வறுக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, உரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் முந்திரி ஆலைத் தொழிலாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முந்திரி ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி தலைமையிலான குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்த விவரங்கள் இங்கு தரப்படுகின்றன.
நிறைய பண செலவு வைக்காத விவசாயமான முந்திரி, பறந்து விரிந்து கிடந்த மானாவாரி நிலங்களை அலங்கரித்து, நல்ல மகசூல் தந்து விவசாயிகளையும் முந்திரி தோப்பை ஏலம் எடுத்த ஏழைகளையும் வாழ வைத்தது. முந்திரி இருக்கும் பகுதியில் விறகுக்கும் பஞ்சம் இல்லை. முந்திரிப் பழம், முந்திரிக்கொட்டை என ஏதோ ஒரு விதத்தில் எல்லா வீடுகளிலும் முந்திரி புழங்கியது. முந்திரி தோப்பு காடு விடுதல் பகுதியில் திருவிழா போல் நடக்கும். முந்திரிக் கொட்டையை வறுத்து உடைத்து பிழைக்கும் சாலையோர குடும்பங்கள் உள்ளன.
கோவில் தோப்பு என்கிற பெயரில் வேலிக் கணக்கான அரசு நிலங்களை அபகரித்து அதில் முந்திரி போட்டு அதை ஏலம் விட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் கொள்ளை அடிக்கும் சிறு பிரிவு ஆதிக்க கும்பலும் அரசு முந்திரி தோப்பை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்து கொழுத்த ஆதிக்க கும்பலும் இருந்தது.
முந்திரி விவசாயத்தை மய்யமாகக் கொண்டு பழைய கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, தச்சன்குறிச்சி, வளவம்பட்டி, அண்டகுளம், கறம்பக்குடி, சொக்கம்பேட்டை, இச்சடி, பெரிய கோட்டை பகுதிகளில் முந்திரி தொழிற்சாலை உருவானது. பகுதியில் முந்திரி விவசாயம் நடந்தபோது முந்திரிக் கொட்டை உள்ளூர், பருப்பும் முதலாளியும் வெளியூர் என்று இருந்தது. இன்று முதலாளி, பருப்பு, முந்திரிக் கொட்டை வெளியூர், உழைப்பு மட்டும் உள்ளூர் என்ற நிலை உள்ளது.
ஆலை இல்லா (இனிப்பு இல்லா) ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலைகள் ஏதுமில்லாத போது, கிராமப்புறத்தில் வேலை வாய்ப்பு எட்டாக் கனியாக மாறிவந்த நிலையில், வேலை தேடி காத்துக் கிடந்த பெண்களுக்கு தனியார் முந்திரித் தொழிற்சாலைகள் வேலை தந்தன.
முந்திரி பருப்பு போலவே வறுக்கப்பட்டு, உடைக்கப்பட்டு, உரிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் என தொகுதிக்குள் இன்று முந்திரி தொழிலாளர்கள் நிலை உள்ளது.
கிராமப்புறத்தில் பள்ளி, கல்லூரி போக வாய்ப்பு மறுக்கப்பட்ட, நகர் பகுதிகளுக்கு சென்றுவர வாய்ப்பு இல்லாத, வீடு, காடு மேடு, வயல் இதுவே உலகம் என வாழ்ந்த பெண்களுக்கு ஆலையின் வாகனம் ஊருக்குள் வந்து அவர்களை வெளியே அழைத்துச் செல்வதே துவக்கத்தில் உற்சாகம் தந்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு கடமைகளை முடித்து அவரவர் வசதிக்கேற்ப தயாராகி சாப்பாட்டு டப்பாவை கூடையில் வைத்து கொண்டு 6 மணிக்கு வரும் வேனுக்கு 5 மணிக்கு தயாராக வந்து நின்ற அந்த ஆரம்ப காலம் மகிழ்ச்சியானது. அவர்கள் மகிழ்ச்சி ஆலைக்குள் சென்ற பிறகு மறைந்து போனது.
