COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, September 1, 2015

மாலெ தீப்பொறி, செப்டம்பர் 01 – 15 தொகுதி 14 இதழ் 3

அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பெற்ற பெயர்:
குற்றச் செயல்களின் மாநிலம்

தெருக்கள் பாதுகாப்பான இடங்களாக மாறியுள்ளதாக 2014 ÷ன் மாதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட தமிழக அரசு உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், உள்துறை பொறுப்பும் கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னார். அந்த அறிக்கையில் 2013 குற்றச் செயல்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. 2014 விவரங்கள் 2015 - 2016 கொள்கைக் குறிப்பில் தரப்பட வேண்டும். இன்னும் அது வெளியிடப்படவில்லை. நிலைமை சொல்லும்படி இல்லை என்பதால் சொல்லவில்லை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அந்த விவரங்கள்படி,

            2014ல் நாளொன்றுக்கு இரண்டு குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 1,086 சம்பவங்கள். தமிழ்நாட்டுக்கு உத்தரபிரதேசத்துக்கு அடுத்து இரண்டாவது இடம்
            குழந்தைகள் திருமணத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம். நாட்டின் மொத்த 275 குற்றங்களில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டவை 47.
            முதியவர்கள் கொலைகளில் தமிழ்நாடுதான் முதலிடம்.
            தமிழகத்தின் மொத்த 1,805 கொலைகளில் 239 காதல் கொலைகள். அதாவது கவுரவக் கொலைகள்.
            தமிழ்நாட்டில் தலித்துகள் மீதான 43 வன்கொடுமைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட தலித்துகள் 72 பேர். தமிழ்நாட்டுக்கு மத்திய பிரதேசத்துக்கு அடுத்து இரண்டாவது இடம். பீகாரை விட அதிகம். 2013ல் கொல்லப்பட்ட தலித்துகள் 28. பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட தலித் பெண்கள் 33. 2013ல் இது 28. பாலியல் வன்முறை முயற்சி சம்பவம் 1.
            சாதி மோதல் சம்பவங்களில் தமிழ்நாட்டுக்கு இரண்டாம் இடம். 211 சம்பவங்கள் நடந்துள்ளன. தலித்துகள் மீதான தாக்குதல்கள் 29. பாதிக்கப்பட்டவர்கள் 61.
            தமிழ்நாட்டில் 120 மதவெறி மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. உத்தரபிரதேசம், பீகார், அரியானாவை விடக் கூடுதல்.
            தமிழ்நாட்டில் 2014ல் 68 விவசாயிகள், 827 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
            ஆட்கடத்தலில் தமிழ்நாடு மேற்குவங்கத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 509 சம்பவங்களில் 590 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையிலானவை. பதிவு செய்யப்படாதவை கூடுதலாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஆனால், தமிழக அமைச்சர்கள் தமிழ்நாட்டில் குற்றங்களே இல்லை, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று சட்டமன்றத்தில் சொல்கிறார்கள். தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்குக்கு இளங்கோவன் சாட்சியாக இருக்கிறார். அவருடைய ஆணாதிக்க ஆணவத்துக்கு சரியான பதிலடி தந்தாக வேண்டும். ஆனால், வலுப்பெற்று வருகிற டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திசைத் திருப்ப இளங்கோவன் சொன்னதை ஆளும்கட்சியினர் வசதியாகப் பயன்படுத்திக் கொண்டனர். (துடைப்பமும் செருப்பும்தான் இப்போது அஇஅதிமுகவின் சின்னம். இரட்டை இலையை அவர்கள் துறந்து விடலாம்). அந்த அத்துமீறல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த, எதிர்ப்புக்களை கைவிடுங்கள் என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்த பிறகும் இளங்கோவன் வாகனத்தின் மீது திராவக முட்டை வீச்சு வரை நடக்கிறது. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டக்காரர்களை, பெண்களை காலால் எட்டி உதைத்த காவல் துறை வேடிக்கை பார்க்கிறது.

பரமக்குடி, தருமபுரி, மரக்காணத்துக்கு அடுத்து சேஷசமுத்திரத்தில் தலித் மக்கள் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடந்துள்ளது. உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காவல் துறையினருக்கு முன்னரே தகவல் தரப்பட்டும் வன்முறையைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு விடுதலை வேண்டி தமிழ்நாட்டின் கோவில்களில் விதவிதமான வழிபாடுகள் நடந்தன. சேஷசமுத்திரம் தலித் மக்களால் ஒரு தேர் இழுக்க முடியாமல் போனது. தேர் கொளுத்தப்பட்டு, வீடுகள் கொளுத்தப்பட்டு, உடைமைகள் சூறையாடப்பட்டு கலங்கிப்போய் நிற்கிறார்கள். ஜெயலலிதா மவுனம் காக்கிறார். காவல்துறையினரும் ஆதிக்கக் கும்பலின் வன்முறையில் தாக்கப்பட்டுள்ளனர். கூடங்குளத்தில் திறம்படசெயல்பட்ட காவல்துறை சேஷசமுத்திரத்தில் மட்டும் எப்படி தாக்கப்பட்டது? அங்கு ஏன் சட்டம் ஒழுங்கை காப்பாற்றவில்லை?

தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் சுமங்கலித் திட்டமே இல்லை என்று முதலாளிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. திருப்பூரில் ஒரு தலித் சிறுமி, ஜவுளி ஆலை மேற்பார்வையாளரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி ஆகஸ்ட் 29 அன்று வெளியாகியுள்ளது. தேனியில் இருந்து திருப்பூருக்கு வந்து சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த 15 வயது சிறுமி அவர். வேலையில் சேர்ந்தபோது அவருக்கு 13 வயது. அந்தச் சிறுமிக்கு பேச்சு சரியாக வராது.

விரட்டுகிற வறுமை, தலித் சிறுமி, மாற்றுத் திறனாளி, கொடூரமான பாலியல் வன்முறை, கொடுமையான உழைப்புச் சுரண்டல்............ இதுதான் அஇஅதிமுக ஆட்சியில் தமிழ்நாடு பெற்றிருக்கிற வளர்ச்சியின், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுவதன் அவமானகரமான அடையாளம்.

சென்னையில் மனிதக் கழிவகற்றும் பணிகளில் ஈடுபடுவோர் எண்ணிக்கை பற்றிய மறுகணக்கெடுப்பு நடந்தபோது, மாநகராட்சி முன்பு சொன்ன 248 என்ற எண்ணிக்கையில் இருந்து 462 என்ற எண்ணிக்கை வந்துள்ளது. மலத்தை கையில் சுமப்பவர்கள் மட்டுமின்றி, கழிவு நீர் குழாய்களில் வேலை செய்பவர்கள், துடைப்பம் கொண்டு மலம் அகற்றுபவர்களும் இந்த வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கழிவகற்றும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர் சங்கங்கள் 2,000 பேர் வரை இந்த வேலைகளைச் செய்வதாகச் சொல்கின்றன. 110 கூட இந்தத் தொழிலாளர்கள் பற்றி எதுவும் சொல்ல மறுக்கிறது. இவர்கள் விசயத்தில் கடுமையான சட்டமீறல்கள் நாளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

8,000 நிரந்தரத் தொழிலாளர்கள் உள்ள ரெனால்ட் நிசான் ஆலையில் 1,200 ஒப்பந்த, பயிற்சி தொழிலாளர்கள் வேலை இழக்கப் போகிறார்கள். 700 முதல் 800 பேர் வரை வெளியேற்றம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா சொல்கிறது. உண்மையில் எத்தனை தொழிலாளர்கள் வெளியேற்றம் என அதிகாரிகள் சொல்ல மறுக்கின்றனர். சட்டங்களை வளைத்துப் பழகியுள்ள அவர்களை எந்தச் சட்டமும் அண்டுவதில்லை.

கூவத்தின் துவக்கத்தில் இருந்து மதுரவாயல் பைபாஸ் வரை 23.9 கி.மீ கரையை அழகுபடுத்த சென்னை மாநகராட்சி திட்டமிடுகிறதுஇங்குள்ள 35 குடிசைப் பகுதிகளின் 14,257 வீடுகள், முறைப்படுத்தப்படாத கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 9 பூங்காக்கள், நடைபாதைகள் வரும் எனச் சொல்லப்படுகிறது. இங்கு வாழ்ந்து வரும் மக்கள் பெரும்பாக்கம், எழில் நகர் என நகரத்துக்கு வெளியே வீசப்படுவார்கள். மக்கள் வாழ்க்கையை துன்பத்தில் தள்ளவிருக்கும் ஒரு நடவடிக்கையை அழகுபடுத்தும் நடவடிக்கை என்று சொல்லும் துணிச்சல் அஇஅதிமுககாரர்களுக்கு வந்துவிட்டது. அவர்களுடைய குற்றமய ஆட்சியை, சாக்கடையாக மாறிவிட்ட கூவத்தில் புதைக்கும் கட்டம் நெருங்கிவிட்டது.

