COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, March 3, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 15 2016 மார்ச் 01 – 15

தலையங்கம்
அன்று அடிமைகளுக்கு சூடு
இன்று தமிழ்நாட்டின் சாமான்ய மக்களுக்கு பச்சை குத்து
அடிமைகள் இருந்த காலத்தில், அவர்களை அடிமைகள் என்று அடையாளப்படுத்துவதற்கும், யாருடைய அடிமைகள் என்று அடையாளப்படுத்துவதற்கும், தப்பி ஓடிய பிடிபட்ட அடிமைகள் என்று அடையாளப்படுத்துவதற்கும் அவர்களுக்கு சூடு போடுவதுண்டு;
குறிகள் இடுவது உண்டு. தப்பி ஓடிவிடும் அடிமைகள் மீண்டும் பிடிபட்டுவிட்டால், அவர்கள் தப்பித்துச் சென்று பிடிபட்டவர்கள் என்று அடையாளம் காண, அவர்கள் காதுகளை அறுத்துவிடுவது, கால் நரம்புகளை வெட்டிவிடுவது, சூடு போடுவது ஆகியவையும் நடந்ததுண்டு. பிரிட்டிஷ் கைவசம் இருந்த தேயிலைத் தோட்டங்களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அங்கு நடக்கும் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முயன்று பிடிபட்டுவிட்டால், அவர்கள் கால் நரம்பு வெட்டப்பட்டுவிடும் என்று எரியும் பனிக்காடுகள் நாவல் சொல்கிறது. இவை அடிமை முறை, காலனிய ஆட்சி இருந்த காலத்தில் நடந்தவை.
இன்று ஜனநாயக ஆட்சி முறை வந்துவிட்டது. வாக்களித்து நமது ஆட்சிகளை தேர்ந்தெடுக்கிறோம். சட்டம், காவல்துறை இன்னும் பலப்பல ஏற்பாடுகள் அந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்க இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டான், அடிமை முறை நீடிக்கிறது. அஇஅதிமுக அமைச்சர்கள் முதுகெலும்புகள் வளைந்துபோன அடிமைகள் என்று நமக்குத் தெரியும். ஜெயலலிதா முன்பு அவர்கள் முதுகு வளையவில்லை என்றால், அவர்கள் பிறகு அமைச்சர்களாகத் தொடர முடியாது என்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தன்னார்வ, விருப்ப அடிமைகள். கோடிகோடியாய் சம்பாதிப்பதற்கு வழி செய்யும் தெய்வத்தை வணங்குவதில் என்ன தவறு என்று அவர்கள் அதை நியாயப்படுத்தவும் செய்யலாம். (ஜெயலலிதா முன்பு அப்படி கூனி நிற்பவர்கள், அப்படி நிற்கும்போதும், பிறகும் மனதுக்குள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியுமானால், மீம்சுகளுக்கு தமிழ்நாட்டில் பஞ்சமே இருக்காது).
ஆனால், ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டின் சாமான்ய மக்கள், சுயமரியாதையுடன் உழைத்துப் பிழைப்பதை பெருமையாகக் கருதுபவர்கள், ஏன் தங்கள் விசுவாசத்தைக் காட்ட வேண்டும்? ஜெயலலிதா ஆட்சியில் இன்னும் எவ்வளவு துன்பங்களைத்தான் தமிழக மக்கள் அனுபவிக்க வேண்டும்? ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள் மானுட துயரத்தை பரிகசித்து இன்பம் கண்டன. இப்போது ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் அஇஅதிமுககாரர்கள் ஜெயலலிதாவின் உருவப்படத்தை பச்சை குத்தி தமிழக சாமான்ய மக்களின் தன்மான உணர்வுகளோடு விளையாடுகிறார்கள்.
சென்னையின் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக், 668 பேருக்கு பச்சை குத்தி ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார். நிகழ்ச்சியில் அஇஅதிமுக ஆட்சியின் முக்கியமான அமைச்சர்களாகக் கருதப்படும் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அந்த 668 பேரில், பள்ளி மாணவி ஒருவருக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது. அந்த மாணவி வலி தாங்க முடியாமல் அழுது துடித்திருக்கிறார். அமைச்சர்கள் அதைப் பார்த்து கேலி செய்து ரசித்து சிரித்திருக்கிறார்கள். இது தமிழக மக்கள் பார்வைக்கும் வந்துள்ளது. நிழற்படம், எடுத்து, காணொளியாக எடுத்து வெளியிடப்பட்டதைக் கூட அஇஅதிமுககாரர்கள், அப்படி ஏதும் நடக்கவில்லை என்று மறுக்கின்றனர். இந்த பச்சை குத்தும் நிகழ்ச்சியில் அங்கு யார் தலையிலும் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை, ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் அந்த நிகழ்ச்சியை துவக்கிவைக்கவில்லை ஆகியவை குறைகள் என்று அஇஅதிமுககாரர்கள் குறைபட்டுக்கொண்டிருக்கக் இருக்கக் கூடும். அசோக் கட்சிப் பதவியில் இருந்து விலக்கப்பட்டிருப்பது நடந்த அத்துமீறலுக்கு பொருத்தமான நடவடிக்கையல்ல. ஜெயலலிதாவை உச்சி குளிரச் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கலாச்சாரத்தை உருவாக்கி சாமான்ய மக்களின் சுயமரியாதையை விலை பேசுகிற நிலையை உருவாக்கியிருக்கிற ஜெயலலிதாவுக்கு, அஇஅதி முகவில், என்ன தண்டனை, யார் தருவார்கள்?
அந்த சட்டமன்ற உறுப்பினர், இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த, குத்தப்படும் பச்சை தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக நரிக்குறவர்களை வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்திருக்கிறார். மூத்த அமைச்சர்களை அழைத்து செலவு செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது இந்தப் பணம்?
உங்களுக்காக நான், உங்களால் நான் என்று சொல்லுகிற ஒருவர் முதலமைச்சராக இருப்பதாகச் சொல்லப்படுகிறபோது, அடிமைகளுக்கு வலுக்கட்டாயமாக அடையாளம் இடப்பட்டதுபோல், சாமான்ய மக்களுக்கு பச்சைக் குத்தப்படுகிறது. தமிழக மக்களை உண்மையில் ஜெயலலிதாவும் அவரது அமைச்சர்களும் எப்படி பார்க்கிறார்கள், எப்படி நடத்துகிறார்கள் என்பதை பச்சை குத்தும் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. அவர்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் சாமான்ய மக்கள் வாக்களிக்கும் அடிமைகள். அவ்வப்போது, அடிமைகளுக்கு சில சலுகைகள் வழங்கினால் வாக்களிப்பார்கள் என்று கருதுகிறார்கள்.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு தனது இதயத்தில் இடம் இருப்பதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அவருடைய இதயம் மிகச் சிறியது. ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மாற்றுத் திறனாளிகள் இருப்பார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்கள் இருப்பார்கள். விளிம்புநிலை மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிற தொகுதி அது. இவர்கள் அனைவருக்கும் அந்தச் சின்ன இதயத் தில் இடமிருப்பதாகச் சொல்வது விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஜெயலலிதா சொல்வது உண்மையானால் அந்தத் தொகுதியில், டிசம்பர் வெள்ளத்தில் அனைத்தையும் இழந்தவர்கள் பலர். இதயத்தில் இடம் தந்தவர், போயஸ் கார்டனில் ஓர் ஓரமாக அவர்களுக்கு குடிசை போட்டுக் கொள்ள இடம் தந்தால் அவர்கள் வாழ்க்கையில் ஜெயலலிதா ஒளியேற்றி வைத்துவிட்டதாக பூரித்துப் போவார்கள். வெற்றுச் சொற்களுக்குக் கூட சில சமயம் மதிப்பு கொடுத்து வாய்ப்பு கொடுத்துத்தான் பார்ப்போமே என்று கருதுகிற அவர்கள், தனக்கென்று யாருமில்லை என்று எங்கேயும் எப்போதும் சொல்லும் ஜெயலலிதா இப்படிச் செய்தால் அங்கேயே ஒரு மூலையில் அவருக்கு ஒரு கோயிலும் கட்டிவிடுவார்கள்.
ஆனால், இதயத்தில் இடத்துக்கு மேல், 9 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கேட்கும் மாற்றுத் திறனாளிக ளுக்கு, பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் பிற பிரிவு தமிழக மக்களுக்கு அஇஅதிமுக ஆட்சியில் ஏதுமில்லை என்றுதான் இந்த ஆட்சியில் கடைசியாக முன்வைக்கப்பட்ட நிதிஅறிக்கையும் சட்டமன்ற நிகழ்வுகளும் சொல்கின்றன. ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றுவதாகச் சொல்லி அறிவித்த முதியோர் இலவச பேருந்து பயணமும், அவர்களை கேலி செய்வதாகவே இருக்கிறது.
மக்களை அடிமைகளாக, கையேந்துபவர்களாக நடத்தும் அஇஅதிமுக ஆட்சியை விரட்டும் நாளை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் தமிழக மக்கள். விரைவில் தணியும் இந்த சுதந்திர தாகம். 
பகத்சிங் அம்பேத்கர் வழியில் 
மக்களை நேசிப்பதன் மூலம் நாட்டை நேசிப்போம்
காம்ரேட்
ரோஹித் வேமுலாவைத் தற்கொலைக்கு விரட்டிய ஸ்மிருதி இரானி, எல்லா மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் எவ்வளவு உயரத்திற்கு தேசக் கொடி பறக்க வேண்டும் என உத்தரவிட்டு, தம் தேச பக்தியைப் பறைசாற்றியுள்ளார். ஆர்எஸ்எஸ்சின் தத்தாத்ரேயா ஹோஷா பாலே, “இந்தியாவின் எல்லா பல்கலைக் கழகங்களிலிருந்தும் தேசவிரோத சக்திகளை விரட்ட வேண்டும்” என்கிறார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காவல்துறை தேசவிரோத சக்திகளைத் தேடிப் பிடிக்கும் என உறுமினார். ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் (ஜேஎன்யு), அறிவாளிகளின் பயங்கரவாத மய்யம் என்றும், ஜேஎன்யு பயங்கரவாத பிரிவினைவாத கூடாரம் எனவும் குற்றம் சுமத்தினார். பெரியாரை செருப்பால் அடித்திருக்க வேண்டும் என்ற பொருள்பட பேசிய பாஜக தலைவர் எச்.ராஜா, ஜேஎன்யுவின் தேசவிரோத மாணவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்றார்.
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் மூன்றாவது ஆண்டு தினத்தை ஜேஎன்யுவின் சில மாணவர்கள் அனுசரித்தபோது, இந்தியாவைத் துண்டாடுவோம் என்ற தேசவிரோத முழக்கம் எழுப்பப்பட்டதாக சங்பரிவார் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் புகார் எழுப்பியது. இதனைச் சாக்காகக் கொண்டு, ஜேஎன்யு மீது ஜேஎன்யு மாணவர் சங்கம் மீது, இடதுசாரி மாணவர் இயக்கம் மீது, ஜனநாயகம் மீது ஓர் ஒருங்கிணைந்த தாக்குதல் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மாணவர் சங்கத் தலைவர் (ஏஅய்எஸ்எஃப்) கண்ணையாகுமார் சிறை செய்யப்பட்டுள்ளார். இன்றுவரை (29.02.2016) பிணையில் விடப்படவில்லை.
வழக்கறிஞர் உடைகளில் வந்த சங்பரிவார் கும்பல், தேசியக் கொடி ஏந்தி, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில், கண்ணையாகுமாரை, ஆசிரியர்களை, மாணவர்களை, ஊடகத்துறை யினரைத் தாக்கினார்கள். தாக்குதல் நடத்தி விட்டோம் என வெற்றி ஊர்வலமாகவும் இனியும் தாக்குவோம் என எச்சரிக்கை ஊர்வலமாகவும் நடத்திக் காட்டினார்கள். ஊடகங்கள் பதிவு செய்த இந்தத் தாக்குதல்கள் பற்றி, உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்த இந்தத் தாக்குதல்கள் பற்றி, பிரதமர் இதுவரை வாய் திறக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டேன், இனியும் தாக்குவேன் எனச் சவால்விட்ட பாஜக எம்எல்ஏ ஓ.பி.ஷர்மா கைதான அதே நாளில் பிணையில் வெளியே வந்துவிட்டார்.