தொகுதிக்குள் இருக்கிற 9 முந்திரி ஆலைகளில் சுமார் 1,500 பெண்கள் வேலை செய்கிறார்கள். கிட்டத்தட்ட குடிசைத் தொழில் முறையில் இந்த ஆலைகள் இயங்குகின்றன. தொழிலாளர்களில் 75% பேர் திருமணம் ஆகாத இளம்பெண்கள்.
சுமங்கலித் திட்டம் உள்ள ஆலைகளில் இருப்பது போல், உள்ளே என்ன நடக்கிறது என எதுவும் வெளியில் தெரியாதவிதம் மிகவும் உயரமான, நீண்ட ஹாலோ பிளாக் சுவர், ஆஸ்பெஸ்டாஸ் கூரை, தரமற்ற தரை, உணவு உண்ண, உணவுக் கூடை வைக்க இடமின்மை, வெயிலில் காய்ந்து கிடக்கும் உணவுக் கூடை, கழிப்பறை வசதியின்மை, உடை மாற்ற இடமின்மை என முந்திரி ஆலைகள் இயங்குகின்றன.
ஆலையின் இரும்புக் கதவுகள் காலையில் தொழிலாளர்கள் உள்ளே செல்ல திறக்கும். மாலையில் அவர்கள் வெளியில் வர திறக்கும்.
தொழிற்சாலையில் பெண்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுவார்கள், 1. உடைப்பு செட்டு, 2. உரிப்பு செட்டு, 3. பிரிப்பு செட்டு. இவர்களை மேற்பார்வை செய்யும் மேஸ்திரியின் வேலை தொழிலாளியின் வாய் அசையாமல் பார்த்துக் கொள்வதுதான்.
முந்திரி ஆலைக்கு தொழிலாளியை வர வைக்க, அவர்கள் பெரும் பணக்காரர்களாகி விடலாம் என்று சொல்லி பிரம்மாண்டமான அறிவிப்பு செய்யப்படுகிறது.
உடைப்பு வேலை செய்பவர்களுக்கு 1 கிலோ பருப்பு உடைத்து எடுத்தால் ரூ.14.65, 6 கிலோவுக்கு மேல் உடைத்தால் டி.ஏ. ரூ.62.59, உங்கள் கூலியில் சேரும். நீங்கள் எத்தனை கிலோ வேண்டுமானாலும் உடைக்கலாம்.
உரிப்பு வேலை செய்பவர்கள், 1 கிலோ பருப்பு உடையாமல் உரித்து எடுத்தால் ரூ.16.65. எத்தனை கிலோ வேண்டுமானாலும் உடைத்து எடுக்கலாம். 5 கிலோ பருப்பு உரித்தால் டி.ஏ. ரூ.62,59 கூலியில் கூடும்.
பிரிக்கும் வேலை செய்பவர்கள், 20 கிலோ பருப்பு பிரித்தால் ரூ.30 கூலி. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கிலோ பருப்பு பிரிக்கலாம். (52 வகைகளாக பருப்பை பிரிக்கிறார்கள். இதில் 19 வகைகள் ஏற்றுமதியாகின்றன).
அறிவிப்புகள் இவ்வாறு சொல்கின்றன. 1 கிலோ பருப்பு உடைத்து எடுக்க, 5 கிலோ முந்திரியில் வேலை செய்ய வேண்டும். உனது திறமைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று சொல்கிற நிர்வாகம், உண்மையில், கடைசி வரை அது அறிவித்த டி.ஏ. கூட தொழிலாளி வாங்க முடியாதபடி பார்த்துக் கொள்கிறது.
காலை 6 மணி முதல் மதியம் 2.30 வரை வேலை செய்தால், புதிதாக வேலைக்கு சேரும் தொழிலாளர்கள் வாரத்தில் ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பாதிக்க முடிகிறது. அனுபவம் உள்ளவர்கள் வாரத்தில் ரூ.500, முதல் ரூ.700 வரை சம்பாதிக்க முடியும். அதிகபட்சமாக மாதத்தில் ரூ.3,000 வரை சம்பாதிக்கலாம்.
காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான வேலை நேரத்தில் வேலை கூடுதலாக இருப்பதுடன் வீடு திரும்ப இரவு ஆகிவிடும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் நாளொன்றுக்கு கூலி ரூ.183.
