COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 11, 2019

இந்திய தொலைதொடர்பு துறையின் இன்றைய நெருக்கடி

தொலைதொடர்பு துறையில் இதுவரையில் இல்லாத நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா மத்திய தொலைதொடர்பு துறைக்குத் தந்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், வோடாபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்த அசோசியேசனில் உறுப்பினர்கள். நெருக்கடி தொலைதொடர்பு துறைக்கு அல்ல.
தொலைதொடர்பு துறையில் இயங்கும் தனியார் நிறுவனங்களுக்குத்தான்.
இந்த நெருக்கடி தனியார் நிறுவனங்களால் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நட்டத்தை வட்டியோடுச் சேர்த்து செலுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் சொல்லும்போது, அதை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க முற்படும்போது, அது எப்படி ஒட்டுமொத்த தொலைதொடர்பு துறையின் நெருக்கடியாகும்?

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொலைதொடர்பு தொழில் செய்ய உரிமக் கட்டணமும் அலைக்கற்றைக்கான பயன்பாட்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் 3% முதல் 5%, உரிமக் கட்டணம் 8% என்று நிர்ணயிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனத்தின் எல்லா விதமான செயல்பாடுகளிலும் கொடுக்கல் வாங்கல்களிலும் இருந்து வரும் வருவாய் இந்த ஒட்டுமொத்த வருவாயை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என்று தொலைதொடர்பு துறையும் தொலைதொடர்பு சேவை மூலம் பெறப்படும் வருவாயை மட்டுமே கணக்கிட வேண்டும் என்று தனியார் நிறுவனங்களும் சொல்ல பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.

14 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் 2019 அக்டோபர் 24 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு சொல்வதுபடிதான் ஒட்டுமொத்த வருவாய் கணக்கிடப்படும் என்றும் அதன் அடிப்படையில் உரிமக் கட்டணமும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சொன்னது.

தீர்ப்பின்படி வோடாபோன், ஏர்டெல், ஏர்செல், டெலினார், ஜியோ உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.92,641 கோடி நிதி பாக்கியை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். இதில் உரிமக் கட்டணம் மற்றும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணம் ரூ.23,189 கோடி, வட்டி ரூ.41,650 கோடி, அபராதம் ரூ.10,923 கோடி, அபராதத்துக்கு வட்டி ரூ.16,878 கோடி.

ஏர்டெல் ரூ.21,862 கோடியும் வோடாபோனும் அய்டியாவுமாகச் சேர்ந்து ரூ.28,309 கோடியும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.16,456 கோடியும் டாடா குழுமம் ரூ.9,987 கோடியும் ஏர்செல் ரூ.7,853 கோடியும் இந்த வகையில் அரசுக்கு செலுத்த வேண்டும்.
பாக்கியும் அபராதமும் வட்டியுமாகச் சேர்ந்து செலுத்த வேண்டிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் இப்போது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் அய்டியா மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

2015க்குப் பிறகு சந்தையில் நுழைந்துள்ள ஜியோ இந்தத் தொகையில் வெறும் ரூ.13 கோடிதான் செலுத்த வேண்டியுள்ளது. அதனால் ஜியோ நியாயவான் பாத்திரம் ஆற்றப் பார்க்கிறது. தானும் அங்கமாக உள்ள செல்லுலர் ஆபரேட்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா, உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி நெருக்கடி வந்துவிட்டதாக மத்திய தொலைதொடர்பு துறைக்கு கடிதம் தந்திருக்கும்போது, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியதில் தனது கருத்தைக் கேட்காததால் தான் தனியாக ஒரு கடிதம் அரசுக்குத் தருவதாகவும், அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டுள்ள எந்த விசயத்துடனும் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இந்தக் கட்டணத்தை செலுத்தும் ஆற்றல் இந்த நிறுவனங்களுக்கு உண்டு என்றும் தங்களிடம் உள்ள சொத்தை விற்று, இந்த நிறுவனங்களால் இந்தக் கட்டணத்தை செலுத்த முடியும் என்றும் ஜியோ சொல்கிறது. 2008, 2011 ஆண்டுகளிலேயே இந்த விசயத்தில் மத்திய அரசின் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன என்று இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தெரியும் என்றும் இப்போதும் அந்தக் கட்டணத்தைச் செலுத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் நிறுவனத்தை மூடுவதாகச் சொன்னால் அரசு உதவி கிடைக்கும் என்பதானலேயே இப்படிச் சொல்வதாகவும் ஜியோவின் கடிதம் குறிப்பிடுகிறது. சந்தையில் இருக்கும் மூன்று தனியார் நிறுவனங்களில் இரண்டு மூழ்கிப் போனால், தானே தனியாட்சி செய்யும் பேராசை இந்தப் பிரச்சனையில் ஜியோவை தனி சால் ஓட்ட வைக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்த நடவடிக்கைகளை அரசு துவக்குவது ஆகியவற்றின் பின் யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை ஜியோவின் கடிதம் வெளிப்படுத்துகிறது.

