COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 16, 2015

மாலெ தீப்பொறி 2015 நவம்பர் 16 - 30 தொகுதி 14 இதழ் 8

நேற்று இன்று நாளை : தள்ளாடும் தமிழகம் தத்தளிக்கும் தமிழகம் இருளும் தமிழகம்

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகம். 2014 ஜனவரி - செப்டம்பரில் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146. ஆனால், 2015 ஜனவரி - செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்குள் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,357. போன ஆண்டை விட இந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது. இது அரசாங்கம் வெளியிட்டுள்ள கணக்குப்படி. ஆனால், அரசாங்கம் மூடி மறைக்கும் எண்ணிக்கை இதைவிட அதிகம். 2012ல் டெங்குக் காய்ச்சலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,826. இறந்தவர்கள் 66 பேர். 2013ல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,122. 2014ல் இன்னும் குறைந்து 2,804 என்றிருந்தது இவ்வாண்டு செப்டம்பர் 13 தேதிக்குள்  2,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தேசிய நோய் பரப்புதல் கட்டுப்பாடுத் திட்ட  அறிக்கை கூறுகிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2013ல் இருந்ததை விட அதிகமாகலாம் என்றும் சில அக்கறை உள்ள அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் அச்சம் தெரிவித்தார்கள்.
அவர்கள் கூறியபடியே தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்குப் பதிலாக தமிழக அரசு டெங்குவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கையையும் இறப்பவர்கள் எண்ணிக்கையையும் மறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. டெங்குக் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்பாக இருப்பவை தேங்கிக் கிடக்கும் தண்ணீர். தூர் வாரப்படாத ஆறுகள், குளங்கள், கால்வாய்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் தேங்கும் தண்ணீர், வீதிகளில் தூக்கி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளில் தேங்கும் தண்ணீர். இவைதான் டெங்குக் கொசு உற்பத்தித் தொழிற்சாலைகள். அவற்றை சரி செய்வதற்குப் பதிலாக, குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல், மைல் கணக்கில் நடந்து சென்று அல்லது வாரத்தில் ஒருநாள் வரும் லாரித் தண்ணீரைப் பிடித்து வீடுகளில் வைத்திருந்த தண்ணீர் தொட்டிகளை பொறுப்பேயில்லாமல் போட்டு உடைத்தார்கள் அதிகாரிகள். மக்கள் கொசுக் கடியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்க, ஜெயலலிதா கொடநாட்டில் போய் ஒளிந்து கொண்டார். நின்ற இடத்தில் இருந்து எங்கோ இருக்கும் பாலத்தை திறந்துவைக்கும் அளவுக்கு, தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது என்று கருணாநிதிக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு, திறன்மிக்க நிர்வாகம் நடத்துவதாக அஇஅதிமுககாரர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு பெயர் பெற்றிருக்கிற தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொசு ஒழிப்பு ஒரு பெரிய பிரச்சனையா? அதற்குத் தேவை நிதி. அது ஏராளமாக இருக்கிறது. அதைவிட அடிப்படை தேவை அரசியல் தயார்நிலை. அரசியல் விருப்பம். அதற்குத்தான் இங்கு கடுமையான பஞ்சம்.
மர்மக் காய்ச்சலுக்கு மாணவர் மரணம், டெங்குக் காய்ச்சலால் சிறுவன் இறப்பு என்று செய்திகள் பார்த்து மக்கள் டெங்கு பீதியில் நித்தம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கையில், வராது வந்த வடமேற்குப் பருவ மழைக்கு தாக்குப் பிடிக்காமல் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நான்கு நாட்கள் பெய்த அடர் மழையில் (11.11.2015 வரை) சுமார் அய்ம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 32 பேர் இறந்துள்ளனர். பெரியகாட்டுப்பாளையம் அருந்ததி நகர் ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் ஒரே நேரத்தில் இறந்துள்ளார்கள். தானே புயலில் சிக்கிக் சின்னாபின்னமான கடலூர் மாவட்டம் இந்த முறையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஏரிகள் உடைகின்றன. நீர் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைந்து அவர்கள் தீபாவளியில் தண்ணீர் ஊற்றிவிட்டது.
சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகம் எங்கும் வெள்ளக் காடு. விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு கர்நாடகத்திடம் கையேந்தி நிற்கிற தமிழ்நாட்டில், இந்த மழையில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், வாழை, பாக்கு, சோளம் என விளைந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகிப் போயுள்ளன. 200க்கும் மேற்பட்ட கிராமங்களில்  குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், வீடுகளை, உடைமைகளை இழந்து வீதிகளில் தவிக்கிறார்கள் மக்கள். வட மாவட்டங்களில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை. வீடுகளுக்குள் வந்து விட்ட கழிவு கலந்த வெள்ள நீரை வெளியேற்ற வழியில்லை. வீட்டின் ஓரத்தில் ஓடாமல் கிடந்த, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் தண்ணீரில் மிதக்கிறது. கால் வைக்கும் இடமெல்லாம் சாக்கடையும் சகதியும். டெங்குவோடு சேர்ந்து மலேரியா, மஞ்சள் காமாலை, வைரஸ் காய்ச்சல் என அனைத்து நோய்களும் பரவும் அபாயம் பரவி வருகிறது. 100க்கும் மேற்பட்ட படகுகளைக் காணவில்லை. கடலூர் விருத்தாச்சலம் ரயில் ரத்து. கடலூர் மாவட்டம் மற்றும் சுற்றுப் பகுதியில் 5,083 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை. ஏற்காடு சென்ற மக்கள் வீடு திரும்ப வழியில்லை. தர்மபுரி பாப்பிரெட்டிபட்டியில் தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி. இதுதான் ஒளிரும் தமிழகம் என்று ஜெயலலிதா சொல்லும் தமிழகத்தின் இன்றைய யதார்த்தம்.  
இந்நிலையில் இது இயற்கையின் சீற்றம், இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய், 56 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகள் என்று அறிவித்துள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சொல்கிறார். மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்வேளாண் துறை அமைச்சர் வைத்திலிங்கம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொண்ட குழுவை பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அனுப்பியுள்ளேன் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
உண்மையில் இது இயற்கையின் சீற்றமா? ஒவ்வொரு ஆண்டும் அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் அடர் மழை, பருவ மழைதான். பருவ மழையில் வரும் தண்ணீரைத் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஏரிகளும் குளங்களும் உடைப்பு எடுத்துவிட்டதால் ஊருக்குள் தண்ணீர் ஓடிக் கொண்டிருக் கிறது. தீர்த்தகிரி வலசை பெரிய ஏரி உடைந்து ஏரித் தண்ணீர் எல்லாம் ஊருக்குள். விழுப்புரம் மாவட்டத்தில் மாரனோடை ஏரி உடைந்து வயல் வெளிகள் அனைத்தும் தண்ணீரில். நாயக்கனூரில் ஏரி உடைந்து நாலாபுறமும் தண்ணீர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம். கே.ஆர்.பி அணை நிரம்பிவிடும் அபாயம். அய்ந்து ஆண்டுகளாக மழையே இல்லை, இப்போது மழையைப் பார்த்தவுடன் சந்தோசமாக உள்ளது, ஆனால், வந்த தண்ணீரை தேக்கி வைக்க வழியில்லை என்கிறார்கள் கிருஷ்ணகிரி சிங்காரப்பேட்டை மக்கள்.
இவர்கள் அறிவித்துள்ள அற்ப நட்ட ஈட்டை வைத்து என்ன செய்வது? நட்ட ஈடு தரும் அளவுக்கு நிலைமைகளை மோசமாகச் செய்த அமைச்சர்கள் இன்று வேட்டிய மடித்துக் கட்டிக் கொண்டும் சேலையை இழுத்து செருகிக் கொண்டும் தண்ணீரில் மூழ்கிய பகுதிகளை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்வையிடுவதாக கண்துடைப்பு நாடகம் ஆடுகிறார்கள். நான்கரை ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்தார்களா இந்த அமைச்சர்கள்? இன்று மக்கள் சாகும்போது, எப்படிச் சாகிறார்கள் என்று வேடிக்கைப் பார்க்க தொலைக் காட்சி அலைவரிசைகளையும் உடன் அழைத்து வந்துவிட்டார்கள். அம்மாவின் தொகுதியான ஆர்.கே நகரே தண்ணீருக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் உபரிநீரை பாதுகாக்க, மழைநீர் கால்வாய் அமைக்க, தடுப்பணைகள் கட்ட, ஏரி குளங்களை தூர் வார என்ற வகையில் கோடி கோடியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த கோடிகள் உபரி நீரை, கடலில் வீணாய் கலக்கும் நீரை சேமித்து வைக்க, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படாமல் அமைச்சர்களின் அதிகாரிகளின் சொந்தக் கருவூலங்களுக்குச் மாற்றப்பட்டுவிட்டதா என்ற கேள்வியையே வெள்ளத்தில் சேதமடைந்துள்ள இன்றைய தமிழ்நாடு எழுப்புகிறது.
