COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, May 2, 2016

மாலெ தீப்பொறி 2016 மே 01 – 15 தொகுதி 14 இதழ் 19

தலையங்கம்
மக்கள் சார்பு மாற்றத்துக்கான குரலான இககமாலெவுக்கு வாக்களியுங்கள்!
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்ற எம்ஜி ராமச்சந்திரன் படப் பாடல் அஇஅதிமுககாரர்கள் பெரிதும் விரும்பும் பாடலாக இருக்கக் கூடும். தமிழக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை கடன் ஏறிவிட்டதே என்ற கவலைகள் இனி தமிழ்நாட்டில் தேவையில்லை.
தமிழ்நாட்டில் திரும்பும் இடத்தில் எல்லாம் கோடி கோடியாய் பணம் கிடைக்கிறது. இருக்கிற கடனைச் செலுத்தி விடலாம். தமிழ்நாட்டில் இனி பஞ்சமே வராது, என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்நாட்டில் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பணம் இருக்கிறது. தோட்டங்கள், பங்களாக்கள், கிட்டங்கிகள் எல்லாம் பணம் இருக்கிறது. ஓடும் வண்டியில் பணம் இருக்கிறது. நின்றிருக்கும் வண்டியில் பணம் இருக்கிறது. பணம்... பணம்... பணம்... இருக்கிறது. எல்லாம் அஇஅதிமுக அமைச்சர்கள், அவர்களுக்கு வேண்டியவர்கள் வசம் இருக்கிறது.
அந்தப் பணத்தை எல்லாம் பறிமுதல் செய்ய வேண்டும். பணம் பதுக்கியவர்களைத் தண்டிக்க வேண்டும். பறிமுதல் செய்வதற்கு முன்னரே அவர்களைத் தண்டிக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது உடனடியாக தண்டித்தால்தான் பணத்தை பறிமுதல் செய்ய முடியும் என்ற நிலைமையும் இருக்கிறது.
இந்தப் பணம் அவர்கள் கையில் இருப்பதால், அது எதையும் சாதிக்கும் என்று அவர்கள் கருதுவதால், அவர்கள் ஆணவத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர். யானை நடந்தால் எறும்பு சாகும் என்று சொன்ன சம்பத் இப்போது, தான் வெயிலில் கிடந்து சாகத் தயார் என்று சொல்லியிருக்கிறார். அவரது பதவி பறிக்கப்பட்டது தற்காலிக பூச்சு நடவடிக்கை என்பது அவர் பதவி பறிக்கப்பட்ட போதே தெரிந்த விசயம்.
ஜெயலலிதா ஆட்சியின் ஆணவமும் குற்றமய அலட்சியமும் ஏற்கனவே சீற்ற அலைகளை ஏற்படுத்தியிருந்தபோது, தனது தலைமை துதிபாடியின் பதவியையே பறித்து விட்டாரே, அவர் எவ்வளவு நியாயமானவர் என்று மக்களை எண்ண வைக்க போடப்பட்ட நாடகம், துன்பத்தில் இருந்த மக்களை சம்பத் கொச்சைப்படுத்திவிட்டார் என்பதற்காக மக்கள் மீது அக்கறை கொண்ட அம்மா எடுத்த நடவடிக்கை அல்ல என்பது இப்போது இன்னும் தெளிவாக அம்பலமாகிவிட்டது.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பழ.கருப்பையா ஜெயலலிதா ஆட்சியில் மய்யப்படுத்தப்பட்ட ஊழல் நடக்கிறது என்பது வரை வெளிப்படையாகப் பேசினார். ஆனால், சம்பத் கட்சியில் இருந்து வெளியேற்றப்படவில்லை. அவரது பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகும் அவராக கட்சியில் இருந்து வெளியேறவும்வில்லை. அம்மா புகழ் பாடிக் கொண்டுதான் இருந்தார். பாதந்தாங்கியாக இருப்பேன் என்றார். அவரது பதவி நீக்கம் தற்காலிகமாக நிலைமையைச் சமாளிக்க என்பது அவருக்குச் சொல்லப்பட்டு செய்யப்பட்டது. மக்கள் மறதி மேல் நம்பிக்கை வைத்து செய்யப்பட்டது. இப்போது மீண்டும் சாமான்ய மக்களின் மரணங்களை கேலி பேசுகிறார்.
அதுவும் எப்படிப்பட்ட மரணம்? அவற்றை மரணங்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. படுகொலைகள். யாரோ ஒருவர் எழுதித் தந்ததை யாரோ ஒருவர் படிப்பதைக் கேட்க கட்டாயமாக வெயிலில் உட்கார வைக்கப்பட்டவர்கள் அவர்கள். ஹிட்லர் ஆட்சியில் தான் மனித உடல் எவ்வளவு வெப்பம், குளிர், வலி தாங்கும் என்று பரிசோதனை செய்ய யூத மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அது அந்த விவரங்கள் தெரியாத காலம். இப்போது, அதே போன்ற ஒரு பரிசோதனை ‘மக்களுக்காக’ நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். தலை காய்ந்த மக்கள். ரூ.100 கண்ணில் பார்த்தாலே அந்த வாரம் முழுவதும் வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று ஏங்கும் நிலையில் இருப்பவர்கள். கூட இன்னும் சில நூறுகளைக் காட்டினால், நிச்சயம் வருவார்கள். யாரும் சம்பத் சொல்வதுபோல் வெயிலில் காய்ந்து சாக வரவில்லை. அன்றைய பொழுது பிழைக்க கிடைத்த வழி அது. சிலருக்கு பிழைப்பு முடிந்து போனது. காசு வாங்கிக் கொண்டுதானே வருகிறார்கள், வெயிலில் காய்வதற்கும் சேர்த்துத்தான் பணம், செத்து விடுவது எதிர்பாரா உடன்விளைவு என்று நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள் அஇஅதிமுககாரர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்களைப் பொறுத்தவரை பட்டியில் அடைக்கப்படும் கால்நடைகள். முதலாளித்துவத்துக்கு தொழிலாளர்களின் கை கால்கள்தான் கணக்கு. அவர்களின் உயிர், உணர்வு, கவுரவம் என எதுவும் பொருட்டில்லை. அஇஅதிமுகவினருக்கு தமிழக வறிய மக்களின் வாக்களிக்கும் விரல்கள் மட்டுமே கணக்கு.
அய்ந்தாண்டு காலமாக தமிழ்நாட்டில் நடந்தது கொலைகார ஆட்சி என்பதற்கு இந்தக் கொலைகளை, இதற்கு முன் மழை வெள்ளத்தில் நடந்த கொலைகளை நியாயப்படுத்தி சம்பத் பேசும் விதமே ஆதாரம். விவசாயிகள் தற்கொலை, மாணவர் தற்கொலை, கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாமல் குடும்பம் குடும்பமாக தற்கொலை, இதற்கு மேல் தங்கள் தலைவனுக்கு மரியாதை செலுத்த வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை, தனியார் கல்விக் கொள்ளையைத் தட்டிக் கேட்ட மாணவர் கொலை, இசுலாமியர்களாகப் பிறந்ததால் காவல் நிலையத்தில் கொலை, ஏழையாகப் பிறந்ததாலும் காவல் நிலையத்தில் கொலை என ஆட்சிக் காலம் துவங்கியதில் இருந்து அது முடிவுக்கு வரும் காலம் வரை கொலைகள் செய்த அரசு ஜெயலலிதா அரசு.
இப்போது இந்தக் கொலைகளை புதுச்சேரியிலும் நடத்த வாய்ப்புக் கேட்கிறார் ஜெயலலிதா. புதுச்சேரியின் முப்பது வேட்பாளர்களையும் ஒரே கூட்டத்தில் அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, தமிழக அரசின் சாதனைகளை விளக்கினார். தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்திலேயே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியும் என்றால் புதுச்சேரி போன்ற ஒரு சிறிய பகுதியை வெகுசீக்கிரம் முன்னேற்ற தமக்கு அனுபவமும் திறமையும் இருப்பதாகச் சொன்னார். அவர் தமது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டபோது, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது என்றார். அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி ஒரு சாதனையா? ஜெயலலிதா பேசுவது எவ்வளவு புரட்டு என்பதைப் புரிந்துகொள்ள இதுவே அளவுகோல்.
கருணாநிதி வேலைவாய்ப்பு பற்றி கேள்வி எழுப்ப, தமது ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கில் அரசு, அரசுத்துறை, தனியார் துறை வேலை வாய்ப்பு பெருகியுள்ளதாக மீண்டும் ஜெயலலிதா பட்டியலிடுகிறார். பார்வையற்ற பட்ட தாரிகள் முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடைசி வரை நிறைவேற்றாத ஜெயலலிதாவின் பொறுப்பில் இருக் கும் காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களைப் பந்தாடியதை நாம் பார்த்தோம். வேலை வாய்ப்பு அவர்களது முக்கியமான கோரிக்கை. பார்வையற்ற பெண் ஒருவருக்கு ஒரு தனியார் பள்ளியில் சில தனிநபர்கள் முயற்சியால் அவர் படித்தப் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்தது பற்றி பெரிதாக பத்திரிகை செய்திகள் வந்துள்ளன. இதுபோன்ற வேலை வாய்ப்புக்களை எல்லாம் சேர்த்து ஜெயலலிதா சொன்னாலும் வியப்பில்லை.
இன்னும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. அதில் இன்னும் என்னென்ன புரட்டுகள் பொய்கள் இருக்கின்றன என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எப்படியாயினும் இந்த கொலைகார, எதேச்சதிகார, ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும். அஇஅதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு கேட்கச் செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகளை எதிர்கொள்கிறார்கள். இந்த எதிர்ப்பு அதன் தர்க்கரீதியான எல்லையை எட்டியாக வேண்டும்.
அம்பத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் மோகனிடம், தனியாக சிறுகடை நடத்திப் பிழைக்கும் ஒரு தையல் தொழிலாளி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4,000 அல்லது ரூ.5,000மாவது ஊதியம் கிடைக்கும் என்ற சாதாரண உத்தரவாதம் கூட ஜெயலலிதா தரவில்லை என்றார். ஜெயலலிதா மட்டுமல்ல, வேறு யாரும் தொழிலாளர்கள் பெறும் மாதச் சம்பளத்துக்கு உத்தரவாதம் பற்றி பேசவில்லை என்றும் சொல்கிறார். அவருக்கோ, அவரைச் சார்ந்த யாருக்கோ, மாதம் இந்த சாதாரண கூலி கூட பெற முடியாத நிலைதான் அம்பத்தூரில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்கிறது.
அதிவேக இணைய இணைப்பு, கைக் கணினி என்ற புதிய வாக்குறுதிகள் தரும் திமுகவும்தான் தமிழக மக்களின் இன்றைய துன்பகரமான நிலைமைகளுக்குக் காரணம். விவசாயிகள் கடன் தள்ளுபடி பற்றி பேசுகிற அவர்கள், அடுத்து விவசாயியின் வாழ்க்கையைப் பாதுகாப்பது பற்றி உருப்படியாக ஏதும் சொல்லவில்லை. மக்கள் பிரச்சனைகள் பற்றியெரியும்போது பேண்ட் போடுவது ஏன் என்பது பற்றி திமுக பிரச்சாரக் கூட்டங்களில் ஸ்டாலின் விளக்கமாகப் பேசுகிறார். ஏற்கனவே பல முறை திமுக ஆட்சியைப் பார்த்தாகிவிட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி எந்த நம்பகத்தன்மையையும் மக்கள் மத்தியில் உருவாக்கவில்லை. திமுக இனிமேல் வேண்டாம் என்று தமிழக மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
குழப்பங்கள் இன்னும் தீராத நிலையில், எந்த நேரமும் வைகோ தரப்பில் இருந்தோ, விஜயகாந்த் தரப்பில் இருந்தோ அடுத்த குழப்பம் வரலாம் என்ற நிலையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையும் வந்து விட்டது. முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்பதை புரிந்துகொண்டு எழுதும் போட்டி பத்திரிகையாளர்களுக்கு வைத்தால் அதுவே மிகவும் பரபரப்பான ரியாலிடி ஷோவாக தமிழ்நாட்டில் இருக்கும். இதில் தேர்தல் அறிக்கை என்ன சொல்லி என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து ஆட்சியை இழந்து பிறகு சட்டத்தை திரும்பப் பெற்று... என பல விசயங்கள் பார்த்த தமிழ்நாட்டில் மதமாற்றச் சட்டம் வரும் என்கிறார்கள் மதவெறியை தூண்டும் பாஜககாரர் கள். தமிழ்நாட்டில் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்நகர்த்தும் தேர்தல் அறிக்கையை முன்வைத்து வாக்கு கேட்கிறார்கள். ஏற்கனவே தமிழக மக்களால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால்தான் கூட்டணி கூட அவர்களுக்குக் கைகூடவில்லை.
இந்த நிலைமைகளில் தமிழக சாமான்ய மக்களின் குரல்கள், கோரிக்கைகள் தமிழக சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரப் பிரச்சனைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலின் மய்யத்துக்கு வர வேண்டும். வலுவான எதிர்க்கட்சிப் பாத்திரத்தை சட்டமன்றத்துக்கு வெளியே ஆற்றுகிற இககமாலெ, மாற்றத்துக்கான குரலை, மக்களுக்கான குரலை சட்டமன் றத்திலும் எழுப்ப வாய்ப்பு கேட்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் விரோதக் கொள்கைகள் தீவிரமாக அமலாகிற இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இகக மாலெ போட்டியிடுகிற பத்து தொகுதிகளில் இகக மாலெவுக்கு வாக்களிப்பது மக்கள் பிரச்சனைகளை திறம்பட முன்னிறுத்த வழிகோலும்.
