COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 28, 2018

மியங்ஹுவா நிர்வாகமும் காவல்துறையும் 
தொழிலாளர்களுக்கு எதிராக சதி  

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில் இயங்குகிற மியங்ஹ÷வா ஆட்டோமோடிவ் நிறுவனத்தில் நேரடி உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட 5 தொழிலாளர்களை மீண்டும் பணிக்கமர்த்த வலியுறுத்தியும் புரட்சிகர இளைஞர் கழகம் தொடர்போராட்டம் நடத்தி வருகிறது.
பிப்ரவரி 15 அன்று ஆலை வாயிலில் ஊர் பொது மக்களை அணிதிரட்டி புரட்சிகர இளைஞர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. போராட்ட முயற்சிகளை முளையிலேயே தடுத்து விடும் நோக்கத்துடன், வாலாஜாபாத் காவல்துறையினர் உதவியுடன் மியங்ஹுவா நிர்வாகம் சதி செய்து வருகிறது. பிப்ரவரி 15 அன்று இரவு 12 மணியளவில் அன்றைய போராட்டத்தில் கலந்துகொண்ட உள்ளூர் புரட்சிகர இளைஞர் கழக தோழர்கள் இரண்டு பேரை கைது செய்த வாலாஜாபாத் காவல்துறை அவர்களை சிறை செல்லில் அடைத்தது. பிப்ரவரி 16 அன்று புரட்சிகர இளைஞர் கழக தலைமைத் தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களை சந்திக்கச் சென்றனர். அன்று வெள்ளிக் கிழமை என்பதால் எப்படியாவது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று முயற்சி செய்த வாலாஜாபாத் காவல்துறையினர், கைது செய்யப்பட்ட தோழர்கள் மீது நிர்வாகம் கொடுத்த பொய் புகாரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூட இழுத்தடித்து காலம் தாழ்த்தி அன்று மாலை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதன் பின் நீதிபதி முன்னால் அவர்களை ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்துவிட்டனர். மறுபக்கம் நிர்வாகம் தனது வாய்மொழி உத்தரவின் மூலம் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மேலும் 6 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
நிர்வாகத்தின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அந்த நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடத்த புரட்சிகர இளைஞர் கழகம் முடிவு செய்தது. பொதுக் கூட்டம் நடத்துவதற்காக அனுமதி கோரி வாலாஜாபாத் காவல்நிலையத்தில் மனு கொடுக்கச் சென்ற தோழரிடம், அங்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உன்னைத்தான் உள்ளே போடுவேன் என்று மிரட்டியுள்ளனர். மனுவில் கையொப்பமிட்டவர்தான் நேரில் வந்து மனுவைத் தர வேண்டும் என்று மனுவை வாங்காமல் இழுத்தடித்துள்ளனர். நிர்வாகம் காவல்துறையினருடன் சேர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக சதி செய்வது அப்பட்டமாகத் தெரிந்தது. பிப்ரவரி 15 அன்று இரவு கைது செய்யப்பட்ட தோழர்களை மறுநாள் பார்க்கச் சென்ற புரட்சிகர இளைஞர் கழக முன்னணித் தோழர்களிடம் நயமாகப் பேச முயற்சி செய்த காவல்நிலைய ஆய்வாளர், இககமாலெ, ஆர்ஒய்ஏ என்று முன்பே தெரிந்திருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டோம் என்று சொன்னார். அதைத் தொடர்ந்து அவர் சொன்னது இந்தக் கூற்றை பொய்யாக்குவதாக இருந்தது: நீங்கள் இப்படி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் முதலாளிகள் பக்கத்து மாநிலங்களுக்குப் போய் விடுவார்கள். நீதிமன்றம், காவல்நிலையம் என எல்லா இடங்களிலும் முதலாளித்துவ ஆதரவு கருத்துக்கள் வலுவாக ஊறியுள்ளன.
காவல்துறையின் கெடுபிடிகளை மீறி திட்டமிட்டதுபோல் பிப்ரவரி 26 அன்று புரட்சிகர இளைஞர் கழக மாநிலக் குழு உறுப்பினர் தோழர் தினகர் தலைமையில் சின்னையன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட தோழர்கள் பிப்ரவரி 19 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். மியங்ஹுவா ஆட்டோமோடிவ் நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உள்ளூர் காவல்துறையினரின் நிர்வாக ஆதரவு, தொழிலாளர் விரோத போக்குக்கு எதிராகவும் பகுதியில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் போராட்டங்கள் தொடர்கின்றன. கைது நடவடிக்கைக்குப் பிறகு, கைது செய்யப்பட்ட தோழர்கள், தொழிலாளர்கள், மதுரா மேட்டூர் பகுதி பொதுமக்கள் மேலும் உறுதியுடன் இருக்கிறார்கள். 

Search