COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, June 16, 2016

2016 ஜுன் 16 – 30 மாலெ தீப்பொறி தொகுதி 14 இதழ் 22






தலையங்கம்

ஸ்கூட்டர் வாங்க 50 சதம் மானியமும்
பொதுப் போக்குவரத்து பற்றிய 
அக்கறையின்மையும்
ஜெயலலிதா பதவியேற்று 20 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. திறமையான செயல்வீரர் என்று முதலாளித்துவ ஊடகங்களால் கொண்டாடப்படும் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல்களுக்கு அஇஅதிமுகவை தயார் செய்கிறார் என்று, அவர் செய்யும் அமைப்பு மாற்றங்களில், அதிகாரிகள் மாற்றங்களில் இருந்து தெரிகிறது.
சில அறிவிப்புகள், சில பிரச்சனைகளில் பிரதமருக்கு சில கடிதங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் மக்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் என்று எதுவும் நகரவில்லை.
இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை நகரம் தண்ணீரில் தத்தளித்தது. சென்னையில் மீனவர் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்து பலர் வீடுகள் இழக்கின்றனர். இன்னும் ஆறு மாதங்களுக்குள் தூண்டில் வளைவு கட்டித் தருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயகுமார் அறிவித்துள்ளார். அய்ந்தாண்டு காலமாக என்ன செய்து கொண்டிருந்தார்கள் (இந்தக் கேள்வியை சென்னை மீனவர் மொழியில் கேட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும்) என்று நமக்கு கேள்வி எழத்தான் செய்யும்.
அடிப்படை வாழ்வாதாரத்தை, குறைந்தபட்ச கவுரவமான நல்வாழ்க்கையை இந்த அரசு ஒருபோதும் உறுதி செய்யாது என்பதை விளக்க பெண்களுக்கு ஸ்கூட்டருக்கு 50% மானியம் வாக்குறுதி உதவும். இது உண்மையில் பெண்களை மிகவும் கவர்ந்திருக்கும் வாக்குறுதியே. இதற்கான காரணங்களை நன்கு ஆய்ந்தறிந்த பிறகே ஜெயலலிதா இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் என்று கூட நாம் சொல்ல முடியும்.
பெண்கள் அனைவரும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அவசியம் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. ஓரிடம் விட்டு வேறிடம் செல்ல பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பேருந்துகளில் அன்றாடம் பணிக்குச் சென்று திரும்புவதற்கு, வேறு ஊர்களுக்குச் சென்று திரும்புவதற்கு அசாத்தியமான பொறுமையும் சகிப்புத் தன்மையும் வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு சொரணையற்ற தன்மையும் கூட வேண்டும். எல்லாம் தாங்கிக் கொண்டாலும் குறித்த சமயத்தில் சேருமிடம் சேர்வது சவால்தான். இந்தக் கொடுமைகளில் இருந்து ஓரளவு விடுதலை பெற, மிகவும் குறிப்பாக, குறித்த நேரத்தில் செல்லுமிடம் சேர்ந்து, வசவுகளை, இன்னும் பிற பிரச்சனைகளைத் தவிர்க்க, பலவிதமான முயற்சிகள் செய்து தவணை வாங்கி ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனம் வாங்கி விடுகிறார்கள்.
01.05.2015 நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள இரு சக்கர வாகனங்கள் 1,69,91,527. இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் சொகுசு என்பதற்கு சற்றும் இடமில்லை. இன்றைய போக்குவரத்து நெரிசலில் இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று திரும்புவது, மீனவர் வாழ்க்கை பற்றி வாலி சொன்னதுபோல், ‘முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை’தான்.
ஜெயலலிதாவுக்கு ஸ்கூட்டர் ஓட்டுவதில் இருக்கும் சிரமம் நிச்சயம் தெரிந்திருக்கும். அது, அவர் காரில் உட்கார்ந்து கொள்ள யாரோ ஒருவர் ஓட்டுவது போல் அல்ல. பெண்களுக்கு அவர்கள் அணியும் உடை முதல் பல பிரச்சனைகள் இருசக்கர வாகனம் ஓட்டுவதில் உண்டு. மாதவிடாய் காலத்தில் இன்னும் சிரமம்.
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும், மக்கள் இரு சக்கர வாகனங்களை நாட வேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது. சென்னை மாநகராட்சியின் ஒப்பந்தத் தொழிலாளியாக குப்பை வண்டி இழுக்கும் பெண் தொழிலாளிக்கு இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் கிடைத்தால் நல்லதுதான்.
ஆனால், இந்த நகர்ப்புற, நாட்டுப்புறத் தொழிலாளர்கள், நடுத்தர பிரிவினர் எல்லாம் தங்கள் போக்குவரத்துத் தேவைகளுக்கு வசதியான பொதுப் போக்குவரத்து இருந்தால், அதுவும் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தால் இரு சக்கர வாகனம் வேண்டும் என்று கருத வாய்ப்பு மிகக் குறைவு. கடந்த அய்ந்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட போது, கருணாநிதி வழியை பின்பற்றி பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு போக்குவரத்து கட்டணம் பற்றிய அட்டவணை தரப்பட்டது. ஜெயலலிதாவின் ஆளுகை திறன் பற்றி பெரிதாகப் பேசப்படுவதால், அவர் நாடு போற்றும் நல்லாட்சியும் உலகம் வியக்கும் திட்டங்களும் தருவதாக சொல்லப்படுவதால், தமிழ்நாட்டின், சென்னை போன்ற பெருநகரின் பொதுப் போக்குவரத்தை, லண்டன், நியுயார்க் நகர பொதுப் போக்குவரத்தோடு சற்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
நியுயார்க் நகரின் மக்கள் தொகை 85 லட்சம். நியுயார்க் நகரத்தில் மட்டும் 5,710 அரசுப் பேருந்துகள் ஓடுகின்றன. தினமும் 25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். 48% பேர் கார் வைத்துள்ளனர். ஆனால் அவர்களில் 30% பேர்தான் அதைப் பயன்படுத்துகின்றனர். காரை விட அரசுப் போக்குவரத்து வசதியானது, மலிவானது என அவர்கள் சொல்கின்றனர். 50,000க்கும் மேற்பட்ட டாக்சிகள், பிற பொதுப் போக்குவரத்து வாகனங்களும் இயங்குகின்றன.
லண்டன் மக்கள் தொகை 85 லட்சம். 7,500 பேருந்துகள் இயங்குகின்றன.
சென்னை மக்கள் தொகை புறநகர்ப் பகுதிகள் எல்லாம் சேர்த்து 91 லட்சம். இவர்களுக்கு இயங்குகிற நகரப் பேருந்துகள் 3,531 மட்டுமே. நியுயார்க்கிலும் லண்டனிலும் பொதுப் போக்குவரத்து இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என அந்த மக்கள் சொல்கிறார்கள். வசந்தம் வந்துவிட்டதாகச் சொல்லும் ஜெயலலிதா ஆட்சியில் பேருந்துகள் மட்டும் தேவை யான அளவுக்கு வரவில்லை.
தமிழ்நாட்டின் எட்டு அரசு பேருந்து கழகங்களில் 1,790 உபரி பேருந்துகள் உட்பட 22,474 பேருந்துகள் இயங்குவதாகவும் 2015 மார்ச் வரை 20,684 பேருந்துகள் இயங்குவதாகவும் தமிழக அரசு குறிப்பு சொல்கிறது.
பேருந்துகளின் எண்ணிக்கை 2013 – 2014ல் இருந்ததைப் போலவே 2014 – 2015லும் இருந்தது. கடந்த நான்காண்டுகளில் 7,153 புதிய பேருந்துகள் வாங்க ஆணையிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 2011 – 2012க்குப் பிறகு, இந்த அய்ந்தாண்டுகளில் 1,177 பேருந் துகள் மட்டுமே அதிகரித்துள்ளன.
புதிய பேருந்துகளுக்கு 2011 முதல் 2015 வரை ரூ.430 கோடி செலவிடப்பட்டுள்ளது. அசோக் லேலண்டிலோ, டாடாவிலோ ஒரு நல்ல பேருந்து வாங்கி கூடு கட்ட அதிகபட்சம் ரூ.20 லட்சம் செலவாகலாம். இந்தத் தொகையில் 2150 பேருந்துகள் புதிதாக வாங்கியிருக்க வேண்டும். ஆனால், 1,177 பேருந்துகள் மட்டும் அதிகரித்துள்ளன.
மாநில அரசு போக்குவரத்துத் துறையில் நிதி இல்லாமல் இல்லை. அரசு போக்குவரத்தில் நாளொன்றுக்கு ரூ.25 கோடி வருவாய் என்றால் மாதம், குறைந்தபட்சமாக ரூ.600 கோடி என்று வைத்துக் கொள்ளலாம். அய்ந்தாண்டுகளில் வருவாய் மட்டும் ரூ.15,000 கோடி. வருவாய் தவிர மாநில அரசு இந்த நான்கு ஆண்டுகளில் ரூ.4,818 கோடி நிதியுதவியும் வழங்கியுள்ளது. இதற்கும் மேல்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லி கடந்த அய்ந்தாண்டு கால ஆட்சியில் பேருந்து கட்டணம் பெருமளவில் உயர்த்தப்பட்டது. மக்கள் தலைகளில் மிகப்பெரிய சுமை ஏற்றப்பட்டது.
இங்கு ஸ்கூட்டர் மானியத்துக்கு செலவிடப்படவிருக்கும் நிதி பற்றிய கேள்வி எழுகிறது. ஸ்கூட்டர் மானியம் யாருக்கு, என்ன வயதினருக்கு, கல்வித் தகுதி ஏதும் உண்டா, வருமான வரம்பு உண்டா, அனைத்து ரேசன் அட்டைகளுக்குமா என பல கேள்விகள் உள்ளன. எப்படியாயினும் சில ஆயிரம் பேருக்காவது அது கிடைக்கப் போகிறது என நாம் நம்புவோம்.
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் 3,59,80,087 பெண்கள் இருக்கிறார்கள். 2 கோடியே 41 லட்சம் பெண்கள் படிப்பறிவு பெற்றவர்கள். குழந்தைகள், வயதானவர்கள் எல்லாம் போக, 3 கோடி பெண்கள் இருப்பதாகக் கொண்டாலும், இவர்களில் 2 கோடி பேருக்குக் கூட மானியம் தர தமிழக அரசு தயாராகிறது என்றாலும், அடுத்து வரும் அய்ந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.40,000 கோடி செலவாகும். தற்போதைய நிலைமைகளில் அரசு தரும் விவரங்கள்படி, அய்ந்தாண்டுகளுக்கு அரசு போக்குவரத்துத் துறை வருவாய், உதவியும் சேர்த்து ரூ.20,000 கோடிக்கும் குறைவுதான். ஜெயலலிதா தனது வாக்குறுதியில் வழுக் காமல் நிறைவேற்றி விடுவாரானால், இந்த விசயத்தில் மானியத்துக்கு செலவிடப்படவுள்ள அந்தத் தொகையில் அரசுப் போக்குவரத்தை மேம்படுத்தினால் ஜெயலலிதாவின் 2023 லட்சியத்துக்கு அருகிலாவது செல்ல முடியும். இதனால் வேலை வாய்ப்புகள் உருவாகும். பேருந்துகள் தவிர, ஆட்டோ, டாக்சி உட்பட அனைத்துமாகச் சேர்த்து பொது மக்கள் போக்குவரத்துக்கு இயங்குகிற வாகனங்கள் தமிழ்நாட்டில் 4,37,844. ஆட்டோக்கள் மட்டும் 2,32,702. இந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் வேலை கிடைக்கும். தமிழ்நாட்டில் உள்ள கார்கள் 18,18,584. கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் சாலையில் இல்லாமல் போனால், போக்குவரத்து நெரிசல், அதனால் விரயமாகும் நேரம், மனித வளம்….. இப்படி சங்கிலித் தொடராக மிகப்பெரிய மாற்றங்கள் உண்மையில் ஏற்படும்.
இன்றைய நிலைமைகளில் பள்ளிக்குச் செல்ல பேருந்துகள் இல்லாமல் படிப்பை நிறுத்தி விடுகிற குழந்தைகள் உண்டு. (அந்தக் குழந்தைகள் பிறகு பலவிதமான கொத்தடிமைத்தனமான வேலைகளுக்குச் செல்ல தனியார் பேருந்துகளில் ஏறுவது இன்னொரு நெடுந்தொடர்). மருத்துவமனைக்குச் செல்ல பேருந்து இல்லாமல் உயிரை விட்டுவிடுபவர்கள் உண்டு. வேலைக்குச் செல்ல பேருந்து இல்லாமல் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் வேலையில் இருந்து நீக்கப்படுபவர்கள் உண்டு. பேருந்துகள் இல்லாததால் கிடைத்த வாகனத்தில் ஏறி உயிரை விடுபவர்கள் உண்டு. போக்குவரத்துத் தொழிலாளர்கள், பணிமூப்பு அடைந்தவர்கள் நிலைமைகள் படுமோசமானவையாக உள்ளன.
