COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 3, 2012

Apr-1-2

தலையங்கம்

ஜெனிவா தீர்மானமும் இந்திய, தமிழக அரசியலும்

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் ஒரு கபட நாடகம் நடந்து முடிந்துள்ளது. அய்க்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் மார்ச் 22 அன்று ஜெனிவாவில் நடைபெற்றது. சிறீலங்கா தமிழினப் பிரச்சினையோடு தொடர்புடைய ஒரு தீர்மானத்தில் இந்தியா சிறீலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறிக் குரல் கொடுத்தார்கள். உன்னாலல்ல, என்னால்தான், என இருவரும் பெருமை பேசினார்கள். 47 நாடுகளில் இந்தியா உட்பட்ட 24 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தவுடன், இரண்டு பேருமே நல்லபடியாக முடிந்து விட்டது, என நிம்மதி தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன், மறுநாளே இந்திய அரசின் நிலைபாட்டை ஓர் அறிக்கையின் மூலமாகவும், ராஜபக்சேவுக்கு எழுதிய ஒரு கடிதம் மூலமாகவும் தெளிவுபடுத்தினார். மன்மோகன் மிகவும் தெளிவாக, ‘நான் அடிப்பது போல் காட்டுகிறேன், நீ அழுவது போல் நடி எனத் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் கீழை நாடுகளை கட்டாயப்படுத்துவது வாடிக்கை என்றும், சிறீலங்கா விசயத்தில் அப்படி நடக்காமல் தாம் பார்த்துக் கொண்டதாகவும் சொல்கிறார். இந்தியா வாக்களித்தது சிறீலங்காவுக்கு எதிராக அல்ல, மாறாக, உதவுவதற்காகத்தான் என மன்மோகன் தெரிவிக்கிறார்.

கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க அறிக்கை அமலாக்கத்தில், சிறீலங்கா அரசாங்கத்தின் ஒப்புதலோடுதான், அய்க்கிய நாடுகள் ஆலோசனைகளையோ தொழில் நுட்ப உதவியோ பெற முடியும் என்ற நிலையைத் தீர்மானத்தில் இந்தியாதான் நுழைத்தது என்றும், தீர்மானத்தின் இறுதி வடிவில் இப்படி ஒரு சம நிலையை நுழைப்பதற்கு இந்தியா எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டதாகவும் மன்மோகன் அப்பட்டமாகச் சொல்கிறார். திமுக, அதிமுக இரண்டு பேருமே மன்மோகனோடு சேர்ந்து நாடகமாடியுள்ளனர். ஜெயலலிதா வழக்கம் போல சவடாலாகப் பேசியபோது, கருணாநிதி இம்முறை இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காவிட்டால் தமது கட்சியினர், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி விடுவார்கள் எனக் குறிப்பால் உணர்த்தினார்.

ஜெனிவா தீர்மானம், தமிழினப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறலுக்காக ராஜபக்சே அரசாங்கத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கானது என தமிழகமெங்கும் பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த விருப்பம் சரிதான். ஆனால் தீர்மானம் பற்றிய கருத்து சரியல்ல. ஜெனிவா தீர்மானத்திற்கும், தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறலுக்காக ராஜபக்சே அரசை குற்றவாளிக் கூண்டில் தண்டிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெனிவா தீர்மானம், சிறீலங்கா அரசாங்கம் நியமித்தகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ Lessions Learnt and Reconciliation Commission (LLRC) அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பதற்கானது மட்டுமே. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலையும், போராளிகள் அழித்தொழிப்பும் மனித உரிமை மீறல்களும் நடந்து முடிந்த மே 2009க்கு ஒரு வருடம் கழித்து, மே 2010ல் ராஜபக்சே அரசாங்கம் எல்எல்ஆர்சியை நியமித்தது. இந்த எல்எல்ஆர்சி, 18.08.2010 முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரித்தது. 5000க்கும் மேற்பட்ட எழுத்து மூலம் அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டது. எல்எல் ஆர்சியின் அமர்வுகள் கொழும்பு, பட்டி கோலா, யாழ்ப்பாணம், கிளி நொச்சி, மன்னார் மற்றும் வவுனியாவில் நடைபெற்றன. எல்எல் ஆர்சி 15.11.2011 அன்று ராஜபக்சேவிடம் தனது 388 பக்க இறுதி அறிக்கையைத் தந்தது. இந்த அறிக்கை 16.12.2011 அன்று வெளியிடப்பட்டது. அய்நாவிற்கான, அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான, அயலீன் சேம்பர்லைன் டோனாகோ எல்எல்ஆர்சி அறிக்கையை அமல்படுத்தக் கோரும் தமது தீர்மானம் சிறீலங்காவை கண்டனம் செய்வதல்ல என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். சிறீலங்கா அரசாங்கம், இந்தத் தீர்மானம் தனது உள் விவகாரங்களில் தலையிடுவது என்றும் இது நல்லிணக்கத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்தத் தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்தை மீட்டுக் காப்பாற்றுகிறது என்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கிற தமிழர்களுக்கு எந்த குறிப்பிடத்தக்க அரசியல் அதிகாரங்களையும் வழங்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினர்.

