COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 2, 2015

மாலெ தீப்பொறி, 2015 நவம்பர் 01 – 15, தொகுதி 14 இதழ் 7

தோழர் டிகேஎஸ்ஸு க்கு செவ்வஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ன் தமிழ் மாநிலக் குழு உறுப்பினரும் அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவரும் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் 27.10.2015 அன்று இரவு 10.35 மணியளவில், இந்தியப் புரட்சிக்கான தன்னுடைய 40 ஆண்டுகள் பயணத்தினை, தனது இறுதி மூச்சுடன் நிறுத்திக் கொண்டார். அவருக்கு வயது 71.

சென்னை சிம்சன் ஆலைத் தொழிலாளியாக, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த அவர், தோழர் சாரு மஜ÷ம்தார் விடுத்த அழைப்பை ஏற்று கிராமப்புற பாட்டாளிகள் விடுதலைக்காக புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் பணியில் தன்னை முழு நேரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், திண்டுக்கல், கடலூர், தர்மபுரி, தற்போது நாகை - தஞ்சை என கிராமப்புற மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தோடு தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டார்.

கோலப்பன் குழு பரிந்துரையை அமல்படுத்தக் கோரி 2,000 பேரோடு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார். விளைவாக, மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி ரூ.45 வழங்கப்பட வேண்டும் என்று கிராமங்களில் தண்டோரா போட்டு அறிவித்தார். கிராமப்புற மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அப்போதைய அமைச்சர் பொன்னுசாமியின் வீட்டை மக்களைத் திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். விளைவாக 80 பேருக்கு வீட்டுமனைப் பட்டா கிடைத்தது.

உள்ளூர் ஆதிக்கக் சக்திகளுக்கு எதிராக தோழர் டிகேஎஸ் தொடர்ந்து நடத்திய போராட்டங்களின் விளைவாக திருச்சி சிறையில் 90 நாட்கள் அடைக்கப்பட்டார். நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் பாசனத்திற்கு காவிரி கேட்டு நரசிம்மராவ், மூப்பனார், மணி சங்கர் அய்யர் ஆகியோர்களின் உருவப் பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தினார். விவசாயத் தொழிலாளர்களின் வேலையை, வாழ்க்கையைப் பறிக்கும் அறுவடை எந்திரத்தை நிலத்திற்குள் இறக்கக் கூடாது என்று சொல்லி மக்களை ஒன்று திரட்டி அறுவடை எந்திரங்கள் மறிப்புப் போராட்டத்தை நடத்தி மாவட்ட நிர்வாகம் தலையிடச் செய்தார். திருப்பனந்தாள் மடத்தின் நிலத்தை குத்தகைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மடத்திற்குச் சொந்தமான இடங்களை கிராமப்புற மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா போட்டு கொடுக்க வேண்டும் என்றும் தொடர் போராட்டங்களை நடத்தினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைக்கரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் பலர் உயிரிழந்தார்கள். பலர் காயமுற்றார்கள். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உதவியும் காயமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் கிடைக்க தோழர் டிகேஎஸ் தலைமையில் இகக(மாலெ) தொடர் போராட்டங்களை நடத்தியது. நூறு நாட்கள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி வேப்பத்தூர் பேரூராட்சியில் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார் தோழர் டிகேஎஸ்.

கட்சியின் தலைமறைவு காலத்தில் கருப்பையா என்று அறியப்பட்ட தோழர் டிகேஎஸ்ûஸ வெண்ணிற உடையும் வெற்றிலை சீவலும் சிவப்புத் துண்டோடும்தான் காண முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)யின் தொடக்க காலம் முதல் உழைக்கும் மக்களுக்காக, இந்தியப் புரட்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் டிகேஎஸ். அக்டோபர் 11 அன்று நெல்லையில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் மேடையின் முதல் மாநில மாநாட்டில் உற்சாகத்தோடு கலந்து கொண்ட தோழர் டிகேஎஸ், அக்டோபர் 15 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற அவிகிதொச மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். அவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி இதுதான். பின்னர் அவருக்கு ஏற்கனவே இருந்த நுரையீரல் பிரச்சினை காரணமாக தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தோழர் டிகேஎஸ்ஸு க்கு அவரது வயது ஒரு தடையாக இருக்கவில்லை. இந்திய கிராமப்புற பாட்டாளி மக்களின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் டிகேஎஸ்ஸின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து போராடுவோம். தோழர் டிகேஎஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கு செவ்வஞ்சலி.

அக்டோபர் 27 அன்று கோவையில் பிரிக்கால் மற்றும் சாந்தி கியர்ஸ் ஆலைத் தொழிலாளர்கள் தோழர் டிகேஎஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் நடத்தினர்.

ஊழல், ஒடுக்குமுறை, துரோக ஆட்சி இனி தேவையில்லை

அதிமுகவின் 44ஆவது தொடக்க விழாவை முன்னிட்டு தனது கழக
உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தைப் படித்தால், கவுரவமான வாழ்வாதாரம் இல்லாமல், அதனால் குறைந்தபட்ச கவுரவமான உணவு உண்ண முடியாமல் ரத்தம் வற்றிப் போய் இருக்கும் தமிழக மக்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுவிடும்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் புதிய வேலை வாய்ப்புக்களை பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிற மன நிறைவோடு இந்த ஆண்டு விழாவை நாம் கொண்டாடுகிறோம் என்று ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை. தமிழக வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போர் 85 லட்சம் பேர். நான்கரை ஆண்டு காலமாக இல்லாமல் இப்போது அந்த 85 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறாரா ஜெயலலிதா? நான்கரை ஆண்டு காலத்தில் வந்த முதலீடு, உருவான வேலை வாய்ப்பு பற்றி போதுமான அளவு புள்ளிவிவரங்கள் வெளியாகிவிட்டன. ஜெயலலிதா வேலை வாய்ப்பு பற்றி சொல்வது பொய் என்பதை அந்தப் புள்ளிவிவரங்கள் மெய்ப்பித்தும்விட்டன.

தமிழ்நாட்டில் உருவாகிற வேலை வாய்ப்புகள் பற்றி, ஜெய லலிதா கொடநாடு சென்ற பிறகு ஆர்கே நகரில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் இன்னும் தெளிவாகச் சொல்கிறது. அரசு வேலை வாய்ப்பு முகாம் நடத்தினால் அரசுப் பணிகளுக்குத்தான் நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலை தேடுபவர்கள் தாங்களாகவே தேடிக் கொள்கிறார்கள். இன்று தமிழ்நாட்டின் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் கோடிக்கணக்கானவர் கள் அரசு நடத்திய வேலை வாய்ப்பு முகாமிலோ, அரசு நடத்தும் வேலை வாய்ப்பகங்கள் மூலமோ வேலை வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. 358 தனியார் நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுக்க மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்ததுதான் இதில் ஜெயலலிதா செய்திருக்கும் சாதனை. 3,000 அரசு ஊழியர்கள், 2,600 காவல் துறையினர் அன்று தனியார் நிறுவனங்களுக்காக வேலை பார்த்திருக்கின்றனர். கருணாநிதி தமிழ்நாட்டின் தீங்குகள் அனைத்துக்கும் காரணம் என்று சொல்கிற ஜெயலலிதா வேலை வாய்ப்பு முகாம் நடத்தி தனியார் நிறுவனங்களுக்கு உதவுவதில் கருணாநிதியின் நடைமுறையை பின்பற்றினார்.

வேலை கிடைக்காமல் இருக்கிற 85 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களில் 96,475 பேர் அந்த ஒரு நாள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள பதிவு செய்திருந்தார்கள். 58,835 பேர் வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்தார்கள். அவர்களில் 17,095 பேர் பணிநியமன ஆணை பெற்றார்கள். அந்த 17,095 பேரில் 6,453 பேர் இறுதி பணி நியமன ஆணை பெற்றார்கள். 21,000 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்திருந்த தனியார் நிறுவனங்கள் 17,095 பேருக்குத்தான் பணி நியமன ஆணை தந்துள்ளன. பணி நியமன ஆணை என்பது என்ன, இறுதிப் பணி நியமன ஆணை என்பது என்ன என்ற கேள்விகள் எழுகின்றன. இறுதிப் பணி நியமன ஆணை என ஒன்று இருக்கும்போது வெறும் பணி நியமன ஆணை வெற்றுக் காகிதம் என்று சாமானிய அறிவால் புரிந்துகொள்ள முடிகிறது. இறுதிப் பணி நியமன ஆணை பெற்றவர்களும் பெற்றுள்ள பணி எப்படிப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. அது நிரந்தரமான பணியா, நிரந்தரமற்றதா, ஒப்பந்தப் பணியா, தற்காலிகமானதா என அந்த ஆணை பெற்ற இளைஞர்களுக்குத் தெரியும். தனியார் நிறுவனங்கள் நேரடியாக நிரந்தரப் பணிகளுக்கு ஆளெடுப்பதில்லை என அனைவருக்கும்
தெரியும்.

58,835 பேரில் 17,095 பேருக்குத்தான் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்றால், 41,740 பேர் அரசு தனியார் நிறுவனங்களுக்காக நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் கூட வேலை கிடைக்காமல் திரும்பியிருக்கின்றனர். 3 ஆண்டு கால அனுபவம் பெற்றுள்ள ஒருவர் அங்கு வேலை கிடைக்காமல் திரும்பியிருக்கிறார். புதிதாக வேலைக்கு சேருபவர்களுக்குத்தான் தனியார் நிறுவனங்கள் முன்னுரிமை அளித்தன. 10 மணி நேர வேலை, ரூ.8,500 மாத ஊதியம் என்பதாகவே பல வேலை வாய்ப்புகள் அங்கு இருந்துள்ளதாக வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் சொல்கிறார்கள்.
ஆர்கே நகரில் தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு கோத்தகிரியில் நடந்த விழாவில் ஜெயலலிதா பணி நியமன ஆணைகள் வழங்கினார். இவர்கள் 5 பேரும் பயிற்சி பட்டதாரி மற்றும் பட்டய பொறியாளர்கள். யாரும் நிரந்தர பொறியாளர்கள் இல்லை. இவர்கள் 5 பேரும் பணி நியமன ஆணை பெற்ற பிறகு கோத்தகரி சென்றார்களா, அல்லது முன்னரே நடந்த ஏற்பாட்டில் அவர்கள் கோத்தகிரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்களா என்று தமிழக அரசு விளக்க கடமைப்பட்டுள்ளது. எல்லாம் மக்கள் பணத்தில் நடந்துள்ளது. இந்த விசயங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், ஆர்கே நகர் வேலை வாய்ப்பு முகாம், தமிழ்நாட்டில் வேலை தேடும் லட்சக்கணக்கான இளைஞர்களை குரூரமான பரிகசிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்று முடிவு செய்ய முடியும்.

ஒரு நாள் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் 6,453 பேருக்கு வேலை கிடைத்தது என்று சொல்ல முடியும் என்றால், ஜெயலலிதா தனது கடிதத்தில் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் அவர் சொன்ன 4,70,065 வேலை வாய்ப்புகள் எப்படி, எப்போது வரும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஜெயலலிதா கொடநாடு சென்று விட்டார். அவரைப் பொறுத்தவரை சட்டமன்றத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்துக்கு வெளியிலும் 110தான். அவர் சொல்வார், மற்றவர்கள், மக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும், விவாதம் கேள்வி எதற்கும் வாய்ப்பில்லை என்கிறார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை மக்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளது. ஒப்புக்கு நான்கு பருப்பு போட்டு சாம்பார் செய்யும் நகர்ப்புற, கிராமப்புற வறியவர்கள் அதையும் நிறுத்திவிட்டார்கள். டீசல் விலை உயர்வுக்கு அய்முகூ அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஜெயலலிதாவை, தனியார் டீசல் வாங்க பொதுத்துறை போக்குவரத்து பேருந்துகளை வரிசையாக காத்திருக்கச் செய்த ஜெயலலிதாவை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. வெங்காயத்துக்கும் பருப்புக்கும் அதுபோன்ற காத்திரமான குரலை இன்று ஜெயலலிதாவிடம் காண முடியவில்லை.

சட்டமன்றத்தில் தப்பித்து விடுவதுபோல், சட்டமன்றத்துக்கு வெளியில் தப்ப முடியாது என்பதை அவர் அனுபவித்து புரிந்துகொண்டவர். எனவேதான், நமக்கு நாமே என்று ஸ்டாலின் சொல்வதை எதிர்கொள்ள, உங்களுக்காக நான் என்று சொல்கிறார். அடுத்து வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளைக் காட்டிலும் பெரிய வெற்றியை அதிமுக பெற்றாக வேண்டும் என்று கழக உடன் பிறப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.