இந்த பாதகமான நிலைமைகளை மாற்ற நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக ஸ்கூட்டருக்கு மானியம் என்கிறார் ஜெயலலிதா. ஸ்கூட்டர் கூட வாங்கி விடலாம். பெட்ரோல் வாங்குவது பெரும் சிரமமாகிவிடும். அரசு அதற்கும் மானியம் அளித்தால்தான் இந்த ஸ்கூட்டர்களால் ஏதாவது பயன் இருக்கும். ஆனால், 10 ரூபாய் தாளைக் காட்டி கவனத்தைத் திருப்பி 10 லட்சம் ரூபாயை திருடி விடுகிற செயல்முறைதான் விலையில்லாப் பொருட்கள், சேவைகள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். போக்குவரத்து மட்டுமின்றி கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து பொறுப்புகளிலிருந்து அரசு விலகுவதை இதுபோன்ற கவர்ச்சி வாக்குறுதிகளால் மறைக்கப் பார்க்கும் ஆட்சி முறையையே ஜெயலலிதா தொடரப் போகிறார்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் என்ன நடக்கிறது என்று மதன் விவகாரம் நமக்குத் தெளிவாகச் சொல்கிறது. இப்போது பச்சமுத்துவின் சொத்துக்கள் பற்றி ராமதாசும் ராமதாசின் சொத்துக்கள் பற்றி பச்சமுத்துவும் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். பல தனியார் பள்ளிகளுக்கு மே 31 அன்று அங்கீகாரம் முடிவுறுகிற நிலையில், தமிழக அரசு அந்தப் பள்ளிகளுக்கு ஜ÷ன் 30 வரை அங்கீகார நீட்டிப்பு வழங்கியுள்ளது. அது வரை மாணவர் சேர்க்கை நடந்துவிட்டால், அதைக் காரணம் சொல்லியே அந்தப் பள்ளிகள் இயங்கும். அவினாசியில் இரண்டாம் வகுப்பில் இருந்து மூன்றாம் வகுப்புக்குச் செல்லும் தனது மகளுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால், அந்தச் செல்ல மகளுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் அருந்திய பெண் பிழைத்துவிட்டார். குழந்தை இறந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்குக் கூட நாளை ஸ்கூட்டர் மானியம் கிடைக்கலாம். அந்தக் குழந்தையை எந்த மானியத்தால் திருப்பித் தருவார் ஜெயலலிதா?
எழுந்து நில் என் தேசமே!
அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் 
நடத்துகிற நாடு தழுவிய இயக்கம்
– மே 10 முதல் ஆகஸ்ட் 9 வரை –
‘தேசியவாதம்’ என்ற பெயரில் மோடி அரசாங்கமும் சங் பரிவாரும் ஜேஎன்யு, அய்தரா பாத் மத்திய பல்கலை கழகம் போன்ற முன்னணி கல்வி நிறுவனங்கள் மீது ஒரு போர் தொடுத்துள்ளது. விவாதம், எதிர்ப்பு, ஜனநாயகம் போன்றவற்றை மதிக்கும் இந்த நிறுவனங்களும் இதுபோன்ற பிற நிறுவனங்களும் ‘தேசவிரோத கூடாரங்கள்’ என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். சங் பரிவாரின் ராகத்தைப் பாட மறுக்கும் குடிமக்கள் மீது ‘தேசத் துரோகக் குற்றச்சாட்டு’ சுமத்தத் துவங்கியிருக்கிறார்கள்; மொத்த நாட்டையும் ஒரு திறந்தவெளி சிறையாக மாற்றுகிறார்கள். தேசபக்தியின் பெயரால் காலனிய கால அடிமைத்தனத்துக்கும் அநீதிக்கும் நாம் பின்னோக்கித் தள்ளப்படுகிறோம்.
இதைவிடப் பெரிய வரலாற்று முரண் என்ன இருக்க முடியும்? பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை வேண்டி நடந்த மகத்தான தேசிய எழுச்சி, அறுதியிடல் ஆகியவற்றினூடே இந்தியாவில் தேசியவாதம் வடிவெடுத்தது. ஆர்எஸ்எஸ் அதை ஆற்றல் விரயம் என்று கருதியது – இந்து மகாசபை தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள், பிரிட்டிஷார் புகழ் பாடுவதிலும், சிறையில் அடைக்கப்பட்டபோது கருணை கோருவதிலும் காவல்துறை உளவாளிகளாகவும் கூட நேரம் செலவழித்தனர். பகத்சிங் முன்வைத்த, பிற கருத்தியல் வகைகளின் விடுதலைப் போராட்ட வீரர்கள் முன்வைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய எதிர்ப்பு தேசியவாதம், மதநல்லிணக்கத்தையும் மதச்சார்பின்மையையும் முன்னகர்த்தியது; வேற்றுமைதன்மையை, பன்மைத்தன்மையை போற்றியது; இந்தியா என்ற அந்த பல்வகை தன்மையை கொண்டாடியது. இதற்கு நேரெதிராக, ஆர்எஸ்எஸ்ஸ÷ம் இந்து மகாசபையும் ‘கலாச்சார தேசியவாதத்தை’ முன்னகர்த்தின; இது ‘பெரும்பான்மை மதவாதம்’ அல்லது ‘மதவாத பெரும்பான்மைவாதமே’ அன்றி வேறல்ல; இது பிரிட்டிஷாரை அல்லாது, இந்திய இசுலாமியர்களை எதிரிகளாகப் பார்த்தது; சிறுபான்மையினரை இரண்டாந்தர குடிமக்களாக இழிவுபடுத்தியது; இந்து கலாச்சாரத்தை தழுவி அவர்கள் இந்தியாவில் வாழ முடியும், அல்லது இந்திய குடிமக்களுக்கு இருக்கக் கூடிய உரிமைகள் ஏதுமின்றி ‘விருந்தினராக’ வாழ முடியும் என்றது!
நாட்டு விடுதலைப் போராட்டம் இந்தியாவில் ஜனநாயகத்தின் பதாகையை பறக்கவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் இந்தியா இறையாளுமை கொண்ட ஜனநாயக குடியரசு என்று இந்திய மக்கள் அறிவிக்கிறார்கள்; (மதச்சார்பற்ற, சோசலிச என்ற பதங்கள் பின்னர் இணைக்கப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், திருத்தங்கள் எதுவும் வரும் முன்னரே இவை அரசமைப்புச் சடடத்தின் உணர்வில் ஆழ வேர்கொண்டிருந்தன); ‘சமூக, பொரு ளாதார, அரசியல் நீதி’, ‘சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, மதநம்பிக்கை, வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரம்’, ‘தகுதி மற்றும் வாய்ப்புக்கான சமத்துவம்’ ஆகிய கருத்துக்கள் ஜனநாயகத்தின் தூண்கள் என்று உறுதியாக உயர்த்திப் பிடித்தார்கள். நிறப்பிரிகையின் மறுமுனையில் இருந்த ஆர்எஸ்எஸ், பார்ப்பனிய ஒழுங்கில் சூத்திரர்களை, தலித்துகளை, பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் சாசனமான மனுதர்மம், இந்தியாவின் அரசியல் சாசனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பியது; அது நடக்காமல் போனபோது, அவர்கள் அம்பேத்கரை இந்தியாவின் நவீன மனு என்று அழைத்தார்கள்!
நாட்டு விடுதலைப் போராளிகளின் சுதந்திர இந்தியா பற்றிய கனவின் பரப்பில் ஒளிரும் நட்சத்திரங்களாக மின்னிய பகத்சிங்கும் அவரது தோழர்களும், ஏகாதிபத்தியத்தின் வரையறுக்கும் இயல்புகளான மனிதனை மனிதன் சுரண்டு வதும் தேசத்தை தேசம் சுரண்டுவதும் கடந்த காலமாகிவிட்ட, அவற்றில் இருந்து விடுதலை பெற்ற நிலையை நோக்கி இந்தியா முன்னேற வேண்டும் என்று விரும்பினர். சாவர்க்கர்களும் கோல்வால்க்கர்களும் இந்த லட்சியத்துக்கு நேரெதிராக நின்றனர். ஹிட்லரிடம் இருந்து முசோலினியிடம் இருந்து அவர்கள் உத்வேகம் பெற்றனர்; பாசிச இத்தாலியும் நாசி ஜெர்மனியும்தான் அவர்களது முன்மாதிரிகளாக இருந்தன; இன்று அதிகாரத்தில் இருக்கும் அவர்களது வாரிசுகள் இந்தியாவின் இயற்கை வளங்களை, போராட்டங்களில் வென்றெடுத்த இறையாளுமையை சர்வதேச மூலதனத்திடம், அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ வல்லமையிடம் அடகு வைக்கிறார்கள். சுயசார்புக்கான, சுதந்திரமான அயலுறவுக் கொள்கைக்கான தேடல், ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரிலும், அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான சர்வதேச ராணுவ கூட்டணியில் இளைய பங்காளியாக வகிக்கும் பாத்திரத்திலும், அந்நிய நேரடி முதலீடு வழிபாட்டின் பலிபீடத்தில் பலி தரப்படுகிறது.
அன்று பிரிட்டிஷ் காலனியத்துடனும் இன்று அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பிற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளுடனும் கொண்டுள்ள அப்பட்டமான கூட்டுச் செயல்பாட்டில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப, ஆர்எஸ்எஸ் – பாஜக – எபிவிபி அமைப்புகள் ‘கலாச்சார தேசியவாதம்’ என்ற பூதத்தை கிளப்பிவிடுகின்றன; இதன் மூலம் சிறுபான்மையினரும் எல்லா எதிர்ப்புக் குரல்களும் ‘தேசத்தின் எதிரிகள்’ என்றும் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவின் ஆகச் சிறந்த நட்பு சக்தி, நலன் விரும்பி என்றும் காட்டப் பார்க்கின்றன.
எனவே, சாமான்ய இந்தியக் குடிமக்களுக்கு பொருளாதார உரிமைகளுக்கான, அரசமைப்புச் சட்ட சுதந்திரங்களுக்கான போராட்டம், இன்று, மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் மதவெறி பிடியில் இருந்து, ஆர்எஸ்எஸ்ஸின் அதன் மதவெறி கூட்டாளிகளின் பாசிசத் திட்டம் மற்றும் கருத்தியல் – அரசியல் கொடுங்கோன்மையில் இருந்து நாட்டை விடுவிக்கும், உண்மையான தேசபக்த போராக மாறியுள்ளது. இந்தப் போரில், சமத்துவம், ஜனநாயகம் ஆகியவை பற்றிய லட்சியப் பார்வை கொண்டிருந்த, இருபதாம் நூற்றாண்டின் இரண்டு மகத்தான போராளிகளான, இந்திய மண்ணில் எழுந்த பகத்சிங்கின் பீம்ராவ் அம்பேத்கரின் கனவுகளை, கருத்துக்களை புத்தெழுச்சி பெறச் செய்வது மிகவும் அவசியமானது. ஏகாதிபத்தியத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பகத்சிங்கின் தேச பக்தி பதாகையையும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்த அம்பேத்கரின் ஜனநாயகப் பதாகையையும் நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும். பகத்சிங்கையும் அம்பேத்கரையும் சிதைத்து தங்கள் திருவுருக்கள் என்று கையகப்படுத்த காவி ஆட்சியாளர்கள் கடுமையாக முயற்சிக்கிறார்கள். பகத்சிங்கின் அம்பேத்கரின் கருத்துக்களைப் பரப்பும் மாணவர்களும் ஆசிரியர்களும் அறிவாளிப் பிரிவினரும் நாடு முழுவதும் அரசாலும் ஆர்எஸ்எஸ் குண்டர்களாலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே, நாம் பகத்சிங்கின், அம்பேத்கரின் செய்திகளை புதுப்பிக்கப்பட்ட துடிப்போடு பரப்ப வேண்டும்; சங் படையின் ஒவ்வொரு ஒடுக்குமுறையையும் எதிர்கொண்டு ஒவ்வொரு தாக்குதலையும் மீறி ஜனநாயகத்துக்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் பகத்சிங்கின், அம்பேத்கரின் செய்திகளை எடுத்துச் செல்ல, அவர்கள் கருத்துக்களைப் பரப்ப, அகில இந்திய மாணவர் கழகத்தின், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர்கள் ‘எழுந்து நில் என் தேசமே’ என்ற நாடு தழுவிய இயக்கம் நடத்தவுள்ளார்கள். தோழர்கள் அரிந்தம் சென்னும் கவிதா கிருஷ்ணனும் இந்த சிறுபுத்தகத்தில் பகத்சிங்கின், அம்பேத்கரின் சில முக்கியமான கருத்துக்களை தொகுத்துள்ளார்கள். சங் பரிவாரின் பொய்ப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள இந்த சிறுபுத்தகம் ஒரு பயனுள்ள கையேடாக இருக்கும் என்றும் நமது அனைத்து துணிச்சலுடனும் வலிமையுடனும் ஆற்றலுடனும் உறுதியுடனும் இந்த முக்கியமான போரில் வெற்றி பெற நமக்கு ஊக்கமளிக்கும் என்றும் நாம் நம்புகிறோம்.
திபங்கர் 
பொதுச் செயலாளர், இகக (மாலெ)
சாரு பவன், டில்லி, 23 மார்ச், 2016
முகமது அலி: அழியாத நினைவுகள்
எஸ்.குமாரசாமி
இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான, கருப்பினத்தவரான முகமது அலி 03.06.2016 அன்று மறைந்து விட்டார். உன்னால் முடிந்தால் என்னைப் பிடி, நான் பட்டாம்பூச்சி போல் மிதப்பேன், நான் தும்பி போல் கொட்டுவேன், உன்னால் முடிந்தால் என்னைப் பிடி (CATCH ME IF YOU CAN, I FLOAT LIKE A BUTTERFLY, I STING LIKE A BEE, CATCH ME IF YOU CAN) என்ற முகமது அலியின் குத்துச் சண்டை திறமை பற்றிய வரிகள், சாகா வரம் கொண்டவை.
முகமது அலி குத்துச் சண்டை அரங்கு தாண்டி, நிறவெறிக்கு இனவெறிக்கு எதிராக, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக, நின்றவர். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் பின்பற்றும் ஜியானிசத்திற்கு எதிராக நின்றவர். அதிகாரத்திடம் துணிச்சலுடன் உரத்த குரலில் உண்மையைப் பேசியவர் முகமது அலி. போலி தேசபக்தியின் முன்பு, தேசவெறி முன்பு மண்டியிட மறுத்து, அதனுடன் சவால் விட்டு சண்டையிட்டவர்.
இன்றைய இந்தியா, பகத்சிங் அம்பேத்கர் வழிமரபை உயர்த்திப் பிடிக்கும் நேரம், 1960 களில் முகமது அலி அய்க்கிய அமெரிக்க அதிகார மய்யத்தோடு அச்சமற்று மோதிய வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமானது.