வீடுகளை, உணவுப் பொருள்களை, பாத்திர பண்டங்களை, பள்ளிக் கல்லூரிச் சான்றிதழ்களை, வங்கிப் பாஸ் புத்தகங்களை, பணத்தை பறி கொடுத்துவிட்டு தற்காலிகமாக பள்ளிகூடக் கட்டிடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் பல ஆயிரம் மக்களுக்கு ஒரு நேர உணவையும் ஒரேயொரு வேட்டியையும் சேலையையும் ஜெயலலிதா படம் போட்ட கவர்களில் போட்டு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள்.
ஏரிகளை, குளங்களை, கண்மாய்களை துர்வாருவது கிடையாது. மாறி மாறி ஆட்சி செய்த திமுகவும் அதிமுகவும் இவற்றை கண்டு கொண்டதே இல்லை. ஏரிகள், குளங்கள், கண்மாய், ஓடைகளில் பெரிய பெரிய கட்டிடங்கள் எழுந்துள்ளன. அந்தக் கட்டிடங்களுக்குச் சொந்தக்காரர்கள் கம்யூனிஸ்ட்கள் தவிர மற்ற அத்தனை கட்சிகளையும் சேர்ந்தவர்கள். அதிமுகவின் நகரச் செயலாளருக்கே 100 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அமைச்சர் எனக்கே பல நூறு கோடி சொத்து இருக்கும்போது அம்மாவிற்கு ஆயிரம் கோடி சொத்து இருக்காதா என்று அண்மையில் உண்மையை உரக்கப் பேசினார் அமைச்சர் வீரமணி. அந்த பல கோடிச் சொத்துக்கள் எல்லாம் இந்த நீர் நிலைகளில்தான் பணம் காய்க்கும் மால்களாக, பள்ளி, கல்லூரிகளாக, பன்னாட்டு இந்நாட்டு தொழிற்சாலைகளாக முளைத்து நிற்கின்றன.
நாடு போற்றும் நான்கு ஆண்டு ஆட்சி என்று சாதனைப் பட்டியல் வாசிக்கும் அம்மா திமுக அரசின் பிரச்சார வாகனங்கள், எந்தவொரு ஏரியும் குளமும் கண்மாயும் தூர்வாரப்பட்டதாகவோ, கரை உயர்த்திக் கட்டப்பட்டதாகவோ, மதகுகள் பழுது பார்க்கப்பட்டதாகவோ ஓடைகளை ஒழுங்குபடுத்தியதாகவோ சொல்லக் காணோம்
அவர்களுடைய அக்கறையை, ஆறுகளை, குளங்களை, ஏரிகளைச் சீரமைப்பதில் காட்டியிருந்தால் இன்று இந்த வெள்ளச் சேதம் இருந்திருக்காது. பயிர்களுக்கும் குடிப்பதற்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருந்திருக்கும். தமிழகம் எங்கும் குடி நீர் பஞ்சம். நிலத்தடி நீரையும் கூட உறிஞ்சி எடுக்கும் கோகோ கோலா பெப்சி கம்பெனிகள். சுற்றுச் சூழல் மாசுபடுவதால் பருவ நிலையில் மாற்றங்கள். அதனால், பருவ காலங்களில் மழை வருவது என்பதே குறிஞ்சிப் பூவாகிவிட்ட நிலையில் வரும் மழை நீரைத் தேக்கி வைக்க வேண்டிய நீர் நிலைகள் எல்லாம் மண் மேடாகிப் போனதாலும், தண்ணீர் செல்லவேண்டிய வழியை  எல்லாம் கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாலும் சாதாரண மழைக்குக் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் போய்விட்டது. நீர் வரும் பாதையை இந்த சதிகாரர்கள் அடைத்து வைத்துக் கொண்டு, இன்று காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் வந்துவிட்டது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மழை வரும் என்று முன்னரே வானிலை ஆராய்ச்சி மய்யம் எச்சரிக்கை செய்தும் கண்டு கொள்ளாமல் கொடநாட்டில் குடியிருந்த ஜெயலலிதா மிகவும் காலம் தாழ்த்தி அமைச்சர்களை அதிகாரிகளைக் கூப்பிட்டு தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். நாடே பற்றியெரியும்போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்ததுபோல, முட்டுக்காடு, முதலியார்குளம் படகுக் குழாமைச் சீரமைக்க சுமார் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கொடைக்கானல், ஊட்டி, திருச்செந்தூர், திருவண்ணாமலை போன்ற சுற்றுலா மய்யங்களில் உள்ள தமிழ்நாடு ஓட்டல்களை புதுப்பிக்க பல கோடி ரூபாய்களை அம்மா ஒதுக்கியுள்ளார் என்றும் அம்மாவின் இம்முயற்சிக்கு ஆயிரம் நன்றி என்றும் அறிவித்து உண்மையான மழை வெள்ளப் பாதிப்புகளை மறைக்கப் பார்ப்பது மட்டுமின்றி, மக்கள் படும் துன்பகளைக் கொச்சைப்படுத்துகிறது ஜெயலலிதா அரசு.