தீண்டாமை - இந்துத்துவா - அம்பேத்கார்
சில கருத்துக்கள்

இந்துத்துவா, அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை ஒட்டி, அம்பேத்கர் இந்து மதத்திற்கு மிகவும் வேண்டியவர் கொண்டாடப்பட வேண்டியவர் எனச் சொல்லி, அவரைக் கையகப்படுத்த முயற்சிக்கிறது. தலித் சமூகத்தில் உள்ள உட்பிரிவுகள் மீதும் வினையாற்றுகிறது.

பீகாரில் மகாதலித்துகளை முஷார் பிரிவினரை, தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கும் போதே, தமிழ்நாட்டிலும் மதுரையில் அத்தகைய முயற்சி ஒன்றை சமீபத்தில் எடுத்தது. ஒரு தேவேந்திரர் சமூக நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் சங்பரிவார் கருத்தியலாளர் குருமூர்த்தியும் கலந்து கொண்டனர். அங்கே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தங்கராஜ் பேசியதாக ஆகஸ்ட் 12 தமிழ் தி இந்து நாளேடு ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ‘எங்கள் சமூகத்திற்குப் பொக்கிஷமாகக் கிடைத்தவர் அமித் ஷா. அவர், தேவேந்திரர்கள் தென்தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ளவர்கள், பசுவைத் தெய்வமாக வணங்குபவர்கள், மாட்டிறைச்சியை உண்ணாதவர்கள். இந்திரனை வழிபடுபவர்கள் எனப் பேசியுள்ளார். அதன் பின்னர், மனு, கோவிலுக்குள் போக முடியாதவர், பசுவைத் தெய்வமாக வணங்காதவர், மாட்டிறைச்சி உண்ணாதவர், தன் இனத்தின் இறப்பவரின் உடலைத் தாமே அடக்கம் செய்பவர். ஒருவரைப் பார்த்தாலோ தொட்டாலோ தீட்டு எனக் கருதப்பட்டவர் களைத்தான் தீண்டத்தகாதவர்கள் என்கிறார்; நாங்கள் இந்த வரையறை எதற்குள்ளும் வர மாட்டோம்; நாங்கள் தீண்டத் தகாதவர்கள் இல்லை; அதனால் எங்களுக்கு அந்த இட ஒதுக்கீடு வேண்டாம் என தங்கராஜ் குறிப்பிட்டதாகவும், அந்தச் செய்தி நீள்கிறது.

தங்கராஜின் கருத்தாக்கம், நாட்டிற்கு வழிகாட்டும் தவம் என குருமூர்த்தியும், எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என வேறு வேறு சாதிகள் கோரும் நேரத்தில், நாங்கள் தாழ்த்தப்பட்டடோர் அல்ல என்ற கவுரவம் வேண்டி ஒரு மாநாடு நடப்பது, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரைக்குமான வழிகாட்டுதலாக அமைந்துள்ளது என அமித் ஷாவும் சிலாகித்துள்ளனர்.

அரியானாவில் ஜாட்டுகள், மகாராஷ்ட்ராவில் மராத்தாக்கள், குஜராத்தில் படேல்கள் தம்மைப் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் சமூக பொருளாதார அரசியல் ஏணியில் மேல் நிலையில் உள்ள ஆதிக்க சாதியினர். மோடியின் குஜராத்தில் கடந்த சில தினங்களாக வெடித்தெழுந்துள்ள போராட்டத்தை வழிநடத்தும் ஹார்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞர், “ஒன்று நாட்டை இட ஒதுக்கீட்டிலிருந்து விடுதலை செய்யுங்கள் அல்லது எல்லோரையும் இட ஒதுக்கீட்டின் அடிமையாக்குங்கள் என 27.08.2015  அன்று தமது அகமதாபாத் புறநகர் அலுவலகத்தில் இருந்து பேசினாராம். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் இட ஒதுக்கீடு பெறுவதோடு, பொதுப் பிரிவிலும் வேலைகள் பெறுகின்றனர் என அங்கலாய்த்துக் கொண்டாராம். அகமதாபாத் குரல், மதுரையில், வேறு வேடம் போட்டு ஒலித்துள்ளது.

அமித் ஷாவும் குருமூர்த்தியும் பங்கேற்ற மதுரை மாநாடு, இட ஒதுக்கீடு நாட்டிற்கு நல்லதல்ல என்கிறது; இட ஒதுக்கீட்டிலிருந்து இந்தியா வெளியே வர வேண்டும் என்கிறது. மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் பசுவை வழிபடுபவர்கள் தீண்டாமைக்கு ஆளாகாதோர் மேலானவர்கள் எனக் குறிப்பால் சொல்கிறது. இந்துத்துவா தவத்திற்கு மதுரையில் ஒரு யாகத் தீ வளர்க்கும் முயற்சி நடந்துள்ளது. அந்தக் குரல் தேவேந்திரர் எனச் சொல்பவர்கள் அனைவரின் குரலும் அல்ல என்பது வேறு விஷயம்; ஆனால், நாங்கள் தீண்டத் தகாதவர்களே அல்ல, எங்களுக்கு அந்த இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற ஒரு குரல் எழுந்துள்ளது என்பது முக்கியமான விஷயமாகும்.

இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள், தலித் இயக்கங்கள், இந்து மதம் பற்றியும் தீண்டாமை பற்றியும் அம்பேத்கர் சொல்லியுள்ள விஷயங்களில் இருந்து கூர்மையானதொரு கருத்துப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் - நூல் தொகுப்பு - தொகுதி 14 தீண்டாமை பற்றி விரிவாகச் சொல்கிறது.

