இகக (மாலெ) தமிழ்நாடு மாநில
ஊழியர் கூட்டம்
2017 தீப்பொறி
சந்தா, 10 லட்சம் கையெழுத்து இயக்கம்
இலக்குகளை அடைய உறுதியேற்பு
நவம்பர்
6, 2016 அன்று தஞ்சையில் இகக(மாலெ) மாநில
ஊழியர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்
தீப்பொறி இதழில் வெளியான ‘ரஷ்யப்
புரட்சியின் வெளிச்சத்தில் இந்தியப் புரட்சிக்குத் தயாராவோம்’ கட்டுரை படித்து விவாதிக்கப்பட்டது.
கட்டுரை மீதான தோழர்களின் கேள்விகளுக்கு
விளக்கம் அளித்து மாநிலச் செயலாளர்
தோழர் குமாரசாமி பேசினார்.
தலைமையகத்தின்
தோழர் எ.எஸ்.குமார்
மாதம் இரு இதழ்கள் தீப்பொறி
அச்சுக்கு செல்வதில் இருந்து மாவட்டங்களுக்கு அனுப்ப
தபால் நிலையம் கொண்டு செல்லும்
வரை உள்ள வேலைகள் பற்றி
தீப்பொறி மேலாளர் தோழர் கோ.ராதாகிருஷ்ணன் முன்வைத்த கருத்துக்களை ஊழியர்களுக்குத் தெரியப்படுத்தினார்.
2013 சந்தா
சேர்ப்பு இயக்கம் துவங்கி 2016 வரை
மாவட்ட வாரியாக வரப் பெற்றுள்ள
சந்தாக்கள் பட்டியல் ஊழியர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. வரும் டிசம்பர் 18க்குள்
சந்தா இலக்குகளை அடைய மாவட்ட வாரியாக
ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
அதன்படி திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொண்டு இலக்குகளை அடைய கூட்டம் உறுதியேற்றுக்
கொண்டது. கூட்டத் திலேயே 2017க்கு
1,419 தீப்பொறி சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்.
மதிய அமர்வில் 10 லட்சம் கையெழுத்து இயக்கத்தை
தீவிரப்படுத்துவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
கையெழுத்து இயக்கத்தை முழு வீச்சில் எடுத்துச்
செல்லவும் டிசம்பருக்குள் புதிய கட்சி உறுப்பினர்
சேர்ப்பு, உறுப்பினர் புதுப்பித்தல் கடமைகளை முடிக்கவும், தமிழகத்தில்
இடதுசாரி அரசியலைப் பலப்படுத்தவும் இகக (மாலெ) கட்சியை
வளர்த்தெடுக்கவும் ஊழியர்கள் உறுதியேற்றுக் கொண்டனர். புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர்
பாலசுப்பிரமணியன் வாழ்த்துரையாற்றினார்.
நவம்பர்
13, 14, 2016 தேதிகளில் பாட்னாவில் நடைபெறும், அகில இந்திய முற்போக்கு
பெண்கள் கழகத்தின் அகில இந்திய மாநாட்டிற்கு
நன்கொடையாக ரூ.4,600 ஊழியர்களிடம் பெண் தோழர்கள் வசூல்
செய்தனர்.
கட்சியின்
மாநிலச் செயலாளர் தோழர் குமாரசாமி
ஊழியர்
கூட்டத்தில் ஆற்றிய தொகுப்பு உரையிலிருந்து.......
