COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

மதர்சனில் போராட்டம் முடிந்துவிட்டது
ஆனாலும் போராட்டம் தொடர்கிறது


குறைந்த கூலி பெற்று வந்த, கவுரவம் மறுக்கப்பட்ட திருபெரும்புதூர் மதர்சன் தொழிலாளர்கள் 26.08.2019 அன்று துவங்கிய வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு 13.01.2020 முதல் வேலைக்கு திரும்பி விட்டார்கள்.


ஒரு லட்சத்து முப்பத்து அய்ந்தாயிரம் பேர் பணியாற்றும் ஒரு குழுமத்தின் ஒரு நிறுவனத்தில் மட்டுமே போராட்டம் நடந்தது. 300 பேர் வேலை நிறுத்தம் செய்த போது சுமார் 900 பேர் உற்பத்தியில் ஈடுபட்டனர்.

எரிவதைப் பிடுங்கி கொதிப்பதை அடக்க முடியவில்லை. நீயாக வெளியே போனாய், வாலைச் சுருட்டிக் கொண்டு நீயாக உள்ளே வா என்ற நிலைப்பாட்டை நிர்வாகம் எடுத்தது. நீதிமன்றமும் வேலைக்கு செல்பவர்களைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவு போட்டது.
நாட்டு நிலைமையே சரியில்லை, போராடாதே என்றுதான் நாலா பக்கங்களிலும் ஆலோசனைகள் வந்தன. வேலை நிறுத்தம் துவங்கியதும் தொடர்வதும் தீவிரவாதம், தீவிரவாதம் அழிவையே தரும் என அறிவுரைகள் தரப்பட்டன. வேலை நிறுத்தத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டு உள்ளே செல்லுங்கள், மெல்ல மெல்ல பேச்சு வார்த்தைகளில் நகரலாம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது. எத்தனை நாட்கள்தான் தொழிலாளர்கள் நிற்பார்கள், அவர்களை கொடுமைப்படுத்துகிறீர்களே என்று கூட சங்கத்தைக் கேட்டவர் உண்டு.

சங்கம் நம்பிக்கையோடு களம் கண்டது. தொழிலாளர்கள் போராட்டத்தால் அவர்கள் வாழ்வில் பிரச்சனைகள் வரவில்லை என்றும் முதலாளியால் முதலாளித்துவத்தால்தான் அவர்கள் வாழ்வே பிரச்சனையானது  என்பதை சங்கம் தொழிலாளர்களுக்கு  கவனப்படுத்தியது. தொழிலாளர்களின் பலங்களை முன்னிறுத்துவது, பலவீனங்களைப் பின்னுக்கு தள்ளுவது என்ற அணுகுமுறையை எடுத்தது. தனித்தனியாய் யோசிக்கக் கூடாது, வர்க்கமாய் யோசிக்க வேண்டும், தனியாய் பலவீனப்பட வாய்ப்பு உள்ளது, கூட்டாய் பலப்பட முடியும் என்று நம்பிக்கை தந்தது.

கடும்குளிர் நிலைமைகளில், அமைப்பு செயல்பாடு, வர்க்க உணர்வை முன்வைத்தல், அடுத்தடுத்து போராட்டங்கள் என்ற நெருப்பு கதகதப்பையும் வெப்பத்தையும் தந்தது.

அரசுக்கு அழுத்தம் தருவதில் காவல்துறையை அணுகியது மிகவும் முக்கியமான விசயமாகும். ஒரு புறம் தொழிலாளர்கள் சிறைக்குச் செல்லத் தயார்ப்படுத்தப்பட்டனர். போராட்டத்தின்போது, கைதாகும்போது கவலையும் குழப்பமும் ஒரு பக்கம் வந்தன. மறுபக்கம் மாலையே விடுதலையாகும் போராட்டம் வேண்டாம், சிறை செல்வோம் அல்லது முடிவு தெரியும் வரை போராடும் இடத்தை விட்டு வெளியேற வேண்டாம்  என்றும் தொழிலாளர்கள் பேசினார்கள். சங்கம் அவர்கள் கூடவே இருந்து அரவணைக்கிறது, வழி நடத்துகிறது என்பதால் தொழிலாளர்கள் சங்கம் சொல்லும் போராட்ட நெளிவு சுளிவுகளை ஏற்றுக்கொண்டனர்.