கார்டியன் ஏடு, முகமது அலியின் மறைவுக்குப் பின் எழுதியது. ‘தர்மத்துக்குப் புறம்பான அதர்ம யுத்தத்தில் இறந்து விடுவோமா என்ற அச்சத்தில், அலி வியத்நாம் போரிலிருந்து விலகி ஒதுங்கவில்லை. வியத்நாம் போருக்கான எதிர்ப்பை மார்ட்டின் லூதர் கிங் உரத்துப் பேசத் துவங்குவதற்கு ஒரு வருடம் முன்பே, வியத்நாமில் இழைக்கப்படும் ஏகாதிபத்திய அநீதிக்கும் அய்க்கிய அமெரிக்காவில் நிலவி வந்த இனவெறி அநீதிக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தி, ஒரு கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாகவே, அலி, வியத்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.’
குத்துச் சண்டையும் இனவெறி எதிர்ப்பும்
குத்துச் சண்டை, விளையாட்டு வீரர்களை, அதிலும் குறிப்பாக கருப்பின விளையாட்டு வீரர்களை, சுலபமாக மென்று துப்பிவிடும். சிலரே தப்பி நிற்பார்கள். இது வறியவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் விளையாட்டு. அவர்களுக்கு இந்த விளையாட்டு ஒரு விருப்பத் தேர்வாக அல்லாமல், வாழ்வின் அவசியமாகிறது.
அய்க்கிய அமெரிக்காவின் முதல் குத்துச் சண்டை வீரர்கள், ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட கருப்பின அடிமைகளே. அய்க்கிய அமெரிக்காவின் தென்பகுதி தோட்ட/பண்ணை முதலாளிகள் பொழுது போக்குக்காக இரும்பு கழுத்துப் பட்டையுடன் அடிமைகளைக் குத்துச் சண்டை போடவிட்டனர். அடிமைகள் சட்டப்படி விடுதலையான பிறகும், பணம் சம்பாதிக்க, ஆபத்தான இந்த விளையாட்டில், கருப்பின வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். கருப்பின மக்களுக்கு, அனுமதி இல்லை எனச் சொல்லப்படவில்லை. இந்த விளையாட்டே, கருப்பின மக்கள் சவால்விடவும் களம் அமைத்தது சுவையான வரலாற்று முரண்.
1908ஆம் ஆண்டு நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் ஜாக் ஜான்சன் என்ற கருப்பினத்தவர் பட்டம் வென்றார். ஜாக் ஜான்சனின் வெற்றியால் சீற்றம் அடைந்த, ஓய்வு பெற்ற வெள்ளை இன சேம்பியன் ஜிம் ஜெப்ரிஸ், ஜான்சனிடம் சண்டையிட வந்தார். தாம் சண்டையிட வந்ததற்கான ஒரே காரணம், வெள்ளைக்காரன் நீக்ரோவைவிட மேலானவன் என்று காட்டத்தான் என்றார். 1910ல் சண்டை நடந்தது. முழுக்க முழுக்க வெள்ளையர் கூட்டம். சண்டை நடக்கும்போது, ‘எல்லா கருப்பனும் ஒரே மாதிரி இருக்கிறான்’ என்று பேண்ட் இசைக்கப்பட்டது. பார்வையாளர்கள் ஆக்ரோஷமாய் ‘கருப்பனைச் சாகடி’ என வெறிக் கூக்குரலிட்டனர். கருப்பின ஜான்சன் தனது வேகம் வலிமை மற்றும் திறமையால் வெள்ளைக்கார ஜெப்ரிசை நாக் அவுட் முறையில் அடித்து வீழ்த்தினார். (புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், போட்டியாளரை, பத்து எண்ணும் வரை எழ முடியாமல் அடித்து வீழ்த்துவது நாக் அவுட் முறையாகும்) ஜான்சனின் வெற்றிக்குப் பிறகு, இல்லினாய்ஸ், மிசௌரி, நியுயார்க், ஓஹியோ, பெனிசில்வேனியா, கொலராடோ, வாஷிங்டன் டிசி, டெக்சாஸ், பகுதிகளில் வெள்ளை இனவெறிக் கும்பல்கள் கருப்பினத்தவர் மீது தாக்குதல் நடத்தின. கருப்பின மக்களும் திரும்பத் தாக்கினர். மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின்னர் கருப்பின மக்கள் ஆவேசமாய் எழுந்தனர். அதற்கு முன், அய்க்கிய அமெரிக்காவில் 1910ல்தான், கருப்பின மக்கள் கொதித்தெழுந்தனர்.
இருபதாண்டுகளுக்குப் பிறகு கருப்பின வீரர் ஜோ லூயிஸ் குத்துச் சண்டை அரங்கைப் பற்ற வைத்தார். அவர் பழுப்பு நிற குண்டு வீச்சாளர் என்ற (BROWN BOMBER) பெயர் பெற்றார். வெள்ளை இனவெறியோடு மோதல் வராமல் இருக்க, லூயிசிடம், வெள்ளை இனப் பெண்ணுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது, பொழுதுபோக்கு விடுதிகளில் நுழையக்கூடாது, பேசப்பட்டாலேயொழிய யாரிடமும் பதில் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளை அவரது மேலாளர்கள் போட்டிருந்தனர். இனவாத போலி விஞ்ஞானம், கருப்பினத்தவர் மூளைத் திறனும் உடல் திறனும் குறைவானவர்கள், என்றது. இனவெறி நிறவெறி சமூகம், கருப்பினத்தவர் சோம்பேறிகள், கட்டுப்பாடு இல்லாதவர்கள், அந்த வகையில் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஆக முடியாதவர்கள் என்றது. ஹிட்லரின் ‘ஆரிய மகத்துவம்’ தத்துவம் கோலோச்சியபோது, ஜெர்மானிய வீரர் மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கிடம் ஜோ லூயிஸ் 1936ல் தோற்றுப் போனார். ஹிட்லரோடு அய்க்கிய அமெரிக்க வெள்ளை இன வெறி சேர்ந்து கொண்டு கெக்கலி கொட்டிச் சிரித்தது. 1938ல் அதே இருவரின் சண்டை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஹிட்லரும், வெள்ளை இன வெறியர்களும், இந்த ‘சண்டை மூலம்’ வெள்ளை இனமே கருப்பினத்தைவிட மேலானது என்பது நிரூபணமாகும் என நம்பினார்கள். அய்க்கிய அமெரிக்காவின் கம்யூனிஸ்ட் கட்சி இந்தச் சண்டையின் நேரடி வானொலி ஒலிபரப்புக்கு ஹார்லெம் முதல் பர்மிங்ஹாம் வரை ஏற்பாடு செய்திருந்தது. வர்ணனை கேட்கும் கூட்டங்கள் வெகுமக்கள் திரள் கூட்டங்களாக மாறின. ‘ஆரிய மகத்துவ’ ஜெர்மானியப் பெருமித அடையாளமான மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கை, கருப்பினத்தவரான ஜோ லூயிஸ் ஒரே சுற்றில் தோற்கடித்தார். வெறுத்துப் போன ஹிட்லர் ஒலிபரப்பு வர்ணனையை முடக்கினார். ஜோ லூயிஸ் 72 சண்டைகளில் 69ல் வென்றார். 55ல் நாக் அவுட் முறையில் வென்றார். ஜோ லூயிஸ் கருப்பின மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்தினருக்கு உந்துதலாய்த் திகழ்ந்தார்.
அய்க்கிய அமெரிக்காவில் நச்சுவாயுவின் மூலம் மரண தண்டனை வழங்க தென் மாகாணம் ஒன்று முடிவு செய்தபோது, முதலில் மரண தண்டனை பெற்றவர், ஒரு கருப்பினத்தவர். இறக்கும்போது என்ன நடக்கிறது என அறிய மைக்ரோபோன் பொருத்தியிருந்தனர். அவரது மரணக்குரல், ‘லூயிஸ் என்னைக் காப்பாற்றுங்கள், லூயிஸ் என்னைக் காப்பாற்றுங்கள், லூயிஸ் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றிருந்ததாம். சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் என யாதுமாக, குத்துச் சண்டை மாவீரர்கள், கருப்பின மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.
கேஷியஸ் கிளே முகமது அலி ஆனது
1942ஆம் ஆண்டு கென்டகி மாகாண லூயிஸ் வில்லியில், வீடுகளில் வண்ணம் பூசும் தந்தைக்கும் வீட்டு வேலை செய்யும் தாய்க்கும் கேஷியஸ் கிளே (முகமது அலி) மகனாகப் பிறந்தார். கேஷியஸ் கிளே தன் தாயுடன் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் செல்லும்போது, கிறிஸ்து ஏன் வெள்ளையராய் இருக்கிறார், தேவதைகள் ஏன் கருப்பு நிறத்தில் இல்லை எனக் கேட்டுள்ளார். அவரது தாய், கருப்பு தேவதைகள், தேனும் பாலும் கலந்து வீடுகளில் உணவு தயாரிப்பதாகப் பதில் சொல்லி உள்ளார்.
என் மனதால் ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்போது, என் இதயத்தால் அதனை நம்ப முடியும்போது, அதனை நிச்சயம் என்னால் செய்ய முடியும் என்ற அவர், இளம் வயதிலேயே குத்துச் சண்டையில் களமிறங்கித் தடம் பதித்தார். ஜோ லூயிஸ் குத்துச் சண்டை அரங்கில் என் செயல் பேசும், வெளியே என் மேலாளர் பேசுவார் என்றார். ஆனால் இளம் வயது கேஷியஸ் கிளேயின் செயல்கள் பேசியதற்குச் சற்றும் குறையாமல், அவரது வாயும் பேசியது. இது பற்றி அவர் சொன்னது கவனிக்கத்தக்கது. ‘சத்தம் போட்டுப் பேச, கத்திக் கூச்சல் போட எனக்குத் தெரியாவிட்டால், அடுத்த வாரம் எங்கே நிற்பேன் தெரியுமா? என் சொந்த ஊரில், ஜன்னல்களைத் துடைத்துக் கொண்டு, ஆமாம் அய்யா, இல்லை அய்யா எனச் சொல்லிக் கொண்டு, என் இடம் எது என உணர்த்தப்பட்டு அங்கே இருந்திருப்பேன்’.
1960ல் 18 வயதில் அய்க்கிய அமெரிக்காவுக்காக கேஷியஸ் கிளே ஒலிம்பிக் குத்துச் சண்டையில் தங்கப்பதக்கம் வென்றார். நாடு திரும்பி விமான நிலையத்தில், ‘அய்க்கிய அமெரிக்காவுக்காக தங்கம் வெல்வதே என் குறிக்கோள். ரஷ்யனைத் தோற்கடித்தேன். போலிஷ்காரனைத் தோற்கடித்தேன். அய்க்கிய அமெரிக்காவுக்காகத் தங்கப் பதக்கம் வென்றேன்’ எனப் பெருமையுடன் சொன்னார். எங்கும் எப்போதும் பதக்கத்தைக் கழுத்தை விட்டுக் கழற்றாமல் இருந்தார். சீஸ் பர்கர் என்ற உணவருந்த லூயிஸ்வில்லி நகர உணவு விடுதிக்குச் சென்றபோது, அந்த விடுதி, கருப்பர் என்பதால் கேஷியஸ் கிளேயை உள்ளே அனுமதிக்க மறுத்தது. கேஷியஸ் கிளே ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை கழற்றி ஓஹியோ நதியில் வீசி எறிந்தார்.
மால்கம் எக்சும் இசுலாமிய தேசமும் கலகக்கார கேஷியஸ் கிளேயைக் கவர்ந்தனர். இந்தக் கட்டத்தில் சேம்பியன் சோனி லிஸ்டனுடன் சண்டைக்கு ஏற்பாடானது. லிஸ்டன், வேலை நிறுத்தக்காரர்களின் மறியல் செய்பவர்களின் கால்களை உடைக்க குற்றக் கும்பல்களால் அமர்த்தப்பட்ட அடியாள் என்ற வரலாறு கொண்டவர். அவருக்கு எதிராக கேஷியஸ் கிளேக்கு வாய்ப்பே இல்லை எனச் சொல்லப்பட்டது. களம், புதிய வேகத்தைக் கண்டது. கேஷியஸ் கிளே வென்றார். நானே உலகின் அரசன் என்றார். தனது வேகம் பற்றிச் சொன்னார்: ‘நான் மிகவும் வேகமானவன். அறையின் விளக்கணைக்க ஸ்விட்ச்சைத் தட்டி விட்டு, விளக்கணையும் முன் படுக்கையில் இருப்பேன்.’ லிஸ்டனை வென்ற பிறகு கேஷியஸ் கிளே, தான் இசுலாமிய தேசத்தில் சேர்ந்ததாக அறிவித்தார். அவரது அறிவிப்பு வெள்ளை இன வெறியரை சீற்றமுறச் செய்தது. புதிய தலைமுறை கருப்பின இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்ததாக உணர்ந்தனர். கிறிஸ்துவ மதம், வெள்ளையர் மதம், இனவெறியை ஊக்குவிக்கும் மதம் என நம்பிய கேஷியஸ் கிளே, எலிஜா முகம்மதுடன் பழகினார். எலிஜா முகமது, கேஷியஸ் கிளே பெயரை, முகமது அலி என மாற்றினார். பெயர் மாற்றம், வெள்ளை இன வெறியின் கன்னத்தில் அறையாக விழுந்தது. தி நியுயார்க் டைம்ஸ் பத்தி ரிகை, முகமது அலி என்ற பெயரைப் பயன்படுத்தாமல், கேஷியஸ் கிளே என்ற பெயரையே பல காலம் பயன்படுத்தியது. இனவெறி, நிறவெறியின் பக்கம் நிற்போர் கேஷியஸ் கிளே என்ற பெயரையும், எதிர்ப்பாளர்கள் முகமது அலி என்ற பெயரையும் பயன்படுத்தினர்.
1964 நெடுக கருப்பின மக்கள், சமஉரிமைகளுக்காக போராடினர். ஆயிரம் ஆயிரமாய்க் கைதாயினர். வெள்ளை இனவெறி குகிளக்ஸ்கான் 30 கட்டிடங்கள் மீது குண்டு வீசியது. 36 தேவாலயங்களை தீயிட்டுக் கொளுத்தியது. கருப்பினத்தவர் வடக்கு சேரிகளிலும் (கெட்டோக்கள்) ஆர்த்தெழுந்தனர். நகர்ப்புற எழுச்சி நிகழ்ந்தது.
