வேண்டியதாயிற்று, அவரைக் காவலர்கள் தாக்கவில்லை என்று சொன்னவர், போராட்டங்கள் நடத்தாமல் இருந்தால், இது போல் நடக்காது என்றார். அதிமுககாரர்கள் நடத்துகிற அத்துமீறல்களுக்குப் பெயர் விசுவாசம்; மற்றவர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காகப் போராடினால் அத்துமீறல்.
காணாமல் போன குன்றுகள், குளங்கள் பற்றிய உண்மை அறிய உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட ஆணையரே கூட சத்தியாகிரகம் செய்ய வேண்டிய அவல நிலைதான் இந்த ஆட்சியில் உள்ளது. மதுரை கிரானைட் கொள்ளை ஒட்டுமொத்த இந்தியாவையே பதறச் செய்தது. பதினாராயிரம் கோடி ரூபாய் சட்ட விரோத கிரானைட் சுரங்கத் தொழிலால், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளையால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிரடியாக அறிவித்தார் மே 2012ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம். அதனால், அவர் கோஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அமைச்சர் கோகுல இந்திராவின் அராஜகச் செயல்களுக்கு அடிபணிய மறுத்ததால் அவர் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், மக்கள் போராட்டங்களின் விளைவால், கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்தார் சகாயத்தைத் தொடர்ந்து ஆட்சியராக வந்த அன்சுல் மிஸ்ரா. மு.க.அழகிரியின் மகன்கூட தலைமறைவானார். அன்சுல் மிஸ்ராவும் அங்கிருந்து மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், கிரானைட் கொள்ளையைக் கணக்கெடுக்க சென்னை உயர்நீதிமன்றம், சகாயத்தை ஆணையராக நியமித்தது. அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட்டது. சகாயம் கண்டு பிடித்த கிரானைட் கொள்ளை பற்றி பேசி ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா, சகாயத்தை சட்ட ஆணையராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். விசாரணை முடிந்துவிட்டது, புதிதாக விசாரிக்கத் தேவையில்லை என்றார். நீதிமன்றம் செவி மடுக்காததால், சகாயம் நவம்பர் 2014ல் விசாரணையை தொடங்கினார்.
துவக்கத்தில் இருந்தே சட்ட ஆணையர் சகாயத்திற்கு தமிழக அரசின்
அதிகாரிகளும் காவல்துறையினரும் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை. கிரானைட் கொள்ளையர்களிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தன. எங்களுக்கு வேலை இல்லை வருமானம் இல்லை என்று பிஆர்பி ஆலைத் தொழிலாளர்கள் என்று சிலரை ஏற்பாடு செய்து சகாயத்திற்கு எதிராக ஆர்ப்பட்டாம் கூட செய்தார்கள். சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் சகாயம் விசாரணையைத் தொடர்ந்தார்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல், மலைகள், ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் காணாமல் போனது அடுத்தது அம்பலமானது. கிரானைட் குவாரிக்கு அருகில் குடியிருந்தவர்கள் எவ்வாறு பிஆர்பி ஆட்களால் விரட்டப்பட்டனர் என்றும், குவாரிக்கு அருகில் குடியிருந்த காவலர்களின் வீடுகள் கூட வெடி வைத்து சிதைக்கப்பட்டு பின்னர் எப்படி அவர்களால் அபகரிக்கப்பட்டது என்பது பற்றியும் புகார்கள் சகாயத்தின் முன் குவிந்தன. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தொல்லியல் தலங்களைக்கூட குதறி எடுத்து துவம்சம் செய்திருக்கிறார்கள். மலைக் குன்றுகள் பள்ளத்தாக்குகளாக மாறிப் போய் இருக்கின்றன. கண்மாய்கள் கற்பாறைகளாகக் காட்சி தருகின்றன. புகார் கொடுக்க வந்தவர்களை காவல்துறையினரே மிரட்டினார்கள். சகாயத்தின் 20 கட்ட விசாரணையில் அவ ருக்கும் அவரது குழுவினருக்கும் 5 முறைக்கும் மேல் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
எல்லா மிரட்டல்களையும் இடையூறுகளையும் கடந்து வந்த சகாயம் குழு தனது அறிக்கையை 2015 செப்படம்பர் 15 அன்று வழங்கவிருந்த நிலையில், பிஆர் பழனிச்சாமியிடம் ஓட்டுநராகப் பணி புரிந்த சேவற்கொடியோன், சகாயத்திடம் அதிர்ச்சியைத் தரும் தகவல் ஒன்றைக் தருகிறார். கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுக்கப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளார்கள், தான் அழைத்து வந்த மன நலம் பாதிக்கப்பட்டவர்களை, நரபலி தந்து புதைத்துள்ளார்கள் என்று சொல்லி அந்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.
சகாயம் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, வருவாய்துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் அவருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆட்களை அழைத்து வராமல் எந்திரங்களைக் கொண்டு வராமல் இழுத்தடித்தார்கள். இடத்தைத் தோண்டாமல் இருக்க சாக்குப்போக்கு சொன்னார்கள். சளைக்காத சகாயம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். இரவு முழுவதும் இடுகாட்டிலேயே கட்டில் போட்டு படுத்தார். ஒரு பொறுப்பான அதிகாரி இப்படி செய்யலாமா, உத்தரவு போட்டால் செய்யப் போகிறார்கள், ஊடகங்களில் தன்னை பிரபலமாகக் காட்டிக் கொள்ளும் உத்தி என்று கனிம வளக் கொள்ளையர்களுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் காவி அரசியலுக்கும் வக்காலத்து வாங்குபவர்களும் விமர்சனம் செய்தார்கள்.
அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது மட்டுமின்றி, அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் அளித்தது. தோண்டத் தோண்ட மனித மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள். இது சுடுகாடு, சின்னமலம்பட்டியில் இயற்கையாக இறந்தவர்களைப் புதைத்த இடம், அவர்களின் எலும்புகள் இவை என்று புரளி கிளப்பப்பட்டது. ஆனால், இந்தச் சுடுகாடு இருக்கும் ஆற்றுப் பகுதியை பிஆர்பி நிறுவனம் ஆக்கிரமித்து 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது, ஆடு மாடு மேய்க்கக் கூட அந்த இடத்திற்குள் யாரும் போக முடியாது, மீறிப் போனால் அடித்து விரட்டப்படுவார்கள், ஊர் மக்கள் பிணம் அங்கு எப்படி வரும் என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள்.
5 அடி தோண்டினால் போதாது. இன்னும் ஆழமாகத் தோண்ட வேண்டும், வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து வேலை பார்த்தவர்கள் பலர் மர்மமான முறையில் இறந்து போனார்கள், அவர்கள் உடல் என்னவாயின என்பது மர்மம் என்றார் சேவற்கொடியோன். ஆழம் போகப்போக அரைகுறையாகப் புதைக்கப்பட்டவர்கள் எட்டு பேரின் எலும்புக் கூடுகள் அடுத்தடுத்து வந்தன. இதில் சிறுமியின் எலும்புக் கூடும் அடக்கம். மலைகளையும் கண்மாய்களையும் காணாமல் செய்தவர்கள் மனிதர்களையும் காணாமல் செய்துள்ளார்கள்.
ஊர் மக்களை மிரட்டியும் விரட்டியும் ஊழல்கள் பல செய்தும் பல அறிவியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மலையை வெட்டி, பள்ளத்தாக்குகளை மூடியவர்கள், பல டிசைன்களில் கிரானைட் கற்களைத் தயார் செய்து விற்று நம்பர் ஒன் இடத்தினைப் பிடித்த கயவர்கள் காசு பார்ப்பதற்காக இந்த கணினி யுகத்தில் காட்டுமிராண்டிகள் காலத்து நரபலியையும் செய்துள்ளார்கள்.
இந்த நரபலிக் கொடுமைகளுக்கு பெரியாரின் வழித்தோன்றல்கள்,
அண்ணாவின் அறவழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஆதரவளித்து வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. செப்டம்பர் 17 பெரியார் பிறந்த தினத்தன்று கீழவளவு காவல் நிலையத்திற்கு நரபலி விசாரணைக்காக வந்த பிஆர் பழனிச்சாமிக்கு ஏக வரவேற்பாம். காவல்நிலையம் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவோடு இருந்ததாம். அவரை விழுந்து பணிந்து கவனித்து தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்களாம் காவல்நிலைய அதிகாரிகள். சில காவல்துறை அதிகாரிகள், பிஆர்பியிடம், தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள், வேறு வழி இல்லாமல்தான் உங்கள் மீது வழக்கு போட்டோம், எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்கிறீர்கள் என்று வருத்தப்பட்டனர் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
காவல்துறையினருக்கு பாராட்டும் சலுகைகளும் ஜெயலலிதா சட்டசபையில் மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொண்டிருந்த வேளையில், 42 வயது ஜெயலலிதா (நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவருக்கு அவர் பெற்றோர் அன்றைய எம்ஜிஆர் ஜெயலலிதா மீது கொண்ட பிரியத்தில் வைத்த பெயராக இருக்கலாம்) கீழவளவு காவல் நிலையத்தில், மூன்று ஆண்டுகளாக என் கணவரைக் காணவில்லை, அவரையும் நரபலி கொடுத்து புதைத்திருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார். விசாரணை தொடர்கிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே பல காலம் இழுத்தடித்த, பிஆர்பிக்கு சலாம் போடும் காவல் அதிகாரிகள் விசாரணையை நடத்துகிறார்கள். இந்த ஜெயலலிதாவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.
ஒரு புறம் சகாயம் போன்ற அதிகாரிகள் ஊழல் செய்தவர்களை, குற்றவாளிகளை, உண்மையை உலகத்திற்குத் தெரியச் செய்ய சுடுகாட்டில் படுத்து போராட வேண்டிய நிலை இருக்கிறது. நேர்மையான காவல் அதிகாரிகள், கொலைகாரர்களை உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சாதி ஆதிக்க வெறியர்களின், காவல்துறை உயர் அதிகாரிகளின் துன்புறுத்தலால், காவல் துறை குடும்பத்தைச் சேர்ந்த காவல்துறையை நேசித்த இளம் வயது காவல்துறை அதிகாரி அநியாயமாக மரணமடைந்துள்ளார். 27 வயது விஷ்ணுப்பிரியா, தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் கொலையை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி. பத்து பக்கங்களுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. அவர் எழுதி வைத்திருந்தாகச் சொல்லப்படும் கடிதத்தை காவல் அதிகாரிகள் தவணை முறையில் வெளியிடுகிறார்கள். அதிலும் இன்னும் நான்கு பக்கங்கள் வெளியில் காட்டப்படவேயில்லை.
தலித் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கவுண்டர் இனப் பெண்ணைக் காதலித்தார் என்பதற்காக அவரை அந்தப் பெண்ணின் முன்னாலேயே கடத்தி சென்று பின்னர் தலையைத் துண்டித்து தண்டவாளத்தில் போட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் யுவராஜை இன்று வரை கைது செய்யவில்லை. காதலர்களைக் கண்டால் அடித்து உதைத்து வழிப்பறி செய்வதும் கவுண்டர் பெண்ணை தலித் இளைஞன் காதலித்தால் அவரைக் கொல்வதையும் தொழிலாகக் கொண்டுள்ள யுவராஜ் தைரியமாக வாட்ஸ்அப்பில் வீடியோ வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை கைது செய்யவிடாமல் வேறு சிலரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரும் மற்ற உயர்அதிகாரிகளும் விஷ்ணுப்பிரியாவிற்கு நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. சாதியாதிக்கக் கொலைக் குற்றவாளியைக் கைது செய்ய முயற்சித்த அவரை, சாதி பார்த்து வேலை செய்கிறாயா என்று கேட்டு மேல் அதிகாரிகள் துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
அவர் தனது நண்பரும் சக போலீஸ் அதிகாரியுமான கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரியிடம் இது பற்றிச் சொல்லி அழுதுள்ளார். மகேஸ்வரி இந்த விசயங்களை வெளிப்படையாகச் சொல்லி, பெண் காவலர்களுக்கு, காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு, அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு காவல்துறையில் நடக்கும் கொடுமைகளை அம்பலப்படுத்தினார். தனக்கும் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்) இதுபோன்ற நிலை ஏற்படும் என்பதையும் தெரிந்தே அவர் பேசினார். இப்போது அவர் புதுச்சேரி சிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது நண்பர் விஷ்ணுப்பிரியாவின் பிரிவைத் தாங்க முடியாத மகேஸ்வரி மனமுடைந்து மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்று செய்தி வராமல் இருக்க வேண்டும்.
