COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

காவி தர்பார் கனவுகளுடன் சமூக நீதிக்கு, பெரியாருக்கு குறி வைக்கிறார்கள்

எஸ்.குமாரசாமி

காவிக் கூட்டத்துக்கு தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற பேராசை உள்ளது. கூட்டாளிகளின் ஆட்சி என்பதோடு அது திருப்தி அடைய மறுக்கிறது.
தமிழ்நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த தலைவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதன் கூட்டாளிகளாக ஏற்கனவே இருந்துள்ளனர். இப்போது பழனிச்சாமி அரசும் அஇஅதிமுகவும் சங் பரிவார் ஆணைப்படியே பெருமளவுக்கு செயல்படுகின்றன. ஆனபோதும், பாஜக, தமிழ்நாட்டு அரசியலில் ஓர் இளநிலை கூட்டாளியே ஆகும். பாஜகவுக்கு தானே தமிழ்நாட்டு அரசியலில் முதன்மை சக்தியாகும் விருப்பம் உள்ளது. சங் பரிவாரும் ஆர்எஸ்எஸ் சும் தமிழ்நாட்டில் அதற்குக் காலம் கனிந்துவிட்டது என்று கருதுவதாகத் தெரிகிறது. கார்ப்பரேட் வளர்ச்சி, மதவெறி, சாதியாதிக்கம், ஆணாதிக்கம் என்ற நச்சுக் கலவை தமிழ் நாட்டை வலது திசையில் தள்ளும் என நம்புகின்றன. இந்த வலது திசை சமூகப் பொருளாதார பயணத்துக்குப் பொருத்தமாக ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த்தை அரசியலில் முன்னிறுத்த முயற்சி செய்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த காலம் முதலே அரசு எந்திரத்தின் மீது சங் பரிவாரின் பிடி இறுகிவிட்டது. சங் பரிவார் தனது ஜித்து வேலைகளுக்கு கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவையும் பயன்படுத்திக் கொண்டது. ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள், சங் ஆதரவு தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட வலைப்பின்னல் தமிழகம் எங்கும் பரவின. தலித்துகள் மத்தியில் ஓர் உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. ராம் விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அதாவலே போல் இங்கு, கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனுக்கு வலை வீசப்பட்டது. குறிப்பாக கோவை மற்றும் நெல்லையிலும் பொதுவாக தமிழ்நாடு முழுவதும் இசுலாமிய தீவிரவாத வேட்டை ஓயாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் கன்னியாகுமரி காவல் அதிகாரி வில்சன் படுகொலையை அடுத்து விசாரணை எதுவும் துவங்காத நிலையில், இசுலாமிய பயங்கரவாதம் மீது ஊடகங்கள் மூலம் குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. காஷ்மீரில் காவல் அதிகாரி தாவீந்தர் சிங், பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர் என்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கில் போடப்பட்ட அப்சல் குரு அப்போதே தாவீந்தர் சிங்குக்கு பயங்கரவாதிகளுடன் உள்ள தொடர்பு பற்றி விசாரிக்கக் கோரினார். காஷ்மீரில் காவல்துறையினர் ராணுவத்தினர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மத்தியில் பலர் பயங்கரவாதிகளுடன் பிணைப்பு கொண்டு கோடிகோடியாய் சம்பாதிப்பது ஊரறிந்த ரகசியமாகும். அரசு பயங்கரவாதிகள் என்ற இரண்டு தரப்புக்கும் உளவாளிகளாக பலர் உள்ளனர்.

இங்கே தமிழ்நாட்டில் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள்  பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டே உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயங்கரவாதம் பரவுவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் நுட்பமாகவும் விரிவாகவும் ஆழமாகவும் அரச ஒடுக்குமுறையும் வன்மையான அரசும் கட்டமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அதிகப் போராட்டங்கள் நடக்கின்றன என்று சொல்லும் அரசு, தமிழ்நாட்டில் பல்லாயிரம் பேர் மேல் வழக்கு போடப்படுகிறது என்ற உண்மையை சொல்ல மறுக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்குகளுக்கு முன்பே, இந்த வழக்குகள் பதிவாயின என்பதும் காணத் தக்கதாகும்.