தோழமையான சில கேள்விகளுக்கு 
தோழமையுடன் சில பதில்கள்
காம்ரேட்
தமிழ்நாட்டின் 10 தொகுதிகளில் இகக மாலெ தனது தேர்தல் வேலைகளைத் துவக்கிய பிறகு பொதுவான இடதுசாரி மற்றும் நட்பு வட்டாரங்களில் இருந்து சில கேள்விகளைச் சந்தித்தோம். அந்தக் கேள்விகளையும் அவற்றுக்கு கட்சி அளிக்கும் பதில்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.
கந்தர்வகோட்டை, கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இகக மாவுடனும் மாதவரத்தில் இககவுடனும் இகக மாலெ போட்டியிடுவதை இகக மாலெ தவிர்த்திருக்கக் கூடாதா?
இந்தக் கேள்வி எழுப்புபவர்கள், குறைந்த பட்சம் இடதுசாரிக் கட்சிகளுக்கிடையில் போட்டி என்பதைத் தவிர்த்திருக்கலாமே என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த விருப்பத்தை நாம் மதிக்கிறோம். ஆனால், இந்தக் கேள்வி, இகக, இககமா நோக்கி எழுப்பப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
23.03.2016 அன்றுதான் மக்கள் நலக் கூட்டணியும் தேமுதிகவும் சேர்ந்தனர். அதற்குப் பிறகுதான் ஜி.கே.வாசன் இவர்களுடன் இணைந்தார். மாதவரம், கந்தர்வகோட்டை, கவுண்டம் பாளையம் உள்ளிட்ட 10 தொகுதிகளில்தான் போட்டியிடும் விவரத்தை, 16.03.2016 அன்றே, இகக இககமா கட்சிகளிடம் தெரியப்படுத்தி, இடதுசாரி ஒற்றுமை கருதி அந்தத் தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று இகக மாலெ கேட்டுக் கொண்டது. அவர்கள் மக்கள் நலக் கூட்டணியில் இருப்பதால் மாலெ கட்சியை ஆதரிக்குமாறு அவர்களைக் கேட்கவில்லை.
இகக, இககமா தலைவர்கள் இககமாலெ யுடன் கூட்டியக்கங்களில் பங்கு கொண்டுள்ளனர். மக்கள் நலக் கூட்டணி வந்த பிறகும் கோவையிலும் சென்னையிலும் பொது மேடைகளில் பங்கேற்றுள்ளனர். துரதிர்ஷ்வசமாக, பரஸ்பர போட்டியைத் தவிர்க்கலாம் என இககமாலெ கொடுத்த கடிதத்திற்கு இகக, இககமா கட்சிகள் எந்தப் பதிலும் தரவில்லை.
தங்கள் கூட்டாளிகளுக்காக, இணக்கமான முறையில், வெற்றி பெற்ற இடங்களைக் கூடத் தவிர்த்தவர்கள், திருவள்ளூர், கோவை, புதுக் கோட்டை மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி மாற்றிக் கொண்டிருக்க வேண்டாமா? அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
2013ல் நடந்த இககமாலெ ஒன்பதாவது காங்கிரஸ் ஆவணம், இடதுசாரி ஒற்றுமைக்கு நாடு முழுவதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியபோதே, இடதுசாரி ஒற்றுமைக்கு என்ன தடை என்பதையும் சுட்டிக் காட்டியது.
1. சமீபத்திய காங்கிரஸ் - திரிணாமூல் காங்கிரஸ் பிரிவை அடுத்து, இககமாவுக்கு காங்கிரசோடு ஏற்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட செயல்தந்திர நெருக்கம் தொடர்பான அறிகுறிகள் மற்றும் 2. இகக, இககமா கட்சிகள் இடதுசாரி ஒற்றுமையைக் காட்டிலும் முதலாளித்துவ கட்சிகளோடு ஒற்றுமைக்கு முன்னுரிமை தருவதன் தொடரும் வரலாறு ஆகியவை இத்தகைய ஒற்றுமைக்கு முக்கியத் தடைகளாகும்.
2016 சட்டமன்றத் தேர்தல்கள் இந்த இரண்டு தடைகளுக்கும் சாட்சி சொல்கின்றன.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் (2016) காங்கிரசோடு கூட்டணியோ, தொகுதி உடன்பாடோ இல்லை என்று சங்கடப்பட்டு நெளிந்து கொண்டு சொன்ன சிபிஎம், ஏப்ரல் 27 அன்று கொல்கத்தாவில் பார்க் சர்க்கஸ் மைதானத்தில், அவர்களது முன்னாள் முதலமைச்சரும் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ருமான தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ராகுல் காந்தியோடு இணைந்து கலந்து கொண்டதை, ராஜீவ் காந்திக்குப் புகழாரம் சூட்டியதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இருவருக்கும் ஒரே மாலை போட்டார்கள். தேசிய ஊடகங்களில், அது முக்கியப் படம். ஒரே மாலைக்குள் நுழையவும் வெளியே வரவும் மிகவும் சிரமப்பட்டார்கள். நெளிய வைக்கும் சங்கடமான உறவுக்கேற்ற பொருத்தமான மாலைதான் எனத் தோன்றுகிறது.
மேற்கு வங்கத்தில், காங்கிரசோடு உறவு என்பது இடதுசாரி கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமைக்குப் பிரச்சனை என்றால், தமிழ்நாட் டில் சிபிஅய், சிபிஎம், மதிமுக, தேமுதிக, தமாக போன்ற முதலாளித்துவக் கட்சிகளோடு உள்ள உறவுகளை, இகக, இககமா கட்சிகள், இடதுசாரி கட்சிகளுக்கு இடையிலான அய்க்கியத்தைக் காட்டிலும் கூடுதலாக ஏற்றிப்போற்றி மதிக்கின்றன. அதனால்தான் இகக மாதவரத்திலும், இகக (மா) கந்தர்வகோட்டை மற்றும் கவுண்டம்பாளையம் தொகுகளிலும் இகக (மாலெ)யுடன் போட்டி வராமல் இருப்பதைத் தடுக்க எந்த அக்கறைமிக்க முயற்சியும் எடுக்கவில்லை.
ஞானி போன்ற நன்கறியப்பட்ட தொலைக்காட்சி விவாதப் பங்கேற்பாளரும் நாடகாசிரியரும் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கல்கியில் எழுதியதை தீக்கதிர் 22.04.2016 நிறைய இடம் தந்து பெரிதாகப் பிரசுரம் செய்துள்ளதே. ஞானி போன்ற அறிவாளிகள் சொல்வதை இகக (மாலெ) ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?
இந்திய தண்டனைச் சட்ட இபிகோ 124ஏ பிரிவு (ராஜதுரோகம்) தொடர்பான பிரிவு நீக்கப்பட வேண்டும், கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு ஒழிக்கப்பட ரோஹித் சட்டம் வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு, ஆதிக்க குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனைக்குத் தனிச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இகக (மாலெ)யும் அங்கம் பெறும் அகில இந்திய மக்கள் மேடை 03.04.2016 அன்று சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்தியது. இந்தக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட ஆளுமைக ளில் வசந்திதேவியும் ஞானியும் இருந்தனர். வசந்திதேவியும் ஞானியும் இப்போதும் நமது மரியாதைக்கு உரியவர்கள்தான். இனியும் நாம் அவர்களுடன் உறவாட நேரிடும். ஒரு மாற்று அரசியல், ஓர் இடதுசாரி ஜனநாயக அணியை அமைப்பது என்பதில் இகக (மாலெ)வுக்கு, இகக, இகக(மா)வுடன் இருவழிப் போராட்டம் உள்ளது. இகக (மாலெ), வசந்திதேவி, ஞானி, இகக, இகக(மா) போன்றோருடன் அய்க்கியம் மற்றும் போராட்டம் என்ற உறவைக் கொண்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணி, பஞ்ச பாண்டவர், ஆறுமுகம் ஏறுமுகம் விஷயங்களில், இகக (மாலெ)வுக்கு ஞானி, வசந்திதேவி, இகக, இகக(மா) கருத்துக்களோடு போராட்ட உறவே உண்டு.
ஞானியின் வாதம் ஏற்கத்தக்கதா?
ஞானியின் வாதங்கள் பின்வருமாறு:
 விஜயகாந்த், கருணாநிதியை விட ஜெயலலிதாவை விட, சிறந்த முதலமைச்சராக இருப்பாரா என்று யோசிப்பதை விட, அவர்களை விட மோசமான முதல்வராக இருப்பாரா என்று யோசிப்பதே சரியாக இருக்கும். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றேதான் நம்புகிறேன். எல்லா ஊழல் அராஜகங்களையும் செய்து விட்டு அவற்றை நியாயப்படுத்தும் சாமர்த்தியமான திமுக தலைமையின் திறமையும், அவற்றைப் பற்றி பதிலே சொல்லத் தேவையில்லை என்ற அதிமுக தலைமையின் ஆணவமும் விஜய்காந்திடம் நிச்சயம் இல்லை.
 தவறு செய்தால் திமுக தலைமையை தூக்கி எறியும் சக்தி திமுகவில் இல்லை. அதிமுக தலைமையை தூக்கி எறியும் சக்தி அதிமுகவில் இல்லை. ஆனால் விஜய்காந்த், தேமுதிக தவறு செய்தால் அதை சரி செய்யவோ, சரி செய்ய முடியாது என்றால் தூக்கி எறியவோ இடதுசாரிகளும் வைகோவும் திருமாவும் தயங்க மாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
அதிமுக, திமுகவுக்கு மாற்று விஜய்காந்த் கூட்டணி என்பதற்கு ஞானி எந்த நேர்மறையான காரணமும் வாதமும் முன்வைக்கவில்லை. அவர்களை விட இவர் மோசமில்லை என எப்படி முடிவுக்கு வந்தார்? மோசமாகவே இருந்தாலும், சரி செய்ய முடியும் என எப்படி நம்புகிறார்? வாசன், வைகோ, விஜய்காந்த் ஊழலற்ற மக்கள் சார்பு நல்லாட்சி தருவார்களா? ஆம் ஆத்மி அனுபவம் ஞானிக்கு என்ன ஞானம் தந்தது? ஊழல், வெறும் நல்லவர் கெட்டவர் விவகாரமா? நான் நல்லவனா கெட்டவனா எனத் தெரியாது, மற்ற அய்வரும் நல்லவர்கள் என விஜய்காந்த் பேசியதிலிருந்து ஞானி இந்த முடிவுகளுக்கு வந்துவிட்டாரா? முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ அரசியலுக்கும் இடையிலான சாரமான பாலம் ஊழல். முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உரசல் ஏற்படாமல் உதவும் எண்ணெய் ஊழல். பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை ஓர் அரசு பின்பற்றினால், அங்கே நிச்சயம் வெளிப்படைத் தன்மையற்ற அரசாளுகையும், ஊழலும் தவிர்க்க முடியாதவை. அஞ்ஞான மூட நம்பிக்கைகளை விஞ்ஞானபூர்வ பாட்டாளி வர்க்க அரசியல் நிராகரிக்கிறது.
மாற்றுக்கான ஒரு புதிய முயற்சி வருகிறது. அந்த பரிசோதனைக்கு வாய்ப்பு தராமலே, வெறும் ஊகங்கள் கற்பனைகள் அடிப்படையில், உங்கள் புத்தக அறிவு திண்ணை/நாற்காலி மார்க்சியத்திலிருந்து, அவற்றை நிராகரிப்பது உங்கள் சுருங்கிய மனங்களையும் குறுங்குழுவாத அணுகுமுறையையும் மட்டுமே காட்டுகிறது அல்லவா? இப்படியும் ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
இதற்கும் கூட நாம் உள்நோக்கம் எதுவும் கற்பிக்காமல் அரசியல்ரீதியாகவே பதில் சொல்லப் பார்ப்போம்.
அதிமுக திமுகவுக்கு மாற்றணி என்ற சொற்றொடரே தமிழ்நாட்டிற்கு புதிது என்று சொல்வது சரியல்ல. அதற்கான தேடலும் தேவையும் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தமிழகத்தில் எழுந்துள்ளது, இது ஒரு பண்பு மாற்றம் என அறுதியிட்டு சொல்லும் அதே நேரம், இது ஏதோ முற்றிலும் புதிய அரசியல் கண்டுபிடிப்பு என்று சொல்வதில் பொருள் ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிடத் துவங்கிய காலத்தில் இருந்தே, பேய்க்கு பிசாசும் பிசாசுக்குப் பேயும் மாற்றல்ல, பேய் பிசாசு இரண்டிற்கும் மாற்று வேண்டும் என இகக(மாலெ) சொல்லி வருகிறது.
குமரிஅனந்தன், நெடுமாறன் ஒரு முயற்சி எடுத்துள்ளனர். மூப்பனார், திருமாவளவன் கிருஷ்ணசாமியுடன் ஒரு முயற்சி எடுத்துள்ளார். 1996ல் மதிமுக 177 இடங்கள் சிபிஎம் 40 இடங்கள், அய்க்கிய ஜனதாதளம் சமாஜ்வாதி கட்சி மீதி இடங்கள் என ஒரு மாற்றுக்கான முயற்சி நடந்தது.
