COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, April 3, 2012

Apr-1-1

கல்வி

‘என்ன செய்ய வேண்டும்?’

லெனின்

புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது. சந்தர்ப்பவாதத்தைப் பிரச்சாரம் செய்வதே ஃபேஷனாகிப் போய் அத்துடன் நடைமுறை நடவடிக்கையின் மிகமிகக் குறுகிய வடிவங்களின் மேல் மோகமும் கைகோர்த்து சென்று கொண்டிருக்கும் காலத்தில் இதை எவ்வளவு பலமாக வலியுறுத்தினாலும் தகும். மேலும், ருஷ்ய சமூக - ஜனநாயகவாதிகள் விஷயத்தில் தத்துவத்தின் முக்கியத்துவம் மேலும் உயர்ந்திருப்பதற்கு வேறு மூன்று நிலைமைகள் (அடிக்கடி மறக்கப்படுபவை) உள்ளன:

முதலாவதாக, உருப்பெற்று வரும் நிகழ்வுப் போக்கிலேதான் நம் கட்சி இருக்கிறது, அதன் உறுப்புத் தோற்றங்கள் இப்போது தான் வடிவமைதி பெற்று வருகின்றன, மற்றும் சரியான பாதையை விட்டுத் திசைத் திருப்பப் பயமுறுத்தும் பிற புரட்சிபாற்பட்ட சிந்தனைப் போக்குகளோடு அது இன்னும் வெகுதூரத்திற்குக் கணக்குத் தீர்த்தாகவில்லை. மாறாக, மிக அண்மைக் காலத்திலே சமூக - ஜனநாயகவாத வகைப்படாத புரட்சிப் போக்குகள் மறு உயிர்ப்பெய்தி வருவது குறிப்பாக உள்ளது. (இப்படி நிகழக்கூடும் என்று வெகு காலத்திற்கு முன்பே ‘பொருளாதாரவாதிகளை’ அக்ஸெல் ராட் எச்சரித்திருக்கிறார்). இந்த நிலைமைகளில், முதல் நோட்டத்தில் ‘முக்கியமில்லாத’ தவறாகத் தோன்றுகிற ஒன்று மிகவும் வருந்தத்தக்க விளைவுகளுக்குக் கொண்டு போய் விடக்கூடும்; கருத்துப் பிரிவினரின் தாவாக்களும் கருத்துச் சாயல்களிடையே கறாரான வேறுபாடு செய்தலும் சமயப் பொருத்தமற்றது அல்லது தேவையற்றது என்று பார்வைக் கேடுள்ள மனிதர்கள்தாம் கருத முடியும். ருஷ்ய சமூக – ஜனநாயகவாதத்தின் தலைவிதி வரப்போகும் மிகப்பல ஆண்டுகளுக்கு ஏதாவதொரு ‘சாயல்’ பலப்படுவதைச் சார்ந்திருக்கக் கூடும்.

இரண்டாவதாக, சமூக – ஜனநாயகவாத இயக்கம் சாராம்சத்திலே ஒரு சர்வதேச இயக்கமாகும். இதற்குப் பொருள், நாம் தேசிய வெறியை எதிர்த்துப் போராட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஓர் இளம் நாட்டில் முளைப் பருவத்திலுள்ள இயக்கம் மற்ற நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால்தான் வெற்றி பெற முடியும் என்பதும் ஆகும். இந்த அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அவற்றைத் தெரிந்து வைத்திருந்தால் மட்டும் போதாது, கடைசியாக வந்தத் தீர்மானங்களை வெறுமே பிரதி செய்துகொண்டால் மட்டும் போதாது. இந்த அனுபவங்களை விமர்சன முறையிலே பயின்று சுதந்திரமாகச் சோதித்துப் பார்ப்பதே நமக்குத் தேவை. தற்காலத்திய பாட்டாளி வர்க்க இயக்கம் எவ்வளவு பெரிதாக வளர்ந்து கிளைப் பரப்பி வந்துள்ளது என்று உணருகிற ஒருவன் இப்பணியை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு தத்துவார்த்தச் சக்திகளின் சேமிப்பும் அரசியல் (அத்துடன் புரட்சிகரமான) அனுபவத்தின் சேமிப்பும் தேவைப்படும் என்பதைப் புரிந்துகொள்வான்.

மூன்றாவதாக, ருஷ்ய சமூக – ஜனநாயகவாதத்தின் தேசியக் கடமைகள் உலகத்தில் வேறெந்த சோசலிஸ்டுக் கட்சியும் எதிர் கொண்டிராத வகைப்பட்டவை. எதேச்சதிகாரத்தின் நுகத்தடியினின்று மக்கள் முழுவதையும் விடுவிக்கும் பணி நம் மீது சுமத்தியுள்ள அரசியல் கடமைகள் அமைப்புக் கடமைகள் பற்றிப் பின்னால் கவனிக்க வாய்ப்பு இருக்கும். ஆகமிக முன்னேறிய தத்துவத்தை வழிகாட்டியாகக் கொண்டுள்ள கட்சி ஒன்றுதான் முன்னணிப் போர்வீரனின் பாத்திரத்தை நிறைவேற்ற முடியும் என்று மட்டும் தற்போதைக்குச் சொல்ல விரும்புகிறோம்.

இதன் பொருளை ஸ்தூலமாக புரிந்து கொள்வதற்கு சமூக – ஜனநாயகவாதத்தின் முன்னோர்களான ஹெர்ட்ஸன், பெலீன்ஸ்கி செர்னிஷேவ்ஸ்கி ஆகியோரையும் 1870களைச் சேர்ந்த ஒளிமிக்க புரட்சியாளர்களின் குழுவையும் வாசககர் நினைவூட்டிக் கொள்ளட்டும்; இன்று ருஷ்ய இலக்கியம் பெற்றுவரும் உலகம் தழுவிய குறிப்பொருளைக் குறித்து ஆழச் சிந்தித்துப் பார்க்கட்டும்; மேலும்.... இது போதுமே!

தொடரும்…

Search