COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 3, 2016

சிறைவாசிகள் கொத்தடிமைகளா?

             2015ஆம் ஆண்டு கணக்குப்படி நாடெங்கும் 1,401 சிறைகள் உள்ளன.
             அதிகபட்சமாக இந்தச் சிறைகளில் 3,18,781 பேரை அடைக்க முடியும்.
             ஆனால் 31.12.2015 விவரங்கள் படி சிறைகளில் இருப்பவர்கள் எண்ணிக்கை 4,19,623.
             தண்டனை பெற்று இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் 1,34,168 பேர்.
             அவர்களில் 70,827 பேர் (59%) கொலைக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவர்கள்.
             மொத்த சிறைவாசிகளில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் 5,203 பேர்.
             2015ல் மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் 101. 2015ல் தூக்கு தண்டனைக்கு ஆளானவர் ஒருவர்.
             கடந்த ஆண்டு தண்டனை பெற்றவர்களில் 1,83,653 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல் நிலையில் சிறையில் உள்ளவர்கள் 2,82,076 பேர். அவர்களில் கல்வியறிவு பெற முடியாதவர்கள் 80,528 பேர். பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் 16,365 பேர்.
             2015ல் சிறையில் மரணம் அடைந்தவர்கள் 1,584 பேர். அவர்களில் இயற்கைக்கு மாறான மரணத்துக்கு உட்பட்டவர்கள் 115.
             2015ல் நாடெங்கும் 371 பேர் சிறைகளில் இருந்து தப்பி உள்ளனர்.
தமிழ்நாட்டின் சிறைகளில்
2015ல் குண்டர் சட்டத்தில் 21 பெண்கள் உட்பட 1,268 பேர் தமிழ்நாட்டில் சிறை வைக்கப்பட்டனர். தெலுங்கானாவில் 339 பேர் கர்நாடகாவில் 232 பேர்குஜராத்தில் 219 பேர் சிறை வைக்கப்பட்டனர். தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு இன்னமும் தமிழ்நாட்டில் சிறையில் உள்ளவர்கள் 69 பேர். குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளவர்களில் 62 பேர் பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள்.
தமிழ்நாட்டு மக்கள் தொகையில் தலித்துகள் 20%. 2015ஆம் ஆண்டு தண்டனை பெற்றவர்களில் 35.23%, காவல் கைதிகளில் 36.44%, தடுப்புக் காவல் கைதிகளில் 37.46% பேர் தலித்துகள். அதாவது தமிழ்நாட்டின் சிறைகளில் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் தலித்.
டிசம்பர் 2015 நிலவரப்படி தமிழ்நாட்டில் தண்டனை பெற்ற சிறைவாசிகள் 4,966 பேர். அவர்களில் பட்டியல் சாதியினர் 1,750 பேர், பட்டியல் பழங்குடியினர் 158 பேர், இதர பிற்படுத்தப்பட்டோர் 2,573 பேர், இதரர் 485 பேர். 7,850 காவல் சிறைவாசிகளில் பட்டியல் சாதியினர் 2,861 பேர், 169 பேர் பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் 4,320 பேர், இதரர் 500 பேர்.
