COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 28, 2018

தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் உயிரிழப்பது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்

பழனிச்சாமி முதலமைச்சராகி ஓராண்டு ஆகிவிட்டதை அவர் கொண்டாடுகிறபோது, தமிழ்நாட்டு மக்கள் பழனிச்சாமி அரசே பதவி விலகு என்று குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் காலத்தின் ஓராண்டும் நிறைவுறுகிறது.
இந்த ஓராண்டு காலமும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதுவரை இருந்ததில் மிகவும் இருண்ட காலம். இது அப்பட்டமான கொலைகார ஆட்சி.
தமிழ்நாட்டின் சாமான்ய மக்கள் பல்வேறு காரணங்களாலும் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு உள்ளேயும் கொல்லப்படுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியேயும் கொல்லப்படுகிறார்கள்.இன்றல்ல. மக்கள் பிரச்சனைகள் பற்றி சற்றும் அக்கறையற்ற இந்த படுமோசமான குற்றமய அலட்சிய ஆட்சி, சொத்து சேர்ப்பது மட்டுமே நோக்கம் என்பதை வெட்கமில்லாமல் வெளிப்படையாக செய்யத் துவங்கிவிட்ட காலம் முழுவதும் தமிழர்கள் உயிரிழக்கிறார்கள். தற்கொலை செய்துகொள்கிறார்கள். சாதி பெயரால் படுகொலை செய்யப்படுகிறார்கள். காரணம் கூட சொல்லப்படாமல் கொல்லப்படு கிறார்கள். தொடர்கிறது; பட்டியல் நீள்கிறது....
ஆந்திர சிறைகளில் 2015ல் இருந்து 10,558 தமிழர்கள் அடைபட்டு கிடப்பதாக செய்திகள் வெளியாகின்றன. ஒரு முதலமைச்சர், தனது மாநிலத்து மக்கள் ஆயிரக்கணக்கில் பக்கத்து மாநிலச் சிறைகளில் அடைபட்டிருப்பது தமது ஆட்சியின் அவலம் என்று கருதுவதாகத் தெரியவில்லை. அம்மா வழியில் ஆட்சி என்கிறார். அம்மா ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்தே ஆந்திர சிறைகளில் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். 2014ல் சேஷாசலம் பகுதியில் தமிழர் கள் மூன்று பேர் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கேரளத்துக்கு வேலைக்குச் செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு புறப்பட்ட அவர்கள் ஆந்திர வனத்தில் பிணமாகக் கிடந்தார்கள். அப்போதே, அது தொடர்பாக பொருளுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திருந்தால், 2015 ஏப்ரலில் தமிழர்கள் 20 பேர் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை தவிர்த்திருக்கக் கூடும்.
அம்மா வழியில் ஆட்சி என்பவர்கள், 2014ல் ஜெயலலிதா குற்றமய அலட்சியம் காட்டியதுபோல், ஜெயலலிதா சிறைக்குப் போனதால், 2015ல் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் குற்றமய அலட்சியம் காட்டினார்கள். இப்போது 2018 பிப்ரவரியில், மைசூரில் மிளகுத் தோட்டத்தில் வேலை என்று சொல்லிவிட்டுச் சென்ற சேலத்தைச் சேர்ந்த தமிழர்கள் 5 பேர் பிணங்கள் ஆந்திர மாநில ஏரியில் மிதக்கின்றன. இப்போதும் குற்றமய அலட்சியமே பழனிச்சாமி அரசின் பதில்வினையாக இருக்கிறது. 2015ல் ஆந்திர முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்,  5 பேர் பிணங்கள் ஏரியில் மிதப்பது தொடர்பாக ஆந்திர அரசுடன் பேசியதாகத் தெரியவில்லை. பழனிச்சாமி, எந்த சட்டமன்ற உறுப்பினர், எப்போது தினகரன் அணிக்கு தாவுவார் என்ற பதட்டத்திலேயே இருக்கிறாரே தவிர, தமிழக மக்கள் உயிரிழப்பது பற்றி அவர் அக்கறை காட்டவில்லை.
2015 ஏப்ரலுக்குப் பிறகும், தமிழ்நாடு அரசு பொருளுள்ள நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் செம்மரக் கட்டை கடத்திய தமிழர்கள் ஆந்திர காவல்துறையினரால் கைது என வாரத்தில் இரண்டு செய்திகளாவது வெளியாகின்றன. ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ஒண்டிமிட்டாவில் உள்ள ஏரியில் தமிழர்கள் பிணங்கள் என்ற பிப்ரவரி 18 அன்றைய செய்தி நம்மை உலுக்கும் முன்னரே, பிப்ரவரி 16 அன்று 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பிப்ரவரி 7 அன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அதற்குப் பிறகு, பிப்ரவரி 19 அன்று 27 பேர் கைது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2016 அக்டோபரில் இரண்டே நாட்களில் 126 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் தமிழர்கள், கடத்தல் தொழில் செய்பவர்கள் அல்ல, கொடூரமான வேலை வாய்ப்பின்மை விரட்டுவதால் வேறு வழியின்றி மரம் வெட்டச் செல்பவர்கள், பலர் செம்மரம் வெட்டத்தான் செல்கிறோம் என்று தெரியாமலேயே செல்பவர்கள் என்றெல்லாம் ஆந்திர அரசுக்கு, ஆந்திர காவல்துறையினருக்கு நன்கு தெரிந்திருந்தும் கைதுகள், தாக்குதல்கள் நடக்கின்றன என்றால், கடத்தல்காரர்களை, அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை பாதுகாக்கவே, செம்மரக் கடத்தலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவ டிக்கை எடுப்பதாக கணக்கு காட்டவே, தமிழகத் தொழிலாளர்கள் பலி தரப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. கடத்தல் காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்பவர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருக்கிறார்கள் என்றும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. மரம் வெட்டும் வேலை, கூடுதல் கூலி என்று ஆசை காட்டி, பழங்குடி மக்களை ஆந்திர வனங்களுக்கு அனுப்பும் முகவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள். இவர்களும்தான் மரம் வெட்டும் தொழிலாளர்கள் மரணங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த மொத்த குற்றச் சங்கிலி மீதும் துப்பாக்கி குண்டு பாய்வதற்குப் பதிலாக, வேலை செய்யப் போன தமிழகத் தொழிலாளர்கள் மீது குண்டுகள் பாய்கின்றன. அவர்களது உடல்கள் ஏரியில் மிதக்கின்றன.
செம்மரம் கடத்தியவர்கள் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது ஏரியில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று ஆந்திர காவல்துறையினர் சொல்கின்றனர். அந்த ஏரி ஆள் மூழ்கும் அளவுக்கு ஆழமானது அல்ல என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் எப்படி இறந்தார்கள் என்று உடற்கூறாய்விலும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் எப்படித்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்ற உண்மை மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
பழனிச்சாமி அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, தற்போது 5 பேர் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள, அவர்களுக்கு நியாயம் கிடைக்க, இனியும் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆந்திர சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவின் அட்டப்பாடியில் மது என்கிற பழங்குடி இளைஞர், உணவுத் திருட்டுக்காக அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வில், இது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு மாநிலத்துக்கு மிகப் பெரிய அவமானம் என்று அந்த மாநில முதலமைச்சர் சொல்கிறார். அங்கும் நிலப்பறி, வேலையின்மை ஆகியவைதான் உணவுக்காக மதுவை திருடச் செய்து, திருடிய உணவை உண்ணும் முன்பே சாகடித்துவிட்டன.
ஆந்திராவுக்குப் போய் கொல்லப்படும் உயிரிழக்கும் நிலையும் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் நிலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.  நிலப்பறி, வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவது, வேலையின்மை ஆகியவையே தமிழ்நாட்டின் பழங்குடி மக்களின் இந்த கொடூரமான உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணம் என்பது தெளிவாகத் தெரியும்போது, தமிழக மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கூட உறுதி செய்யாத குற்றம் புரியும் பழனிச்சாமி அரசாங்கம், இந்த அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இரண்டு மாநிலங்களி லும் உள்ள முகவர்கள், கடத்தல்காரர்கள், அவர்களுக்குப் பின் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் என குற்றச் சங்கிலியில் இணைந்துள்ள அனைவரையும் கண்டறிந்து விசாரணைக்கு உட்படுத்தி தண்டனை வழங்க வேண்டும். 

Search