வாள்
வீசும் வீராங்கனையா?
எஸ்.குமாரசாமி
தொலைக்
காட்சிகளும் செய்தித்தாள்களும்,
ஜெயலலிதா ஒரு வலுவான
உறுதியான மத்திய
அரசு எதிர்ப்புப்
போராளி என்ற பிம்பத்தைக்
கட்டி எழுப்ப முயல்கின்றன.
தேசிய சூழலும்
அதற்குச் சாதகமாகவே
இருக்கிறது. காங்கிரஸ்
மெகா ஊழல்களில்
மீள முடியாமல்
சிக்கி உள்ளது
மேலும் மேலும்
சரிகிறது. உத்தரபிரதேசத்தில்
நான்காவது இடத்திற்குச்
சென்றது. பஞ்சாபில்
பதவியில் இருப்பவர்கள்
எப்போதுமே தோற்பார்கள்
என்ற வழக்கம்,
காங்கிரஸ் தோல்வியால்
தோல்வியடைந்தது.
ஆந்திராவில் பதவியில்
இருக்கும்போதே,
இடைத் தேர்தல்களில்
7 இடங்களிலும்
தோல்வியைத் தழுவியது.
காங்கிரஸ் தோல்வி
பாஜகவின் வெற்றியாக
மாறவில்லை என்பது
மட்டுமே, காங்கிரசுக்கு
கிடைத்த அதிகபட்ச
ஆறுதல். பின்கதவு
பேரங்கள், நாடாளுமன்ற
நிழல்சண்டை என்ற
முதலாளித்துவ
அரசியல் நடவடிக்கைகள்
மூலம் காங்கிரஸ்
தன்னை நீண்ட காலத்துக்கு
காப்பாற்றிக்
கொள்ள முடியாது.
காங்கிரஸ்
ஆட்சியின் மீதான
மக்கள் சீற்றம்
அதிகமாக அதிகமாக,
கூட்டணிக் கட்சிகளின்
நிர்ப்பந்தமும்
அதிகரிக்கிறது.
சரத்பவார் கூட,
மன்மோகன் கூட்டணிக்
கட்சிகளை குறை
சொல்வது முறையல்ல
எனச் சலித்துக்
கொள்கிறார். மம்தா,
கொல்கத்தாவில்
இருந்து காய் நகர்த்த,
ரயில்வே பட்ஜெட்
தயாரித்து வாசித்த
தினேஷ் திரிவேதி
பதவி விலகுகிறார்.
அவர் உயர்த்திய
ரயில் கட்டணங்களை
அவரிடத்திற்கு
வந்த முகுல் ராய்
குறைத்து அறிவிக்கிறார்.
கைப்புள்ள கருணாநிதி
கூட, ஜெனிவா தீர்மானத்திற்கு
ஆதரவாக வாக்களிக்காவிட்டால்
மத்திய அமைச்சரவையில்
இருந்து வெளியேறுவதாகக்
குறிப்பால் உணர்த்துகிறார்.
தமிழ்நாட்டில்
சங்கரன்கோயில்
இடைத் தேர்தல்
முடிவு அஇஅதிமுகவிற்குப்
பிரம்மாண்டமான
வெற்றி எனச் சொல்லப்படுகிறது.
கடந்த ஆட்சிக்
காலத்தில், ஜெயலலிதா,
நொந்துபோய் ஒரு
முறை இடைத் தேர்தலில்
போட்டியிடாமல்
போனதும், பென்னாகரத்தில்
வைப்புத் தொகையை
இழந்ததும் தமிழக
மக்களுக்கும்
நினைவில் உள்ளது.
ஜெயலலிதாவும்
மறந்திருக்க மாட்டார்.
பதவிக்கு வந்ததிலிருந்தே
தொடர்ந்து மக்களின்
எதிர்ப்புப் போராட்டங்களைச்
சந்தித்து வரும்
ஜெயலலிதா, ஒருபுறம்,
கூடங்குளத்தில்
ஒடுக்குமுறை ஆயுதத்தைக்
கூர் தீட்டியுள்ளார்.
மறுபுறம், மதிப்பிழந்து
நிற்கும் மத்திய
அரசை எதிர்ப்பதாகக்
காட்டிக் கொள்கிறார்.
