COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Tuesday, February 13, 2018

பல்கலை கழக கல்விச் சூழல் ஊழல்மயமாவது தடுக்கப்பட வேண்டும்

கல்வி சிறந்த தமிழ்நாடு... புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு....

அய்யா, நினைத்துப் பார்த்தாயா, நீ கொண்டாடிய தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துப் பார்த்தாயா? தமிழ்நாட்டின் கல்வி கடை சரக்காகி கையூட்டு மலிந்த இடமாகவும் மாறிவிடும் என்று நினைத்துப் பார்த்தாயா? உன் பெயர் தாங்கிய ஒரு பல்கலை கழகம் ஊழலின் மய்யமாக மாறி நிற்கிறது. கழக ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு எல்லா வகையிலும் தலைக்குனிவை கொண்டு வந்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் கல்வி பற்றி நல்ல செய்தி கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஒரு மாணவன் தனது பள்ளியின் தலைமை ஆசிரியரை கத்தியால் குத்துகிறான். வறிய குடும்பத்து பிள்ளைகள் தங்கிப் படிக்கும் விடுதியில் விடுதிக் காப்பாளர் இல்லாமல் அவர் வேலையையும் சேர்த்துப் பார்த்த சமையலர் மாணவர்களை தாக்குகிறார். பாலியல்ரீதியாக துன்புறுத்துகிறார்.வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். இன்னொரு பள்ளியில் ஷ÷ அணியாத குழந்தைகளை வெற்றுக் காலில் வெயிலில் வெளியில் நிற்க வைக்கிறார்கள். பெற்றோரை அழைத்து வா என்று சொன்னதைக் கூட தாளாமல் குழந்தைகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
இப்படி கல்வி அரங்கில் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்டு வருகிற தமிழக மக்களுக்கு அந்தச் செய்தி பேரிடிதான். கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் கணபதி கையூட்டு பெறும்போது கையும் களவுமாய் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களாட்சி நடக்கிற காலத்திலும் அந்தப் பதவியில் இருப்பவரை வேந்தர் என்று அழைக்கிறோம். அந்தப் பதவிக்கு அவ்வளவு மரியாதை. தவறே செய்யாத தொழிலாளியை கூட மனம்போன போக்கில் ஒரு நிர்வாகம் பணிநீக்கம் செய்வதுபோல், இந்த வேந்தர் தவறு செய்தார் என்பது தெரிந்தாலும் அவரை அப்படி சாதாரணமாக பணிநீக்கம் செய்து விட முடியாது. அவ்வளவு மேன்மையான பதவி. இன்று எல்லாம் நாறுகிறது. பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கணபதி ரூ.30 லட்சம் கையூட்டு பெற்றபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நான்கு நாட்கள் கழித்து ஆளுநர் உத்தரவின் பேரில்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை கணபதியால் நியமனம் செய்யப்பட்டு பணியில் இருக்கிற 80 பேரின் நியமனம் கேள்விக்குள்ளாகியுள்ளது. கணபதியின் குடும்பத்தார் சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கணபதிக்கு உடந்தையாக இருந்ததாக, பாரதியார் பல்கலை கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொலைதூர கல்வி இயக்குநர் மதிவாணன் அந்தப் பதவியை முறைகேடாகப் பெற்றார் என குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் அனைத்தும் தழுவிய விதத்தில் நிர்வாக சீர்கேடுகள் மலிந்துள்ளபோது எங்கும் எதிலும் ஊழல் நிலவும்போது பல்கலை கழகங்கள் மட்டும் எப்படி விதிவிலக்காகி விட முடியும்? பல்கலை கழகங்களில் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடப்பது புதிய விசயமில் லைதான். கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய ஒருவருக்கு அவரது பதவி உயர்வு நிறுத்தப்பட்டதாக இப்போது செய்தி வந்துள்ளது. இப்போது உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கையூட்டு வாங்கி சிறையில் இருக்கிற அதே துணைவேந்தர் கணபதிதான் அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்து அவரை பழைய பதவிக்கு பணியிறக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். கேள்வி எழுப்பிய இன்னொருவர், குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு வரப்பெற்று, பிறகு, நீதிமன்றத்துக்குச் சென்று தடை பெற்றிருக்கிறார்.
பாரதியார் பல்கலை கழக துணை வேந்தர் கணபதி, பல்கலை கழகத்தின், அங்கு உயர் கல்வி பெறும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் பணியை ஓரந்தள்ளி வைத்துவிட்டு செல்வம் சேர்க்கும் பணி பார்த்துள்ளார் என்று தெரிய வருகிறது. அவர் எப்படி துணை வேந்தரானார், அதற்கு முறையான விதிகள் பின்பற்றனவா, விதிமீறல்கள் மூலம் அந்தப் பதவிக்கு வந்தாரா, அவரிடம் லஞ்சம் பெற்றவர்கள் யார் என, பதவி ஏற்ற பின் நடந்துள்ள விதிமீறல்கள், முறைகேடுகள், விளைந்துள்ள பாதிப்புகள் என்ன என அடுத்தடுத்த கேள்விகள் எழுகின்றன.
தமிழ்நாட்டின் பல்கலை கழகங்களில் பணி நியமனம் மட்டுமின்றி, பல்கலை கழகத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் முறைகேடுகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. நாம் தமிழ்நாட்டில் வாழ்வதால் அஇஅதிமுக அமைச்சர்களின் அதிகாரிகளின் ஊழல் நடைமுறைகளை சில ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருப்பதால், உயர்கல்வித் துறை அமைச்சர்கள், அதிகாரிகள் துணையின்றி, ஒப்புதலின்றி, கட்டிங், கமிஷன் இன்றி இது போன்ற முறைகேடுகள் நடக்க முடியுமா என்று கேள்வி எழுகிறது. மணி நேரக் கணக்கில் கூலி பெறும் பேராசியர்களும் தமிழ்நாட்டின் பல்கலை கழகங்களில் உண்டு.
கணபதி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்யாக்கிய அதே நேரத்தில், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் இடங்களுக்கு, 2017 செப்டம்பரில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு ரத்து என்ற செய்தியும் வந்துள்ளது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த 200 பேர் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது பற்றி எழுப்பப்பட்ட புகார் விசாரணையில், மதிப்பெண்கள் முறைகேடாக கூடுதலாக அறிவிக்கப்பட்டது தெரிய வந்து 155 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது, ஒருவர் சரண் என இதுவரை நடந்துள்ளது. உயர்அதிகாரிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அதீத மதிப்பெண் பெற்றுள்ள 200 பேரும் தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு தந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. 1,058 இடங்களுக்கு 1.33 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நேர்மையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். அரசு மீண்டும் தேர்வு நடத்தும்போது, 1.33 லட்சம் என்ற எண்ணிக்கை இன்னும் கூடும்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பிரச்சனையில் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டின் பல்கலை கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில், மற்ற பணிநியமனங்களில் நடக்கும் முறைகேடுகள் முதல், கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடந்த பணி நியமனங்கள் வரை, காலம் தாழ்த்தாமல் அனைத்தும்தழுவிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். பல்கலை கழக கல்விச் சூழல் ஊழல்மயமாவது தடுக்கப்பட வேண்டும்.

Search