இந்த ஆபத்தான சூழலில்தான், துக்ளக் இதழின் அய்ம்பதாவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் ராமனை பெரியாருக்கு எதிராக நிறுத்திப் பார்த்துள்ளார். முரசொலி கையில் வைத்திருப்பவர்கள் திமுககாரர்கள் என்ற ஒரு கண்டுபிடிப்பை அறிவித்த பிறகு, துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்றார். துக்ளக் படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பார்ப்பனர்களே என்பது அறியப்பட்ட செய்தி. 1971 ஜனவரி 24 அன்று சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் ராமன் படம் ஆடையில்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது என்று துக்ளக் மட்டுமே துணிந்து எழுதியது என ரஜினிகாந்த் 2020ல் பாராட்டினார். அது மறக்கப்பட வேண்டிய விசயமே தவிர மறுக்கப்பட முடியாத விசயம் என்று சாதுரியமாய்ப் பேசியவர், மிகவும் கவனமாக மறக்க வேண்டிய விசயத்தை நினைவுபடுத்தினார்.

1971ல் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் ராஜாஜி காமராசருடன் சேர்ந்து கொண்டார். திமுக கருணாநிதி தலைமையில் தேர்தலைச் சந்தித்தது. துக்ளக் அப்போதே ராமன் உருவத்தை பெரியார் செருப்பால் அடிப்பதாகவும் பக்கத்தில் நின்று கருணாநிதி அதனை மவுனமாக ரசிப்பதாகவும் படம் போட்டு, இவர்களுக்கா உங்கள் வாக்கு என்று அட்டைப் படத்தில் கேள்வி எழுப்பியது. சேலம் ஊர்வலத்துக்கு எதிராக காமராசரின் காங்கிரஸ், பலவிதமான பழமைவாத சக்திகளுடன் சேர்ந்துகொண்டு, தமிழ்நாட்டு மாணவர்களை, இளைஞர்களை தூண்டிவிடப் பார்த்தது. மயிலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று காவல் ஆணையர் குப்புசாமியிடம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் எனவும் திராவிடர் கழகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

2020 ஜனவரி தினமணி, தினமலர், தமிழ் இந்து நாளிதழ்கள் வரிந்து கட்டிக் கொண்டு, சந்தடி சாக்கில், 1971ல் பெரியார் ராமரை அவமதித்தது மத நிந்தனை செய்தது சரியா என்று கூப்பாடு போட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் 1948லும் மசூதிக்குள் ராமர் விக்கிரகங்களை கொண்டு போகும் முயற்சி நடந்தது என உச்சநீதிமன்றம் 2019ல் தீர்ப்பு வழங்கியது பற்றி நன்கு தெரிந்தும், 1971ல் ராமன் அவமதிக்கப்பட்டான் என்ற உணர்வே அயோத்தி ராமர் கோயில் கட்ட விதையாக இருந்தது என 2020ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் கூசாமல் பொய் சொன்னது.

பாஜகவின் எச்.ராஜா, பகுத்தறிவு என்பது இந்து மத எதிர்ப்பு எனவும் எண்பது ஆண்டுகளாக பெரியார் தலை மீதுள்ள ஒளிவட்டம் அரசியல் கட்சிகளின் வாயை அடைத்துள்ளது என்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட பாஜக எதிர்ப்பு 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு விலகி வருவதாகவும் ரஜினிகாந்தும் சோவும்தான் பெரியார் பற்றி துணிந்து உண்மை பேசியவர்கள் என்றும் 27.01.2020 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டுக்கு பேட்டி தந்தார்.

சோவும் குருமூர்த்தியும் ராஜாவும் ரஜினிகாந்த்தும் என்ன சொல்கிறார்கள்?
அ. பார்ப்பனரே அறிவாளிகள்.
ஆ.பார்ப்பனர் அல்லாதோர் அறிவாளிகள் அல்லர்.
இ. பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழ்நாட்டுக்கு நன்மை ஏதும் செய்யாத இந்துமத நிந்தனையாளர்களே.
ஈ.பெரியாரின் பெருமைகள் என்று சொல்லி தமிழ்நாட்டின் மீது சிறுமைகளே சுமத்தப்பட்டுள்ளன.