முன்னாள் கருப்பின குத்துச் சண்டை சேம்பியன் பிளாய்ட் பேட்டர்சன் தேசபக்த அவதாரம் எடுத்தார். உடல் மீது அய்க்கிய அமெரிக்க கொடியைப் போற்றிக் கொண்டு, வீர உரையாற்றினார். ‘இந்த சண்டை, கருப்பு முஸ்லிம்களிடம் இருந்து பட்டத்தை வெல்வதற்கான புனிதப் போர். ஒரு தேச பக்த கடமை உணர்வுடன், ஒரு கத்தோலிக்கராக, நான் கேஷியஸ் கிளேயுடன் சண்டை போட உள்ளேன். கிரீடத்தை அமெரிக்காவுக்கு மீட்டுத் தருவேன்.’ முகமது அலி பேட்டர்சனை 9 சுற்றுக்கள் அடித்து நொறுக்கினார். ‘அமெரிக்காவே வா, வெள்ளை அமெரிக்காவே வா. என் பெயர் என்ன? கேஷியஸ் கிளேதானே? முட்டாளே என் பெயர் என்ன?’ எனக் கேட்டுக் கொண்டே பேட்டர்சனைத் துவைத்தெடுத்து தோற்கடித்தார்.
கலகக்கார முகமது அலி
அந்தந்தக் காலங்கள், அவற்றுக்கான மனிதர்களைத் தோற்றுவிக்கின்றன. 1960கள் கொந்தளிப்பான காலங்கள். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. நக்சல்பாரி, வசந்தத்தின் இடி முழக்கமாய் எழுந்தது. சாமரம் வீச நிர்ப்பந்திக்கப்பட்ட பாமர மக்களை, போர்க்கொடி ஏந்த வைத்தது. உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசான அய்க்கிய அமெரிக்கா, கியுபாவில், கியுபாவுக்கு உதவிய சோவியத் யூனியனுடன், மோதலின் விளிம்புக்குச் சென்று திரும்பியது. குருஷ்சேவ், கென்னடி, கேஸ்ட்ரோ அன்றாடம் பேசப்படும் பெயர்களாயினர். அய்க்கிய அமெரிக்காவின் வாலாட்டம் கியுபாவிடம் எடுபடவில்லை. கென்னடிக்குப் பின் அய்க்கிய அமெரிக்க அதிபரான லின்டன் ஜான்சன் காலத்தில், அய்க்கிய அமெரிக்கா சின்னஞ்சிறு வியத்நாம் மீது போர் தொடுத்தது. நாட்டு விடுதலைக்காக மக்கள் பக்கம் வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சி ஹோசிமின், ஜெனரல் கியாப் இருந்தனர். வியத்நாம் கெரில்லாக்கள் விடுதலை வீரர்களாய், ஏகாதிபத்திய அய்க்கிய அமெரிக்க இராணுவத்தையும் அவர்களது உள்நாட்டு எடுபிடிகளையும் வீரத்துடன் எதிர்த்துப் போராடினர். ஒவ்வொரு வாரமும் போரிடாத சாமான்ய மக்கள் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அய்க்கிய அமெரிக்கா தீப்பிழம்பு குண்டுகளை வீசியது. ஊரையே அழிக்கும் வகையில் கார்பெட் பாம்பிங் செய்தது. ஒவ்வாரு நாளும் நூறு போர் வீரர்களை இழந்தது. மாதம் 2 பில்லியன் டாலர் செலவழித்தது.
1966ல் படையில் சேருமாறு முகமது அலி அழைக்கப்பட்டார். கட்டாய இராணுவ சேவை, சட்டபூர்வமானது. அப்போது முகமது சொன்ன வரிகள் உலகப் புகழ் வாய்ந்தவை. ‘‘I AIN’T HAVE NO QUARREL  WITH THE VIETCONG. NO VIETCONG CALLS ME NIGGER’  எனக்கு வியத்காங்குடன் எந்த சச்சரவும் இல்லை. எந்த வியத்காங்கும் என்னை நிக்கர் என அழைப்பதில்லை’. (கருப்பினத்தவரை வெள்ளையர் இழிவாக நிக்கர் என அழைப்பார்கள்).
முகமது அலியின் இந்தப் பிரகடனம், வெள்ளையர் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கம் உந்துதல் பெற உதவியது. பணிந்து விடு, மன்னிப்பு கேள், படையில் சேர்ந்து விடு என எவ்வளவோ மிரட்டினார்கள். அனைத்து ஆளும் நிறுவனங்களும் முகமது அலியை படுமோசமான தேசவிரோத வில்லனாகச் சித்தரித்தன.
அந்தக் காலங்களில், கருப்பினத்தவர், மார்டின் லூதர் கிங் வழி நடத்திய சமஉரிமைக்கான (சிவில் ரைட்ஸ்) மாபெரும் போராட்டத்தில் இருந்தனர். மார்டின் லூதர் கிங்கும் போரை எதிர்க்கத் துவங்கினார். ‘முகமது அலி சொல்வது போல், நாம் எல்லாம் கருப்பு பழுப்பு நிறத்தவர், வறியவர். அதே ஒடுக்குமுறைக்குப் பலியாக்கப்படுபவர்கள்.’ 20ஆம் நூற்றாண்டின் விடுதலை மலைப் பிரசங்கம் செய்த கிறிஸ்துவ மதபோதகர் மார்ட்டின் லூதர் கிங்கும், முகமது அலியும் நட்பு கொண்டனர். லூயிஸ்வில்லி கருப்பின மக்களின் குடியிருப்பு உரிமைக்கான கசப்பான வன்முறை நிறைந்த போராட்டம் நடந்தது. முகமது அலி அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ‘சுதந்திரம், நீதி, சமத்துவத்திற்கான போராட்டத்தில் நான் உங்களோடு நிற்கிறேன். என் மக்கள், என் கூடவே வளர்ந்தவர்கள், என்னுடன் பள்ளி சென்றவர்கள், என் இரத்த உறவினர்கள், வீட்டு வசதியில், சுதந்திரம் நீதி சமத்துவம் கோருவதால், வீதிகளில் அடிக்கப்படுகின்றனர், மிதிக்கப்படுகின்றனர், உதைக்கப்படுகின்றனர் எனும்போது நான் மவுனமாய் இருக்க முடியாது.’ அதே நாளில் பத்திரிகையாளர்கள், போர் பற்றி அவரிடம் துருவித் துருவிக் கேட்டார்கள். அப்போதுதான், சுழலும் கேமராக்கள், பற்பல ஒலிபெருக்கிகள் முன்பு, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான இன வெறிக்கு எதிரான அலியின் போர் முழக்கம் சங்கநாதமாய் ஒலித்தது.
‘நீக்ரோக்கள் என்றழைக்கப்படுபவர்கள் இங்கே லூயிஸ்வில்லியில் நாய்கள் போல் நடத்தப்பட்டு, சாதாரண மனித உரிமைகள் மறுக்கப்படும் போது, நான், சீருடை அணிந்து, 10,000 மைல் தாண்டி உள்ள வியத்நாம் சென்று குண்டு வீசி, துப்பாக்கியால் சுட்டு பழுப்பு நிற வியத்நாமியரை ஏன் கொல்ல வேண்டும்? முடியாது. வெள்ளை நிறத்தவர் அல்லாத உலகத்தின் மீது, வெள்ளை நிற அடிமை எசமானர்கள் ஆதிக்கம் செலுத்த மற்றுமோர் எளிய நாட்டை எரிக்க சாகடிக்க 10,000 மைல் தாண்டி என்னால் போக முடியாது. இந்த நாள் இந்தத் தீமைகள் முடிவுக்கு வர வேண்டிய நாள்.’ ‘இப்படி ஒரு நிலை எடுப்பதன் மூலம் எனக்கு கோடி கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் எனப் பயம் காட்டினார்கள். ஆனால் நான் முதலில் ஒரு முறை சொன்னதையே திரும்பவும் சொல்கிறேன். இதுதான் என் மக்களின் உண்மையான எதிரி இருக்கும் இடம். நீதி சுதந்திரம் சமத்துவம் கேட்டுப் போராடுபவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கருவியாகி, என் மக்களை, என் மதத்தை, என்னை இழிவுபடுத்திக் கொள்ள மாட்டேன்.’
தோழர் லெனின் ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றச் சொன்னார். ‘நிலம், ரொட்டி, சமாதானம்’ என்ற முழக்கம் ரஷ்யப் புரட்சியை வென்றெடுத்தது. முகமது அலியும் நியாயமான போருக்குத் தயார் எனவும் தெளிவுபடுத்தினார். ‘இந்தப் போர் எனது 2½ கோடி மக்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் தேடித் தரும் என்றால், அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்தி படையில் சேர்க்க வேண்டியதில்லை. நானே தானாகவே சென்று படையில் சேர்வேன். என் நம்பிக்கைகளுக்காக நிற்பதற்காக நான் எதையும் இழக்கப் போவதில்லை. நான் சிறைக்குப் போவேன், அவ்வளவுதானே! நாங்கள் 400 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கிறோம்.’
19.06.1967ல் ஹுஸ்டனில் அனைவரும் வெள்ளையராக இருந்த ஒரு ஜுரி, முகமது அலி குற்றவாளி எனத் தீர்மானித்தது. வழக்கமாக படையில் சேர மறுப்பதற்கு 18 மாத சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கியது. அவரது கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டது. அவரது பட்டம் பறிக்கப்பட்டது. 3½ ஆண்டுகள் அவர் குத்துச் சண்டை அரங்கில் நுழைய முடியவில்லை. 1968ல் முகமது அலி 200 பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். கருப்பின இளைஞர்களுடன் வெள்ளை இளைஞர்களும் அவரது உரையை ஆர்வமுடன் கேட்டனர். வியத்நாம் போர் எதிர்ப்பு, மாணவர் இளைஞர் மற்ற சமூகப் பிரிவினர் எதிர்ப்புடன் பிரும்மாண்டமாய் எழுந்தது. ஒரு பல்கலைக் கழகத்தில் முகமது அலி பேசினார்: ‘தெற்கு வியத்நாமைக் கடல் கடந்து போய் விடுதலை செய்யுமாறு என்னிடம் சொல்கிறார்கள். இங்கே என் மக்களை மிருகங்களைத் துன்புறுத்துவது போல் நடத்துகிறார்கள். நான் வியத்நாமுக்கு செல்ல மாட்டேன். நான் நிறைய இழந்துவிட்டதாகச் சொல்பவர்களுக்கு, நான் ஒன்று சொல்வேன். எனக்கு மன நிம்மதி உள்ளது. என்னுடைய மனச் சாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை, அது தெளிவாக உள்ளது. நான் பெருமிதத்துடன் இருக்கிறேன். நான் மகிழ்ச்சியோடு உறங்கச் செல்கிறேன். மகிழ்ச்சியோடு எழுகிறேன். சிறைக்குச் சென்றாலும் மகிழ்ச்சியோடு செல்வேன்.’ முகமது அலி எதிர்ப்பை, காணத்தக்கதாக, கேட்கத்தக்கதாக, கவர்ந்து இழுப்பதாக, அச்சமற்றதாக மாற்ற உதவினார். நீதி வேண்டும் உலகமும் வியத்நாம் பக்கம் நின்றது. சென்னை மாநகர ஹோட்டல் தொழிலாளர்கள் நள்ளிரவில் மேரா நாம் துமாரா நாம் ஹமாரா நாம் வியத்நாம், என் பெயர் உன் பெயர் நம் பெயர் வியத்நாம் என முழங்கி ஊர்வலம் சென்றனர். (இதே தொழிலாளர்கள்தான் இந்தித் திணிப்பை எதிர்த்தும் சிறை சென்றனர்) முதன்மையாக, வியத்நாமிய மக்களின் முயற்சியால், அய்க்கிய அமெரிக்காவிலும் உலகெங்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் உணர்வும் போராட்டங்களும் வலுத்ததால், அய்க்கிய அமெரிக்கா தோற்றுப் போய் பின்வாங்கியது. தெற்கு வடக்கு வியத்நாம் ஒன்றானது.
முகமது அலியின் வாழ்வில் அடுத்தடுத்து
1970ல் அய்க்கிய அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு பிளவுண்ட தீர்ப்பின் மூலம், கருப்பின மக்கள் உயர்வுக்காக எனக் காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. அதன் பின்பு 1971ல் ஜோ பிரேசியரிடம் பட்டம் இழந்தார். 1973ல் கென் நார்ட்டனிடம் தோற்றார். பிறகு வென்றார். THRILLA IN MANILA என விளம் பரப்படுத்தப்பட்ட வணிகம் மேலோங்கிய ஒரு சண்டையில் ஜோ பிரேசியரை வென்றார்.
அடுத்து ஒரு சறுக்கல் வந்தது. அய்க்கிய அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து, முற்போக்காளரான பாட்ரிஸ் லுமும்பாவைக் கொன்ற சர்வாதிகாரி மொபுட்டுவும், சமூக ஒட்டுண்ணி டான் கிங்கும், ஜைர் நாட்டில் ஏற்பாடு செய்த ஒரு சண்டையில், அலி கலந்து கொண்டார். ஜார்ஜ் போர்மன் என்ற மாபெரும் கருப்பின வீரருடனான இந்த சண்டை, ‘ஜைர் – இங்கு கருப்பின அதிகாரம் ஓர் யதார்த்தம்’ எனப் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஜார்ஜ் போர்மன் வலிமை முன் அலி வெல்ல முடியாது என்றே நம்பப்பட்டது. திரண்டிருந்த கருப்பின கூட்டம் ‘அலி பொமாயே, அலி பொமாயே’ – கொன்றுவிடு அலி, எனக் கூவியது. RUMBLE IN THE JUNGLE எனச் சொல்லப்பட்ட இந்த சண்டையிலும் முகமது அலி வென்றார். தொழில்முறைச் சண்டைகளில் முகமது அலி 61ல் 57 குத்துச் சண்டைகளில் வென்றார். அவற்றில் 37 நாக் அவுட் வெற்றிகள். பின்னாட்களில் முகமது அலி பார்க்கின்சன் நோய்க்கு ஆளானார். அய்க்கிய அமெரிக்க ஆளும் நிறுவனங்கள் அந்தப் போராளியை வீரனை கலகக்காரனை உள்ளிழுத்துக் கொண்டன. 1996 அட்லான்டா ஒலிம்பிக் சுடரை நடுங்கும் கரங்களுடன் அலிதான் ஏற்றினார். 2002ல் இசுலாமிய உலகிற்கு அமெரிக்காவையும் ஆப்கன் போரையும் விளக்கும் ஹாலிவுட் தயாரிப்பு விளம்பர பிரச்சார இயக்கத்தில் அலியைப் பங்கேற்க வைத்தனர். குத்துச் சண்டையின் பாதிப்புக்கள் பார்க்கின்சன் நோய் ஆகியவற்றால் பேச முடியாத எழுத முடியாத அலியை, சுத்திகரித்து, நடமாடும் புனிதராய் அய்க்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் அரவணைத்துக் கொண்டது கொடூரமான வரலாற்று முரண்.
