COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, March 14, 2018

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் 
மோடி - எடப்பாடி அரசுகள்

ஜி.ரமேஷ்

பிப்ரவரி 3 அன்று, தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பட்டியலின, பழங்குடி மாணவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள்.
2017 டிசம்பரில் சென்னை செய்தியாளர் மன்றத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சிலர் பேட்டியளித்தார்கள். இந்த மாணவர்களின் கோரிக்கை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஏழை, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கானது. இந்த ஆண்டு தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுத முடியாத நிலையை எடப்பாடி பழனிச்சாமி அரசு ஏற்படுத்தியுள்ளது.
2012ல் ஜெயலலிதா இருந்தபோது தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில்  பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் அரசு வழங்கும் என அறிவித்து அரசாணை (ஆணை எண்: 92) வெளியிடப்பட்டது. தொடர்ந்து பல எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தனியார் கல்லூரிகளில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலானார்கள். படிப்பதற்கு பணம் கட்ட முடியாமல்தான் பல மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்துகிறார்கள், அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்று அப்போது சொல்லப்பட்டது. அது உண்மையும்கூட. அப்படி அரசின் பண உதவியை நம்பி பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் தலையில்தான் இப்போது இடி விழுந்திருக்கிறது.
ஆகஸ்டு 11, 2017 அன்று அரசாணை எண் 92அய் திருத்தம் செய்து இரண்டு அரசாணைகளை (51 மற்றும் 52) தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.85,000அய் ரூ.50,000 எனக் குறைத்துள்ளது பழனிச்சாமி தலைமையிலான மோடியின் எடுபிடி அரசு. மேல்நிலைப் பள்ளி முடித்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்லூரிப் படிப்புகளுக்கு தனியார் சுய நிதி கல்லூரிகளில் சேரும் பட்டியலின, பழங்குடி மாணவர்கள் அனைவருக்கும் இனி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை அளவுதான் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் தங்கள் கையில் இருந்து ரூ.35,000 கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீதிப் பணம் ரூ.35,000 கட்டப்படவில்லை என்றால் இவ்வாண்டு பருவத் தேர்வை எழுத அனுமதிக்க முடியாது என்று கல்விச் சேவை(!) புரிந்து வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் கூறிவிட்டனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் கல்விக் கட்டணம் கட்ட வழி தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 90% பேர் “அவ்வளவு பணம் கட்டுவதற்கு எங்கள் குடும்பத்தில் வருமானம் இல்லை. அரசின் கல்வி உதவித் தொகையை நம்பித்தான் தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர்ந்தோம். நாங்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று குமுறுகிறார்கள். திருநெல்வேலியைச் சேர்ந்த பிந்துஜா என்கிற மாணவி  கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கிறார். “அத்தியாவசியச் செல வுகளுக்கே அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் அம்மா அப்பாவை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும்போது, கல்விக் கட்டணத்திற்கும் பணம் தேவை என்று நான் எப்படி கேட்க முடியும்? நான் இதைச் சொன்னபோது என் அம்மா நொறுங்கிப் போய்விட்டார். நான் படிப்பில் சேர்ந்த பின்புதான் இந்த அறிவிப்பை அரசாங்கம் செய்கிறது. இதை முதலிலேயே சொல்லி யிருந்தால் நான் பொறியியல் படிப்பில் சேர்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டேன்” என்றார். அவர் +2வில் எடுத்த மதிப்பெண்கள் 1029 என்றும் விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர் கே.பாபு, எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல. எங்கள் கிராமத்திலேயே நான்தான் முதலாவதாக பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளேன். இது முதலிலேயே தெரிந்து இருந்தால் நான் சென்னைக்கு படிக்க வந்திருக்க மாட்டேன். நான் என் படிப்பை முழுவதுமாக முடிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இல்லை என்றார் என்றும் இந்த கல்வி உதவித் தொகையை நம்பிதான் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன் என்று காஞ்சிபுரத்தின் ஆர்.சிவரஞ்சனி என்கிற முதலாண்டு மாணவர் கூறினார் என்றும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவிக்கிறது.