எல்எல்ஆர்சியின் தலைவர் சிறீலங்கா அரசின் தலைமை வழக்கறிஞராயிருந்த திரு.சி.ஆர்.டிசில்வா என்பவர். 21.02.2002 போர் நிறுத்தம் தோற்றதன் பின்னணியையும் அதன் விளைவாக 19.05.2009 வரை நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும், இது விசயத்தில் எந்தவொரு தனி நபரோ குழுவோ, நிறுவனமோ நேரடியாகவோ, மறைமுக மாகவோ பொறுப்பாகுமா எனவும், இந்த நிகழ்ச்சிகளில் இருந்து கற்கிற பாடங்கள் மற்றும் இவை திரும்பவும் நடக்காமல் இருக்க என்ன கவனம் தேவை எனவும் கண்டறிந்து எல்எல்ஆர்சி அறிக்கை தருமாறு கோரப்பட்டது. எல்எல்ஆர்சி அறிக் கையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

v  நான்காம் ஈழப்போரில் சிறீலங்கா படையினரின் ராணுவப் போர்த்தந்திரம் திருப்திகரமானது. அது சாமான்ய குடிமக்களைப் பாதுகாக்க உச்சபட்ச முன்னுரிமை தந்தது.

v  படையினர், போர் தடுக்கப்பட்ட மண்டலங்களில் (நோ ஃபையர் ஸோன்) வேண்டுமென்றே குடிமக்களைக் குறிவைக்கவில்லை.

v  படையினர், அசாதாரண சூழ்நிலையில் வேறு வாய்ப்போதேர்வோ இல்லாதபோது மட்டுமே திரும்பச் சுட நேர்ந்தது. அப்போதும், சாத்தியமான எல்லா முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்டனர்.

v  மருத்துவமனையின் மீது குண்டு வீசப்பட்டது உண்மைதான். ஆனால் யார் குண்டு வீசினார்கள் என்று சொல்ல முடியாது.

v  தமிழீழ விடுதலைப் புலிகள்தான் மனித உரிமை மீறல்களைச் செய்தனர்.

v  மேலே குறிப்பிட்டுள்ள விசயங்கள் எந்த விதத்திலும் ராஜபக்சேவுக்கு எதிரானவை அல்ல. அவர் மீது குற்றம் சுமத்துபவை அல்ல. அவருக்குத் தண்டனை பெற்று தருபவை அல்ல.

v  அப்படியானால் இந்த அறிக்கையின் மீது ஏன் இவ்வளவு சண்டை என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான், அறிக்கையின் வேறு சில அம்சங்களைக் காண வேண்டியுள்ளது.

அறிக்கை,

v  ஆட்கள் காணாமல் போனது, கைது செய்யப்பட்டது, கடத்தப்பட்டது தொடர்பாக அவசியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த படையினர்மேல் நடவடிக்கை வேண்டும்.

v  அலைவரிசை 4, ஒளி ஒலி பேழைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை வேண்டும்.

v  பள்ளிகளில், கல்லூரிகளில் அடுத்த இன மக்களின் மொழியைக் கற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

v  எல்லா நேரங்களிலும், எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் தமிழ் பேசும் அதிகாரிகள் இருக்க வேண்டும்.

v  தேசிய கீதம், சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரம், ஒரே மெட்டில் பாடப்பட வேண்டும்.

v  மறு குடியமர்வு செய்யப்பட்ட வர்களுக்கு சட்ட பூர்வ நில உரிமை வழங்கப்பட வேண்டும்.

v  காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக சுதந்திர விசாரணை நடத்தப்பட்டு உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசு முதன்மை வழக்கறிஞரிடம் உரிய விவரங்கள் பெறப்பட வேண்டும்.

v  அதிகாரப் பரவல் தொடர்பாக, ஒரு கருத்தொற்றுமை காண நன்னம்பிக்கை முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

ஆகிய அம்சங்களை முன்வைக்கிறது.

