COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, April 4, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 17 2016 ஏப்ரல் 01 – 15

தலையங்கம்
வளர்ச்சி சிறந்த தமிழ்நாட்டில்
உழைப்புடன் சேர்த்து கவுரவத்தையும் பறிகொடுக்கும் இளைஞர்கள்
புதிய சிந்தனைகள், புதிய சாத்தியப்பாடுகள் என்பது ஹ÷ண்டாய் இந்தியா நிறுவனத்தின் முழக்கம். அதன் விளக்கம் பின்வருமாறு: புதிய சிந்தனைகள் என்றால் பழைமையை சவாலுக்கு உட்படுத்தி எல்லைகளை விரிவுபடுத்துவது. புதிய சாத்தியப்பாடுகள் என்றால், கருத்துக்கள், தீர்வுகளில் முன்னோக்கிய சிந்தனை. (பொடலங்கா...)

ஹுண்டாய் இந்தியா நிறுவனம், இந்த ஆண்டு துவங்கி பிப்ரவரி 22 வரை தனது வாகனங்களுக்காக, வெவ்வேறு பிரிவுகளில் 16 விருதுகள் வாங்கியுள்ளது.
ஹுண்டாயின் சென்னை ஆலை, முன்னேறிய உற்பத்தி, தரம், பரிசோதனை ஆற்றல்களுக்கு பெயர் பெற்றது என்று நிறுவனத்தின் இணையதளம் சொல்கிறது.
ஹுண்டாய் நிறுவனம் தன்னைப் பற்றிச் சொல்லும் இந்த அலங்கார வாசகங்கள், அதன் உண்மை முகத்தை மறைக்க நிச்சயம் போதுமானவையல்ல. புதிய சிந்தனையை தனது முழக்க மாகக் கொண்டிருக்கும் நிறுவனம் தனது தொழிலாளர்களை, குறிப்பாக, பயிற்சியாளர்களை நடத்துவதில் 19ஆம் நூற்றாண்டு நடைமுறைகளையே இன்னும் கையாள்கிறது. என்விஎச் நிறுவனத்தின் கொரிய அதிகாரி தொழிலாளி ஒருவரை தனது கால்களுக்கு இடையில் பிடித்து வைத்திருந்த நிழற்படம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி பற்றி பல உண்மைச் செய்திகளை உலகுக்குச் சொன்னது. இப்போது வெளியாகியுள்ள ஹ÷ண்டாய் நிறுவன பயிற்சித் தொழிலாளர் சிலரது நிழற்படங்கள் அந்த வளர்ச்சியின் பலிபீடத்தில் தங்கள் கவுரவத்தை பறிகொடுக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பற்றிச் செய்திகள் பல சொல்கின்றன.
அந்தத் தொழிலாளர்களை ஓர் அதிகாரி கெட்ட வார்த்தைகளில் திட்டியதும், மிகவும் தரக்குறைவாக நடத்தியதும் ஹ÷ண்டாய் தொழிலாளர் மத்தியில் வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் வெளியிடப்பட்டுள்ளன. புதிய சிந்தனை பற்றி பேசும் நிறுவனத்தின் அதிகாரி என்ன பேசுகிறார் என்பதற்கு அந்த வாட்ஸ்அப், பேஸ்புக் செய்திகளில் இருந்து சில மாதிரிகள் இங்கு தரப்படுகின்றன.
பட்டயப் படிப்பு முடித்துவிட்டு பயிற்சியாளராக வேலைக்கு வந்திருக்கும் அந்த இளம் தொழிலாளர்களைப் பார்த்து அந்த அதிகாரி சொல்கிறார்: டேய் தே... பசங்களா... போய் குப்பையை எல்லாம் கிளீன் செய்ங்கடா...
அப்பரண்டீஸ் பயிற்சியாளர்கள்: ?????
அதிகாரி: டேய் தே... பசங்களா... என்னடா பாக்குறீங்க... உங்களாலதான் நான் ட்ரெய்னிங் சென்டருக்கு வந்தேன்....
அப்பரண்டீஸ் பயிற்சியாளர்கள்: ?????
அதிகாரி: டேய் தே... பசங்களா... கிளீன் பண்ணும்போது எதுக்குடா சட்டை... அத கழட்டிப் போட்டுட்டு வேலை செய்ங்கடா... எருமை மாடுங்களுக்கு எதுக்குடா சட்டை...?
அப்பரண்டீஸ் பயிற்சியாளர்கள்: சார்.. தாகம் எடுக்குது.. தண்ணி குடிக்கணும்
அதிகாரி: டேய் தே... பசங்களா... தாகம் எடுத்தா என் மூத்திரத்த குடிங்கடா... தே... பசங்களா... (தனது பேண்ட் ஜிப்பைக் காட்டுகிறார்).
உணவு இடைவேளையில் வெளியே செல்லவிடாமல் அவர்களை அடைத்து வைத்திருக்கிறார். அவர்களுக்கு வந்த தேநீரை, அவருக்கு கீழ் பணி புரியும் அதிகாரிகள் சொல்லியும், தொழிலாளர்கள் அருந்த விடாமல் செய்திருக்கிறார்.
அந்த அதிகாரி பெயர் தேவராஜ்குமார் என்று அந்தச் செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது. இந்தச் செய்திகளுக்கு அந்த அதிகாரியோ, நிறுவனமோ மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. இவையெல்லாம் நடந்தது பகத்சிங் நினைவு தினமான மார்ச் 23 அன்று. தமிழக இளைஞர்களுக்கு என்ன ஒரு மரியாதையான, கவுரவமான சூழலை, நாடு போற்றும் தனது ஆட்சியில் ஜெயலலிதா உருவாக்கியிருக்கிறார்?
நிறுவனத்தில் என்ஜின் மூன்றாவது பிரிவில் ஒரு வேலை நேரம் (ஷிப்ட்) மூடப்படுகிறது. மூடப்படும் ஷிப்டில் இருந்த பயிற்சித் தொழிலாளர்கள் பயிற்சி என்ற பெயரில் பயிற்சி மய்யத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அந்த பயிற்சி மய்யத்தில், அந்த என்ஜின் பிரிவில் ஏற்கனவே வேலை பார்த்து, அங்கு தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்தியதால் பயிற்சி மய்யத்துக்கு மாற்றப்பட்ட தேவராஜ்குமார் பொறுப்பாளராய் இருக்கிறார். பழி தீர்த்துக் கொள்கிறார்.
நிரந்தரத் தொழிலாளி ஒருவர், பயிற்சித் தொழிலாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து விசாரித்தபோது, அந்தத் தொழிலாளர்கள் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர் பேச வேண்டிய அதிகாரிகளிடம் பேசி அந்தத் தொழிலாளர்கள் உடனடியாக ஆலைக்குள் வர ஆவன செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்ன அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறிது நேரத்தில் பாதிக்கப்பட்ட பயிற்சித் தொழிலாளர்கள் அந்த நிரந்தரத் தொழிலாளியை தொலைபேசியில் அழைத்து அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்ல, அவர் நீங்கள் நேரே ஆலைக்குள் வந்துவிடுங்கள், என்ன நடக்கிறதோ பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்ல, அந்த பயிற்சித் தொழிலாளர்கள் தாங்களாக ஆலைக்குள் வந்திருக்கின்றனர்.
ஹ÷ண்டாய் நிறுவனத்தில் பயிற்சித் தொழிலாளர்கள் இப்படித்தான் தரக்குறைவாக நடத்தப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கவுரவம் அன்றாடம் காயப்படுத்தப்படுகிறது என்றும் இது வெளியில் வந்தது, வெளியில் வராதது அதிகம் என்றும், சான்றாக பல சம்பவங்களையும் ஹ÷ண்டாய் தொழிலாளர்கள் சொல்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம், இளைஞர்கள் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு என்றெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் கூக்குரல்கள் நிறைந்திருந்தன. பொறியியல் பட்டயப் படிப்பு படித்துமுடித்துவிட்டு நீ ஒரு நாள் பன்னாட்டு நிறுவனத்தில் டெக்னீசியனாவாய் என்று சொல்லப்பட்டு, திடீரென்று ஒரு நாள் தரை துடைக்கும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் தமிழக இளைஞர்கள், பாரம்பரியம், வீரம் என்று சொல்லப்படுவதற்கு சம்பந்தமில்லாதவர்கள். அவர்களுக்கு எஞ்சியது அவமானமும் அதிலிருந்து கசியும் கண்ணீரும்தான். புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக இளைஞர்களின் மலிவு உழைப்போடு சேர்த்து அவர்கள் கவுரவத்தையும் அடகு வைத்துவிடுகிறது அரசு.
ஜெயலலிதாவின் 2023 தொலைநோக்குத் திட்டமும் மோடியின் மேக் இன் இந்தியாவும் சேர்ந்து நிறைவேறினால், தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடந்து கொண்டிருக்கும் தற்கொலைகள், ஆலைகளுக்குள்ளும் நீளும் சாத்தியப்பாடுகளை, ஹ÷ண்டாய் ஆலை பயிற்சித் தொழிலாளர் நிலைமைகள் காட்டுகின்றன.
ஹுண்டாயில் துப்புரவு வேலைக்கு பயிற்சியாளர்கள் தேவை, கல்வித் தகுதி பொறியியல் பட்டயம் என்று இந்த மொத்த வெட்கக்கேட்டையும் ஹ÷ண்டாய் தொழிலாளர்களும் மற்றவர்களும் கேலி செய்திருக்கிறார்கள். ஆனால், ஹ÷ண்டாய் நிறுவனத்தை, அதுபோன்ற பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களை அசைக்க முடியுமா? ஹ÷ண்டாய் நிறுவனம் வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.2 கோடி அனைவரும் பார்க்க கொடுத்தது. ஹ÷ண்டாய் பயிற்சித் தொழிலாளர் நிலைமைகள், இன்னும் வேறு வழிகளில் இன்னும் பெரிய தொகை கை மாறியிருக்கலாம் என்ற அய்யத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அய்யம் உண்மையாக இருக்கக் கூடும் என்றும் அஇஅதிமுககாரர்களே அறிவிப்பு செய்கிறார்கள்.
அஇஅதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன. உலகம் போற்றும் உன்னத ஆட்சி அம்மா ஆட்சி என்று அஇஅதிமுககாரர்கள் சொன்னார்கள். இப்போது, அய்ந்து மூத்த அமைச்சர்களிடமிருந்து மட்டும் ரூ.30,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கருணாநிதியும் ராமதாசும் சொல்கிறார்கள். அந்த அமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைத்தது, அவர்கள் பண்ணை வீடுகளை சோதனை செய்தது, அந்த வீடுகளில் இருந்து மூட்டைமூட்டையாக பணம் பறிமுதல் செய்தது எல்லாம் அதிகார பூர்வமாக நடக்கவில்லை, அஇஅதிமுகவினரே நடத்தினார்கள் என்று செய்திகள் சொல்கின்றன. அய்ந்தாண்டு காலமும் அமைச்சர்கள் தமிழ்நாட்டில் விதவிதமாக வேட்டை நடத்தியதை அதிமுகவினரே அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.
அய்ந்து அமைச்சர்களிடம் மட்டும் இந்த அளவுக்குப் பணம் என்றால், ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரிடம் எவ்வளவு இருக்கும்? மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்கள், இன்னும் வட்டம், மாவட்டம், கவுன்சிலர் என இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகள்? எல்லாம் வெறும் அய்ந்து ஆண்டுகளில் எப்படிச் சேர்ந்தது? உழைத்துப் பிழைக்கும் தமிழக மக்கள் மொத்தமாக பத்தாயிரம் ரூபாய் பார்த்தால் மூர்ச்சையாகிப் போவார்கள். ஏனென்றால் உழைத்துப் பிழைப்பவர்களுக்கு அது சாத்தியமில்லை. இதை உழைத்துச் சேர்த்திருக்க முடியாது.
அஇஅதிமுகவினர் பறிமுதல் செய்த பண மூட்டைகள் சிலவற்றில் காசாக இருப்பது தமிழ்நாட்டின் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் கவுரவம். அவர்களது கண்ணீர். அவர்களது மலிவு உழைப்பு. அவர்களது பாழாய்ப் போன கனவுகள். அவர்களது எதிர்காலம்.
இன்னும் பல பண மூட்டைகளில் தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் காசாக உருமாறிவிட்டன. மூன்று மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான எஸ்விஎஸ் கல்லூரி தாளாளர் பிணையில் விடுதலையாகிவிட்டார். அந்தக் கல்லூரி போன்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் உயிர்கள் இன்னும் சில மூட்டைகளில் காசாக உள்ளன. ட்ராக்டர் வாங்கிய கடனுக்காக மிரட்டப்பட்ட அழகர் போன்றவர்களின் உயிர்கள் இன்னும் சில மூட்டைகளில் காசாக உள்ளன. டாஸ்மாக் விளைவித்த உயிரிழப்புகள், கந்து வட்டி விளைவித்த உயிரிழப்புகள் எல்லாம் உதிரி, உபரி மூட்டைகள். இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் உயிர்கள் கூட சில மூட்டைகளில் இருக்கலாம். அத்தனை மூட்டைகளிலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்க்கையும் காசாக மாறி, யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டு, புதைக்கப்பட்டு உள்ளது.