வலியை வரலாற்றை மறக்க விடக் கூடாது மறைக்க விடக் கூடாது
18 வயது முதல் 30 வயது வரை வீரனாக கலகக்காரனாக போராளியாக இருந்த முகமது அலியின் வரலாற்றை, அன்றைய அவன் மக்கள் அனுபவித்து வந்த வலியை, மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியுள்ளது. தேசபக்தி, மதத் தூய்மை, சாதித் தூய்மை முன் நிறுத்தப்படும் இந்தியாவில், ஆப்பிரிக்க மாணவர்களுக்கு எதிராக இனவெறி தலை விரித்தாடும் இந்தியாவில், ஆதிக்கக் கொலைகள் நடக்கும் தமிழ்நாட்டில், 1960களின் முகமது அலி, சிந்திக்கத் துணிய, போராடத் துணிய, வெற்றி பெறத் துணிய, முன் உதாரணமாய் நம்பிக்கை தருவார். உலகெங்கும் சுரண்டலை ஒடுக்குமுறையை எதிர்ப்பவர்களுக்கு, இந்தியாவில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு, போராடும் கம்யூனிஸ்டுகளுக்கு, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையை, நிச்சயம் கலகக்கார முகமது அலி தருவார்.
(தகவல் ஆதாரம்: 04.06.2016 தேதிய ஜேகோபின் இதழில் டேவ் சிரின் எழுதிய கட்டுரை)
சுவிட்சர்லாந்தும் சுவீடனும் சொல்லும் புதிய செய்திகள்
எஸ்.குமாரசாமி
அனைவருக்கும் அடிப்படை வருமானம்
சுவிட்சர்லாந்து நாடு நவம்பர் 24, 2013 அன்று மக்கள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியது. சாதாரண சராசரி தொழி லாளிக்கும், நிறுவனங்களின் தலைமை அலுவலர்களுக்கும் இடையில் சில நூறு மடங்கு சம்பள வேறுபாடு இருந்ததால், சுவிட்சர்லாந்தில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் 1:12 என்ற விகிதத்தை தாண்டக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கான பொது வாக்கெடுப்பில் 52% மக்கள் பங்கேற்றனர். சம்பள வேறுபாடு 1:12 தாண்டக் கூடாது என்பதற்கு 100ல் 37 பேர் ஆதரவு தெரிவித்தனர். அந்தத் தீர்மானம், 100ல் 67 பேர் ஆதரவை பெற முடியவில்லை. பழமைவாத ஏகாதிபத்திய நாட்டில், வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கெதிராக 37% பேர் வாக்களித்தது, குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
இப்போது 2016ல் ஜுன் 5 அன்று, ஒரு பொது வாக்கெடுப்பு நடந்தது. சுவிட்சர் லாந்தைச் சேர்ந்த எவருக்கும், அவருக்கு வேலை செய்யும் வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசு மாதம் ரூ.1½ லட்சம் அடிப்படை வருமானத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தின் மீதுதான், பொது வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்திற்கு ஆதரவாக 22% பேரும் எதிராக 78% பேரும் வாக்களித்தனர்.
சுவிட்சர்லாந்தில் தானியங்கி முறை வருவதாலும், இயந்திர மனிதர்கள் வருவதாலும், நிறைய பேர் வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக, மக்களின் ஒரு பகுதி கருதினர். மக்கள் அனைவரையும் பாதுகாப்பது சமூகத்தின் கடமை, அதனை அரசு நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். ஜுரிச் நகர பிரதான சாலைகளில் இயந்திர மனிதர்களை (ரோபோக்கள்) நடமாட விட்டனர். ஒரு கால் பந்து மைதானம் அளவுக்கு பெரிய விளம்பரம் செய்தனர். அந்த விளம்பரம், உங்கள் வருமானம் உறுதி செய்யப்பட்ட பிறகு, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் எனக் கேட்டது.
சுவிட்சர்லாந்து அரசும் மூலதனக் கூட்டமும், அனைவருக்கும் அடிப்படை வருமானத்தை உத்தரவாதம் செய்வது, வெற்று மார்க்சியக் கனவு என்றது. ஆண்டுக்குக் கூடுதலாக 20 பில்லியன் டாலர் செலவாகும் என்றும், அப்படிச் செய்தால் சமூக/பொது செலவினங்கள் வெகுவாகக் குறையும், வரிகள் ஆகக் கூடுதலாய் உயரும் எனவும் அச்சுறுத்தினார்கள். சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கலாமா, போட்டியில், தக்கவை பிழைப்பதுதானே நியாயம் என, சமூக டார்வினியம் பேசினர்.
பொது வாக்கெடுப்பு முடிவு பற்றி ஆங்கில நாளிதழ்களின் சென்னை பதிப்புகள் தந்துள்ள தலைப்புக்கள் கவனம் கொள்ளத்தக்கவை. டெக்கான் கிரானிக்கிள் நரஐநந நஅவ SWISS SAY “NO” TO “FREE MONEY” (சும்மா இலவசமாகத் தரும் பணம் வேண்டாம் என்றனர் சுவிட்சர்லாந்து மக்கள்) என்றது. த நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் SWISS TURN DOWN OFFER OF $2500 A MONTH FOR DOING NOTHING (சுவிட்சர்லாந்து மக்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு மாதம் ரூ.1½ லட்சம் தர முன்வந்ததை ஏற்க மறுத்தனர்) என்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா SWISS VOTE FOR ‘WORK’. REJECT “MONEY FOR NOTHING” PLAN (சுவிட்சர்லாந்து வேலை செய்வதற்கு ஒப்புதல் தந்தது. எதுவும் செய்யாமல் பணம் பெறும் திட்டத்தை நிராகரித்தது) என்றது.
சமூகப் பாதுகாப்பு என்பதை, வேலை செய்யாமலே பணம் கேட்கும் சோம்பேறித்தனம், மார்க்சியக் கனவு, சமூகப் பாதுகாப்பு சந்தை விதிக்கு எதிரானது என சுவிட்சர்லாந்து அரசு சொன்னதை, நமது ஆங்கில இதழ்களும் எதிரொலித்துள்ளன.
இந்த பொது வாக்கெடுப்புக்குப் பிறகு, ஆலிவியர் என்ற 26 வயது கட்டுமானப் பணி தச்சர், சொந்தமாய் அறைகலன் (ஃபர்னிச்சர்) தயாரிப்பவர், தாம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சொன்னார். ‘உத்தரவாத அடிப்படை வருமானம், இனி, என் பேரார்வங்களில், நான் கவனம் குவிக்க ஒரு வாய்ப்பு தரும் என நம்பினேன். உயிர் வாழ வேலை செய்யும் கட்டாயம் போய்விடும் என நம்பினேன். அதனால்தான் ஆதரவாக வாக்களித்தேன்’ என்றார் ஆலிவியர்.
மெலீனீ என்ற பெண் தாம் வேண்டா வெறுப்பாய்த் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்ததாகச் சொன்னார். அவர் சொன்ன காரணம், சுவிட்சர்லாந்தின் மேலான சமூக பொருளாதார நிலைமைகளைப் புலப்படுத்துகிறது. ‘சமூகம் அடிப்படைத் தேவைகளைப் பார்த்துக் கொண்ட பிறகு, தமது சூழ்நிலையைத் தாமே கையாளத் தெரியாதவர்களை கவனித்துக் கொள்ள, அரசு பொறுப்பேற்காது’ எனக் கருதியதால் அவர் எதிராக வாக்களித்ததாகச் சொன்னார். மாதம் ரூ.1½ லட்சம் என்பது மட்டுமே சமூகப் பாதுகாப்புக்குப் போதுமானதல்ல, அரசின் கடமை, அதனையும் தாண்டி இருக்க வேண்டும் எனக் கருதினார்.
வேலை நேரக் குறைப்பு
சுவீடன் நாட்டின் கொத்தென்பெர்க் மாகாணத்தில், ஒரு சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள ஸ்வார்டெடா லென்ஸ் மருத்துவமனையில், வயதானவர்கள், மறதி நோயாளிகள் கவனித்துக் கொள்ளப் படுகின்றனர். வழக்கமாக இங்கு கவனித்துக் கொள்ளும், வேலை பார்க்கும் (CARE GIVER) அர்டுரோ பொரஸ் எப்போதும் அலுத்து களைத்துப் போயிருப்பார். இங்கு சம்பள வெட்டில்லாமல், 8 மணி நேர நாள் வேலை, 6 மணி நேர வேலையானது. வாரம் 30 மணி நேர வேலை. இப்போது அவரும் அவர் கவனித்துக் கொள்ளும் நோயாளிகளும் மகிழ்ச்சியாய் உள்ளனர். பெண் துணையின்றி குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் நிலையில் வெகுவாகச் சிரமப்பட்ட தமக்கு, அந்த வேலை நேரக் குறைப்பு, உதவுவதாகச் சொன்னார். இந்த மருத்துவமனையில், வருகையின்மை குறைந்துள்ளது; உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளது; தொழிலாளி ஆரோக்கியம் முன்னேறி உள்ளது. 40 வருட கால 40 மணி நேர வார வேலை, 30 மணி நேர வார வேலை என ஆனதற்கு கை மேல் நல்ல பலன் கிடைத்துள்ளது.
இணையதள தேடுதல் வீதத்தை அதிக பட்சமாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம் (INTERNET SEARCH OPTIMISATION STARTUP) ஒன்றை, 20 பேர் கொண்டு மரியா பிராத் நடத்தினார். வார வேலை 40 மணி நேரத்தை, 30 மணி நேரமாகக் குறைத்தால், கூடுதல் ஆள், கூடுதல் செலவு தேவை எனத் தாம் முதலில் நினைத்ததாகவும், ஒவ்வொருவரும் கூடுதல் படைப்பாற்றலுடன் மேலான உற்பத்தித் திறனுடன் வேலை செய்வதால் பிரச்சனையே இல்லை என்றும் சொல்கிறார். இங்கு பணியாற்றும் தாம்மி ஒட்டிங்கர், இப்போது தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதில்லை, தேவையற்ற கூட்டங்கள் நடப்பதில்லை, அனைவரும் இருக்கும் நேரத்தில் மேலாக வேலை செய்யப் பார்க்கிறோம் என்கிறார். சால்க்ரென்ஸ்கா பல்கலைக்கழக மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் 89 மருத்துவர்கள் செவிலியர்களுடன், கூடுதலாக 15 பேர் வேலைக்கு எடுத்ததால் கூடுதல் செலவானது. ஆனால், மருத்துவமனையின் திறன்கள் அதிகரித்து, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குக் கூடப் புதிதாக நோயாளிகள் வரத் துவங்கி விட்டனர். வேலை நேரக் குறைப்பிற்குப் பிறகு, 20% அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளன. அறுவைச் சிகிச்சைக்கு காத்திருக்கும் கால அளவு மாதத்திலிருந்து வாரமாகிவிட்டது. நோயாளிகளும் விரைந்து சிகிச்சை முடிந்து வேலைக்குச் சீக்கிரமே திரும்பி விடுகின்றனர் எனச் சொல்லப்படுகிறது.
இந்த மருத்துவமனை, கடந்த 13 வருடங்களாக வாரத்தில் 6 மணி நேரம் வேலை செய்யும், டொயோட்டா சர்விஸ் சென்டரைப் பின்பற்றியது. இங்கு 6 மணி நேர வேலை, ஊழியர் மன அழுத்தம் நீங்க உதவியது. நீண்ட காத்திருப்பிற்கு எதிரான, வாடிக்கையாளரின் புகார்கள் நீங்க உதவியது. இங்கு நடக்கும் டிரில்லிங் இன்ஜின் பிளாக் உருவாக்குவது போன்ற வேலைகளுக்கு திடமான உடல் வலு தேவை. 6 மணி நேர வேலை உடல் புத்துணர்ச் சிக்கு உதவுவதால், நிறைய கார்கள் சரி பார்க்கப்பட்டு நிறைய வருமானம் வருகிறது. இங்கே வேலை செய்யும் மாத்தியாஸ் லார்சன், தமது மனைவியும் வேலைக்குப் போவதால், 6 மணி நேர வேலை மட்டுமே இருப்பதால், சமைக்க, சுத்தம் செய்ய, கடைக்குச் செல்ல குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள தம்மால் முடிகிறது என்கிறார்.
(நமது சுலபமான புரிதலுக்கு. 8 மணி நேரத்துக்கு ரூ.480 சம்பளம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.60 சம்பளம். அதே ரூ.480 6 மணி நேரத்திற்கு தரப்பட்டால் ஒரு மணி நேர வேலைக்கு ரூ.80 சம்பளம். ரூ.60லிருந்து ரூ.80, 33.33% உயர்வாகும்).