விஜயகாந்த் உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு மக்களுக்கான மக்கள் பணி பொதுக் கூட்டத்தில் தலா 5 லட்ச ரூபாய் தருவதாக அறிவித்துள்ளார். இவர் கட்டியிருக்கும் கட்டிடம் கூட குளத்தில் உள்ளதாகச் சொல்வார்கள். இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் தானே புயல் தாக்கியபோது தானே நேரில் சென்று பார்த்த தாகவும் அம்மாவின் பாணியில் அறிவிக்கை விட்டுள்ள கருணாநிதியின் ஆட்சியிலும் மழை நீரைத் தேக்கி வைக்க விளைவு தரும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதில்லை.
தீபாவளியில் டாஸ்மாக் மூலம் 340 கோடி ரூபாய் வருமானம் பார்த்ததாகச் சொல்கிறார்கள். மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வெறும் 56 லட்ச ரூபாய்டாஸ்மாக்கால் தள்ளாடும் தமிழகம் மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழகம் ஜெ ஆட்சி தொடருமானால் எதிர்காலத்தில் இருளும் தமிழகம்.

பெண் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் அமைப்பாக்குவோம்! வர்க்கப் போராட்ட எல்லைகளை விரிவுபடுத்துவோம்!

(நவம்பர் 1-2, 2015 தேதிகளில் சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் பெண்கள் மாநாட்டில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி முன்வைத்த அறிக்கை. தமிழில்: தேசிகன்)
நாங்கள் உணவில்லாமல் 10 நாட்கள் கூட இருப்போம் ஆனால் நிர்வாகத்தால் லாபம் இல்லாமல் 10 நாட்கள் இருக்க முடியுமா?’
- வெற்றிகரமான போராட்டம் நடத்திய மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி
அகில இந்திய தொழிற்சங்க மய்யத்தின் சார்பாக இங்கு குழுமியிருக்கும் உங்களுக்கும், உங்கள் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கும் என்னுடைய  புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
1765 காலகட்டத்திலேயே பெண் தொழிலாளர்கள் தங்களை சுரண்டுபவர்களுக்கு எதிரான போராட்டத்தை துவக்கிவிட்டார்கள். மகன்களின் விடுதலை என்பதன் இன்னொரு அங்கமாக மகள்களின் விடுதலை என்ற பெண் தொழிலாளர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தினார்கள். 1824ல் ஊதியத்தைக் குறைத்து வேலை நேரத்தை அதிகரித்த போது 102 பெண் தொழிலாளர்கள் முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அதற்குப் பின்னர், மனிதத்தன்மையற்ற வேலை நிலைமைகளுக்கும் சுரண்டலுக்கும் எதிராக பல பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத போராட்டங்களில் ஈடுபட்டு பெண் தொழிலாளர்கள் தங்களை ஒரு போராடும் சக்தி என்று காட்டியிருக்கிறார்கள். 1908 மார்ச் 8 அன்று புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்கள் உட்பட ஆடை தயாரிப்பு நிறுவன பெண் தொழிலாளர்கள் நியுயார்க் நகரத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து யூனியன் சதுக்கம் வரை பொருளாதாரம் மற்றும் அரசியல் சுதந்திரம் கோரி ஊர்வலமாகச் சென்றார்கள். 1857ல் தங்கள் முன்னோர்கள் இதே போல் நடத்திய பேரணியை கவுரவிக்கும் விதமாக இதைச் செய்தார்கள். இந்தப் பேரணியால் உணர்வும், ஊக்கமும் பெற்ற ட்ரையங்கிள் சர்ட்வெய்ஸ்ட் மற்றும் இதர வியர்வைக் கூடங்களுக்கு எதிராக 1909 - 1910 காலகட்டத்தில்  புலம் பெயர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் ‘20,000 பேரின் எழுச்சி என்ற 3 மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
பெண் தொழிலாளர்களின் வீரமிக்கப் போராட்டங்களை போற்றுகிற வகையிலும், அலெக்சாண்ட்ரா கொல்லண்டை சொன்னது போலமுதலாளித்துவ உலகத்தின் மரபுகளான சமத்துவமின்மை, உரிமைகள் பறிப்பு மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழிப்பது என்ற இலட்சியத்தை நோக்கிச் செல்லவும் 1910ன் பிற்பகுதியில் நடந்த சோசலிச பெண்களின் சர்வதேச மாநாட்டில் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. 1917ல் இதே நாளில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பர்க்கின் பெண் தொழிலாளர்களால்தான் இந்தப் புரட்சி துவக்கப்பட்டது. 1917 பிப்ரவரியில் ஜார் மன்னனுக்கு எதிரான போர்க் கொடியை இவர்கள் முதலில் உயர்த்தினார்கள்.
