பிரான்ஸையே அதிரவைக்கும் மக்கள் போராட்டம்
பிரான்ஸின் தலைநகரமான பாரிஸில் 250,000 பேர் உட்பட நாடு முழுவதும் 800,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், காவல் துறை, மருத்துவமனை ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், கல்லூரி பேராசிரியல்கள் என பலதரப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்
நூறு நகரங்கள் உட்பட பிரான்ஸ் நாடே ஸ்தம்பித்துப்போய் இருக்கிறது.
பல தொழிற்கூடங்கள் இயங்கவில்லை
90% ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது
நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
பல பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இயங்கவில்லை
தீவிர வலதுசாரி சக்திகளும், பாசிச சக்திகளும் பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்த காலகட்டத்தில், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் அவலமாக மாற்றக்கூடிய ஆளும் வர்க்க கொள்கைகள் முன்னுக்கு வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவின் டிரம்ப், பிரிட்டனின் போரிஸ் ஜான்சன், பிரேசிலின் மிஷல் பொல்சனரோ, பிலிப்பைனின் டுடர்டே. துருக்கியின் எர்டோகன், சிறிலங்காவின் கோத்தபய, இந்தியாவின் நரேந்திர மோடி, பிரான்ஸின் மேக்ரோன் என வலதுசாரி ஆட்சியாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
எழுந்துவரும் முதலாளித்துவ நெருக்கடியை மக்கள் மீது திணிக்க, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் உழைக்கும் மக்களின் போராடிப்பெற்ற உரிமைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது பிரான்சில் உழைக்கும் மக்களின் சமூகப்பாதுகாப்பாக உள்ள ஓய்வூதிய திட்டத்தை, சீர்திருத்தம் என்ற பெயரில் முற்றாக அவர்களின் நலன்களுக்கு எதிராக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. (இந்தியாவில் பல கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த ஓய்வூதியமும் இல்லை. வருங்கால வைப்பு நிதியோடு இணைக்கப்பட்டுள்ள ஓய்வுதியமும் அற்ப சொற்ப தொகைதான். மத்திய மாநில அரசுகள் தாம் வழங்கிவந்த ஓய்வூதியத்தை 2004க்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு மிகப்பெருமளவுக்கு குறைத்துவிட்டது)
2017ல் தேர்ந்தெடுக்கப்பட்ட மேக்ரான், பிரான்ஸ் நாட்டை தொழில் முனைவோருக்கு (கார்போரேட்டுகளுக்கு) நட்பானதாக மாற்ற கொள்கைகள் வகுக்கப்படும் என்றார். கார்போரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள், உழைப்போருக்கு உரிமைகள் பறிப்பு என்று கொள்கைகள் வகுத்தார். பெட்ரோல் டீசல் விலைவாசி அதிகரிப்பு உட்பட 42 மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து "மஞ்சள் சட்டை" இயக்கம் மேக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டையே உலுக்கும் வண்ணம் கடந்த நவம்பர் 2018ல் வெடித்தது. கூலி உயர்வு, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை திரும்பப்பெற்றது உட்பட சில நடவடிக்கைகளை எடுக்க மேக்ரான் நிர்பந்திக்கப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் 90 சதவிகித உழைப்பாளிகள் ஓய்வூதிய திட்டத்திற்கு உட்பட்டவர்கள். மேக்ரோனின் புதிய ஓய்வூதிய திட்டம், பிரான்சில் ஓய்வூதியத்திற்கு உரிமையுள்ள உழைப்பாளர்களின் உரிமையை கேள்விக்குறியாகும் என்பாதல் மக்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.
இவர்களின் வெற்றி என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் உரிமைகளுக்காக போராடும் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும். வலதுசாரி பாசிச சக்திகளுக்கு ஒரு சரியான சவாலாக விளங்கும்.