COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 16, 2019

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க 
உச்சநீதிமன்றம் தயங்குகிறதா?

எஸ்.குமாரசாமி

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல பெண்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு, எங்களை சமூக விரோதிகள் சனாதனிகள் என்ற பெயரால் தடுக்கிறார்கள், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என
ரெஹானா பாத்திமாவும் பிந்து அம்மிணியும் உச்சநீதிமன்ற கதவுகளைத் தட்டினார்கள். இரண்டு பேருமே கேரளத்தைச் சேர்ந்த பெண்கள்.

இரண்டு பேரும் அரசியல்சாசன பிரிவுகள் 141 மற்றும் 144 மீது நம்பிக்கை வைத்தனர். பிரிவு 141படி உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். பிரிவு 144படி உச்சநீதிமன்றத்துக்கு உதவும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள நீதித் துறையினரும் அரசுத் துறையினரும் செயல்பட்டாக வேண்டும்.

10 வயது முதல் 50 வரை உள்ள பெண்கள் மாதவிலக்கு ரத்தப்போக்குக்கு ஆளாகும் வாய்ப்புள்ள பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல உரிமை உள்ளவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கனிவல்கர், ரோஹிங்டன் நாரிமன், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரின் அய்வர் அரசியல்சாசன அமர்வம் 28.09.2018 அன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கு நடக்கும்போதே நைஷ்டீக பிரம்மச்சாரி அய்யப்பனின் புனிதத்துக்கு, இந்து தர்மத்துக்கு ஆபத்து என சனாதனிகள் கூச்சலிட்டனர். தீர்ப்பு வந்த பிறகு, தீர்ப்பை அமல்படுத்த விடாமல் செய்வதில், கேரளத்தில் காலூன்ற முயற்சி செய்த பாஜக, கடும் முயற்சி எடுத்தது. வழக்கம்போல், காங்கிரஸ் இந்துத்துவத்துக்குப் பணிந்து இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பு தந்தாக வேண்டும் என்று தீர்ப்புக்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

அரசியல்சாசனப் பிரிவுகள் சபரிமலை விசயத்தில் நடைமுறையில் எடுபடவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமலாக்கப்பட வேண்டும், பெண் சமத்துவம் என்று பேசிய இடது முன்னணி, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தது. இந்தப் பின்னணியில் செப்டம்பர் 28, 2018 தீர்ப்பை மறுசீராய்வு செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நவம்பர் 9 அன்று பாப்ரி மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. இசுலாமிய தரப்பு நியாயங்களை எல்லாம் பட்டியலிட்ட பிறகு, மக்களின் நம்பிக்கை, மதப்பற்று அடிப்படையில், மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில் இருந்து ஆறாவது நாள், அய்யப்ப பக்தர்களின் பிரதிநிதிகள் நாங்களே என்று சொல்பவர்கள் உருவாக்கிய பதட்டத்தின் முன் அரசியல்சாசன அறம் பின்வாங்க நேர்ந்தது.
புதிய அய்வர் அமர்வம் ஒன்று மறுசீராய்வு மனுவை விசாரித்தது. அதில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் இடத்தில் ரஞ்சன் கோகாய் அமர்ந்தது மட்டுமே மாற்றமாகும். நீதிபதிகள் கனிவல்கர், நாரிமன், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அப்படியே தொடர்ந்தனர்.

மனுதாரரால் உரிய முயற்சி எடுத்தும் தாக்கல் செய்ய முடியாமல் போன, அல்லது அவர் கவனத்துக்கு வராத புதிய/முக்கிய சான்று விசயம் இருந்தால், அல்லது பார்த்த மாத்திரத்திலான தவறு அல்லது பிழை தீர்ப்பில் இருந்தால், அல்லது ஏற்கத்தக்க போதுமான காரணம் இருந்தால் மட்டுமே மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய முடியும். சண்டையிட்டு தோற்றுப் போன விசயத்தில் திரும்ப சண்டை போட மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடியாது.

