COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 13, 2018

வழக்கறிஞர்கள் குற்றவாளிகளா? சமூக விரோதிகளா? 
தீய வழக்கறிஞர்களால்தான் நீதி பரிபாலன முறைக்கு ஆபத்தா?

எஸ்.குமாரசாமி

வெள்ளையாய் இருப்பவன் பொய் பேச மாட்டான்.
இப்படி ஒரு தமிழ்ப்பட வசனம் சொல்கிறது. எல்லா இசுலாமியர்களும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாதிகள் அனைவருமே இசுலாமியர்கள். இசுலாத்தை சாத்தான்மயமாக்குபவர்கள் உலகெங்கும் இப்படியும் சொல்கிறார்கள். வெள்ளையாய் இருக்கிற, மேல்சாதியினரான, ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞர்கள்  எல்லாம் கனவான்கள், திறமையானவர்கள். இப்படி ஒரு பார்வையும், வெளிப்படையாகப் பேசப்படாத மறுபார்வையான, கருப்பானவர்கள், சரளமான ஆங்கிலம் வராதவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், ரவுடிகள், திறமையற்றவர்கள் என்ற ஒரு பார்வையும், நீதி பரிபாலன முறையில் நிச்சயம் நிலவுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக திரு.சஞ்சய் கிஷன் கவுல் இருந்த போது, அவரும், ஒன்றிரண்டு நீதிபதிகளும், பார் கவுன்சிலின் அவப்புகழ் பெற்ற சில தலைவர்களும், வழக்கறிஞர்களின் போராட்டங்களை ஒழித்துக் கட்ட ஆனதெல்லாம் செய்தார்கள் என்ற கருத்து, தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவுகிறது.
இப்போது தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லை. நியமன பொறுப்பாளர்களே உள்ளனர். 28.03.2018 அன்று பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. பார் கவுன்சிலை தற்சமயம் நிர்வகிக்கும் திருவாளர்கள் அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன், வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் 24.01.2018 தேதிய தீர்மானம் மூலம், தேர்தலை ‘சுத்தப்படுத்த’ புறப்பட்டார்கள்.
அகில இந்திய மற்றும் தமிழ்நாட்டு பார் கவுன்சில்களில், தேர்தலின் போதும் தேர்தலுக்குப் பிறகும் பல கோடி ரூபாய் ஊழல் நடப்பது, உயர்பதவிகள் சிலவற்றில் குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் இருப்பது பற்றி சர்வசாதாரணமாக வழக்கறிஞர்கள் பேசிக் கொள்கிறார்கள். இது போன்ற முறைகேடுகளுக்கு எதிராக இது வரை எந்த நீதிமன்றமும், ‘சுத்தப்படுத்த புறப்பட்ட’ எவரும் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது தமிழ்நாட்டில் பகுத்தறிவின் மீது, பெரியாரின் மீது, சமூக நீதியின் மீது வலது திசையிலிருந்து தாக்குதல் வரும்போது, வெறுப்பரசியல் பரவும் போது, ஜனநாயகத்துக்கு ஆபத்து நேர்ந்துள்ள போது, வழக்கறிஞர் சமூகத்தை, ஆளாளுக்கு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பார்க்கிறார்கள்.
28.03.2018 தேர்தலில், அரசியல் கட்சி பொறுப்பாளர்கள், பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கையைச் சந்திப்பவர்கள், குற்றவியல் வழக்குகளைச் சந்திப்பவர்கள் தேர்தலில் நிற்க முடியாது என புதிய தேர்தல் விதிகள் கொண்டு வரப்பட்டன. (அசவ டஉதநஞச ஐந டதஉநமஙஉஈ பஞ ஆஉ ஐசசஞஇஉசப மசபஐக டதஞயஉஈ எமஐகபவ) எவரொருவரும் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே என்ற கோட்பாட்டை, இந்தப் புதிய விதிகள் ஏறி மிதிக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அமைப்பாகும் சுதந்திரம் கருத்து சுதந்திரத்தை, வழக்கறிஞர்களுக்கு மறுக்க முடியாது என்பதையும் இந்தத் திருத்தங்கள் கண்டுகொள்ளவில்லை. அகில இந்திய பார் கவுன்சில், இந்தத் திருத்தங்களுக்கு ‘இப்போது’ ஒப்புதல் தராததால், இந்த தகுதி நீக்கங்கள் இல்லாமலே தேர்தல் நடைபெறும்.