தமிழ்நாட்டில் உள்ள 4,966 தண்டனை பெற்ற சிறைவாசிகளில் 289 பேர் தொழில்நுட்ப பட்டப் படிப்பு அல்லது பட்டய படிப்பு முடித்தவர்கள். கல்வி பெறும் வாய்ப்பு இழந்தவர்கள் 1,212 பேர்.
தமிழ்நாடு சிறைத் துறை அதிகாரிகள், தண்டனை சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் ஆடைகளை, பேக்கரி பொருட்களை, ஓவியங் களை, கைவினைப் பொருட்களை, தோல் பொருட்களை, மெழுகுவர்த்திகளை, பாலுறவு பாதுகாப்பு சாதனங்களை விற்பனை செய்கிறார்கள். சென்னையில் அந்தக் கடைக்குப் பெயர் ஊதஉஉஈஞங ஆஅழஅஅத (சுதந்திரச் சந்தை). சில பொருட்கள் உயர்நிலை தொழில்நுட்ப பூங்காக்கள் மூலமும் விற்பனையாகின்றன.
2014ல் தமிழக சிறைவாசிகள் ஈட்டிய வருமானம் ரூ.38.97 கோடி. 2015ல் அவர்கள் ஈட்டிய வருமானம் ரூ.47.87 கோடி ஆகும். 2015ல் ஒரு சிறைவாசி ரூ.33,901 மதிப்புள்ள பண்டங்களை உற்பத்தி செய்கிறார். 2015ல் டில்லி சிறைவாசிகள் ஈட்டிய வருமானம் ரூ.31 கோடி. அதே ஆண்டு கேரள சிறைவாசிகள் ஈட்டிய வருமானம் ரூ.22.9 கோடி. தமிழ்நாடு முதல் இடத்தில், டெல்லி இரண்டாவது இடத்தில், கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளன. முதலமைச்சர் விரைந்து குணமாகி அவர் வாயாலேயே இந்த முதலிட விஷயத்தை அறிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! சிறைகள் வதை முகாம்கள், வசதி இல்லாதவர்கள், வெளியே வர வாய்ப்பு தரும் தொடர்புகள் இல்லாதவர்கள் வாழ்நாளையே விசாரணை சிறைவாசிகளாகக் கழிக்கிறார்கள், ராம்குமார் மர்ம மரணம் போன்ற நிகழ்வுகள், பொருந்தாத எண்ணிக்கையில் தலித்துகளும் சிறுபான் மையினரும் சிறையில் இருப்பது, வசதியும் செல்வாக்கும் உடையவர்கள், குற்றவாளிகளே ஆனாலும் 5 நட்சத்திர வசதிகள் பெறுவது ஆகியவை பொதுவாக அறியப்பட்டவை.
ஆனால் ஓர் ஆண்டில் ரூ.47.87 கோடி ஈட்டித்தரும் சிறைவாசிகளுக்கு என்ன சம்பளம் தரப்படுகிறது? நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரன் போட்ட சிறைவிதிகள்படி சொற்பக் கூலியை நியாயப்படுத்துகிறார்கள். சிறைவாசிகளின் உழைப்பு சக்திக்கு, ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச சம்பளமோ, குறைந்தபட்ச சம்பளச் சட்ட அட்டவணை வேலை வாய்ப்புக்களுக்கான குறைந்தபட்ச சம்பளமோ தரப்படுவதில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 பெகாரை, அதாவது, கொத்தடிமைத்தனத்தைத் தடை செய்கிறது. குறைந்தபட்ச சம்பளம் தராமல் வேலை வாங்குவது கொத்தடிமைத்தனம் என்று இந்திய உச்சநீதிமன்றம் சொல்கிறது. இந்தியாவின், தமிழ்நாட்டின் சிறைவாசிகள் கொத்தடிமைத்தனத்தில், அடிமை உழைப்பில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்!