அந்த மூட்டைகளை அரசிடம் முறையாக ஒப்படைத்துவிட வேண்டும் என்று கருணாநிதி சொல்கிறார். சரிதான். ஒப்படைத்துவிட வேண்டும்தான். அதனால், தொழிலாளர்கள் இழந்த கவுரவம், கனவு, மாணவர்கள் இழந்த உயிர்கள் எல்லாம் திரும்பக் கிடைக்குமா? ஹ÷ண்டாயில் தொழிலாளர்களை இழிவுபடுத்திய அதிகாரி கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படுவாரா? அந்த அதிகாரியின் அத்துமீறலை அனுமதித்து, வேடிக்கை பார்க்கும் கொரிய முதலாளி இனி நாட்டுக்குள் நுழைய முடியாது என்ற நிலை ஏற்படுமா? நிறுவனம் தொழிலாளர் கைக்கு மாற்றப்பட்டு, அவர்கள் சிந்திய கண்ணீர் துடைக்கப்படுமா?
மூட்டைகளில் இருக்கும் பணத்தை மீட்பதோடு, தமிழக மக்கள் வாழ்வின் அனைத்து தளங் களிலும் நடந்துகொண்டிருக்கும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டுவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மூட்டைகளைச் சேர்த்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது, எந்தவிதமான அத்துமீறல், யார் மீது செலுத்தப்பட்டது என்ற அவர்களது ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அத்து மீறலின் அளவுக்கு ஏற்ப அவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது ஆகியவை முக்கியம்.
அமைச்சர்களின் பண்ணை வீடுகளிலும் தமிழ்நாட்டின் வேறு பல இடங்களிலும் கரன்சி மூட்டைகளுக்குள் முடக்கப்பட்டுக் கிடக்கிற தமிழக மக்களின் நல்வாழ்வும் கவுரவமும் விடுதலை செய்யப்பட வேண்டும். புதிய சிந்தனைகளும் புதிய சாத்தியப்பாடுகளும் ஹ÷ண்டாய் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் வசப்படுபவைதான். அவை அந்தப் பயிற்சித் தொழிலாளர்கள் சிந்திய கண்ணீருக்கு நிச்சயம் கணக்குத் தீர்க்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் தொடரும் விவாதம்
காம்ரேட்
இகக(மாலெ), இகக, இகக(மா), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மற்றும் ஆர்சிபி என்ற மூத்த அசாமிய இடதுசாரி கட்சி ஆகிய 6 இடதுசாரி கட்சிகள் அசாமில் இணைந்து இடதுசாரி அணியாக தேர்தலைச் சந்திக்கிறோம். காங்கி ரஸ், பாஜக, அசாம் கண பரிசத் ஆகிய கட்சிகளுக்கு எதிராக இடதுசாரிகள் மட்டுமே சேர்ந்து களம் காண்கிறோம். பீகார் பரிசோதனையை அசாமிலும் மேற்கொண்டுள்ளோம்.
ஆனால் மேற்கு வங்கத்தில் இகக(மாலெ) இடது முன்னணியோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயார் இல்லை.
1. இகக(மா) சிங்கூர் நந்திகிராம் உள்ளிட்ட விசயங்களில் இன்னமும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை. தமது தோல்விக்கான காரணங்களை, குறிப்பாகத் தனது தவறுகளைப் பார்த்துக் கொள்ள இது வரை தயாராகவில்லை.
2. இகக(மா) காங்கிரசோடு சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. மேற்கூறிய இரண்டு காரணங்களால் நாம் அவர்களிடம் மேற்குவங்கத்தில் முரண்படுகிறோம்.
மேற்குவங்கத்தில் இகக(மாலெ) 36 இடங்களில் போட்டியிடுகிறது. சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) உடன் கிட்டத்தட்ட ஒரு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. நாமோ, நம்மை/நாம் ஆதரிப்பவர்களோ போட்டியிடாத தொகுதிகளில், திரிணாமூல், பாஜக, காங்கிரசை முறியடிக்க அழைப்பு விடுத்துள்ளோம். இடதுசாரி ஜனநாயக சக்திகளை ஆதரிக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
மேற்குவங்கத் தேர்தலில் இகக(மா) எடுத்துள்ள செயல்தந்திர அணுகுமுறை தமிழ்நாட்டில் அவர்கள் மேற்கொண்டுள்ள செயல்தந்திர அணுகுமுறையுடன் நிச்சயம் பொருந்திப் போகிறது. மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை, இகக(மா) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சுகுமார் கோஷ், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அகில் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் பேசியதில் இருந்தே தெரிந்து கொள்வோம்.
தி இந்து தமிழ் நாளேடு 29.03.2016 அன்று சமஸ், சீத்தாராம் யெச்சூரியைப் பேட்டி கண்டதை இரண்டாம் நாளாகப் பிரசுரித்தது.
சமஸ் கேள்வி: ஆனால் இப்போது வங்கத்தில் காங்கிரசுடன் இணைந்துதானே தேர்தலை எதிர்கொள்கிறீர்கள்?
தோழர் சீத்தாராம் யெச்சூரியின் பதில்: யார் சொன்னது, அப்படி எதுவுமே இல்லை!
கேள்வி: அதிகாரபூர்வமற்ற முறையில்..... உங்கள் மொழியில் ‘அண்டர்ஸ்டேண்டிங்.....’ மமதா இதைக் கள்ளக் கூட்டு என்கிறாரே?
பதில்: ....ஒவ்வொரு தொகுயிலும் யாருக்கு ஓட்டு போட்டால் திரிணாமூல் வீட்டுக்கு அனுப்பப்படுமோ, மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரை காங்கிரசுடன் உடன்பாடோ கூட்ட ணியோ நாங்கள் மேற்கெள்ளவில்லை. ஆனால் மக்கள் உணர்வு அப்படி இருக்கிறது. இதை எதிர்கொள்ள முடியாத மமதா எங்கள் மீது சேற்றை வாறி இறைக்கிறார்.
மேற்கு வங்கம் வடக்கு 24 பர்கானாவில் உள்ள தொகுதி பாராநகர். 1951 முதல் 2011 வரை, இது, இடதுசாரிகள் வெற்றி பெற்ற தொகுதி. தோழர் ஜோதிபாசு 1951 முதல் 1971 வரை வென்ற தொகுதி. 2011ல் முதல் முறையாக திரிணாமூல் இந்தத் தொகுதியை இடது சாரிகளிடமிருந்து கைப்பற்றியது. இங்கே போட்டியிடுகிற புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சுகுமார் கோஷின் பேட்டி, தோழர் சீத்தாராம் யெச்சூரி பேட்டி வெளி வந்த அதே நாள் அதே பத்திரிகையில் வந்துள்ளது. அவர் சொல்கிறார்: ‘வரலாற்றிலேயே முதன்முறையாக இடதுசாரிகள் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகிறோம். எங்கள் கூட்டணியில் 22 இடங்களில் மட்டுமே பிரச்சனை உள்ளது. இதில் 5 இடங்களில் மட்டுமே புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியுடன் பிரச்சனை உள்ளது. இதில் 5 தொகுதிகள் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளன. இந்தப் பிரச்சனையை இன்னும் ஒரு வாரத்தில் பேசித் தீர்த்துக் கொள்வோம்.’
15.04.2016 தேதியிட்ட ஃபிரண்ட்லைனில் மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அகில் ரஞ்சன் சவுத்ரி, தற்போதைய ஆட்சி நீடித்தால், வங்க மண்ணில் எதிர்க்கட்சி எதுவும் இல்லாமல் அழித்தொழிக்கப்படும். அதனால்தான் இந்த அட்டூழியங்களுக்கு ஊற்றுக்கண்ணான திரிணாமூல் ஆட்சியை அகற்ற காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரி கட்சித் தொண்டர்கள் இந்த கூட்டணியை வேறு வழியின்றி அமைத்துள்ளனர் என்று சொல்லியுள்ளார்.
கூட்டணியே இல்லை, தொண்டர்கள் அமைத்த கூட்டணி, மக்கள் விருப்பக் கூட்டணி என்ற விவகாரங்கள் ஒருபடி தாண்டிச் சென்றுவிட்டது போல் 31.03.2016 தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி சொல்கிறது: ‘பர்த்வான் மாவட்டம் துர்காபூர் மற்றும் குல்டியில், ராகுல் காந்தி ஏப்ரல் 2 அன்று பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். எங்கள் தலைமை கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளது. முன்னாள் எம்பி பாங்க்சோ கோபால் சவுத்ரி துர்காபூர் தொழில் பகுதியின் எங்கள் நான்கு வேட்பாளர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருப்பார்கள். கூட்டத்தில், எமது கட்சித் தொண்டர்கள் கொடிகளுடன் கலந்து கொள்வார்கள்’. இவ்வாறாக சிபிஎம் தலைவர் ராபின் தேப் சொன்னதாக அந்தச் செய்தி சொல்கிறது.
தோழர் சீத்தாராம் யெச்சூரி நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தோழர். கூட்டணியே இல்லை என அவர் பதறிப் போய்ச் சொல்லும் நிலையில், மேற்குவங்கத்தில் அவர்களது ‘கூட்டணி’ அரசியல் தந்திரம் அமைந்துள்ளது. மக்கள் பெயரால், தொண்டர்கள் பெயரால், காங்கிரசுடனான உறவை இகக(மா) நியாயப்படுத்த முடியாது. இந்த, வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத உடன்பாட்டால், தேர்தல்ரீதியான ஆதாயம் கூட, கூடுதலாக காங்கிரசுக்கு கிடைக்கவே வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் வாக்குகளில் ஏறத்தாழ 30% மால்டா, முர்ஷிதாபாத், ஜல்பைகுரி மாவட்டங்களில் உள்ளது. மீதி இடங்களில் காங்கிரஸ் செல்வாக்கு சிதறியும் அரித்து போயும் உள்ளது. தொண்டர்களைக் களம் இறக்க இந்த உடன்பாட்டை முன்நிறுத்த வேண்டிய ஒரு தேவை இகக(மா)வுக்கு உள்ளது. மீண்டும் அதிகாரம் என எண்ண வைக்கவும், இந்த உடன்பாடு தேவைப்படுகிறது.
இகக(மா)வுக்கு மேற்குவங்கத்தில் காங்கிரசுடனான உறவு வரலாற்றுப் பின்னடைவே ஆகும். தன் சொந்தக் காலில் சந்திக்க முடியாத அளவுக்கு திரிணாமூல் பலமாக இருப்பதாகவும், இடதுசாரிகள் பலவீனமாக இருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் தருவது போலவே இந்த உடன்பாடு அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரசோடு உடன்பாடில்லாமல் தேர்தலைச் சந்தித்திருந்தால், உடனடி விளைவாய் தோல்வி வந்தாலும் வருங்கால வெற்றிக்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. இகக (மா) அரசியல் செயல்தந்திரம், சுதந்திர இடதுசாரி அரசியல் வளர்ச்சியை முடக்கும் செயல்தந்திரம்.
தமிழ்நாடு தொடர்பான இககமா நிலைப்பாடும் கவனிக்கத்தக்கதாகும். தோழர் சீத்தாராம் யெச்சூரியை சமஸ் நேர்காணல் செய்ததை திரும்பவும் பார்ப்போம்.
கேள்வி: சரி. தமிழக நிலவரத்துக்கு வருவோம். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றாக, விஜயகாந்த்தை முன்னிறுத்தியிருக்கிறீர்கள். எந்த வகையில் அவர் இவர்களுக்கான மாற்று?
பதில்: துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலானது யாரை வெளியே அனுப்ப வேண்டும், யார் வந்துவிடக் கூடாது என்பதையே கொண்டு இயங்குவதாக மாறி விட்டது. தமிழகத்தில் இன்றைக்கு பெரும்பான்மை மக்களின் எண்ணம் என்ன? கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். இடதுசாரிகளுக்கு இங்கு போதிய பலம் இல்லாத சூழலில், இந்தப் பொது எதிரியை மய்யமாகக் கொண்டு கூட்டணி அமைத்துள்ளோம்.
கேள்வி: திராவிட அரசியலுக்கு மாற்று என்று மக்கள் எதிர்ப்பார்ப்பது வெறும் ஊழலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல....
பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா எதிர்ப்பார்ப்புகளுக்கும் ஏற்ற அமைப்பாகத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால், இடதுசாரிகள் மட்டுமே தனித்து நிற்க வேண்டும். இன்றைய சூழலில் அமைப்பு பலம் போதாது என்பதாலேயே அதனைத் தவிர்த்திருக்கிறோம். மக்கள் இடதுசாரிகளை வலுப்படுத்தட்டும். அவர்கள் எதிர்ப்பார்ப்புகளுக்கேற்ப தனித்து நிற்போம்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் சில விசயங்களை தெளிவுபடுத்துகிறது.