இந்து மதத்தில் மட்டுமே சாதி உண்டு. கிறித்துவ, இசுலாமிய மதங்களில் சாதி இல்லை. இந்து மதம் ஏற்றிப் போற்றும் சாதி முறையே சூத்திர இழிவை, தீண்டாமையை ஏகப்பெரும்பான்மை இந்துக்கள் மீது திணிக்கிறது. அதனால், நூறு நூறு ஆண்டுகளாக மானுட கவுரவம் மறுக்கப்பட்ட மக்களை கிளர்ந்தெழ வைக்க அன்று பெரியார் கையாண்ட உத்திகள், நடவடிக்கைகள், உரைகள் மென்மையானவையாக, நளினமானவையாக நிச்சயம் இருக்கவில்லை. அவை வெடிப்புகளாக, அதிர்வு களாகவே இருந்தன. நாகரிக மேட்டுக்குடியினர் அவை கண்டு முகம் சுளித்தனர். புருவம் நெறித்தனர். சூத்திர இழிவுக்கு எதிராகவே பெரியார், ஆத்திரம் கொண்டு அடிக்கச் சொன்னார் என்பதை புரிந்து கொண்டதால்தான் தமிழ்நாட்டு மக்கள் அவரை தந்தை பெரியார் என்று கொண்டாடினர். 69% இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிற தமிழ்நாட்டு மக்கள், வைரமுத்து தமிழாற்றுப்படை யில் பெரியார் பற்றி சொன்னதை நிச்சயம் நினைவில் கொண்டுள்ளனர். ‘94 ஆண்டுகள், 3 மாதங்கள், 7 நாட்கள் வாழ்ந்த பெருவாழ்வில் 8,200 நாட்களை சுற்றுப் பயணத்துக்கே செலவிட்டவர். எட்டு லட்சத்து இருபதாயிரம் மைல்கள் சுற்றுப் பயணம் செய்தவர். அதாவது பூமியின் சுற்றளவு போல் மூன்று மடங்கு சுற்றி வந்தவர். 21,400 மணி நேரம் சொற்பொழிவாற்றியவர். அவரது அத்தனை சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு செய்து ஓடவிட்டால், அவை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், அய்ந்து மாதங்கள், 11 நாட்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்’. தமிழ்நாட்டு மக்களின் உணர்வோடு, வாழ்வோடு இரண்டறக் கலந்த பெரியாருக்கு எதிராக ராமன் என்கிற சாமியை நிறுத்தும் முயற்சி 1971ல் வெற்றி பெறவில்லை. 2020லும் வெற்றி பெறாது. பெரியாரை நாம் யாரும் காக்க வேண்டியதில்லை. அவரது வாழ்வும் அதன் செய்தியும் இந்துத்துவாவின் தீராப்பகையாக என்றும் இருக்கும்.

ஆனால், பெரியார் களமாடிய தமிழ்நாடு என்ற மிதப்பில், இன்று பரவிப் படர்ந்து வரும் இந்துத்துவாவை குறைத்து மதிப்பிட முடியுமா? அன்று கருணாநிதி, ஸ்ரீரங்கநாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வாய் கொண்டு பிளக்கும் நாள் எந்நாளோ, அந்நாளே நன்னாள் என்று சொன்னதுபோல் அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே என்று  எழுதியதுபோல், சொல்வதற்கான, எழுதுவதற்கான சூழல் இன்று உள்ளதா?

நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டேன் என்று அண்ணாதுரை சொன்ன நிலைக்கு நகர்வது சரிதான். ஆனால், தமிழ்நாட்டில் பெரியார் காலத்திய, சமூகநீதி போராட்ட காலத்திய விழுமியங்களில் இருந்து திராவிட கட்சிகள் வெகுதூரம் விலகி நகர்ந்துவிட்டன. அய்ம்பது ஆண்டுகளுக்கு மேல் கழகங்கள் ஆண்டும் மாற்றங்கள் வரவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. சுயமரியாதை இயக்க மரபை சமூக நீதி வரலாற்றை மதிப்பவர்களும் கூட, திராவிட அரசியல் கட்சிகளின் சறுக்கல்கள் சரிவாக மாறும் வாய்ப்பு உண்டு என்றே கருதுகின்றனர். வலுவான மக்கள் சார்பு மாற்று அரசியல் கருத்து நிலையிலும் களத்திலும் இல்லாத சூழலை, ரஜினிகாந்த் போன்றவர்கள் மூலம் பயன்படுத்த முடியுமா என்ற நப்பாசை பாஜகவுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக எதிர்ப்பும் அதன் கூட்டாளிகள் எதிர்ப்புமே மக்கள் சார்பு அரசியலின் குவிமய்யமாக இருந்தாக வேண்டும். அதே நேரம் மக்கள் சார்பு அரசியலை, தேர்தல் அரசியலோடு மட்டும் சுருக்கிவிடவும் முடியாது.
தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் தலித் இயக்கத்தின் இடதுசாரி இயக்கத்தின் போராட்ட மரபுகளை மீட்டெடுக்க வேண்டும். அந்த வெளிச்சத்தில் மாற்றத்துக்கான ஜனநாயகத்துக்கான போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்ப வேண்டும்.

Search