தமிழக மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி வளம்தான் தனது இலக்குகள் என ஜெயலலிதா இன்று சொல்வதையே 2011ல், 2014ல் தமிழக மக்கள் கேட்டார்கள். நான்கரை ஆண்டு காலம் விலைஉயர்வு, கட்டண உயர்வு, ஒடுக்குமுறை, துரோகம், அனைத்து தளங்களிலும் ஊழல் என மக்கள் பற்றி சற்றும் அக்கறை படாதவர் என்ற யதார்த்தமே பார்த்தார்கள். இனி தங்களுக்கு ஜெயலலிதா ஆட்சி தேவையில்லை என்ற முடிவை அறிவிக்கக் காத்திருக்கிறார்கள்.

வளர்ச்சியின் அமுதம் கொல்லப்பட்டவர்களின் 
மண்டை ஓடுகளில் பருகப்படுகிறது

.........முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியினால் மட்டுமன்றி, அந்த வளர்ச்சி முழுமை பெறாததாலும் நாம் துன்புறுகிறோம். நவீன கால தீங்குகளுக்கு அக்கம்பக்கமாக, காலாவதியாகிப் போன உற்பத்தி முறைகளின் செயலற்ற பிழைத்திருத்தலில் இருந்து உருவாகி சுவீகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த தீங்குகளும், அவற்றின் தவிர்க்க முடியாத சமூக அரசியல்ரீதியாக  வழக்கொழிந்தவைகளும் நம்மை ஒடுக்குகின்றன. நாம் உயிருள்ளவையால் மட்டுமன்றி, மடிந்து போனவையாலும் துன்புறுகிறோம்.
காரல் மார்க்ஸ், 1867, மூலதனம் தொகுதி 1, முதல் ஜெர்மன் பதிப்பின் முன்னுரையில்

நாடு பற்றி எரிகிறது. ரத்தம் சிந்துகிறது. பிரதமர் மோடி பீகாரில், வானொலியில் பிடில் வாசிக்கிறார். இந்தியாவை குஜராத்தாக மாற்றிக் காட்டுவதாக தேர்தல் பிரச்சாரத்தில் மோடி உறுதியளித்தார். அந்த வாக்குறுதியை மட்டும்தான் இந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் அவரது சங்பரிவார் கும்பல்களோடு சேர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மசூதியை இடித்தவர்கள், தேவாலயங்களை கொளுத்தியவர்கள் நாட்டின் அஸ்திவாரத்தை கொலைவெறி கொண்டு இடிக்கிறார்கள்.

வெறுப்பு அரசியலை பரப்ப அவர்களுக்கு வெறும் வதந்தி போதுமானதாக இருக்கிறது. இதற்கும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள். 60 பேருக்கும் மேற்பட்ட இசுலாமியர்களைக் கொன்று, அவர்கள் வீட்டுப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, ஆயிரக்கணக்கான இசுலாமியர்களின் வீடுகளை சொத்துக்களை சூறையாடி, அவர்கள் சொந்த ஊரை விட்டு விரட்டி, அக்கம்பக்கமாக தேர்தலில் வாக்குகளையும் பெற, முசாபர்நகரில், ஓர் இந்து இளைஞனை இசுலாமியர்கள் தாக்குவது போன்ற ஒரு போலி காணொளி காட்சி அந்த இந்துத்துவ கொலைவெறி கும்பல்களுக்கு போதுமானதாக இருந்தது. இந்துப் பெண்ணை இசுலாமிய இளைஞன் காதலித்தான் என்ற வதந்தி போதுமானதாக இருந்தது. மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற வாட்ஸ் அப் வதந்தி முகமது அக்லாக்கைக் அடித்துக் கொலை செய்ய அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.

இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது என்று எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பித் தந்து, தாங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து விலகி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த சூழலில், நாடு முழுவதும் அக்லாக் படுகொலைக்கு கடுமையான கண்டனக் குரல் எழுந்து கொண்டிருந்த சூழலில், இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி நாட்டின் ஆன்மாவை நொறுக்கிப் போட்டது.

இந்துத்துவ சக்திகளின் ஆட்சியில் பசுக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இல்லை. எந்தப் பிரச்சனையில் எங்கு எப்போது யாரைத் தாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்து எச்சரிக்கையாக இருக்கக் கூட முடியவில்லை. திடீரென்று ஏதோ ஓர் ஜாகரன், அல்லது ஒரு சேனா, அல்லது ஒரு சமிதி வருகிறது. ஏதோ ஒரு காரணம் சொல்கிறது. எழுத்தாளர்கள் மீது சிறுபான்மை மக்கள் மீது, தலித்துகள் மீது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்துக்களை புண்படுத்தினால் இப்படித்தான் நடக்கும் என்று, நாட்டின் பல்லாயிரம் கோடி இந்துக்களால் நியமிக்கப்பட்டு, படுகொலை செய்ய அதிகாரம் பெற்றுவிட்ட பிரதிநிதி போல் பேசுகிறது.

எதற்கு பதில் சொல்வது எதை கணக்கில் கொள்வது எதை விட்டுவிடுவது என்று நாட்டு மக்கள் திணறத் திணற, பாஜக அமைச்சர்கள், மாநில முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சங்பரிவார் தலைவர்கள் அடுத்தடுத்து வெறுப்புப் பேச்சு பேசி வருகிறார்கள். இந்தியாவில் இருக்க வேண்டும் என்றால் இசுலாமியர்கள் மாட்டுக் கறி உண்ணக் கூடாது என்று ஒரு மாநில முதலமைச்சர் சொல்கிறார். பசுக்களை கொல்பவர்கள் கொல்லப்படுவார்கள் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கிறார். அக்லாக் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படவில்லையென்றால் மதவெறி வன்முறை வெடிக்கும் என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் மிரட்டல் விடுக்கிறார். உண்மையில், வன்முறையைத் தூண்டும்படி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிற இவர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இசுலாமியரை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்வதற்கு துணை நின்றாரா, அவரை பிரதமராக்கு, ராமனின் குழந்தைகள் தவிர மற்றவர்கள் முறைதவறிப் பிறந்தவர்கள் என்ற கருத்தை துணிச்சலுடன் சொல்வாரா, அவரை அமைச்சராக்கு, இசுலாமியர்களுக்கு எதிராக விஷம் கக்குவாரா, அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கு என்று தேடி வடிகட்டி அனுப்புகிறது ஆர்எஸ்எஸ். குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டிய, தண்டிக்க வேண்டிய இடத்தில் இருப்பதால், குற்றங்களை தொடர்ந்து செய்வதில் அவர்களுக்கு தடையிருப்பதில்லை.

மோடியின் மவுன யோகா நீடிக்க நீடிக்க இசுலாமியர்கள் மீது, தலித்துகள் மீது, எழுத்தாளர்கள் மீது, அதிருப்திகளை வெளிப்படுத்துபவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. முகமது அக்லாக் படுகொலை பற்றி மோடி மவுனம் காத்த சில நாட்கள் இடைவெளியில் இமாச்சலபிரதேசத்திலும் ஜம்மு காஷ்மீரிலும் பசுவைக் கடத்தியதாகச் சொல்லி இரண்டு இசுலாமியர் இளைஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். மத்தியபிரதேசத்திலும் கர்நாடகாவிலும் மாட்டுக்கறி, பசுவதை நடந்ததாகச் சொல்லி கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்டன.

இப்போது தாவன்கரேயில் இன்னும் பெயர் தெரியாத அமைப்பு உச்சங்கி பிரசாத் என்கிற இளம் தலித் எழுத்தாளரை தாக்கியி ருக்கிறது. ஏகலைவனிடம் குருதட்சணை என்று சாக்கு சொல்லி கட்டை விரலை வாங்கிக் கொண்டார்கள். இன்று அதுபோல் சாக்கு சொல்லக் கூட அவர்களுக்கு அவசியம் ஏற்படு வதில்லை. முற்பிறவியில் பாவம் செய்ததால் தலித்தாய் பிறந்தாய், இந்துமதத்தை விமர்சித்து எழுதினால் கையை, விரல்களை வெட்டி விடுவோம் என்று சொல்கிறார்கள். இந்துமத நம்பிக்கைகள் பற்றியும் மோடி பற்றியும் விமர்சித்து எழுதக் கூடாது என்றும் மீறினால் பாலியல் வன்முறை, திராவக வீச்சு என்றும் சேத்தனா தீர்த்தஹள்ளி என்ற எழுத்தாளருக்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது. தாக்குதலிலும் வகை பிரிக்கிறார்கள். தலித் மீது ஒரு வகை தாக்குதல். பெண் மீது வேறு வகை தாக்குதல்.

சுஷ்மா ஸ்வராஜ், வசுந்தரா ராஜே, பங்கஜா முன்டே என பாஜக மத்திய, மாநில அமைச்சர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது பற்றி பேச மறுத்ததுபோல், அக்லாக் படுகொலை நாட்டை உலுக்கியபோதும், மோடி பேச மறுத்தார். பீகார் தேர்தல், நாட்டு மக்கள் எதிர்ப்பு ஆகியவற்றால் பேச வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி பேசிய போது, தாத்ரி என்றோ, அக்லக் என்றோ, கண்டனம் என்றோ, குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றோ, தாத்ரி போன்ற கொலைவெறிச் சம்பவங்களை மத்திய அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றோ பொருள்படும்படி அவர் பேசவில்லை.

வருத்தம் தருகிறது, துரதிர்ஷ்டவசமானது என்று மோடி சொன்னதை தாத்ரி பற்றித்தான் சொல்கிறார் என்று நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதையொட்டி அவர் பேசியது காயப்பட்டு, அச்சத்தில் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்களை மேலும் காயப்படுத்துவதாக, மேலும் அச்சத்தில் தள்ளுவதாக இருந்தது. இசுலாமியர்களும் இந்துக்களும் சண்டைப் போட்டுக் கொள்ளாதீர்கள் என்றார். தாத்ரியில் நடந்தது இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நடந்த சண்டையா? இந்துத்துவ வெறிபிடித்த கும்பல் ஒன்று சேர்ந்து, தனது வீட்டில் இரவு ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த ஓர் இசுலாமியரை வெளியே இழுத்துப் போட்டு அடித்துக் கொல்வதற்குப் பெயர் சண்டையா? மாட்டுக்கறி விருந்து வைத்ததற்காக ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்துக்கு உள்ளேயே சக உறுப்பினர்களால் தாக்கப்படுவதற்கும் டில்லி சென்ற அவர் மீது கருப்பு மை பூசப்படுவதற்கும் என்ன பெயர்?

மாட்டுக் கறி வைத்திருந்ததாக வதந்தி, சந்தேகம் ஆகியவற்றின் பேரில் இசுலாமியர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட, மாட்டுக் கறி உண்பவர்களுக்கும் மாடுகளை பாதுகாப்பவர்களுக்கும் இடையில் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்று பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜககாரர்கள் கேட்கிறார்கள்.

இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் என்றால் அதற்கு எதிராக தமது உயிரையும் துறப்பதாக மோடி பீகாரில் சொல்கிறார். இடஒதுக்கீடு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சொன்ன தால் முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவில் பாஜகவின் வெற்றி வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்ததால், இப்போது உயிர் துறப்பதாகச் சொல்கிறார்.

தலித் தாய் தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகள் இரண்டு வயது, பிறந்து எட்டு மாதங்கள்... தலித்தாகப் பிறந்தது அந்தக் குழந்தைகளின் குற்றமா? உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். உயிரைத் துறப்பதாகச் சொல்லும் மோடி அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்டதும் கண்டனம் தெரிவித்தாரா? அக்லாக் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து விடுபடாத தேசத்தின் மீது இந்தக் குழந்தைகள் படுகொலை பேரிடியாய் இறங்கியது. மனசாட்சி இருக்கும் ஒவ்வொரு இந்தியரும் கலங்கிப் போனார். இந்தப் பாதகத்தைச் செய்த சாதி வெறியர்கள் குழந்தைகளைக் கூட விட்டுவிடத் தயாராக இல்லை. உயிர் தப்பிக்கட்டும் என்று எண்ணி பற்றியெரிகிற குடிசைக்குள் இருந்து வெளியில் வீசப்பட்ட குழந்தையை கொலைகாரர்கள் மீண்டும் எரிகிற குடிசைக்குள் தூக்கிப்  போட்டார்கள். வெண்மணியில் பார்த்தோம். நக்சல்களாக மாறுவார்கள் என்பதால் லக்ஷ்மண்பூர் பாதேயில் குழந்தைகளைக் கொன்றார்கள். இன்றும் தலித் குழந்தைகள் தலித்துகள் என்பதற்காகக் கொல்லப்படுகிறார்கள்.