அப்சல்குரு நினைவு தினம் அனுசரிப்பது இந்திய ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமை. மரண தண்டனையே சட்டபூர்வமான கொலை எனவும், அப்சல் குரு தூக்கு தண்டனையில் சட்ட நெறிமுறைகள் மீறப்பட்டன எனவும், நாட்டில் வலுவான ஜனநாயகக் கருத்து ஒன்று நிலவுகிறது. இந்தியாவைத் துண்டாடுவோம் என்ற எந்த முழக்கத்திலும், அந்த பல்கலைக் கழக மாணவர் சங்கத்திற்கோ மற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கோ நம்பிக்கையில்லை. இதனை, அவர்கள் எவருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே நேரம் சங் பரிவாரின் தேசபக்தி சர்ச்சைக்குரியது. ஆர்எஸ்எஸ் ஒரு போதும் தேசவிடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் வெள்ளையரிடம் விசுவாச மாக இருப்பதாக எழுதிக் கொடுத்தவர்கள். அவர்கள் இந்து இந்தியா வேண்டும் எனவும் அதில் இந்துத்வா கோலோச்ச வேண்டும் எனவும் வலியுறுத்தியவர்கள். தேசத்தின் ஓர்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் விரோதமாக தேசத்தைத் துண்டாடுவதற்காக இருந்து வருபவர்கள். தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் போராளிகள் பற்றி கோல்வால்கர் சிந்தனைக் கொத்தில் எழுதியது (ஞான கங்கை 1992, பாகம் 3 பக்கம் 142) கவனிக்கத் தக்கதாகும்.
“ஆனால், நமது பாரதீய மரபில் இத்தகைய உயிர்ப்பலி மிக உயர்ந்த லட்சியமாகக் கருதப்படவில்லை. இத்தகைய மனிதர்கள் நமது சமுதாயத்தில் லட்சிய புருஷர்களாகக் கருதப்பட்டதில்லை. அவர்களைப் போல் பலியாவதுதான் உயர்வின் உச்ச சிகரம் என்றும் அந்த நிலையை அடைய ஒவ்வொருவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் நாம் கருதியது இல்லை. என்ன இருந்தாலும், அவர்கள் தங்கள் லட்சியத்தை அடையாமல் தோற்றுப் போனவர்கள் தானே! அவர்களைத் தோல்வி அடையச் செய்யும் அளவிற்கு, ஏதோ பெரும் குறைபாடு அவர்களிடம் ஒட்டிக் கொண்டிருந்தது.”
தேச பக்தர்களின் உயிர்த்தியாகத்தைச் சிறுமைப்படுத்திய சங் பரிவாரின் பாரம்பரியத்தில் வந்த ஏபிவிபி, “அப்சல் குருவைப் பற்றிப் பேசுபவர்கள், அப்சல் குருவைப் போலவே தூக்கிலிடப்பட வேண்டும்.” “நாடு அழைக்கிறது, இந்தியத்தாய் அழைக்கிறாள், ரத்தத் திலகமிட்டுக் கொள்ளுங்கள், தோட்டாக்களை வழிபடுங்கள்” என முழக்கமிட்டனர்.
சங் பரிவாருக்கு குறைந்தபட்ச நேர்மை, அப்சல் குரு விஷயத்திலாவது இருந்ததா? ஜம்மு காஷ்மீரின் முப்டி முகமது சயீதால் தலைமை தாங்கப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி 03.03.2015 அன்று, அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது அப்பட்டமான சட்டமீறல் எனத் தீர்மானம் போட்டது. அப்சல் குருவைக் கொண்டாடியது. அவர்களோடு சேர்ந்து பாஜக கூட்டணி அரசாங்கம் அமைத்தது. இப்போதும் முப்டியின் மரணத்திற்குப் பிறகு, அவர் மகள் மெஹபூபாவுடன் பேசிக் கூட்டணி ஆட்சி அமைக்க, மோடி, ஷா, ராஜ்நாத் சிங் ஆசி வழங்கியுள்ளனர்.
இ.பி.கோ. 124 ஏ பற்றி காந்தியும் நேருவும் என்ன சொன்னார்கள்?
அர்னாப் கோஸ்வாமி போன்ற சில நடிப்பு சுதேசிகள் தேசபக்தப் பெருவெள்ளத்தில் இந்தியாவை மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள். இ.பி.கோ. 124 ஏ பிரிவு பாலகங்காதர திலகர் மீது, சுதந்திரம் எனது பிறப்புரிமை என முழங்கியதால், வெள்ளையரால் ஏவப்பட்டது. காந்தி மீது, தேசத் துரோகம் என 124 ஏ பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டது. தேசத் துரோகம் பற்றிப் பேசும் இந்த 124 ஏ பிரிவு “குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்காக, கட்டமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்ட அரசியல் பிரிவுகளின் இளவரசன்” என காந்தி கேலி செய்தார். 10.03.1921 அன்று வெள்ளைக்கார நீதிபதி புரூம்ஃபீல்ட் முன்பு சொன்னார்: “இப்போதைய ஆட்சி முறைக்கு எதிராக மக்களிடம் பேசுவது என்னிடம் ஒரு பேராவலாக மாறியுள்ளது என்பதை மறைக்கும் எந்த விருப்பமும் எனக்கு இல்லை. இதற்கு முந்தைய எந்த அமைப்பு முறையைக் காட்டிலும், அதன் முழுமையில், இந்தியாவுக்குக் கூடுதலாகத் தீங்கு செய்துள்ள இந்த அரசாங்கத்திற்கெதிராக மக்களைத் தூண்டுவது ஒரு நற்பண்பு என நான் கருதுகிறேன்.”
18.06.1951ல், முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது நேரு பேசினார்: “என்னைப் பொறுத்தவரை, பிரிவு 124 ஏ மிகுந்த எதிர்ப்புக்குரியது, வெறுக்கத்தக்கது. நாம் நிறைவேற்றும் எந்தச் சட்டங்களிலும், வரலாற்றுபூர்வமான அல்லது நடைமுறை சார்ந்த காரணங்களுக்காக, இந்தச் சட்டப் பிரிவுக்கு இடமிருக்கக் கூடாது. எவ்வளவு விரைவில் இதனை நீக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது.” இந்த உணர்வு, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் இருந்து விலகி இருந்தவர்களுக்கு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
ஜம்மு - காஷ்மீர் - ஆயதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் - தேச பக்தி
இப்போது மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக பாஜகவோடு மெஹ்பூபா பேசும்போது, திரும்பவும் கூட்டணி ஆட்சி அமைய, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்தாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாஜக தீர்வு காணத் தயாராக உள்ளது. தேச பக்திக்கு இதனால் எந்தக் களங்கமும் வந்துவிடாது.
பாஜக வேறொரு காலத்தில் உறவாடிய பரூக் அப்துல்லா கட்சியின் ஓமர், காஷ்மீர் இந்தியாவோடு இணையவில்லை, ஒப்பந்தம் மூலம் சேர்ந்தது, காஷ்மீர் பிரச்சனைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்வு காண வேண்டும் என்றார். இந்து நாளேடு 19.10.2010 தேதிய தலையங்கத்தில், ஓமர் அப்துல்லாவின் வெளிப்படைத் தன்மையும் துணிச்சலும் காஷ்மீர் யதார்த்தங்களை எதிர்கொள்ள உதவும் என்றது. வாஜ்பாய், மனித சாத்தியங்கள் எல்லாவற்றையும் துணை கொண்டு, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றார்.
25.10.1947 அன்று காஷ்மீர் பற்றி நேரு சொன்னதை, போலி தேச பக்தர்கள் உண்மையான தேசபக்தர்கள் அனைவருக்கும், நிஜமான வரலாற்றை உணர்த்த கவனப்படுத்த வேண்டியுள்ளது. “நெருக்கடி நிலையில் காஷ்மீருக்கு உதவுவது, காஷ்மீரை இந்தியாவுடன் இணைய வைக்கும் நோக்கம் கொண்டதல்ல. சர்ச்சைக்குரிய எந்தப் பகுதியையோ, மாநிலத்தையோ இந்தியாவில் இணைப்பது என்பது, மக்கள் விருப்பங்களுக்கு ஏற்பவே முடிவு செய்யப்பட வேண்டும்”. இந்தியாவெங்கும் உள்ளவர்கள், காஷ்மீர் மக்களின் வலிகளை, எதிர்ப்பார்ப்புகளை புரிந்துகொண்டு நடப்பது, காஷ்மீர் பிரச்சனை தீர உதவும்.
நெருக்கடி - மீள முயற்சி - மேலும் தீவிரமான நெருக்கடி
மே 2014ல் பதவியேற்ற மோடி அரசு, ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு, அடுத்தடுத்து தோல்விகளையும் போராட்டங்களையும் சந்தித்தது. விவசாயிகள் தொழிலாளர்கள், இளைஞர் கள், மாணவர்கள், அறிவாளிகள் எதிர்ப்புகளோடு, தேர்தல் தோல்வியையும் சந்தித்தது. சென்னை அய்அய்டியில் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தைத் தடை செய்தது. புனே திரைப்படக் கல்லூரியில் சர்வாதிகாரமாய் மாணவர்களை ஒடுக்கியது. அய்தராபாத்தில் அம்பேத்கார் மாணவர் அமைப்பின் ரோஹித் வேமுலா மற்றும் சில மாணவர்கள் மீது நவீன தீண்டாமையை ஏவியது. நாடெங்கும் சங் பரிவாரின் தலித் விரோதத் தன்மை, ரோஹித் வேமுலா மரணத்தால் அம்பலமானது. இப்போது ஹிட்லர் பாணியில் தேச பக்தி, தேசியம் என்ற துருப்புச் சீட்டை எடுத்துள்ளது. மோடி அரசு எதிர்ப்பை, இந்துத்துவா எதிர்ப்பை, தேச விரோதம் என்கிறது. சங் பரிவார் கணக்குப்படி நாடெங்கும் தேச பக்தப் பெருவெள்ளம் கரை புரண்டோடவில்லை. விவாதம், மாற்றுக் கருத்து சொல்வது ஆகியவற்றை ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்காமல், அவற்றை சாத்தான்மயமாக்கும் சங் பரிவார் முயற்சி கடும்எதிர்ப்புக்களைச் சந்திக்கிறது. ஜேஎன்யுவைக் காக்க ஜனநாயம் காக்க பிப்ரவரி 18 அன்று டெல்லியில் மாணவர்கள், ஆசிரியர்கள், அறிவாளிகள், ஊடகத்துறையினர், பொது மக்கள் என 15,000 பேர் ஆர்ப்பரித்துத் திரண்டனர்.
பெரும் தொழில் குழும மதவெறி சாதிய தாக்குதல்களை பகத்சிங் அம்பேத்கர் வழிமரபால் முறியடிப்போம்
இந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் சங் பரிவார் ஆளும் ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்சில் வேலை நிறுத்தம் வெடித்தது. மிகை நேரப்பணி செய்து உடல் நலக் கேடால் பாதிக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத் தொழிலாளியை, மேற்பார்வையாளர் திரும்பவும் கூடுதல் நேரம் வேலை செய்யுமாறு மிரட்டினார். மறுத்த வரைச் சட்டை காலரைப் பிடித்து மிரட்டினார். ஒப்பந்தத் தொழிலாளி பயிற்சித் தொழிலாளி நிரந்தரத் தொழிலாளி என 4,000 பேர் வேலை நிறுத்தம் செய்தனர். போலீஸ் ஆலைக்குள் நுழைந்து சகட்டுமேனிக்குத் தாக்கியது. 350 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 44 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றம் பக்கத்தில் சென்று பிணை கேட்க முடியாத அளவுக்குப் பயங்கரம் ஏவப்பட்டது. ஜாட் இட ஒதுக்கீடு போராட்டத்தின் முன்பு பணிந்து போகும் அரியானா பாஜக அரசு, ஒவ்வொரு தொழில் பூங்காவிலும் காவல் நிலையம் என்கிறது. ராஜஸ்தானும் அரியானாவும் மோடியின் மேக் இன் இந்தியா முழக்கத்திற்கு, வலு சேர்க்கும் மாநிலங்கள். மலிவான திறமையான உழைப்பை, அரசாங்கத்தின் எல்லா வசதிகளுடன், தொழிலாளர் சட்டங்கள் பற்றிய எந்த கவலைûயும் இல்லாமல் சுரண்ட ராஜஸ்தான் அரியானா களம் அமைத்துத் தந்துள்ளன. அப்படி இருந்தும், ஹோண்டா மோட்டார்ஸ் தலைமையகம் செல்ல ஆயிரமாயிரமாய் தொழிலாளர்கள் திரண்டனர்.
