COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 16, 2015

மாலெ தீப்பொறி 2015 நவம்பர் 16 - 30 தொகுதி 14 இதழ் 8

கோவன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்! 124 ரத்து செய்யப்பட வேண்டும்!

பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நவம்பர் 8 அன்று மதியம் 3.15 மணி வாக்கில், எல்லா தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் லாலு - நிதிஷ் கூட்டாக கலந்துகொண்ட பத்திரிகையாளர் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டபோது, ஜெயா தொலைக்காட்சியில் மட்டும் வீட்டுப் பலகாரங்களுக்கு அமோக வரவேற்பு என்று ஒரு செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அமித் ஷா சொன்னதுபோல் பாகிஸ்தானில் அல்லாமல், அன்று இந்தியாவில் நாடெங்கும் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாத ஜெயா தொலைக்காட்சிக்கு அன்று ஒளிபரப்ப முடிந்த செய்தி அவ்வளவுதான். ஜெயா தொலைக்காட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும், மோடி மந்திரம் பலிக்காது, மதரீதியாக, சாதிரீதியாக நாட்டை பிளவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் பயன்தராது என்று, அன்று பீகார் மக்கள் சொன்ன மிகப்பெரிய செய்தியை அவர்களால் சீரணிக்க முடியவில்லை. அது, திருவண்ணாமலையில் மாட்டுக் கறி பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களை கைது செய்த தமிழக அரசாங்கத்துக்கு சங்கடம் தரும் செய்தி. கூடவே எச்சரிக்கையும் தரும் செய்தி.
இன்று தமிழ்நாட்டில் தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மற்றொரு கைது நடந்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே இதுபோன்ற கைதை பார்த்திருக்கிறார்கள். கூடன்குளமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இடுகாடாக மாறி விடும், அங்குள்ள மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று போராடிய சுப.உதயகுமார் மீதும் அவரது சக போராளிகள் மீதும் தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு இன்றும் அவர்கள் வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதைக் கூட இன்னும் அமல்படுத்தாத ஒடுக்குமுறை அரசுதான் ஜெயலலிதா அரசு என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஜெயலலிதா மீது பக்தி கொண்டுள்ளதாகச் சொல்லும் அஇஅதிமுககாரர்கள் இளங்கோவனை என்ன பாடு படுத்தினார்கள் என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவன், இரவு இரண்டரை மணிக்கு உறையூரில் அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். 124 (தேசத் துரோகக் குற்றம்), 153 (வன்முறையை தூண்டுவது), 505 (1) (பி மற்றும் சி) (அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தும் நோக்கம் மற்றும் தூண்டுவது) ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அரசை விமர்சிக்கும் பாடல்கள் இதுபோன்ற கொடூரமான சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியவை என்றால், அந்த அரசு எவ்வளவு படுமோசமான மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசாக இருக்க வேண்டும்? பாதிப்பின் தாக்கங்களுக்கு ஏற்பவே அதற்கு எதிர்ப்பின் தன்மையும் வெளிப்பாடும் அமைகின்றன. ஜெயலலிதா விரும்பும் விதத்தில் போராட்டங்கள் நடத்த முடியாது.
ஜெயலலிதா என்கிற அரசியல்வாதியை, ஒரு முதலமைச்சரை, அவரது ஆட்சி நடைமுறைப்படுத்தும் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சிப்பது தேசத் துரோகக் குற்றம் என்று ஜெயலலிதா அரசாங்கம் சொல்வது எதேச்சதிகாரத்தின் உச்சம். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக, அந்தக் கடைகளால் தமிழக மக்கள் வாழ்க்கை பாழாய்ப் போவதற்கு எதிராக, அந்தக் கடைகள் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு பல போராட்டங்களைக் கண்டு வருகிறது. ஜெயலலிதா அரசின் குற்றமய அலட்சியத்தால் ஒரு போராளி உயிரையும் விட்டிருக்கிறார். நாட்டு மக்கள் உயிர் குடிக்கும் கொள்கையை விட அந்தக் கொள்கைகளை விமர்சனம் செய்வது தேசத் துரோகம் என்று சொல்லி ஒடுக்குமுறையை ஏவுவதுதான் தேசத் துரோகம்.