நாய்க்குட்டி காரில் மாட்டிக் கொண்டால் மனம் வருத்தப்படுவதுபோல் குஜராத்தில் 2002ல் இசுலாமியர்கள் கொல்லப்பட்டதற்கு நரவேட்டை நரேந்திர
மோடி பிரதமரான பிறகு வருத்தப்பட்டார். இன்று அவருடைய சக அமைச்சர், தீயிலிட்டுச் சாகடிக்கப்பட்ட தலித் குழந்தைகளை நாய்கள் என்று சொல்கிறார். நாயின் மீது யாராவது கல்லெறிந்தால் அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று சொன்னதை தவறாக திரித்து ஊடகங்கள் சொல்லிவிட்டன என்கிறார். பெரிய மனிதர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் ஊழல் அல்லது பிற குற்றங்களில் கைது செய்யப்படும்போது நெஞ்சு வலி என்கிறார்கள். ஆதிக்க வெறியுடன் பேசிச் சிக்கிக்கொள்ளும்போது ஊடகங்கள் தவறாகச் சொல்லிவிட்டன என்கிறார்கள்.

தலித் மக்களை நாய்களாகத்தான் கருத வேண்டும் என்று மனு சொன்னார், அதனால் அப்படிச் சொன்னேன் என்று வி.கே.சிங் சொல்லவில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம். ஆனால் அவரைப் போன்றவர்கள் இன்னும் வருணாசிரம படிநிலை முறையில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் நல்ல பிறப்பு பிறந்தவர்கள், அறிவு படைத்தவர்கள், அதிகாரம் பெற்றவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் மேல், மற்றவர்கள் கீழ். கீழே இருப்பவர்களை மேலே உள்ளவர்கள் எப்படியும் நடத்துவார்கள். ஜனநாயக விழுமியங்களை மிதிப்பார்கள். குழந்தைகள் கொல்லப்பட்ட ஓரிரு நாட்களில் 15 வயது தலித் சிறுவன் புறா திருடிய குற்றத்துக்காக காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டு மறுநாள் தூக்கில் தொங்குகிறான். அவன் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. உடற்கூராய்வு அறிக்கை வரும் முன்னரே அந்தச் சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக அரியானா முதல்வர் சொல்கிறார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீண்டும் தலையிட்டு அங்கங்கு நடக்கும் சிறிய சம்பவங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்காமல் அடுத்த வேலையைப் பாருங்கள் என்கிறார். தலித் மக்கள் படுகொலை செய்யப்படுவது அவருக்கு சிறிய விசயம் எனும்போது, அவரிடம் வேலை அறிக்கை சமர்ப்பிக்கும் மோடி அதைப் பற்றி பேசாமல் இருப்பதில் வியப்பில்லை. தலித் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படும் போது, அந்தப் படுகொலைகள் தொடர்பான கூருணர்வற்ற ஆதிக்க வெறி தலைக்கேறிய அறிவிப்புகள் வரும்போது வேடிக்கை பார்த்த பிரதமர், இடஒதுக்கீட்டை பாதுகாக்க உயிர் தருவ தாகச் சொல்வதை நம்ப இங்கு யாருமில்லை.

பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, உணவு உண்ணும் உரிமை, விரும்பிய மனிதரை மணக்கும் உரிமை என அடிப்படை உரிமைகளாக அரசியல் சாசனத்தில் சொல்லப்படுபவை அனைத்தும் மீறப்படுகின்றன. அப்படித்தான் மீறப்படும், பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள் என்கிறது சங் பரிவார் கும்பல். இசுலாமியர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்றால், எழுத்தாளர்களும் தலித் மக்களும் பெண்களும் எங்கு செல்ல வேண்டும்? அவர்கள் நடத்தும் தாக்குதல்கள் தன்னெழுச்சியாக நடத்தப்படுபவை அல்ல. ஊர்க் கூட்டம் போட்டு திட்டமிட்டு அறிவித்து நடத்துகிறார்கள். அங்கு ஒரு பிரச்சனையில், இங்கு வேறு ஒரு பிரச்சனையில் என நாட்டின் ஒட்டுமொத்த சூழலிலும் திட்டமிட்ட விதத்தில் மதவெறி நஞ்சைப் பரப்புகிறார்கள். கலாச்சார அமைப்பு என்று சொல்லப்படுகிற ஆர்எஸ்எஸ், ஆட்சி எப்படி நடத்தப்பட வேண்டும் என வெளிப்படையாக வழிகாட்டுகிறது. இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கும் அதன் நிகழ்ச்சிநிரலில் முன்னேறிப் பாய்கிறது.

இதுபோன்ற தாக்குதல்களுக்கு பாஜக ஆளும் மாநிலங்களில் எதிர்ப்பு இல்லை, மற்ற மாநிலங்களில்தான் எதிர்ப்பு இருக்கிறது, எனவே காங்கிரசும் மற்ற கட்சிகளும் இந்தப் படுகொலைகளை அரசியலாக்கப் பார்க்கின்றன என்று மிகவும் புத்திசாலித்தனமான வாதத்தை சங் பரிவார் கும்பல் முன்வைக்கிறது. குஜராத்தில் இசுலாமியர்கள் 2002லேயே ஒடுக்கப்பட்டுவிட்டனர். நடக்கிற கொலைவெறி தாக்குதல்கள் நாடு முழுவதும் சிறுபான்மையினரை தலித் மக்களை அச்சத்தில் தள்ளியிருக்கும்போது, கிட்டத்தட்ட இனத்தூய்மை போன்றதொரு போக்கு தீவிரமடையும்போது, பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த அச்சம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும்.

இந்துத்துவா பயங்கரவாதம் என்று சொல்லக் கூடாது என்று சங் பரிவார் கும்பல் சொல்கிறது. அடித்துக் கொலை செய்வது, வெட்டிக் கொலை செய்வது, துப்பாக்கியில் சுட்டுக் கொலை செய்வது, குண்டுகள் வெடித்து கொலை செய்வது என மனித உயிர்களை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு பயங்கரவாதம், மனிதப் படுகொலை என்றல்லாமல் தேசப்பற்று என்றா பெயர் சொல்ல முடியும்?

ஒரு பெரிய மக்கள் கூட்டத்தை, குற்றம் சுமத்தி படுகொலை செய்வதை நியாயப்படுத்த ஹிட்லர் கையாண்ட முறைகளை சங் பரிவார் கும்பல் இன்று கையாள்கிறது. ஹிட்லர் முதல் சுற்று இனத்தூய்மை நடவடிக்கைகளில் வெற்றி பெற்றிருக்கலாம். அவர் பின்னர் வீழ்த்தப்பட்டது வரலாறு.
இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றப் போவதாகச் சொல்லும் மோடி நடக்கிற படுகொலைகள், அத்துமீறல்கள் பற்றி மவுனம் காப்பதுபோல், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றப் போவதாகச் சொல்லும் ஜெயலலிதாவும் இந்தப் படுகொலைகள், ஜன நாயக அத்துமீறல்கள் பற்றி மவுனம் காக்கிறார். நரேந்திர மோடி நல்ல நண்பர், அதனால், அவர் ஆட்சியில் நடக்கும் ஜனநாயக அத்துமீறல்கள் பற்றி ஜெயலலிதா பேசவில்லை என்று மட்டும் இந்த மவுனத்தின் பின் உள்ள காரணம் முடிந்து விடவில்லை. தமிழ்நாட்டில் கோகுல்ராஜ் படுகொலை, விஷ்ணுப்ரியா தற்கொலை, தலித் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை, பெண் கள் மீதான தாக்குதல்கள், தொடர்ந்து நடக்கிற சாதியாதிக்கக் கொலைகள் ஆகியவை பற்றியும் ஜெயலலிதா இன்று வரை பேச மறுக்கிறார்.

தாத்ரி படுகொலை தொடர்பான மோடி யின் மவுனம் பற்றி விமர்சித்த கருணாநிதி கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாக சொல்லி முடித்துக் கொள்ள வி.கே.சிங் வருத்தம் தெரிவிக்க வேண் டும் என்று, அவர் வருத்தம் தெரிவித்த செய்தி கள் வந்த பிறகு ஸ்டாலினும் கனிமொழியும் வலியுறுத்தினார்கள். தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் முடியட்டும், சாதி ஆதிக்க வெறியாட்டம் இல்லாத தமிழ்நாடு விடியட்டும் என்று அவர்கள் சொல்லத் தயாராக இல்லை.
இந்தியா மதவெறி வன்முறையின் நாடாகி விட்டது என்று சொன்ன ராமதாஸ் அரியானா வில் தலித் குழந்தைகள் கொல்லப்பட்டது பற்றி மோடியின் மவுன யோகாவை பின்பற்றுகிறார். மாற்றம் முன்னேற்றம் என்று வானம் பார்க்கும் அன்புமணி நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை பற்றி தனக்கு சம்பந்தம் எதுவும் இல்லை என்பதுபோல் இருக்கிறார். தமிழ்நாட்டில் தலித் மக்கள் படுகொலைகளுக்கு அவர்கள் உடைமைகள் சூறையாடப்படுவதற்கு காரணமாக இருப்பவர்களிடம் நாம் நீதி பற்றிய கருத்துக்களை எதிர்ப்பார்க்க முடியாது. சங் பரிவாரின் பல நிகழ்ச்சிநிரல்களில் உடன்பாடு கொண்டவர்கள் என்பதால்தான் மத்தியில் கூட்டணி என்று தேவைப்படும்போது சொல்லிக் கொள்வதை அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை.

நரவேட்டை நரேந்திர மோடியின் மற்றொரு தமிழ்நாட்டு கூட்டாளியான விஜயகாந்தும் பிரேமலதாவும் ஒலிபெருக்கி  முன் ஏற்ற இறக்கத்துடன் எவ்வளவோ விசயங்கள் பேசுகிறார்கள். அக்லாக் கொல்லப்பட்டது, அரியானா குழந்தைகள் கொல்லப்பட்டது, எழுத்தாளர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் ஆகியவை பற்றி அவர்கள் பேசத் தயாராக இல்லை.
பெருமாள் முருகன் முதல் பல்வேறு எழுத்தாளர்கள் தாக்கப்படுவது, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவது, தலித் மக்கள், பெண்கள், சிறுபான்மையினர் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவது என நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கிற ஜனநாயக அத்துமீறல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் தலைவிரித்தாடுகின்றன.

அதிதீவிர வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஆட்சியில் இருக்கும்போது, முதலாளித்துவத்தின் பிரும்மாண்டமான வளர்ச்சியின் போக்கில் மறைந்தே போயிருக்க வேண்டிய நிலப்பிரபுத்துவ மிச்சசொச்சங்கள் மேலும் புத்துயிர் பெற்று ஆட்டம் போடுகின்றன. விளைவாக வளர்ச்சியின் அமுதம் கொல்லப்பட்டவர்களின் மண்டை ஓடுகளில் பருகப்படுகிறது.

மூணாறில் இருந்து ஒலிக்கும் வர்க்கத்தின் குரல்:
இப்போது நாங்களே எங்களுக்காக பேசுவோம். 
எங்களுக்கு நீதி வேண்டும்.

அக்டோபர் 15 அன்று தோழர்கள் ரமேஷ், புவனா ஆகியோர் மூணாறு சென்று போராட்டத்திலிருக்கும் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களைச் சந்தித்தனர். அன்றுதான் அந்தத் தொழிலாளர்களின் 17 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தின் கடைசி நாள். அவர்கள் நவம்பர் 5 அன்று நடக்கவிருக்கிற தோட்டத் தொழிலாளர் கமிட்டிக் கூட்டத்திற்காக காத்திருக்க முடிவு செய்தார்கள். வெற்றிகரமான போனஸ் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய லிஸ்ஸி சன்னி, ராஜேஸ்வரி, தங்கள் தலைவர்களின் உரையைக் கேட்க பிரசித்தி பெற்ற போராட்ட இடத்தில் குழுமியிருந்த துணிச்சல் மிக்க பெண்கள் ஆகியோரை அவர்கள் சந்தித்தார்கள். இன்னொரு முக்கியத் தலைவரான கோமதி முக்கிய வேலை காரணமாக தேவிகுளம் சென்று விட்டார். சில ஆண் தொழிலாளர்களிடமும் அவர்கள் பேசினார்கள். அந்தத் தொழிலாளர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தரப்படுகின்றன. தொகுப்பு: ரமேஷ், புவனா. தமிழில்: தேசிகன்.