பெண் தொழிலாளர்கள் தங்களுக்குள் அமைப்பாகத் துவங்கியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மேலான வேலை நிலைமைகளுக்காகவும் குரல் கொடுத்து 250 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் பெண் தொழிலாளர்களால் அதே கோரிக்கை எழுப்பப்படுகிறது. முதலாளிகள் 19ஆம் நூற்றாண்டு பணி நிலைமைகளையும், 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தையும் இணைத்து லாபங்களை குவிக்கும் போது, அந்தக் காலத்தில் கடுமையான தியாகம் செய்து பெற்ற உரிமைகளை நவதாராளவாத ஆட்சிகள் பெண் தொழிலாளர்களுக்கு மறுக்கும் போது, அந்த நாட்களின் தீர்மானகரமான போராட்டங்களை தொழிலாளர்கள் மீண்டும் கொண்டு வர வேண்டியுள்ளது.
உலக அளவில் பெண் தொழிலாளர்களில் 52.7% பேர் மோசமான பணி நிலைமைகளில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வு ஒன்று சொல்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.6% அதிகம். ஆண்களும் அவ்வளவு உயரிய நிலையில் இல்லை. 49.1% சதவீத ஆண் தொழிலாளர்களின் வேலை நிலையும் மோசமானதுதான் என்று அதே ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இதுவும் அதற்கு முந்தைய ஆண்டை விட 0.6% அதிகம். இந்த உலக புள்ளிவிவர கணக்கு, இதைவிட படுமோசமாக இருக்கும் யதார்த்த நிலைமைகளை பிரதிபலிப்பதாக இல்லை.
உலக முழுவதுமுள்ள பெண் தொழிலாளர்களின் மோசமான பணி நிலைமை பற்றி பல ஆய்வறிக்கைகள் சித்திரமாக காட்டுகின்றன. இன்று இந்தியாவின் சுமங்கலி திட்டத்திலிருந்து, வங்க தேசத்தின் ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள், அய்க்கிய அமெரிக்காவின் மெக்டோனால்டு, இங்கிலாந்தின் வால்மார்ட் வரை பெண் தொழிலாளர்கள் சந்திக்கிற பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதித்திருக்கிறோம். அவர்களை எப்படி தொழிற்சங்கத்தில் அமைப்பாக்குவது என்ற முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தொழிற்சங்கத் தலைமைப் பொறுப்புகளில் பெண் தொழிலாளர்கள் இருப்பது முக்கியமான கேள்விதான்; ஆனால் அதிக அளவில் பெண் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் அமைப்பாக்குவது அதை விட முக்கியமானது. அமைப்பாக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் மத்தியில் பணியிடத் தில் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனை ஒப்பீட்டுரீதியில் குறைவு என்பதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும்.
இன்றைய தகவல் உலகத்தில், முக்கியமான ஒரு தகவல் எங்கும் காணக் கிடைக்கவில்லை. உலக அளவில் தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர் எண்ணிக்கை எவ்வளவு? நாடு வாரியாக விவரங்கள் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர் அமைச்சகம் தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றி கவனித்து வர வேண்டும் என்பதால் அந்த விவரம் காணக் கிடைக்கிறது. பாகிஸ்தானில் மொத்த தொழிற் சங்க உறுப்பினர்களில் பெண்கள் வெறும் 2% என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. இந்தியாவில் 2015 பிப்ரவரி 4 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைபடி தொழிற்சங்கத்தில் பெண் உறுப்பினர்கள் 29.54% ஆவர். அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்பாக்கப்படாத தொழில்களில் பெண் தொழிலாளர்கள் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணிகள் பங்களிப்பு செய்கின்றன. தொழிற்சங்கங்களில் பெண்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகமாக இருக்கலாம். ஆனால் உலகம் முழுவதும் தொழிற்சங்கங்களில் இருக்கிற பெண்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் ஏன் இல்லை? இது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விசயமில்லையா?
