COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, November 17, 2016

ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் 
இந்தியப் புரட்சிக்குத் தயாராவோம்!

(ரஷ்ய மக்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு நவம்பர் 8, 1917 அன்று
நிலம் மீதான ஆணையை லெனின் அறிவித்தபோது ஆற்றிய உரை)


தொழிலாளர்கள் படைவீரர்கள் சோவியத்துகளின்
இரண்டாவது அனைத்து ரஷ்ய காங்கிரசில்
நிலம் மீதான அறிக்கை,
அக்டோபர் 26 (நவம்பர் 8), 1917

......தொழிலாளர்களும் விவசாயிகளும் நடத்திய புரட்சியின் அரசாங்கத்தின் முதல் கடமை, நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதாகும். இது பெருந்திரளான வறிய விவசாயிகளை அமைதிப்படுத்தும்; திருப்திப்படுத்தும். உங்கள் சோவியத் அரசாங்கம் வெளியிட வேண்டிய ஆணை ஒன்றின் சரத்துகளை நான் வாசிக்கிறேன். இந்த ஆணையின் ஒரு சரத்தில், விவசாய பிரதிநிதிகளின் உள்ளூர் சோவியத்துகள் தந்த 242 கட்டளைகள் அடிப்படையில் தொகுக்கப்பட்ட நிலக் கமிட்டிகளுக்கான கட்டளை தரப்பட்டுள்ளது.

நிலம் பற்றிய ஆணை

1. நில உடமை உடனடியாக ஒழிக்கப்படுகிறது. இழப்பீடு எதுவும் இல்லை.
2. அரசியல் நிர்ணய சபை கூட்டப்படும் வரை, நில ஆதினங்கள், மன்னர், சமய நிறுவனங்கள், தேவாலயங்கள் ஆகியோரிடம் உள்ள நிலம், அவர்களது கால்நடைகள், கருவிகள், கட்டிடங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற அனைத்தும், வோலோஸ்ட் நிலக் கமிட்டிகளிடம், விவசாயிகள் பிரதிநிதிகளின் உயேஸ்த் சோவியத்துகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
3. இப்போது முதல் ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்தமான, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்படுகிற சேதம், புரட்சிகர நீதிமன்றங்களால் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் கொடுங்குற்றமாகக் கருதப்படும். நிலஆதினங்கள் பறிமுதல் செய்யப்படும்போது, கறாரான ஆணைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, நிலத்தின் அளவை தீர்மானிக்க, பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பான நில ஆதினங்கள் அளவை தீர்மானிக்க, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் துல்லியமான விவரங்களை தொகுக்க, மக்களின் உரிமையாக மாற்றப்பட்ட அனைத்து விவசாய நிறுவனங்களை யும், கட்டிடங்கள், கருவிகள், கால்நடைகள், இருப்பில் உள்ள விளைபொருள்கள் என அனைத்தையும் கறாரான புரட்சிகர வழியில் பாதுகாக்க, விவசாயிகள் பிரதிநிதிகளின் உயேஸ்த் சோவியத்துகள் அனைத்து அவசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
4. 242 உள்ளூர் விவசாயிகளின் கட்டளைகளில் இருந்து தொகுக்கப்பட்டு, இஸ்வெஸ்தியா சீரோசிஸ்கோகோ சோவேதா கிரெஸ்டின்கிக் டெபுடலாவ் செய்தி பத்திரிகையின்  88ஆவது இதழில் (பெட்ரோகிராட், எண்.88, ஆகஸ்ட் 19, 1917) வெளியிடப்பட்ட விவசாயிகளின் பின்வரும் கட்டளை, அரசியல் நிர்ணய சபை, நிலச்சீர்திருத்தங்கள் பற்றிய இறுதி முடிவு எடுக்கும் வரை, எல்லா இடங்களிலும் மகத்தான நிலச் சீர்திருத்தங்களை அமலாக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