“ஆம் நாங்கள் வேலைக்குச் செல்லாவிட்டால் ஊதியம் இழப்போம். நாங்கள் சாப்பாடு இல்லாமல் 10 நாட்கள் கூட இருக்க முடியும். ஆனால் நிர்வாகம் 10 நாட்கள் இலாபத்தை இழந்துவிட்டு இருக்க முடியுமா? அதனால்தான் போனஸ் பிரச்சனையில் நிர்வாகம் இறங்கி வந்து எங்கள் கோரிக்கையை ஏற்றது. இப்போது நாங்கள் 20% போனஸ் பெற்றிருக்கிறோம். சம்பள உயர்வு பிரச்சனையிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.”

“நாங்கள் தொழிலாளர் துறை அமைச்சரை சந்தித்த போது 21 கிலோவுக்கு ரூ.350 தரப்படும் என்று ஒப்புக்கொண்டார். இப்போது தோட்டத் தொழிலாளர் கமிட்டிக் கூட்டத்தில் 21 கிலோவுக்கு ரூ.301 என்ற அரசாங்கத்தின் முன்மொழிவை சங்கங்கள் ஏற்றுக் கொண்டார்கள். இது துரோகமில்லையா? அமைச்சரே ரூ.350 வரை போக முடியும் எனும்போது அவர் தனது மனதில் இன்னும் கூடுதலான தொகை முடிக்கத் தயாராக இருக்கிறார் என்றுதான் பொருள். இது நாம் இன்னும் கூடுதல் கேட்க முடியும் என்பதைக் காட்டுகிறது. ரூ.301 என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்த தோட்டத் தொழிலாளர் கமிட்டிக் கூட்டத்தின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அதன் பின்னர் முடிவு செய்வோம்.”

“தோட்டத் தொழிலாளர் கமிட்டிக் கூட்டத்தில் அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் 21 கிலோ தேயிலை பறிப்பதற்கு ரூ.301 என்பதை முன்வைத்தன. 21 கிலோவுக்கு மேல் பறித்தால் ரூ.301க்கு மேல் வருமானம் ஈட்டலாம் என்ற ஊக்கத் திட்டத்தையும் இது உள்ளடக்கியதாகும். இது உண்மையிலேயே எங்களிடம் கூடுதல் வேலை வாங்கும் திட்டமாகும். ரூ.301 என்பதை ஏற்றுக் கொள்ளத் தயாரான நிர்வாகம் 21 கிலோ இலைக்கும் பதிலாக 31 கிலோ என்கிறது. நாங்கள் ஏன் மேலும் மேலும்  அதிக பணிச் சுமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்? எங்களுக்கு 21 கிலோ இலைக்கு ரூ.500 வேண்டும். எங்களது ரூ.500 கோரிக்கையை ஏற்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. 21 கிலோவுக்கு ரூ.500 என்பதும் அந்தப் புள்ளியிலிருந்து மேற்கொண்டு ஊக்க ஊதியம் என்பதும் எங்கள் நிலைப்பாடாகும்.”

“நாளொன்றுக்கு சராசரியாக 40 கிலோ எடுக்க வேண்டும். நிர்வாகம் சராசரி 40 கிலோ என்று நிர்ணயித்துள்ளது”.

“நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்று யார் சொன்னது? அவர்கள் எங்கள் சக தொழிலாளர்கள் மட்டுமல்ல. எங்கள் குடும்ப அங்கத்தினர்களும் கூட. நாங்கள் எப்படி அவர் களுக்கு எதிராக போராட முடியும்? எங்கள் போராட்டம் அவர்களுக்கானதும் கூட. எங்களது ‘பெம்பிளை ஒருமையில்’ பெண் தொழி லாளர்கள் மட்டுமல்ல ஆண் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். எங்கள் போராட்டத்தில் ஆண்களை ஈடுபடுத்தினால் காவல் துறையினர் கையாள்வதற்கு அது எளிதாகிவிடும் என்பதால் ஈடுபடுத்தவில்லை. ஆண்களை ஈடுபடுத்தியிருந்தால் காவல் துறை அவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்திருக்கும். அவர்களைக் கைது செய்திருக்கும். இவ்வளவு நீண்ட நாட்கள் போராட்டம் என்பது சாத்திய மற்றதாகி இருக்கும். அப்படிப்பட்ட அடக்குமுறை பெரும் எண்ணிக்கையில் பெண்கள் கூடியிருக்கும்போது காவல்துறைக்கு சாத்திய மற்றதாகிவிடுகிறது. ஆண்களை ஈடுபடுத்துவதில் உள்ள இன்னொரு பிரச்சனை சிலர் குடிகாரர்களாக இருப்பது. குடித்துவிட்டு தொந்தரவு செய்வதும் நடக்கும். அதனால்தான் ஆண்களை ஒதுக்கி வைத்தோம். முதல் கட்ட போராட்டத்தில் ஆண் தொழிலாளர்கள் எல்லா வகையிலும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த இரண்டாவது சுற்றிலும் பின்னால் இருந்து எங்களுக்கு உதவுகிறார்கள்”.  (அப்படியென்றால் “இந்த வெற்றிகரமான பெண் தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பின்னால் ஆண் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லலாமா” என்று பேட்டி கண்டவர் கேட்டபோது, அவர்கள் “ஆம்” என்று சொன்னார்கள்)

“நாங்கள் வேலைக்குச் செல்லும்போது காலை 6 மணிக்குப் புறப்பட்டு மாலை 6 மணிக்கு வீடு வந்தடைவோம். நாங்கள் வேலை நிறுத்தத்தில் இருந்தபோது காலை 8 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். வீட்டு வேலைகளை குறுகிய நேரத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் பழகிக் கொண்டோம். நாங்கள் எங்கள் பணியிடத்துக்கு 2, 3 கி.மீ. தினமும் நடந்து செல்வது போலவே எங்கள் போராட்டத் தளத்துக்கும் தினமும் நாங்கள் நடந்து சென்றோம். இது எங்கள் உரிமைக்கான போராட்டம். இதில் எந்த சிரமத்தையும் நாங்கள் காணவில்லை.”

“எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தார்கள். இருக்கிறார்கள். குடும்பத்தில் பலரும் எங்கள் சக ஊழியர்களே. எங்கள் குடும்ப நலனுக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். ஆகவே எங்கள் போராட்டத்தை அவர்கள் எதிர்ப்பார்கள் என்ற கேள்வியே இல்லை. அப்படியே ஏதாவது ஆட்சேபணை இருந்தால் கூட நாங்கள் போராட்டத்தை விடுவதாய் இல்லை. இது எங்கள் உரிமை. நாங்கள் விவாகரத்தை சந்திக்க நேர்ந்திடும் என்றாலும் எங்கள் உரிமைக்கான போராட்டத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருப்போம்”.

“எங்களுக்கு எல்லாமே சங்கம்தான். சங்கம்தான் எங்களுக்கு துணிச்சலைக் கற்றுக் கொடுத்தது. ஆனாலும் வேறு சில பிரச்சனைகளும் உள்ளது. சமீப காலமாக எங்களுடைய பிரச்சனைகளை சங்கம் வலுவாக எழுப்புவதில்லை என்று நாங்கள் உணர்கிறோம். அவர்கள் நிர்வாகத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி எங்களுக்கு விளக்கம் சொல்கிறார்கள். சங்கத் தலைமையில் இருப்பவர்கள் வாழ்க்கை கூட சாதாரண தொழிலாளி வாழ்க்கையை விட மேலானதாக இருக்கிறது என்பதையும் பார்க்கிறோம். போனஸ் பிரச்சனை இதற்கு மேல் தாங்க முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டது. நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம். நாம் நமது சக்தியால் போராடுவோம் என முடிவு செய்தோம். இப்போது போனஸ் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம்.”

“நாங்கள் ஊக்கத் தொகையாக ஒவ்வொரு ரூபாய் பெறும்போதும் மேற்பார்வையாளர் ரூ.2ம், பிரிவு கள அதிகாரி ரூ.4ம், 3 பிரிவுகளுக்கான பொறுப்பாளர் ரூ.8ம், ஜ÷னியர் மேனேஜர் ரூ.16ம், சீனியர் மேனேஜர் ரூ.32ம் பெறுகிறார்கள். நாங்கள் அதிகமாக உழைத்தால், நிர்வாக வேலைகளை பார்ப்பவர்கள் அதிகமாகப் பெறுகிறார்கள். அதனால் அவர்கள் மனிதத் தன்மையற்ற வகையில் எங்களிடமிருந்து வேலையைப் பெறுகிறார்கள். சில நேரங்களில் மேற்பார்வையாளர் ஏதோ ஒரு காரணம் சொல்லி பெரும் அளவிலான தேயிலைகளை தரக் குறைவு என்று சொல்லி தள்ளுபடி செய்து சிவப்பு அட்டை வழங்கிவிடுகிறார்கள். இது ஊக்கத் தொகை வெட்டுக்கு இட்டுச் செல்லும். ஒரு தொழிலாளி 100 கிலோ தேயிலை பறித்திருந்தால் கூட அவர் ஊக்கத் தொகை பெற தகுதியற்றவராகி விடுகிறார். எங்களது மிகை நேரப் பணிக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்படுவதில்லை. ஆனால் எங்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுவிடும். கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் ஆப்ரகாம் மேத்யு மாதம் ரூ.4,80,000 சம்பளம் பெறுகிறார். அவ்வளவு பெரும் தொகை பெற அவர் என்னதான் வேலை செய்கிறார்?”

“நாங்கள் இங்கு 4, 5 தலைமுறையாக பணிபுரிகிறோம். கம்பெனி ஒருபோதும் லாபக் கணக்கு காட்டியதில்லை. எப்போதுமே நட்டத் தில் இயங்குவதாகத்தான் சொல்லி வருகிறது. அப்படியிருக்கும் போது அதிகாரிகளும் மேற் பார்வையாளர்களும் ஆடம்பரமான வாழ்க்கை எப்படி வாழ முடிகிறது? அவர்கள் குழந்தைகள் ஆடம்பரப் பள்ளிகளில் எப்படி படிக்க முடிகிறது?”

“இத்தனை ஆண்டுகால கடினமான உழைப்பினால் நாங்கள் எல்லா சக்தியையும் இழந்து விட்டோம். நாங்கள் எல்லாம் இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிகிறோம். கனமான சுமைகளைத் தூக்கிக் கொண்டு செங்குத்தான சரிவுகளில் செல்வதால் மூட்டு வலியால் அவதிப்படுகிறோம். டாடாவின் மருத்துவமனையில் எங்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை. அங்கேயும் கூட கண்ணன் தேவன் கம்பெனி பணம் கட்டினால் தான் சிகிச்சை என்று சொல்லி நாங்கள் மருத்துவத்திற்கு பணம் செலுத்தும்படி ஆகிறது. ஆகவே நாங்கள் தேனியிலுள்ள மருத்துவமனைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கர்ப்பப்பை தொடர்பான பல்வேறு பிரச்சனைகளால் பல பெண் தொழிலாளர்களுக்கு கர்ப்பப் பை அகற்றப்பட்டுவிட்டது.”

“ஒரு டிவிசனில் 200 பேர் வேலை பார்த்த இடத்தில் இப்போது அதே அளவு வேலையை 80 பேரை மட்டும் செய்ய வைத்துள்ளார்கள்”.
“தோட்டங்களில் அட்டைப் பூச்சிகள், பாம்புகள் மற்றும் வேறு பூச்சிகள் உள்ளன. நாங்கள் ஒரு கையால் தேயிலை பறிக்கும்போது இன்னொரு கையால் அட்டைப் பூச்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. பல தொழிலாளர்கள் பாம்புக் கடிக்கு ஆளாகி அவதிப்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் யானைகளும் வன விலங்குகளும் கூட தோட்டங்களுக்கு வருகின்றன. பல தொழிலாளர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் எங்கள் உணவில் மழை நீர் ரசம்போல் கலந்து விடுகிறது. அந்த உணவைத்தான் நாங்கள் உண்கிறோம்.”

“சம்பள ரசீதில் எங்கள் சம்பளம் ரூ.5013.96 என்றிருந்தாலும் அரிசி, விறகு, டீசல், கடன் என்ற கழிவுகளுக்கு பிறகு ஏறக்குறைய ரூ.2500 பெறுகிறோம். இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும்? இது நல்ல உணவு உண்பதற்குப் போதுமானதா? எங்கள் குழந்தைகள் படிப்புக்கு மற்ற செலவுகளுக்கும் என்ன செய்வது? அவசர கால செலவுகளுக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறோம். நிர்வாகத்திடம் கடன் கேட்டால் ஓய்வூதியப் பயன்களில் கழித்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். எங்கள் குழந்தைகளை பள்ளிக்கோ, கல்லூரிக்கோ அனுப்ப முடியாமல் மார்க்கெட்டில் கடைக்கு, அல்லது வேறு ஏதாவதொரு வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.”