விஜயகாந்த் எந்த வகையில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்று என்பதற்கு காரணம் எதுவும் சொல்ல, தோழர் முயற்சிக்கக் கூட இல்லை. தேமுதிகவை ஜனநாயக சக்தி என்றோ, மதச்சார்பற்ற சக்தி என்றோ சொல்லவில்லை. கூட்டணி அமைத்துள்ள இக்கட்டான சூழலிலும், தேமுதிக, விஜயகாந்த் பற்றி நேர்மறையாக, சாதகமாக எதுவும் சொல்லாமல் உறுதியாக நின்றது மிகமிக நல்ல விசயம்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி, மக்கள் இடதுசாரிகளைப் பலப்படுத்தினால், மக்கள் விருப்பங்களுக்கேற்ப தனித்து நிற்பதாகவும், இடதுசாரிகளுக்குப் போதிய பலம் இல்லாததால்தான் இதுபோன்ற கூட்டணிகள் அமைவதாகவும் சொல்லியுள்ளார். மக்கள் விருப்பத்திற்கேற்ப தனித்து நிற்கிறோம் என்று சொல்வதன் மூலம், தனித்து நிற்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார். மிக நல்ல விசயம். தனித்து நின்றால், சுதந்திரமாக அறுதியிட்டால்தான் இடதுசாரிகளைப் பலப்படுத்த மக்களுக்கு வாய்ப்பு இருக்கும். பிரச்சனை மக்களுடையது அல்ல. பிரச்சனை இடதுசாரிகளுடையது. சொந்தக் காலில் அறுதியிட முயன்றால்தான் பலம் கூடும். சுதந்திர பலத்தைக் கூட்ட தேர்தல் நேரத்தில் தவறிவிட்டு, அதனால் ஏற்படும் பலவீனங்களையே, மோசமான சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைக்கக் காரணமாகச் சொல்வது எந்த வகையில் சரியாகும்?
மார்ச் 26 தேதிய தீக்கதிர் நாளேட்டில், இககமா மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் நேர்காணல் வெளியாகியுள்ளது. தோழமையான கேள்விகள்தான் கேட்கப்பட்டுள்ளன. மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை விஜயகாந்த் ஏற்றாரா? குறைந்தபட்சம் அவரிடம் அது பற்றி பேசப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு தோழர் ராமகிருஷ்ணன் நேரடியாக பதில் சொல்லவில்லை.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் மக்கள் பிரச்சனைகளில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு தோழர் ராமகிருஷ்ணன் சொன்ன பதில் கவனிக்கத்தக்கதாகும். ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு என பல மக்கள் நலன் சார்ந்த விசயங்களில் ஒற்றுமை உள்ளது. எதிர் காலத்தில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறோம். கடந்த அய்ந்து ஆண்டுகளில் தேமுதிக செய்யாத எதையும் ஏற்றிப்போற்றி தோழர் ராமகிருஷ்ணன் சொல்லவில்லை. தீர்ப்பை கவனமாக எதிர்காலத்துக்கு விட்டுவிடுகிறார்.
மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக விவகாரம் எங்கள் உள்விவகாரம், இதில் அடுத்தவர் ஏன் தலையிடுகிறீர்கள் என்ற விதத்தில் கூட்டணி பற்றிய விமர்சனங்களுக்கு இடதுசாரிகள் உள்ளிட்ட அந்த அணியினர் எரிச்சலுடனும் கோபமாகவும் பதில் சொல்கின்றனர். விமர்சனம் தொடர்பாக சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தால், அது சங் பரிவாரை விமர்சனம் செய்யும் நம் நிலைக்கு தீங்கு விளைவிக்காதா? பொது வாழ்க்கையில், அரசியல் வாழ்க்கையில், அரசியல்ரீதியான கேள்விகளுக்கு அரசியல்ரீதியான பதில்களை பொறுமையாகச் சொல்லியாக வேண்டும்.
ஜனநாயகக் குடியரசில், கிங் மேக்கர்ஸ் விவாதத்தை இடதுசாரிகள் ஏன் தவிர்க்கவில்லை? இந்தக் கேள்விக்கு, கிங், கிங் மேக்கர் என்பவை, முதலமைச்சர், முதலமைச்சரை உருவாக்குபவர்கள் என்ற உவமையை மட்டுமே குறிக்கிறது என தோழர் ராமகிருஷ்ணன் பதில் சொல்லியுள்ளார். மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஜெயலலிதா மகாராணி, சோழ மாமன்னர் கருணாநிதி வரிசையில் மீண்டும் ஒரு ராஜாவா என்ற கேள்வி தமிழகத்தில் நியாயமானதுதானே.
ஏதும் இல்லாதவர்கள் கூட கடைசி கடைசியாய் தம் பெயரைத் தக்கவைத்துக் கொள்வார்கள். பெயர் மட்டுமாவது அவர்களிடம் மிஞ்சும். மக்கள் நலக் கூட்டணியின் பெயரை உணர்ச்சிமயமாய் கேப்டன் விஜயகாந்த் அணியாக வைகோ அறிவித்ததும், மக்கள் நலக் கூட்டணி என்றால் மக்களுக்குத் தெரியாது, அதனால் கேப்டன் விஜயகாந்த் அணி என்றால்தான் மக்களுக்கு எளிதாகப் புரியும் என பிரேமலதா சொல்வதும் சாதாரணமான விசயங்களா? பெயர் பறிப்பு, பெயர் மறுப்பு, கொள்கை மறுப்புக்கு கட்டியம் கூறுவதாகாதா?
மக்களாட்சி கோட்பாட்டின்படி, முதலமைச்சர் யார் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் சட்ட மன்ற உறுப்பினர்கள் முடிவு செய்வார்கள் என மக்கள் நலக் கூட்டணி சொன்னது. விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி 124:110 என தொகுதி உடன்பாடு வந்த பிறகு, விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். விஜயகாந்துக்கு மக்களாட்சி கோட்பாடுகள் பொருந்தாதா?
குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் மக்கள் நலக் கூட்டணி வெறும் ஆள்மாற்றல்ல, அது கொள்கை மாற்று என வாதாடினீர்கள். விஜய காந்திடம் குறைந்தபட்சப் பொதுத் திட்டத்தை ஏற்கும்படி ஏன் கேட்கக் கூட இல்லை? உங்கள் குறைந்தபட்சத் திட்டத்திற்கு, நீங்களே ஏன் குறைந்தபட்ச மதிப்பு கூட தரவில்லை? விஜயகாந்துடன் உடன்பாடு, ஆள் மாற்றுதான், கொள்கை மாற்று அல்ல என்பதைப் பகிரங் கமாகச் சொல்ல வேண்டியதுதானே.
பிரேமலதா சகோதரர் சுதீஷ், பஞ்ச பாண் டவர்களில் ஒருவருக்கு மட்டும் முதலமைச்சர் பதவி என்றிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் மீதி நான்கு பாண்டவர்களுக்கும் பதவி அறிவித் தது, வெறும் உணர்ச்சிவசப்பட்டு நடந்ததா? அல்லது அஇஅதிமுக, திமுக கலாச்சார நோய்த் தொற்றா?
விஜயகாந்துடனான கூட்டணிக்கு நீங்கள் மூன்று காரணங்கள் குறிப்பிடுகிறீர்கள். 1. முழுமையான மதுவிலக்கு. 2. ஊழல் எதிர்ப்பு. 3. கூட்டணி ஆட்சி. கூட்டணி ஆட்சி எனச் சொல்லிவிடலாமா என மானமிகு வைகோ கேட்க, விஜயகாந்தும் அப்படியே சொல்லலாம் எனப் பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டார்.
விஜயகாந்த் இதுவரை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பூரண மதுவிலக்கு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஊழல் ஒழிப்பு என்பதை, எந்த ஓர் அரசு ஊழியர் ஊழல் செய்தாலும், ஈமெயில் அனுப்புங்கள், அடுத்து நடப்பதைப் பாருங்கள் என்று அவர் மலினப்படுத்திவிட்டார். ஊழல் எதிர்ப்புப் பற்றி எந்த மாநிலத்தில் பேசினாலும், அது முதலமைச்சர் வரையிலானவர்களை லோக் ஆயுக்தா சட்ட எல்லைகளுக்குள் கொண்டுவருவதுதானே. உடன்பாட்டிற்காகச் சொல்லப்பட்ட மூன்று காரணங்களில் இரண்டு, நீங்கள் உடன்பாட்டில் கையெழுத்து போட்டபோது இல்லை.
தோழர் பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் இதழில், அஇஅதிமுக, திமுகவுடனான கடந்த கால கூட்டணிகளை விமர்சனபூர்வமாக அணுகி, இனி அதற்கு இடமில்லை என்று எழுதியதை தீக்கதிரில் பிரசுரித்து சில மாதங்களே ஆன நிலையில், காலமறிந்தே சேவல் கூவும் என்ற தலைப்பில், கடந்த கால கூட்டணிகளை வள்ளுவர் பெயரால், டிமிட்ரோவ் பெயரால் 31.03.2016 தீக்கதிரில் நியாயப்படுத்துவது சரியா?
2014ல் பாஜகவின் மோடி புகழ் பாடிய வைகோ மற்றும் விஜயகாந்த், அரசியல் நிலைப்பாடு சர்ச்சைக்குரியது. உன் நண்பன் யார் என்று சொன்னால் நீ யார் என்று சொல்ல முடியும் என்பது பழமொழி. பாஜகவால், திமுக, காங்கிரசால், வலதுசாரி பிற்போக்காளர்களால் உகந்த தகுதி வாய்ந்த கூட்டாளியாகக் கருதப்பட்ட ஒருவர், வைகோ கூற்றுப்படி பேர முன்வைப்புக்களை சந்தித்த ஒருவர், எப்படி இடதுசாரிகளின் நண்பராக இருக்க முடியும்?
இடதுசாரிகள், வைகோவை, விஜயகாந்தை தவிர்த்திருக்க வேண்டும். இப்போதும், அஇஅதி முக, திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இகக மாலெ உறுதியாக உள்ளது. குறைந்தபட்சம் அடுத்தடுத்து தவறுகள் நடக்கா மல் அஇஅதிமுக, திமுக எதிர்ப்பின் கூர்மையை மழுங்கடிக்காமல் பார்த்துக் கொள்வது இடது சாரிகளுக்கு நல்லது.
நாட்குறிப்பு: மார்ச் 13 முதல் மார்ச் 31 வரை
எஸ்.குமாரசாமி
மார்ச் 13, 2016
பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் 10ஆம் ஆண்டிற்குள் நுழைவதை அனுசரிக்க மார்ச் 13ல் தொழிலாளர்கள் குடும்பங்களுடன் கூடுவது என முடிவெடுக்கப்பட்டிருந்தது. சங்க அங்கீகாரம் பெறுவதற்கு முன் 10.10.2010ல் நாம் நடத்திய ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட தொழிலாளர் குடும்பத் திருவிழா சங்க அங்கீகாரத்தைத் துரிதப்படுத்தியது.
மார்ச் 13ன் முக்கியத்துவத்தை, அன்றைய தமிழ் இந்து நாளேட்டில் இரா.நாறும்பூநாதன் எழுதி இருந்தார். மார்ச் 13, 1908 நாட்டு விடுதலைப் போராட்டத்தில் நெல்லை எழுச்சியாக அமைந்தது. இந்த எழுச்சி பற்றி பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இரண்டு தினங்கள் விவாதித்ததாம்! அப்போது தூத்துக்குடி கோரல் மில்லில் 10, 12 வயது சிறுவர்களைக் கூட வைத்து வேலை வாங்கிச் சுரண்டினர். பிரம்பால் அடித்தனர். ஞாயிறு விடுமுறை கிடையாது. தாங்க முடியாத சுமையான நீண்ட வேலை நேரம் இருந்தது. இந்தப் பின்னணியில் தேச பக்தர்கள் வ.உ.சி, சிவா அந்தத் தொழிலாளர்கள் மத்தியில் போய்ப் பேச பிப்ரவரி 27 வேலை நிறுத்தம் துவங்கியது. வேலை நிறுத்தத்தை நீடிக்க வைக்க, வ.உ.சி உணவு வழங்கப்படுவதை உத்தரவாதம் செய்தார். எல்லோரும் வேலை நிறுத்தத்தில் இணைய, வேலை நிறுத்தம் எட்டு நாட்கள் நீடிக்கிறது. வெற்றி பெறுகிறது. ஞாயிறு விடுமுறை தினமாகிறது. சம்பளம் 100% ஆகிறது. வெள்ளையர் ஆத்திரம் அடைந்தனர்.
அந்த நேரம் வ.உ.சி, சிவா, வங்கத்து தேச பக்தர் பிபின் சந்திரபால் விடுதலையைத் தடையை மீறி அனுசரிக்கின்றனர். தைப்பூசம் அன்று தாமிரபரணி ஆற்றுப் படுகையில் வ.உ.சியும் சிவாவும், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களை அந்நியர் துணிகளைப் புறக்கணிக்க அறைகூவல் விடுக்கின்றனர். வெள்ளையர், மார்ச் 12, 1908ல் வ.உ.சியையும் சிவாவையும் கைது செய்கின்றனர்.