டாஸ்மாக்கை, அதைப் பாதுகாக்கும் ஜெயலலிதா அரசாங்கத்தை விமர்சிக்கும் கோவனின் பாடல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த காளியப்பன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களாக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் யுட்யுபில் பார்த்துக் கொண்டிருக்கிற இந்தப் பாடல்கள் முதலமைச்சரை தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பதாகச் சொல்லி தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரை தனிப்பட்ட விதத்தில் விமர்சிப்பது என்றே வைத்துக்கொண்டால் கூட அது தேசத் துரோகக் குற்றம் ஆகாது. ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவ்வளவுதான். அவர் தேசமல்ல.
இணையதளத்தில் ஜனநாயக அடிப்படையில் கருத்துத் தெரிவிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வழி செய்திருந்த பிரிவு 66 ரத்து செய்யப்பட்டுவிட்டது. கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதில் அதிகபட்ச குற்றச்சாட்டு என்னவாக இருக்கும் என்று பார்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது தமிழக அரசு.
ஜெயலலிதா தலைமையிலான அரசு தமிழ் நாட்டு மக்களைப் பாதுகாப்பதை விட அதீத அக்கறையுடன்  டாஸ்மாக்கை பாதுகாக்கிறது. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டு வீதிகளை நிறைத்து, போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து ஒடுக்குமுறை நடவடிக்கைகள் ஏவப்பட்டபோது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரு வினோதமான போராட்டம் நடத்தினார்கள். மிகச்சிலரே கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தில் சில குழந்தைகள் கூட இருந்தன. அன்று டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்திய மாணவர்கள் சிறையில் இருந்தார்கள். சிறையிலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அந்தச் சூழலில், டாஸ்மாக் கடைகள் மூலம் தமிழக மக்களுக்கு எளிதாக சாராயம் கிடைக்கச் செய்த முதலமைச்சருக்கு நன்றி என்று சொல்லி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு காவலுக்கு வந்திருந்த காவல்துறையினர் என்ன செய்வதென தெரியாமல் கையை பிசைந்து கொண்டு வேடிக்கைப் பார்த்தனர். இது போன்ற அம்மா பஜனை போராட்டங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டில் நடத்த முடியும் என்று முதலமைச்சரை சாடுவதாகவே அந்தப் போராட்டம் அமைந்திருந்தது. தடியடியோ, கைதோ இல்லாமல் அந்த ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றார்கள்.
தொட்ட இடம் துலங்க வரும் தாய்க் குலமே வருக என்று ஜெயலலிதாவைப் பார்த்து அஇஅதிமுககாரர்கள் பாடும் பாடலில் கூட ஜெயலலிதாவை ஒருமையில் நீ என்று அழைக்கிறார்கள். கலை வடிவத்தில் அதற்கு இடம் இருக்கிறது. அதற்காக அஇஅதிமுககாரர்களை ஜெயலலிதா ஆட்சி தண்டிக்காது என்றால் கோவன் பாடலும் குற்றமாகாது. காலத்தை வென்றவன் நீ என்று எம்.ஜி.ராமச்சந்திரனைப் குறிப்பிடும் பாடலில் ஜெயலலிதா அவரை அவன் இவன் என்று ஏகவசனம் பேசுகிறார் என்றா சொல்ல முடியும்? அது ஒரு பாடல் வடிவம் அவ்வளவே. அம்மா திட்டங்கள் தமிழக மக்களை ஏமாற்றத்தில் மூழ்கடிக்கும்போது, டாஸ்மாக் கடைக்கும் அம்மா சாராயக் கடை என்று ஏன் பெயர் வைக்கவில்லை என்று கேட்காத எதிர்க்கட்சி தமிழ்நாட்டில் இல்லை. ஜெயலலிதா சாராயம் ஊற்றுவதுபோல் இருக்கும் கேலிச் சித்திரமும் அது போன்றதுதான்.