வைகோ அப்போதும் உணர்ச்சிமயமாய் சுர்ஜித்தில் வாழும் பெரியாரைக் கண்டார். சோசலிசம் வரும் வரை அந்தக் கூட்டணி தொடரும் என்றார். இப்போது விஜய்காந்த் போல் அப்போது வைகோ முதலமைச்சர் எனப் பேசப்பட்டது. அப்போது இகக, திமுக கூட்ட ணியில் 11 இடங்கள் பெற்றுப் போட்டியிட் டது. இகக(மா) 40 இடங்களில் போட்டியிட்டு விளவங்கோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அஇதிமுக 177 தொகுதிகளில் போட் டியிட்டு ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இகக போட்டியிட்ட 11 இடங்களில் 8 இடங்கள் வென்றது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடிய போது சந்தன மரங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக வைகோ மெய்ஞானச் சித்தராய் அப்போது விளக்கம் தந்தார்.
ஆகவே, திமுக அதிமுகவுக்கு மாற்று என்பது புத்தம் புதிய முயற்சி அல்ல. பழைய முயற்சிகள் ஏன் தோற்றன? என்ன படிப்பினைகள்? நிச்சயம், இவை விவாதிக்கப்பட வேண்டிய கேள்விகள்.
கடைசியாக இகக(மா)வின் மார்க்சிய கருத்தியலாளர் தோழர் அருணன் 24.04.2016 தீக்கதிரில் எழுப்பி உள்ள வாதங்கள் மூலம் முன்வைக்கும் கேள்விகளைப் பார்ப்போம்.
 ஒரு தலைவர் பற்றிய மதிப்பீட்டை சில அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனத்தில் இருந்து தீர்மானிக்கக் கூடாது. மாறாக வெகுமக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள செல்வாக்கை வைத்தே பிரதானமாக தீர்மானிக்க வேண்டும்.
 வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும், ஜெயலலிதாவும் கருணாநிதியும்தான் இன்று வாக்காளர்கள் முன்பு முதல்வர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவரையும் புறம்தள்ளக் கூடிய அளவிற்கு வெகுமக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பவர் விஜய்காந்த் அவர்கள்தான். அப்படிப்பட்டவரை நாளைய முதல்வராக முன்மொழிவது இயல்பானது, சரியானது.
 இலக்கியம் என்பது கனவுகளைக் கையாள்வது, அரசியல் என்பது சாத்தியப்பாடுகளைக் கையாள்வது ஆகும்.
 அடுத்தடுத்த எதார்த்த கட்டங்களை அடைந்துதான் உன்னத லட்சியங்களை எட்ட முடியும்.
கருணாநிதி ஜெயலலிதாவுக்கு இணையாக விஜய்காந்த், மக்கள் செல்வாக்கு பெற்றவர் என தோழர் அருணன் கருதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்துவது அவர்கள் பிரச்சனை. அவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், அதற்கு முன் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பது ஜனநாயக பண்புகளுக்கு விரோதமானது என்றனர். மாற்றிச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் ‘மக்கள் செல்வாக்கு’ பெற்ற எல்லா தலைவர்களையும் கம்யூனிஸட்கள் ஆதரிக்க வேண்டுமா? ஹிட்லர், முசோலினி, இந்திராகாந்தி, மோடி, ஜெயலலிதா, கருணாநிதி மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களே. நாடாளுமன்ற ஜனநாயக முறையில், அந்த முறை மூலமே, முதலாளித்துவ ஆட்சியாளர்கள் பாசிஸ்ட்கள், மதவெறியர்கள், பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தார்கள் என்பது பேராசிரியர் அருணனுக்கு நன்றாகவே தெரியும்.
விஜய்காந்த்திற்கு மக்கள் செல்வாக்கு கூடுதலாக இருப்பதால் அவர் இகக, இகக(மா) கட்சிகளைவிட மேலானவர் ஆக மாட்டார். மார்க்சிய ஆசான்கள், கருத்தைக் களத்தில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர்கள், ‘இயக்கம் தான் எல்லாம் இறுதி லட்சியம் ஏதுமில்லை’ என்பது தவறு எனவும், கம்யூனிஸ்ட்கள், நிகழ்காலப் பணிகளில் எதிர்கால லட்சியங்களை நுழைப்பவர்கள் எனவும் சொல்லி உள்ளனர். இதற்கு புறம்பாக நடப்பது, நாடாளுமன்ற முடக்குவாதம், வால்பிடிக்கும் வாதம் எனச் சாடி உள்ளனர்.
எது முடியுமோ, அதுவே சாத்தியம், எது சாத்தியமோ அதுவே அவசியம் என்பது தவறு. அவசியமானதை சாத்தியமாக்க வேண்டும். அதனைச் செய்து முடிக்க வேண்டும். தெரியாததை எல்லாம் தெரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். முடியாது என எதையும் விடாமல் எதையும் செய்து முடிக்க முயற்சிக்க வேண்டும். விஜய்காந்த், வாசன், வைகோ தாண்டி இடதுசாரி ஜனநாயக மாற்று வரும். காத்திருந்து நம்பிக்கையோடு முயற்சிப்போம். அதற்கு முன் நிபந்தனையாய், இடதுசாரிகள் நம் சொந்த பலத்தை வளர்த்துக் கொள்வோம்.
அகில இந்திய மக்கள் மேடை கருத்தரங்கம்
ஏப்ரல் 3 அன்று சென்னையில் அகில இந்திய மக்கள் மேடை மாநில பிரச்சாரக்குழு உறுப்பினர் தோழர் ஜவகர் தலைமையில் தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ நீக்கப்பட வேண்டும், கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரோஹித் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளை சாதி ஆதிக்கக் கொலைகளிலிருந்து பாதுகாக்க சட்டமியற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கு நடைபெற்றது. மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் வசந்திதேவி, பத்திரிகையாளரும் நாடகக் கலைஞருமான ஞானி, அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய பிரச்சாரக் குழு உறுப்பினர் பேராசிரியர் மார்க்ஸ், ஏஅய்சிசிடியு அகில இந்தியத் தலைவர் தோழர் குமாரசாமி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் துணைத் தலைவர் தோழர் ஷெஹ்லா ரசீத் உரையாற்றினர். தோழர் ஷெஹ்லா ரசீத், தனது உரையில் எம்பிக்கள், அமைச்சர்கள் அரசாங்கம், அடியாட்கள் என்று வலுவாக உள்ள பாஜக அரசாங்கத்துக்கு வலுவான கருத்துக்கள் என்ற ஆயுதம் கொண்டு வீதிகளில் சவால் விடுவோம் என்றும் மேற்சொன்ன சட்டங்களை அரசாங்கம் கொண்டுவர தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேனாள் துணை வேந்தர் வசந்திதேவி பேசும்போது தேசத்துரோகச் சட்டம் தமிழகத்தில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது ஏவப்பட்டதை குறிப்பிட்டு அந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றார். திரு.அப்பாராவ் அய்தராபாத் பல்கலைக் கழக துணை வேந்தராக பொறுப்பேற்றதை விமர்சித்தார்.
பத்திரிகையாளர் ஞானி, தமிழகத்திலிருந்த 1954ம் ஆண்டு நாடக தணிக்கைச் சட்டம் எவ்வளவு கொடுமையானது என்று குறிப்பிட்டு தான் நீதிமன்றம் சென்று போராடிய பின்தான் அது நீக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். தமிழகத்துக்கு ஒரு வலுவான மாணவர், ஜனநாயக இயக்கம் இன்றைய தேவை என்றார்.
பேராசிரியர் மார்க்ஸ் தனது உரையில் குடிமக்களின் அரசியல் உரிமைகள் தாக்கப்படுவதையும், அரசாங்கத்தின் பல்கலைக்கழக கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்தார்.
தலித் ஆய்வு மய்யத்தின் தோழர் அறிவழகன் நன்றி கூறினார். கூட்டத்தில் புதுச்சேரி அகில இந்திய மக்கள் மேடை தோழர்களும் கலந்து கொண்டனர்.
விடாப்பிடித் தன்மையையும் குறுங்குழுவாதத்தையும் 
குழப்பிக் கொள்ள வேண்டாம்
திபங்கர் பட்டாச்சார்யா
தற்போதைய நாட்டு நடப்புகளை 1975 நெருக்கடி நிலையுடன் ஒப்பிட்டும் 1984 சீக்கியர் படுகொலைகளை 2002 குஜராத் மனிதப் படுகொலையுடன் ஒப்பிட்டும் புதுப்பிக்கப்பட்ட விவாதங்கள் நடந்துவருகின்றன.
ஜவஹர்லால் நேரு பல்கலை கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், 1975 நிலைமைகளுக்கும் தற்போதைய நிலைமைகளுக்கும் இடையிலும் 1984க்கும் 2002க்கும் இடையிலும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்ட அவரது சமீபத்திய உரை இந்த விவாதங்களை தூண்டியுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்கு இடையில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனால், 1975லேயோ, 1984லேயோ அரசு தலையிடாதது அல்லது குறைவாக தலையிட்டதன் அடிப்படையில் இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான வேறுபாட்டை கன்னையா குமார் சொல்ல முற்பட்டதுதான் விவாதங்களைத் துவக்கியுள்ளது. சுதந்திரத்தின் பாதுகா வலனாக பிரபலமாகியுள்ள ஒரு மாணவர் தலைவரிடம் இருந்து வந்த இந்த தவறான முன்வைப்பில் ஆதாயம் தேட ஆர்எஸ்எஸ் - பாஜக - எபிவிபி முகாம் முயற்சி செய்தது; ஜேஎன்யு இயக்கத்தின் ஆதரவாளர்களான பல பத்திரிகையாளர்கள், மாணவர் தலைவர்கள், செயல்வீரர்களும் கன்னையா குமாரின் வாதத்தில் இருந்த பிழையைச் சுட்டிக்காட்டினார்கள்.
அவர் பேசியதில் தவறாக புரிந்துகொள்ளப்பட, தவறாக முன்வைக்கப்பட ஏதுமில்லை என்ற போதிலும், அவர் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது, தவறாக முன்வைக்கப்பட்டது என்று கன்னையா குமாரே சொன்னார். ஆனால், இடதுசாரி தாராளவாத வட்டங்களைச் சேர்ந்த சில நண்பர்கள், கன்னையா சொல்லவில்லை என்று சொன்னதை, அல்லது அந்தப் பொருள்பட பேச வில்லை என்று சொன்னதை, நியாயப்படுத்த முயற்சி செய்து, கன்னையா குமார் சொன்னதை விமர்சிப்பது இடதுசாரி குறுங்குழுவாதம் என்று வகைப்படுத்தினர். எனவே சமீபத்திய இந்திய வரலாற்றில் இந்த முக்கியமான திருப்புமுனைகள் பற்றிய மறுவாசிப்பு நமக்கு பல விசயங்களைச் சொல்வதாக இருக்கும்.
போர்க்காலங்களில் அயலுறவுப் பிரச்சனைகளால் ஏற்படும் நெருக்கடியை சமாளிப்பது என்பதாக அல்லாமல் உள்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளிக்க ஜ÷ன் 1975ல் இந்திரா காந்தி அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்திராகாந்தியை, அவரது தலைமையிலான காங்கிரசைப் பொறுத்தவரை, அது ஒரு சரியான அரசியல்சாசன நடவடிக்கை. நவீன ஜனநாயக குடியரசு என்ற கருத்தாக்கத்தின் மய்யமான ஒட்டுமொத்த அடிப்படை உரிமைகளையும் ரத்து செய்ய, அரசியல் சாசன எல்லைகளுக்குள்ளேயே நடந்த அதிரடி ஆட்சிமுறை மாற்றம். நெருக்கடி நிலைக்கும் பாசிசத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி கன்னையாவுக்கு முன் பலரும் பேசியிருக்கின்றனர். அது, உள்நாட்டு எதிரிகளை அழித்தொழிப்பது உள்ளிட்ட ஒரு முழுமையான அடிபணிதலைக் கோரும் வெளிப்படையான முழுமையான பயங்கரவாத சர்வாதிகாரத்தின் வடிவில் ஒரு முதலாளித்துவ அரசு. உண்மையில் 1970களின் துவக்கத்தில் இருந்து நெருக்கடி நிலை வரை, வரவிருக்கிற பாசிச அபாயத்தை தடுப்பது என்ற பெயரில், இகக காங்கிரசை ஆதரித்தது.
இதன் விளைவுகளை நாம் அனைவரும் நன்கறிவோம். ஜனநாயகத்தின் மீதான வெளிப்படையான தாக்குதலை ஆதரித்ததற்காக கம்யூனிஸ்டுகளுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இககமா நெருக்கடி நிலையை ஆதரிக்கவில்லை; ஆனால் பெரிய எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல் போனது. தலைமறைவு கட்சியாக இருந்த இககமாலெ நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்துப் போராடியது. ஆர்எஸ்எஸ்ஸ÷க்கும் ஜனசங்குக்கும் தங்களை ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று காட்டிக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. 1970களின் துவக்கத்தில் ஆர்எஸ்எஸ்ஸ÷ம் அதன் சொந்த நோக்குநிலையில் இருந்து இந்திராகாந்தியை ஆதரித்தது என்பது வேறு விசயம். வங்கி தேசியமயமாக்கம் பிற சோசலிச நடவடிக்கைகளுக்காக இகக இந்திரா காந்தியை ஆதரித்தது; ஆனால், ஆர்எஸ்எஸ் தனது உள்ளார்ந்த பாகிஸ்தான் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து பங்களாதேஷ் மீதான போருக்காக இந்திரா காந்தியை ஆதரித்தது.