தொகுத்துச் சொன்னால்
 மத்திய அரசு விவசாய நெருக்கடியைத் தீர்க்கவில்லை. தீவிரப்படுத்திவிட்டது. அதனால் விவசாயிகள் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டுள்ளது.
 சங் பரிவார்க்கும் தொழிலாளர்க்கும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. நாடெங்கும் மார்ச் 5 அன்று தொழிலாளர் எதிர்ப்பு தினம் நடத்தப்படவுள்ளது.
 இந்த அரசு இசுலாமியர்களை வேட்டையாடுகிறது.
இந்த அரசு தலித்துகளை அடக்கி வைக்கப்பார்க்கிறது.
 இந்த அரசு கருத்துச் சுதந்திரத்தின் மீது, ஜனநாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளது.
தேசத்தை நேசிப்பது என்பது, அதன் மக்களை நேசிப்பது மட்டுமே என்றான் பகத்சிங். தொழிலாளர்களிடம் சென்று விவசாயிக ளிடம் சென்று அவர்களைத் திரட்டுவதுதான் உண்மையான மாற்று என்றான். கார்ப்பரேட் கொடூரங்களுக்கு எதிராகப் போராடும் ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு இளைஞனும், ஏகாதிபத்திய விசுவாசி மோடி அரசுக்கெதிராக, பகத்சிங் சொல்லித் தந்த தேச பக்தியை உயர்த்திப் பிடிக்க வேண்டும். சாதியை அழித்தொழிக்கச் சொன்ன, இந்துத்துவாவை வேரறுக்கச் சொன்ன கலகக்கார அம்பேத்காரோடு, இந்த நாடு கை கோர்த்துக் கொள்ள வேண்டும். 
உயிர்த்துடிப்பான ஜனநாயகம் வெல்ல, மக்கள் நல்வாழ்வு பெற, முற்போக்கு ஜனநாயக தேசபக்த சக்திகள் போராட்டக் களங்களில் ஒன்றிணைவோம்.
தேசத்தால், அதன் அதிகாரம், செல்வச் செழுமை என்ற எல்லா சாதனங்களோடு, அதன் கொடிகளோடு, அதன் புனிதப் பாடல்களோடு, தேச பக்தப் பெருமை பேசும் இலக்கிய போலி இடியோசைகளோடு, தேசத்திற்கு தேசம்தான் மிகப்பெரிய தீமை என்ற உண்மையை, மறைக்க முடியாது.
- தேசிய கீதம் எழுதிய ரவீந்திரநாத் தாகூர்
ஜேஎன்யுவைக் காப்போம்! ஜனநாயகம் காப்போம்!
ஜேஎன்யு மாணவர் தலைவர் கண்ணையா குமாரை விடுதலை செய்! 
தேடுதல் வேட்டையை நிறுத்து!
சென்னை சாஸ்திரி பவன் முற்றுகை
புரட்சிகர இளைஞர் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணன் தலைமையில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் 19.02.2016 அன்று சென்னை சாஸ்திரிபவன் முற்றுகைப் போராட்டம் நடத்தின.
அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, தோழர்கள் ராஜேஷ், செந்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் சுரேஷ், அதியமான், சங்கர், உழைப்போர் உரிமை இயக்கத்தின் தோழர் மோகன், தமிழ்நாடு ஜனநாயக கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தோழர் முனுசாமி, புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முற்றுகையிடச் சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியபோது போராட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தோழர் சீதாவை ஆண் காவலர்கள் தூக்கிச் செல்ல முற்பட்டபோது கடும் ஆட்சேபம் தெரிவிக்கவே பெண் காவலர்கள் அழைத்து வரப்பட் டனர். ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் தோழர் கண்ஹையா குமாரை விடுதலை செய், வன்முறையில் ஈடுபட்ட பாஜக எம்எல் ஏக்கள் கிஷோர் மற்றும் ஓம்பிரகாஷை கைது செய், ஜேஎன்யுவை, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம், மதவெறி, சாதிவெறி சக்தி களை, ஏபிவிபியை முறியடிப்போம், இடதுசாரி கருத்துக்களை உயர்த்திப் பிடிப்போம் என தோழர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் காவல்துறையினர் போராட்டக் காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, தூக்கிச் சென்று காவலில் வைத்தனர்.
பேண்ட் எய்ட் போட்டால் போதாதாம் அறுவை சிகிச்சை வேண்டுமாம்
எஸ்.குமாரசாமி
25.02.2016
இந்திய வங்கித் துறையை கடுமையான நோய்கள் பீடித்துள்ளதாகவும், நோய் போக்க பேண்ட் எய்ட் ஒட்டிப் பயனில்லை என்றும், அறுவை சிகிச்சை கட்டாயமென்றும் ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் சொல்லி உள்ளார். 2016 துவங்கியதிலிருந்தே ஊடகங்கள் இந்திய வங்கித் துறை தீராத நோயில் இருப்பதாகவும், ஸ்ட்ரெஸ்ட் அட்வான்ஸ் என்கிற, அதாவது மிகவும் அழுத்தத்திலுள்ள கடன்கள், செயல்படா சொத்துக்கள் போன்றவை பற்றி நிறைய எழுதுகின்றன. எதற்கோ மக்களைத் தயார்படுத்துகிறார்கள். சிறிது யோசித்தாலே, ‘திறமைக் குறைவான’ தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை, தனியார்மயம் செய்ய வேண்டும், சர்வதேச நிதிமூலதனம் கோருகிற நிதிச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்ற தீய நோக்கம் புலப்படுகிறது. சர்வதேச நிதி மூலதனமும், அதற்கேற்ற நவதாராளவாத நிகழ்ச்சிநிரலும் கோருகிற சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் அய்முகூ மற்றும் தேஜமு அரசாங்கங்கள் ஒரு ரிலே ரேசில் (தொடர் ஓட்டத்தில்)தான் உள்ளனர்.
இன்றைய நிலைமை பற்றி சொல்லப்படும் விவரங்கள்
22.02.2016 நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.100 என்றால் அதன் மோசமான கடன்கள் (பேட் லோன்ஸ்) ரூ.150 மதிப்பு இருக்கும் என்கிறது.
தி இந்து தமிழ் நாளேட்டின் வணிக வீதி இணைப்பில் 15.2.2016 அன்று 15 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் புத்தக மதிப்பைக் காட்டிலும் பிப்ரவரி நிலவரப்படி அவற்றின் சந்தை விலை குறைந்துவிட்டதாகச் சொன்னது.
டிசம்பர் 2015 முடிந்த காலாண்டின் நிலவரம் சிக்கலானது எனக் காட்ட அட்டவணை தரப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் பதிவான 24 தேசிய வங்கிகளின், 31.12.2015 தேதியிலான செயல்படா சொத்துக்கள் ரூ.3,93,035 கோடி எனவும் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.2,62,955 கோடிதான் எனவும், தற்போது ரூ.4 லட்சம் கோடி என்ற நிலையில் உள்ள மோசமான கடன்கள், ஸ்ட்ரெஸ்ட் அட்வான்சஸ் என்ற விதத்தில் (அழுத்தம் கொண்ட கடன்கள் என்ற விதத்தில்) ரூ.8 லட்சம் கோடி என்ற நிலையை விரைவில் எட்டும் என இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் சொல்லப்பட்டது. இன்னுமொரு செய்தி, 27 தேசிய வங்கிகள் 2012 - 2013, 2013 - 2014, 2014 - 2015ல் தந்த ரூ.2,67,065 கடன்களில், அய்ந்தில் ஒரு பகுதி திரும்ப வராது எனவும், திரும்ப வராத தொகை கள், 2012 - 2013ல் ரூ.27,231 கோடி, 2013 - 14ல் ரூ.34,409 கோடி, 2014 - 2015ல் ரூ.52,542 கோடி எனவும் சொல்கிறது. மன்மோகன் ஆட்சிக்கும் மோடி ஆட்சிக்கும் இடையில், பழைய கால திரைப்பட வசனம் ஒன்றின்படி சொல்வதென்றால், சபாஷ், சரியான போட்டி.ஸ்ட்ரெஸ்ட் அசெட்ஸ்/ஸ்ட்ரெஸ்ட் அட்வான்சஸ் என்று புதிய சொற்றொடர்கள் அறிமுகம் ஆகின்றன. மென்டல் ஸ்ட்ரெஸ் என்றால் அது மனிதருக்கு ஏற்படும் மன அழுத்தம். ஹை பிளட் பிரஷர் என்றால் அது மனிதர்க்கு ஏற்படும் உயர்இரத்த அழுத்த நோய். இப்போது அஃறிணையான வங்கி கடன்களுக்கு உயர்திணையான மானுடரின் வியாதிகள் வந்துள்ளனவாம். ஸ்ட்ரெஸ்ட் அட்வான்சஸ் அல்லது அசெட்ஸ் என்பதில் மூன்று கூறுகள் உண்டாம். 1). செயல்படா சொத்துக்கள் 2). இனி தேறாது என ரத்து செய்யப்பட்டவை 3). கடன் வட்டி திரும்பச் செலுத்த புதிய காலக்கெடு தரப்பட்ட கடன்கள் (ரீஸ்ட்ரக்ச்சர்ட்).தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களில் 17% ஸ்ட்ரெஸ்ட் அசெட்ஸ்/அட்வான்சஸ் எனச் சொல்லப்படுகிறது. செயல்படா சொத்து (என்பிஏ) என்பது வருமானத்தை உருவாக்காதது என்றும், 6 மாதங்களுக்கு மேல் கடன் கட்டாமல் இருப்பது எனவும் சொல்லப்படுகிறது.டிசம்பர் 2015ல், வேண்டுமென்றே கடன் கட்டாதவர்கள் 2,470 பேர் எனவும் இதில் வெறும் 2% அதாவது 48 பேர், சந்தேகத்திற்குரிய கடன்கள் ரூ.28,462 கோடியில் 50% கடன்கள் பாக்கி வைத்திருந்தனர் எனவும் சொல்லப்பட்டது. இந்த 48 பேரும் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை பாக்கி வைத் திருந்தனர். மீதமுள்ள 98% பேர், ரூ.25 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் வைத்திருந்தனர். (வில்ஃபுல் டிஃபால்டர்ஸ்) வேண்டுமென்றே கடன் கட்டாதவர்கள் பட்டியலில், எஸ்.குமார்ஸ், எம்.பி.எஸ்.ஜ÷வல்லர்ஸ், லிலிபுட் நிட்வேர், சோலார் செமி கண்டக்டர்ஸ், ஜெனித் பிர்லா, டெக்கான் கார்கோ, எடி சாலட் டிபி, கிங் ஃபிஷர், மோசர்பாயர், போன்ற நிறுவனங்கள் உள்ளன. சிபிஅய், ஜ÷ம் டெவலப்பர்ஸ், ஜயபாரத் டெக்ஸ்டைல்ஸ், கிருஷ்ணா நிட் வேர், ஆர்ஈஅய் அக்ரோ, வின்சம் டைமண்ட் மற்றும் எலெக்ட்ரோ தெர்ம் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. வாராக் கடன் ரூ.28,462.85 கோடியில், தேசிய வங்கிகளுக்கு வர வேண்டியது ரூ.18,058.21 கோடி. வாராக் கடன்களால் நஷ்டம் எற்படுகிறது. நஷ்டம் வந்தால் பங்கு மதிப்பு சந்தையில் குறைகிறது. விஷச் சுற்று போய்க் கொண்டே இருக்கிறது.