            தீண்டப்படாதவர்கள், தீண்டப்படாதவர்களாக அழைக்கப்படுவதற்கு முன்பே கிராமத்துக்கு வெளியே வசித்து வந்தனர். பூர்வீக இந்து சமூகத்தில் குடியமர்ந்த குலமரபுக் குழுக்கள், கிராமத்தை கிராம சமூகத்தை உருவாக்கி, கிராமத்துக்குள் வசித்து வந்தனர். வேறுபட்ட குலத்தையும் குல உறவுகளையும் கொண்ட சிதறுண்ட சமூகத்தினர் கிராமத்திற்கு வெளியே வசித்தனர்.
            பிராமணர்களும் சாதி இந்துக்களும் மாட்டிறைச்சியை சர்வ சாதாரணமாக பல காலம் உண்டு வந்தனர். இந்தியாவில் பவுத்த மதம் பரவியபோது, பார்ப்பனீயம் அதை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. பசுக்கள் எருதுகள் பிராணிகளைக் கொன்று குவித்த பிராமணியம், விவசாய சமூகத்தின் வெறுப்பைப் பெற்றது. பவுத்தர்களைக் காட்டிலும் தீவிரமானவர்கள் எனக் காட்டிக் கொள்ள, பிராமணர்கள் மாட் டிறைச்சியை உண்பதை நிறுத்தியதோடு கூடவே மரக்கறி உணவு சாப்பிடுபவர்க ளாகவும் மாறினார்கள். இது தீவிரவாதத்தை தீவிரவாதத்தால், முள்ளை முள்ளால் எடுக்கும் நடவடிக்கையே ஆகும். இது, இடதுசாரிகளை எதிர்கொள்ள எல்லா வலதுசாரிகளும் கையாளும் தந்திரம் ஆகும். பவுத்தர்களை வெல்ல அவர்களை விட ஒருபடி மேலே போய் எந்த இறைச்சியும் சாப்பிடாதவர்களாக மாறினார்கள். தன்னை விட உயர்ந்தவர்கள் எனக் கருதும் பிராமணர்களைப் பல விஷயங்களில் பின்பற்றும் பிராமணரல்லாதோரின் பழக்கமே, பசு வழிபாடு பரவுவதற்கும், மாட்டிறைச்சி உண்பதை அவர்கள் நிறுத்தவும் காரணமாக இருந்தது.
            பசு இறைச்சியை உண்பது தெய்வ நிந்தனையாக்கப்பட்டது. பசுவை, புனிதமற்றதாக நடத்தும் எவரும் பாவம் செய்தவர்களாக, தொடர்பு கொள்வதற்கு அருகதையற்றவர்களாக மாற்றப்பட்டனர். தொடர்ந்து மாட்டிறைச்சி உண்டு வந்த சிதறுண்ட பகுதியினர், தெய்வ நிந்தனை குற்றத்திற்கு ஆளாயினர். அதுவே, மதரீதியான தீண்டாமை ஆனது.
            குடியமர்ந்த சமூகத்தினர் புத்தம் புது மாட்டிறைச்சியையும் சிதறுண்ட சமூகத்தினர் செத்த மாட்டிறைச்சியையும் சாப்பிடுவதும் நடந்தது. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கொண்டிருந்த குடியமர்ந்த சமூகம், ஒரு மாட்டைக் கொல்வதற்கு எந்த சிரமும் பட வேண்டி இருந்ததில்லை. அவர்களைச் சார்ந்திருந்த அவர்களது பணிகளைச் செய்த வசதி இல்லாத சிதறுண்ட சமூகத்தினர்க்கு செத்த மாட்டிறைச்சியைத் தந்தனர்.
            பசுவதை தடை செய்யப்பட்ட போதும், செத்த மாட்டை உண்பது தடை செய்யப்படவில்லை. சிதறுண்ட சமூகத்தினருக்கு செத்த மாட்டிறைச்சி முக்கிய உணவு. அதனை அவர்கள் கைவிடுவது, அவர்களுக்குக் கட்டுப்படி ஆகாதது. அது இல்லை என்றால் அவர்கள் பட்டினி இருக்க வேண்டும். செத்த பசுவை அகற்றுவது எடுத்துச் செல்வது, துவக்கத்தில் தனிச் சலுகையாக இருந்து, பிறகு தப்ப முடியாத கடமைப் பொறுப்பானது.
            தீண்டாமையும், பசுவதையின் மீதான - மாட்டிறைச்சி உண்பதன் மீதான தடையும் தொடர்புடையவை. மனு, மாட்டிறைச்சி உண்பதை தடை செய்யவில்லை; பசுவதையை அவர் ஒரு பாபமாக்கவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் குப்த மன்னர் ஆட்சிக் காலத்தில், பசுவதை தடை செய்யப்பட்டது. குப்தர் ஆட்சி உருவாகி எழுந்தது, புத்த மதத்திற்கும் பிராமணீயத்திற்கும் இடையிலான போராட்டத்தின் விளைவாகவே நேர்ந்தது. பவுத்தத்தை பிராமணீயம் வெல்லும்போது தீண்டாமையும் உருவானது.

மேலே கண்ட அனைத்துமே அம்பேத்கரின் வாதங்கள். அவர், ஆண்ட பரம்பரை - வாதங்களை எழுப்பவில்லை. அவர் தீண்டாமையை பார்ப்பனீய இந்து மதத்துடன் இணைத்துக் காண்கிறார். இந்து மதத்தின் பிரிக்க முடியாத கோட்பாடு தீண்டாமை என நிறுவுகிறார். தீண்டாமை என்ற குற்றத்தை ஏவிய பார்ப்பனீய இந்து மதம், தீண்டத் தகாதவர்கள் என அதனால் வெளியேற்றப்பட்டவர்களை, குற்றவாளிகளாக மாற்றி மதரீதியான ()நியாயம் வழங்கியது.

இந்த இந்து மதம் பற்றி இந்துத்துவா பற்றி அம்பேத்கர் என்ன சொன்னார்? இந்துக்களை, அவர்களே இந்தியாவின் நோயாளிகள் என்பதையும், மற்ற இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அவர்களே ஆபத்து உருவாக்குகிறார்கள் என்பதையும் உணர வைத்தால், நான் பெரிதும் திருப்தி அடைவேன்.

ஒரு வேளை இந்து ராஜ்யம் ஒரு யதார்த்தமானால், அது இந்த நாட்டிற்கு நேரும் பேரழிவாக இருக்கும். இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தாண்டி, இந்து மதம், சுதந்திரம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு பேராபத்தாக இருக்கும். அந்த வகையில் அது ஜனநாயகத்திற்கும் பொருத்தமற்றதாகும். என்ன விலை கொடுத்தாவது இந்து ராஜ்யம் தடுக்கப்பட்டாக வேண்டும்.

மோடி அமித் ஷா குருமூர்த்தி வகையறாக்கள், இந்து ராஜ்யத்தையும் கம்பனி ராஜ்யத்தையும் நிறுவ முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி, மதச் சிறுபான்மையினர்க்கு, பட்டியல் சாதியினர்க்கு, பட்டியல் பழங்குடியினர்க்கு, பெண்களுக்கு, கருத்துச் சுதந்திரத்திற்கு, பன்மைத்துவத்திற்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, நாட்டு நலனுக்கு விரோதமானது. அவர்களது தாக்குதல்களைச் சந்திக்க கருத்துரீதியான தயாரிப்புக்கள் மிகவும் முக்கியமானவையாகும். கொடிய சர்வாதிகாரியும் மானுட விரோதியுமான ஹிட்லரின் பிரச்சாரகரான ஜோசப் கோயபல்ஸ்  சொன்னார். போதுமான அளவுக்கு திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், சம்பந்தப்பட்ட மக்கள் பற்றிய ஓர் உளவியல்ரீதியான புரிதலுடன், ஒரு சதுரத்தை ஒரு வட்டம் என நிரூபிப்பது, முடியவே முடியாத ஒரு விஷயம் அல்ல. அவை வெறும் சொற்களே. அவற்றை, கருத்துக்களுக்கு திரை போட்டு அணிவிக்கும் அளவிற்கு, வடிவமைக்க முடியும். கோயபல்சின் வேலையை, மோடி, அமித் ஷா, குருமூர்த்தி, இந்துத்துவா கருத்தியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்துத்துவாவின் அம்பேத்கரை கையகப்படுத்தும் முயற்சிகள், இந்துத்துவா பரிசோதனைக் கூடமான குஜராத்திலேயே அம்பலமாகி உள்ளன.

பக்கத்து மாநிலமான மகாராஷ்டிராவில் சிவசேனை, இந்துக்கள் அனைவரும் மனித வெடிகுண்டுகளாக மாறி பாகிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கும்போது, குஜராத்தில் பாஜக ஆட்சி, ராஷ்ட்ரிய மகா புருஷ் பாரத் ரத்னா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்ற பள்ளிப் பாடத்தை திரும்பப் பெற்றுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் அமைச்சகம், தேசத்தின் மாபெரும் மனிதர் அம்பேத்கர் பற்றி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்க, அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாளை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்தைத் திரும்பப் பெற்று விட்டது. இந்து மதத்தை விட்டு புத்த மதத்திற்கு மாறும்போது அம்பேத்கர் முன் நிறுத்திய 22 உறுதிமொழிகள் பதிப்பாளரால் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், அவை குழந்தைகளுக்கு தவறான செய்தி தரும் எனவும், தேச ஒருமைப்பாட்டிற்கும் மக்கள் நலனுக்கும் ஊறு விளைவிக்கும் எனவும், காரணம் சொல்லி, அம்பலமாகி உள்ளது.

இந்துவாக ஒருபோதும் சாக மாட்டேன், சாதியை அழித்தொழிக்க வேண்டும் என அறை கூவல் விடுத்த அம்பேத்கரை, இந்துத்துவாவால் ஒருபோதும் சிறை பிடிக்க முடியாது.

பீகாரில் அரசியல்ரீதியாக அறுதியிட்ட தலித் மக்களை, வறியவர்களை
படுகொலை செய்தவர்கள் பேசியபோது....

மத்திய பீகாரில் வறிய தலித்துகளை படுகொலை செய்தவர்களின் ஒப்புதல் வாக்கு மூலங்களை கோப்ராபோஸ்ட் வலைதளம் கேமராவில் படம் பிடித்திருக்கிறது. அந்த விவரங்களை கருப்பு மழை நடவடிக்கை (ஆபரேஷன் பிளாக் ரெயின்) பீகார் தலித்துகள் கொலை பற்றிய மீள்பார்வையும் கொலையாளிகளின் ஒப்புதல் வாக்குமூலமும் என்ற தலைப்பில் தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. ரன்வீர் சேனாவின் அரசியல் தொடர்புகள் பற்றி விசாரணை மேற்கொண்ட அமீர் தாஸ் ஆணையம் நிதிஷ் குமார் ஆட்சியில் கலைக்கப்பட்டது. ஆணையத்தின் தலைவர் அமீர் தாஸ், விசாரணையில் ஈடுபட்ட துணை கண்காணிப்பாளர் மிர்சா மச்சூத் ஆலம் பெக் ஆகியோர் கோப்ரா போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள் தரப்பட்டுள்ளன. தமிழில்: தேசிகன்.