மாநில சுயாட்சி,
மாநிலங்களின்
அதிகாரம் என்பவற்றை
எழுப்புகின்ற
தளம் இப்போது வெகுவாக
மாறிவிட்டது. ஆட்டுக்குத்
தாடியும் நாட்டுக்கு
ஆளுநரும் அவசியம்
இல்லை என அண்ணாத்துரை
போன்றவர்களைச்
சொல்லவைத்த, மாநில
அரசுகளைக் கலைக்கும்
அதிகாரம் கொண்ட
356 என்ற அரசியல மைப்புச்
சட்டப்பிரிவு
கொலை வாள், உச்சநீதி
மன்றம் எஸ்.ஆர்.பொம்மை
வழக்கில் வழங்கிய
தீர்ப்புக்குப்
பின், துருப்பிடித்து
பரணில் போடப்பட்டுள்ளது.
நரசிம்மராவ் காலத்திற்குப்
பின், மாநிலங்களில்
செல்வாக்குள்ள
கட்சிகளோடு சேர்ந்துதான்,
பாஜகவும் காங்கிரசும்
மத்தியில் ஆட்சி
அமைக்கின்றன. மாநில
அரசுகள், உலகமய
தாராளமய தனியார்மய
கொள்கைகளைத் தாம்
பின்பற்ற அமல்படுத்த,
மத்திய அரசு தமக்கு
கூடுதல் அதிகாரம்
வழங்கக் கோருகின்றன.
ஆளும் வர்க்கங்களிடையே
முரண்பாடு வருவதும்,
ஆளும் வர்க்கக்
கட்சிகளிடையே
முரண்பாடுகள்
எழுவதும், அதிகாரங்கள்
குவிந்துள்ள மத்திய
அரசை நோக்கி எமக்குக்
கூடுதல் பங்கு
கொடு என மாநிலங்கள்
கோருவதும் மிக
மிக இயல்பானதே.
மாநில அரசுகள்
அடிப்படையான விசயங்களில்
மத்திய அரசோடு
கொண்டிருக்கும்
இணக்கமே முதன்மையானது,
அவ்வப்போது எழும்
உரசல்கள் துணையானவையே.
நச்சு மரம் செழித்துவளர
உதவி, அதேபோன்ற
நச்சு மரத்தை தத்தமது
மாநிலங்களில்
விதை போட்டு வளர்ப்பவர்கள்,
மத்திய அரசின்
நச்சு மரத்தின்
ஒரு சில காய்கள்
மோசமானவை எனக்
கூப்பாடு போடுவது,
போலி வேடமே.
ஜெயலலிதா
மத்திய அரசு பின்பற்றும்
பொருளாதாரக் கொள்கைகளின்
தொகுப்பை எதிர்க்கிறாரா?
மாற்றுக் கொள்கைகளை
முன்வைக்கிறாரா?
சொத்துக் குவிப்பு
வழக்கைச் சந்திக்கும்
நேரத்தில் சசிகலாவைக்
கழற்றிவிட்ட ஜெயலலிதா,
முதலாளித்துவ
வளர்ச்சிப்பாதைக்கு
வழிவகுக்கிறாரா?
அல்லது மக்கள்
சார்பு வளர்ச்சித்
திட்டங்களை முன்வைக்கிறாரா?
இந்தக்
கேள்விகளுக்கு
விடை காண, பொய்மைத்
தோற்றங்களை ஊடுருவி,
நடைமுறை என்ற உரைகல்லில்
உண்மையை உரசிப்
பார்த்து அறிய
வேண்டும். ஜெயலலிதாவின்
விஷன் 2023, அதாவது
தொலை நோக்குத்
திட்டம் 2023அய் ஊடுருவிப்
பார்த்தால் உண்மை
வெளி வரும்.
வாள்
மத்திய அரசிற்கு
எதிராக வீசப்படவில்லை.
மக்களுக்கு எதிராகவே
வீசப்படுகிறது.
v 2023ல்
வறுமை ஒழியும்.
பட்டினியும் இல்லாமையும்
காணாமல் போகும்.
v மாநிலத்தின்
மொத்த உற்பத்தி
மதிப்பு வருடாவருடம்
11 சதம் உயரும்.
v 2023ல்
தமிழ்நாட்டு மக்களின்
சராசரி ஆண்டு வருமானம்
ரூ.4,50,000 ஆகும்.
v தயாராய்
முன்வரும் அனைவருக்கும்
வேலை கிடைக்கும்.
v நலிந்தவர்கள்
பலவீனமானவர்கள்
மீது கவனம் செலுத்தப்படும்.