விஷ்ணுப்பிரியாவின் மரணம் தொடர்பான விசாரணையை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என அதிமுக பாமக தவிர எல்லாக் கட்சியினரும் சொல்லும் போது ஜெயலலிதா, மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை தேவையில்லை, எல்லா வழக்குகளையும் அவர்கள் சரியாக விசாரித்தார்கள் என்று சொல்லமுடியாது, தமிழக சிபிசிஅய்டி போலீஸôரே நடுநிலைமையோடு விசாரிப்பார்கள் என்று சட்டசபையில் அறிவிக்கிறார்.
விஷ்ணுப்பிரியா பயிற்சி முடித்து வேலையில் சேர்ந்தபோது பணி நியமன ஆணையை ஜெயலலிதாவிடம் நேரில் பெற்றார். காவல் துறையில் இயற்கை மரணமுற்றவர்களுக்குக் கூட இரங்கல் செய்தியும் இழப்பீடும் அறிவிக்கும் ஜெயலலிதா, தன் கையால் பணி நியமன ஆணை பெற்ற விஷ்ணுப்பிரியாவிற்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
விஷ்ணுப்பிரியாவின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லாத இரண்டு கட்சிகள்
அதிமுகவும் பாமகவும். ஜெயலலிதா எந்தப் பக்கம் நிற்கிறார்? நேர்மையின் பக்கமா? அநீதியின் பக்கமா? சாதி ஆதிக்க சக்திகள் பக்கமா? ஒடுக்கப்பட்ட இன மக்கள் பக்கமா? இது சொல்லாமலே புரியும்.
தீண்டாமைக் கொடுமை, சாதிய வேறுபாடுகள், சாதி அடிப்படையில் தமிழ்நாடு முழுக்கப் பரவி வருகிற வன்முறைக் கலாச்சாரம், சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள், இவர்கள் எல்லாருமே விஷ்ணுப்பிரியாவின் மரணத்திற்குக் காரணம், சாதி சார்ந்த கொலைகள் அதிகரித்து வருகின்றன, அது காவல்துறைக்குள்ளேயும் பலவித சிக்கல்ளை உருவாக்கி வருகிறது, விஷ்ணுப் பிரியாவின் மரணத்தை ஒரு தனிப்பட்ட வழக்காகப் பார்க்காமல், இதுவரை நடந்துள்ள பெண் காவலர்களின் கொலைகள் மற்றும் மரணங்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும், அதற்கு எந்தவிதமான நிழலும் படியாத, நடுநிலையான, தெளிவான, தீர்க்கமான ஒரு விசாரணை வேண்டும், சிபிஅய் விசாரணைதான் அதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று முன்னாள் டிஜிபி திலகவதி சொல்கிறார்.
விஷ்ணுப்பிரியா டிஎஸ்பியாக இருந்தவர். அவரின் மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அவரின் உயர் அதிகாரிகள். அந்த உயர் அதிகாரிகளை தமிழக காவல்துறையின் மற்றொரு பிரிவினர் எப்படி விசாரணை செய்வார்கள்? அது எப்படி நேர்மையானதாக இருக்க முடியும்? எஸ்பி செந்தில் குமார் சொல்லும் வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு அதை அப்படியே அறிக்கையாக்கி வழக்கை முடிக்கத்தான் முயற்சிப்பார்கள்.
விஷ்ணுப்பிரியாவிற்கும் திருக்கோஷ்டியூர் குருக்கள் ஒருவருக்கும் காதல் என்றும் அந்தக் குருக்களைக் காணவில்லை என்றும் தற்கொலைக்குக் காரணம் காதல் என்றும் திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். வழக்கம் போல் குற்றத்தை பெண்ணின் மீதே சுமத்தப் பார்க்கிறார்கள். கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும் என் மரணத்திற்கும் சம்மந்தம் இல்லை, நான் காவல் துறைக்கு லாயக்கற்றவள் என்று விஷ்ணுப்ரியா தன் கடிதத்தில் எழுதி வைத்துள்ளதாகச் சொல்கிறது காவல்துறை. இப்படித்தான் கோகுல் ராஜ÷ம் காதல் மீதே வெறுப்பு ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்திருந்ததாக காவல்துறை சொன்னது. 2.48 மணிக்கு டிஎஸ்பி மகேஸ்வரியிடம் பேசிய விஷணுப்பிரியா, 3.30 மணி சுமாருக்கு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. 10 அல்லது 15 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அந்த நேரத்திற்குள் எழுதியிருக்க முடியுமா என பல கேள்விகள் எழுகின்றன.
பகுத்தறிவுப் பெரியார் பூமியில், சாதி ஆணவக் கொலைகளும் சாதி ஆதிக்க வெறியும் நரபலிக் கொடுமைகளும் தலைவிரித்தாடுகின்றன. ஆட்சியில் இருப்பவர்களும் அரியணை ஏறத் துடிப்பவர்களும் நேர்மையானவர்களை பாதுகாக்கத் தயாராக இல்லை.
விஷ்ணுப்ரியா மரணத்தில்
மத்திய புலனாய்வு விசாரணை வேண்டும்!
விஷ்ணுப்ரியா மரணத்தில் மத்திய புலனாய்வு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் செப்டம்பர் 21 அன்று இகக மாலெ ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, செப்டம்பர் 18 அன்று குமாரபாளையத்தில் இகக மாலெ தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளரும் மாநிலக் குழு உறுப்பினருமான தோழர் எ.கோவிந்தராஜ் கண்டன உரையாற்றினார்.
இந்தியா இசுலாமிய நாடாகிறதாம்!
காம்ரேட்
சங்பரிவார், ஹிட்லரின் பாசிசம் போல், பொருளாதார நெருக்கடியால் ஏற்படுகிற ஒவ்வொரு பிரச்சனையையும் பயன்படுத்திக் கொண்டு, தனது இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன் நகர்த்துகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பு பின்னிருந்து இயக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை, நேரடியாகவே அரசுக்கு வழிகாட்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸôல் ஆர்எஸ்எஸ்சே ஆர்எஸ்எஸ்ஸ÷க்காக நடத்துகிற ஆட்சியாக, நரேந்திர மோடி ஆட்சி மாறி உள்ளது. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை, பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் பள்ளி தரும் முன்னேற்ற அட்டையைக் காட்டுவது போல், தாமாகவே, தாம் இந்திய அரசாங்கத்தை எப்படி நடத்துகிறார்கள் என, ஆர்எஸ்எஸ்சுக்கு அறிக்கை அளித்துள்ளனர். அகண்ட பாரதம் வேண்டுபவர்கள், இசுலாமியர் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்பவர்கள், தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்கள், ஓரஞ்சாரத்தில் இருப்பவர்கள் அல்ல, அவர்களே இந்திய அரசாங்கத்தின் எசமானர்கள் என நிரூபணமாகி உள்ளது.
இந்தப் பின்னணியில் டெல்லியில், நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம் ஆட்டம் ஒன்றும் அரங்கேறி உள்ளது. இசுலாமிய சாம்ராஜியம், இசுலாமிய ஆக்கிரமிப்பாளர்கள் என்பதற்கெல்லாம் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட அவுரங்கசேப் பெயரிலான வீதி, இப்போது அப்துல் கலாம் வீதியாகி உள்ளது. ஒரு கையில் பகவத் கீதை ஒரு கையில் அணு குண்டு என வீணை வாசிக்கும் இந்திய கலாச்சார தேசியவாதச் சின்னமாக ஆர்எஸ்எஸ்ஸôல் கருதப்பட்ட, சங்பரிவாரால் காணப்பட்ட, ‘நல்ல முஸ்லிம்’ அப்துல் கலாம் பெயரில் அந்த வீதி மாற்றப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர், விஞ்ஞான தொழில்நுட்ப நாட்டம் கொண்ட, இளைய இந்தியாவின் முன்னேற்றக் கனவின் அடையாளம் என்பவை எல்லாம், ஆர்எஸ்எஸ் பேசும் கதை அல்ல. பொதுப் புத்தியில் அவுரங்கசேப், சகிப்புத் தன்மை இல்லாத கொடுங்கோலர் என்றிருக்கும் எண்ணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாப்ரி மசூதி இடிப்பதை எப்படிச் சாதித்தார்களோ அதே போல் அவுரங்கசேப் பெயரை அகற்றி, இந்திய வரலாற்றை இந்துத்துவா வரலாறு ஆக்குகிறார்கள்.
அதே நேரம் குஜராத்திலிருந்து வந்துள்ள இந்துத்துவா பாதுஷா, மிகவும் சாமர்த்தியமாக ‘அப்துல் கலாம்’ என்ற ‘நல்ல முஸ்லிம்’ பிம்பத்தையும், சங் பரிவார் வழிகாட்டுதல்படி, பயன்படுத்துகிறார். 2014 தேர்தல் வெற்றி, தமக்கு இந்த உரிமம் கொடுத்துள்ளதாக, நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.
ஊழல் எதிர்ப்புப் போராளி என்ற, ஒற்றை அடையாளம் தாண்டாத அர்விந்த் கெஜ்ரிவால், அவுரங்கசேப் வீதி பெயர் மாற்றத்தை முதலில் அறிவித்து ஆனந்தக் கூத்தாடுகிறார். வடக்கே அவுரங்கசேப் வீதியின் பெயர் மாற்றுகிறார்கள் என்றால், தெற்கில் திப்பு சுல்தான் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள். பன்சாரேயை, கல்புர்கியைக் கொன்றவர்கள், ஹைதர் அலியும் திப்பு சுல்தானும், பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளிகளாகக் காணப்படுவதை மறந்து விடுகிறார்கள். திப்பு சுல்தான் சகிப்புத் தன்மையற்றவர் என்பதற்குப் பதிலாக மத நல்லிணக்கத்தை மதித்தவர் என்பதாகவே, பொது வெளியில் மக்கள் மத்தியில் வரலாறு பதிந்துள்ளதைக் காணத் தவறி, ஆழம் தெரியாமல் காலை விடுகிறார்கள். தெற்கு வரை மொகலாய ஆட்சி நீளவில்லை. ஹைதர் அலி திப்பு சுல்தான் வரலாறு வெகுமக்கள் சிந்தை கவர்ந்த வரலாறு என்பது காணத் தக்கதாகும். (ஹைதர் அலியையும் திப்பு சுல்தானையும் நில உடைமை எதிர்ப்பாளர்களாக கம்யூனிஸ்ட்களாகக் காணாமலேயே, அன்றைய காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்தவர்களாகக் காண முடியும்தானே).
இப்போது இந்து முன்னணி ரஜினிகாந்தை திப்பு சுல்தானாக நடிக்காதே என மிரட்டுகிறது. திப்பு சுல்தான், தமிழர்கள் விரோதி, இந்துக்கள் விரோதி என்று சொல்கிறது. இந்து முன்னணி தமிழக அரசியல் நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிக்க, ஒரு போதும் தமிழ்நாடு அனுமதிக்கக் கூடாது.
பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டங்களை ஒழித்துக் கட்டப் பார்த்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்கள், இப்போது திப்பு சுல்தான் படம் கூடாது என, இசுலாமிய எதிர்ப்பு நஞ்சு பரப்ப, அனுமதிக்கக் கூடாது.