6 மணி நேர வேலையால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் அது 8 மணி நேர வேலை பார்ப்பவர்களின் அதிருப்தியை தூண்டுகிறது என்றும் காரணம் சொல்லப்பட்டு, ஸ்வீடனில் நகராட்சிப் பணியாற்றுகிற சில நூறு பேர், அனுபவித்துக் கொண்டிருந்த 6 மணி நேர வேலை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணரான ஜான் மேனார்ட கீன்ஸ் 2030ல் பொருளாதார வளர்ச்சியின் போக்கில் 15 மணி நேர வார வேலை வந்துவிடும் என்றார். 1960களில் ஹெர்மன் கான், வருடத்தில் 13 வாரங் கள் விடுமுறை, வாரத்தில் 4 வேலை நாட்கள் மட்டுமே என்ற நிலையை முதலாளித்துவம் எட்டும் என்றார். அவரும் பிரும்மாண்டமான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே கருத்து தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து, சுவீடன் பற்றிய செய்திகளுக்கு அப்பால்….
ஏகாதிபத்திய உலகிற்குத் தலைமை தாங்கும் அய்க்கிய அமெரிக்கா பற்றிய சில செய்திகளும் மிகவும் அவசியமானவை. மே 21, 2016 விவரப்படி, கடந்த ஆண்டு, அய்க்கிய அமெரிக்காவின் 500 நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், சராசரி தொழிலாளியைவிட 335 மடங்கு கூடுதல் சம்பளம் பெற்றனர். சராசரி தலைமை நிர்வாக அதிகாரி சம்பளம், தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளத்தை விட 819 மடங்கு அதிகம். மாசிமோ குழும தலைமை நிர்வாக அதிகாரி 199 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.
சில வருட கால தொடர் போராட்டங்கள் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர் குறைந்தபட்சச் சம்பள முழக்கம் இயக்கமாகி வலுப்பெற்றுள்ளது. சில தொழில்களில் நடைமுறைக்கும் வந்துள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ரூ.975, நாளொன்றுக்கு ரூ.7,800 குறைந்தபட்ச சம்பளம் என்ற முழக்கத்தை, அய்க்கிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆவதற்குப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் பெர்னி சாண்டர்சும் முன்வைத்தார். அவரது பிரச்சாரத்தின் மய்ய அழுத்தம், நிதி மூலதன சந்நிதானமான வால் ஸ்ட்ரீட்டின் கொழுத்த பூனைகளுக்கும் வருமான ஏற்றத் தாழ்வுகளுக்கும் எதிராக அமைந்தது.
நரேந்திர மோடி, அய்க்கிய அமெரிக்காவின் நெருக்கமான இராணுவக் கூட்டாளியாக இந்தியாவை மாற்றிவிட்டார். விரைவில் நாடு வல்லரசாகி விடும். உலகம் இந்தியாவைக் கவனிக்கும். இப்படி எல்லாம் அடிபடுகிற செய்திகளோடு, அஇஅதிமுக, பாஜக அரசியல் நெருக்கம் பற்றியும் பேசப்படுகிறது. இந்திய ‘நல்லரசு’ நிலைமைகளைப் புரிந்துகொள்ள, மக்களின் ‘நல்ல காலங்களை’ பற்றி புரிந்து கொள்ள, நாட்டின் தொழில் வளர்ச்சியில், நகர்மயமாக்கத்தில் முன்னணிப் பங்காற்றும் தமிழ்நாட்டின் சம்பள நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வது, மிகமிக அவசியம்.
இங்கேயும், முன்நிறுத்தப்படும் தோற்றத்துக்குப் பின்னால் உள்ள கசப்பான யதார்த்தத்தைக் காண்பது அவசியம். 11.06.2016 டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப்டம்பர் 2015ல் மாருதி நிறுவனம் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பள உயர்வு ரூ.16,800 அறிவித்தபோது, தமிழ்நாட்டில் செயல்படும் ஃபோர்ட் மாதம் ரூ.15,700 உயர்வும், பிப்ரவரி 2016ல் ஹுண்டாய் ரூ.11,000 முதல் ரூ.16,800 சம்பள உயர்வும் தந்ததாகவும், இப்போது ஒரகடத்தில் செயல்படும் ரெனோ நிசான் தனது 3,750 தொழிலாளர்களுக்கு 01.04.2016 முதலான 3 வருட ஒப்பந்தத்தில் மூன்றாம் வருட முடிவில் ரூ.19,100 உயர்வு என 57% உயர்வு அளித்துள் ளதாகவும் எழுதியுள்ளது. இதன் மூலம் தற்போதைய ரூ.33,000 சம்பளம் ரூ.52,100 ஆகும் என்றும் செய்தி வெளியிட்டுள்ளது.
நிகழ்வுப் போக்கிற்குப் பின் உள்ள உண்மையை அறியுமாறு மார்க்ஸ் போதித்துள்ளார். ஃபூயர்பாக் சொன்னது போல் பொரு ளுக்குப் பதிலாக பிம்பமும், அசலுக்குப் பதிலாக நகலும், யதார்த்தத்துக்குப் பதிலாக பிரதிநிதித்துவமும், இருத்தலுக்குப் பதிலாக தோற்றமும் (THE IMAGE TO THE THING, THE COPY TO THE ORIGINAL, THE REPRESENTATION TO REALITY, APPEARANCE TO BEING) முன்னுக்கு வருகின்றன.
இந்த கார் நிறுவனங்கள் அனைத்துமே நிரந்தரத் தொழிலாளியைக் காட்டிலும், சில மடங்கு கூடுதலாக ஒப்பந்த – பயிற்சித் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துகின்றன, அவர்களுக்குக் குறைந்த சம்பளமே தரப்படுகிறது என்பது பற்றி இந்தச் செய்திகள் மவுனம் சாதிக்கின்றன. நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் பற்றிச் சொல்பவர்கள், இந்தக் கார் நிறுவனங்களில் வேலையாள் செலவு சதவீதம் (எம்ப்ளாயீ காஸ்ட்) மேலை நாடுகளின் கார் கம்பெனிகளோடு ஒப்பிடும்போது, மிகவும் குறைவானது என்பதைச் சொல்ல மறுக்கிறார்கள். சொல்லாமல் மறைக்கிறார்கள்.
தாய்க்குத்தான் பிள்ளைகளுக்கு என்ன தேவை எனத் தெரியும் என உணர்ந்து, தவ வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் தொண்டாற்றும் ஜெயலலிதா ஆளும் தமிழ்நாட்டில், 01.04.2016 முதல் 30.03.2017 வரை உள்ள குறைந்தபட்ச சம்பள விவரங்கள் கவனிக்கத்தக்கவை. அனுபவம் வாய்ந்த வல்லுநர் திரு.ஆர்.எஸ்.சர்மா பிரசுரித்துள்ள புத்தகப்படி, தமிழக அரசு 76 தொழில்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயித்துள்ளது.
(கட்டுரையாளரால் கைத்தறி, விசைத்தறி, பீடி, தோல், தோல்பொருள், பாத்திரம், தேயிலை, தோட்டத் தொழில் உள்ளிட்ட 22 தொழில்களின் குறைந்தபட்ச சம்பளத்தை, தரப்பட்ட விவரங்களில் இருந்து கணக்கிட முடியவில்லை).
கணக்கிடப்பட்ட 54 தொழில்களில், 12 தொழில்களில் மட்டுமே, பஞ்சப்படி சேர்த்து மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
28 தொழில்களில் ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11 தொழில்களில் ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் பட்டாசு மற்றும் உள்ளாட்சி என்ற 3 தொழில்களில் ரூ.5,000க்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,796, பட்டாசு தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4,600, உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.250 குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘தாயுள்ளம் கொண்டவரின் தவ வாழ்க்கை’, கடைசி கடைசியாய், மூலதன சந்நிதானப் பலிபீடங்களில் மலிவு விலை கூலி உழைப்பை வைத்துள்ளது என்பதுதான், அலசிப் பார்த்தால் புலப்படும் கொடூரமான நிஜமாகும்.
இந்த எல்லா விவரங்களிலிருந்தும் நாம் சமகால ஏகாதிபத்திய உலகம், முதலாளித்துவ சமூகம் எப்படி இயங்குகிறது எனக் கண்டறிவது நல்லது. அதற்கு, தோழர்கள் மார்க்ஸ் மற்றும் லெனின் உதவியை நாடுவோம்.
கூலி உழைப்பும் மூலதனமும் பிரசுரத்தில் மார்க்ஸ்
பாட்டாளி, கூலித் தொழிலாளி, உயிர் வாழ்வதற்காகவே வேலை செய்கிறார். உழைப்பை தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கூட அவர் கருதுவதில்லை. வாழ்வின் தியாக மாகவே கொண்டுள்ளார்.
பட்டுப்புழு இயற்கையாகவே பட்டு நூற்கிறது. பட்டுப்புழு தான் தொடர்ந்து உயிர் வாழ நூற்குமாயின், அது, கூலித் தொழிலாளியாக மாறிவிடும்.
தொழிலாளியின் உழைப்புச் செயற்பாட்டின் குறிக்கோள், அவரது செயல்பாட்டால் உருவாகும் உற்பத்திப் பொருள் அல்ல. சுரங்கத்திலிருந்து அவர் வெட்டி எடுக்கும் தங்கம் அல்ல. அவர் நெய்யும் பட்டல்ல. அவர் கட்டி எழுப்பும் மாளிகை அல்ல. அவர் தமக்காக உற்பத்தி செய்து கொள்வது, கூலியை மட்டுமே ஆகும்.
அந்தந்த சமூக நிலைமைகளுக்கு ஏற்ப சராசரி சமூக கூலி, தொழிலாளர்கள் பிழைத் திருந்து திரும்பவும் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியில் ஈடுபடும் சந்ததியினரை தயாரித்து அளிக்கவுமே உரியதாக இருக்கும்.
இயற்கையின் மீது உழைப்பு செலுத்தப்படும்போது, புதிய மதிப்பு உருவாகிறது. அது கூலியாக லாபமாக, இரண்டு வர்க்கத்தினருக்குப் பிரிகிறது. கூலி உயர லாபம் குறையும். கூலி குறைய லாபம் உயரும்.
வேலை நேரம் பற்றி, கூலி விலை லாபம் பிரசுரத்தில் மார்க்ஸ்
நேரம்தான் மனிதனுடைய வளர்ச்சிக்கான பரப்பாகும். தன் விருப்பப்படி செலவழிக்கும் நேரம் எவரிடம் இல்லையோ, உண்ணல், உறங்குதல் முதலிய வெறும் உடல் தேவைகளுக்கான இடைக்காலம் தவிர, எவருடைய வாழ்நாள் முழுவதும், முதலாளிக்காக உழைப்பதில் மூழ்கிப் போய் விடுகின்றதோ, அவர் பொதி சுமக்கும் மிருகத்தை விடக் கீழான நிலைக்குச் சென்று விடுகிறார். அவர் பிறருக்கு செல்வம் உற்பத்தி செய்யும் இயந்திரமாகி, உடல் சிதைந்து பண்பற்ற உள்ளம் கொண்டவராக ஆகிறார்.
மூலதனம் கட்டுப்படுத்தப்படவில்லை எனில், தொழிலாளர் வர்க்கம் முழுவதையும் இந்த இழிவினும் இழிவான நிலைமைக்கு தள்ளுவதற்கு, விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல், ஈவிரக்கமில்லாமல் பாடுபடும்.
புரட்சிகர ஓய்வு (ரேடிகல் லீஷர்) என்ற தலைப்பிட்ட சமகால கட்டுரையில் ஈவா ஸ்விட்லர் என்ற அறிஞர் சொல்கிறார்: ‘குறைந்த வேலை நேரத்திற்கான இயக்கத்தை, அவை வேலை கலாச்சாரத்தின் முதன்மை நிலையை அச்சுறுத்துவதால் மட்டுமின்றி, அவை லாபத்தின் ஆதாரத்தையே அச்சுறுத்துவதால், முதலாளித்துவத்தார் மூர்க்கமாய் எதிர்க்கின்றனர். சீர்திருத்த நோக்கம் மட்டுமே கொண்ட குறைந்த வேலை நேரத்திற்கான இயக்கங்களும், உழைக்கும் வர்க்கங்களை சுரண்டி எடுப்பதற்கு எதிரான, நேரடியான தாக்குதல்களே.
கூடுதல் ஊதியத்துக்கான அழுத்தம் லாபத்தைத் தாக்குகிறது. அது வேலைக் கலாச்சாரத்தைப் பாதிக்கும், நேரம் மீது கவனம் செலுத்தாமல், பணத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதால், முதலாளித்துவத்தார் அதனைச் சகித்துக் கொள்கிறார்கள். மாறாக, கூடுதல் ஓய்வு நேரம் என்பது, தொழிலாளர்களை வேலை உலகிலிருந்து, பொருளாதார, சமூக, சுய நிர்ணய உலகு நோக்கி அழைத்துச் செல்வதால், முதலாளிகள் அந்தக் கோரிக்கையை வெறுக்கின்றனர்’.
பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தில் அனைவருக்குமான அடிப்படைச் சம்பள இயக்கம், சாராம்சத்தில், சமூக உழைப்பால் உருவாகும் செல்வத்தை, வருமானத்தை, மக்களுக்கு மேலும் சாதகமாக மறுபங்கீடு செய்வதையே கோருகிறது.
சுவீடனில் வேலை நேரக் குறைப்பு இயக்கமும் சுரண்டல் எதிர்ப்பு இயக்கமே. அது 33.33% சம்பள உயர்வை உடனடியாகப் பெற்றுத் தருகிறது. மட்டுமின்றி உழைப்பாளி மக்களுக்கு, அவர்களது கையை விட்டுப் போன நேரத்தில் ஒரு பகுதியை மீட்டுத் தந்து, இயந்திர – மிருக வாழ்க்கையின் மத்தியில், சமூகம் சார்ந்த ஒரு சிறு பகுதி மானுட வாழ்க்கையை மீட்டுத் தருகிறது.
மனித இயற்கையின் ஒரு பகுதியாக உழைப்பு இருக்க வேண்டும். வாழ்வதற்கான கட்டாய உழைப்பு, கூலி அடிமைத்தனமே.
