COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 31, 2020

வெளிப்படைத்தன்மைக்கும் உச்சநீதிமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும்
கிடையாதா?


எஸ்.குமாரசாமி


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் காலத்தின் ‘மூடிய உரை’ நீதிபரி பாலன முறை, நீதித்துறையின் வெளிப்படைத் தன்மைக்கு எதிரானது.
ரகசியம், பரம ரகசியம் எனும்போது வெளியே சொல்வதில் ஏதோ சிக்கல், சங்கடம் உள்ளது என எவரும் புரிந்து கொள்ள முடியும். பாப்ரி மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பை, அதற்கான ‘அறிவியல்பூர்வ’ இணைப்பை யார் எழுதியது என்பது இன்று வரை ரகசியமாக உள்ளது.

ஏப்ரல் 2019ல் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் எல்லா நீதிபதிகளுக்கும் ஒரு பிரமாண வாக்குமூலம் அனுப்பினார். அதன் நகலை வயர், கேரவன், ஸ்க்ரோல்.இன் ஊடகங்களுக்கு அனுப்பினார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது அவர் பாலியல் துன்புறுத்தல் புகார் கூறினார். நீதிபதி கோகாய் நீதிமன்றத்திலும் அவரது வீட்டில் உள்ள அலுவலகத்திலும், அந்தப் பெண் பணியாற்றினார். நீதிபதியின் விருப்பத்திற்கு இணங்காததால், தான் மூன்று வாரங்களில் மூன்று முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் சொன்னார்.

இந்தப் பெண் ஊழியர் பிறகு வேலை நீக்கம் செய்யப்பட்டார். டெல்லி காவல் துறையில் பணியாற்றிய அவரது கணவர் மற்றும் கணவரின் சகோதரர் இடைநீக்கம் செய்யப்பட் டனர். அவரது கணவரின் மற்றொரு சகோதரர் மாற்றுத் திறனாளி ஆவார். அவருக்கு நீதிபதி கோகாய் பரிந்துரையில் உச்சநீதிமன்றத்தில் வேலை கிடைத்தது. அவரும் வேலை இழந்தார். உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தர லஞ்சம் வாங்கியதாக வழக்கு போடப்பட்டு புகார் சொன்ன பெண் ஊழியரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

மறுபுறம் இந்தப் பெண்னின் பிரமாண வாக்குமூலத்திற்கு உச்சநீதிமன்ற பதிவாளர் மறுப்பு தெரிவித்தார். குற்றம் சுமத்திய பெண் குற்றப் பின்னணி உள்ளவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது புகார் இருந்தபோது, நீதிதுறையின் சுதந்திரத்தை பாதிக்கும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனை என்று தலைப்பிட்டு, அவரே ஒரு சனிக்கிழமை, ஒரு நீதிமன்ற அமர்வைக் கூட்டினார். அந்த அமர்வில் அவர் மீது புகார் என்பது எவ்வளவு ஆபத்தானது என்று சொல்லிவிட்டு அவர் அதில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அதன் பின், இந்தப் பிரச்சனையை ஒட்டி, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உருவாக்கப்பட்டது. அந்த அமர்வம்  நீதித்துறைக்கு நேர்ந்துள்ள பேராபத்து, ஊழல் கூட்டங்களின் தாக்குதல் ஆகியவற்றின் ஆழ அகலங்களை விசாரிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. ஆழம் அதிகம், அகலம் பெரிது என்பதால் முடிவு தெரியவில்லை. பரம்பொருளின் ஆதி அந்தம் காண முடியுமா? கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.

தலைமை நீதிபதி பரந்த மனதுடன், அடுத்த தலைமை நீதிபதியான போப்டேயை தம் மீதான பாலியல் புகாரை விசாரிக்கச் சொன்னார். நீதிபதி போப்டே, நீதிபதிகள் இந்து மல்கோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோரை அந்தக் குழுவில் சேர்த்துக் கொண்டார். நீதிபதி சந்திரசூட், அந்தப் பெண் விசாரணை தொடர்பாக உதவி கோரி எழுதிய கோரிக்கையை ஏற்கலாம் என்றார். இந்தியா வின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணு கோபால், அந்தக் குழுவின் நம்பகத்தன்மையை வலுப்படுத்த வெளி உறுப்பினர் போட்டுக் கொள்ளலாம் என்றார். இந்த ஆலோசனைகள் ஏற்கப்படவில்லை. தனக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என அந்தப் பெண் விசாரணையிலிருந்து வெளியேறினார். நீதிபதி போப்டே குழு பெண் ஊழியரின் புகாரில் பொருள் இல்லை என தீர்ப்பு வழங்கியது. தனது தீர்ப்பை பொது வெளியில் வெளியிடவில்லை. புகார் சொன்ன பெண்ணுக்கு தீர்ப்பு நகல் தரப்படவில்லை.

    இப்போது அந்த பெண் ஊழியர் முழு பின்சம்பளத்துடன் மீண்டும் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.
    அவர் மீதான குற்றவியல் வழக்கு ஆதாரம் இல்லாததால் தொடரப்படவில்லை.
    வேலையில் இருந்து நீக்கப்பட்ட அவரது கணவரும் உறவினர்களும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டனர்.

தி இந்து 24.01.2020 செய்திப்படி, இந்தப் பெண்ணுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் விருந்தா குரோவர் ஓர் அறிக்கையில் சொல்கிறார்: “முழு பின்சம்பளத்துடன் அவர் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள விஷயம், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகவும், அவரும் அவரது குடும்பத்தாரும் சந்தித்த முறைப்படுத்தப்பட்ட துன்புறுத்தல் தொடர்பாகவும், அவர் தந்த வாக்குமூலம் உண்மையே எனக் காட்டும்”. “ஆனால் நீதி வழங்குதல், பொறுப்பேற்றல் இன்னமும் முடியவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாரை சுதந்திரமாகவும் திறம்படவும் அணுகுவதற்கான அமைப்பு ஒன்று இல்லை என்பதை இந்த விஷயம் நன்கு உணர்த்துகிறது”.

நீதிபதியை காப்பாற்ற நீதி பலி தரப்பட்டதா என வயர் இதழ் கேள்வி எழுப்புகிறது. குற்றப் பின்னணி உள்ளவர் என்று உச்சநீதிமன்றப் பதிவாளர் சொன்னது சரியா? தவறா? இந்தப் பெண் மீதான குற்றவியல் வழக்குக்கு ஆதாரம் இல்லை என்றாகியுள்ளபோது, வழக்கு போட்டவர்கள் மீது, போட வைத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? இந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தாரும் அனுபவித்த மனரீதியான சித்திரவதைக்கு யார் பொறுப்பேற்பது? அதற்கு என்ன தண்டனை? பாதிப்புக்கு என்ன பரிகாரம்?
துரத்தும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாக எந்த வாய்ப்பும் தெரியவில்லை.

வாய்மையே வெல்லும் என்று சொல்வதற்குப் பதில் உண்மை உறங்கும் நேரம் என்று சொல்லலாமா?

Search