ஹார்திக் படேல், உயர்சாதியினர்க்கு இட ஒதுக்கீடு இல்லையேல், எவருக்கும் இட ஒதுக்கீடு வேண்டாம் என்கிறார். குஜராத்தின் வளர்ச்சி மாதிரியை, நரேந்திர மோடி நாட்டிற்கு முன்நிறுத்திய மாதிரியை, குஜராத்தில் இருந்தே, சங் பரிவார் முகாமிலிருந்தே, கேள்விக்குள்ளாக்குகிறார்கள். அப்போதும், அந்தக் குரல், இட ஒதுக்கீட்டிற்கெதிரான மேல்சாதிக் குரலாக, மேட்டிமைவாதமாக, ஓங்கி ஒலிக்கிறது. கேரள நம்பூதிரிகளும் கேரள தமிழ் பிராமணர்களும் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும், இல்லையேல் இட ஒதுக்கீடே வேண்டாம் எனக் கோருகிறார்கள். அரபிக் கடல் வழியாக, ஹார்திக் படேலும் கேரள உயர்சாதியினரும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இணைகிறார்கள். ஹார்திக் படேலை கேரளாவிற்கு அழைத்துள்ளார்கள். இந்தப் பின்னணியில்தான், ஆர்எஸ்எஸ், பீகார் தேர்தலுக்கு முன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்வோம் எனச் சொல்லி, அது பீகார் தேர்தலில் பாஜகவுக்கு ஆபத்தாக மாற, மோடி நாட்டில் இல்லாத போது, பதறிப்போன பாஜக மத்திய அமைச்சர்கள், இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மறுபரிசீலனையும் இல்லை என, அவசர அவசரமாக அறிவித்துள்ளனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியல் சாதியினர் பழங்குடியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை விவரங்களை, இன்று வரை ஆட்சியாளர்கள் அறிவிக்காமலே உள்ளனர். அவர்கள் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது. எழக்கூடிய கோரிக்கைகளைத் தவிர்க்க தள்ளிப்போட முயற்சிக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் திட்டமிட்டு மதரீதியான துருவச் சேர்க்கையை அமித் ஷா தலைமையில் உருவாக்கி 71 நாடாளுமன்ற இடங்களை வாரிச் சென்றவர்கள், இப்போது பீகார் தேர்தலுக்கு முன்பாக 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப் பின் மதரீதியான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
ஊடகங்கள், இந்து பெரும்பான்மை நாடு என்ற நிலையே போய்விடும், இந்துக்கள் குறைகின்றனர், இசுலாமியர்கள் அதிகமாகின்றனர் என்றெல்லாம் அபாய அறிவிப்புச் செய்தி வெளியிட, சங்பரிவார், குறுகிய கால அளவில் பீகார் தேர்தல் வெற்றியும், நீண்ட கால அளவில் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் முன்னேற்றமும், காணத் துடிக்கிறது.
2001ல் இந்திய மக்கள் தொகை 102.86 கோடி. இது 2011ல் 121.08 கோடியாக உயர்ந்தது. இதன்படி 2011ல் இந்துக்கள் 79.8 கோடி பேர், இசுலாமியர் 14.2 கோடி பேர், கிறிஸ்துவர் 2.3 கோடி பேர், சீக்கியர் 1.7 கோடி பேர், புத்த மதத்தினர் 84 லட்சம் பேர், ஜைன மதத்தினர் 41 லட்சம் பேர், இதர மதத்தினர் 79 லட்சம் பேர், மதம் குறிப்பிடாதோர் 29 லட்சம் பேர் உள்ளனர். இந்தப் புள்ளிவிவரப்படி 2001 முதல் 2011 வரை இசுலாமிய மக்கள் தொகை 24.1% அதாவது வருடத்திற்கு 2.4% வீதமும் இந்து மக்கள் தொகை 16.8% அதாவது வருடத்திற்கு 1.68% வீதமும் உயர்ந்துள்ளது. ஹம் பாஞ்ச் ஹமாரி பச்சீஸ் (நாம் அய்வர் நமக்கு 25) எனவும், இசுலாமியப் படுகொலைக்குப் பிறகு இசுலாமியர்கள் தங்கி இருந்த அகதி முகாம்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எனவும், அப்போது தேர்தல் பிரச்சாரம் செய்த குஜராத் முதல்வர் மோடி, இப்போது இந்தியாவில் பிரதமராகி உள்ளபோது, சங்பரிவார் இந்த மக்கள் தொகை விவரங்களை எப்படிச் சித்தரிப்பார்கள்? அதுவும் 2014 தேர்தல் வெற்றிகள் ஆண்டு, 2015 போராட்டங்களின் ஆண்டு, நில மசோதாவில் பின்வாங்கிய ஆண்டு என மாறியுள்ளபோது, பீகார் தேர்தலில் வெற்றி பெற வெறித்தனமாக முயற்சிக்க மாட்டார்களா?
இசுலாமியர்கள் கணிசமாக இல்லாத பீகார் மாவட்டங்களில், கடந்த 6 மாதங்களில், தாழ்ந்த மட்ட மத மோதல்கள் 400 நிகழ்ந்துள்ளன. விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பான துர்கா வாஹினி பீகாரில் வீடுவீடாகப் போய் பங்களாதேஷ் முஸ்லிம் ஊடுருவல், இந்து மக்கள் தொகை 80 கோடிக்கு குறைகிறது, முஸ்லிம்கள் அதிகமாகி இந்துக்கள் குறைந்து, ‘நாம், ‘நம் நாட்டிலேயே சிறுபான்மையினராய் ஆகப் போகிறோம்’ என்ற பிரச்சாரத்தைத் துவக்கி விட்டனர். இவர்கள் பீதியைப் பரப்புகிறார்கள். முழு விவரங்களையும் உண்மைகளையும் சொல்ல மறுக்கிறார்கள். திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
1991 முதல் 2001 வரை இந்து மக்கள் தொகை ஆண்டுக்கு 1.99% என உயர்ந்தபோது 2001 - 2011ல் ஆண்டுக்கு 1.68% என உயர்ந்தது. இசுலாமிய மக்கள் தொகை 1991 - 2001ல் ஆண்டுக்கு 2.95% என உயர்ந்த போது 2001 - 2011ல் ஆண்டுக்கு 2.4% மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது, அடுத்தடுத்த பத்தாண்டுகளில் இசுலாமிய மக்கள் தொகையின் ஆண்டு வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
இசுலாமிய மக்கள் தொகையில் ஆண் பெண் விகிதாச்சாரம், இந்து மக்கள் தொகை சேர்க்கையுடன் ஒப்பிடும்போது, ஆரோக்கியமாக உள்ளது. இந்துக்களில் ஆயிரம் ஆண்களுக்கு 939 பெண்கள் இருக்கும் போது இசுலாமியர்களில் ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் உள்ளனர். பெண் சிசுக் கொலை, பெண் சிசு மரணம், குறைவு என்பது தெரிகிறது. நாம் அய்வர் நமக்கு இருபத்தைந்து எனச் சொல்லும்போது, ஓர் இசுலாமிய ஆண் 4 பெண்களைப் பலதார மணம் செய்து கொண்டு 25 குழந்தைகள் பெறுகிறார் என்பதே மோடியின் வக்கிரமான வாதம். 1000 ஆண்களுக்கு 951 பெண்களே இசுலாமியர்களில் இருக்கும்போது, பலதார மணம் என்பது சாதாரண எண்கணித ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சாத்தியம் இல்லை.
2001ல் இசுலாமியர்கள் மக்கள் தொகை 13.8 கோடி. 2001 முதல் 2011 வரை இந்து மக்கள் தொகை அதிகரித்தது மட்டும் சுமார் 13.8 கோடி பேர் இருக்கும். மக்கள் தொகையில் இசுலாமியர்கள் 25% ஆகக் கூட உடனடி எதிர்காலத்தில் எந்த வாய்ப்பும் தெரியவில்லை.
பஞ்சாப் மக்கள் தொகை 2011ல் 2.75 கோடி. இதில் சீக்கியர்கள் 1.60 கோடி பேர். இந்துக்கள் 1.08 கோடி பேர். பஞ்சாப் மக்கள் தொகையில் சீக்கியர்கள் 1991ல் 69.25%, 2001ல் 59.9%, 2011ல் 57.69% எனக் குறைந்து கொண்டே வந்துள்ளனர். ஆனால் பஞ்சாப் மக்கள் தொகையில் இந்துக்கள் 1991ல் 34.46%, 2001ல் 36.94%, 2011ல் 38.49% என அதிகரித்துக் கொண்டே போகின்றனர். அடுத்த பத்தாண்டிலும் சீக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்து மக்கள் தொகை ஆண்டு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இது பற்றி இந்துத்துவா சக்திகள் கனத்த மவுனம் சாதிக்கின்றனர்.
ஆயுள் காலத்தில் பெண்கள் சராசரியாகப் பிள்ளை பெறும் விகிதம், இந்தியாவில் எல்லா மதத்தினர் மத்தியிலும், குறைந்து வருகிறது.
அய்க்கிய அமெரிக்காவில், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில், ஹிஸ்பானிக் (ஸ்பானிய மொழி பேசும் வம்சாவழியினர்) கருப்பு நிறத்தவர் மற்றும் இதரரின் குழந்தைகள் எண்ணிக்கை, வெள்ளைக்கார குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகி உள்ளது. லண்டனிலும் அய்க்கிய ராஜ்ஜியம் நெடுகவும், முகமது என்ற பெயர்தான், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் அதிகம் வைக்கப்பட்ட பெயர் ஆகும். அய்க்கிய அமெரிக்காவும் அய்க்கிய ராஜ்ஜியமும் வெள்ளையர் அல்லாதோர் அதிகரிக்கும் யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, ஒருவேளை, இந்தியர்களாகிய இசுலாமியர்கள் எண்ணிக்கை உயர்ந்தால்தான் என்ன? இசுலாமியர் அந்நியர் அல்ல. அவர்கள் இந்தியர்களே. இந்தியா இந்து நாடும் அல்ல.
இந்திய இசுலாமியர்களில் 60.58% பேர் உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார்; மகாராஷ்ட்ரா, அஸ்ஸôம் என்ற 5 மாநிலங்களில் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மட்டும் இசுலாமிய மக்கள் தொகை 68.31% உள்ளது. இது அஸ்ஸôமில் 34.22% எனவும், மேற்கு வங்கத்தில் 27% எனவும் கேரளத்தில் 26.56% எனவும் உத்தரபிரதேசத்தில் 19.26% எனவும் பீகாரில் 16.87% எனவும் மகாராஷ்ட்ராவில் 11.54% எனவும் உள்ளது. இசுலாமியர் எண்ணிக்கை உத்தரபிரதேசத்தில் 3.84 கோடி, பீகாரில் 1.75 கோடி, மகாராஷ்ட்ராவில் 1.29 கோடி, அஸ்ஸôமில் 1.06 கோடி ஆகும். தமிழ்நாட்டில் 40 லட்சத்துக்கு மேல் உள்ள இசுலாமியர்கள் தமிழக மக்கள் தொகையில் 5.86% மட்டுமே ஆவார்கள்.
இந்த விவரங்கள் இந்து முன்னணிக்கு, சங்பரிவாருக்கு, பாஜகவுக்குத் தெரியாதா? அவர்களது மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்நகர்த்தும் போது, அவர்களுக்கு மனித உயிர்கள் ஒரு பொருட்டே அல்ல எனும்போது, அவர்கள் உண்மையை ஓர் உயர்ந்த பீடத்தில் வைப்பார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஒரு சட்டம் - ஒரு வேலை நிறுத்தம் - ஒரு துப்பாக்கிச் சூடு
தொழிலாளர் தலைவர் அம்பேத்கர்
எஸ்.குமாரசாமி
1942 - 1945ல், பிரிட்டிஷாரின் வைஸ்ராய் கவுன்சிலில் லேபர் உறுப்பினராக அம்பேத்கர் இருந்தபோது, குறைந்தபட்ச சம்பளம் மற்றும் வேலை நிறுத்த உரிமையை வலியுறுத்தினார்.
விவசாயம், அரசு தொழிலாக்கப்பட்டு கூட்டாக விவசாயம் நடத்தப்பட வேண்டும் என்றார்.
சுதந்திர இந்தியாவில் கேந்திரத் தொழில்கள் அரசின் கைகளில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அரசுக் கட்டுப்பாட்டால் தனி நபர் சுதந்திரம் பறிபோகும் என்ற கூப்பாட்டிற்கு, “யாருக்கான எதற்கான சுதந்திரம்? இது நிலப்பிரபுக்கள் கூடுதல் குத்தகைப் பெறவும், முதலாளிகள் வேலை நேரத்தைக் கூட்டி கூலியைக் குறைப்பதற்குமான சுதந்திரமே. அரசு கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரம் என்பது, தனியார் முதலாளிகளின் சர்வாதிகாரம் என்பதன் மறு பெயரே” எனச் சாட்டையடியாய்ப் பதில் தந்தார்.