இந்த கட்டண பாக்கி இருப்பதால் 2019 - 2020 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஏர்டெல்லின் நட்டம் ரூ.23,045 கோடி, வோடாபோன் நட்டம் ரூ.50,922 கோடி என்று சொல்லப்படுகிறது.

பெட்டிக் கடைக்காரர் நட்டம் வந்தால் கடையை மூடிவிட்டுத்தான் செல்கிறார். ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்துக்கு வந்த பின் அண்ணாச்சிக் கடைகள் பல மூடப்பட்டுவிட்டன. வோடாபோனைப் பொறுத்தவரை ஜியோவுடனான போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் போவதுதான் பிரச்சனையே தவிர மத்திய அரசு தனக்கு தர வேண்டிய பாக்கியை தா என்று கேட்பது பிரச்சனை அல்ல. இந்த நெருக்கடி தனியார் நிறுவனங்களுக்குத்தான் நெருக்கடியே தவிர தொலைதொடர்பு துறையின் நெருக்கடி இல்லை. வோடாபோன் செயல்பாட்டை நிறுத்தும் நிலை ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நிறுவனம் சொல்லப் பார்க்கிறது. அதே வாடிக்கையாளர்களுக்கு, குடிமக்கள் என்ற விதத்தில் வேறு வகையில் போய்ச் சேர வேண்டிய மிகப்பெரிய தொகையைத்தான் இந்த நிறுவனங்கள் தர மறுத்து நீதிமன்றத்தில் வாதாடியுள்ளன. ஏர்டெல் இல்லையென்றால் பிஎஸ்என்எல்லுக்கோ ஜியோவுக்கோ மாறிக் கொள்வார்கள். அதனால் எல்லாம் உலகம் அழியாது. வல்லுறவு அரசாகிக் கிடக்கிற இந்தியா வல்லரசாவது தடைபடாது.
இரக்கமற்ற சந்தையின் சித்து விளையாட்டுகளில் அதன் விதிகளுக்கு உட்பட்டு விளையாடத் துவங்கிவிட்டு லாபம் வந்தபோது கொண்டாடியவர்கள் நட்டம் வந்தால் புலம்புவது, அந்த நட்டத்தை அரசு சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்ட முனைவது என்ன நியாயம்?

வங்கிகள் பாதிக்கப்படும் என்று மற்றொரு குரல் வருகிறது. அப்படியானால் வோடபோன் தான் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாது என்று சொல்கிறார்களா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராததால் ஒரு கட்டத்தில் அதை வாராக்கடன் என்று அறிவித்து விடுவதிலும் பிறகு அதைத் தள்ளுபடி செய்வதிலும் பாதிக்கப்பட்டுள்ள வங்கித்துறை இப்போது நிச்சயம் கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகும். அதற்காக, மேலும் சலுகை தந்து மேலும் நட்டத்தை அதிகரித்து அதை பிறகு மக்கள் தலை மேல் போட வேண்டியதில்லை.

பாதிப்பும் நட்டமும் அரசுக்குத்தான் ஏற்படுகிறது. 2017ல் மத்திய தணிக்கையாளர் சமர்ப்பித்த அறிக்கை 6 தனியார்  தொலைதொடர்பு நிறுவனங்கள் குறைவாக வருவாயைக் காட்டியதால், அதற்கேற்ப உரிமக் கட்டணத்தையும் அலைக்கற்றை பயன்பாட்டுக் கட்டணத்தையும் குறைத்துக் காட்டியதால் அரசுக்கு ரூ.12,229 கோடி நட்டம் என்று குறிப்பிட்டது. இந்த ஆறு நிறுவனங்களில் வோடாபோனும் ஒன்று. ஜியோவுக்கும் இந்தப் புரட்டில் பங்குண்டு.

வோடாபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு ரூ.22,100 கோடி வரி கட்ட வேண்டிய வழக்கொன்று சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இப்படியாக, தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களால் ஏற்கனவே அரசுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் ரூபாய் நட்டம் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
உண்மையில் தொலைதொடர்பு துறை வேறு ஒரு பெரிய நெருக்கடியை சந்தித்துள்ளது. சந்திக்கவுள்ளது. அரசு தொலை தொடர்பு நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்லின் 92,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இந்த 92,000 பணியிடங்களும் ரத்து செய்யப்படுகின்றன. 2014ல்தான் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று வாக்குறுதி தந்தார். 2019ல் வேலை வாய்ப்பு பற்றி அப்படி வாக்குறுதி எதுவும் அவர் தரவில்லை. இரண்டாவது பதவிக் காலத்தின் ஓராண்டு நிறைவுறுவதற்கு முன்னரே, அவரது அரசாங்கம் மிக எளிதாக ஒரே மாதத்தில் பொதுத் துறையில் 92,000 வேலைவாய்ப்புகளை ஒழித்துக் கட்டிவிட்டது.