கிராமங்களில் இருந்து வந்து சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் விடுதிகளில்தான் தங்கிப் படிக்கிறார்கள். அவர்களில் பலர் விடுதிக் கட்டணம் மற்றும் அன்றாடச் செலவுகளுக்கே அல்லாடுகிறார்கள். அரசாங்கம் கல்விக் கட்டணத்தை முழுமையாகத் தந்தாலும் தனியார் பொறியல் கல்லூரிகளில் பல்வேறு வகைகளில் மாணவர்களிடம் வசூல் வேட்டைகள் நடத்தப்படுகின்றன. நூலகம், பரிசோதனை கூடம், பரிசோதனைப் பயிற்சி என்று வாங்குவது மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் வேலைக்கமர்த்திக் கொள்ள நடக்கும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தனிப்பயிற்சிக் கட்டணம் என பல பத்தாயிரங்கள் மாணவர்கள் செலுத்த நேர்கிறது. இந்தச் சூழ்நிலையில், இன்னும் 35,000 ரூபாய் கட்ட வேண்டும் என்றால் அந்த மாணவர்கள் எங்கு செல்வார்கள்?
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்விக் கட்டணம் ரூ.12,50,000ல் இருந்து ரூ.4,00,000மாக குறைக்கப்பட்டுவிட்டது. அந்த மாணவர்கள் இனி தங்கள் கையில் இருந்து ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்றால் அவர்கள் எங்கே போவார்கள்? நிச்சயமாக படிப்பை  அப்படியே விட்டு விட்டு அத்த கூலி வேலைக்குச் செல்வார்கள். அல்லது தற்கொலை செய்து கொள்வார்கள். படித்து முடித்த பிறகு சரியான போதுமான வருமானமுள்ள வேலை கிடைக்காமல் பலர் வங்கிக ளில் வாங்கிய கல்விக் கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார்கள். அந்தக் கடனை வசூல் செய்ய அம்பானியின் அடியாட்கள் வீடு தேடி வந்து மிரட்டுகிறார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கினால், காலத்திற்கும் அவர்களின் அடிமைகளாக வாழ வேண்டும். அல்லது சாக வேண்டும்.
தமிழ்நாட்டில் 2014 - 2015ல் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் மட்டும் +2 படித்தவர்கள் எண்ணிக்கை 48,732. அதே ஆண்டில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில்  +2 படித்தவர்கள் எண்ணிக்கை 7,835. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் நிச்சயமாகக் கூடியிருக்கும். இதுபோக மற்ற பள்ளிகளில் பயின்று வெளி வந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் பல லட்சம் பட்டியலின பழங்குடி மாணவர்கள் மேல் நிலை பள்ளிப் படிப்பை முடிக்கிறார்கள். அவர்களில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் போக, சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்களுக்கு மட்டும் 2016-17ல் வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை மொத்தம் ரூ.1,279 கோடி. அந்தத் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட தொகை இன்னும் வழங்கப்படவேயில்லை. இந்த நிலையில்தான், தற்போது தமிழ்நாடு அரசு தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை குறைத்துள்ளது. அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொண்டே ஜெயலலிதா இருக்கும் போது பெயரளவிற்காவது அமலில் இருந்த திட்டங்களை, மோடியின் அடியொற்றி இபிஎஸ் - ஒபிஎஸ் வகையறாக்கள் அடியோடு ஒழித்து வருகிறார்கள்.