மேலே உள்ள விசயங்களை நாம் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. பம்பாய் சட்டமன்றத்தில், ஒரு தொழிலாளர் விரோத சட்டம் பற்றி, ஒரு துப்பாக்கிச் சூடு பற்றி அவர் பேசிய விசயங்களோ, அவர் அழைப்பு விடுத்த ஒரு வேலை நிறுத்தம் பற்றியோ பொதுவாக அறியப்படுவதே இல்லை எனச் சொல்ல முடியும். அம்பேத்கரின் அறியப்படாத அந்தப் பக்கங்களை தீப்பொறி தன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
1935ல் இந்திய அரசாங்கச் சட்டம் பிரிட்டிஷாரால் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆளும் கட்சியானது. வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கும், எடுபிடி தொழிற்சங்கங்களை ஊக்குவிக்கும் ஒரு மசோதாவை 1938ல் அன்றைய பம்பாய் மாகாண அரசு கொண்டு வந்தது. மார்ச் 7, 1938 அன்று காம்கர் மைதானத்தில் நடந்த கூட்டத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திர போஸ் மசோதாவை கண்டித்துப் பேசினார்.
திரும்பவும் ஜுலையில் மசோதா முன்வைக்கப்பட்டது. மசோதா, சமரசப் பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்றது. சட்டவிரோத வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஆதரிப்பவர்களுக்கும் சிறைத் தண்டனை என மிரட்டியது. முதலாளிகள் ஒப்புதலோடுதான் சங்கம் நடத்த முடியும் எனவும், 50% பேர் ஆதரவு பெற்றால்தான் அங்கீகாரம் எனவும் பேசியது. கதவடைப்பையும் வேலை நிறுத்தத்தையும் சமமாக நிறுத்தி, பாரபட்சம் இல்லாமல் இருப்பது போல் நாடகமாடியது. வேலை நிறுத்தத்தை நீட்டித்து பட்டினி போட்டும், போராட்டத்தை உடைத்தும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முதலாளிகளால் முடியும் எனும்போது, கதவடைப்பு செய்ய வேண்டிய அவசியமே முதலாளிகளுக்கு இல்லை என்பதை, நயவஞ்சகமாக மூடி மறைத்தது. 15.09.1938ல் இந்தத் தொழில் தகராறுகள் மசோதா பற்றி அன்று மும்பாய் சட்டமன்றத்தில் அம்பேத்கர் ஆற்றிய உரையின் சில பகுதிகளைக் காண்போம்.
“வேலை ஒப்பந்த மீறலை இந்தியச் சட்டப் பேரவை ஒரு குற்றமாக அறிவிக்காததற்குக் காரணம், அவ்வாறு செய்வது ஒரு மனிதனை அவனது விருப்பத்துக்கு மாறாக பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதற்கும், அவனை ஓர் அடிமையாக்குவதற்கும் ஒப்பானது என்று அது கருதுவதே ஆகும் (கேளுங்கள், கேளுங்கள்). ஆகவே, ஒரு வேலை நிறுத்தத்தை தண்டனைக்குரிய குற்றமாக்குவது என்பது தொழிலாளியை அடிமையாக்குவதேயன்றி வேறல்ல என்பதே என் வாதம். அடிமைத்தனம் என்பது என்ன? அடிமைத்தனம் என்பது சுயவிருப்பமற்ற கட்டாய உழைப்பு என்று அமெரிக்க அரசியல் சட்டம் வரையறுத்துக் கூறுகிறது. இது அப்படிப்பட்ட கட்டாய உழைப்புதான். இது அறநெறிக்கு விரோதமானது; இது மனித சமுதாயச் சட்டத்திற்குப் புறம்பானது; இது நீதி முறைமைக்கு முரணானது”.
“சுதந்திர உரிமை தெய்வீகமான உரிமை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களேயானால், வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையும் தெய்வீகமானதே என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” (கேளுங்கள், கேளுங்கள்).
“சுதந்திரமான தொழிற்சங்கம் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விசயம். தொழிலதிபரிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற்ற ஒரு தொழிற்சங்கம்தான் சட்டரீதியாக இருக்க முடியும் என்றால், தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் வகிக்க முடியும் என்றால், அவர்கள் சார்பில் பேச முடியும் என்றால், அப்போது அத்தகைய ஒரு தொழிற்சங்கம் அடிமைத் தொழிற்சங்கமாக இருக்க முடியுமே தவிர, சுதந்திரத் தொழிலாளர்களின் சுதந்திரமான தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்று கூறுவது மிகைப்படுத்தலாகவோ, நிந்தனையாகவோ இருக்காது”.
“அமைதி குலையும் என்ற காரணத்துக்காக மட்டுமே தொழிலாளர்களுக்கு எதிராகப் போலீசைப் பயன்படுத்துவதை அரசாங்கம் கைவிட வேண்டும். இது இல்லாமல், பேரம் பேசும் ஆற்றலில் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே சமத்துவம் நிலவ முடியாது. இதை நீங்கள் செய்வீர்களா? அவ்வாறு செய்தால், நீங்கள் முதலாளிகளின் ஆதரவை இழந்து விடுவீர்கள். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றாலோ நீங்கள் தொழிலாளர்களின் நண்பனாக இருக்க முடியாது. இப்போதுள்ளபடி, இந்த மசோதா ஏற்கப்படக் கூடாது என்பது எனது திடமான கருத்து. இந்த மசோதா எத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தொழிலாளர்கள் இப்போது அறியாதிருக்கலாம். ஆனால், மசோதா அமலுக்கு வரும்போது, மசோதாவை தொழிலாளி நேருக்கு நேர் சந்திக்கும்போது, இது மிக மிக மோசமான, கொடுமையான, குரூரமான மசோதா என்று அவன் கூறுவான் என்பது நிச்சயம். இதற்கு நான் ஒருபோதும் உடந்தையாக இருக்க முடியாது” (கைத்தட்டல்).
இந்த உரையிலேயே, 50% உறுப்பினர்கள் இருந்தால் அங்கீகாரம் என்பது ஏமாற்று என்பதற்கு பிரிட்டனின் 1926 நிலைமையைச் சுட்டிக்காட்டுகிறார். 1.80 கோடி தொழிலாளர்களில் 55,31,000 பேர், அதாவது 30% மட்டுமே சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும்போது, இந்தியாவில் இன்னும் சில பத்தாண்டுகள் வரை 50% உறுப்பினராதலை எதிர்ப்பார்க்க முடியாது என்று வாதாடுகிறார்.
இந்தத் தொழிலாளர் விரோத மசோதாவிற்கு எதிராக அம்பேத்கர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோடும் 60 தொழிற் சங்கங்களோடும் கரம் கோர்த்து, ரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய அறைகூவல் விடுக்கிறார். நடந்த வேலை நிறுத்தம் பற்றி, மார்க்சிஸ்ட் இன்டர்நெட் ஆர்க்கைவ்சில், பென் பிராட்லி என்பவர் ஜனவரி 1939 லேபர் மன்த்லி இதழில் எழுதிய, ‘இந்தியத் தொழிலாளர்களின் மகத்தான ஒரு நாள் வேலை நிறுத்தம்’ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்த நாளில் வீதிக்கு வந்தனர். காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரச்சாரமோ, காவல்துறை அச்சுறுத்தலோ எடுபடவில்லை.
காலை ஷிப்டில் மும்பையின் 69 ஜவுளி ஆலைகளில் 6 ஆலைகள் தவிர மற்றவை இயங்கவில்லை. இரவு ஷிப்டில் எந்த ஆலையும் இயங்கவில்லை.
முனிசிபல் ஒர்க்ஸ் நின்றது. தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
குர்லாவில் 3,000 இயந்திரப் பாட்டாளிகளும் தாராவியில் 5,000 தோல் தொழிலாளர் களும், மும்பாயின் கட்டிடத் தொழிலாளர்களும், வீட்டு வேலை செய்பவர்களும், அச்சுக் கோர்ப்பவர்களும், மாண்ட்வி பகுதியில், பித்தளை, வெள்ளி, தங்க தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
அகமதாபாத்தில் 12 மில்களில் 10,000 பேர் வேலையை நிறுத்தினார்கள். ஷோலாப்பூரில் ஜீனி மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் துவக்கி வைத்தனர். மீனாட்சி சர்தேசாய் தலைமையில் 8,000 பேர் பேரணியாகச் செல்ல மதியமே 80% வேலைகள் நின்றன. பீடித் தொழிலின் பெண் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். வேலை நிறுத்தம் அமல்நெர், துலியா, சலிஸ்கான், புனே வரை பரவியது.
கல்கத்தா, கான்பூர், மெட்ராஸ் தொழிலாளர்கள் 07.11.1938 வேலை நிறுத்தத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்தனர். (காவல்துறை ஒடுக்குமுறைக்கு தொழிலாளர்கள் பதிலடி தந்தபோது உள்துறை அமைச்சர் முன்ஷியும் வல்லபாய் பட்டேலும் கூடத் தாக்கப்பட்டதாகச் செய்திகள் உண்டு)
பல இடங்களில் தடியடி நடந்தது. 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்தது. பைரூ சவான், பாகாஜி வாக்மோர் என்ற இரு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.
எல்பின்ஸ்டன் மில்லில் நடைபெற்ற கலவரங்களுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் அதன் விளைவாய் ஏற்பட்ட உயிர்ச் சேதத்திற்கும் நேரடி நடவடிக்கைக் குழுவினரே பொறுப்பு; வேலை நிறுத்தத்தை வெற்றிபெற வைக்கும் பொருட்டு, அவர்கள்தான் தங்கள் தீவிர பிரச்சாரத்தால் கல்வி வாசனையற்ற தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடும்படி தூண்டினர் என காங்கிரஸ் அரசு நியமித்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் பத்தி 84 சொன்னது. இந்த அறிக்கை பற்றி அம்பேத்கர் மும்பை சட்டமன்றத்தில் 17.03.1939 அன்று ஆற்றிய உரையின் சில பகுதிகளைக் காண்போம்:
“மூன்றாவதொரு கேள்வியையும் கேட்க விரும்புகிறேன். அதற்கு முன்னதாக ஒரு தகவல். நம்பகமான இடத்திலிருந்து எனக்கு இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலை உள்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சுமார் 6.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள ஸ்பிரிங் ஆலையின் நிர்வாகி அன்றைய தினம் சுமார் 200 ரூபாயை அனுப்பி, துப்பாக்கிச் சூட்டில் பங்கு கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்குப் பரிசாக வழங்கும்படிக் கூறியதாக எனக்குத் தகவல் வந்துள்ளது. இந்தத் தகவல் மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சருக்குத் தெரியுமோ என்னவோ எனக்குத் தெரியாது; ஆனால் இது உண்மை என்பதை நான் அறிவேன்; அவர் தமது இலாகாவிலிருந்து தகவல் கேட்டுப் பெற்றால் இது உண்மை என்பதைத் தெரிந்து கொள்வார். ஸ்பிரிங் ஆலையின் நிர்வாகி அரசாங்கத்துக்கு ரூ.200 அனுப்பி, அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்த மில்லுக்கு அருகில் நடைபெற்ற கலவரத்தில் அல்லது துப்பாக்கிச் சூட்டில் பங்கு கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்குப் பரிசுத் தொகையாக வழங்கும்படித் திட்டவட்டமாகக் கேட்டுக் கொண்டது உண்மையானால், அந்தத் துப்பாக்கிச் சூடு வன்முறை காரணமாக நடைபெறவில்லை, அதற்கு மாறாக, தங்கள் பணியைக் கச்சிதமாக முடிக்கும்படி மில் நிர்வாகி போலீஸ் அதிகாரிகளிடம் சொன்னதாலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றி ருக்கிறது என்று கூறுவது சரியானதாகாதா என்று கேட்க விரும்புகிறேன். இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய, பெரிதும் கண்டிக்கத்தக்க இழிவான செயலாகும். மதிப்பிற்குரிய உள்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியை மிகவும் கருத்தூன்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்; ஏனென்றால், இந்த மோசமான நிகழ்ச்சி நடைபெற்றது உண்மையானால், அரசு வளர்த்துவரும் இந்தப் போலீஸ் படையானது பல்வேறு வகுப்புகளிடையே நியாயத்தை நிலைநாட்டுவதற்கிருக்கும் போலீஸ் படையல்ல; மாறாக, இந்தப் போலீஸ் படை தொழிலாளர்களின் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கும் நோக்கத்திற்காக முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் கைக்கூலிகளின் பக்கம் இருக்கும் போலீஸ் படை, கொலைகாரர்களுடன் உறவு கொண்டாடும் போலீஸ் படை என்றே கருத வேண்டியிருக்கிறது”.
“அமைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டும் போது சுதந்திர உணர்வுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளிக்க வேண்டாமா? சுயாட்சி என்பது நமது சொந்த மந்திரி நமது சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுவதைத் தவிர வேறு எதுவுமில்லை என்றால், சுயாட்சி என்பது இந்தக் காட்சிகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு வெறுமனே சிரிப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை என்றால், சுயாட்சி என்பது அமைச்சர் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை ஆதரித்துப் பாராட்டுவதைத் தவிர வேறு எதுவுமில்லை என்றால், அப்போது இந்தச் சுயாட்சி அகில இந்தியாவுக்கும் ஒரு சாபக்கேடே தவிர, ஓர் அருள் கொடையல்ல என்றுதான் கூறுவேன்” (கை தட்டல்).
2015லும் இந்தியா பண மூட்டைகளிடம்தான் சிக்கியுள்ளது. ‘சுதந்திரம்’ ‘குடியரசு’ என்ற வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால், 1939ல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், முதலாளித்துவச் சுரண்டலும் ஒடுக்குமுறையுமே வெறியாட்டம் போடுகின்றன.
வருங்கால இந்தியா யாருக்கானது என்ற கேள்வியை பகத்சிங் ஒரு கோணத்தில் எழுப்பியபோது, அம்பேத்கரும் வேறொரு கோணத்தில் எழுப்பி உள்ளார். பகத்சிங்கின் வாரிசுகளும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களும் கரம் கோர்த்து களங்களில் பதில் காணலாம்.
மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர் போராட்டம் தங்களுக்கே உரிய வழியில் துவங்கியிருக்கிறார்கள். எழுந்து வருகிறார்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய வாய்வீச்சு முழக்கமான, ‘துவங்கு, எழுந்து நில்’ என்பதில் இருந்து, கேரளத்தின் இடுக்கி மாவட்ட மூணாறு தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் மிகச் சரியான சமிக்ஞை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
அய்க்கிய அமெரிக்க தொழிலாளர்கள் 15 டாலருக்காகப் போராடுவோம் என்று சொல்கிறார்கள் என்றால், கேரளத்தின் தேயிலைத் தோட்டப் பெண் தொழிலாளர்கள் 500 ரூபாய்க்காகப் போராடுவோம் என்று குரல் எழுப்புகிறார்கள். கேரளத்தில் செப்டம்பர் 5 முதல் 13 வரை, கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் துவக்கினார்கள். இந்தப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஹாரிசன் மலையாளம் தேயிலைத் தோட்டத்தின் பெண் தொழிலாளர்கள் அதே போன்ற ஊதிய உயர்வு, போனஸ் கோரிக்கைகளுக்காக செப்டம்பர் 5 அன்று, தங்கள் அலுவலகம் முன் எழுந்து நின்றபடி முழக்கமிடுகிறார்கள். நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால், அடுத்த நாளும் அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. இடுக்கியின் டாடா டீ பெண் தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதே போன்ற போராட்டங்கள் வயநாடு மற்றும் கொல்லம் தேயிலைத் தோட்டங்களிலும் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டத்தின் வீச்சு தேயிலைத் தோட்டங்களைத் தாண்டி, எம்ஆர்எஃப் இறால் தோலுரிப்பு தொழிற் சாலைக்கு பரவி, அங்கு வேலை செய்யும் 6,000 பெண்கள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தையும் இதனால் ஈர்க்கப்பட்ட இதர பிரிவு தொழிலாளர் போராட்டத்தையும் ஏதோ ஒரு முறை நடக்கும் தன்னெழுச்சியான நிகழ்வு என்று சொல்ல கார்ப்பரேட் உலகம் பயனற்ற முயற்சி எடுத்தது.
ஆனால், மூணாறின் கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் தங்களது முதல் கட்ட வெற்றியோடு திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. செப்டம்பர் 20 அன்று மீண்டும் 350 பேர் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான திட்டம் வகுத்தனர்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் இதர பணி நிலைமைகள் பற்றி முடிவுகள் எடுக்க கேரள அரசாங்கம் அமைத்துள்ள தோட்டத் தொழிலாளர் கமிட்டி என்ற முத்தரப்பு குழுவில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் எனக் கோரி அரசாங்கத்துக்கு அவர்கள் கடிதம் எழுதியிருக்கின்றனர். இதன் கூட்டம் வரும் செப்டம்பர் 26 அன்று நடைபெற இருக்கிறது. அந்தக் கடிதத்தில் தங்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஊதியம் மற்றும் அது தொடர்பான விசயங்களில் எடுக்கப்படும் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.
செப்டம்பர் 20 கூட்டத்தில் தோட்டத்தின் 82 டிவிசன்கள் ஒவ்வொன்றுக்கும் 6 பேர் கொண்ட கமிட்டிகளை நியமித்திருப்பதைப் பார்க்கும் பொழுது போராட்டம் முடிவுக்கு வந்ததாக சொல்வதற்கில்லை. மேலும் தோட்டத் தொழிலாளர் கமிட்டி கூட்டத்திற்கு பிறகு திரும்பவும் கூடப் போவதாகவும் அவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இவற்றை எல்லாம் பார்க்கும்போது 20% போனஸ் மற்றும் ரூ.500 நாட்கூலிக்காக நடந்த 9 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் ஊடகங்கள் குறிப்பிட்டது போல் தன்னெழுச்சியானது அல்ல என்பது புலப்படுகிறது. வீதிக்கு வருவது, கம்பெனிகளின் தேயிலை விற்பனை நிறுவனங்களை மூடுவது, அந்தப் பகுதியின் பொருளாதார நடவடிக்கையை ஸ்தம்பிக்க வைப்பது, சுற்றுலாப் பயணிகளை வரவிடாமல் சாலைகளை மறிப்பது, அதே வேளை பொது மக்களின் ஆதரவையும் பெற்றது, முதலமைச்சரை பேச்சு வார்த்தை மேசைக்கு வரவைத்தது ஆகிய இவை அனைத்தும் உணர்வுபூர்வ பாத்திரம் இல்லாமல் சாத்தியமில்லை.
போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய மூன்று பெண்கள் இடதுசாரி தொழிற்சங்கங்களின் செயல்வீரர்களே. அடுத்த கட்டத்தில் இருந்த முன்னணிகளும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களாக இருப்பவர்களே. போராட்டத்தில் கருவாக இருந்தவர்கள் நீண்ட காலமாக பெண் தொழிலாளர்களை அமைப் பாக்குவதில் அனுபவம் பெற்றவர்களே.
தாங்கள் உறுப்பினர்களாக, நிர்வாகிகளாக இருக்கிற அதே சங்கங்களை, அவர்கள் செப்டம்பர் போராட்டத்தில் தள்ளி வைத்தார்கள். அதே தொழிற்சங்கங்களின் வலைப்பின்னலை பயன்படுத்தி ஆண்களுக்கு தெரியாமல் போராட்டச் செய்தியை ரகசியமாகப் பரப்பினார்கள்.
இதற்கெல்லாம் மேலாக அங்குள்ள மோசமான பணி நிலை காரணமாக போராட்டம் வெடிக்க தயாராகவே களம் இருந்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் போதிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன.
நாட்டின் வளம் மற்றும் வளர்ச்சி பற்றி சொல்ல டாடாவுக்கு ஆயிரம் கதைகள் உண்டு. அவற்றையெல்லாம் கேட்டு சலித்துப் போய் விட்டது. ஆனால் டாடாவின் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு டாடாவின் சாம்ராஜ்ஜியத்தில் இழப்பு, அவநம்பிக்கை, துரோகம் என சொல்லுவதற்கு கதைகள் உண்டு.
ஆனந்த் தல்வியும் அக்தர் கானும் டாடா பவர் கம்பெனியில் பணி நிரந்தரம் கேட்டு கடைசியில் தன்னைத் தானே தீயிட்டு கொளுத்தி மாண்டு போனார்கள். அஸ்ஸôம் டெட்லே டீ கம்பெனியில் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால் அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை அடிமைகளாக விற்பதாக கார்டியன் பத்திரிகை எழுதுகிறது. கண்ணன் தேவன் தொழிலாளர்கள் நிலைமைகள் சுரண்டலின் இன்னுமொரு அத்தியாயம். இந்தக் கம்பெனி தொழிலாளர்களும், டாடா டீயும் சேர்ந்து நடத்தும் நவீன நிர்வாகம் என்று சொல்லப்படுகிறது. இங்கு 12 மணி நேர வேலையில் 21 கிலோ தேயிலையை பறிக்க ரூ.231 சம்பளமாக தரப்படுகிறது. இவர்கள் மிக மோசமான குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இந்தக் கம்பெனி தொழிலாளர்களிடம் 68% பங்கு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு தொழிலாளியிடமும் ரூ.10 முக மதிப்புள்ள 300 பங்குகள் என்பது அற்ப சொற்பமானது. ஆகவே இவர்களின் உழைப்பை நம்பித்தான் வாழ்க்கை. இலகுவான வேலை செய்யும் ஆண்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுப்பதன் மூலம் ஆண் தொழிலாளர்களுக்கும் பெண் தொழிலாளர்களுக்கும் இடையில் மதில் சுவரை கட்டியெழுப்பியிருக்கிறது டாடா நிர்வாகம். இதனால் ஆண்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், பெண்களுக்கு இது மிகமுக்கியமான பிரச்சனைதான்.
ஹாரிசன் மலையாளம் நிறுவனம் ஆர்.பி.கோயங்கா குழுமத்திற்கு சொந்தமானது. இந்தக் கம்பெனி நவீன யுகத்திற்கு தகுந்தாற்போல் தன்னை தகவமைத்துக் கொள்வதாகச் சொல்லி கம்பெனி சேர்மன் முதல் அனைவரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்று வேலை கலாச்சாரத்தில் மாற்றம் கொண்டு வந்தது.
ஆனால் அதே கோயங்கா நிர்வாகம் நஷ்டம் என்று சொல்லி சொற்ப கூலி உயர்வையும் வழங்க மறுத்துவிட்டது. இந்த நிறுவனம் நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்ற பெயரிலான மேம்போக்கான நடவடிக்கையை விட்டுவிட்டு, காலத்திற்கேற்ப மாற வேண்டிய ஊதியம் வழங்க முன்வர வேண்டும்.
பல தொழில் சாம்ராஜ்ஜியங்களை நடத்தும் டாடா, கோயங்கா போன்றவர்களுக்கு தங்கள் லாபத்தை உயர்த்த உழைத்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதென்பது பெரிய பிரச்சனை அல்ல. டாடா பல தொழில்களில் முதலீடு செய்கிற செய்தியை நாம் பார்த்து வருகிறோம். ஆகவே தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த முடியாது என்பதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் நட்டம் என்று டாடா நிறுவனம் சொல்வதை ஏற்பதிற்கில்லை. டாடாவின் சொத்து மேலும் மேலும் பெருகி வருவதை தொழிலாளர்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். எனவே சந்தை பற்றி தெளிவற்ற விளக்கம் சொல்லி தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது. தொழிலாளர்கள், ஆண்களோ பெண்களோ, எண்கணிதப் பொய்களால் கெட்டியாகக் கட்டப்பட்டுள்ள நிறுவனத்தின் கணக்கு புத்தகங்கள் பற்றி தொழிலாளர்கள் கரிசனம் கொள்ள வேண்டும் என்று முதலாளிகள் எதிர்பார்க்கவும் கூடாது.
