COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் எழுச்சிமிக்க போராட்டம்

தமிழ்நாடு அரசாங்கத்தின் நலத்திட்டங்களை எல்லாம் செயல்படுத்த டாஸ்மாக் வருவாயே அடிப்படையாக உள்ளது.
ஆனால், அதற்குக் காரணமான பல்லாயிரக்கணக்கான டாஸ்மாக் தொழிலாளர்கள் ஏச்சையும் பேச்சையும் அவமானத்தையும் அனுபவித்துக் கொண்டு 17 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் ரூ.10,100 சம்பளம் தாண்டாது, பணி நிரந்தரம், மருத்துவ வசதி கிடையாது, ஆத்திரஅவசரத்துக்கு கழிப்பிட வசதி கிடையாது என்ற நிலையில் உள்ளனர். தங்கள் கோரிக்கைகளை முன்னிறுத்த ஒரு வலுவான சங்கம் வேண்டும் என தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் அமைத்தார்கள். போராட்டங்களை முன்னெடுக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எல்டியுசியின் இளம்தலைவர்களில் ஒருவரான உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாரதியை சிறப்புத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நீலகிரியில் இருந்து திருவள்ளூர் வரை, குமரி முதல் காஞ்சி வரை ஊழியர் கூட்டங்கள் நடந்தன.

30.01.2020 கடை விடுமுறை நாளில் சென்னையில் திரண்டு கோரிக்கைகளுக்காக தலைமையகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர்.
பல மாவட்டங்களிலும் கைது செய்வோம், எஃப்அய்ஆர் போடுவோம் என காவல்துறை மிரட்டியது. எஃப்அய்ஆர் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என நிர்வாகம் மிரட்டியது. ஆயினும் ஜனவரி 30 அன்று, இருபது மாவட்டங்களில் இருந்து சுமார் 1500 ஊழியர்கள் தலைமையகம் அருகில் கூடினர். தலைமையகத்தின் முன்வாயில் பூட்டப்பட்டு அலுவலர்கள் பின்வாயில் வழியாக உள்ளே சென்றனர். காவல்துறையின் கடுமையான கெடுபிடி இருந்தது.

போராட்டத்தில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கத் தோழர்கள், எல்டியுசி தலைவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் தோழர் பார்வேந்தன், தோழர் பாரதி உரையாற்றினர். தோழர்களின் ஒரு பிரிவினர் தடைகள் தாண்டி டாஸ்மாக் அலுவலகம் முன்னால் சென்றும் போராட்ட முழக்கங்களை எழுப்பினர். அடுத்த போராட்டத்துக்கு தயாராகும் தோழர்கள் அடுத்த முறை பல ஆயிரம் பேர் வருவோம் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் சொன்னார்கள்.

Search