நீட் தேர்வின் மூலம் தமிழகத்தின் ஏழை கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கனவை அனிதாவோடு சேர்த்து அணைத்துவிட்ட பாஜகவின் பினாமி அரசு, பொறியியல் படிப்பையும் அரசாணை 51, 52 மூலம் இப்போது பறித்துள்ளது. 22.06.2017 அன்று  நீதிபதி பாலசுப்பிரமணியம் குழு, தொழில் கல்விக்கான கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. 2016 வரை அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணம் ரூ.45,000 என்றிருந்தது. 2017ல் ரூ.55,000. தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு ரூ.70,000 என்றிருந்தது. இப்போது ரூ.87,000. உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு ஏற்ப உதவித் தொகையை உயர்த்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே தரப்பட்டு வந்த உதவித் தொகையையும் குறைத்துள்ளதால் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் மேலும் கூடுதலாக தங்கள் கையில் இருந்து பணம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது மோடி அரசின் கொள்கை அமலாக்கத்தின் ஒரு பகுதியாகவே தெரிகிறது. பிப்ரவரி 22 அன்று அய்தராபாத்தில் உள்ள டாடா இன்ஸ்டிடியுட் ஆப் சோசியல் சயன்ஸ் (பஐநந) மாணவர்கள், பட்டியலின பழங்குடியின மாணவர்களுக்கான மத்திய அரசின் பள்ளிப் படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவித் தொகை (எர்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ர்ச் ஐய்க்ண்ஹ டர்ள்ற் ஙஹற்ழ்ண்ஸ்ரீ நஸ்ரீட்ர்ப்ஹழ்ள்ட்ண்ல்) 2018 - 2019 கல்வி ஆண்டில் இருந்து கிடையாது என்று அறிவித்துள்ளதைக் கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் மும்பையிலும் துல்ஜாபூரிலும் கவுகாத்தியிலும் கூட நடந்தது. “கல்வி உதவித் தொகை இருந்த போது ஒரு பருவ காலத்திற்கு (ல்ங்ழ் ள்ங்ம்ங்ள்ற்ங்ழ்) நாங்கள் ரூ.4,500 மட்டும் கட்டினால் போதும். இப்போது எங்களை டிஅய்எஸ்எஸ் நிர்வாகம் ஒரு பருவ காலத்திற்கு ரூ.80,000 கட்டச் சொல் கிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு எங்களை வஞ்சிக்கிறது. இன்னும் பல ரோஹித் வெமுலாக்களை உருவாக்க நினைக்கிறது. எங்கள் குடும்ப வருமானம் ஓர் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் கூட இல்லாத நிலையில் நாங்கள் எப்படி ஒரு பருவ காலத்திற்கு ரூ.80,000 கட்ட முடியும்? இனி விடுதி மற்றும் உணவுக்கான கட்டணத்தையும் நாங்கள் கட்ட வேண்டி வரும்” என்று அந்த மாணவர்கள் குமுறுகிறார்கள். டிஅய்எஸ்எஸ் நிர்வாகம், எங்கள் பல்கலைக் கழகம் பண நெருக்கடியில் உள்ளதால் கல்வி உதவித் தொகை தர முடியாத நிலையில் உள்ளோம் என்கிறது. கல்வி உதவித் தொகை மத்திய அரசு தருகிறதா? பல்கலைக் கழகம் தருகிறதா? ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் டில்லி பல்கலைக் கழகத்திலும் இந்தப் பிரச்சனை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்எஸ்எஸ்ஸின் மோகன் பகவத், இட ஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். எதிர்ப்புகள் கிளம்பியவுடன், பாஜக தலைவர் அமித் ஷா, நாங்கள் இந்த இடஒதுக்கீடு முறையில் நம்பிக்கை வைத்துள்ளோம், அதை மாற்றுவதற்கான எந்தத் தேவையும் இல்லை என்றார். ஆனால், பாசிச பார்ப்பனிய பாஜக அரசு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறு பான்மையினருக்கு தரப்பட்டு வரும் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை ஆகியவற்றை வெளிப்படையாக ஒரேயடியாக அறிவிக்காமல் திட்டமிட்டு படிப்படியாக காலி செய்து வருகிறது.