தூத்துக்குடியும் நெல்லையும் வெடித்தெழுகின்றன. மாணவர்கள் தொழிலாளர்கள் எங்கும் பேரணிகளாகத் திரண்டு செல்கின்றனர். வெள்ளை ஆட்சி அதிகாரச் சின்னங்களான முனிசிபல் அலுவலகம், பெட்ரோல் கிடங்கு, காவல்நிலையம் தாக்கப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு நடக்கிறது. 3 பேர் கொல்லப்படுகின்றனர். வ.உ.சிதம்பரனார் மீது இராஜ துரோக வழக்கு போடப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சிவாவுக்கு பத்தாண்டு சிறை. கண்டித்து பேசியவர்களுக்கு சிறை.
தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிய, நாட்டு விடுதலைக்காக வெள்ளையனுக்கு எதிராக கப்பலோட்டிய சிதம்பரனார், கோவை சிறையில் செக்கிழுக்க வைக்கப்பட்டார். சின்னியம்பாளையம் தியாகிகள் இருந்த சிறையில், வ.உ.சி இருந்த சிறையில், பிரிக்கால் தொழிலாளர் போராளிகள் எட்டு பேர் சிறையில் இருந்தனர். எட்டு பேரில் ஒருவருக்குப் பிணை கிடைத்த தகவல் அங்கு தெரிவிக்கப்பட்டது.
தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாய், ஒரு சமூகமாய்த் திரண்டனர். உற்சாகம் கரை புரண்டோடியபோது, தொழிலாளர்கள் தம் ஒற்றுமை உள்ளாற்றல் உருவாக்கிய புதிய மின்சாரத்தை உணர்ந்து கொண்டபோது, இகக (மாலெ) மேட்டுப்பாளையம் வேட்பாளர் தோழர் நடராஜன், கவுண்டம்பாளையம் வேட்பாளர் தோழர் வேல்முருகன் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அன்று அனைவருமாகச் சேர்ந்து உணவு உண்ட பிறகு, இளைஞர்கள் கூட்டத்திலும் கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டத்திலும் மார்ச் 23 பகத்சிங் நினைவு தினம் ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின இயக்கம் பற்றிப் பேச வேண்டி இருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுமானத் தொழிலாளர் நல நிதியை தமிழக அரசு வேறு செலவுகளுக்குத் திருப்பாமலிருக்க ஆணையரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய விசயங்கள், மார்ச் 23, ஏப்ரல் 14 இயக்கம், தேர்தல் வேலைகள் பற்றி கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன், விவாதிக்கப்பட்டது.
மார்ச் 14, 15 2016
தோழர் திபங்கர் கலந்து கொள்ள, கட்சி மாநிலக் குழு கோவையிலேயே இரண்டு தினங்கள் நடந்தது. உடுமலைப்பேட்டை சங்கர் கொலை செய்தி கிடைத்தது. எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டம் நடக்கும்போதே, தோழர்கள் அம்பத்தூரில் எதிர்ப்பு நடவடிக்கை கட்டமைத்தனர். பத்திரிகையாளர் சந்திப்பு 15.03.2016 காலை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் பாதுகாப்பு, சாதியாதிக்கக் கொலைகள் தடுப்பு தண்டனை சட்டம் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேசிய முக்கிய விசயங்கள் தமிழில் குறிப்புகளாகத் தரப்பட்டன.
மார்ச் 16, 2016
மாநிலக்குழு சுற்றறிக்கை தயாரானது. இகக, இகக(மா) கட்சிகளுக்கு, நாம் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் சொல்லி அவர்கள் அங்கு போட்டியிட வேண்டாம் என்று கோருகின்ற, அவ்வாறு செய்யும்பட்சம் அவர்களை நாம் ஆதரிப்பது பற்றி முடிவெடுக்க முடியும் என்ற கடிதம் தயாரானது. பொதுச் செயலாளர் டெல்லி செல்ல விமான நிலையம் சென்று வழி அனுப்பினோம். தோழர் ஜவகரும் உடன் வந்தார்.
மார்ச் 17, 18 2016
மாநில தலைமையகத்தில் சென்னை காஞ்சிபுரம் மற்றும் தலைமையகத்தில் உள்ள மாநிலக்குழு உறுப்பினர்களுடன், மார்ச் 23 -ஏப்ரல் 14 இயக்கம் மற்றும் தேர்தல் பிரச்சாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. மார்ச் 18 காலை சங்கர் படுகொலை தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு திருபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற வேலைகள் தொடர்பாக திருபெரும்புதூர் முன்னணிகளிடம் விவாதிக்கப்பட்டது. மார்ச் 31 அணி திரட்டல் தொடர்பாகவும் தோழர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தலைமையகத் தோழர்களுடன் பேசி மார்ச் 23 - ஏப்ரல் 14 பிரச்சார இயக்கப் பிரசுரம் இறுதி வடிவம் தரப்பட்டது. அம்பத்தூரில் குறிப்பிட்ட டிவிசன்களில் கவனம் செலுத்துவது, வாக்காளர்களைத் திரும்பத் திரும்பச் சந்திப்பது என முடிவானது. தோழர்கள் சேகர், பழனிவேல், ஜவகர் தலைமையிலான குழுக்கள் கட்சி/சங்க/பகுதி முன்னணிகளை இணைத்துக் கொண்டு வேலை பார்க்க முடிவானது.
திருபெரும்புதூரில், தொழிலாளி வாக்கு தொழிலாளிக்கே என்பதில் அழுத்தம் வைத்துப் பிரச்சாரம் செய்ய முடிவானது. 3 மாநிலக் குழு உறுப்பினர்கள் திருபெரும்புதூரில் கவனம் செலுத்த முடிவானது.
மார்ச் 18 மாலை திருவள்ளூர் மாவட்டத்தில் பணி புரியும் மாநிலக் குழு தோழர்களுடன் நடந்த சந்திப்பில், மாதவரம் தொகுதியை 3 மய்யமான பகுதிகளாகவும் ஒரு துணைப் பகுதியாகவும் பிரித்துக் கொண்டு வேலை பார்க்க முடிவானது. கவனம் குவிக்கும் 3 பகுதிகளில் வாக்குச் சாவடி வாரியாக எவ்வளவு வாக்காளர்களைச் சந்திப்பது எத்தனை வாக்குகளை உறுதிசெய்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
மார்ச் 19, 2016
கட்சியின் கோவை மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. மேட்டுபாளையம் தொகுதியில், வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சிகளிலும் பிளிச்சி ஊராட்சியி லும் கவனம் செலுத்துவது எனவும், அதுபோக, காரமடை மற்றும் மேட்டுப்பாளையத்தில் பொதுவான பிரச்சாரம் செய்யலாம் எனவும் பேசப்பட்டது. மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆகக் கூடுதல் வாக்காளர்களை நேரடியாக வீடுவீடாகச் சந்திப்பதற்கு முதன்மை அழுத்தம் வைக்க முடிவானது.
மார்ச் 21 அன்று திட்டமிடப்பட்டிருந்த சாந்தி கியர்ஸ் தொழிலாளர் கூட்டத்தை, மார்ச் 23 பிரிக்கால் கூட்டங்களை, அடுத்தடுத்த வேலைகளை முன்எடுக்கப் பயன்படுத்த முடிவானது. மாநிலக்குழு உறுப்பினர்களில் மாவட்டச் செயலாளர் மேட்டுப்பாளையம் தொகுதியிலும் மற்ற தோழர்கள் கவுண்டம்பாளையத்திலும் கவனம் செலுத்த முடிவானது. கவுண்டம்பாளையம் வேலைகளை, பெரியநாயக்கன் பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை ஒரு மய்யமாகவும், சாந்தி கியர்ஸ் தோழர்கள் பக்கத்தில் உள்ள பகுதிகளை ஒரு மய்யமாகவும், டேங்க்பண்ட் தோழர்களும் காமராஜபுரம் பகுதி துப்புரவுத் தொழிலாளர்களும் இணைந்து ஒரு பகுதியாகவும் வேலை செய்ய முடிவானது.
மார்ச் 20, 2016
செம்மொழி எக்ஸ்பிரசில் தஞ்சை சென்று அங்கிருந்து தோழர்கள் இளங்கோவன், ராஜாங்கம், ஜோதியுடன் கந்தர்வகோட்டை சென்றேன். புதுக்கோட்டை மாவட்ட ஊழியர் கூட்டத்தில் 50 பேர் வரை கலந்து கொண்டனர். வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பெண் வேட்பாளர் என்ற முடிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அரசியல் தலைமைக் குழு மாநிலக் குழு சுற்றறிக்கைகள் மற்றும் மார்ச் 23 - ஏப்ரல் 14 இயக்க மய்ய அழுத்தம் பற்றி விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்டது. கட்சி, மாவட்டக் குழு தோழர் வனிதாவை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. ஏப்ரல் 14 வரை ஒரு சுற்றும் அதன் பிறகு அடுத்த சுற்றுக்களிலும் நம் கட்சி உறுப்பினர்கள் இருக்கிற நமக்கு அறிமுகம் இருக்கிற எல்லா ஊராட்சிகளையும் அணுகி வேலை செய்ய முடிவானது. தோழர்கள் இளங்கோவனும் கண்ணய்யனும் கந்தர்வகோட்டையில் வேலை செய்ய உள்ளனர்.
மார்ச் 21, 2016
அதிகாலையே சாந்தி கியர்ஸ் ஒப்பந்தத் தொழிலாளியாக உள்ள ஒரு தோழர் அறைக்குச் சென்றேன். சங்க அலுவலகத்தில் பேச்சு வார்த்தைகளுக்குத் தயாராகும் விதம் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பேச்சு வார்த்தைகளில் நல்ல முடிவு வராவிடில், உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் கட்டமைக்க முடிவானது. பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடைபெற்றன. மாலை சங்க அலுவலகத்தில் நடந்த முன்னணிகள் கூட்டத்தில் 70 பேர் வரை கலந்து கொண்டனர். தொழிலாளர் வர்க்க சாசனம் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வேட்பாளர் வேல்முருகன் தோழர்களிடம் தேர்தல் பணியாற்ற ஒத்துழைப்பு நாடினார். மறு நாள் காலை சூலூர் ரோட் ரயில் நிலையத்தில், கோவை நாகர்கோவில் பேசஞ்சர் மூலம் தோழர் என்.கே.நடராசனுடன் ஈரோடு சென்று, அங்கிருந்து குமாரபாளையம் சென்றோம்.
மார்ச் 22, 2016
முற்பகலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. பிற்பகலில் ஊழியர் கூட்டம் நடந்தது. ஏப்ரல் 14 வரை கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரைச் சந்தித்து அவர்கள் வாக்குகளை உறுதி செய்து அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது என முடிவானது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தாம் தேர்தல் முடியும் வரை தினமும் சில மணி நேரம் வேலை செய்ய உறுதி அளித்தனர். வீட்டு வசதி கோரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சமீபத்தில் முற்றுகையிட்ட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் தொலைபேசி எண்கள் கொண்டு அவர்களைத் தொடர்புகொள்ள முடிவானது. தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட வேலையில் சுருங்கி நிற்கும் தன்மையைப் பற்றிப் பேசலாம் எனத் தோழர் கோவிந்தராஜ÷டன் பேசப்பட்டுள்ளது. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கோவிந்தராஜ் (நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர் தலைவர்) இங்கு வேலை செய்வார். மறுநாள் கோவை சேலம் பேசஞ்சரில் கோவை சென்றடைந்தோம்.
மார்ச் 23, 2016
ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி பகத்சிங் படம் தாங்கிய 1,300 பேட்ஜ்கள் பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருந்தது. அனைவரும் அவற்றோடு பணிக்கு வந்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் சாந்தி கியர்ஸ் நிர்வாகம், அது உங்கள் முடிவு என்று சொல்லிவிட்டது. பிரிக்கால் நிர்வாகம் நிலை ஆணைக்குப் புறம்பாக அணிந்துள்ள, நிறுவனத்துக்கு சம்பந்தமில்லா பேட்ஜை அகற்றுமாறு அறிவிப்பு வெளியிட்டது. தொழிலாளர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. 23.03.2016 மாலை சாமிசெட்டிபாளையம் மண்டபத்தில் பகத்சிங் நினைவு தின உறுதி ஏற்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 250 பேர் வரை கலந்து கொண்டனர். தொழிலாளர் வர்க்க சாசனத்தை கவுண்டம்பாளையம், மேட்டுபாளையம் வேட்பாளர்கள் படித்தனர். தோழர் சந்திரன் மார்ச் 23 - ஏப்ரல் 14 இயக்க பிரசுரத்தைப் படித்தார். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் அனைவரும் சேர்ந்து வாசித்தனர். சங்பரிவாரின் வலதுசாரி பிற்போக்கு கருத்தியலை, தாக்குதல் தன்மையுடன் பகத்சிங் அம்பேத்கர் ஆளுமைகளை முன் நிறுத்தும் ஒரு மாற்று கருத்தியலுடன் சந்திக்கும் அவசியம் பற்றிப் பேசிவிட்டு, முதலாளித்துவத்துக்கு நாளும் உழைத்துக் கொடுக்கும் தோழர்கள், முதலாளித்துவ அரசியலை வீழ்த்த தேர்தல் வரை அன்றாடம் நேரம் ஒதுக்க அழைப்பு தரப்பட்டது. பிணையில் வெளியே வந்திருந்த தோழர் குணபாலன் கட்சி சீருடையுடன் அவர் மனைவியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தது, உணர்ச்சிமயமாகவும் உற்சாகம் தந்ததாகவும் அமைந்தது.
