COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, May 17, 2016

மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 20 2016 மே 16 – 31

தலையங்கம்
கார்ப்பரேட் ஊடகங்களிடம் இருந்து
ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளது
ஏற்கனவே முதலாளித்துவம் மூளைக்கு, சிந்தனைக்குத் தளை போட்டுள்ளது. இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப உலகில் முதலாளித்துவம் அந்தத் தளைகளையும் பிரம்மாண்டமாக மறுஉற்பத்தி செய்கிறது.

தேசம் தெரிந்துகொள்ள விரும்புகிறது என்று உச்சஸ்தாயில் சொல்கிற ஆங்கில ஊடகங்கள், ஜேஎன்யுவில் நடக்கும் மாணவர் போராட்டம் பற்றி தேசம் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. ஜிஷா படுகொலை பற்றியும் அந்த ஊடகங்கள் அக்கறை காட்டவில்லை. நாடு எதைத் தெரிந்து கொள்ள வேண்டும், எதை தெரிந்து கொள்ள வேண்டாம் என்று ஊடகங்கள் நிர்ணயிக்கின்றன. மோடியின் கல்வித் தகுதி பற்றிய சர்ச்சையை ஊதிப் பெரிதாக்கும் ஊடகங்கள் கல்வி கற்று கற்றதற்கேற்ற வேலை கிடைக்காமல் அலைந்து திரியும் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள் வாழ்க்கை பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை.
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கார்ப்பரேட் ஊடகங்கள் தங்களை அழைத்துக் கொள்கின்றன. நடுநிலை தவறாமல் செய்தி வெளியிடுவதாகச் சொல்கின்றன. மக்களும் கார்ப்பரேட் ஊடகங்கள் சொல்வதை நம்ப வைக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகள் நடத்திய, வெளியிட்ட, விவாதித்த கருத்துக் கணிப்புகள், எவ்வளவு தவிர்க்கப் பார்த்தாலும், அந்த ஊடகங்களின் நடுநிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. ஜெயலலிதாவின் கடைசி கூட்டம் உட்பட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7. குறைந்தபட்சம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து அவர்கள் நிலை என்ன என்பது பற்றி இந்த ஊடகங்கள் செய்தித் தொகுப்பு ஏதாவது வெளியிட்டிருந்தால் இவற்றின் நடுநிலை பற்றி நமக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கக் கூடும். இது வரை அப்படி ஒன்று எந்த கார்ப்பரேட் ஊடகத்தின் தரப்பில் இருந்தும் நடக்கவில்லை.
மக்கள் மத்தியில் கார்ப்பரேட் ஊடகங்கள் கொண்டிருக்கிற தாக்கம் கணக்கில் கொள்ளத் தக்கது என்பதால், நாம் இந்த விசயத்தை விவாதித்தாக வேண்டியிருக்கிறது. இந்த ஊடகங்கள் வெளியிடுகிற கருத்துக் கணிப்பின்படிதான் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றின் தாக்கமே இருக்காது என்றும் சொல்ல முடியாது. நடக்கிற விவாதங்களில் வெவ்வேறு கட்சியினரைப் பேச வைத்து எதிரெதிர் கருத்துக்களைச் சொல்ல வாய்ப்பு தரப்படுவதாலேயே நடுநிலை வந்துவிட்டது என்றும் சொல்ல முடியாது. கருத்துக் கணிப்பு மட்டுமின்றி, கார்ப்பரேட் ஊடகங்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டிலும் நிச்சயமாக பாரபட்சமான போக்கு உள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
இந்த ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் என்று சில கருத்துக்கள் வெளியிடப்பட்ட பிறகு, அவற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் கட்சிகள் மத்தியில் இருந்து கருத்துத் திணிப்பு நடப்பதாக விமர்சனங்களும் எழுந்துவிட்டன.
தாது மணல் கொள்ளை புகழ் விவி மினரல்சுக்குச் சொந்தமான நியூஸ் 7 சேனலும் (அவர் திமுக பக்கம் சாய்ந்து விட்டதாகச் சொல்லப் படுகிறது) பாஜக ஆதரவு தினமலரும் சேர்ந்து நடத்தும் ஒரு கருத்துக் கணிப்பு நிச்சயம் மக்கள் நலக் கூட்டணியோ பாமகவோ வெற்றி பெறும் என்று சொல்லும் நோக்கத்துடன் நடத்தப்பட்டிருக்காது. அஇஅதிமுகவிடம் தற்போதுள்ள சில தொகுதிகள் அதன் கைவிட்டு திமுகவிடம் போய்விடும், திமுகவிடம் உள்ள தொகுதிகள் அஇதிமுகவிடம் போய் விடும், மற்ற கட்சிகள் எல்லாம் இந்த இரண்டு கட்சிகள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கையில் இருந்து வெகு தொலைவில், கணக்கில் கொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத எண்ணிக்கையில் இடங்கள் பெறும் என்று சொல்லி, நடுநிலை தவறாமல் கருத்துக் கணிப்பு நடத்தியதாக காட்டப் பார்க்கின்றன. ஆனால், இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தல் வெற்றி, அடுத்த ஆட்சி ஆகியவற்றை, அஇஅதிமுக, திமுக தாண்டி, பாஜக உட்பட வேறு எந்த கட்சியும் பெரிதாகப் பெற்றுவிட முடியாது என்ற கருத்தைத் திணிக்கின்றன.
தினத்தந்தி நாளிதழும் புதிய தலைமுறை தொலைக்காட்சியும் தங்களது ஆளும்கட்சி ஆதரவு நிலையை தாங்கள் நடத்திய கருத்துக் கணிப்புக்களில் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தின. 2 லட்சம் வாக்காளர்களுக்கும் மேல் உள்ள தொகுதியில் வெறும் ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்டது எப்படி சரியான முடிவைத் தரும் என்ற கேள்வி நியூஸ் 7 அலைவரிசையும், தினமலரும் நடத்திய கருத்துக் கணிப்புத் தொடர்பாக எழுந்ததால், புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது கருத்துக் கணிப்புக்கு ‘விஞ்ஞானபூர்வ’ என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்டது.
நியூஸ் 7 அலைவரிசையும், தினமலரும் வெற்றி தோல்வி பற்றி கருத்துக் கணிப்பு நடத்தின என்றால், புதிய தலைமுறை தொலைக் காட்சி வெற்றி தோல்வி என்று நேரடியாகச் சொல்லாமல், யார் வாக்குறுதிகளை நிறைவேற் றுவார், யார் நிலையான ஆட்சி தருவார் என்று கேள்விகள் கேட்டு அவற்றுக்கான பதில்கள் அடிப்படையில் அப்பட்டமாக ஆளும்கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு பற்றிய விவாதத்தின் நெறியாளர், மக்களுக்கு நல்வழி காட்டுவது ஊடகத்தின் வேலை, அதைத்தான் செய்கிறோம் என்றார். மக்களுக்கு நல்வழி காட்ட இவர்களை யார் எப்போது நியமித்தார்கள், அல்லது தங்களைத் தாங்களே இந்த மகத்தான பணிக்காக நியமித்துக் கொண்டார்களா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், இது மேட்டுக்குடி கருத்து என்பது மட்டும் நமக்குத் தெரிகிறது. ஒருதலைபட்சமான கருத்துக்களை வெளியிடுபவர்கள், ஒரு வகையில் திணிக்கப் பார்ப்பவர்கள் யாரை என்ன நல்வழிப்படுத்த முடியும்?
அஇஅதிமுகவின் சைதை துரைசாமியுடன் நேர்காணல் நடத்திய, கிடைத்தவர்களை எல்லாம் வளைத்து வளைத்து கேள்வி கேட்கிற தினத்தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே, கருணாநிதியுடன் ராஜா, கனிமொழி என ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று வந்தவர்கள் எல்லாம் நிற்கிறார்கள் என்று திரு.துரைசாமி சொல்ல, ஜெயலலிதா கூடத்தான் சிறை சென்று வந்தார் என்று எதிர்வாதம் செய்யாமல், எதிர்கேள்வி எழுப்பாமல் மழுப்பி அடுத்த கேள்விக்குப் போனார். பரபரப்பான தேர்தல் பிரச்சார சூழலில் நடக்கும் ஒரு நேர்காணலில் கூட முக்கியமான, மிகவும் அடிப்படையான கேள்வியை தவிர்த்துவிடுகிற ஒரு தொலைக்காட்சி வெளியிடுகிற கருத்துக் கணிப்பு நடுநிலையானது என்று நாம் சொல்ல முடியாது.
தேர்தல் பிரச்சாரத்தில் கட்சிகள் ஒன்றுக் கொன்று விமர்சனங்களுக்கு பதில் சொல்வது போல், கருத்துக் கணிப்புகளுக்கும் பதில் சொல்லும் ‘வாய்ப்பு’ இருப்பதால், இரண்டு கருத்துக் கணிப்புகள் அஇஅதிமுகவுக்கு ஆதரவு, ஒரு கருத்துக் கணிப்புதான் திமுகவுக்கு ஆதரவு என்ற நிலையில், இப்போது இன்னொரு கருத்துக் கணிப்பு திமுக அமோக வெற்றி, அஇஅதிமுக படுதோல்வி என்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.100 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கே.சி.பழனிச்சாமி தொடர்பான பறிமுதல் தவிர பிற பெரிய பறிமுதல்கள் எல்லாம் அஇஅ திமுகவினர் தொடர்பானது. சிறுதாவூர் பங்களாவில் நின்ற வாகனங்கள், சரத்குமார் வாகனத்தில் பிடிபட்ட பணம், அவசர சிகிச்சை வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிற பணம் என கண்ணுக்குத் தெரிந்தவை எல்லாம் பெருங்கடல் நீரின் சில துளிகள் மட்டுமே என்பது ஊடகங்களுக்குத் தெரியாதா? ஏன் எந்தத் தொலைக்காட்சியும், வாக்காளர்களுக்கு அதிகம் பணம் கொடுக்கும் கட்சி எது என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கக் கூடாது?
மறுபுறம், கிட்டத்தட்ட எல்லா தொலைக்காட்சிகளும் இந்தக் கட்சிகள் சொல்லும் பிரச்சனைகள் மட்டும்தான் தமிழ்நாட்டின் பிரதானப் பிரச்சனைகள் என்று சொல்லப் பார்க்கின்றன. விவசாயக் கடன் பற்றி பேசுபவர்களிடம், தமிழ்நாட்டின் விவசாய சமூகத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிற விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் நலன் பற்றி எதுவும் கேட்கவில்லை. வேலை வாய்ப்பு பற்றி பேசுபவர்களிடம் வேலை இழந்து நிற்கிற நோக்கியா, பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்கு என்ன வழி என்று கேட்கவில்லை.
திட்டவட்டமான, தெளிவான சில கோடுகளைப் போட்டுக் கொண்டு, அந்தக் கோடுகளுக்குள் நின்று கொண்டு, ஜனநாயகத்தில் அரசியல் அரங்குக்கு வந்தே ஆக வேண்டிய கேள்விகளை வரவிடாமல் பின்னுக்குத் தள்ளி, அல்லது மறைத்து, வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கேலி செய்வதாகத்தான் கார்ப்பரேட் ஊடகங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் தொலைக்காட்சிகளின், பத்திரிகைகளின் சமீபத்திய கருத்துக் கணிப்புகள் இந்தப் போக்கின் உச்சம்.