மூணாறு பெண்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போராட்டம் தன்னெழுச்சியானது என்றும், தொழிற்சங்கத் தலைமை இல்லாதது என்றும் சொல்லி அதன் முக்கியத்துவத்தை குறைக்க, அல்லது நீக்கிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு பத்திரிகையாளர், ஆர்வ மிகுதியில், மூணாறு பெண் தொழிலாளர்கள் போராட்டம் தொழிற்சங்கத்துக்கு எதிரானது என்று கூட சொல்கிறார். செப்டம்பர் 2 நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில், அனைத்து மய்யத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட தலைமையில் திரண்ட தொழிலாளர்களின் ஒன்றுபட்ட தாக்குதலுக்கு இலக்கான கார்ப்பரேட்களுக்கு, அதே தொழிற்சங்கங்களை தலையிட விடாமல் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டம், அந்தத் தொழிற்சங்கங்கள் மீது கரியள்ளி பூச ஒரு வாய்ப்பாகத் தெரிகிறது. இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிற வர்க்கப் போராட்டம்; இந்தப் போராட்டத்தின் மூலம் மூணாறு பெண் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் பிரச்சனைகளை இன்றைய அரசியல் நிகழ்ச்சிநிரலில் முன்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். பெண் தொழிலாளர் போராட்டம் சொல்கிற இந்த அரசியல் செய்தி கார்ப்பரேட்டுகளை அச்சப்பட வைத்திருக்கிறது.
போராட்டம் நடத்திய பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தோடு இருக்கிறார்களா, இல்லையா என்பது பற்றி கார்ப்பரேட்டுகளும், கார்ப்பரேட் கருத்தியலால் உந்திச் செலுத்தப்படுகிற ஊடகங்களும் கவலைப்படத் தேவையில்லை. எந்தத் தொழிற்சங்கம் வேண்டும், எந்தத் தலைமை வேண்டும் என்பதை தொழிலாளர்கள் தீர்மானிப்பார்கள். இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கட்டளையிடவோ தலையீடு செய்யவோ கூட முடியவில்லை. ஆனால் இந்தப் போராட்டம் டாடாவுக்கும் கோயங்காவுக்கும் எதிரானது என்ற யதார்த்தத்தைக் காணத் தவறக் கூடாது. இந்த கார்ப்பரேட்டுகள் தொழிலாளர்களுக்குக் கொடுக்க தயாராக இருந்ததை விட கூடுதலாக மூணாறு பெண் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அவர்களிடம் இருந்து எடுத்துக் கொண்டார்கள். வரும் நாட்களிலும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் தரத் தயாராக இருப்பதை விடக் கூடுதலாக தொழிலாளர்களுக்கு தர வேண்டி நேரும்.
இந்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய விசயங்களும் உண்டு. இது போன்ற போராட்டங்கள் அராஜகத்தில் முடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் சொன்னார். இதில் தமிழ்த் தீவிரவாதிகளின் பின்புலம் இருப்பதாக சிஅய்டியு தலைவர் குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்கள் வலதுசாரி சாயல் கொண்டவை. போராடுகிற தொழிலாளர்கள், தங்கள் தொழிற்சங்கத் தலைமைகளை தள்ளி வைப்பதை இந்தக் கருத்துக்கள் நியாயப்படுத்துகின்றன. இடுக்கியிலும் நாட்டின் பிற இடங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் தங்கள் அடித்தளம் விலகிச் செல்வதற்கு எந்த வகையில் தாம் தீனி போட்டோம் என்பதை நேர்மையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் பொதுத் துறை தொழிற்சங்கங்களின் இராணுவ ஒழுங்கைப் போன்ற ஒரு அமைப்பு முறையை அமைப்புசாரா துறையில் செயல்படுத்த முடியாது என்பதை கடினப்பட்டுத்தான் ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை.
கேரள அரசாங்கம் அறிவித்துள்ளபடி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், அடிப்படை சம்பளத்துடன் மாறுகின்ற பஞ்சப்படியும் இணைத்து ரூ.124 முதல் ரூ.145. அஸ்ஸôம், மேற்கு வங்கம் ஆகிய மாநில தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100தான் தரப்படுகிறது என்று சொல்லி தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்பது கடினம் என்று தொழிலாளர் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் மூணாறு பெண்கள் விடுவதாய் இல்லை. அவர்கள் தங்கள் வழியில் துவங்கி விட்டார்கள். நிற்கிறார்கள். நாட்டின் தொழிலாளர்கள் போராட்டத்தில் புதிய அத்தியாயம் எழுதத் துவங்கிவிட்டார்கள்.
வழக்குரைஞர்கள் போராட்டத்தால்
நீதித்துறை மாண்புக்கு களங்கமா?
கே.ஜி.தேசிகன்
‘வழக்குரைஞர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்’. ‘நீதிபதிகள் அச்சத்தில் உள்ளார்கள்’. ‘ஒரு சிறு குழு வழக்குரைஞர்கள் நீதி பரிபாலன முறையையே கட்டுப்படுத்தும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள்’. இவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பல நீதிபதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கருத்துக்களாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.
24.09.2015 அன்று இந்திய பார் கவுன்சில் தமிழகத்தின் 15 வழக்குரைஞர்களின் பதிவுக்கு இடைக்கால தடை விதித்து அவர்கள் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்வதை தற்காலிகமாக தடுத்திருக்கிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு தந்து விளக்கம் கூட கேட்காமல் ஜனநாயக விரோத நடவடிக்கையில் வழக்குரைஞர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இறங்கியிருக்கிறது. இதன் பின்னணி என்ன?
சமீப காலமாக, தமிழ்நாட்டு அரசியலில் மக்களைப் பாதிக்கின்ற பல்வேறு பிரச்சனைகளில் வழக்குரைஞர்கள் முன் கை எடுத்து அரசியல் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஈழத் தமிழர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு, நீதித்துறை ஊழல் என்று போராட்டப் பட்டியல் நீள்கிறது. வழக்குரைஞர்களின் போராட்டம் பிற பிரிவு போராடும் மக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுப்பதாய் இருக்கிறது. அதுமட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புகள் புனிதமானவை அல்ல, அவற்றையும் விமர்சிக்க முடியும் என்பதையும் போராடுகிற பிரிவு வழக்குரைஞர்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்கள். மக்களின் முன்னேறிய ஜனநாயக குரலாக வழக்குரைஞர் சமூகம் எழுவதை அதிகார பீடத்தில் இருப்பவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
செல்வி ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்குப் பிறகு உண்மையிலேயே நீதித்துறை மீது அதிமுககாரர்களால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கூட்டம் போட்டு ஒலிபெருக்கி வைத்து நீதிபதி குன்ஹா மீது தனிப்பட்ட முறையிலேயே அவதூறுகளை அள்ளி வீசினார்கள். அத்தனையும் பார்த்துக் கொண்டு அமைதி காத்த இதே நீதிமன்றம் ஜனநாயகப் போராட்டங்களுக்கு வன்முறை பட்டம் வழங்குகிறது.
விபத்தில் ஒருவர் மரணமடைந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவு போடுகிறார். மோட்டார் வாகனச் சட்டத்தில் இதற்கு இடமில்லாவிட்டாலும் இது கட்டாயம் என்று சொல்கிறார். தமிழக அரசும் அரசாணை வெளியிடுகிறது. இதற்கு எதிராக மதுரை வழக்குரைஞர் சங்கம் தீர்மானம் போட்டு போராட்டத்தில் இறங்குகிறது. இதிலிருந்து பிரச்சனை துவங்குகிறது.
போராட்டத்தில் வழக்குரைஞர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் நீதித்துறையை நெருட வைத்தன. தீர்ப்பு ஜனநாயகபூர்வமாக விமர்சிக்கப்படுவதில் விவாதிக்கப்படுவதில் தவறேதும் இல்லை. உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலும் நீதிபதிகளின் தவறான அணுகுமுறை மற்றும் நீதித்துறை ஊழலுக்கு எதிராக அறச் சீற்றத்தோடு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதே போல் தமிழகம் முழுவதும் ஜனநாயகத்தின் குரலை வழக்குரைஞர்கள் ஒலித்து வருவதுண்டு. ஜனநாயகக் குரலை வன்முறை என்று சொல்ல முடியுமா?
நீதிமன்ற வளாகங்களையும் நீதிபதிகளின் அறைகளையும் புனிதத் தலங்களாக பாவிக்க வேண்டுமாம். கூட்டம் கூடக் கூடாதாம். முழக்கம் எழுப்பக் கூடாதாம். துண்டு பிரசுரம் விநியோகிக்க கூடாதாம். இந்த நடவடிக்கைகள் வன்முறை என்று நீதிபதிகள் தீர்ப்பில் எழுதுகிறார்கள். போலிப் பட்டம் பெற்றவர்களே இதற்குக் காரணம் என்றும் சொல்லும் நீதித் துறை சட்டக் கல்வியை வியாபாரமாக்கி விற்றுக் கொண்டிருக்கும் தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லையே ஏன்? மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர்கள் மீது தாமாக முன் வந்து வழக்கு தொடுக்கும் உயர்நீதிமன்ற அமர்வு போலி சான்றிதழ் பிரச்சனையை எடுத்துக் கொண்டு விசாரிப்பதில் என்ன சிக்கல்? இந்தக் கேள்விகள் சாமான்ய மக்கள் மனதில் எழுவது இயல்பானதே. பல நீதிபதிகள் அந்தப் பதவிக்கு செல்லும் முன்பு வரை சக வழக்குரைஞர்களோடு வாதாடியவர்களே.
வழக்குரைஞர் சங்கக் கூட்டங்களில் சில நீதிபதிகள், காலனிய ஆட்சியின் நீட்சி தொடர்கிறது என்று ஒப்புக் கொள்கிறார்கள். நீதிபதி நடைபயிற்சிக்கு போகும் போது பார்க்கிறவர்களெல்லாம் எழுந்து நின்று வணக்கம் செலுத்தத் தேவையில்லை என்று பகிரங்கமாக அறிவித்த ஜனநாயகவாதிகளும் உண்டு. இந்திய பார் கவுன்சில் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளரின் அறிவுறுத்தலில் 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக வழக்குரைஞர் பணியாற்றிக் கொண்டிருக்கும் மூத்த வழக்கு ரைஞர்களுக்கு இடைக்கால தடை, சங்கம் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஜனநாயக விரோத அறிவிப்புகள் வழக்குரைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ் மொழி உணர்வு பற்றி வாய்ப்பந்தல் போடும் பிரதான திராவிட கட்சிகள் உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து, தமிழ்நாட்டு காவல்துறை பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன கருத்து மீது அக்கப்போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்காகப் போராடியவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்த, தமிழகத்தில் இயற்கை வளம் கொள்ளை போவது, கவுரவக் கொலை, மனித உரிமை மீறல், எங்கும் பரவியிருக்கும் ஊழல், சாதி வெறியை மத வெறியை தூண்டும் சக்திகள், டாஸ்மாக், ஒடுக்குமுறை என இன்னும் பல விசயங்கள் உள்ளன. நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் கூட்டு செயல்பாட்டால் மட்டும் விரைவான நீதி பரிபாலனம் சாத்தியம். வழக்காடிகள் இல்லாமல் நீதிமன்றம் செயல்பட முடியாது. இந்திய நீதிமன்றங்கள் மக்கள் போராட்டங்களால் அம்பலப்பட்டு போவது இருக்கட்டும், அவை தாமாகவே தம்மை அம்பலப்படுத்தியும் கொள்கின்றன.
உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழ் வேண்டும் என்று போராடி சிறை சென்றவர்களை ஜனநாயக வழக்குரைஞர் சங்க அமைப்பாளர் தோழர் பாரதி தலைமையிலான குழு உடனடியாக சிறைக்கு சென்று சந்தித்தது. போராட்டத்திற்கு தங்களது ஒருமைப்பாட்டை தெரிவித்தும் வழக்குரைஞர்கள் மீது ஏவப்பட்டு வரும் அடக்குமுறையைக் கண்டித்தும் உடனடி யாக சுவரொட்டி வெளியிடப்பட்டது.
மாணவர்கள் போராடினால் கல்வி பாதிப்பு, தொழிலாளர்கள் போராடினால் உற்பத்தி பாதிப்பு, வழக்குரைஞர்கள் போராடினால் நீதி பாதிப்பு என இன்னும் இது போன்ற கருத்துக்களை சமூகத்தின் பொதுப் புத்தியில், நிலவுகின்ற சமூக அமைப்பு வளர்க்கிறது. அதற்கு எதிராக முற்போக்கு ஜனநாயக விழுமியங்களை சமூகத்தில் உருவாக்கும் முயற்சியில் சமூக சிந்தனையுள்ள வழக்குரைஞர்கள் சீரிய பணியாற்ற வேண்டியுள்ளது.