மேலே குறிப்பிடப்பட்ட எந்தக் காரணமும் இல்லாமல் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம், கேரளத்தில் உருவாக்கப்பட்ட பதட்டத்தால் விசாரிக்க முன்வந்தது. அது, சட்டத்தின்படியான முடிவல்ல. அது சட்டம் ஒழுங்கு காக்க எடுக்கப்பட்ட முடிவாகும்.

நவம்பர் 14, 2019 அன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கனிவல்கர், இந்து மல்ஹோத்ரா ஆகிய மூவரும் வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை எழுவர் அமர்வத்துக்கு மறுசீராய்வுக்கு அனுப்ப முடிவு செய்தனர். அவர்கள் புதிய காரணங்கள், புதிய சான்றுகள், பார்த்த மாத்திரத்தில் தெரிகிற பிழைகள் அல்லது தவறுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆக, வழக்கை எழுவர் அமர்வ விசாரணைக்கு அனுப்பியதுதான், பார்த்த மாத்திரத்தில் பளிச்சென தெரிகிற பிழையாக, தவறாக முன்னிற்கிறது.

நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகிய இருவரால் சிறுபான்மை தீர்ப்பு தரப்பட்டது. நீதிபதி நாரிமன் சற்று காரசாரமாகவே எழுதினார். வழக்கு அய்யப்பன் கோவில் நுழைவு தொடர்பான செப்டம்பர் 28, 2018 தீர்ப்பைப் பற்றியது மட்டுமே என்றும், வருங்கால நீதிமன்றங்கள் எந்த வழக்கை எப்படி அணுகுவார்கள் என்பது பற்றியதல்ல என்றும், மறுசீராய்வுக்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் எழுதினார். அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளால் மறுசீராய்வு கூடாது என நேரடியாகச் சொல்லாமல் அதே நேரம் அப்படிச் சொன்னதாக தெரிகிறது. அரசியல்சாசன பிரிவுகள் 141, 144படி செப்டம்பர் 28, 2018 தீர்ப்பை பிரபலப்படுத்தி அனைவரும் கறாராக அமல்படுத்த வேண்டும் என நாரிமன் சொன்னார். உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், வாக்குகளுக்காக அலையும் வெட்கம் கெட்ட காட்சிகள் அல்லது கும்பல் வன்முறையில் ஈடுபடுவது, தூண்டுவது ஆகியவை நடந்தால், அங்கே சட்டத்தின் ஆட்சி இல்லை என்பது தெளிவு எனச் சாடினார்.
பிந்து அம்மிணியும் ரெஹானா பாத்திமாவும் சபரிமலை கோவிலுக்குச் செல்ல பாதுகாப்பு கேட்ட வழக்கு உச்சநீதிமன்ற விசாரணைக்கு டிசம்பர் 13 அன்று வந்தது. வழக்கு தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே மற்றும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் அமர்வம் முன் விசாரணைக்கு வந்தது. எழுத்தாலான அதிகாரபூர்வமான வழக்கு தொடர்பான குறிப்புகள் எதுவும் இல்லை என்றபோதும், வழக்கு பற்றி 14.12.2019 அன்று தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடுகள் செய்தி வெளியிட்டன.

