COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, March 14, 2018

விவசாயத் தொழிலாளர்களுக்கு 
வேலை வாய்ப்பில்லாதபோது 
அறுவடை எந்திரங்கள் வேண்டாம்

நாகை மாவட்டம் திருவாரி ஊராட்சி மேல்பாதி கிராமத்தில், அறுவடையில் எந்திரங்கள் புகுத்தப்பட்ட நாளிலிருந்து இந்த ஆண்டு வரை அங்குள்ள விவசாயத் தொழிலாளர்கள் அறுவடையில் எந்திரங்களை அனுமதிக்காமல் விடாப்பிடியான எதிர்ப்பை தெரிவித்ததால் எந்திரங்கள் அனுமதிக்கப்படவில்லை.

2018ல் நில உடமையாளர்கள் எந்திரம் மூலம் அறுவடை செய்ய ஆயத்தமான போது விவசாய தொழிலாளர்களின் எதிர்ப்பால் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அவிகிதொச சார்பாக தோழர் என்.குணசேகரன் கலந்து கொண்டார். சமாதான கூட்டத்தில் ஆட்களுக்கு முன்னுரிமை கொடுப்பது எனவும், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் நிலவுடைமையாளர்களும் தொழிலாளர்களும் கலந்து பேசி எந்திரம் வைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆட்கள் பற்றாக்குறை ஏற்படாத அளவிற்கு தொழிலாளர்கள் அறுவடை செய்து முடித்தார்கள். கடந்த ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. இந்த ஆண்டு ஆதிக்க மனோபாவம் கொண்ட சில நிலவுடமையாளர்கள் எந்திரங்கள் மூலம்தான் அறுவடை செய்வோம் என்று எந்திரங்களை கொண்டுவந்தார்கள். தொழிலாளர்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பால் எந்திரங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. பெரும்பாலான நிலவுடமையாளர்கள் ஆட்கள் மூலம் அறுவடையை தொடங்கி, அறுவடை நடந்து கொண்டிருந்த வேளையில்  நிலவுடமையாளர்கள் 7 பேர், எந்திரம் மூலம்தான் அறுவடை என்று உறுதியாக இருந்தனர். இந்தப் பிரச்சனையில் முதலில் வட்டாட்சியர், பிறகு கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் போனது.
இந்த நிலையில் நிலவுடமையாளர்கள் நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்து, அறுவடைக்கு தேவையான அளவில் கிராமத்தில் ஆட்கள் இல்லை, எல்லோரும் வேலை தேடி வெளிமாநிலம், நகரங்களுக்கு சென்றுவிட்டார்கள், உள்நோக்கம் கொண்ட சிலர் எங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்த எந்திரங்களைத் தடுக்கிறார்கள், எனவே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், வாட்டாட்சியர் ஆகியோர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்கள். நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. எந்திரங்களை அனுமதிக்கப் போவதில்லை என்று விவசாயத் தொழிலாளர்கள் முடிவு செய்ததை அறிந்த கோட்டாட்சியரும், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரும் மீண்டும் ஒரு சமாதான கூட்டத்தை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் கூட்டத்துக்கு வர மறுத்த நிலவுடமையாளர்கள், நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வலியுறுத்தினர். காவல்துறையினர் உதவியுடன் எந்திரங்கள் மூலம் ஒரே நாளில் அறுவடையை முடித்தனர்.
ஆனபோதும் அந்த கிராமத்தின் 95% நிலங்களை தொழிலாளர்களே அறுவடை செய்தனர். அந்த கிராமத்து நிலங்களை அறுவடை செய்ய போதுமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நிலங்கள் 15 ஏக்கருக்குள் மட்டுமே. வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மதிக்காமல் மிகச்சிலர் மட்டும் எந்திரம் மூலம் அறுவடை செய்ததை எதிர்த்து, காவல்துறை தடையை மீறி 200க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மார்ச் 5 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். பிரச்சனையை சட்டபூர்வமாகவும் எதிர்கொள்ள அவிகிதொச நடவடிக்கை எடுத்து வருகிறது. தோழர்கள் என்.குணசேகரன் (அவிகிதொச), பாரதி (புஇக), இளங்கோவன் (இககமாலெ) ஆகியோர் போராட்டத்தை கட்டமைத்தனர்.