இப்படியாக,
விஷன் 2023ன் சமூக
பொருளாதார முன்னேற்றங்கள்
அமையும் என்கிறார்
ஜெயலலிதா. ‘வறுமை
ஒழிப்பு’ இந்தியா
எங்கும் உள்ள ஆட்சியாளர்களின்,
குறிப்பாக சர்வாதிகாரத்தை
நோக்கி வேகமாகச்
செல்பவர்களின்
இயல்பான முழக்கம்.
அவப்புகழ் பெற்ற
அவசர நிலைப் பிரகடனம்
கொண்டுவந்த இந்திராகாந்திதான்,
கரீபி ஹடாவோ (வறுமையே
வெளியேறு) என்ற
முழக்கத்தை எழுப்பினார்.
இந்தியாவே இந்திரா,
இந்திராவே இந்தியா
எனச் சொல்லப்பட்டார்,
வரலாற்றின் குப்பைத்
தொட்டியில் வீசியெறியப்பட்டார்.
நமது அம்மையாருக்கும்
அந்த வாய்ப்பை
வரலாறு இரு முறை
வழங்கியுள்ளது.
மூன்றாவது முறையும்
இந்த வாய்ப்பைப்
பெற அம்மையார்
உறுதி பூண்டுள்ளார்.
வரலாற்று விதிகளை,
மனிதர்களால் மாற்ற
முடியுமா?
இந்திரா
காந்தியின் வறுமை
ஒழிப்பு வறியவர்
ஒழிப்பில்தான்
முடிந்தது. இன்றும்
மத்திய அரசு, புள்ளி
விவரக் கணக்கின்
மூலம், கோடிக்கணக்கான
வறியவர்களின்
வறுமையை ஒரே போடாய்ப்
போட்டு ஒழித்து
விட்டது. ரூ.26, ரூ.32
என உச்ச நீதிமன்றத்தில்
வறுமைக் கோட்டு
எல்லையைச் சொல்லி,
நாடெங்கும் வாங்கிக்
கட்டிக் கொண்ட
பின்பும், தன்
முயற்சியில் சற்றும்
சளைக்காத விக்கிரமாதித்தன்
போல், நகரத்தில்
ரூ.28.65, கிராமத்தில்
ரூ.22.40 என மீண்டும்
வறுமைக் கோட்டை
குறைத்துக் காட்டுகிறது.
ஜெயலலிதா, இது
போன்ற செப்பிடு
வித்தைக் கணக்குக்
காட்டி வறுமையை
ஒழிக்க போகிறாரா?
பத்தாண்டுகளில்
ரூ.15 லட்சம் கோடி
பணம் தமிழ் நாட்டில்
பாயும், தேனாறும்
பாலாறும் ஓடும்,
அள்ளி அள்ளிக்
குடிக்கலாம் என
முதல்வர் அழைப்பு
விடுக்கிறார்.
தமிழகத்தையே ஒரு
பெரும் தொழில்
குழும நிறுவனமாக்கி,
அதன் தலைவராக தாமே
மாறி, தன் அறிவார்ந்த
திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி, பூஜ்ஜியங்களில்
ராஜ்ஜியம் என சொற்
சிலம்பம் ஆடி,
2023 திட்டத்தின்
பொருளாதார சமூக
அரசியல் சாரத்தின்
பக்கத்தில் கூட
போக மறுத்து விட்டார்.
ஜெயலலிதா சொல்கிற
ரூ.15 லட்சம் கோடியில்
2010ல் 15 சதமாக இருக்கிற
தனியார் பங்கு,
2023ல் 42 சதமாக வளர்கிறது.
அதாவது அரசு – தனியார்
கூட்டு முயற்சியில்
தனியார் அள்ளிக்
கொண்டு போவதை ஊக்கப்படுத்தும்
ஒரு தொலை நோக்குத்
திட்டம்!