இந்தியாவில் தொழிற்சங்கங்களில் பெண் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்தது போலவே பிற நாடுகளிலும் உயர்ந்திருக்கும். இது தொழிலாளர் சேர்க்கையில்  ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. இந்த மாநாடு உலகத்தின் பல பகுதிகளிலும் மேலான பணி நிலைமைகள், குறைந்தபட்ச  ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடுகளுக்கு எதிராக மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக என்று வெற்றிகரமான போராட்டங்கள் நடந்து வரும் பின்னணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்கள் தொழிலாளர்களின் பிரச்சனையை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்திருக்கின்றன. ஊதிய ஏற்றத் தாழ்வுகள் பிரச்சனை சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பு வரை கூட இட்டுச் சென்றது. ஆக்கிரமிப்பு இயக்கமோ, சிரிசாவோ, போடேமாúô அல்லது இங்கிலாந்தில் கோர்பினின் எழுச்சியோ, எதுவாக இருந்தாலும், இவை அந்தந்த நாட்டு பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது.
நவதாராளவாத ராஜ்ஜியத்தில் பெண் தொழிலாளர்களை மூலதனம் அதிகரித்த எண்ணிக்கையில் உழைப்பாளர்களாக கொண்டு வருவது அதிக லாபத்தை உறுதிப்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், தொழிலாளர்களுக்கிடையிலான போட்டியை அதிகரித்து கூலியை முடிந்த வரை தாழ்ந்த மட்டத்தில் வைப்பதற்கும் உதவுகிறது. மூலதனத்தின் இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள, கூலி உழைப்பின்  மேலான பேரத்திற்காக இன்னும் இன்னும் கூடுதலான பெண் தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்தின் துவக்க நிலை அமைப்பான தொழிற்சங்கத்திற்குள் கொண்டு வருவது மிக முக்கியமானது ஆகும்.
இந்தியாவின் 2011 கணக்கெடுப்புப்படி நாட்டில் 14 கோடி பெண் தொழிலாளர்கள் உள்ளனர். (இது நிச்சயம் குறைவான மதிப்பீடே ஆகும்). இந்திய தொழிலாளர் அமைச்சகத்தின் தொழிலாளர் பீரோ 22,12,223 பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பதாகச் சொல்கிறது. இது வர்க்கப் போராட்டத்தின் எல்லைக்குள் வராமலேயே கோடானுகோடி பெண் தொழிலாளர்கள் இருப்பதைக் காட்டுகிறது. 13 கோடி பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அமைப்பாகவில்லை என்பதையே அரசு தரப்பு பதிவேடுகள் வெளிப்படுத்துகின்றன. இன்னொரு ஆய்வு இந்தியாவில் 35 கோடி பெண் தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்கிறது. மூலதனத்தின் தாக்குதலை எதிர்த்து அமைப்பாக்கப் பட்ட முறையில் போராடுவதற்கு கோடானு கோடி பெண் தொழிலாளர்களுக்கு வாய்ப்பே இல்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தியாவின் இந்த மாதிரிதான், மூன்றாம் உலக நாடுகள் பலவற்றுக்கும் உண்மையானதாக இருக்க முடியும். எனவே பெண் தொழி லாளர்களை தொழிற்சங்கங்களில் அமைப்பாக்குவதுதான் தொழிற்சங்கங்கள் முன் இன்றுள்ள மிகப் பெரிய சவால் ஆகும். பெண் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தில் அமைப்பாக்குவது என்பது தொழிற்சங்க ஜனநாயகம் என்ற கேள்வியோடும் சம்பந்தப்பட்டதாகும். சரி பாதி  உழைப்பாளிகள் பெண்களாக இருக்கும் போது, தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கையில் அவர்களுடைய குறை பிரதிநிதித்துவம் என்பது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரதிபலிப்பேயன்றி வேறல்ல.