நெருக்கடி நிலை சஞ்சய் கும்பலின் அத்துமீறல்கள் பற்றியது மட்டுமல்ல. அது இந்திய அரசின் மிகவும் மோசமான ஒடுக்குமுறை அவதாரத்தை வெளிகொணர்ந்தது. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவதற்கு முன், கொல்கத்தா அருகில் காசிப்பூரிலும் பாராநகரிலும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர்; இரண்டு நாட்களாக நடந்த வெளிப்படையான அரசு பயங்கரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். போலி மோதல் படுகொலைகள், காவல் சித்திரவதைகள், படுகொலைகள், பொய் வழக்குகளில் அரசியல் செயல்வீரர்கள் மொத்தமொத்தமாய் நீண்ட நாட்களுக்கு விசாரணை ஏதுமின்றி சிறையில் அடைக்கப்பட்டது போன்ற, சட்டபூர்வமான ஆட்சிக்கு அப்பாற்பட்ட, அரசு பயங்கரவாத வழிமுறையும் அதனுடன் சேர்ந்து வந்தது; அப்போது முதல் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நாட்டின் பிறபகுதிகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களை எதிர்கொள்ள இதுவே அரசின் வழமையான போர்த்தந்திரமானது.
நெருக்கடி நிலைக்குப் பிந்தைய அரசியல் சூழலில், அது வரை ஜனதா கட்சியின் முக்கியமான அங்கமாக இருந்த ஆர்எஸ்எஸ் அரசியல் அங்கீகாரமும் செல்வாக்கும் பெற்றது. மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தில் வாஜ்பாயியும் அத்வானியும் முக்கிய பதவிகளைப் பிடித்தனர். தென்மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. நெருக்கடி நிலையை ஆதரித்த இகக, மத்தியில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கமான மொரார்ஜி அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு தர நேர்ந்தது. எதிர்ப்பார்த்ததை விட விரைவாகவே இந்திரா காந்தியின் எழுச்சி நிகழ்ந்தது. ஆர்எஸ்எஸ் தலையீட்டால், ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்ட ஜனசங் ஆர்எஸ்எஸ் கட்டளைகளுக்கேற்ப செயல்பட்டதால், மொரார்ஜி தேசாய்க்கு எதிராக சரண்சிங்கை நிறுத்திய காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததால், 1980 இடைக்கால தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெற்றதால் ஜனதா அரசாங்கத்தால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அசாமிலும் பஞ்சாபிலும் போராட்டங்கள் வளர்ந்து வந்த பின்புலத்தில், அரசியல் ஸ்திரத்தன்மை, இந்தியாவின் ஒற்றுமை ஓர்மை என்று சொல்லி இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
ஒரே அரசியல் கருத்தியல் வழித்தடத்தில்தான் 1984ம் 2002ம் நிகழ்ந்தன என்று யாரும் சொல்ல முடியாது. வரலாற்றுரீதியாக, ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ற விதத்தில் சீக்கியர் தொடர்பான காங்கிரசின் அணுகுமுறை, இசுலாமிய சமூகம்பால் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் கொண்டுள்ள வெறுப்பு, குறுங்குழுவாத துவேசம் போன்றதல்ல. 1984க்குப் பிறகு சீக்கியர் மீதான வகுப்புவாதத் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை. ஆனால், 2002அய் பொறுத்த வரை, அதற்கு முன்னர் 1980கள் 1990கள் நெடுக இசுலாமியர்கள் மீதான பல்வேறு தாக்குதல் நடந்துள்ளன; அதற்குப் பிறகும் தொடர்ந்து இசுலாமியர் மீதான தாக்குதல் சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 2013ல் நடந்த முசாபர்நகர் தாக்குதல் மிகவும் கொடூரமான ஒன்று.
ஆனால், 1984 தெரியாமல் நிகழ்ந்த தவறா? வெறி கொண்ட கும்பல் நடத்திய தாக்குதல் என்று மட்டும் அதைப் பார்க்க முடியுமா? அப்படிச் சொல்வது வரலாற்றை பரிகசிப்பதாக இருக்கும். இந்திரா காந்தி படுகொலைக்கு முன், அமிர்தசரசில் பொற்கோயிலில் ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது இந்திய ராணுவத்தின் சீக்கிய பிரிவினர் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இதுபோல் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். டில்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் வெளிப்படையான தலைமையில் சீக்கியர் படுகொலை நடந்தது. 2002ல் குஜராத்தில் அரசு வேடிக்கைப் பார்த்தது போலவே, 1984லிலும் அரசு வேடிக்கைப் பார்த்தது. வெறிபிடித்த கும்பல், தான் நினைத்ததைச் செய்தது. மோடி நியூட்டன் விதி பற்றி பேசினார்; மரம் விழுந்தால் பூமி நடுங்கும் என்று சொல்லி ராஜீவ் காந்தியும் அதேபோல்தான் நடந்துகொண்டார். 1984 நவம்பரில் நடந்த தேர்தலில் உருவான பரிதாப அலை காங்கிரசுக்கு பெருவெற்றி பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக்குப் பின், ஒரு தலைவர் படுகொலை செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட துயரம் மட்டுமின்றி, காலிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக காங்கிரஸ் தூண்டிவிட்ட மதவாத வெறியும் காரணம் என்பது அந்தத் தேர்தல் பிரச்சாரத்தை நினைவுகூர்ந்தால் தெரியும்.
அப்போது ஆர்எஸ்எஸ் என்ன செய்து கொண்டிருந்தது? கும்பல் வன்முறை என்று சொல்லப்பட்டதை அமைப்பாக்குவதில் வளர்ப்பதில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டிருந்தது. 1984 நவம்பர் சீக்கியர் படுகொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் - பாஜககாரர்கள் மீதும் பல வழக்குகள் உள்ளன. இந்த கொடூரமான அரசு பயங்கரவாத மதவெறி தாக்குதலின் நிழலில் நடந்தத் தேர்தலில் ஆர்எஸ்எஸ் காங்கிரசுக்கு ஆதரவாக நின்றது; காங்கிரஸ் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது; பாஜக இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. தேசத்துக்கு, நாட்டின் ஒற்றுமைக்கு, ஓர்மைக்கு ஆபத்து என்ற தனது கருத்தை ஒட்டி காங்கிரஸ் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவது என்பதை மய்யமாகக் கொண்டு, பாபர் மசூதிக்கு எதிராக ஆர்எஸ்எஸ் இந்துத்துவா இயக்கத்தைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தது.
இந்துமயமாக்கப்பட்ட மதவெறி, பெரும்பான்மைவாத தேசியம் நோக்கி ஆர்எஸ்எஸ் ஸ÷ம் பாஜகவும் விவாத வரையறைகளை மாற்றிக் கொண்டிருந்தபோது, முக்கியமான கட்டங்களில் காங்கிரஸ் அவற்றுடன் போட்டியில் இறங்கியது; கூட்டு சதி செய்தது; சமரசம் செய்துகொண்டது; செயலற்று வழிவிட்டது. மோடி அரசாங்கத்தின் பாசிச ஆட்சி, மதவெறி தொடர்பாக காங்கிரஸ் செய்துகொண்ட சமசரங்கள், குற்றங்களில் இருந்து, நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் துவக்கி வைத்த, பின்பற்றிய நவதாராளவாதக் கொள்கைகளில் இருந்து, இந்திரா காந்தியின், வலுவான அரசு, சுப்ரீம் தலைவர் என்ற நோய் பிடித்த ஒடுக்குமுறை எதேச்சதிகார ஆட்சி முறையில் இருந்து, வரலாற்றுரீதியாக தனது வலிமையைப் பெறுகிறது. இந்திரா காந்தி, சோவியத் யூனிய னுடனான போர்த்தந்திர உறவுடன் இந்தியாவை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்ற விரும்பினார்; தனது மேக் இன் இந்தியா இயக்கத்துடன் சர்வதேச மூலதனத்தை ஈர்ப்பதன் மூலம், அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான சர்வதேசப் போரில் இந்தியாவை ஒரு ராணுவ துணைதளமாக மாற்றுவதன் மூலம், ஒரு வலுவான அரசின் சுப்ரீம் தலைவர் என்ற ஒளிவட்டத்தைப் பெற மோடி விரும்புகிறார்.
வரலாற்று மாணவர்களும் ஜனநாயக, சமூக மாற்ற அரசியலில் ஈடுபடுபவர்களும் வேறுபாடு களை கவனிப்பது மட்டும் போதாது. அரசு அதிகாரத்தின் வழித்தடங்களின் தொடர்ச்சி கட்டங்கள், குறுக்குவெட்டு கட்டங்கள், மேலோங்கிய அரசியல் விவாதப் போக்கு ஆகியவற்றை கவனிப்பதும் முக்கியம்.
ஆர்எஸ்எஸ்ஸ÷க்கு மாறாக, காங்கிரசின் வரலாற்றின் மரபின் சாதக அம்சங்களை அங்கீகரித்து, காந்தி, நேரு போன்ற காங்கிரஸ் தலைவர்களின் மரபை முன்னிறுத்துவதும், காங்கிரஸ் ஆட்சியின் நீண்ட வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட குற்றங்களை சாதாரணமான நிகழ்வுகளாக்கி அவற்றை மன்னிப்பதும் வேறு வேறு விசயங்கள். இது போன்ற ஒரு முயற்சி எதிர்விளைவுகளையே உருவாக்கும். சிறுபான்மையினர் உரிமைகளுக்கான, ஜனநாயகத்துக்கான போராட்டத்தை, பல்வேறு சிறுபான்மைச் சமூகங்களையும் நெருக்கமாகக் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே வலுப்படுத்த முடியுமே தவிர, நிச்சயமாக ஒரு சமூகத்தை விலக்கி வைத்து அல்ல. சீக்கிய மக்கள் அனுபவித்து வரும் அந்நியப்படுத்துதலின் வலி, அவர்கள் மீண்டும் ஒரு முறை அரசியல் அந்நியப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றால், இசுலாமியர் மீதான வெறுப்புக்கு எதிரானப் போராட்டத்தில், அவர்களை ஒரு சக்தி வாய்ந்த கூட்டாளியாக மாற்றும். பாசிசத் தாக்குதலுக்கு எதிரானப் போராட்டத்தில் சாத்தியப்பட்ட அளவுக்கு பரந்த ஒற்றுமையைக் கட்டுவதும், அதற்காக வெளிப்படையாகவும் நீக்குப்போக்காகவும் இருப்பது முக்கியம்; அதே நேரம், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் விடாப்பிடியாகவும் உறுதியாகவும் இருப்பதும் அதே அளவுக்கு முக்கியமானது. விடாப்பிடித் தன்மையையும் குறுங்குழுவாதத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
ஓய்வூதியம் தரும் கரிசனம் உண்மையிலேயே இருந்தால் 
வாராக் கடன்கள் வரட்டும்! பனாமா பணம் திரும்பட்டும்!
சென்ற ஆண்டு இறுதியில் மூணாறு பெண் தொழிலாளர்கள் வரலாறு படைத்தார்கள். இந்த ஆண்டு பெங்களூரு பெண் தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தில் இன்னுமொரு அத்தியாயம் எழுதியுள்ளார்கள்.
இந்தியத் தொழிலாளர் வர்க்கம் மோடி அரசாங்கத்துக்கு மீண்டும் ஓர் அடி கொடுத்துள்ளது. 2015 செப்டம்பர் 2 அன்று பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு, நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரண்டார்கள். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கப்படும் என்று அருண் ஜெட்லி சொன்னபோது அதற்கு எதிராக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் கையெழுத்துக்களுடன் மோடி அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அறிவித்த ஒரு வாரத்திலேயே அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்று அருண் ஜெட்லி அறிவித்தார். இப்போது, தொழிலாளர் வைப்பு நிதியில் முதலாளிகள் போட்ட பணத்தை 58 வயதுக்குப் பின்தான் எடுக்க முடியும் என்ற, இன்னும் சில பொருளற்ற புதிய நிபந்தனைகளுக்கு எதிராக பெங்களூருவில் பல பத்தாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பெங்களூரு நகரை நிறுத்தி வைத்தார்கள். பண்டாரு தத்தாத்ரேயா, அந்த நிபந்தனைகள் திரும்பப் பெறப்படும் என்று உடனடியாக அறிவித்தார்.
தொழிலாளர்களின் நிலைமைகள் பற்றி மோடி ஆட்சியின் அமைச்சர்களுக்கு ஒரு புண்ணாக்கும் தெரியவில்லை, அவர்கள் இந்திய சாமான்ய மக்களோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் என இந்த அரசாணை தெளிவாகக் காட்டுகிறது. இன்று 20 வயதுடைய ஒருவர் 50 வயதுக்குள் அய்ந்து வேலைகளாவது மாறுவார் என்று முதலாளித்துவ நிபுணர்களே சொல்கின்றனர். தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் வைப்பு நிதி சேர்க்கும் தொழிலாளர்கள் எத்தனை பேர் 58 வயது வரை அதே நிறுவனத்தில் வேலையில் இருப்பார்கள்? மருத்துவம், கல்வி, கருமாதி, வேறு அவசரம் என்றால் தொழிலாளர்கள் அந்தப் பணத்தைத்தான் எடுக்கிறார்கள். தொழிலாளி அவர் உழைத்த பணத்தை அவருக்குத் தேவையான நேரத்தில் எடுக்க முடியாமல் எந்தக் கொம்பன் ஆணை போடுவது? முதலாளிகளும் அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சுருட்டுவது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிடும் காலத்தில் என் பணத்துக்கு சட்டம் போட நீ யார் என்ற கேள்வியுடன் எழுந்தார்கள் பெண் தொழிலாளர்கள். அமைச்சர் மண்டியிட்டார்.