நிலம் பற்றிய விவசாயிகளின் கட்டளை

வெகுமக்களின் அரசியல் நிர்ணய சபையால்தான் நிலப் பிரச்சனைக்கு முழுமையான விதத்தில் தீர்வு காண முடியும்.
நிலப்பிரச்சனைக்கு மிகவும் நியாயமான தீர்வு பின்வருமாறு:
“(1) நிலத்தின் மீதான தனிச்சொத்துடைமை என்றென்றைக்குமாக ஒழிக்கப்படும்; நிலத்தை விற்கவோ, வாங்கவோ, குத்தகைக்கு விடவோ, அடகு வைக்கவோ, வேறு விதங்களில் உடைமை மாற்றவோ கூடாது.
அரசுடைய, மன்னருடைய, சமய நிறுவனங்களுடைய, தேவாலயங்களுடைய, ஆலைகளுடைய, மரபுரிமைக்கு உட்பட்ட, தனிப்பட்ட, பொதுவான, விவசாயியினுடைய எல்லா நிலமும், இழப்பீடு எதுவுமின்றி பறிமுதல் செய்யப்பட்டு, ஒட்டுமொத்த மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு, உழுபவர் அனைவரும் பயன்படுத்த தரப்பட வேண்டும்.
இந்த சொத்துப் புரட்சியால் பாதிக்கப்படுவோர், வாழ்க்கையின் புதிய நிலைமைகளுக்கு தகவமைத்துக் கொள்ள தேவையான காலத்துக்கு அரசின் ஆதரவுக்கு உரியவர்கள் ஆவார்கள்.
“(2) தாதுக்கள், எண்ணெய், நிலக்கரி, உப்பு போன்ற அனைத்து கனிம வளங்களும், அரசு முக்கியத்துவம் பெற்ற அனைத்து வனங்களும் நீராதாரங்களும் அரசு மட்டுமே பயன்படுத்தும் விதம் மாற்றப்பட வேண்டும்; சிறிய நீரோடைகள், ஏரிகள், மரங்கள் அனைத்தும் கம்யூன்களின் பயன்பாட்டுக்கு மாற்றப்பட வேண்டும்; உள்ளூர்மட்ட சுயாட்சி அமைப்புகள் அவற்றை நிர்வகிக்க வேண்டும்.
“(3) பழத்தோட்டங்கள், மலை தோட்டங்கள், விதை நிலங்கள், நாற்றுப் பண்ணைகள், நாற்றுகள் வளர்வதற்கான வெப்ப வீடுகள் போன்ற உயர்மட்ட விஞ்ஞான விவசாயம் நடைமுறைப்படுத்தப்படுகிற நிலம் பிரிக்கப்பட மாட்டாது; மாறாக, அவை மாதிரிப் பண்ணைகளாக மாற்றப்பட்டு, அது போன்ற நிலங்களின் அளவு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்ப, அரசின் அல்லது கம்யூன்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மாற்றப்படும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள வீட்டு மனை நிலம், அவற்றில் உள்ள பழத்தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து, தற்போதைய உரிமையாளர்களின் பயன்பாட்டுக்கென ஒதுக்கப்படும்; அதுபோன்ற நிலத்தின் அளவு, அதனைப் பயன்படுத்துவதற்கான வரி ஆகியவற்றை சட்டம் நிர்ணயிக்கும்.
“(4) குதிரைப் பண்ணைகள், அரசு மற்றும் தனியாரின் மரபு வகைப்பட்ட கால்நடை இனப்பெருக்கப் பண்ணைகள், பறவைப் பண்ணைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, ஒட்டுமொத்த மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு, அதுபோன்ற பண்ணைகளின் அளவு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்ப, அரசின் அல்லது கம்யூன்களின் தனித்த பயன்பாட்டுக்கு மாற்றப்படும்.
இழப்பீடு பற்றி அரசியல் நிர்ணய சபை பரிசீலிக்கும்.
“(5) பறிமுதல் செய்யப்பட்ட நில ஆதினங்கள் அனைத்து கால்நடைகளும், விவசாய கருவிகளும் அவற்றின் அளவு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றுக்கு ஏற்ப, அரசின் அல்லது கம்யூன்களின் தனித்த பயன்பாட்டுக்கு மாற்றப்படும். இழப்பீடு எதுவும் தரப்பட மாட்டாது.
சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் விவசாய கருவிகள் பறிமுதல் செய்யப்பட மாட்டாது.
“(6) தங்கள் குடும்பங்களின் உதவியுடனோ, பிறருடன் சேர்ந்து கூட்டாகவோ, தங்கள் சொந்த உழைப்பில் விவசாயம் செய்ய விரும்பும் ரஷ்ய குடிமக்கள் (ஆணோ, பெண்ணோ) அனைவருக்கும் நிலத்தை பயன்படுத்தும் உரிமை தரப்படும்; அவர்கள் விவசாயம் செய்யும் வரை மட்டுமே இந்த உரிமை இருக்கும்; கூலிக்கு ஆள் அமர்த்துவது அனுமதிக்கப்பட மாட்டாது.