கூலியில்லாமல் பெண்கள் செய்யும் வீட்டு வேலை பற்றிய பிரச்சனையை தொழிற்சங்க இயக்கத்தில் வலுவான பெண் தொழிலாளர் அணிவரிசை ஒன்று இருக்கும்போது மட்டுமே சக்திவாய்ந்த விதத்தில் எழுப்ப முடியும். இந்தியாவின் 2001 கணக்கெடுப்பு ஒன்று வீட்டில் இருக்கும் பெண்களை, பாலியல் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், கைதிகளோடு இணைத்து வகைப்படுத்தியிருக்கிறது.
இவாஞ்சலிகள் சமூக செயற்பாட்டு மேடை என்ற அமைப்பின்படி இந்த வீட்டு வேலையினுடைய மதிப்பு 612.8 பில்லியன் டாலர் ஆகும். இந்த அறிக்கை ÷லை 2010ல் வெளியிடப்பட்டது. இதையே அய்நா அறிக்கை 16 பில்லியன் டாலர் என்கிறது. இந்தியாவின் தேசிய பெண்கள் ஆணையம், இமயமலை பகுதியில் ஒரு ஜோடி காளை மாடுகள் ஒரு வருடத்தில் 1,064 மணி நேரம் உழைக்கின்றன என்றும், ஓர் ஆண் 1212 மணி நேரம் உழைக்கிறார் என்றும், ஒரு பெண் 3485 மணி நேரம் உழைக்கிறார் என்றும் தனது அறிக்கை ஒன்றில் சொல்கிறது. வீட்டில் பெண்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு  கண்டு கொள்ளப்படுவதில்லை. உழைப்புச் சந்தையில் அவர்களின் உழைப்பு குறைந்த கூலியையே பெறுகிறது.
பெண்கள் அமைப்பாவதும் தங்கள் உரிமை களுக்காக சக்திவாய்ந்த விதத்தில் போராடுவதும் எழுந்து வரும் போக்குகளாக உள்ளன. செப்டம்பர் 2015ல் மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை இந்தியா கண்டது. 8000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தாங்கள் பல காலம் உறுப்பினர்களாக இருந்த தொழிற்சங்கங்களை தள்ளி வைத்தும், அவர்களுடைய ஆண் தோழர்களை தள்ளி வைத்தும் 9 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய 20% போனஸ் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அந்த மொத்தப் பகுதியும் ஸ்தம்பித்துப் போய் இருந்தது. குறைந்தபட்ச ஊதியத்துக்கான இரண்டாவது 17 நாட்கள் வேலை நிறுத்தமும் கேரளாவின் சமூக செயற்பாட்டாளர்களின் பரந்த ஆதரவைப் பெற்றது.
பெண் தொழிலாளர்கள் பெண்கள் ஒற்றுமை என்றழைக்கப்பட்ட புதிய தொழிற்சங்கத்தைத் துவங்குவது என்ற முடிவு வரை சென்ற இந்த போராட்டம் கேரளாவின் இடதுசாரி தொழிற்சங்கங்கள் உட்பட நிலை நிறுத்தப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது.
கட்டுரையாளர் அந்தப் போராட்டத்தின் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள், தாங்கள் தங்கள் சங்கங்களுக்குத் திரும்பிச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் தங்களது புதிய அமைப்பைப் பதிவு செய்ய அவர்கள் தயாராகி வருவதாகவும் சொன்னார்கள். தொழிற்சங்கங்கள் அவர்கள் பிரச்சனையை காத்திரமாக எழுப்புவதில்லை எனவும், அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சனைகளை நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் விளக்கிச் சொல்வதற்குப் பதிலாக, நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் பிரச்சனைகளை தங்களுக்கு விளக்கிச் சொல்வதாகவும் அந்தப் பெண் தொழிலாளர்கள் தெள்ளத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள்.
மூணாறு பெண் தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள் அமைப்பாக்குவது என்பதில் மட்டுமல்ல தொழிற்சங்கங்களின் செயல்பாடு தொடர்பாகவும் காத்திரமான கேள்விகளை எழுப்புவதிலும் வரலாற்றில் புதிய அத்தியா யத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தில் சமீப காலங்களில் ஆயிரக்கணக்கில் அமைப்பு சாரா பெண் தொழிலாளர்கள் ஈடுபட்ட 9 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இடது சாரி தலைமையில்லாமல் இந்தப் போராட்டம் அரசியலற்றுப் போகும் என்று கவலைப்படுவ தற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தின் ஒரு புதிய பாதையை வடிவமைத்திருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் அதைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டிய தேவையில்லை. மூணாறு பெண்கள் போராட்டம் சம்பந்தமாக பகிர்ந்து கொள்ள ஏராளமான உற்சாகமூட்டும் அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதைய விவாதப் பொருளின் எல்லை குறுகியதாக இருப்பதால் பின்னர் அதைப் பற்றி விவாதிக்கலாம்.
