COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, January 8, 2020

உள்ளாட்சித் தேர்தல் போராட்டத்தில்
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்


50%க்கு மேல் நகர்மயமாக்கம் நடந்துள்ள தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கார்ப்பரேட் நலன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சிகளில் மற்றும் 9 மாவட்டங்களில் வாக்காளர் தொகுதியை அறிவிக்காமல் தேர்தல் நடத்த முடியாது என்ற நிலையில்
9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. எடுபிடி எடப்பாடி அரசு மாநிலத்தின் பெருவாரியான மக்களை உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் சந்திக்க முடியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் போராட்டத்தில்  பங்கேற்கும் வாய்ப்பு  திருவள்ளூர், நாமக்கல் மாவட்ட தோழர்களுக்கு கிடைத்தது. நடந்தது உள்ளாட்சி மட்ட தேர்தலின் ஒரு பகுதியாக இருந்தாலும் நாமக்கல் மாவட்டத்தில் கோவை பிரிக்கால் தோழர்களும், திருவள்ளுர் மாவட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முன்னணி தோழர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் செயல்பட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கட்சியின் மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் வே.சீதா போட்டியிட்டார்.

புதிய எருமைவெட்டிபாளையம் ஊராட்சியில் கட்சியின் மாவட்டத் தலைவர்களில் ஒருவரும் எல்டியுசி சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜி.அன்புராஜ் போட்டியிட்டார்.
நெற்குன்றம் ஊராட்சி மன்ற வார்ட் உறுப்பினர் பதவிக்கு தோழர் ஆறுமுகம் போட்டியிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் ஒன்றியம், பள்ளிபாளையம் அக்ரகாரம் ஊராட்சி 1வது வார்டில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மாநில அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.புகழேந்தி போட்டியிட்டார்.
பள்ளிபாளையம் ஒன்றியம், கலியனூர் ஊராட்சியில் 7 வார்டு உறுப்பினராக  தோழர் பி.மாரியப்பன் போட்டியிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு ஊராட்சிகளில் தோழர்கள் சீதா அன்புராஜ் இருவருக்கும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 10 நாட்களுக்கும் மேலாக சென்னை தோழர்கள் பங்கேற்றனர். கட்சியின் மாநில அமைப்புக்குழு, ஆலோசனை குழு சென்னை, காஞ்சி, செங்கை மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர்கள் தலைவர்களுடன்  தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோடு, நிதியும் அளித்தனர்.

தோழர்கள் குமாரசாமி, ஏ.எஸ்,குமார், வித்யாசாகர், மஞ்சுளா, பாரதி, மோகன், சேகர், பழனிவேல், உமாமகேஸ்வரன், ராஜகுரு, குப்பாபாய், கே.ராஜேஷ், க.ராமன், மற்றும்  மாநிலத் தலைமை தோழர்கள், தோழர் ஜானகிராமன், அன்புராஜ், சீதா ஆகியோருடன், தயா ரிப்புகள், கூட்டங்கள், பிரச்சாரம் என அனைத்து அம்சங்களிலும் செயல்பட்டனர்.

சென்னை மாவட்ட குழுவின் தலைமை தோழர்கள், தோழர்கள் முனுசாமி வேணுகோபால், பாலகிருஷ்ணன், பசுபதி, சுகுமார், முருகன், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்பின் தோழர்கள் தோழர் மோகன்ராஜ் தலைமையிலும், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர்கள் சுரேஷ், சங்கர் ஆகியோர் தலைமையிலும் பங்கேற்றனர். எல்டியுசியின் ஓஎல்ஜி, அகர்வால், வெல்மேக், ஜிம்கானா கிளப், மதராஸ் கிளப், செங்குன்றம் அரிசி ஆலை கிளைச் சங்க முன்னோடி தொழிலாளர்கள் திருவள்ளுர் மாவட்ட குழுவின் அனைத்து பகுதி தோழர்கள் என நூறு பேர் வரை இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தோழர்கள் புகழேந்தி, மாரியப்பன் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்ய மாநில அமைப்பு குழு மற்றும் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் தினமும் எல்டியுசி கட்சி முன்னோடிகளுடன் அக்ரகாரம் 1ஆவது களியனூர் 7ஆவது வார்டுகளில் பிரச்சாரம் செய்தனர். கோவை மாவட்ட கட்சி, எல்டியுசி தலைவர்கள் குருசாமி, ஜெயபிரகாஷ் நாராயணன், மணிகண்டன், ராஜா, சக்திவேல் நேரில் போய் பிரச்சாரம் செய்தனர். நிதி கொடுத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நமது பிரச்சாரம், வெளிப்படையான ஊழல் இல்லாத நிர்வாகம், வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி, விசைத்தறி முதலாளிகளிடம் கூடுதல் வரி வசூல், விசைத்தறி தொழிலாளர் வேலை குடியிருப்பில் கட்ட ணமில்லாத சுகாதராமான கழிப்பிடம், சாலைகள், மின்விளக்குகள், பாதுகாப்பான குடிநீர் தேவைகளுக்காக உள்ளாட்சி மன்றத்தில் குரல் கொடுக்க போராட உறுதியளித்து வாக்கு கேட்டனர்.