பீகார் தேர்தல் நோக்கி ஆறு இடதுசாரி கட்சிகளின் கூட்டு அரசியல் கருத்தரங்கம்
பீகார் தேர்தல் நோக்கி ஆறு இடதுசாரி கட்சிகளின் கூட்டு அரசியல் கருத்தரங்கம், பாட்னாவில் செப்டம்பர் 7 அன்று நடத்தப்பட்டது. பாஜக தலைமையிலான நிலப்பிரபுத்துவ, மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு கூட்டணியையும் சந்தர்ப்பவாத, ஏமாற்றுகிற அய்க்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியையும் முறியடிப்பது முதன்மையான நோக்கம் என்பதை எதிரொலிக்கும் விதமாக அந்த கருத்தரங்கத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதுபோன்ற கூட்டம் இதுவே முதல்முறை என்பதால் கருத்தரங்கில் கலந்து கொண்ட இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
இகக, இககமா, இகக மாலெ, எஸ்யுசிஅய், பார்வர்டு பிளாக் மற்றும் ஆர்எஸ்பி கட்சிகளைச் சேர்ந்த 5000த்துக்கும் மேற்பட்ட செயல்வீரர்கள் பீகாரின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.
ஏ.பி.பரதன், சீதாராம் யெச்சூரி, திபங்கர் பட்டாச்சார்யா, சாயா முகர்ஜி, தேபபிரதா பிஸ்வாஸ், அபானி ராய் போன்ற மூத்த இடதுசாரி தலைவர்களும் மற்றவர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த இடதுசாரி கட்சிகள் தயாரித்திருந்த ‘பீகாரின் வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகளின் கூட்டான வேண்டுகோள்/பீகாரின் மக்கள் சார்பு வளர்ச்சிக்கான மாற்று நிகழ்ச்சிநிரல்’ கருத்தரங்கில் முன்வைக்கப்பட்டது. தோழர் திரேந்திர ஜா முன்வைத்த இந்த வேண்டுகோள், அனைவருக்கும் வேலை வாய்ப்பு, நிலச்சீர்திருத்தம் ஆகியவை பீகார் மக்களின் பொருளுள்ள வளர்ச்சி நிகழ்ச்சிநிரலின் அடிப்படையாக இருக்கும் என்று அறுதியிட்டுச் சொன்னது. ரன்வீர் சேனா நடத்திய பாகல்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அடுத்தடுத்த படுகொலைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட வறிய தலித் மக்களுக்கு நீதி மறுக்கப்படுவதை அந்த வேண்டுகோள் முன்னிறுத்திக் காட்டியது.
மோடியும் நிதிஷ்குமாரும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்த முடிப்புகள் ஏமாற்று என்பதை சுட்டிக்காட்டிய பீகாரின் மக்கள் சார்பு வளர்ச்சிக்கான மாற்று நிகழ்ச்சிநிரல் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.
1. உச்சவரம்பு மற்றும் பூதான் நிலத்தை 22 லட்சம் வறிய விவசாய குடும்பங்களுக்கு மறுவிநியோகம் செய்வது, அனைவருக்கும் வீட்டுமனை, சாகுபடியாளர்கள் அனைவருக்கும் பதிவு, நில வாடகை நிர்ணயிப்பது, குத்தகைதாரர்களுக்கு அனைத்துவிதமான உதவிகள் உள்ளிட்ட, அனைத்தும் தழுவிய நிலம் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள்
2. விவசாய வளர்ச்சி: விரிவாக்கப்பட்ட நவீனமய பாசன வசதிகள், நீர் சேகரிப்பு, வெள்ளத் தடுப்பு ஆகியவற்றுக்கு உத்தரவாதம், விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் மானிய விலையில் வழங்குவது, கட்டுப்படியாகும் கடன், கட்டுப்படியாகும் விலை, மேம்படுத்தப்பட்ட கிட்டங்கி வசதிகள், உத்தரவாதமான கொள்முதல் மற்றும் சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் அமலாக்கம்.
3. கண்மூடித்தனமான, கட்டாய நிலப் பறிக்கு முற்றுப்புள்ளி.
4. கந்துவட்டியில் இருந்து விடுதலை.
5. அனைவருக்கும் வீட்டு வசதி.
6. அனைவருக்கும் உணவு.
7. அனைவருக்கும் கல்வி.
8. அனைவருக்கும் மருத்துவம்.
9. சுகாதாரமான, சுத்தமான சுற்றுச்சூழல்.
10. தொழில்மயமாக்கம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் மற்றும் பாரம்பரிய தொழில்களுக்கு அழுத்தம், அனைவருக்கும் வேலை, வாழ்வுரிமை, சமூகப் பாதுகாப்பு.
11. ஒவ்வொரு வீட்டுக்கும் மலிவான மின்சாரம்.
12. ஒவ்வொரு கிராமத்துக்கும் குக்கிராமத்துக்கும் சாலை மற்றும் பொதுப் போக்குவரத்து.
13. முற்போக்கு சமூக உணர்வை முன்நகர்த்த இளைஞர் கொள்கை மற்றும் கலாச்சாரக் கொள்கை.
14. அனைவருக்கும் சம வாய்ப்பு. சம நீதி.
15. ஏதுமற்றவர்களுக்கு, வளர்ச்சியில் நியாயமான, நீதியான பங்கு.
16. பெண்கள் உரிமை மற்றும் அதிகாரத் தில் நியாயமான பங்கு.
17. ஊழலற்ற ஆட்சி.
18. குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது, குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள், வறிய மற்றும் ஓரஞ்சாரத்துக்குத் தள்ளப்பட்ட மக்கள் என அனைவருக்கும் அச்சமற்ற, கவுரவமான வாழ்க்கை.
19. கூட்டுறவு திட்டங்களை விரிவுபடுத்துவது.
20. தொழில்முனைவோரை ஊக்குவிப்பது.
21. தேர்தல் சீர்திருத்தங்கள்.
இந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் ஓர் உணர்வுமிக்க பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளன. இந்தப் பிரச்சாரம் பீகார் மக்கள் மத்தியில் ஆர்வம்மிக்க ஆதரவும் பெறுகிறது.
கண்ணியத்தை காற்றில் பறக்க விட்ட நிறுவனங்கள்
சென்னையில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தனது பெண் மாணவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பின்வரும் கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளன.
லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், சட்டை, குட்டை குர்த்தா, முடிச்சுக்கள் போட்ட சட்டை, பின்னல் போடாத கூந்தல், பெரிய தோடு, மோதிரம், உயர குதிகால் செருப்பு, வலைப் பின்னல் வேலைப்பாடு கொண்ட ஆடைகள், கூந்தலுக்கு வர்ணமிடுதல், பெரிய கை கடிகாரம் போன்றவற்றுக்கு அனுமதியில்லை. துப்பட்டாவின் இரண்டு பக்கங்களும் ஊசியால் குத்தப்பட்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் தாழ்வாரத்தில் திரியக் கூடாது. செல்பேசி, பென்ட்ரைவ், சிம் கார்டு கொண்டு வரக் கூடாது. பேஸ் புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் இருக்கக் கூடாது. ஒதுக்கப்பட்ட மாடிப்படிகள், வழிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆண் மாணவர்களுடன் பேசக் கூடாது.
இது என்ன கல்லூரியா? சிறைச்சாலையா? ராணுவ தளமா? கல்வியாளர்கள் கல்லூரி நடத்தும் காலம் போய்விட்டதுதான். ஆனால், காவல்துறையினரும் ராணுவத்தினரும் கல்லூரி நடத்தினால் கூட இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்குமா? என்ன உடை, எப்படி உடுத்துவது என்பது வரை கட்டுப்பாடுகள் விதித்து இவர்கள் என்ன ஒழுங்கு கொண்டு வருவார்கள்? கல்லூரி படிக்கும்போது விதவிதமான, அன்றைய நவீன உடைகள் அணியாமல் வேறு எந்த பருவத்தில் அணிவார்கள்?
ஏதோ ஒரு விதத்தில் அதிகாரம் பெற்றவர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் முன்னே செல்லும் இயக்கப்போக்கை துரிதப்படுத்துவதற்கு மாறாக, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்செல்லும் சமூகத்தை பின்னுக்கு இழுக்கப் பார்க்கிறார்கள். ஸ்ரீசாய்ராம் கல்லூரி நிர்வாகம் தனது கல்லூரியில் பயிலும் பெண் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடுகள் முதல் பல்வேறு நடத்தைக் கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம், நாட்டில் பெருகி விட்ட கலாச்சாரக் காவலர்கள் வரிசையில் சேர்ந்து கொள்கிறது. பெண்களின் பாதுகாப்பு என்ற காரணம் காட்டி அவர்கள் நடமாட்டத்துக்கு தடை போடுகிறது.
சாதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமூகத்தில் விதிக்கப்பட்ட எழுதப்படாத விதிகள் போலவே பெண் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த விதிகளும் இருக்கின்றன. பெண்கள், ஆண்கள் கண்ணிலேயே படாமல் விதிக்கப்பட்ட பாதையில்தான் செல்ல வேண்டும் என்று சொல்வது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மேல்சாதியினர் கண்ணில் படாமல் விலகிச் செல்ல வேண்டும் என்று இருந்த விதியைப் போன்றதுதான். நவநாகரிக உலகில், நவீன கல்வி தருவதாகச் சொல்லும் கல்வி நிறுவனங்கள், நவீன, விஞ்ஞானபூர்வ சிந்தனையை, நடைமுறைகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு மாறாக, புரையோடிப் போயிருக்கிற நிலப்பிரபுத்துவக் கருத்துக்களை முன்னிறுத்தப் பார்க்கின்றன. கல்வி தனியார்மயம் பல விதங்களிலும் சனாதன பழக்கவழக்கங்களை மீட்டெடுக்கப் பார்க்கிறது.
இந்த விதிகளால் யார் கண்ணியத்தைக் காக்கப் போகிறார்கள்? பெண் மாணவர்கள் கண்ணியத்தையா? ஆண் மாணவர்கள் கண்ணியத்தையா? அல்லது கல்லூரியின் கண்ணியத்தையா? கல்லூரியின் கண்ணியத்தைக் காப்பதுதான் நோக்கம் என்றால், இந்த விதிகளே அதற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமனின் பாசக் கயிற்றுக்குக் கூட தப்பித்துவிடலாம்; இன்றைய சமூக ஊடகத்தின் பார்வையில் இருந்து எதுவும் தப்பிவிட முடியாது. ஸ்ரீசாய்ராம் கல்லூரி பெண் மாணவர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடுமையான சாடலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இப்போது நிர்வாகம் நாங்கள் அப்படி ஏதும் சொல்லவில்லை என்று சொல்கிறது.
புதியது கற்பிக்க வேண்டிய கல்வி நிறுவனம் பழமையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கும்போது, கிளுகிளுப்புக்காக நடத்தப்படும் பத்திரிகைகளிடம் கழிசடைக் கருத்துக்கள் தவிர தமிழக மக்கள் வேறு ஏதும் எதிர்ப்பார்க்க முடியாது. 25.09.2015 தேதிய குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியாகியுள்ள ‘லெக்கின்ஸ் ஆபாசம்? எல்லை மீறும் இளசுகள்’ கட்டுரை நாகரிக எல்லைகளைப் பற்றி சற்றும் அக்கறைப்படவில்லை. கருத்துக்கள், சொற்கள், கட்டுரை வடிவமைப்பு அனைத்திலும் லெக்கின்ஸ் ஆபாசம் பற்றிச் சொல்ல முற்பட்ட அந்தக் கட்டுரை மிகவும் ஆபாசமானது. தமிழ் வியாபார பத்திரிகைகளில் இதுபோன்ற ஓர் ஆபாசமான கட்டுரை இதுவரை வந்ததாக நினைவில்லை. கள்ளக்காதலனுடன் அழகி உல்லாசம் வகையிலான பதங்கள் நிறைந்து காணப்படும் தினத்தந்தி கூட இது போன்ற ஒரு கட்டுரை வெளியிட்டதாக நினைவில்லை.
சாதாரண மனிதர்கள் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் விசயங்களை பூதாகரமாக்கி, ஆண்களை சபலத்துக்கு உள்ளாக்குவதே பெண்களின் லட்சியம் என்ற சொத்தைக் கதைக்கு அலங்காரம் செய்து, பெண்களை குற்றவாளிகளாக்கி, கூண்டில் ஏற்றியிருக்கிறது அந்தக் கட்டுரை. கல்லூரிக்குச் செல்லும் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என்று யாரை யும் அந்தக் கட்டுரை விட்டுவைக்கவில்லை.