ஒரு கிராமப்புற கம்யூனின் ஓர் உறுப்பினர், தற்காலிகமாக இரண்டு ஆண்டு காலம் உடல் ஊனம் இருந்தால், அவர் மீண்டும் வேலை செய்ய தயாராகும் வரை, மொத்த கிராம கம்யூனும் அந்த கால கட்டத்தில் கூட்டாகச் சேர்ந்து அவரது நிலத்தில் விவசாயம் செய்து அவருக்கு உதவ வேண்டும்.
முதுமை, நோய்வாய்ப்படுதல் ஆகியவற்றால், நிரந்தரமாக ஊனப்பட்டுவிடுகிற, தாமாக விவசாயம் செய்ய முடியாத விவசாயிகள், நிலத்தை பயன்படுத்தும் உரிமையை இழக்கிறார்கள்; ஆனால், அதற்கு பதில், அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும்.
“(7) நில உரிமை காலம் சமத்துவ அடிப்படையில் இருக்கும்; அதாவது, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப, உழைப்பு நிலைமைகள், வாழ்நிலைமைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப, உழைக்கும் மக்கள் மத்தியில் நிலம் விநியோகிக்கப்படும்.
ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்திலும் குடியிருப்பிலும் முடிவு செய்யப்படுவதற்கு ஏற்ப, வீட்டுமனை, பண்ணை, சமூக அல்லது கூட்டுறவு நிலங்கள் மீதான நில உரிமை வடிவங்களுக்கு, எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
“(8) உரிமை மாற்றப்படும் அனைத்து நிலமும் தேசிய நில நிதியத்தின் பகுதியாக மாறும். விவசாயிகள் மத்தியில் அந்த நிலத்தை விநியோகிப்பது, சமூகத்தில் ஒருவர் வகிக்கும் இடம் முதல், மத்திய பிராந்திய அரசாங்க அமைப்புகளில் ஒருவர் வகிக்கும் இடம் வரை, எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஜனநாயகரீதியாக கட்டமைக்கப்பட்ட கிராம மற்றும் நகர கம்யூன்களில் இருந்து உருவான, உள்ளூர் மற்றும் மய்ய சுயாட்சி அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும்.
மக்கள் தொகை பெருக்கம், உற்பத்தித் திறன் உயர்வு, விவசாயம் செய்யும் விஞ்ஞான மட்டத்தில் உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்ப, நில நிதியம் அவ்வப்போது மறுவிநியோகத்துக்கு உட்படுத்தப்படும்.
ஒதுக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் மாற்றப்படும்போது, அந்த ஒதுக்கீட்டின் அசல் கரு அப்படியே தக்க வைக்கப்படும்.
கம்யூனில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் நிலத்தை நில நிதியத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்; வெளியேறும் உறுப்பினர்களின் உறவினருக்கோ அல்லது வெளியேறும் உறுப்பினரால் அமர்த்தப்படுபவருக்கோ, அந்த நிலத்தின் மீதான உரிமையில் முன்னுரிமை தரப்படும்.
ஒதுக்கப்பட்ட நிலம் நில நிதியத்துக்கு திரும்பத் தரப்படும் போது, முழுமையாக பயன்படுத்தப்படாத அளவுக்கான உரத்துக்கு ஆன செலவுக்கு, நிலத்தை மேம்படுத்த ஆன செலவுக்கு நட்டஈடு தரப்படும்.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருக்கும் நில நிதியத்தில் உள்ள நிலம் உள்ளூர் மக்கள் தொகை தேவைகளை நிறைவு செய்யும் அளவுக்கு இல்லையென்றால், உபரி மக்கள் தொகை, வேறு இடத்தில் குடியமர்த்தப்படுவார்கள்.
மறுகுடியமர்வு செய்வதற்கான பொறுப்பை அரசே ஏற்கும்; அதற்கான செலவுகளையும், கருவிகள் வழங்க ஆகும் செலவுகளையும் அரசே ஏற்கும்.
பின்வரும் வரிசையில் மறுகுடியமர்வு செய்யப்படும்: வேறு இடத்துக்கு மறுகுடியேற விரும்பும் நிலமற்ற விவசாயிகள் முதலில்; தீய பழக்க வழக்கங்கள் கொண்டவர்கள், நிலத்தை கைவிட்டுவிடுபவர்கள் போன்ற கம்யூன் உறுப்பினர்கள் அடுத்து; இறுதியில் குலுக்கல் முறையிலோ அல்லது ஒப்பந்தம் மூலமோ”.