உள்ளாட்சி தேர்தல் போராட்டத்தை நடத்தும் நாமக்கல் தோழர்கள் 2020 ஜனவரி 8 வேலைநிறுத்தம் பற்றி பேசி ஆதரவு கேட்டனர்.
டிசம்பர் 25 அன்று வெண்மணி நாள் அந்த நாளில் அழிஞ்சிவாக்கம் இலுப்பபட்டு கிராமத்தில் பிரச்சாரம் செய்த வேட்பாளர் தோழர் சீதா அங்கு அமைந்திருந்த டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கு நடந்த தெருமுனைக் கூட்டத்தில் கட்சித் தலைவர் தோழர் குமாரசாமி உரையாற்றினார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, வீட்டுக்கு இருவருக்கு வேலை, நாளொன்றில் ரூ320 கூலி வேண்டி தொடர்ந்து போராட வாக்கு கேட்டனர். அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்பு வழங்கப்பட வேண்டும், ஊழலற்ற வெளிப்படையான ஊராட்சி நிர்வாகம், வீட்டுமனை, கவுரமான பாதுகாப்பான வாழ்நிலைமை வேண்டும் எனவும் இதற்காக போராடுவோம் என்றும் பிரச்சாரம் செய்தனர். 

திருவள்ளுர் மாவட்டத்தில் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் தலைவராக போட்டியிடும் தோழர் வி.சீதா சட்டம் படிக்கும் மாணவர், கட்சியின் இளைஞர், மாணவர், தொழிலாளர் கோரிக்கைகளுக்காக போராட்டங்களில் முன்னின்றவர். ஊராட்சியின் உழைக்கும் மக்கள் கோரிக்கைகளுக்காக, வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடுவேன் என பிரச்சாரம் செய்தார்.
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 2010ல் 1500 மக்கள் வசிக்கும் எம்ஜிஆர் நகர், மல்லைய்யா நகர், மக்களை வெளியேற்ற அவர்கள் வீடுகளை பொதுப்பணி துறை அதிகாரிகள் இடித் தனர். மாற்று இடம் தர மறுத்தனர். வாக்குகளை பறித்தனர். நமது கட்சி தோழர்கள் கடந்த 9 ஆண்டுகளாக போராடி குடியிருப்பை, வாக்குரிமையை மீட்டு பகுதி மக்களுக்கு மின்சார வசதியை இது நாள் வரை உறுதி செய் துள்ளோம். தொடர்ந்து பகுதி மக்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுக்க போராடும் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம்தோழர் வே.சீதா ஊராட்சி மன்றத்தை போராட்ட மய்யமாக மாற்ற தேர்ந்தெடுக்க வாக்கு கேட்டனர்.

தோழர் அன்புராஜ் புதிய எருமைவெட்டிபாளையத்தில் போட்டியிட்டார். இந்த கிராமத்தில் வனத்துறை நிலம் பாதுகாப்பது என்ற பெயரால் சாலை போக்குவரத்து, மின்சார வசதி, மனைப்பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக மறுக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்புபவர். இங்குள்ள ஒன்றிய உயர்நிலைப் பள்ளிக்காக 4.4 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் பள்ளிக் கட்டிடம் கட்ட போராடியவர்.

2019 நவம்பர் இறுதியில் சாலை, குடிநீர், மின்சாரம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சோழவரம் பிடிஓ அலுவலகத்தை எருமை வெட்டிபாளையத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான மக்களுடன் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்  தோழர் அன்புராஜ். தொடர்ந்து போராட்டத்தின் விளைவாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

கட்சி துவங்கிய ஓரிரு மாதங்களில், சென்னை மண்டலத்தில் எழுக தமிழ் பேரணி, நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள், பொது வேலை நிறுத்த இயக்கம், மதர்சன் தொழிலாளர் போராட்டம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போரட்டம் என தொடர் இயக்கத்தில் இயங்கிக் கொண்டு இருக்கிற நம் தோழர்கள், இந்த உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திலும் துடிப்பான ஆழமான பதிவுகளை செய்துள்ளனர். இந்தத் தேர்தல் பங்கேற்பு மக்கள் மத்தி யிலான வேலைகளுக்கு உற்சாகம் தரும் விதம் அமைந்தது.
தொகுப்பு: சேகர்

Search