COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

2020 ஜனவரி 8 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் 
இடது தொழிற்சங்க மய்யம் (எல்டியுசி)

எஸ்.சேகர்

2020 ஜனவரி 8 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் சென்னை, திருபெரும்புதூர், செங்குன்றம், கோவை, பள்ளிபாளையம், சேலம் ஆகிய மய்யங்களில் நடந்த சாலை மறியல் போராட்டங்களில் எல்டியுசி தோழர்கள் கலந்துகொண்டனர்.
கோஆப்டெக்சில் வேலை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.
சென்னையில் நடந்த வண்ணமயமான அனைத்து தொழிற்சங்கங்களின் சாலை மறியல் போராட்டத்தில் எல்டியுசி மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் தலைமையில் சில நூறு பேர் அணிதிரட்டலுடன் தோழர்கள் கலந்து கொண்டனர்.

2019 நவம்பர் மாதத்தில் இருந்தே ஜனவரி 8 பொது வேலை நிறுத்த தயாரிப்பு பிரச்சாரப் பணிகளில் இருந்த ஜிம்கானா கிளப், மதராஸ் கிளப், போட் கிளப், அகர்வால் பவன், காஞ்சி காமகோடி மருத்துவமனை, இசபெல்லா மருத்துவமனை ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர் முன்னோடிகள் குறிப்பிடத்தக்க அணிதிரட்டலுடன் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில் கூடினர்.

அம்பத்தூர் குடியிருப்பு பகுதிகளில் ஒரு மாதம் முன்னதாகவே பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆன்லோட் கியர்ஸ், சாய் மீரா, வெல்மேக், ஜெய் இஞ்சினியரிங், மாநகராட்சி மலேரியா ஒழிப்பு தொழிலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் தோழர்கள் கே.பழனிவேல், ஆர்.மோகன், சென்னை மாவட்ட தலைமை தோழர்கள் ஜி.முனுசாமி, கே.வேணுகோபால் உள்ளிட்ட  தலைவர்களுடன் மறியலில் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் புதிய அரங்கமான டாஸ்மாக் பணியாளர்களின் மாநிலம் தழுவிய சங்கத்தின் முன்னணி தோழர்கள், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் முன்னணிகள் தோழர்கள் பாரதி, சுரேஷ், சீதா ஆகியோருடன் டாஸ்மாக் மாநில தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களை கைது செய்த காவல்துறை அவர்களை வேறுவேறு இடங்களில் அடைத்தது. பச்சையப்பன் கல்லூரி வளாகத்திலிருந்த போராளிகளுக்கு குடிக்க தண்ணீர், அமர இருக்கை தர மறுத்த அதிகாரிகளை கண்டித்து,  பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் எல்டியுசி தோழர்கள் அங்கன்வாடி பணியாளர்களுடன் இணைந்து மீண்டும் மறியல் போராட்டம் நடத்தினர்.   

திருவள்ளுர் மாவட்டத்தில் ஜம்போ பேக் தொழிலாளர்கள் முன்னுதாரணமிக்க விதத்தில் வேலை நிறுத்தத்தை அமல்படுத்தினர். வெங்காயக் கூடை முடையும் தொழிலாளர்கள், பாரத் புட்ஸ் தொழிலாளர்கள், பார்மிக்ஸ் தொழிலாளர்கள்  பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அரிசி ஆலை தொழிலாளர்களும் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்களும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எல்டியுசி தலைவர்கள் தோழர்கள் எஸ்.ஜானகிராமன், க.ராமன், அன்புராஜ் தலைமையில் பங்கேற்றனர். செங்குன்றம், திருவள்ளுர் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

