தமிழ்நாட்டு
மக்களின், வாழ்வாதார ஜனநாயக உரிமைகள் காக்க,
போராட்ட
அரசியல் மேடையை இடதுசாரிகள் உருவாக்குவோம்!
பெறுநர்
மாநிலச்
செயலாளர்
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி/இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (மார்க்சிஸ்ட்)/
இந்திய
சோசலிச அய்க்கிய மய்யம் (கம்யூனிஸ்ட்)
தமிழ்நாடு
தோழரே,
தமிழ்நாட்டுக்கு
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட புத்தாண்டு செய்தியைச்
சொல்லியுள்ளார்கள். அக்கம்பக்கமாக, நீதிமன்றம், ஜேக்டோ - ஜியோ, செவிலியர், போக்குவரத்து
ஊழியர் போராட்டங்களை நடத்துபவர்களிடம் போராடக் கூடாது, சம்பளம்
கட்டுப்படியாகாவிட்டால் வேறு வேலை தேடிக்கொள்
என கடந்த நூற்றாண்டுகளின் ‘எசமான்’ போல் பேசுகிறது.
தமிழ்நாடெங்கும்
தலித் மக்கள் மீதான தாக்குதல்கள்
தீவிரமடைகின்றன.
கழக ஆட்சிகளின் அய்ம்பது ஆண்டுகள் முடிகிறபோது, வெண்மணியின் அய்ம்பதாவது ஆண்டு துவங்குகிறபோது, தமிழ்நாட்டு
மக்கள் ஆர்கே நகரில், தமிழ்நாட்டில்
பாஜகவுக்கு இடமில்லை என்றும், மத்திய அரசு எடுபிடி,
மக்கள் விரோத எடப்பாடி பழனிச்சாமி
அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும்
செய்தி சொல்லியுள்ளார்கள். மத்திய, மாநில அரசுகளுக்கு
முனைப்பான, தீவிரமான எதிர்ப்பு காட்டாத, முதன்மை எதிர்க்கட்சி, வைப்புத்
தொகை இழந்துள்ளது. மாறியுள்ள தமிழ்நாட்டு அரசியல் சூழலில், நாங்கள்
மாற்று தர முடியும் என
பலரும் புறப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலும்
இந்தியாவிலும் இடதுசாரி சக்திகளுக்கு ஒரு போராட்ட பாரம்பரியம்
உள்ளது. எங்கோ ஒரு கட்டத்தில்
கழகங்கள் நம்மை தாண்டிச் சென்றுவிட்டன.
நாம் கழகங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியது நம்முன்
உள்ள வரலாற்றுக் கடமையாகும்.
நாடெங்கும்
பரவி வரும் பாசிச ஆபத்து
பற்றி நாம் நிச்சயம் கூடுதலாக
கரிசனம் கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள்,
அம்பேத்கரிய, பெரியாரிய முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடித்து, சிவப்பும் நீலமும் கருப்பும் இணைந்து,
கருத்துத் தளத்திலும் களங்களிலும் காவியை எதிர்கொள்வதை உறுதி
செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின்
மொழி, பண்பாடு, நீராதாரம், வருவாய், அதிகாரங்கள் போன்ற உரிமைகள் மறுக்கப்
படுகின்றன. தமிழ்நாட்டின் இயற்கை வளம் சூறையாடப்படுகிறது.
மனித வளம் கொடூரமாக சுரண்டப்படுகிறது.
பன்னாட்டு, இந்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் அரசின்
கருவூலம் திறந்து விடப்படுகிறது. விவசாயம்
அழிக்கப்படுகிறது. மாணவர், இளைஞர்களின் கல்வியும்
வேலைவாய்ப்பும் எதிர்காலமும் இருளில் தள்ளப்படுகிறது. பெண்களுக்கு
அச்சமற்ற சுதந்திரமும், தலித்துகள் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்,
மாற்றுத் திறனாளிகள் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன. பொது சுகாதாரம் நாசமாக்கப்பட்டுவிட்டது.
எல்லா துறைகளிலும் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது. அம்பேத்கர் சொன்னதுபோல், ஜனநாயகம் அலங்கார மேல்பூச்சாக மட்டுமே
இருப்பதும், அடிஆழம் நெடுக ஒடுக்குமுறை,
சுரண்டல், ஜனநாயக மறுப்பு ஆகியவை
நீக்கமற நிறைந்திருப்பதும் யதார்த்தமாக உள்ளது.
இந்தப்
பின்னணியில், எஸ்யுசிஅய் (சி), இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) என்ற நான்கு இடதுசாரி
கட்சிகளும், மக்களின் வாழ்வாதார, ஜனநாயக உரிமைகளுக்காக, தமிழ்நாட்டை
இடது திசையில் செலுத்தும் குறிக்கோளுடன், மக்கள் கோரிக்கைகள் அடிப்படையிலான,
ஒரு போராட்ட நிகழ்ச்சி நிரலுக்காக,
ஓர் இடதுசாரி அரசியல் மேடை உருவாக்குவது
சரியாக இருக்கும் எனக் கருதுகிறோம். எங்களது
இந்த முன்வைப்பின் மீது விவாதிக்க, நான்கு
இடதுசாரி கட்சிகளின் தலைமைத் தோழர்களும் விரைந்து
சந்திக்க அனைவருக்கும் வசதியான இடம், நேரம்,
நாள் முடிவு செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
தோழமையுடன்
மாநிலச் செயலாளர்
இககமாலெ
09 ஜனவரி
2018