COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

நாரவாரிகுப்பம் பேரூராட்சியின்
உள்ளாட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர்களுக்கு
வீட்டுமனைப் பட்டா பெற எடுக்கப்படும் முன்முயற்சிகள்


க.ராமன்

செங்குன்றம், நாரவாரிகுப்பம் பேரூராட்சியின் உள்ளாட்சித் துறை துப்புரவுத் தொழிலாளர்கள் 12 பேரின் குடும்பங்கள் செங்குன்றத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எதிரில் உள்ள துரைசாமி தெருவில் காலியாக உள்ள 33 சென்ட்டில் குடியிருந்து வருகின்றனர்.
மேலும் 7 பேரின் குடும்பங்கள் தாங்களாகவே இந்த இடத்தில் குடிசை போட்டுக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். மொத்தம் 19 குடும்பங்கள் தலா ஒன்றரை சென்ட் நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மின் இணைப்பு பேரூராட்சி ஈஓ பெயரில் வழங்கப்பட்டுள்ளது. 12 வீடுகளுக்கான வாடகை மாதம் ரூ.30 சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. மின் கட்டணம் இவர்களே செலுத்துகிறார்கள். அந்த குடியிருப்பு மனைகளுக்கு பட்டா வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை. மின்இணைப்பு ஈஓ பெயரில் இருப்பதாலும் இடம் பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் பட்டா தர வாய்ப்பில்லை என அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்களில், நிரந்தர தொழிலாளர்களின் சீருடை, சோப்பு, லீவு போன்ற பிரச்சனைகளுக்கு சங்கம் தீர்வு கண்டுள்ளது. இங் குள்ள 40க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம், மாதம் ரூ.7,000 சம்பளம் வாங்கும் இவர்களுக்கு ஊதிய உயர்வு, மேற்பார்வையாளர் கெடுபிடிகள் என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. சங்கம் தலையிட்டதால் மாதச் சம்பளம் ரூ.8,000 என உயர்ந்துள்ளது.

இந்தப் பின்னணியில் துப்புரவுத் தொழிலாளர் கள், தங்கள் குடியிருப்பு மனை தொடர்பாக என்ன ஆதாரங்கள் வைத்துள்ளார்கள் என அறிந்துகொண்டு, இது தொடர்பாக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அணுகி, அவர்கள் வாழ்விடத் தின் தன்மை, சர்வே எண் ஆகியவற்றை சங்கம் தெரிந்து கொண்டது.

இந்த 19 குடும்பங்களின் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை நகல்கள் எடுத்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மனு எழுதி, நிலத்துக்கான, அவர்கள் அங்கு ஆண்டுக்கணக்கில் வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்களை இணைத்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு  பதிவு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டது.

அனுப்பிய தபால்களுக்கு முறையான தகவல் கிடைத்தது. மனுக்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களை நேரடியாக பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சங்கம் அவர்களை சந்திக்கும் முன், வருவாய் ஆய்வாளரும், கிராம நிர்வாக அலுவலரும் சம்மந்தப்பட்ட இடத்தில் முறையான ஆய்வு செய்தனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் ராமனுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அழைத்துப் பேசினர்.
குடியிருப்பு மனை தொடர்பாக மேலதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைத்ததாகவும், இலவச பட்டா வழங்க வேண்டுமானால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இந்த நிபந்தனையை பூர்த்தி செய்வது அங்குள்ள 6 குடும்பங்கள் மட்டுமே என்றும் பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மீதியுள்ள 13 குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் உள்ளதால் அவர்கள் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரை செலுத்தி நிலத்தை வாங்கிக் கொண்டு பட்டா வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே மிகவும் மோசமான வாழ்நிலைமைகளில் உள்ள அந்தத் தொழிலாளர்களுக்கு இது சாத்தியமே இல்லை. ஆகவே பணம் கட்டி பட்டா வாங்கும் நிலையில் இல்லாத மக்களுக்கு வேறு வழி இருந்தால் அதன்படி இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சங்கம் கேட்டுக் கொண்டது. அதற்கு வாய்ப்பில்லை என்றும், மாவட்ட ஆட்சியரை, அமைச்சரை சந்தித்து பேசலாம் என்றும் தெரிவித்தனர்.

முதலில் 6 பேருக்கு இலவச பட்டா தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு இலவச பட்டா வழங்க முடியாத காரணத்தை எழுத்துபூர்வமாக தர வேண்டும் என்றும் சங்கம் கேட்டுக் கொண்டது.
இந்தக் கடிதம் வந்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரையும் அமைச்சரையும் சந்தித்து மற்ற குடும்பங்களுக்கு இலவச பட்டா வாங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

Search