அடுத்த சில ஆண்டுகளுக்கு மக்களின் வாழ் வாதாரம் யாரால், எந்த ஆளும் வர்க்கக் கட்சியால், மீண்டும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மட்டுமே இன்று மக்கள் முன் உள்ளது. இந்தக் கட்டுரை வாசகர்கள் கைகளில் சேரும் போது, தேர்தல் முடிந்திருக்கும். மக்கள் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி முடித்திருப்பார்கள். கார்ப்பரேட் ஊடகங்கள் கருத்துருவாக்கம் தொடர்பான அடுத்த படையெடுப்புக்குத் தயாராகிவிட்டிருப்பார்கள். ஜனநாயகம் காக்கும், மக்களைக் காக்கும் போராட்டத்தில், கார்ப்பரேட் ஊடகங்களிடம் இருந்தும் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டியுள்ளது.
மக்களுக்கு உண்மையில் பயன்தராத தேர்தல் அறிக்கைகள்
காம்ரேட்
2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தாலும், இந்தத் தேர்தலில், கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளர்கள் மட்டு மல்லாமல், வெவ்வேறு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் கூடக் களம் இறக்கப்பட்டன. கடைசியாக மே 5 அன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஜெயலலிதா தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
திரைப்படத் துறையில், படத் தலைப்புக்களைப் பதிவு செய்து கொள்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற முடியும். தேர்தல் அறிக்கைகளுக்கு, பதிவோ காப்புரிமையோ கிடையாது. அதனால் பாமகவின் அன்புமணி, திமுக தமது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்துவிட்டது என்றார். திமுகவிடம் படைப்பாற்றல் இல்லை என்றும் திமுக அறிவுச் சுரண்டலில் ஈடுபட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தினார். இந்த தேர்தலில் திமுகவின் முதன்மை பரப்புரையாளரான மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா திமுகவின் அறிக்கையை காப்பி அடித்துவிட்டார் என்றார். கருணாநிதியும் கனிமொழியும் அன்புமணியும், ஜெயலலிதா சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளைத் தந்துள்ளார் என முறையிட்டனர். தேர்தலில் ஜெயலலிதா தப்பாட்டம் ஆடுவதாகக் குறை சொன்னார்கள்.
ஜெயலலிதா கிடைத்த வாய்ப்பை சும்மா விடுவாரா? தந்தையும் மகனும் மாறி மாறிப் பேசுகிறார்களே? ஒருவர் உங்கள் அறிக்கையைப் பார்த்து எங்கள் அறிக்கை காப்பி அடிக்கப்பட்டது என்கிறார். மற்றொருவர் எங்கள் அறிக்கை மோசடி என்கிறாரே, இதில் எதுதான் உங்கள் நிலைப்பாடு எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையில் தொலைக்காட்சியில் நடக்கும் ‘அறிவுபூர்வமான’ அரசியல் விவாதங்களில் இலவசங்கள் (ஊழ்ங்ங்க்ஷண்ங்ள்) நாட்டிற்கு தீமையா நன்மையா என்று சலிக்காமல் விவாதித்தனர். நல்ல இலவசம், மோசமான இலவசம், சமூகரீதியாக பயனுள்ள இலவசம், அத்தகைய பயனில்லாத இலவசம், இலவசம் தர பணம் இருக்கிறதா என்ற விவாதங்கள் விடாமல் நடைபெற்றன. ‘இலவசங்கள்’ என்று சொல்லும்போதே, அதில் ஒரு மேட்டிமைத்தனம் (உகஐபஐநப), நிச்சயமாய் இருக்கிறது. குவார்ட்டர்களுக்கு, பிரியாணிகளுக்கு, பணத்திற்கு, இலவசங்களுக்கு மயங்கி மக்கள் வாக்களிக்கிறார்கள் என மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. எந்த விசயத்திலும், எந்த அரங்கத்திலும் எளிதாக பாதிக்கப்பட்டவர்களையே தாக்க முடிகிறது (யஐஇபஐங ஆஅநஏஐசஎ). மதுவுக்கு, இலவசத்திற்கு, சினிமாவுக்கு மக்கள் மயங்கி அடிமையாகிவிட்டதாக பாமக குற்றம் சுமத்தியது.
மக்கள் பற்றிய ஓர் இளப்பம், ஓர் ஏளனம் உலகெங்கும் இருந்து வருகிறது. அய்க்கிய அமெரிக்கா, பிரிட்டனுக்கு எதிராக நடத்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி அந்த நாட்டின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன், பிரிட்டனுக்கு எதிராகப் போராடிய மக்கள் படையில் இருந்த சாமான்ய மக்களை, ‘மிகவும் அழுக்கு பிடித்த, கேடுகெட்ட, விவரிக்க முடியாத முட்டாள்தனம் கொண்ட கீழ்த்தட்டு வர்க்க மக்கள்’ என விவரித்தார். வாஷிங்டன் மற்றும் பிரிட்டன் ராணுவம் போல் கட்டமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட இணையான ராணுவம் தோல்விமேல் தோல்வியே அடைந்தது. உண்மையில், ஜார்ஜ் வாஷிங்டன் இளப்பமாகப் பேசிய மக்கள் படையால்தான் வெற்றி வந்தது. பிரிட்டனிடமிருந்து அய்க்கிய அமெரிக்கா சுதந்திரம் பெற்றது.
‘இலவசம்’ எனச் சொல்லப்படுவது, உண்மையில் விலையில்லாப் பொருட்களாகும். சேவைகளாகும். அவை, கருணாநிதியோ ஜெயலலிதாவோ தங்களுடைய அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத சொத்துக்களிலிருந்து தந்தவையோ, தருபவையோ அல்ல. அரசாங்க கஜானாவிலிருந்து, வரி செலுத்தும், வாக்களிக்கும் மக்களுக்குத் தரப்படுகிற பொருட்களாகும். சேவை களாகும். விலையில்லா பொருட்களை, கட்டணமில்லா சேவைகளை ஏன் வழங்குகிறார்கள் என்பதற்குத்தான் விடை காண வேண்டும்.
இந்தக் கேள்விக்கு விடை காண எல்லா தேர்தல் அறிக்கைகளும் சொல்கிற விவசாய நெருக்கடி, வறுமை, வேலையின்மை ஆகிய பிரச்சனைகளைப் பரிசீலிக்க வேண்டும்.
இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வதில், நிச்சயமாக, குறைந்தபட்ச மாதச் சம்பளம் மாதம் ரூ.18,000 என்பது முதல் 2 ஏக்கர் நிலம், குடிமனை, வீடு, கல்வி, மருத்துவம் வரை பல மக்கள் ஆதரவு நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ள மக்கள் நலக் கூட்டணியின் அறிக்கை மாறுபட்டது என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
தேமுதிகவின் விஜய்காந்த் அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். அந்தக் கூட்டணியில் தேமுதிகவும் தமாகாவும் தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. தேமுதிக 104, தமாகா 26 என 130 இடங்களில் போட்டியிடுபவர்கள், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கென தனியாக ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆகவே மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை, தேமுதிக, மநகூ, தமாகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை அல்ல.
மக்கள் நலக் கூட்டணியின் வைகோ திருச்சியில் மே 11 அன்று நடந்த அவர்களது மாற்று அரசியல் வெற்றி மாநாட்டில், அவர்களுக்கு கர்நாடகாவும் கேரளாவும் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தண்ணீர் மறுக்க புதிய சதித் திட்டம் தீட்டி நடவடிக்கைகள் எடுத்துள்ளது பற்றி அவர் மேடையில் பேசுவதற்கு முன்பாக தகவல் வந்ததாகவும், தமிழகம் எத்தியோப்பியா மாதிரி மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும், அதை கேப்டன் விஜய்காந்த் ஆட்சி மூலமே தடுக்க முடியும் என்றும், மேடையில் இருப்பவர்கள் என்ன நினைத்தாலும் தாம் மிகவும் போற்றி மதிக்கும் தலைவர் வாஜ்பாய் எனவும், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அஇஅதிமுக, திமுக மூலம் தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காகத் தரப்பட்டால் அதனை வாங்கிக் கொள்ளுங்கள், இப்படிச் சொல்வதால் வழக்கு போட்டாலும் பரவாயில்லை எனவும் பேசுகிறார். பொத்தாம் பொதுவாக விவசாயம் காப்பது பற்றியும், ஊழலற்ற, மதுவற்ற, அறிஞர்களின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் ஆட்சி வழங்கப்படும் எனப் பேசுகிறார்.
அதே கூட்டத்தில் அவர்களின் வருங்கால முதல்வர், மேடையில் இருப்பவர்கள் கூட்டத்தினர் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, கையை நீட்டிக் கொண்டு தேர்தலில் வாக்கு பெற லஞ்சம் கொடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிய அவர்களது நட்சத்திரப் பேச்சாளர் ஒருங்கிணைப்பாளர் வைகோவும் அந்த உறுதிமொழியை எடுத்தார். ஊழல் எதிர்ப்பில் எப்பேர்பட்ட துவக்கம்!
இடதுசாரிகள் இடம்பெறுகிறார்கள் என்பதாலும், மாற்று அரசியல் என்று பெரிதும் பேசப்படுவதாலும்தான், அவர்கள் தேர்தல் அறிக்கை பற்றி முதலில் குறிப்பிடுகிறோம். மக்கள் நலக் கூட்டணியின் முதல் வாக்குறுதி, கூட்டணி ஆட்சி பற்றியதாக உள்ளது. இந்தியாவுக்கு வழிகாட்டும் கூட்டணி ஆட்சி பற்றி அது பேச வருகிறது. ‘கேப்டன் விஜய்காந்த்’ தலைமையில் ‘அய்யா வாசன்’ துணையோடு, வைகோவை வைத்துக் கொண்டு, மேற்குவங்க, கேரள, திரிபுரா இடது முன்னணி அரசாங்கங்களைக் காட்டிலும் மேலானதாக ஓர் ஆட்சி தரும் விருப்பம் எவ்வளவு உயர்ந்த விருப்பம்!
எளிமையான சொற்களில் வலுவான கருத்துக்களைப் பேசும் கேப்டன், மற்றவர்கள் போல் அல்லாமல் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்து, முதல்வர் என்பதற்காகப் போடும் கையெழுத்து என்று எப்படி சிறப்பாகப் பேசுகிறார் தெரியுமா என்று கூட அந்தக் கூட்டத்தில் சிலாகிக்கப்பட்டது.
ஆனால் வைகோ கூட்டணி ஆட்சியை மூக்கணாங்கயிறு, கடிவாளம், அங்குசம் என்ற அளவுக்கே பார்க்கிறார். 104 இடங்களில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி, இவர்களது தேர்தல் அறிக்கையை ஏற்காத 130 இடங்களில் போட்டியிடும் கட்சிகள் விஷயத்தில் எப்படி மூக்கணாங்கயிறாக, கடிவாளமாக, அங்குசமாக இருக்க முடியும்? கூட்டணி ஆட்சியே தீர்வு ஆகிவிடுமா? பாஜக முதலில் நாட்டை ஆண்டது, தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி ஆட்சி மூலம்தான் என்பதையும், 2004 முதல் 2014 வரை இரண்டு முறை அய்க்கிய முற்போக்கு கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் இருந்தன என்பதையும், இந்த ஆட்சிகள் மக்கள் விரோத, தேச விரோத ஆட்சி நடத்தியதையும் மறக்க முடியுமா? மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையும், இடதுசாரிகள், வைகோ விஜய்காந்த் வாசன்களோடு அரசியல்ரீதியாக அணி சேர்ந்துள்ளதும் பொருந்தாத விஷயங்கள்.
திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் ஜனரஞ்சகமான விஷயங்களோடு, வளர்ச்சி பற்றியும் பேசுகின்றன. இரண்டு பேரும், இளைஞர்கள் பற்றிப் பேசுகிறார்கள். வேலை வாய்ப்பு பற்றிப் பேசி உள்ளார்கள். வழக்கமான வெற்று போலி வாக்குறுதிகள் தந்துள்ளார்கள். வேலையின்மையும் வேலையின்மைக்கான நிவாரணமும் குரூரமான நிஜமான யதார்த்தங்கள். இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைக ளும் வேலை இல்லா கால நிவாரணத்தை, படிப்புக்கேற்ப ரூ.300, ரூ.400, ரூ.600 என வழங்க உறுதி அளித்துள்ளன. எவ்வளவு ஆணவம்! இரண்டு கட்சிகளும் ஏழை விவசாயிகளுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவது பற்றியோ, தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு கவுரவமான குறைந்தபட்சக் கூலி வழங்குவது பற்றியோ, கல்வியில், மருத்துவத்தில் தனியார்மயமாக்கத்தை அகற்றுவது பற்றியோ பேசவில்லை.
பாஜக அறிக்கை கல்வியில் நீதி போதனைகளுக்கு (காவிமயமாக்கத்துக்கு) கவனம் செலுத்துகிறது. சிறுபான்மையினர்க்கு எதிராக நஞ்சை உமிழ்கிறது. ஜெயலலிதா கொண்டு வந்து அடிவாங்கி திரும்பப் பெற்ற மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வரப் போவதாகச் சொல்கிறது. ஆன்மிகம் பற்றி, இந்து கோவில்கள் பற்றி அதிகம் கவலைப்பட்டுள்ளது.
மத்திய பாஜகவிலிருந்து மாநில பாஜகவைப் பிரித்துப் பார்க்க முடியாது. கோவில்களின், மடங்களின் நிலங்கள் உழுபவர்கள் கைகளில் போகாமல் இருக்க வேண்டும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளது.
பாமகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டில் ஊழலுக்கு முதலிடமும் வளர்ச்சிக்குக் கடைசி இடமும் இருப்பதாகச் குற்றம் சுமத்துகிறது. ஒரு பைசா ஊழல் இல்லாத, ஒரு துளி மது இல்லாத தமிழகம் உருவாக்கப் போவதாகச் சொல்கிறது. தென்கொரியா போன்ற முதலாளித்துவ நாடுகளை, பிரம்மாண்டமான ஊழல்களுக்கும், ஏகபோக பெருமுதலாளிகளான சாய்போல்களுக்கும் முன்உதாரணங்களான நாடுகளைப் பின்பற்றப் போவதாகச் சொல்கிறது. வேளாண் தொழிலாளர் பற்றாக் குறையைச் சமாளிக்கும் விதத்தில் வேளாண் துறையில் இயந்திரமயமாக்கலும் நவீனமயமாக்கலும் துரிதப்படுத்தப்படும் என அப்பட்டமாக கிராமப்புறப் பணக்காரர்களுக்கு ஆதரவான கிராமப்புற வறியவர்களுக்கெதிரான நிலை எடுக்கிறது. சமூகத்தின் வேறு எந்த பிரிவினரையும் அல்லாமல், வாக்களிக்கும் மக்களை அல்லாமல், முதலீட்டாளர்களை மாதம் ஒரு முறை முதல்வர் சந்திப்பார் என உறுதி கூறுகிறது. ‘இலவசக் கலாச்சாரம்’ என இழித்துக் பழித்துத் துவங்குகிற அறிக்கையின் ஒரு தலைப்பு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் இலவசம் என ஆர்ப்பரிக்கிறது!
விலையில்லாப் பொருட்களுக்கு, சேவைகளுக்கு எதிரான கூப்பாடு நியாயமற்றது. அவை வீண் பொருளதார நாசம் எனப் பேசுவதும் ஏற்கத்தக்கதல்ல. மே 11 அன்று உச்சநீதிமன்றத்தில், சஹாரா நிறுவன அதிபர் சுப்ரதா ராயின் இடைக்கால ஜாமீன் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாகுர், நீதிபதிகள் தாவே, சிந்ரி அமர்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. சுப்ரதா ராயின் தாயார் மரணத்தை ஒட்டி அவருக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டிருந்தது. அவருக்காக வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
மூன்று கோடி முதலீட்டாளர்களிடம் சட்ட விரோதமாக ரூ.36,000 கோடி திரட்டியதாக, அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுதான் அவர் சிறை வைக்கப்பட்டார். இந்த சஹாரா நிறுவனம்தான் தனது பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை தேசபக்த உறுதிமொழி எடுக்க வைத்து பெரிதாக விளம்பரம் தேடிக் கொண்டிருந்தது. கபில் சிபல், மூடப்பட்ட உறையில் சுபத்ரா ராயின் தனிப்பட்ட சொத்துக்களின் பட்டியலைத் தந்து, இவ்வளவு சொத்திருப்பவர் ஜாமீன் கிடைத்தால் ஓடிப்போய் விடமாட்டார் என்றார். படித்துப் பார்த்த நீதிபதிகள் திடுக்கிட்டனர். பட்டியலில் சொல்லப்பட்டிருந்தத் தொகையைக் சொல்ல முன்வந்தபோது, கபில் சிபல் அவசர அவசரமாகக் குறுக்கிட்டு வெளியே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டது. இவ்வளவு சொத்து இருப்பவர் பணத்தைக் கட்டி வெளியில் வந்திருக்கலாமே, தேவையில்லாமல் ஏன் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்றனர் நீதிபதிகள். 6 மாத இடைக்கால ஜாமீனுக்கு மாதம் ரூ.500 கோடி வீதம் கட்டச் சொன்னார்கள். கபில் சிபல் பேரம் பேசி வாதாடி ஜ÷லை 11க்குள் ரூ.200 கோடி கட்டினால் போதும், 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங் கப்படுகிறது என உத்தரவு வாங்கி விட்டார்.
இந்திய ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராகவும் பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் பேங்க் ஆப் பரோடாவில் தலைவராகவும் இருந்த டாக்டர் கமலேஷ் சந்திர சக்கரவர்த்தி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கடந்த 15 ஆண்டுகளில் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன்கள், 2013 - 2015ல் (மன்மோகன் + மோடி காலம்) மட்டும் ரூ.1.14 லட்சம் கோடி கடன்கள் தொழில்நுட்ப தள்ளுபடி (டெக்னிக் கல் ரைட் ஆஃப்) செய்யப்பட்டுள்ளன என்ற ஒரு குண்டை வீசி உள்ளார். 2014ல் மோடிக்காக பிரச்சாரம் செய்த 3டி டிஜிட்டல் சித்தி விநாயகா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமும் இந்த தள்ளுபடியை அனுபவித்த ஒரு நிறுவனமாகும்.
2014 - 2015 நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,87,070 கோடி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குரூப் ரூ.1,24,956 கோடி, ரூயா பிரதர்சின் எஸ்ஸôர் குரூப் ரூ.1,01,461 கோடி, அனில் அகர்வாலின் வேதாந்தா ரூ.1,03,340 கோடி, கவுதம் அதானியின் அதானி குரூப் ரூ.96,031 கோடி, சைரஸ் மிஸ்ட்ரியின் டாடா ஸ்டீல் ரூ.80,701 கோடி, மனோஜ் கவுரின் ஜேபி குரூப் ரூ.75,163 கோடி, சஜ்ஜன் ஜின்டல் ரூ.58,171 கோடி, எல்எம் ராவின் லேன்கோ குரூப் ரூ.47,102 கோடி, ஜிஎம் ராவின் ஜிஎம்ஆர் குரூப் ரூ.47,976 கோடி, விஎன் தூத்தின் வீடியோகான் குரூப் ரூ.45,400 கோடி, ஜிவிகே ரெட்டியின் ஜிவிகே குரூப் ரூ.33,933 கோடி கடன் வாங்கி உள்ளனர்.
8 வருடங்களில் இந்தக் கடன்கள் 7 மடங்கு உயர்ந்துள்ளன. இப்போது திருப்பிக் கட்டுமாறு பல முனைகளில் இருந்தும் குரல் வருவதால், இந்தப் பாவப்பட்ட பெருமுதலாளிகள் சில சொத்துக்களை விற்றுக் கடன்களை அடைக்கப் போகிறார்களாம். முதலாளித்துவ பொருளாதாரத்தின் துவக்க கால அறிஞர் ஆடம் ஸ்மித் பெருவணிகர்களையும் தொழில் துறை உற்பத்தியாளர்களையும் மனித குல எசமானர்கள் என்றார். நிதி மூலதனமும் ஏகபோகமும் இன்று நாங்களே மனிதகுல எசமானர்கள் என்கிறார்கள். எல்லாம் எங்களுக்கே, மக்களுக்கு எதுவும் கிடையாது என்கிறார்கள்.
இந்தப் பின்னணியில், விலையில்லாப் பொருட்கள், சேவைகள் பற்றி கூப்பாடு போடுவது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பது புலப்படும். தமிழ்நாட்டில் விலை இல்லாமல் தரப்படும் 20 கிலோ அரிசி, மதிய உணவு, மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாட மற்றும் நோட்டு, புத்தகம், ஆடு, மாடு, டி.வி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி இவற்றை எப்படிப் பார்க்கப் போகிறோம்?
பிழைத்திருப்பதற்கும் சந்ததியினரை உருவாக்கவும், மானுட ரத்தத்தாலும் சதையாலும் ஆன உழைப்பு சக்தி என்ற பண்டத்தின் மதிப்பே கூலி என்கிறார் மார்க்ஸ். தமிழ்நாட்டில் முதலாளித்துவம் உழைக்கும் மக்களுக்கு பிழைத்திருப்பதற்கும் சந்ததியினரை உருவாக்கு வதற்குமான தொகைகளை கூட கூலியாகத் தருவதில்லை. நான்கு பேர் கொண்ட தலித் குடும்பத்தின் மாத வருமானம் ரூ.5,800அய்த் தாண்டவில்லை. இங்கேதான் முதலாளித்துவ அரசியல்வாதிகள், முதலாளித்துவத்திற்கு மான்யமாக விலை இல்லாப் பொருட்களை, சேவைகளை அரசாங்க கஜானாவிலிருந்து தருகிறார்கள். வறண்டு போன வாழ்க்கை உடைய மக்கள், ஒரு டம்ளர், ஒரு சொம்பு தண்ணீர் கிடைத்தாலும் அதனை இரண்டு கைகளாலும் பற்றிக் கொள்ளும் நிலையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 78 லட்சம் பேர் 2 மாதங்களில் 100 யூனிட்டிற்கும் மேல் மின்சாரம் செலவழிப்பதில்லை. சராசரி இந்தியரின் மின் நுகர்வைக் காட்டிலும் சராசரி அய்க்கிய அமெரிக்கர் 17 மடங்கு கூடுதலாக மின்சாரம் செலவழிக்கின்றனராம். ஆகவே விலை இல்லாப் பொருட்கள் பற்றிய மோசடி அறச்சீற்றத்தை, முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
தேர்தல் அறிக்கைகள், இந்தியாவில் தமிழ் நாடு ஒரு மாநிலம்தான் என்பதையும், நிதியும் அதிகாரமும் பெருமளவுக்கு மத்திய அரசிடமே உள்ளன என்பதையும், மத்திய அரசு பின்பற்றும் அடிப்படைக் கொள்கைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்பதையும் சொல்வதில்லை.
மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி தமிழ்நாடு உலகில் 17ஆவது இடத்தில் உள்ளதாக பாமக தேர்தல் அறிக்கை சொல்கிறது. (இந்தியாவில், தமிழகத்தை விட கூடுதல் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களைக் கணக்கில் கொண்டார்களா எனத் தெரியவில்லை). வேலை வாய்ப்பு மரத்தில் காய்க்கும் ஒரு விஷயம் போலவும், அந்த மரம் நடுவது மிகவும் சுலபம் போலவும் பேசுகிறார்கள். வேலை இல்லாத் திண்டாட்டம் மூலதனத் திரட்சிக்கு நெம்புகோல், முதலாளித்துவச் சுரண்டலுக்கு முன்நிபந்தனை என்பதை மறைக்கிறார்கள்.
மன்மோகன், மோடி பின்பற்றும் பொருளாதாரக் கொள்கைகள், குறை கூலி வேலைகளையே உருவாக்கும். அப்போதுதான் லாபங்கள் உயரும். இந்தக் கொள்கைகள் சிலர் கைகளில் செல்வம் குவியும் நிலைமையையே உருவாக்குகின்றன. வேலை இன்மையை, குறை கூலியை, பாதுகாப்பும் கவுரவமும் இல்லாத வேலைகளையே உருவாக்குகின்றன.
பொருளாதாரம் வளர, செழிக்க, மக்கள் கையில் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் நுகர்வும் தேவையும் அதிகரிக்க வேண்டும். அதற்கு அரசுகளின் பொது முதலீடும் அரசு செலவினங்களும் பிரம்மாண்டமாய் அதிகரிக்க வேண்டும். விவசாய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற செல்வந்தர்கள் நீங்கலான விவசாயிகளின், ஏழை, சிறு குறு நடுத்தர விவசாயிகளின் நலன்களுக்காக, விவசாய உள்கட்டுமானத்திற்காக சில லட்சம் கோடிகள் செலவழிக்கப்பட வேண்டும்.
ஆனால், நிதி மூலதனமும் ஏகாதிபத்திய மும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி மூலம், மத்திய மாநில அரசுகள் நிதி பொறுப்பு சட்டம் இயற்றுமாறும் அவற்றிற்கேற்பவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியும் எனவும், நிர்ப்பந்தித்துள்ளன. இந்தியா அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் பொது முதலீடோ அரசு செலவினங்களோ அவசியப்படும் அளவுக்குச் செய்ய முடியாது.
போலி தேச பக்திக்குப் பதிலாக, நிதிமூலதன ஏகாதிபத்திய எதிர்ப்புடன் பெருமுதலாளித்துவ சார்பு வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காத, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையை உயர்த்திப் பிடிக்காத எந்தத் தேர்தல் அறிக்கையாலும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
நிம்மதியாக உறங்காதே ஜிஷா!
ஷெஹ்லா ரஷீத்
அன்புள்ள ஜிஷா,
நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்க மாட்டாய்.
அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக படித்துக் கொண்டு, உனக்கும் உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலம் பற்றி கனவு கண்டு கொண்டு இருந்திருப்பாய். நட்சத்திரங்களையும் வானங்களையும் பற்றி கனவு கண்ட ரோஹித் வேமுலா போல்தான் நீயும் இருந்திருப்பாய். நீ சட்டம் பயிலும் மாணவி என்பதை அறிந்தேன். இந்த நாட்டின் சட்டங்கள் நம்மை மோசமாக கைவிட்டுவிட்டன என்பதைச் சொல்ல வருந்துகிறேன்.
ஒரு பன்வாரி தேவிக்கு நீதி கிடைக்காத தால்தான் பகானா நடந்தது. பகானாவில் யாருக்கும் நீதி கிடைக்காததால்தான் டெல்டா மேக்வால் நடந்தது. டெல்டா மேக்வாலுக்கு நீதி கிடைக்காததால்தான் ஜிஷா நடக்கிறது. உனக்கும் நீதி கிடைக்காது என்பதை மிகுந்த வேதனையோடு என்னால் யூகிக்க முடிகிறது.
ஏனெனில் நீ கற்ற சட்டம் இந்த தேசத்தை இயக்கும் சட்டமல்ல. இந்தத் தேசம் மனு ஸ்மிரிதி என்றழைக்கப்படும் இணைச் சட்டத்தின்படியேதான் இயங்குகிறது. நீதிபதி களின் தீர்ப்புகளில் எல்லாம் இது வழக்கமாக மேற்கோளாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதைப் பற்றி நீ சட்டக் கல்லூரியில் படித்தி ருக்க மாட்டாய். இந்த மனு ஸ்மிரிதியின் சட்டம்தான் பெண்களுக்கும் தலித்துகளுக்கும் வரம்புகளை நிர்ணயிக்கிறது.
பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வெளியே போகக் கூடாது, பெண்கள் படிக்கக் கூடாது, சுதந்திரமாக வாழக் கூடாது, தலித்துகள் படிக்கக் கூடாது, திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது... இவை இந்த நாட்டை வழி நடத்தும் மனு ஸ்மிரிதி சட்டத்தில் பதிந்துள்ளன.
நீ இந்த தேசத்தை நேசித்திருப்பாய். ஆனால் இது பெண்களுக்கான தேசம் இல்லை என்பதை நான் வருத்தத்தோடு சொல்கிறேன். மாறாக நீ ஆணாதிக்கம் பற்றியோ, சாதி அல்லது வர்க்கம் பற்றியோ கேள்வி கேட்டி ருந்தால், உனது குரல்வளையில் ஒன்றிரண்டு முழக்கங்களை திணித்திருப்பார்கள். யாராவது அநீதி குறித்து புகார் எழுப்பினால் பாரத் மாதா கி ஜெய் என்று சொல், வந்தே மாதரம் என்று சொல் என்பதுதான், அவர்களுக்கு நமது அரசு அளிக்கும் பதிலுரை. அதுதான் அதற்கு பிடித்தமான பதிலுரை.
நீ தேசப்பற்று கொண்டவளாக தேசத்தை நேசிப்பவளாக இருந்திருப்பாய் என நான் யூகிக்கிறேன். ஆனால் நீ வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படும்போது பாரத் மாதா கி ஜெய் என்ற பிரகடனம் உன்னைக் காப்பாற்ற உதவிக்கு வந்திருக்காது. உனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பற்றி வெளி வந்த விவரங்களை நினைத்து நான் நடுங்குகிறேன். குழந்தையாக இருக்கும்போதே தம் பெண் குழந்தைகளைக் கொல்பவர்கள் எல்லாம் சரியான காரியத்தைத்தான் செய்கிறார்களோ என்று நான் திகைப்படைகிறேன். வலிமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டிய என்னைப் போன்ற ஒருவருக்கு இது போன்ற நம்பிக்கையில்லா சிந்தனை வருகிறதே, ஆனால், அது நானாக இருந்திருக்கலாம், வேறு யாராகவும் இருந்திருக்கலாம். எனக்கு உன்னைத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நீ அனுபவித்த கொடுமையை என்னால் யோசித்துப் பார்க்க முடிகிறது.
உனக்கு நேர்ந்ததைத்தான் பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் எனக்கு விடுத்த மிரட்டல்களில் சொன்னார்கள். எங்கிருந்து வருகிறது இந்த சிந்தனை? உன்னை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களின் நடவடிக்கைகளுக்கும் இந்த சங் பரிவார விஷமிகளின் சொற்களுக்கும் இடையே உள்ள இந்த ஒற்றுமை எப்படி வந்தது? மனுவின் சித்தாந்தம், வெறுப்பு சித்தாந்தம், சாதிய, ஆணாதிக்க சித்தாந்தம்தான், இந்த இரண்டு வகை குற்றக் கும்பல்களையும் இது போன்ற குற்றங்களைச் செய்யவும் பேசவும் வைத்திருக்கிறது.
உனக்கு நீதி கிடைக்காது. ஏனெனில், பாலியல் வன்கொடுமையின் உண்மையான காரணத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றின் மீதும் நாம் உடனே குற்றம் சாட்டிவிடுகிறோம். பாலியல் வன்கொடுமைக்கு, பெண்களின் உடை, அவர்களின் விருப்பங்கள், வறுமை, மது, சாமீன் (நூடுல்ஸ் உணவு), கைப்பேசி மற்ற பிற அபத்தமான விசயங்கள் மீது நாம் பழி போடுகிறோம். ஆனால் ஆணாதிக்கத்தையோ, நிலப்பிரபுத்துவத்தையோ, பெண்களைப் பண்டமாக்கும் முதலாளித்துவத்தையோ, சாதியையோ, நமது சமூகத்தையோ நாம் குற்றம் சாட்டுவதில்லை.
உன்னைப் போன்ற பெண்களுக்கு, பகானா கூட்டு பாலியல் பலாத்காரத்தில் உயிர் பிழைத்திருக்கிற பெண்களுக்கு, காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு, இந்த நாட்டின் பழங்குடியினர் மீதான கார்ப்பரேட்டுகளின் தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதால் மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சோனி சோரி போன்ற பெண்களுக்கு (அவரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு விருது வேறு தரப்பட்டது) நீதி கேட்டு நாங்கள் குரல் எழுப்பினால் அரசியல் செய்யாதீர்கள், படிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று எங்களுக்குச் சொல்லப்படுகிறது.
படிப்பை மட்டும் கவனித்துக் கொண்டு, அரசியல் செய்யாமல் இருக்கும் கோடிக்கணக் கான மாணவர்களில் ஒருத்தியாகத்தான் நீ இருந்திருப்பாய். ஆனால், இந்தச் சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம் உன்னை விட்டு வைக்கவில்லை. நீ அனுபவித்த கொடுமை உன் மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பால் நேர்ந்தது அல்ல என்று நான் கருதுகிறேன்; பெண்களுக்கு எதிராக ஆழப் பதிந்திருக்கும் பாகுபாடுகள், பரவியிருக்கும் பெண் வெறுப்பு, பெண்களை உபயோகித்து தூக்கியெறியும் பொருட்களாக நடத்துவது ஆகியவற்றின் விளைவு அது.
எல்லாப் பெண்களுக்கும் எதிராக, எனக்கெதிராக, எனது நண்பர்களுக்கு எதிராக, சிந்தித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் வேலை செய்து கொண்டும் படித்துக் கொண்டும் கேள்வி எழுப்பிக் கொண்டும், அரசியலில் செயல் துடிப்போடு இயங்கும் பெண்களுக்கு எதிராக நிலவுகிற, நாமெல்லாம் பாரம்பரியமான சமூக மேட்டுக்குடியினர் அல்ல என்ப தால் நிலவுகிற, வெறுப்பின் வெளிப்பாடுதான், உனக்கு நேர்ந்த வன்முறை. என்ன துணிச்சல் இருந்தால் அவர்கள் தங்கள் பாலினத்தை மீறி நடப்பார்கள்? என்ன துணிச்சல் இருந்தால் தங்கள் இரண்டாந்தர சிறுபான்மை அந்தஸ்தை மீறி நடப்பார்கள்? என்ன துணிச்சல் இருந்தால் தங்கள் கீழ்ச்சாதி அந்தஸ்தை மீறி அவர்கள் நடப்பார்கள்?
சாதி, வர்க்கம், பால், இனம், மாற்றுத்திறன் ஆகிய பிரச்சனைகளை நாம் எழுப்பும்போது, மக்களை பிளவுபடுத்த வேண்டாம் என நமக்குச் சொல்லப்படுகிறது. சட்டத்தில் எழுதப்பட்டுவிட்டதால் சமத்துவம் அடையப்பட்டுவிட்டது என நமக்கு சொல்லப்படுகிறது.