தொழிலாளர்களது பணம் வைப்பு நிதியில் இல்லையென்றால் முதலாளி போட்ட பணத்துக்கு மூன்று வருட வட்டி மட்டுமே கிடைக்கும் என்று ரத்து செய்யப்பட்ட அந்த ஆணை சொன்னது. 2013 - 2014 நிலவரப்படி கிட்டத்தட்ட 8 லட்சம் நிறுவனங்களின் 12 கோடி தொழிலாளர்கள் வைப்பு நிதி அலுவலகத்தில் உறுப்பினர்கள். 2012 - 2013ல் ரூ.6.32 லட்சம் கோடி நிதி இருந்தது. இந்தத் தொகையை கையில் வைத்துள்ள அரசு அதற்கு வட்டி தந்துதானே ஆக வேண்டும்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சம் லட்சம் கோடிகள் விட்டுத் தரும் மோடி அரசு தொழிலாளர் பணத்தை ஏன் சுருட்டப் பார்க்கிறது? சுருக்கப் பார்க்கிறது?
முதலாளித்துவக் கருத்துக்களை கொண்டாடுபவர்களுக்கு தொழிலாளர்கள் மீது எந்த அளவுக்கு வன்மமும் காழ்ப்பும் இருக்கும் என்பதற்கு தொழிலாளர்களின் வைப்பு நிதி தொடர்பான பாஜக அரசின் அணுகுமுறையும் அறிவிப்புகளும் சான்று சொல்கின்றன.
நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக் கையில் தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கு வரி விதிக்கப்படும் என்ற அருண் ஜெட்லியின் முன்வைப்பு கடுமையான எதிர்ப்புக்குள்ளாகி, அவர் அதை திரும்பப் பெற நேர்ந்தது. தொழிலாளர் வர்க்கம் கொடுத்த அந்த தோல்வியில் இருந்து ஏற்பட்ட வன்மத்தால், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியைக் குறைத்தார்கள் பாஜக ஆட்சியாளர்கள். அத்துடன் அந்த வன்மம் தீரவில்லை. இந்தியத் தொழிலாளர்கள் மீதான அடுத்தத் தாக்குதலுக்கு மோடி அரசு செல்கிறது.
நாட்டிலுள்ள தொழிலாளர்கள் தங்கள் உழைப்பில் இருந்து சிறுகச் சிறுகச் சேர்த்து, தொழிலாளர்களிடம் அடாவடியாகப் பிடுங்கியதில் ஒரு சிறிய பங்கை முதலாளியும் போட்டு சேர்த்து வைத்த வருங்கால வைப்பு நிதியில் கேட்பாரற்று இருக்கும் நிதியை முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்குத் திருப்பப் போவதாக மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலேயே இந்த முன்வைப்பு வெளியானது. அப்போதே கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இப்போது, வைப்பு நிதிக்கு வரி போட முடியாமல் போனதும், சென்ற ஆண்டு அறிவித்ததை செய்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் கேட்பாரற்று இருக்கும் நிதியை முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கு திருப்பப் போகிறார்கள்.
தொழிலாளர்கள் பணத்தில் கைவைக்க துணிச்சல் வருகிற இவர்களுக்கு முகேஷ் அம்பானி பணமாகவே வைத்திருக்கும் பல நூறு கோடிகளில் கைவைக்க முடியுமா? கவுதம் அதானியின் சகோதரர் பெயரும் பனாமா பேப்பர்களில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது சொத்துக்களை முடக்கும் துணிச்சல் அருண் ஜெட்லிக்கு உண்டா? அருண் ஜெட்லியும், மோடியும் வசனம் பேசுவதைத்தான் இந்திய மக்கள் இரண்டு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். மக்கள் நலன் பேணும் ஒரே ஒரு உருப்படியான நடவடிக்கை கூட நல்ல காலம் வருவதாகச் சொன்னவர்களிடம் இருந்து வரவில்லை. ஆனால், உழைக்கும் மக்கள் பணத்தை சூறையாட திட்டங்கள் வகுக்கிறார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களும் பெரும்பண மூட்டைகளும் வங்கிகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பித் தராமல் இருக்கும் நிதிக்கு வாராக் கடன் என்று பெயர் வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களை, பெரும் பணக்காரர்களை தப்பவிட்டு அந்த நிதியை அவர்கள் விழுங்க விட்டுவிடுவது போல், தொழிலாளர்கள் கேட்காமல் இருக்கும் நிதிக்கு கேட்பாரற்ற நிதி என்று பெயர் வைத்து அந்த நிதியை அரசே சுருட்டிவிடப் பார்க்கிறது.
கடன் வாராமல் இருப்பதற்கும் தொழிலாளர்களின் வைப்பு நிதி கேட்பாரற்று கிடப்பதற்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த நிதிகள் தொடர்பாக தனக்கு பொறுப்பு ஏதும் இல்லை என்பதுபோல், அவை தாமாகவே வாராமலும் கேட்பாரற்றும் கிடப்பதுபோல் அரசு சொல்லப் பார்க்கிறது. அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுத்தால் எப்படி வர வேண்டிய கடன் வந்தே தீருமோ அதுபோல், வைப்பு நிதியும் உரியவர்களுக்கும் போய்ச் சேரும்.
5 கோடி செயல்படாத கணக்குகள் வைப்பு நிதி அலுவலகத்தில் உள்ளன. இவற்றில் ரூ.30,000 கோடிக்கும் மேல் நிதி உள்ளது. தொழிலாளர்கள் சேர்த்த பணம் ரூ.27,000 கோடி கேட்பாரற்று கிடக்கிறது என, ரோஹித் வேமுலாவின் நிறுவனரீதியான படுகொலைக்கு காரணமான, மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா சொல்கிறார். இவ்வளவு பெரிய தொகைக்குச் சொந்தக்காரர்கள் யார் என்ற விவரங்கள் அரசாங்கத்திடம் எப்படி இல்லாமல் போகும்? எந்த நிறுவனம் வைப்பு நிதி செலுத்தியது, அந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் யார், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க, காவல் துறை, ராணுவம், புலனாய்வு துறை, இன்னும் பலப்பல வலைப்பின்னலுடன் சர்வ வல்லமை பொருந்திய ஒரு பொறியமைவால் முடியவில்லை என்றால் நம்ப முடியவில்லை. அந்தத் தொழிலாளர்கள் யார் என்று கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சி ஏதும் எடுத்ததாக இன்று வரை எந்த அமைச்சரும் சொல்லவில்லை.
மானியம் நேரடியாக உரியவர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்ய, ஆதார் அட்டை உட்பட ஏதேதோ நடவடிக்கைகள் எடுப்பதாக பெருமை பேசும் அரசால், சொந்த நாட்டு குடிமக்கள் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது சிரமம் என்றால், அனைத்து நவீன உள்கட்டுமான வசதிகள் இருந்தும் குறைந்த பட்ச கடமையைக் கூட செய்யத் திறனற்ற அரசுதான் எதற்கு? ஆதார் அட்டை வாங்க மக்களை நிர்ப்பந்தப்படுத்த முடிந்த ஓர் அரசால், அது வைத்திருக்கும் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க திட்டமில்லாமலா போகும்?
100 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கி விட்டதாக பூரித்துப் போகிற அரசின் கைகளில் அந்த 100 கோடி பேர் பற்றிய விவரங்கள் இருக்கின்றன. இந்த 100 கோடி பேருக்குள்ளேயே அந்தத் தொழிலாளர்கள் இருக்க மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர்களைக் கண்டுபிடிப்பது, அவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்கள் குடும்பத்தை கண்டுபிடிப்பது, அந்தக் குடும்பங்களிடம் இந்தப் பணத்தை முறையாக ஒப்படைப்பது ஆகியவற்றை மோடி அரசு உடனடியாகச் செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள 276 பல் மருத்துவ கல்லூரிகளில் 117 கல்லூரிகள் இன்னும் தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. மீதமுள்ளவற்றில் 17 கல்லூரிகள் முறையாக வைப்பு நிதி செலுத்தவில்லை. இது வைப்பு நிதி அலுவலகம் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது. மோடி ஆண்ட குஜராத்தில் உள்ள 12 பல் மருத்துவக் கல்லூரிகளில் 8 கல்லூரிகள் வைப்பு நிதி செலுத்தவில்லை. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் எதுவும் இல்லை. தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிமையான நிதியை செலவழிக்க மூளை கசிய யோசிக்கும் மோடி அரசுக்கு இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு வர வேண்டியதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கத் துப்பில்லை.
எங்கள் ஆட்சி ஊழல் கறை படியாத ஆட்சி என்று மோடி சொல்லித் திரிகிறார். பூரண மது விலக்கு கொண்டு வருவதாக ஜெயலலிதா சொல்வதும் இதுவும் ஒன்றுதான். பங்கஜா முன்டே கடலை மிட்டாயில் கூட ஊழல் செய்தது பற்றி செய்திகள் வந்தன. சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடிக்கு மனிதாபிமானத்துடன் உதவி செய்தது, வசுந்தராவுக்கும் லலித் மோடிக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் எல்லாம் சந்தி சிரித்தன. எதற்கும் ஆதாரம் இல்லை, எந்த அமைச்சரும் பதவி விலக முடியாது என்று அடாவடி செய்தன பாஜக அரசாங்கங்கள். மக்கள் மறக்கவில்லை. வியாபம் ஊழல் பாஜக ஆட்சிக் காலத்தில் நீண்டது. செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் உட்பட பலர் மர்மமாக உயிரிழந்தனர். அந்த மர்ம முடிச்சுக்கள் இன்னும் அவிழவில்லை.
இந்த ஊழல் ஆட்சி காலத்தில், மத்திய அரசின் செலவினங்களில் ரூ.8,600 கோடிக்கும் மேல் எந்த விளக்கமும் இல்லை என்று ஆதார பூர்வமான செய்திகள் வெளியாயின. மத்திய தணிக்கையாளர் 2014 - 2015க்கான மத்திய அரசின் செலவினங்களை தணிக்கை செய்து தந்துள்ள அறிக்கையில் உள்ள விவரங்கள்படி, மத்திய அரசின் செலவினங்களில் ரூ.8,646.13 கோடி இதர செலவினங்கள் என்ற தலைப்பில் காட்டப்பட்டுள்ளது. 2014 மே முதல் மோடிதான் ஆட்சியில் இருக்கிறார். விவசாய நிதி நிறுவனங்களுக்காக ரூ.6,260 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.6,000 கோடிக்கு, கிட்டத் தட்ட 96% செலவினத்துக்கு எந்த விளக்கமும் இல்லாமல் இதர செலவினங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து தலைப் பில் ரூ.824 கோடி இதர செலவினங்களாகக் காட்டப்பட்டுள்ளது. மண் வளம் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு உள்ளிட்ட இன்னும் இரண்டு தலைப்புகளில் மொத்த செலவினங்களுமே இதர என்ற வகையில் காட்டப்பட்டுள்ளன. இந்த இதர என்ன என்று அரசாங்கத்தால் ஏன் தெளிவாகச் சொல்ல முடியவில்லை? அப்படி என்ன விளக்கம் தர முடியாத இதர செலவு? பல வழிகளிலும் மக்கள் பணம் கசிந்து ஒழுகி ஓடுவதைத் தடுப்பதை விட்டுவிட்டு, மீண்டும் மக்கள் பணத்தில் கைவைக்கப் பார்க்கிறது மோடி அரசு.
தொழிலாளர் வைப்பு நிதிக்கு 0.1% அளவுக்கு வட்டியைக் குறைப்பதால் ரூ.1,000 கோடி உபரி கையிருப்பில் இருக்கும் என்றும் தற்போதுள்ள நிலையில் வெறும் ரூ.673 கோடிதான் அந்த வகையில் இருக்கும் என்றும் அரசு சொல்கிறது. குஜராத்தில் அரசு நிறுவனம் எரிவாயு எடுப்பதாகச் சொல்லி அரசு தனியார் கூட்டு என்ற பெயரில் தனியார் நிறுவனத்தைக் கொழுக்க வைத்து ரூ.19,700 கோடி அளவுக்கு செலவு செய்து 2016 வரை அங்கு இன்னும் எரிவாயு எடுக்கப்படவில்லை. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அவரது தலைமையில் துவக்கப்பட்டத் திட்டம் அது. அரசுக்கு உபரி வருவது, கையிருப்பு இருப்பது பற்றி யார் கவலைப்படுவது என்று கணக்கே இல்லையா? பல ஆயிரம் ஆயிரம் கோடிகள் ஒரு சிலர் கைகளுக்குப் போவதற்கென திட்டம் தீட்டுபவர்கள் மக்கள் பணத்துக்கு மட்டும் நெருக்கி நெருக்கி கணக்குப் பார்க்கிறார்கள்.