அரசுப் பண்ணை தொழிலாளிக்கு 5 மணி நேர வேலைக்கு நாளொன்றுக்கு ரூ.251.
களை எடுக்கும் வேலையில் ரூ.100 கூலியுடன் தேநீர் தரப்படுகிறது.
நடவு வேலைக்கு ரூ.150 கூலியுடன் தேநீரும் மதிய உணவும் தரப்படுகிறது.
கட்டுமான வேலையில் சித்தாள் வேலைக்கு ரூ.300 வரை கூலி கிடைக்கிறது.
எப்படி ஒப்பிட்டாலும் ஞாயிறு விடுமுறை கூட இல்லாமல் மாதம் முழுவதும் உழைக்கும் முந்திரி ஆலைத் தொழிலாளர்களுக்கு கூலியாய் கிடைப்பது மிகவும் சொற்பமே.
உள்ளூர் சந்தையில் 1 கிலோ முந்திரி பருப்பு ரூ.570க்கு விற்கப்படுகிறது. வெளிச்சந்தையில், ஏற்றுமதிச் சந்தையில் இன்னும் சில நூறு ரூபாய் விலை அதிகம். 1 கிலோ முந்திரி பருப்புக்கு, முதலாளி செலவிடுவது எல்லாம் சேர்த்து அதிகபட்சம் ரூ.320 என்று வைத்துக் கொண்டாலும் தொழிலாளர்கள் 1 கிலோ பருப்புக்கு குறைந்தபட்சம் ரூ.250 வரை முதலாளிக்கு உருவாக்கித் தருகிறார்கள்.
தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை, பணிக்கொடை, மகப்பேறு விடுப்பு, கருக்கலைப்பு விடுப்பு, ஈட்டிய விடுப்பு, பி.எஃப், இஎஸ்அய், கூடுதல் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம், உணவகம், குழந்தைகள் காப்பகம், 480 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் என ஆலைத் தொழிலாளர்களுக்கு இருக்கிற எந்த உரிமையும் முந்திரித் தொழிலாளர்களுக்கு இல்லை.
வேலை வாய்ப்பு, எல்லாவற்றையும் விட பெரிய பேறு என தொழிலாளர்கள் கருதுவதால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இது என தொடர்கிறார்கள். எந்தச் சிறிய எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்கும் அந்த குறைந்தபட்ச வாழ்வாதாரத்தையும் ஒழித்துவிடும். உரிமை மறுக்கப்பட்டு, கடுமையான சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதுதான் சாதாரணமான வாழ்க்கையாக அவர்களுக்கு கழிகிறது.
இவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டுரீதியில் குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் இவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக சம்பிரதாய வாக்குறுதிகள் கூட தருவதில்லை. முந்திரி ஆலை பெண் தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்புவது மட்டுமே அவர்கள் நிலைமைகளில் மாற்றம் கொண்டு வரும்.
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள்: அதே பாட்டு... அதே மெட்டு...
அதே மேசை... அதே தட்டு... அதே 110...
மாற்றம் என்ற ஒன்றைத் தவிர அனைத்தும் மாறும் என்பதை கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து எல்லோரும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் அதை சட்டமன்ற நிகழ்வுகள் தவிர மற்ற அனைத்தும் மாறும் என்று சொல்லலாம். அதே பாட்டு. அதே மெட்டு. அதே மேசை. அதே தட்டு. அதே 110.