தமிழ்நாடு தடியடியின் பூமியாகி வருகிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், ஜெயா தொலைக்காட்சியில், மற்ற தொலைக்காட்சிகளில் அஇஅதிமுககார ராகவே மாறி அம்மா புகழ் பாடிக் கொண்டிருப்பார். தேர்தல் தயாரிப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கிவிட்ட நிலையில், அவருக்கு திடீரென தனது இருத்தலை காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். நெல்லை கங்கைகொண்டானில் உள்ள பெப்சி ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். ஆட்சிப் பொறுப்பை முழுவதுமாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு ஜெயலலிதா கொடநாட்டில் இருந்த நேரம். காவல்துறையினர் வேல்முருகன் ஜெயலலிதாபால் கொண்டிருக்கும் விசுவாசத்தை சற்றும் கணக்கில் கொள்ளாமல் கூடியிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். பலருக்கு மண்டை உடைந்து ரத்தம் முகம் முழுக்க வழிந்தோடியது. பலருக்கு வெண்ணிற சட்டை ரத்தம் சிந்தி செந்நிற சட்டையாகியிருந்தது. அவர்களுக்கு நடுவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி சுற்றும் முற்றும் நடப்பதைப் பார்த்துக்  கொண்டு நின்றிருந்தார் வேல்முருகன். தனது அம்மா விசுவாசம் சற்றும் பொருளின்றிப் போகுமென அவர் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அன்று அந்த களேபரத்தின் மத்தியில் நின்றிருந்த அவரது முகத்தில் இருந்த அதிர்ச்சியும் ஏமாற்றமும் காட்டியது. சொந்தக் கட்சிகாரர்கள் மண்டை உடைபட்டு ரத்தம் வழிய நின்றதை பார்த்தும் கூட வேல்முருகன் இன்னும் புரட்சித் தலைவி அம்மா ஆட்சி பற்றி ஒரு வார்த்தை தவறாகப் பேசவில்லை. தமிழக காவல்துறை தலைவரிடம் கங்கைகொண்டான் காவல் ஆய்வாளர் பற்றி புகார் மட்டும் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் சொந்த கட்சியினர் மீதே தடியடி நடத்தப்பட்டது. அமைச்சர்  விஜயபாஸ்கர் முத்தரையர் சமூகத்தைத் தவறாகப் பேசிவிட்டார் என்று அவர் வீட்டை சூழ்ந்த மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கொடநாட்டில் ஜெயலலிதா இருந்தபோது, காசநோய் மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் வேலை நீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வேலை வேண்டும் என்று கோரி அங்கு திரண்டதற்காக அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அம்மா வீட்டு வாசலில் போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மீது 124 ஏவப்படவில்லை என நாம் ஆறுதல் அடையலாம்.
கோவனின் கைதைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் அதிகாரம் அமைப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடையை மீறி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல் துறை வாகனத்துக்குள் தூக்கியெறிந்ததில் பலர் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டுள்ளது.
பால் தாக்கரே இறுதி ஊர்வலத்துக்கு விடுமுறை எதற்கு என்று பேஸ்புக்கில் கேள்வி எழுப்பியதற்காக ஓர் இளம்பெண்ணும் அதற்கு லைக் கொடுத்ததற்காக அவரது நண்பரும் மும்பையில் நள்ளிரவில் பிரிவு 505 (2)ல், இரு பிரிவினருக்கு இடையில் பகையை உண்டாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் அந்த கைதுக்கு எதிர்ப்பு எழுந்த பிறகு அந்தப் பெண்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அசிம் திரிவேதி அவரது கேலிச் சித்திரங்களுக்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஏதோ காகிதங்கள் வைத்திருந்தார் என்று வினாயக் சென் மீது 124 பாய்ந்தது. அய்முகூ அரசாங்கம் அதன் ஊழல் நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி இதுபோன்ற ஒடுக்குமுறை, கருத்துச் சுதந்திரம் பறிப்பு நடவடிக்கைகளுக்காகவும் தண்டிக்கப்பட்டது.
கடந்த நான்கரை ஆண்டுகளில் 110 அவமதிப்பு வழக்குகளை அரசு தொடுத்துள்ளது. 2001 - 2006 ஜெயலலிதா ஆட்சியில் இந்த எண்ணிக்கை 120 என இருந்தது. இப்போது, ஜெயலலிதா தனது ஆட்சியின் ஒடுக்குமுறை, ஜனநாயக மறுப்பு, எதேச்சதிகார நடவடிக்கை ஆகியவற்றின் சாதனைகளை, 124 மூலம் தானே முறியடித்துள்ளார்.