“நாங்கள் ஏதாவது ஒரு பிரச்சனைக்காக நிர்வாகத்திடம் சென்றால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் யாரையாவது கூட அழைத்துவரச் சொல்கிறார்கள். இப்போது நாங்களே எங்களுக்காக பேசுவோம். எங்களுக்கு நீதி வேண்டும்.”

“நாங்கள் திரும்பவும் தொழிற் சங்கங்களுக்கு செல்லப் போவதில்லை. ‘பெம்பிளை ஒருமையை’ சீக்கிரமே தொழிற்சங்கமாக பதிவு செய்ய உள்ளோம். எங்கள் சங்கத்தில் பெண்களும், ஆண்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள், கண்ணன் தேவன் நிறுவனத்தின் 80% தொழிலாளர்கள் எங்களோடு இருக்கிறார்கள்.”

இந்தக் குரல்கள் மூணாறின் போராட்டக்காரர்கள் பல பத்தாண்டுகளாக அனுபவித்து வந்த சுரண்டலை தெளிவாக கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளன. மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டம்  ‘தொழிற்சங்கங்களுக்கு எதிரான’ நடவடிக்கை, ‘ஆண்களுக்கு எதிரான’ நடவடிக்கை என செய்திகள் இன்னும் கூட வலம் வருவதை இந்தக் குரல்கள் பொருத்தப்பாடு இல்லாதவையாக்கி விட்டன. மொத்தத் தொழிலாளர்களில் 80% பேர் தேயிலை பறிப்பவர்கள். அவர்கள் அனைவருமே பெண்கள். பெரும்பான்மை தலித்துகளாக  இருக்கும் அவர்கள் தங்கள் போராட்டம் கம்பெனிக்கு எதிரானது என்பதில் தெள்ளத் தெளிவாக இருக்கிறார்கள்.

இரத்த உறிஞ்சிகள் 

‘ஒப்பந்தத்தின் படி, தேயிலை, காபி, ஏலக்காய் மற்றும் ரப்பர் தோட்டத்
தொழிலாளர்களின் கூலி நியாயமான அளவு உயர்ந்திருக்கிறது’ என்று அக்டோபர் 16ம் தேதிய தி இந்து நாளேடு ‘போராட்டத்தின் பாடங்கள்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தற்போதைய கூலி பற்றி சொன்ன விபரங்களைப் பார்க்கும் போது கண்ணன் தேவன் கம்பெனியில் ‘நியாயமானது‘ என எதுவும் இல்லை என்பது புலனாகிறது. தேயிலைச் செடிகளில் உள்ள அட்டைப் பூச்சிகள் மட்டும் இவர்கள் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. பேராசை பிடித்த கம்பெனியும் சேர்ந்துதான் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சுகிறது.

இப்போதுள்ள கூலி நிலவரப்படி 21 கிலோ தேயிலை பறிப்பதற்கு ரூ.231ம், 21 முதல் 80 கிலோ வரை ஒவ்வொரு கிலோவுக்கும் 60 பைசா ஊக்கத் தொகையாகவும் இதற்கும் மேல் பறிக்கும் ஒவ்வொரு கிலோவிற்கும் ரூ.1 வீதமும் வழங்கப்படுகிறது. ஒரு தொழிலாளி, நல்ல பருவ காலத்தில் ஒரு நாளைக்கு 300 கிலோ தேயிலை வரை பறிக்கிறார். பத்து சதம் பெண்கள் அந்த அளவுக்கு கத்திரி பயன்படுத்தி பறிக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

300 கிலோ பறிக்கும் ஒரு தொழிலாளி தற்போதைய கூலி நிர்ணயப்படி பெறும் கூலி பற்றி கணக்கு போட்டால் அதிர்ச்சி ஏற்படுகிறது. முதல் 21 கிலோவுக்கு மட்டும் ரூ.231. அடுத்த 59 கிலோவுக்கு ரூ.35.40, 81 கிலோவிலிருந்து 300 கிலோ வரைக்கும் தொழிலாளிக்கு ரூ.220 கிடைக்கும். ஆக 300 கிலோ தேயிலை பறிக்கின்ற ஒரு தொழிலாளிக்கு ரூ.231 + ரூ.35.40 + ரூ.220 என மொத்தம் ரூ.486.40 கிடைக்கும். நிர்வாகமே சொல்வது போல் 21 கிலோவுக்கு ரூ.231 என்பது நியாயமான கூலி எனும்போது, இந்த 279 கிலோ (300 - 21) என்பது 21 கிலோவின் 13 மடங்குக்கும் மேலானதாகும். அப்படியிருக்கும் பட்சத்தில் 300 கிலோ தேயிலை பறிக்கும் தொழிலாளிக்கு ரூ.231 + (13$231) = 3,234 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நிர்வாகம் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தப்படி ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு ரூ.486.40தான் பெறுகிறார். 300 கிலோ பறிக்கும் தொழிலாளியின் கூலி ரூ.3,234 என கணக்கிடப் பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தொழி லாளியிடம் ரூ.2747.60 ஏமாற்றும் நிர்வாகம், தொழிலாளியின் கோரிக்கை மிகவும் அதிகம் என்று கூற முடியுமா? இது தொழிலாளர்கள், குறிப்பாக தேயிலை பறிக்கும் பெண்கள், காலனிய காலத்து வேலை நிலைமைகளில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இந்தக் கொடூரமான சுரண்டல் கூலி கட்டமைப்பில் கூட தொழிலாளர்களின் கோரிக்கையான ரூ.5 ஊக்க ஊதியம் என்பது நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

ரூ.1500 லிருந்து ரூ.2000 மதிப்பிலான 3 -4 கிலோ டீ தூள் 21 கிலோ தேயிலையிலிருந்து எடுக்க முடியும். இந்த வகையில் ஒரு தொழிலாளி 10 சதத்திற்கு மேல் பெறுகிறார். (ரூ.231) என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் அடுத்த 279 கிலோ பறித்த தேயிலைக்கு தொழிலாளி ரூ.255.40 பெறும் போது அதன் சந்தை மதிப்பு 39லிருந்து 52 கிலோ டீ தூளுக்கு ரூ.19,500லிருந்து ரூ.26,000 ஆகிறது. இதிலிருந்து தொழிலாளி பெறும் ஒவ்வொரு 279 ரூபாய் கூலியும் ரூ.19,221 முதல் ரூ.25,721 வரையான வருமானத்தைப் பெற்றுத் தருகிறது என்று தெரிகிறது. டாடா நிறுவனம் இன்னுமொரு 1000 ரூபாயை நிறுவனச் செலவினங்களுக்குச் செலவிடுவதாய் வைத்துக் கொண்டால் கூட அது ஒரு தொழிலாளியின் ஒரு நாள் உழைப்பில் ரூ.18,000லிருந்து ரூ.24,000 வரை பெறுகிறது. ஒரு தொழிலாளியிடம் ஒரு நாளில் இந்த அளவு சுரண்டல் இருக்கும்போது 10,000 தேயிலை பறிப்பவர்களின் உழைப்பிலிருந்து கண்ணன் தேவன் எவ்வளவு பெரிய தொகை பெறும் என்பதை ஒருவர் கணக்கிட்டுப் பார்க்க முடியும்.

இந்த 300 கிலோ இலை பறிப்பு பருவ காலத்தில் மட்டும்தான் இருக்கும், அதுவும் எல்லா பெண்களாலும் முடியாது, அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே செய்ய முடியும், எனவே இது அநியாயமான கணக்கு தவறு என்று நிர்வாகம் சொல்லும் என்றால், நாளொன்றுக்கு 100 கிலோ சராசரி என்று எடுத்துக் கொண்டு இந்தக் கணக்குப் போட்டால் கூட நிர்வாகம் மிகக் குறைவாக கொடுத்து மிக அதிகம் பெற்றுவிடுவது தெரியும். தங்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என்பதால் மேற்பார்வையாளர் தங்களை 200 கிலோ பறிக்க நிர்ப்பந்திப்பதாக தொழிலாளர்கள் சொல்லும் செய்திகளும் வெளியாகியுள்ளன. எந்திரங்கள் பயன்படுத்தி நாளொன்றுக்கு 600 கிலோ வரை உற்பத்தி தரும் பெண்களும் உண்டு. தினமும் 70 கிலோ இலை பறிக்கும் தொழிலாளர்களும் உண்டு. அந்தச் சுமையை செங்குத்தான பாதையில் சுமந்துதான் நொந்து போனோம் என்கிறார்கள் தொழிலாளர்கள். ஊக்கத் தொகை என்ற விதத்தில் அல்லாமல் 21 கிலோவுக்கு ரூ.231 என்று கணக்குப் போட்டால் 100 கிலோவுக்கு 231 + (3.8 ல 231) என்ற விதத்தில் ரூ.1100க்கு மேல் ஒரு தொழிலாளிக்குக் ஒரு நாள் கூலி கிடைக்க வேண்டும். ஆனால் ஊக்கத் தொகை என்ற விதத்தில் தொழிலாளி பெறுவது, 21 கிலோ வரை ரூ.231, அடுத்த 59 கிலோவுக்கு ரூ.35.40, 81 கிலோவிலிருந்து 100 கிலோ வரைக்கும் தொழிலாளிக்கு ரூ.20 என மொத்தம் ரூ.286.40 கிடைக்கும். இந்த வகையில் 100 கிலோ இலை பறிக்கும் ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு இழப்பது ரூ.813.

சந்தையில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்தால் கூட கம்பெனிக்கு நஷ்டம்
ஏற்படாது. இங்கு போடப்பட்ட கணக்குகள் உள்நாட்டு சந்தை மதிப்பை வைத்துப் போடப்பட்டவையே. கம்பெனி தரமான தேயிலையை ஏற்றுமதியும் செய்கிறது. இது கம்பெனியின் கஜானாவுக்கு மேலும் மேலும் செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து எடுத்துக் கொண்ட பின்னர் மூணாறு நிலத்துக்கு எந்த விலையும் கொடுக்காமல் கம்பெனி தன் வசம் வைத்திருக்கிறது. கண்ணன்தேவன் முகமூடி அணிந்துள்ள பேராசை பிடித்த டாடா கம்பெனிக்கு இன்னும் வேறென்ன வேண்டும்? அது ஏற்கனவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது.

ஆன் லைன் மருந்து வணிகம்: 
மக்களின் ஆரோக்கியத்திற்கு சாவுமணி

மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும், மருத்துவ சேவை வசதிகளும் ஒரு நாட்டின் மக்கள் ஆரோக்கியத்திற்கான இரண்டு முக்கிய அடிப்படைகளாகும். ஏற்க னவே மருந்து உற்பத்தி, விநியோகம் போன்றவை உலக வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் அறிவுசார் காப்புரிமை அடிப்படையில் பல பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

தற்போதைய நவதாராளவாதக் கொள்கைகள் மூலம் பன்னாட்டு மருந்து உற்பத்தி கம்பெனிகள் தங்கள் உற்பத்திக்கான அறிவுசார் காப்புரிமை பெற்று, மருந்தின் உற்பத்திச் செலவை விட கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மருந்து விலைகளை நிர்ணயித்து ஏற்றுமதி செய்கின்றன. அல்லது உள்நாட்டில் உற்பத்தி செய்து விற்கின்றன. ஒரே மருந்திற்கே, மிகக் குறைந்த மாற்றங்களோடு போலியான காப்புரிமை பெறுகின்றன. இந்தியாவில் 2005 முதல் 2010 வரை 13,000 மருந்துகளுக்கு அந்நிய கம்பெனிகளுக்கு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு இந்தக் கம்பெனிகள் வைத்ததுதான் விலை. வேறு யாரும் அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாது.