முதியோருக்கு ஓய்வூதியம் தரும் கரிசனம் மோடி அரசுக்கு உண்மையிலேயே இருந்தால் வாராக் கடன்கள் வரட்டும். பனாமா பேப்பர் தகவல்கள்படி, பணம் நாட்டுக்கு திரும்பட்டும்.
இதைச் செய்யக்கூட வக்கில்லாத மோடி அரசைத் தண்டிக்க தொழிலாளர்கள் தயாராகி விட்டார்கள் என்பதே பெங்களூருவில் இருந்த வந்த இந்த ஆண்டு மே தினச் செய்தி.
கரும்பு விவசாயிகளுக்கு மிஞ்சுகிற கசப்பு
மூன்று கோடி விவசாயிகளும் ஒரு கோடி விவசாயத் தொழிலாளர்களும் நம்பியிருக்கிற கரும்பு உற்பத்தியில் விவசாயிகள் நலன் காப்பது என்ற பெயரில் தனியார் சர்க்கரை ஆலைகளின் நலன் காக்கும் ரங்கராஜன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி அய்முகூ ஆட்சிக் காலத்திலேயே சர்க்கரை விலைக் கட்டுப்பாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது. பொது விநியோகத்துக்கென சர்க்கரை ஆலைகள் உற்பத்தியில் கட்டாயமாக 10% சர்க்கரையை அரசுக்குத் தருவது என்ற பழைய நிலைக்கு முடிவு கட்டப்பட்டு சர்க்கரை ஆலைகள் அப்படி அரசுக்கு சர்க்கரை கப்பம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்ற நிலை வந்து, பொது விநியோகத்துக்கு அரசு சந்தை நிலவரப்படி சர்க்கரை வாங்குவது என்ற நிலை ஏற்பட்டது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5,600 கோடி கூடுதல் செலவும் வந்தது. முந்தைய நிலைமைகளில் இது ரூ.2,700 கோடியாக இருந்தது. ஆட்சி மாறிய பிறகும் இந்த தனியார் சர்க்கரை ஆலை ஆதரவுக் கொள்கை மாறவில்லை. மத்திய அரசின் இந்த கூடுதல் சுமை விவசாயிகள் நலன் காக்க என்று சொல்லப்பட்டது.
கர்நாடகா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கரும்பு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தமிழ்நாடு இதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலை நியாயமான, கட்டுப்படியாகும் விலை என்று சொல்லப்படுகிறது. மாநில அரசு நிர்ணயிக்கும் விலை மாநிலத்தில் அறிவுறுத்தும் விலை என்று சொல்லப்படுகிறது.
இந்த விலையை முழுமையாக விவசாயிகளுக்குத் தராமல் நாடு முழுவதும் தனியார் சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் இது நடக்கிறது. மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையைத் தந்து விடுகிற தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு நிர்ணயிக்கும் விலையைத் தருவதில்லை. சில சமயங்களில் மத்திய அரசு நிர்ணயித்த விலையையும் தராமல் சில தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பாக்கி வைக்கின்றன. தமிழ்நாட்டிலும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மாநில அரசு நிர்ணயிக்கும் விலையைத் தந்து விடுகின்றன. தனியார் சர்க்கரை ஆலைகள் அதைத் தருவதில்லை.
மத்திய அரசை விட கூடுதலாக நிர்ணயித்து மாநிலத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் மேல் கூடுதல் அக்கறை உள்ளது என காட்டிக் கொள்ள கூடுதல் விலை நிர்ணயிக்கும் மாநில அரசு, அந்த விலையை தனியார் சர்க்கரை ஆலைகள் தருகின்றனவா என கண்காணிப்பதில்லை.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43 சர்க்கரை ஆலைகளில் 18 ஆலைகள் கூட்டுறவு ஆலைகள். தமிழ்நாட்டின் பெரிய தனியார் சர்க்கரை ஆலைகள் என்றால், இஅய்டி பாரி, பன்னாரி அம்மன், சக்தி சுகர்ஸ் போன்ற ஆலைகளைச் சொல்லலாம். இந்த எந்த ஆலையிலும் நட்டம் வரவில்லை. ஆலை உரிமையாளர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர்களுக்கு லாபம் வருகிறது. தமிழ்நாட்டில், 2013 - 2014ல் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை முதலாளிகள் தர வேண்டிய பாக்கி ரூ.860 கோடி. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாக்கி ரூ.600 கோடி. தங்களுக்கு தரப்பட வேண்டிய விலை தரப்படவில்லை என்று விவசாயிகள் புகார் எழுப்பிப் போராடும்போதும் அரசு நிர்ணயித்த விலையைத் தராத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, விவசாயிகள் நலன் காக்க என்ற பெயரிலேயே மீண்டும் ஆலை முதலாளிகள் நலன் காக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. 2014 ஜ÷லையில் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆலை முதலாளிகள் தர வேண்டிய பாக்கி ரூ.9,635 கோடி. 2014 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ரூ.6,600 கோடி வட்டியில்லாக் கடனில், ஆகஸ்ட் 2014ல் அவர்களுக்கு ரூ.5,472 கோடி தரப்பட்டது. இன்னும் ஒரு ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன் செப்டம்பரில் தரப்பட்டது. இதற்குப் பிறகும் விவசாயிகளுக்கு வர வேண்டிய விலை வந்து சேரவில்லை.
2014 (அக்டோபர்) - 2015 (செப்டம்பர்) பருவ காலத்துக்கு, சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.6,000 கோடிக்கு குறைந்த வட்டியில் கடன் தர மோடி ஆட்சி முடிவு செய்தது. அதாவது முதல் ஆண்டு வட்டி தொகையான ரூ.600 கோடியை அரசே தரும் என்று சொன்னது. தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து ரூ.2,700 கோடிக்குத்தான் விண்ணப்பங்கள் வந்தன. அந்த ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.12,248 கோடி பாக்கி வர வேண்டியிருந்தது. 2015 ஜ÷னில் விவசாயிகள் பெற வேண்டிய பாக்கி ரூ.21,000 கோடி என உயர்ந்தது.
கர்நாடகாவில் கரும்பு விவசாயிகளின் அடுத்தடுத்த தற்கொலைகளை அடுத்து, 2013 - 2014, 2014 - 2015 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகள் தராமல் விட்ட பாக்கியான ரூ.3,043 கோடியை விவசாயிகளுக்கு அரசு தருவதாக 2015 ஜ÷லையில் அறிவித்தது. இதையும் பாக்கி வைத்திருக்கிற ஆலைகளில் உள்ள சர்க்கரையை பறிமுதல் செய்து ஏலத்தில் விற்று அதில் வரும் தொகையில் இருந்து இரண்டு தவணைகளாகத் தருவதாகச் சொன்னது. எப்போது விற்பது? எப்போது விளைவித்தவனுக்கு வர வேண்டிய பணம் வருவது? இது போக்கு காட்டுவது என கர்நாடக விவசாயிகள் சொல்கின்றனர்.
மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் விலை விவசாயிகளுக்குத் தரப்படுவதில்லை என்பதுபோல், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிர்ணயிக்கும் விலை கட்டுப்படியாகவில்லை என்பதும் பெரும் பிரச்சனை. தமிழ்நாட்டில் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000மாவது கிடைத்தால்தான் அது கட்டுப்படியாகும் என்று விவசாயிகள் சொல்கின்றனர்.
2012 - 2013 நிலவரங்களில் இந்திய அரசு தருகிற விவரங்கள் படி, ஒரு ஹெக்டேருக்கு 2012 - 2013ல் கரும்பு பயிரிட ஆன செலவு ரூ.1,57,600. சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 70 டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது. இன்றும் உற்பத்தி நிலைமை இதுதான். அந்த ஆண்டில் மத்திய அரசு அறிவித்த விலை ஒரு டன்னுக்கு ரூ.1,700. அப்படியானால் விவசாயிக்கு 70 டன்னுக்கு ரூ.1,19,000 கிடைத்தது. அரசு தரும் விவரங்கள் படி உற்பத்தி செலவுக்கே, விவசாயி ஆண்டுக்கு தன் கையில் இருந்து ரூ.38,600 போட வேண்டும். கரும்பு அவருக்கு கசப்புதான் தருகிறது. என்ன செய்வார் விவசாயி, தற்கொலை செய்து கொள்வது தவிர?
விவசாயி கேட்கும் ரூ.4,000 அவருக்குக் கிடைத்தால் கூட மாதம் ரூ.10,000 அவருக்கு மிஞ்சும். குறைந்தபட்ச கவுரமான பிழைப்புக்கு என்ன தேவையோ அதைவிடக் குறைவாகத்தான் அவர் கேட்கிறார். அடுத்து ஆட்சியைப் பிடிக்கத் தயாராக இருக்கும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் ரூ.3,000 தருவதாகச் சொல்லி இருக்கிறது. ஜெயலலிதா இப்போது அறிவித்துள்ள ரூ.2,850 அவர்களுக்குத் தரப்பட்ட வரம் என்பதுபோல் நடந்துகொள்கிறார். இப்போது வரம் தரும் நிலையில் தமிழக விவசாயிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும், விவசாயிகள் பற்றிய அக்கறை சற்றும் இல்லாத மத்திய ஆட்சியாளர்களுக்கும் அவர்களுக்கு உரியவற்றைத் தர வேண்டும்.
ஜேஎன்யு மாணவர் தலைவர்கள் மீது ஒரு தலைபட்ச நடவடிக்கைகள் 
விடுதியில் இருந்து வெளியேற்றம், தடை, வளாகத்தில் நுழைய அனுமதி மறுப்பு
ஜேஎன்யுவில் போராடும் மாணவர்கள் மீதான தொடரும் வேட்டைக்கு எதிராக
சுதந்திரச் சதுக்கத்தில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
பிப்ரவரி 9 அன்று ஜேஎன்யுவில் நடந்த சம்பவம் தொடர்பாக ஜேஎன்யுவின் துணை வேந்தர் நியமித்த உயர்மட்ட விசாரணைக் குழு தனது அறிக்கையில் 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் இந்நாள் முன்னாள் தலைவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, அதில் சொல்லப்பட்டுள்ள தண்டனைகளை முழுவதுமாக நிராகரிப்பதாக ஜேஎன்யு மாணவர் சங்க துணைத் தலைவர் தோழர் ஷெஹ்லா ரஷீத் சொல்லியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
ஜேஎன்யு பல்கலை கழகத்தின் பதிவாளர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்பது ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது அறிவுரையின் பேரில் நியமிக்கப்பட்ட புதிய துணை வேந்தர் இந்த உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தார். அந்தப் பதிவாளர்தான் வளாகத்துக்குள் காவல்துறை வருவதை அனும தித்தார். அவர்தான் ஊடகங்கள் உள்ளே வர தடை விதித்தார்.
உயர்மட்ட விசாரணைக் குழுவின் தலைவரான ராகேஷ் பட்நாகர் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்பது நன்கறியப்பட்ட விசயம். இந்தக் குழுவில் தலித், பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், பெண்கள், சமூக அறிவியல் பாடங்கள் என எந்தவிதமான பிரதிநிதித்துவமும் இல்லை.
ஆர்எஸ்எஸ் கட்டளைப்படி இயங்குகிற இது போன்ற ஒரு குழு ரூ.20,000 வரை அபராதம், ஒரு செமஸ்டருக்கு தடை, விடுதியில் இருந்து வெளியேற்றுவது முதல் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்த அனிர் பன் அய்ந்து ஆண்டுகளுக்கு வளாகத்துக்குள் வரக் கூடாது என்பது வரையிலான தண்டனைகளை முன்வைத்துள்ளது. தேசத் துரோக வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளைச் சந்தித்து வருகிற கன்னையா குமாருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் இரண்டு பேர் வளாகத்துக்குள்ளேயே வரக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது.
இந்த அறிக்கையை, தண்டனைகளை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி ஜேஎன்யு வளாகத்தில் ஏப்ரல் 27 முதல் மாணவர்கள் கால வரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தும் இடத்துக்கு சுதந்திரச் சதுக்கம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தக் கேலிக் கூத்தான விசாரணை அறிக்கையை நாங்கள் முழுவதுமாக நிராகரிக்கிறோம். அது பழிவாங்கும் அறிக்கை. ஒருதலைபட்சமான அறிக்கை. அவர்கள் ஒரு குற்றமும் இழைக்காத மாணவர்கள். மிகவும் பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புமிக்க போராளிகள். இது மோடிக்கு எதிரான குரல்களை நசுக்கும் சதியே....
துணை வேந்தர் மத்திய அரசின் ஆணைகளுக்கேற்ப செயல்படுகிறார். அவர் முதலில் ஒரு கல்வியாளராக நடந்து கொள்ள வேண்டும். பிறகு ஆர்எஸ்எஸ் விசுவாசியாக நடந்து கொள்ளட்டும். விசாரணைக் குழுவின் தலைவர் ராகேஷ் பட்நாகர், இடஒதுக்கீட்டுக்கு எதிரான யூத் பார் ஈக்வாலிடியின் பொருளாளர். தண்டனைக்குள்ளாக்கப்பட்ட மாணவர்களின் பெரும்பாலானோர் தலித்துகள், இசுலாமியர்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர்.
இந்த அரசாங்கத்தின் மாணவர் விரோத, தலித் விரோத போக்கை அம்பலப்படுத்த நாங்கள் நாடு முழுவதும் இயக்கம் நடத்தவுள்ளோம்.