சமூக உற்பத்தியின் பயன்களைத் தனி உடைமை விழுங்கி விடுவதால்தான், கூலியைக் குறைக்க வேலை நேரத்தை உயர்த்த முதலாளித்துவம் இடையறாமல் முயற்சி செய்கிறது. பாட்டாளி வர்க்கம், கூலியை உயர்த்த மட்டுமின்றி, வேலை நேரத்தைக் குறைக்க மட்டுமின்றி, சமூக உற்பத்தியின் பயன்களை சமூ கமே எடுத்துக் கொள்ளும் பொது உடைமைக்காக, கூலி அடிமை முறையை வீழ்த்திடப் போராட வேண்டும்.
காண வேண்டிய கைவசப்படுத்த வேண்டிய கனவு
தனி உடைமை ஒழிந்து பொது உடைமை நிறுவப்பட்ட பிறகு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற மக்களின் அதிஉயர்ந்த ஜனநாயகம் வரும், அது ஒரு மாறிச் செல்லும் கட்டமாக இருக்கும், அதற்குப் பிறகு வர்க்கங்கள் மறைந்து, சுரண்டல் ஒடுக்குமுறை மறைந்து, அரசு எப்படி உலர்ந்து உதிரும் என அரசும் புரட்சி நூலில் லெனின் எழுதியுள்ளார்.
வறுமையைப் பங்கிட்டுக் கொள்வது கம்யூனிசம், வேலையற்ற வீணர்களை, சோம்பேறிகளை உற்சாகப்படுத்துவது பொது உடைமை, மனிதர்கள் பிறவியிலேயே மோசமானவர்கள் என்ற அற்பமான, சிறுபிள்ளைத் தனமான கதைகளை நிராகரித்து, வருங்கால உன்னத சமூகம் பற்றிய ஓர் அடிப்படைச் சித்திரத்தை லெனின் முன்நிறுத்துகிறார்.
அந்த சமூகத்தில்,
உழைப்பு பிரும்மாண்டமான உற்பத்தித் திறன் ஆற்றல் கொண்டு இருக்கும். உடல் உழைப்பு, மூளை உழைப்பு வேறுபாடும் நகர, கிராம வேறுபாடும் களையப்படுவதால், பண்டங்களும் சேவைகளும் அருவியாய்ப் பொழியும். வளமை வளமை வளமை, எங்கும் பெருகிப் பாயும்.
மனிதர்கள் தாம் உற்பத்தி செய்பவை மீது தாமே பாத்தியதை கொண்டிருப்பார்கள். ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சமூக நியதி பழகிப் போகும்.
வேறொருவரை விட நான் அரை மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்து விட்டேன், மற்றொருவரை விட எனக்குக் குறைவாகக் கிடைத்தது என ஷேக்ஸ்பியர் கதாபாத்திரமான கந்துவட்டி ஷைலாக்கின் கல் நெஞ்சுடன் கணக்கிட்டுப் பார்க்கும் ‘முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பை’ சமூகம் கடந்துவிடும். புதிய மனிதர்கள் நிறைந்த அந்த புதிய சமூகத்தில், சமூகத்திற்குத் தருவதை, சமூகத்திடமிருந்து எடுத்துக் கொள்வதை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
சமூகப் பொருளுற்பத்தி அனைத்து மக்களாலும் நிர்வகிக்கப்படும். ஆயுதமேந்திய மக்களால் பொதுக் கணக்கீடு, பொதுப் பதிவுகள், பொதுக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். அவர்கள் உணர்ச்சிப் பசப்பாளர்களாக அல்லாமல், காரியத்தில் குறியாக இருப்பார்கள்.
சோம்பேறிகள், செல்வச் சீமான்களின் பிள்ளைகள், மோசடிப் பேர்வழிகள், போகிற போக்கில் பொதுச் சொத்தைச் சேதம் செய்பவர்கள், முதலாளித்துவ உரிமையின் காவலர்கள், மக்கள் கண்காணிப்பு மற்றும் கணக்கீட்டிலிருந்து தப்பிக்க முடியாது.
உழைப்பு அந்நியமாதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட, மானுட சாரம் மீட்கப்பட்ட அந்த சமூகத்தில், சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அவரது ஆற்றலுக்கேற்ப சமூகத்திற்குத் தருவார். ஒவ்வொருவரும் தமக்குத் தேவையானவற்றை சமூகத்திடம் இருந்து எடுத்துக் கொள்வார்.
நீதிபதிகள் எசமானர்கள் அல்ல 
வழக்கறிஞர்கள் அவர்களின் அடிமைகள் அல்ல
வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தாயா இல்லையா என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை, அகில இந்திய பார் கவுன்சில் கையைப் பிடித்து முறுக்கிக் கொண்டே இருக்கிறது. உடனே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தமிழ்நாட்டில் உள்ள பல வழக்கறிஞர் அமைப்புகளுக்கு, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் காரணம் கோரி அறிவிப்பு தந்துள்ளது.
என்ன சொன்னாலும் நீதிமன்றம் புறக்கணிப்பு குற்றம் அல்லவா, உச்சநீதிமன்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கள், புறக்கணிப்பு சட்ட விரோதம் எனத் தீர்ப்பளித்துள்ள நிலையில் அவ்வாறு செய்யலாமா எனச் சிலர் கேட்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, சட்ட விதிகளை எப்படித் திருத்தலாம் என வழக்கறிஞர்கள் ஆலோசனை சொல்லட்டும், அவற்றை உரிய குழு பரிசீலித்து பரிந்துரை தரட்டும், அதன் பிறகுதான் முடிவெடுக்கப்படும் என பார் கவுன்சிலிடம் சொல்லி உள்ளாரே, அப்படி இருக்க ஏன் வழக்கறிஞர்கள் போராட வேண்டும்? இப்படிச் சில கேள்விகள்.
வழக்கறிஞர்கள், 1. நீதிபதிகள் பெயர் சொல்லிப் பணம் பெறுவதை 2. நீதிபதிகளை அச்சுறுத்துவதை அவமதிப்பதை 3. நீதிபதிகள் மீது ஆதாரமில்லாத புகார்களை மேல் நிலை நீதிபதிகளுக்கு அனுப்புவதை மற்றும் பரப்புவதை 4. நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்தில் போராடுவதை 5. மது அருந்திவிட்டு நீதிமன்றம் வருவதை, நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையெனில், இந்தச் செயல்களுக்கு எதிரான விதிகளை ஏன் எதிர்க்கிறீர்கள் என மிகவும் புத்திசாலித்தனமாய் நம் வாயை அடைத்து விட்டதாக நினைத்து சிலர் கேட்கிறார்கள்.
அகில இந்திய பார் கவுன்சிலும் தமிழ்நாடு பார் கவுன்சிலும் 
நியாயமாகச் செயல்படுகின்றனவா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வதே, சட்டத்தின் ஆட்சியின் வேலை என்று வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எல்லோருமே சொல்வார்கள். நீதிபதி கர்ணன் நீதிமன்றத்தைப் புறக்கணிக்க, கொல்கத்தா வழக்கறிஞர் அமைப்பு முடிவெடுத் துள்ளதே. மேற்குவங்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய பார் கவுன்சில் ஆணையிட்டுள்ளதா? (நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதல்ல நம் வாதம்). தெலுங்கானாவிலும் நீதிமன்றப் புறக்கணிப்பு நடப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏன் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மீது மட்டும் பாரபட்சமான நடவடிக்கை? டெல்லி பாட்டி யாலா உயர்நீதிமன்ற வளாகத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணைய்யா குமார், அவரது சக மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் அங்கிகளுடன் காவிப் படையி னரால் சங் பரிவார் கும்பலால் தாக்கப்பட்டனர். ஓடோடிச் சென்று அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்திடம் புகார் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் உடனடியாக சில உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களை நேரில் சென்று நிலைமைகளைக் கண்டறிய அனுப்பியது. அதே சங் பரிவார் கும்பல் வழக்கறிஞர் அங்கிகளுடன், உச்சநீதிமன்ற விசாரணை/ஆய்வு குழுவை எச்சில் துப்பி, தகாத வார்த்தைகளால் ஏசி, கல்லெறிந்து விரட்டினர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் மொத்த இந்தியாவும் பல தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்த்தது.
நீதித்துறையின் மேன்மையை, வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மீது திரும்பத் திரும்ப தாக்குதல்களை ஏவும் இந்திய பார் கவுன்சில், பாட்டியாலா நீதிமன்ற வன்முறை வெறியாட்ட விசயத்தில் சுண்டுவிரலைக் கூட அசைக்கவில்லையே. எந்த வழக்கறிஞரும் அங்கு தற்காலிக நீக்கம் செய்யப்படவில்லை. இயற்கை நீதி கோட்பாடுகளின்படி வாய்ப்பு தரவேண்டும் அல்லவா, அதனால்தான் நிதானமாய் நடக்கிறோம் என்கிறது பார் கவுன்சில் ஆஃப் இந்தியா. ஆமாம், ஆமாம் எனத் தலையாட்டுகிறது தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில். வழக்கறிஞர்களை ரவுடிகளாக சித்தரிக்கப் பார்க்கும் மேட்டிமை அறிவாளிகள் சிலர், நீதிமான்கள் சிலர், பார் கவுன்சிலின் இரட்டை அணுகுமுறை பற்றி கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
தலைமை நீதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த பிறகு எதற்காகப் போராட்டம் என வழக்கறிஞர்களிடம் வக்கணையாகக் கேட்பவர்கள், தலைமை நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் சட்டப்பிரிவு 34(1)அய்ப் பயன்படுத்தி நீங்கள் கொண்டுவந்த விதிகளைத் திரும்பப் பெற்று விட்டு, நீதித்துறையில் சுமுக நிலை நிலவுவதை உறுதி செய்வது பற்றி வழக்கறிஞர்களிடம் பேசுமாறு, ஏன் கேட்கக் கூடாது? இங்கேயும் சமத்துவக் கோட்பாடு காணாமல் போய்விட்டதே! நீதிமன்ற கோடை விடுமுறையில் அவசரமாய்க் கொண்டுவந்த விதிகளைத் திரும்பப் பெற்று விட்டால், நீதி தேவதை சென்னை உயர்நீதிமன்றத்தை விட்டு ஓடிவிடுமா? நீதிபதிகளின் மதிப்பும் கவுரவமும் குறைந்து விடுமா?
வழக்கறிஞர்கள் ஒழுங்கீனம் செய்வதற்கு குற்றம் புரிவதற்கு எவரும் வக்காலத்து வாங்க மாட்டார்கள். நீதிமன்ற வேலையை நீதிமன்றமும், பார் கவுன்சில் வேலையை பார் கவுன்சிலும் பார்த்துக் கொள்ளட்டும் என்றுதானே போராடும் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். மரண தண்டனை வேண்டாம், அவதூறு பிரிவு வேண்டாம் என வாதாடுகிற முற்போக்கு, ஜனநாயக, தேசபக்த சக்திகள் அனைவருமே, யாரும் யாரையும் கொலை செய்யலாம் அவதூறு செய்யலாம் எனச் சொல்கிறார்கள் என்று எவராவது வியாக்கியானம் செய்தால், அவர் விஷமமாகப் பேசுகிறார் என்றுதான் பொருளாகும்.
விவாதத்தில் எழும் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டோம். ஆனால், தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மீது ஏன் இவ்வளவு பெரிய தாக்குதல் என்ற கேள்வி முன்னே வந்து நிற்கிறது. சில பெரிய நீதிமான்கள், ஏவுகணை நிபுணர்கள், அவர்களின் நண்பர்கள், சில பார் கவுன்சில் பெரும் புள்ளிகள், இவர்கள் எல்லாம் சேர்ந்து அங்கீகாரம் செய்த ஒரு சங்கம் எல்லோ ருமாக சேர்ந்து கொண்டு, ஆர்எஸ்எஸ் பார்ப்பனீய வழிகாட்டுதலுடன் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்குமோ என்று சாதாரண வழக்கறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். உண்மை ஒரு நாள் அப்பட்டமாய் வெளியே வராமலா போய்விடும்?
உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவையா?
ஒரு புகழ் பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, WE ARE FINAL BECAUSE WE ARE INFALLIABLE  GuTRpX EiûU, WE ARE INFALLIBLE BECAUSE WE ARE FINAL என்பதே உண்மை என்றார். நாங்கள் தவறு செய்யவே முடியாதவர்கள் என்பதால் நாங்கள் இறுதியானவர்கள் அல்ல; நாங்கள் இறுதியானவர்கள் என்பதாலேயே நாங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனச் சட்டம் கருதுகிறது என நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் சொன்னார். அந்த நிதானத்தை முதிர்ச்சியை தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பது குற்றமாகுமா? (முட்டாள்தனம் எனச் சிலர் முணுமுணுப்பதை நாம் பொருட்படுத்த வேண்டாம்). வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சேர்ந்ததுதான் நீதித்துறை. இங்கும் அய்க்கியம் மற்றும் போராட்டத்துக்கு வாய்ப்புண்டு.
சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்தது. உச்சநீதிமன்ற கொலிஜியம் (தலைமை நீதிபதி உள்ளிட்ட குழு) ஒரு மாநில நீதிமன்றத்திற்கு ஒருவரைத் தலைமை நீதிபதியாய் நியமிக்கப் பரிந்துரைத்தது. மத்திய அரசு அந்தப் பரிந்துரையை நிராகரித்தது. சம்பந்தப்பட்ட மாநில நீதிமன்றம் பற்றி நன்கறிந்த தற்போதுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர், கொலீஜியம் பரிந்துரைத்தவரின் நேர்மையைச் சந்தேகித்துள்ளனர் என்பதைத்தான் மத்திய அரசு காரணமாகச் சொல்லி உள்ளது. மத்திய அமைச்சர்கள் திரும்பத் திரும்ப, தங்களது சட்டமியற்றும் அதிகாரத்தில் அரசாளுகை கொள்கை விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகள் தலையிடுகிறார்கள் என்று விமர்சனம் செய்திருக்கிறார்களே. உத்தர்காண்ட் மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையில் அரசாங்க அதிகாரியை அமர வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, நாடாளுமன்ற ஜனநாயக மாண்புகளுக்குப் புறம்பானது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளதே. முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள், முன்னாள் சட்ட அமைச்சர் எனப் பலரும் உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் என நீதித்துறையில் ஊழல் புரையோடி கிடக்கிறது என விமர்சனம் செய்தனரே. அவை எல்லாம் நியாயமான விமர்சன உரிமை (RIGHT TO FAIR CRITICISM). நீதித்துறை ஊழலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சொன்னால், அது மட்டும் குற்றமா? அது நீதித்துறைக்கு, அதன் கவுரவத்திற்கு நல்லதுதானே. இதற்கு ஏன் சிலர் பதற வேண்டும்?