இவற்றுக்கான விலைக் கட்டுப்பாடு முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பலவற்றையும் வெளிநாட்டு பன்னாட்டு முதலாளிகள் வாங்கி இருக்கின்றனர். ரேன்பேக்சி, சாந்தா பயோ டெக், நிக்கோலஸ் பிரமல் போன்ற பல பெரிய உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் வாங்கப்பட்டுவிட்டன. இதன் மூலம் முக்கியமான உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மக்கள் ஆரோக்கியம் குறித்த கொள்கைகள்

இந்தியாவில் பெரும்பாலான அடித்தட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. உணவு கிடைத்தாலும் கூட, கிடைக்கும் உணவு உடலில் தங்கி ஊட்டம் பெற வேண்டுமானால் மக்களின் ஆரோக்கியமான வாழ்வு முக்கியமாகும். ஆனால், மருந்து வாங்க பெரும் கடன் பட்டு வாழ்வதா அல்லது சாவதா என்பதே பல கோடி மக்களின் நிலை. இந்தியாவில் அறுதிப் பெரும்பான்மை மக்களுக்கு ஆரோக்கிய நலவாழ்வுக்கான காப்பீடு வசதியோ சமூகப் பாதுகாப்போ கிடையாது. இந்தப் பின்னணியில் நோய்வாய்ப்படுவதால் பெரும்பான்மை மக்கள் மருத்துவச் செலவின் மூலமே மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு புள்ளி விவரத்தின்படி கிட்டத்தட்ட 15 சதவிகித மக்கள் மருத்துவச் செலவின் காரணமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுகிறார்கள். பொது மருத்துவம் (அரசு நடத்தும்) என்பது பலருக்கு எட்டாக் கனியாக இருக்கிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளுக்கு பிறகும் மொத்த தேசிய வருமானத்தில் 1.04%தான் மருத்துவத்திற்காக மக்கள் ஆரோக்கியத்திற்காக அரசு செலவிடும் நிதி ஆதாரம். 2015ல் வெளியிடப்பட்ட புதிய ஆரோக்கிய கொள்கை மருத்துவத்திற்கு குறைந்தபட்சம் நாட்டின் மொத்த வருமானத்தில் 2.5% செலவிட வேண்டும் என பரிந்துரைத்திருக்கிறது. பல வளரும் நாடுகளில் மொத்த தேசிய வருமானத்தில் 4%க்கும் மேலாக மருத்துவத்திற்காக செலவிடப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு ஆதரவாக சட்டம் இயற்ற இந்திய அரசாங்கம் முனைப்பு காட்டியிருக்கிறது.

ஆன்லைன் மருந்து வர்த்தகமும் விளைவுகளும்

கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள ஸ்னேப்டீல்.காம் என்கிற நிறுவனம் ஆன் லைன் மூலமாக மருத்துவர் பரிந்துரை இன்றி பல மருந்துகளை  விற்று ஏமாற்றியதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அந்த நிறுவனத்தின் ஆன் லைன் வர்த்தகத்தை முடக்கியது. அய்தராபாத் நகரத்திலிருந்து செயல்படும் மெட் ப்ளஸ் என்ற நிறுவனம் ஆன் லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. மேலும் 41 நகரங்களுக்கு அந்த வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. அப்போலோ மருத்துவமனை நிறுவனமும் பெரிய அளவில் ஆன் லைன் மருந்து விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

ஆனால் இந்தியாவில் ஆன் லைன் மருந்து விற்பனையை கட்டுப்படுத்த போதுமான சட்டங்கள் எதுவும் இல்லை. மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள் விற்பனைச் சட்டம் விதி 65ன் கீழ் உள்ள கட்டுப்பாடுகள் மிகவும் பலவீனமானவை. எனவே இதற்கான புதிய கொள்கைகளை வகுக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த அரசின் கொள்கைகள் ஆன் லைன் வர்த்தகத்தை மேலும் ஊக்குவிக்கும், இது பெருமளவில் மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற அடிப்படையில்தான், 8,50,000 மருந்து சிறு விற்பனையாளர்களைக் கொண்ட அகில இந்திய மருந்துக் கடை அமைப்பை சார்ந்தவர்கள் அக்டோபர் 14 அன்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கூட அம்மா மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தன. இவர்களின் கூற்றுப்படி ஏற்கனவே ழஐஎவ & நஉணமநஐஅ என்ற பன்னாட்டு நிறுவனம் ஆன் லைன் மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆண்டொன்றிற்கு 13 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்கிறது. ஆன் லைனில் மருந்து வாங்க இந்தியாவில் 2012 முதல் 35 லட்சம் கை பேசி ஆப்ஸ் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே விஷம் போல் ஏறியுள்ள மருந்து விலை ஒருபுறம் இருக்க மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்பது, ஒரே பரிந்துரை மூலம் பல முறை மருந்து விற்பது, ஸ்நாப்டீல் கம்பெனியைப் போல் போலி மருந்து விற்பது போன்றவை பல்கிப் பெருக ஆன் லைன் மருந்து விற்பனையால் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை இயக்குனர், உலகில் பயங்கரவாதத்தால் இறந்தவர்களை விட, போலி மருந்துகளால் இறந்தவர்கள் மிக அதிகம் என்கிறார். அய்க்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட ஆன் லைன் மருந்து விற்பனையால் தேவையற்ற மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு பல இளைஞர்களும் குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி பல ஆய்வுகள் கூறுகின்றன.

அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஆன் லைன் மருந்து வர்த்தகம் மக்களின் நலன்களுக்கு முழுமையாக எதிரானது, அதை அனுமதிக்கக் கூடாது, அதற்கு ஆதரவான புதிய கொள்கைகள் ஏதும் அறிவிக்கக் கூடாது என்று முழக்கம் வைக்கின்றனர். மறுபுறம் பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளும் அப் போலோ போன்ற தனியார் மருத்துவ பெரும் நிறுவனங்களும் ஆன் லைன் வர்த்தகத்தை வரவேற்கின்றன.

மக்களின் ஆரோக்கியத்தை தனியார் துறைக்கு விட்டுக் கொடுத்தும், அறிவுசார் காப்பீட்டு பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் தாரை வார்த்து மருந்து வர்த்தகத்தை ஆன் லைன் மூலம் செய்ய அனுமதி அளிக்கப் பார்க்கும் அரசின் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.

ஜெயாவின் அறிவிப்பும் தமிழகப் பழங்குடியினர் விடுதலையும்

சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம்

ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 516 தமிழர்களை விடுவிக்க வேண்டுமென, மிகத் தாமதமாக, அக்டோபர் 15 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். அந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு இருந்தன: “கடந்த ஆகஸ்ட் 13 நிலவரப்படி தமிழகத்தைச் சார்ந்த 516 பேர் (கடப்பாவில் 107, சித்தூரில் 109, திருப்பதியில் 300) வனம் சார்ந்த குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஒப்பந்ததாரர்களால் அழைத்து வரப்பட்ட கல்வியறிவில்லாத ஏழை பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்கள் ஆவர்... ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் பெரும்பாலானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி 90 நாட்களில் இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், ஜாமீன் பெறும் தகுதி பெறுகின்றனர். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர்கள் தற்போது வரை சிறையில் உள்ளனர். வறுமை மற்றும் தேவையான சட்ட உதவி கிடைக்காததால் அவர்களால் ஜாமீன் பெற விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, அந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு ஆந்திர மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் தேவையான சட்ட உதவியை ஏற்பாடு செய்ய வேண்டும். சட்டப்படி தகுதியானவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்.” முதலமைச்சர் தானாக இந்தப் பிரச்சனையைக் கண்டுபிடித்தோ மனமிரங்கியோ இப்படி ஒரு கடிதத்தை எழுதிவிடவில்லை.

திருப்பதி சேஷாசலம் காடுகளில் தொலைந்து போன பழங்குடிகள்
தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளைச் சார்ந்த பழங்குடிகள் தங்களின் பாரம்பரியமான நிலங்களை அந்நியர்களிடம், முதலாளிகள், அரசியல்வாதிகள் போன்றோரி டம் தொடர்ந்து இழந்து வருகிறார்கள். மலைகளில் மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாததால், கேரளா மற்றும் கர்நாடகாவின் தோட்டத் தொழில் மற்றும் மரம் வெட்டும் வேலைகளுக்கு இடம் பெயர்ந்து செல்ல துவங்கினர்; அங்கு வேலைகளுக்காக சென்று திரும்புவது பிழைத்திருப்பதற்கான விதியாகிப் போனது. 2010க்கு பிறகு ஆந்திராவிலுள்ள திருப்பதி காடுகளில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்துகிற மரம் கடத்தும் மாஃபியாக்களின் முகவர்களான ஒப்பந்ததாரர்கள், தமிழகப் பழங்குடியிரை கூலி வேலைக்கு அழைத்துச் சென்று வேலைக்கு ஈடுபடுத்தினர். பிழைப்புக்கு தமிழகத்தில் வழியில்லாத இவர்கள், மரம் வெட்டும் வேலைக்குச் சென்று துப்பாக்கிச் சூடுகளில் உயிரையும் விட்டனர்.

2015, ஏப்ரல் 7 அன்று, 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக, மரம் வெட்டிய/கடத்திய குற்றங்கள் வகையில் ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2000க்கும் மேற்பட்டவர்கள் பிரச்சனை, தமிழக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. அகில இந்திய மக்கள் மேடை இந்தப் பிரச்சனைகள் மீது தொடர் போராட்டங்களை கட்டமைத்தது. தமிழக அரசாங்கத்திடம் நேரடியாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாகவும் முறையிட்டது. இடதுசாரிக் கட்சிகள் பழங்குடியினர் அமைப்புகளின் ஆதரவையும் திரட்டியது. இந்தப் பின்னணியில், இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகப் பழங்குடியினர் துயரம் கண்டு முதலமைச்சர் மனமிரங்கினாரா, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் நலனுக்கான கண் துûடைப்பு நடவடிக்கையா என்ற கேள்விகளுக்கு அப்பால், ஆந்திராவின் சிறைகளில் உள்ள மரம் வெட்டும் தொழிலாளர்கள் 516 பேர் மட்டும்தானா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள  வேண்டும்.

ஆந்திராவின் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படியே, 2000க்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் உள்ளனர். 2013 சி.ஆர்.பி.எண். 179 என்கிற, இரு வன அதிகாரிகள் கொலை வழக்கில் மட்டும் குற்றம் சாட்டப்பட்ட 434 பேர்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 376 பழங்குடியினர் இன்று வரை (22 மாதங்களாக) பிணையில் வர முடியவில்லை. தமிழக அரசாங்கம் பழங்குடியினர் மலைப் பகுதிகள்/கிராமங்களிலிருந்து முழுமையானத் தகவல்களை திரட்டி, முழு மனதுடன் அனைவரின் விடுதலைக்காகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பழங்குடியினர் வாழ்க்கை தமிழகத்திலா? ஆந்திரத்திலா?

பழங்குடியினர் நிலத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டது, நிலம் இல்லாமல் ஆக்கப்பட்டதுதான் ஒட்டுமொத்தப் பிரச்சனையின் சாரமாகும். தமிழகத்தின் பழங்குடியினர் திரட்சியானப் பகுதிகளை (கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன்மலை, ஜவ்வாது மலை போன்ற பகுதிகளை) அரசிலமைப்புச் சட்டத்தின் 5ஆவது அட்டவணையின் கீழ் கொண்டு வர உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு செட்யூல்டு டிரைப் பேரவை என்ற அமைப்பு, 47,446 ஏக்கர் பழங்குடி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள விபரங்களையும் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?

தமிழகப் பழங்குடியினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் ஜெயா அரசாங்கம் உண்மை யான அக்கறையைக் கொண்டிருக்கிறதா? 2015 துவக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது; சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த கல்வராயன் மலையில் பழங்குடியினருக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு, மலைக் கிராமங்களின் போக்குவரத்து, சாலை, குடிநீர், பள்ளிக் கூடங்கள், தொழிற்சாலைகள், வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு, மாநில அரசாங்கம் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என கோரியிருந்தது. உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உண்மை நிலவரத்தை ஆய்வு செய்ய டாக்டர் வி.சுரேஷ் தலைமையில் வழக்குரைஞர்கள் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவும் ஆய்வு செய்து, பரிந்துரைகளையும் முன்வைத்தது. இந்த அறிக்கை மீது உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை 2015, ஏப்ரலில் பிறப்பித்தது. வனத்துறை முதன்மைச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக்குழு, கல்வராயன் மலைப்பகுதியை மேம்படுத்த முறையான ஒரு குழு, மூன்று மாதங்களுக்குள், வழிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வகுக்க வேண்டும் என்றும் உத்தர விட்டது. ஆசிரியர் காலிப் பணியிடங்கள், கழிப்பறைகள், குடிநீர் போன்ற உடனடிப் பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 6 மாத காலம் ஆகிவிட்டது. தமிழக அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. தமிழகப் பழங்குடியினர் மீதான ஜெயா அரசாங்கத்தின் அக்கறைக்கு இது எடுத்துக்காட்டாகும்.