தொழிலாளர்கள், சங்கம் அவர்களுக்கானது, சங்கத்தின் செயலும் சொல்லும் அவர்களுக்கானது என உணர்ந்தனர். அவர்கள் நிர்வாகத்திடம் அடிபணிந்து கவுரவம் இல்லாமல் உள்ளே போவதில்லை என்பதில் தெளிவாக நின்றனர். சீக்கிரம் முடியுங்கள் என சங்கத்திடம் சொன்னவர்கள், சங்கம் வேண்டாம், கொடி வேண்டாம் என எப்போதும் சொல்லவில்லை.
எங்கும் சங்கத்தை ஏற்காத நிர்வாகத்துக்கு, அரசை தலையிட வைத்தது, அதுவும் தொழிலாளர் கவுரவத்தைக் கைவிடாமல் தலையிட வைத்தது, பெரும் சவாலாக இருந்தது.

போராட்டங்களால் துணை முதலமைச்சர் தலையீடு நடந்தது. தொழிலாளர் அமைச்சரோடு சந்திப்பு நடந்தது. தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் 10பி பிரிவின் கீழ் பிரச்சனைகள் முடிய ஆனையிடுமாறு சங்கம் கடைசி கட்டத்தில் கோரியது. தொழில் தகராறுகளை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பக் கோரியது.

அரசு நிர்வாகத்துக்கு இதையே காரணம் காட்டி, நாங்கள் ஆணையிடாமல் ஆலோசனை தந்து பிரச்சனையை முடிப்பது உங்களுக்குக் கவுரவம் என்றது. அந்தக் கட்டத்தில் மோதத் தெரிந்த அதே வேளை முடிக்கவும் தெரிய வேண்டும் என சங்கம் முன்னணிகளிடம் விவாதித்து தீர்வு நோக்கி நகர்ந்தது.
தடுமாறி தள்ளிப் போய் ஒரு வழியாக 10.01.2020 அன்று ஏற்புடைய ஆலோசனை தரப்பட்டது. அதன்படி நிர்வாகம் வேலை நிறுத்தத்தையொட்டி எந்த பழிவாங்குதலும் இருக்காது என ஒப்புக்கொண்டது. தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள 51 முன்னணிகள் விசயத்தில் விசாரணை முடிவுகளை தொழிலாளர் துணை ஆணையர் முன்வைத்து அவரது ஆலோசனைப்படி மட்டுமே முடிவெடுக்க ஒப்புக்கொண்டது. நிலையாணைகள்படி உற்பத்தித் திறன் கட்டுப்பாடு காக்க சங்கம் ஒப்புக்கொண்டது.

தகுதிகாண் பருவ நிலை தொழிலாளர்கள் 27 பேர் வேலை நீக்கம், சங்கத்தோடு பேசி ஒப்பந்தம் போடுவது ஆகிய பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன.
27 பேருக்கு மாதா மாதம் ஒருமைப்பாடு நிதி தரவும் அவர்கள் வழக்கை நடத்தவும் தொழிலாளர்கள் முடிவெடுத்துள்ளனர். ஒப்பந்த பேச்சு வார்த்தைகள் தொடர்பான தொழில் தகராறை தொழிலாளர் துறை விசாரிக்க உள்ளது. 51 பேர் விசாரணை ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சங்கம் எப்படியோ ஈடு கொடுத்து விட்டது

பிப்ரவரி 2 அன்று நடக்கவுள்ள பொதுப் பேரவையில், பகுதியின் முன்னணிப் போராளிகளாகச் செயல்பட மதர்சன் தொழிலாளர் கள் உறுதியேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

Search