நோயாளியைக் கொல்லும் சிகிச்சை
வங்கிகள் தனியார்மயமும் பன்னாட்டு வங்கிகளிடம் இந்திய வங்கிகளை ஒப்படைப்ப தும், வங்கித் துறை என்ற நோயாளியைக் காப்பாற்றாமல், நோயாளியைக் கொன்று விடும். 1969ல் இந்திரா காந்தி காலத்தில் வங்கி தேசியமயம் நடப்பதற்கு முன்னால், 1947ல் இருந்து 1969 வரை இந்தியாவில் 559 வங்கிகள் திவாலாகின. பணம் போட்டவர்களை எல்லாம் நாசமாக்கியது. வங்கி தேசியமயத்துக்குப் பிறகுதான் இந்த அளவுக்கு கிராமப்புற கிளைகள் வந்தது என்பதையும், சாமான்யர்களும் கணக்கு துவங்க முடிந்தது என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஜேய்பீ இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கடன் ரூ.50,000 கோடியை எட்டியுள்ளது. இந்த நிறுவனம் அய்சிஅய்சிஅய் வங்கிக்கு மட்டும் ரூ.6,000 கோடியும் அதனையும் சேர்த்து மற்ற வங்கிகளுக்கு ரூ.28,000 கோடியும் கட்ட வேண்டி உள்ளது. ரிலையன்ஸ் லிமிடெட்டிடம் கையிருப்பு, கைவசம் இந்த ஆண்டு ரூ.91,736 கோடி உள்ளது. ரிலையன்சின் கடன் ரூ.1,78,077 கோடி. கார்ப்பரேட் நிறுவனங்களின் திறமையே, பரந்த முதலீட்டாளர்களிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் எவ்வளவு அதிகப் பணம் திரட்டுகிறது என்பதுதான். ரிலையன்ஸ் போன்ற பிரமோட்டர்கள் குறைவாகவும், மற்றவர்கள், குறிப்பாக வங்கிகள் அதிகமாகவும் பணம் போட்டுதான், இந்திய பெரும் தொழில் குழும (கார்ப்பரேட்) உலகம் இயங்க முடியும்.
உலகமயம், தாராளமயம், தனியார்மயம் இந்தியாவில் நுழைந்த 1991ல்தான் திரும்பக் கட்டாமல் விழுங்கப்படும் கடன்களுக்கு, ‘செயல்படா சொத்து’ எனப் பெயர் சூட்டினார்கள். மோசடிக்கு ஒரு கவுரவம் தரப்பட்டது. இது போக, ‘வாராக் கடன்’ என்ற சொற்றொடரும் நுழைந்தது. கடன், தனியாய் தனக்கென உயிர் பெற்று, அதுவாக வங்கியிலிருந்து செல்வது போலவும், வருவது போலவும், கடன் ஏதோ தானாக ‘வாராமல்’ இருப்பது போலவும் சொல்லப்படுகிறது.
ஏன் யார் எப்படி யாருக்குக் கடன் கொடுத்தார்கள்? கடன் பணம் என்ன ஆகிறது எனக் கண்காணித்தனரா? கடனைத் திருப்பிச் செலுத்த திரும்பப் பெற என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்படாமல், வரும் அல்லது வராது எனக் கடன் பிரித்துக் காணப்படுகிறது. அரசு கஜானாவில் இருந்து, பல லட்சம் கோடிகளை பெரும் பணக்காரர்களுக்கு வரி செலுத்தாமல் இருக்க விதிவிலக்கு தந்து, அரசு கஜானாவை கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிட்டுவிட்டு, அதற்கு, ‘முன்னுரிமை பெற்ற வரி செலுத்துவோர்க்கான மான்யம்’ என முந்தைய அய்முகூ அரசு பெயர் சூட்டியது.
போர்க்களத்தில் இராவணனிடமிருந்து ஆயுதங்களை அகற்றிய பிறகு, இராமன் இராவணனிடம் ‘இன்று போய் நாளை வா’ எனச் சொன்னதாகவும் அதற்கு, ‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ எனவும் கம்பன் ஓர் இராமாயணம் பாட முடிந்தது. தமிழ்நாட்டின் சாமான்ய மக்கள் ‘சிவன் சொத்து குல நாசம்’ எனக் கோயிலை விட்டு வெளியேறும் போது உடையில் படிந்துள்ள மண்ணைக் கூடத் தட்டிவிட்டு எழுவார்கள் எனச் சொல்வார்கள். இந்த விழுமியங்களால் தான் விவசாயம் பொய்த்து, கடனைத் திரும்பத் தர முடியாமல் போனதால், சில லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அய்ரோப்பாவில் சுதந்திரப் போட்டி ஏகபோகமாகி, தொழில் மூலதனமும் வங்கி மூலதனமும் இரண்டறக் கலந்தபோது ஏகாதிபத்தியம் வரலற்றில் நுழைந்தது. மரபார்ந்த முதலாளித்துவ வழிகளில் மூலதனத் திரட்சி நிகழாத இந்தியாவில், முதலாளித்துவ அரசு, தனியார் துறையின் இயலாமையை, தேவையை கணக்கில் கொண்டு தேசத்தின் செலவில், தனியார் தொழில்துறைக்கு பண்டங்களையும் சேவைகளையும் பொதுத் துறை மூலம் மலிவாக வழங்கியது. தொழில்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தை ஒன்று குவிக்க, வங்கி தேசியமயம் செய்தது. கூடவே, முற்போக்குப் பட்டமும் சம்பாதித்துக் கொண்டது. சர்வதேச நிதி மூலதனம், இந்தியாவின் வங்கி காப்பீட்டு துறைகளை விழுங்கப் பார்க்கிறது. அதற்கு, மன்மோகன் துவங்கியதை மோடி துரிதப்படுத்தப் பார்க்கிறார். ஆகவேதான், தனியார் நிறுவனங்களின் மாபெரும் வங்கிக் கொள்ளையை அனுமதித்து வேடிக்கை பார்த்து விட்டு, இன்று அதனையே சாக்காக்கி, வங்கி தனியார்மயம், அந்நிய முதலீட்டு நுழைவு என மூர்க்கமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்தத் தீய முயற்சிகளுக்கு நாடெங்கும் வலுவான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வங்கிகள் ரூ.500 கோடிக்கும் மேல் கடன் வாங்கியவர்கள் பெயர்களைச் சொல்வதில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் அந்தப் பெயர்களை மூடி முத்திரை யிடப்பட்ட ஓர் உறையில் (சீல்டு கவர்) தருமாறு கேட்டுள்ளது. 1976ல் இறந்த அய்க்கிய அமெரிக்க முதலாளித்துவத் தளபதி பால் கெட்டி சொன்னார்: “நீ உன் வங்கிக்கு 100 டாலர் தரவேண்டுமானால், அது உன்னுடைய பிரச்சனை. ஆனால் நீ வங்கிக்கு 100 மில்லியன் (10 கோடி) டாலர் தர வேண்டுமானால், அது வங்கியின் பிரச்சனை”. பால் கெட்டியிடம், இந்தியப் பணக்காரர்கள், நன்றாகவே பாடம் படித்துள்ளனர்.
வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் அறிக்கை தந்துள்ளது:
 ஏப்ரல் 2016ல் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் ரூ.4 லட்சம் கோடி என உயரும்.
 கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கிகளே கையேற்க வேண்டும். அவற்றின் நிர்வாகத்தைக் கட்டாயமாய் மாற்ற வேண்டும்.
 வேண்டுமென்றே கடனைத் திரும்பக் கட்டாதவர்கள் விஷயத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டியதில்லை. அத்தகையோரில், முதல் 30 பேர் பெயர்களை வெளியிட வேண்டும்.
பொதுத்துறையை பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்பது, உண்மையான தேச பக்தக் கடமையாகும்.
ஹார்பர் லீ நினைவேந்தல்
எஸ்.குமாரசாமி
1960ல் ஹார்பர் லீ எழுதிப் பிரசுரமான ‘டு கில் எ மாக்கிங் பேர்ட்’ உலகின் பல மொழிகளிலும் 40 கோடி பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆனது. ஹார்பர் லீ தமது 89 வயதில் 19.02.2016 அன்று இறந்தார்.
அய்க்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதி, அடிமை எசமானர்கள் அடிமைகளை விடுதலை செய்ய முடியாது என, ஆபிரகாம் லிங்கனுடன் போர் தொடுத்த பகுதி. இங்கு நிறவெறியும் இனவெறியும் வெறியாட்டம் போட்டு வந்தன. இங்கேதான் ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கும்பலாகச் சூழ்ந்து கொல்லும், அவர்கள் மீது பல வன்முறை களை ஏவிய கு க்ளக்ஸ் கான் (கேகேகே) என்ற வெள்ளை நிற வெறி அமைப்பு இயங்கி வந்தது.
ஹார்பர் லீ, இந்தப் பகுதியின் அலபாமா மாகாணத்தைக் கதைக் களமாகக் கொண்டு, உலகப் புகழ்பெற்ற, ‘டு கில் எ மாக்கிங் பேர்ட்’ (பஞ ஓஐகக அ ஙஞஇஓஐசஎ ஆஐதஈ) நூலை எழுதினார். நாவல் 7 வயது சிறுமி ஸ்கௌட் ஃபின்ச் மூலம் கதை சொல்கிறது. கூடவே அவளது சகோதரன் ஜெம் என்ற சிறுவன் வருகிறான். வெள்ளை இன வழக்கறிஞரான அட்டிகஸ் ஃபின்ச் தமது மகளையும் மகனையும், நிற இனப்பாகு பாடுகளால் பிளவுண்ட சமூகத்தில், அவர்களது இளம் வயதில், கைகளைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். நிறவெறி இனவெறி தப்பெண்ணங்களுக்கு எதிராகவும் நியாயத்திற்காகவும் நிற்க வேண்டும் எனச் சொல்கிறார்.
டாம் ராபின்சன் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க இளைஞன் ஒருவன் மாயல்லா என்ற வெள்ளை இனப் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாக ஒரு வழக்கு பதிவாகிறது. கதைப்படி, சம்பவ வருடம் 1935. அலபாமா கொந்தளிக்கிறது. வழக்கு விசாரணை தீர்ப்பு என எதுவும் இல்லாமலே கருப்பின டாம் ராபின்சனைக் கொல்ல வேண்டும் எனச் சமூகத்தின் பொதுப்புத்தி துடிக்கிறது. வெள்ளைப் பெண்ணின் புனிதத்திற்கு பாதிப்பு உண்டாக் கிய, ஒரு கேடுகெட்ட நீக்ரோவுக்கு ஆதரவாக எந்த வெள்ளைக்கார வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என வெள்ளை நிறவெறி, ஊரறிந்த இரகசிய ஆணை பிறப்பிக்கிறது.
அட்டிகஸ் ஃபின்ச்சுக்கு சோதனை வருகிறது. தன் குழந்தைகளுக்கு அவர் தம் நடவடிக்கைகள் மூலம், என்ன செய்தி சொல்லப் போகிறார்? அவர் நியாயத்தின் பக்கம் துணிந்து நின்று, அதுவும் மிக மிக இயல்பாக நின்று, டாம் ராபின்சனுக்காக வழக்காடுகிறார்.
நாவல் நெடுக, உரையாடல்களில், நிலவுகிற சமூக நடைமுறைகளையும், நேர்மையான வாழ்க்கைக்கான விழுமியங்களையும் காண முடிகிறது. “மக்கள் பொதுவாகத் தாம் பார்க்க விரும்புவதையே பார்க்கிறார்கள். தாம் கேட்க விரும்புவதையே கேட்கிறார்கள்.” இந்த வரிகளில் பொதுப்புத்தி பற்றி நமக்குப் புரிகிறது. “பெரும்பான்மை விதிப்படி நடக்க வேண்டாத ஒரு தருணம் உண்டென்றால், அது ஒருவர் தம் மனச்சாட்சிப்படி நடக்கும் போதுதான்.” “கரும்பலகையில் ஆசிரியர், ஜனநாயகம் என எழுதி, இதற்கு என்ன பொருள் ஜீன் லூயி?” என ஸ்கௌட்டிடம் கேட்கிறார். ஸ்கௌட் சொல்கிறான்: “அனைவருக்கும் சமமான உரிமைகள், எவர்க்கும் சிறப்புரிமை ஏதும் கிடையாது.” “எல்லா ஜனங்களுடனும் நன்றாகப் பழக ஒரு தந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் போதும், ஸ்கௌட். ஒருவரை நீ புரிந்து கொள்ள, நீ அவர் ஏன் அந்தக் கோணத்தில் யோசிக்கிறார் எனப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தோலுக்குள்ளே புகுந்து அதிலேயே அங்குமிங்கும் நடமாடும் போதுதான், அது உனக்குப் புரியும்.”