வனஉரிமைச் சட்டமும், தமிழக அரசின் அலட்சியமும்

“இந்திய வரலாறு நெடுக பழங்குடியினருக்கும், காடுவாழ் மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை சரி செய்வதற்காக” கொண்டு வரப்படுவதாக, தனது முகப்புரையில் கூறுகிற ‘வன உரிமைச் சட்டம் 2006’ அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகளே நிறைவு செய்யவுள்ளது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், சனவரி 2015 வரையில் 29,29,853 ஹெக்டேர் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டு, நாடு முழுவதும் 15,57,424 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மிகவும் குறைவானதுதான் என்றாலும், அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டத்திற்கு உட்பட்டு நியாயமாக நடந்துகொள்ளும் என பழங்குடி சமூகம் எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஒரே ஒரு பட்டா கூட பழங்குடியினருக்கு இது வரையிலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும், மலைகளில், வனங்களில் உள்ள தங்கள் நிலங்களுக்கு பட்டா கோரி விண்ணப் பித்த 21,781 மனுக்களில் (18,420 தனி நபர்கள், 3,361 சமூக நிலம் சார்ந்த கோரிக்கைகளில்) நடைமுறை பரிசீலனை முடிந்து விட்டது. 3,723 பட்டாக்கள் தயாராக இருப்பதாகவும் 28.02.2015 அன்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் உள்ள, ஓய்வு பெற்ற வனத் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கை (வி.சாம்பசிவம் எதிர் இந்திய அரசாங்கம் மற்றும் பிறர்) காரணமாக காண்பித்து இதுவரை பட்டாக்கள் வழங்கப்படவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக, நான்கு புலிகள் வனச் சரணாலயத்திற்கு வேண்டும் என்றுச் சொல்லி, தமிழகத்தில் 2,968 ச.கி.மீ. பரப்பு காடுகளில், மலைகளில் உள்ள பழங்குடி கள் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றனர். கூடுதலாக, யானைகள் வாழ்விடத்திற்காக 7,935 ச.கி.மீ. என வரையறுக்கப்பட்டுள்ளது. இது தான் தமிழகப் பழங்குடியினர் வாழ்வாதாரத் தின் சிக்கலான சித்திரம் ஆகும். என்ன செய்வார்கள்? எப்படி வாழ்வார்கள்?

அறிக்கைகள் மட்டும் தீர்வாகாது

தமிழகப் பழங்குடியினரின், பாரம்பரிய மான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன, வன உரிமைச் சட்டத்தின் படி ‘பட்டா’ உரிமை வழங்கப்படவில்லை, மலைக் கிராமங்களில் வேலைகள் உருவாக்கித் தரப்படவில்லை, விவசாயத்தை மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை, தமிழக அரசின் பல்வேறுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பித் தர நடவடிக்கைகள் இல்லை எனப் பிரச்சனைகள் ஏராளம், ஏராளம்.
ஆந்திராவில் சிறைபட்டுள்ள 2000க்கும் மேற்பட்ட தமிழக பழங்குடி தொழிலாளர்களை பிணையில் விடுவிப்பதற்கான முழுமனதுடனான நடவடிக்கையில் தமிழக அரசாங்கம் இறங்க வேண்டும், தமிழக பழங்குடியினர் வாழ்வாதாரமான நிலங்களை மீட்டெடுக்க வும், பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, முற்போக்கு சக்திகள், பழங்குடியினர் அமைப்பு கள் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

பன்னாட்டு முதலாளிகளுக்காக 
பருந்தைவிட உயரத்தில் பறக்கும் பருப்பு விலை

நாடு முழுவதும் பருப்புகள் விலை பருந்துகளை விட உயரமாக இறக்கை கட்டிப் பறக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது கிலோ 50 ரூபாய்க்கும் மோடி ஆட்சிக்கு வந்தபோது 80 ரூபாய்க்கும் விற்ற துவரம் பருப்பு விலை இப்போது கிலோ 220 ரூபாய். உளுத்தம் பருப்பு போன ஆண்டு கிலோ ரூ.75. இப்போது ரூ.160. பச்சைப்பயிறு போன ஆண்டு கிலோ ரூ.21. இப்போது கிலோ ரூ.113.

இந்தியா முழுவதற்கும் ஆண்டிற்கு 21 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 23 மில்லியன் மெட்ரிக் டன் அதாவது 2.30 கோடி டன் பருப்பு தேவை. இந்தியாவில் தான் அதிக அளவிற்குப் பருப்பு வகைகள் பயன்பாட்டில் உள்ளது. உற்பத்தியும் அதிகம் செய்யப்படுகிறது. பருவ நிலை மாற்றங்களால் பருப்பு வகைகள் உற்பத்தி 19 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது. 2010-11ல் 18.2 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த பருப்பு உற்பத்தி 2011-12 ல் 17.1 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறைந்து 2013-14ல் 19.8 மி.மெ.டன்னாகியது. அது மீண்டும் 2014-15ல்  17.4 மி.மெ.டன்னாகக் குறைந்துவிட்டது. இந்தக் குறைவை ஈடுகட்ட பருப்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மியான்மர், கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. பருப்பு இறக்குமதி 2010-11ல் 2.8 மி.மெ.டன்னாக இருந்தது படிப்படியாக உயர்ந்து 2014-15ல் 4.6 மி.மெ.டன்னாகியுள்ளது.

மக்கள் பருப்புகள் பயன்படுத்தும் அளவு  2010-11ல் 20.8 மி.மெ.டன்னாக இருந்தது 2013-14ல் 23.1 மி.மெ.டன்னாகியது. ஆனால், 2014-15ல் மக்கள் தொகை அதிகரித்த போதும் பருப்புகளின் பயன்பாடு 21.7 மில்லியன் மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் பருப்புகளின் விலை ஏற்றம். பற்றாக்குறை உற்பத்தி என்று வைத்துக் கொண்டாலும் விலை உயர்வு அதற்கு ஏற்ப இருந்தால் அதில் அர்த்தம் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பருப்பு உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 12 சதவீதம் குறைவு. இறக்குமதி 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளை பருப்பு விலை உயர்வோ 200 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பருப்புகளைப் பதுக்கி வைத்துக் கொண்டு திட்டமிட்டு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, பின்னர் விலையை ஏற்றி கொள்ளையடிக்க உள்நாட்டு வெளி நாட்டு முதலாளிகள் வியாபாரிகள், ஆன் லைன் வர்த்தக சூதாடிகள் செய்யும் சூழ்ச்சியும் தந்திரமும் அந்தப் பதுக்கல் பேர்வழிகளுக்கு முழு ஆதரவும் ஆசியும் அளிக்கும் பாஜக அரசும்தான் இந்த இரக்கமற்ற விலை ஏற்றத்திற்குக் முழுக் காரணம். பருவ மழையில் மாற்றம், புயல் வெள்ளம், பூச்சிகள் என பல்வேறு காரணிகளால் உற்பத்தி குறைகிறது என்பது முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கேற்ற முன் ஏற்பாடுகளைச் செய்யாமல் விலையை கடுமையாக உயர்த்தி விட்டுவிட்டு, பின்னர் ஒரு குறிப்பிட்ட அளவு குறைத்து கண்ட்ரோல் பிரைஸ், கட்டுப்பாடான விலை என்று நிர்ணயம் செய்து அப்பொருளுக்கான விலையை கூடுதல் விலையில் நிலை நிறுத்தும் தந்திரத்தைதான் இப்போது பாஜக அரசும் அதிமுக அரசும் செய்து கொண்டிருக்கின்றன.

பருப்பு விலை கிலோ ரூ200அய்த் தாண்டும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்திய அரசு திடீரென விலை உயர்வு ஏற்பட்டுவிட்டதுபோல் விழித்துக் கொண்டு பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை, அதிரடிச் சோதனை, பறிமுதல் என்று பாசாங்கு காட்டுகிறது. அக்டோபர் 21 வரை 35,288 டன் பருப்பு பறிமுதல் செய்துள்ளோம் என்று சொன்னார் அருண்ஜெட்லி. அதன் பின்னர் மேலும் சுமார் 42,000 டன் பறிமுதல் பருப்பு செய்யப்பட்டுள்ளது. பருப்பு தட்டுப்பாட்டை ஈடு செய்ய மோடி அரசு இப்போது இறக்குமதி செய்துள்ளது 5,000 டன்தான். இன்னும் 9,000 டன் பருப்பு இறக்குமதி செய்யவும் 30,000 டன் துவரம் பருப்பும் 10,000 டன் உளுத்தம் பருப்பும் சந்தை விலையில் விவசாயிகளிடம் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை முன்னரே செய்திருக்க முடியுமல்லவா? விவசா யிகளிடம் இருந்து பருப்புகளை முதலிலேயே அரசு வாங்கியிருக்க முடியாதா? ஏன் வாங்க வில்லை? ஆன் லைன் வர்த்தக சூதாடிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடமி ருந்து பருப்பை தவிட்டு விலைக்கு வாங்கிக் கொள்ள வசதியாக அரசு நேரடியாக கொள்முதல் செய்யவில்லை. இப்போது கடும் விலை உயர்வு, தட்டுப்பாடு, தேர்தல் நேரம் என்று வந்தவுடன் விவசாயிகளிடம் வாங்கப் போகி றோம் என்கிறது மத்திய அரசு.

நூறு கிராம் பருப்பில் 32 கிராம் புரோட்டினும் இரும்புச் சத்துக்களும் உள்ளன. அதனால்தான் பாதாம், பிஸ்தா போல் துவரம் பருப்பும் ஆகிவிட்டது போலும். சிக்கன் விலை பருப்பை விடக் குறைவு. ஒரு கிலோ சிக்கன் ரூ.130. ஒரு கிலோ மீன் விலை ரூ.150. ஒரு கிலோ துவரம் பருப்போ ரூ.210.  இந்தியாவில் இறைச்சியைக் காட்டிலும் பருப்பின் பயன்பாடு அதிகம். அப்படியிருக்கும்போது, மாட்டிறைச்சி சாப்பிடாதே என்றும் மாட்டிறைச்சி யார் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்துப் பார்த்து தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள் காவிக் கும்பல்கள், பெரும்பான்மையினர் சாப்பிடும் பருப்பை பதுக்கி வைத்துக் கொண்டு இறைச்சியைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கும் பதுக்கல் பேர்வழிகளைக் கண்டுபிடித்து பருப்புகளை வெளியே கொண்டுவர வேண்டியதுதானே?

பாஜக ஆட்சியில் வெங்காயம் முதல் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையும் அநியாயத்திற்கு அதிகரித்துள்ளது. வெங்காயம் கிலோ 10 ரூபாய் என இருந்ததை 100 ரூபாய்க்கும் மேல் கொண்டு சென்று இப்போது வெங்காய விலை ரேசனில் கிலோ ரூ.30 வெளிச்சந்தையில் கிலோ ரூ.42 என நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. இப்போது, கிலோ 52 ரூபாய் விற்ற துவரம் பருப்பு ரூ.210, 220 என விலை உயர்ந்துவிட்டது. மக்களுக்காக, குறைந்த விலையில் அரசே விற்கப் போவதாக பாசாங்கு செய்கிறார்கள். அனைத்து வகை பருப்புகளும் ஒரு கிலோ ரூ.100க்கு மேல் என்று நிலைப்படுத்த தற்போதைய விலை உயர்வும் அதைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி எடுக்கப் படும் நடவடிக்கைகளும் உதவக் கூடும்.
தமிழக அரசும் நியாயவிலைக் கடைகள் மூலமாக துவரம் பருப்பு கிலோ ரூ.110க்கு விற்கப் போகிறதாம். நவம்பர் 1 முதல் பாக்கெட்டுகளில் கிடைக்குமாம்.  மத்திய அரசு 500 டன் முழுப் பருப்பு தந்துள்ளதாம். அதை தனியார் அரவை ஆலைகளில் (கவனிக்க தனியார் அரவை ஆலைகள்) உடைக்கக் கொடுத்துள்ளார்களாம். இன்னும் 500 டன் மத்திய அரசிடம் கேட்டுள்ளார்களாம். அதுவும் சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ளவர்களுக்குதான் இந்தப் பருப்பு கிடைக்கும். மற்ற பகுதி மக்கள் என்ன செய்வார்கள்?

உண்மையில், பருப்பை குறைந்த விலை யில் மக்களுக்குக் கொடுப்பது
ஜெயலலிதா அரசின் நோக்கம் அல்ல. பெருமுதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பருப்பின் விலையை ஏற்றி விடுவதே அரசின் உண்மையான நோக்கம். அரசே கிலோ ரூ.110 என்று விற்கும்போது, வெளிச் சந்தையில் கிலோ ரூ.130 அல்லது ரூ135 என நிலை பெற்றுவிடும். நிச்சயமாக ஒரு கிலோ பருப்பு ரூ.60 அல்லது 70க்கு திரும்பப் போவதில்லை. மக்களும் வாங்கப் பழகி விடு வார்கள். வெங்காயம் விலை உயர்ந்தபோது அதை நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ.30க்கு தமிழக அரசு விநியோகித்ததை நாம் மறந்து விடக் கூடாது. வெங்காயத்தைப் பதுக்கி வைத்து காசு பார்ப்பவர்கள் என்று யாரும் பிடிக்கப்படவில்லை.