தி இந்து செய்தி, பிந்து அம்மிணிக்கும் ரெஹானா பாத்திமாவுக்கும் வழக்காடிய மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங்கும் காலின் கோன்சால்வசும் இந்தப் பிரச்சனையில் நீதிமன்றம் மவுனம் காக்கக் கூடாது, அது தவறான செய்தியாக மாறும் என்று குறிப்பிட்டதாகச் சொல்கிறது.
‘நாங்கள் சட்டத்தை அறிவோம். சட்டம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. ஆனால், சூழல் மிகவும் உணர்ச்சிவயமானது. அதனால்தான் தீர்ப்பு தொடர்பான மறுசீராய்வு மனுவை பெரிய அமர்வத்துக்கு அனுப்பியுள்ளோம். பொறுமையாக இருங்கள்’ என தலைமை நீதிபதி ஆலோசனை சொன்னார். வழக்கறிஞர்கள் செப்டம்பர் 28 உத்தரவுக்கு தடை ஏதும் இல்லை என்று சொன்னார்கள். தலைமை நீதிபதி சொன்னார்: ‘ஆமாம், அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதற்குச் சமமாக பிரச்சனை பெரிய அமர்வத்துக்குச் சென்றுள்ளது என்ற விசயமும் இருக்கிறது. இன்னும் அந்த அமர்வம் அமைக்கப்படவில்லை. ஆயிரம் வருடங்களாக இருந்த நடைமுறை இன்றும் உள்ளது. எங்கள் கருத்துப்படி இன்று நாங்கள் எந்த உத்தரவும் போட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். உங்கள் பக்கம் (பெண்கள்) இறுதியில் தீர்ப்பானால், பெண்கள் சபரிமலை செல்வதை நாங்கள் உறுதி செய்வோம். சட்டத்தை அமல்படுத்தாத எவரையும் சிறையில் தள்ளுவோம். சூழல் வெடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. நாங்கள் இப்போது வன்முறை வெடிக்கும் ஒரு நிலை உருவாவதை விரும்பவில்லை. ஆம். செப்டம்பர் 28, 2018 தீர்ப்பு உள்ளது என்பது சரியே. ஆனால், அதே விசயம் பெரிய அமர்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதும் உண்மையே ஆகும்’. ‘எந்த நீதிமன்றமும் போட வேண்டிய ஓர் உத்தரவு பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். நாங்கள் எங்களுக்கென்று உள்ள அதிகாரத்தை இங்கு பயன்படுத்துகிறோம்’. இரண்டு பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா என்று வழக்கறிஞர்கள் கேட்டதற்கு தலைமை நீதிபதி சொன்னார்: ‘நாங்கள் அவர்களை தடுத்து எந்த உத்தரவும் போடவில்லை. நாங்கள் எந்த உத்தரவும் போடவில்லை’.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி, கேரள அரசாங்கமோ, கோவில் நிர்வாகமோ உங்களை வரவேற்றால் எங்களுக்குப் பிரச்சனை இல்லை என்றும் எழுவர் அமர்வ தீர்ப்பு வரும்வரை நாங்கள் உத்தரவு போட மாட்டோம் என்றும் பாத்திமாவுக்கு அச்சுறுத்தல் ஏதும் இருந்தால் அவர் காவல்துறையை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் சொன்னதாக குறிப்பிடுகிறது. அதே செய்திப்படி, வழக்கு தொடுத்துள்ள பெண்களுக்கு சட்டம் சாதகமாக உள்ளது, தீர்ப்புக்கு தடை எதுவும் இல்லை என்பது தங்களுக்குப் புரிகிறது என்று உச்சநீதிமன்றம் சொன்ன விசயமும் குறிப்பிடப்படுகிறது.

கும்பல் வன்முறையால் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு வரக்கூடாது என்று நீதிபதி நாரிமன் சரியாகவே சொன்னார். ஆனால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட, வன்முறை வெடிக்க வாய்ப்புண்டு, அதனால் சட்டத்தின் ஆட்சியை சற்றே விலக்கி வைப்போம் என்று சபரிமலை வழக்கில் சொல்லியுள்ளதுபோல் தெரிகிறது. பெண்களுக்கு மட்டுமல்லாமல், அரசியல்சாசன விழுமியங்களுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கூட பாதுகாப்பு இல்லைதான். உச்சநீதிமன்றம், தான் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புப்படி பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைய பாதுகாப்பு தராது என்பது நாட்டுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தியாகும்.

Search