ஆனால், உனக்காக நாங்கள் நீதி கோரும் போது, நிர்பயா என்றழைக்கப்பட்ட பெண்ணின் நிலையைப் போலவே கொடூரமானதாக உனது நிலை இருந்தாலும், தேசத்தின் மனசாட்சியை அது உலுக்காத போது, உனது சம்பவத்தில், அதற்குக் காரணமானவர்கள் ஏழைகளாக இல்லாத பட்சத்தில், யாருக்குமே கடுமையான தண்டனை கிடைக்காதபோது, சாதியின் குரூரமான யதார்த்தங்களை நாங்கள் வெகுசீக்கிரமே எதிர்கொள்ள நேரிடும்.
சக பெண்ணாக, சகோதரியே நீ நிம்மதியாக உறங்கு எனச் சொல்ல எவ்வளவு விரும்புகிறேன் தெரியுமா? ஆனால் நாம் வாழும் இந்த காலம், அப்படிச் சொல்ல என்னை அனுமதிக்கவில்லை.
நிம்மதியாக உறங்காதே ஜிஷா! எனச் சொல்ல நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். இந்த நாட்டில் யாரையும் நிம்மதியாக இருக்க விடாதே.
இந்தத் தேசத்தை, இந்த உலகத்தை சீற்றம் கொள்ளச் செய். அதன் சுயதிருப்தியில் இருந்து விழித்தெழச் செய்.
உன்
ஷெஹ்லா
ஒவ்வொரு 18 நிமிடங்களிலும் 1 தலித்துக்கு எதிரான குற்றம் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் 27 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
2012ல் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றங்கள் 33,655.
2013ல் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றங்கள் 39,408.
2014ல் தலித்துகளுக்கு எதிராக நடந்த குற்றங்கள் 47,064.
அவள் ஒரு பெண்...
ஆணாதிக்கம் அவள் மீது பாய்ந்தது
அவள் ஒரு தலித்...
சாதி வெறி அவள் மீது பாய்ந்தது
அவள் சட்டம் படிக்கும் மாணவி...
சட்ட விரோத சட்டம் அவள் மீது பாய்ந்தது
அவள் துடிப்பானவள்...
பொறாமை அவள் மீது பாய்ந்தது
அவள் புத்திசாலி...
ஆணாதிக்க வெறுப்பு அவள் மீது பாய்ந்தது
எல்லாம் அவள் மீது பாய்ந்து அவளைக் கொன்றுபோட்டன
அவளது சிந்தனையையும் உடலையும்
சிதைத்துப் போட்டன
கண்ணன் அர்ச்சுனனிடம் சொன்னான்
கர்ணன் அவன் கொல்லப்படுவதற்கு முன்பே
ஆறு முறை கொல்லப்பட்டுவிட்டான்
இப்போது இங்கே அதுபோல் ஒரு தலித் பெண்....
சீற்றத்தைச் சொல்ல வார்த்தைகள் போதாது..
- கே.சேஷ்யு பாபு
நன்றி: kafila.org தமிழில்: தேசிகன்
மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு
பறி போன உரிமைகளை மீட்க வேண்டும்!
கல்வி வர்த்தகமயமாக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும்!
முதலாளித்துவம் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் தன்னைப் போலவே மாற்றி விடும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிச் சொல்கிறது. போட்டி... போட்டி... போட்டி... லாபம் ஈட்டுவதில் மட்டுமல்ல. முதலாளித்துவ சமூகத்தின் ஒவ்வோர் அரங்கிலும் அம்சத்திலும் போட்டி. இங்கு தக்கவை பிழைக்கும் என்ற காட்டு விதியே நியதி. இந்த விதிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் இன்றைய மாணவர்கள்.
மருத்துவப் படிப்பு கடினமானது, கூடுதல் ஆண்டுகள் படிக்க வேண்டியது, படித்த பிறகும் பொருளீட்ட முடியும் என்றாலும் பெயரீட்ட காலம் பிடிக்கும் போன்ற காரணங்களால், நல்ல மதிப்பெண் பெற்றிருந்த மாணவர்கள் கூட மருத்துவப் படிப்புக்குப் பதிலாக பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தார்கள். அந்தக் காலம் போய்விட்டது. பொறியியல் படிப்பு கிட்டத்தட்ட +2 போல் ஆகிவிட்டது. பொறியியல் மாணவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக சம்பளம் ரூ.10,000 கூட தாண்டாத வேலைகள் பார்க்கிறார்கள். மருத்துவம், எதிர்கால உத்தரவாதம், மரியாதை எல்லாம் தரும் என்பதால் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதற்குரியப் பாடப் பிரிவில் சேர்ந்து, அந்த வயதுக்குரிய எல்லா கேளிக்கைகளையும் ஒத்தி வைத்துவிட்டு அல்லது ஒதுக்கித் தள்ளிவிட்டு மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட வேண்டும் என்று பேயாய் அலைந்து படிக்கிறார்கள் மாணவர்கள்.
அப்படிப் படித்துப் படித்து, இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேரக் காத்திருந்த மாணவர்களுக்கு, குறிப்பாக, தமிழ்நாட்டு மாணவர் களுக்கு பேரதிர்ச்சி தந்தார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலான வழக்குகள், மேல்முறையீடுகள், ஆகியவற்றுக்குப் பிறகு, பொது நுழைவு தேர்வுதான் எல்லாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
‘இந்த ஆண்டு’ மாநிலங்கள் நடத்திக் கொள்ளலாம் என்றும் தனியார் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்றும் முதல் கட்டத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களும் ஜ÷லை 24 அன்று நடக்கும் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்லிவிட்ட பிறகும் உச்சநீதிமன்றம் பொது நுழைவுத் தேர்வுதான் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளது.
மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தில் ‘இந்த ஆண்டு’ என்று சொன்னதைக் கூட தானே சொல்லிவிடவில்லை. மாணவர்கள், மருத்துவர்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்பு உருவான பிறகே இந்தத் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு சொன்னவற்றை உச்சநீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை.
உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளபடி, நாடு முழுவதும் மருத்துவம் படிக்கக் காத்திருக்கும் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். மாநிலங்கள் இதுவரை நடத்தியிருந்த தேர்வுகள் செல்லாது. மாநிலங்கள், நிகர்நிலை பல்கலை கழகங்கள், தனியார் கல்லூரிகள், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் யாரும் தனியே தேர்வு நடத்த முடியாது. முதல் கட்டத் தேர்வு எழுதிய மாணவர்கள் திடீர் அறிவிப்பால் சரியாக தயார் செய்யவில்லை, அதனால் இரண்டாவது கட்டம் எழுத வேண்டும் எனக் கருதி னால் முதல் கட்டத்தில் அவர்கள் எழுதியது செல்லாது. மாநிலத்தில் எந்தச் சட்டம் இருந்தாலும் மத்திய அரசின் சட்டமோ, அறிவிப்பாணையோ அதே விசயத்தில் வந்தால், மத்திய அரசின் சட்டமோ அறிவிப்பாணையோதான் செல்லுபடியாகும். (அதன்படி, மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு இல்லாமல் சேர்க்கை நடத்தும் தமிழக அரசின் சட்டம் செல்லாது).
தமிழகத்தில் மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வு நடத்தப்படுவதில்லை. 2007ல் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பொறியியல் போல், மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் தரப்படுகின்றன. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில், வழக்கமாக நடக்கும் நுழைவுத் தேர்வுகள் நடந்துள்ளன. இந்தத் தேர்வுகள் எழுதிய மாணவர்களுடன் முதல் கட்ட பொது நுழைவுத் தேர்வு எழுதாத தமிழக மாணவர்களும் இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு எழுதினால்தான் மருத்துவப் படிப்புக்குள் நுழைய முடியும்.
இருக்கிற நிலைமைகளில் ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், தமிழ்நாட்டில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்கக் கூடும் என்பதால், மருத்துவம் படிக்கும் லட்சியம் கொண்ட மாணவர்கள் வேறு வேறு நுழைவுத் தேர்வுகளையும் எழுதி வைக்கிறார்கள்.
மத்திய பாடத் திட்டப்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர நடத்தப்படும் தேச அளவிலான நுழைவுத் தேர்வு மே 1 அன்று நடத்தப் பட்டுவிட்டது. இந்தத் தேர்வுதான் பொது நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கத் துப்பில்லாத இந்திய அதிகார வர்க்கம், நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம் மிகவும் கறாராய் கண்டிப்பாய் நடந்து கொண்டது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் காதுகளுக்குள் கூட டார்ச் அடித்துப் பார்த்து ப்ளூடூத் கருவி ஏதும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள். அரைக் கைச் சட்டை, சாதாரண செருப்பு ஆகியவற்றுடன்தான் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வுக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்கள். (இந்தக் கெடுபிடிகளை எல்லாம் விஜய் மல்லையா போன்றவர்களிடம் காட்டியிருந்தால், நாட்டில் பல தரமான மருத்துவக் கல்லூரிகளை, மருத்துவமனைகளைக் கட்டியிருக்க முடியும்).
இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த தமிழக மாணவர்களில் 3,250 பேர் மே 1 அன்று நடந்த முதல் கட்டத் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
பிரச்சனை இங்கு முடிந்துவிடவில்லை. இந்தத் தேர்வு மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அந்த நுழைவுத் தேர்வு எழுதுவது சிரமம். நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் இல்லாதபோது, ஒரே நுழைவுத் தேர்வு நடத்துவதில் பொருள் இல்லை. இந்தத் தேர்வில் தவறான விடைகள் மதிப்பெண்களைக் குறைக்கும். இதுவும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதை கடினமாக்கும்.
படுபாதகமான நிலைமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்புவதற்குப் பதிலாக அந்தப் பாதகமான நிலைமைகளில் ஏதாவது கொஞ்சமாவது தங்களுக்குக் கிடைக்காதா என்று தேட நமது ஆட்சியாளர்கள் நம்மை பழக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டு பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. நமது பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு மதிநுட்பம் உடைய வர்களாக இருந்திருக்கிறார்கள். பல அரங்கங்களிலும் பல்வேறு சாதனையாளர்களை நமது கல்வித் திட்டம் உருவாக்கியிருக்கிறது. இவர்கள் இன்றைய பாடத் திட்டத்தில் படித்தவர்கள் அல்ல. இன்றைய பாடத் திட்டத்தை விட எளிதானது என்று மதிப்பிடப்படுகிற பாடத் திட்டத்தில் படித்தவர்கள். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று தெரியாமல், கல்வி வர்த்தகமயமாக்கம் என்ற கண்ணுக்கு நன்கு தெரிகிற பூதம் தவிர வேறு வேறு இடங்களில் காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும் கேள்விகள் கேட்கப்படுவதால், தமிழ் மட்டுமே படித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேரும் கனவுகள் கொண்டுள்ள தமிழக மாணவர்கள், பின்தங்கிய பொருளாதார, சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் அந்தக் கனவுகளை மறந்துவிட வேண்டும். தமிழிலும் இந்தத் தேர்வு எழுதுவதற்கான சாத்தியப்பாடு பற்றி யோசிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் தங்கள் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திருப்ப, வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள, அவர்கள் போராட்டங்களில் இருந்து எழுகிற சில மக்கள் ஆதரவு நடவடிக்கைகளை எடுத்துத் தீர வேண்டியிருக்கிறது. அதுபோன்ற நடவடிக்கைகளில் ஒன்றாக, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநில அரசுகள் தங்கள் சட்டங்கள், விதிகள்படி மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. அந்த உரிமையில் மத்திய அரசு தலையிடுகிறது.
நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத 69% இட ஒதுக்கீட்டு உரிமையை தமிழ்நாட்டில் கண்காணிப்புடன் பாதுகாத்து வருகிறோம். பொது நுழைவுத் தேர்வு அந்த உரிமையையும் பாதிப்புக்குள்ளாக்கும். பிற்படுத்தப்பட்ட, தலித் சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்புக்கு பொது நுழைவுத் தேர்வு தடை போட்டு விடும். இன்றைய நிலைமைகளிலேயே, மதிப்பெண் இருந்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத சில மாண வர்கள் இடஒதுக்கீடுதான் அதற்குக் காரணம் என்று நீதிமன்றங்களை நாடுவது நடக்கிறது. பொது நுழைவுத் தேர்வு இந்த நிலைமைகளை மேலும் சிக்கலானதாக மாற்றும். மேல்சாதி, மேட்டுக்குடியினர் மட்டும் மருத்துவப் படிப்பு பெறுவார்கள் என்ற நிலை உருவாகக் கூடும்.
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தால் கூடுதல் மதிப்பெண் பெற முடியும், அதனால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைப்பது எளிது என்று மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் கூட +2 படிப்பில் மாநிலப் பாடத் திட்டத்துக்கு மாறினார்கள். இந்த ஆண்டு அப்படி மாற நினைத்தவர்கள் பலரும் மத்தியப் பாடத் திட்டத்திலேயே தொடர முடிவு செய்கிறார்கள். இதுவும் மத்திய அரசு பாடத் திட்டத்தை, மாநிலப் பாடத் திட்டம் விரும்பும் மாணவர்கள் மீது திணிக்கும் வழிதான். இதன் கூடவே இந்தி, சமஸ்கிருதம் எல்லாம் வரும்.
இந்த பொது நுழைவுத் தேர்வு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்தும் என்பது வாதம். ஆனால், தனியார் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தி விட்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரேயடியாக தீர்வு கண்டுவிட முடியும். ஏன் மத்திய அரசு தலையைச் சுற்றி மூக்கைத் தொடப் பார்க்கிறது? உண்மையிலேயே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்று நாம் நம்புவதற்கு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதுவும் நடந்துவிடவில்லை.
இல்லையென்றாலும் இதுதான் காரணம் என்றால் குறைந்தபட்சம் தனியார் கல்லூரிகளுக்கும் பல்கலை கழகங்களுக்கும் மட்டும்தானே நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்? தனியார் கல்லூரிகளில் நிர்வாகத்துக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்புவதற்கும் மத்திய அரசு திணிக்கும் நுழைவுத் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தனியார் நிர்வாகம் கேட்கிற பணத்தைக் கொடுத்தால் கழுதைக்கும் குதிரைக்கும் கூட மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். அங்கு +2 மதிப்பெண் கூட ஒரு பொருட்டல்ல. தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கத்தான் நுழைவுத் தேர்வு என்றால், அதுவும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் விசயத்தில் பொருளற்றுப் போகிறது.
மத்திய, மாநில அரசுகளே திட்டமிட்டு, லட்சம் லட்சமாக சம்பளம் கொடுத்து அதிகாரிகள் நியமித்து, அவர்கள் கூடிகூடி போண்டா, டீ சாப்பிட்டு, கல்வியாளர்கள் வடிவமைத்த பாடத் திட்டத்துக்கு ஒப்புதல் தந்து.... இதை ஒரு மாணவர் 12 ஆண்டுகள் படித்து எழுதிய தேர்வுகளில் தெரியாத தகுதி பொது நுழைவுத் தேர்வில் புதிதாகத் தெரிந்து விடப்போவதில்லை.
நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். இங்கு முதல் கட்ட கொள்ளை நடந்துவிடுகிறது. பயிற்சி வகுப்புகள் நடத்தும் நிறுவனங்கள் ஓராண்டு பயிற்சி வகுப்புக்கு ரூ.12,800 வரை வசூலித்தன. இப்போது 45 நாட்கள் வகுப்புக்கு ரூ.22,500 என கட்டணம் உயர்ந்துவிட்டது. இந்தப் பயிற்சி தரும் சிலர் ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 முதல் ரூ.1,500 வரை கூட கட்டணம் பெறுகிறார்கள்.
பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற பின்னணியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் தங்கள் கல்வி கட்டணத்தை உயர்த்திவிட்டன. உதாரணமாக சவீதா பல்கலை கழகத்தில் ரூ.7 லட்சமாக இருந்த ஆண்டு கல்வி கட்டணம், இந்த ஆண்டு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புச் செலவு மொத்தமாக ரூ.80 லட்சம் வரை வந்துவிடும். ஊழல் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் பிள்ளைகள் மட்டும்தான் இந்தக் கட்டணம் செலுத்தி படிக்க முடியும். அரசு ஊழியர்கள் கூட தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பு பற்றி யோசிக்க முடியாது.
இப்படிப் பெருஞ்செலவு செய்து படித்து வெளியில் வரும் மருத்துவர்கள் நாளைய இந்தியாவின் நல்வாழ்வை எந்த அளவுக்கு உறுதி செய்வார்கள் என்பது அச்சுறுத்துகிற கேள்வி. தலிபான்களிடம் இருந்தோ, அய்எஸ்எஸ்ஸிடம் இருந்தோ தனியாக நமக்கு தீவிரவாத ஆபத்து வர வேண்டியிருக்காது. இன்றைய நிலைமைகளிலேயே, தவறான மருத்துவத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் என்று வாரத்தில் ஒரு செய்தியையாவது நாம் கடந்து செல்கிறோம்.
உச்சநீதிமன்றம் என்னதான் சொன்னாலும், அவசரச் சட்டம் பிறப்பிப்பதில், பெரும்பான்மையே இல்லை என்றாலும் ஏதோ ஒரு பெயரில் மக்கள் விரோதச் சட்டத்தை நிறைவேற்றுவதில் மோடி அரசுக்கு போதுமான அனுபவம் இருப்பதை நிலப்பறி மசோதா விசயத்திலும் ஆதார் அட்டை விசயத்திலும் நாடு பார்த்திருக்கிறது. நாட்டின் லட்சக்கணக்கான மாணவர்களின் இன்றைய மன உளைச்சலைப் போக்க, நாளைய வாழ்க்கையை உறுதி செய்ய மோடி அரசு தனது துணிச்சலை இந்த விசயத்தில் காட்டி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். பொது நுழைவுத் தேர்வு இல்லாமல் +2 மதிப் பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேர வழி காண வேண்டும். இந்த விசயத்தில் மோடி அரசுக்கு தேவை, அரசியல் விருப்பம், அரசியல் தயார்நிலை மட்டுமே.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் நடப்பதால், இந்தப் பிரச்சனையிலும் வாக்குறுதிகள் தாண்டவமாடுகின்றன. வாக்குறுதி தரும் யாரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதாகச் சொல்லவில்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அடுத்த வாக்குறுதி தந்ததோடு ஜெயலலிதாவின் சாதனை முடிகிறது.
கருணாநிதி, தனது ஆட்சியில்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் அதனாலேயே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இந்தச் சட்டத்தை வலியுறுத்தி வாதிடவில்லை என்றும் திமுக ஆட்சி வந்தால் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சொல்கிறார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கு +2 மதிப் பெண்கள் அடிப்படையில்தான் இப்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதை ஏன் கருணாநிதி, பிரச்சனையில் இருக்கும் மருத்துவப் படிப்புடன் சேர்த்து, அதில் இருக்கும் அமைதியையும் கெடுக்கப் பார்க்கிறார்?
ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் பட்டம் பெற்று வேலை வாய்ப்புச் சந்தையில் நுழைகிறார்கள், அவர்களுக்கு என்ன வேலை வாய்ப்பு உத்தரவாதம் என்ற கேள்விக்கு ஏன் அவ்வளவு பேர் வெளியே வருகிறார்கள் என்று பதில் கேள்வி கேட்டார், தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதி ஒருவர். ஏன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று அவர் கேட்டாலும் வியப்பில்லை. மேல் தட்டில் இருக்கும் மிகச் சிலருக்கு மட்டுமே எல்லா வளங்களும் என்ற நிலைமைகளுக்கு எதிராக, ஒவ்வொரு பிரச்சனையிலும் போராடி மட்டுமே சாதாரண உரிமைகளைக் கூடத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை இருக்கும்போது, அக்கம்பக்கமாக, மக்கள் பற்றிய இவ்வளவு விவரமான பார்வை இருப்பவர்களும், அவர்கள் இப்படிச் சொல்ல வெளி உருவாக்கித் தருபவர்களும் இருக்கும்போது, சாமான்ய மக்கள், நடுத்தர பிரிவு மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் எதிர்கொள்ள வேண்டிய சவாலின் தீவிரமும் அதிகரிக்கிறது.
இன்றைய மாணவர்களுக்கு கடைநிலை பள்ளிப் பருவமும் அதில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் முன்பு கடக்க வேண்டிய காலமும், அவர்கள் விரும்பவில்லை என்றாலும், எதிர்காலம் பற்றிய அச்சத்துடனும் பதட்டத்துடனும்தான் கடந்து செல்கிறது. குறைந்தபட்சம் நமது ஆட்சியாளர்கள் இந்த மாணவர்களைத் துன்புறுத்துவதையாவது, அவர்களை மேலும்மேலும் பதட்டத்துக்குத் தள்ளுவதையாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். மாநிலங்கள், தங்கள் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின்றி, இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் நேராமல், மாணவர் சேர்க்கை நடத்தும் நிலை தொடர வேண்டும். தனியார் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என்று மத்திய அரசோ, மருத்துவக் கவுன்சிலோ புறப்படுவது ஏமாற்று. தனியார் கல்லூரிகளால் மாணவர்களும் பெற்றோர்களும் படும் துன்பங்களைப் புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. அவை அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும். முதல் இரண்டு அம்சங்கள் ஏற்கனவே போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டு இன்று பறி போயுள்ளவை. பறி போனவற்றை மீட்பதும் போராட்டங்களால்தான் சாத்தியம். அந்தப் போராட்டங்கள் கல்வி வர்த்தகமயமாக்கத்துக்கு முடிவு கட்டும் வரை நீள வேண்டும்.
அரசுக்குச் சொந்தமான டன்லப் விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பு
போராட்ட மைதானமான விளையாட்டு மைதானம்
அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக விளையாட்டுக்காக மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் அம்பத்தூர் டன்லப் விளையாட்டு மைதானம், கடந்த 5 மாதங்களாக விளையாட்டு வீரர்களின் போராட்டக் களமாக மாறியிருக்கிறது.
டன்லப் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இந்த விளையாட்டு மைதானத்தை அரசு பொது விளையாட்டு மைதானமாக அறிவிக்க வேண்டும் என்றும், கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்புள்ள இந்த விளையாட்டு மைதானத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முயற்சிக்கும் கும்பல்களுக்கும், டன்லப் நிர்வாகத்துக்கும், அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராகவும் இகக மாலெ தொடர்ந்து போராடி வருகிறது.
தற்போது இந்த மைதானத்தை ஏப்ரல் 21 முதல் மே 30 வரை 40 நாட்களுக்கு வர்த்தக பொருட்காட்சி நடத்த வேதாரண்யத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு லட்சக்கணக் கில் வாடகைக்கு விட்டுள்ளது டன்லப் நிர்வாகம். இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துள்ளது.
