COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 11, 2019

குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்

இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மாவை சிதைத்து விட்ட குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட காத்திருக்கிறது.

1955 குடியுரிமை சட்டத்தில் சங் பரிவாரின் ஆட்சி கொண்டு வந்துள்ள திருத்தப்படி, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31க்குள் இந்தியாவுக்குள் வந்த துன்புறுத்தப்பட்ட மதச்சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிக்கள் அல்லது கிறித்துவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று கருதப்பட மாட்டார்கள். இந்திய குடியுரிமை பெற 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்திருக்க வேண்டும் என்ற அளவுகோல் திருத்தச் சட்டப்படி அய்ந்து ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.
உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் யூதர்களும் இஸ்ரேலில் குடியேறலாம் என்று இஸ்ரேல் சொல்வதுபோல், உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் இந்துக்களும் இந்தியாவில் குடியேறலாம், இந்தியா இந்து ராஷ்ட்ரம் என்று அமித் ஷாவும் மோடியும் ஆர்எஸ்எஸ்சும் சொல்வது மட்டும்தான் இனி நடக்க வேண்டும். அதற்கான துவக்கத்தை, இந்தியா இந்து ராஷ்டிராவாக மாறுவதன் துவக்கத்தை பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு காட்டியது என்றால், மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அந்தத் திசையில் முதல் அடியை வைத்துவிட்டது.
அந்த மூன்று நாடுகளிலும் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஷியா பிரிவினர், அகமதியாக்கள், இந்துக்களான இலங்கைத் தமிழர்கள், இறைமறுப்பாளர்கள் ஆகியவர்கள் ஏன் இந்தத் திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இவர்களை எல்லாம் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்புவதை விட, மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் இந்தத் திருத்தமே பிளவுவாதத் தன்மை கொண்டது அதனால் கைவிடப்பட வேண்டும் என்று சொல்வது மேலும் பொருத்தமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கும்.
திருத்தம் சொல்லும் காலகட்டத்தில் திருத்தம் சொல்லும் நாடுகளில் இருந்து வந்த இசுலாமியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் அவசர அவசிய கேள்வி. அரசின் கொள்கைகளுக்கு நடவடிக்கைகளுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்களை பாகிஸ்தான் போ என்று சொல்லிக் கொண்டிருக்கும் சங்கிக் கூட்டத்துக்கு இந்தத் திருத்தம் வாய்ப்பாக அமைந்து விடக் கூடாது.
மீனாட்சிபுர தலித்துகள் இசுலாத்துக்கு மாறியதுபோல், ஜனநாயகம் விரும்பும், சமத்துவமும் பன்மைத்துவமும் விரும்பும், இந்திய அரசியல்சாசனத்தை நம்பும், சட்டபூர்வமாக இந்துக்களாக அறியப்படும் இந்தியர் அனைவரும் இசுலாத்துக்கு மாறிவிட்டால் என்ன செய்வார் அமித் ஷா?
வெங்காயம் போல், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது. காய்கறிகள், கனிகள் எவற்றையும் சாமான்ய மக்கள் வாங்க முடியவில்லை. வேலை இல்லை. வருமானம் இல்லை. குறைவருமான வேலைகள் கூட பறிபோகின்றன. கவுரவமான உணவு கூட இல்லை என்ற நிலைக்கு நாட்டு மக்களின் பெரும்பான்மையினரை கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள் வளர்ச்சி பேசியவர்கள். பொருளாதாரம் மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது.
நாட்டை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை பதிவேடு இந்தியாவெங்கும் விரிவுபடுத்தப்படும் என்ற பிளவுவாத நிகழ்ச்சிநிரலை 2024 தேர்தலுக்குள் முடிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற அமித் ஷா, பற்றியெரியும் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் சொல்லியிருக்கும் இன்னொரு பதில்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டம்.
பிளவுவாத, திசைதிருப்பும், அழிக்கும் அரசியலை அனுமதிக்கக் கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் பல கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த ஓய்வூதியமும் இல்லை. வருங்கால வைப்பு நிதியோடு இணைக்கப்பட்டுள்ள ஓய்வுதியமும் அற்ப சொற்ப தொகைதான். மத்திய மாநில அரசுகள் தாம் வழங்கிவந்த ஓய்வூதியத்தை 2004க்குப் பிறகு புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு மிகப்பெருமளவுக்கு குறைத்துவிட்டது.

Search