சகிப்புத்தன்மையின்மைக்கு பீகார் மக்கள் வலுவான அடி கொடுத்துள்ளனர். அரசாங்கத்தை அதன் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீது தேசத் துரோகக் குற்றம் சுமத்துவதும் சகிப்புத் தன்மையின்மைதான். கோவன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 124 ரத்து செய்யப்பட வேண்டும். அல்லாமல், கருத்துச் சுதந்திரம் மறுப்பும் ஜனநாயகம் மறுப்பும் அரசியல் சாசன உரிமைகள் மறுப்பும் ஜெயலலிதாவின் ஆட்சியாக இருக்குமானால், பீகாரில் பாஜகவுக்கு கிடைத்த அடி தமிழ்நாட்டில் அஇஅதிமுகவுக்கும் கிடைக்கும்.

வோக்ஸ்வாகன், வோடாபோன், கேய்ர்ன் எனர்ஜி, நெஸ்லே  மற்றும் பல

நச்சுப்புகை வெளியேற்றத்தை போலியாக குறைத்துக் காட்டக் கூடிய மென்பொருளை தனது டீசல் வாகனங்களில் பயன்படுத்தியதை வோக்ஸ்வாகன் நிறுவனம் ஒப்புக்கொண்டது. வாகனம் ஓடும்போது இருக்கிற நச்சுப்புகை வெளியேற்ற அளவு, வாகனம் நிற்கிற நிலையில் வெளியேற்றப்படும் நச்சுப்புகையின் அளவை விட 40 மடங்கு கூடுதல். உலகம் முழுவதும் இது போன்ற மென்பொருள் பொருத்தப்பட்ட 1 கோடியே 10 லட்சம் வாகனங்களை வோக்ஸ் வாகன் நிறுவனம் விற்றுள்ளது. இது தவிர, பெட்ரோல் வாகனங்கள் உட்பட 8 லட்சம் வாகனங்களில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைட் அளவும் குறைத்துச் சொல்லப் பட்டுள்ளதை, மைலேஜ் கூடுதல் கிடைக்கும் என்று பொய் சொன்னதை இப்போது வோக்ஸ்வாகன் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த எட்டு லட்சம் வாகனங்களும் அய்க்கிய அமெரிக்காவிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் விற்கப்பட்டன.
சந்தையை முன்னேற்ற, தக்க வைத்துக் கொள்ள, இந்த முறைகேடு திட்டமிடப்பட்டு அதிஉயர் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு, ரகசியமாக நடந்துள்ளது.
78 ஆண்டு கால பாரம்பரியம். ஆடி கார் வைத்திருக்கிறார்கள் என்றால் இந்தியாவில், உலகின் பிற பகுதிகளில் அது பெரிய அந்தஸ்து. ஜெர்மனியின் பெருமை. ஆனால், சென்னை சாமான்யன் மொழியில் சொன்னால், உலகப் பிரசித்த பெற்ற வோக்ஸ்வாகன் நிறுவனம் ஒரு ஃபோர் டொன்டி. இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள மோசடியான குறைபாடுகள் சரி செய்யப்பட்டால், கூடுதல் மைலேஜ் தரும் வாகனம் என்று சொல்லப்படுவது அடிவாங்கும். கூடுதல் எரி பொருள் செலவு வைக்கும் வாகனம் என்று பெயர் எடுக்கும்.
அய்க்கிய அமெரிக்க விதிகளின்படி இப்போது நிறுவனம் ஒரு வாகனத்துக்கு 37,500 டாலர் வீதம் 18 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும். இது தவிர வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய செலவுகள் உள்ளன. கார்பன் டை ஆக்சைட் வெளியேற்றத்தால் கார் வாங்கியவர்கள் கட்ட வேண்டிய வரியை தானே கட்டுவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இப்படியாக, நிறுவனத்துக்கு மொத்த செலவு 32 பில்லியன் யூரோ ஆகும் என்று சொல்லப்படுகிறது. 2016ல் அந்த கார்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு பெறும் என்று நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சொல்லியுள்ளார். இந்தத் திரும்பப் பெறும் நடவடிக்கைக்கும் வோக்ஸ்வாகன் பெரிய செலவு செய்ய வேண்டியுள்ளது.