அறிக்கையில் இதற்கு மேலும் பல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்எல்ஆர்சி அறிக்கையோ அய்நாவோ ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்றோ, தமிழ் மக்களின் சமத்துவம், அரசியல் உரிமைகள், அதிகாரப் பரவல், பொருத்தமான மீள் குடியேற்றம் ஆகியவை பற்றியோ பேசவில்லை. எல்எல்ஆர்சி அறிக்கையில் இல்லாத விசயங்கள் எல்லாம் அதில் இருப்பதாகக் கருதிக் கொண்டு, அதை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரிக்கக் கோருவது பொருளற்றதாகும். தமிழகத்தில் இந்தத் தீர்மானம் தொடர்பாக நடக்கிற கணிசமான விவாதங்கள் வெற்று ஆரவாரங்களே. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் வட்டாரங்களில், உங்கள் விளக்கங்கள் எல்லாம் வேண்டாம், சுற்றி வளைக்காமல் தீர்மானத்தை ஆதரிப்பீர்களா, எதிர்ப்பீர்களா என்று மட்டும் சொல்லுங்கள் எனக் கேட்கப்படுகிறது. இகக(மாலெ), இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதுவும் வெற்று ஆரவாரமா? நிச்சயமாக இல்லை. மே 2009ல் மிகப் பெரிய போர்க் குற்றத்தைச் செய்த ராஜபக்சே அரசாங்கத்தின் மீது, அந்த அரசாங்கம் நியமித்த ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்துமாறு சர்வதேச மன்றங்களில், சர்வதேச நிர்ப்பந்தம் வந்தால், அதுவே கூட ஆரோக்கியமான விசயம்தான். நிச்சயமாக எல்எல்ஆர்சி அறிக்கையோ, அதை அமல்படுத்தக் கோரும் அய்நா தீர்மானமோ தமிழினச் சிக்கலுக்குத் தீர்வு வழங்காது. ஆன போதும், சில குறைந்த பட்ச விசயங்களிலாவது, சிறீலங்கா அரசாங்கம் தன் மீது சர்வதேச அமைப்புக்கள் நிர்ப்பந்தம் தரும் என நினைக்க வைப்பதே கூட, மனித உரிமை, ஜனநாயகம், இனங்களின் சமத்துவம் என்ற கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தப் புரிதலோடு, இந்த அளவான புரிதலோடு மட்டுமே தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோருவது மிகவும் சரியான நிலைபாடாகவே இருக்கும். எல்எல்ஆர்சி அறிக்கை, அய்நா தீர்மானம் ஆகியவற்றைத் தாண்டிய பிரச்சினையாகவே, சிறீலங்காவின் தமிழ் தேசியப் பிரச்சினை இருக்கிறது என்பது, மறுக்க முடியாத உண்மைதான்.

தீர்மானத்தின் எல்லைகளைப் புரிந்து கொண்டு ஆதரிக்க வற்புறுத்துவது என்பது ஒரு விசயம். அதே நேரம், உலகின் முதன்மை போர்க் குற்றவாளியான அமெரிக்காவிற்கு எந்த நாட்டைப் பற்றியும் குறை சொல்ல, கண்டனம் தெரிவிக்க யோக்கியதை கிடையாது என்பது மிக முக்கியமான விசயமாகும். தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் அமெரிக்க ஆதரவு இருந்தால்தான் அய்நா தீர்மானம் நிறைவேறும், ஆகவே அமெரிக்காவின் யோக்கியதை என்ற கேள்வியைத் தவிர்க்கலாம் என்று சொல்வது, குறுகிய நிகழ்கால நலன் கருதி, அடிப்படையான நீண்டகால நலன்களை விட்டுக் கொடுப்பதாகும்.

அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் எனக் கோருவதோடு ஏன் சுருக்கிக் கொள்ள வேண்டும்? இந்தியாவே சிறீலங்காவிற்கு எதிராக, போர்க் குற்றம் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தி, விசாரித்துத் தண்டிக்குமாறு, ஏன் தீர்மானம் கொண்டுவரக் கூடாது? இந்தியா, சிறீலங்கா விசயத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவின் ஈராக் ஆப்கானிஸ் தான், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராகவும், தானே தீர்மானம் கொண்டுவர வேண்டும் என முற்போக்கு ஜனநாயக சக்திகள் வலியுறுத்த வேண்டும்.

எது எப்படி ஆனாலும் மீண்டும் ஒரு முறை மன்மோகன் தலைமையிலான அய்முகூ அரசாங்கத்தின் கயமையும், அதற்கு ஒத்து ஊதும் கழகங்களின் போலித்தன்மையும் வெட்டவெளிச்சமாகியுள்ளது நல்ல விசயமே.

ராஜபக்சே மீண்டும் தமிழ் மக்களையும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும் மிரட்டுகிறார் என்று தெளிவாகிறது. தீர்மானம் நிறைவேற்றப்படுவது, நல்லிணக்கத் திற்கு ஊறு விளைவிக்கும் என்ற ராஜபக்சேவின் வாதம் அயோக்கியத்தனமானது. அவர் நியமித்த ஆணையத்தின் பரிந்துரைகளை அவர் அமல்படுத்த வேண்டும் எனக் கேட்பது எந்த வகையில் நல்லிணக்கத்திற்கு எதிரானது?

Search