மார்ச் 24, 2016
மாவோவின், தாராளவாதத்தை எதிர்த்துப் போராடுவது கட்டுரையை சில தோழர்களோடு மேலோட்டமாக விவாதிக்க முடிந்தது. தலைமை தாங்கும் முறைகள் தொடர்பான கட்டுரை விவாதம் பாதியில் நின்றது. பிரிக்கால் நிர்வாகம், 08.06.2012 ஒப்பந்தத்தில், வேலை நீக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் தற்காலிக நீக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சனை சமாதானக்குழு பேச்சு வார்த்தைகளில் முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், குழு கூட்டத்தில், தான், ஒவ்வொருவருக்கும் ஒரு தொகை தர முன்வந்துள்ளதாலும், இனி அவர்கள் வழக்கு நடத்த முடியாது, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. தோழர் குருசாமி உதவியுடன் இந்த மனு செல்லாது என ஒரு பதில் தயார் செய்யப்பட்டது. உழைக்கும் மக்கள் மாமன்றத் தலைவர்க்கு கடிதம் தயாரானது. பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய பல பாக்கிகள் கேட்டு ஒரு கோரிக்கை மனு தயாரானது. தோழர் சிவகுமார் மனைவி, தோழர் வேல் முருகன் மனைவி பிணை வழக்கு நிலைமைகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டனர். அவர்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மார்ச் 25, 2016
தோழர் தாமோதரனுடன் கோவை நாகர்கோவில் பேசஞ்சரில் மதுரை நோக்கிப் புறப்பட்டேன். இந்த நாள், ஆளுமை ஆற்றல் நிறைந்த பெண்களைச் சுற்றிய எண்ணங்கள் கொண்ட நாளாக அமைந்தது. ரயில் பயணத்தில், தமிழ்ச்செல்வியின் ஆறுகாட்சித்துறை படிக்கத் துவங்கினேன். கதை சமுத்திரவல்லியின் கதை. படிக்கும் போதே, எப்போதோ படித்த கல்கியின் பூங்குழலி, அருண்மொழிவர்மனால் சமுத்திரகுமாரி என அழைக்கப்பட்ட பூங்குழலி நினைவுக்கு வந்தாள். பூங்குழலியின் பாடல் செவிகளில் ரீங்காரமிட்டது:
அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
துடுப்பு வலிக்கிற பூங்குழலி உடல் வலுவும் மன வலுவும் நிறைந்தவள். கல்கி தெரிந்தோ தெரியாமலோ படைத்துவிட்ட பெண்ணியவாதி. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி கொண்ட கம்பீரமான உழைக்கும் பெண்.
ஆறுகாட்சித்துறை சமுத்திரவல்லி, உரத்த பிரகடனங்கள், முழக்கங்கள் ஏதும் இல்லாமல், தன் உடல் மீது, தன் வாழ்க்கை மீது, தன் விருப்பங்கள் மீது, தன் தேர்வுகள் மீது தானே கட்டுப்பாடு செலுத்துகிறாள். பிரச்சனைகளை முட்டி மோதிக் கடக்கிறாள். அவள் இயல்பாக வாழ்க்கையை வாழ்கிறாள். சமுத்திரவல்லியை தமிழ் சமூகத்திற்குத் தந்த தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துக்கள். (கதையை தமிழ்ச்செல்வி எழுதியபடி தோழர்கள் படிப்பது நல்லது).
மாலை, மதுரை இறையியல் கல்லூரியில் தேசியம் தேசபக்தி தேசவிரோதம் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. மதுரையில் இருந்து மாணவர்கள், கல்வித் துறையினர், அறிவாளிப் பிரிவினர் வந்திருந்தனர். திருவள்ளூர் சென்னை கடலூர் விழுப்புரம் நாகை சேலம் கோவை நெல்லை குமரி திண்டுக்கல் கரூர் தூத்துக்குடி விருதுநகர் புதுக்கோட்டை எனப் பல மாவட்டத் தோழர்களும் ஈர்க்கப்பட்டிருந்தனர். தோழர் பாலசுந்தரத்துடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு செந்தூர் எக்ஸ்பிரசில் திரும்பி கும்பகோணம் சென்றேன்.
மார்ச் 26, 2016
தஞ்சை நாகை தோழர்கள், காலை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கும்பகோணத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். மதியம் திருபுவனத்தில் ஊழியர் கூட்டமும் மாலை மார்ச் 23 - ஏப்ரல் 14 இயக்கப் பிரச்சாரக் கூட்டமும் நடைபெற்றன. விவசாய நெருக்கடி, உழைக்கும் விவசாயிகளையும் கிராமப்புற தொழிலாளர் களையும் வாட்டி வதைக்கும்போது, பல போராட்டங்கள் எழும் போது, வரலாறும் வாய்ப்புகளும் நம் அமைப்பை முறைப்படுத்தி வலுப்படுத்தும் கடமையை நம்மிடம் கேட்கின்றன. செந்தூர் எக்ஸ்பிரசில் 27.03.2016 அதிகாலை மதுரை வந்தடைந்தேன்.
மார்ச் 27, 2016
மதுரையில் காலை நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் முன்னணிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 14 மாவட்டங்களில் இருந்து 50 தோழர்கள் வரை கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 242 கிட்டங்கிகள் உள்ளன. சுமை தூக்குவோரை கழக ஊழியராக்குவது, பணி நிரந்தரம், இந்திய உணவுக் கழகத்திற்கு இணையான ஊதியம் என்ற கோரிக்கைகள் அடிப்படையில், புதிய அரசு அமைந்த பிறகு 242 கிட்டங்கிகளையும் நிறுத்துவது பற்றியும், மாநிலத்தை வேறு வேறு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு முன்னணித் தோழர்கள் செயலாற்றுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளி வர்க்க சாசனம் படிக்கப்பட்டது. அன்று மாலை தோழர் சங்கரபாண்டியனுடன் பேருந்து மூலம் திருமங்கலம் சென்று அன்று இரவே திருநெல்வேலிக்கு சென்றேன்.
மார்ச் 28, 2016
நெல்லை மாவட்டக்குழு கூடியது. தமிழ்நாடு தொழிலாளர் வர்க்க சாசனம், மார்ச் 23 - ஏப்ரல் 14 இயக்கம் தொடர்பான பிரசுரம் படித்து விவாதிக்கப்பட்டன. தேசிய, மாநில சூழல் பற்றிய உரையாடல் இருந்தது. அன்று மாலையே கோயம்புத்தூர் நாகர்கோவில் பேசஞ்சரில் புறப்பட்டேன். காலியான வண்டியில் நேரமும் இருந்ததால், மாவோவின் நடைமுறை பற்றிய பிரசுரம், வரலாற்றில் முதலாளியமும் மதமும் என்ற நியு நெஞ்சுரி புக் ஹவுஸ் சிறு பிரசுரமும் வாசிக்க முடிந்தது. இளம் தோழர்கள் சூழ தோழர்கள் அந்தோணிமுத்து சுசீலாவுடன் நாகர்கோவிலில் இரவு உணவு முடித்து ஜீப்பில் குளச்சல் சென்றோம்.
மார்ச் 29, 2016
குளச்சலில் 29 மற்றும் 30 அதிகாலை கடற்கரை வரை சென்று நடைபயிற்சி முடிக்க வாய்ப்பு அமைந்தது. 29.03.2016 காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அன்று மதியம் முன்னணி ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. தேர்தலில் நாம் பாஜக காங்கிரஸ், அதிமுக திமுக மாற்று அரசியலை வலுவாக முன்னிறுத்த வேண்டும், கூடுதல் வாக்குகள் எப்படியாவது பெற முடியும் என்ற மாயமான் வேட்டையில் அரசியலை விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் விவாதிக்கப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வலு வான அய்சா கட்ட, ரீத்தாபுரம் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சிகள், குளச்சல் நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில் வீடு வீடாக திரும்பத் திரும்பச் சென்று மாற்று அரசியலுடன் மக்களைச் சந்திக்க முடிவானது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டம், சங்பரிவார், அஇஅதிமுக ஆட்சியில் கவலை அடைந்துள்ள சிறுபான்மையினர் உள்ளிட்ட சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளது. மறுநாள் காலை நாகர்கோவில் கோவை பேசஞ்சரில் நெல்லை திரும்பினேன்.
மார்ச் 30, 2016
ரூ.300 வாடகையில் ரயில்வே தங்கும் விடுதியில் தனி அறை கிடைத்தது. காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. 28, 29, 30 தேதிகளில் தீப்பொறிக்கு எழுதுவதற்கான குறிப்புக்களைத் தயாரிக்க நேரம் கிடைத்தது. 30 மாலை, மார்ச் 23 - ஏப்ரல் 14, இந்தியாவைக் காப்போம் ஜனநாயகம் காப்போம் பிரச்சார இயக்க தெருமுனைக் கூட்டம் நடந்தது. அனந்தபுரி விரைவு ரயிலில் சென்னை திரும்பினேன்.
மார்ச் 31, 2016
30.03.2016 எழுத ஆரம்பித்த நாட்குறிப்பு கட்டுரையில் 31.03.2016 மாலை நிகழ்ச்சி நீங்கலாக இதர பகுதிகளை எழுதி முடித்தேன்.
மார்ச் 31 அன்று மாலை திருபெரும்புதூர் கூட்டம் 6.15 மணி வாக்கில் துவங்கியது. தோழர் ராஜேஷ் தலைமை தாங்க, தோழர்கள் ராஜகுரு, சீதா, பாரதி உரையாற்றினர். இறுதியாக நான் பேசி முடிக்கும் வரை, வேலைக்குச் சென்று ஷிப்ட் முடித்து கூட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள் வரை யாரும் கலையவில்லை. கூட்டம் முடித்து திரும்பி, நாட்குறிப்பை எழுதி முடித்தேன்.
மார்ச் 23 - ஏப்ரல் 14 பிரச்சார இயக்கமும் தேர்தல் தயாரிப்புகளும் ஒரு சுற்று முடிந்துள்ளன. மாநிலக் குழுவின் ஏகப்பெரும்பான்மை தோழர்கள் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அஇஅதிமுக, திமுகவுக்கு மாற்று என்பதற்கான தேவையும் விருப்பமும் தமிழ்நாட்டில் இருக்கும்போது, இந்தப் பயணம் நடந்தது. பயணத்தில் சென்ற எல்லா இடங்களிலும் அஇஅதிமுக, திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற விசயத்தின் அழுத்தம் சற்றும் குறையாமல், இடதுசாரி ஜனநாயக மாற்று அரசியலை வலுப்படுத்துவது தொடர்பான பார்வையில், நமக்கும் இகக இககமாவுக்கும் உள்ள வேறுபாடு பற்றி, விவாதிக்க முடிந்தது.
தலித் உயிர்களுக்கு பொருளுண்டு
தலித் ஒடுக்குமுறையின் மீது கட்டியெழுப்பப்படும் ஆதிக்க சாதி உறுதிப்படுத்துதலுக்கு 
முடிவு கட்டப்பட வேண்டும்!
விவசாயம் உட்பட எல்லா துறைகளிலும் துரிதப்படுத்தப்பட்ட, அனைத்தும் தழுவிய மூலதன ஊடுருவல் நடைபெறுகிறது. இது, உற்பத்தி உறவுகளிலும், விழுமிய முறைகளிலும், விடாப்பிடியாய் நிற்கும் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்களை ஒழிக்காமல், அவற்றைப் பயன்படுத்திக் கொண்டே நடக்கிறது. அதனால் நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் புதிய வடிவங்களில் மறுஉற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மிச்சசொச்சங்கள், பெருமூலதனத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும், மலிவான உழைப்பு சக்தியையும், மூலப்பொருட்களையும் வழங்குவது மட்டுமின்றி, பலவகை இருண்மைவாத, ஆணாதிக்கக் கருத்துக்கள் மற்றும் பல நேரங்களில் காட்டுமிராண்டித்தனமான வடிவங்கள் எடுக்கும் முறைசார்ந்த சாதிய, நிலப்பிரபுத்துவ - ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு, ஒரு கட்டமைக்கப்பட்ட அடித்தளம் வழங்குகின்றன. சுருங்கச் சொன்னால் தேசத்தின் பொருளாதார வாழ்வுத் தடங்கள், நாடாளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது அதிகரித்து வரும் பெருந்தொழில்குழும கட்டுப்பாட்டோடு சேர்ந்து கொண்டு, நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை முடக்குகின்றன; சிதைக்கின்றன; இந்திய சமூகத்தையும் ஆட்சி அமைப்பு முறையையும் ஒரு முழுமையான ஜனநாயகமயப்படுத்துதலுக்கு உட்படுத்துவதற்கு மிகப் பெரிய தடைக்கற்களாய் உள்ளன.