அமைப்புசாரா  பெண் தொழிலாளர்களை அமைப்பாக்குவது, ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்களை இரகசியமாக அமைப்பாக்குவது, 9 நாட்கள் நீண்ட போராட்டத்தில் உத்வேகத்தை நிலைநிறுத்துவது, பெண் தொழிலாளர்களின் குறிப்பான பிரச்சனைகள் மீது குறிப்பான கவனம் இன்ன பிற என அவர்களுடைய போராட்டத்தில் கற்றுக் கொள்ள பல பாடங்கள் உள்ளன. இதற்கு முன்னரும் நாட்டில் பெண் தொழிலாளர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் உண்டு. உதாரணத்திற்கு, தனியார் மருத்துவமனை செவிலியர்கள் ஊதிய உயர்வுக்காக நடத்திய  போராட்டத்தைச் சொல்லலாம். இந்தப் போராட்டம் தொழிற்சங்க தலைமையால் நடத்தப்பட்டது. மூணாறு போராட்டத்தைப் போலவே இந்தப் போராட்டமும் அடுத்தடுத்த தனியார் மருத்துவமனைகளுக்கும் பரவியது. சில குறுகியகாலப் போராட்டங்களுக்கு பிறகு அந்த அரங்கில் இப்போது அமைதி நிலவுகிறது. இந்தியாவின் சென்னையிலுள்ள ஆடைத் தயாரிப்பு நிறுவனமொன்றில் 300 பெண் தொழிலாளர்கள் தங்கள் சங்க அங்கீகாரத்திற்காக வெற்றிகரமான போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். பின்னாளில் நிர்வாகம் கம்பெனியை விற்க முற்பட்டபோது, வேறு வழியில்லாமல் மேலான நிவாரணத்தை மட்டுமே பெற முடிந்தது. இதுவும் ஒரு தொழிற்சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற போராட்டமே. பல சந்தர்ப்பங்களில் ஆண் தொழிலாளர்கள் சங்கத்தை விட்டு விலகி தொழிலாளர் குழுக்களை உருவாக்குகிறார்கள். ஆனால்நாங்கள் கேட்ட சம்பள உயர்வைத் தரவில்லை என்றால் நாங்கள் மீண்டும் வேலை நிறுத்தத்துக்குச் செல்வோம் என்று மூணாறு பெண்கள் இப்போது சொல்கிறார்கள். மூணாறு மலைகளில் மீண்டும் போராட்டம் நடந்தால் நாம் அதை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு அரசுத் திட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் பணி நிரந்தரம், மேலான வேலை நிலைமைகளுக்காக தொழிற்சங்க தலைமையின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அகில இந்திய வேலை நிறுத்தங்களில் அவர்களின் பங்களிப்பு, குறிப்பாக, செப்டம்பர் 2, 2015 அன்று நடந்த வேலை நிறுத்தத்தில் அவர்கள் பங்கேற்பு ஆகியவை பெண் தொழிலாளர்களின் சக்தி வாய்ந்த அறுதியிடலை காட்டுகிறது.

தொழிற்சங்கங்களில் பெண் தொழிலாளர்களை அமைப்பாக்குவதைப் பொறுத்தவரை பல்வேறு வெளிப்பாடுகளும், போக்குகளும் உள்ளன. மூணாறு தொழிலாளர்களின் மாதிரியை வேறு எங்காவது வேறு பிரிவு பெண் தொழிலாளர்கள் பின்பற்றினால் அதில் தவறு ஏதுமில்லை. இது பல்வேறு வகை மாதிரிகளில் ஒன்று. பெண் தொழிலாளர்களை அமைப்பாக்குவதில் புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த வர்க்கப் போராட்டத்துக்கும் பலம் சேர்க்கவே செய்யும். நம்முடைய தீர்மானகரமான முயற்சி என்பது இன்னும் அமைப்பாக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா பெண் தொழிலாளர்களை மேலும் மேலும் கூடுதலாக தொழிற்சங்க வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம் மூலதனத்தின் தாக்குதலை எதிர்கொள்ள வர்க்கப் போராட்ட எல்லைகளை விரிவுபடுத்துவதேயாகும்.

Search