அனைத்து ரஷ்யாவின் வர்க்க உணர்வு கொண்ட விவசாயிகளின் ஆகப்பெரும்பான்மையினரின் முழுமையான விருப்பத்தை வெளிப்படுத்தும் இந்தக் கட்டளையின் ஒட்டுமொத்த உள்ளடக்கமும்அரசியல் நிர்ணய சபை கூடும் வரை தற்காலிகச் சட்டமாக நிறைவேற்றப்படுகிறது; எவ்வளவு உடனடியாக முடியுமோ அவ்வளவு உடனடியாக இது அமலாக்கப்பட வேண்டும்; படிப்படியாக அமலாக்கப்பட வேண்டிய சில பிரிவுகள், விவசாயிகள் பிரதிநிதிகளின் உயேஸ்த் சோவியத்துகள் நிர்ணயிக்கும்படி அமலாக்கப்பட வேண்டும்.
5. சாதாரண விவசாயிகள், சாதாரண கொசாக்குகளின் நிலம் பறிமுதல் செய்யப்பட மாட்டாது.
இந்த ஆணையும் கட்டளையும் சோசலிச புரட்சியாளர்களால் எழுதப்பட்டவை என்று இங்கு குரல்கள் எழுப்பப்பட்டன. அதனால் என்ன? அதை யார் எழுதினார்கள் என்பது ஒரு பிரச்சனையா? ஒரு ஜனநாயக அரசாங்கம் என்ற விதத்தில், வெகுமக்களின் முடிவை, அதில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நாம் புறந்தள்ள முடியாது. அனுபவத்தின் நெருப்பில், ஆணையை நடைமுறைப்படுத்துவதில், அதை உள்ளூர்மட்ட அளவில் அமலாக்குவதில், உண்மை எங்கிருக்கிறது என்பதை விவசாயிகளே உணர்ந்து கொள்வார்கள். விவசாயிகள், சோசலிச புரட்சியாளர்களையே பின்பற்றுவார்கள் என்றாலும் கூட, அரசியல் நிர்ணய சபையில் இந்தக் கட்சிக்கு பெரும்பான்மை அளிப்பார்கள் என்றாலும் கூட, நாம் அப்போதும் கேட்போம் - அதனால் என்ன? அனுபவம்தான் சிறந்த ஆசிரியர். எது சரி என்று அது காட்டும். விவசாயிகள் ஒரு முனையில் இருந்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணட்டும்; நாம் மறுமுனையில் இருந்து இதற்கு தீர்வு காண்போம். புரட்சிகர படைப்பாற்றல் பணியின் பொதுவான நீரோட்டத்தில், புதிய அரசு வடிவங்களின் விரிவாக்கத்தில், அனுபவம் நம்மை ஒன்றுகொண்டு சேர்க்கும். நாம் அனுபவத்தால் வழிநடத்தப்பட வேண்டும்; வெகுமக்களின் படைப்பாற்றல்மிக்க திறன்களின் முழுமையான சுதந்திரத்தை நாம் அனுமதிக்க வேண்டும். ஆயுத எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட பழைய அரசாங்கம், பழைய, மாறாத ஜாரிச அதிகார வர்க்கத்தைக் கொண்டு நிலப்பிரச்சனைக்கு தீர்வு காண விழைந்தது. ஆனால், பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அதிகார வர்க்கம் விவசாயிகள் மீதுதான் போர் தொடுத்தது. நமது புரட்சியின் எட்டு மாத காலத்தில் விவசாயிகள் சிலவற்றை கற்றுக்கொண்டார்கள்; நிலம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தாங்களே தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்; எனவே, இந்த நகல் சட்டத்துக்கு எதிரான அனைத்து திருத்தங்களையும் நாம் எதிர்க்கிறோம். அதில் விவரங்கள் எதுவும் தேவையில்லை; ஏனென்றால், நாம் ஓர் ஆணையைத்தான் எழுதுகிறோம்; செயல்திட்டத்தை அல்ல. ரஷ்யா பரந்து விரிந்தது; அதன் உள்ளூர்மட்ட நிலைமைகள் மாறுபட்டவை. விவசாயிகளே, பிரச்சனைகளுக்கு சரியாக, முறையாக, நம்மை விட மேலாக தீர்வு காண்பார்கள் என்று நாம் நம்புகிறோம். நமது உணர்வில், அல்லது சோசலிச புரட்சியாளர்கள் திட்ட உணர்வில் செய்கிறார்களா என்பது ஒரு விசயமல்ல. கிராமப்புறங்களில் இனியும் நில உடைமையாளர்கள் இல்லை என்று அவர்களுக்கு உறுதியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதும் அனைத்துப் பிரச்சனைகளிலும் அவர்களே முடிவெடுப்பார்கள் என்பதும் அவர்கள் வாழ்க்கையை அவர்களே அமைத்துக் கொள்வார்கள் என்பதும்தான் முக்கியம். (பலத்த கரவொலி).

(மாலெ தீப்பொறி 2016 நவம்பர் 16 - 30)

Search