ஆகஸ்டு 24. மங்கல வாத்தியம் முழங்க, அமைச்சர்களும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வரும் வழி பார்த்து வளைந்த முதுகும் குவிந்த கையுமாக எழுந்து நிற்க, அவைக்குள் வந்தார் ஜெயலலிதா. ஆர்கே நகர் வெற்றிக்குப் பின் வரும் முதல் கூட்டமாம். ஆரவாரம் செய்தார்கள். பேரவைத் தலைவர் பேரவைக் கவிஞராக மாறி அம்மாவுக்கு வாழ்த்துப்பா பாடினார். மகாவிஷ்ணுவின் மனித வடிவே, புறநானூறே, மகராசி, மாதரசி, மகாசக்தி என்று சபாநாயகர் வைத்த ஆலங்கட்டி அய்ஸ் மழையால் அமைச்சர்களே ஆடிப்போனார்கள். முழு மதுவிலக்குக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, அவற்றை சட்டை செய்யாமல், அவை, அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மது விலக்கு போராட்டம் நடத்துவோரை, அநாதைகளாக இருந்தால் மட்டுமே அரசாங்க உதவி என்று கூறும் அரசாணையை எரிக்கும் போராட்டத்தில் இருந்த மாற்றுத் திறனாளிகளை ஈவிரக்கமில்லாமல் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுவிட்டு வந்த ஜெயலலிதா, நோயற்ற வாழ்வாகிய குறைவற்றச் செல்வத்தைப் பெற்றால்தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் பெற்று மனித வளக் குறியீட்டில் தமிழகம் சாதனை படைக்க முடியும் என்பதால்தான் எனது தலைமையிலான அரசு தமிழக மக்களின் உடல் நலம் பேணும் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. தாய் சேய் நலம் காப்பதில், தொற்றும் மற்றும் தொற்றா நோய்களை தடுப்பது, கட்டுப்படுத்துவது அனைத்திலும் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது. சுகாதாரச் சேவைகள் செம்மையுறும் வகையில் அதன் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில் நடப்பாண்டில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதாகச் சொல்லி விதி 110ல் 22 திட்டங்களை ஒவ்வொன்றாக வாசித்தார்.
ரூ.6 கோடி செலவில் 10 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 கோடி ரூபாய் செலவில் செவிலியர் குடியிருப்பு, ரூ.12.12 கோடியில் 12 ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மய்யங்கள், 5 மருத்துவமனைகளில் 3.25 கோடி ரூபாய் செலவில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை மய்யங்களும் ராஜபாளையத்தில் ரூ.1.10 கோடி செலவில் குழந்தைகளை தீவிர சிகிச்சைக்குப் பின் நிலைப்படுத்த ஸ்டெப் டவுன் வார்டும் அமைக்கப்படும் என்றார். எனது தலைமையிலான ஆட்சியில் தற்போது 64 பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செம்மையாகச் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று பொய்யுரைத்தார். கடந்த ஆண்டு தர்மபுரியிலும் சேலத்திலும் பச்சிளம் குழந்தைகள் ஜனித்தவுடன் மரணித்ததை மக்கள் மறக்கவில்லை.
நான்கு ஆண்டுகளில் 406 ஆக இருந்த 108 ஆம்புலன்ஸ்கள் 751 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாம். ரூ.5 கோடி செலவில் 50 பழைய ஆம்புலன்ஸ்கள் மாற்றப்படும் என்றார். ஆனால், ஆம்புலன்ஸ்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சுமார் 3,300 பேருக்கும் மாதச் சம்பளம் ரூ.8,500 முதல் ரூ.9,500 வரைதான். 8 மணி நேரத்திற்கும் கூடுதலான பணிச் சுமை. ஊழியர்கள் பற்றாக்குறை. உபகரணங்கள் மருந்துகள் பற்றாக்குறை என பல கோளாறுகள். இவை பற்றி அறிக்கையில் ஒன்றும் இல்லை. அரசு தனியார் கூட்டு (பிபிபி) என்ற பெயரில் ஜிவிகே எனும் தனியார் நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ்களை இயக்குகிறது. உயிரைக் குடிக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகள் அரசாங்கத்தின் கையில். உயிர் கொடுக்கும் ஆம்புலன்ஸ் சேவை தனியார் கையில்.