2013ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த போலி மென்பொருள் விவகாரம் 2014ல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டபோது, அந்த ஆண்டு இறுதியில் அய்க்கிய அமெரிக்காவில் இருக்கிற 50 லட்சம் கார்களை திரும்பப் பெற்று விட்டதாகவும் குறைபாட்டை சரி செய்துவிட்டதாகவும் நிறுவனம் சொன்னது. இதன் பிறகு நடந்த சோதனைகளும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் நச்சுப்புகை வெளியேற்றப்படுவதை உறுதி செய்தன.
2014ல் அய்க்கிய அமெரிக்க மாசுக் கட்டுப்பாட்டு மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்த குறை பாட்டை கண்டுபிடித்துச் சொன்னபோது, அது தொழில்நுட்பப் பிரச்சனை என்றும் எதிர் பாராத சூழல்களில் ஏற்படக் கூடியது என்றும் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டது. அதாவது அப்போதும் நிறுவனம் ஏமாற்றத்தான் பார்த்தது.
1998ல் கனரக வாகனங்கள் இதுபோன்ற ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் செலுத்தின. அவையும் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய பெயர்கள். கேட்டர்பில்லர், ரெனோ, வோல்வோ, கும்மின்ஸ்.... இந்த நிறுவனங்கள்  தமிழ்நாட்டில் வாகனங்கள் உற்பத்தி செய்கின்றன.
வங்கியில் 100 டாலர் கடன் வாங்கினால் அது வாங்கியவர் பிரச்சனை, 100 மில்லியன் டாலர் கடன் வாங்கினால் அது வங்கியின் பிரச்சனை என்று எங்கோ படித்த நினைவு. இந்த முதலாளித்துவ விதி, கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்கிற, வோக்ஸ்வாகன் என்கிற பகாசுர பன்னாட்டு நிறுவனம் முறைகேடு செய்து சிக்கிக்கொண்டிருக்கிற சூழலில் மிகவும் கச்சிதமாக செயல்படுகிறது.
வோக்ஸ்வாகன் நிறுவனம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று பொருள் தரும் விதத்தில் இப்போது முதலாளித்துவ ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. அய்க்கிய அமெரிக்கா வேண்டுமென்றே மாசுக் கட்டுப்பாட்டு வரம்புகளை மிக அதிகமாக நிர்ணயித்துள்ளது, அதனால்தான் வோக்ஸ்வாகனின் வாகனங்கள் நச்சுப்புகை சோதனைகளில் வெற்றி பெறவில்லை, அதன் சந்தை மதிப்பு இறங்கி வருகிறது, அபராதம், வழக்குகள் என்ற விதத்தில் வோக்ஸ்வாகனின் செலவுகள் அதிகரிக்கின்றன, லட்சக்கணக்கான அதன் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று வாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வோக்ஸ்வாகனின் நெருக்கடி நாட்டின் நெருக்கடி என்று பேசப்படுகிறது. வோக்ஸ்வாகன் மூலம் வந்த 3.4 பில்லியன் டாலர் வரி வராமல் போய் விடும் என்று, கிரேக்க நெருக்கடியை விட இந்த நெருக்கடி தீவிரமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விசயங்கள் உண்மையாகக் கூட இருக்கட்டும். ஆனால், லாபம் வந்தபோது அரசுக்குத் தராமல் தானே வைத்துக்கொண்ட ஒரு நிறுவனத்துக்கு நெருக்கடி வரும்போது மட்டும் அரசு நிதி தந்து, விலக்குகள் தந்து ஏன் காப்பாற்ற வேண்டும்? அதன் சொத்துக்களை கைப்பற்றி வருகிற நெருக்கடியை எதிர்கொள்வது, தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்பது ஆகியவையே நியாயமான நடவடிக்கைகளாக இருக்க முடியும்.
நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 பில்லியன் டாலர். 6 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். 2014ல் அதன் வருவாய் 202.5 பில்லியன் யூரோ. இது 2013அய் விட 2.8% கூடுதல். 2014ல் லாபம் 10.8 பில்லியன் யூரோ. இது 2013அய் விட 19.6% கூடுதல். லாப வரிசையில் உலகில் 23ஆவது இடத்தைப் பிடித்துள்ள நிறுவனம் இது. அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 107 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாக டிசம்பர் 2014ல் நிறுவனம் சொன்னது. தற்போது நிறுவனத்திடம் பணமாகவே 21 பில்லியன் யூரோ (24 பில்லியன் டாலர்) உள்ளது.