சலுகைகளை
அள்ளித் தராமல்,
உள் கட்டுமான வசதிகளைப்
பெருக்கி, போட்டியிடும்
திறனை உயர்த்தி,
ஆசியாவில் முதல்
மூன்று பெரிய முதலீட்டு
சிறப்பு மய்யங்களில்
ஒன்றாக தமிழகத்தை
மாற்றப் போகிறாராம்.
நாட்டு நடப்பு.
ஜெயலலிதாவையே
சலுகைகளை அள்ளித்
தரப் போவதில்லை
எனச் சொல்ல வைத்துள்ளது,
நல்ல விசயம்தான்.
போட்டியிடும்
திறன் முதலாளித்துவத்தில்
உயர வேண்டுமானால்,
அது கூலி குறைய
லாபம் உயரும்,
லாபம் உயர கூலி
குறையும் என்ற
மார்க்சிய விதியால்
மட்டுமே சோதிக்கப்பட
முடியும். பன்னாட்டு
இந்நாட்டு மூலதனத்திற்கு,
குறைவான கூலிக்கு
ஒரு பெரும் உழைப்புப்
பட்டாளத்தைக்
காவு கொடுக்கப்
போகிறார் என்றுதான்
பொருளாகும். பூனை,
பையை விட்டு, வெளியே
குதித்து விடுகிறது.
2023ல் 2கோடி தொழிலாளர்கள்
இருப்பார்களாம்.
அவர்களில் அதிஉயர்திறனில்
20 லட்சம் முதல்
40 லட்சம் வரை இருப்பார்கள்.
முறை சார்ந்த நடுநிலை
- இளநிலை கல்வி
கற்றவர்கள் 68 லட்சம்
முதல் 78 லட்சம்
பேர்வரை இருப்பார்களாம்.
குறைந்தபட்சத்
திறன்பெற்ற அதாவது,
அன்ஸ்கில்டு என
குறிப்பிடப்படும்
திறனற்றோர் 1.2 கோடி
முதல் 1.3 கோடி பேர்
வரை இருக்கிறார்களாம்.
இந்த ஸ்கில்/திறன்
பிரமிட்டில் கீழ்
நிலையில் இருப்பவர்களுக்கு
நுழைவு நிலை வேலையே
கிடைக்கும். தற்காலிக,
ஒப்பந்த, பயிற்சிப்
பணியாளர்கள், நிரந்தரத்
தொழிலாளர் என்ற
உழைக்கும் மக்கள்
மத்தியிலான பிரிவினையில்
இருந்து முதலாளித்துவ
லாபமும் செல்வமும்
பெருகும். இது,
தொழிலாளர் ‘ஒளிமயமான
எதிர்காலம்’ தொடர்பான,
தொலை நோக்குத்
திட்டம் 2023!
சரி, அப்படியானால்,
சிறு குறு ஏழை
நடுத்தர விவசாயி,
மற்றும் விவசாயத்
தொழிலாளர் உள்ளிட்ட
கிராமப்புறத்
தொழிலாளர்களின்,
விவசாயத்தின்
எதிர்காலம் எப்படி
இருக்கும்? விளைச்சல்
நிலம் அதிகரிக்காது.
40% மக்கள் நம்பியிருக்கும்
விவசாயத்திற்கு
ரூ.15 லட்சம் கோடியில்,
வெறும் ரூ.40,000 கோடி
ஒதுக்கப்படும்.
முப்பத்தி ஏழரை
ரூபாய்க்கு ஒரு
ரூபாய். 2.33% ஒதுக்கப்படும்.
இதுதான் விவசாயிகளைக்
காக்கும் சமூக
நீதி. இந்த ரூ.40,000
கோடிலும் ரூ.16,000 கோடி,
கிணறு குளம் வாய்க்கால்
சுத்தப்படுத்த
ஒதுக்கப்படும்.
மீதமுள்ள ரூ.24,000 கோடி
விவசாயத்தில்
நுழையும். முதலாளித்துவத்தின்
கோரப் பசி விழுங்கும்.
விஷன் 2023 தயக்கமில்லாமல்
மாநில உள்நாட்டு
உற்பத்தி மதிப்பில்
விவசாயம் உள்ளிட்ட
முதல் நிலைத் துறையின்
பங்கு சரி பாதியாகக்
குறையும் என்கிறது.