ரன்வீர் சேனா தண்டனை பற்றிய அச்சம் இன்றி, திட்டமிட்டு மனம்போன போக்கில் படுகொலைகளை நடத்தியது, சட்டத்தை  வளைத்தது, படுகொலைகள் செய்தவர்களை பயிற்றுவித்தவர்கள், ஆயுதம் தந்தவர்கள், நிதி தந்தவர்கள், அரசியல் ஆதரவு தருபவர்கள் யார் என்பவை பட்டவர்த்தனமாகியுள்ளன.

ஓராண்டு காலமாக இரகசியமாக நடத்திய  புலனாய்வில் கோப்ராபோஸ்ட் கேமராவில் படம் பிடிக்கப்பட்ட ரன்வீர் சேனாவின் தளபதிகள் 6 பேரில் இரண்டு பேர், போதிய ஆதாரம் இல்லையென்பதால், குற்றமற்றவர்கள் என்று பாட்னா உயர்நீதிமன்றத்தால்   விடுவிக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய பீகாரில் 6 பெரும் தலித் படுகொலைகளில் தாங்கள் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

சர்துவா (1995), பதானி தோலா (1996), லஷ்மண்பூர் பாதே(1997), சங்கர்பிஹா (1999), மியான்பூர் (2000), ஏக்வாரி (1997) ஆகிய இடங்களில் நடந்த படுகொலைகளில் பெண்கள் குழந்தைகள் உட்பட 144 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

சந்த்கேஷ்வர், ரவீந்திர சவுத்ரி, பிரமோத் சிங், போலாசிங், அர்விந்த்குமார் சிங், மற்றும் சித்நாத்சிங் ஆகிய 6 பேர் ரன்வீர் சேனாவைச் சேர்ந்தவர்கள்.
கோப்ராபோஸ்டின் உதவி எடிட்டர் அசிஷ், ரன்வீர் சேனா பற்றி படம் எடுப்பதாகச் சொல்லி, சந்த்கேஷ்வர் () சந்தோஸ்வர், பிரமோத் சிங், போலாசிங் ராய், அர்விந்த் குமார் சிங், சித்நாத் சிங்  மற்றும் ரவீந்திர சவுத்ரி ஆகியோரை பேட்டி கண்டார். ரவீந்திர சவுத்ரி தவிர மற்றவர்கள் அனைவரும் லக்ஷ்மண்பூர் பாதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். ரவீந்திர சவுத்ரி 1995ல் நடைபெற்ற சர்துவா (போஜ்பூர்) வழக்கில் சம்பந்தப்பட்டவர். சந்த்கேஷ்வரும், பிரமோத் சிங்கும் பாட்னா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். போலா சிங், அர்விந்த்குமார் சிங், சித்நாத் சிங் ஆகியோர் கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர்கள். போலா சிங் பீகார் காவல் துறையால் இப்போதும் தேடப்பட்டு வருபவர். இவர் ஜார்க்கண்ட் மாநிலம் எஃகு நகரமான டாடா நகரில் மறைவாக இருந்து வருகிறார்.

1999 குடியரசு தினத்தின் போது ஆர்வால் மாவட்டம் சங்கர்பிஹாவில் 23 தலித்துகளை படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 24 பேரையும் இந்த வருடம் ஜனவரி 14 அன்று  கீழமை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. டிசம்பர் 1, 1997 அன்று, லஷ்மண்பூர் பாதேயில், 58 தலித்துகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 16 பேர் உட்பட 26 ரன்வீர் சேனாக்காரர்களை அக்டோபர் 2013ல் பாட்னா உயர்நீதிமன்றம் விடுவித்தது. பதானி தோலா வழக்கும் ஏப்ரல் 17, 2012 அன்று இதே கதியை சந்தித்ததுஜுலை 11, 1996ல் 6 சிறுவர்கள், 11 பெண்கள் உட்பட 21 தலித்துகளை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 23 ரன்வீர் சேனாக்காரர்கள் பாட்னா உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள்.

தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, தங்கள் அமைப்பு நடத்திய 5 பெரிய படுகொலைகளில் (பதானி தோலா, லக்ஷ்மண்பூர் பாதே, சங்கர்பிஹா, மியான்பூர் மற்றும் ஏக்வாரி) தாங்கள் பங்கெடுத்தது பற்றி அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள். மனிதத் தன்மையற்ற அந்தச் செயலை ஒரு கவுரவச் செயல் என்பது போல் நினைத்து, படுகொலைகள் பற்றி விவரங்களை கூறினார்கள். கொலையாளிகளிடம் அசிஷ் நடத்திய நேர்காணல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

சந்த்கேஷ்வர் சிங்

இவர் படுகொலைகளை முன்னின்று நடத்திய தளபதி. இவர் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால் கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. பிறகு பாட்னா உயர்நீதி மன்றம் அக்டோபர் 2013ல் விடுதலை செய்தது. இவர் 22 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட பதானி தோலா படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டதுடன், தனி ஆளாக கீழ் சாதியைச் சேர்ந்த 5 மீனவர்களின் தலையையும் வெட்டியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். பதானி தோலா படுகொலை பட்டப்பகலில், மதியம் 3 மணிக்கு, காவல்நிலையத்துக்கு அருகிலேயே நடத்தப்பட்டது.
படுகொலையைப் பற்றி சந்த்கேஷ்வர் உணர்ச்சியற்று சாதாரணமாகச் சொன்னார். ஆமாம், 3 மணிக்கு நாங்கள் சுடத் துவங்கினோம். போலீஸ் ஸ்டேசனும் அருகில்தான் இருந்தது. சில சடலங்களை அந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டோம். ஆனால் அதன் பிறகும் அந்த இடத்தில் 22 சடலங்கள் கிடந்தன. இந்த பகல் நேர தாக்குதலில் சேனா படையினர் சிலரையும் இழந்தோம்.

காண்டாவ் கிராமத்தின் குப்தேஷ்வர் சிங் முன்னிலையில்தான் படுகொலைகள் நடத்தப்பட்டன. அவர்தான் இகக(மாலெ)காரர்கள் நிலப்பிரபுக்களை எப்படி துன்புறுத்தி வருகிறார்கள் என்றும் சேனா நடவடிக்கையில் இறங்க சரியான தருணம் இது என்றும் சந்த்கேஷ் வருக்கு தகவல் அனுப்பினார். சந்த்கேஷ்வர் கிராமத்தில் கூட்டம் போட்டு தாக்குதலுக்கு அனைவர் சம்மதத்தையும் பெற்று கையெழுத்து வாங்கினார். இகக (மாலெ)யை 3 மணிக்கு எதிர்கொள்வோம் என்றனர்.

லக்ஷ்மண்பூர் பாதேயில் 58 தலித்துகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்ப காலத்தில் இருந்தவர்கள் என துப்பாக்கியால் சுட்டும், வெட்டியும் கொன்றோம். அதன்பிறகு 32 சேனாக்காரர்கள் சோனே ஆற்றில் படகுகளில் ஏறி போஜ்பூர் தப்பிச் சென்றோம். அப்போது இகக(மாலெ) ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று 5 ஏழை மீனவர்களை தலையை சீவி கொலை செய்தோம்.

படுகொலை நடந்த அடுத்த நாள் சோனே ஆற்றில் கூடுதலாக தலையில்லா 5 சடலங்கள் கிடந்ததைக் குறிப்பிட்டுக் கோப்ராபோஸ்ட் செய்தியாளர் கேட்டபோது ஆமாம் அவர்கள் தலை சீவப்பட்டது. அவர்கள் படுகொலை நடந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள். எங்களிடம் சிக்கிக் கொண்டார்கள். அவர்களைக் கொல்ல குண்டுகளை விரயம் செய்ய வேண்டாம் என்பதால் கத்தியால் அவர்கள் தலைகளை வெட்டினோம். நான் அவர்கள் மீது கோபமாக இருந்தேன். ஒரு தலித்தை கொல்ல 100 ரூபாய் பெறுமானமுள்ள குண்டுகளை ஏன் வீணாக்க வேண்டும்? அதனால் கத்தியால் அவர்களை வெட்டிக்  கொன்றேன் என்றார்.

