மார்க்சிஸ்ட் தோழர்கள் விளக்குவார்களா?
சாமான்யன்
26.09.2019
25.09.2019
தேதிய தீக்கதிர் நாளிதழ் முதல் பக்கத்தில், ‘தேர்தல் கணக்குகள் குறித்து ஊடகங்கள் பொய்த் தகவல் சிபிஎம் அரசியல் தலைமைக் குழு மறுப்பு’ என்று தலைப்பிட்டு ஒரு செய்தி வந்துள்ளது. நாடு முழுவதும் பெறப்பட்ட நன்கொடையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், விவரங்கள் அனைத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்தல் கணக்குகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும்போது சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
டெக்கான் கிரானிக்கிள், தி இந்து நாளேடுகள், திமுக, தேர்தல் ஆணையம் முன் 27.08.2019 தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலப்படி, 2019 மக்களவைத் தேர்தலில் திமுக செலவு செய்த ரூ.79.26 கோடியில், சிபிஅய் கட்சிக்கு ரூ.15 கோடி, கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ரூ.15 கோடி, சிபிஎம் கட்சிக்கு ரூ.10 கோடி நன்கொடை தந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
24.09.2019 தி இந்து நாளேட்டில், வி.கோலப்பன், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பின்வருமாறு சொன்னதாகக் குறிப்பிட்டுள்ளார்: ‘நாங்கள் மாநிலம் முழுவதும் வசூலித்தோம். அந்தப் பணத்தை தேர்தலில் செலவழித்தோம். நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் செலவு கணக்கு தந்துவிட்டோம். நாங்கள் எதையும் மறைக்கவில்லை. ஒவ்வொன்றும் வெளிப்படையான முறையில் செய்யப்பட்டுள்ளது’.
அந்த செய்திப்படி, சிபிஅய் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இதுபோல் தேர்தல் நிதி பெறுவது வாடிக்கையானதுதான் என்றும் அதில் தவறேதும் இல்லை என்றும், தாங்கள் பெற்றது ஊழல் பணம் அல்ல, தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் உதவுவதுதான் என்றும் சொல்லியுள்ளார்.
சிபிஎம் தேர்தல் ஆணையம் முன் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் திமுக தந்த பணம் பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லையே எனக் கேட்கப்பட்டபோது, கே.பாலகிருஷ்ணன், மாநிலக் கட்சி மத்திய கமிட்டிக்கு எல்லா விவரங்களையும் அனுப்பிவிட்டது என்றும் அந்த விவரங்கள் அடுத்த பிரமாண வாக்குமூலத்தில் வெளியிடப்படும் என்றும் சொன்னதாக அதே செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. தேர்தலுக்கு நாடு முழுவதும் ரூ.7.2 கோடி செலவு செய்துள்ளதாக சிபிஎம் தேர்தல் ஆணையத்திடம் பிரமாண வாக்குமூலத்தில் சொல்லியுள்ளது. பிரமாண வாக்குமூலங்கள் கட்டம் கட்டமாக தாக்கல் செய்யப்படும் என்று தான் கருதுவதாகவும் ஒவ்வொரு பரிவர்த்தனையும் வங்கி மூலம் நடந்துள்ளது, எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
திமுகவின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கூட்டணி கட்சிகளுக்கு இவ்வாறு நிதி தருவது வாடிக்கையானது என்று சொல்லியுள்ளார். திமுக தனது மக்களவை தொகுதி வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.50 லட்சமும் சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ரூ.25 லட்சமும் செலவு செய்ததாக சொல்லியுள்ளார்.
25.09.2019
தேதிய டெக்கான் கிரானிக்கிள் நாளிதழில், தாங்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் தேர்தலுக்காக செலவு செய்துள்ளதாக பாலகிருஷ்ணன் சொன்னதாகவும், முத்தரசன் தாங்கள் கடன் வாங்கியதாகவும் திருப்பித் தந்துவிடுவோம் எனச் சொன்னதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சிபிஎம் அரசியல் தலைமைக் குழு, தேர்தல் கணக்குகள் பற்றி ஊடகங்கள் பொய்த் தகவல்கள் சொல்லியுள்ளதாகச் சொல்கிறது.
2019 மக்களவைத் தேர்தலில் சிபிஎம்முக்கு ரூ.15 கோடி தந்ததாகவும், இவ்வாறு நன்கொடை தருவது வாடிக்கையானது என்றும் திமுக சொன்ன செய்தி தவறானதா? திமுக பொய் சொல்லி சிபிஎம்முக்கு களங்கம் உருவாக்குகிறதா? ஊடகங்கள் பொய் சொன்னார்களா?
பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், இந்த விசயத்தில் தாங்கள் சொன்னதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள தகவல் எதுவும் பொய், திரித்துச் சொல்லப்பட்டது என்று அவர்கள் இருவரும் மறுப்பு தெரிவித்ததாக இதுவரை இந்தக் கட்டுரையாளர் அறியவில்லை.
நன்கொடை பெற்றது உண்மை என்றால்...
அப்படியானால், சிபிஎம் தனக்கென ரூ.10 கோடி பெற்றுக்கொண்டது உண்மையே என சொல்ல ஏன் தயங்குகிறது? இதுதான் பிரச்சனையே. இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிற ஒரு கட்சி, இந்தியா முழுவதும், மேற்குவங்கம், கேரளா, திரிபுரா, ஆந்திரா வரை ரூ.7.2 கோடி மட்டும் செலவு செய்த ஒரு கட்சி, திமுகவிடம் ரூ.10 கோடி நன்கொடை பெறுவது சரியா? பாஜக எதிர்ப்பில் திமுக இன்று ஒரு முக்கிய இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். சரிதான். ஆனால், திமுகவிடம் இருந்து ரூ.10 கோடி நன்கொடை பெறுவது கார்ப்பரேட் கம்பனி நன்கொடை போல் ஆகாதா? மற்றொரு முக்கிய கழகமான அஇஅதிமுகவும் மாமூலாக, வாடிக்கையாக நன்கொடை தந்ததா? இது அரசியல் அறமா? இது சுதந்திரமான இடதுசாரி அரசியலுக்கு, அறுதியிடலுக்கு ஊறு விளைவிக்காதா? செங்கொடியோடு மக்கள் மத்தியில் நிதி திரட்டச் செல்லும் ஒவ்வொரு தோழரின் அர்ப்பணிப்பை, கடுமையான உழைப்பை, நம்பகத்தன்மையை இது கேள்விக்குள்ளாக்காதா?
திமுகவிடம் இருந்து சிபிஎம் ரூ.10 கோடி நன்கொடை பெற்றது உண்மை என்றால், இதுவரை, இவ்வாறு பெற்றுள்ள நன்கொடைகள் தவறு என்றும், இனி அவ்வாறு நன்கொடை பெற்று, கூட்டணி தர்ம நன்றிக்கடன்பட்டு, இடதுசாரி அரசியலை பலவீனப்படுத்த மாட்டோம் என்றும் பகிரங்கமாகச் சொல்ல வேண்டும்.
அப்படிச் சொன்னால், செய்தால் நல்லது.
பின்செய்தி: 27.09.2019 அன்று தினமணி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றின்படி, சிபிஅய் பொதுச் செயலாளர் து.ராஜா, திமுகவிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றது உண்மைதான், இது கூட்டணி ஒப்பந்தத்தின் ஒரு பகுதி, இதில் எந்தவித நெறிமுறை மீறலும் இல்லை என்று சொல்லியுள்ளார்.