இன்று உலகெங்கும், பாசிசம், மதவெறி, சாதிவெறி, தேசபக்த கூப்பாடுகளைச் சந்திப்பவர்களுக்கு, 1935ல் வெள்ளைக்கார வழக்கறிஞர் அட்டிக்ஸ் ஃபின்ச் தன் மகன் ஸ்கௌட்டிற்குச் சொன்ன பதில் எக்காலத்திலும் நம்பிக்கைத் தரும். “உண்மையான தைரியம் என்பது கையில் ஒரு துப்பாக்கி வைத்திருக்கும் மனிதர் அல்ல, நீ துவங்கும் முன்பே உன்னை ஒழித்துக் கட்டி விடுவார்கள் என உனக்குத் தெரிந்தும், நீ துவங்குவது மட்டும் அல்லாமல், இறுதி வரை செல்வதுதான் உண்மையான தைரியம். உனக்குப் பல நேரங்களில் வெற்றி கிடைக்காமல், எப்போதாவது மட்டுமே வெற்றி கிடைக்கலாம்.”
வெள்ளைக்கார வறிய இளம் பெண், அவளது பருவத்திற்கேற்ப, கருப்பு இன இளைஞனரிடம் உறவாட விரும்புகிறாள். இந்த இயற்கையான விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, அவள் கருப்பின இளை ஞனைத் தழுவுகிறாள். இதனைக் கண்டுவிட்ட, வெள்ளை நிறவெறி தலைக்கேறிய அவள் தந்தையால், அன்றைய வெள்ளை சமூக நிலைமைகளில், கருப்பின இளைஞன் மீது பாலியல் வன்முறை (ரேப்) வழக்கு தொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. வழக்கின் இறுதியில் அட்டிகஸ் ஃபின்ச் வாதாடுகிறார்: “அவள் வெள்ளை இனத்தவள்; அவள் கருப்பின இளைஞனை இணங்கத் தூண்டினாள். அவள் நம் சமூகத்தில், பேச முடியாத ஒன்றைச் செய்தாள். ஒரு கருப்பின மனிதனை முத்தமிட்டாள். ஒரு மூத்த உறவினரை அல்ல, ஓர் இளம் நீக்ரோ ஆணை. அவள் அந்த விதியை மீறும் வரை, எந்த விதி பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால் பின்னர் அந்த விதி அவள் மீது விழுந்து அவளைச் சாய வைத்தது.”
“அரசு சாட்சிகளுக்கு ஒரு தீய அனுமானம் உள்ளது. எல்லா நீக்ரோக்களும் பொய் பேசுபவர்கள் - எல்லா நீக்ரோக்களும் ஒழுக்கம் இல்லாதவர்கள் - இந்த நீக்ரோக்கள் பக்கத்தில் இருந்தால், நம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இந்த அனுமானம், இத்தகைய மனப்பாங்குடன் சேர்ந்து வருகிறது.”
“கனவான்களே, இந்த அனுமானம், டாம் ராபின்சனின் தோலின் நிறம் போல் ஒரு கருப்பான பொய்யாகும். இது, நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதல்ல. உங்களுக்கு உண்மை தெரியும். அந்த உண்மை இதுதான். சில நீக்ரோக்கள் பொய் பேசுவார்கள். சில நீக்ரோக்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள். சில நீக்ரோக்களை, கருப்பின வெள்ளை இனப் பெண்கள் விஷயத்தில் நம்ப முடியாது. ஆனால், இந்த உண்மை மொத்த மனித குலத்திற்கும் பொருந்துமே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட மனித இனத்திற்கும் மட்டும் பொருந்துவதல்ல. இந்த நீதிமன்ற அறையில், பொய்யே ஒருபோதும் பேசாத ஒரு மனிதரையும், ஓர் ஒழுக்கக் கேட்டிலும் ஈடுபடாத ஒரு மனிதரையும், காண முடியாது. வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணையும் விருப்பத்தோடு பார்க்காத மனிதரையும் காண முடியாது.”
டு கில் எ மாக்கிங் பேர்ட் நாவல் 1960ல் பிரசுரம் ஆனது. நிச்சயமாய் அது வெள்ளை இனத்தவர் சிந்தனையை மாற்றியது. 1960களின் கருப்பின மக்கள் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் துவங்கிய குடி உரிமைகள் இயக்கத்திற்கு, வெள்ளையர் மத்தியில் ஆதரவைத் திரட்ட உதவியது.
1930களின் இறுதியில், அய்க்கிய அமெரிக்காவில் தோன்றிய மாபெரும் நெருக்கடியை ஒட்டி, ஜான் ஸ்டீன்பக் எழுதிய கிரேப்ஸ் ஆஃப் ராத், அந்நாட்களில் மானுட மனசாட்சியை உலுக்கியது. 1935ஆம் வருடத்தைக் கதைக் களமாகக் கொண்டு ஹார்பர் லீயால் எழுதப்பட்ட நாவல், புத்தாயிரமாண்டிலும் பொருத்தப்பாட்டுடனே உள்ளது.
ஹார்பர் லீ, டு கில் எ மாக்கிங் பேர்ட், அதாவது பிற பறவைகள் போல் குரல் கொண்டு பாடுகிற பறவையைக் கொல்வது ஒரு பாவம் என்றார். “அந்தப் பாடும் பறவைகள் நம்மை மகிழ்ச்சி அடையச் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவை மக்களின் தோட்டங் களைத் தம் தீனியாக்கிக் கொள்வதில்லை. அவை தானியம் வைக்கும் இடங்களில் கூடுகள் கட்டுவதில்லை. அவை இதயபூர்வமாக நமக்காகப் பாடுவதைத் தவிர, வேறொன்றும் செய்வதில்லை. அதனால்தான் அந்தப் பாடும் பறவையைக் கொல்வது, ஒரு பாவமாகும்.”
இன்றைய அய்க்கிய அமெரிக்காவில் கருப்பின அதிபர் பதவியில் இருக்கும்போது, கருப்பு உயிர்களுக்கும் பொருளுண்டு என்ற முழக்கம் எழுந்துள்ளபோது, ஹார்பர் லீ எழுதிய இரண்டாவது நாவலான கோ செட் எ வாட்ச்மேன் நாவல் 2015ல் பிரசுரமான போது, வயதான அட்டிகஸ் ஃபின்ச் கருப்பின மக்களுக்கு எதிராக இனவெறி நஞ்சை உமிழ்ந்து பேசுவது, வரலாற்றுச் சோகம்; ஆனபோதும் அது யதார்த்தமும் கூட.
இசுலாமியர் மீதான தலித்துகள் மீதான தாக்குதல்களை, ரோஹித் வேமுலாவை சாகடித்ததை, சாதியாதிக்கக் கொலைகளை, ஜேஎன்யுவில் நடைபெறும் ஜனநாயகப் படுகொலைகளைக் காணும் இந்தியாவுக்கு, இந்தியாவின் அறிவுலகத்துக்கு, ஹார்பர் லீயின், ‘டு கில் எ மாக்கிங் பேர்ட்’ வாசிப்பும் மறுவாசிப்பும் மிக மிக அவசியமானது.
அத்திக்கடவு - அவினாசி திட்டமும் 
அஇஅதிமுக அரசாங்கத்தின் அலட்சியமும்
சந்திரமோகன்
அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை அமலாக்கக் கோரி, 14 பேர், அவினாசியில், பிப்ரவரி 8 முதல் கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, அருகமை குன்னத் தூர், சேவூர், பெருமாநல்லூர் பகுதிகளிலும் 54 பேர் தொடர் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை அமலாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் உடனடியாக இறங்கவேண்டுமென பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்தன. 60 ஆண்டுகால கோரிக்கை கனவாகப் போய்விடக் கூடாது என்ற வகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே, ஜெயா அரசாங்கத்திற்கு அழுத்தம் தரும் வகையில் விவசாயிகள், பொது மக்கள் இறங்கினர். பல்வேறு கட்சிகள் மற்றும் சங்கங்களின் ஆதரவு குவிந்தது. இதன் விளைவாக பிப்ரவரி 18 அன்று தமிழக அரசாங்கம், மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவது, திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பணிகளுக்கு ஆய்வு மற்றும் ஆவணங்களைத் தயாரிக்க ரூ.3.27 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கும் அரசாணையை வெளியிட்டது. ஆனால், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டதாக, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (பிப்ரவரி 16 அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது) ஆரவார மான/மோசடியான அறிவிப்பை வெளியிட்டார். கடந்த அய்ந்தாண்டுகளாக திட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்ட ஜெயா அரசாங்கம், தேர்தல் ஆதாயத்திற்காக கண் துடைப்பு நடவடிக்கையாக அரசாணை வெளியிட்டது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் தேவை
அவினாசியைச் சுற்றியுள்ள திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. வறட்சியும் மழைக் குறைவும், இயற்கையான நீர்வழிப்பாதைகள்/வாய்க்கால்கள் அடைபட்டு போனதாலும், தொழில் வளர்ச்சியாலும், நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து 1300 அடி வரையிலும் ஆழ்துளை குழாய்க் கிணறு அமைத்தால்தான் நீர் கிடைக்கும் என்ற நிலைமை உருவாகிவிட் டது. பாசனத்திற்கான நீர் மற்றும் குடிநீர் தேவை ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக மாறிவிட்டது. இத் திட்டம் அமலாக்கப்பட்டால், மேட்டுப்பாளையம், காரமடை புளியம்பட்டி, அன்னூர், சேவூர், அவினாசி, குன்னத்தூர், நம்பியூர், பெருந்துறை, ஊத்துக்குளி, திருப்பூர், காங்கேயம் ஆகிய பகுதிகள், 35 இலட்சம் மக்கள் பயனடைவர். 1.35 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
திட்டத்தின் தோற்றமும் வரலாறும்
நீலகிரி மலைத் தொடரில் ஆண்டு முழுவதும் மழை பொழிகிற மடிப்பு மலைகளில் மேல் பவானி ஆறு உருவாகிறது. இந்த ஆறானது கீழே பவானி சாகர் அணை வந்து சேர்கிற வரை, குந்தா நீர் மின்திட்டத்தின் கீழே ஒன்பது தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர்மின் நிலையங்கள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின் உற்பத்திக்கு பயன்படும் நீரானது, இடையில் பில்லூர் அணைக்கு வந்து சேர்கிறது. அதனருகில் பவானி ஆறும், மோயாறும் சந்திக்கும் இடத்தில் அத்திக்கடவு உள்ளது. அத்திக் கடவில் சேகரிக்கப்படும் தண்ணீரானது கோவை மாவட்ட மக்களுக்கான குடிநீரின் முக்கிய ஆதாரம் ஆகும். பில்லூரிலிருந்து வெளியேறும் நீரானது பவானி சாகர் அணைக்குச் சென்று நிரம்புகிறது. பவானி சாகர் அணையின் அளவு 53 டிஎம்சி ஆகும். பல ஆண்டுகள் பவானி சாகர் நிரம்பி வழிந்து 22 டிஎம்சி முதல் 109.23 டிஎம்சி வரை, தண்ணீரானது வெளியேறி உள்ளது. எனவேதான், இந்த வெள்ளமாக வெளியேறும் மிகை நீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் திட்டமும், வறண்ட பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளிடம் எழுந்தது. பவானி சாகர் அணைப் பகுதியிலிருந்து இயற்கையாக உருவாகி, தண்ணீர் செல்கிற நீர்வழித்தடங்கள்/வாய்க்கால்கள் வாயிலாக, ஆண்டிற்கு 1.25 டிஎம்சி தண்ணீர் பாய்ச்சப்பட்டால், வழியிலுள்ள 71 குளங்கள், 538 குட்டைகள் நிரம்புவதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து பலன் கிடைக்கும்; வினாடிக்கு 70 கன அடி வீதம், 20 நாட்களுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டால் போதுமானது எனச் சொல்லப்படுகிறது. மெயின் வாய்க்கால் அன்னூர் வரை, 52 கி.மீ., அவினாசி கிளை வாய்க்கால் 21 கி.மீ., பெருந்துறை கிளை வாய்க்கால் 67 கி.மீ., கணுவக்கரை உப கிளை வாய்க்கால் 6 கி.மீ., பயன்படுத்தப்படுவதும், சுமார் 1450 ஏக்கர் நிலம் புதிதாக கையகப்படுத்தி இணைப்புகளை ஏற்படுத்துவதும் வேண்டும்.
ஏன் நிறைவேறவில்லை?