சித்நாத் சிங்

ரன்வீர் சேனாவின் இன்னொரு தளபதி சித்நாத். இவர் சேனா தலைவர் பர்மேஸ்வர் முக்கியாவின் உதவியாளர். முடிவெடுக்கும் அமைப்பில் இவர் இருந்த காரணத்தால், எல்லா படுகொலைகளிலும் திட்டமிடுவதிலோ, செயற்படுத்துவதிலோ இவர் இருந்திருப்பார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. எப்படியிருந்த போதிலும் அவர் இப்போது சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக சுதந்திரப் பறவையாக இருக்கிறார். சேனா நடத்திய 6 பெரிய படுகொலைகளில் தான் சம்பந்தப்பட்டது பற்றி அவர் சொல்லும் போது அவர் இமைகள் கூட மூடவில்லை. படுகொலைகளின் விவரங்களை அவர் சொன்ன விதத்தைப் பார்க்கும் போது கடைந்தெடுத்த கிரிமினல்களால் மட்டுமே இது முடியும் என்பதாய் இருந்தது. லக்ஷ்மண்பூர் பாதேயின் இரத்தம் வழிந்தோடிய இரவுகள், யார் அதற்கு பின்னால் இருந்தார்கள், யார் நடத்திக் காட்டினார்கள் என்பவற்றையும் ஆயுதம் வாங்க உதவிய முன்னாள் பிரதமரின் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னார்.               

நாங்கள் இகக(மாலெ)யை அழித்துவிட முடிவு செய்தோம். அவர்கள் வலுவடைவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அதனால் எங்கள் கட்சி, அதாவது சேனாவைக் குறிப்பிடுகி றேன், அவர்களை சுற்றி வளைத்தது. தாக்குதல்கள் எதிர்த்தாக்குதல்கள் என்று இருந்து அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் லக்ஷ்மண்பூர் பாதே தாக்குதலுக்கு முன்பாக அர்ராவின் பேலார் கிராமத்தில் கூட்டம் நடத்தினோம். அதில் பர்மேஸ்வர் முக்கியா  உள் ளிட்ட கருக்குழுவைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். படுகொலைக்கு 2 நாட்கள் முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

சித்நாத் சிங் போலீஸ் காவலில் இருந்தபோது, இந்திய ராணுவத்திற்கு மட்டுமே வைத்திருக்க, பயன்படுத்த உரிமையுள்ள கொலைகார ஆயுதங்கள் தனக்கு எப்படிக் கிடைத்தன என்பதை வெளிப்படுத்தினார். “நாங்கள் எல்எம்ஜி ஆயுதங்கள் வைத்திருந்ததாக சொன்னபோது, அவர்கள் எப்படிக் கிடைத்தது என்று கேட்டார்கள். இந்திய ராணுவத்தால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஒரு குவிய லில் இருந்து பிரதமர் எங்களுக்குக் கொடுத்தார். அதற்கு அவர்கள் எங்களை துரோகிகள் என்றார்கள். நாங்கள் துரோகிகள் அல்ல. நாட்டின் நலனிலிருந்து செயல்படுபவர்கள், எனவேதான் பிரதமர் உதவியோடு ஆயுதங்கள் பெற்றோம் என்று சொன்னேன். அவர்கள் பிரதமர் பெயரைக் கேட்டபோது, நான் சந்திரசேகர் என்று சொன்னேன்.

சித்நாத்தின் கூற்றுப்படி ராணுவம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டதாகச் சொன்ன ஆயுதங்கள் தன்பாத்தின் சக்திவாய்ந்த அரசியல்வாதி சூர்யதேவ் மூலமாக வந்தது. அவர் எங்களது நெருங்கிய ஆதரவாளர். சூர்யதேவ்தான் இராணுவத்தால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட ஆயுதங்களை வாங்கித் தந்தவர். அப்போது சந்திரசேகர் பிரதமர். சூர்யதேவ் சந்திரசேகரின் நெருங்கிய நண்பராக இருந்தார். வரும்போது அவர் இடத்தில்தான் இவர் தங்குவார். இப்படித்தான் அவர்கள் இருவரும் எங்களுக்கு உதவினார்கள்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீராஜ்சேகர் இதை மறுத்துள்ளார். எங்கள் குடும்பத்தாரிடமிருந்து என் தந்தை எதையும் மறைத்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர், சூர்ய தேவை எங்களுக்கு நன்கு தெரியும், எனக்கு தெரிந்த மாதிரி மொத்த உலகத்துக்கும் தெரியும் என்றும் சலுகைகள் எதையும் எந்த சேனாவுக்கும் என் தந்தை வழங்கியிருக்க மாட்டார் என்றும் சொன்னார்.

தன்பாத் போலீஸ் சரக எல்லைக்கு உட்பட்ட அய்பட்பூரில் எங்கள் ஆட்கள் முசார் வகுப்பைச் சேர்ந்த 7 பேரை கொலை செய்தனர்  9 சேனாக்காரர்கள் இதைச் செய்ததாகவும் உள்ளூர் போலீஸ் 64 பேர் மீது எப்அய்ஆர் பதிவு செய்து, இறுதியில் கொலையாளிகள் தப்ப உதவியதாகவும் தெரிவித்தார். சித்நாத்தின் கூற்றுப்படி 9 பேர் கொண்ட முடிவு எடுக்கும் கருக் குழு இருக்கிறது; 6 படுகொலை சம்பவங்களில் அவர் பங்கெடுத்திருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். அவர் ஊர் பெயர்களை மாற்றி மாற்றி சொன்னாலும்  சந்தேகத்திற்கிடமில்லாமல் 6 படுகொலை சம்பவங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.

இந்தியாவில் நம் மதம் வயதானவர்களைக் கொன்றால் குற்றச் செயல் அல்ல என்றோ, இளையவர்களைக் கொன்றால் நீ குற்றச் செயல் புரிந்தவன் என்றோ சொல்வதில்லை. எந்தச் சட்டமும் சிறுவனைக் கொன்றால் 20 வருட தண்டனை என்றோ, முதியவரைக் கொன்றால் 2 வருட தண்டனை என்றோ, குழந்தையைக் கொன்றால் 50 வருட தண்டனை என்றோ சொல்லவில்லை.

அர்விந்த்குமார் சிங்

பிறர் துன்பத்தைக் கண்டு மகிழும் செயல் போல படுகொலையைக் குறிப்பிடும் அர்விந்த் சிங் 1996 மற்றும் 1997ல் தனது சக கிராமவாசிகளை கொலை செய்தது பற்றி விவரமாக குறிப்பிடுகிறார். இரண்டிலும் தன்னுடைய ஈடுபாடு உண்டு என்று குறிப்பிட்ட அவர் ஏக்வாரியில் தானும் தனது சக கொலையாளிகளும் எப்போது, எப்படி ஈடுபட்டோம் என்பதை சொல்கிறார். முதல் படுகொலையில் 7 பேரும் இரண்டாவதில் 8, 9 பேர் கொல்லப்பட்டனர். ஒன்று 1996லும் மற்றொன்று 1997லும் நடந்ததாக குறிப்பிடுகிறார். இரண்டுமே உள்ளூர் பூமிகார் கிராமத்தினரின் செயல்களே. இரண்டுமே உள்ளூரில் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை. இதில் பர்மேஷ்வர் இல்லை என்றும் ஏக்வாரி கிராமத்தினர் தவிர வெளியாட்கள் யாரும் ஈடுபடவில்லை எனவும் சேனாவெல்லாம் இல்லை நாங்களே 500 குடும்பங்கள் இருக்கிறோம் குடும்பத்துக்கு ஒருவர் வந்தால் கூட சேனை தயார் என்றும், 500 பூமிகார் குடும்பங்கள் இருக்கும்போது, குடும்பத்துக்கு ஒருவர் என 200  குடும்பங்களில் தாமாக முன்வந்தால் கூட நம் சேனா ஒன்று கூடிவிட்டதாகும் என்றார். அர்விந்த்தால் இது மாதிரி பெரிய கூட்டத்தை குறைந்த கால அவகாசத்தில் கூட்ட முடிந்துள்ளது. தங்கள் நோக்கை நிறைவேற்ற நவீன ஆயுதக் கிடங்கையும் வைத்திருப்பதோடு கிராமத்திற்குள்ளே பகையாளி இருப்பதால் செய்து முடிப்பதும் சுலபமானதாக இருக்கிறது என்றார்.