2013ல், இகக மாலெ ஒன்பதாவது காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட பொதுத் திட்டத்தில் இருந்து
வன்னியர் பெண் திவ்யாவை மணந்த தலித் இளைஞன் இளவரசனின் உடல் ரயில் தண்டவாளங்களில் கண்டெடுக்கப்பட்டபோது அதை ஒரு தற்கொலை என்று முன்னிறுத்தும் தேவை இருந்தது. இளவரசன் மரணம் பற்றி அதிகாரபூர்வமாக அளிக்கப்பட்ட விளக்கத்தை, யாரும் நம்பத் தயாராக இல்லை என்பது அடுத்த விசயம்.
கோகுல்ராஜின் தலையில்லாத உடல் மீண்டும் தண்டவாளத்தில் கிடந்தது. முதலில் தற்கொலை என்ற புரளி பரப்பப்பட்டாலும், விசாரணையின் அடிப்படையில் அது கொலை என்று நிரூபிக்கப்பட்டது.
இப்போது சங்கர் படுகொலையில் ஆதிக்க சாதி கொலைகாரர்கள் தமிழ்நாட்டில் மேலும் ஓர் அடி முன்வைத்திருக்கிறார்கள். சங்கர், ஒரு பொறியியல் கல்லூரி மாணவர். வளாக நேர்முகத் தேர்வில் வேலைக்கு எடுக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் வேலைக்குச் சேரத் தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கடைத்தெருவில், செயல்பட்டுக் கொண்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பார்வையில், பொதுமக்கள் மற்றும் அவருடைய மனைவியின் கண்ணெதிரிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலில் சங்கரின் மனைவி கவுசல்யாவும் தாக்கப்பட்டார்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த காதலியை மணக்கத் துணிந்த தலித் இளைஞர்களை, ‘தற்கொலைக்கு உட்படுத்துவதில்’ இருந்து, ‘ரகசியமாக படுகொலை செய்வது’ என்று மாறி இப்போது பொது இடத்தில் பலரும் பார்க்க ‘கும்பலாகச் சேர்ந்து படுகொலை செய்வது’ என்ற அளவிற்கு ஆதிக்கப் படுகொலைகளில் ஈடுபடும் கொலைகாரர்கள் முன்னேறிவிட்டார்கள்.
இதுபோன்ற ஆதிக்கக் கொலைகளை தடுப்பதில், கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முற்றிலுமாக தவறிவிட்டதாலும், கடந்த காலங்களில் நடந்த ஆதிக்கக் கொலைகள் பற்றிய ஆளும் வர்க்க கட்சிகளின் அலட்சியமான அணுகுமுறையாலும், சாதியாதிக்க சக்திகள் எந்த அளவிற்கு துணிச்சல் பெற்றிருக்கிறார்கள் என்பதையே இந்த அடுத்தடுத்த நிலை மாற்றம் காட்டுகிறது.
இதுபோன்ற கொடூரமான சாதி ஆதிக்கக் கொலைகளை, சாதியாதிக்க சக்திகள் பொதுவில் கொண்டாடுவது மட்டும்தான் இன்னும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை.
சங்கர் படுகொலையில் கொலையாளிகள் அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவுசல்யாவின் தந்தையும் இன்னொரு உறவினரும் சரணûடைந்துள்ளனர். இந்தக் கைதுகள், கோகுல்ராஜ் கொலையில் நடந்த விசாரணை, கைது செய்த விதம் ஆகியவற்றைப் பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இது போன்ற கொலைகள் கட்டுப்படுத்தப்படும் என்று எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
கோகுல்ராஜ் படுகொலையிலும் முதலில் தற்கொலை என்று கொலையை மூடிமறைக்கப் பார்த்தனர். பின்நிகழ்வுகளால் தீரன் சின்ன மலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாகிய யுவராஜ் தலைமறைவாக இருந்தபோதும் சமூக ஊடகங்களில் ஆறு ஒலித்தட்டுகளை அவ்வப்பொழுது வெளியிட்டார். தொலைக்காட்சி அலைவரிசைகளில் பேட்டி கூட அளித்தார். பின்னர் ஒரு நாள் சரணடைந்தார். ஆனால், கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த, டிஎஸ்பி, இளம்தலித் அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலைக்குப் பின்னரே அவர் சரண் அடைந்தார்.
விஷ்ணுப்பிரியா தற்கொலைக்கும் காதல் விவகாரம் காரணம் என்று சொல்லப்பட்டது. பெருமாள்முருகன் வேட்டையாடப்பட்டதற்கும், அவர் தனது மரணத்தை அறிவிப்பதற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகளிலும் முக்கிய பங்காற்றிய யுவராஜ், தான் சரணடையும் தேதி இடம் ஆகியவற்றை பகிரங்கமாக அறிவித்த பின்பே சரணடைந்தார். நூற்றுக்கணக்கான அவருடைய ஆதரவாளர்கள் அவரை ஒரு கதாநாயகனை வரவேற்பதுபோல் வரவேற்றனர்.
கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்படாத வேறு ஒரு நபரை கைது செய்ய விஷ்ணுப்பிரியா நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று வெளிப்படையாக தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்த மற்றொரு தலித் டிஎஸ்பி, விஷ்ணுப்பிரியாவின் நண்பர், இதைச் சொன்ன சில நாட்களுக்குள் தற்கொலை முயற்சி செய்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாதிமறுப்பு காதல் திருமணங்களை தடுப்பதிலும், ஆதிக்க சாதி பெண்கள் தலித் ஆண்களிடம் நட்பாகப் பழகுவதைத் தடுப்பதிலும், யுவராஜ், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தனது சொந்த பாணியில், ‘ஒழுக்கக் காவல்’ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். அவர் தற்போது சிறையில் இருப்பது உண்மைதான். அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவர் சரணடைந்து ஆறு மாத காலம் ஆகிவிட்டபோதும் சிபிசிஅய்டி விசாரணையில் எந்தத் தெளிவான விசயமும் வெளிவரவில்லை. சரணடைவதற்கு முன்பு மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த யுவராஜ், வாட்ஸ்அப்பில் விரிவுரை ஆற்றிக் கொண்டிருந்தார். சமூக ஊடகங்களில் அவர் அந்த அளவுக்கு வெளிப்படையாக இருந்தும் அவரை காவல்துறை கைது செய்யவில்லை. தானாகவேதான் அவர் சரணடைந்தார்.
ஆனால் சாதாரண மக்களின் பார்வையில் சக்தி வாய்ந்த அதிகாரியாக தெரியும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படும் அவருடைய நண்பர், தற்கொலை முயற்சிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் சாதி மாஃபியா யுவராஜ், ஒரு கதாநாயகனைப் போல சரணடைகிறார்.
கோகுல்ராஜ் கொலைக்குப்பின் நடந்தேறிய இந்த நிகழ்வுகள் தலித்துகளுக்கும் தமிழ்நாட்டின் சாமான்ய மக்களுக்கும் ஏதாவது நம்பிக்கையூட்டும்படி இருக்கின்றனவா?
தமிழ்நாட்டில் சாதியாதிக்க சக்திகள் மேலும் மேலும் அத்தகைய குற்றங்களைச் செய்ய துணிச்சல் பெற்றிருப்பதுதான் இங்கு நடந்துள்ளது.
இளவரசன் உயிரோடிருக்கும்போது அவர் கோரிய பாதுகாப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய இறுதி ஊர்வலம் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடந்தது. சங்கரின் முந்தைய புகார்கள் காவல்துறையால் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் கொலையாளிகளை கைது செய்யும்வரை அவர் உடலை வாங்க மாட்டோம் என்ற அவரது பெற்றோர் கோரிக்கையையும் மீறி அவருடைய இறுதி ஊர்வலத்தை நடத்துவதில் காவல்துறை விரைவாக செயல்பட்டது.
தமிழக முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை, 5 ஆண்டுகளாக ஜெயலலிதா அரசாங்கத்தால் போஷித்து வளர்க்கப்பட்ட தமிழக காவல்துறை, தற்சமயம் தலித்துகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கும், ஜனநாயக கருத்துக்களின் கடுமையான கண்டனங்களுக்கும் உள்ளாகிற தலித் மரணச் சம்பவங்களில், அந்த தலித்துகளின் இறுதி ஊர்வலத்தை நடத்துவதில் தனித்திறமை பெற்றுள்ளனர். 2016 துவங்கிய சில நாட்களிலேயே இதை நாம் திருநாள் கொண்டசேரியில் பார்த்தோம். இறந்துபோன ஒரு வயதுமுதிர்ந்த தலித்தின் இறுதி ஊர்வலத்தை உயர்நீதிமன்ற ஆணைப்படி பொதுப் பாதையில் அனுமதிக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரிய இறந்த தலித் மனிதரின் உறவினர்களை அடித்து நொறுக்கி வேறு பாதையில் அவரது உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்குகளையும் காவல்துறையே செய்துவிட்டது. தமிழகத்தில் பிறப்பிலும் இறப்பிலும் தலித்துகளுக்கு கவுரவம் இல்லை. ஆனால் வேறு ஒருவருடைய கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக தலித்துகள் கொல்லப்படுகின்றனர்.
ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தமிழகம் சொர்க்க பூமியாக இருக்கவில்லை. அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். பகிரங்கமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். மனித மலத்தை உண்ண, சிறுநீரைக் குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதுபோன்ற வன்கொடுமைகளும், தாக்குதல்களும் சாதிய வர்க்க முரண்பாடுகளில் இருந்து பிறந்தவை. இவை அதே வலிமையுடன் இன்னும் தொடர்கின்றன. அவை இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.
தலித்துகள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார முன்னேற்றத்தின் வெளிப்பாடுகளுக்கு, இடஒதுக்கீட்டின் மூலம் தலித்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றங்களுக்கு, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள தலித் மக்கள் அறுதியிடலுக்கு, பதிலடி தர இந்தத் தாக்குதல்கள் கட்டமைக்கப்பட்டன.
ஆனால், தலித்துகள் மீதான சமீபத்திய தாக்குதல்களில், தலித்துகளை ஒடுக்குவதன் மூலம், ஆதிக்க சாதிகளின் அரசியல் ஒன்றுபடுத்துதலை உருவாக்கும் கூடுதல் அம்சம், தலித் மக்களுக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டின் ஜனநாயக வாழ்க்கைக்கும் மேலும் ஆபத்தானதாக மாறியுள்ளது.
தலித் மக்களை ஒடுக்குவதன் மூலம், உருவாக்கப்படும் ஆதிக்க சாதிகளின் அரசியல் ஒன்றுபடுத்துதல், தேர்தல் வெற்றிகளையும் தந்துள்ளதால், அது மேலும் தீவிரமடைகிறது. சாதியை மய்யமாகக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதும் தமிழ்நாட்டில் புதிதல்ல. இது தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதும் அல்ல. ஆனால், திட்டமிட்ட விதத்தில் உணர்வுபூர்வமாக, மோசமானதொரு தலித் விரோத அம்சம் உட்புகுத்தப்பட்டிருப்பதுதான் புதிது. சாதிரீதியான, மதரீதியான துருவச்சேர்க்கை மூலம் தேர்தலில் வெற்றி பெறும் சங் பரிவார் சதிகளைத்தான், இதற்கு இணையானதாகக் கூற முடியும்.
பிற்படுத்தப்பட்ட சாதியான வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் பல்வேறு தீவிரமான, வெற்றிகரமான போராட்டங்கள் மூலம், பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசியலில் தனக்கான இடத்தைப் பிடித்தது. ஆனால் அதே அமைப்பு, இப்போது தலித்துகளை ஒடுக்குவதன் மூலம் சாதிய துருவச் சேர்க்கையை உருவாக்குவதில் ஒரு முக்கிய சக்தியாக மாறியிருக்கிறது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாத இரண்டே இடங்களில் ஒன்றை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றது. இது தருமபுரி தொகுதி. இங்கு இளவரசன் நிகழ்வுக்குப் பிறகு தலித் எதிர்ப்பு சாதிய உணர்வுகளைத் தூண்டுவதில் பாமக வெற்றி பெற்றது. தங்கள் சாதி பெண்களின் கவுரவத்தை பாதுகாப்பது மிக உயர்ந்த கடமை என்று தம் சாதி மக்களிடையே பாமக தலைவர்கள் சாதி வெறி நெருப்பை பற்ற வைத்தார்கள். தலித் இளைஞர்கள் டீ ஷர்ட் அணிவது, ஜீன்ஸ் பேண்ட் போடுவது, கறுப்புக் கண்ணாடி அணிவது கூட அவர்களுக்குக் குற்றமாகத் தெரிந்தது. ‘காதல் நாடகம்’ என்ற பெயரில் தங்கள் பெண்களைக் கவரும் தலித் இளைஞர்களின் தலைகளையும், கை கால்களையும் வெட்டச் சொன்னார்கள். அவர்கள் சாதிப் பெண்களை மயக்கி, ஆதிக்க சாதிகளிடமிருந்து பணம் பறிப்பதில் தலித் இளைஞர்கள் வல்லுனர்களாகி விட்டனர் என்று சொன்னார்கள். ஆக, தலித் இளைஞர்கள் சாதி கவுரவத்தின் மிகப்பெரிய எதிரிகள் என்ற கருத்து கட்டப்பட்டது; சாதி கவுரவம், சாதி மறுப்புத் திருமணங்களைச் சுற்றி கட்டப்பட்டது; அந்த சாதி கவுரவத்துக்கு களங்கம் விளைவிக்கும் தலித் இளைஞர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பது முக்கிய கடமையாக முன்னிறுத்தப்பட்டது.
