COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, February 28, 2018

மோடியும் பழனிச்சாமியும்: சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி: மோடியின் தமிழ்நாட்டு வருகை உரை ஆகியவற்றை எப்படி மதிப்பிடலாம்?


பதில்:
1. தமிழ்நாட்டில் ஒர் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது, அதில், காவிரிப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்யும் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் என முடிவானது. ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மோடி, காவிரி பிரச்சனை பற்றி ஒன்றுமே பேசவில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தின் மிக முக்கியமான ஓர் அரசியல் கோரிக்கை பற்றி நான் வாய் திறந்து எதுவும் பேசக் கூட மாட்டேன் என மோடி, தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். அவர் தமிழில் சில வார்த்தைகள் பேசியதும், பாரதி பாடல் வரிகளைச் சொன்னதும், காலனிய எசமானர்களாக இருந்த வெள்ளையர்களில் சிலர் எப்போதாவது, அடிமை இந்தியர்களிடம், ‘கொஞ்சம் கொஞ்சம்’ அவர்கள் மொழியில் பேசியது போல் ஆகும். தமிழ்ப்பேச்சு அணுகுமுறை, அருவறுப்புக்கு மட்டுமே உரியதாகும். அதில் பெருமைப்பட எடுபிடிகளால் மட்டுமே முடியும்.
2. மோடி, தமது கட்சியும் ஆட்சியும் ஊழலை எதிர்த்துப்  போராடுகின்றன என்று பெருமை பேசுகிறார். மோடி ஆட்சியில், ‘காவல்காரர்’ (மோடி தம்மை அப்படித்தான் அழைத்துக் கொண்டார்), நாட்டின் பணத்தை நீரவ் மோடி சூறையாடிய போது தூங்கியதும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லும்போது உதவுவதும் நடந்தது. ஜெயலலிதாதான், இந்தியாவிலேயே அதிகம் ஊழல் செய்த ஆயிரம் ஆயிரம் கோடிகள் சொத்து குவித்த அரசியல்வாதியாக இருக்க முடியும். அவர் உச்சநீதிமன்றம் வரை குற்றவாளி என சொல்லப்பட்டவர் ஆவார். பிப்ரவரி 24, 2018 ஜெயலலிதா பிறந்த நாளுக்கு வந்து ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாராட்டிய மோடி, தாம் தயங்காமல் ஊழல் குற்றவாளிகளோடு சேர்ந்து கொண்டேன் என மறு உறுதி செய்துள்ளார்.
3. மோடி, ‘பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது’ பற்றி நிறைய கதை பேசி உள்ளார். ‘காதல் போர் புரளி’, ‘காதலர் தின மிரட்டல்கள்’, ‘காப் பஞ்சாயத்துகள்’, ‘ஆதிக்க கொலைகள்’, நாளும் நடந்து கொண்டிருக்கும் நாட்டில், மோடி போன்ற மோசமான அரசியல்வாதிதான் பெண் அதிகாரம் பற்றிப் பேச முடியும். மோடி முன் நகர்த்தும் இந்துத்துவா பார்ப்பனீய நிகழ்ச்சி நிரல், இசுலாமியர்களுக்கு, தலித்துகளுக்கு, பெண்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு எதிரானது. இந்துத்துவா, சாதியை, (உழைப்புப் பிரிவினையோடு உழைப்பாளர்கள் மத்தியிலான பிரிவினையையும்) மேல் கீழ் என்ற படி நிலையை, கட்டமைக்கப்பட்ட சமத்துவமின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. சாதி, அகமண முறை மூலம் நிலை பெற்றுள்ளது. பெண் சுய சாதி தாண்டி திருமணம் செய்து கொள்ள முடியாது எனும் போது, இந்தியப் பாரம்பரியப்படி நடக்க வேண்டும் எனும் போது, அது பெண் அடிமைத்தனத்தையே குறிக்கும். இதற்கும், பெண்கள் அதிகாரம் பெறு தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிவப்பு கருப்பு நீலம் சேர்வதை வலியுறுத்தும் நாம், இந்துத்துவாவும் பெண்களும் பிறவிப் பகைவர்கள் என்பதை இன்னமும் கூடுதலாகச் சொல்ல வேண்டும்.
4. ஜெயலலிதா இருந்தபோது, அவர் முன்பு பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் பூஜ்யங்களாகவே கூனிக் குறுகி விழுந்து எழுந்தார்கள். இப்போது மத்திய பாஜக அரசை நடத்தும் மோடி, தமக்கு தமிழ்நாட்டின் மாநில அரசும், ஆளும் கட்சியும் ஒரு பொருட்டே அல்ல என்று காட்டியுள்ளார். அவர் மாநில அரசை, அஇஅதிமுகவை அவர்களது ஒத்துழைப்பைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்த ஊழல் கும்பல், சூறையாடும் கூட்டம், நமது அடிமைகளே, இவர்களுக்கு மரியாதை ஒரு கேடா என நடந்து கொண்டுள்ளார். இதைத் தாண்டி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், தினகரன் கதைகள், அஇஅதிமுக, பாஜக உறவுகள் பற்றி எல்லாம் பேச எதுவும் இல்லை.

கேள்வி: திமுகவின் தேக்கம் பற்றி, பிரகாஷ் காரத், இககமா தூத்துக்குடி மாநாட்டில் பேசியதை திமுக தரப்பு மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதற்கு என்ன காரணம்?

பதில்:
அதுதானே அரசியல்.
பாஜக எதிர்ப்பு அரசியல் முக்கிய நிகழ்ச்சிநிரலாகும் போது, திமுக பின்னால் இருந்து மட்டுமே பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளதாக திமுக நம்புவதாகத் தெரிகிறது. திமுக, இகக(மா)வையும், நெறிப்படுத்த விரும்புகிறது. சுதந்திர இடதுசாரி அரசியல் பற்றி எல்லாம் யோசிக்காதே, தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பு என் தலைமையில்தான் என ஒப்புக் கொண்டு அதற்கேற்ப பேசு, நடந்துகொள் என இகக(மா)வுக்கு நிர்ப்பந்தம் தருகிறது. திமுக தலைமையில் பாஜக எதிர்ப்பு என்பது வலது திசையில் இருந்து தரப்பட்டுள்ள அழைப்பாகும்.
தூத்துக்குடி இகக(மா) மாநாட்டில், பாஜக எதிர்ப்பை, அஇஅதிமுக எதிர்ப்பை, மக்கள் பிரச்சனைகளில் இடதுசாரிகள் போராட்ட மேடை அமைத்துக் கட்டமைப்போம் என இடது திசையிலிருந்து இகக(மாலெ) அழைப்பு விடுத்துள்ளது. கழங்கள் கடந்த கால விஷயமாக, போராடும் இடதுசாரிகள் நிகழ்கால வருங்கால விஷயமாக மாறும் சாத்தியப்பாடு பற்றி, சிந்திக்கத் துணியவும் செயல்படத் துணியவும் அழைப்பு  விடுத்தது. இகக (மாலெ) சுதந்திர இடதுசாரி அரசியல் பேசுவதும், திமுக சுதந்திர இடதுசாரி அரசியல் கூடாது என்று பேசுவதும் இயல்புதானே!

Search