......இன்று
உலகம் முழுவதும் நிதிசார் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. நிஜப் பொருளாதாரத்தைக் காட்டிலும்
ஊகப் பொருளாதாரம் பெரிதாகிவிட்டது. இன்று நிதிச் சூதாடிகள்தான்
ஆட்சிக்கு யார் வர வேண்டும்
என்று தீர்மானிக்கிறார்கள். அமெரிக்காவில் டிரம்ப் வர வேண்டுமா,
ஹிலாரி வர வேண்டுமா என்று
தீர்மானிப்பவர்கள் இவர்களே. ரஷ்யப் புரட்சி காலத்துக்கும்
இப்போதுள்ள இந்திய நிலைமைகளுக்கும் மிகுந்த
வேறுபாடு உண்டு. 1917 நிலைமை வேறு. அன்று
ஏகாதிபத்திய மூலதனம் பிளவுண்டிருந்தது. சங்கிலித்
தொடரில் ரஷ்யா பலவீனமான கண்ணியாக
இருந்தது. இன்று இந்திய நிலைமைகள்
அப்படியில்லை. ஏகாதிபத்தியம் பிளவுண்டு இருக்கவில்லை. ரஷ்ய முதலாளித்துவத்தின் பொருளாதாரம்,
அரசியல் பலவீனமானது. முதலாளித்துவத்துக்கு இன்று இருக்கும் சாமர்த்தியம்,
புத்திசாலித்தனம் அன்று இல்லை. ஆனால்
இந்திய முதலாளித்துவத்துக்கு தாங்கும் திறன் உண்டு. அது
தெலுங்கானாவை, நக்சல்பாரியைக் கடந்து வந்திருக்கிறது. தெலுங்கானாவுக்குப்
பிறகுதான் இந்தியாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு திட்டமே உருவானது.........
...........இந்தியாவில்
நாடாளுமன்ற ஜனநாயக முறை நிலைபெற்றிருக்கிறது.
புரட்சிகர சூழல் 1) ஆளும் வர்க்கம் பழைய
முறையில் இனியும் ஆளமுடியாது என்ற
நிலை. 2) இருக்கின்ற இந்த நிலை தொடர
மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள்
என்ற சூழல். 3) சமூக மாற்றம் நோக்கிச்
செல்ல உரிய அமைப்பு ஆகியவை
தொடர்பானது. இதைத்தான் புரட்சிகர நிலை என்கிறோம்...........
............இரண்டாம்
உலகப் போருக்குப் பின்பு இங்கிலாந்து, பிரான்ஸ்,
அய்க்கிய அமெரிக்கா, கனடா, ஸ்காண்டிநேவியன் நாடுகளில்
நீடித்த நாடாளுமன்ற ஜனநாயக முறை நிலவுகிறது.
நீடித்த நாடாளுமன்ற ஜனநாயக முறை நிலவுகிற
நாடுகளில் புரட்சி வெற்றி பெற
முடியவில்லை என்பது யதார்த்த உண்மை.
அதே சமயம் இப்படி நீடித்த
நிலைமையை மாற்றவே முடியாது என்பதல்ல.
நீண்ட காலமாக சிறுபான்மை பெரும்பான்மையை
ஆள்கிறது. தனியுடைமைக்கும் சமூக உற்பத்திக்குமிடையிலான முரண்பாடு நிலவுகிறது.
தனிமனித அபகரிப்பு தொடர்கிறது. இது இருக்கும் வரை
அங்கு புரட்சிக்கான காரணிகளும் இருக்கும். ஆகவேதான் நாம் ஒரு நாள்
இல்லை ஒரு நாள் நாம்
வென்றே தீருவோம் என்கிறோம். இது ஆரூடம் அல்ல.
விஞ்ஞானம்.......
........எமக்குத்
தொழில் கவிதை என்றான் பாரதி.
அதுபோல் புரட்சியைத் தொழிலாகக் கொண்டவர்கள் தொழில்முறைப் புரட்சியாளர்கள்........
........நிலவுகிற
கூலி அடிமை சமூக அமைப்பில்
ஒருவர் உழைக்க உழைக்க செல்வம்
பெருகும். வறுமை தாண்டவமாடும். உழைத்துக்
கொடுத்து மூலதனத்தைக் கொழுக்க வைத்து அதன்
மூலம் நம் வருங்கால சந்ததியினரையும்
நாம் அடிமைப்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக, சமூக மாற்றத்திற்கான
போராட்டத்துக்கு உங்கள் நேரத்தைத் தாருங்கள்
என்று நாம் உழைப்பாளி மக்களை
கோருகிறோம்..........
