மோதல் கொலையும் கும்பல் படுகொலையும்
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே
எஸ்.குமாரசாமி
அய்தராபாத் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகளை உடனே பிடி, போட்டுத் தள்ளு என்ற ஆவேசக் குரல்கள் நடுவீதி முதல் நாடாளுமன்றம் வரை ஒலித்தன.
ஒவ்வொரு நாளும் பாலியல் வன்முறை தொடரும் நாட்டில், விசாரணை தாமதமாகுமா, தண்டனை இருக்குமா என்ற அக்கறைகள் மேலோங்கி உள்ள நாட்டில், இப்படிப்பட்ட குரல்கள் ஒலிப்பதை புரிந்துகொள்ள முடியும்.
மோதல் கொலை நடந்தாலாவது பயம் வராதா என்ற ஏக்கத்தை, தொடரும் இந்த கொடும் குற்றம் தொடர்பான மக்களின் அறச்சீற்றத்தை, ஏதும் நடக்கவில்லையே என்ற கையறு நிலையை, ‘நிகழ்வுக்கு நியாயம் வழங்குவது’ என்ற போலி நிம்மதி நோக்கி, உணர்ச்சிமய திருப்தி நோக்கி ஊடகங்கள் உந்திச் செலுத்துகின்றன. பாலியல் வன்முறைக்குப் பதில் மோதல் படுகொலை! பழிவாங்கலும் கவுரவம் காத்தலும் நடந்துவிட்டனவாம்!
குற்றம் சுமத்தப்பட்ட எவரும் குற்றவாளி ஆகமாட்டார், குற்றம் சுமத்தப்பட்ட எவரும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதியே, எவருடைய உயிரையும் சொந்த சுதந்திரத்தையும் சட்ட வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு பறிக்க முடியாது என்ற சட்டக் கோட்பாடுகள், அரசியல்சாசன உயிர் வாழும் உரிமை வரையறை பின்னுக்குத் தள்ளப்பட்டு, ‘பொது மக்கள் கருத்து’ குற்றத்தையும் தண்டனையையும் தீர்மானிப்பதாக முன்னுக்கு வந்துள்ளது.
சட்டவிரோதமாக, நன்கு திட்டமிட்டு, மேலிடத்து ஆணைப்படி சுட்டுக் கொன்றவர்கள், இனிப்பு தரப்பட்டு, மலர் தூவப்பட்டு, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு கொண்டாடப்படுகிறார்கள். ‘பொதுமக்கள் கருத்தும்’ ‘கொண்டாட்ட மந்தைத்தனமும்’ உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை நாம் காணத் தவறலாகாது.
பசுமாடு, மாட்டுக் கறி என்று எவராவது சந்தேகம் எழுப்பினால், அங்கே கும்பல் படுகொலை நடக்கும். தலித் ஆண்கள் பிற சாதிப் பெண்களை காதலித்தால், மணந்தால் அங்கே ஆதிக்கக் கொலை நடக்கும். பாலியல் வன்முறை நடந்தால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் என்றால் அவர்கள் மோதல் படுகொலை செய்யப்படுவார்கள். போலி மோதல் என நிறுவ சிரமப்பட வேண்டாம் என்பதும் பிரச்சனையே. எந்த மோதலும் கிடையாது, காவலில் இருந்தவரை, திறமையாக பொய்க் காரணம் சொல்லி, போட்டுத் தள்ளிவிட்டார்கள் என்பது பெரிய ரகசியம் இல்லை. படுகொலை செய்த காவலரை நமது சமூக அமைப்பும் ‘பொது மக்கள் கருத்தும்’ தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்கின்றன.