இனியும் ஓர் ஏகலைவன் வேண்டாம். - ஷெஹ்லா ரஷீத்
பேச்சுச் சுதந்திரத்துக்கு 10,000, 20,000 என விலை நிர்ணயிக்க முடியாது
எதிர்ப்பை வெளியேற்ற முடியாது
கருத்துக்களை வளாகத்துக்கு வெளியே நிறுத்த முடியாது
நியாயங்களை தடை செய்ய முடியாது
மாணவர் வசந்தமாகத் துவங்கியது இப்போது எதிர்ப்பு, உறுதி, சீற்றம், துணிவு ஆகியவற்றின் கோடைக்காலமாக நீளப் போகிறது. நாக்பூரில் இருந்து ஆட்டுவிக்கப்படும் அப்பா ராவோ, ஜகதீஷ் குமாரோ, இந்த பொம்மைகளை ஆட்டுவிப்பவர்களோ யாராக இருந்தாலும், ஒரு விசயத்தை தெரிந்து கொள்ளட்டும். அவர்களுடைய உயர்மட்ட நாடகத்துக்கு மாணவர்களின் இன்னும் உயர்ந்த மட்ட நம்பிக்கை பதிலடி கொடுக்கும்.
நாங்கள் ஓரடி கூட பின்வாங்கப் போவதில்லை. இது வரையில் இல்லாத தாக்குதல்கள், இது வரையில் இல்லாத பதில்வினைகளை, ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம். கோடை விடுமுறை நாட்கள் வந்துவிட்டன. நாங்கள் சுதந்திரச் சதுக்கத்தில் இருந்து கொண்டு போராடப் போகிறோம்..... உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது..... எந்தவிதமான தண்டனையையும் ஏற்க முடியாது... நாங்கள் எந்தக் ‘குற்றமும்’ செய்யவில்லை.... எதிர்ப்புக் குரல்களை குற்றமயப்படுத்தும் இந்த ஆபாசமான கருத்தைத்தான் நாம் எதிர்கொண்டாக வேண்டும். முறியடித்தாக வேண்டும்.... இந்த வளாகத்தில் நமது ஜனநாயக வெளியை பாதுகாப்பதற்கான போராட்டம் இது. நமது ஜனநாயக வெளியில், பஸ்தாரோடு, மாருதியோடு, சமூக நீதிக்காக, ரோஹித்துக்கு நீதிக்காக, தாத்ரிக்கு எதிராக அல்லது ஆணாதிக்கத்துக்கு எதிராக போராடும் நமது வெளியில், ஓர் அங்குலம் கூட சீர்குலைக்கப்படும் எந்த முன்மாதிரியையும் நாம் அனுமதிக்கக் கூடாது....
- அனிர்பன் பட்டாச்சார்யா
......முன்னாள் மாணவர்கள் இரண்டு பேர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை சொல்கிறது. அவர்கள் விசாரணைக்குக் கூட அழைக்கப்படவில்லை. மாணவர்களை எந்த விதத்திலாவது வேட்டையாடுவது, தண்டிப்பது என்பதே துவக்கத்தில் இருந்து விசாரணையின் நோக்கம். இந்த வளாகத்தின் மாணவர்களும் ஆசிரியர்களும் உங்களைப் போல் ஆர்எஸ்எஸ் பாதங்தாங்கிகள் அல்ல என்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டுமா திரு.ஜகதீஷ் குமார்? உங்கள் நண்பர் அப்பாராவ் எங்கள் நண்பர் ரோஹித் மற்றும் அவரது தோழர்கள் விசயத்தில் இதையேதான் செய்தார். அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அவர்கள்தான் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறார்கள். நாங்களும் எதிர்த்துப் போராடுவோம். மாணவர்கள் மீதான தண்டனைகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் போராட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். - உமர் காலித்
வறிய மக்களின் நில உரிமைக்காகப் போராடிய 
இகக (மாலெ) தலைவர் கரோ பஸ்வான் படுகொலை
பேகுசராய் மாவட்டம், செரியா பரியாப்பூரிலுள்ள சகேவாசா கிராமத்தில் கரோ பாஸ்வான் என்று எல்லோராலும் அறியப்பட்ட 65 வயதுடைய இகக(மாலெ) தலைவர் தோழர் ரமேஷ்வர் பஸ்வான் ஏப்ரல் 15 அன்று இரவு அய்க்கிய ஜனதா தளத்தின் பாதுகாப்பிலுள்ள நிலப்பிரபுத்துவ குற்றமயக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். மகாதலித் பிரிவைச் சேர்ந்த தோழர் கரோ பஸ்வான் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தின் மீதான உரிமைக்காகவும் அதை ஆர்ஜிதம் செய்வதற்காகவுமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் இதே மாவட்டத்தில் பாலியா ஒன்றியத்தில் இரண்டு இளம்கட்சித் தலைவர்களான மகேஷ்ராம் மற்றும் ராம் பிரவேஷ்ராம் ஆகிய இருவரும் பாஜக பின்புலம் கொண்ட கிரிமினல்களால் கொல்லப்பட்டனர். இரண்டு கொலைகளுக்கும் நிலம்தான் அடிப்படை பிரச்சனையாகும்.
தோழர் கரோ பஸ்வான், இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டிருக்கிறார். வேப்பமரத்திற்கு அடியில் பெஞ்சில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது தோழர் பஸ்வான் கொல்லப்பட்டார் என அந்த இடத்துக்குப் பார்வையிடச் சென்ற தலைவர் சந்திரதேவ் வர்மா தெரிவித்தார்.
சம்பவத்தன்று இரவு 1 மணிக்கு தலித் குடியிருப்புப் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். அவர் மீது 5 குண்டுகள் பாய்ந்தன. 9 மி.மீ. அளவுள்ள குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஏப்ரல் 20 அன்று பேகுசராய் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், மாநிலத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு நாள் கட்டமைக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில், சாவித்திரி தேவி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 106 ஏக்கர் நிலம் நில உச்சவரம்புக்கு அப்பாற்பட்டது என அறிவிக்கப்பட்டு, 1990 - 1991ல் 85 பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் வறிய மக்களான அவர்களால் அந்த நிலத்தை உண்மையில் சொந்தம் கொண்டாட முடியவில்லை. இந்தச் சூழலில் நிலச்சுவான்தாரர்கள் 20 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டனர்.
2000ல், அப்போதிருந்த ராமைய்யா என்ற துணை மாஜிஸ்ட்ரேட், (பின்னாளில் பட்டியலின மக்களின் சேர்மனாக பொறுப்பேற்றவர்) நிலச்சுவான்தாரர்கள் கொடுத்த தவறான ஆவணங்களின் அடிப்படையில் நில உச்சவரம்பு ஆணையை திரும்பப் பெற்றார். ஆனால் பட்டாக்கள் மாற்றப்படாததால், பட்டாதாரர்கள் தொடர்ந்து வரி செலுத்தி வந்தனர். பின்னாளில் அக்கிராமத்தின் வறிய மக்கள் இகக (மாலெ) கட்சியில் இணைந்தனர்.
பிறகு மீண்டும் 2009ல் அந்த நிலத்தின் பாத்யதை தொடர்பான பிரச்சனை எழுந்தது. 2010ன் இறுதியில் அப்போதிருந்த துணை மாஜிஸ்ட்ரேட் ஜிதேந்திர ஸ்ரீவத்சவ் அலுவலகம் முன்பு வறிய மக்கள் 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். வறிய மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு பழைய அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ததால் 86 ஏக்கர் நிலத்தை அவர்கள் உடைமையாக்கி அதில் விவசாய வேலைகளையும் துவக்கினர். முன்னாள் அதிகாரி போட்ட உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நடக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிற சாவித்திரி தேவியின் மகன் அசோக் சிங் மக்களை அப்புறப்படுத்தி நிலத்தைக் கைப்பற்ற வறிய மக்களுடன் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வந்தார்.
ஏப்ரல் 23 அன்று, டெல்லி பிஹார் பவன் முன்பு, இகக (மாலெ) செயல்வீரர்களின் தொடர் கொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய இகக (மாலெ), அகில இந்திய மாணவர் கழக செயல்வீரர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதோடு அவர்களைப் பல மணி நேரம் காவலிலும் வைத்தது. அகில இந்திய மாணவர் கழகத் தோழர்கள், ஜேஎன்யு வளாகத்தில் பீகார் அரசாங்கத்தின் கொடும் பாவியையும் எரித்தனர்.
அகில இந்திய மக்கள் மேடையின் தேசிய கருத்தரங்கம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னணிப் பாத்திரம் ஆற்றி வருகிற அகில இந்திய மக்கள் மேடை, ‘ஆழமடைந்து வரும் சமூக பொருளாதார நெருக்கடியும், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வழியும்’ எனும் தலைப்பில் 18.04.2016 அன்று டெல்லியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தியது.
பல்வேறு மக்கள் போராட்டங்களின் செயல்வீரர்களான டாக்டர் பினாயக்சென், சுனிலம் (சமாஜ் வாடி சமாஜம்) பேராசிரியர் ஜக்மோகன்சிங், ஜான் தயாள், ஹிமான்சு குமார், அய்சா கந்தல்வால் (ஜக்தன்பூர் சட்ட உதவிக் குழு), ரோமா மாலிக் (வன உழைக்கும் மக்களுக்கான மேடை) டாக்டர் மன்சூர் ஆலம், சாஹித் கமால், அனில் கமாடியா, ஆனந்த் ஸ்வரூப் வர்மா, வித்யா பூஷன் ராவத், என்டி பஞ்சோலி, அம்பரிஷ்ராய், திபங்கர் (இககமாலெ), பீம்ராவ் பன்சோத் (லால் நிஷான் கட்சி - லெனினிஸ்ட்) மங்கத்ராம் பஸ்லா (சிபிஎம் - பஞ்சாப்) மற்றும் ஜேஎன்யு, புனே பிலிம் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் இன்ன பிற பல்கலைக் கழக மாணவர்களும் கலந்துகொண்டனர்.
மிகப் பெரும் விவசாய, பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் மத்தியப் பிரதேசத்திலும், சட்டிஸ்கரிலும் விவசாய இயக்கங்கள் மீது ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதாக, சுனிலம் தனது உரையில் கூறினார். மோடியின் அரசாங்கத்தில் இசுலாமியரை வெறுப்பது அரசின் கொள்கையாகிவிட்டது என்றார் ஜான் தயாள். இப்போது சட்டிஸ்கர் மாநிலம் பஸ்தாரில் நடைபெறும் ஒடுக்குமுறையை இப்போதுள்ள மோடி அரசாங்கத்தையும் தாண்டி வரலாற்றின் பதிவுகளிலிருந்து பார்க்க வேண்டும் என ஹிமன்சு குமாரும், பஸ்தாரில் எப்படி ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன என கந்தேல்வாலும் உரையாற்றினர். ‘மக்களிடமிருந்து நிலத்தை எடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது’ என்று சரக காவல்துறை அதிகாரி தங்களிடம் குறிப்பிட்டதை கந்தேல்வால் சுட்டிக் காட்டினார். உத்தரபிரதேச வனப்பகுதியிலுள்ள உழைக்கும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் பற்றி ரோமா மாலிக் பேசினார். தேசத்துரோக குற்றச்சாட்டில்தான் உச்சநீதிமன்றம் சென்றுதான் பிணை பெற முடிந்தது என்றும் இப்போது மாணவர்கள் தேசத்துரோக சட்டத்திற்கு எதிராகவும், அரசு ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடுவது கண்டு பெருமைப்படுவதாக பினாயக் சென் குறிப்பிட்டார்.
‘தடுத்து நிறுத்துவது மட்டுமல்ல, எதிர்தாக்குதல் தொடுப்பதும் இப்போதைய தேவை’ என இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர் குறிப்பிட்டார். பகத்சிங், அம்பேத்கர் மரபை பின்பற்றி மாணவர்கள் தொடுத்து வரும் எதிர்தாக்குதலுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்)ன் பீம்ராவ் பன்சோத், அரசாங்கம் தபோல்கர், பன்சாரே மற்றும் பேராசிரியர் கல்புர்கி ஆகியோரை பாதுகாக்கத் தவறியதோடு கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் தவறி விட்டதாகக் கூறினார். ஆர்எஸ்எஸ்ஸின் உலகப் பார்வைக்கும், அம்பேத்கரின் நோக்கு நிலைக்கும் உட்பொதிந்த மாறுபாடுகள் இருப்பதால் ஆர்எஸ்எஸ் - பாஜக எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவரை கையகப்படுத்த முடியாது என்றார். சிபிஎம் (பஞ்சாப்)ன் மங்கத்ராம் பஸ்லா, நாடு முழுவதும் இதுவரை இல்லாத விவசாய நெருக்கடியையும் கடும் வறட்சியையும் விவசாயிகள் சந்தித்து வரும்போது மோடி அரசாங்கம் விஜய் மல்லையாவைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்றார்.
ஏபிவிபி - ஆர்எஸ்எஸ் - பாஜகவின் கடும் ஒடுக்குமுறையையும், தேசத் துரோக குற்றச்சாட்டையும் சந்தித்துவரும் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர்கள் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன், ராமநாகா, அய்ஸ்வர்யா அதிகாரி ஆகியோரும் முன்னணி நிர்வாகிகள் அசுதோஸ் குமார், ஆனந்த் பிரகாஷ் நாராயணன் மற்றும் எஃப்டிஅய்அய்யின் ராகேஷ் சுக்லா ஆகியோரும் கூட்டத்தில் கவுரவிக்கப்பட்டனர்.
