சில அமைப்பு, அரசியல், கருத்தியல் வேறுபாடுகளால் இகக மாலெயில் இருந்து விலகிய ஒரு பிரிவு தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை துவங்கியுள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சி ஏன் துவங்கப்பட்டது என்பது பற்றிய விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
தோழர்களின் தொடர் ஆதரவை கோருகிறோம்.
துவங்கியுள்ள ‘கம்யூனிஸ்ட் கட்சியின்’
அரசியல் பயணம்
மார்க்சிய லெனினிய கருத்துகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகிற தோழர்கள், ஆயுள் சிறைவாசத்தில் உள்ள, ஆயுள் சிறைவாசம் வழங்கப்பட வேண்டும் என்ற வழக்கை உச்சநீதிமன்றத்தில் சந்திக்கிற, நூற்றுக்கணக்கான பணியிட மாற்றல், வேலை நீக்க வழக்குகளைச் சந்திக்கிற, வர்க்கப் போராட்டத்தின் அடையாளமான பிரிக்கால் தொழிலாளர்களுடன், இன்றைய பொருளாதார மந்த நிலையிலும் திமிறி எழுந்து துணிச்சலுடன் போராடுகிற மதர்சன் தொழிலாளர்களுடன், விசைத்தறித் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்ற சுரண்டப்படுகிற ஒடுக்கப்படுகிற பல்வேறு மக்கள் பிரிவினருடன் போராட்டக் களங்களில், தோழமையுடன் தோளோடு தோள் நிற்கும் தோழர்கள், சென்னை அம்பத்தூரில் 11.10.2019 மாலை கூடியுள்ளனர்.
ஜனநாயகம், சோசலிசம், கம்யூனிசம் என்ற உன்னத லட்சியங்களின் திசையில் மக்கள் நலனுக்கான அரசியலை வலுப்படுத்த, இடதுசாரி அரசியலை, கருத்துகளை, போராட்ட வரலாற்றை, புத்தாயிரம் ஆண்டில் பிறந்த, 18 வயதை அடைந்த இளையவர்களிடம் எடுத்துச் செல்வது இன்றைய முக்கிய கடமை என தோழர்கள் உணர்கின்றனர். அந்தக் கடமையை சாதிக்க புதியதொரு கம்யூனிஸ்ட் கட்சி அவசியம் என்பதால் இந்தக் கூட்டத்தின் வாயிலாக, ‘கம்யூனிஸ்ட் கட்சியை’ நிறுவியுள்ளனர்.
பெண்களை இழிவுபடுத்துபவர்களை, தனிநபர்கள் மீதான வெறுப்பால் தொழிலாளர் போராட்ட நேரத்தில் நிர்வாகங்களுடன், எடுபிடிகளுடன் கைகோர்த்தவர்களை ஆதரிப்பது, வெறுப்பரசியல் அடிப்படையில் கோஷ்டி அரசியல் நடத்துவது என்பவை அமைப்புப் பிரச்சனைகள் என்றபோதும், அவற்றுக்குள்ளும் அரசியல் கருத்தியல் இயல்பு நிச்சயம் உண்டு. அதே போல், தமிழ்நாடு தொடர்பான மத்திய அமைப்பின் அணுகுமுறையில் அமைப்பு, அரசியல், கருத்தியல் என்ற எல்லா அம்சங்களும் உள்ளன. இந்த அனைத்து விசயங்களிலும் சரிக்கும் தவறுக்கும் இடையிலான போராட்டத்தில், மத்திய அமைப்பு சரியின் பக்கம் நிற்கவில்லை. நியாயம் கேட்பவர்கள் மீது, புகார் எழுப்பியவர்கள் மீது பழிக்கு மேல் பழி சுமத்தி, நீங்களே பதில் சொல்ல வேண்டும் என்ற ஆதிக்க அணுகுமுறையை மத்திய அமைப்பு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அணுகுமுறை கொண்டு, அர்ப்பணிப்போடு மக்கள் பணியாற்றுபவர்களை மத்திய அமைப்புதான் இயக்கத்தை விட்டு விரட்டியுள்ளது. சிதைப்பவர்களை காவலர்களாகவும், கட்டி எழுப்பி வருபவர்களை உடைப்பவர்களாகவும் சித்தரிப்பதற்கு காலமும் வரலாறும் பதில் சொல்லும். நாம் ‘கம்யூனிஸ்ட் கட்சியை’ கட்டி எழுப்புகிறோம்.
‘கம்யூனிஸ்ட் கட்சி’, பெருமுதலாளித்துவ (கார்ப்பரேட்) வளர்ச்சிப் பாதை, மதவெறி, சாதியாதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக தானும் போராடும்; எழுகிற எல்லா போராட்டங்களையும் ஆதரிக்கும். புவிவெப்பமயமாதலுக்கு எதிராகவும் இயற்கையோடு இயைந்த மானுட வாழ்க்கைக்காகவும் தானும் போராடும்; அதற்காக எழுகிற அனைத்து போராட்டங்களையும் ஆதரிக்கும்.
கருப்பு, நீலம், பச்சை வண்ணங்கள் சுட்டும் அரசியல் கருத்துகளோடு, போராட்டங்களோடு ஒருமைப்பாட்டு உணர்வுடன் நட்பு கொள்ளும்.
காஷ்மீர் பிரச்சனை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் மக்கள் நலன் காக்கப் போராடும். மக்கள் மீது போர் தொடுத்துள்ள பாசிச மத்திய அரசுக்கும் அதற்கு அடிபணியும் மாநில அரசுக்கும் எதிராக போராடும்.
‘எழுக தமிழ்’ என்ற முழக்கத்தோடு நம் இளம்தோழர்கள் நவம்பர் 18 அன்று நடத்தவுள்ள பேரணி வெற்றி பெற பாடுபடும்.
நவம்பர் 7 முதல் ஜனவரி 8 நாடு தழுவிய பொது வேலை நிறுத்த நாள் வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்திடும்.
நம்பிக்கையோடு களம் காண்போம்.
புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!
‘கம்யூனிஸ்ட் கட்சியின்’ அமைப்பு தொடர்பான அறிவிப்புகள்
கட்சி அமைப்பு தொடர்பான அடுத்த அறிவிப்புகளை தோழர்கள் கோவிந்தராஜ், ஜானகிராமன், சேகர் விரைவில் வெளியிடுவார்கள்.
இககமாலெ பற்றி எந்த விசயத்தையும் பதிவு செய்வதோ, பேசுவதோ தேவையில்லை. வெறுப்பரசியலுக்கு எதிராக போராடும்போது, நம்மை அறியாமலே நாம் அதற்கு இரையாகாமல் கவனமாக இருப்போம்.
தாமாக நம்மை அணுகுபவர்களைத் தவிர, வேறு யாரையும் நாம் சேர்க்க முயற்சி செய்ய வேண்டாம்.
புதிய தோழர்கள், புதிய பகுதிகள், புதிய வேலைகள் நோக்கி விரைந்தும் தொடர்ந்தும் முன்னேறுவோம்.