பெண்கள் பேண்ட் அணிந்து கொள்ளுங்கள், கூந்தலை குட்டையாக வெட்டிக் கொள்ளுங்கள், உங்களுக்குப் பிடித்தவர்களுடன் உறவு கொள்ளுங்கள், அடிமைகளாக இருக்காதீர்கள் என்று பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் காத்திரமான குரல் எழுந்துவிட்டது. 2015ல் ஆண்களின் ஒரு பிரிவே அந்தக் கருத்துக்களுக்கு பழகிவிட்ட சூழலில், பெண்களை அடிமைகளாக்குவது நாகரிகமற்ற செயல் என்று ஆண்கள் பலர், முற்போக்கு என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்களே கூட கூடிவிட்ட காலத்தில், பெண்களைப் பார்த்து, லெக்கின்ஸ் போடாதே என்கிறது குமுதம் ரிப்போர்ட்டர்.
இப்படிச் சொல்வது ஆக பிற்போக்கு என்றால், இதை நிறுவ அந்த இதழின் செய்தியாளர் எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் படுகேவலமானவை. பெண்களின் பின்புறத்தைத் தேடி அலைந்திருக்கிறார்கள். முகப்பு அட்டைப் பக்கத்திலும் உள்பக்கங்களிலும் இந்தக் கட்டுரைக்காக வெளியிடப்பட்டுள்ள படங்களை எடுக்க வேண்டுமானால், ஒருவர் கேமராவும் கையுமாக, லெக்கின்ஸ் அணிந்த பெண்களாகத் தேடி, அவர்கள் அணிந்துள்ள மேல்பாதி ஆடை காற்றில் பறந்து லெக்கின்ஸ் அணிந்த பின்புறம் எப்போது தெரியும் என்று அவர்கள் பின்னால் சுற்றித் திரிந்திருக்க வேண்டும். அது காற்றில் பறந்தபோது, படம் பிடித்திருக்க வேண்டும். அந்தப் பெண்களுக்கும் தெரியாமல் படம் பிடித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டும் பெண், இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண், சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் பெண், கடற்கரையில் நிற்கும் பெண் என சில பெண்களின் பின்புறத்தை நிழற்படம் எடுத்து வெளியிட்டு அதன் ஆபாச அம்சத்தை நிறுவியிருப்பதாக அந்தச் செய்தியாளர்/கட்டுரையாளர் கருதுகிறார். காற்றில் பறக்கும் மேலாடைக்காக காத்திருந்ததில் அவருடைய கண்ணியம், பத்திரிகை கண்ணியம் காற்றில் பறந்துவிட்டது. அந்தக் கட்டுரை அவருடைய ஆணாதிக்க வக்கிரப் பார்வையை தெளிவாகக் காட்டுகிறது.
கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெண்கள், 24 மணி நேரப் பணி என்று விதிக்கப்பட்ட காவல் துறை பெண்கள், இன்னும் வேறுவேறு பிரிவு பெண்கள், அவசரத்துக்கு கழிப்பறை தேடி அலைவது பற்றி, இது போன்ற கருத்து கொண்டவர்கள் என்றாவது அக்கறைப் பட்டிருப்பார்களா? பெண்களின் பின்புறங்கள் மீது காட்டும் அக்கறையை அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிக் காட்டுவது கண்ணியமாக இருக்கும்.
இந்த அநாகரிகத்தையொட்டி நடந்த மிகப் பெரிய நல்ல விசயம், ஆண், பெண் எனப் பலராலும் அந்தக் கட்டுரை கடுமையான விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானதுதான். என் பத்திரிகை என் உரிமை என்று குமுதம் ரிப்போர்ட்டர் சொன்னால், என் பேஸ்புக், என் ட்விட்டர் என் உரிமை என்று ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மட்டுமின்றி, சாதாரணர்களும் தங்கள் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்துள்ளார்கள்.
செல்பேசி வைத்துக் கொள்வது, பேஸ்புக், ட்விட்டரில் இருப்பது, விரும்பிய ஆடைகள் அணிவது, விருப்பப்படி அலங்காரம் செய்து கொள்வது, விரும்பிய ஆண்/பெண்/மூன்றாம் பாலின துணை தேடிக் கொள்வது, புகை பிடிப்பது, மது அருந்துவது, கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வது, இரவு நேரத்தில் தாமதமாக வீடு திரும்புவது, ஆண் நண்பருடன் வெளியே செல்வது ஆகியவை பற்றி யாராவது கேள்வி கேட்டால், பெண்கள், பெரிதாக அலட்டிக் கொண்டு விளக்கம் தரத் தேவையில்லை.
மோடியை, உட்டோவை தடுத்து நிறுத்துவோம்! உயர்கல்வியை பாதுகாப்போம்!
உலக வர்த்தக அமைப்பின் 160 உறுப்பு நாடுகள் இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்க இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக 2005ல் அறிவித்தது. அதாவது, சேவை வர்த்தகத்தில் கல்வியையும் இணைக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னது. வெளிநாட்டு பல்கலை கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை அமைக்க, அந்த நாடுகளின் பேராசிரியர்கள், இங்கு வந்து பாடம் நடத்தி அதற்கு தனியாக கட்டணம் வாங்கிச் செல்ல, வெளி நாட்டு கல்வி நிறுவனங்களில் அஞ்சல் மூலம் கல்வி பயில இந்த முன்வைப்புகள் வழிவகுக்கும். உயர்கல்வி, தொழில் என்ற வகையினத்தில் பிணைக்கப்பட்டுவிடும்.
இவற்றில் சில இப்போதும் உள்ள நடை முறைகள்தான். ஆனால், டிசம்பர் 15 - 18 தேதிகளில் நைரோபியில் நடக்கவுள்ள உட்டோ மாநாட்டில் இது இறுதி செய்யப்படுவது நாட்டின் உயர்கல்வியை முழுவதுமாக வர்த்தகமயமாக்கிவிடும். இந்திய அரசாங்கம், இங்கு வந்து உயர்கல்வி நிறுவனங்கள் துவங்கும் தனியார் நலன்களை பாதுகாத்தே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்திய மாணவர்கள் நலன்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசாங்கம் காட்டும் அக்கறை உயர்கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து வரும் மாணவர் தற்கொலைகளில் வெளிப்படுகிறது. இந்த நிலைமைகள் இன்னும் மோசமாவதற்கு 2005லேயே இந்திய அரசாங்கம் தெரிவித்த இந்த முன்வைப்புகள் இட்டுச் செல்லும்.
இந்திய அரசாங்கம் தெரிவித்திருக்கும் இந்த முன்வைப்புக்களை டிசம்பரில்
நடக்கவுள்ள உட்டோ மாநாட்டுக்குள் திரும்பப் பெறவில்லை என்றால், அந்த முன்வைப்புக்களை இந்திய அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கருதப்பட்டு, இந்திய அரசாங்கம் அது தொடர்பான சரத்துக்களை, நிபந்தனைகளை அமலாக்க நேரிடும். கனடா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இந்த ஒப்பந்த எல்லைகளுக்குள் கல்வியை கொண்டு வர மறுத்துவிட்டன.
இந்தியாவின் முன்வைப்புகள் ஒப்பந்தங்ளாகிவிட்டால், நாட்டின் கல்வி தொடர்பான கொள்கை பிரச்சனைகளில், உட்டோவில் ஒப்புக்கொண்டபடி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என்று உட்டோவின் தொழில் கொள்கை பரிசீலனை பொறியமைவு, வருடாந்திர பரிசீலனை மேற்கொள்ளும். மத்திய, மாநில அரசுகள் கல்வி தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏதும் கொண்டு வர விரும்பினால், அதுவும் அந்த கட்டுப்பாட்டு பொறியமைவின் ஒப்புதலுடன் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த முன்வைப்புகள் ஒப்பந்தமானால், அரசாங்கம் அரசு மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு சம அளவில் மானியம் தர வேண்டியிருக்கும். இதற்கு சம ஆடுகளம் உருவாக்குவது என்று பெயர் சொல்கிறார்கள். கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மோடி அரசாங்கம் நிதிஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டு வரும்போது, இந்த முன்வைப்பு மேலும் அதைக் குறைக்க வழிகோலும்.
நாட்டில் உள்ள 30,000 கல்லூரிகள், 700 பல்கலை கழகங்கள், அய்அய்டி, அய்அய்எம், மருத்துவ கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் என, பள்ளிக் கல்விக்கு மேல் உள்ள அனைத்தும் இந்த முன்வைப்புகள் ஒப்பந்தமானால் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
பல்கலை கழகங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் இல்லை என்ற நிலை வரும்போது பல்கலை கழகங்கள் தங்கள் செலவுகளை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, அரசு முழுமையாக தனது பொறுப்பில் இருந்து விலகிவிடும். விளைவாக, உயர்கல்வி முழுக்க முழுக்க தனியார்மயமாக்கப்பட்டு, மொத்த சுமையும் மாணவர்கள் மீது, நாட்டு மக்கள் தலையில் ஏற்றப்படும்.
அனைத்தும் வர்த்தகமயமாகிவிட்ட பிறகு, ஆராய்ச்சிப் பணிகள் முதல் அனைத்து உயர் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு, கல்வி தொடர்பான விசயங்களில் உட்டோ கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட நேரும். தனியார் நிறுவனங்கள்தான் உயர்கல்வி தர முடியும் நிலை வந்த பிறகு, கட்டணத்தை மட்டுமின்றி, பாடத் திட்டத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தீர்மானிக்கும். இன்றைய நிலைமைகளிலேயே, உயர்கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதன் மீதுதான் அழுத்தம் கொண்டுள்ளன. இந்த இயக்கப் போக்கை முழுமையாக்கும் நடவடிக்கைகள் சட்டபூர்வமாகும்.
பாஜக, ஆர்எஸ்எஸ்காரர்களை கல்வி நிறுவனங்களின் தலைமைப் பதவிகளில் அமர்த்துவதன் மூலம் நாட்டின் உயர்கல்வியை காவிமயமாக்க, மத்தியில் ஆட்சியில் உள்ள காவி கும்பல் அனைத்தும் தழுவிய முயற்சிகள் மேற்கொண்டு இருக்கும்போது, உயர்கல்வியை முழுமையாக கார்ப்பரேட்மயமாக்கும் நடவடிக்கைகளும் அக்கம்பக்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது நாட்டின் எதிர்காலத்தை இருண்மைவாத இருளில் தள்ளும் முயற்சியேயன்றி வேறல்ல.
இந்த முயற்சிகளை முறியடிக்க, டிசம்பரில் நைரோபியில் நடக்கவுள்ள உட்டோ மாநாட்டுக்கு முன் இந்தியா கல்வியை ஒரு தொழிலாக சர்வதேச வர்த்தகத்துக்குத் திறந்துவிடும் தனது முன்வைப்புக்களை கைவிடக் கோரி நாடு முழுவதும் உள்ள ஜனநாயக இயக்கங்கள் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
கல்வி உரிமைக்கான அகில இந்திய மேடை என்ற இந்த அமைப்பில் அகில இந்திய மாணவர் கழகமும் ஓர் அங்கமாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினத்தன்று, உட்டோவே வெளியேறு என்ற முழக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அகில இந்திய மாணவர் கழக அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான தோழர் சுசேதா தே தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இயக்கத்தின் அடுத்த கட்டமாக, பகத்சிங் பிறந்த தினமாக செப்டம்பர் 28 முதல் அக்டோ பர் 2 வரை, ‘மோடியை தடுத்து நிறுத்துவோம், உட்டோவை தடுத்து நிறுத்துவோம், கல்வியை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் ஒரு வார கால பிரச்சார இயக்கம் கட்டமைக்கப்படுகிறது. நவம்பர் 1 முதல் 10 வரை மாநிலங்களில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இறுதியாக டிசம்பர் 13 முதல் 18 வரை டில்லியில் ‘ஆறு நாட்கள் எதிர்ப்பு முகாம்’ நடத்தப்படுகிறது.
உட்டோவிடம் இருந்து உயர் கல்வியைப் பாதுகாக்க வீதிகளில் இறங்குவோம்.