மதுரை, தஞ்சாவூர், கோவை, திருநெல்வேலியில் மண்டலப் புற்றுநோய் மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. (இப்பகுதிகளைச் சுற்றிதான் புற்றுநோய் உற்பத்தி ஆலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார்). அடையாறு புற்றுநோய் மய்யத்தை மாநில உயர்நிலை, ஒப்புயர்வு மய்யமாக்குவதற்கு 120 கோடி ரூபாய். 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.2.25 லட்ச ரூபாய் செலவில் புற்றுநோயைக் கண்டறியும் மோனோகிராஃபி கருவிகள் வழங்கப்படும். சென்னை அரசு பொது மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் இமேஜிங் சிகிச்சைத் திட்டம் பொது மற்றும் தனியார் கூட்டாளுமையின் மூலம் மேம்படுத்தப்படும் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பெருமையாக சிரித்தார் ஜெயலலிதா. புற்றுநோயை உருவாக்கும் கூடங்குளம் அணு உலைகளை, மீத்தேன் திட்டத்தை, சாய ஆலைகளை மூடாமல், புற்றுநோய் சிகிச்சை மய்யங்களை மேம்படுத்துவாராம். புற்றுநோயை உருவாக்கும் ஆலைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய். நோயைக் குணப்படுத்தவோ சில நூறு கோடி ரூபாய். என்னவொரு சீரிய சிந்தனை.
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கு தொகுப்பு நிதி 2012ல் ஏற்படுத்தப்பட்டு, அதற்காக 177 கோடியே 80 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 2,506 பேர் உயர் சிகிச்சை பெற்றுள்ளார்கள். இன்னும் கூடுதலாக 25 கோடி தொகுப்பு நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கிறார் ஜெயலலிதா. சாராயக் கடைகளை அதிகரித்து, விற்பனை இலக்கு நிர்ணயித்து மக்களைக் குடிக்கு அடிமையாக்கி, குடலும் ஈரலும் சிறுநீரகமும் பழுதடைய செய்துவிட்டு அதற்குச் சிகிச்சை அளித்ததாகவும் இன்னும் அதிக நிதி ஒதுக்கி இருப்பதாகவும் கூறுகிறார்.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருந்துக்கு மட்டும் 307 கோடி ரூபாயும் பேறுசார் மற்றும் குழந்தை நலத்திட்டம், நகரும் மருத்துவத் திட்டம் ஆகியவற்றிற்கு 102 கோடியே 52 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படுமாம். அரசாங்க மருத்துவமனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை நோயா ளிகள் வெளியில் இருந்து வாங்கித் தர வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை இருக்கிறது. தமிழ்நாடு மருத்துவச் சேவை தேர்வாணையம் 7,243 செவிலியர் பணியிடங்களுக்கு ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.600 வாங்கிக் கொண்டு தேர்வு நடத்தியது. நர்ஸிங் படித்து முடித்தவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை. சம்பளம் மாதம் ரூ.7,700. மருத்துவச் சேவை புரிபவர்களுக்கு மருந்துகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்யாமல் தமிழக மக்கள் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை எப்படிப் பெற முடியும்? கரூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க போன ஆண்டு ஆணையிட்டார். அதை இந்த ஆண்டும் சொல்லிக் கொண்டார். இப்போது புதுக்கோட்டையில் புதிதாக மருத்துவக் கல்லூரி என்று அறிவிக்கிறார். தென் தமிழகத்தில் ரூ.50 கோடி செலவில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்கிறார். எங்கே, எப்போது ஒரு விவரமும் இல்லை.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில் “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்”, “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம்” தொடங்கப்பட உள்ளதாம். அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளாராம். வட்டார அளவிலான 385 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் “அம்மா ஆரோக்கியத் திட்டம்” மூலம் செய்யப்படுமாம். நோய்கள் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகள் மூலம் கட்டணம் ஏதுமில்லாமல் சிகிச்சை அளிக்கப்படும் என்று பெருமிதத்தோடு பேசுகிறார். ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் எல்லாம் கட்டணம் ஏதுமில்லாமல் சிகிச்சை கொடுப்பதற்குத்தானே? ஒருவேளை, அம்மா ஆரோக்கியத் திட்டத்தைத் தவிர மற்ற அனைத் திற்கும் கட்டணம் வசூலிக்கச் சொல்கிறாரோ? மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க 11 வகை மூலிகைகள் அடங்கிய மருந்து ”அம்மா மகப்பேறு சஞ்சீவி’ என்கிற முழுமை பெற்ற பொக்கிஷத்தை தாய்மை அடைந்த பெண்களுக்கு வழங்கப் போகிறாராம். கர்ப்ப கால உதவித் தொகையான ரூ.12,000 வருவதற்குள் குழந்தை பிறந்து இறந்தே விடுகிறது என்று தர்மபுரியில் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்த தாய்மார்கள் கூறினார்கள். சித்தா மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் சீரழிந்து கிடைக்கிறது அதைச் சரி செய்யுங்கள் என்று சித்த மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதைச் சீர் செய்ய எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது மூலிகைச் சஞ்சீவி மருந்து கொடுக்கப் போகிறாராம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், வன வளம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளும் இந்த முறை இருந்தன. 260 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள், ஆதிதிராவிட நலப் பள்ளிகள் உணவு தயாரிக்க ரூ.12.20 கோடியில் நீராவி கொதிகலன்களும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களிடத்தில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கும் நோக்கில் மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டு தம்ளர் ரூ.1.46 கோடியில் வழங்கப் போகிறாராம். ஒற்றுமையும் ஒருமைப்பாடும் ஆதிதிராவிட மாணவர்களுக்குள்ளேயே ஏற்படுத்த வேண்டுமா? அல்லது மற்ற மாணவர் களுக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கும் இடையே ஏற்படுத்த வேண்டுமா? தட்டும் தம்ளரும் வழங்கிவிட்டால் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசி விடும் என்கிறார் ஜெயலலிதா. மோடி ஸ்மார்ட் சிட்டி என்றால், இவர் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்கிறார். 26 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு ஒரு அறிவுத் திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) ரூ.1 கோடியே 31 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படுத்தப் போகிறாராம். இதையெல்லாம் எப்போது செயல்படுத்துவார் என்பது யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கு அரசாணை 92ன்படி கல்லூரிப் படிப்பிற்கான உதவித் தொகை கிடைப்பதேயில்லை. கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்களிடம் மொத்த பணத்தையும் கட்டச் சொல்கிறார்கள். படித்து முடித்து வெளியே வரும் வரை மாணவர்க்கு உதவித் தொகை வந்து சேர்வதேயில்லை. மேற்படிப்புச் செலவோ லட்சக்கணக்கில் ஆகிறது. தப்பித் தவறி வரும் உதவித் தொகை ரூ.3,000, ரூ.5,000தான். ஆதிதிராவிட மாணவர்களின் படிப்புக்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பரமணி சொன்னார். அது என்னவானது என்று யாருக்கும் தெரியாது.
சேஷசமுத்திரத்தில் தலித் மக்கள் கட்டிய தேரை கரிக்கட்டையாக ஆக்கிவிட்டது பற்றி அதைத் தொடர்ந்து தலித் மக்களின் வீடுகள், சொத்துக்கள் எரித்து நாசமாக்ககப்பட்டது பற்றி கண்டுகொள்ளாதவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 138 கோவில்களில் 12.55 கோடி ரூபாயில் தேர்கள் கட்டப்பட்டுள்ளது என்கின்றனர்.
61 தொழிலாளர்கள் உயிர் குடித்த மவுலிவாக்கம் விபத்து பற்றிய விசாரணை அறிக்கை, அரசு அதிகாரிகளின் பாத்திரத்தை முற்றிலுமாக மறைத்துவிட்டது. அதிலும் அம்மா வாழ்த்து!
ஆந்திராவில் தமிழ்நாட்டின் 20 மலைவாழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி, ஆந்திர சிறைகளில் 2000க்கும் மேற்பட்ட தமிழகப் பழங்குடிகள் பல ஆண்டுகளாக தவித்துக் கொண்டிருப்பது பற்றி வாய் திறக்காத ஜெயலலிதா, திருச்சி, தர்மபுரி, ஈரோடு, சேலம், வேலூர் மாவட்டங்களில் சந்தன மரம் அதிகம் வளரும் இடங்களுக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில், காப்புக் காடுகளில் சந்தன மரங்களை வளர்த்து பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பை அளித்து கூடுதல் வாழ்வாதாரப் பாதுகாப்பை அளிக்கப் போகிறேன், இதன் மூலம் பழங்குடிகள் வேறு மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பு தேடி செல்வது தடுக்கப்படும் என்கிறார். அய்ந்து மாவட்டங்களில் உள்ள பட்டா நிலங்களை, காப்புக் காடுகளை, சந்தன மர வளர்ப்பு என்ற பெயரில் தனியாருக்குத் தாரை வார்க்க தயாராகிவிட்டார் ஜெயலலிதா. இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் செலவாகுமாம். நெற்களஞ்சியங்களை மீத்தேன் மற்றும் ஷேல் கொண்டு அழித்துவிட்டு சந்தன மரம் கொண்டு தமிழக மக்களுக்கு சமாதி கட்டப் போகிறார் போலும். 25 இடங்களில் காற்றுக் கண்காணிப்பு நிலையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படுமாம். காற்றை, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த இங்கு வழியில்லை.