இந்த விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு அரசு ரூ.30,000 கோடி வரை தரத் தயாராக உள்ளது. இந்த ரூ.30,000 கோடியை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தந்தால், கூடவே அந்த 4 ஜி, 5 ஜி எல்லாம் தந்தால், இந்த நிறுவனங்கள் போட்டியில் ஜியோவை முந்தும். கிட்டத்தட்ட 1 லட்சம் ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, இதற்கு மேல் ஜியோவுடன் போட்டியிடச் சொல்வதும், இத்தனை ஆண்டுகள் பின்தங்கிய தொழில்நுட்பத்துடன் போட்டி போட்டதும் ஒன்றுதான். பிஎஸ்என்எல்லும் ஜியோவும் மட்டும்தான் மிஞ்சுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், ஜியோ வைத்ததுதான் சட்டம் என்றாகும். தனியார் நிறுவனங்கள் வளர வேண்டும், கொழுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆண்டுகளும் பிஎஸ்என்எல்லின் வளர்ச்சி திட்டமிட்ட விதத்தில் முடக்கப்பட்டது. இனி வேறு எதுவும் புதிதாக மாறி நடந்துவிடாது.

சின்ன மீனை பெரிய மீன் விழுங்கும் சந்தையில் நேற்று ஏர்செல் காணாமல் போனது போல் நாளை வோடாபோனும் ஏர்டெல்லும் ஜியோவின் முன் நிற்க முடியாமல் காணாமல் போகலாம். தோற்றத்துக்கு இரண்டு நிறுவனங்கள், நடைமுறையில் ஒரே நிறுவனத்தின் கட்டுப்பாடு என்று வந்துவிட்டால் தொலைதொடர்பு துறையில் சேவைக்கு என்று இடம் ஏதும் இல்லாமல் போகும். வெள்ளம், புயல் என இயற்கைச் சீற்றம் தாக்கி அழிக்கும்போது அரசு தொலை தொடர்பு நிறுவனம்தான் சேவை வழங்குகிறது. இது ஜியோ போன்ற ஆட்கொல்லி தனியார் நிறுவனத்தின் தயவுக்கேற்பவே இயங்கும் என்ற நிலை வந்தால் இது ஒட்டுமொத்த நாடும் எதிர்கொள்ளப் போகிற நெருக்கடி. அரசு நிறுவனத்தின் ஏகபோகம் இல்லை, ஜியோவும் இருக்கிறது என்று தோற்றம் காட்டலாமே தவிர ஜியோவின் ஏகபோகமே நிலவும் நிலை வரக்கூடும்.

சாமான்ய மக்கள் தங்கள் சாதாரண உணவில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காய விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை என்று கேட்டால் தானும் தனது குடும்பமும் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று சொல்லும் நிதியமைச்சர் இருக்கும் நாட்டில், பல ஆண்டுகளாக அரசுக்கு பெருமளவு கட்டண பாக்கி வைத்திருக்கும் கார்ப்பரேட் தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தை 8 சதத்தில் இருந்து 6 சதமாகக் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்துவதாக செய்திகள் சொல்கின்றன. இந்த கட்டணக் குறைப்பையும் பெரிதும் அனுபவிப்பது ஜியோவாகத்தான் இருக்கும். எல்லோரும் ஜியோஹிந்த் சொல்லும் நிலையை உருவாக்க ஆயத்தங்கள் நடப்பதாகவே தெரிகிறது.

நாட்டு மக்களுக்குச் சொந்தமான பொதுத் துறை நிறுவனம் உட்பட, எல்லாம் தனியார் கட்டுப்பாட்டுக்குள் போகும் கெடுவாய்ப்புதான் தொலைதொடர்பு துறை சந்திக்கும் நெருக்கடியே தவிர முதலாளித்துவ ஊடகங்கள் கூவுவதுபோல் வோடாபோன் தனது நிறுவனத்தை மூடப்போவது அல்ல. அப்படியோ மூடாமல் செயல்பட்டாலும் அந்த நிறுவனங்கள் அரசிடம் சலுகைகள் பெறுவது என்ற பெயரில் மக்கள் பணத்தை மேலும் கொள்ளையடிக்கப் போவதுதான் நெருக்கடி.

Search