நீங்கள் குற்றவாளிகளை ஆதரிப்பீர்களா, அந்தப் பெண்களின், அவர்களது உற்றார் உறவினரின் உணர்வுகளை மதிக்க மாட்டீர்களா, தேசவிரோத மாவோயிஸ்டுகளுக்கு, இசுலாமிய பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவீர்களா என்று கேட்டு, அரச வன்முறையை நியாயப்படுத்துகிறார்கள். மனித உரிமைகள் பற்றி, சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுபவர்களை வாயடைக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
குற்றங்கள் சட்டப்படிதான் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வப்போதைய ஆறுதலை தந்துவிட்டால், நாளும் தொடரும் பாலியல் வன்முறை கொடுமைகள், அழுகிப் போன நிலைமைகள் மறைந்துவிடுமா? இந்த அணுகுமுறையால் வன்புணர்வு, அது ஓர் அதிகார உறவு குற்றம், அது பெண் உடல் மீதான வக்கிரமான ஆதிக்க உணர்வு, அது சமூகம் நெடுகவும் மேலிருந்து கீழ் வரை விரவிப்பரவியுள்ள ஆணாதிக்க வெளிப்பாடு என்ற புரிதல் அடி வாங்கிவிடாதா?
பெண்கள் இயக்கமும் ஜனநாயகப் பற்றாளர்களும் எழுப்பிய, எழுப்புகிற, எழுப்ப வேண்டிய கேள்வி, பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் பற்றியது. எப்படி உட்காருவது, நிற்பது, நடப்பது, படுப்பது, உடை அணிவது, யாரோடு எப்படி பழகுவது, எங்கு எப்போது நடமாடுவது என எல்லா விசயங்களிலும் பெண்களுக்கு அச்சமற்ற சுதந்திரம் மறுக்கப்படும் காலங்களில், மரண தண்டனை, உடனடி தண்டனை தாண்டி, பெண்களுக்கு எதிரான அடுத்த குற்றம் நோக்கி சமூகம் நகர்ந்து விடுகிறது. பெண் ஒப்புக்கொள்ளாமல், விரும்பாமல் பெண்ணைத் தொடக் கூடாது என உணர்ந்த ஆண்கள் நிறைந்ததாக, பெண்ணை உணர்வுள்ள சக மனிதராக மதிக்கும் ஆண்கள் நிறைந்ததாக, பெரியாரின் மொழியில் ஆண்மை தத்துவம் அழிக்கப்பட்டதாக சமூகம் மாற்றப்பட்டாக வேண்டும். அதே வேளை, விரைவான, கூருணர்வுள்ள துரித விசாரணை, குற்றம் செய்பவர் எவரானாலும் நிச்சயம் தண்டனை என்பவற்றை, உறுதி செய்தாக வேண்டும்.
மக்கள் விருப்பம் என மசூதி இடிக்கப்பட்ட நாட்டில், மக்கள் நம்பிக்கை என்ற பெயரால் மசூதியை இடித்தவர்கள் மசூதியை இடித்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டுள்ள நாட்டில், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என இசுலாமியரை வெறுக்கும் அரசியல் அரியணையில் அமர்ந்து ஆட்டம் போடும் நாட்டில், தமது கார்ப்பரேட் விசுவாசத்தில் இருந்து கவனத்தைத் திருப்ப ஆட்சியாளர்கள் தேசபக்தி கூப்பாடு போடும் நாட்டில், ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு கார்ப்பரேட் சேவையில் சனாதனம் இந்து ராஷ்டிரா நோக்கி வேகமாகவும் மூர்க்கமாகவும் நகரும் நாட்டில், அரசியல்சாசன அறம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அடிப்படையில் ஜனநாயக விரோத சமூகத்தில், பெரும்பான்மைத்துவத்தை நிராகரித்து சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்தும் அரசியல்சாசன அறம் இயற்கையாய் உருவாகாது. அது கடினப்பட்டு நிலைநாட்டப்பட்டாக வேண்டும். பேணி வளர்க்கப்பட வேண்டும்.
தூத்துக்குடியில் சுட்டுக் கொன்ற துப்பாக்கிதான்
அய்தராபாதிலும் சுட்டுக் கொன்றது.
ஆதிக்கத் துப்பாக்கிகளின், அதிகாரத் துப்பாக்கிகளின்
வெடிச் சத்தம் வேண்டவே வேண்டாம்.
பெண்களின் அச்சமற்ற சுதந்திரம் வேண்டும்.
சட்டத்தின் ஆட்சி வேண்டும்.
ஜனநாயகம் வேண்டும்.