பருப்பு விலையைத் தொடர்ந்து பருப்பு பயன்படுத்தப்படும் அனைத்து உணவுகள், பண்டங்களின் விலையும் உயரும். அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை அறிவிக்காமலேயே மறைமுகமாக விலை ஏற்றம் செய்யும் தந்திரத்தைதான் இப்போது மோடி அரசும் ஜெயலலிதா அரசும் சேர்ந்து செய்து, பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகளுக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பருப்பு பதுக்கலே இல்லை என்கிறது தமிழக அரசு. ஆனால், 4.32 டன் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் சொல்கிறது. விலையில்லா பொருள்கள் கொடுப்பதாக வீதிக்கு வீதி பல கோடி ரூபாய் செலவில் பிரச்சார வாகனங்கள் மூலம் தன் ஆட்சியின் சாதனைகளை பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா பண்டிகை காலத்தில் தமிழக மக்க ளுக்கு அரை கிலோ பருப்பை விலையில்லாமல் கொடுக்க முடியாதா?
பருப்புப் பற்றாக்குறை ஏற்படும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பே மத்திய அரசு சொல்லி விட்டது, தமிழக அரசு விலையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால்தான் தமிழகத்தில் பருப்பு விலை உயர்ந்து விட்டது என்கிறார் தமிழிசை சவுந்தர் ராஜன். பாஜக ஆளும் மாநிலங்களான மகா ராஷ்டிரத்தில் 23,340 டன் பருப்பும் மத்திய பிரதேசத்தில் 2,295 டன்னும், ஹரியானாவில் 1,168 டன் பருப்பும் பறிமுதல் செய்யப்பட் டுள்ளதாக மோடியின் மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. அந்த மாநில மக்களும்தான் பருப்பு விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே பருப்பு பற்றாக்குறை உற்பத்தி இருப்பது தெரிந்தும் உடனடியாக இறக்குமதிக்கு நடவடிக்கை மேற்கொள்ளாமல் திட்டமிட்டே காலம் கடத்தியது மத்திய அரசு. ஆஸ்திரேலியாவில் மார்ச் மாதம் ஒரு டன் பருப்பு விலை 550 டாலராக இருந்தது. ஆனால், ஜ÷ன் மாதம் 775 டாலராக உயர்ந்து விட்டது. அதற்குப் பிறகு தான் இந்திய அரசு ஆஸ்திரேலியாவில் இருந்து பருப்பை இறக்குமதி செய்ய ஆரம்பிக்கிறது. ஒரு டன்னுக்கு 225 டாலர் கூடுதலாகக் கொடுத்து வாங்குகிறது. பண்டிகை காலம் என்பதால் 9 ஆயிரம் டன் கூடுதலாக இறக்குமதி செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது இன்னும் 9 லட்சம் டாலர் கூடுதலாகக் கொடுக்கப் போகிறார்கள். மோடியின் நண்பர் அதானி ஆஸ்திரேலியாவில் தொழில் நடத்த அங்குள்ள அரசு அனுமதி அளித்துவிட்டதால், அதற்கான நன்றிக் கடனாக (இந்திய மக்களின் வரிப்பணத்தில்) கூடுதல் விலை கொடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து பருப்பு வாங்குகிறாரோ மோடி.

ஆன் லைன் வர்த்தகம் நாளும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சிறு, நடுத்தர வியாபாரி களிடம் இருந்து நுகர்வோர்களை திசை திருப்பி கார்ப்பரேட் வர்த்தகங்களின் பிடியில் சிக்க வைக்கும் முயற்சியில் மோடி அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு பொதுவிநியோகத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். பொது விநியோகத்தை ஒழிப்பதற்கான முதல் படிதான் நேரடி பணப் பட்டுவாடா. எல்லாருக்கும் வங்கிக்கணக்கு, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் விலையை அதிகரிப்பது போன்றவை. முதலில் வெங்காயம். இப்போது பருப்பு.
நேரடி பணப் பட்டுவாடா பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பொது விநியோக முறையே சிறந்தது என்றும், நேரடி பணப்பட்டுவாடாவை துவங்கிவிட்டால், கொள்முதல், இருப்பு வைத்தல் போன்ற அடுத்தடுத்த  நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பதை முதலிலேயே யோசிக்க வேண்டும் என்றும் சொல்கிறார் 2015ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அய்க்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆங்கஸ் டீட்டன். பருப்புகளை பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்குச் சொல்கிறது. பொது விநியோக முறையை ஒழித்துக் கட்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்கிற மோடி அரசு பொது விநியோக முறையில் மக்களுக்கு பருப்பு தர வேண்டும் என்று சொல்கிறதென்றால், மக்கள் வெளிச்சந்தையில் வாங்கட்டும், அல்லது பருப்பை மறக்கட்டும், பட்டினி கிடக்கட்டும், குறைந்தபட்ச ஊட்ட உணவையும் துறக்கட்டும் என்று சொல்வதாகத்தான் பொருள்.

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் 
விழுப்புரம் மாவட்ட மாநாடு

கொத்தடிமை முறை, சிறார் உழைப்புக்கு முடிவு கட்டு! 
100  நாள் வேலைத் திட்ட கூலி பாக்கியை உடனே வழங்கு!

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட மாநாடு 15.10.2015 அன்று உளுந்தூர்பேட்டை தோழர் அம்மையப்பன் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. தோழர்கள் டி.கலியமூர்த்தி, எஸ்.பாபு, எம்.தட்சிணாமூர்த்தி, கே.கண்ணம்மாள் ஆகியோர் கொண்ட தலைமைக்குழு மாநாட்டை வழி நடத்தியது. மாநிலத் தலைவர் தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் கொடியேற்றி வைத்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் வெங்கடேசன், இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்றும், செங்கல் சூளை, கரும்பு வயல்களிலும், திருப்பூரிலும் கொத்தடிமைகளாகவும் உள்ள மாவட்டத்தின் விவசாயத் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். சிறார் உழைப்பை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அடிப்படைக் கல்வியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
தேசிய ஊரக வேலைத் திட்ட கூலி பாக்கி உடனடியாக வழங்க வேண்டும். கூலி கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மீது காவல்துறை வழக்கு போடுவதை மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
பஞ்சமி நிலம், வினோபா நிலம் மீட்கப்பட்டு தலித்துகளுக்கு வழங்கப்பட வேண்டும். அபகரித்துள்ள நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் சுகாதாரமாக, தரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும். பெண்கள் உடல் நலம் பேண உரிய நடவடிக்கை வேண்டும்.
இயற்கை வளங்கள் கொள்ளை போவது தடுக்கப்பட வேண்டும். உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வழியில் இருப்பு பாதை அமைத்திட வேண்டும். உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் விரைவு இரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
விவசாயம் சார்ந்த பஞ்சாலை, முந்திரி, காகித ஆலை, ஜவ்வரிசி போன்ற தொழிற்சாலைகள் துவங்கப்பட வேண்டும்.
கல்வராயன் மலையில் வனப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு அங்குள்ள மலைவாழ் மக்களுக்கு குடிசைப் பட்டா, வாழ்வாதாரம் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். ஆந்திர சிறையில் வாடும் 349 பேரின் விடுதலைக்கு அரசு முயற்சிக்க வேண்டும்.
வீடற்றவர்களுக்கு 5 சென்ட் குடிமனைப் பட்டாவோடு, வாழத் தகுந்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் வேண்டும்.
கிராமப்புற வறியவர்களுக்கு வழங்கி வந்த அரசு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதை உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.
கிராமப்புறங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம், போக்குவரத்து, சாலை வசதி, பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் மற்றும் கட்டிடம், சமையல் கூடம் ஆகியவற்றை உத்தரவாதம் செய்ய வேண்டும்.

நீதித்துறையில் ஜனநாயகம், கருத்துரிமை கோரி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் பட்டினிப் போராட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நெருக்கடி கால கட்டத்தில் கூட இல்லாத விதத்தில், வழக்கறிஞர்கள் தங்கள் பிரச்சனைகளை, கோரிக்கைகளை, போராட்ட நடவடிக்கைகள் பற்றி பேச, கூட்டம் நடத்தக் கூட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் பின்னணியில், நீதித் துறையில் ஜனநாயகம் வேண்டும், கருத்துரிமை வேண்டும், பொதுமக்கள் நலன் கருதி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும், போராடிய வழக்குரைஞர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14.10.2015 அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் பட்டினிப் போராட்டம் நடத்தியது. ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில அமைப்பாளர் தோழர் பாரதி தலைமையில் நடந்த போராட்டத்தை இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.எஸ்.குமார் துவக்கி வைத்து உரையாற்றினார்.

பட்டினிப் போராட்டத்தில் திருநெல்வேலியில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்காரர்களின் வழக்குகளை நடத்தி வரும் தோழர்கள் ரமேஷ், செம்மணி, திருச்சியில் இருந்து வழக்குரைஞர் தேசிகன், கோவையிலிருந்து வழக்குரைஞர் லூயிஸ், திருவள்ளூரிலிருந்து வழக்குரைஞர் தமிழ்ச்செல்வன், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகம் ஆகியோருடன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாவேந்தன், சிவக்குமார், அன்பழகன், அருண், ரமேஷ், விஜி, சிவப்பிரகாசம், பிரசாத், ராஜராஜன், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க முன்னணிகள் சுரேஷ், ரகுநாதன், சங்கர், அதியமான் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களோடு உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் வேண்டும் எனப் போராடி சிறை சென்று வந்த வழக்கறிஞர் செந்தமிழ்ச் செல்வன், சென்னை பல்கலைக் கழக மாணவர் அன்பழகன், அகில இந்திய மக்கள் மேடையைச் சேர்ந்த தோழர்கள் வித்யாசாகர், ஜவகர், புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் ராஜகுரு, அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜானகிராமன், சேகர், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சிவக்குமார், பிரதாபன், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் ரஜினிகாந்த், மனோகரன், மார்க்ஸ் ரவீந்திரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் துணைத் தலைவர் கினி இம்மானுவேல், மக்கள் சிவில் உரிமை பாதுகாப்பு மய்யத்தின் ராதிகா, சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இகக (மாலெ) மாநில செயலாளர் தோழர் பாலசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சட்டமன்ற உறுப்பினர் தோழர் பீமாராவ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.

இறுதியாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெயக்குமார் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.

சேலத்தில் முதியோர் பாதுகாப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் சுமார் 150 பேர் தங்களுக்கு திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கிட வலியுறுத்தி 27.09.2015 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோழர் வரதராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் சந்திரமோகன், இகக மாலெ மாவட்டச் செயலாளர் தோழர் மோகனசுந்தரம், ஏஅய்சிசிடியு மாவட்ட நிர்வாகிகள் தோழர்கள் அய்யந்துரை, வேல்முருகன் ஆகியோர் உரையாற்றினர்.

துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்புக்குக் காரணமான ஒப்பந்ததாரரை, மாநகராட்சி அதிகாரிகளை கைது செய்!

மதுரை மாநகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழப்புக்குக் காரணமான ஒப்பந்ததாரரை, மாநகராட்சி அதிகாரிகளை கைது செய் என்ற கோரிக்கையுடன் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விஸ்வநாதன், முனியாண்டி என்ற இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி 20 அடி ஆழ பாதாள சாக்கடையில் துப்புரவு பணிக்காக இறங்க வைத்து அவர்கள் சாவுக்குக் காரணமான மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் உதவித் தொகையும் குடும்பத்தில் ஒருவருக்கு துப்புரவு பணி அல்லாத அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் கோரி 18.10.2015 அன்று கோவையில் இகக (மாலெ) ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தோழர் வேல்முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், துப்புரவு பணிகளில் மனிதர்களை வேலைக்கு அமர்த்த தடை மற்றும் அவர்கள் புனர்வாழ்வு சட்டம் 2013ன் பிரிவு 7 மீறப்பட்டுள்ளதாகவும், அதே சட்டம் பிரிவு 9 படி நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தமிழகத்தில் தொடர்வதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட்டு அனைவரும் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்க வேண்டும் என்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு  மாநகராட்சி எல்லைக்குள் 3 சென்ட் வீட்டுமனை ஒதுக்கி அரசு செலவில் வீடு கட்டித்தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இகக மாலெ அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், வெங்கடாசலம், கோவை மாவட்டச் செயலாளர் தோழர் கே.பாலசுப்பிரமணியன், ஏஅய்சிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் தாமோதரன் ஆகியோருடன் உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கோவை

மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கோரிக்கைகள் மீது கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யவும், கோரிக்கை மனு தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Search