டன்லப் தொழிற்சாலை அமைந்துள்ள நிலமும், டன்லப் விளையாட்டு மைதானமும் தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். அது டன்லப் தொழிற்சாலைக்குச் சொந்தமானதல்ல. இந்த நிலம் 1957ல் டன்லப் தொழிற்சாலைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது. தொழிற் சாலை மூடப்படும் நிலை ஏற்பட்டால், இந்த நிலம் மீண்டும் அரசின் வசமாகிவிடும் என்று இது குறித்த தமிழக அரசாணையில் தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதால், அதன் அனைத்து சொத்துக்களையும் Official Liquidator வசம் ஒப்படைக்கும்படி கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2015 டிசம்பரில் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இன்னமும் இந்த நிலத்தில் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடி வருகிறது டன்லப் நிர்வாகம். அதன் ஒரு பகுதியாகவே டன்லப் விளையாட்டு மைதானத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டன்லப் விளையாட்டு மைதானம், அம்பத்தூர் பகுதி மட்டுமல்லாமல் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர் இளைஞர்களுக்கு கிரிக்கெட் கால் பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான ஒரே தரமான மைதானமாகும். தற்போது பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், கோடை விடுமுறையில் விளையாடுவதற்கு இடமின்றி மாணவர்களும், இளைஞர்களும் அல்லல்படுகின்றனர். இங்கு தினசரி நடைப்பயிற்சி செய்யும் பெரியவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொருட்காட்சி நடத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதை அறிந்து அதை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் தலைமையில் விளையாட்டு வீரர்களும் பகுதி மக்களும் டன்லப் ஓய்வு பெற்ற தொழிலாளர் நலச் சங்கத்தினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினரும், அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கத்தின் தலைவருமான தோழர் பாரதி, சங்கத்தின் செயலாளர் மோசஸ் தலைமையில் 24.04.2016 அன்று மனித சங்கிலி போரட்டத்தில் ஈடுபட்டதற்காக விளையாட்டு வீரர்கள், வழக்கறிஞர் தோழர்கள் சங்கர், அதியமான், புகழ்வேந்தன், தோழர் மோகன், தோழர் முனுசாமி உள்பட சுமார் நூறு பேர் கைது செய்யப்பட்டனர். இகக மாலெ அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் தோழர் பழனிவேல் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
பொருட்காட்சி நடத்த அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் வழக்கு தொடுத்தது. 29.04.2016 அன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் வைகை சங்கம் சார்பாக வாதாடினார். அய்ந்து நாட்களுக்குள் தமிழக அரசு தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து வேறு வழியின்றி தனது ஒப்புதலை ரத்து செய்து, தமிழக அரசு 05.05.2016 அன்று ஆணை வெளியிட்டது. ஆனால், அந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளது பொருட்காட்சி நடத்தும் தனியார் நிறுவனம். Official Liquidator அலுவலகத்தில் ரூ.2 லட்சத்தை பொருட்காட்சி நடத்தும் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நீதிமன்றம் அந்த தடையாணையை வழங்கியது.
தற்போது அந்த தடையாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விளையாட்டு வீரர்கள் நலச் சங்கம் டன்லப் தொழிலாளர் சங்கம் டன்லப் ஒய்வு பெற்ற ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்படவுள்ளது. என்ன நடந்தாலும் சரி, மேலும் மக்களை அணிதிரட்டி விளையாட்டு மைதானத்தை மீட்டே தீருவோம் என்ற உறுதியுடன் விளையாட்டு வீரர்களும் டன்லப் மைதானத்தை பயன்படுத்தும் பொது மக்களும் இகக மாலெ தோழர்களும் கொண்டாட்டமாய்ப் போராட்டக் களத்தில் உள்ளனர்.
இந்தப் போராட்டத்தினூடே, 2015 டிசம்பரில், இகக மாலெ மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன் மற்றும் 8 பேர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 151ன் கீழ் (முன்னெச்சரிக்கை கைது) அம்பத்தூர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது. இப்போது, டன்லப் மைதானத்தில் பொருட்காட்சி நடத்த அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கொடுத்துள்ள புகாரில், தோழர்கள் பாரதி, மோகன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143 ( சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது), மற்றும் 188 (அரசு ஊழியர் உத்தரவுக்குக் கீழ்படியாமை) ஆகியவற்றின் கீழ் ஏப்ரல் 24 அன்று அம்பத்தூர் காவல் நிலையம் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஜேஎன்யு மாணவர்கள் பட்டினிப் போராட்டம்
உடல் எடை குறைகிறது. சர்க்கரை அளவு குறைகிறது 
ஆனால் போராட்ட உணர்வு பெருக்கெடுக்கிறது....
இந்தக் கட்டுரை எழுதும்போது ஜேஎன்யு மாணவர்கள் 17 பேர் துவங்கிய பட்டினிப் போராட்டம் 13ஆம் நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பிப்ரவரி 9 அன்று ஜேஎன்யு வளாகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக மாணவர்கள் பலர் மீது தேசத்துரோக வழக்கு, கைது என நடவடிக்கை துவங்கியது. ஆர்எஸ்எஸ், ஏபிவிபி, பாஜக துவக்கிய இந்த தேசப்பற்று பற்றிய பிரச்சனை நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. இடதுசாரி கருத்தியல் ஆழ வேரூன்றியுள்ள ஜேஎன்யுவில் மாணவர்கள் வழக்கு, சிறை, காவல்துறை அச்சுறுத்தல் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்து வந்தார்கள். சங் பரிவாரங்களின் வழிகாட்டுதலில் இப்போது உயர்மட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை மீது பல்கலை நிர்வாகம் மாணவர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறது. ரூ.10,000, ரூ,20,000 அபராதம், ஒரு பருவ தேர்வுக்கு தடை, விடுதியிலிருந்து வெளியேற்றம், 5 ஆண்டுகளுக்கு கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுப்பு வரை விதவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.
உயர்மட்ட விசாரணைக்குழு முன்னதாகவே அறிக்கை கொடுத்திருந்தும், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஏப்ரல் இறுதி வாரத்தில்தான் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதுதான் மாணவர்கள் போராட முன்வரமாட்டார்கள் என நிர்வாகம் தப்புக் கணக்குப் போட்டது.
ஆனால் ஏப்ரல் 27 அன்றே 19 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். நிர்வாகத் துறை கட்டிடம் முன்பு பட்டினிப் போராட்டம் நடக்கும் இடத்திற்கு ‘சுதந்திர சதுக்கம்’ எனப் பெயரிடப்பட்டது. மாணவர்கள் கொண்டாட்டமாய் போராட்டத்தை துவங்கினர். கலை நிகழ்ச்சிகள், ஓவியங்கள், முழக்கங்கள் என தங்களது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தினர். ஒலிபெருக்கிக்கு அனுமதியில்லை, போராட்டக்காரர்கள் கழிவறையைப் பயன்படுத்தத் தடை என நிர்வாகம் எடுத்த தாக்குதல் நடவடிக்கைகளை மாணவர்களும் ஆசிரியர்களும் முறியடித்தனர். நிர்வாகத்தின் இந்த ‘ரோஹித் வேமுலா மாதிரி’ அடாவடி நடவடிக்கைக்கு எதிராக ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் ஒருமைப்பாடு தெரிவித்து நின்றது. ஜேஎன்யு பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்எஸ்எஸ்ஸின், அரசாங்கத்தின் எடுபிடியாய் செயல்பட்டு நல்ல ஆலோசனைகள் எதையும் ஏற்க மறுத்துவிட்டார்.
மே 1 அன்று ஜேஎன்யு வளாகத்தில் ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கமும் ஜேஎன்யு மாணவர் சங்கமும் இணைந்து மே தினத்தை கொண்டாடின. தொழிலாளர் உரிமைக்காக நின்ற மாணவர்கள் பக்கம் உறுதியாக நிற்பதாக தொழிற்சங்கம் அறிவித்தது. இது போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்தது. ஒரு வார காலத்திற்கும் மேலான பட்டினிப் போராட்டத்தில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உட்பட சிலர் மயக்கமுற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையிலும் சிகிச்சை எடுக்க மறுத்து மீண்டும் சுதந்திர சதுக்கம் வந்து சில மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
மே 7 அன்று ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர்கள், டெல்லியிலுள்ள ஜனநாயக சக்திகள் கலந்து கொண்ட மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. மே 8, அன்னையர் தினத்தன்று பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மாணவர்களின் தாய்மார்கள் உட்பட பல அன்னையர்கள் ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் மாணவர்களின் விடாப்பிடியான இந்தப் போராட்ட உணர்வைப் போற்றி ‘சுதந்திரச் சதுக்கத்தில்’ உரையாற்றினார். பீகார் மாநிலம் போஜ்பூரிலுள்ள ஜேஎன்யு மாணவர் தோழர் சிந்து குமாரியின் சொந்த ஊரில் ஜேஎன்யு ஆதரவு உண்ணாவிரதப் போராட் டத்தில் அவ்வூர் மக்கள் கலந்து கொண்டனர். பீகார் முழுக்க மாணவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகம், அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்கள் மீதான இந்த அதீத தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி ஜேஎன்யு ஆசிரியர்கள் சங்கங்கள் துணைவேந்தருக்கு வேண்டுகோள் விடுத்தன. ஆளும் பாஜக அரசின் பொம்மையான துணை வேந்தர் ஜெகதீஷ்குமார் எல்லாவற்றையும் புறக்கணித்தார். பட்டினிப் போராட்டம் சட்டவிரோதமா னது என்றார். கோரிக்கைகளை ஏற்று தண்டனைகளை ரத்து செய்வதற்குப் பதிலாக மாணவர்கள் தங்கள் உடல்நிலையை மோசமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றார். உடல்நிலை மோசமாகி சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போது புதிதாக வேறு சில மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தைத் துவக்கியிருக்கின்றனர்.
மே 10 அன்று நடைபெற்ற அகாடமிக் கவுன்சில் கூட்டத்திற்கு துணை வேந்தர் வந்தபோது அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஜேஎன்யு மாணவர் சங்கம், கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தும் சங்கத்தின் தலைவர் கன்னையா குமார், பொதுச் செயலாளர் ராமநாகா, துணைத் தலைவர் ஷெஹ்லா ரசீத் ஆகியோர் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. காவலர்களோடு நடைபெற்ற தள்ளுமுள்ளுவுக்குப் பின் அரங்கினுள் தோழர்கள் சென்றனர். அங்கு பட்டினிப் போராட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சார்பாக துணை வேந்தருக்கு பழக் கூடையும், பூச்செண்டும் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்கள் தங்களது உணவுத் தட்டுகளையும் அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
கூட்டத்தில் தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதியாக இருந்ததால் துணை வேந்தர் கூட்டத்தையே நடத்தாமல் வெளியேறிச் சென்று ஓடிவிட்டார். மாணவர்கள் ‘துணை வேந்தரே திரும்பிப் போ’ என்று முழக்கமிட்டனர். அவர் மாணவர்கள் தனது சட்டையைப் பிடித்து இழுத்தார்கள் என்று இப்போது பொய்யான புகார் ஒன்றும் அளித்திருக்கிறார்.
போராட்ட இடத்திற்கு அருகிலேயே ஏபிவிபி அமைப்பினர் குழுமி மதவெறி, சாதிய, ஆணாதிக்க துவேசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டத்தை திசை திருப்பும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து முன்னேறி வரும் ஜேஎன்யு மாணவர் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. மாணவர்களின் ஜனநாயகத்துக்கான இந்த போராட்டம் ஆளும் பாஜகவுக்கு நிச்சயம் சாவு மணி அடிக்கும்.
தருணத்தைக் கைப்பற்றி மக்களோடு நெருக்கமாக இணைவோம்!