நாம் அறிந்தவரை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திரு.கிருபாகரன் அவர்களும் திரு.வைத்யநாதன் அவர்களும், குற்றவாளி வழக்கறிஞர்கள், குற்றவாளி சட்ட மாணவர்கள் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். இவர்கள் காசு பணம் வாங்காத நேர்மையானவர்கள், இவர்கள் நல்லெண்ண அடிப்படையிலேயே எதையும் சொல்கிறார்கள் என்று கருதியே, மேலே செல்வோம்.
நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் போடப்படுகிறது என்ற முதுமொழியை நினைவில் கொள்வோம். வழக்கறிஞர்களில், சட்ட மாணவர்களில் சிலர் குற்றம் புரிகிறார்கள். அவை சட்டப்படி நடவடிக்கைக்குரியவை. நீதிபதிகள் சிலர் மீது உள்ள வலுவான புகார்களால் எல்லா நீதிபதிகளும் மோசமானவர்கள் என்று எப்படி வாதாட முடியாதோ, அதேபோல், சில வழக்கறிஞர்கள், மாணவர்கள் செய்கிற தவறுகளுக்காக வழக்கறிஞர் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் எவரும் நிற்க வைக்க முடியாது.
நீதிபதிகள் விஷயத்திற்கு வருவோம். நீதிபதிகள் கிருபாகரன், வைத்யநாதன் ஆகியோர், அய்க்கிய அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அசோசியேட் நீதிபதியாக இருந்த சட்ட வல்லுநர் பெஞ்சமின் கார்டோசா, ‘வழக்காடுபவர்கள் ஆனாலும் சரி நீதிபதிகள் ஆனாலும் சரி, அவர்களது உணர்வின் அடி ஆழத்தில், விருப்பு வெறுப்புக்கள், மனச்சாய்வுகள் தப்பெண்ணங்கள், உணர்ச்சிமய விஷயங்கள், பழக்கவழக்கங் கள், நம்பிக்கைகள் என்ற பிற சக்திகள் உள்ளன’ என்று சொன்னது, தர்க்கரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் சரி என ஒப்புக் கொள்வார்கள் எனத் தோன்றுகிறது. தீர்ப்புக்காரர்களான நீதிபதிகளும், சமூக மனிதர்களே. சமூக நடப்புகளும் சமூகத்தில் மேலோங்கியுள்ள சிந்தனைகளும் அவர்கள் மீதும் தாக்கம் செலுத்தத்தானே செய்யும்.
இன்றைய நாளைய வழக்கறிஞர்கள் (பார்) பற்றி கவலைப்படும் நீதிபதிகளிடம்,
நீதித்துறை (பெஞ்ச்) பற்றி
சில கேள்விகளை எழுப்பலாமா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசிலமைப்புச் சட்ட கோட்பாட்டை ஒப்புக்கொண்ட நீதிபதிகள் எவரும், வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் சமமாக வைத்து கேள்வி கேட்கலாமா என்று, நிச்சயம் கேட்க மாட்டார்கள். நீதிபதிகள் நியமனம், நீதிபதிகள் ஊழல் என்ற விஷயங்களில் நீதிபதிகள் மத்தியிலிருந்தும் நீதித்துறைக்கு வெளியில் இருந்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
1. நீதிபதிகள் நியமனம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதா? உத்தரபிரதேச உயர்நீதிமன்றம், அலகாபாத் மற்றும் லக்னோ அமர்வங்கள் கொண்டுள்ளது. அங்கு 160 நீதிபதிகள் வரை இருக்கலாம். சில டஜன் காலியிடங்கள் உள்ளன. அந்த உயர்நீதிமன்ற கலீஜியம், நீதிபதிகள் நியமனத்திற்காகப் பரிந்துரைத்த 37 பேரில், 13 பெயர்கள் திரும்ப அனுப்பப்பட்டன. அவர்கள் நீதிபதிகளின் உறவினர்கள். ஜ÷னியர்கள்.
நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளும் இந்த ஜனநாயக விரோத, வெளிப்படைத் தன்மையற்ற முறை, நீதிபரிபாலன முறையை நிச்சயம் பலப்படுத்தவில்லை. முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், கலீஜியம் முறையை (ஓல்ட் ஸ்டூடன்ஸ் கிளப்) பழைய மாணவர்கள் சங்கம் என்று விமர்சித்ததில் என்ன தவறு உள்ளது? அவர், மென்ஸ் கிளப், ஆண்கள் மகிழ்மன்றம் என்று சொல்லி இருந்தாலும், தவறாய் இருந்திருக்காது. 1950லிருந்து 2018 வரை 67 வருடங்களில், 65 கோடி பெண்கள் வாழும் இந்தியாவில், இது வரை உச்சநீதிமன்றத்தில் பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், பானுமதி, ரஞ்சனா தேசாய், ரூமா பால், கியான் சுதா மிஸ்ரா என்ற 6 பெண் நீதிபதிகள் என்பதை தாண்டி யாரும் நியமிக்கப்படவில்லை என்பதை எப்படி விளக்க முடியும்?
தமிழ்நாடு, தென் இந்தியா போக, பெரும்பாலான நீதிமன்றங்களில், பார்ப்பனர், சத்ரியர், வைஸ்யா (பனியா), காயஸ்தா சமூகங்களில் இருந்துதான் கணிசமானவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட் போர்டுகள் மேல்சாதிக்காரர்களால் நிரம்பி உள்ளது போல்தான், நீதிமன்றங்களும் மேல் சாதிக்காரர்களால்தான் நிரம்பி உள்ளன.
வெளிப்படைத்தன்மையுடன் நீதிபதிகள் நியமனம் வேண்டும், நீதிபதிகள் நியமனம் சமூக நீதி அடிப்படையில் இருக்க வேண்டும், நீதிபதிகளுக்கு, இந்த நாட்டின் இயற்கை மற்றும் மனித வளங்கள் மீது பற்றும் நேசமும் வேண்டும், இவையே நீதிபரிபாலன முறை செம்மையாக, தேவையான அடிப்படைகள் என்பதை பொது வெளியில் எவரும் மறுக்க முடியுமா?
2. நீதித்துறை ஊழல்: முன்னாள் நீதிபதி சந்துரு, டென்மார்க் நாட்டில் ஏதோ அழுகிப் போயுள்ளது (சம்திங் ஈஸ் ராட்டன் இன் த ஸ்டேட் ஆஃப் டென்மார்க்) என்ற ஷேக்ஸ்பியர் வரிகளுடன், ‘வரம்புக்கு அப்பாற்பட்டதா நீதித்துறையின் அதிகாரம்?’ என்று தலைப்பிட்ட தமது கட்டுரையைத் துவக்கி உள்ளார். நமது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜ÷, அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 50% பேர் ஊழல் பேர் வழிகளே என்று சொல்லவில்லையா? முன்னாள் சட்டமன்ற அமைச்சரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன், 16 உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெயர்களை எழுதித் தந்து, அவர்களில் 8 பேர் ஊழல் பேர்வழிகள், 6 பேர் நேர்மையானவர்கள், 2 பேர் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லி, இரண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள், தமக்கு முன்னும் பின்னும் இருந்த 4 தலைமை நீதிபதிகள் ஊழல் பேர்வழிகள் என்று சொன்னதை, அந்தப் பெயர்களும் பட்டியலில் இருப்பதாகச் சொன்னதை, நாடு மறந்து விடுமா?
உத்தரபிரதேச மாநில பிரசாத் மருத்துவக் கல்லூரி விஷயத்தில் ஒடிஷா முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குத்தூஸ், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைதானதை, அதே விவகாரத்தில், நாராயண் சுக்லா என்ற உத்தரபிரதேச நீதிபதி உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி தீர்ப்பளித்ததும் இப்போது பதவி நீக்கத்தைச் சந்திக்க இருப்பதும் நடந்த விஷயங்கள்தானே. சிஜேஏஆர், காமினி ஜெய்ஸ்வால் வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது இடத்தில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர், நீதித்துறை ஊழல் பற்றிய புகாரை மிகவும் அக்கறையுடனும் கவலையுடனும் அணுகியதை நாடு மறந்து விடுமா? தற்கொலை செய்து கொண்ட முன்னாள் அருணாசல பிரதேச முதல்வர் கலிகோபுல், தமது பதவி பறிப்பு தொடர்பான வழக்கில் தமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க 13 மில்லியன் டாலர் லஞ்சம் தருமாறு உச்சநீதிமன்ற நீதிபதி கள் கேட்டதாகவும், தாம் தரவில்லை வழக்கு தமக்கு எதிராகச் சென்றுவிட்டது என்றும் தம் தற்கொலைக் குறிப்பில் எழுதியது ஊடகங்களில் வந்த செய்திதானே.