.........ஒரு
சாதிக்கு எதிராக இன்னொரு சாதி
போராட்டம் நடத்துவதன் மூலம் சாதியை, ஒரு
மதத்திற்கு எதிராக இன்னொரு மதம்
போராட்டம் நடத்துவதன் மூலம் மதவெறியை ஒழிக்க
முடியாது. இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் சொன்னது
போல் உழைப்புப் பிரிவினை மாத்திரமல்ல, உழைப்பாளர் மத்தியிலும் பிரிவினை உள்ளது. ஒரே வர்க்கமாகத்
திரட்டிக் கொள்வதன் மூலம் மட்டும்தான் சாதியை
ஒழிக்க முடியும்........
.......புரட்சிக்கான
நீண்ட தயாரிப்பில் உள்ளபோது, நாம் செய்யும் வேலைகளுக்கு
குறைவான விளைவுகளே வரும்போது புரட்சிக்காரனாய் நிற்பதுதான் கடினமானது........
....அடிப்படையை
பலப்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலாளித்துவத்தார் சொல்வதை நாமும்
எடுத்துக் கொள்ள வேண்டும். தோழர்
ஸ்டாலின் ஜப்பானிய வேலைநடை பற்றி குறிப்பிட்டார்.
தோழர் மார்க்சும் ஜெர்மானிய சித்தாந்தம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு
சோசலிசம் என்று எடுத்தாண்டார்.........
நவம்பர்
7, ரஷ்யப் புரட்சி நாள் பொதுக்
கூட்டம்
ரஷ்யப்
புரட்சியை நினைவு கூறும் வகையிலும்
இந்தியப் புரட்சிக்கு தயார்படுத்திக் கொள்ள உறுதியேற்றும் நவம்பர்
7, 2016 அன்று தஞ்சாவூரில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இகக (மாலெ) தஞ்சை
- நாகை மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் ராஜன் தலைமை
வகித்தார். மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், புதுக்கோட்டை
மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இகக (மாலெ) மாநிலக்
குழு உறுப்பினர் தோழர் தேசிகன் துவக்கவுரையாற்றினார்.
மாநிலக்குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவருமான தோழர்
எ.எஸ்.குமார்
ரஷ்யப் புரட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசினார். இகக (மாலெ) மத்தியக்
கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம் தனது
உரையில் சோவியத் புரட்சி மூலம்
உழைப்பாளி மக்கள் ஒரு அரசை
நிர்வகித்துக் காட்டினார்கள் என்றார். இகக (மாலெ) அரசியல்
தலைமைக்குழு உறுப்பினரும் மாநிலச் செயலாளருமான தோழர்
குமாரசாமி தனது உரையில் தேர்தல்
பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் தஞ்சாவூரில்
இகக (மாலெ)யின் இந்தக்
கூட்டம் நடைபெறுகிறது, தஞ்சாவூரில் பணம் பட்டுவாடா நடந்ததாக
குற்றம்சாட்டப்பட்டு தேர்தல் ஆணையத்தால் தேர்தல்
நிறுத்தப்பட்டிருந்தது, இப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான
அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுகிறார்கள் என்றால் இது என்ன
ஜனநாயகம் எனக் கேள்வி எழுப்பினார்.
நாகை -
தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத் தோழர்களும் முதல் நாள் நடந்த
ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்ட சென்னை, திருவள்ளூர், நாமக்கல்,
கடலூர், கரூர் மாவட்டத் தோழர்களுமாக
நூற்றுக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு முன்பு அவர்கள் கூட்டத்துக்கான
பிரச்சாரத்திலும் வீதி வசூலிலும் ஈடுபட்டனர்.
(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 16 - 30)