COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 28, 2018

பெண் தொழிலாளர் இயக்கம் பற்றி அலெக்சான்ட்ரா கொலன்டை

....பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்ககால இங்கிலாந்து, பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்க இயக்கத்தின் தொட்டிலாக இருந்தது என்றால்
(1824லேயே லங்காஷயரின் பெண் நெசவாளர்கள், நெசவாளர்கள் சங்கத்தில் இணைந்தனர்), எழுபதுகளில் பேட்டர்சனின் முன்முயற்சியால், பெண் தொழிலாளர் உழைப்பு பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பில் பெண் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்க ஒரு முதல் முயற்சி நடந்தது என்றால்.... மீறப்படுகிற தங்களது பொருளாதார நலன்களைப் பாதுகாக்க முதன் முதலில் முயற்சி செய்தவர்கள் இங்கிலாந்து பெண் தொழிலாளர்கள் என்றால், ஜெர்மானிய சமூக ஜனநாயகம்தான் பெண் தொழிலாளர்களின் கட்சி அரசியல் இயக்கத்தை தனது கருவிலேயே கொண்டிருந்தது....
....பெண் தொழிலாளர் மத்தியில் கட்சி வேலை செய்வதற்கான மிகவும் தீர்மானகரமான வழி 1896 கோதா காங்கிரசில் எடுக்கப்பட்டது..... கிளாரா ஜெட்கின் முன்வைத்த தீர்மானத்தில், பெண்கள் போராட்டங்கள், கட்சியின் பொதுவான இலக்குகளுக்கு அப்பால் முழுக்க முழுக்க பெண்கள் பிரச்சனைகள் என்று இருப்பவை மீதும் கவனம் செலுத்த வேண்டும்: பணியிடத்தில் பாதுகாப்பு, மகப்பேறுக்கு காப்பீடு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி, பெண்களின் அரசியல் கல்வி, பெண்களுக்கு அரசியல் சமத்துவம், இன்னும் பல.... என்கிறார்.பெண்களுக்கு என குறிப்பாக, இலக்கியம், பிரசுரங்கள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடுகிறார். பெண் தொழிலாளர்கள் இயக்கம், அது சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றோடு கட்சி உறவாடுவதை வடிவமைத்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்துடன், ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்தும் இன்னும் மூன்று தீர்மானங்கள் அதே காங்கிரசில் நிறைவேற்றப்பட்டன. பெண் தொழிலாளர்களை அமைப்பாக்கும் விசயத்தில் இந்தத் தீர்மானங்கள் கட்சியின் புதிய வழியை வரையறுத்தன என்பதில் அய்யமில்லை....
....பெர்லின் குழு முன்வைத்த தீர்மானம், கட்சியில் பெண்கள் வெளிப்படையாக இணைவதற்கு சட்டத்தில் இடமில்லாததால், பெண்களை தொழிற்சங்கங்கள் நோக்கி ஈர்க்க, பெண்கள் மத்தியிலான கிளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றது. இரண்டாவது தீர்மானம் அமைப்பு பற்றியது: பெண்களின் வர்க்க உணர்வை உயர்த்தி அவர்களை கட்சிக்குள் கொண்டு வர பெண்கள் மத்தியில் திட்டமிட்ட போராட்டப் பணிகளுக்கு பொறுப்பாக ‘ரகசிய பெண் முகவர்கள்’ என்ற பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியது. மூன்றாவது தீர்மானம், ரகசிய பெண் முகவர்களைத் தேர்ந்தெடுக்க உடனடியாக பெண்கள் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றது....
....முதல் பெண்கள் மாநாடு நடந்து மூன்றாண்டுகள் முடிந்துள்ளது. இப்போது இயக்கத்தில் செயலூக்கமாக பங்கேற்கும் பெண் தொழிலாளர் படையில் மிகப்பெரிய வளர்ச்சி காணப்படுகிறது. இங்கிலாந்தில் சங்கங்களில் அமைப்பாகியிருக்கும் பெண் தொழிலாளர் எண்ணிக்கை ஏற்கனவே 2,00,000அய் தாண்டிவிட்டது. ஜெர்மனியில் சங்கங்களில் 1,31,000 பெண்களும் கட்சியில் 82,645 பெண்களும் உள்ளனர். ஆஸ்திரியாவில் கட்சியில் 7,000 பெண்கள் உள்ளனர். மற்ற நாடுகளிலும் இயக்கத்தில் கணிசமான முன்னேற்றம் காணப்படுகிறது....
....இறுதி ஆராய்ச்சியில் தொழிலாளர்களின் பொதுவான வர்க்க இயக்கம், பெண் தொழிலாளர்களுக்கான தனியான போராட்டங்களால் ஆதாயமே பெறுகிறது; ஏனென்றால் பெண்களின் நலன்கள், தேவைகள் மீதான கூடுதல் அக்கறை, பெண் தொழிலாளர் மத்தியில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்து, பொதுவான கட்சி அமைப்பில் இணைவதில் பெண்களை ஊக்குவிக்கிறது....
(தங்கள் உரிமைகளுக்கான பெண் தொழிலாளர்கள் போராட்டங்கள் என்ற கட்டுரையில் இருந்து, 1919)

Search