அரசு மருத்துவமனையை பராமரிக்கும் தொழிலாளர்களை அலட்சியப்படுத்தும் அரசு

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்ததாரரான பத்மாவதி ஹாஸ்பிடாலிடிஸ் நிறுவனத்தின் கீழ் சுமார் 200 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி புரிகின்றனர். இதில் சரிபாதி பெண்கள். பெண்களின் முயற்சியால்தான் இப்போது ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட உழைப்போர் உரிமை இயக்க கிளை துவங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புக்கு வழியில்லாத பின்தங்கிய பகுதியான தருமபுரியில், மாதம் ரூ.5,000 கூலிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. லஞ்சமாக ரூ.50,000 கொடுத்து வேலை பெற்றவர்கள் உண்டு. (நாளை வேலை வாய்ப்பு நிரந்தரமாகும் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம்).
பல முக்கியஸ்தர்கள், சுகாதாரத் துறைக்கு கடன் கொடுப்பவர்கள் வந்து போவதால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சீருடையும் அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை கழிவுகளை அகற்றும் முதுகு ஒடியும் வேலையை செய்யும் இவர்களுக்கு தொற்று நோயிலிருந்து பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. வருங்கால வைப்பு நிதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்காமல் ஒப்பந்தகாரர், அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் கூட்டணி பல கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.
தொழிலாளர் ஈட்டுறுதி ஸ்மார்ட் கார்டு சிலருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் ஒருவர் கூட ஒரு சிகிச்சை பலன் கூட இதுவரை அடையவில்லை. ஒப்பந்தக்காரர், மருத்துவர், செவிலியர், நோயாளி, நோயாளியின் உறவினர் என அனைவரையும் அனுசரித்து போக வேண்டிய நிலை. இந்தத் தொழிலாளர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், உணவு உட்கொள்ள, ஓய்வெடுக்க இடம் கிடையாது. ஆனாலும் அரசு மருத்துவமனைகளில் முன்பிருந்த நிலையை மாற்றி ஓரளவு தூய்மையாக பராமரிக்கப்படுவது இவர்கள் உழைப்பினால்தான். சங்கமாக அமைப்பாவதை பொறுத்துக் கொள்ளாத ஒப்பந்த நிறுவனம் சங்கம் துவங்கிய மறுநாளே 4 தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. தொழிலாளர்களின் போராட்ட உறுதி நிர்வாகத்தை பேச்சுவார்த்தைக்கு வரவைத்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்

பெங்களூரு ஊடகங்களில் அண்மையில் ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது. ‘சமூக சேவகி வீட்டிற்குள் குப்பையை கொட்டிய தூய்மைப் பணியாளர்கள்என்ற தலைப்பில் ஒளிபரப்பப்பட்ட அந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களை வில்லன்களாக சித்தரித்த அந்த செய்தி மக்களின் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதற்குப் பின்னாலுள்ள உண்மை என்ன?
உங்கள் தாயின் பிணத்தை நீங்களே அப்புறப்படுத்திக் கொள்ளுங்கள் என்று உனா தலித்துகள் பசுக்களின் பிணங்களை அரசு அலுவலகங்களில் கிடத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் உனா நகரமே நாறியது. உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பெங்களூரு தூய்மைப் பணியாளர்கள் சொன்னதால் பெங்களூருவின் மேட்டுக்குடி தெரு ஒன்று நாறிப் போனது.
பெங்களூருவில் மேட்டுக் குடியினர் வசிக்கும் இடங்களில் தங்கள் வீட்டில் வளர்க்கும், அழகு நிலையங்களில் அழகுபடுத்தப்பட்ட நாய்களை காலையில் நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கின்றனர். நாய்கள் காலைக் கடனை தெருக்களில் மலம் கழித்து முடிக்கின்றன. தெருக்களில் குப்பைகளை அள்ளும் தொழிலாளர்கள் நாய் மலத்தையும் அள்ள வேண்டும் என்கிறார்கள் மேட்டுக் குடிவாசிகள். இந்த தூய்மைப் பணி செய்வதற்குத்தான் அரசாங்கம் சம்பளம் கொடுப்பதாகக் கருதுகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் சமூக சேவகி வேடம் தரித்த இந்த பெண். மிகச் சுலபமாக தூய்மைப் பணி செய்யும் பெண்களை மிரட்டி விடலாம் என்பது அவரது எண்ணம். நாய் மலத்தை அள்ளாவிட்டால் உன்னை வேலையிலிருந்து தூக்கிவிடுவேன் என தொழிலாளர்களை மிரட்டியுள்ளார்.
பாவம் அந்தப் பெண்மணி. தூய்மைப் பணியாளர்கள் பல ஆண்டுகளாக சங்கம் துவங்கி அணி சேர்ந்து தங்களது கவுரவத்திற்கானப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தங்களை மிரட்டிய சமூக சேவகி வீட்டில் தெருக் குப்பைகளை கொட்டி தொழிலாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். தூய்மைப் பணியாளர்களை கிள்ளுக் கீரையாக பார்த்தவருக்கு பேரதிர்ச்சி.
இழிவான தொழில்களை செய்வதற்கு, இந்தத் தொழிலாளர்கள், தலித்துகள் விதிக்கப்பட்டவர்கள் என்ற மேட்டுக் குடி பார்ப்பனீய கருத்துக்கு அடி கொடுத்துள்ளார்கள் சஃபாய் கர்மாச்சாரிகள். சில தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஆயிரக்கணக்கான, சமூகத்தின் கடைக் கோடி தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் உத்வேகத்தை, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஏஅய்சிசிடியுவுடன் இணைக்கப்பட்ட பெங்களூரு மாநகர சஃபாய் கர்மாச்சாரி சங்கம் தொழிலாளர்களின் கவுரவம், பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், சமூகப் பாதுகாப்பு என தொகுப்பான கோரிக்கைகள் மீது அமைப்பாகி போராட்டம் நடத்துவதோடு நீதிமன்றங்களில் வாதாடி பயன்களைப் பெற்றும் தருகிறது. குஜராத்தின் உனா, கர்நாடகாவின் உடுப்பி என, தலித்துகள் பார்ப்பனீயத்திற்கு எதிராகவும் சாதிய, மதவெறி கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அணி திரண்டு வருகிறார்கள்.