கிராமங்களில்
வாழ முடியாதவர்கள்,
1.2கோடி/1.3கோடி திறனற்ற
தொழிலாளர்களாக
மாறுவார்கள். கிராமங்களில்
வேலை செய்ய ஆள்
கிடைக்காததால்
எந்திரமயமாக்கம்
அத்தியாவசியமானது
என்று சொல்பவர்,
எந்திரமயமாக்கம்,
இருக்கும் கொஞ்சநஞ்ச
வேலையையும் பறிக்கும்
என்பதைச் சொல்லாமல்
மறுக்கிறார். சொட்டு
நீர்ப்பாசனம்,
உற்பத்தித் திறன்
உயர்வு, முதலாளித்துவ
நுழைவு, ஒப்பந்த
விவசாயம், பணப்பயிர்
பெருக்கம் என்ற
பட்டியல், நலிந்து
கொண்டிருக்கும்
விவசாயத்தை மரணப்
படுக்கைக்குத்
தள்ளும்.
தொலைநோக்கு
திட்டம் 2023, குடிசைகள்
இல்லா கிராமங்கள்,
சேரிகள் இல்லா
நகரங்கள், அனைவருக்கும்
குடிநீர் கழிவறை,
பத்து மெகா நகரங்கள்
எனக் கனவுத் தொழிற்சாலை
ஒன்றை கட்டப் பார்க்கிறது.
இந்தத் தோற்ற மாயையில்
25 லட்சம் வீடுகள்
கட்டப்படும் என்ற
காட்சிப் பிழையும்
சேர்க்கப்படுகிறது.
மருத்துவ
சுற்றுலா மய்யம்
என்பதில் சென்னை
வேலூர் கோவை போன்ற
நகரங்கள் புதிய
சிகரங்களைத் தொடும்
என்று சொல்லும்போது,
அரசு சலுகைகளை
கடைசி சொட்டு வரை
உறிஞ்சிக் கொண்டு,
பணியாளர்களின்
சான்றிதழ்களைக்
கைப்பற்றி பாண்டுபத்திர
அடிமைகளாக்கி,
குறைந்த கூலி தரும்,
பெருநிறுவன மருத்துவமனை
முதலாளிகளின்
கனவுக் கோட்டைகளுக்கு
அஸ்திவாரம் போடுகிறார்.
தமிழ்நாட்டில்
7.2 கோடி பேர் உள்ளனர்.
12.5 சதம் வேலையின்மை
உள்ளது எனச்சொல்லும்
2023க்கானத் திட்டம்,
ரூ.32,000 கோடி முதலீட்டில்
7 லட்சம் பதிவு
பெற்ற சிறு நடுத்தர
துறைகளில் 55 லட்சம்
தொழிலாளர்கள்
உள்ளனர் எனச் சொல்லும்
திட்டம், கிராமப்புற
நகர்ப்புற உழைக்கும்
மக்கள் நலன்காக்க
குறிப்பாக ஏதும்
சொல்லவில்லை.
நிலக் கையிருப்பு
அளவு குறைவாக இருப்பது
உற்பத்தித் திறன்
குறைவதற்கான காரணம்
எனப் புலம்பும்
திட்டம், விளை
நிலங்கள் காப்பாற்றப்படும்,
பொருளுள்ள நிலச்
சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளப்படும்,
ஆளுக்கு 2 ஏக்கர்
நிலம், குறைந்த
விலையில் இடுபொருள்,
கட்டுப்படியாகும்
கொள்முதல், விவசாய
உள்கட்டுமான வசதிகள்
பெருக்கக் கூடுதல்
நிதி ஒதுக்குவது
ஆகியவை பற்றிப்
பேச மறுக்கிறது.
வீட்டில் இருவருக்கு
ஆண் டிற்கு 200 நாட்கள்
வேலை, நாளுக்கு
ரூ.300 கூலி பற்றி
பேச மறுக்கிறது.
தொழிலாளர்களுக்கு
மாதம் ரூ.15,000 குறைந்தபட்ச
கூலி, பயிற்சி
ஒப்பந்த முறை ஒழிப்பு,
தொழிற்சங்க உரிமை
பாதுகாக்க தொழிற்சங்க
அங்கீகாரச் சட்டம்
பற்றிப் பேச மறுக்கிறது.
உழைக்கும் மக்களின்
2023க்கான சொந்தத்
திட்டத்திற்கு,
ஜெயலலிதா 2013ல் விஷம்,
2023ல் விருந்து எனப்
பதில் சொல்கிறார்.