ஆயுதங்கள் எங்கள் வீட்டில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்கினோம். அதிக விலை கொடுத்தும் சில ஆயுதங்களை வாங்கினோம் என்கிறார்.

இரண்டு படுகொலைகளிலும் அர்விந்த் சிங்கும் மற்ற கொலையாளிகளும் குற்றம் சாட்டப்படிருந்தாலும் சட்டத்தின் நீண்ட கைகள் அவர்களை அடைய முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சமரசம் செய்து கொண்டு தப்பித்து விடுகிறார்கள். அவர் மீதும் மற்ற குற்றவாளிகள் மீதும் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. எப்படி அவர் சுதந்திரமாக தப்பித்து இருக்கிறார் என்பதை அவரே சொல்கிறார். எல்லா வழக்குகளிலும் அவர்களோடு சமரசம்  ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர்களிடம் ஏமாற்றிப் பேசியோ அல்லது எங்கள் பலத்தை காண்பித்தோ அவர்களை இணங்கச் செய்கிறோம். விளைவாக, எல்லா வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

பிரமோத் சிங்

இவர் இன்னொரு ஈவிரக்கமற்ற கொலைகாரர். பல்வேறு படுகொலைகளில் குற்றம் சாட்டப்பட்டவர். இவரும் பாட்னா உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர். ஆனால் வேறு வழக்குகளில் இப்போதும் அர்ரா சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கோப்ராபோஸ்ட் செய்தியாளர் இவரை சிறையில் சந்தித்து பேட்டி கண்டபோது கொஞ்சம் கூட அச்ச உணர்வே இல்லாமல் ஜுன் 2000ல் அவுரங்காபாத் மாவட்டத்தில் மியான்பூரில் நடைபெற்ற படுகொலையில் தான் பங்கு பெற்றதைப் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 32 பேர் தலித்துகள் மற்றும் முஸ்லீம்களை படுகொலை செய்த சேனா நடத்திய தாக்குதல் பற்றி அவருடைய சொந்த வார்த்தைகளில்... அந்தக் கிராமம் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக இருந்தது. அதனால் ரன்வீர் சேனாவின் இலக்கானது. நாங்கள் படுகொலையை செய்து முடித்தோம். இந்தத் தாக்குதல் பிரமேஷ்வர் முக்கியா தலைமையில் நடத்தப்பட்டது. பல முறை எங்களுடன் பர்மேஸ்வரும் இருந்ததுண்டு. அந்தத் தாக்குதல் குழுவில் பர்மேஸ்வரோடு 9 பேர் இருந்தனர் அவர்களில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.

மத்தியில் பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நிதி அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா எங்கள் பகுதிக்கு அடிக்கடி வருவார். பர்மேஸ்வர் முக்கியாவை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். போலீஸ் எங்கள் இடங்களையெல்லாம் சோதனை செய்து கொண்டிருந்த போது கூட அவர் என் கிராமத்தில் இருந்தார்.
யஸ்வந்த் சின்ஹாவுக்கு நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் யார்? என்பது தெரியுமா என்று கேட்டதற்கு அழுத்தம் திருத்தமாக தெரியும், தெரியும் என்று பதில் அளித்தார்.

என்ன மாதிரியான ஆதரவை சின்ஹா கொடுத்தார் என்று கேட்டபோது, அரசியல் மற்றும் நிதி ஆதரவு என்ற பதிலைப் பெற முடிந்தது. எங்கள் அமைப்புக்கு அவர் நிதி கொடுத்தார். அய்ந்தரை லட்சம் ரூபாய். வேறு உதவி ஏதாவது செய்தாரா என்றால் அரசியல்ரீதியான உதவி தவிர வேறென்ன என்ற பதில் வந்தது.

நாங்கள் தப்பி ஓடும்போது போலீஸ் வந்து விட்டால் ஜகனாபாத் எம்.பி அந்த இடத்திற்கு வந்து எங்களில் 5 - 6 பேரை தனது காரில் ஏற்றி கூட்டிச் செல்வார்

புருலியாவில் ஆயுதங்கள் போடப்பட்ட சம்பவத்தில் எங்களுக்கு நிறைய ஆயுதங்கள் கிடைத்தன.

போலா சிங்

50 - 60 பேரை ஆங்காங்கே தாங்கள் கொன்று போட்டதாக சொல்லும் அவர் லக்ஷ்மண்பூர் பாதே சம்பவம் மிக முக்கியமானது என்கிறார். அப்போது நாங்கள் 100 சேனாவை சேர்ந்தவர்கள் இருப்போம். தாக்குதல் ஏக்வாரி கிராமத்தில் எனது மைத்துனர் சாந்து தலைமையில் நடைபெற்றது. அப்போது முக்கியா என்று அழைக்கப்படும் பர்மேஸ்வர் சிங்கும் உடன் இருந்தார். அவரே தாக்குதலிலும் ஈடுபட்டார். தானும் அப்போது இருந்ததைப் பெருமையாக குறிப்பிடுகிறார்.

ஆற்றுக்கு அந்தப்புறம் லக்ஷ்மண்பூர் பாதே இருக்கிறது. இகக(மாலெ)காரர்கள் இங்கு வந்து செல்வார்கள். அவர்கள் தங்களுக்கு சொந்தமான படகு வைத்திருக்கிறார்கள். அதில் இங்கு வந்து சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு திரும்பிச் சென்றுவிடுவார்கள். அந்தப் பக்கம்  இருந்து  வருவதால் அவர்கள் அங்குதான் தங்கியிருக்க வேண்டும் என்றும் நாம் ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் நாங்கள் கருதினோம். அதற்கான திட்டம் தீட்டி தாக்குதலை நடத்தினோம்.
எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் திடுக்கிட்டார்கள். கொல்லப்பட்டார்கள். எங்கள் பக்கம் பாதிப்பு ஏதுமில்லை.

ரவீந்திர சவுத்ரி

1995 தலித் படுகொலைகளின் முதன்மைக் குற்றவாளி. நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டவர். எல்லா முக்கியப் படுகொலைகளிலும் தான் பங்கேற்றதை வாக்கு மூலமாக அளித்தார். தான் அப்போதைய தலைவர் பர்மேஷ்வர் முக்கியாவுடன் சேர்ந்து திட்டமிட்டதை பெருமையாக சொல்கிறார்.

அவருடன் பேசியதிலிருந்து ஒரே நாளில் 50 படுகொலைகள் கூட திட்டமிட்டிருந்ததாக நாங்கள் அறிந்து கொண்டோம். அரசாங்கத்தின் உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அதை எழுப்புவதற்கு ஒரே நாளில் 50 கிராமங்களில் படுகொலை நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்படியில்லை எனில், அரசாங்கம் இந்த நாட்டில் சிறுபான்மையினர், மிகவும் பின்தங்கியவர், பின்தங்கிய பிரிவு சாதிகள் மட்டுமே வசிப்பதாக நினைத்துக் கொள்ளும்

சேனா படைகளை கொலை செய்வதற்கு அனுப்பும் வேலையை சவுத்ரி செய்திருக்கிறார் என்பதை அவரது ஒப்புதல் வாக்கு மூலங்களில் இருந்து அறிய முடிகிறது. படுகொலைகளை நான் செய்யவில்லை. ஆனால் செய்யுமாறு உத்தரவிட்டேன். கொலை செய்யச் சொல்லி எனக்கு உத்தரவிடப்பட்டபோது செய்தேன்.

நான் ஒரு கிராமத்திற்கு 50 - 60 பேர் கொண்ட படைக் குழுவை அனுப்பினேன். ஆனால் ஒருவர் கூட அந்தக் கிராமத்தில் இல்லாததால் அந்தக் குழு வேறொரு கிராமத்திற்கு சென்று உத்தரவை நிறைவேற்றியது. இந்த நடவடிக்கைகளெல்லாம் நவீன ஆயுதங்கள் கொண்டு நடத்தப்பட்டன. ஆயுதங்களை பல வழிகளில் வாங்கினோம். எல்லா வகையான ஆயுதங்களும் எங்களிடம் உண்டு. எல்லா மக்களும் எங்களுக்கு உதவினார்கள். ஆயுதங்களை அன்பளிப்பாக கொடுத்தார்கள். பணம் கொடுத்தும் கூட ஆயுதங்களை வாங்கினோம்.