ஒரு பக்கம் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான  கல்வி உதவித் தொகையை, நீட் தேர்வு போன்றவற்றின் மூலம் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டிக் கொண்டே மறுபக்கம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய ஆரம்பித்துவிட்டது மத்திய பாஜக அரசு. நடப்பாண்டில், முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில்   இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைக் கைவிட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள மொத்த முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 16,000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் 8,000 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 27% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யாமல் 2,160 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய இடத்தை கொடுக்க மறுத்துள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 700 இடங்கள் இருந்தபோதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓர் இடம் கூட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
11.08.2017 அன்று அரசாணைகள் 51, 52 மூலம் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித் தொகையைப் பறித்து அவர்களது கல்லூரிப் படிப்புகளை கானல் நீராக்கிய தமிழக அரசு, சரியாக இரண்டு மாதம் கழித்து 11.10.2017 அன்று அரசாணை (ப) எண்: 225அய் வெளியிட்டது. அதில், அரசு பள்ளிகள், ஆதி திராவிட நலப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக மேல்நிலைக் கல்வி பெற இயலாமல் போகிறது, எனவே, இந்த இனம் சார்ந்த மாணவர்களை தொழிற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இந்தப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களை (குறைந்தபட்சம் 3 மாணவிகள் உட்பட) மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மிகச் சிறந்த தனியார் பள்ளிகளில் (கவனிக்க தனியார் பள்ளிகளில்) அந்தந்த மாணவர்களின் விருப்பப்படி சேர்த்து மேல்நிலைக் கல்வி பயில செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தில் மொத்தம் 293 மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.28,000 வீதம் 2 ஆண்டிற்கு ரூ.1,64,08,000 அளிக்க ஒப்பளிப்பு செய்யப்படுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.
2014 - 2015ல் மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் எண்ணிக்கை 2,51,001. இது தற்போது 3 லட்சத்தைத் தாண்டியிருக்கும். சுமார் 3 லட்சம் மாணவர்களில் வெறும் 293 பேரை மட்டும் தேர்வு செய்து அவர்களை தனியார் பள்ளியில் படிக்க வைப்பார்களாம். மற்ற மாணவர்கள் படிக்க வேண்டாமா? ஏன் தனியார் பள்ளியில்? அரசு பள்ளிகள் சரியில்லை என்று அரசே சொல்கிறது என்றால் அரசாங்கம் எதற்கு? சமீபத்தில் மதுரையில் உள்ள ஒரு ஆதிதிராவிட நலப்பள்ளியில் படித்த இரண்டு மாணவர்களில் ஒரு மாணவரின் தந்தை இறந்துவிட்டார். மற்றொரு மாணவருக்கு குடும்பத்தில் பிரச்சினை. இதனால் அவர்க ளால் செய்முறை பரிசோதனைத் தேர்வில் கலந்து கொள்ள இயலவில்லை. அவர்களுக்காக தேர்வு மீண்டும் நடத்தப்பட முடியாது என்பதால் அவர்கள் எழுத்துத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற வாய்ப்பில்லை என்பதால் எழுத்துத் தேர்வு எழுத வேண்டாம் என்று பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இந்த இரண்டு மாணவர்கள் கண்டிப்பாக தோற்றுப் போவார்கள், அதனால், பள்ளிக்கு நூற்றுக்கு நூறு தேர்ச்சி கிடைக்காமல் போய்விடும் என்று கூறியுள்ளார்கள். வறுமையில் வாடும் ஏழை ஆதிதிராவிட மாணவர்களுக்காகத்தான் இந்தப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அந்தப் பள்ளிகளிலேயே இப்போது மாணவர்களை இப்படிக் கழிக்கும் நிலை உருவாகிறதென்றால், அரசின் நோக்கம் என்ன? அதன் கடமை என்ன?
பழங்குடியின மக்களின் வறுமையைப் பயன்படுத்தி பொய் சொல்லி வேலைக்கு அழைத்துச் சென்று ஆந்திராவில் அடித்துக் கொல்கிறார்கள்.அல்லது சிறையில் தள்ளுகிறார்கள்.அந்த மக்களின் குழந்தைகள் படித்து பட்டம் பெற்றால் எதிர்காலத்தில் இந்த நிலை ஏற்படாது.ஆனால், ஆட்சியாளர்கள் திட்டமிட்டு, பெத்தவன் செத்தபின் தங்களுக்கு மரம் வெட்ட மகன் வேண்டும் என்கிற ரீதியில்தான் அந்த மக்களின் குழந்தைகள் படிக்கும் உரிமையை பறித்துக் கொண்டிருக்கின்றனர். குலக்கல்வியை ஆணையில் வைக்கத் துடிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

Search