இத்திட்டம் அமலாக்கப்பட்டால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என கீழ் பவானி திட்டம், கொடிவேரி, காளிங்கராயன் வாய்க்கால் பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள்/சங்கங்கள் குரல் எழுப்பினாலும், அதனால்தான் நிறைவேற்றப்படவில்லை என்று கூற முடியாது. தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை, விவசாயம் - நீர்ப் பாசனம் குறித்த வாழ்வாதாரப் பிரச்சனைகளில் எத்தகைய அலட்சியப் போக்கைக் கடைபிடித்துள்ளார்கள் என்பதற்கு அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 60 ஆண்டுகால வரலாறே மிகச் சரியான சான்றாகும். பிரச்சனை திட்டத்தில் இல்லை, அரசாங்கங்களிடம்தான் உள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்டம், மாநில அரசாங்கங்களால், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு பெயர்களில், வகை வகை மாதிரியானத் திட்டங்களாக 1954ல் மேல் பவானித் திட்டம், 1967ல் குந்தா கழிவு நீர்த் திட்டம், 1989ல் அத்திக்கடவு - அவினாசி பாசனத் திட் டம், 1998ல் அத்திக்கடவு அவினாசி குடிநீர்த் திட்டம், 2001ல் அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் - என அறிவிக் கப்பட்டது. முன்னாள் (1957 - 1967) எம்எல்ஏ மாரப்ப கவுண்டர், 1957ல், அன்றைய முதல் அமைச்சர் காமராஜ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கை திமுக, அதிமுக அமைத்த அனைத்து அரசாங்கங்களிடமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இக் கோரிக்கையை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு உண்ணாவிரதம், மனித சங்கிலி, மறியல் எனப் பலவகையான போராட்டங்களும் கட்டமைக்கப்பட்டன. 2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில், ‘தண்ணீர்’ வேட்பாளரும் நிறுத்தப்பட்டார். 2001 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மோகன்குமார் (பஸ் சின்னம்) 38,000 வாக்குகளுடன், இரண்டாம் இடத்தையும் பெற்றார், வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
அஇஅதிமுக அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகள்
அஇஅதிமுக ஆட்சியில், 2002ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ரூ.270 கோடி ஒதுக்கப்பட்டு படிப்படியாகத் திட்டம் நிறைவேற்றப்படும் என அன்றைய நிதியமைச்சர் பொன்னையன் அறிவித்தார். திட்டத்தை அமலாக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பிறகு திட்டத்தின் சாத்தியப்பாட்டை ஆய்வு செய்ய, 2009ல் மோகன கிருஷ்ணன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அது 2011ல் அறிக்கையையும் சமர்ப்பித்தது. 2012ம் ஆண்டு, தற்போதைய அஇஅதிமுக அரசாங்கத்தின் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் கே.பி.ராமலிங்கம் தமிழ்நாட்டிற்குள் உள்ள ஆறுகளை இணைக்கும் 6 திட்டங்களை, ரூ.9015 கோடி ஒதுக்கீட்டை அறிவித்தார். சில ஆறுகளில் கிடைக்கும் உபரி நீரை வறட்சிப் பகுதிக்கு கொண்டு சென்று விவசாயிகளுக்கு பயன்களை ஏற்படுத்தும் திட்டம் என ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது. 1). பெண்ணையார் (கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம்) - பாலாரின் துணை ஆறான கல்லார் திட்டம். 2). சாத்தனூர் அணை - செய்யார் திட்டம். 3). காவிரி - சரபங்கா இணைப்புத் திட்டம். அதாவது மேட்டூர் அணையிலிருந்து சரபங்கா, திருமணிமுத்தாறு, முசிறி ஆறுகளை (சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி) இணைக்கும் 182 கி.மீ. திட்டம். 4). அவினாசி - அத்திக்கடவு வெள்ள வாய்க்கால் திட்டம். 5). கட்டளை வாய்க்கால் - குண்டாறு திட்டம். 6). தாமிரபரணி - கருமேனியூர் - நம்பியூர் திட்டம் ஆகியவை ஆகும். அய்ந்தாண்டுகளில், எந்த திட்டமும் அமலாக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் மத்திய அரசின் நிதியைப் பெற்று அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.1862 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, 2013ல் மத்திய அரசுக்கு நிதி கோரி திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. மத்திய நீர்க்குழுமமானது, வெள்ள மேலாண்மை திட்டப்படி அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது எனவும், பாசனத் திட்டமாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது.
ஆனால், 2012ல் சட்டசபையில், அவினாசி எம்எல்ஏ கருப்பசாமி அவர்களின் கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வுப் பணிக்காக ரூ.30 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் ரூ.1862 கோடி நிதி வழங்கக் கோரியுள்ளதாகவும், “மத்திய அரசு நிதியை ஒதுக்காவிட்டாலும், மாநில அரசின் நிதி மூலமாக இத்திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார், அந்த அடிப்படையில் பணிகள் தொடங்கப்படவுள்ளன” எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நேர்மையாக செயல்படாமல் மோசடி செய்தது, ஜெயா அரசாங்கம். 2016 பிப்ரவரி 15 அன்று பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திட்டம் அமலாக்கப்படாததற்கு அன்றைய அய்க்கிய முற்போக்கு (காங்கிரஸ்) கூட்டணி அரசாங்கம், 2013ல் ஒப்புதல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். மத்திய அரசு நிராகரித்த பிறகு, தற்போதைய தேசிய சனநாயக முன்னணி (பாரதிய சனதா) அரசாங்கத்திடம் திட்டத்துடன் சென்று அணுகாத, அஇஅதிமுக அரசாங்கம், தற்போது தேர்தல் கால நாடகத்தை அரங்கேற்றுகிறது. இத் திட்டம் அமலாக்கப்படாததற்கு யார் குற்றவாளி? மாநில அரசின் நிதி மூலமாக அமல்படுத்தப்படும் என 2012ல் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது?
ஜெயா அரசாங்கம் குற்றவாளி!
இத்திட்டத்தின் நீர் ஆதாரப் பகுதிகளாக பில்லூர் அணை அருகேயுள்ள அத்திகடவுப் பகுதியும், நீலகிரி மலையின் அடிவாரத்தில் பவானிசாகர் அணையும் உள்ளன; கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில் அமைகின்றன. தமிழ்நாடு பொதுப்பணித் துறையும், மின் உற்பத்தி கழகமும் (டேன்ஜெட்கோ), இத்திட்டத்தோடு தொடர்பு உடைய அரசுத் துறைகளாகும். நீண்டகாலமாக, மேல் பவானி ஆற்றின் மூலமாகப் படிந்துள்ள லட்சக்கணக்கான டன்கள் வண்டல் மண்ணால் பில்லூர் அணை, முழுமையாக ஆற்று நீரைத் தேக்கும் ஆற்றலை இழந்துள்ளது. ஆண்டு தோறும், பெரிய அளவில் மழை வெள்ள நீர் சேகரிக்கப்படாமல் வெளியேறுகிறது. பில்லூர் அணை வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்ல தமிழக வனத்துறை அனுமதி மறுத்தது. தமிழக வனத்துறை, மின் உற்பத்திக் கழகம், பொதுப்பணித்துறை ஆகியவை ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை தமிழக அரசாங்கம் மேற் கொண்டால், பவானி ஆற்றின் நீரை பில்லூர் அத்திக்கடவு, பவானி சாகர் அணைகளில் முழுமையாக சேகரித்துக் கொள்ள முடியும். அத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்பவானி பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கும், கோவை மாவட்ட குடிநீர்த் திட்டங்களுக்கும் தண்ணீர் வழங்க முடியும். இதோடு கூட, நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிற பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்திற்கும் கேரள அரசாங்கத்திடம் ஒப்புதல் பெற்றால், கூடுதல் நீரைப் பெற முடியும். வறட்சியால் பாதிக்கப்படுகிற கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவர்.
நீண்டகால நோக்கத்தில் சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுத்தாமல், விவசாய நீர்ப்பாசனத் திட்டங்களை அலட்சியப்படுத்தி வருகிற ஜெயா அரசாங்கம் தனது பொறுப்பற்ற ஆட்சியை மறைப்பதற்காக தேர்தல் கால நாடகம் ஆடுகிறது; கண் துடைப்பு அறிவிப்புகளை மேற்கொள்கிறது. அத்திக்கடவு - அவினாசித் திட்டப் பகுதி விவசாயிகளை ஏமாற்றுவதற்கு அஇஅதிமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இந்த முயற்சியை, இடதுசாரி கள், விவசாய அமைப்புகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்.
இகக(மாலெ) 10ஆவது மாநில மாநாட்டில் அறைகூவல்
ஊழல், குற்றமய, ஒடுக்குமுறை, எதேச்சதிகார, மக்கள் விரோத 
அஇஅதிமுக ஆட்சிக்கு எதிராக
மார்ச் 23 முதல் ஏப்ரல் 14 வரை
ஜனநாயகம் காப்போம். மக்களைக் காப்போம் இயக்கம்
செங்குன்றம் என்ற பெயருக்கேற்ப எங்கும் சிகப்புமயமாக, செங்கொடிகளும் தோரணங்களும் ஜொலிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 10ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு 2016 பிப்ரவரி 27, 28 தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், பாடியநல்லூரில் தோழர் அம்மையப்பன் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் அரங்கத்தில் நடைபெற்றது.
பிப்ரவரி 27 காலை 10 மணிக்கு ஆரம்பமான மாநாட்டை தோழர் அ.சந்திரமோகன் தலைமையில் தோழர்கள் பாலசுப்ரமணியன், வித்யாசாகர், தனவேல், மேரிஸ்டெல்லா, ரேவதி, சாந்தி ஆகியோர் கொண்ட தலைமைக் குழு தலைமை தாங்கி நடத்தியது.
தோழர்கள் கே.ஜி.தேசிகன், ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராஜசங்கர், வேல்முருகன், ரமேஷ் ஆகியோர் மாநாட்டு தொழில்நுட்பக் குழுவாகச் செயல்பட்டனர்.
மாநாட்டின் கொடியை இளம் தோழர், அகில இந்திய மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் அஞ்சலித் தீர்மானத்தை தோழர் ஜி.ரமேஷ் மாநாட்டில் முன் வைத்தார். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன் வரவேற்புரையாற்றினார். இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மத்திய பார்வையாளருமான தோழர் ஸ்வப்பன் முகர்ஜி மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.
கலைந்து செல்லும் மாநிலக் கமிட்டிச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் மாநாட்டில் அறிக்கை முன்வைத்தார். தொடர்ந்து அறிக்கையின் மீது தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பிரதிநிதித் தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மதிய அமர்வுக்கு முன் பாக “வரலாறு முடிந்துவிடவில்லை... வர்க்கப் போராட்டம் தொடர்கிறது”.. என்ற தலைப்பில் மாநாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த படக் கண்காட்சியை தோழர் ஸ்வப்பன் முகர்ஜி திறந்து வைத்தார். பிரதிநிதித் தோழர்களின் கருத்துரைகள் அன்று இரவு வரை தொடர்ந்தது.
பிப்ரவரி 28 அன்று மாநாட்டை வாழ்த்தி இகக (மாலெ) புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், கேரள மாநிலச் செயலாளர் தோழர் ஜான் கே.எரிமேலி உரையாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து பிரதிநிதித் தோழர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மொத்தம் 40 பேர் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். பல தோழர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துபூர்வமாகத் தந்தனர். பிரதிநிதித் தோழர்களின் கருத்துக்களைத் தொகுத்து தோழர் பாலசுந்தரம் தொகுப்புரையாற்றினார். அதன் பின்னர் அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவு செலவுக் கணக்கை தோழர் எ.எஸ்.குமார் மாநாட்டில் முன்வைக்க, அதுவும் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
35 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு ஏக மனதாகத் தேர்வு செய்யப்பட்டது. கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தோழர் எஸ்.குமாரசாமி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் ஆளும் கார்ப்பரேட் ஆதரவு பாஜக சங்பரிவார் ஆட்சியை அடியொற்றி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத, தலித் மக்கள், சிறுபான்மையோர் விரோத குற்றமய, ஒடுக்குமுறை அஇஅதிமுக ஆட்சிக்கு எதிராக மக்களைக் காப்போம் ஜனநாயகம் காப்போம் இயக்கத்தினை பகத்திங் நினைவு தினமான மார்ச் 23 முதல் ஆரம்பித்து அம்பேத்கார் பிறந்த தினமான ஏப்ரல் 14 வரை மாநிலம் முழுவதும் நடத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தில் ஒரு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போராட்டம் ஆரம்பித்து 10 ஆண்டு ஆவதையொட்டி மார்ச் 13 அன்று கோவையில் இகக (மாலெ) அகில இந்தியப் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா கலந்து கொள்ளும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ள மாநாடு அழைப்பு விடுத்தது.