 இந்த முறை புதிய வரவாக உள்ளாட்சி நகர்மன்ற தூய்மை பணியாளர்களின் சங்கமும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டது. இந்த அரங்கில் புதிதாக எல்டியுசி நுழைகிறது. நமது தலைமை தோழர்கள் தேடிச் சென்று சேர்த்து அவர்களை அணிதிரட்டி பங்கேற்றனர். நாரவாரிகுப்பத்தில் பேரூராட்சி தூய்மைப் பணியில் சில தலைமுறைகளாக ஈடுபடும் தொழிலாளர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னரே குடியிருக்கும் வீட்டு மனை தரப்பட்டுள்ளது. 12 சிதிலமடைந்த வீடுகளும் அப்படியே உள்ளன. ஆனால் 12 குடும்பங்களிலும், ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் தாத்தா முதல் கொள்ளு பேரன் வரை 10, 15 பேர் என 4 தலைமுறைகள் அடைபட்டுள்ளனர். அகதிகளை விட மோசமான வாழ்நிலையில், அனைத்தும் மறுக்கப்படும் நிலையில், அவர்களுக்கு தரப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேசன் அட்டைகளில் 10, 15 பெயர்கள் இருக்கின்றன. நகரம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. நகராட்சி தூய்மை பணிகளில் தலைமுறை தாண்டியும் வேலை செய்தவர்கள், விதவிதமான அடைமொழிக ளில் அழைக்கப்படுபவர்கள் சுமார் 100 பேருக்கு இருக்க இடம் குடிநீர் குடியிருப்பு வாழ்வாதார நிலைமைகள் மாறவில்லை. விதவிதமான ஒப்பந்த நிபந்தனைகளால் வருமானம் குறைந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கும் இந்த தொழிலாளர்கள் பிரச்சனைகளில் தலையிட்டு குடியிருக்க மனையும் வீடும் அமைத்து தர ஆட்சியாளரிடம் கோரிக்கை வைத்து பேச்சுவார்த்தைகள் நமது தோழர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளர்களையும். சங்கமாக்கும் நடவடிக்கைகளில் திருவள்ளூர் மாவட்ட எல்டியுசி தோழர்கள் இறங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதர்சன் தொழிலாளர் போராட்டத்தின் தொடர்ச்சியையும் உறுதியையும் அடுத்த கட்டங்களுக்கு, வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லும் அடுத்தச் சுற்று வேலைகளுக்கு துவக்கமாக ஜனவரி 6 அன்றே 140 நாட்களை கடந்திருந்த மதர்சன் தொழிலாளர் போராட்டத்தின் பதிவுகளை வெளியிட்டதோடு, ஜனவரி 8க்கும் எல்டியுசி தோழர்கள் தயாராயினர். ஜனவரி 8 காலை 11.30 மணிக்கு திருபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் எல்டியுசி மாநிலச் செயலாளர் தோழர் ராஜகுரு, மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் ராஜேஷ், ராஜேஷ், தினகர் மற்றும் மதர்சன் கிளை சங்க தலைவர்கள், தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முனைப்பான பிரச்சாரம் இயக்கம் நடத்தப்பட்டது. ஜனவரி 8 அன்று, பள்ளிபாளையத்தில் எல்டியுசி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ் தலைமையில் விசைத்தறி தொழிலாளர்கள் மறியல் செய்து கைது செய்யப்பட்டனர்.

கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் நடத்தப்பட்ட வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் கோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் தலைவர்களும் கம்யூனிஸ்ட் கட்சி, எல்டியுசி மாவட்டத் தலைவர்களும் தொழிலாளர்களும் தோழர் எஸ்.குமாரசாமி தலைமையில் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.

சேலத்தில் கோஆப்டெக்ஸ் பணியாளர் சங்கத்தின் பெரிய கிளையான தங்கம் பட்டு மாளிகையில் 2019 நவம்பர் 21 அன்று கிளை ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழர் எஸ்.குமாரசாமி கலந்து கொண்டார். ஆயுள் சிறை தண்டனைக்குள்ளாகி சேலம் சிறைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ள பிரிக்கால் தோழர் ராமமூர்த்தியை தோழர் குமாரசாமியுடன் அன்று சந்தித்தனர். மேட்டூர், எடப்பாடி, திருச்செங்கோடு, கருர், நாமக்கல் கிளைகளில் ஊழியர் கூட்டங்கள் நடந்தன. அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுவதும் 85 கிளைகளில் வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்கள் நடத்தப்பட்டன. சங்கப் பொதுச் செயலாளரும் எல்டியுசி மாநிலச் செயலாளருமான தோழர் விஸ்வநாதன் தலைமையில் சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், கிளை தலைவர்கள் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டனர். தோழர்கள் பெருமாள், டி.சேகர், தாமோதரன், கே.மாரியப்பன், குமார், தினேஷ் ஆகியோருடன் மதுரை முதல் சென்னை, விஜயவாடா வரை, கோவை முதல் தஞ்சை வரை, பாண்டிச்சேரி முதல் பெங்களுர் வரை, டிசம்பர் 31, 2019 வரை 85 அங்காடிகளில், கிளைகளில் இந்த ஊழியர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. விளைவாக 80 முதல் 90 சத ஊழியர்கள் ஜனவரி 8 அன்று கடையடைப்பு செய்து வேலை நிறுத்தத்தை அமல்படுத்தினர்.

Search