நீதித்துறையில் ஊழல் உள்ளது என்பது ஊர் அறிந்த விஷயம்தான். ஆனால் எப்படி எல்லா வழக்கறிஞர்களும் மோசமானவர்கள் இல்லையோ, அப்படியே எல்லா நீதிபதிகளும் ஊழல் பேர்வழிகள் அல்ல.
3. இந்திரா காந்தி காலத்தில் நடந்தது போல், இப்போது மோடி ஆட்சிக் காலத்தில், அரசு, உச்சநீதிமன்றம் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி செய்கிறதா? ஆமாம். அரசு செலுத்தும் செல்வாக்குப்படியே, தலைமை நீதிபதி வழக்குகளை அமர்வங்களுக்கு மனம் போனபடி ஒதுக்குகிறார், நீதித்துறை சுதந்திரத்துக்கு ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றுதானே, நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன்.பி. லோகுர், குரியன் ஜோசப் 12.01.2018 அன்று, இந்த நாட்டின் முன்பு அபாய அறிவிப்பு தந்தார்கள். அமித் ஷா, சோரபுதீனை போலி மோதலில் கொல்ல உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்த வழக்கை சிபிஅய் நீதிமன்ற சிறப்பு நீதிபதி லோயா விசாரித்தார்; அவர் மர்மமான முறையில் இறந்துவிட்ட பிறகு, அடுத்த நீதிபதி அமித் ஷாவை விடுதலை செய்துவிட்டார்; லோயா மரணம் விசாரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கை, பணிமூப்பில் பத்தாம் நிலையில் இருந்த அருண் மிஷ்ரா அமர்வத்திற்கு, தலைமை நீதிபதி தவறாக அனுப்பினார் என்பதையும்தானே, அந்த நான்கு நீதிபதிகளும், குறிப்பாக வருங்கால தலைமை நீதிபதியாக வேண்டிய ரஞ்சன் கோகாயும் சொன்னார்கள்!
நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் நாட்டு மக்களும், நீதித்துறையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டு வரப் போராட வேண்டும். அதற்கு, வழக்கறிஞர்கள் அச்சமற்ற சுதந்திரத்துடன் வழக்காடும் சூழல் வேண்டும். வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ, காவல் துறை ராஜ்யத்துக்கோ, பாசிசத்துக்கோ அடங்கிப் போகும் நிலையை உருவாக்குவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
வழக்கறிஞர்கள் சமூக விரோதிகள் அல்ல. குற்றவாளிகள் அல்ல. ஆந்திரா, கர்நாடகாவில் படிக்கிற மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்களால் நீதி பரிபாலன முறைக்கு ஆபத்து இல்லை. நீதித்துறைக்கு உள்ளிருந்தும் அதற்கு வெளியில் அரசிடம் இருந்தும்தான் அதற்கு ஆபத்து உள்ளது. அரசியல்சாசனத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய வழக்கறிஞர் சமூகத்தை ‘குற்றவாளிகளாக’ சித்தரிக்கும் முயற்சிகள் இனியும் தொடரக் கூடாது.
நீதி பரிபாலன முறையில் வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் இருக்கிற அனைவரும், பல்லாயிரக்கணக்கான இளம் வழக்கறிஞர்கள் மற்றும் ஜ÷னியர்கள் மாதம் ரூ.5,000 கூட சம்பாதிக்க முடியாத நிலையில் கவுரவமும் சுயமரியாதையும் மறுக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதைப் பற்றியும், தமிழ்நாட்டில் உயர்நீதி மன்றத்தில் தமிழ் இன்னமும் வழக்காடு மொழியாக இல்லை என்பது பற்றியும் கவலைப்பட்டு, அந்த நிலைமைகளை மாற்ற முன்வந்தால், அந்த முயற்சிகள் ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
வெளிப்படைத்தன்மையுடனான, சமூக நீதிக்கேற்ப, மக்கள் மீது அக்கறையுள்ள நீதிபதிகள் நியமனம் வேண்டும். வழக்கறிஞர்கள் அச்சமற்ற சுதந்திரத்துடன் வழக்காடும் உரிமை வேண்டும்.

Search