COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 8, 2020

ஆயிரமாண்டுகளின் அன்பு

மனுஷ்ய புத்திரன்

அடையாளங்கள் அல்ல
அடையாளங்களின் அரசியலே முக்கியம்


நான் ஒரு முஸ்லீம் அல்ல
ஆனால் நான் உங்கள் பக்கம் நிற்கிறேன் என
ஹிஜாப் அணிகிறாள் ஒரு இந்து சகோதரி

நாங்கள் முஸ்லீம்கள் அல்ல
ஆனால் உங்களுக்காக
மனித அரணாக நிற்கிறோம் என வரிசையாக
போராட்டக் களத்தில்
தொழுகை நடத்தும் முஸ்லீம்கள் அருகே
கரம் கோர்த்து நிற்கிறார்கள்
இந்துக்களும் சீக்கியர்களும்

நீர்நிலைகளில்
அருகருகே நீர் அருந்தும் மான்களின்
கூட்டத்தை கண்டு
ஆத்திரமடைகிறது பசித்த சிங்கம்
மான்கூட்டத்தை கலைத்து
வேட்டையாட விரும்புகிறது

அரசியல் சட்டத்தை அழியுங்கள்
நீதியை அழியுங்கள்
உரிமை சாசனங்களை அழியுங்கள்
எதனாலும் அழிக்கமுடியாத
இந்த தேசத்தின் ஆன்மா ஒன்றிருக்கிறது
வெறுப்பின் ஆயிரம் கதைகள் நடுவே
அது இடையறாது துடித்துக்கொண்டிருக்கிறது
என் கண்கள் தளும்புகின்றன
இந்த மண்ணை மண்டியிட்டு முத்தமிடுகிறேன்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
பழைய மது போன்றது இந்த அன்பு
அதை நீங்கள் அழிக்க முயன்றால்
எங்கள் எல்லா தெய்வங்களும்
ஒரே தெய்வமாகிவிடும்
எல்லா அடையாளங்களும்
ஒரே அடையாளங்களாகிவிடும்
சதுக்கங்களில் கூடும்
மக்களின் முகங்களை பாருங்கள்
ஒரு புனித யுத்ததின் கனல்
அவர்கள் முகங்களில் எரிகிறது
எல்லோரும் எல்லோருக்குமாக நிற்கிறார்கள்
கொடுங்கோலன் அஞ்சுவது
கூட்டத்தை கண்டு அல்ல
சுடுவதற்கு அவர்களிடம் துப்பாக்கி இருக்கிறது

அவன் அஞ்சுவதெல்லாம்
இந்த பெருந்திரள் அன்பைக் கண்டு
அடையாளங்களை கடக்கும்
அடையாள அரசியலைக் கண்டு

இங்கே கடைசி இந்து இருக்கும் வரை
கடைசி முஸ்லீம் இருப்பான்
கடைசி முஸ்லீம் இருக்கும் வரை
கடைசி இந்து இருப்பான்

20.12.2019
பகல் 02.55
மனுஷ்ய புத்திரன்

Search