அவருடைய வாள் மத்திய
அரசு வழி நின்று
மக்கள் மீது வீசப்படுகிறது.
மக்கள்
விரோதத் தன்மைக்கு
வலுசேர்க்க சர்வாதிகாரம்
ராஜபக்சே
முள்ளிவாய்க்காலில்
செய்தது போல்,
கூடன்குளத்தில்
இடிந்தகரையில்
சொந்த நாட்டு மக்கள்
மீது போர் தொடுக்கப்
பட்டுள்ளது. தேசத்
துரோக வழக்குகள்
ஜோடிக்கப்படுகின்றன.
‘அந்நியக் கைகள்’
எனப் பூச்சாண்டி
காட்டப்படுகிறது.
இடிந்தகரை மக்கள்,
உழைத்து உரமேறிய
இந்தியக் கைகளுக்குச்
சொந்தக்காரர்கள்.
மத்திய மாநில அரசுகளைப்
போல் ஏகாதிபத்தியத்திற்கும்
அந்நிய நிறுவனங்களுக்கும்
பல்லக்கு தூக்குபவர்கள்
அல்ல. இப்போது
புதிதாக மாவோயிஸ்ட்
தீவிரவாதத் தொடர்பு
என்ற பிரச்சாரம்
துவங்கியுள்ளது.
போராடுகிற மக்கள்
விவரமற்றவர்கள்
என்று மீண்டும்
மீண்டும் சொல்லப்
பார்க்கிறார்கள்.
தற்போதைய காவல்துறைத்
தலைவர், நேற்றைய
நக்சல் எதிர்ப்பு
கியூ பிரிவு கண்காணிப்பாளர்.
உதயகுமார் மற்றும்
அவர் சக போராளிகளின்
கவலைகளை கருத்துக்களைப்
பொறுமையாக கேட்டுக்
கொண்டு, அச்சம்
போக்காமல் அடுத்த
வேலையைத் துவங்குவது
நல்லதல்ல என மத்திய
அரசுக்கு சொன்னபோது,
இனியன் குழு அறிக்கைக்குப்
பிறகு போராட்டக்காரர்களைச்
சந்தித்தபோது,
அம்மையாருக்கு,
காவல்துறைக்கு
மாவோயிஸ்ட் தொடர்பு
பற்றித் தெரியாமல்
போய்விட்டதா?
லோக்பால்
மசோதாவுக்கு கூடுதல்
அதிகாரம் வழங்க
மறுக்கும் அய்முகூ
அரசாங்கம், தேசிய
தீவிரவாதத் தடுப்பு
மய்யத்துக்கு
அமெரிக்காவின்
சிஅய்ஏ, எஃப்பிஅய்
ஆகியவற்றுக்கு
உள்ளது போல கூடுதல்
அதிகாரங்கள் வழங்குகிறது.
தேசிய தீவிரவாதத்
தடுப்பு மய்யம்
வேண்டாம் என்று
சொல்லும் ஜெயலலிதாவும்
சற்றும் குறைவற்ற
ஒடுக்குமுறையையே
கூடங்குளம் மக்கள்
மீது தொடுத்திருக்கிறார்.
குளிரூட்டும்
பணி ஒரு மாதத்தில்
துவங்கும், இரு
மாதங்களில் மின்
உற்பத்தி துவங்கும்
என மத்திய அமைச்சர்
நாராயணசாமி சொன்ன
விசயங்களே, தமிழகத்தின்
மின் தேவையில்
கூடங்குளத்தின்
பங்கு பற்றிய உண்மையை
தமிழக மக்களுக்கு
வெகுசீக்கிரத்தில்
புலப்படுத்தும்.
மக்கள் சக்தியும்
அணு சக்தியும்
மோதி நிற்கின்றன.
மக்கள் சக்தி வென்றாக
வேண்டும். தமிழகமெங்கும்
இந்தியா எங்கும்
எழும்பும் கண்டனக்
குரல்கள் ஓங்கி
ஒலிக்கட்டும்.