வனவிலங்குகள், மனிதர்கள் மோதலைத் தடுக்க அதிவிரைவுக் குழுக்கள் அமைக்கப் போகிறாராம். விலங்குகளின் வாழ்விடத்தை கார்ப்பரேட்களும் கட்சிக்காரர்களும் அபகரித்துக் கொண்டு, விலங்குகளை வீதிக்கு விரட்டி விட்டுவிட்டு அவற்றை அதிவிரைவுக் குழுக்கள் கொண்டு அடக்கப் போகிறார்களாம். இந்தக் குழுக்கள் விலங்குகள் மனிதர்கள் மோதலைத் தடுக்கவா அல்லது மலைவாழ் மக்களைச் சிறை பிடிக்கவா என்பது போகப்போகத் தெரியும்.
மத்திய அரசின் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே வேளை நாட்டுக்கு நலன் தருவதாக இருந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று மத்திய அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை மறைமுகமாக ஆதரித்தார். தொழிலாளர் மானியக் கோரிக்கையின்போது பேசிய தொழிலாளர் அமைச்சர் பா.மோகன். சென்னையில் செப்டம்பரில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாடுதான் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொன்னதைத் தவிர தொழிலாளர்கள் பிரச்சனை பற்றி பேச அவையில் அனுமதி கூட இல்லை.
மின்வெட்டு அறவே இல்லை என்று நத்தம் விஸ்வநாதனும் மணல் கொள்ளை இல்லவே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வமும் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்தார்கள். மணல் திருட்டை தடுக்கச் சென்ற அதிகாரிகள் கொல்லப்பட்டது தொடர்பாக அண்ணாதுரை எம்எல்ஏ கேட்ட கேள்விக்கு, மணல் அள்ள அரசு அனுதித்த இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. யாருக்கும் தெரியாமல் மணல் அள்ள முற்பட்ட பகுதிகளிலேயே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. நீங்கள் சொல்லும் சம்பவத்தின்படியே பார்த்தால் கூட அனுமதியில்லாமல் மணல் அள்ளுவதைத் தடுக்க அதிகாரிகள் முற்பட்ட நேரத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று அறிவுபூர்வமான பதில் கொடுத்துள்ளார் ஓபிஎஸ். அதாவது அனுமதியில்லாமல் மணல் அள்ளுவதை அதிகாரிகள் தடுக்கப் போகாதீர்கள் என்கிறார். மணல் அள்ளுவதைத் திறந்துவிட்டு விட்டால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று கூறுகிறார் தமிழகத்தின் பொறுப்பான பொதுப்பணித் துறை அமைச்சர்.
அம்மாவைப் பார்க்கத் திரும்பி அமர்ந்து இருக்கும் பன்னீரை, ஒவ்வொரு அறிவிப்பையும் வாசித்தவுடன் ஜெயலலிதா நிமிர்ந்து பார்க்க, அவர் மேசையை தட்ட மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து ஓங்கி ஓங்கித் தட்டுகிறார்கள். தட்டித் தட்டி சிவந்த கரங்கள். அம்மா புராணம் பாடுவோருக்கு மட்டுமே அவையில் அனுமதி. எதிர்பார்த்ததுபோல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்க பிரச்சனைகள் மீது விவாதிக்க அனுமதி கிடையாது. ஆகவே வெளிநடப்பு செய்து ஊடகங்களின் வாயிலாக தங்களின் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் 165 அறிக்கைகளை விதி 110ன் கீழ் படித்துள்ளார் ஜெயலலிதா, அவற்றில் 577 அறிவிப்புகள். அவற்றுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.84,374 கோடி, செலவு செய்யப்பட்டுள்ளது ரூ.12,733.60 கோடிதான், 12.09%தான் என்று கருணாநிதி புள்ளிவிவரம் கொடுத்தார்.
அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை, நான் அறிவித்துக் கொண்டே இருப்பேன் என்று அடுத்தடுத்த நாட்களும் அறிவிப்புகளை அடுக்கினார் ஜெயலலிதா. சட்டமன்ற காட்சிகள் இன்னும் தொடரவுள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம். 28.08.2015
இகக(மாலெ) தலைவர் சதீஷ் யாதவ் ரன்வீர் சேனா குண்டர்களால் சுட்டுப் படுகொலை கடல் அலை போல் மக்கள் திரண்ட அஞ்சலி நிகழ்ச்சி
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் போராளி சதீஷ் யாதவ் (வயது 40), ஆகஸ்ட் 20 அன்று ரன்வீர் சேனா குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சதீஷ் யாதவ் வறியவர்கள், தலித்துகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்தவர். லஷ்மண்பூர் பாதே, பதானி தோலா உட்பட பல்வேறு படுகொலைகளில் பாஜக தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை ரன்வீர்சேனா தளபதிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களுடன் கோப்ராபோஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள பின்னணியில் மாநிலம் முழுக்க எதிர்ப்பு இயக்கங்கள் நடைபெற்று வரும் சூழலில்தான் இந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு அஜிமானந்த் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஸ்யாம் தேவ்சிங் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கண்ணால் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
தோழர் சதீஷ் யாதவின் இறுதி ஊர்வலம் ஆகஸ்ட் 22 அன்று கட்சி அலுவலகத்திலிருந்து துவங்கியது. இகக(மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஸ்வதேஷ் பட்டாச்சார்யா, அமல், மாநிலச் செயலாளர் தோழர் குணால் உட்பட பலர் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 100 இரு சக்கர வாகனங்கள் முன் செல்ல அதைத் தொடர்ந்து கார்கள் அணிவகுத்துச் செல்ல சாலையில் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
தோழர் சதீஷ் யாதவின் தந்தை 1990லேயே கட்சியின் வேட்பாளராக பதாரா தொகுதியில் போட்டியிட்டு 25,000 வாக்குகள் பெற்றிருக்கிறார். சிறு வயதில் கட்சி வழிநடத்திய போகா மட எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சதீஷ் யாதவ் 1995ல் கட்சி உறுப்பினராக சேர்ந்தார். அவர் வறிய மக்களின் பிரச்சனைகளோடு நடுத்தர மக்கள் பிரச்சனைகளுக்காகவும் போராடினார்.
சிறு, குத்தகை விவசாயிகளின் பயிர்கள் நீர் இல்லாமல் வாடியபோது தண்ணீர் திறந்துவிடக் கோரி 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தினார். விளைவாக நிர்வாகம் பாசனத்துக்கு நீர் திறந்து விட்டது. பிறகு விளைவித்த பொருட்களை கொள்முதல் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். 30,000 குவிண்டால் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவரது கொலைக்கு காரணமானவர் என சொல்லப்படும் ரிங்கு சிங்தான் முதன்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இந்தச் சங்கம் விவசாயிகளுக்கு இன்னும் 8 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.
வறியவர் வீடுகளுக்கு மின் இணைப்பு, இயந்திரங்கள் மூலம் மணல் அள்ள தடை, வறியவர் பட்டியல் தயாரிப்பு மோசடிக்கு எதிராக, பள்ளிகளின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக என பல போராட்டங்களை முன் நின்று நடத்தி ஆட்சியாளர்களுக்கும் உள்ளூர் அதிகார வர்க்கத்துக்கும் சவாலாக விளங்கினார். இதனால் விரக்தி அடைந்த ரன்வீர் சேனா, பாஜக சக்திகள் அவரை படுகொலை செய்திருக்கின்றன.
கொலைக்குக் காரணமானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி இகக(மாலெ) இயக்கம் நடத்தி வருகிறது.