மாநாட்டின் வெற்றிக்காகப் பணியாற்றிய தோழர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
புதிய மாநிலக் குழுவையும் மாநிலச் செயலாளரையும் அறிமுகப்படுத்திப் பேசிய தோழர் ஸ்வப்பன் முகர்ஜி இன்றைய அரசியல் சூழல் தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கி னார். அதைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான தோழர் எஸ்.குமாரசாமி நிறைவுரையாற்றினார். சர்வதேசிய கீதத்தை அனைத்துத் தோழர்களும் எழுச்சியுடன் பாட பிரதிநிதிகள் மாநாடு நிறைவுற்றது.
பிரிக்கால் தொழிலாளர் ஒருமைப்பாட்டு நிதி
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்ட 8 பிரிக்கால் தோழர்களின் விடுதலைக் காக சென்னை தொழிலாளர்கள் சார்பாக ரூ.1 லட்சமும் அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கம் சார்பாக ரூ.15,000 மாநாட்டில் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 27 - 28 தேதிகளில் செங்குன்றத்தில் நடந்த இகக மாலெ 10ஆவது மாநில
மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில கமிட்டியின் உறுப்பினர்கள் 
எஸ்.குமாரசாமி (மாநிலச் செயலாளர்)
எஸ்.பாலசுந்தரம்
மஞ்சுளா
எ.எஸ்.குமார்
கோ.ராதாகிருஷ்ணன்
எஸ்.ஜானகிராமன்
த.சங்கரபாண்டியன்
ஜி.ரமேஷ்
அ.சந்திரமோகன்
எஸ்.மோகனசுந்தரம்
ப.ஆசைத்தம்பி
கே.ஜி.தேசிகன்
வி.மூ.வளத்தான்
எஸ்.சேகர்
எஸ்.இரணியப்பன்
கே.பாரதி
எஸ்.ஜவஹர்
எ.கோவிந்தராஜ்
என்.கே.நடராஜன்
கே.பாலசுப்ரமணியன்
ஆர்.தாமோதரன்
எம்.வெங்கடாசலம்
மலர்விழி
எஸ்.இளங்கோவன்
எம்.வெங்கடேசன்
எஸ்.எம்.அந்தோணிமுத்து
மேரி ஸ்டெல்லா
தேன்மொழி
ஆர்.வித்யாசாகர்
கே.பழனிவேல்
ராஜகுரு
தனவேல்
கே.கோவிந்தராஜ்
டி.கன்னையன்
ஆர்.வேல்முருகன்
மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்
பிப்ரவரி 29 அன்று செங்குன்றத்தில் மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டச் செயலா ளர் தோழர் எஸ்.ஜானகிராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இகக (மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் உரையாற்றினர்.
இகக(மாலெ) 10ஆவது மாநில மாநாட்டு விளக்கக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் இகக (மாலெ) 10ஆவது மாநில மாநாட்டு விளக்கக் கூட்டம் தோழர் ராஜ்குமார் தலைமையில் 23.02.2016 அன்று நடைபெற்றது. இன்றைய அரசியல் சூழல், இகக(மாலெ) முன்னுள்ள சவால்கள் பற்றி மாவட்டச் செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ரவிடேனியல் ஆகியோர் உரையாற்றினர்.
தோழர் ஸ்வப்பன் முகர்ஜி ஆற்றிய துவக்க உரையிலிருந்து
நாடு கொந்தளிப்பான நிலையில் இருக்கும் போது நம் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டின் ஜனநாயகமும் அரசியல் அமைப்புச் சட்டமும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிற மோசமான காலத்தில் மாநாடு நடைபெறுகிறது. நாட்டில் போராடுகிற சக்திகளும் ஜனநாயக இயக்கங்க ளும் இன்று நம்மை எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் என்ன நடந்து கொண்டி ருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இடதுசாரிகளில் சக்திவாய்ந்த தளமாக விளங்கும் அந்தப் பல்கலைக் கழகத்தின் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த பாசிச சாதீய அடக்குமுறைக்கு எதிராக டெல்லி மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி நடத்தினர். இன்றும் நம் அகில இந்திய மாணவர் கழகத்தின் தலைவரும் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான தோழர் அசுதோஷ் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆர்எஸ்எஸ்ஸின் பாசிச தாக்குதல் தொடர்கிறபோது நம் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஜேஎன்யு வளாகம் சென்று இன்று உரை நிகழ்த்தவிருக்கிறார். நாடெங்கிலும் ரோஹித் வேமுலாவின் மரணத் திற்கு நீதி கேட்டு, பெருந்தொழில் குழுமத் தாக்குதலுக்கு எதிராக பிரிக்காலில், மாருதியில், ஹ÷ண்டாயில் என்று போராட்ட எழுச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்னும் ஆகப் பெரிய போராட்டங்களை இந்த நாடு சந்திக்கத்தான் போகிறது. அப்போராட்டங் களுக்கு இடது திசை வழி கொடுக்கவும் இடதுசாரி அழுத்தம் கொடுக்கவும் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாமும் தயாராகி வருகிறோம். பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது தாக்குலைத் தொடுத்தது; இன்னொருபுறம் அரசு நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் தாக்குதலைத் தொடுக்கிறது. நமது சக்திவாய்ந்த இயக்கம் மூலம் அதை சந்தித்து வருகிறோம். தமிழகத்தின் ஒடுக்கு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு, திமுக -காங்கிரஸ் கூட்டணி மாற்றாக அமைய முடியாது. நாம் நமது போராட்ட இயக்கம் மூலம் சக்தி வாய்ந்த மாற்றாக உருப்பெற வேண்டும்.
தோழர் பாலசுந்தரம் ஆற்றிய தொகுப்புரையிலிருந்து
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி, ரோஹித் வேமுலா மரணம், ஜேஎன்யு பல்கலைக் கழகத் தாக்குதல், தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்று மக்கள் மீது ஒரு சிவில் யுத்தம் தொடுக்கப்பட்டிருப்பது போன்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தக் கொந்தளிப்பான சூழலில் நாம் ஆற்ற வேண்டிய கடமை ஆகக் கூடுதலாக இருக்கிறது.
டெல்லியில் இருந்து தொழிலாளர் போராட்டம் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக மாணவர்கள் கோவை வந்திருந்தனர். இது தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தோடு அகில இந்திய மாணவர் கழகம் இணைய வேண்டும் என்ற அரசியல் வழியின் வெளிப்பாடு.
திருவள்ளூர் மாவட்டத்தின் அமைப்பு பலத்தை, ஒரே ஊராட்சியில் மட்டும் ரூ. 1 லட்சம் நிதி திரட்டியிருப்பதை மாநாட்டு உணர்வாக எடுத்துக் கொள்ளலாம்.
கட்சியின் வளர்ச்சிக்கு உள்ளூர் மட்டச் செயலூக்கம், கட்சிக் கிளைச் செயல்பாடு, சமூக அடையாளத்தோடு கூடிய இயக்கமாக முன்வருவது ஆகியவை கேந்திரமான விசயங்களாகும். தேர்தல் போராட்டத்திலும் இவை முக்கிய பங்காற்றும்.
ஒரு கட்சி ஊழியர் தாம் வேலை செய்யும் வெகுஜன அமைப்பில் இருந்து கட்சியைப் பார்ப்பதற்கு மாறாக, கட்சியில் இருந்து வெகுஜன அமைப்பைப் பார்ப்பது என்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். 
புதிய மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆற்றிய உரையிலிருந்து.....
புரட்சிகர கட்சியான இகக(மாலெ)வுக்கு இன்று தொழில்முறைப் புரட்சியாளர்கள் தேவை. எமக்குத் தொழில் கவிதை என்றான் பாரதி. எமக்குத் தொழில் புரட்சி என்று சொல்லி வர வேண்டும். எப்போதுமே புரட்சிகர உணர்வு நிரந்தர வைப்புநிதி போல் இருக்காது. எனக்கு 10 வருடம், 15 வருடம் அல்லது 25 வருடம் சர்வீஸ் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கட்சிக்குள் முரண்பாடு இருக்கும். மாற்றுக் கருத்துகள் இருக்கும். சகித்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் இது மிக மிக இயல்பானது.
சில பாரம்பரிய விசயங்கள் இப்போதும் பொருத்தமுடையவையே. 1848 கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்லப்பட்ட உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் முழக்கம் இன்றும் பொருத்தப்பாடு உடையதே. வருகிற மார்ச் 13 தோழர் திபங்கர் கலந்து கொள்ளும் கோவை பிரிக்கால் தொழிலாளர் 10ஆம் ஆண்டு நிகழ்வில் தமிழகத் தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கை சாசனம் வெளியிடப்படும்.
தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளை பொதுப் பயன்பாட்டுச் சேவையாக அறிவித்து தமிழக அரசு மீண்டும் அரசாணை போடுகிறது. இதை மக்கள் நலக் கூட்டணி கேள்வி கேட்பதில்லை. நாம்தான் எதிர்த்துப் போராட வேண்டும். தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டம் நவதாராளவாத நிகழ்ச்சிநிரலுக்கு எதிரான முக்கியமான போராட்டம். புதிய பென்சன் திட்ட எதிர்ப்பு, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுபவர் நிரந்தரம் போன்ற கேந்திரமான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டம் திடீரென முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஊழியர்கள் போராட்டத்தை இன்னும் நீடித்திருக்கலாமே, ஏதாவது பொருளுள்ள முடிவுகளை, வாக்குறுதிகளை பெற்றிருக்கலாமே எனக் கருதியபோதிலும், போராட்டம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது.
நம் கட்சி அவ்வப்போது விடுக்கும் அறை கூவல்கள் மிகவும் பொருத்தப்பாடு உடையவை. இப்போதைய அறைகூவலான, தருணத்தைக் கைப்பற்றுவோம், கட்சியை விரிவுபடுத்துவோம், கம்யூனிச இயக்கத்தை பலப்படுத்துவோம் என்பதை உணர்வுபூர்வமாக எடுத்துச் செல்ல உறுதியேற்போம். 
கண்ஹையா குமாரை விடுதலை செய்!
மாணவர்கள் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு!
மாணவர்களின் போராடும் உரிமையை, ஜேஎன்யுவை காப்போம்!
6 இடதுசாரி கட்சிகள் கூட்டாக, வெளியிட்ட அழைப்பை ஏற்று பிப்ரவரி 23 அன்று சென்னையில் கூட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் இராமகிருஷ்ணன், இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் ரெங்கசாமி ஆகியோர் உரையாற்றினர். 
ஜேஎன்யு காப்போம் ஜனநாயகம் காப்போம்
பிப்ரவரி 23 அன்று ரோஹித் வேமுலா மரணத்திற்கு நீதி கேட்டும், சாதிவெறி, மதவெறி சக்திகளை முறியடிப்போம் ஜேஎன்யு காப்போம் ஜனநாயகம் காப்போம் எனும் முழக்கங்களுடனும் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தில் இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் நடராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம் ஆகியோருடன் தோழர்கள் சாமிநாதன், ஜெயப்பிரகாஷ்நாராயணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும், தனியார் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகளின் மரணத்திற்கு நீதி கேட்டும் அகில இந்திய மாணவர் கழகம் மற்றும் புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோழர் வெற்றிவேலன் தலைமை வகித்தார். கூட்டத்தில் புஇக மாநில செயலாளர் தனவேல், அஇமாக மாநிலக் குழு உறுப்பினர் அருண், அஇவிகிதொச மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் கணேசன், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரை நிகழ்த்தினர்.
கோவை செய்திகள்
அரசு ஊழியர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
கோவை பிரிக்கால் பிளாண்ட் 1 மற்றும் பிளாண்ட் 3ல் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆலை வாயிலில் பிப்ரவரி 15 அன்று பிரிக்கால் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட வேண்டும், தொகுப்பூதியம், கவுரவ ஊதியம், பெற்றுவரும் ஊழியர்கள் உட்பட பணி நிரந்தரம் செய்யப்படாத அனைவரையும் பணி வரன்முறை செய்து, பணி நிரந்தரப்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் அரசு ஊழியர்களுக்கு ஏஅய்சிசிடியு ஆதரவினை தெரிவித்தது. போராடும் ஊழியர் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தமிழக அரசை வலியுறுத்தினர். பிளாண்ட் 1ல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரிக்கால் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். பிளாண்ட் 3ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிரிக்கால் சங்க நிர்வாகி தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் தலைமை வகித்தார். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைப் பாதுகாப்போம்! 
ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்.!
கோவை பிரிக்கால், சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் அதன் மாணவர் சங்கத் தலைவர் கண்ஹையா குமார் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாணவர் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் மீது தேசத் துரோக குற்றம் சுமத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருக்கும் சூழலில், மாணவர் தலைவரை விடுதலை செய், தேடுதல் வேட்டையை நிறுத்து என்ற முழக்கங்களுடனும் காவிப் பாசிச, சாதிவெறி மதவெறி சக்திகளுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பிப்ரவரி 17 அன்று பிரிக்கால் பிளாண்ட் 1 ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிளாண்ட் 3 தொழிலாளர்களும் இதில் கலந்து கொண்டனர். ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி, மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
17.02.2016 அன்று சாந்தி கியர்ஸ் ஆலை வாயிலில் சாந்தி கியர்ஸ் தொழிற்சங்க பொதுச் செயலாளர் தோழர் பாலமுருகன் தலைமையில் ஜேஎன்யுவைக் காப்போம், ஜனநாயகம் காப்போம் இயக்கத்தின் பகுதியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் கழகத்தின் புதிய கிளை துவக்கம்
18.02.2016 அன்று கோவை, பூசாரிபாளையம், டேங்க்பெட் பகுதியிலுள்ள அருந்ததியர் குடியிருப்பில் உழைக்கும் மக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் இகக( மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் என்.கே.நடராஜன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆண்களும் பெண்களுமாக 80 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் 13 பேர் கொண்ட புரட்சிகர இளைஞர் கழக கிளை கமிட்டி உருவாக்கப்பட்டது. பகுதியின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் சாலை வசதி கோரிக்கைகளுடன் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஏஅய்கேஎம் எதிர்ப்பு
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் முதல் அரூர் வரையிலான நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய, (மாநில சாலை விரிவாக்கத் திட்டம் 2 அடிப்படையில், குடியிருப்புப் பகுதியில் 30 மீட்டரும், விவசாய நிலம் உள்ள பகுதியில் 45 மீட்டரும் எடுப்பது), விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்கான, கருத்துக் கேட்புக் கூட்டம் பிப்ரவரி 23 அன்று குப்பனூர் ஊராட்சி சமூக கூடத்தில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், அரசு அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில், வி.அய்யந்துரை தலைமையில் 60 பேர் பங்கேற்றனர். நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிலம் வழங்க விரும்பவில்லை என அனைவரும் எழுத்துபூர்வமான கடிதங்கள் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரணம் கேட்டுப் போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம் சேந்தநாடு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணம் கேட்டு சங்கு ஊதி மேளம் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சட்டமன்ற உறுப்பினர் மோகன் உட்பட அரசாங்கக் குழுவினர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதன் பிறகு அரசாங்கம் நிவாரண நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. இதைக் கண்டித்து அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தோழர் ஏழுமலை தலைமையில் 15.02.2016 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கு ஊதி மேளம் அடிக்க காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் அளித்தார். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்.
16.02.2016 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் செண்பகவள்ளி தலைமை தாங்கினார். ஆற்று மணல் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும். முதியோர் ஓய்வூதியத் திட்டத்திலுள்ள முறைகேடுகள் களையப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஏற்காடு கோவிலூர் மலை கிராமத்திற்கு தார்ச்சாலை, குடிநீர், 
மருத்துவ வசதி கோரி ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாயிகள் மகாசபை (ஏஅய்கேஎம்) சார்பில், ஏற்காடு அண்ணாசிலை (லேக்) அருகில் 17.02.2016 காலை 11 மணி முதல் மதியம் 12.45 வரை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பாளர் சி.கோபி தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் மேடை பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் கோ.மோகனசுந்தரம், ஏஅய்கேஎம் செயலாளர் வி.அய்யந்துரை, அருநூற்றுமலை முன்னாள் தலைவர் கே.சண்முகம், இகக மாலெ பூவனூர் கிளைச் செயலாளர் வரதராஜ÷, ஏஅய்பிஎஃப்பின் அறிவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
1. வனத்துறை அனுமதியளித்தும், நிறைவேற்றப்படாத கூத்து முத்தல் முதல் கோவிலூர் வரை 6 கி.மீ. தார்ச்சாலையை உடனே அமைத்தல், கோவிலூர் முதல் கொம்புத்தூக்கி வரை தார்ச்சாலை அமைத்தல்.
2. கோவிலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், கர்ப்பிணிப் பெண்களின் இறப்பைத் தடுத்தல்.
3. கோவிலூரில் கட்டப்பட்டு 11 ஆண்டுகளாகியும் தண்ணீர் அளிக்கப்படாத மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர் வழங்குதல்.
தோழர் சீதாவும் காம்ரேட் ஷெஹ்லாவும்
இன்னுமொரு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை போராட்டக் களங்களில் இருக்கிற பெண்கள் அனுசரிக்கவுள்ள நேரத்தில் அகில இந்திய மாணவர் கழக தமிழக மாநிலச் செயலாளர் தோழர் சீதாவும் ஜேஎன்யு மாணவர் சங்க துணைத் தலைவர் தோழர் ஷெஹ்லாவும் அவர்கள் போராட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். ஜேஎன்யுவில் சங் பரிவார் நடத்தும் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக போராட்டக் களத்தில் முன்னணியில் இருக்கிற இந்தத் தோழர்கள் பற்றி 20.02.2016 தேதிய தினகரன் நாளேட்டிலும் (தோழர் சீதா பற்றி) 26.02.2016 தேதிய தி இந்து தமிழ் நாளேட்டிலும் (தோழர் ஷெஹ்லா பற்றி) வந்த செய்திகள் இங்கு தரப்படுகின்றன.
காம்ரேட் ஷெஹ்லா
“எதிலிருந்து விடுதலை வேண்டும், எப்படிப்பட்ட விடுதலை வேண்டுமென்று ஆட்சியாளர்களும் வலதுசாரி அமைப்புகளும் கேட்கின்றன. சுதந்திரம் என்றால் என்ன என்று இப்போது வரையறுப்போம். உலக வர்த்தக நிறுவனம், சாதியம், ஒடுக்குமுறை சட்டங்களில் இருந்து ஒட்டுமொத்த தேசத்துக்கும் விடுதலை வேண்டும்”. நறுக்கு தெறிப்பதுபோல வந்து விழும் அவருடைய ஒவ்வொரு வாக்கியத்துக்கும், மாணவர் கூட்டம் கரகோஷம் எழுப்புகிறது.
காதலர் தினத்தன்று நடைபெற்ற போராட்டம் அதைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில் அழுத்தம் திருத்தமாக அந்தப் பெண் முன்வைத்த வாதங்களை பேச்சைக் கேட்கவும் இணைந்து போராடவும் 5000, 10,000 பேர் திரண்டார்கள். உலக ஊடகங்களில் அது செய்தியானது. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் தத்துபித்து உளறல், ஜல்லியடித்தலுக்கு இடையில் தெளிவான அரசியலை முன்வைத்துப் பேசும் அவருடைய வீடியோ பதிவுகள் பிப்ரவரி14 இரவுக்குப் பிறகு தீயைப் போலப் பரவ ஆரம்பித்தன. நாட்டு மக்களுக்காகவும், பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுக்கும் அவருடைய பேச்சு, காதலர் தினத்தை ஒட்டி அதிக அளவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது ஓர் ஆச்சரிய முரண்.
பொறி பறக்கும் மலர்
சக மாணவ, மாணவிகளால் ‘காம்ரேட்’ (தோழர்) என்று அழைக்கப்படும் ஷெஹ்லா ரஷித் ஷோராதான் அந்தப் பெண். ஷெஹ்லா என்றால் மலர் என்று அர்த்தம். ஆனால், பேச்சில் பொறி பறக்கிறது. அவருக்குள் கனன்று கொண்டிருந்த ஆக்ரோஷமான சமூகச் செயல்பாட்டாளரைக் கண்டுபிடித்தது. நாட்டின் முதன்மை சிந்தனை மையங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்தான்.
“ஜேஎன்யுவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களும் எனக்குக் கிடைத்த அரசியல் பயிற்சியும், இந்த நாட்டில் மிகவும் எளிதில் பாதிக்கப்படச் சாத்தியமுள்ள கடைக்கோடி மனிதனுக்காகவும் நான் குரல் கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்துள்ளன. சமூகத்தைத் தொந்தரவுக்கு உள்ளாக்கக் கூடிய, சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளன.” என்கிறார் ஷெஹ்லா.
முதல் காஷ்மீரி
தேசத்துக்கு எதிரான கோஷங்கள், காஷ்மீர் விடுதலை தொடர்பான குரல்கள்தான். ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரின் கைதுக்குக் காரணமாகக் கூறப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டு எவ்வளவு போலியானது என்பதைப் போட்டு உடைத்து, மத்திய அரசையும் ஜேஎன்யு நிர்வாகத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு விமர்சித்து வருகிறார் ஷெஹ்லா. கன்னையா குமாருக்கு அடுத்த நிலையில் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் ஷெஹ்லாவின் கலகக்குரல், இன்றைக்கு அந்த வளாகத்தையும் தாண்டி, உரக்க ஒலித்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் போட்டி யிட்ட முதல் காஷ்மீரி மாணவி ஷெஹ்லா. அதில் ‘அகில இந்திய மாணவர் சங்கம்’ அஐநஅ எனப்படும் இடதுசாரி மாணவர் அமைப்பின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி யிட்டு அந்தத் தேர்தலிலேயே அதிக வாக்குகளை (1,387) பெற்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கார்ப்பரேட் உலகில் இருந்து
கடந்த 20 ஆண்டுகளாகக் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் தலைநகரம் நகரில் உள்ள ஹப்பா கதல் பகுதியைச் சேர்ந்தவர் ஷெஹ்லா. அவருடைய அம்மா, நகர் எஸ்.கே. மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் செவிலியர். அரசியல் பின்புலமில்லாத நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஷெஹ்லா, நகரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.அய்.டி) கணினி பொறியியலும் பிறகு பெங்களூரு அய்அய்எம்மிலும் படித்தார்.
படித்து முடித்தவுடன் கார்ப்பரேட் உலகில் நுழைந்தார். ஆனால், அந்த மாய உலகத்தின் கற்பனைகள் விரைவில் உடைந்து நொறுங்க, சமூகச் செயல்பாட்டாளராக மாறினார். காஷ்மீரில் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகளுக்காகவும், இளம் பெண்களைக் குறிவைக்கும் அமில வீச்சு தாக்குதல்களுக்கு எதிராகவும் சின்ன வயதிலேயே போராடியவர். காஷ்மீரில் அரசியல் செயல்பாடுகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கவே ஜேஎன்யுவில் சட்டம் மற்றும் அரசாட்சிப் பிரிவில் எம்ஃபில், ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். பெண் உரிமைகள், சுதந்திரமான பேச்சுரிமை, மனித உரிமை சார்ந்து தொடர்ந்து செயல்பட்டுவந்துள்ளார்.
போராட்டம் ஓயாது
“ஜேஎன்யுவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம், மத்தியிலுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஒடுக்குமுறை கொள்கைகளுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தின் ஒரு பகுதிதான். நாட்டை வலதுசாரி கொள்கைகள் ஆக்கிரமித்துவரும் நிலையில், உண்மையான வரலாற்றை அவர்கள் மறைப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதற் காகவே போராடி வருகிறோம். நாட்டின் உயர்கல்வியைக் கைப்பற்றக் காத்துக் கொண்டிருக்கும் தாராளமயக் கொள்கைகளையும், மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் பாஜக அரசையும் விமர்சித்தால், மாணவர் உரிமைகளை வலியுறுத் தினால், தேச விரோதம் என்று பிடித்துச் சிறையில் தள்ளுகிறது அரசு. அவர்கள் கடைப்பிடித்து வரும் வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைப் பழிவாங்கும் இந்த அரசியல் வேட்டையாடல் முடியும் வரை, எங்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.” என்கிறார் ஷெஹ்லா.
இந்த ஜம்மு எக்ஸ்பிரûஸ தடுத்து நிறுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

Search