2023 தொலை நோக்குத்
திட்டம் முன்வைக்கும்
முதலாளித்துவ
வளர்ச்சிப் பாதையை
2013லேயே மக்கள் சார்பு
வளர்ச்சித் திட்டங்களுக்கான
உழைக்கும் மக்கள்
போராட்டங்கள்
மூலம் முறியடிப்போம்.
தமிழக
அரசின் நிதிநிலை
அறிக்கை: எல்லா
நிதியும் முதலாளிகளுக்கே
ஆட்சிக்கு
வந்தவுடன் ரூ.4,500
கோடி வரிச்சுமையை
மக்கள் மீது சுமத்திய
அஇஅதிமுக அரசாங்கம்
இந்த நிதிநிலை
அறிக்கையில் ரூ.1,500
கோடிக்கு வரிகளை
உயர்த்தியுள்ளது.
விவசாயத்துக்கு
இதுவரை இல்லாத
அளவு ரூ.3,804.96 கோடி
ஒதுக்கப்பட்டுள்ளதாக
சொல்லியுள்ள நிதிநிலை
அறிக்கை, அடுத்த
6 மாதங்களில் ரூ.20,000
கோடி முதலீடு வரவுள்ளதால்
தொழிலுக்கு 20,000 ஏக்கர்
நிலம் நிலவங்கியில்
திரட்டப்படும்
என்கிறது. அத்துடன்
பத்திரப் பதிவு
கட்டணம் 6 சதத்தில்
இருந்து 5 சதமாகக்
குறைக்கப்படும்
என்கிறது. விஷன்
2023ல் சொல்லப்பட்டுள்ள
அம்சங்களுடன்
சேர்ந்து இவற்றைப்
பார்த்தால் நிதிநிலை
அறிக்கை பெருநிறுவனங்கள்
பக்கம் என்று தெளிவாகத்
தெரியும். இன்னொருபுறம்
ரூ.4,000 கோடி பயிர்க்கடனுக்காக
ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருமளவில் நிலம்
வைத்திருப்பவர்கள்
இதை வாங்குவார்கள்.
சரியாக திருப்பிச்
செலுத்தினால்
வட்டி இல்லை; திருப்பிச்
செலுத்தவே இல்லை
என்றால், நம்நாட்டு
வழக்கப்படி பிறிதொரு
நாள் ஏழை விவசாயிகள்
பெயர் சொல்லி கடன்
தள்ளுபடி அறிவிப்பு
ஒன்று வரும். இப்படியாக,
பெருநிறுவனங்களின்,
கிராமப்புற பணக்காரர்களின்
தேவைகளை ஜெயலலிதா
அரசின் நிதிநிலை
அறிக்கை பூர்த்தி
செய்யும்.
முதலமைச்சர்
அனைத்தும் தழுவிய
மருத்துவக் காப்பீட்டுத்
திட்டத்துக்கு
ரூ.750 கோடி போன்ற
வகையினங்களில்
உள்ள ஒதுக்கீடுகள்
அக்கம்பக்கமாக
இருக்கிற முதலாளிகளை
கவனித்துக் கொள்ளும்.
மடிக்கணிணிக்கான
ரூ.1,500 கோடி அந்த பெருநிறுவனங்களுக்குப்
போகும் என்பது
நமக்குத் தெரியும்.
நாட்டுப்புற
நகர்ப்புற வறிய
மக்களுக்கு அத்தியாவசியப்
பொருட்கள் விலைச்சுமையில்
இருந்து நிவாரணம்
என்ற பொருளில்,
103 பக்க அறிக்கையில்
எதையும் காண முடியவில்லை.
60,000 வீடுகள், 12,000 மாடுகள்,
1.5 லட்சம் ஆடுகள்...
இவற்றுடன் நாட்டுப்புற
வறிய மக்கள் திருப்தியுற
வேண்டும். நகர்ப்புற
வறிய மக்களுக்கு
அதுவும் இல்லை.
விலையில்லா, அதேநேரம்
தரமில்லா அரிசி
மட்டும் 20 கிலோ
வரை கிடைக்கும்.
மொத்தத்தில் பெரும்பான்மை
உழைக்கும் மக்களைப்
பொறுத்தவரை வெந்ததைத்
தின்று விதி வந்தால்
மடியுங்கள் என்ற
அலட்சியம் தமிழக
அரசாங்கத்தின்
2012 - 2013 நிதிநிலை அறிக்கையில்
வெளிப்படுகிறது.