பல தலித் வீடுகளை எரித்து, அவர்கள் வாழ்நாள் சேமிப்புகளை சூறையாடி, இளவரசன் உடல் இரயில் தண்டவாளத்தில் கிடக்கும்படி செய்து, இந்த சதி நோக்கத்திற்கு தேர்தலில் வெற்றி கிடைத்த பிறகு, தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சாதி ஆதிக்க சக்திகளுக்கு மேலும் துணிவு பிறந்தது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, அது போன்ற இளைஞர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று துணிச்சலாகப் பேசினர். சாதியாதிக்கக் கொலைகள் தொடர்ந்தன. தெற்கு கிழக்கு வடக்கு மேற்கு என பல மாவட்டங்களில் தலித் உயிர்கள் பலி கொள்ளப்பட்டன.
தமிழகத்தின் அதிமுக இடைக்கால முதலமைச்சர், தமிழகத்தில் சாதி ஆதிக்க கொலைகள் எதுவும் நடக்கவில்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார். இது போன்ற அறிவிப்புகளில் இருந்து தங்களுக்குத் தேவையான செய்தியை பெற்றுக் கொள்ளும் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அது போன்ற குற்றங்கள் சம்பந்தமான உண்மைகளை மறைக்கவும் மாற்றவும் செய்கின்றனர். இது போன்ற குற்றங்கள் வெளிவருவதைத் தடுப்பதன் மூலம் குற்றவாளிகளை தப்ப விடுகின்றனர். சங்கர் கொலையில், வலைத்தளங்களில் வந்த காணொளிக் காட்சியைப் பார்த்தால், கொலையாளிகள் எந்தவித பதட்டமுமில்லாமல் நிதானமாக அந்த இடத்தை விட்டுச் செல்வதைக் காணமுடிகிறது. மிகவும் நிதானமாக தங்களுடைய இரு சக்கர வாகனத்தை கிளப்புவதும், மூவரும் மெதுவாக வசதியாக வண்டியில் ஏறி உட்காருவதும், ஒருவர் கையில் கொலைக் கருவியை வைத்திருந்ததும், மிகவும் நிதானமாக வண்டியைத் திருப்பிச் செல்வதை, சம்பவ இடத்தை விட்டு செல்வதையும் பார்க்க முடிந்தது. கொலை செய்த அந்த கொலையாளிகள் பதட்டமாக ஓடவோ அந்த இடத்தை விட்டு வேகமாக அகலவோ செய்யவில்லை. அவர்கள் மெதுவாகத்தான் அங்கிருந்து அகன்று சென்றனர். பெரியார் மண்ணில், தமிழ்நாட்டில் சாதியாதிக்க கொலைகளுக்கு எதிராக பேசுபவர்கள், அய்தராபாத் மத்திய பல்கலைக் கழகத் திலும் ஜேஎன்யுவிலும் ஜனநாயகத்துக்காக குரல் எழுப்புபவர்கள் தாக்கப்படுவது போல் தாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள், சாதியாதிக்க சக்திகளின் தாக்குதலையும் அரசாங்கத்தின் தேசத் துரோக குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள நேரும் சூழல் இருப்பதாகவே, இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன.
சாதி ஆதிக்க கொலைகள் பற்றி எண்ணிக்கைகளும் புள்ளிவிவரங்களும் வெளியாகின்றன. எவிடன்ஸ் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த கதிர், 2013லிருந்து இது 81வது ஆதிக்கக் கொலை என்கிறார். இந்த அய்ந்தாண்டு காலத்தின் பெரும்பகுதியில் பாமகவுடன் இணைந்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைக் கட்சியின் திருமாவளவன், தென் மாவட்டங்களில் மட்டும் 600 தலித்துகள் கடந்த 5 ஆண்டுகளில் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 70% சாதி ஆதிக்கக் கொலைகள் என்றும் கூறுகிறார்.
ஆனால், ‘தலித் உயிர்களுக்கு பொருளுண்டு’ என்ற பதாகையை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டின் சாமான்யர்களுக்கு புள்ளிவிவரங்களில் அவ்வளவு நாட்டமில்லை. அவர்கள், சாதியாதிக்கக் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்கின்றனர். சாதி வெறியில்லாத சமூகம் தேவை என்கின்றனர். அது போன்ற கொலைகளைத் தடுக்கச் சட்டம் வேண்டும், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்றனர். தமிழகத்தின் ஜனநாயகச் சூழல், சாதியாதிக்க வெறியால் மாசுபடுவதிலிருந்து சாதியாதிக்க வெறியால் நிரப்பப்படுவதில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றனர். தலித்துகளின் அரசியல்சாசன உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்றனர். இளைஞர்கள் தாங்கள் விரும்பும் எந்த ஓர் இணையையும் மணக்கும் சட்ட உரிமை உயர்த்திப் பிடிக்கப்பட வேண்டும் என்கின்றனர். பாரதியும் பெரியாரும் பிறந்த மண் சாதிப் பாகுபாடுகளின்றி, தலித்துகள் மீதான தாக்கு தல்கள் இன்றி இருக்க வேண்டும் என்கின்றனர். மிக முக்கியமாக, தேர்தல்களில் வெற்றி பெற, தலித்துகளை ஒடுக்குவதன் அடிப்படையில், சாதி சேர்க்கை நடைபெறுவது முடிவுக்கு வரவேண்டும் என்கின்றனர்.
ஆனால் ஆளும் கட்சியோ, ஆளும் வர்க்கக் கட்சிகளோ தமிழ்நாட்டு மக்களின் குரல்களுக்கு செவி சாய்த்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தின் முதமைச்சராகிய ஜெயலலிதா, அந்த அதிகாரத்தில் அவ்வப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, சாதி ஆதிக்கக் கொலைகளுக்கு எதிராக எதுவும் இதுவரை கூறாத ஜெயலலிதா, தன்னுடைய குளிரூட்டப்பட்ட போயஸ் தோட்ட கூட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் ஜெயலலிதா, இந்த ஆதிக்கக் கொலை பற்றியும் வாய் திறக்கவில்லை. அடுத்த முதலமைச்சராக விரும்பும் கருணாநிதிக்கும் அன்புமணிக்கும் சங்கர் படுகொலை சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டுமே. ஊடகங்கள், சங்கர் படுகொலையைப் பற்றி கேட்டபோது ராமதாஸ் கருத்துக் கூற மறுத்துவிட்டார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஆதிக்க சாதி வாக்கு வங்கிகளை இழக்க விரும்பவில்லை. ராமதாசுக்கும் அன்புமணிக்கும் அவர்கள் கனவு நனவாகிறது. அதிகம் பேசிக் கொண்டிருக்கும் பாஜக... இந்தப் பிரச்சனையில் அதன் நிலைப்பாடு என்ன? பாஜக தலைவர்கள் காணவில்லை என்ற சுவரொட்டிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இளவரசன் உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கை வாதாடிக் கொண்டிருந்தபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவபெருமாள் என்ற தலித் இளைஞர், ஆதிக்க சாதியைச் சார்ந்த காமாட்சி பிரியா என்ற தன் காதலியை மணந்தார். இப்போது சங்கர் படுகொலைக்குப் பிறகு, அவர் தங்களுக்குப் பாதுகாப்புக் கோரி திண்டுக்கல் மாவட்ட காவல்துறையை அணுகியுள்ளார். காமாட்சியின் பெற்றோர்களால் தாங்களும் கொல்லப்படும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். காமாட்சி தற்சமயம் மூன்று மாத கர்ப்பிணி. அவர்கள் சென்னையில் இருந்தபோது தாக்கப்பட்டதன் விளைவாக ஏற்கனவே ஒருமுறை காமாட்சிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே கொடுத்த புகார்களின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தற்சமயம் சிவபெருமாளின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சித்தையன்கோட்டைக்கு அவர்கள் திரும்பி இருக்கின்றனர். தனது தற்போதைய புகாரில் அடிக்கடி அவர்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக சிவபெருமாள் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆங்கில ஊடகங்களில் இன்னும் கூட கவுரவக் கொலைகள் என்ற பதம் பயன்படுத்தபடுகிறது. ஆனால் தமிழில் சாதி ஆதிக்கக் கொலைகளை அர்த்தப்படுத்தும் வகையில் வேறு பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
‘கவுரவக் கொலை’ என்ற பதம் அந்தக் கொலைகளின் கொடூரத்தை போதுமான அளவு வெளிப்படுத்துவதில்லை என்பதுடன், அதன் தன்மையை எளிமைப்படுத்துவதாகவும், சில சமயங்களில் நியாயப்படுத்துவதாகவும் இருப்பதால், இக் கொலைகளின் கொடூரத்தை போதுமான அளவு வெளிப்படுத்தாததால், தமிழில் இந்த வார்த்தை படிப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. சாதியாதிக்கக் கொலைகளின் கொடூரமான தன்மையை ஒப்பிடும்போது இந்த மாற்றம் மிகச் சிறிய மாற்றமே. ஆனால், பெரியார் பிறந்த மண் அவ்வளவு எளிதாக சாதி ஆதிக்கத்திற்கு தலை வணங்காது என்று கூறும் வகையில் கருத்தியல் மட்டத்தில் மாற்றம் நிகழ்கிறது. சாதி ஆதிக்கம் என்பது வருகின்ற தேர்தலில் தீர்க்கப்படக் கூடிய ஒரு பிரச்சனை அல்ல. இது ஒரு நீண்ட காலப் போராட்டம். ஆனால் தமிழக மக்கள் இந்தத் தருணத்தில் எழ வேண்டும்; சாதியாதிக்கக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சிவபெருமாளும், உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை இன்னும் அணுகாத தலித் இளைஞர்களும் அச்சமின்றி வாழும் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.
இகக மாலெ ஆர்ப்பாட்டம்
சாதி ஆதிக்கக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும்!
தலித் இளைஞர் சங்கர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரப்பட வேண்டும்!
சங்கர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்!
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் சாதி ஆதிக்க சக்திகள் சாதி மறுத்து திருமணம் செய்து கொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதியினரைப் பட்டப்பகலில் வெறித்தனமாக தாக்கியதில் தலித் இளைஞர் சங்கர் பலியானார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இந்தக் கொடூர சம்பவத்துக்கு எதிராக இகக (மாலெ) உடனடியாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
ஆதிக்கக் கொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அச்சுறுத்தல் இருந்தும் உயிரைக் காக்கத் தவறிய மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பொறுப்பாக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், தலித் இளைஞர் சங்கர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இகக மாலெ ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது.
மார்ச் 15 அன்று அம்பத்தூரில் இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் முனுசாமி, கட்சி முன்னணிகள் வேணுகோபால், பசுபதி, லக்ஷ்மி உள்ளிட்ட தோழர்களும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
மார்ச் 16 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கப் பொறுப்பாளர் தோழர் பாரதி, வழக்கறிஞர்கள் தோழர்கள் சுரேஷ், அதியமான், புகழ்வேந்தன், சங்கர் இவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மோகன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மார்ச் 16 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, முன்னணி தோழர்கள் கலந்துகொண்டனர்.
மார்ச் 17 அன்று திருவள்ளூர் மாவட்டம் காரனோடையில் தோழர் அன்புராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், அகில இந்திய மாணவர் கழகத்தின் தோழர் சீதா, இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ராமன் ஆகியோர் உரையாற்றினர்.
மார்ச் 17 அன்று விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மார்ச் 18 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் அதியமான் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இராஜகுரு, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் முனுசாமி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் கார்க்கி வேலன், இகக (மாலெ) கட்சி முன்னணிகள் குப்பாபாய், தேவகி, பொன்ராஜ், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்ச் 19 அன்று தஞ்சை, தாராபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முன்னணி தோழர் மனோகரன் தலைமை தாங்கினார்.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
சேலத்தில் மார்ச் 20 அன்று, சாதி ஆதிக்கக் கொலையும், சாதி ஒழிப்பும் என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் படிப்பு வட்டக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலித் ஆய்வு மய்யத்தின் தோழர் அறிவழகன், தீபக், இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன் மற்றும் கல்லூரி பேராசிரியர் சண்முகவேல் உரையாற்றினர்.
உத்தர்காண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது ஜனநாயக படுகொலையே
சட்டமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தல் நடத்திட இகக(மாலெ) கோரிக்கை
உத்தர்காண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஹரிஷ் ராவத் அரசாங்கத்துக்கு இன்னும் ஒரு நாள் கால அவகாசம் உள்ள நிலையில் ஜனாதிபதி ஆட்சி, அமல்படுத்தப்பட்டிருப்பது ‘ஜனநாயகப் படுகொலை’ என இகக(மாலெ) உத்தர்காண்ட் மாநிலக் கமிட்டி அறிவித்திருக்கிறது. உடனடியாக சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தலை நடத்தும்படியும் இகக(மாலெ) கோரிக்கை விடுத்துள்ளது.
சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு உடனடியாக புதிய தேர்தல் நடத்தப்பட தவறினால் அது குதிரை பேரத்திற்கே இடமளிக்கும். மோடி அரசாங்கம் அருணாச்சலப் பிரதேசத்திலும் இதே போன்ற சதியில் ஈடுபட்டது. உத்தரகாண்ட் மாநில மக்கள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக தங்களது கடும் கண்டனங்களை தெரிவிக்குமாறு இகக(மாலெ) மக்களுக்கு அழைப்பு விடுத்தது.
ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக மார்ச் 28 அன்று நைனிடால் மாவட்டத்தில் பிந்துகட்டாவில் லலித்மடியாலி, அம்லா ரௌதன் தலைமையில் மோடி அரசின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
மார்ச் 29 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் மாவட்ட கட்சிக் கமிட்டிகள் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவும், குதிரைப் பேரத்தைத் தடுப்பதற்கும் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டுமெனவும், காலதாமதமில்லாமல் புதிய தேர்தல் நடத்தவும் கோரி ஜனாதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளன.
அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய 
‘தேசியம், தேச பக்தி, தேசத் துரோகம்’ கருத்தரங்கம்
மதுரை, இறையியல் கல்லூரி வளாகத்தில் அகில இந்திய மாணவர் கழகம் சார்பாக ‘தேசியம், தேச பக்தி, தேசத் துரோகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கருத்தரங்கத்திற்கு அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் அகில இந்திய மாணவர் கழகத்தின் தேசியத் தலைவர் தோழர் சுசேதா டே, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க துணைத் தலைவர் தோழர் ஷெஹ்லா ரஷீத் ஷோரா, மூட்டா பேராசிரியர் விவேகானந்தன், அகில இந்திய மக்கள் மேடை மாநிலப் பிரச்சாரக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.முரளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி ஆகியோர் உரையாற்றினர். மதுரை காமராஜர் பல்கலைக் கழக மாணவர்கள் புரட்சிகர இளைஞர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என மாநிலம் முழுவதும் இருந்தும் பலர் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.
தோழர் ஷெஹ்லா ரஷீத் தனது உரையில், ஆர்எஸ்எஸ், பாஜக, சங்பரிவார் கூட்டங்கள் நாடு சந்திக்கின்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாத தங்கள் கையாலாகாத் தனத்தை மறைக்க காணொளிக் காட்சிகளைச் சட்ட விரோதமாக மாற்றியமைப்பது, போலி டுவிட்டர் கணக்குகளை உருவாக்குவது என இறங்கி, போராடும் மாணவர்களை அச்சுறுத்த முயற்சிக்கின்றன. இந்தியாவை இந்து, ஹிந்தி, மோடி போன்ற ஒற்றை அடையாளக் குறியீடுகளுக்குள் சுருக்கப் பார்க்கின்றன. ஆனால், ஏன் இவர்கள் நான்கு வர்ணம் வேண்டும், சாதிகள் வேண்டும், உட்சாதி வேண்டும், கோத்திரம் வேண்டும் என்கிறார்கள்? தேசியவாதம் என்பது தேசத்து மக்கள் மீது அன்பு செலுத்துவதாகும். ஆனால், இவர்கள் மக்களுக்குள் வெறுப்பை உருவாக்குபவர்கள். வெறுப்பை உற்பத்தி செய்கிறார்கள். மக்கள் ஒற்றுமை, உரிமை கவுரவத்திற்காக நாங்கள் நிற்கிறோம். உண்மையில் யார் தேசவிரோதிகள் என்றார்.
தோழர் சுசேதா டே, ஜேஎன்யு வளாகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள இடதுசாரி அரசியலால் அங்குள்ள மாணவர்களின் செயல்பாட்டு வெளியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜேஎன்யு சாத்தியமற்றது என்பதைச் சாத்தியமாக்கிக் காட்டும். இங்குள்ள மாணவர்கள் கல்வியைப் பற்றிச் சிந்திப்பார்கள். அரசியல் பேசுவார்கள். ஜேஎன்யு வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சொன்ன, சாதியை அழித்தொழிப்பதைச் சாத்தியமாக்கிக் காட்டியிருக்கிறோம். இங்கு பருவத் தேர்வுக்கு ரூ.250 கட்டணம். விடுதிக்கு மாதம் ரூ.10தான் கட்டணம். அதனால்தான் இந்த பல்கலைக் கழகத்தை அழித்துவிடத் துடிக்கிறார்கள். இந்தக் குற்றவாளிகளை மக்கள் மன்றத்தில் நிறுத்துவோம் என்றார்.
‘இந்தியாவின் இடதுசாரிக் கோட்டை ஜேஎன்யு, மாணவர் இயக்கத்தின் முன்னோடிப் படை அய்சா’ என்கிற பிரசுரத்தை தோழர்கள் சுசேதா டே, ஷெஹ்லா ரஷீத் வெளியிட அய்சாவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் சீதா பெற்றுக் கொண்டார்.
ஜனநாயகம் காப்போம்! இந்தியாவைக் காப்போம்!
பகத்சிங் நினைவு நாளான மார்ச் 23 முதல் 
அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 வரை
முடியட்டும் முதலாளித்துவ மதவெறி சாதிவெறி தாக்குதல்கள்!
முன்னேறட்டும் எளிய மக்கள் வாழ்க்கை !
விடியட்டும் ஜனநாயக தமிழகம்!
தேசப்பற்று, தேசியவாதம் பற்றி பேசி நாட்டை இந்துத்துவமயமாக்க ஆளும் மோடி அரசாங்கமும், சங் பரிவாரங்களும் முயற்சிக்கும்போது மக்களை மய்யமாகக் கொண்ட பகத்சிங், அம்பேத்கார் வழிமரபு நாட்டிற்குத் தேவை என்றும் ரோஹித், சந்திரசேகர் தியாக நினைவு போற்றப்பட வேண்டும் என முழங்கி நாடு முழுவதும் இகக மாலெ நடத்தும் இயக்கத்தின் துவக்க நாளான மார்ச் 23 அன்று தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோவையில் மார்ச் 23 அன்று பகத்சிங் படம் பொறித்த சின்னத்தை அணிந்தபடி பிரிக்கால் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டார்கள். இது நிலையாணைகளை மீறும் செயல் என்று நிர்வாகம் அறிவிப்புப் பலகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அன்று நடந்த பகத்சிங் நினைவு தின உறுதியேற்புக் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், பாலசுப்பிரமணியன், தாமோதரன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஏஅய்சிசிடியு தலைவர்கள் தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, சந்திரன், சாமிநாதன் உள்ளிட்ட தோழர்களும், தொழிலாளர்களும் கலந்துகொண்டனர். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்துள்ள தோழர் குணபாலன் மனைவியுடன் கலந்து கொண்டார்.
மார்ச் 23 அன்று அம்பத்தூரில் பிரச்சார இயக்கத்தின் துவக்கமாக அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், பாரதி, பழனிவேல், ஜவகர், வித்யாசாகர், தேன்மொழி ஏஅய்சிசிடியு தலைமைத் தோழர்கள் முனுசாமி, மோகன், வேணுகோபால், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழக தோழர்கள் தேவகி, குப்பாபாய், லில்லி, அகில இந்திய மாணவர் கழக தோழர்கள் சுகுமார், கார்த்திக், வினித், புரட்சிகர இளைஞர் கழகத்தின் சங்கர், ரகுராம் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.
திருவள்ளூரில் மக்கள் சந்திப்பு இயக்கமாக பிரச்சாரம் துவங்கியது. துண்டறிக்கைகளுடன் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.ஜானகிராமன், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் அன்புராஜ், திருநாவுக்கரசு, பாலாஜி தலைமையில் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் நடத்தப்பட்டது.
மார்ச் 24 அன்று விழுப்புரத்தில் பகத்சிங் நினைவு தின உறுதியேற்புக் கூட்டம் நடைபெற்றது. ஊழல் மலிந்த, குற்றமய, ஒடுக்குமுறை எதேச்சதிகார ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை, சாதி ஆதிக்கக் கொலை ஆகியவற்றுக்கு எதிராக, சாதி ஒழிப்புக்காக என்ற முழக்கங்களுடன் நடைபெற்ற கூட்டத்திற்கு அகில இந்திய மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில் இகக(மாலெ) மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், புஇக மாநிலச் செயலாளர் தோழர் தனவேல், மாநிலத் துணைத் தலைவர் தோழர் ராஜசங்கர், இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கலியமூர்த்தி, அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புறத் தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் தோழர் கஜேந்திரன், முற்போக்கு பெண்கள் கழகத்தின் தோழர் செண்பகவள்ளி, ஏஅய்சிசிடியு மாவட்ட அமைப்பாளர் தோழர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மார்ச் 23 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் பகத்சிங் நினைவு தின உறுதியேற்புக் கூட்டத்துடன் இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் பிரச்சார இயக்கம் துவங்கியது. மாவட்டச் செயலாளர் தோழர் ஆசைத்தம்பி, மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் செல்லையா மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் 23 அன்று, திருபெரும்புதூர் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் நினைவு தின உறுதியேற்பு நிகழ்ச்சியும், மார்ச் 31 அன்று நடைபெற உள்ள பொதுக் கூட்டம் மற்றும் தேர்தல் தயாரிப்பு கூட்டமும் நடைபெற்றது. இகக (மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் இரணியப்பன், ராஜகுரு, சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் ராஜேஷ், மற்றும் தோழர்கள் கோபால், சி அண்டு எஃப் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மார்ச் 27 அன்று மண்ணிவாக்கத்தில் இளைஞர் மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளர் தோழர் பாரதி, மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு தலைமையில் புரட்சிகர இளைஞர் கழக உறுப்பினர் சேர்ப்பு வேலைகள் துவங்கப்பட்டன. காஞ்சிபுரத்திலும் புரட்சிகர இளைஞர் கழக வேலைகளைத் துவக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மார்ச் 23 அன்று சீர்காழியில் பகத்சிங் நினைவு நாள் தெருமுனைக் கூட்டம் இகக (மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய மாணவர் கழக,ம் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் கலந்து கொண்டனர். இகக (மாலெ) மத்தியக் குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கண்ணையன் கலந்து கொண்டார்.
சேலத்தில் மார்ச் 23 அன்று புரட்சிகர இளைஞர் கழகம், இகக (மாலெ) அலுவலகத்தில் தோழர் ஜெயராமன் தலைமையில் உறுதியேற்புக் கூட்டம் நடத்தியது. பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது பற்றி கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரமும், பகத்சிங் மரபு பற்றி மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகனும் உரையாற்றினார்கள். கூட்டத்தில் தோழர்கள் ஜெயராமன், வேலுமணி, குமார் ஆகிய மூன்று பேர் கொண்ட புஇக அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. உறுப்பினர் சேர்ப்புக்கும் திட்டமிடப்பட்டது.
விபத்து மரணத்தில் காவல்துறை அலட்சியம் 
இகக(மாலெ) தலையிட்டுப் போராட்டம்
நெல்லை தீன்நகரைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவர் பெங்களூருவிலுள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி மார்ச் 9 அன்று மரணமடைந்தார். உறவினர்களும், நண்பர்களும் கூடிவிட்ட நிலையில் கர்நாடக முதல் தகவல் அறிக்கை வந்தால்தான் உடலைத் தர முடியும் என மருத்துவமனை நிர்வாகம் சொன்னது. இகக (மாலெ) கிளைச் செயலாளர் தோழர் ராஜ்குமார் காவல்நிலைய அதிகாரிகள் முதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வரை தொடர்பு கொண்டும் பலனில்லை. தோழர் ராஜ்குமார் கர்நாடக காவல் துறையைத் தொடர்பு கொண்டு எஃப்அய்ஆர் நகலை மின்னஞ்சல் மூலம் பெற்ற பின்பும் குற்றமய அலட்சியம் காட்டிய காவல்துறையைக் கண்டித்து இளைஞர்களை திரட்டி, மருத்துவமனை முன்பு சாலை மறியல் நடத்த முயற்சித்த பின்பே காவல்துறை உடலைத் தந்தது.
இந்த நிகழ்வு துக்கத்திற்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. சரியான நேரத்தில் தலையிட்ட கட்சியின் மரியாதையை உயர்த்தி உள்ளது.
மார்ச் 19 அன்று விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் புதிய கட்சி அலுவலக திறப்பு நிகழ்ச்சியும், மாவட்ட ஊழியர் கூட்டமும் நடைபெற்றன. மார்ச் 23 - ஏப்ரல் 14 இயக்கத்திற்கு திட்டமிடப்பட்டது. இகக(மாலெ) மத்தியகுழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டார்.
சாதியாதிக்கக் கொலைகளுக்கெதிராக நெல்லையில் மார்ச் 20 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அகில இந்திய மக்கள் மேடை காவல்துறை முதலில் அனுமதி தருவதாகச் சொல்லி பின்னர் மறுத்தது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் திரண்ட தோழர்கள் பத்திரிகையாளர் மத்தியில் ஜனநாயகப் படுகொலைப் பற்றியும் பேசிவிட்டு கலைந்தனர். அகில இந்திய மக்கள் மேடையின் தேசியக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ், இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல் ஜப்பார், வழக்கறிஞர் இரா.தங்கசாமி, இககமாலெ, ஏஅய்சிசிடியு முன்னணிகள் கலந்துகொண்டனர்.

Search