ஆலைத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களில் தலையிட்டு போராட்டங்களுக்கு எதிராக தீர்ப்புகள் அளித்து வரும் நீதிமன்றங்கள், விவசாய நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாய சமூகத்தின் ஒரு பிரிவு, குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உத்தரவாதப்படுத்திக் கொள்ள போராடும்போது அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கலாமா?
கிராமப்புற வறிய மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய இந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டம் அதன் மீறலில்தான் அமல்படுத்தப்படுகிறது. எந்த நீதிமன்றமும் அதற்காக எந்த மாநில அரசாங்கத்தையும் தண்டித்ததில்லை. மத்திய அரசாங்கத்தை கண்டித்ததும் இல்லை.
மகாராஷ்டிராவில் நடந்த விவசாயிகள் பேரணியில் நிலமற்ற வறிய மக்களும் கலந்து கொண்டார்கள். விவசாயம் நடந்தால்தான் எங்களுக்கு வேலை கிடைக்கும், வேலை கிடைத்தால் தான் எங்களால் பிழைக்க முடியும் என்றார்கள். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியின் அடையாளம், எனவே அதை நாங்கள் ரத்து செய்ய மாட்டோம் என்றார் மோடி. அதாவது நாட்டு மக்கள் இந்த வேலையை நம்பியிருக்கும் அளவுக்கு காங்கிரஸ் நாட்டை கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டது என்பது அவரது குற்றச்சாட்டு. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாக அந்த வேலையைக் கூட சரியாக தர முடியாத, வேலை உறுதித் திட்டத்தை கூட முழுமையாக அமலாக்க முடியாத அரசாங்கமாகவே மோடி அரசாங்கம் உள்ளது.
நாடு முழுவதும் திட்டத்தில் உள்ள கிராமப்புறத் தொழிலாளர்கள் 24.74 கோடிதான். இதிலும் செயலில் இருப்பவர்கள் 11.33 கோடி. 12.03.2018 வரை இந்த ஆண்டில் 213.93 வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியானால் திட்டத்தில் இந்த ஆண்டில் ஒருவருக்கு 20 நாட்களுக்கும் குறைவான நாட்களே வேலை கிடைத்துள்ளது. 22 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் வேலை பெற்றுள்ளன. சென்ற ஆண்டு இது 40 லட்சமாக இருந்தது. அதற்கும் முந்தைய ஆண்டு 48 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் 20 நாட்கள் கூட இல்லாதபோது, கடந்த ஆண்டு இருந்த நிலையையாவது எட்டுவது கூட சிரமம். இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 88% மட்டும் செலவிடப்பட்டுள்ளது. கூலியாக ரூ.37,276.89 கோடி தரப்பட்டுள்ளது. இன்னும் ரூ.1,332.21 கோடி கூலி பாக்கி உள்ளது. உழைத்த பின் வரும் பணத்தில்தான் உண்ண முடியும் என்ற நிலையில் உள்ள மக்களிடம் இருந்து கூலியை பறிப்பது என்ன நீதி? இதற்கு எந்த நீதிமன்றம் என்ன தண்டனை தரும்?
மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, அரசின் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது உரையில்  100 நாள் வேலைத் திட்டத்துக்கு இடமில்லை. தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு 40 கோடி நாட் கள் வேலை தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடியும்போது 23 கோடியை எட்டவில்லை. கூலி பாக்கி பிரச்சனை இங்கும் உண்டு. சட்டத்தில் இருப்பதும் கிடைக்காது, போராட்டங்கள் மூலம் கிடைத்தவற்றை தீர்ப்புகள் அடித்துக் கொண்டுபோய் விடும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நவதாராளவாத நீதிமன்றங்கள் குறை வைக்காது.... இந்த நிலைமைகள் இனியும் தொடர அனுமதிக்கலாமா? தோல்வி வெற்றி தோல்வி தோல்வி இறுதியில் வெற்றி... 

Search