2016 துவக்கத்தில், தமிழக வழக்கறிஞர்கள் மீதான ஒரு சுற்று தாக்குதல்கள் நடந்து முடிந்திருந்தபோது, அப்போது பதவியில் இருந்த (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) நீதிபதிகள் சிவகுமாரும் அரிபரந்தாமனும் மதுரையில், ஆம் புயல் வீசத் துவங்கிய அதே மதுரையில்தான் வழக்கறிஞர்களை சந்தித்தனர். நீதிபதி பி.ஆர்.சிவகுமார் நாடு முழுவதும் 1,200 நீதிபதிகள் இருந்தால் அதில் 18 பேர்தான் தலித்துகள் என்றும் இது மேட்டுக்குடி தீண்டாமை என்றும் குறிப்பிட்டார். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஊழலும் இட ஒதுக்கீடும் சுதந்திர இந்தியாவின் இரு பெரும் தீமைகள் எனப் பேசியது, இடஒதுக்கீட்டை ஊழலுக்கு சமமாகக் காட்டியது, நீதிமன்றங்களின் மன நிலையைக் காட்டுகிறது என்றார். நீதிபதி டி.அரிபரந்தாமன் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் (நஇஞமசஈதஉகந) என்றார்.
நாடு சுதந்திரமடைந்த பிறகு, எத்தனை மாநில உயர்நீதிமன்றங்கள் தலித் தலைமை நீதிபதிகளைக் கண்டுள்ளன? உச்சநீதிமன்றத்தில் இதுவரை ஒரு கைவிரல் விட்டு எண்ணு வதைத் தாண்டி தலித் நீதிபதிகள், பெண் நீதிபதிகள் இருந்துள்ளனரா? இந்தக் கேள்விகளில் தான் பிரச்சனை எழுந்தது. நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும், சமூக அக்கறை கொண்ட நீதிபதிகள் வேண்டும், பெண்கள் தலித்துகள் சிறுபான்மையினர் இதர புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் இருந்து தகுதி வாய்ந்த நீதிபதிகள் வேண்டும் எனத் தமிழக வழக்கறிஞர்கள் போராடினார்கள். (நெளிவு சுளிவு நீக்குப் போக்கு இல்லாத, செயல்தந்திர சாமர்த்தியம் இல்லாத, ஆர்வக் கோளாறான நடவடிக்கைகள் சமூகத்தின் எல்லா பிரிவினர் மத்தியிலும் இருக்கும்போது, வழக்கறிஞர்கள் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?) ஈழத் தமிழர் படுகொலை, மூவர் தூக்கு, சரியான முறையில் நீதிபதிகள் நியமனம், ஊழல் எதிர்ப்பு என எல்லா போராட்டங்களிலும் முன் நிற்பவர்களை ஒழித்துக்கட்ட, இப்போதைய விதிகள் வந்துள்ளன என்றுதான் தோன்றுகிறது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என அமைதியாக பதாகை பிடித்தவர்கள், நீதிமன்ற அவமதிப்பு எதிலும் ஈடுபடவில்லை என்று தலைமை நீதிபதியே அன்று சொன்னார். ஆனால் அவர்கள் சிறை சென்றனர். தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 44 வழக்கறிஞர்கள் 9 மாதங்களாக தற்காலிக நீக்கத்தில் உள்ளனர். பெங்களூருக்கு வாய்தா வாய்தா என அலைக்கழிக்கப்படுகின்றனர். தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர் களுக்கு தற்காலிக நீக்க காலத்தில் பிழைப்பூதியம் உண்டு. தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், மாநிலம் விட்டு மாநிலம் விரட்டப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர். அவர்கள் வருமானம், கவுரவம் அடி வாங்கியுள்ளன.
இந்தப் பின்னணியில்தான், ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் எடுக்க அதிகாரம் உள்ள நீதிமன்றம், பார் கவுன்சில் அதிகாரத்தைத்தானே எடுத்துக் கொண்டு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கைகளுக்கு தயாராகி உள்ளது. உரத்துப் பேசினால், உரிமைக்குப் பேசினால், உயர்நீதிமன்ற நீதிபதியோ, அமர்வு நீதிபதியோ தற்காலிக நீக்கம் செய்து விடலாம். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இடையிலான உறவை வேலை அளிப்பவர், வேலை செய்பவர் உறவாக்கி, அதில் ஒருதலைபட்ச தண்டனைக்கும் வழி செய்யப்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்றம், நீதிபதி சொக்கலிங்கம் நீதிமன்றத்தில், உரத்த குரலில் பேசினார், அசவுகரியம் உண்டாக்கினார் என்று சொல்லி ஏற்கனவே பி.செங்குட்டு அரசன் என்ற வழக்கறிஞர் மீது, தானாகவே முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை துவங்கி உள்ளது. வழக்கறிஞர்கள் மீது அதிருப்தி அடைந்த கட்சிக்காரர்கள் பொய்ப் புகார் கொடுத்தால், முதலில் சஸ்பென்ட், பிறகு மற்ற விசயங்கள் என்று மாண்புமிகு நீதிபதிகள் சொல்ல முடியும். நான் எசமான், நீ அடிமை என வழக்கறிஞரிடம் தமது வானளாவிய அதிகாரத்தைக் காட்ட முடியும். பாதிக்கப்படும் மக்கள் நீதிகோரி நேரடியாக நீதிபதிகளை அணுகுவதில்லை. வழக்கறிஞர்களையே நாடுகிறார்கள். வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் அடிமைகளாக இல்லாமல் நீதிமன்ற அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்றால், மக்கள் நலன், ஜனநாயகத்தின் நலன் கருதி, அவர்கள் அச்சமற்று வழக்காடும் சுதந்திரம் வேண்டும். உயர்நீதிமன்றம், கோடை விடுமுறையின் கடைசிப் பகுதியில் கொண்டு வந்த சர்வாதிகார விதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.
சட்டத்திற்கு இணையான விதிகளை இயற்றும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை எனவும், அதிகாரம் இல்லாமலே பார் கவுன்சில் ஆப் இந்தியாவின் இணைச் செயலாளர் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியுள்ளார் எனவும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் கமிட்டி ஒப்புதல் பெறாமல் நடவடிக்கை எடுத்தது தவறு எனவும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஜுன் 6 அன்று சென்னையில் எழுச்சியுடன் நடந்த பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞரின் பேரணி நியாயமானது. அஞ்சி அஞ்சி அடிமைகளாக இருக்க மறுத்துள்ளனர். நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் உணர்வுகளை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும், அரசும், நீதிமன்றமும், அரசியல் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் புரிந்து கொண்டு, கணக்கில் கொள்ள வேண்டும். உபதேசங்கள் உதவாது.
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்களை அச்சுறுத்தும் மக்கள் விரோத ஜனநாயக விரோத விதிகளைத் திரும்பப் பெற வேண்டும்.
வழக்கறிஞர்களின் ஒற்றுமையும் போராட்டமும் வெல்லட்டும்.
வழக்கறிஞர் போராட்டமும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கமும்
44 வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், ஒடுக்குமுறை பயங்கரம் நிலவியபோது சென்னை மாநகரில் வழக்கறிஞர்களுக்கு நியாயம் கோரி, தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி 25.10.2015 அன்று ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தியது. கூட்டம் போட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பார் கவுன்சில் உருவாக்கிய முற்றுகை நிலை முறியடிக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நியாயமான அணுகுமுறை கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2016 பிப்ரவரி 2, 3, 4, 5 தேதிகளில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தியது.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வளாகத்தில் அம்பேத்கர் பகத்சிங் வழிமரபு போற்றுவோம் என்ற தலைப்பில் 27.04.2016 அன்று அரங்கக் கூட்டம் நடத்தியது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், வழக்கறிஞர்கள் வைகை, குமாரசாமி, விஜயகுமார், வேல்முருகன், பாரதி ஆகியோர் உரையாற்றினர். கூட்டம், போராட்டக்காரர்களைப் பாராட்டியது. தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட 44 வழக்கறிஞர்களுக்கு நீதி கேட்டது.
தற்போதைய சட்ட விதிகளுக்கெதிரான ஒன்றுபட்ட போராட்டம் உருவாக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் அரும்பாடு படுகிறது. அதன் அமைப்பாளர் தோழர் பாரதி ராஜ் செய்திகள் தொலைக்காட்சியில், போராட்டம் தொடர்பான மக்கள் சார்பு நிலைப்பாட்டை முன்வைத்தார்.
ஜுன் 6 அன்று சென்னையில் நடந்த பேரணியில் இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் எஸ்.குமாரசாமி, மத்தியக்குழு உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் சேகர், ஆசைத்தம்பி, கே.கோவிந்தராஜ், ரமேஷ், மாநகரக் குழு உறுப்பினர் தோழர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இடதுசாரி கட்சி தொண்டர்கள், அலுவலகங்கள் மீது 
திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இடதுசாரி கட்சித் தொண்டர்கள், அலுவலகங்கள் மீது திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. 04.06.2016 அன்று சென்னையில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார், இகக(மா) மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இகக மாலெ, ஏஅய்சிசிடியு தோழர்கள் என 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தோழர் எ.எஸ்.குமார் பேசியபோது திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்கள் இடதுசாரி கட்சி தொண்டர்களையும் அலுவலகங்களையும் தாக்குவதை வன்மையாகக் கண்டித்தார். மேற்குவங்கத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்துவதில் காங்கிரஸ் கட்சிதான் முன்னோடி என்றார். 1971ல் சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் கட்சி மேற்குவங்க இடதுசாரிகள் மீது ஏவிவிட்ட படுகொலை தாக்குதல்களை நினைவு கூர்ந்த அவர், பீகாரிலும் வலதுசாரி சாதி ஆதிக்க சக்திகள் ஆதரவு பெற்ற தனியார் படையினர் பதானிதோலாவில் லெஷ்மண்பூர் பாதேயில், ஆர்வாலில் தலித் உழைக்கும் மக்களை படுகொலை செய்தனர் என்றும் அதிலிருந்து மீண்டு இகக(மாலெ) தொடர் இயக்கங்கள் நடத்திய பின்னணியில் இடதுசாரிகளின் ஒற்றுமை சாத்தியமானது என்றும் கூறினார். பீகார் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் ஒன்றாக தேர்தல் களம் கண்டனர் என்ற அவர் வருங்காலங்களில் திரிணாமூல் போன்ற கட்சிகளின் வலதுசாரி தாக்குதலுக்கு எதிராக இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இகக(மா) தலைவர்களோடு இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ரமேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கணேசன், சுந்தர்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். பெண்கள், குழந்தைகள் மீது கூட திரிணாமூல் கட்சி குண்டர்கள் தாக்குதல் நடத்துவதையும் இடதுசாரி கட்சி அலுவலகங்கள் சூறையாடப்படுவதையும் கண்டித்து மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இகக(மா) மாநிலச் செயலாளர் தோழர். ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். இகக(மாலெ) மதுரை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மதிவாணன் கலந்துகொண்டார்.
தோழர் கோபிநாத்துக்கு செவ்வஞ்சலி
சென்னை சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து தனது புரட்சிகர பணியைத் துவக்கியவர் தோழர் எல்.கோபிநாத். அவர் 1982 – 1984 காலகட்டத்தில் இந்திய மக்கள் முன்னணியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராக செயல்பட்டார். முன்னதாக தமிழ்நாட்டில் தமிழக மக்கள் முன்னணியின் சென்னை மாநாட்டை வெற்றிகரமாக நடத்த சீரிய பணியாற்றியதோடு அன்று எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திலும் பங்கெடுத்தார். தமிழகத்தில் ஜனநாயக மாணவர் முன்னணி, தமிழக இளைஞர் இயக்கம் வேரூன்ற பாடுபட்டவர்களில் முக்கியமானவர்.
இகக(மாலெ) உறுப்பினராக இருந்த அவர் தாழ்த்தப்பட்டோர் உரிமை சங்கத்தின் சட்ட ஆலோசகராக செயல்பட்டார். அவர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியபோது திருச்சி வழக்கறிஞர் சங்கக் கூட்டத்தில் நக்சல்பாரி புரட்சியாளராகவும் வழக்கறிஞராகவும் இந்திய மக்கள் முன்னணியின் அகில இந்திய தலைவராகவும் இருந்த தோழர் நாகபூசன் பட்நாயக் உரையாற்ற வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொண்டவர்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவராக இருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தார்குண்டே தாக்கப்பட்டபோது அதைக் கண்டித்து திருச்சியில் நிகழ்ச்சிகளை கட்டமைத்தார். கட்சி தலைமறைவு இயக்கமாக இருந்தபோது கட்சித் தோழர்கள் சந்தித்த வழக்குகளை துணிச்சலுடன் எடுத்து நீதிமன்றங்களில் வழக்காடினார். இகக(மாலெ)வின் கிராமப்புறப் போராட்ட பகுதிகளாக இருந்த மணலூர், பண்ருட்டி பகுதி தோழர்களின் வழக்குகளை நடத்திய தோழர் கோபிநாத் வாழ்நாள் முழுக்க இகக(மாலெ) விடுதலையுடன் பிணைப்பை தொடர்ந்து கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்ட அவர் 02.06.2016 அன்று, தனது 64ஆவது வயதில் காலமானார். அவரது துணிச்சல்மிக்க போராட்ட மரபை இகக(மாலெ) என்றென்றும் நினைவில் கொள்ளும்.

Search