எல்லையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் மடிவது போதும்.
இது வரை நடந்தது போதும்.

வணக்கம்.
நான் குர்மெஹர் கவுர்.
இந்தியாவில் உள்ள ஜலந்தர் எனது சொந்த ஊர்.
இவர் எனது தந்தை கேப்டன் மன்தீப் சிங்.
1999 கார்கில் போரில் அவர் கொல்லப்பட்டார்.
அவர் இறந்தபோது எனக்கு வயது 2. அவரைப் பற்றிய மிகச் சில நினைவுகளே எனக்கு உள்ளன. ஒரு தந்தை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய நினைவுகள் எனக்கு கூடுதலாக உள்ளன.
பாகிஸ்தானையும் பாகிஸ்தானியர்களையும் நான் எந்த அளவுக்கு வெறுத்தேன் என்றும் எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள்தான் எனது தந்தையை கொன்றார்கள் என்று கருதினேன்.
நான் இசுலாமியர்களையும் வெறுத்தேன். ஏனென்றால் எல்லா இசுலாமியர்களும் பாகிஸ்தானியர்கள் என்று நான் கருதினேன்.
எனக்கு ஆறு வயது இருக்கும்போது, புர்க்காவில் இருந்த ஒரு பெண்ணை கத்தியால் குத்த நான் முயற்சி செய்தேன். ஏனென்றால், ஏதோ வினோதமான காரணத்தால் அந்தப் பெண்தான் என் தந்தை இறப்புக்குக் காரணம் என்று நான் கருதினேன்.
என் தாய் என்னை தடுத்தார்; எனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை, போர்தான் கொன்றது என்று எனக்கு புரிய வைத்தார்.
இதைத் தெரிந்து கொள்ள எனக்கு சில காலம் ஆனது. ஆனால் இப்போது நான் கொண்ட வெறுப்பை அகற்ற கற்றுக் கொண்டுவிட்டேன். அது எளிதானதாக இல்லை. ஆனால் கடினமானதாகவும் இல்லை. என்னால் இது முடியும் என்றால் உங்களாலும் முடியும்.
இன்று, எனது தந்தையைப் போல் நானும் ஒரு போர் வீரர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். ஏனென்றால், நமக்குள் போர் இல்லாமல் இருந்திருந்தால், எனது தந்தை இப்போது இருந்திருப்பார்.
இரண்டு நாட்டு அரசாங்கங்களும் பாசாங்கு செய்வதை நிறுத்திவிட்டு பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று நான் விரும்புவதால் இந்த காணொளி காட்சியை உருவாக்கியிருக்கிறேன். பெரும்பான்மையான சாதாரண இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அமைதியை விரும்புகிறார்கள். போரை அல்ல. தயவு செய்து தயாராகுங்கள். உங்களுக்குள் பேசி பிரச்சனையை தீர்க்கப் பாருங்கள்.

அரசு ஆதரவு கொண்ட தீவிரவாதம் போதும். அரசு ஆதரவு கொண்ட ஒற்றர்கள் போதும்அரசு ஆதரவு கொண்ட வெறுப்பு போதும். எல்லையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் மடிவது போதும். இது வரை நடந்தது போதும்.

(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 01 – 15)

Search