20,000 பேரை வீடுகளில் நேரில் சந்தித்து 
அம்பத்தூர் வேட்பாளர் தோழர் கே.பழனிவேல் பிரச்சாரம்
டான்ஸ் இல்லை. பளபளப்பான ஜிகினாக்கள், பதாகைகள், காதைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள் என்ற ஏதும் இல்லை. வண்ணமயமான 1/8 அழகிய துண்டு பிரசுரம் மட்டுமே அவரிடம் உள்ளது. எனக்கு மக்களை சந்திப்பது புதிய விஷயம் இல்லை. அம்பத்தூரில் மக்கள் சார்பு வளர்ச்சி மட்டுமே வேண்டும். இங்கு 25 ஆண்டுகால கார்ப்பரேட் வளர்ச்சியால் வாழ்ந்து உயர்ந்தவர்கள் கழகங்களின் தலைவர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமே. இப்படிப் பேசிக் கொண்டு, தெருவில் இறங்கி இன்று (12.05.2016) 17ஆவது நாளாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் அம்பத்தூர் தொகுதி இககமாலெ வேட்பாளர் தோழர் கே.பழனிவேல்.
தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்கு பிறகும் மக்களின் கவலைகள் விருப்பங்கள் கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தது, இககமாலெ மட்டுமே என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்குகிறார். சாராயக் கடைகளை மூடியதைச் சொல்லுகிறார். டன்லப் மைதானத்தை விழுங்கி ஏப்பம் விட வந்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்தியதைச் சொல்கிறார். போராட்டங்கள் மூலம் மக்கள் உரிமைகளை மீட்டதைச் சொல்கிறார். இந்த மைதானம் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என, அடுத்த போராட்டத்திற்கும் வாங்க என அழைப்பதுடன், பானை சின்னம், பாட்டாளிகளின் கருவி இது, மக்கள் கோரிக்கைகள் வலுப்பெற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள பானைக்கு ஓட்டு போடுங்கள், அப்போது மட்டுமே, ஆட்சியில் இருக்கறவங்களுக்கும், வரவங்களுக்கும் மக்கள் கோரிக்கைகள் காதுகளுக்கு எட்டும் என்று சொல்கிறார். பகுதி குறைகளைக் கூறும் அந்த மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவற்றை கோரிக்கைகளாக மாற்றிட போராட்டத்தில் சந்திக்கலாம், போராட்டத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும், அதற்கு முன்நிற்க நான் தயார் என வாக்குறுதி அளித்து வருகிறார் வேட்பாளர் தோழர் பழனிவேல். இந்தத் துணிச்சல் நம்மை தவிர யாருக்கும் வராது.
காலை 7 மணிக்கு பிரச்சாரத்தைத் துவக்க வேண்டியிருப்பதால், அதிகாலையில் தோழர்கள் வீட்டுக் கதவை தட்டி தூக்கத்தில் இருக்கும் அவர்களை எழுப்பி 15 முதல் 20 பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டு, மக்களை வீடுவீடாகச் சந்திக்கிறார். கட்சி கிளைகள் இருக்கும் சென்னை மாநகரத்தின் 85 டிவிசனில் வரதராசபுரம் ஒவீஏ நகர், ராமாபுரம், சம்தாரியா நகர், காமராசபுரம், மங்களபுரம், பகுதிகளில் 100 சதம் வாக்காளர்களையும் வேட்பாளர் சந்தித்துவிட்டார்.
சென்னை மாநகரத்தின் டிவிசன் 81ல் கல்யாணபுரம், திருவள்ளுவர் நகர், இந்திரா நகர், கிருஷ்ணாபுரம், சென்னை மாநகரத்தின் டிவிசன் 79ல் எஸ்வி நகர், ஒரகடம், பகுதியில் 4 கட்டங்களாக வாக்காளர்களைச் சந்தித்து மாலெ கட்சித் தோழர்கள் வாக்கு கேட்டு வருகின்றனர். சென்னை மாநகரத்தின் டிவிசன் 86ல் கேகேநகர், டிஜிஏ நகர், மண்ணூர்பேட்டை பகுதிகளில் 4 சுற்றுகள் வாக்காளர் சந்திப்பு முடிந்துள்ளன. வேட்பாளர் வீடுவீடாகச் செல்லும் இந்த வேலைகளில் ஒவ்வொரு முறையும் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் ஈடுபட்டுள்ளனர். இது வரை 20,000 வாக்காளர்களைச் சந்தித்துள்ளனர். மே 8 முதல் மாலை 4 முதல் 9 மணி வரை தினமும் 50 முதல் 60 பேருடன் தொகுதி முழுவதும் வாகனப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. கட்சி மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன் பாடல்கள் பாடி வாக்கு கேட்கிறார்.
நமக்கு உறுதியாக வாக்களிப்பவர்கள் ( உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள், வெள்ள நிவாரணப் பயனாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்கள்) பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத் தலைமைத் தோழர்கள் இவர்களை இறுதியாக ஒரு முறை பார்த்து வாக்குகளை உறுதி செய்வார்கள்.
- இககமாலெ, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி
பிரம்மாண்டமான பணபலம், ஊடக பலம், ஆள் பலம் ஆகியவற்றின் மத்தியில் இகக மாலெ தேர்தல் பிரச்சாரம்
தமிழகத்தில் பணபலம், ஊடக பலம், ஆள் பலம் ஆகியவற்றுடன் ஆளும் வர்க்கக் கட்சிகள் பிரம்மாண்ட செலவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும்போது, மக்களைச் சார்ந்து, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக, மாற்றத்துக்காகப் போராடும் இகக மாலெ போட்டியிடும் 10 தொகுதிகளில் அயராத தேர்தல் பிரச்சாரத்தில் இகக மாலெ தோழர்கள் ஈடுபட்டுள்ளனர். பணம் கொடுத்து வாக்கு கேட்பவர்கள் மத்தியில் நிதியும் கேட்டு வாக்குகளும் கேட்கிறார்கள்.
மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு வடிவங்களிலும் தினமும் காலையிலும் மாலையிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலித் குடியிருப்புப் பகுதிகளில் சாதி ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்புக்கான கட்சியின் முன்வைப்புகளோடு ஆழமான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் தனவேல், வேல்முருகன், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் இராஜசங்கர் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மாதவரம் தொகுதியில் 150 பேருக்கும் மேல் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை வீடுவீடாக சென்றுச் சந்தித்துள்ளனர். வாக்குச் சேகரிப்பும் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.
கந்தர்வகோட்டையில் மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் கலந்து கொண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் தோழர்கள் இளங்கோவும், கண்ணையனும் முகாமிட்டுப் பணியாற்றி வருகின்றனர். தொகுதியில் உள்ள 30 ஊராட்சிகளுக்கும் மேல் வீடுவீடாகச் சென்று தோழர்கள் வாக்காளர்களை சந்தித்துள்ளனர். வாகனப் பிரச்சாரம் தொகுதி முழுக்க நடைபெறுகிறது.
குமாரபாளையம் தொகுதியில் தேர்தல் அலுவலுகம் திறக்கப்பட்டு தினமும் வீடுவீடாக சென்று வாக்குச் சேகரிப்பு நடந்து வருகிறது. மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே.கோவிந்தராஜ் தொகுதியில் பணியாற்றுகிறார்.
குளச்சல் தொகுதியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சங்கரபாண்டியன், மேரி ஸ்டெல்லா, தூத்துக்குடியின் தோழர் ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் வீடுவீடாக பிரச்சாரம் செய்வதோடு வாக்காளர்களிடம் நிதியும் சேகரித்து வருகிறார்கள்.
வேடச்சந்தூரில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளார். திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டத்தின் தோழர்கள் மணிவேல், ஜெயவீரன், மதிவாணன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 நாள் வேலை நடக்கும் இடங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.
ராதாபுரம் தொகுதியில் பச்சைத் தமிழகம் கட்சியின் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத் தோழர் சுப.உதயகுமாருக்கு ஆதரவளித்து மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் ரமேஷ் தலைமையில் இகக(மாலெ) தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 10 அன்று இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ரமேஷ், பச்சைத் தமிழகத்தின் தலைவர் சுப.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் கூட்டம் வள்ளியூரில் நடைபெற்றது. ராதாபுரம் தொகுதியில் பச்சைத் தமிழகம் வேட்பாளர் சுப.உதயகுமாருக்கான இகக மாலெயின் ஆதரவை தோழர் ரமேஷ் தெரிவித்தார். இகக(மாலெ) போட்டியிடும் 10 தொகுதிகளில் பச்சைத் தமிழகத்தின் ஆதரவை தோழர் சுப.உதயகுமார் அறிவித்தார்.
மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமியின் பதிவு செய்யப்பட்ட உரை பத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
தோழர் டி.சுந்தரம் அவர்களுக்கு செவ்வஞ்சலி
தோழர் டி.சுந்தரம் குமாரபாளையத்தில் 1987ல் கூலி குறைப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். அதே ஆண்டில் ஏஅய்சிசிடியு தலைமையில் நடந்த கூலி உயர்வு போராட்டத்தில் பங்கேற்றவர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் பாப்பம்பாளையம் கிராமத்தில் விசைத்தறி ஓட்டுவதற்காக குடியேறினார். அந்த கிராமத்தில் இருந்து கொண்டு தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க பணியாற்றினார். 1995ல் மாலெ கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.
பெருந்துறை ஒன்றியத்தில் தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும், விவசாய தொழிலாளர் கள் மத்தியிலும் பணியாற்றினார். அவர் மகன், மகள் இருவரையும் கட்சி உறுப்பினராக சேர்த்தார்.
திங்களூர் பகுதியில் ஃபைன் ஃபியூச்சர் நிறுவன மோசடிக்கு எதிராக மக்களை திரட்டி போராடினார். திங்களூர் ஆதிக்க சாதிகள் மத்தியில் வாழ்ந்து கொண்டு மாலெ கட்சியை உருவாக்கினார். திங்களூரில் கட்சி அலுவலகம் ஒன்றை உருவாக்கினார். பெருந்துறை ஒன்றியத்தில் தீப்பொறி சந்தா சேர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். கட்சியின் பெருந்துறை ஒன்றியப் பொறுப்பாளராக இருந்தவர். இறுதி வரை திங்களூர் கிளைச் செயலாளராக இருந்தார். தேர்தல் பிரச்சாரம் வரை கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
05.05.2016 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியதால் தலையில் அடிபட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 06.05.2016 அன்று மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தாமோதரன், மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ அதிகாரியைப் பார்த்து தோழர் சுந்தரம் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். சிகிச்சை பலன் இன்றி 07.05.2016 அன்று காலை 11 மணி அளவில் மருத்துவமனையில் காலமானார். 08.05.2016 அன்று கோவை மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் தாமோதரன், வெங்கடாசலம் ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது உடலை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
08.05.2016 மதியம் தோழர் சுந்தரம் வீட்டில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சுப்பிரமணி, கே.ஆர்.குமாரசாமி, தண்டபாணி, வெங்கடேஷ், மாரியப்பன் மற்றும் பெருந்துறை பொறுப்பாளர் தோழர் கே.சரவணமூர்த்தி, தோழர்கள் ஆர்.சீனிவாசன், பி.கோபால், கே.மாகாளி, பி.தேவராஜ் மற்றும் இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு செங்கொடி போர்த்தி வீரவணக்க முழக்கமிட்டு மயானம் வரை செங்கொடி பிடித்து ஊர்வலமாகச் சென்றனர். எரியூட்டுக்குப் பிறகு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

Search