ஆக, வோக்ஸ்வாகன் நிறுவனத்திடம் பணத்துக்கு பஞ்சமில்லை. ஜெர்மனியில் ஓடுகிற 28 லட்சம் கார்களில் இந்தப் பிரச்சனையை எப்படி சரி செய்யப் போகிறது என்பது பற்றி நிறுவனம் அரசுக்கு முன்வைப்பு தர வேண்டும் என்று மட்டும் கேட்கப்பட்டுள்ளது. முறைகேடு செய்த நிறுவனத்தின் மீது, நிறுவனத்தின் உரிமையாளர், உயர்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை, கைது என்பதற்கான அறிகுறி ஏதும் ஜெர்மனி அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. மாறாக, தொழில் நடத்துவதற்கு உகந்த இடம் ஜெர்மனி என்ற பிம்பத்துக்கு எந்த சேதமும் வருமோ என்ற கவலையில்தான் அரசு இருக்கிறது. தொழிலாளர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றால், நிறுவனத்தை அரசு எடுத்து நடத்தினால் பிரச்சனை தீரும். ஆனால், அது தொழிலாளர்கள் தலைவிதி என்றாகிவிடும் ஆபத்துதான் தெரிகிறது.
வோக்ஸ்வாகனின் வேலை கலாச்சாரமும் தற்போதைய நெருக்கடியை உருவாக்கியுள்ள முறைகேட்டுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. கண்காணிப்பு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி, சந்தையை தக்க வைக்க, மேம்படுத்த, வாகன கட்டமைப்பில் மாற்றங்கள், புதுமைகள் செய்ய விரும்பினால், அந்த வேலைகள் தொடர்பான பொறியாளர்களை அழைத்து, தனக்கு தேவையான புதிய அம்சங்களைச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து, அந்த கால அவகாசத்துக்குள் அந்த வேலையை முடிக்க வேண்டும் என்றும் அப்படி முடிக்கவில்லை என்றால், அந்தப் பொறியாளர்களின் இடத்தில் வேறு புதிய பொறியாளர்கள் இருப்பார்கள் என்றும் சொல்வது அங்கு நடைமுறையாக இருந்துள்ளது. இதனால் அந்தப் பொறியாளர்கள், அந்த அதிகாரி சொல்லும் விளைவுகளை கொண்டு வர எதையும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவது, அப்படியே செய்வது வழக்கமாக இருந்துள்ளது. இதுபோன்ற ஒரு நடைமுறை காரணமாக, முறைகேடான மென்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்கள் சந்தைக்கு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவின் கார் ஏற்றுமதியில் நிசானின் மைக்ரா, ÷ண்டாயின் கிராண்ட்டுக்கு அடுத்து வோக்ஸ்வாகனின் வென்டோதான் மிக அதிகம் ஏற்றுமதியாகியுள்ள கார்.
இந்திய ஆட்டோமோடிவ் ஆய்வு கழகம், வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு அறிவிப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் வோக்ஸ்வாகனின் ஆடி 4, போலோ, வென்டோ, ஜெட்டா போன்ற வாகனங்களில், நிற்கும்போது செய்யப்படும் சோதனைகளில் வெளிப்படுவதைவிட கூடுதல் நச்சுப்புகை சாலைகளில் ஓடும்போது  வெளியேறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் மேல். செப்டம்பர் 2015 வரையிலான 6 மாதங்களில் வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 23,224 வாகனங்கள் விற்றுள்ளது. 30 நாட்களுக்குள் வோக்ஸ்வாகன் பதில் தர வேண்டுமென அறிவிப்பாணையில் கேட்கப்பட்டுள்ளது.
இந்த விசயத்தில் மோடி அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பதற்கு வோடாபோன் பிரச்சனையை மோடி அரசு கையாளும் விதம் எடுத்துக்காட்டாக இருக்கும். முக்கியமான முடிவுகள் நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் எடுக்கப்படுகின்றன என்ற மார்க்சிய கருத்தையும் உறுதிப்படுத்தும்.
வோடாபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி, அபராதம், வட்டி சேர்ந்து இப்போது ரூ.20,000 கோடியாக வளர்ந்துள்ளது. இந்தியாவில் தொழில் செய்வது மிகவும் சிரமம் என்று 2014 செப்டம்பரில் சொன்ன வோடாபோன் குழும தலைமை நிர்வாக அதிகாரி 2015 அக்டோபரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து திரும்பியபோது, மோடி அரசாங்கத்தை புகழ்ந்து தள்ளினார். அருண் ஜெட்லியை சந்திக்கும் முன்பு தொலை தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்தார். வோடாபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி பிரச்சனையை நீதி ஆணையம் ஒன்று அமைத்து அதனிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்த பின்னணியில் இந்த சந்திப்புகள் நடந்தன.
இந்த சந்திப்புக்கு சில தினங்களுக்கு முன், வோடாபோன் செலுத்த வேண்டிய ரூ.8,500 கோடி வரி பாக்கியை வசூலிக்கும் உரிமை வருமான வரித் துறைக்கு இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு சில தினங்கள் கழித்து, வோடாபோன் வரி பாக்கி பிரச்சனையை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ள மோடி அரசு தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாயின.
பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான கேய்ர்ன் எனர்ஜியும் வோடாபோன் போலவே இந்திய அரசுக்கு ரூ.10,247 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறது. இந்தப் பிரச்சனையையும் நீதி மன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளலாம் என்று மோடி அரசாங்கம் சொல்லியிருக்கிறது.
இந்தச் செய்தியை செய்தியாளர்களிடம் சொன்ன மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, அந்த அரசு வரிவிதிப்பு முறைகளை எளிமைப்படுத்தப் பார்க்கிறது என்றும் வழக்குகளை குறைக்கப் பார்க்கிறது என்றும், இது போன்ற வழக்குகளுக்கு நல்லெண்ணத்துடன் தீர்வு காண்பதே அரசின் அணுகுமுறையாக இருக்கும் என்றும் சொல்கிறார். இந்த அணுகு முறைக்கும் தொழில் செய்ய உகந்த நாடு இந்தியா என்ற செய்தியை உலகுக்குச் சொல்வது அடிப்படை காரணம் என மக்கள் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக, ஊருக்குத் தெரிந்து கிட்டத்தட்ட ரூ.30,000 கோடி அரசின் கருவூலத்துக்கு வராமல் போகலாம். ஆபத்தான நோய்களுக்கு இட்டுச் செல்லும் என்று சோதனைகளில் மெய்ப்பிக்கப்பட்ட மேகி நூடுல்ஸ் மீண்டும் இந்திய சந்தைக்கு வரப் போகிறது.
வோடாபோன், கேய்ர்ன் எனர்ஜி, நெஸ்லே ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு காட்டப் படும் மரியாதை, இந்தியாவில் வோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கும் காட்டப்படும் என்றுதான் நாம் நம்ப வேண்டியிருக்கும்.
வோக்ஸ்வாகன் நிறுவனம் தன் சந்தையை மேம்படுத்த செய்த முறைகேடு கார் வாங்கியவர்களை மட்டும் பாதிக்கவில்லை. உலகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. புவி வெப்பமயமாவதற்கு இட்டுச் செல்கிறது. இதற்கு என்ன தண்டனை? ஜெர்மனி, அய்க்கிய அமெரிக்கா, போன்ற வளர்ந்த நாடுகள், காற்றில் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் கலப்பதை குறைக்கும் சுமையை மூன்றாம் உலக நாடுகள் மீது ஏற்றப் பார்க்கின்றன. இந்த வாயுக்கள் கலப்பதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த நாடுகளே காரணமாகவும் இருக்கின்றன.

வோக்ஸ்வாகன் முறைகேட்டுப் பிரச்சனை, கார் வாங்கியவர்கள் மட்டும் சந்திக்கும் பிரச்சனை அல்ல. உலக மக்களின் வாழ்வாதாரம் படிப்படியாக பாதிக்கப்படும் பிரச்சனை. ஜெர்மனி, அய்க்கிய அமெரிக்கா மற்றும் இந்திய அரசாங்கங்கள் வோக்ஸ்வாகன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்கான கரிசனங்களில் ஈடுபடுவதற்கு மாறாக, மக்களை பாதிக்கிற கார்ப்பரேட் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, அந்த நிறுவனங்களை சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட வேண்டும்.

Search