விடுமுறையில் இருந்த ஜவான்கள் மூலமாகவோ அல்லது பணி ஓய்வு பெற்ற ஜவான்கள் மூலமாகவோ அப்படிப்பட்ட ஆயுதங்களை சேனா படையினர் பயன்படுத்த  பயிற்சி  அளிக்கப்பட்டது. எங்களது பெரிய கிராமத்தில் 200 - 400 பேர் இராணுவத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொரு  குடும்பத்திலிருந்தும் ஒருவர் அல்லது இருவர் வந்தால் கூட படைக்கு போதுமான ஆட்கள் கிடைத்துவிடுவார்கள்.

எங்கெல்லாம் போகச் சொல்கிறோமோ அங்கு எங்கள் ஆட்கள் போகிறார்கள். இப்போது உங்களை ஒரு மரத்திலிருந்து சில மாங்கனிகளை பறித்து வரச் சொல்கிறோம். நீங்கள் குச்சி கொண்டு அடிக்கிறீர்கள். 8 மாங்கனிகளும் 5 மாங்காய்களும் விழுகின்றன என வைத்துக் கொள்வோம். மாங்காய்களைப் பறித்ததற்கு உங்களுக்கு தண்டனையா கொடுக்க முடியும்? அதே போல்தான் திடகாத்திரமான இளைஞர்களை கொலை செய்யும்படி எங்கள் ஆட்களை அனுப்புகிறோம். அப்போது அவர்களோடு சில குழந்தைகளும் கொல்லப்பட்டுவிட்டால் என்ன தண்டனையா கொடுக்க முடியும்? அவர்கள் ஒன்றும் சம்பளப் பட்டியலில் இல்லை சம்பளத்தைப் பிடித்தம் செய்து தண்டனை கொடுப்பதற்கு. பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவது நடவடிக்கையில் தவிர்க்க முடியாத சேதாரம்.

நீங்கள் 36 அங்குல குடல் உடையவராயிருந்தால் மொத்த 36 அங்குலத்தையும் கிழித்துப் போட்டு விடுகிறோம். உங்களை மட்டுமல்ல. பெண்களையும் கிழித்துப் போட்டுவிடுவோம். வருங்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்று விடக் கூடாது.

சேனா படை பெண்களைக் கொல்லும் போது சிசுக்களையும் அறுத்து எறிந்து விடுவார்கள். ஏனென்றால் குழந்தை பிறந்து நக்சலிசத்தை தழுவி தங்களது சமூக, பொருளாதார மேல் ஆளுகைக்கு அச்சுறுத்தலாக வந்துவிடக் கூடாது.

நீதிபதி அமீர் தாஸ்

சில பெயர்களை என்னால் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சிவானந்த் திவாரி, சி.பி.தாகூர், முரளி மனோகர் ஜோஷி மற்றும் சுஷில் குமார் மோடி மட்டுமல்லாது லக்ஷ்மண்பூர் பாதேக்கு அருகிலுள்ள கிராமத்தின் ஊர் தலைவரும் ரன்வீர் சேனாவை ஆதரிக்கிறார்முரளி மனோகர் ஜோஷி ஒரு விசாரணை அதிகாரியை ஒழுங்காக நடந்துகொள்ளும்படி அச்சுறுத்தினார். நேர்மையாக விசாரணையை நடத்தினால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.

ஆணையத்தின் முன் சாட்சியமளித்த ஒரு விசாரணை அதிகாரி படுகொலைக்குப் பின்பு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டவர், செனாரிக்கு சென்று ஆட்களை தேடுவதில் ஈடுபட்டார். இதையறிந்த ஜோஷி விசாரணை அதிகாரியை பார்க்க வந்தார். அப்போது நீங்கள் திட்டமிட்டபடி செயல்பட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உங்களுக்கு பிரச்சனை என்று சொல்லி அதிகாரியை அவர் பணியை செய்யவிடாமல் தடுத்தார். குறுக்கு விசாரணையில் அதிகாரி இதை மறுத்துவிட்டார்.
நீதிபதி தாஸ் ஆணையம் ஏன் கலைக்கப்பட்டது என அவரே குறிப்பிடுகிறார். எந்த அறிக்கையோ அல்லது அறிவிப்போ இல்லாமல் திடுதிப்பென மூடப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்கும்படி எனக்கு சொல்லப்படவில்லை. காலவரையறை எதுவும் கொடுக்காமல் மூடப்பட்டது. நிதீஷ் குமார் அமைச்சரவை உருவானபோது சுசில் மோடி துணை முதல்வராக இருந்தார். நிதிஷ் எதிலும் ஈடுபடாததால் அவர் பெயர் எதிலும் இடம் பெறவில்லை. சுசில் குமார் மோடி பெயர் மற்ற ஆர்எஸ்எஸ், பாஜககாரர்களின் பெயர்களுடன் அடிபட்டது.

பலரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு உள்ளதால் வழக்கு விசாரணையில் இருக்கிறது. கோப்ராபோஸ்ட் நடத்திய இந்த புலனாய்வு மனித குலத்திற்கு எதிரான இந்த குற்றச் சம்பவங்களின் இருட்டு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதேயாகும். இல்லையென்றால் அவை இருளிலேயே இருந்து போகும்.

அமீர் தாஸ் ஆணையத்தின் அறிக்கைக்கு தங்கள் பதில்வினை என்ன எனக் கேட்டு முரளி மனோகர் ஜோஷி, சி.பி.தாகூர் மற்றும் சுசில் குமார் மோடி ஆகியோரை கோப்ராபோஸ்ட், தொடர்பு கொண்டது. ஆனால் பத்திரிகை அச்சுக்குப் போகும் வரை அவர்களிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. முன்னாள் நிதி அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா கோப்ராபோஸ்ட் அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அளிக்கவில்லை.

துணை கண்காணிப்பாளர் சிஅய்டி (ஓய்வு) மிர்சா மச்சூத் ஆலம் பெக் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் போதுமான ஆதாரங்கள் திட்டவட்டமாக இருப்பதாக சொன்னார். எல்லோருக்கும் எதிராக நேரடி சாட்சியங்கள் உள்ளன, மக்கள் கண்ணால் பார்த்திருக்கிறார்கள், அடையாளப்படுத்தியும் இருக்கிறார்கள், படுகொலைக்கு முன்னதாக அவர்கள், அவர்கள் இடத்தில் கூட்டம் போட்டிருக்கிறார்கள், இவையனைத்தும் வழக்கு நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

தென்னிந்தியாவில் பாலைவனம் இல்லை என்ற குறை போக்க ஒரு மறைமுக திட்டமா?

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுக்கும் அய்க்கிய அமெரிக்காவுக்கும் இடையே நடக்கும் எண்ணெய் போட்டியும் ஒரு காரணம். ஷேல் எண்ணெய் உற்பத்தி மூலம் அய்க்கிய அமெரிக்கா தனது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது. அங்கும் வர்த்தகம் கட்டுபடியாகாததால் ஷேல் எண்ணெய் உற்பத்தி குறைந்து வருகிறது.

இந்தியாவில் இப்போது ஷேல் எண்ணெய் உற்பத்தி பற்றி பேசப்படுகிறது. நல்லதுதான். எண்ணெய் தேவைக்கு ஏற்றுமதியை நம்பி இருக்காமல் நமக்கு நாமே உற்பத்தி செய்து கொண்டால் நல்லது. எண்ணெய் விலைக் கட்டுப்பாட்டில் இருந்தால் அதையொட்டி எல்லா விலைகளும் கட்டுக்குள் இருக்கும். சாமான்ய மக்கள் வாழ்க்கையில் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும். ஆனால் இப்படியெல்லாம் மோடி அரசாங்கம் யோசிக்குமா?

மோடி தலைமையிலான அரசாங்கம் காவிரி டெல்டா விவசாயத்தை, தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிடப் பார்க்கிறது. காவிரிக் கரையோர மக்கள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்கள் மூலம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தை, அத்துடன் சேர்த்து மீத்தேன் திட்டத்தை அங்கிருந்து விரட்டி விட்டார்கள். இப்போது பொதுத் துறை நிறுவனத்தைக் கொண்டே வேறு ஒரு திட்டம் மூலம் காவிரிப் பாசனப் பகுதியை நாசமாக்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள்.

அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 35 இடங்களில் எரிவாயு, எண்ணெய் கண்டறியும் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் கேட்டு ஓன்ஜிசி நிறுவனம் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எழுதியுள்ளது.

இந்தக் கடிதத்தில் பொய்யான விவரங்கள் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காவிரி டெல்டாவில் விவசாயம் நடக்கவில்லை என்றும் நடத்தப்படாத கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதியில் விவசாயம் இல்லை என்று அனுமதி கோரும் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றால், ஓஎன்ஜிசி சொல்வதுபடி எண்ணெய் எடுக்கும் திட்டம் விவசாயம் நடக்கிற பகுதியில் செயல்பட முடியாது என்பது தெளிவாகிறது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.700 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மீத்தேன் எடுக்கவில்லை, எரிவாயு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறோம் என்று பசுமைத் தீர்ப்பாயத்தில் சொல்கிற ஓஎன்ஜிசி நிறுவனம் பூமிக்கடியில் 10,000 அடிகளுக்குத் துளைபோட அனுமதி ஏன் கேட்க வேண்டும்? தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ரகசியமாக இரவு நேரத்தில் ஏன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்? ஷேல் என்ற சொல்லை ஓஎன்ஜிசி நிறுவனம் பயன்படுத்தவில்லை, அதனால் அது ஷேல் எண்ணெய் எடுக்கும் பணி இல்லை என்று சொல்வார்கள் என்றால், பூமிக்கடியில் 10,000 அடிகளுக்குத் துளைபோட என்ன அவசியம்?

இந்தியாவில் காம்பே, காவிரி, கிருஷ்ணா  கோதாவரி ஆற்றுப்படுகைகளில் ஷேல் எரிவாயு எடுக்க முடியும் என்று அய்க்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு மய்யம் 2012லேயே சொன்னது  என மாநிலங்களவையில் மத்திய பெட்ரோலிய துணை அமைச்சர் தெரிவித்தார். ஓஎன்ஜிசி நிறுவனம் தனது ஃப்ராக்கிங் பணிகளுக்கு அந்நிய நிறுவனங்களை அமர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் கூடுதல் ஃப்ராக்கிங் அலகுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். காவிரிப் படுகையில் ஓஎன்ஜிசி உண்மையில் என்ன செய்யப் போகிறது என்பதை அமைச்சர் சொல்வதில் தெரிந்து கொள்ள முடிகிறது.

பூமிக்கடியில் பத்தாயிரம் அடிகளுக்குக் கீழ் இருக்கிற பாறைகளில் உள்ள எரிவாயுவை எண்ணெயை, ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் என்கிறார்கள். அதை ஃப்ராக்கிங் முறையில், அந்த ஆழத்துக்கு ஆழ்துளை குழாய்கள் போட்டு அந்தக் குழாய்களில் நீரை அழுத்தத்துடன் பாய்ச்சி, அதன் விசையில் பாறைகள் உடைக்கப்பட்டு பிறகு அந்தப் பாறைகளில் உள்ள வாயுவை, எண்ணெய்யை வெளியில் எடுக்க வேண்டும். கழிவு பெருமளவில் நிலத்தில் கொட்டப்படும்.

அய்க்கிய அமெரிக்காவில் ஷேல் உற்பத்தியில் உருவாகும் கழிவு நீரை சேமித்து வைத்து பிறகு கழிவு நீக்கி, பிறகு வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று கொட்டுகிறார்கள். அல்லது மீண்டும் ஷேல் எடுக்க பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இதுபோன்ற நடைமுறைகள் எப்படி நடக்கும் என்று நேற்றைய போபால், இன்றைய யூனிலீவர் எல்லாம் காட்டுகின்றன. கூடங்குளம் அணுக்கழிவை எங்கே கொட்டப் போகிறார்கள் என்று இடிந்தகரை மக்கள் கேட்கும் கேள்விக்கு அன்றைய அய்முகூ அரசும் இன்றைய தேஜமு அரசும் உருப்படியான ஒரு பதிலும் இது வரை சொல்லவில்லை.

அய்க்கிய அமெரிக்காவிலும் எண்ணெய் எடுத்த பிறகு கழிவாகும் நீர் எப்படி எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதை கண்டு பிடிப்பது சிரமமாக இருப்பதாகவும் அது பற்றிய போதுமான விவரங்கள் இல்லை என்றும் 62% கழிவு பற்றி விவரங்களே இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆனால் எண்ணெய் எடுக்க உள்ளே செலுத்தப்படும் நீரின் அளவு ஆகப்பெரியது. மார்சல்ஸ் ஷேல் என்கிற பெரிய நிறுவனத்தின் கழிவு நீர் ஆறுகள் போன்ற பிற நீராதாரங்களில் கொட்டப்படுகிறது என அங்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

பென்னிசில்வேனியாவில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மட்டும் எண்ணெய் எடுக்க 4.3 மில்லியன் காலன் நன்னீர் தேவைப்படுகிறது. நன்னீருடன் மணலும் வேதிப்பொருட்களும் கலக்கப்பட்டு செலுத்தப்படுகின்றன. ஒரு காலன் என்பது கிட்டத்தட்ட 4 லிட்டர். 4.3 மில்லியன் காலன் என்றால், 1,72,00,000 லிட்டர். நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ஒரு மனிதன் சராசரி வாழ்க்கை வாழ 150 முதல் 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த அளவுக்கு தண்ணீர் நிச்சயம் அரசு தருவதில்லை. விவசாயத்துக்கும், குடிநீருக்கும் கர்நாடகாவுடனும்  ஆந்திராவுடனும் கேரளாவுடனும் தொடர்ந்து ஏதாவது பிரச்சனையை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். விவசாயிகள் கடன் பொறியில் சிக்குகிறார்கள். தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். 2014ல் விவசாயத் தொழிலாளர்கள் 827 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்ஃப்ராக்கிங் முறையில் ஷேல் எண்ணெய் எடுக்க தேவைப்படுகிற தண்ணீர் குஜராத்தில் இருந்து வருமா? அல்லது மோடி கங்கையில் இருந்து கால்வாய் வெட்ட ஏற்பாடு செய்வாரா? இந்தத் தண்ணீருக்கு எங்கே செல்வது? அதையும் அந்த மாவட்டங்களிலேயே ஆழ்துளை குழாய் போட்டு எடுப்பார்கள். ஆக, எண்ணெய் எடுப்பது, பாறையை உடைப்பது, பூமிக்குள் குழாய் போட்டு மணலையும் வேதிப் பொருட்களையும் செலுத்தி நிலத்தடி நீரை மாசுப்படுத்துவது போன்றவை நடக்கும் முன்பே நிலத்தடி நீர் பெருமளவில் எடுக்கப்பட்டுவிடும். தென்னிந்தியாவில் பாலைவனம் இல்லை என்ற குறை நீங்கி விடும்.

ஓஎன்ஜிசி நிறுவனம் பணிகள் மேற்கொள்ள பசுமைத் தீர்ப்பாயம் விதித்திருந்த தடை  நீக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 10 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. காவிரி மீதான தமிழகத்தின் உரிமையை போராடி மீட்டெடுத்ததாகச் சொல்லிக் கொள்ளும் பொன்னியின் செல்வி தமிழகத்துக்கு வரவிருக்கும் இவ்வளவு பெரிய ஆபத்தைப் பற்றி, மீத்தேன் திட்டம் வராது என்று சொன்னவர், அது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்தவர் அடுத்து நடக்கும் விசயங்கள் பற்றி, வெளிப்படைத்தன்மை இன்றி ஓஎன்ஜிசி பணிகள் நடப்பது பற்றி பேசாமல் இருக்கிறார்.

மோடி தனது உலகளாவிய செல்வாக்கை பயன்படுத்தி அய்க்கிய அமெரிக்காவில் உபரியாக இருக்கும் ஷேல் எண்ணெய்யை இந்தியாவுக்குத் தரச் சொன்னால் அய்க்கிய அமெரிக்கா மறுத்துவிடுமா? மோடி மந்திரம் அவ்வளவுதானா?

அணுசக்தி உற்பத்தி, ஷேல் எண்ணெய் உற்பத்தி என மூளை உருகி ஒழுக சிந்தித்து மண்டையை காய்த்துக் கொள்வதை நிறுத்திவிட்டு வெங்காயத்தை உற்பத்தி செய்து போதுமான இருப்பு வைத்து மக்கள் வாங்கும் விலையில் நிறுத்துவது எப்படி என்று மோடி அரசாங்கம் திட்டமிட வேண்டும்.



Search