தேர்தல் களத்தில் இகக(மாலெ)
மனு தாக்கல் துவங்கிய ஏப்ரல் 22 அன்றே கவுண்டம்பாளையம், அம்பத்தூர், மாதவரம், திருபெரும்புதூர், வேடசந்தூர், குமாரபாளையம், உளுந்தூர்பேட்டை, குளச்சல் தொகுதிகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். மேட்டுப்பாளையத்தில் ஏப்ரல் 25 அன்றும் கந்தர்வகோட்டையில் ஏப்ரல் 26 அன்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கவுண்டம்பாளையம் மற்றும் கந்தர்வ கோட்டையில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி, உளுந்தூர்பேட்டையில் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்டனர்.
நூறு சத வாக்குப்பதிவை உறுதி செய்ய விளம்பரங்கள் வெளியிடும் தேர்தல் ஆணையம், தேர்தல் நாளன்று அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு இருப்பதுபோல், பல்வேறு பெரிய, சிறிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தற்காலிகத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், அப்ரண்டிஸ்கள் தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்கள், சிறிய, பெரிய வர்த்தக நிறுவனங்களில், உணவு விடுதிகளில், அடுமனைகளில், மளிகைக் கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான மற்றும் பல்வேறு விதமான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய விடுமுறை கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையில் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு கடிதம் தரப்பட்டுள்ளது.
எங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு? (அம்பத்தூர்)
வெள்ள நிவாரணம் ரூ.5,000 இதுவரை வந்து சேரவில்லை என்ற மக்கள், அரசு சொன்னதைச் செய்யவில்லை என்று அடுத்த தேர்தல் வரும்போதுதான் எதிர்க்கட்சிக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள்.
டன்லப் ஆலை விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதாகினர். தேர்தல் போராட்டம் இருந்தபோதும் மக்கள் பிரச்சனைகளுக்கானப் போராட்டத்தை இகக (மாலெ) தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வாக்குச் சேகரிப்பும் நிதி வசூலும் சேர்ந்தே நடக்கிறது. மற்றவர்களெல்லாம் நிதி கொடுத்து ஓட்டு கேட்கும்போது நீங்கள் மக்களிடமே நிதியும் வசூல் செய்கிறீர்களே என மக்கள் ஆச்சர்யமாக கேட்டார்கள். இம்முறை மாற்றம் வேண்டும் என்கிறவர்கள் நாங்கள் வாக்களிக்கிறோம், மற்றவர்களும் அளிக்க வேண்டுமே என ஆதங்கத்தோடு சொல்வதும் நடந்தது.
குப்தா பள்ளியில் நடக்கும் கட்டணக் கொள்ளைக்கு எதிராக, பள்ளியை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும் என்ற கட்சியின் தொடர் போராட்டத்தை கவனித்து வந்த அந்தப் பள்ளியின் பெண் ஆசிரியர் ஒருவர், எங்கள் வீட்டில் உள்ள 8 வாக்குகளும் உங்களுக்குத்தான் என்று சொன்னார்.
நாம்தான் மக்களுக்காகப் போராடும் சக்தி என்று சரியாக அடையாளம் காண்பவர்கள் மத்தியில் இருந்து ஆளும் கட்சிகளைக் கேட்க வேண்டிய கேள்விகள், நாம் மட்டுமே அவர்களை நெருங்கிச் சென்று வாக்கு கேட்பதால், நம்மை நோக்கி எழுந்தன.
தேர்தல் நேரத்தில்தான் வந்துவிட்டீர்கள். நாங்கள் மழையில் துன்பப்பட்டபோது யார் வந்து எங்களைப் பார்த்தீர்கள் என்று ஒருவர் கேட்டார்.
இங்குள்ள மின்கம்பம் பல மாதங்களாக வளைந்து இங்குள்ள மக்களுக்கு ஆபத்தாக உள்ளது. இதை சரிசெய்யச் சொல்லி நாங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். வாக்கு கேட்க வந்திருக்கிறீர்களே. எங்கள் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று கேட்டார்.
உப்புகாரமேடு பகுதியில் வாழும் ஒரு வாக்காளர், இங்கு தெருவிளக்கு சரியாக இல்லை. யாரும் இதை கவனிக்கவில்லை. இப்போது வாக்கு கேட்க மட்டும் அனைவரும் வருகிறார்கள் என்றார்.
நீங்கள் தொழிலாளர்களை மட்டும்தான் ஆதரிக்கிறீர்கள். ஊழியர்களை (ஸ்டாஃப்) ஆதரிக்க மாட்டீர்களா என்று லேலண்டில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் கேட்டார்.
இங்கு ரோடுகளே சரியாக இல்லை. வாக்குகள் மட்டும் கேட்க வந்தீர்களா?
என்ன சாதித்தீர்கள், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை கோரிக்கை நிறைவேறவில்லையே என்று கேட்ட ஒருவரிடம் தொடர்ந்து மக்கள் போராட்டங்களில் உறுதியாக நிற்பதுதான் எங்கள் சாதனை என்று தோழர்கள் சொன்னார்கள்.
ஆளும்வர்க்கக் கட்சிகள் மீது அதிருப்தி (வேடசந்தூர்)
திருக்கோகரணம் பகுதியில், பாளையம், காடமநாயக்கனூரில் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. வாக்கும், நிதியும் சேகரிக்கப்பட்டது. ஒரு பகுதியில், அதிருப்தியுற்ற இகக(மா) தோழர்கள், இகக(மாலெ)வுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர்.
நூறுநாள் வேலைத் திட்ட வேட்பாளர் (கந்தர்வகோட்டை)
23.04.2016 முதல் 26.04.2016 வரை தோழர் குமாரசாமி கந்தர்வகோட்டையில் முகாமிட்டிருந்தார். வேட்பாளர் ஊரான வீரடிப்பட்டி, மட்டங்கால், பெரியகோட்டை ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று காலையும், மாலையும் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது.
மூன்று கிராமங்களும், தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக அவிகிதொசவும் இகக (மாலெ)யும் போராட்டம் நடத்தி வருகிற பகுதி. பகுதியில் இருந்த குழந்தைகள் கூட கொடியைப் பிடித்துக் கொண்டு வேட்பாளருடன் அணிவகுத்து வந்தனர். 26.04.2016 அன்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. தோழர்கள் குமாரசாமி, ஆசைத்தம்பி, தேசிகன், பெரியகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி உடனிருந்தனர். அன்றே ஊழியர் கூட்டமும் நடைபெற்றது. அடுத்த கட்ட வேலைகளுக்காக திட்டமிடப்பட்டது.
கல்குவாரி முதலாளி, மருத்துவமனை நடத்தும் டாக்டர் போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையே சுதந்திர இடதுசாரி பதாகையை உயர்த்திப் பிடித்து 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் பெண் வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இங்கு இகக(மா) வேட்பாளரும் களத்தில் இருக்கிறார்.
தொழிலாளி வாக்கு தொழிலாளிக்கே
(திருபெரும்புதூர்)
பண முதலைகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவை செய்பவர்களும் காண்ட்ராக்டர்களும் வேட்பாளர்களாக வலம் வரும் போது, ‘தொழிலாளி ஒட்டு தொழிலாளிக்கே’ எனும் முழக்கம் தொழிலாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் பிரச்சனைகளுக்காக சங்கத்துக்கு தலைமை தாங்கி, போராடிய தொழிலாளி வேட்பாளர் என்ற அறிமுகம் வரவேற்பும், ஆதரவும் பெற்று வருகிறது.
சிஅண்ட்எஃப் ஆலைத் தொழிலாளர்கள் கூட்டத்தில் வேட்பாளருக்கு நிதி திரட்டப்பட்டது. டுவான் ஆலைத் தொழிலாளர்கள் ஆலை வாயிலில் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து ஆதரவைத் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் பிரகாஷ் சங்கத் தலைவராக இருக்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் முன்னணி இகக(மாலெ) வேட்பாளர் தோழர் ராஜேஷ்க்கு ஆதரவை தெரிவித்திருக்கிறது. மே 1 அன்று நடைபெறும் அதன் நிர்வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர் ராஜேஷ் கலந்து கொள்கிறார். நிசான் ஆலைத் தொழிலாளர்கள் ஆதரவு அளித்திருப்பதோடு நிதியும் திரட்டுகிறார்கள். ஹ÷ண்டாய் உட்பட பகுதி ஆலைத் தொழிலாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மாற்றாக (மாதவரம்)
இகக(மாலெ) தனது வேட்பாளரை அறிவித்த பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைமைக்கு கடிதம் கொடுக்கப்பட்ட பிறகு, இகக இந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது.
உள்ளூர் மட்ட இகக தோழர்கள் இகக (மாலெ) இதைத் தவித்திருக்கலாம் என நம்மிடம் விவாதித்தனர். சந்தர்ப்பவாத கூட்டணிக்கு மாற்றாக இடதுசாரிகளின் சுதந்திர அறுதியிடலின் அவசியம், கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தவறக் கூடாது என இகக(மாலெ) தரப்பில் சொல்லப்பட்டது.
இகக(மாலெ) வைக்கின்ற அரசியல் முழக்கங்கள், வழிமுறைகள் சரி எனச் சொல்பவர்கள் கூட பெரிய கட்சிகள், பெரிய கூட்டணிகள் மத்தியில் சிறிய கட்சியான உங்களால் மக்கள் ஆதரவைப் பெற முடியுமா என்றே கேட்கின்றனர். இகக(மாலெ)யின் அரசியல் நிலைப்பாடு பற்றி அவர்களுக்கு விளக்கப்படுகிறது. பிரச்சாரம் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
பகத்சிங், அம்பேத்கர் வழி மரபை உயர்த்திப் பிடிப்போம்!
ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க கருத்தரங்கம்
ஏப்ரல் 27 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் அரங்கில் ‘பகத்சிங், அம்பேத்கர் வழிமரபை உயர்த்திப் பிடிப்போம்’ என்ற தலைப்பில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் கருத்தரங்கம் நடத்தியது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாரதி தலைமை தாங்கினார். கருத்துரிமை பறிப்பு, சாதி ஆதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவும் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், ஜனநாயகத்துக்காகவும் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களின் பதிவுகள் காட்சிப் படங்களாக அரங்கத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன.
மூத்த வழக்கறிஞர்கள் விஜயகுமார், கே.எம்.ரமேஷ், குமாரசாமி, வைகை, முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர் வேல்முருகன், மனித உரிமை பாதுகாப்பு மய்யத்தின் மில்டன், உயர்நீதி மன்றத்தில் தமிழுக்காக போராடி சிறை சென்று வந்த செந்தமிழ் செல்வன் ஆகியோருடன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டார்.
மூத்த வழக்கறிஞர் விஜயகுமார் தனது உரையில் இன்று நாடு இருக்கின்ற சூழலில் இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை அவசியம் என்றார். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க முயற்சியைப் பாராட்டினார்.
அடுத்துப் பேசிய மூத்த வழக்கறிஞர் குமாரசாமி, மத்திய மாநில அரசுகள் தேசத்துரோக சட்டத்தை பயன்படுத்தி போராடும் பிரிவினரை அச்சுறுத்திவிடலாம் என நினைக்கின்றன, இது ஜனநாயக விரோதமானது என்றார். இது நீக்கப்பட வேண்டும் என்ற அவர் கல்வி வளாகங்களில் சாதிய பாகுபாடுகளைக் களைய ரோஹித் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார். நீதிமன்றம் மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் நெருக்கமாக இருந்திருந்தால் அதற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டிருக்காது என்றார்.
மூத்த வழக்கறிஞர் வைகை, தனது பேச்சில் அம்பேத்கர் அரசமைப்பு சட்டம் எழுதியதைத் தாண்டி முதலாளித்துவ நிறுவனத்திற்கு எதிராக எழுதியிருந்த கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டார். கருத்துரிமை, பேச்சுரிமை, ஜனநாயக உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர் அதற்கு ஆதாரமான உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதே தேசத் துரோகமாகாது என்றார். பகத்சிங், அம்பேத்கர் வழிமரபு இன்றைய காலத்தின் தேவை எனக் கூறினார்.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தனது உரையில் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் பற்றி விளக்கி, சாதிய சமூகத்தில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். வங்கியில் அம்பேத்கர் படம் மாட்டியதால் நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர் 12 வருட காலமாகியும் இன்னும் பணியில் அமர்த்தப்படவில்லை என்றார். டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் வழக்கறிஞர்கள் மீது விசாரணையின்றி நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பார் கவுன்சில், தமிழக வழக்கறிஞர்கள் மீது எடுத்திருக்கிற நடவடிக்கையை சுட்டிக் காட்டினார். நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இன்று வரை இல்லை என்றார். பழிவாங்கப்பட்ட தொழிலாளியை பாதுகாக்க சக தொழிலாளர்கள் எடுக்கின்ற நடவடிக்கையிலிருந்து வழக்கறிஞர் சமூகம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். நீதித் துறைக்குள்ளும் புரையோடிப் போயுள்ள ஊழல், பிற்போக்கு சிந்தனை பற்றி ஏற்கனவே சொல்லியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கூற்றுக்களை மேற்கோள் காட்டினார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பகத்சிங், அம்பேத்கர் படம் பொறித்த நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Search